World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Desperate over growing debacle:

Bush justifies Iraq occupation with lies on "terror

வளர்ந்து வரும் நெருக்கடி மீதாக நம்பிக்கை இழப்பு:

"பயங்கரவாதம்" தொடர்பான பொய்களை மீண்டும் சொல்லி ஈராக் ஆக்கிரமிப்பை புஷ் நியாயப்படுத்துகிறார்.

By the Editorial Board
8 September 2003

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக்கை அமெரிக்க இராணுவம் ஆக்கிரமித்துக்கொண்டிருப்பதன் காரணமாக ஆழமாகிவரும் நெருக்கடியையும் உள்நாட்டில் வளர்ந்து கொண்டிருக்கும் பொதுமக்களது எதிர்ப்பையும் எதிர்கொண்டு, ஞாயிற்றுக் கிழமையன்று அமெரிக்க மக்களுக்கு ஜனாதிபதி புஷ் தொலைக்காட்சியில் உரையாற்றினார். அந்த உரையில் ஈராக்கில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுள்ள படுகொலைகளை நியாயப்படுத்த முயன்றார், அத்துடன் சர்வதேச அளவில் அப்பட்டமான பொய்கள் என்று அங்கீகரிக்கப்பட்டிருக்கும் சில கூற்றுக்களையும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

செப்டம்பர் 11 தாக்குதலை நினைவுபடுத்தும் இரண்டாம் ஆண்டு பூர்த்தியாவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர், புஷ் தனது உரையை தொடங்கும்போது, வாஷிங்டனிலும், நியூயோர்க் நகரத்திலும் நடைபெற்ற துயர சம்பவங்களுக்கு ஈராக் ஏதோ ஒருவகையில் பொறுப்பாகும் என்ற பொய்யான வாத மூலக் கூறோடு உரையை ஆரம்பித்தார்.

''ஏறத்தாழ இரண்டாண்டுகளுக்கு முன்னர், நமது நாட்டின் மீது கொடூரமான தாக்குதல்கள் நடைபெற்றதை தொடர்ந்து நாம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக திட்டமிட்ட இயக்கத்தை ஆரம்பித்தோம்'' என புஷ் தனது உரையை தொடக்கினார். செப்டம்பர் 11 அன்று நடைபெற்ற தாக்குதல்களுக்கு பதிலடியாக முதலில் ஆப்கானிஸ்தானில் போர் தொடங்கியது பின்னர் ஈராக் மீது படையெடுப்பு நடத்தப்பட்டது என ஜனாதிபதி புஷ் விளக்கினார்.

''ஈராக்கில் முந்தைய ஆட்சி பயங்கரவாத செயல்களை ஊக்குவித்தது, மக்களை கொன்று குவிக்கும் பேரழிவு ஆயுதங்களை வைத்திருந்தது, அவற்றை பயன்படுத்தியது, மற்றும் ஐ.நா பாதுகாப்பு சபையின் கோரிக்கைகளை 12 ஆண்டுகள் தெளிவாக ஏற்க மறுத்து வந்தது, எனவே ஈராக்கில் நாம் நடவடிக்கையில் இறங்கினோம். நமது கூட்டணி இந்த சர்வதேச கோரிக்கைகளை உடனடியாக அந்நாட்டில் செயல்படுத்தியது. மற்றும் வரலாற்றிலேயே மிகுந்த மனித நேயமிக்க இராணுவ நடவடிக்கை அங்கு மேற்கொள்ளப்பட்டது'' இவ்வாறு புஷ் தனது உரையில் குறிப்பிட்டார்.

உலக வர்த்தக மைய கட்டிடத்திலும், பென்டகன் தலைமை அலுவலகத்திலும், நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு ஏதோ ஒரு வகையில் ஈராக் பொறுப்பு என சென்றவாரம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் ஏறத்தாழ 70 சதவீதம் பேர் அமெரிக்க மக்கள் நம்புகின்றனர். இந்த கருத்துக்கணிப்பு பிரசுரிக்கப்பட்ட பின்னர் புஷ் உரையாற்றியிருக்கிறார். விமானத்தை கடத்தி வந்தவர்கள் 19 பேரில் யாரும் ஈராக்கை சேர்ந்தவர்கள் அல்ல, சதாம் ஹூசேன் ஆட்சியை இந்த தாக்குதலோடு சம்மந்தப்படுத்துவதற்கு எந்தவிதமான சான்றும் இல்லை என்பதை நிர்வாக அதிகாரிகளே ஒப்புக்கொண்டிருக்கின்றனர்.

உண்மையை சிதைத்து காட்டுவதிலும், சில தகவல்களை மறைப்பதிலும் மற்றும் மக்களை அச்சுறுத்தி ஆக்கிரமிப்பு போருக்கு அவர்களது ஆதரவை திரட்டுவதிலும், புஷ் நிர்வாகத்திற்கும் ஊடகங்களுக்கும், இடையே மிகப்பெரும் அளவிற்கு உடந்தை போக்கும் நிலவியதன் விளைவே பொதுமக்களின் தவறான எண்ணக்கருவின் விளைபொருளாகும்.

அமெரிக்காவில் பொது மக்களின் நுகர்வுக்காக இந்த பொய்யை மீண்டும் புது உருவம் கொடுத்து வாரக் கடைசியில் ஜனாதிபதி வெளியிட்டிருக்கிறார். அதே நாளில் ஐரோப்பிய நாடுகளிலும், உலகின் இதர பகுதிகளில் உள்ள நாடுகளிலும் பத்திரிகைகளில் பிரிட்டனின் (see: British official charges US "stood down" on 9/11) முன்னாள் முன்னணி கேபினட் அமைச்சர் எழுதியுள்ள விரிவான கட்டுரை பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது. ஈராக்கை முறியடித்து அதன் எண்ணெய் வளத்தை கைப்பற்றிக் கொள்வதற்கு நீண்டகாலமாக திட்டமிட்டுக் கொண்டிருந்த புஷ் நிர்வாகம், அந்த திட்டத்திற்கு ஒரு சாக்குப்போக்கை உருவாக்கும் நோக்கத்தோடு செப்டம்பர்-11 அன்று தாக்குதல் நடைபெறுவதற்கு அனுமதித்துவிட்டது என பிரிட்டனின் முன்னாள் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த பொய்யான கூற்றினை புஷ் மீண்டும் உயிர்த்தெழ செய்து இருப்பது அந்த நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியைத்தான் காட்டுகின்றது. ஈராக் போருக்கு முன்னர் அமெரிக்க நிர்வாகம் கூறிவந்த மற்றொரு பொய்யும்- ஈராக் வசமிருந்த ஆபத்தான பேரழிவு ஆயுதங்களை ஒழித்துக்கட்டுவதற்காகத்தான் அமெரிக்கத் தலையீடு என்ற மற்றொரு குற்றச்சாட்டும் முற்றிலும் பொய் என்று மெய்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. ஈராக்கிடம் பல்லாயிரக்கணக்கான லிட்டர்கள் அளவிற்கு பயங்கரமான உயிர் கொல்லி இரசாயன மற்றும், உயிரியல் ஆயுதங்களை தயாரிப்பதற்கான சாதனங்கள் உள்ளன என்று போர் தொடுக்கப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் வாஷிங்டன் கூறி கூறிவந்தது, ஈராக் முழுவதையும் ஐந்து மாதங்கள் அமெரிக்க இராணுவத்தினர் துருவி, துருவி ஆராய்ந்தார்கள் அதற்குப் பின்னரும் ஒரு அடையாளச் சின்னம் கூட கிடைக்கவில்லை.

இதற்கிடையில், வெள்ளை மாளிகையும் பென்டகனும் தெரிவித்த மற்ற கூற்றுக்களும் பொய்யாகிவிட்டன. தங்களுக்கு விடுதலை வாங்கித்தர வந்தவர்கள் என ஈராக் மக்கள் அமெரிக்க துருப்புக்களை வரவேற்பார்கள் மற்றும் போரினால் சிதைந்து கிடக்கும் நாட்டை சீரமைப்பதற்கு ஈராக் எண்ணெய் மூலம் கிடைக்கும் வருவாயை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றும் அமெரிக்காவின் பெரிய எண்ணெய் கம்பெனிகளுக்கு ஈராக் எண்ணெய் விநியோகத்திலும், உற்பத்தியிலும், லாபம் ஈட்டித் தரும் ஒப்பந்தங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அமெரிக்கா கூறிவந்தது. அதுவும் தற்போது தவறு என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது.

அமெரிக்க துருப்புக்களின் அழிவு எண்ணிக்கை பெருகி வருகின்றது

ஈராக்கில் அமெரிக்க படைவீரர்களின் சாவு எண்ணிக்கை திடீர்த்தாக்குதலாலும் மறைந்திருந்து தாக்குவதாலும் தினசரி அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவை வளர்ந்து வரும் எதிர்ப்பு இயக்கத்திற்கு பரந்த மக்களது ஆதரவை உரித்தாக்குவதாக ஈராக்கில் உள்ளவர்கள் கருதுகின்றனர். 1,30,000 அமெரிக்க துருப்புக்கள் ஈராக்கில் இருந்திருந்தும், அந்த நாடு பாதுகாப்பு தொடர்பான எந்த அடையாளமுமே தெரியாத அளவிற்கு குழப்பத்தில் ஆழ்ந்திருக்கின்றது. ஐ.நா மற்றும் இதர சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மற்றும், அமைப்புக்களைச் சார்ந்தவர்கள் உடனடியாக ஈராக்கை விட்டு வெளியேற வேண்டிய அளவிற்கு தொடர்ந்து நான்கு பயங்கர கார் வெடிகுண்டு வெடிப்புக்கள் நடந்திருக்கின்றன. இதன் விளைவாக ஈராக்கில் பெரும்பான்மையினராக உள்ள ஷியைட் சமுதாய மக்கள் வெளிநாட்டுப் படைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு ஈராக்கின் சொந்த ஆயுதப்படைகள் பொறுப்பு ஏற்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

எண்ணெய் உற்பத்தியில் தொடர்ந்து நாசவேலை தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் போருக்கு முந்தைய காலத்தில் உற்பத்தியான எண்ணெயில் பாதிக்கும் குறைவாகவே தற்போது உற்பத்தியாகி வருகின்றது. போருக்கு முந்திய நிலையில் உற்பத்தியாக வேண்டும் என்றால் இன்னும் ஓராண்டு ஆகும் என அமெரிக்க அதிகாரிகள் மதிப்பிட்டிருக்கின்றனர். ஒரு சில எண்ணெய் கிணறுகளில்தான் தற்போது எண்ணெய் உற்பத்தி நடைபெற்று வருகின்றது.

அமெரிக்கப் படைகளுக்கு ஈராக்கில் எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் "பயங்கரவாதிகள்" என்றும், "கொலைகார கும்பல்" என்றும், அவர்கள் "கண்ணியம், சுதந்திரம், மற்றும் முன்னேற்றத்திற்கு எதிரான தாக்குதல்களை தொடுத்திருக்கிறார்கள் என்றும் புஷ் வர்ணித்திருக்கிறார்.

''நமது பணி பூர்த்தியாவதற்குள் ஈராக்கைவிட்டு நாம் வெளியேறவேண்டுமென அவர்கள் விரும்புகிறார்கள்" என்றார் அவர். "நாகரீக உலகத்தின் உறுதிப்பாட்டை அசைத்து பார்ப்பதற்கு அவர்கள் விரும்புகிறார்கள்'' என்று புஷ் குறிப்பிட்டிருக்கிறார்

அவரது உரையில், ஒருவேளை இது ஒன்று தான் உண்மையான கருத்து -- ஒடுக்கப்பட்ட மக்கள் காலனி ஆதிக்கவாதிகளின் மேலாதிக்கத்திலும், மற்றும் "நாகரீக உலகத்தைச்" சார்ந்த ஒடுக்கு முறையாளர்களையும் விரட்டுவதற்கு உலகம் முழுவதும் நடத்தி வருகின்ற இயக்கங்களை சரியாக விளக்குகின்ற வகையில் புஷ்ஷின் கருத்து அமைந்திருக்கின்றது. ஈராக்கில், புஷ் நிர்வாகம் மேற்கொண்டுள்ள பணி என்னவென்றால் ஈராக்கை சூறையாடுவது. ஈராக்கை வென்று எண்ணெய்க் கிணறுகளை கைப்பற்றி அந்த நாட்டையே அமெரிக்க கட்டுப்பாட்டில் இயங்கும் காபந்து நாடாக ஆக்க தனது மித மிஞ்சிய இராணுவ வலிமையைப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் அதன் நோக்கமாகும்.

புஷ் நிர்வாகத்தின் முலோபாயத்தின் மிகவும் வியப்பூட்டுகின்ற ஓர் அம்சம் என்னவென்றால் மேலே குறிப்பிட்டுள்ள அமெரிக்காவின் நோக்கத்தை காலனி ஆதிக்கத்திற்கு எதிராக கிளர்ச்சி நடத்திய பாரம்பரியத்திற்கு சொந்தக்காரர்களான ஈராக் மக்களது எதிர்ப்பு எதுவும் இல்லாமலே நிறைவேற்றி விடமுடியும் என்ற தெளிவான நம்பிக்கைதான்.

அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்துக் கொண்டதன் மூலம் அந்நாட்டிற்கு கொண்டு வந்த "கண்ணியம், சுதந்திரம், மற்றும் முன்னேற்றம் என்னவென்றால் அவற்றில் பல்லாயிரக் கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டதும், பொதுமக்கள் மீது கொடூரமாக தினசரி நடத்தப்பட்ட திடீர் சோதனைகளும், சந்தேகிக்கப்பட்டவர்கள் ஒட்டுமொத்தமாக சிறையில் அடைக்கப்பட்டதும், தொழிலாளர்களின் வேலைவாய்பை மிகப்பெரும் அளவில் பறித்துக்கொண்டதும், மற்றும் தொழில் கட்டமைப்பு வசதிகளை அழித்து சீர்குலைக்கப்பட்டதும் அதன் விளைவாக பொதுமக்களுக்கு முறையாக மின்சாரம், தூய்மையான குடி தண்ணீர் மற்றும் இதர அடிப்படை வசதிகளை தரமுடியாத நிலையும் உருவாக்கப்பட்டிருப்பது, ஈராக் மக்களுக்கு அமெரிக்கா தந்திருக்கும் பரிசாகும். இந்த நிலைமைகள் காரணமாக புஷ் "பயங்கரவாதிகள்" என முத்திரை குத்தும் தரப்பினருக்கு பொதுமக்களது ஆதரவு திரண்டு கொண்டு வருகின்றது.

அமெரிக்க ஜனாதிபதியின் உரையில் அடங்கியிருக்கின்ற புதிய தகவல் என்னவென்றால் மேலும் 87 பில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்யவேண்டும் என நாடாளுமன்றத்தை கேட்டுக்கொள்ளப் போவதாக கூறியிருப்பதாகும். இதில் மிகப்பெரும்பாலான 66 பில்லியன் டாலர்கள் ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் இதர நாடுகளில் மேற்கொள்ளப்படும் "இராணுவ மற்றும் புலனாய்வு நடவடிக்கைகளுக்காக" ஒதுக்கீடு செய்யப்படும். அதேவேளை ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் ஆகிய இரு நாடுகளின் சீரமைப்பு நடவடிக்கைகளுக்காக 21 பில்லியன் டாலர்கள் மட்டுமே, ஒதுக்கீடு செய்யப்படும்.

ஈராக்கின் மின்சார வசதிகளை சீரமைப்பதற்காக மட்டுமே குறைந்தபட்சம் 15 பில்லியன் டாலர்கள் தேவைப்படும் என்பதும் மேலும் 12 பில்லியன் டாலர்கள் தண்ணீர் வசதிகளை சீரமைப்பதற்காக தேவைப்படும் என்பதும் தோராயமாக மதிப்பிடப்பட்ட கணக்காகும்.

அமெரிக்கா நடத்திய குண்டு வீச்சு தாக்குதல்களாலும் மற்றும் செயல்படுத்தி வந்த பொருளாதார தடைகளாலும், சிதைந்து கிடக்கும் ஈராக்கை சீரமைக்கும் பணிகளில் ஆரம்ப கட்ட செலவுகளுக்கே உத்தேசிக்கப்பட்ட தொகை போதுமானதாக இல்லை. இந்த நிலையில் இராணுவத்திற்காக செலவிடப்பட்டு வரும் பெரும் தொகை ஏற்கனவே வரலாறு காணாத அளவிற்கு வளர்ந்து கொண்டிருக்கும் அமெரிக்காவின் மத்திய அரசாங்கத்தின் பற்றாக்குறையை மேலும் அதிகரிக்கவே செய்யும். தற்போது அமெரிக்க மத்திய அரசாங்கத்தின் பற்றாக்குறை ஏறத்தாழ 500 பில்லியன் டாலர்களாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கின்றது.

வாஷிங்டனின் ஆட்டம் காணும் நடவடிக்கைகள்

''ஈராக்கின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகணில் சர்வதேச அளவிலான ஒத்துழைப்பு விரிவடைந்து கொண்டே வரவேண்டும்'' என்பதுதான் தமது பிரதான குறிக்கோள்கள் என புஷ் கூறினார். அடிப்படையிலேயே இதன் பொருள் என்னவென்றால், அமெரிக்காவை ஆட்டம்காண வைத்துவிட்ட நெருக்கடிக்கு ஒத்துழைப்பு தரவேண்டுமென்பதுதான். சட்டவிரோதமாக, தன்னிச்சையாக அமெரிக்கா ஈராக் மீது போர் தொடுத்த நேரத்தில் இதர அரசாங்கங்கள் ஆட்சேபனைகளை எழுப்பியபோது, அந்த ஆட்சேபனைகளை துச்சமாக மதித்து புறக்கணிப்பு செய்த புஷ் நிர்வாகம், தற்போது இதர நாடுகள் ஈராக்கை அமெரிக்கா பிடித்துக் கொண்டதற்கான செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என கோரிக் கொண்டிருக்கின்றது.

அந்த நேரத்தில் பிரான்சும், ஜேர்மனியும், ஐ.நா பாதுகாப்பு சபையில் அமெரிக்க படையெடுப்பிற்கு அனுமதி வழங்குகின்ற தீர்மானத்தை எதிர்த்து நிற்கின்றன என்பதற்காக அந்த இருநாடுகளையும், துச்சமாக மதித்து அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட், ''பழைய ஐரோப்பா'' என்று பரிகாசம் செய்தார். இன்றைய தினம், இரத்தக்களரி என்கின்ற புதை சேற்றில் சிக்கிக் கொண்டிருக்கின்ற அதே அமெரிக்க நிர்வாகத்தை கைதூக்கிவிட, அவர்களின் ''பழைய பணத்தில்'' சில தருமாறு கெஞ்சும் நிலைக்கு தாழ்ந்துவிட்டது.

"பயங்கரவாத" செயல்களுக்கு எதிராக ஈராக்கில் போர் நடந்து கொண்டிருப்பதால் அமெரிக்க நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி செய்வதற்கு கடமைப்பட்டவர்கள் என்ற புஷ்ஷின் வாதம் ஐரோப்பிய நாடுகளில் விரும்பிய விளைவைத் தரப்போவதில்லை. ஏனெனில் ஈராக்கில் அமெரிக்கா மேற்கொண்டுள்ள ஆக்கிரமிப்பு போர் மேற்கத்திய நாடுகளின் இலக்குகளுக்கு எதிராக மிகப்பெரும் அளவில் பயங்கரவாத செயல்களுக்கான மிரட்டல்களை உருவாக்கிக் கொண்டிருப்பதாக ஐரோப்பிய நாடுகள் கருதுகின்றன.

புஷ் உரையாற்றிய நேரத்தில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொலின் பவல் மற்றொரு இடத்தில் உரையாற்றினார். அந்த உரையில் பன்முறைத்தன்மையில் வாஷிங்டன் இன்னும் உறுதிப்பாட்டோடு செயல்பட்டு வருவதாகவும், எனவே பிரதான ஏகாதிபத்திய வல்லரசுகள் புதிய ஒற்றுமை உணர்வுடன் செயல்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

''நீண்ட பல ஆண்டுகளாக, பல நூற்றாண்டுகளாக வல்லரசுகளின் ஏகாதிபத்திய பழக்க வழக்கங்கள் என்ணிறைந்த பொருளாதார வளங்களை, ஆற்றலை, மக்களது வாழ்வை-- சாம்ராஜ்ஜியங்களை பிடிப்பதற்காகவும், பெருமைக்கு மாரடிப்பதற்காகவும், பொன், பொருள்களுக்காகவும் இப்படி ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு, விரயமாக்கி வந்திருக்கின்றன. "கடந்த காலத்தில் வல்லரசுகள் ஒன்றுக்கொன்று எதிரும் புதிருமாக நின்றுகொண்டு திரண்ட செல்வத்தையும், மக்களது வாழ்வையும், பலியிட்டதற்கு பதிலாக அதே வல்லரசுகள் இன்றைய தினம் இணைந்து ஒரே திசை வழியில் எல்லோருக்கும் பொதுவாய் இருக்கும் இப் பிரச்சனைகளை தீர்த்து வைக்க முடியும்'' என கொலின் பவல் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

அப்படியிருந்தும் ஈராக்கில் ''இந்த பொது நன்மை'' என்பது, ஈராக் வாஷிங்டனின் முழுக்கட்டுப்பாட்டில் வருவதற்கும் எல்லாவற்றிற்கும் மேலாக ஈராக்கின் உயிர் நாடியான எண்ணெய் தொழிலை அமெரிக்கா கையகப்படுத்திக்கொள்ளவும், தனியார்மயமாக்கவும், ஐரோப்பிய நாடுகள் மனப்பூர்வமாக சம்மதிக்கவேண்டும். மேலும், பாரசீக வளைகுடா பிராந்தியத்தின் மீது அமெரிக்க இராணுவத்தின் கட்டுப்பாட்டை வலுப்படுத்திக் கொள்ளுதலானது அமெரிக்காவின் பிரதான போட்டியாளர்களான ஐரோப்பிய நாடுகளுக்கும், ஜப்பானுக்கும், அமெரிக்க ஏகாதிபத்தியம் பொருளாதார நிபந்தனைகளை விதிக்கின்ற நிலையைத்தான் உருவாகியுள்ளது. ஏகாதிபத்திய போட்டிகள், பகை உணர்வுகளை பற்றி போதனைகள் செய்யப்படுவதால் இது போன்ற நாடுகளை அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு மண்டியிட வைக்கமுடியாது.

இறுதியாக, தனது உரையில் ஜனாதிபதி புஷ் அமெரிக்க கட்டுப்பாட்டில் பன்னாட்டு படைகளை உருவாக்க ஐ.நா பாதுகாப்பு சபை ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்து வலியுறுத்தப் போவதாக கூறியிருக்கிறார். இந்த திட்டம் அடிப்படையில் இந்தியா, மற்றும் பாகிஸ்தான், போன்ற நாடுகளில் இருந்து துருப்புக்களை கொண்டுவந்து பாதுகாப்பு பணிகளில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும் என்ற அடிப்படையில் தான் உருவாக்கப்பட்டிருக்கின்றது. தற்போது பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அமெரிக்க இராணுவ துருப்புக்கள் தினசரி துப்பாக்கி மற்றும் பீரங்கி தாக்குதல்களுக்கு இலக்காகின்றனர். ஈராக் முழுவதையும் தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை ஓரளவிற்கு கூட விட்டுக்கொடுக்க அமெரிக்கா தயாராக இல்லை. எனவே இத்திட்டத்திற்கு எதிர்ப்பு வலுத்துக்கொண்டு வருகின்றது. அமெரிக்கா ஈராக்கை பிடித்துக்கொண்டிருப்பதில் வேறு எந்த நாடு பங்கெடுத்துக் கொண்டாலும் அதற்கு ஏற்படும் பரந்த மக்கள் எதிர்ப்பை எடுத்துக் கொள்கையில், ஐ.நா தீர்மானம் இயற்றினாலும், பிறநாட்டு துருப்புக்கள் ஈராக்கில் நுழைய முன்வருமா என்பது இப்போது தெளிவாக இல்லை.

அமெரிக்க துருப்புக்கள் ''சுதந்திரத்தின் முன் அரங்குகளில்'' பணியாற்றி வருவதாக ஜனாதிபதி புஷ் வெளியிட்டுள்ள சொல் அலங்காரம் ஈராக்கில் பணியாற்றி வருகின்ற அமெரிக்க இராணுவ வீரர்களிடையே புஷ் நிர்வாகம் விரும்புகின்ற தாக்கத்தை உருவாக்கிவிட முடியாது. ஈராக்கில் பணியாற்றிக்கொண்டுள்ள அமெரிக்க இராணுவத்தினர் தாய் நாட்டிற்கு திரும்பப் போகின்றோம் என கோரிக்கை விடுத்துக்கொண்டிருக்கிறார்கள். எப்போது அவர்கள் அமெரிக்காவிற்கு திரும்பி வருவார்கள் என ஜனாதிபதி கோடிட்டுக் காட்டவில்லையே என்று அதிகரித்த அளவில் ஆத்திரத்துடன் உள்ளனர்.

ஈராக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய காலனி ஆதிக்க திட்டத்திற்கு அமெரிக்க இராணுவத்திற்குள்ளே பெருகி வரும் பகை உணர்வை மிகக் கூர்மையாக சென்ற வாரம் ஓய்வு பெற்ற தளபதி அன்தோனி ஜின்னி (Anthony Zinni) தனது உரையில் வெளிப்படுத்தியிருக்கிறார். தற்போது பணியாற்றி வருகின்ற அமெரிக்க கப்பற்படை அதிகாரிகளிடையே அவர் உரையாற்றினார்.

''பல்வேறு பிரிவுகளையும், ஒன்றுபடுத்துகின்ற அமைப்பு அல்லது மூலோபாயம் எதுவும் இல்லை, எனவே அதிகாரிகளாகிய நாங்கள் தவறு செய்துவிடுவோமோ என்ற ஆபத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறோம்" என்று மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகளின் முன்னாள் தளபதி ஜெனரல் அன்தோனி ஜின்னி, தற்போது பணியாற்றிக் கொண்டுள்ள அமெரிக்க கடற்படை வீரர்கள் மற்றும் அதிகாரிகளிடையே உரையாற்றும் போது குறிப்பிட்டார்.

ஓய்வு பெற்ற தளபதியான ஜின்னி தற்போது ஈராக்கில் சிக்கிக் கொண்டுள்ள புதைச்சேற்றிலிருக்கும் அமெரிக்கப் படைகளை, வியட்நாமில் அமெரிக்க இராணுவம் சந்தித்த அழிவையும் நேரடியாக ஒப்பு நோக்கி ஆராய்ந்திருக்கிறார். புஷ் நிர்வாகம் மூத்த தளபதிகளை காட்டிக்கொடுத்து விட்டதாக கருதுகின்றனர் என்று தளபதி ஜின்னி வலுவான அடிப்படையில் குற்றம் சாட்டியிருக்கிறார்.

''எனது சக நண்பர்களே நமது உணர்வுகள், நமது உணர்வுபூர்வமான செயல்பாடுகள் ஆகியவை வியட்நாம் போர்க்களங்களில், வார்க்கப்பட்டு உருவாக்கப்பட்டவை. வியட்நாமில் நாம் பொய்களையும், குப்பை கூளங்களையும் நம்மைப்பற்றிக் கூறப்படுவதை கேட்டுக்கொண்டிருந்தோம். ஆனால் நாம் நம் கண் முன்னாலேயே தியாகங்களை பார்த்தோம். நான் உங்களை கேட்க விரும்புவது அது மீண்டும் இப்போது நடந்து கொண்டிருக்கின்றதா?'' என்பதுதான் என தளபதி ஜின்னி தனது உரையில் குறிப்பிட்டிருக்கிறார். வாஷிங்டன் போஸ்ட் நாளேடு அது பற்றி செய்தி வெளியிட்டு ஒரு விளக்கமும் தந்திருக்கின்றது. அந்தக் கூட்டம் முடிந்ததும் அதிகாரிகள் தங்களது சக அதிகாரிகளுக்கு கொடுப்பதற்காக அந்த உரைகள் அடங்கிய ஒலி நாடாக்களையும் டிஸ்க்குகளையும், வாக்கிக்கொண்டு சென்றதாக விளக்கம் தந்திருக்கின்றது.

ஆபிரகாம் லிங்கன் விமானந்தாங்கி கப்பலில் விமான சீருடையுடன் கப்பல் தளத்தில் நின்று கொண்டு புஷ் நான்கு மாதங்களுக்கு முன்னர் ஒரு பிரகடனத்தை வெளியிட்டார். பிரதான போர் நடவடிக்கைகள் முடிந்துவிட்டன மற்றும் அமெரிக்க இராணுவத்தின் "பணிகள் நிறைவேற்றப்பட்டு விட்டன" என்று குறிப்பிட்டார். அன்றிலிருந்து இன்றுவரை ஈராக்கில் ஏறத்தாழ 150 அமெரிக்க இராணுவத்தினர் மடிந்திருக்கிறார்கள் மற்றும் அதேபோல் பத்துமடங்கு பேர் காயம் அடைந்திருக்கிறார்கள், படையெடுப்பு நடைபெற்ற காலத்தைவிட தற்போது அந்த எண்ணிக்கைகள் அதிகரித்துள்ளன.

சூறையாடும் நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டு சட்டவிரோதமான முறையில் அமெரிக்க நிர்வாகம் ஆரம்பித்த யுத்தத்தின் கொள்கை முழுவதும் தற்போது சிதைந்து சின்னா பின்னமாகி வருவதை சந்தித்துக் கொண்டிருக்கின்றது மற்றும் அந்தக் கொள்கைக்கு அடிப்படையாக அமைந்த கருத்தியல் அனுமானங்கள் அனைத்துமே சிதைந்துவிட்டன. ஜனாதிபதி புஷ்ஷின் வெள்ளை மாளிகை, ஐரோப்பிய நாடுகளின் நிதி உதவியைப் பெறுவதிலும், தெற்காசிய நாடுகளின் துருப்புக்களின் உதவியைப் பெறுவதிலும் வெற்றி பெறுகிறதா இல்லையா என்பதைவிட தொடர்ந்து அமெரிக்கா ஈராக்கை இப்படி ஆக்கிரமித்துக் கொண்டுடிருப்பதால் அமெரிக்க இராணுவத்தினரும் ஈராக்கியர்களும் பலியாகும் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்யும். இதன் மூலம் ஆகின்ற செலவுகளை ஈடுகட்டுவதற்காக, ஈராக் மக்கள் வெளிநாட்டு மேலாதிக்கத்திற்கு நியாயமாக எதிர்ப்பு தெரிவித்து வருவதை ஒடுக்குவதற்கு ஆகும் செலவுகளை ஈடுகட்டுவதற்காக அமெரிக்க தொழிலாளர்களது வருவாய், வேலை வாய்ப்புக்கள் மற்றும் வாழ்க்கைத் தரம் மீதாக மேலும் தாக்குதலை ஏற்படுத்தவே செய்யும்.

இந்த குற்றவியல் செயல்களை அழிவிலிருந்து காக்கவேண்டும் என்பதற்காக செய்யப்படும் புஷ் நிர்வாகத்தின் மோசமான சூழ்ச்சிகளுக்கு எதிராக, அமெரிக்க உழைக்கும் மக்கள் ஈராக்கிலிருந்தும் ஆப்கானிஸ்தானிலிருந்தும், அனைத்து அமெரிக்க துருப்புக்களும் உடனடியாகவும், நிபந்தனையற்ற முறையிலும் வெளியேறுவதற்கான ஒரு கோரிக்கையை கட்டாயம் எழுப்பவேண்டும்.

See Also :

சதியும் மூடி மறைப்பும்: புஷ் நிர்வாகமும் செப்டம்பர் 11ம்

அமெரிக்க அரசாங்கம் செப்டம்பர் 11 தாக்குதல் தொடர்பாக எச்சரிக்கை செய்யப்பட்டதா?
பகுதி 1: முன்கூட்டிய எச்சரிக்கைகள்

Top of page