சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The Egyptian coup and the tasks facing the working class

எகிப்தின் ஆட்சிக்கவிழ்ப்பும் தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் கடமைகளும்

Johannes Stern
30 July 2013

use this version to print | Send feedback

எகிப்தில் ஜூலை 3 அன்று நடந்த ஆட்சிக்கவிழ்ப்பும் அதையடுத்து நடந்த அடக்குமுறையும் சர்வதேசரீதியாக தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் பிரதான பிரச்சினையை முழுமையாக வெளிப்படுத்தியிருக்கிறது: புரட்சிகரத் தலைமையின் நெருக்கடி.

அமெரிக்க ஆதரவுடன் நெடுங்காலம் எகிப்தின் சர்வாதிகாரியாக இருந்த ஹோஸ்னி முபாரக்கை தூக்கிவீசிய எழுச்சிகளுக்கு இரண்டு வருடங்களுக்கும் அதிகமான காலத்திற்கு பின்னர் இராணுவமானது - அமெரிக்காவில் கல்வி பயின்ற ஜெனரல் அப்டெல் ஃபதா அல் சிஸி தான் இதன் தலைவராக இருக்கிறார் - 2011 பிப்ரவரிக்கு முன்பிருந்த அரசியல் அமைப்புமுறையை மீட்சி செய்வதற்கு முனைகிறது.

நான்குவாரங்களுக்கு முன்பாக முஸ்லீம் சகோதரத்துவத்தை (MB) சேர்ந்த ஜனாதிபதி முகமது முர்சி பதவியில் இருந்து அகற்றப்பட்டதைத் தொடர்ந்து இராணுவமானது பயங்கரத்தின் எந்திரத்தை மறுஸ்தாபகம் செய்யும் பொருட்டு இரக்கமற்று முன்னேறிக் கொண்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான முர்ஸி ஆதரவாளர்கள் படுகொலை செய்யப்பட்டதோடு ஆயிரக்கணக்கிலானோர் சிறையிலடைக்கப்பட்டனர்.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் திங்களன்று வெளியான ஒரு கட்டுரையில் குறிப்பிட்டது: நீண்டகாலம் ஆட்சியில் இருந்த மிகவும் வெறுக்கப்பட்ட ஹோஸ்னி முபாரக்கின் குணாம்சமாக இருந்த போலிஸ் அரசு என்ற அம்சத்திற்கு மீண்டும் உயிரூட்டுவதை நோக்கி எகிப்தின் இடைக்கால குடிமை அரசாங்கம் நகர்ந்தது. ஞாயிறன்று, முபாரக்கின் கீழிருந்த ஒரு அவசரகாலச் சட்டத்தின் பிரிவுகளுக்கு உயிரூட்டப்பட்டு அப்பாவி குடிமக்களை கைது செய்யும் அதிகாரத்தை அரசாங்கம் படையினர்களுக்கு வழங்கியது. ஒரு தினத்திற்கு முன்னதாக, உள்துறை அமைச்சரான முகமது இப்ராஹிம் பேசும்போது, முபாரக்கின் கீழ் பல தசாப்தகால ஒடுக்குமுறைக்கு பொறுப்பாக இருந்த ஒரு இரகசிய போலிஸ் பிரிவை மறு உருவாக்கம் செய்ய அவர் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

இந்த ஒடுக்குமுறையின் உடனடிக் கவனம் முஸ்லீம் சகோதரத்துவம் அமைப்பின் மீதும் அதன் ஆதரவாளர்கள் மீதும் இருக்கின்ற அதே சமயத்தில் அதன் இறுதி இலக்கு தொழிலாள வர்க்கமே ஆகும்.

எதிர்புரட்சிகர ஆட்சிக்கவிழ்ப்பின் முக்கியத்துவம் என்ன?, எகிப்திய புரட்சியின் அபிவிருத்தியில் நாம் எங்கு நின்று கொண்டிருக்கிறோம்?

எகிப்தியப் புரட்சி எதேச்சையாக ஒருநாள் நடந்த நிகழ்வு அல்ல. மகத்தான எல்லா புரட்சிகளையும் போலவே, குறிப்பாக சிக்கலான தேசிய மற்றும் சர்வதேசிய நிகழ்முறைகளில் ஆழமாக வேரூன்றிய புரட்சிகளைப் போலவே, இதுவும் வாரங்கள் அல்லது மாதங்களில் அல்ல, பல வருட காலத்தில் மலர்ந்ததாகும். ஒரு புரட்சி என்ற போர்க்களத்தில் அடுத்தடுத்த அரசியல் சக்திகள் முன்னால் வருகின்றன. அவை பிரதிநிதித்துவம் செய்யும் வர்க்க நலன்களை வெளிப்படுத்துகின்றன.

இந்தக் கோணத்தில் இருந்து பார்க்கும்போது 2013 ஜூன் - ஜூலை நிகழ்வுகள் புரட்சியின் முடிவைக் குறிக்கவில்லை, மாறாக அதன் ஆரம்ப கட்டங்களையே குறிக்கின்றன.

புரட்சியின் ஆரம்ப காலகட்டத்தில், பல்வேறு சமூக மற்றும் அரசியல் சக்திகளும் முபாரக் அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையைச் சுற்றி அணிதிரண்டன. கூகுள் மத்திய கிழக்கு மேலாளர் வேல் கோனிம் போன்ற தாராளவாத சிந்தனை கொண்ட முதலாளிகள்; முன்னாள் ஐநா அதிகாரியான முகமது எல் பரடே போன்ற முதலாளித்துவ அரசியல்வாதிகள்; முபாரக்கின் கீழ் உத்தியோகப்பூர்வமாக தடை செய்யப்பட்டிருந்த எதிர்க்கட்சிக் குழுவும் ஆனால் அளவில் மிகப் பெரியதுமான முஸ்லீம் சகோதரத்துவம் அமைப்பின் உறுப்பினர்கள்; வசதியான நடுத்தர வர்க்கத்தின் பிரதிநிதிகள்; இன்னும் இராணுவமே கூட என எல்லோருமே ஜனநாயகத்தின் பக்கமும் வெகுஜன மக்களின் பக்கமும் நிற்பதாகக் கூறிக் கொண்டனர்.

தொழிலாள வர்க்கம், இந்த சக்திகளில் இருந்து அதனைப் பிரித்த பரந்த வர்க்கப் பிளவு குறித்து அப்போதும் நனவுற்றிருக்கவில்லை. எப்படியிருந்தபோதிலும், புரட்சியின் பாதையில், எகிப்திய ஆளும் உயரடுக்கின் அரசியல் கன்னைகள் எடைபோடப்பட்டிருக்கின்றன, சோதிக்கப்பட்டிருக்கின்றன.

முதலாவதாய், முபாரக் வெளியேறியதன் பின் அதிகாரத்திக்கு வந்த இராணுவ ஆட்சிக்குழு முடிந்த அளவுக்கு பழைய ஒழுங்கையே பாதுகாக்க விரும்பிய ஒரு எதிர்ப்புரட்சிகர சக்தியாக அம்பலப்பட்டது. அது துரிதமாக வேலைநிறுத்தங்களை தடைசெய்தது, போராட்டங்களை ஒடுக்கியது, முபாரக்கின் சித்திரவதை தந்திரங்களைத் தொடர்ந்தது அத்துடன் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை இராணுவ விசாரணைகளின் மூலம் தண்டித்தது.

இராணுவம் அம்பலப்பட்டதைத் தொடர்ந்து முபாரக் ஆட்சியின் கீழ் ஒழுங்குபட்ட பிரதான எதிர்க்கட்சியாக இருந்து வந்திருந்த முஸ்லீம் சகோதரத்துவம் அம்பலப்பட்டது. முஸ்லீம் சகோதரத்துவம் ஆளும் ஆட்களை மாற்றியமைக்க முனைந்தது. தனக்கும் தான் வக்காலத்து வாங்குகின்ற எகிப்திய முதலாளித்துவ வர்க்கத்தின் பிரிவுகளுக்கும் அரசியல் அதிகாரத்தின் பங்கை அதிகப்படுத்திக் கொள்ளும் பொருட்டு எகிப்தின் சட்ட மற்றும் அரசியல் ஸ்தாபனங்களை மாற்றியமைப்பதற்கு அது அழைப்பு விடுத்தது. ஆயினும் இராணுவம் பாதுகாத்த அதே அடிப்படை வர்க்க நலன்களையே முஸ்லீம் சகோதரத்துவமும் பாதுகாத்தது.

முந்தைய ஆட்சிகளின் தொழிலாள-வர்க்க விரோத, ஏகாதிபத்திய ஆதரவுக் கொள்கைகளையே முஸ்லீம் சகோதரத்துவ அரசாங்கமும் தொடர்ந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட வெகுவிரைவிலேயே முர்ஸி, எகிப்திய பொருளாதாரத்தை சுதந்திரச் சந்தை அடிப்படையின் கீழ் மேலதிகமாய் தாராளமயமாக்குவதற்கும் மிக முக்கியமான உணவு மற்றும் எரிபொருள் மானியங்களை வெட்டுவதற்கும் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைக்குள் நுழைந்தார். எல்லாவற்றுக்கும் மேலாய், பிராந்தியத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களை, மிகப் பிரதானமாக சிரியாவில் அமெரிக்க தலைமையிலான பினாமிப் போரை, தொடர்ந்து ஆதரித்தார்.

அதற்குப் பின் முர்ஸி மற்றும் முஸ்லீம் சகோதரத்துவக்கு எதிராக வெடித்தெழுந்த வெகுஜனப் போராட்டங்கள் வந்தன. இந்த ஆண்டில் ஜூன் 30 அன்று மில்லியன் கணக்கான மக்கள் பங்குபெற்ற ஆர்ப்பாட்டங்களில் இது உச்சக்கட்டத்தை அடைந்தது. 2011 முதல் தொழிலாள வர்க்கம் தீவிரமடைந்து செல்வதையும் பாட்டாளி வர்க்கப் புரட்சி என்னும் பயங்கரத்தையும் எண்ணி அச்சமுற்ற இராணுவம் நேரடியாகத் தலையீடு செய்தது. உண்மையான புரட்சியாளர்கள் என்றும் முபாரக் மற்றும் முர்ஸி ஆட்சிகளுக்கான ஜனநாயக மாற்று என்றும் தங்களைத் தாமே முன்செலுத்திக் கொள்ள முனைந்த முதலாளித்துவ மற்றும் நடுத்தர வர்க்க குழுக்கள் இந்த ஆட்சிக்கவிழ்ப்புக்கு ஆதரவளித்தனர்.

இராணுவ-ஆதரவுடனான புதிய அரசாங்கத்தில் எல்பரடே மற்றும் அமெரிக்க-ஆதரவு பெற்ற எகிப்து சுயேச்சைத் தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவரான கமால் அபு எய்தா போன்றவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இராணுவத்திற்குப் பின்னால் அணிவகுக்கும் குழுக்களில் மிகவும் ஊழலடைந்ததும் இற்றுப் போனதும் எதுவென்றால் புரட்சிகர சோசலிஸ்டுகள்(RS)தான். இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பை இரண்டாவது புரட்சி என்று இவர்கள் போற்றுகிறார்கள். உயர் நடுத்தர வர்க்கத்தின் வசதியான பிரிவுகளுக்காக பேசுகின்ற RS, தொழிலாள வர்க்கத்தை முதலில் இராணுவத்திற்கும், பின்னர் முஸ்லீம் சகோதரத்துவக்கும் (MB), மறுபடியும் இராணுவத்திற்கும் என தொடர்ந்து எகிப்திய முதலாளித்துவ வர்க்கத்திற்கு அடிபணியச் செய்து வந்திருப்பதன் மூலம் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் இயக்கத்தை தடுப்பதற்கு முனைந்திருந்தது.

மத்திய கிழக்கில் ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கம், பாரிய வறுமை, மற்றும் ஜனநாயகமின்மை என எகிப்தின் பரந்த வெகுஜனங்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஒரு வேலைத்திட்டத்தை எவரொருவரும் அமல்படுத்த முடியவில்லை என்பதே இந்த அனைத்து சக்திகளின் அரசியல் திவால்நிலைக்குக் கீழேயிருக்கும் உண்மையாக இருக்கிறது. எகிப்தின் முதலாளித்துவ வர்க்கம் மற்றும் சலுகை படைத்த நடுத்தர வர்க்கம் இந்த அனைத்து சக்திகளுமே முதலாளித்துவ சொத்து உறவுகளைப் பாதுகாக்கின்றன என்பதோடு ஏகாதிபத்தியம் மற்றும் சர்வதேச நிதி மூலதனத்துடன் பிணைக்கப்பட்ட நிலையில் உள்ளன. எகிப்திய புரட்சிக்குப் பின்னாலிருக்கும் உந்துசக்தியான தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு இவர்கள் உயிர்ப்பான குரோதத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பதோடு தொழிலாள வர்க்கத்தின் ஒரு சோசலிசப் புரட்சியைக் காட்டிலும் ஒரு இராணுவ சர்வாதிகாரத்தையே ரொம்பவும் விரும்புகிறார்கள்.

2013 ஜூன் -ஜூலை எதிர்ப்புரட்சிகர ஆட்சிக்கவிழ்ப்பு, வெகுஜனங்களுக்கான ஒரு தோல்வி என்பதில் சந்தேகம் எதுவுமில்லை. ஆயினும், இராணுவம், ஏகாதிபத்திய ஆதரவாளர்கள், தாராளவாதிகள் மற்றும் போலி-இடதுகள் இவர்கள் எல்லோரும் புரட்சி முடிந்து விட்டது என்று நம்பினாலும், இவ்விடயத்தில் தொழிலாள வர்க்கம் தனது முடிவை இனித்தான் கூறவிருக்கிறது.

ஆரம்பத்தில் இருந்தே எகிப்திய புரட்சி, முதன்மையாய் எகிப்துக்குள்ளேயும் மற்றும் மத்திய கிழக்கு முழுவதிலும் இருந்த வெடிப்பான முரண்பாடுகள் என்ற ஆழமான புறநிலை நிகழ்முறைகளின் மூலமாகத் தான் இயக்கப்பட்டிருக்கிறது. இந்த முரண்பாடுகள் எல்லாம் தம்மளவில் உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் நெருக்கடியுடன் பிரிக்கவியலாமல் பிணைக்கப்பட்டிருக்கின்றன, அந்நெருக்கடியால் உக்கிரமடைகின்றன.

புரட்சியின் ஒட்டுமொத்தப் பாதையுமே ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சித் தத்துவத்தின் அடிப்படைக் கருத்துகளையே உறுதிப்படுத்தியிருக்கின்றன: முதலாளித்துவ வர்க்கம் அல்லது அதன் அரசியல் பிரதிநிதிகளின் எந்தவொரு கன்னையும் ஒரு முற்போக்கான பாத்திரம் எதனையும் ஆற்றுவதற்கு இலாயக்கற்று விட்டது; சோசலிசம் மற்றும் தொழிலாளர் அதிகாரத்திற்கான ஒரு போராட்டத்தின் பகுதியாக தொழிலாள வர்க்கம் மட்டுமே ஒரு ஜனநாயக வேலைத்திட்டத்தை அமல்படுத்த முடியும்; அத்துடன் உலகத் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான ஒரு சர்வதேச மூலோபாயத்தை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே எந்தவொரு தனி நாட்டிலும் கூட புரட்சியின் வெற்றி சாத்தியமாகும்.

இந்த வேலைத்திட்டத்திற்கான போராட்டமானது அரசியல் தலைமை எனும் மையமான பிரச்சினையை மேலே கொண்டுவருகிறது. எகிப்தின் கொந்தளிப்பான நிகழ்வுகளின் மூலம் முன்கணிக்கப்படும் உலக சோசலிசப் புரட்சியின் புதிய சகாப்தத்திற்கு தொழிலாள வர்க்கத்தின் புதிய பாரிய புரட்சிகரக் கட்சிகள் அவசியமாக இருக்கின்றன. எகிப்திலும் சர்வதேச அளவிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின்(ICFI) பிரிவுகளைக் கட்டியெழுப்புவது என்பதே இதன் பொருளாகும்.