World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: Heat wave catastrophe exposes health care crisis

பிரான்ஸ்: வெப்ப அலைப் பேரழிவு அம்பலப்படுத்திய சுகாதார சேவை நெருக்கடி

By Francis Dubois
9 September 2003

Use this version to print | Send this link by email | Email the author

ஆகஸ்ட் மாதம் வெப்ப அலைவீசியதைத் தொடர்ந்து பிரான்சில் எழுந்த சுகாதார நெருக்கடி ஒன்றும் தற்செயலான விடையமல்ல. ஊழியர்கள் பற்றாக்குறை, பயிற்சியின்மை, மருத்துவக் கருவிகள் பற்றாக்குறை, மருத்துவமனைகள் மூடல், பொதுமக்களுக்கான மருத்துவ சேவைகளுக்கு செலவினங்கள் அதிகரித்தமை ஆகியவற்றினை விளைவித்த அரசாங்கத்தின் கொள்கைகள் குறித்து சுகாதாரத் தொழிலாளர்கள் பல ஆண்டுகளாகவே எச்சரிக்கை செய்து வந்தனர்.

இரண்டாவது உலகப்போர் முடிந்த பின்னர் பிரான்சில் உருவாக்கப்பட்ட சுகாதாரச் சேவையின் அடித்தளத்தையே சிதைக்கின்ற வகையில் ஜாக் சிராக் மற்றும் ரஃபரனது வலதுசாரி அரசாங்கம் சீர்திருத்த திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டிருந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த நெருக்கடி தோன்றியது. எனவே அரசாங்கத்தின் மீது மக்களுக்கு ஆவேச அலை தோன்றியதில் வியப்பு எதுவும் இல்லை. குறிப்பாக சுகாதாரப்பணியாளர்கள், மருத்துவர்களது கோபம் அதிகமாக இருந்தது. அவர்களது எச்சரிக்கைகள் மற்றும் அச்சங்கள் மிகவும் துயரமளிக்கின்ற வகையில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

வெப்ப அலை வீச்சால் உடனடியாக பெருமளவில் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்ததற்கு முக்கிய காரணம் அரசாங்கத்தின் செயல்பாடில்லாத தன்மைதான். ஆகஸ்ட் முதலிரண்டு வாரத்தில் இறப்புகளின் எண்ணிக்கை திடீரென உயர்ந்ததற்குக் காரணம் அவசர உதவிக்கு விடுக்கப்பட்ட அழைப்பை அரசாங்கம் புறக்கணித்ததுதான். அமைச்சர்கள் தங்களது கோடை விடுமுறை இல்லங்களில் தங்கி இருந்தார்கள் அசையவில்லை. மூன்று வாரங்கள் வரை ஜனாதிபதி சிராக் மெளனமாக இருந்தார். அப்போது வெப்ப அலைவீச்சால் இறப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இறுதியாக அரசாங்கம் தங்களது கோடை விடுமுறைகளிலிருந்து திரும்பி வந்தது. பொதுமக்களது ஆவேசம் அதிகமாக இருந்ததால் அரசாங்கம் தலையிடுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. அரசாங்கம் உடனடியாக தங்களது சொந்த செயலற்ற தன்மையை சமாதானப்படுத்துவதற்காக சாதாரண மக்கள் மீதே பழிபோட்டது. இந்தப் பேரழிவிற்கு எந்தப் பொறுப்பும் ஏற்க அரசாங்கம் மறுத்துவிட்டது.

ஆகஸ்ட் நடுவில் வெப்ப அலை உச்சகட்டத்தில் இருந்ததற்கு பிரான்ஸ் நிர்வாகம் இறப்புக்கள் குறித்து எந்தவிதமான அதிகாரபூர்வமான புள்ளி விவரத்தையும் வெளியிடவில்லை. துல்லியமான புள்ளி விவரத்தைச் சேகரிக்க இயலவில்லை. வெப்பம் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை எவ்வளவு? என்பது குறித்து ஒருவாரத்திற்கு மேல் கருத்து வேறுபாடுகள் நிலவின. இறப்பு எண்ணிக்கை விவரத்தை வெளியிட மறுத்த அரசாங்கத்தின் நோக்கம் குறித்து கடுமையான சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. புள்ளி விவரங்களை குறித்தும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. புள்ளி விவரங்களை அரசாங்கம் கையாண்ட முறையை பல டாக்டர்கள், சுகாதார அதிகாரிகள், இறுதிச்சடங்கு சேவையாளர்கள் ஆகியோர் ஆட்சேபித்தனர் மற்றும் நெருக்கடியை குறைத்து மதிப்பிடுவதற்கு அரசாங்கம் முயன்று வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

ஆகஸ்டு 23 அன்று பாரிசில் ரஃபரன் உலக சாம்பியன் விளையாட்டு போட்டிகளைத் துவக்கி வைத்த நேரத்தில் அவரை எதிர்த்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இறுதியாக ஆகஸ்டு 29ந் தேதியன்று ஆகஸ்டு மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டுமே பிரான்சில் நிலவிய வெப்ப வீச்சினால் 11,000க்கு மேற்பட்ட மக்கள் மாண்டார்கள் என்று திடீரென்று அரசாங்கம் அறிவித்தது.

ஆகஸ்டு கடைசி இரண்டு வாரத்தின் நிகழ்வுகளை இட்டு ஊடகங்கள் தொழிற்பட குறிகாட்டினர் இதற்கு விசுவாசமாக அவை அனைத்து ஆதாரங்களுக்கும் மாறான முறையில் கிளிப்பிள்ளை போல் எதிரொலித்தன, அதாவது; ''ஒவ்வொருவரும் இதற்குப் பொறுப்பு'' என்ற நிலைப்பாட்டை இடைவிடாது கூறிவந்தன, மிகப்பெரும்பாலான இந்த வெப்ப அலை வீச்சின் மூலம் கிடைத்த படிப்பினை என்னவென்றால் பிரான்ஸ் நாட்டுமக்களிடம் அடிப்படை ஒற்றுமை உணர்வு இல்லை என்பதுதான் என்றதுடன் அதற்கு ஏதுவாக உறவினர்கள் உரிமை கொண்டாடமல் விட்ட ஒரு சில இறந்த உடல்களை அடையாளம் காண இயலாத நிலையில் பொது புதைகுழியில் புதைத்த சம்பவத்தினை பெரிதுபடுத்திக் காட்டினர். பின்னர் இது ஒவ்வொருவரும் முதியவர்கள் மீது "கருணை காட்ட" வேண்டும் என உணர்த்துவதற்காக நயவஞ்சகத்துடன் பயன்படுத்தப்பட்டது.

உண்மையிலேயே பிரான்சில் முதியவர்களுக்கான சுகாதார சேவை பற்றிய கண்டனம் புதிது அல்ல. அரசாங்கம் செலவுகளை வெட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு ஒரு பாரம்பரியம் நிலவுகிறது. 1988ம் ஆண்டிற்கும், 2003ம் ஆண்டிற்கும் இடையில் பட்ஜெட் குறைப்புக்கள் மருத்துவ மனைகள் மூடல், சேவைகள் மற்றும் மருந்துகள் குறைப்பை எதிர்த்து பல்வேறு வேலை நிறுத்தங்களும், கண்டன ஆர்பாட்டங்களும் நடந்திருக்கின்றன. 1988ம் ஆண்டு இரண்டாம் உலகப்போருக்கு பிந்திய காலத்தில் மிகப்பெரும் அளவிற்கு வேலை நிறுத்தம் ஒன்று நடந்தது. சுகாதார சேவைகளில் முதலீடு செய்வதற்கு மறுத்ததற்கும், சுகாதாரச் சேவைகளை தனியார்மயமாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கும் எதிராக இதுபோன்ற வேலைநிறுத்தங்களும் கண்டன ஆர்பாட்டங்களும் நடைபெற்றன. சோசலிஸ்டுக் கட்சி மற்றும் வலதுசாரிகள் நடத்திய இரண்டு அரசாங்கங்களும் இது போன்ற நடவடிக்கைகளில் இறங்கின.

சுகாதார ஊழியர்களும், மருத்துவர்களும், சுகாதார வசதிகள், பொதுவாகச் சிதைந்து கொண்டுவருவது குறித்து இடைவிடாது எச்சரிக்கை விடுத்து வந்திருக்கின்றனர். இப்படிப்பட்ட சிதைவு நிலைகளால் பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்தான விளைவுகள் குறித்தும், எச்சரிக்கை செய்தனர். கடந்த நான்கு ஆண்டுகளில் செவிலியர்கள், இளநிலை மற்றும் மூத்த டாக்டர்கள், பல் மருத்துவமனை ஊழியர்கள் உட்பட சுகாதார சேவையின் எல்லாப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் பல்வேறு கண்டன நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றனர். இத்தகைய கண்டனங்களை பல்வேறு அரசாங்கங்களும், சுயநல நோக்கம் கொண்டவை அல்லது ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சார்ந்தவர்களது நலனை நாடுபவை மற்றும் நோயாளிகளுக்கு சிகிச்சை தருவதை சீர்குலைப்பவை என்று சித்தரித்து வந்திருக்கின்றன. 2000லிருந்து 2003ம் ஆண்டில் இதுவரை மருத்துவ மனைகளின் ஊழியர்கள், மிகப்பரவலாக ஆர்பாட்டங்களை நடத்தியுள்ளனர். மற்றும் பரவலான வேலை நிறுத்தமும் செய்துள்ளனர். சொந்தமாகத் தங்கள் அமைப்புக்கள் மட்டுமோ அல்லது இதர பொதுசேவை ஊழியர்களோடு இணைந்தோ இது போன்ற நடவடிக்கைகளில் இறங்கினர்.

இந்த ஆண்டு மே, ஜூன், மாதங்களில் பல மருத்துவமனைகளில் ஊழியர்கள், வேலை நிறுத்தத்தில் இறங்கினர். பென்ஷன் சலுகைகள் குறைப்பை கண்டித்தும், அரசாங்கம் புதிய மருத்துவ திட்டத்தைக் கொண்டுவரும் திட்டத்தைக் கண்டித்தும் அப்போது மிகப்பெரும் அளவில் கண்டன இயக்கம் நடைபெற்றது. அரசாங்கத்தின் புதிய ''மருத்துவமனைத் திட்டம்", மருத்துவ மனைகளைத் தனியார்மயமாக்கும் நோக்கத்தைக் கொண்டது.

ஜூன்18 அன்று பிரான்சில் முதியோர் இல்லங்களை பராமரிக்கும் 16 அமைப்புக்களைச் சார்ந்தவர்கள் அரசாங்க கொள்கைக்கு எதிராக ஒரு நாள் கண்டன வேலைநிறுத்தம் செய்தனர். 16 அமைப்புகளும் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தன. அந்த அறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டிருந்ததாவது ''இந்த முதியோர் இல்லங்களில் வாழுகின்றவர்கள், குடும்பத்தினர், மற்றும் இயக்குநர்கள் இரண்டாம் தர சமூக பாதுகாப்பு திட்டத்தை விரும்பவில்லை. இனி மேலும் காத்திருக்க நாங்கள் விரும்பவில்லை. பிரான்சில் சுகாதார காப்பீடு அடிப்படையில் சமூக பாதுகாப்பு கட்டுக்கோப்பை நமது தலைமுறையைச் சேர்ந்தவரகள், இளைஞர்களுக்காக மட்டுமல்ல, பணக்காரர்கள் மற்றும் நோயாளிகள் நலனுக்காக மட்டுமல்ல முதியோர் ஏழைகள், உடல் ஊனமுற்றோர், ஆகியோரது நலனுக்காகவும் இந்த சமூகபாதுகாப்பு திட்டம் உருவாக்கியது. ஏனென்றால், நாங்கள் முதியோர் இல்லத்தில் உள்ள வயதானவர்களை மறந்துவிடாத ஐக்கியமான சமுதாயத்தை நிலைநாட்டவே விரும்புகிறோம்...."

இந்தக் கோரிக்கைகளுக்கு மதிப்பளிப்பதற்குப் பதிலாக இந்த நெருக்கடியை ரஃபரன் அரசு பயன்படுத்திக்கொண்டு சுகாதார சேவைகளின் மீது மேலும் கடுமையான வெட்டுக்களை கொண்டுவருகிறது. ஆகஸ்ட் 26-அன்று ரஃபரன் சுகாதார சேவை மற்றும் முதியோர் அமைப்புக்களின் பொறுப்பாளர்களை பிரதமரது இல்லத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். சுகாதார சேவை நெருக்கடி பற்றி பேசுவதற்காக அழைக்கப்பட்ட அந்தக் கூட்டத்தில் அவசரகால நிதி ஒதுக்கீடு எதுவும் செய்வதற்கு மறுத்து விட்டார். அல்லது எவ்வளவு பணம் ஒதுக்கப்படும் என்பதைக்கூட விவாதிப்பதற்கு மறுத்துவிட்டார். அந்தக்கூட்டம் நடப்பதற்கு முன்னர் பிரான்சில் உள்ள முதியோர் இல்லங்களுக்கு மிகப்பெரும் அளவில் ''மார்ஷல் திட்டம்" ஒன்று தேவை என்றும் அதற்கு 7 பில்லியன் யூரோக்கள் தேவை என்றும் முதியோர் இல்ல காப்பாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலாக ரஃபரன் முதியோர் பராமரிப்பிற்கு பணம் ஒதுக்கீடு செய்வதற்காக ஒரு பொது விடுமுறை நாளை ரத்து செய்ய உத்தேசித்திருப்பதாக அறிவித்தார்!

இந்த அறிவிப்பை தொடர்ந்து அரசாங்கத்தின் திட்டத்திற்கு பொதுமக்களிடையே பரவலான எதிர்ப்பு கிளம்பியவுடன் ஊடகங்களில் முதியவர்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்வதற்கு எந்த பொது விடுமுறை தினத்தை கைவிடுவது அல்லது தியாகம் செய்வது என்பது குறித்து குறிப்பாக விவாதங்கள் நடைபெற்றன. கைவிடவேண்டிய விடுமுறை தினம் பற்றி பல்வேறு ஆலோசனைகள் கூறப்பட்டன. மே 8ந்தேதி (நாஜி ஜேர்மனி தோல்வியுற்றதை நினைவுபடுத்தும்) விடுமுறை, நவம்பர் 11 (1918ம் ஆண்டு போர் நிறுத்த உடன்படிக்கை) நினைவு தினத்தை, பெந்தகோஸ்ட் திங்கட்கிழமை விடுமுறையை ரத்து செய்வதா? என்பது குறித்து ஊடகங்களில் விவாதங்கள் நடைபெற்றன. கத்தோலிக்க மத நிர்வாகக் குழுவினர் பெந்தகோஸ்ட் திங்கட்கிழமை விடுமுறையை ரத்து செய்யலாம். அதற்கு தத்துவ அடிப்படையில் எந்தவித எதிர்ப்பும் இல்லை எனத் தெரிவித்தனர். முதலாளிகள் சங்கத்தை சேர்ந்த எர்னஸ்ட்-அந்துவான் சிலியேர் பாரீஸ் நகரத்திற்கு அருகில் நடைபெற்ற "Summer University" என்னும் அச்சங்கத்தின் வருடாந்த மாநாட்டில் உடனடியாக அரசாங்கத்திற்கு பாராட்டு தெரிவித்தார். விடுமுறையை வெட்டவேண்டும் என்ற அரசாங்கத்தின் ஆலோசனை "மகத்தானது" என்றும், பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கு "பிரான்ஸ் நாட்டில் மக்கள் அதிக அளவிற்கு உழைக்க வேண்டும்" என்றும் குறிப்பிட்டார்.

வலதுசாரி UMP நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக இந்தப் பிரச்சனையில் அதிக ஆர்வம் காட்டினர். ஐரோப்பிய நாடுகளிலேயே பிரான்சில்தான் பொது விடுமுறை நாட்கள் அதிகம் என்று குறிப்பிட்டனர் (இது உண்மையல்ல), முன்னாள் பிரதமர் Edouard Balladur இரண்டு பொது விடுமுறை நாட்களை குறைத்துவிட வேண்டுமென கேட்டுக்கொண்டார். ஜேர்மனியில் அத்தகைய நடவடிக்கை ஏற்கனவே எடுக்கப்பட்டிருப்பதாக ரஃபரன் தனது வாதத்தில் குறிப்பிட்டார். ஜேர்மனியில் 1995ம் ஆண்டு ஒரு வங்கி விடுமுறை நாளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது ஊழியர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த எதிர்ப்பு வெற்றி பெறவில்லை. முதியோர் இல்லங்களுக்கான நிதி ஒதுக்கீடு பிரச்சனைக்கு அப்பால் தனியாக முதலாளிகள் பொது விடுமுறை நாட்களை குறைத்துவிட்டு அதே ஊதியத்திற்கு மக்கள் அதிகம் உழைக்க வேண்டும் என்று வாதித்துவருகின்றனர்.

அரசாங்க அறிவிப்பை ஒரு சமிக்கையாக எடுத்துக்கொண்டு முதலாளிகள் சம்மேளனம், குறைந்த ஊதியத்திற்கு அதிகம் உழைக்கவேண்டும் என்ற கோரிக்கையை இடைவிடாது எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். பணியாற்றும் நேரத்தை நீடிப்பதற்கான தடைகள் விரைவில் நீங்கும் என்று முதலாளிகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அமைச்சர்கள் அலட்சியமாக நடந்து கொண்டதாக டாக்டர்கள் குற்றம் சாட்டினர். அதற்கு அமைச்சர்கள் தரப்பில் கூறப்பட்ட உடனடி பதில் என்னவென்றால் வாரத்திற்கு 35 மணிநேரம் பணியாற்றினால் போதும் என்று முந்தைய அரசாங்கம் கொண்டுவந்த திட்டம்தான் இந்த நெருக்கடிக்கு காரணம் என்று குறிப்பிட்டனர். இந்த கருத்திற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை. 35 மணிநேர பணி அறிமுகப்படுத்தப்பட்டால் மருத்துவமனை ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. அதனால் நெருக்கடி ஏற்பட்டது என்பதற்கும் ஆதாரம் இல்லை.

விடுமுறை நாளை குறைக்க வேண்டும் என்ற அறிவிப்பிற்கு அதிகாரபூர்வமான இடது சாரிகளான சோசலிசக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பசுமைக் கட்சிகள் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தனர். எல்லாத் தொழிற்சங்கங்களும் அவற்றில் பெரும்பாலானவை தங்களது அதிர்ச்சியைத் தெரிவித்தன. மற்ற தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் முடிவை எள்ளி நகையாடின அல்லது அகந்தை போக்கை கண்டித்தனர். முதலாளிகள் சங்கம் பிப்ரவரி 29 அன்று கிறிஸ்து பிறந்ததாக முடிவு செய்யுமானால் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடப் போவதாக Force Ouvrière தொழிற்சங்கத்தின் ஒரு உள்ளூர் கிளை அமைப்பு அறிக்கை வெளியிட்டது. அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் பொது மக்களிடையே ஆழ்ந்த கோபம் ஏற்பட்டிருப்பதை திசைமாறச் செய்வதற்காகத்தான் இந்த அறிக்கைகளில் பல வெளியிடப்பட்டிருக்கின்றன.

இத்தகைய நடவடிக்கைகளை தொழிற்சங்கங்கள் அடிப்படையிலேயே எதிர்க்கவில்லை. ஓய்வு ஊதியம் மற்றும் சுகாதார சேவைகள் குறைக்கப்படுவது தொடர்பாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராகவே இருக்கின்றன. உண்மையில் வெப்ப வீச்சு நடப்பதற்கு முன்னர் இதே நடவடிக்கை குறித்து குறைந்தபட்சம் ஒரு தொழிற்சங்கம் விவாதித்திருக்கின்றது. ஏற்கனவே பிரதமர் இந்தக் கருத்தை தன்னிடம் விவாதித்திருப்பதாகவும், ஒரு விடுமுறை நாளில் ஊதியம் எதுவும் இல்லாமல் பணியாற்றி அதில் கிடைக்கும் பணத்தை ஊனமுற்றவர்களுக்காக பயன்படுத்திக் கொள்ளப்போவதாகவும், இதே கருத்தை ஏற்கனவே சுகாதார அமைச்சர் Jean-François Mattei யும் தன்னிடம் தெரிவித்திருப்பதாகவும் FO தொழிற்சங்கத்தின் தலைவர் மார்க் பிளாண்டல் கூறியதாக Agence France Presse மூலம் தெரியவருகின்றது.

சிராக்-ரஃபரன் அரசாங்கத்திற்கு நெருக்கடி தீர்ந்துவிடவில்லை. ஆகஸ்ட் மாதம் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பு சுகாதார அமைச்சர் சந்தித்த எதிர்ப்புகள் ஆகியவற்றின் காரணமாக செப்படம்பர் 2 அன்று ரஃபரன் குழப்பம் அடைந்திருந்தார். சமூக பாதுகாப்பு அது தொடர்பான சுகாதார காப்பீடு முறையில் சீர்திருத்தம் கொண்டு வருவதை 2004 அக்டோபர் வரை தள்ளி வைத்திருப்பதாக ரஃபரன் அறிவித்தார்

''சீர்திருத்தம்'' என்பது மருத்துவமனைகளையும் முதியோர் இல்லங்களையும் தனியார் உடமையாக்கி அமெரிக்க பாணியில் தனியார் முதலீடுகளுக்கு வழிவகை செய்வதுதான், இந்த நோக்கத்திற்காக மருத்துவமனைகளின் அமைப்பு மற்றும் நிர்வாகத்தை சீரமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டிருக்கின்றது. வியாபார நோக்கில் அவற்றை நடத்த வேண்டும் என்பதுதான் குறிக்கோள். தனியார் சுகாதார சேவைகள், பெருகிக்கொண்டு வருகின்றன. அவை மிகவேகமாக வளர்ந்துகொண்டும் உள்ளன. சில தனியார் மருத்துவமனை நிறுவனங்களின் பங்கு விலைகள் பாரீஸ் நகர பங்குசந்தை பட்டியலில் இடம் பெறுகின்ற அளவிற்கு தனியார் துறை மருத்துவ சேவைகள் வளர்ந்துகொண்டு வருகின்றன.

Top of page