World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Indian government courts alliance with Israel and US

Sharon given red carpet welcome in New Delhi

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் விரும்பி நட்புறவை உருவாக்கிக் கொண்ட இந்திய அரசாங்கம்

ஷெரோனுக்கு புதுதில்லியில் சிவப்புக் கம்பள வரவேற்பு

By Kranti Kumara and Keith Jones
25 September 2003

Use this version to print | Send this link by email | Email the author

இந்து மேலாதிக்க பாரதீய ஜனதாக் கட்சி (BJP) மேலாதிக்கம் செலுத்திவரும் இந்தியாவின் கூட்டணி அரசாங்கம் இந்த மாத ஆரம்பத்தில் இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷெரோனுக்கு, மூன்றுநாள் உத்தியோகப்பூர்வ வருகையின்பொழுது சிகப்புக் கம்பள வரவேற்பு அளித்துள்ளது. இதன் மூலம் பாலஸ்தீன மக்கள் மீதான என்றுமில்லா வகையில் அதிகரித்து வரும் ஷெரோனின் ஒடுக்குமுறைகளுடன் தன்னை மேலும் ஐக்கியப்படுத்திக் கொண்டிருக்கிறது.

சியோனிச அரசு மற்றும் புஷ் நிர்வாகத்துடன் நெருக்கமான உறவுகளை தேடுகின்ற வகையில், இந்தியாவின் பாரதீய ஜனதா அரசாங்கம் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இந்தியாவிற்கிடையே ஒரு ஒற்றுமை நிலவுவதாக அடிக்கடி கூறிவருகின்றது. "இஸ்லாமிய" மற்றும் அரசாங்கம் தூபம் போடும் "பயங்கரவாதத்திற்கு" எதிரான போரில் இந்த மூன்று நாடுகளும் முன்னணி அரசாங்கங்கள் என்று பாரதீய ஜனதா அரசாங்கம் கூறிவருகின்றது. ஷெரோன் சுற்றுப்பயண முடிவில் இந்தியாவும், இஸ்ரேலும் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கின்றன. ஆசியாவின் "நிலைத்த தன்மை, பாதுகாப்பு மற்றும் சமாதானத்தை முன்னெடுத்து செல்லும்" குறிக்கோள்களையும், "பூகோள (பயங்கரவாத) அச்சுறுத்தலை" முறியடிப்பதிலும், "பயங்கரவாதத்திற்கு இலக்கான நாடுகள்" என்ற முறையில் இரு நாடுகளும் பொதுவான குறிக்கோள்களை கொண்டிருப்பதாகவும் கூட்டறிக்கை பிரகடனப்படுத்துகிறது. இந்த கொடூரமான தீங்கை எதிர்த்து நடைபெறும் போரில் இஸ்ரேலும், இந்தியாவும், பங்குதாரர்கள் என்றும், இந்த பூகோள ஆபத்தை சமாளிப்பதற்கு சர்வதேச சமூகம் திட்டவட்டமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பயங்கரவாதத்தை தூண்டி விடும் மற்றும் உறுதுணையாக செயல்படும் அரசாங்கங்களையும் தனிநபர்களையும் சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டும் என்றும் கூட்டறிக்கை கேட்டுக்கொள்கின்றது.

இந்த ஒப்பந்தம் கையெழுத்திட்ட மை கூட உலர்ந்திருக்காது அதற்குள் ''பயங்கரவாதத்திற்கு எதிரான'' இயக்கத்தில் PLO வின் தலைவரும் பாலஸ்தீன நிர்வாக ஜனாதிபதியுமான யாசிர் அரஃபாத்தை கொலை செய்வதும் அடங்கும் என்று தனது அடுத்தகட்ட நடவடிக்கைக்கு ''ஷரோன்'' அரசாங்கம் சமிக்கை காட்டியுள்ளது.

தனக்கு நிகர் பதவியிலுள்ள இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயியுடன் சேர்த்து, ஷெரோன் இந்திய உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி, வெளிவிவகார அமைச்சர், நிதியமைச்சர் ஜஸ்வந்த் சிங், வெளிவிவகார அமைச்சர் யஸ்வந்த் சின்கா, பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரிஜேஸ் மிஸ்ரா ஆகியோரையும் சந்தித்து பேசியிருக்கிறார். இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகள் கூட்டமைப்பும் வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனமும் ஏற்பாடு செய்த கூட்டத்திலும் ஷெரோன் கலந்து கொண்டு இந்தியாவின் பிரதான வர்த்தக தட்டினரை சந்தித்துப் பேசினார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மனைவியும், இந்திரா காந்தியின் மருமகளும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்தி இஸ்ரேல் பிரதமரை சந்திக்க விருப்பம் தெரிவித்தார். அவர் சந்திப்பிற்கு அரைமணி நேரம் அவகாசம் தரப்பட்டது.

இஸ்ரேல் பிரதமராக பணியாற்றுகின்ற ஒருவர் முதல் தடவையாக இந்தியாவிற்கு வந்திருந்த நிலையிலும் இந்தியா முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஷெரோனைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர். ''கொலைகார ஷெரோனே திரும்பிப்போ, திரும்பிப்போ'' என்பது போன்ற முழக்கங்கள் அடங்கிய பதாகைகளுடன் அவர்கள் வந்திருந்தனர். அவை லெபனானின் சாப்ரா மற்றும் ஷட்டீலா அகதிகள் முகாம்களில் 1982 ல் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் படுகொலை செய்யப்பட்டதில் ஷெரோனின் பங்களிப்பைக் குறிக்கின்ற வகையிலும், தற்போது மேற்குக்கரையிலும் காசா பகுதிகளிலும் அவரது அரசாங்கம் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிட்டுள்ள வன்முறை மற்றும் அச்சுறுத்தலைக் குறிக்கின்றவையாகும். வடக்கே காஷ்மீரிலிருந்து தெற்கே சென்னை வரை இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளன. அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய 100 பேரை மும்பை போலீசார் கைது செய்தனர். காங்கிரஸ் அல்லாத பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஷெரோனின் சுற்றுப்பயணத்தைக் கண்டித்தும் கண்டன பேரணிகளுக்கு ஆதரவு கோரியும் கூட்டறிக்கைகளை வெளியிட்டன.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேலுக்கும், இந்தியாவிற்கும் இடையே உருவாகிவருகின்ற அரசியல், இராணுவ மற்றும் பொருளாதார உறவுகளின் பெருக்கத்தை எடுத்துக்காட்டும் வகையில் ஷெரோனின் சுற்றுப்பயண முக்கியப் பிரமுகர்களின் எண்ணிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஷெரோனுடன் இஸ்ரேல் துணைப்பிரதமர் யோசப் லாபிட் மற்றும் 150 உதவியாளர்கள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் வர்த்தக தலைவர்கள் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்தக் குழுவில் இஸ்ரேல் அரசாங்கம் மற்றும் தனியாருக்கு சொந்தமான ஆயுத தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் இராணுவ தொழில் நுட்ப உற்பத்தியாளர்கள் தொடர்பான நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளும் இடம் பெற்றிருந்தனர். சென்ற ஆண்டு மட்டுமே 500 மில்லியன் முதல் 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள்வரை இந்தியா இஸ்ரேலின் இராணுவ தொழில் நுட்பம் மற்றும் கருவிகளை வாங்குவதற்காக செலவிட்டுள்ளது. நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள புள்ளிவிபரம் சரியாக இருக்குமானால் இந்தியாவின் இராணுவத் தளவாடங்களுக்கு வெளிநாட்டில் மிகப்பெரிய மூலாதாரமாக விளங்கிவரும் ரஷ்யாவை விடவும் இஸ்ரேல் இராணுவத்தளவாட சப்ளையில் மிஞ்சியிருக்கக்கூடும்.

இந்தியா பல தசாப்தங்களாக அணிசேரா நாடுகளின் இயக்க தூணாக விளங்கி வந்தது. குளிர்யுத்த காலத்தில் சோவியத் யூனியனின் நட்பு நாடாக விளங்கியது. பாலஸ்தீன மக்களது கோரிக்கைகளை உறுதியாக ஆதரித்து வருவதாக நீண்டகாலமாக இந்தியா கூறிவருகின்றது. ஆனால் 1992 ம் ஆண்டு இஸ்ரேலுடன் இந்தியா முழு தூதரக தொடர்புகளை நிறுவிய பின்னர், சியோனிச அரசுடன் என்றுமில்லா அளவு நெருக்கமாக செயல்பட்டு வருகின்றது. 1999 ம் ஆண்டு காஷ்மீரில் கார்கில் மண்டலத்தில் நடைபெற்ற போர் ஏறத்தாழ இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே முழுப்போராக உருவாகின்ற தருவாய்க்கு வந்துவிட்டது. அந்த நேரத்தில் இஸ்ரேல் இந்தியாவிற்கு விமானிகள் இயக்காத கண்காணிப்பு விமானங்களை (UAV'S) வழங்கியது மற்றும் கிளர்ச்சி எதிர்ப்பு தந்திரங்களில் இந்திய துருப்புக்களுக்கு பயிற்சியளிப்பதற்காக தனது இராணுவ நிபுணர்களை இஸ்ரேல் அப்போது இந்தியாவிற்கு அனுப்பியிருந்தது. சர்வதேச பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்த்து போராடுகிறோம் என்ற பெயரால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவும் இஸ்ரேலும் இன்னும் விரிவான அடிப்படையில் இராணுவ மற்றும் புலனாய்வு ஒத்துழைப்புக்களை வளர்த்திருக்கின்றன.

இஸ்ரேலில் தயாரிக்கப்படும் பண்டங்களுக்கு இந்தியா பெரிய சந்தையாகவும் மாறிவருகின்றது. 2002 ம் ஆண்டு இஸ்ரேல் இந்தியாவுடன் நடத்திய இராணுவம் அல்லாத வர்த்தகத்தின் அளவு 1.2 பில்லியன் டொலர்களாகும். இது 1992 ம் ஆண்டு நடைபெற்ற வர்த்தகத்தைவிட 6 மடங்கிற்கு மேல் பெருகியுள்ளது. இராணுவ தளவாடங்கள், தொழில் நுட்பங்கள் விற்பனைதான் இருதரப்பிற்கும் இடையே வளர்ந்து வரும் வர்த்தக மற்றும் அரசியல் உறவுகளை வலுப்படுத்தி வருகின்றது. இஸ்ரேல் நாட்டு தினசரியான ஹாரெட்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, 1990 களில் இந்தியாவிற்கும் துருக்கிக்கும் இராணுவத் தளவாடங்களை விற்பனை செய்தது, தென் ஆப்பிரிக்காவில் இன ஒதுக்கல் ஆட்சி பொறிந்ததால் இஸ்ரேல் இராணுவத் தளவாட உற்பத்தியாளர்கள் சந்தித்த மிகப்பெரிய நெருக்கடியிலிருந்து காப்பாற்றும் கருவியாக இது அமைந்தது.

ஆகஸ்ட் மாதம் அமெரிக்க அரசாங்கம் இஸ்ரேலுக்கு 3 -பால்கன் ரக முன்கூட்டி எச்சரிக்கும் -ராடார்களை மற்றும் கட்டளை கட்டுப்பாட்டு கட்டமைப்புக்களை இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டொலர் மதிப்பீட்டில் விற்பனை செய்வதற்கு பச்சைக்கொடி காட்டியது. இஸ்ரேலிடமிருந்து antiballistic Arrow missiles வாங்குவதற்கான இந்தியாவின் திட்டம் BJP மேலாதிக்கம் செய்யும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தில் (NDA) இடம்பெற்றுள்ள அமைச்சர்களுடன் ஷெரோன் நடத்திய பேச்சுவார்த்தைகளில் முக்கிய இடம்பெற்றது. பால்கன் ராடார் சாதனங்களை இந்தியா வாங்கியது போன்று, முன்மொழியப்பட்ட இரண்டரை பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிற்கு இஸ்ரேலில் இருந்து ஆரோ ரக ஏவுகணைகள் விற்பனைக்கு வாஷிங்டனின் ஆதரவுதேவை ஏனென்றால் அமெரிக்க தொழில்நுட்பம் இந்தியாவிற்கு மாற்றித்தரப்படவேண்டியது சம்பந்தப்பட்டிருப்பதனால் ஆகும்.

தேசிய ஜனநாயக முன்னணி அரசாங்கம் இஸ்ரேலுடன் உறவு வைத்துக்கொள்ள நாட்டம் கொண்டிருப்பது இந்தியாவின் ஆளும் வர்க்கத்தால் மேற்கொள்ளப்படும் இந்தியாவிற்கு தெற்காசியாவின் மேல்நிலை அரசு அந்தஸ்தை பெறுவதற்கான உந்துதலிலும் அமெரிக்காவின் ஆதரவை பெறுவதன் மூலம் உலக அளவிற்கு ஒரு வல்லரசாக வந்துவிடமுடியும் என்று செயற்படுவதிலும், அந்த வகையில் இந்தியாவில் மிகக்குறைவாக கிடைத்து வருகின்ற பொருளாதார ஆதாரங்களில் பெரும்பகுதியை இராணுவத்திற்காக செலவிட்டு வருவதிலும் வேரூன்றி இருக்கிறது. 1998 க்கும் 2002 க்கும் இடைப்பட்ட காலத்தில், ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் இராணுவச் செலவு முறையே 14 சதவீதம், 21 சதவீதம், 14 சதவீதம், 21 சதவீதம் மற்றும் 17 சதவீதங்களாக இருந்தன.

அது எப்படியிருந்தாலும், இந்து தேசியவாத வலதுசாரிகள் BJP யின் முதுகெலும்பாக உள்ளனர், அதன்மூலம் NDA வின் முதுகெலும்பாக உள்ளனர், அவர்களுக்கு நீண்டகாலமாக சியோனிசத்துடன் காலனி ஆதிக்க காலங்களிலிருந்து நீண்டகால பண்பொருமை உண்டு. சுருக்கமாக சொல்வதென்றால், இந்து மேலாதிக்கவாதிகள் சியோனிஸ்டுகள் ஆகிய இருவருக்கும் பொது எதிரியான முஸ்லீம்களை எதிர்த்து போராடுகின்றார்கள் என்ற மனப்போக்கு உண்டு.

தெற்காசியாவை சீர்குலைக்கும் நிலை

பாகிஸ்தானைப் பொருத்தவரை, தொழில் நுட்பம் நிறைந்த இஸ்ரேலிய ஆயுதங்கள் இந்தியாவின் கையில் கிடைக்கும் சாத்தியக்கூறு பாகிஸ்தானை மிகவும் கவலைக்கு ஆளாக்கி இருக்கிறது. பால்கன் தொழில் நுட்பத்தை இந்தியா வாங்குவது "கடுமையான கவலைதரும் விஷயம்'' என்று பாகிஸ்தான் சர்வாதிகாரி பெர்வேஸ் முஷாரப் கூறியுள்ளார். அது இந்திய இராணுவத்திற்கு பாகிஸ்தானின் வான்வெளி முழுவதையும் மிகத்துல்லியமாக இந்திய இராணுவம் கண்காணிப்பதற்கான திறனைத் தரும். பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குர்ஷித் கசூரி, ஷெரோனின் இந்திய விஜயம் குறித்து, ''ஷெரோன் விஜயத்தின் பிரதான நோக்கம் அதிநவீன மூலோபாய ஆயுதங்களை விற்பனை செய்வது", அது தெற்கு ஆசியாவின் இரு அணு ஆயுத அரசுகளுக்கிடையே வலிமைச் சமநிலையை கீழறுத்துவிடும்'' என்று எச்சரிக்கை விடுத்தார். அந்த எச்சரிக்கைக்கு விளக்கம் தருகின்ற வகையில் அடுத்து பாக்கிஸ்தான் வெளியுறவுத்துறை அதிகாரியான மசூத்கான் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ''antiballistic ஏவுகணை ஆயுதங்களை இந்தியா வாங்குவது இந்த மண்டலத்தில் மூலோபாய சமச்சீர் நிலையைச் சீர்குலைத்துவிடும். இந்த ஏவுகணைகளை வைத்து இந்தியா என்ன செய்யப்போகிறது, அந்த ஏவுகணைகளை எங்கு செலுத்தவிருக்கிறது?'' என்று எங்களுக்குத் தெரியாது என்று தெரிவித்தார்.

இஸ்ரேலுடன் பாகிஸ்தான் சொந்த முறையில் உறவுகளை நிலைநாட்டிக் கொள்வது குறித்து பரிசீலனை செய்ய வேண்டுமென பாகிஸ்தான் அரசிற்குள்ளிருந்தே கோரிக்கை வந்திருக்கின்ற அளவு, பாகிஸ்தான் நிர்வாகம் பெருமளவில் எச்சரிக்கையடைந்துள்ளது. இந்த வகையில் முதல் நடவடிக்கை சியோனிச அரசை பாகிஸ்தான் அங்கீகரிப்பது. உயர் தொழில் நுட்ப ராடாரை அமெரிக்காவிலிருந்து வாங்குவது குறித்து முஷ்ராப் ஆட்சி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தெற்கு ஆசியா, இராணுவ வலிமையை பெருக்கிக் கொள்வதற்கான அழிவு தரும் பெரும் செலவுபிடிக்கும் ஆயுதக்குவிப்புப் போட்டிக்குள் இழுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

பாகிஸ்தானின் அச்சங்களுக்கு அடிப்படை இல்லாமல் இல்லை. இந்திய இராணுவத்தில் சில பிரிவினர் இந்து பிற்போக்கு, குறுகியவாத வலதுசாரிகளைப் பற்றிச்சொல்ல வேண்டியதில்லை- பாகிஸ்தானின் அணு ஆயுதம் தொடர்பான ''புலம்பலை'' தோலுரித்துக்காட்டும் வகையில் பாகிஸ்தான் பிடித்து வைத்திருக்கும் காஷ்மீரில் எல்லை தாண்டி திடீர்த்தாக்குதல்களை நடத்த வேண்டும் அல்லது இந்தியாவின் இராணுவ வலிமையை அசைக்க முடியாது என்று நிலைநாட்டும் வகையில் ''ஒரு குறுகிய அளவிலான'' சம்பிரதாயப் போரை பாகிஸ்தானுடன் நடத்த வேண்டும் என்று தங்களது அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றனர். இந்தியா முன்கூட்டி எச்சரிக்கை செய்யும் உயர் ராடார் தொழில் நுட்பம் மற்றும் antiballistic missiles பாகிஸ்தானிய அணு ஆயுதத் தாக்குதலை தடுப்பதில் தீர்மானகரமானதாக இருக்கும் அல்லது சமாளிக்கும் என நம்புகின்றனர்.

மேலும் இந்திய அதிகாரிகள் அடிக்கடி அமெரிக்க-இந்திய-இஸ்ரேல் அச்சு பற்றி பேசி வருகின்றனர். அத்தகைய முத்தரப்பு நாடுகள் கூட்டணி, முதல் எடுத்துக்காட்டாக, இந்தியா தனது பூகோள அரசியல் மற்றும் இராணுவ நிர்பந்தத்தை அதிகபட்சம் பாகிஸ்தானுக்கு எதிராக பிரயோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்க உதவும் என்பதை புது தில்லி தெளிவுபடுத்தியுள்ளது.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரிஜேஸ் மிஸ்ரா-2003-மே மாதம் அமெரிக்காவில் உள்ள யூதர்கள் சமுதாயக்குழு நடத்திய ஆண்டு இரவு விருந்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இத்தகைய முத்தரப்பு கூட்டணி பற்றி பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தார். அப்போது மிஸ்ரா பேசும்போது ''அமெரிக்கா இஸ்ரேல் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் "பயங்கரவாதிகளின் பிரதான இலக்குகள்" ஏனென்றால் அவை மூன்றும் "அடிப்படையில் ஒப்புமைகள்" நிலவும் ஜனநாயக நாடுகள்'' என்று வர்ணித்தார். பின்னர் அவர், "ஜனநாயக சமுதாயங்களை உள்ளடக்கிய ஒரு முக்கியக் குழுவை" அமைக்க வேண்டும், அந்தக்குழு ''பயங்கரவாதத்துக்கு எதிரான பூகோள நடவடிக்கைக்கு" தலைமை தாங்கி குறிக்கோள் நிறைவேறுகிற வரை தொய்வின்றி இயக்கத்தை நடத்திச்செல்ல வேண்டும், தங்களது சொந்த நாட்டுப் பிரச்சனைகளில் கவனம் செலுத்தி பயங்கரவாத இயக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் வேகம் குறைத்துவிடாது பார்த்துக்கொள்ள வேண்டும்" என்றெல்லாம் கருத்துத் தெரிவித்தார்.

அவரது வாதம் காஷ்மீர் மக்களது குறைபாடுகள் பற்றி இந்திய மேல்தட்டு கொண்டிருக்கும் அணுகுமுறையையும், பாலஸ்தீன மக்கள் தொடர்பாக சியோனிஸ்டுகள் கொண்டுள்ள அணுகுமுறை இரண்டையும் உள்ளடக்கியதாக இருந்தது. பயங்கரவாதத்தின் "ஆணிவேர்க் காரணங்கள்" பற்றிய பேச்செல்லாம் "முட்டாள் தனமானது" என்று மிஸ்ரா வர்ணித்தார். "பயங்கரவாதிகளுக்கு எதிரான கூட்டணி" "பயங்கரவாதம் பற்றிய விளக்கங்கள், விவாதங்களில் காலத்தை வீணாக்கி சோம்பி இருக்கக்கூடாது" என்றும் மிஸ்ரா குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் செயல்படும் இந்திய அமெரிக்க ஆதரவு குழுக்கள் நீண்டகாலமாக BJP அனுதாபத்தோடு செயல்படுபவை என்று தெரிந்தாலும், பால்கன் விற்பனைக்கு அமெரிக்க அரசாங்கம் ஒப்புதல்தர அழுத்தங்களைக் கொடுப்பதற்கு, பின்னர் அமெரிக்க யூதர் குழுவுடனும் அமெரிக்காவில் செயல்படும் இஸ்ரேல் பொது விவகாரங்கள் குழுவுடனும் சேர்ந்துகொண்டன. தற்போது அவை Arrow-ரக ஏவுகணைகள் விற்பனையை ஊக்குவித்து வருகின்றன.

அமெரிக்க, இந்திய மற்றும் இஸ்ரேல் நலன்கள் ஒருங்கிணைவதற்கு திட்டவட்டமான வரையறைகள் உண்டு. பிஜேபி ஆட்சியின் கலக்கத்துக்கு காரணம், ஆப்கனிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்து, அதைப்பிடித்துக் கொண்டதை ஆதரித்ததற்காக, 2001 செப்டம்பரில் பாகிஸ்தானின் முஷாரப் ஆட்சியை புஷ் நிர்வாகம் தனது அணியில் சேர்த்துக்கொண்டது. காஷ்மீர் கிளர்ச்சிகளுக்கு ராஜ்ஜியத்துறை மற்றும் இராணுவ ஆதரவை வெட்டிவிட வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு அதற்குப் பின்னர் வாஷிங்டன் நிர்பந்தம் கொடுத்தாலும், பாகிஸ்தான் ''ஒரு பயங்கரவாத நாடு'' என்று பிரகடனப் படுத்த வேண்டும் அல்லது தெற்கு ஆசியாவில் ஜனாதிபதி புஷ்ஷின் ''முன்கூட்டி திடீர் தாக்குதல்'' கொள்கையை கடைப்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை வாஷிங்டன் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்தியாவைப் பொறுத்தவரை தன்பங்கிற்கு, அமெரிக்கா ஈராக் மீது சட்டவிரோதமாகப் படை எடுத்ததை ஆதரிக்கவில்லை. ஈராக்கில் உள்ள அமெரிக்க - பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பு படைகளுக்கு உதவுவதற்காக இந்தியத் துருப்புக்களை அனுப்பவேண்டும் என்ற வாஷிங்டனின் வேண்டுகோளை இதுவரை இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை. ஈரானுடன் தனது உறவுகளை வெட்டிக்கொள்ள வேண்டும் என்று புஷ் நிர்வாகம் இஸ்ரேல் இரண்டுதரப்பும் கொடுத்துவரும் நிர்ப்பந்தங்களுக்கு இந்தியா இதுவரை கட்டுப்படவில்லை. தாலிபானுக்குப் பிந்திய ஆப்கானிஸ்தானில் அமெரிக்க செல்வாக்கை கட்டுப்படுத்துவதில் ரஷியா, இந்தியா மற்றும் ஈரான் ஒத்துழைத்து வருகின்றன.

இன்றைய தினம் BJP ஆட்சி புஷ் நிர்வாகத்துடனும், ஷரோன் ஆட்சியுடனும் "பயங்கரவாதத்திற்கு எதிரான" கூட்டணி அமைக்க வேண்டுமென்ற தத்துவத்தை கூறிவருவது இந்திய ஆளும் வர்க்கத்தின் சூறையாடல் நோக்கங்களை அதிகமாய் தெளிவுபடுத்துகிறது. மேலும் இந்தியாவிற்கும், இஸ்ரேலுக்கும் இடையில் எதிர்காலத்தில் வளரும் இராணுவ மற்றும் புலனாய்வு உறவுகள் எப்படி அமைந்தாலும், ஏற்கெனவே இஸ்ரேல் இந்திய உறவினால் புதிய தீமூட்டும் அம்சம் தெற்கு ஆசியாவின் புவிசார் அரசியலில் உருவாகிவிட்டது. அதேவேளை இந்தியாவின்130 மில்லியன் பலம்வாய்ந்த முஸ்லீம் சிறுபான்மையினருக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் செய்தியை அனுப்பிக் கொண்டிருக்கிறது.

See Also:

இந்திய குண்டு வெடிப்புக்கள்: வகுப்புவாத அரசியலின் இறுதி விளைவுகள்

Top of page