சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : எகிப்து

The Egyptian Revolution, the Muslim Brotherhood and the apologetics of the Revolutionary Socialists

எகிப்திய புரட்சியும், முஸ்லீம் சகோதரத்துவமும், புரட்சிகர சோசலிஸ்டுகளின் காரணவிளக்கங்களும்

by Jean Shaoul,
January 7th 2012

use this version to print | Send feedback

Part 3

இது, எகிப்தில் முஸ்லீம் சகோதரத்துவத்திற்கு புரட்சிகர சோலிஸ்டுகளால் விவரிக்கப்பட்ட அரசியல் காரண விளக்கங்களின் மீது எழுதப்பட்ட மூன்று பாக கட்டுரையின் இறுதி பாகமாகும். இதன் முதல்பாகம் தமிழில் ஜனவரி 19, வியாழனன்றும், இரண்டாம் பாகம் ஜனவரி 24 அன்றும் பிரசுரிக்கப்பட்டது.

முஸ்லீம்சகோதரத்துவமும், 2011இன் புரட்சிகர அபிவிருத்திகளும்

முஸ்லீம் சகோதரத்துவம் இன்னல்களுக்கு உள்ளாகியிருந்த போதினும், அது முபாரக் ஆட்சியை தூக்கியெறிவதற்கு அல்லாமல் அதனோடு சேர்ந்துகொள்ள விரும்புவதையே தொடர்ந்தது. கடந்த ஜனவரியில் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் தொடங்கியபோது, சகோதரத்துவத்தினரும் ஏனைய இஸ்லாமிய குழுக்களும் இராணுவ ஆட்சிக்குழுவிற்கு எதிராக முன்வர மறுத்தன. ஜனவரியின் இறுதியில் தான், முபாரக் இனி நீடிக்க முடியாது என்றான போது, சகோதரத்துவத்தினர் அரசியல் ஒழுங்கமைப்பைக் காப்பாற்ற உதவும் நோக்கத்தோடு முன்னால் வந்தனர்.

உளவுத்துறை தலைவரும் முன்னாள் ஜெனரலுமான ஓமர் சுலைமானை துணை ஜனாதிபதியாக நியமிக்க முபாரக்கை நிர்பந்தித்து, இராணுவம் மற்றும் உளவுத்துறை அமைப்புகளை ஒழுங்கமைக்க திரைமறைவில் ஒபாமா நிர்வாகம்  வேலை செய்து கொண்டிருந்தது. அது, முபாரக்கின் பதவிவிலக்கல் தவிர்க்கவியலாததாக ஆனதும், அவருக்கு மாற்றாக ஓர் அரசியல் மாற்றைத் தயாரிக்கவும் தொடங்கியது. போராட்டங்கள் கையை மீறி சென்றுவிடாமல் தடுக்கும் உடனடி நோக்கத்திற்காக வியன்னாவிலுள்ள தமது வீட்டிலிருந்து எகிப்திற்குத் திரும்பியிருந்தவரும், ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி கண்காணிப்புத்துறை தலைவருமான முகம்மது எல்பரடே அந்த வேலைக்கு உகந்த ஒருவராக இருந்தார்

எந்தவழியிலும், கணிசமான மக்கள் ஆதரவை பெற்றிருந்த ஒரேயொரு அரசியல் கட்சியான முஸ்லீம்சகோதரத்துவத்தின் உதவியோடு மட்டுமே வாஷிங்டனால் நிலைமையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிந்தது. வெள்ளை மாளிகை சகோதரத்துவத்துடன் தொடர்புகளைத் தொடங்கியது. அதேயளவிற்கு அதுவும் வாஷிங்டனுடன் இணைந்து வேலை செய்ய ஆர்வமுற்றிருந்தது. NBC Newsக்கு அளித்த ஒரு நேர்காணலில் ஒரு தலைவர் பகிரங்கமாகவே, தங்களால் "அமெரிக்காவுடன் இணைந்து இயங்க" முடியுமென அறிவித்தார். அவர்கள் எந்தவொரு ஜனாதிபதி தேர்தல்களிலும் ஒரு வேட்பாளரையும் நிறுத்த போவதில்லை என்று உறுதியளித்ததோடு, எல்பரடேக்கு ஆதரவு கொடுக்கவும் உடன்பட்டனர்.   

ஒபாமா நிர்வாகத்தின் அந்த முயற்சியில் புரட்சிகர சோசலிஸ்டுகள் (RS) ஒரு முக்கிய அரசியல் பாத்திரம் வகித்தனர். “சமூக நீதிக்கான" போராட்டத்தில் இஸ்லாமிஸ்டுகளை தங்களின் கூட்டாளிகளாக்கிக் கொண்டமையானது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தேவைகளோடு சரியாக பொருந்தி நின்றது.  

நெருக்கடியிலிருந்து வெளியில் வர, பெப்ரவரி 6இல், எதிர்ப்புக் குழுக்களின் பிரதிநிதிகளைத் தாம் சந்திக்கவிருப்பதாக சுலெய்மான் அறிவித்த போது, அவர் சகோதரத்துவத்தினரையும், வாஃப்டு, தகாம்மு (Wafd, Tagammu) இளைஞர் குழுக்களால் அமைக்கப்பட்ட ஒரு குழுவின் அங்கத்தவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் மற்றும் வியாபார பிரமுகர்களையும் சேர்த்துக் கொண்டார்.

சகோதரத்துவத்தினரை ஒரு சீர்திருத்தவாதிகளாகவும், முற்போக்கான போக்குடையவர்களாகவும் புரட்சிகர சோசலிஸ்டுகள் காட்டிக்கொண்டனர். நாட்டின் அரசியல் கட்சிகள் அவற்றின் "அனைத்து அரசியல் மற்றும் தேசிய சக்திகளை அரசாங்கத்துடனான இந்த பேச்சுவார்த்தைக்குள் கொண்டுவர" வலியுறுத்தி அவர்கள் அறிக்கை வெளியிட்டனர். அவர்கள் எதை "ஒரு தனிச்சிறப்பு வகையிலான ஐக்கிய முன்னணி" என்று வர்ணித்தார்களோ அந்த "பல்வேறு தேசிய சக்திகளால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட தலைமையை உருவாக்குவதற்கு" அழைப்பு விடுத்ததன் மூலம், அது (RS) தொழிலாளர்களை சகோதரத்துவத்தினர் மற்றும் ஏனைய முதலாளித்துவ கட்சிகளுடன் கட்டிப்போட விரும்பியது

நாஜிகளை எதிர்க்க, பாரிய தொழிலாள வர்க்க அடித்தளத்தை கொண்டிருந்த இரண்டு கட்சிகளான ஜேர்மன் சமூக ஜனநாயக கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றிற்கு இடையில் ஓர் ஐக்கிய முன்னனிக்கு அழைப்புவிட்ட வரலாற்று ரீதியிலான ட்ரொட்ஸ்கியின் அழைப்போடு, அந்த சொல்லை பொருத்தமற்ற முறையில் RS தொடர்புபடுத்தி, பயன்படுத்தியது. முபாரக்கின் குண்டர்களால் நடத்தப்பட்ட வேட்டைகளுக்கு எதிராக, அண்டைநாட்டினரைக் காப்பாற்றுவதற்காக அமைக்கப்பட்ட மக்கள் குழுக்களிடம் இருந்து முஸ்லீம் சகோதரத்துவம் முறித்துக் கொண்ட போதினும் கூட, புரட்சிகர சோசலிஸ்டுகள் அவர்களுடன் ஓர் கூட்டணியை ஸ்தாபித்தனர்

உண்மையான மக்கள் அமைப்புகளின் அபிவிருத்தியைத் திணறடிப்பதும், முஸ்லீம் சகோதரத்துவம், எல்பரடே மற்றும் அவரது வகையறாக்கள், மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவம் ஆகிய "தேசிய சக்திகளின்" கட்டுப்பாட்டில் தொழிலாளர்களை கொண்டு வந்து நிறுத்துவதுமே அவர்களின் நோக்கமாக இருந்தது. "தங்கள் குழுவின் நலன்களைப் பாதுகாப்பதில் திறம்படைத்த, மக்களின் நம்பிக்கையை பெற்றிருந்த மற்றும் பலதரப்பட்ட அரசியல் நோக்கிநிலையை கொண்டிருந்தவர்களையும் உட்கொண்டிருந்த" ஓர் "உயர் குழுவை" (supreme council) தோற்றுவிப்பதிலும் புரட்சிகர சோசலிஸ்டுகள் வெற்றி கண்டனர். “போராட்டக்காரர்களோடு—அதாவது, சகோதரத்துவம் மற்றும் அதன் கூட்டாளிகளின் அனுபவம் பெற்ற காரியாளர்களோடு பேசுவது நல்லது" என்று அவர்கள் வலியுறுத்தினர்.

பெப்ரவரி 11இல், பாதுகாப்பு மந்திரி முஹம்மது ஹூசைன் தான்தாவி தலைமையிலான ஆயுதப்படைகளின் அதியுயர்குழுவின் (SCAF) இராணுவ ஆட்சிக்குழுவினால் (Junta) முபாரக் வெளியேற்றப்பட்டார். இரண்டு நாட்களுக்குப் பின்னர், நாடாளுமன்றத்தை கலைத்த தான்தாவி, அரசியலமைப்பை முடக்கியதோடு, இராணுவ ஆட்சிக்குழுவிற்கு சர்வாதிகார அதிகாரங்களையும் வழங்கினார்.   

ஜனநாயக, மக்களாட்சிக்குரிய மாற்றத்திற்கு ஒரு வாய்ப்பை கண்காணிக்கவிருப்பதாக கூறிய இராணுவ ஆட்சிக்குழு, ஒரு புதிய அரசியலமைப்பிற்காக மார்ச் 19இல் ஒரு வெகுஜன வாக்கெடுப்பிற்கு திட்டமிட்டது. அதன் ஜனநாயக பாசாங்குகளின் வேஷம், வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களை நிறுத்துவதற்கான அதன் கோரிக்கையிலும் மற்றும் இராணுவச்சட்டம் பிறப்பிக்கப்படுமென்ற அதன் அச்சுறுத்தல்களிலும் நிரூபணமாயின. சகோதரத்துவத்தை ஓர் அரசியல் கட்சியாக சட்டபூர்வமாக அங்கீகரித்திருந்த மற்றும் நவம்பரில் நாடாளுமன்ற தேர்தல்கள் நடத்தப்படுமென்று அறிவித்திருந்த இராணுவ ஆட்சிக்குழுவின் மார்ச் மாத வெகுஜன வாக்கெடுப்பை முஸ்லீம்சகோதரத்துவம் ஆதரித்தது.

இராணுவ ஆட்சிக்குழுவின் அரசிலமைப்பிற்கு வாக்களிக்க வேண்டாமென்று புரட்சிகர சோசலிஸ்டுகளும் ஏனைய இஸ்லாமிஸ்டுகள் அல்லாத எதிர்ப்பு குழுக்களும் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்திருந்த போதினும், அவை சகோதரத்துவத்தினருடன் முறித்துக்கொள்ளவில்லை. மாறாக, பெப்ரவரி 25இல், புரட்சிகர சோசலிஸ்டுகள் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டனர். “ஜனவரி 25 புரட்சியின், தொழிலாளர்களின் ஐக்கியத்திற்கான அடித்தளத்தை அமைப்பதை நோக்கி", “இடது சக்திகள்" மற்றும் முஸ்லீம் சகோதரத்துவத்திற்கு இடையில் ஒரு கூட்டணி முன்மொழியப்படுகிறது என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

இஸ்லாமிஸ்டுகள் அவர்களின் ஆதரவாளர்களை ஒன்றுதிரட்டினர். மார்ச் 19இல் மிகக்குறைந்த வாக்கு பதிவுகளோடு 77 சதவீத வாக்கு எண்ணிக்கையில் அரசியலமைப்பை அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேறியது.

மே மாதத்தில், மதவாத மோதலுக்கு இட்டுச் சென்ற ஒரு கிறிஸ்துவ-எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சலாபிஸ்டுகள் முக்கிய குழுவாக இருந்ததுடன், அந்த மோதலில் 65 பேர் சுடப்பட்டது உட்பட குறைந்தபட்சம் டஜன் கணக்கான மக்கள் பலியானதுடன், 240 பேர் காயமடைந்தனர். இத்தாக்குதலை தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்தவும் மற்றும் மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதற்கு இராணுவத்திற்கு ஒரு வாய்ப்பை அளிக்கவும் மதவாத மோதலைத் தூண்டிவிடுவதற்கான ஒரு வழிவகையாக கண்டுகொண்ட இராணுவஆட்சிக்குழு அந்த தாக்குதலுக்கு பச்சைக்கொடி காட்டியது.

கோடைகாலம் முழுவதும் பாரிய போராட்டங்கள் வளர்ந்தன. இராணுவ ஆட்சியைத் தூக்கியெறிய தொழிலாளர்களும் இளைஞர்களும் ஒரு "இரண்டாம் புரட்சிக்கான" அழைப்பைவிடத்தொடங்கினர். வாஷிங்டன், முஸ்லீம் சகோதரத்துவத்துடன் ஒரு "பகிரங்க பேச்சுவார்த்தையைத்" தொடங்குமென்ற அறிவிப்போடு அது விடையிறுப்பு காட்டியது. சவுதி அரேபியா சலாபிஸ்டு குழுக்களை அதன் மாற்றீடுகளாக சிபாரிசு செய்தது. இவற்றோடு சேர்ந்து, ஒரு பாசிச கட்சியான அல்-காமா அல்-இஸ்லாமியா (Al-Gama’a al-Islamiya) உட்பட இஸ்லாமிஸ்டுகள், தஹ்ரீர் சதுக்கத்திலிருந்த போராட்டக்காரர்களை "கம்யூனிஸ்டுகளாகவும், மதசார்பற்றவர்களாகவும் இருப்பதாகவும், அவர்கள் மக்களுக்கும் இராணுவத்திற்கும் இடையில் மோதலை தூண்டிவிட்டு அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற விரும்புவதாகவும்" குற்றஞ்சாட்டினர். ஒரு பொது அடித்தளத்தை அமைக்க இயங்கிவந்த பல்வேறு இஸ்லாமிய குழுக்கள், ஜூலை 29இல் "ஸ்திரபாட்டிற்கு ஆதரவான ஒரு போராட்டத்திற்கு" அழைப்பு விடுத்தன

அப்போதும் கூட, தாராளவாதிகள் மற்றும் போலி-இடது குழுக்களிடமிருந்து அத்தியாவசிய உதவியை இஸ்லாமிஸ்டுகள் தொடர்ந்து பெற்று வந்தனர்.

இது இரண்டாவது புரட்சியல்ல, மாறாக ஆட்சி வீழும் வரையில் நடக்கும் ஒரு நிரந்தர புரட்சி…" என்ற நகைப்புக்கிடமான அறிவிப்போடு, புரட்சிகர சோசலிஸ்டுகள் இரண்டாவது புரட்சியை கண்டனம் செய்தனர்.

ஒரு இரண்டாம் புரட்சிக்கான கோரிக்கையை ட்ரொட்ஸ்கியின் நிரந்தர புரட்சி தத்துவத்திற்கு எதிராக நிறுத்தும் இந்த முயற்சி முற்றிலும் நேர்மையற்றதாக இருந்தது. இராணுவ ஆட்சிக்குழுவைத் தூக்கியெறிவதற்கு தொழிலாள வர்க்கத்தால் நடத்தப்படும் ஒரு இரண்டாவது புரட்சி மூலமாக மட்டுமே நிரந்தர புரட்சிக்கான போராட்டத்தை நிதர்சனமாக்க முடியும். புரட்சிகர சோசலிஸ்டுகளைப் பொறுத்த வரையில், இராணுவ ஆட்சிக்குழுவின் சர்வாதிகாரத்தை "நிரந்தரமாக" ஆக்குவதன் மூலம், அதற்கு ஆதரவளித்து, முதலாளித்துவ சக்திகளின் தொடர்ச்சியான ஆதிக்கத்தை உறுதி செய்வதே அவர்களின் உண்மையான நோக்கமாக இருந்தது.

ஜூலை 27இல், புரட்சிகர சோசலிஸ்டுகள், ஜனநாயக தொழிலாளர் கட்சி மற்றும் சோசலிச கூட்டணி கட்சி (Socialist Alliance Party) மூன்றும் ஐக்கிய மக்கள் முன்னனியில் இணைந்ததோடு, முஸ்லீம் சகோதரத்துவம், சலாபிஸ்டுகள் மற்றும் அல்-காமா அல்-இஸ்லாமியா உட்பட எகிப்தின் அனைத்து பிரதான அரசியல் குழுக்களோடு ஓர் அறிக்கையிலும் கையெழுத்திட்டன. அவர்கள் அனைத்து "முரண்பாடான பிரச்சினைகளையும்" ஒதுக்கி வைக்க உடன்பட்டனர். தாராளவாத மற்றும் "இடது" குழுக்களைப் பெரிதும் விஞ்சி நிற்கும் விதத்தில், ஐக்கிய மக்கள் கூட்டணியால் அழைப்புவிடுக்கப்பட்ட ஒரு பேரணிக்கு இஸ்லாமிஸ்டுகள் அவர்களின் ஆதரவாளர்களை ஒன்றுதிரட்டியதன் மூலம் தமது பிரதிபலிப்பை  காட்டினர். சலாபிஸ்டு அல்-நௌர் (ஒளி-The Light) கட்சி மற்றும் முஸ்லீம் சகோதரத்துவத்தின் ஒரு மிகப்பெரிய பிரிவுகள் இந்த பேரணியில் கலந்து கொண்டது. ஒரு இஸ்லாமிய அரசிற்கு அழைப்புவிடுத்த அவர்கள், “மதசார்பின்மை" மற்றும் "கம்யூனிசம்" ஆகியவற்றிற்கு எதிராக முழுக்கமிட்டனர்.  

புரட்சிகர சோசலிஸ்டுகளும் ஏனைய போலி இடதுகளும் தொடர்ந்து நடந்துவரும் தஹ்ரீர் சதுக்க உள்ளிருப்பு போராட்டத்தில் இனியும் பங்கெடுக்க போவதில்லை என்று ஜூலை 31இல் அறிவித்து, அவை அதிர்ச்சியையும், சீற்றத்தையும் வெளிப்படுத்துவதைப் போல நாடகமிட்டன. இது சதுக்கத்தை சுத்தம் செய்ய, இராணுவத்திற்கு மரணப்படையை பயன்படுத்துவதற்கு பாதையைத் திறந்துவிட்டது

சுயாதீனமான தொழிற்சங்கங்கள் என்றழைக்கப்பட்டவைகளுக்கு உள்ளேயும் முஸ்லீம் சகோதரத்துவத்தை புரட்சிகர சோசலிஸ்டுகள் ஊக்குவித்தனர். செப்டம்பரில் பாரிய வேலைநிறுத்தங்களின் ஒரு அலை ஏற்பட்டதற்குப் பின்னர், முதலாளித்துவ ஆட்சியின் அச்சுறுத்தல் ஏற்ப்படக்கூடும் என்பதால், ஆயுதப்படைகளின் அதியுயர்குழுவை-SCAF- தூக்கியெறிவதற்கான கோரிக்கையைத் தடுப்பதற்கு வேலைநிறுத்ததிலிருந்து தாங்கள் ஒதுங்கி கொள்வதாக அந்த அமைப்புகள் அறிவித்தன. உண்மையில் இந்த "சுயாதீனமான" தொழிற்சங்கங்கள் உணர்வுபூர்வமான கம்யூனிச எதிர்ப்பு AFL-CIO மூலமாக அமெரிக்க வெளியுறவுத்துறையால் ஆதரிக்கப்பட்டவையாகும். அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் எகிப்திய செயல்பாட்டாளர்களுக்கு பின்வருமாறு கூறினார்: “ஆட்சிக்கு காட்டப்படும் அரசியல் எதிர்ப்பின் சார்பில் தொழிற்சங்கங்கள் ஒழுங்கமைக்கப்படுவதை அரசாங்கம் விரும்பாது என நாங்கள் உறுதியாக நம்பினோம்… நாங்கள் என்ன நம்பினோமோ அதுவே நடந்தது,” என்றார்.

எகிப்தில் AFL-CIOஆல் ஏற்பாடு செய்யப்பட்ட வசதியான வாகனத்தில் ஏற புரட்சிகர சோசலிஸ்டுகள் ஆர்வமுடன் இருக்கின்றனர்.

ஆயுதப்படைகளின் அதியுயர்குழுவுக்கு எதிராக பரந்த விரோதம் நிலவிய நிலையில், அக்டோபர் 2இல், சுதந்திர நீதி கட்சி (முஸ்லீம் சகோதரத்துவத்தின் அரசியல் பிரிவு), சலாபிஸ்டு அல்-நௌர் கட்சி, வாஃப்டு மற்றும் நாசெரெட் கராமா கட்சி (Nasserite Karama Party) உட்பட 13 அரசியல் கட்சிகள் நவம்பரில் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல்களை ஜனநாயகத்தை நோக்கிய ஒரு முக்கிய படியாக பாராட்டி, அதற்கு ஒப்புதல் அளிக்கும் ஒரு உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. இராணுவம் ஆறு மாதங்களுக்குப் பின்னர் ஆட்சியிலிருந்து இறங்கிவிடும் என்று அது அளித்த ஆரம்ப வாக்குறுதியை மீறுகின்ற விதத்தில், குறைந்தபட்சம் 2012 இறுதி வரையில் அது அதிகாரத்தைத் தக்க வைத்திருக்கும் என்ற போதினும் இது கையெழுத்திடப்பட்டது. Al Ahram Onlineஇன் செய்திப்படி, அந்த ஆவணத்தில் கையெழுத்திட்டவர்கள் "ஆயுதப்படைகளின் அதியுயர்குழுவிற்கு அதன் முழு ஆதரவையும் அறிவித்தனர்". அத்தோடு புரட்சியைப் பாதுகாப்பதிலும், மக்களுக்கு அதிகாரத்தை மாற்றியளிக்கும் அதன் நிகழ்முறையிலும் அது ஆற்றிவரும் பாத்திரத்தையும் அவர்கள் பாராட்டினர்.  

இந்த இற்றுப்போன உடன்படிக்கை, ஆயுதப்படைகளின் அதியுயர்குழு அதிகாரத்தில் அதன் பிடியை இறுக்கவும், தொழிலாளர்கள் மீது வன்முறையான தாக்குதல்களையும், ஒடுக்குமுறையையும் அதிகரிக்கவும் மற்றும் அவசரகால சட்டங்களை நீடிக்கவும் அதற்கு உதவியுள்ளது

புத்துயிர்பெற்ற பாரிய போராட்டங்கள் தொழிலாள வர்க்கத்திற்கும் ஒட்டுமொத்த அரசியல் அமைப்பிற்கும் இடையில் நிலவும் பெரும் இடைவெளியை வெளிப்படையாக காட்டியுள்ளது. இராணுவ ஆட்சிக்குழுவிற்கு எதிரான போராட்டங்களையும், முஸ்லீம் சகோதரத்துவத்தின் தலைவர் மொஹம்மத் எல் பெல்தாகியைத் தஹ்ரீர் சதுக்கத்திலிருந்து பிரதான போராட்டக்காரர்கள் வெளியேற்றியதையும் சகோதரத்துவம் பகிரங்கமாக விமர்சித்தது. தேர்தல்களுக்கான போட்டாபோட்டிக்கு இடையில், புரட்சியில் உயிர்நீத்த தியாகிகளின் குடும்பங்களுக்கு எதிராக நவம்பர் 19இல் இராணுவ ஆட்சிக்குழுவால் நடத்தப்பட்ட வன்முறையான ஒடுக்குமுறையால் (அதில் பாதுகாப்பு படை 40க்கும் மேற்பட்டோரை கொன்றது) தூண்டப்பட்ட, பாரிய போராட்டங்களும் அங்கே இருந்தன. நாடு முழுவதிலும் உள்ள நகரங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் ஆயுதப்படைகளின் அதியுயர்குழுவை தூக்கியெறிய வேண்டுமெனக் கோரின.

இத்தகைய நிலைமைகளின்கீழ், எல்பரடே உட்பட பல்வேறு முதலாளித்துவ மற்றும் குட்டி-முதலாளித்துவ அரசியல் பிரமுகர்களும் அமைப்புகளும் ஒரு "தேசிய சமாதான அரசிற்கு" (national salvation government) அழைப்புவிடுத்தனர். இஸ்லாமிஸ்டுகளும் இந்த முறையீட்டை ஆதரித்தனர். இரத்தந்தோய்ந்த ஒடுக்குமுறையை நடத்திய அதே எகிப்திய இராணுவப் படையால் நிறுவப்பட்ட அத்தகையவொரு அரசாங்கம், ஒருவேளை “புரட்சியின்" ஐக்கியத்தை காப்பாற்றுவதற்காக என்ற பெயரில் கூட, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான போராட்டங்களின் குரல்வளையை நசுக்குவதை அதன் முக்கிய வேலையாக கொண்டிருக்கலாம். ஆனால் குறுகியகால அடிப்படையில், அது மீண்டும் இராணுவ ஆட்சிக்குழுவிடம் அரசியல் எழுச்சியை ஒப்படைத்தது. ஒரு நம்பிக்கையிழந்த சாமாதானப்பட்டு போன தாளாரவாத எதிர்ப்பு மற்றும் அதன் போலி-இடது தொங்குதசைகளின் முகத்திற்கு முன்னால், தேர்தல்களில் இஸ்லாமிஸ்டுகள் செல்வாக்கைப் பெற அது உதவியது.     

இறுதி ஆய்வுகளில், ஒரு முற்போக்கான மற்றும் ஜனநாயக பாதையில், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான எந்தவொரு சுயாதீனமான போராட்டத்தையும் முன்னெடுக்க இலாயக்கற்று போயிருக்கும் பல்வேறு தேசிய முதலாளித்துவ அமைப்புகளுக்கு, தொழிலாள வர்க்கம் அடிபணிய வைக்கப்பட்டுள்ளது என்பதே எகிப்திலும் சர்வதேச அளவிலும் அரசியல் இஸ்லாமின் வளர்ச்சிக்கு அளிக்கப்பட்டிருக்கும் விலையாகும்

தேசியவாதம், வகுப்புவாதம் அல்லது மதவாதம் ஆகியவை தொழிலாள வர்க்கத்தை அவர்களின் சர்வதேச சகோதர மற்றும் சகோதரிகளிடமிருந்து பிரித்தாள்வதற்கும் மற்றும் அதை முதலாளித்துவ நலன்களுக்கு அடிபணிய வைப்பதற்கும் மட்டுமே உதவுகின்றன. இது, முதலில் ஸ்ராலினிஸ்டுகளின் காட்டிகொடுப்புகளாலும் பின்னர் புரட்சிகர சோசலிஸ்டுகள் மற்றும் ஏனைய முன்னாள்-இடது குழுக்களாலும் உருவாக்கப்பட்ட சித்தாந்த குழப்பங்கள் மற்றும் அரசியல் நிலைகுலைவுகளோடு பிணைந்த விதத்தில், தொழிலாள வர்க்கம் அவர்களின் சொந்த ஆளும் வர்க்கம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு துல்லியமான போராட்டத்தை நடத்துவதிலிருந்து அவர்களை தடுக்கிறது.

இஸ்லாமிஸ்டுகளோடு இணைந்து வேலை செய்வது மற்றும் இராணுவ ஆட்சிக்குழுவின்கீழ் "ஜனநாயக இடத்திற்கு" அழுத்தமளிப்பது என்ற புரட்சிகர சோசலிஸ்டுகளின் முன்னோக்கு, பாரிய அபாயங்களை முன்னிறுத்துகின்றது. சகோதரத்துவத்தினர், அல்-நௌர் மற்றும் தாராளவாதிகளின் செல்வாக்கின்கீழ் இருக்கும் ஒரு நாடாளுமன்றத்தை ஸ்தாபிப்பதென்பது இராணுவ ஆட்சிக்குழு மற்றும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களுக்கும் (தற்போது இவர்கள் எகிப்தின் உத்தியோகபூர்வ “எதிர்கட்சிகளால்” ஆதரிக்கப்படுகின்றனர்) மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையில் புதிய போராட்டங்கள் வெடிப்பதற்கு களம் அமைக்கின்றது.

வலது மற்றும் பெயரளவிற்கான இடதுகளிலிருந்து விலகி, இராணுவ ஆட்சிக்குழு மற்றும் அதன் பாதுகாவலர்களுக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் நடத்தும் ஒரு நனவுப்பூர்வமான புரட்சிகர போராட்டத்தின் மூலமாக மட்டுமே சமூக சமத்துவம் மற்றும் உண்மையான ஜனநாயக உரிமைகளுக்கான கோரிக்கைகளை, வென்றெடுக்க முடியும். அதாவது தொழிலாளர்களின் ஓர் அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டு வருவதை நோக்கமாக கொண்ட ஒரு பரந்த மக்கள் இயக்கத்தை கட்டியெழுப்புவதை இது குறிக்கிறது.

இத்தகைய போராட்டத்தை நடத்த, எகிப்திய தொழிலாளர்களுக்கு இரண்டு விஷயங்கள் அவசியப்படுகின்றன: ஒன்று ஒரு சர்வதேச சோசலிச மூலோபாயம், மற்றொன்று அவர்களின் சொந்த சுயாதீனமான போராடும் அமைப்புகள். உலக சோசலிச புரட்சியின் பாகமாக, மத்திய கிழக்கின் ஐக்கிய சோசலிச அரசுகளுக்காக, முதலாளித்துவ சுரண்டல் மற்றும் ஏகாதிபத்திய ஒடுக்குமுறைக்கு எதிரான ஓர் ஒருங்கிணைந்த போராட்டத்தை நடத்துவதில், அப்பிராந்தியம் முழுவதிலும் உள்ள எகிப்திய தொழிலாளர்களையும் மற்றும் கிராப்புற ஏழைகளையும் ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டத்தில் தான் முன்னோக்கிய பாதை தங்கியுள்ளது. இதற்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் புரட்சிகர தலைமையைக் கட்டியெழுப்புவது அவசியமாகும்.