World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Tamil Nadu sackings signal new offensive against Indian workers

இந்திய தொழிலாளர்களுக்கு எதிரான புதிய தாக்குதலுக்கு,சமிக்கை காட்டும் தமிழ்நாடு பணி நீக்கங்கள்

By Ganesh Dev and K. Ratnayake
3 September 2003

Use this version to print | Send this link by email | Email the author

இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் ஜூலை மாத ஆரம்பத்தில் வேலைநிறுத்தம் செய்த சுமார் 2 லட்சம் அரசாங்க ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டது, விரைந்தே நாடு முழுவதிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் சமூகநிலைமை மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான ஒட்டுமொத்தமான தாக்குதலுக்கான அடிப்படையாகி உள்ளது. தமிழ்நாட்டின் உயர் நீதிமன்றத்தாலும் மற்றும் இந்திய உச்ச நீதிமன்றத்தாலும் ஆதரிக்கப்பட்ட இந்த முன்கண்டிராத தாக்குதல், ஊடகங்கள் மற்றும் பெரு நிறுவனங்களால் ஒரு முன்மாதிரியாக வரவேற்கப்பட்டது, மற்றும் புதுதில்லியில் உள்ள பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான அரசாங்கத்தால் ஆதரிக்கப்பட்டது.

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக (AIADMK) மாநில அரசாங்கத்தால் அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் இதர சலுகைகள் குறைக்கப்பட்டதற்கு அரசாங்க ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் விளைவுதான், இந்த வேலைநிறுத்தம். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு அரசாங்க ஊழியர்கள், தங்களுக்கு கிடைத்திருந்த நலன்களில், ரூபாய் 90,000 முதல் ($US1,960), 1,25,000 வரை இழந்தமை பல்வேறு வேலை நிறுத்தங்களையும் எதிர்ப்புக்களையும் தூண்டி விட்டிருக்கின்றது.

அரசாங்க ஊழியர்களின் வளர்ந்து வரும் போர்க்குணத்திற்கு தமிழ்நாடு அரசு, சென்ற ஆண்டு மே மாதம் அத்தியாவசிய பணிகள் பராமரிப்பு சட்டம் (Essential Services Maintenance Act -ESMA) என்ற கொடூரமான சட்டத்தின் மூலம் பதில் கொடுத்தது. இது பொதுத்துறையின் எந்த குறிப்பிட்ட பகுதியையும், "அத்தியாவசியம்" என்று அறிவிப்பதற்கும் அத்தகைய சேவைகள் வேலை நிறுத்தம் செய்வதற்கு தடை விதிக்கும் வகையினத்தில் கொண்டுவருவதையும் வழங்கியது. நிதி அமைச்சர் சி.பொன்னையன், "கட்டுப்பாட்டை நிலைநாட்டவும்", "மாநிலத்தின் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்தவும்" இந்த சட்டம் அவசியம் என்று, அப்போது விளக்கம் தந்தார்.

மாநில அரசாங்கம் ஓய்வு பெறும் ஊழியர்களின் சலுகைகளை குறைத்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அரசாங்க ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் அமைப்புக்களின் கூட்டு நடவடிக்கை குழு (JACTO - GEO) 2003 மார்ச் மாதம் ஒரு அடையாள வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும்படி நிர்பந்திக்கப்பட்டது. அதேதினத்தில், ஒட்டு மொத்த உண்ணாவிரத கிளர்ச்சிக்கு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசாங்க ஊழியர் அமைப்புக்களின் சம்மேளனம் (COTA - GEO) அழைப்பு விடுத்தது.

தங்களது உறுப்பினர்கள் இடையே நிலவிய பரவலான, ஆத்திரத்தை எதிர் நோக்கிய தொழிற்சங்கங்கள், பதினைந்து கோரிக்கைளுக்காகப் போராட ஜூலை மாதம் 2ந் தேதி, கால வரையரையற்ற வேலை நிறுத்தத்தை மேற்கொள்வதற்கான அழைப்பை விடுத்தனர். இதில் பிரதானமான கோரிக்கைகள், ஓய்வூதியம் மற்றும் இதர சலுகைகள் தொடர்பானவை. வேலை நிறுத்தம் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் மாநில அரசாங்கம், அந்த வேலை நிறுத்தத்தை முறியடிக்கும் முயற்சியாக, நூற்றுக்கணக்கான தொழிற்சங்கத் தலைவர்களையும், சங்க அலுவலர்களையும் கைது செய்தது. அடுத்த இரண்டு நாட்களுக்கு மேலாக, கைதுகள் மற்றும் காவல்துறை கெடுபிடிகள் நீடித்தன. இது, வெளிநடப்புகளையும், வேலை நிறுத்தங்களையும், மாநிலத் தலைநகரான சென்னையில் உசுப்பி விட்டது.

தொழிலாளர்களை மிரட்டுவதற்கு பதிலாக, அரசாங்க நடவடிக்கைகள், வேலை நிறுத்த கோரிக்கைக்கு மிகப் பெருமளவில் ஆதரவு திரளுவதற்கு காரணமாக இருந்தது. பொதுத்துறை ஊழியர்களில் 90சதவீதம் பேர் அல்லது பத்து லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் என மதிப்பிடப்படும் ஊழியர்கள் ஜூலை 2-ந் தேதி வேலை நிறுத்தத்தில் இறங்கினர். இப்படி மிகப் பெருமளவில் அரசாங்க ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ததால் ஆடிப்போன, முதலமைச்சர் ஜெயராம் ஜெயலலிதா, ஜூலை 4-ந் தேதியன்று, வேலை நிறுத்தம் செய்தவர்களை முன் தேதியிட்டு பதவி நீக்கம் செய்வதற்கும், பெருமளவிற்கு, அபராதம் விதிப்பதற்கும், வேலை நிறுத்தம் செய்ததாகவோ, அல்லது அதை தூண்டி விட்டதாகவோ நிரூபிக்கப்பட்டவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கவும், முதலமைச்சருக்கு அதிகாரம் வழங்கும் அவசர திருத்தம் ஒன்றை எஸ்மாவிற்கு செய்து தன் அதிகாரத்தைக் கெட்டிப்படுத்திக் கொண்டார்.

இந்திய வரலாற்றிலேயே, இதுவரை இல்லாத அளவிற்கு அடுத்த சில நாட்களில், ஏறத்தாழ 200,000 ஊழியர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். அரசாங்க ஊழியர்கள் தங்களது வேலையை மட்டும் இழக்கவில்லை. பல நேர்வுகளில் தங்களது வீட்டு வசதிகளையும் இழந்தார்கள். இவர்களது இடத்தை நிரப்புவதற்காக வேலை நிறுத்தத்தை உடைக்கின்ற ஆயிரக்கணக்கான ஊழியர்களை குறுகியகால ஒப்பந்த அடிப்படையில், ஜெயலலிதா அமர்த்த தொடங்கினார். அப்படி நியமிக்கப்பட்டவர்களில் பலர், ஆளும் அ.இ.அ.தி.மு.க விடம் நெருக்கமாக உள்ளவர்கள் ஆவர். அதே நேரத்தில் போலீஸார் தொடர்ந்து கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்கள்.

அடிப்படை ஜனநாயக உரிமைகளில் மிகப் பெரும் அளவிற்கு, தாக்குதல்கள் நடைபெற்ற நிலையிலும், இந்திய மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி (CPI-M) உட்பட எதிர்க்கட்சிகள் மற்றும் தொழிற் சங்கங்கள் தொழிலாள வர்க்கத்திடமிருந்து விரிவான அடிப்படையில் ஆதரவு திரட்டுவதற்கு எந்தவிதமான முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. வேலை இழப்பிற்கு ஆளான ஊழியர்களை பயனற்ற பல்வேறு சட்ட நடவடிக்கைகளில் இறங்குமாறு பணித்தனர். ஜூலை 11 அன்று, சென்னை உயர் நீதி மன்றம் வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மாநில நிர்வாக தீர்ப்பாயம் மூலமாக மீண்டும் வேலை தருமாறு கோரவில்லை எனக் கூறி, அரசு ஊழியர்களது சட்டரீதியான மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மாநில நிர்வாக தீர்ப்பாயத்தில் ஒரேயொரு நீதிபதி மட்டுமே பணியாற்றி வருகிறார். ஏற்கனவே அவரிடம் வெள்ளம் போல், பல வழக்குகள் உள்ளன.

தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் ஓர் அம்சத்தில் மட்டுமே உயர் நீதிமன்றம் உடன்பட்டது: கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு கட்டளையிட்டது. சிறையிலிருந்து வெளியே வந்ததும் உடனடியாக தொழிற்சங்கத் தலைவர்கள் வேலை நிறுத்தக் குழு கூட்டத்தை நடத்தி ஜூலை 12 அன்று, நிபந்தனை எதுவும் இல்லாமல், இது தொடர்பான் தொழில்துறை நடவடிக்கை எதனையும் கைவிட்டது. தொழிற்சங்கத் தலைவர், G. சூரியமூர்த்தி, உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மேல் முறையீடு செய்கின்ற எண்ணம் எதுவும் இல்லை என்று, JACTO - GEO மற்றும் COTO - GEO ஆகியவற்றின் நிலைப்பாட்டை அறிவித்தார். ஆனால், மேல் முறையீடு செய்யும் ஊழியர்களுக்கு தனது அமைப்பு "தார்மீக ஆதரவு" தரும் என்றும் சூரியமூர்த்தி குறிப்பிட்டார்.

வேலை நிறுத்தம் முடிந்துவிட்டது மற்றும், பதவி நீக்கங்கள் தொடர்பாக விரிவான எந்த பிரச்சாரமும் நடத்தப்படவில்லை. இந்திய உச்ச நீதிமன்றம், மிகத் தீவிரமான முன்மாதிரியை உருவாக்க அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டது. ஜூலை 24 அன்று, இரண்டு நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற பிரிவு, ஊழியர்களுக்கு வேலை நிறுத்தம் செய்வதற்கு அடிப்படை உரிமை எதுவும் இல்லையென்றும், மற்றும் அத்தகைய சட்டவிரோதமான வேலை நிறுத்தங்களை கடுமையான நடவடிக்கைகள் மூலம் சமாளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தன. பதவி நீக்கம் செய்யப்பட்ட, ஊழியர்களை மாநில அரசாங்கம் மீண்டும், பதவியில் சேர்த்துக் கொள்ள வேண்டும், ஆனால், ஊழியர்கள் அதற்கு முன்பு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அந்த நீதிபதிகள் இருவரும் "ஒரு ஆலோசனை" தெரிவித்தனர், ஆனால், கட்டளையிடவில்லை.

1,65,000 தொழிலாளர்கள் திரும்பவும், பணியில் அமர்த்தப்பட்டதும், உச்ச நீதிமன்றம், ஆகஸ்ட் 6-ந் தேதியன்று தனது இறுதி தீர்ப்பை வழங்கியது. ESMA சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களை தள்ளுபடி செய்து, ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வதற்கு "எந்தவிதமான அடிப்படை ரீதியான, சட்டபூர்வமான, தார்மீக ரீதியான அல்லது சம உரிமை அடிப்படையிலான உரிமை எதுவும் இல்லை" என உச்ச நீதிமன்றம் அறிவித்தது. 21 பக்கங்களை கொண்ட தீர்ப்பு முழுவதிலும், தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான போக்கு ஊடுருவி நிற்பது தெளிவாகத் தெரிகிறது. "எந்த ஒரு அரசியல் கட்சியோ, அல்லது அமைப்போ ஒரு மாநிலத்தின் அல்லது நாட்டின் பொருளாதார மற்றும் தொழில் துறை நடவடிக்கைகளை முடக்கி வைப்பதற்கு, அல்லது குடிமக்களுக்கு தொந்தரவு கொடுப்பதற்கு எந்தவிதமான உரிமையும் கோர முடியாது" என நீதிபதிகள் அறிவித்தனர். வேலை நிறுத்த நடவடிக்கைகள் "மிகப் பெரும்பாலும் முறைகேடாக", பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், "ஊழியர்கள் அதிக - நேர்மை திறத்தோடும், விழிப்புணர்வோடும், மற்றும் திறமையோடும்" பணியாற்றி தங்களது வேலை வழங்குவோரை கவர வேண்டும் என, ஊழியர்கள் தங்களுக்குள்ள குறைபாடுகளை நீக்கிக் கொள்வதற்கு ஒரு ஆலோசனையும் தெரிவித்தனர்.

பொருளாதார மறுசீரமைப்பில் புதியதொரு சுற்று

அதன் தாக்குதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பச்சை விளக்கு காட்டிவிட்டதாக தமிழ்நாடு அரசாங்கம் உடனடியாக எடுத்துக் கொண்டது. ஆகஸ்ட் 12 அன்று, முதலமைச்சர் ஜெயலலிதா 26 பிரதான தொழிற்சங்கங்கள் மற்றும் 200 இணைப்பு சங்கங்கள் ஆகியவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கு நடவடிக்கைகளை எடுத்தார். JACTO மற்றும் COTA சம்மேளனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்தார். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள், 6000த்திற்கு மேற்பட்ட ஊழியர்கள், வன்முறையில் ஈடுபட்டதாகவும், மற்றும், மற்றவர்களை வேலை நிறுத்தம் செய்ய தூண்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு, அவர்கள் மீண்டும் பதவியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற மூன்று நீதிபதிகளைக் கொண்ட குழுவினர் முன், அந்த, 6,000-த்திற்கு மேற்பட்ட ஊழியர்கள் விசாரணைக்கு செல்லுகின்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது.

மாநில அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பெரு வர்த்தக நிறுவனங்கள் உற்சாகமாக வரவேற்றுள்ளன. இந்திய தொழில்கள் சம்மேளனத்தின் (CII) தேசியக்குழுக் கூட்டம், சென்னையில் ஜூலை 25-ந் தேதி நடைபெற்றது. அதில் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ், டாடா, மற்றும் போர்ட் இந்தியா உட்பட, 70 தலைமை நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் கெளரவ விருந்தினராக கலந்து கொண்ட ஜெயலலிதாவிற்கு அவர்கள் புகழாரம் சூட்டினர்.

CII - தலைவர், ஆனந் மஹேந்திரா "வழக்கத்திற்கு மாறான உறுதிப்பாட்டோடு, முதலமைச்சர், அரசாங்க ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை சமாளித்திருக்கிறார். அது தொழில் துறையில் உள்ள நாம் பின்பற்ற வேண்டிய புறநிலை படிப்பினை ஆகும்." என குறிப்பிட்டார். ஜெயலலிதா, கம்பெனி தலைவர்களை தங்களது சொந்த முறையில், ஊழியர்கள் பிரச்சனைக்கு நடவடிக்கை எடுக்க வற்புறுத்தினார். "இது போட்டிகள் நிறைந்த உலகம், இதில் சோம்பேறிகள் தங்களது சோம்பேறித் தனத்திற்காக வருந்தியாக வேண்டும், நீங்கள் உங்கள் மூலோபாயங்களை மறு மதிப்பீடு செய்ய வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். சந்தர்ப்பங்களைத் தேடுங்கள், அந்த சந்தர்ப்பம் கிடைத்ததும், துணிவாக நடவடிக்கை எடுங்கள்" என்று ஜெயலலிதா குறிப்பிட்டார்.

இந்தியாவில் தொழில்துறை மற்றும் பொருளாதார சீரமைப்புகள் நடவடிக்கைகள் மிகுந்த மந்த கதியில், சென்று கொண்டு இருக்கின்றன, என இந்தியாவின் ஆளும் வட்டாரங்களில் நிலவுகின்ற கவலைகளை எதிரொலிக்கின்ற வகையில் கம்பெனி நிர்வாகிகள் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். 1990களில், தொடர்ந்து பதவிக்கு வந்த காங்கிரஸ், மற்றும் பிஜேபி அரசாங்கங்கள் இந்திய பொருளாதாரத்தில் வெளி நாட்டவர் முதலீடுகளை அனுமதிக்கவும், அரசாங்க செலவீனங்களைக் குறைப்பதற்கும், அரசிற்கு சொந்தமான தொழிற்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதற்கும், மிகத் தொலைநோக்கான பொருளாதார சீர்திருத்த திட்டங்களை எடுத்து வந்தனர்.

ஆயினும், சிறிது காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள "இரண்டாவது தலைமுறை சீர்த்திருத்தங்களை" மேற்கொள்ளுமாறு பெரு வர்த்தக நிறுவனங்கள் கோரி வருகின்றன. இத்தகைய நடவடிக்கைகளின் தலையாய இலக்கு என்னவென்றால், மிச்சம் மீதமிருக்கும் பொதுத் துறைகள், அரசாங்க மானியங்கள், தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதற்கு எதிராக எழுப்பப்பட்டுள்ள சிறிய சட்டபூர்வ தடைகள் ஆகியனவாகும். குறிப்பாக, இந்த வேலைத் திட்டம் முதலாளிகள் அவர்கள் விருப்பப்படி, ஊழியர்களை பணியில் அமர்த்துவதற்கும், பதவி நீக்கம் செய்வதற்கும் அனுமதிக்கும் வகையில் சட்டங்களை பெருமளவில் மாற்றுகின்ற உத்தேசம் அடங்கியிருக்கின்றது, இந்த நடவடிக்கை தொழிலாளர் மத்தியில் பரவலான எதிர்ப்பை தூண்டிவிட்டுள்ளது.

பொதுத்துறை தொழிலாளர்கள் அனுபவித்து வரும் உரிமைகள் தங்களிடம் பணியாற்றுகின்ற பயிற்சி பெற்ற மற்றும் கல்வி கற்ற ஊழியர்களின் ஊதிய விகிதங்களை, மற்றும் பணி நிலைமைகளை மேலும் குறைப்பதற்கு தடையாக உள்ளன என கருதுகின்றனர். இந்தியாவில் உழைக்கும் மக்கள் என்று ஒட்டு மொத்தமாக கணக்கிடும்போது அதில் மிகக் குறைந்த விழுக்காடு ஊழியர்கள், ஒப்பீட்டளவில் பணிப்பாதுகாப்பு உள்ள "நிரந்தர சம்பளம்" பெறுபவர்களாக பணியாற்றுகின்றனர், அதுவும் குறைந்து கொண்டே வருகின்றது. சென்ற ஆண்டு இந்திய திட்டக் கமிஷன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் 1999 - 2000ம் ஆண்டில் 6.7 சதவீதம் மட்டுமே, சம்பளம் பெறுகின்ற ஊழியர்கள் என்று வகைப்படுத்தப் பட்டிருக்கின்றது. ஊழியர்களில் 37.3 சதவீதம் "தற்காலிக" தொழிலாளர்கள், மீதமிருக்கின்ற 56 சதவீதம் ஊழியர்கள் "சுய வேலைவாய்ப்பு" உடையவர்கள்.

6.7 சதவீதம் 28 மில்லியன் தொழிலாளர்களை பிரதிநித்துவம் செய்கிறது. இவர்கள் "அணிதிரட்டப்பட்ட துறை" என்று வகைப்படுத்தப்பட்டுள்ள சங்கம் சார்ந்த அமைப்புக்களில் பணியாற்றுபவர்கள். இவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் 69 சதவீதம் பேர் வரை, அரசாங்க ஊழியர்கள், அவர்களில் பலர் தொழிற்சங்கமயப்படுத்தப்பட்டவர்கள். கடந்த பத்து ஆண்டுகளில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும், அவர்களது ஊதியங்கள், மற்றும் இதர சலுகைகள் எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் அப்படியே நீடித்துக் கொண்டிருக்கின்றன. இப்படி நீடிப்பது அரசாங்க செலவை குறைப்பதற்கும், நாடு முழுவதிலும் ஒட்டு மொத்த தொழிலாளர்களின் ஊதியங்களை வெட்டுவதற்கும், நிலைமைகளை குறைப்பதற்கும் சகித்துக் கொள்ள முடியாத தடைக்கல்லாக உள்ளது என்று பெரிய வர்த்தக நிறுவனங்கள் கருதுகின்றன.

எனவேதான், தமிழ்நாடு அரசாங்கத்திற்கு பெரு வர்த்தகங்களும், ஊடகங்களும் பாராட்டுக்களை குவித்திருக்கின்றன. இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையாளர் ஒருவர், "ஜெயலலிதாவின் சிறப்பு மிக்க அறிவுபூர்வமான நடவடிக்கையை" பாராட்டியுள்ளார். இதர மாநில அரசாங்கங்கள் எதிர் காலத்தில் வேலை நிறுத்தம் செய்ய உத்தேசித்திருக்கும் ஊழியர்கள் மீது விரைவாகவும், திட்டவட்டமாகவும், நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்ற ஒரு அரங்கை அமைத்திருக்கிறார்" என்றும் பாராட்டியிருக்கிறார். பக்கத்து நாடான, இலங்கையிலும், தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகள் எதிரொலித்திருக்கின்றன. இலங்கையின் டெய்லி மிரர் பத்திரிகை தனது தலையங்கத்திலேயே, "வேலை நிறுத்த புற்று நோய்க்கு அவசர அறுவை சிகிச்சை" என்று தலைப்பிட்டு, சுகாதாரத் துறையில் வேலை நிறுத்தத்தை தடை செய்வதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்திக் கூறியுள்ளது.

மத்தியில் ஆட்சி புரிந்து வரும் பிஜேபி தலைமையிலான அரசாங்கம், தமிழ் நாட்டில் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கையை பின்பற்ற தயாராகி வருவதாக, கோடிட்டு காட்டியுள்ளது. ஆகஸட் 19 அன்று நாடாளுமன்றத்தில் வேலை நிறுத்தங்களை தடை செய்வதற்கு அரசாங்கம், சட்ட முன்வரைவு எதையும் தயாரித்து கொண்டிருக்கின்றதா என்று கேட்கப்பட்டதற்கு பதிலளித்த மத்திய உள்துறை இளநிலை அமைச்சர் ஹரின் பதக் அரசாங்க ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வதை தடை செய்கின்ற வகையில் தற்போது நடைமுறையில் உள்ள ஊழியர் "நடத்தை விதிகள்" பயன்படுத்தப்படும் என்று பதிலளித்திருக்கிறார்.

தொழிற் சங்கங்கள் பூரண சரணாகதி

தொழிலாள வர்க்கத்தின் மீது நடத்தப்பட்டு வரும் இத்தகைய தாக்குதலை எதிர்கொள்கையில் தொழிற்சங்கங்கள் ஆட்சியாளர்களிடம் சம்பூரண சரணாகதி அடைந்து விட்டன. அகில இந்திய மாநில அரசாங்க ஊழியர்கள் சம்மேளன (AISGEF) பொதுச் செயலாளர் சுக்குமால் சென், தமிழ்நாடு முதலமைச்சரின் நடவடிக்கைகள் குறித்து தனது "ஆழ்ந்த கவலையையும் வருத்தத்தையும்" தெரிவித்துக் கொண்டிருக்கிறார் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் முடிவு, "மிகவும் துரதிஷ்டவசமானது" என்று வர்ணித்திருக்கிறார். இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ- எம்) கட்டுப்பாட்டில் உள்ள AISGEF அமைப்பிடம் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாளர்களை திரட்டுவதற்கு திட்டம் எதுவும் இல்லை.

CITU (Centre of Indian Trade Unions) தலைவர், M.K. பாந்தே இந்திய பத்திரிகையான புரண்ட் லைனுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், மாற்றம் எதுவும் அதிக அளவில் நடந்து விடவில்லை. ஜெயலலிதா அரசின் நடவடிக்கைகள் தற்செயலாக நடந்துவிட்ட ஒரு சம்பவம் தான் என்று குறிப்பாக சுட்டுகிறது. "இந்த தீர்ப்பிற்கு பின்னரும் வேலை நிறுத்தம் நடக்கத்தான் செய்யும், வருகின்ற விளைவுகள் எதுவாயிருந்தாலும், அந்த தீர்ப்பை புறக்கணித்து விடலாம்" என அவர் தெரிவித்துள்ளார்.

புது தில்லியில், தொழிலாளர்கள் நிரந்தரக் குழு (SLC) அழைக்கப்படும் முத்தரப்பு கூட்டம் ஜூலை 25-ந் தேதி நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அரசாங்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தேசிய தொழிற் சங்கத் தலைவர்கள் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் தொழிற் சங்க அதிகாரத்துவத்தினர் அரசாங்க ஊழியர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டிக்கும் மிதமான ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்ய முயற்சித்ததற்கு தொழிலாளர் துறை அமைச்சர் ஆட்சேபித்த பொழுது, இப்படி தமிழ்நாடு அரசாங்கத்தை கண்டிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், "SLC நிகழ்ச்சி நிரல் முழுவதும் சீர்குலைவதைத் தவிர்ப்பதற்கு" பதிலாக தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் அதற்கு இணங்கி, தீர்மான வாசகத்தை படித்தால் மட்டுமே போதும் என்று உடன்பட்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி --மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) உட்பட எந்த எதிர் கட்சிகளும், அரசாங்க ஊழியர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக, கண்டன அறிக்கைகளை வெளியிட்டார்களே தவிர, அதற்கு மேல் எதுவும் செய்யவில்லை. இடது சாயல் போக்குள்ள, புரண்ட் லைன் பத்திரிகையே, இதை சுட்டிக்காட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. "எல்லா தலைவர்களும் பத்திரிகைகளில் அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்ற போதிலும், ஒருங்கிணைந்த முயற்சி எதையும் மேற்கொள்வதற்கு, அங்கு சிறிதே முயற்சி இருந்தது. இடது சாரி கட்சிகளே கூட, ஜூலை 19-ந் தேதி அன்றுதான், சர்வகட்சி கூட்டத்தை ஏற்பாடு செய்ய முடிந்தது குறித்து வருந்தினர். அந்த நேரம் தமிழ்நாடு அரசாங்கம், பதவிநீக்கம் மற்றும் கைது நடவடிக்கைகளை நடத்தி 15 நாட்களுக்கு மேலாகி விட்டது" என புரண்ட் லைன் எழுதியிருக்கின்றது.

கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக, தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலையின் மீதான தாக்குதல்களில் எதிர்ப்பு உணர்வின்றி அல்லது செயலூக்கத்துடன் ஒத்துழைத்து வரும் இந்த அமைப்புக்கள் மற்றும் கட்சிகளின் மிகவும் சீரழிந்த இயல்பை, தமிழ்நாட்டில் பெருமளவில் தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டமை அம்பலப்படுத்தி இருக்கிறது. சிபிஐ-எம் கட்சியைப் பொறுத்தவரை, மேற்கு வங்காளத்திலும் கேரளத்திலும், ஆளும் "இடது" சாரி கூட்டணிகளில் முன்னணி அங்கம் வகித்திருக்கின்றது. அந்த கூட்டணி ஆட்சிகள் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்திருக்கின்றன.

தமிழ்நாட்டின் கசப்பான அனுபவங்களிலிருந்து, இந்திய துணைக் கண்டம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள் ஓர் கூர்மையான படிப்பினையை பெற்றாக வேண்டும். வேலை நிறுத்தம் செய்யும் உரிமை உட்பட, எல்லா அடிப்படை ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்கும் எந்தப் போராட்டத்திற்கும் ஆரம்பப் புள்ளி, தற்போது இந்தியாவில் நடைமுறையிலுள்ள முதலாளித்துவ ஒழுங்கின் தொங்கு தசைகளாக தங்களைத்தாங்களே நிரூபித்து வருகின்ற சிபிஐ மற்றும் சிபிஐ-எம் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளிடமும் இருந்து முற்றிலும் அரசியல் அடிப்படையில் முறித்துக் கொள்ள வேண்டும். அரசாங்கம் மற்றும் பெரு வர்த்தக நிறுவனங்களின் செயல் திட்டத்தை சவால் செய்ய, சோசலிச சர்வதேசிய கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு புதிய வேலைத் திட்டம் தேவைப்படுகிறது. மிகப் பெரும்பாலான மக்களின் பாதிப்பில் சலுகை மிக்க சிலர் லாபம் ஈட்டுகின்ற "உரிமையை" சோசலிச சர்வதேசக் கோட்பாடுகள் ஏற்றுக் கொள்வதில்லை.

Top of page