World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany deports 50,000 immigrants a year

ஜேர்மனி ஆண்டு ஒன்றிற்கு 50,000 புலம்பெயர்ந்தோரை நாடு கடத்துகின்றது

By Elizabeth Zimmerman
2 October 2003

Use this version to print | Send this link by email | Email the author

ஜேர்மனியில் தஞ்சம் புகுவோர் தொடர்பாக கடைபிடித்துவரும் கொள்கையின் காரணமாக பரவலாக தற்போது வெளிநாட்டைச் சார்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு காவல் முகாம்களில் வைக்கப்படுகின்றனர். பின்னர் நாடு கடத்தப்படுகின்றனர். ஜேர்மனி அரசியல் சட்டத்தில் 1949-ம் ஆண்டு வெளிநாட்டில் தஞ்சம் புகுவதற்கு உரிமை உத்திரவாதம் செய்து தரப்பட்டிருந்தது. இந்த உரிமைகள் பெரும்பாலும் 1993-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டுவிட்டன. வெளிநாட்டவர் தொடர்பான சட்டத்தில் 57-வது பிரிவில் தஞ்சம்புக வருபவர்களை சிறை வைக்க வகை செய்யப்பட்டிருக்கின்றது. இந்த பிரிவிற்கே நீண்ட மற்றும் பயங்கரமான பாரம்பரியம் உண்டு. இதற்கு முந்தைய வெளிநாட்டவர் தொடர்பான போலீஸ் துறை நெறிமுறை 7-வது பிரிவு நாசிகள் ஆட்சி காலத்தில் இருந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 1938 முதல் 1965 வரை இந்த பிரிவு ஜேர்மனியில் செயல்படுத்தப்பட்டு வந்தது. அவர்களாக விரும்பி வெளியேற விரும்பாத வெளிநாட்டவரை கட்டாயப்படுத்தி நாடுகடத்துவதற்கு அந்த பிரிவு வகை செய்தது. நாடுகடத்தப்படுவதற்கு முன்னர் வெளிநாட்டவர் காவலில் வைக்கப்படுவது அவர்களை நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்காகவே.

இன்றைய தினம் ஜேர்மனியில் சட்டப்பூர்வமான குடியேற்ற அந்தஸ்து இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்ற எந்த வெளிநாட்டவரையும் கைது செய்து முகாம்களில் அடைத்து இறுதியாக நாடு கடத்திவிட முடியும். தஞ்சம் புகுவதற்கு அனுமதிக்கப்படாத அகதிகள், உள்நாட்டு போர்களில் அகதிகளாக வந்து ஜேர்மனியில் தங்கியிருந்து அப்படி தங்கியிருக்கும் உரிமை நீடிக்கப்படாதவர்கள் மற்றும் பொதுவாக முறையான விசா இல்லாமலோ அல்லது குடியிருப்பு அனுமதி காலம் நீடிக்கப்படாத நிலையில் உள்ளவர்களோ, நாடு கடத்தப்படும் சூழ்நிலைதான் உள்ளது.

1990-களின் துவக்கம் முதல் செயல்படுத்தப்பட்டு வரும் சட்டத்தில் இப்படிப்பட்டவர்கள் காவலில் வைக்க வகை செய்யப்பட்டிருக்கின்றது.. இப்படி காவலில் வைக்கப்படுபவர்கள் நாடுகடத்தப்படுவதற்கு முன்னர் கடவுச்சீட்டுகள் அல்லது பயண ஆவணங்கள் பெறவேண்டும். இதில் பாதிக்கப்படுபவர்கள் எந்தவிதமான வழியும் இல்லாமல் மிக நெருக்கடியான சூழ்நிலையில் காவல் முகாம்களில் உள்ளனர். ஜேர்மனியில் அவர்கள் எந்தவிதமான குற்றத்தையும் புரிந்ததாக கைது செய்யப்படவில்லை. ஆனால் ஜேர்மனி சட்டங்களின் இறுக்கம் காரணமாக அவர்கள் சட்டவிரோத குடியேற்றக்காரர்களாக ஆக்கப்படுகின்றனர்.. மேலும் நாடுகடத்தப்படுவதற்கான காவல் 18 மாதங்கள் நீடிக்கின்றது. இந்த காலத்தில் நாடுகடத்தப்படப் போவதாக அச்சுறுத்தப்பட்டவர்கள் முகாம்களில் வெளி உலகத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு இடப்படுகின்றனர். அப்படிப்பட்டவர்கள் சட்ட ஆலோசனையும் பெற முடியாது அல்லது தாங்களே விரும்பி ஜேர்மனியை விட்டு வெளியேற முன்வந்தாலும் அவர்கள் புறப்பட்டு செல்வதற்கான அனுமதி ஆவணங்களை உடனடியாகப் பெற முடியாது.

பேர்லின் நகரில் செயற்பட்டு வருகின்ற நாடு கடத்தலுக்கு எதிரான இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் (IAD) அண்மையில் நாடு கடத்தல் நடவடிக்கைகளால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற விபரங்களையும், பாதிக்கப்பட்ட தனி மனிதர்கள் தொடர்பான எடுத்துக்காட்டுகளையும் தந்திருக்கின்றார்கள். கைது செய்யப்பட்டிருப்பவர்களில் பலரது மிக மோசமான நிலவரமும் சங்கடங்களும் அந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டிருக்கின்றன.

அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி ஜேர்மனியில் தஞ்சம் புகவேண்டும் என்று வந்தவர்களில் ஒவ்வொரு ஆண்டும் 50,000 புலம்பெயர்ந்தோர் நாடு கடத்தப்படுகின்றனர். இவர்கள் ஜேர்மனியில் குடியேறுவதற்கு தஞ்சம் புக விரும்பியவர்கள் இவர்களில் மிகப்பெரும்பாலோர் விமானம் மூலம் நாடு கடத்தப்படுகின்றனர். ஒவ்வொரு நாளும் இப்படிப்பட்டவர்கள் 130 முதல் 140 பேர் வரை நாடு கடத்தப்படுகின்றனர். உள்நாட்டுப் போர், அரசியல் அடக்குமுறை, படுமோசமான பொருளாதார துன்பங்கள் மற்றும் இன அடிப்படையில் சிறுபான்மையினர் மற்றும் மகளிருக்கு எதிராக மேற்க்கொள்ளப்பட்டுவரும் ஒடுக்குமுறை ஆட்சிகளை சகித்துக்கொள்ள முடியாதவர்கள் தப்பி ஓடி தஞ்சம் புகுவதற்காக ஜேர்மனியில் குடியேறியவர்கள், இவர்களை நாடுகடத்துவதன் மூலம் மீண்டும் அதே கொடுமைகளுக்கு தள்ளப்படுகின்றனர்.

இப்படி நாடுகடத்தப்படுபவர்களுடன் அடிக்கடி ஜேர்மனி எல்லை போலீசான இணை ராணுவத்தினரும் அல்லது தனியார் நிறுவன பாதுகாப்பு அதிகாரிகளும் நாடுகடத்தப்படும் வரை பின்தொடர்ந்து வருகின்றனர். இப்படி வருபவர்கள் பலாத்காரத்தை பயன்படுத்தவும் தயார் நிலையில் வருகின்றனர். நாடுகடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தாக்கப்படுகின்றனர். கட்டுப்படுத்தப்படுகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த மருந்துகள் ஊசி மூலம் செலுத்தப்படுவதும் நடைபெறுகின்றது. இப்படிப்பட்ட தாக்குதல்கள் மூலம் பலர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இப்படி கொலை செய்த குற்றவாளிகளும், பொறுப்பான அதிகாரிகளும், இதுவரை சட்டப்பூர்வமான நடவடிக்கைகளில் இருந்து தப்பித்துக் கொண்டே வருகின்றனர். அகதிகளில் மாண்டவர்களும், துன்புறுத்தப்பட்டவர்களும், கொடூரமான நாடு கடத்தல் நடைமுறைக்கு தாங்கள் தருகின்ற விலை இதுதான் என்று சகித்துக்கொள்ள வேண்டியுள்ளது..

1993 முதல் 99 பேர் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். அல்லது நாடுகடத்தலை தவிர்க்கின்ற முறையில் முயன்று அதில் மாண்டிருக்கின்றனர். மற்றும் 45 பேர் காவல் முகாம்களில் இறந்திருக்கின்றனர்.

பேர்லினில் உள்ள காவல் முகாமில் 2000-ம் ஆண்டில் ஒரே நேரத்தில் 7,000-த்திற்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். ஒரே நேரத்தில் 250 ஆண்களும்; 50 பெண்களும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 2001-ம் ஆண்டில் பேர்லின் நகரில் 5,000-த்திற்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். கைதுசெய்யப்பட்டிருப்பவர்களில் 16 வயது முதல் 65 வயதானவர்கள் உள்ளனர். பிரசவத்திற்கு 6 வாரங்களுக்கு முன்னர் கூட சில மகளிர் மருத்துவமனைகளில் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். குழந்தைகள் உரிமை தொடர்பான ஐ.நா. ஒப்பந்தத்திற்கு ஜேர்மனி ஆட்சேபனைகளை தெரிவித்திருக்கின்றது. இதன் பொருள் என்னவென்றால் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பின்தொடர்ந்து வராமல் மைனர்களை(minors) கைது செய்து நாடுகடத்தும் உரிமை ஜேர்மனிக்கு உண்டு என்பது தான். 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதானவர்கள் அகதிகளாக கருதப்படுகின்றனர். மிகுந்த கட்டுப்பாடு மிக்க தஞ்சம் புகும் சட்ட விதிகள் இவர்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. பயிற்சி மற்றும் பணிகளில் அத்தகைய இளைஞர்கள் சேருவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கின்றது.

இப்படி பெருமளவில் நாடு கடத்தல் முகாம்களை நிறுவி இருப்பது ஜனநாயக உரிமைகளை ஒழித்துக்கட்டுகின்ற நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும். ஜேர்மனியில் தஞ்சம் தேடுகின்ற உரிமை முற்றிலுமாக ஒழித்துக்கட்டப்பட்டுவிட்டது. இது அரசு அமைப்பின் அச்சுறுத்தி ஓடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பாகமாகும்.

கடந்த 10 ஆண்டுகளாகவே வடக்கு ரைன் வெய்ஸ்ட்பாலியா (North Rhine-Westphalia) பகுதியில் இத்தகைய நாடு கடத்தல் முகாம்கள் இயங்கி வருகின்றன. அதிகாரப்பூர்வமான புள்ளி விபரங்களின்படி 2002-ம் ஆண்டில் பூரன் பகுதியில் உள்ள முகாம்களில் நாடு கடத்தப்படுவதற்காக ஒரே நேரத்தில் 599 பேர் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் மிகப்பெரும்பாலோர் பல மாதங்களாக முகாம்களில் இருந்தனர். ஏப்ரல் மாதம் ஒரு நாளில் 18 வயதுக்கு குறைந்த 7 இளைஞர்கள் பூரன் முகாமிலும், மற்றும் 4 பேர் மோயர்ஸ் பகுதியில் உள்ள மற்றொரு முகாமிலும் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.

நாடு கடத்தப்படுவதற்காக காவலில் சிறைவைக்கப்பட்டதை கண்டித்து தீவிரமான நடவடிக்கைகளை மேற்க்கொள்ளுகின்றனர். ஜூலை 31 அன்று துருக்கிக்கு நாடுகடத்தப்படவிருந்த ஹுசையின் டிக்கி தனக்கு தானே தீ வைத்துக்கொண்டார், இதனால் ஏற்பட்ட காயத்தின் விளைவாய் அண்மையில் அவர் மரணம் அடைந்தார்..

ஜேர்மனியில் இருந்து நாடு கடத்தப்படுவதை உறுதி செய்யும் நடவடிக்கையாக முகாம்களில் காவலில் வைக்கப்படுபவர்கள் மனிதநேயத்திற்கு முற்றிலும் பொருந்தாத சிறை நிலவரங்களில் வாடுகின்றனர். அதை அவர்கள் எதிர்த்தால் சிறைக்காவலர்கள் அவர்களை தண்டிக்கின்றனர். பேர்லின் முகாமில் பல உண்ணாவிரத போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

ஜனவரி இறுதியில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் 68 கைதிகள் கலந்துகொண்டனர். அவர்களில் மிகப்பெரும்பாலோர் ரஷ்ய மொழி பேசுகின்ற நாடுகளில் இருந்தும், இந்தியாவிலிருந்தும் வந்தவர்கள். "சட்டப்படியான காரணங்களுக்காக உடனடியாக நாடுகடத்த முடியாத நிலையில் உள்ள கைதிகள் 6 மாதங்களுக்குமேல் காவலில் இருந்திருந்தால் அத்தகைய கைதிகளை உடனடியாக விடுதலை செய்யவேண்டும், சிறைக் காவலர்கள் மனிதநேயமற்ற வகையில் நடந்துகொள்வதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் மற்றும் சிறைகளில் நிலவுகின்ற சகித்துக்கொள்ள முடியாத சுகாதார நிலைமையை மேம்படுத்த வேண்டும்" என்று அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

Frankfurter Rundschau என்ற பத்திரிக்கையில் மார்ச் 11 அன்று முகாம்களில் நிலவும் மோசமான நிலவரம் விவரிக்கப்பட்டிருக்கின்றது: ``பெர்லின் சுவர் நீக்கப்படுவதற்கு முன்னர் குருநார்க் கட்டிடம் மகளிருக்கான சிறையாக செயல்பட்டு வந்தது. 1995 முதல் பேர்லின் நகர அரசாங்கம் அங்கு நாடு கடத்தப்படுவதை எதிர்பார்த்து காத்திருப்பவர்களை சிறையில் அடைத்தது. ஜேர்மனியில் சிறப்பான வாழ்வு தேடி வந்தவர்கள் அங்காங்கே தனித்தனியாக சுற்றிக்கொண்டிருப்பவர்கள், ஆனால் ஜேர்மனியில் வாழ்வதற்கு தடை விதிக்கப்பட்டவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கின்ற காவல் முகாம் பெர்லினில் இயங்கி வருகின்றது. Azerbaijan பகுதியைச் சேர்ந்தவர் லாரிசா 34 வயதான அந்தப் பெண் இடையிடையே சில இடைவெளிகள் விட்டு 10 ஆண்டுகளாக ஜேர்மனியில் வாழ்ந்திருக்கின்றார். அனோவர் மற்றும் பெர்லின் நகரங்களில் தங்களது வீடுகளில் வாழ்ந்து வருகின்ற முதியவர்களை பராமரிக்கின்ற பணியை அவர் சட்ட விரோதமாக செய்து வந்தார். அவரைப் போன்றவர்கள் இப்போது நாடு கடத்தப்படுவதற்கான முகாமில் உள்ளனர். லாரிசாவின் மொபைல் தொலைபேசி மணி ஒலித்தது. ஒரு மூதாட்டி இன்றைக்கு நீ வேலைக்கு வருவாயா என்று கேட்டார். ஆனால் லாரிசா அந்தப் பணிக்கு வரமுடியாது, அவர் இப்போது காவலில் உள்ளார்.``

அந்தப் பத்திரிக்கையில் விவரிக்கப்பட்டுள்ள இன்னொரு கைதி மால்டேவியா நாட்டைச் சேர்ந்த மாணவன், அவர் இதற்கு முன்னர் தற்கொலை செய்துகொள்ள முயன்றார். அவர் தற்போது சுதந்திரமாக நடமாடினாலும், ஜேர்மனியை விட்டு வெளியேறியாக வேண்டும். எந்த நேரத்திலும் அவர் அவரது நாட்டிற்கு நாடுகடத்தப்படுலாம். மீண்டும் அவர் ஜேர்மனியில் நுழைவதற்கு சட்டப்பூர்வமான எந்த வாய்ப்பும் இல்லை. அதையும் மீறி அவர் ஜேர்மனிக்குள் நுழைய முயன்று கைது செய்யப்பட்டால் ஜேர்மனி அரசாங்கம் அவரிடம் ஒரு நாளைக்கு 60 யூரோக்கள் வீதம் சிறை முகாம் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கோரும், அரசாங்கம் கட்டளையிடும், அவருக்கு மால்டேவியாவில் ஒரு கணக்காளர்(bookkeeper) வேலை கிடைத்தால் கூட மாத வருவாய் 60 யூரோக்கள் தான் கிடைக்கும்.

தங்களது தாய்நாடுகளில் மிக மோசமான வறுமை நிலவுகின்ற காரணத்தினால் தான் அந்த நாடுகளைச் சேர்ந்த மக்கள் தக்களது உயிரையும் பொருட்படுத்தாமல் ஜேர்மனியில் குடியேறுகிறார்கள். ஆனால் ஜேர்மனி அதிகாரிகளும் அரசியல்வாதிகளும், பேர்லினிலும் இதர நகரங்களிலும் இப்படிப்பட்ட மக்களை உள்ளே நுழையவிடாது தடுப்பதற்கான நடவடிக்கைகளை கூர்மையாக்கி வருகின்றன.

ஆளும் SPD (சமூக ஜனநாயக் கட்சி) மற்றும் பசுமை கட்சிகாரர்களும், பேர்லினில் SPD-யுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி நடத்துகின்ற PDS (ஜனநாயக சோசலிசத்தின் கட்சி) கட்சியும், ஒடுக்குமுறைகளை தீவிரப்படுத்துவதற்குத்தான் கவனம் செலுத்துகிறார்களே தவிர இதுபோன்ற குடியேற்றங்களுக்கு அடிப்படையாக அமைந்துள்ள அரசியல் பிரச்சனைகளுக்கு எந்தவிதமான தீர்வையும் சொல்லவில்லை. மாறாக சிறைக் காவல் கண்காணிப்பை தனியார் பாதுகாப்பு ஏஜென்சிகளிடம் அதிக அளவில் கொடுத்து அதன் வசதிகளைச் சீரழித்து அரசாங்க செலவுகளை குறைக்கவே முயன்று வருகின்றன.

ஜேர்மனியின் பழமைவாத கட்சிகளும், குடியேறும் மக்களின் உரிமைகளை ஒடுக்குகின்ற நடவடிக்கைகளைத்தான் மேற்கொண்டு வருகின்றன. SPD மற்றும் பசுமை கட்சி அரசாங்கம் 1998-ல் பதவிக்கு வந்தது. மீண்டும் 2002-ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த அணியினர் பதவிக்கு வந்தது முதல் ஜேர்மனியில் தஞ்சம்புகுவோர் மற்றும் குடியேறுபவரின் நிலை கணிசமான அளவிற்கு சீர்குலைந்து கொண்டே வருகின்றது. மத்திய அரசும், மாநில அரசுகளும், மேற்க்கொண்டு வருகின்ற கடுமையான சட்டங்கள் மற்றும், கட்டுப்பாடுகள் காரணமாக ஜேர்மனி வரலாற்றிலேயே இதுவரை நடைபெற்றிராத அளவிற்கு தஞ்சம்புக நாடுவோர் எண்ணிக்கை குறைந்துவிட்டது. அதற்கு மாறாக நாடு கடத்தப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. நீண்டகாலமாக குடும்பத்துடன் ஜேர்மனியில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்கூட நாடுகடத்தப்படுகின்ற நிலைக்கு ஆளாகின்றனர்.

வெளிநாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து பணியாற்றி வருபவர்கள், ஜேர்மனியிலேயே குழந்தைகளை பெற்று அந்த குழந்தைகளும் தற்போது பள்ளிகளுக்கு சென்றுகொண்டிருக்கும் குடும்பங்களைச் சார்ந்தவர்கள், அல்லது தொழிற்கூடங்களில் பயிற்சி பெறுபவர்கள் ஆகிய இதுபோன்ற மக்கள் முழுமையாக ஜேர்மனியின் சமுதாயத்தில் இணைந்துவிட்டவர்கள், இப்படிப்பட்டவர்களும் இன்று நாடுகடத்தப்படும் நிலையை எதிர்நோக்கியுள்ளனர். 2001 டிசம்பர் மாதம் இந்த ஆபத்தான ஒரு அறிக்கையை SPD பசுமை கட்சி அரசாங்கம் தனது கொள்கை பிரகடனமாக அறிவித்திருக்கின்றது. ``எதிர்காலத்தில் அரசாங்கம் நாடுகடத்தபபட வேண்டியவர்களகக் கருதப்படும் வெளிநாட்டவர்களை அவசியம் என்றால் அவர்களின் விருப்பத்திற்கு விரோதமாகவே பாதுகாப்பாக நாடுகடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும்`` என்று பிரகடனப்படுத்தியுள்ளது.

Top of page