World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய USSR

As ceasefire takes hold

Imperialist hypocrisy over war in Georgia

போர்நிறுத்தம் பலனளிக்க தொடங்குகையில்

ஜோர்ஜிய போரில் ஏகாதிபத்திய பாசாங்குத்தனம் வெளிப்படுகிறது

By Patrick Martin
13 August 2008


Use this version to print | Send this link by email | Email the author

ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வேடெவ் மோதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று அறிவித்ததை தொடர்ந்து ரஷ்ய மற்றும் ஜோர்ஜிய துருப்புக்களுக்கு இடையேயான போர் பெரிதும் குறைந்துவிட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியுடன் பேச்சுவார்த்தைகள் நடத்திய பின்னர் இந்த அறிவிப்பை அவர் மாஸ்கோவில் வெளியிட்டார்.

இதன்பின் சார்க்கோசி ஜோர்ஜிய தலைநகரான டிபிலிசிக்கு விமானத்தில் சென்றார்; அங்கு ஜோர்ஜிய ஜனாதிபதி மிகெய்ல் சாகேஷ்விலி இதே போர்நிறுத்த விதிகளுக்கு உட்பட ஒப்புக் கொண்டார்; இதில் ரஷ்ய படைகள் தெற்கு ஓசேஷியா மற்றும் அப்காஜியாவில் இருந்து திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும் இரு பகுதிகளுக்கும் எதிராக ஜோர்ஜிய இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்படும் என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டன; இவ்விரு பகுதிகளும் பெயரளவிற்கு ஜோர்ஜியாவிற்கு உட்பட்டவை; ஆனால் சோவியத் ஒன்றியம் உடைந்ததில் இருந்தே ரஷ்ய பாதுகாப்பின்கீழ் இருந்து வருகின்றன.

இந்த ஐந்து நாட்கள் போர் சர்வதேச உறவுகளில் மிக அழுத்தம் நிலவிய தன்மையைக் கொடுத்து பனிப்போருக்கு பின் நேரடியான இரு பெரும் சக்திகளுக்கும் இடையே மோதல் வரக்கூடிய ஆபத்தை வெளிப்படுத்தியுள்ளது. மேலும் புஷ் நிர்வாகம் மற்றும் அமெரிக்க செய்தி ஊடகத்தின் முழுப் பாசாங்குத்தனத்தையும் இது அடிக்கோடிட்டுக் காட்டியது; இவை இரண்டும் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளை பெரிதும் குறைகூறியுள்ளன; ஆனால் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடக்கும் ஆக்கிரமிப்பு போர்களோடு ஒப்பிடும்போது இது மிகக் குறைந்த தன்மையைத்தான் கொண்டது.

ஜோர்ஜியாவின் மீதான ரஷ்ய இராணுவத் தலையீடு ஏதும் முற்போக்குத்தனம் கொண்டதல்ல. ரஷ்ய ஆளும் உயரடுக்கு காகசஸ் பகுதியில் தன்னுடைய கொள்ளை முறையைத்தான் தொடர்கிறது; இப்பகுதி 1991ல் சோவியத் ஒன்றியம் சிதைவற்கு இரு நூற்றாண்டுகள் முன்பில் இருந்தே மாஸ்கோவால் ஆளப்பட்டு வந்தது. ஆனால் காகசஸ் பகுதியின் தற்போதைய வெடிப்பிற்கு முக்கிய காரணம் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆகும்; ஏனெனில் இது தீவிரமான முறையில் முன்னாள் சோவியத் செல்வாக்கு இருந்த இடங்களில் எல்லாம் ரஷ்யாவிற்கு பதிலாக தன்னுடைய செல்வாக்கு மண்டலத்தை நிறுவும் கொள்கையை, அமெரிக்க மேலாதிக்கத்தை யூரேசிய நிலப்பகுதிகள்மீது நிறுவுவதற்காக செயல்படுத்தி வருகிறது. இக்கொள்கையின் மத்தியக் கருவிதான் அமெரிக்க சார்பு சாகேஷ்விலியின் ஆட்சி அமைக்கப்பட்டதாகும்; இது 2004ம் ஆண்டு அமெரிக்கா ஊக்கம் அளித்து வந்திருந்த "ரோஜா புரட்சியை" அடுத்து பதவிக்கு வந்தது.

தற்போதைய பூசலை ஜோர்ஜியா தெற்கு ஓசேஷியா மீது கடந்த வாரம் திடீரென தாக்குதல் நடத்திய முறையில் தொடங்கியது; இதில் பகுதியின் தலைநகரான டிஷகின்வலியின்மீது பேரழிவு தரக்கூடிய பீரங்கித் தாக்குதலும் இருந்தது; அத்தாக்குதலில் கிட்டத்தட்ட 2,000 குடிமக்கள் கொல்லப்பட்டிருக்கக்கூடும். ஜோர்ஜிய இராணுவ சக்தியின் தாக்குதலை மிகப் பெரிய அளவில் ரஷ்யா எதிர்கொண்டதானது, அதுவும் நூற்றுக்கணக்கான டாங்குகள் மற்றும் ஜெட் விமானத் தாக்குதல் ஆகியவற்றை கையாண்டதால், அது தவிடுபொடியாயிற்று.

இரு அரசாங்கங்களும் ஒன்றன்மீது ஒன்று தெற்கு ஓசேஷியாவில் இனத் தாக்குதலை நடத்தியதாக குற்றம் சாட்டிக் கொண்டன. பல்லாயிரக்கணக்கான ஓசேஷியர்கள் --மொழி, மற்றும் பண்பாட்டில் ஜோர்ஜிய மொழி, பண்பாடு இவற்றில் இருந்து வேறுபட்டவர்கள், வடக்கு ஒசேஷிய ரஷ்ய பகுதிக்கு, சர்வதேச எல்லைக்கு சற்றே குறுக்கே வன்முறையில் இருந்து தப்பிக்க ஓடிவிட்டனர்.

தங்கள் தாயகத்தில் நூற்றுக்கணக்கான, ஏன் ஆயிரக்கணக்கான மக்கள்கூட ஜோர்ஜியத் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர் என்றும், ஜோர்ஜிய துருப்புக்கள் சாதாரண குடிமக்களை சிறிதும் பொறுப்பு இல்லாமல் கொன்றுள்ளனர் என்றும் அகதிகள் செய்தியாளர்களிடம் கூறினர். உதவி நிறுவன ஊழியர் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் டிஷினிவலி பாதை முழுவதும் "ஏராளமான சடலங்கள் இருந்ததாகவும், குடும்பங்கள் பலவும் மொத்தமாக அழிந்துவிட்டன, குழந்தைகள், முதியோர்கள் என மடிந்து விட்டனர்" என்று கூறினார். மற்றொருவர் எப்படி ஒரு ஜோர்ஜிய விமானம் கூட்டமாக சென்று கொண்டிருந்த அகதிகள்மீது குண்டுவீச்சை நடத்தியது என்று விவரித்தார். ராய்ட்டெர்ஸ் நிருபர் வடக்கு ஒசேஷியத் தலைநகரான விளாடிகாவாசில் தோட்டக்கள் ஏற்படுத்திய காயங்களுக்கு குறைந்தது 200 பேராவது சிகிச்சை பெற்று வருவதை குறிப்பிட்டார்.

ஹாக்கில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தில் ஓசேஷிய துருப்புக்கள் ஜோர்ஜிய கிராமங்கள்மீது கொடுமைகளை நடத்தியதாகவும் இத்தாக்குதல்கள் ரஷ்ய ஆதரவுடன் நிகழ்த்தப்பட்ட "இன சுத்திகரிப்புடன்" சேர்ந்தது என்ற குற்றச் சாட்டுக்களை ஜோர்ஜிய அரசாங்கம் பதிவு செய்துள்ளது. தன்னுடைய நாட்டில் இறந்தவர் எண்ணிக்கை 175 என்று ஜோர்ஜிய சுகாதார மந்திரி கூறியுள்ளார்; ஒரு ரஷ்ய "மின்னல் வேகத் தாக்குதல்" செய்தி ஊடகத்தால் மிகைப்படுத்தப்பட்டுள்ளது என்று காட்டும் வகையில். ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அதிகாரிகள் இரு புறத்தில் இருந்தும் 100,000 மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளாக மதிப்பிட்டுள்ளது.

ஞாயிறன்று சாகேஷ்விலி ஒருதலைப்பட்ச போர்நிறுத்தம் ஒன்றை இராணுவச் சங்கடத்தின் அளவு தெளிவானவுடன், அறிவித்தார். ஆனால் இந்த அறிவிப்பை ரஷ்ய படைகள் புறக்கணித்து ஜோர்ஜிய இராணுவத் தளங்களை, தெற்கு ஓசேஷியா மற்றும் அப்காஜியா மோதலுக்கு அப்பாற்பட்ட பகுதிகளான கோரி மற்றும் சேனகி நகரங்களில் இருந்தவற்றை அழித்தன.

ரஷ்ய ஜனாதிபதி மேட்வெடேவ் ரஷ்ய துருப்புக்கள் "கணிசமான இழப்புக்களை" ஏற்படுத்தியதாகவும் அது ஜோர்ஜிய இராணுவத்தை "சீர்குலைத்துவிட்டது" என்றும் கூறினார். செய்தி ஊடகத் தகவல்கள் பின்வாங்கும் ஜோர்ஜிய துருப்புகளுக்கும் ரஷ்ய முன்னேறுவதில் இருந்து தப்பி ஓடும் சாதாரண மக்களுக்கும் இடையே அதிக வேறுபாடு ஒன்றும் இல்லை என்று உறுதிபடுத்தியுள்ளன. ஜோர்ஜிய துருப்புக்கள் கவச வாகனங்கள், அளிப்புப் பொருட்கள் தங்கள் தலை ஹெல்மெட்டுக்கள் மற்றும் ஆயுதங்களைக் கூட பீதியில் போட்டுவிட்டு ஓடியதாக தெரிகிறது; ஏனெனில் ஜோர்ஜிய தலைநகரான டிபிலிசியினால் ரஷ்ய படைகளுக்கு ஈடு கொடுத்து நிற்க முடியாது என்பது புலனாயிற்று.

ஆனால் மேட்வேடேவ், பிரதம மந்திரி விளாடிமீர் புட்டின் மற்றும் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் ஞாயிற்றுக் கிழமையில் இருந்து பல முறையும் அத்தகைய நடவடிக்கை ஏதும் எடுக்கும் விருப்பம் தங்களுக்கு இல்லை என்று அறிவித்துவிட்டனர்.

ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ மற்றும் அமெரிக்கா ஆகியவை ரஷ்ய இராணுவ ஊடுருவல் தெற்கு ஓசேஷியா மற்றும் அப்காஜியாவுடன் நின்றுவிடும் என்ற உத்தரவாதத்தைப் பெற்றிருக்க வேண்டும். இதனால் புஷ் நிர்வாகமோ அமெரிக்க செய்தி ஊடகமோ சாகேஷ்விலியோ அலங்காரச் சொற்கள் உதிர்ப்பதை நிறுத்திவிடவில்லை. ஜோர்ஜிய ஜனாதிபதி தொலைக்காட்சியில் நிகழ்த்திய உரை ஒன்றில், "ரஷ்யா, முன்கூட்டித்திட்டமிட்டு, வேண்டுமென்றே.... ஒரு சிறிய நாட்டை கொலை செய்துள்ளதாக" குற்றம் சாட்டினார்.

போர் முழக்கங்கள் குறைந்த பட்சம் தற்போதைக்கேனும் நின்றுள்ள நிலையில், மேலை செய்தி ஊடகம், குறிப்பாக அமெரிக்காவின் வெறித்தன ஒலிக்குறிப்பு பற்றி சிந்தித்தல் முக்கியமாகும்; இவை பல முறையும் ரஷ்ய இராணுவ நடவடிக்கையை 1938ம் ஆண்டு செக்கோஸ்லாவாக்கியா மீது ஹிட்லர் நடத்திய தாக்குதலுடனும், 1968ல் அதே நாட்டின்மீது சோவியத் நடத்திய தாக்குதலுடனும், 1979ல் ஆப்கானிஸ்தானத்தின்மீது சோவியத் படையெடுப்புடனும் ஒப்புமை செய்து எழுதியுள்ளன.

இக்கருத்துக்களின் மைய அழுத்தம், மீண்டும் விரிவாக்கம் காண விரும்பும் ரஷ்யா மீது பனிப்போர் போல் ஏதேனும் ஒன்றை அமெரிக்கா மேற்கொள்ள வேண்டும் என்பதாகும். செவ்வாயன்று வெளியிட்ட தலையங்கம் ஒன்றில் நியூ யோர்க் டைம்ஸ் அறிவித்தது: "தெற்கு ஓசேஷியா மற்றும் அப்காஜியாவில் இனவழிச் சிறுபான்மையினரின் உரிமைகளை காப்பதாகத்தான் மாஸ்கோ கூறுகிறது; இவையோ 1990 களின் தொடக்கத்தில் இருந்து ஜோர்ஜியாவிடம் இருந்து உடைத்துக் கொள்ள முற்பட்டு வருகின்றன. ஆனால் ரஷ்யாவின் பேரவா இதைவிடவும் அதிகமாக செல்லுகின்றது... பிரதம மந்திரி விளாடிமீர் புட்டின் மீண்டும் கட்டாயப்படுத்துதல், மிரட்டுதல் ஆகியவற்றைக் கையாண்டு பழைய சோவியத் செல்வாக்கு மண்டலத்தின்மீது அதிகாரம் செலுத்த விழைகிறார்; தன்னை எவரும் எதுவும் செய்துவிட முடியாது என்றுதான் அவர் கருதுகிறார்."

செய்தித்தாள் "அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் திரு புட்டினிடம் மிகத் தெளிவான முறையில் இத்தகைய ஆக்கிரமிப்பு பொறுத்துக் கொள்ள முடியாதது, ஐரோப்பா மறு பிரிவினைக்கு உட்படுத்தப்பட மாட்டாது." என்பதை தெளிவாகக் கூறவேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

"விளாடிமீர் போனப்பார்ட்" என்ற தலைப்பில் ஒரு தலையங்கம் எழுதிய ேவால்ஸ்ட்ரீட் ஜேர்னல் தொடர்ச்சியான நடவடிக்கைகள் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே நேரடி இராணுவ மோதல் ஏற்படுத்திவிடக் கூடியவற்றை செயல்படுத்தக் கோரியுள்ளது; இந்த இரு நாடுகள் உலகிலேயே மிக அதிக அளவு அணுஆயுதங்களை கொண்டவை ஆகும்; ஜோர்ஜியா மற்றும் உக்ரைன் ஆகியவை நேட்டோவில் அவை அனுமதிக்கப்படுதல், டிபிலிசிக்கு இராணுவ உதவி வான்வழியே கொடுத்தல் ஆகியவையும் ஆலோசனைகளாகக் கூறப்பட்டுள்ளன.

ஜேர்னலின் ஆசிரிய தலையங்கத்திற்கு எதிர்ப்பக்க கட்டுரை ஒன்று ஜேர்மனிய பழமைவாத நாளேடான Die Zeit ன் ஆசிரியர் Josef Joffe யினால் எழுதப்பட்டுள்ளது; இதில் மோதலின் அடித்தளத்தில் இருக்கும் மூலோபாய, பொருளாதார நலன்கள் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. ஜோபேயின் கருத்துப்படி எத்தனை சிறிய பகுதிகளாக அப்காஜியாவும் ஓசேஷியாவுர் இருந்தபோதிலும், "அவை 21ம் நூற்றாண்டின் மிகப் பெரிய விளையாட்டின் மின்னல் குவிப்புப் புள்ளிகள்; இதில் பிரச்சினை இதுதான்; மத்திய கிழக்கிற்கு அடுத்த படியாக மூலோபாய ஆதாரங்களின் குவிப்பு நிறைந்துள்ள பகுதியான காஸ்பியன் பகுதிமீது யார் கட்டுப்பாட்டை கொள்ளுவர்?'

ரஷ்ய எதிர்ப்பில் வலுவான குரல்களில் ஒன்று முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான Zbigniew Brzezinski உடையது ஆகும்; ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான பரக் ஒபாமாவின் ஆதரவாளர் ஆவார். பிரிட்டனின் கார்டியன் மற்றும் ஜேர்மனியின் Die Welt இவற்றிற்கு கொடுத்துள்ள கருத்துக்களில் இவர் புட்டினை ஹிட்லருக்கும் ஸ்ராலினிக்கும் ஒப்பிட்டுப் பேசியுள்ளார்; ஜோர்ஜியாவில் ரஷ்ய குறுக்கீடு 1939ல் பின்லாந்தின் மீது சோவியத் படையெடுத்ததற்கு ஒப்பாகும் என்றும் கூறியுள்ளார்; "இன்று ஜோர்ஜியா பின்லாந்து போல் உள்ளது; இரண்டுமே ஒழுக்கநெறி, மூலோபாயப்படி ஒரே மாதிரியானவை" என்று அவர் கூறியுள்ளார்.

ஜோபேயை போலவே பிரெஜின்ஸ்கியும் எண்ணெயின் முக்கிய பங்கை, குறிப்பாக பகு-டிபிலிசி-ஷேஹன் குழாய்த்திட்டம் பற்றிச் சுட்டிக்காட்டியுள்ளார். இது கடந்த தசாப்தத்தில் அமெரிக்காவின் உதவியுடன் இப்பகுதியில் இருந்து எண்ணெய் உலக சந்தைக்கு ரஷ்ய நிலப்பகுதிக்கு செல்லாமல் கொண்டுவப்படுவதற்கு கட்டப்பட்டது ஆகும். "ஜோர்ஜியா முழு இறமையை இழந்துவிட்டால் இதன் பொருள்.... மேற்கு நாடுகள் காஸ்பியன் பகுதி மற்றும் மத்திய ஆசியாவுடன் நேரடித் தொடர்பு கொள்ள முடியாது என்பதாகும்."

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாயத்தை வகுப்பவர்களுக்கு எண்ணெய் தவிர பரந்த நலன்களும் உள்ளன. பிரெஜின்ஸ்கியே நீண்ட காலமாக பழைய சோவியத் ஒன்றியத்தின் சிதைவை நாடியது மட்டும் இல்லாமல் முந்தைய சோவியத்தின் நிலப்பகுதியில் ஏராளமான விகிதத்தை கொண்ட ரஷ்ய குடியரசும் சிதைக்கப்பட வேண்டும் என்று விரும்பியுள்ளார். திங்களன்று கார்டியன் குறிப்பிட்டது; "பகு-டிபிலிசி-சேய்கன் குழாய்த்திட்டம் ஒரு பெரிய மூலோபாய சமன்பாட்டில் சிறிய கூறுபாடுதான்; அந்த முயற்சி, அமெரிக்காவினால் நடைமுறைப்படுத்தப்படுகிறது, அதன் பல முன்னாள் சோவியத் நட்பு நாடுகளால் ஏற்கப்படுகிறது, பகுதி முழுவதும் ரஷ்ய செல்வாக்கின் ஒவ்வொரு கூறுபாடும் குறைக்கப்பட வேண்டும் என்று கூறுகிது; அது பொருளாதார, அரசியல், தூதரக, இராணுவ முறை என்று எப்படி இருந்தாலும் சரி.

ரஷ்ய-ஜோர்ஜிய நெருக்கடி பற்றிய வனப்புரைத் தாக்குதல் குறிப்பிடத்தக்க வகையில் இழிந்தாகும்; அதுவும் புஷ் நிர்வாகத்தின் வரலாற்றுத் தன்மையை காண்கையில். திங்களன்று புஷ் அறிவித்தார்: "அருகில் இருக்கும் ஒரு முழு இறைமை பெற்றுள்ள நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்துள்ளது. இத்தகைய நடவடிக்கை 21ம் நூற்றாண்டில் ஏற்க இயலாதது."

உண்மையில் 21ம் நூற்றாண்டின் வரலாற்றில் அதிலும் அமெரிக்க அரசாங்கத்தை பொறுத்த வரையில் கிட்டத்தட்ட வேறு ஏதும் இல்லை. 2001 ஜனவரியில் அதிகாரத்தை எடுத்துக் கொண்டதில் இருந்து புஷ் நிர்வாகம் இரு இறைமை பெற்ற நாடுகளான ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் மீது படையெடுத்து ஆக்கிரமித்துள்ளது; அதே நேரத்தில் இதன் வாடிக்கை நாடுகள் அதே போன்ற தாக்குதல்கள் நடத்தியிருப்பற்கும் ஆதரவைக் கொடுத்துள்ளது: இஸ்ரேல் 2006ல் லெபனோன் மீது படையெடுத்தது, 2007ல் எத்தியோப்பியா மீது சோமாலியா படையெடுத்தது மற்றும் இந்த ஆண்டு ஆரம்பத்தில் கொலம்பியா ஈக்வடோர்மீது படையெடுத்தமை ஆகியவை நிகழ்ந்துள்ளன.

"ரஷ்ய ஆக்கிரமிப்பு" ஜோர்ஜியாவில் நடக்கிறது என்று ஊளையிடும் அமெரிக்காவிற்கும் லெபனோன் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு அது கொடுத்த ஆதரவிற்கும் இடையே உள்ள வேறுபாடு குறிப்பிடத்தக்க வகையில் அறிவுரை தருகிறது.

லெபனான் பூசலின்போது போர் நிறுத்தத்திற்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொண்டலீசா ரைஸ் பெரும் தயக்கம் காட்டினார்; தெற்கு லெபனானில் இஸ்ரேலிய டாங்குகளும் போர் விமானங்களும் பெரும் சேதத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கையில் பெய்ரூட்டிற்கு சென்றிருந்தார்; அமெரிக்க ஆதரவு பெற்றிருந்த லெபனிய அரசாங்கம் தலையிடுமாறு கோரியதையும் நிராகரித்தார். தன்னுடைய நலன்களை காத்துக் கொண்ட பின்னரே வெளியுறும் உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது என்று இவர் வாதிட்டார். ஆனால் ஜோர்ஜியாவிலோ ரைஸ் உடனடியாக போர்நிறுத்தம் தேவை என்றும் மற்ற நடவடிக்கைகளுக்கு முன்பு அது முதலில் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

இந்த தவறு நிறைந்தது போன்ற வாதத்தின் நோக்கம் உள்நாட்டு, வெளிநாட்டு நிலைப்பாடுகளை கருத்திற் கொண்டதாகும். பனிப்போரை நினைவுறுத்தும் சூழ்நிலையை தூண்டிவிடும் நோக்கத்தை புஷ் நிர்வாகம் கொண்டுள்ளது. இது ஒன்றுதான் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் மக்கெயின் வெற்றிபெறுவதற்கு வழிவகுக்கக் கூடும் என்று வலதுசாரி வட்டங்கள் கருதுகின்றன; ஆனால் இப்பொழுது பொதுவாக புஷ் நிர்வாகம் மற்றும் குடியரசுக் கட்சி இரண்டுமே பரந்த அளவில் வெறுப்பிற்கு உட்பட்டுள்ளன. (செவ்வாயன்று வந்த கருத்துக் கணிப்பு ஒன்று அமெரிக்கர்களில் 41 சதவீதத்தினர் புஷ் அமெரிக்க வரலாற்றிலேயே மோசமான ஜனாதிபதி என்று நினைப்பதாகவும் 68 சதவீதத்தினர் ஓராண்டிற்குள் அமெரிக்க படைகள் ஈராக்கில் இருந்து வெளியேற வேண்டும் என்று விரும்புவதையும் தெரிவித்துள்ளது.

ஒரு சர்வதேச நெருக்கடிச் சூழ்நிலையில் நவம்பர் தேர்தல் நடக்க வேண்டும் என்று புஷ் நிர்வாகம் விரும்புகிறது; அப்பொழுதுதான் ஈராக்கிய போர் மற்றும் புஷ்ஷின் பிற்போக்குத்தன சமூக கொள்கை மற்றும் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடிக்கு எதிரான மக்கள் எதிர்ப்பை திசை திருப்ப முடியும், மக்களை மிரட்ட முடியும் என்று அது கருதுகிறது.

ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஒபாமா உட்பட அனைவரும் புஷ் நிர்வாகம் மற்றும் மக்கெயின் ரஷ்யாவை கண்டித்து அதற்கு எதிரான ஆத்திரமூட்டல், மோதல் அலங்காரச் சொற்கள் வீசப்படுவதுடன் சேர்ந்து கொள்ள விரைகின்றனர்; மேலும் நேட்டோவினுள் ஜோர்ஜியா அனுமதிக்கப்பட வேண்டும் என்ற புஷ் நிர்வாகத்தின் கோரிக்கையையும் எதிரொலிக்கின்றனர்; ஆனால் ரஷ்யாவோ தன்னுடைய பாதுகாப்பிற்கு இது பொறுத்துக் கொள்ள முடியாத அச்சுறுத்தல் என்று நினைக்கிறது.

ஒருபுறமாகவே பேசும் தொலைக்காட்சி செய்தி தகவல்கள் மற்றும் தாராளவாத நாளேடுகளில் (நியூ யோர்க் டைம்ஸ் போன்றவை) வரும் கட்டுரைகள் மற்றும் கன்சர்வேடிவ் நாளேடுகள் (வோல்ஸ்ட்ரீட் ஜேர்னல் போன்றவை) வெளியிடும் கட்டுரைகளும் ரஷ்ய எதிர்ப்பு உணர்வை தூண்டும் நோக்கத்தைத்தான் கொண்டுள்ளன; காகசஸ் மற்றும் அதன் எல்லைகளில் இருக்கும் எண்ணெய் வளம் மிகுந்த பகுதிகளில் அமெரிக்க மேலாதிக்கத்தை நிறுவ முற்படும் வாஷிங்டனின் உந்துதல் அதிகமாகி இருப்பதற்கு ஆதரவு கொடுக்கும் வகையில் மக்கள் கருத்தை உருவாக்கும் நோக்கத்தை இவை கொண்டுள்ளன.