World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : துருக்கி

Turkey: Growing poverty and social inequality

துருக்கி: வளர்ச்சியடையும் ஏழ்மையும் சமூக ஏற்றத்தாழ்வும்

By Sinan Ikinci
24 April 2003

Use this version to print | Send this link by email | Email the author

அண்மையில் கும் (KUM) நிறுவனம் நடத்திய ஒரு கணக்கெடுப்பின்படி துருக்கிய சமூகத்தினரிடையே வருமான ஏற்றத்தாழ்வு வித்தியாசங்கள் அதிகமாகிக்கொண்டு வருவதோடு, அதன் முக்கியப் பிரச்சனைகளில் ஒன்றாகவும் இது விளங்குகிறது. துருக்கியின் மிகப்பெரிய பணக்காரக் குடும்பங்களின் மாத வருமானம் 10.5 பில்லியன் (Turkish lira) துருக்கிய லீராவாகும். கிட்டத்தட்ட தற்போதைய மாற்று விகிதத்தில் 6300 அமெரிக்க டொலர்கள் ஆகும். அதே நேரத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பங்கள் 132 மில்லியன் லீரா (80 அமெரிக்க டொலர்கள்) வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டத் தள்ளப்பட்டுள்ளன.

நவீன வரலாற்றில், குறிப்பாக 2001 ம் ஆண்டில் துருக்கி கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தபோது, ''பணவீக்க குறைப்புத் திட்டம்'' என்று கூறப்பட்ட நடவடிக்கை மூன்று ஆண்டுகள் (2000-2002) செயல்படுத்தப்பட்டால் நிலைமை சீரடையும் என்று கருதப்பட்டது. ஆனால் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) மேற்பார்வையில் இத்திட்டம் நடைமுறைக்கு வந்த ஓர் ஆண்டிலேயே, இத்திட்டம் மிகப்பெரிய கேடுகளில் ஒன்றாக மாறியது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மிக அதிக அளவிலான உழைக்கும் மக்கள் பொருளாதார அளவில் நலிந்தும், நம்பிக்கையிழந்தும் உள்ளனர். ஒரு குறைந்த ஊதியமுடைய குடும்பத்தின் மாத வருமானம் 200 மில்லியன் லீராவிற்கும் ($20) 500 மில்லியன் லீராவிற்கும் ($300) இடையில் இருக்கிறது. துருக்கியின் மக்கட்தொகையில் ஏறத்தாழ பாதிப்பேர் (48%) இந்த குறைந்த வருமானப் பிரிவில் இருக்கும்பொழுது, தேசிய வருமானத்தில் அவர்களுடைய பங்கு 32.5% மட்டுமேயாகும்.

2001 ம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்குப்பின் ஒரு புதிய திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டபோது, அது சமூத்திற்கு கூடுதலான வருத்தங்களையே ஏற்படுத்தியது. கடந்த மூன்று மாதங்களில் பொருட்கள், பணிகள் ஆகியவற்றின் விலையுயர்வு தொடர்ந்தும் ஏறுமுகமாக இருக்கிறது. எரிபொருள், திரவவாயு, தொலைபேசிக் கட்டணம் மற்றும் அத்தியாவசியத் தேவைகளான சர்க்கரை, தேயிலை முதலியவை இப்பட்டியலில் இருக்கும்போது, உழைக்கும் மக்களின் ஊதிய உயர்வோ மிகவும் மட்டுப்பட்டதாகவே இருக்கிறது. இதன் விளைவாக வறுமையானது மிகவும் அதிகமானளவில் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் பொருளாதாரத் திட்டமானது எவ்வாறு கடனைச் சமாளிப்பது என்பதில்தான் இறுதியில் விளங்கியதே தவிர உற்பத்தியைப் பெருக்கும் நடவடிக்கைகளுக்கு எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. இது கிட்டத்தட்ட 19 ம் நூற்றாண்டில் பெரும் கடன் சுமையைத் தாங்கிய ஓட்டோமன் பேரரசின் நிலைக்கே மீண்டும் திரும்பிய நிலைபோல் ஆகிவிட்டது. இப்பேரரசு ஏகாதிபத்திய நலனுக்காக பொது வருவாயை தனது கைக்குள் கொண்டு வந்ததுடன், முக்கியமாக வெளிநாடுகளுக்கு திருப்பிக் கொடுக்கவேண்டிய கடனுக்கு முன்னுரிமை கொடுத்தது. தற்போதைய நிலைமையில், நாட்டை அழுத்தும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் சுமை 160 பில்லியன் டொலர்களுக்கும் மேலாக இருக்கிறது. குறிப்பாக நாட்டின் (GDP) மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட பன்மடங்காக இது அதிகரித்திருப்பதால், பொருளாதாரக் கொள்கை இப்பரிதவிப்பினால் இயக்கப்படுகிறது.

மிகக்குறைந்தளவு வருமானம் மற்றும் அதோடு இணைந்த விதத்தில் பல்லாயிரக்கணக்கானோர் வேலையிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட நிலைமை ஆகியன மிக ஏழ்மையான பிரிவுகளின் நலம்புரி சேவைகளை அடிமட்டத்திற்கு கொண்டு வந்துள்ளது. இதில் பெரும்பாலான மக்கள் வளர்ச்சி குன்றிய புறநகர்ப் பகுதிகளில் வாழ்பவர்களாக இருக்கின்றனர். அதிகரித்துவரும் வறுமை நிலைக்கு துருக்கி சென்று கொண்டிருப்பதால், சிறு திருட்டுக்கள், வழிப்பறி, விபச்சாரம் போன்றவை அதிகரித்து அதனை சமூக வெடிப்பின் விளம்பிற்கே இட்டுச் சென்றுள்ளது.

மோசமான வருமானத்தைக் கொண்டுள்ள உலக நாடுகளின் வரிசையில் துருக்கி ஐந்தாமிடத்தில் உள்ளது. ஆளும் கட்சியான AKP (நீதி மற்றும் அபிவிருத்திக்கான கட்சி) பல உறுதிமொழிகளை அளித்திருந்தாலும், அதன் திட்டமோ நடைமுறையிலுள்ள மோசமான வருமானப் பகிர்வு முறையைச் சரிசெய்ய முடியாது இருப்பதுடன், அது ஏற்றத்தாழ்வை மேலும் அதிகரித்திருக்கிறது. அரசாங்கமானது, இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கும், குறைந்தளவு வருமானத்தைக் கொண்டுள்ளவர்களுக்கும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பொதுச் செலவீனங்கள் குறைக்கப்பட்டதால், தொழிலாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஊதியங்களும் குறைக்கப்பட்டன. IMF ஆணையின்படி விவசாயப் பொருட்களின் விலையுயர்வு அதிகரிக்கப்பட்டதிலிருந்து கிராமப்புற வறுமை மேலும் அதிகரித்துள்ளது.

கடந்த காலங்களில் கிராமப்புற மக்கள் பெரும்பாலும் தங்களுக்கு தேவையான பொருட்களை தாமே உற்பத்தி செய்து வந்தனர். ஆனால் இப்பொழுது நிலைமை மாறிவிட்டது. இங்கு மின்சாரம் தொலைபேசி போன்றவைகள் அவசியமான பொருட்களாகியுள்ளன. கிராமப்புற மக்கள் தமக்குத் தேவையான ரொட்டிகளை நகரத்திலிருந்து வாங்கி வருகின்றனர். விறகிற்குப் பதிலாக நவீன எரிபொருட்களைப் பயன்படுத்துகின்றனர். வேறுவிதமாகச் சொன்னால் கிராமப் பகுதிகள் முதலாளித்துவ சந்தை முறையோடு கூடுதலான அளவிற்குத் தன்னை இணைத்து வருகிறது. இன்று துருக்கியின் கிராமப்பகுதிகள் நகரத்து சந்தைப்பொருட்களை வாங்குவது மட்டுமின்றி சந்தை சக்திகளையும் நன்கு அறிந்துள்ளது.

கிராம மக்களின் நிஜ வருமானம் படிப்படியாக அரிக்கப்பட்டு வருவதுடன், இது அலை அலையான புதிய குடிப்பெயர்ச்சியையும் உருவாக்கிவிட்டுள்ளது. ஆதலால் துருக்கிய நகரங்கள் இதனை சமாளிக்க முடியாது திணறுகின்றன. அத்துடன் பெருநகரங்களின் புறநகர்ப் பகுதிகள் பெருகி வருவதால், இவற்றின் விளைவாக நகரங்களில் பல பிரச்சனைகள் பெருகி வருகின்றன.

குடும்பத்துக்கான அடிப்படை தேவைகள்

நான்கு பேர் அடங்கிய ஒரு குடும்பத்திற்கு ஒரு வாரத்திற்கான சராசரி உணவுச் செலவு கிட்டத்தட்ட 70-80 மில்லியன் (42-48$) லீராவாகும்.

அன்காரா, இஸ்தான்புல், இஸ்மிர் போன்ற பெரிய நகரங்களில் வீட்டு வாடகை 200 மில்லியன் லீராவிலிருந்து (120$) 900 மில்லியன் ($545) லீராவிற்கு இடையில் இருப்பதுடன், அவை இருக்குமிடத்தின் அளவைப் பொறுத்தும் விலைகள் வேறுபடுகின்றன. இதேபோன்று ஆடைகளின் விலைகளும் பெருமளவில் வித்தியாசப்படுகின்றன.

சிறுவர்கள் அரசாங்கப் பாடசாலைகளுக்குச் சென்றாலும் அவர்களுக்கான பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடை போன்றவற்றிற்கு அதிகளவு செலவு செய்யப்படவேண்டும்.

1.5 பில்லியன் லீராக்கள் ($910) ஒரு நான்கு உறுப்பினர் கொண்ட சராசரிக் குடும்பத்திற்குக் கெளரவமான வாழ்க்கை நடத்த தேவைப்படுகிறது. வறுமைக்கோடு என்பது ஒரு துருக்கியக் குடும்பத்திற்கு 1.3 பில்லியன் லீராவாக ($790) உயர்ந்துள்ளது. இது துருக்கியின் முக்கிய தொழிலாளர் சம்மேளனத்தின் கணக்கெடுப்பு கூறும் செய்தியாகும். (Turk-IS) (http://www.turkis.org.tr/Gida0203.doc).

அதே அளவிலான ஒரு குடும்பம் சாப்பாட்டிற்காகச் செலவிடப்படவேண்டிய தொகை TL 421 ($248) ஆக உயர்ந்துள்ளதாக இன்னுமொரு கணக்கெடுப்பு கூறுகிறது.

வறுமைக்கோடு என்பது குறைந்த அளவுக்குத் தேவையான உணவிற்குச் செலவிடப்படும் தொகையும் மற்ற அடிப்படைச் செலவுகளையும் உட்கொண்டது. இந்தக் கணக்கெடுப்பின்படி கிடைத்த புள்ளி விவரங்களைக் காணும்போது, மிகக் குறைந்தளவான தேவைகளுடன் உள்ள வாழ்க்கைக்கான பணம் கூடுதலாக வேண்டியுள்ளது என்பது புலனாகும். 2000, 2001 ஆண்டுகளின் தொடர்ச்சியான பொருளாதார நெருக்கடியானது வறுமையை மேலும் அதிகரிக்க செய்துள்ளது. Turk-IS கொடுக்கும் தகவலின்படி நாட்டில் 10 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பசி பட்டினியுடன் வாழத் தள்ளப்பட்டுள்ளனர்.

சுகாதார வசதிகள் உழைக்கும் மக்களுக்கு ஒரு பெரிய சிக்கலான பிரச்சனையாகும். அரசாங்க மருத்துவமனைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளன. பொதுவாக இவை யாவும் நல்ல ஆரோக்கியமான பாதுகாப்பை மில்லியன்கணக்கான மக்களுக்குக் கொடுக்கவில்லை.

ஏழ்மை நிலைமை கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தாலும், இன்று முன்னெப்போதும் இல்லாத அளவில் துருக்கியில் வறுமை அதிகரித்துள்ளது. 2001 க்கு முன்பும் வறுமை இருந்த போதிலும், ஒரு குடும்ப அலகும் சமய சார்புடைய தொடர்புகளும் ஓரளவு அதை மூடிமறைக்க உதவின. அத்துடன் மக்கள் ஒருவருக்கொருவர் கஷ்டகாலங்களில் உதவிக் கொண்டனர்.

ஆனால், இந்த நிலைமை இப்பொழுது மாறிவிட்டது. பொருளாதார நெருக்கடி வறுமையை மறைக்கும் பிளாஸ்டர் பூச்சை வெடிப்புறச் செய்து அவலத்தைக் வெளிக்காட்டுகிறது. சமுதாயம் புதிய நிலைமைக்கு வந்துள்ளது. வேறுவிதமாகச் சொன்னால் வறுமையின் உண்மை முகம் வெளிப்படுத்தப்படும் நிலைக்கு துருக்கி வந்துவிட்டது என்பதாகும்.

Top of page