சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The capitalist crisis and the fight for socialist internationalism

முதலாளித்துவ நெருக்கடியும் சோசலிச சர்வதேசியவாதத்திற்கான போராட்டமும்

David North
5 May 2014

Use this version to printSend feedback

இந்த முன்னோக்கு மே 4 அன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் உலக சோசலிச வலைத் தளமும் சேர்ந்து நடத்திய சர்வதேச இணையவழி மே தின நிகழ்வைத் தொடங்கி வைத்து உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியத் தலைவருமான டேவிட் நோர்த் வழங்கிய உரையின் உரைவடிவமாகும்.

இந்த முதன்முதல் இணையவழி சர்வதேச மே தினக் கொண்டாட்டத்தில் உலகெங்கும் இருந்து பங்கேற்றிருக்கும் உழைக்கும் மக்களையும் மற்றும் இளைஞர்களையும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சார்பாக முதற்கண் நான் வரவேற்கிறேன். 60க்கும் அதிகமான நாடுகளில் இருந்து இதில் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்வுக்கு கிட்டியிருக்கும் இத்தகைய அசாதாரண வரவேற்பு இந்தப் பேரணியின் செறிந்த அரசியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவத்திற்கு சாட்சியம் கூறுகிறது. இது, சோசலிசத்திற்கான தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய சர்வதேச புரட்சிகர இயக்கத்தை அபிவிருத்தி செய்வதில் ஒரு மைல்கல்லை குறித்து நிற்கிறது. இந்தப் பேரணியில் பங்கெடுப்போர் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் பரந்துபட்ட பிரிவுகளை பிரதிநிதித்துவம் செய்கின்றனர். உலக மக்களின் மாபெரும் பன்முகத் தன்மை இந்தப் பேரணியின் உலகளாவிய அவையோர் கூட்டத்தில் வெளிப்பாட்டை காண்கிறது. பரந்த மக்களைப் பிரித்து வைக்க ஆளும் உயரடுக்கினர் பயன்படுத்துகின்ற இன, மத, தேசிய, மொழி, பால் பேதங்கள் அனைத்தும் மற்றும் வயது பேதமும் கூட, உலக முதலாளித்துவ நெருக்கடியின் தவிர்க்கவியலாத யதார்த்தம், வர்க்கப் போராட்டத்தின் அரசியல் கட்டாயங்கள், அத்துடன் நவீன சமூகத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புறநிலைரீதியான புரட்சிகரப் பாத்திரம் ஆகியவற்றின் முன்னால் கரைந்து காணாமல் போவதை இந்தக் கூட்டத்தில் காண முடிகிறது.

முதலாளித்துவத்திற்கான சமூக எதிர்ப்பின் ஒரு புதிய மனோநிலை எழுச்சி கண்டு கொண்டிருப்பதை இந்தப் பேரணி எடுத்துக்காட்டுகிறது. இப்போதைய பொருளாதார அமைப்புமுறை மனிதகுலத்தைச் சூழ்ந்துள்ள பிரச்சினைகளுக்கு பொருத்தமான தீர்வுகளைக் காண இலாயக்கற்று இருப்பதோடு மட்டுமல்ல, து ஒட்டுமொத்த பூமிப்பந்தையும் ஒரு பேரழிவை நோக்கி செலுத்திக் கொண்டிருக்கிறது என்பதான உணர்வு பெருகிக் கொண்டிருக்கிறது.

தொழிலாள வர்க்கம் ஸ்தாபக ஊடகங்களின் அன்றாடப் பிரச்சாரத்தை சவால் செய்வதற்கும் முதலாளித்துவ சமூகத்தின் மீதான அதன் குற்றப்பதிவினை வழங்குவதற்கும் மே தினம் பொருத்தமான தருணமாக இருக்கிறது. உள்ளதை எப்போதும் உரக்கப் பிரகடனம் செய்வதென்பது மிகப் புரட்சிகரமான நடவடிக்கையில் இடம்பெறுவதாகும் என்று அறிவித்த ஃபெர்டினான்ட் லாஸல்லின் கட்டளையை ரோஸா லுக்சர்ம்பேர்க் உற்சாகத்துடன் நினைவுகூர்வார், அதனைத் தனது இலட்சியமாகவும் ஏற்றுக் கொண்டிருந்தார். அது தான் இன்றைய நமது நடவடிக்கைகளையும் வழிநடத்தவிருக்கின்ற கோட்பாடாகும். இந்தப் பேரணியில், அனைத்துலகக் குழு சமகால முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் யதார்த்தத்தை அம்பலப்படுத்தும்.

சமூகத்தை அரசியல்ரீதியாக ஒழுங்கமைப்பது நாளுக்கு நாள் குற்றவியல்தனமான கிறுக்கர்களது ஒரு சிறையின் கட்டமைப்பின் வடிவத்தை எடுப்பதுபோல் தோன்றுகிறது. ஆனால் இந்த உலகச் சிறைச்சாலையில் புத்திசுவாதீனத்துடன் இருக்கின்ற பரந்த மக்கள் தான் கம்பிகளுக்குப் பின்னால் இருக்கிறார்கள். அதேநேரத்தில் முதலாளித்துவ அரசியல்வாதிகள், அரச உளவுத்துறை முகமைகளைச் சேர்ந்த தொழிற்முறை கொலைகாரர்கள், பெருநிறுவன தாதாக்கள், மற்றும் உயர் நிதி சுருட்டல்தாரர்களை கொண்ட கிறுக்கர்கள் தான்  கையில் துப்பாக்கிகளை ஏந்தியபடி சிறைச்சாலை சுவர்களை ரோந்து வருகிறார்கள்.

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பாக, சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச ஆட்சிகள் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆளும் வர்க்கத்தின் சித்தாந்த வக்காலத்துவாதிகள் அனைவரும் சோசலிசத்தை முதலாளித்துவம் இறுதியாக வெற்றி கண்டுவிட்டதாக பிரகடனம் செய்தனர். ஸ்ராலினிசத்தை - இது மார்க்சிசத்தை பிற்போக்கான தேசியவாதத்துடன் பொய்மைப்படுத்தல் - சோசலிசத்தின் பிரதிநிதி என்பதாகக் காட்டிய பொய் தான் இந்த வெற்றிக் களியாட்டத்தின் அடிப்படையாக இருந்தது. இந்தப் பொய்யை நீடிக்கச் செய்ய வேண்டுமாயின் அதற்கு ஸ்ராலினிசத்திற்கான சோசலிச எதிர்ப்பின் - இதில் லியோன் ட்ரொட்ஸ்கி மற்றும் நான்காம் அகிலம் நடத்திய போராட்டம் மிக முன்னேறிய வெளிப்பாடாக இருந்தது - ஒட்டுமொத்த வரலாறும் திரிக்கப்படுவதும், பொய்மைப்படுத்தப்படுவதும், இன்னும் ஒடுக்கப்படுவதும் கூட அவர்களுக்கு அவசியமாக இருந்தது.

முதலாளித்துவ வெற்றிக் களியாட்டக்காரர்களில் மிகவும் மனப்பிரமை கொண்டவர்கள் வரலாற்றின் முடிவைப் பிரகடனம் செய்தனர். 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதானது, பொருளாதார வாழ்வில் முதலாளித்துவ ஒழுங்கமைப்பை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ ஜனநாயகம் தான் மனிதகுல முன்னேற்றத்தில் வெல்லமுடியாத மற்றும் இறுதிக் கட்டம் என்பதை நிரூபித்ததாக அவர்கள் கூறினர். கிட்டப்பார்வை கொண்ட இந்த குறிசொல்வோரை வரலாறு எத்தனை ஒரு கேலிப்பொருளாக்கி விட்டிருக்கிறது! கடந்த 20 ஆண்டுகள் முதலாளித்துவ சமூகத்தின் இடைவிடாத மற்றும் வேகமான நிலைமுறிவைக் கண்ணுற்றிருக்கிறது. சமூகம் செயலிழந்து நிற்கின்ற அறிகுறிகள் எங்கெங்கும் காணக் கிடைக்கின்றன. 1990களின் ஆரம்பம் தொடங்கி உலக முதலாளித்துவப் பொருளாதாரம் ஒரு நெருக்கடியிலிருந்து இன்னொரு நெருக்கடிக்காய் மாறி திகைத்து நின்றிருக்கிறது. உலக மக்களின் ஒரு மிகச்சிறுபான்மை எண்ணிக்கையிலானோரை செல்வத்தில் கொழிக்கச் செய்கின்ற ஊக எழுச்சிகளைத் தொடர்ந்து, நூறுமில்லியன்கணக்கான மக்களின் வாழ்க்கைகளை தகர்த்தெறிகின்ற பெருநாசமான நியதிப் பொறிவுகள் பின்தொடர்ந்து வருவதென்பது மீண்டும் மீண்டும் நடந்து வந்திருக்கிறது.

2008 இன் நிதிப் பொறிவானது - இதில் வோல் ஸ்ட்ரீட் உயரடுக்கின் குற்றவியல் நடத்தைகள் ஒரு முக்கிய பாத்திரம் ஆற்றின - உலகை முடிவற்ற ஒரு மந்தநிலையின் சதுப்பில் மூழ்கச்செய்துள்ளது. ஒட்டுமொத்த நகரங்களும் இன்னும் நாடுகளும் கூட திவாலடைந்து விட்டிருக்கின்றன. வேலைவாய்ப்பின்மை விகிதம் 1930களின் பெருமந்தநிலைகாலத்திற்குப் பின்னர் கண்டிராத மட்டங்களில் தொடர்கின்ற நிலையில், இளைஞர்களின் ஒரு தலைமுறையே தொழிலாளர் சந்தையில் இருந்து வெளியே தள்ளப்பட்டு வாய்ப்புகளும் நம்பிக்கையும் அற்ற ஒரு எதிர்காலத்திற்கு முகம்கொடுத்து நிற்கிறது. நடுத்தர வயது மற்றும் மூத்த வயது தொழிலாளர்களை பொறுத்தவரை, அவர்கள் பல தசாப்த காலப் போராட்டங்களின் மூலமாக வென்றிருந்த தேட்டங்களும் பெற்றிருந்த சலுகைகளும் மறுக்கப்பட்டிருக்கின்றன.  சுதந்திர வாணிபத்தின் ஊழலடைந்த கோட்டையான அமெரிக்காவில் ஓய்வூதியங்கள் தகர்த்தெறியப்படுகின்றன. எழுபது எண்பது வயதுகளில் இருக்கின்ற வயது மூத்த தொழிலாளர்கள் தங்களது கடந்த கால உழைப்பின் பலன்களை அனுபவிப்பதற்கு பதிலாக தங்களது தேய்ந்த உடல்களைக் கொண்டு மீண்டும் உழைக்கின்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அதற்கு அவர்களுக்கு கிடைப்பதும் குறைந்தபட்சக் கூலியே. இதனிடையே, உழைக்கும் மக்களுக்கு கண்ணியமான மருத்துவப் பராமரிப்புக்கு இருக்கின்ற அணுகலையும், முற்றிலுமாக அகற்ற முடியாத பட்சத்தில், கணிசமாகக் குறைத்து விடவேனும் அரசாங்கமும் முதலாளிகளும் சளைக்காமல் வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள்.

சமூகத் துயரங்கள் பெருகிச் செல்வதற்கு இடையில், மலைக்க வைக்கும் செல்வம் உலக மக்கள்தொகையின் மிகச்சிறு எண்ணிக்கையிலானோரின் கரங்களில் குவிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. உலகின் மிக வசதியான 85 பேரிடம் இருக்கும் செல்வத்தின் அளவு, உலக மக்கள்தொகையில் வறுமைப்பட்ட பாதி எண்ணிக்கையிலானோரின், அதாவது 3.5 பில்லியன் மனிதர்களின், மொத்த செல்வத்தை விடவும் அதிகம் என வறுமை ஒழிப்பு அமைப்புகளின் சர்வதேசக் கூட்டமைப்பான Oxfam வெளியிட்ட ஒரு ஆய்வு தெரிவித்தது. இதன் அர்த்தம் என்னவென்றால், இந்த வசதிபடைத்த 85 தனிநபர்கள் சராசரியாக சுமார் 41,176,000 மக்களது செல்வத்தைக் கொண்டிருக்கின்றனர். நவீன முதலாளித்துவத்தின் பகுத்தறிவற்ற தன்மையையும் வக்கிரத்தையும் எடுத்துக் காட்ட இதற்கு மேலும் வர்ணனை எதுவும் அவசியமா என்ன?

இத்தகைய வெறுப்பூட்டுகின்ற மட்டங்களிலான செல்வம் விரல்விட்டு எண்ணக்கூடிய பில்லியனர்களின் கரங்களில் குவிக்கின்ற அதிகாரத்தினால் இன்றைய சமூக கட்டமைப்பு மற்றும் அரசியல் ஒழுங்கின் ஒவ்வொரு அம்சமும் ஊழலடைந்து போய் கிடக்கிறது. தங்களது வரம்பற்ற செல்வம் மற்றும் சிறப்புச் சலுகைகளது உலகில் பத்திரமாக உட்கார்ந்து கொண்டு, தமக்கென்று சொந்த-பாணி கொண்ட இந்த பிரபஞ்ச எஜமானர்கள் தமது சொந்த விருப்பங்களைத் தாண்டிய ஒரு சமூக யதார்த்தத்தின் எந்த உணர்வில் இருந்தும் தம்மைத் தாமே விடுவித்துக் கொண்டவர்களாக ஆகியிருக்கின்றனர். ஆழம்காண முடியாத செல்வத்தைக் கொண்டவர்களிடையே நிலவுகின்ற மனோநிலை குறித்து கார்ல் மார்க்ஸ் வெகுகாலத்திற்கு முன்பே துல்லியமாக வர்ணித்திருந்தார். அவர்களின் ஆழ்மன சிந்தனைகளை உங்களால் கேட்க முடிந்தால் இதுதான் உங்களுக்கு கேட்கும் என்று எழுதினார் மார்க்ஸ்:

நான் மோசமானவன், நேர்மையற்றவன், மனச்சாட்சியற்றவன், முட்டாள்; ஆனால் பணத்திற்கு மரியாதை கிடைக்கிறது அதனால் அதனை வைத்திருப்பவனுக்கும் மரியாதை கிடைக்கிறது. பணம் தான் உச்ச நன்மை என்பதால் அதனை வைத்திருப்பவனும் நல்லவன். தவிரவும், நேர்மையற்றவனாக ஆகும் இக்கட்டில் இருந்து பணம் என்னைக் காப்பாற்றி விடுவதால், நான் நேர்மையானவன் என்றே முன்னனுமானிக்கப்படுகிறேன். நான் மூளையில்லாதவன் தான், ஆனால் பணம் தான் எல்லா விடயங்களுக்கும் மூளையாகச் செயல்படுவதால், அதனை வைத்திருப்பவன் எப்படி மூளையற்றவனாக இருக்க முடியும்?... பணத்தின் தயவால் மனித மனம் விரும்புகின்ற அத்தனையும் எனக்குக் கிடைக்க முடியும் என்பதால், என்னிடம் அத்தனை மனிதத் திறன்களும் இருக்கிறது தானே? ஆகவே என்னிடம் இருக்கும் பணம், எனது திறமையின்மைகளை அவற்றின் நேரெதிர்களாக மாற்றி விடுவதில்லையா?

சமகால முதலாளித்துவ சமூகத்தை ஆட்சி செய்கின்ற அரசியல் கோட்பாடு நிதிப்பிரபுத்துவத்தினுடையதே தவிர, ஜனநாயகத்தினுடையது அல்ல. அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் இருக்கின்ற நிதிப் பிரபுக்கள் ரஷ்யாவிலும் சீனாவிலும் இருக்கும் அவர்களை விட குறைந்தவர்களிடம் இருந்து கற்றுக் கொள்வதற்கு தேவையெதுவுமில்லை. சமூக சமத்துவமின்மையின் அசுர வளர்ச்சியால் - தொழிலாள வர்க்கத்தின் மீதான தீவிர சுரண்டலுடன் இது பிணைந்ததாகும் - உருவாக்கப்பட்ட சமூக அழுத்தங்களை பாரம்பரியமான முதலாளித்துவ ஜனநாயகக் கட்டமைப்புகளுக்குள்ளாக சமாளிக்க முடியாது. அமெரிக்காவிற்குள்ளாக ஜனநாயகத்தை பாதுகாப்புக்கு அழைப்பது என்பது முன்னெப்போதையும் விட யதார்த்தத்துடன் மோதுவதாக இருக்கிறது. 2008 செப்டம்பர் பொருளாதார உருக்குலைவுக்குப் பொறுப்பான சமூகப்பிறழ்வான நடத்தைக்காக ஒரேயொரு வங்கியாளரும் கூட சிறைச்சாலைக்கு செல்லவில்லை. ஆனால் நிதி ஊக வணிகர்களை செழுமையாக்கி அவர்களது குற்றவியல்தனத்திற்கு பரிசளித்திருக்கக் கூடிய ஒரு பொருளாதார அமைப்புமுறையின் நேரடிப் பின்விளைவாக, நிர்க்கதியான நிலைமைகளை சந்தித்திருக்கும் அமெரிக்க சமூகத்தின் மிக வறிய மிக நொடிந்த பிரிவுகளுக்கு ஆழமாய் ஊழலடைந்திருக்கும் ஒரு சட்ட அமைப்புமுறை எந்தக் கருணையும் காட்டுவதில்லை.

சுதந்திரமானவர்களின் மண்ணில் மாநில மற்றும் கூட்டரசாங்கத்தின் சிறைச்சாலைகளை உள்ளடக்கிய அமெரிக்க குலாக்குகளின் (தடுப்பு முகாங்கள்) ஒரு பரந்து விரிந்த வலைப்பின்னலுக்குள் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சிறைப்பட்டுக் கிடக்கிறார்கள். அமெரிக்க முதலாளித்துவத்தில் பொதிந்திருக்கும் மனிதாபிமானமற்ற தன்மை அத்தனையும் தனது குவிந்த வெளிப்பாட்டை மரண தண்டனை எனும் காட்டுமிராண்டித்தன நடைமுறையில் காண்கிறது. சென்ற வாரத்தில், ஓக்லஹாமாவில் ஒரு கைதி படுபயங்கர அரசப் படுகொலைக்கு ஆட்படுத்தப்பட்டபோது ஒட்டுமொத்த உலகமும் அதைக் காணச்சகியாத தனது வெறுப்பை மறைக்க முடியாமல் திணறியது. விஷம் கொடுக்கப்பட்டு அந்த மனிதர் படுபயங்கர மரணத்தைச் சந்திக்கச் செய்யப்பட்ட சம்பவம் மத்தியகாலச் சித்திரவதையின் சித்திரங்களை நினைவில் கொண்டுவந்தது.

2001 முதலாக பயங்கரவாதத்தின் மீதான போர் என்பது அமெரிக்காவிற்குள்ளாக ஜனநாயக உரிமைகளை நீக்கி வெற்றுக்கூடாக்குவதற்கான ஒரு சாக்காக சேவை செய்து வந்திருக்கிறது. அரசியல்சட்ட பாதுகாப்புகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அகற்றப்பட்டு விட்டிருக்கின்றன. ஜனாதிபதியின் உத்தரவின் பேரில், உரிய சட்ட நடைமுறைகள் இன்றி அமெரிக்க குடிமக்களின் உயிரும் சுதந்திரமும் பறிக்கப்பட்டிருக்கின்றன. கடந்த பதினைந்து ஆண்டுகளில், அபு கிரைப், குவாண்டானோமோ, ஆளில்லா விமானத் தாக்குதல், rendition (விசாரணைக்காக நாடுகடத்துதல்), மற்றும் water-boarding (நீரில் மூழ்கடித்து சித்திரவதை செய்தல்) போன்ற வார்த்தைகளை எல்லையற்ற கொடுஞ்செயலுக்கான இணைச்சொற்களாக உலகின் வார்த்தைக் களஞ்சியத்திற்கு அறிமுகப்படுத்துகின்ற அளவுக்கு சட்டத்திற்குக் கட்டுப்படாமை மற்றும் வன்முறை ஆகிய ஏகாதிபத்திய இயல்புகளை மிகத் தாட்சண்யமற்று பின்பற்றுகின்ற நாடாக அமெரிக்கா ஆகியிருக்கிறது. முதுகெலும்பற்ற ஊடகங்கள் அமெரிக்க அரசாங்கத்தின் குற்றங்களுக்கு உதவி செய்கின்றன, உடந்தையாக இருக்கின்றன. ஊடக சுதந்திரம் என்பது - நியூயோர்க் டைம்ஸ் முன்னாள் ஆசிரியரான பில் கெல்லரின் வார்த்தைகளை மேற்கோள் காட்டுவதானால் - தகவல்களை வெளியிடாதிருப்பதற்கான ஊடகங்களின் சுதந்திரம் என இவை வரையறுக்கின்றன. அரசின் குற்றங்களை அம்பலப்படுத்தி பொதுமக்களது ஜனநாயக உரிமைகளுக்கான அச்சுறுத்தல் குறித்து எச்சரிக்க முனைவோர், கொடுமையான துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படுகின்றனர். ஜூலியான் அசாஞ்ச் இரண்டு ஆண்டுகளுக்கும் அதிகமான காலத்திற்கு இலண்டனில் இருக்கும் ஈக்வடார் தூதரகத்தில் அடைபட்டிருக்கும் நிலையில் இருக்கிறார். எட்வார்ட் ஸ்னோவ்டென் ரஷ்யாவில் தஞ்சம் கோரும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். செல்சியா பிராட்லி மேனிங் பல தசாப்தங்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறார்.

உலகின் பாரிய மக்களது நலன்களை உதாசீனம் செய்து பணவெறி கொண்ட ஒருசிலர் செல்வத்தை அவலட்சணமான வகையில் மலைபோல் குவித்து வைத்திருப்பதென்பது, உலகின் உற்பத்தி சக்திகள் தனியார் முதலாளித்துவ உடைமைகளாக இருப்பதை அடிப்படையாகக் கொண்ட மற்றும் அதனைப் புனிதப்படுத்துகின்ற ஒரு பொருளாதார அமைப்புமுறையின் பகுத்தறிவுக்குப் பொருந்தாத தன்மையை அம்பலப்படுத்துகிறது. ஆனால் முதலாளித்துவ சந்தையின் பகுத்தறிவுக்குப் பொருந்தாத மக்கிப்போன நிலையுடன் சேர்ந்து, உலகெங்கும் இராணுவ மோதலும் அதிகரிக்கின்ற ஒரு போக்கானது - மீண்டும் இதில் அமெரிக்கா தான் மேலாதிக்கப் பாத்திரம் வகிக்கிறது - தேசிய-அரசு அமைப்புமுறையின் வரலாற்றுத் திவால்நிலைக்கு மேலும் மேலும் அதிகமான ஆதாரங்களை வழங்குகிறது.

இது, ஆண்டுதினங்களின் ஒரு ஆண்டாக இருக்கிறது. 2014 இல் முதலாம் உலகப் போர் வெடித்த நூறாவது ஆண்டுதினத்தையும் (1914 ஜூலை - ஆகஸ்ட்) இரண்டாம் உலகப் போர் வெடித்த எழுபத்தைந்தாவது ஆண்டுதினத்தையும் (1939 செப்டம்பர்) மனிதகுலம் அனுசரிக்கிறது. இந்த இரண்டு போர்களும் சுமார் 80 மில்லியன் மக்கள் வன்முறையாக கொல்லப்படக் காரணமாயின. வரலாற்றின் முடிவு குறித்த தத்துவாசிரியர்கள் சொல்வதன் படி, இத்தகைய பேரழிவுகள் எல்லாம் கடந்தகாலத்திற்கு உரியவை ஒருபோதும் மீண்டும் நடக்கவியலாதவை. ஆனால், உக்ரேன் நெருக்கடியோ, ஒரு சில மாத இடைவெளியிலேயே, மீண்டும் ஒரு உலகப் போரின் அபாயத்தை, அதிலும் அணுஆயுதங்கள் பயன்படுத்தப்படும் சாத்தியங்களுடன் நூறு மில்லியன்கணக்கான மக்களின் உயிரிழப்புக்கு இட்டுச் செல்லக் கூடிய ஒரு உலகப் போரின் அபாயத்தை, மீண்டும் எழுப்பியுள்ளது.

அடுத்து பேசவிருக்கும் மற்ற தோழர்கள் - குறிப்பாக தோழர் கிறிஸ் மார்ஸ்டன் - இந்த நெருக்கடியின் அபிவிருத்தி குறித்து இன்னும் விரிவாக ஆய்வு செய்து காட்டுவார். அமெரிக்காவும் ஜேர்மனியும் கியேவில் ஒரு ஆட்சிக்கவிழ்ப்பை ஏற்பாடு செய்து உக்ரேனிய நெருக்கடியை திட்டமிட்டுத் தூண்டியிருந்தன என்பதை அவர் விளக்குவார். அமெரிக்க மற்றும் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் உக்ரேனை வைக்கின்ற ஒரு ஆட்சியை அதிகாரத்திற்குக் கொண்டுவருவதே அந்த ஆட்சிக்கவிழ்ப்பின் நோக்கமாய் இருந்தது. இந்த ஆட்சிக்கவிழ்ப்பு ரஷ்யாவுடன் ஒரு மோதலுக்கு இட்டுச் செல்லும் என்பது அமெரிக்காவிலும் ஜேர்மனியிலும் உட்கார்ந்து திட்டம் தீட்டியவர்களுக்கு நன்கு புரிந்தேயிருந்தது. இன்னும் சொல்லப் போனால், ஒரு மோதலைத் தவிர்க்கும் எண்ணத்திற்கெல்லாம் வெகுதூரத்தில், ஜேர்மனி அமெரிக்கா இரு நாடுகளுமே தங்களது தொலைநோக்கு பூகோள-அரசியல் நலன்களை அடைய வேண்டுமாயின் அதற்கு ரஷ்யாவுடனான ஒரு மோதல் அவசியமாக இருக்கிறது என்று நம்புகின்றன.

ஜேர்மன் ஏகாதிபத்தியத்தை பொறுத்தவரை, ஹிட்லரின் மூன்றாவது குடியரசின் ஆண்டுகளில் இழைக்கப்பட்ட சொல்லத்தகாத குற்றங்களினால் அதன் மீது சுமத்தப்பட்ட இராணுவவாதத்திற்கான தளைகளை மறுதலிப்பதற்கான ஒரு சாக்காக ரஷ்யாவுடனான மோதலை அது வரவேற்கிறது. சமீப மாதங்களில் ஜேர்மன் ஊடகங்கள் ரஷ்யாவுக்கு எதிராக மட்டுமின்றி, ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கும் போர்-எதிர்ப்பு மனோநிலைகளுக்கு எதிராகவும் செலுத்தப்படுகிற ஒரு வெறி பிடித்த பிரச்சாரப் பரப்புரையில் ஈடுபட்டிருக்கின்றன. ஜேர்மன் மக்கள் சாகசத் துணிச்சலுக்குப் பிந்தைய(அதாவது ஹிட்லருக்குப் பிந்தைய) காலத்தின் அமைதிவாத மற்றும் போர்-எதிர்ப்பு மனோநிலைகளை கைவிட வேண்டிய நேரம் வந்து விட்டதாக ஊடகங்கள் அறிவிக்கின்றன. இராணுவவாதத்திற்கு புத்துயிரூட்டும் பிரச்சாரத்துடன் சேர்ந்து, ஜேர்மன் பேராசிரியர்களின் உரத்த குரல் பிரிவொன்று, ஊடகங்களின் ஊக்குவிப்புடன் ஹிட்லரின் மரியாதையைப் புதுப்பிக்கும் வேலையில் தங்களது சக்தியை செலவிட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தப் பிரச்சாரத்தின் பின்னால் திட்டவட்டமான பொருளாதார மற்றும் பூகோள-அரசியல் நலன்கள் இருக்கின்றன. உலகப் பொருளாதாரத்தில் ஜேர்மனியின் பாத்திரமானது அதன் பரந்த பூகோள-அரசியல் நலன்களை பாதுகாத்துக் கொள்வதற்கு அவசியமான இராணுவ வலிமை அதற்குக் கிடைப்பதை அவசியமாக்குகிறது என்று ஜேர்மன் ஜனாதிபதி அறிவித்திருக்கிறார். இருபதாம் நூற்றாண்டில் போலவே ஜேர்மனி மீண்டும், கருங்கடல் பிராந்தியம், காகசஸ், மத்திய கிழக்கு, மத்திய ஆசியா மற்றும் ரஷ்யாவின் பரந்த நிலப்பரப்பு ஆகியவற்றின் மீது பேராவலுடன் கண் பதித்திருக்கிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை பொறுத்தவரை, இன்னுமொரு இராணுவ நடவடிக்கைக்கான நியாயமாக மனித உரிமைகள் என்ற தனது வழக்கமான சிடுமூஞ்சித்தனமான பல்லவியையே பயன்படுத்தி வருகிறது. ஆனால் இந்த இரட்டைவேட நடத்தை நாளுக்கு நாள் மக்களிடம் பெருகும் சந்தேகத்தை சம்பாதித்துக் கொண்டிருக்கிறது. பொய்களின் அடிப்படையில் அளவுக்கதிமான போர்கள் நடத்தப்பட்டாயிற்று. குறிப்பாக உக்ரேனிய விவரிப்புகளிலான முரண்பாடுகள் அப்பட்டமாகி இருக்கின்றன. பாசிச மற்றும் யூதவிரோத அமைப்புகள் அளித்த அதிரடித் துருப்புகளை பயன்படுத்தி கியேவில் ஆட்சிமாற்றத்திற்கு அமெரிக்கா ஏற்பாடு செய்த சமயத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட உக்ரேனிய அரசாங்கம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள எடுத்த நடவடிக்கைகளை அறமற்ற மனச்சாட்சியற்ற அத்துடன் அரசியல்ரீதியாக ஏற்கமுடியாத நடவடிக்கைகள் என்று கூறி ஒபாமா நிர்வாகம் கண்டனம் செய்தது. ஆனால் ஜனாதிபதி யானுகோவிச் தூக்கிவீசப்பட்டதன் பின்னர், கிழக்கு உக்ரேன் மக்களிடையே கியேவ் ஆட்சிக்கு எழுந்த பாரிய வெகுஜன எதிர்ப்பை தாட்சண்யமில்லாமல் நசுக்குவதற்கு கோரவும் மேற்பார்வையிடவும் சிஐஏவின் இயக்குநர் பிரெனனையும் துணை ஜனாதிபதி பிடெனையும் ஒபாமா அனுப்பினார்.

2011 இல் ஒபாமா நிர்வாகம், கிழக்கு லிபியாவில் அரசாங்கத் தாக்குதலில் இருந்து பெங்காசியின் மக்களைப் பாதுகாக்க அவசியம் என்று கூறி முமார் கடாபியின் - இவர் இறுதியில் படுகொலை செய்யப்பட்டார் - லிபிய ஆட்சிக்கு எதிரான தனது இராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்தியது. ஆனால் இப்போதோ கிழக்கு உக்ரேனில் பெருகும் கிளர்ச்சியை நசுக்குவதற்கு டாங்கிகளையும் துருப்புகளையும் அனுப்பும்படி கியேவ் ஆட்சியிடம் அது கேட்கிறது. ஊடகங்களும், எதிர்பார்க்கத்தக்கவாறே, அமெரிக்காவின் கடந்த கால மற்றும் நிகழ்கால நிலைப்பாடுக்கு இடையிலான முரண்பாட்டைக் கண்டுகொள்வதில்லை.

இந்த நெருக்கடி போரின்றி தீர்க்கப்பட்டு விட்டாலும் கூட, மற்ற நெருக்கடிகள் இதனைப் பின் தொடர்ந்து வரவிருக்கின்றன. கடந்த 20 ஆண்டுகளாக, அமெரிக்கா ஏறக்குறைய இடைவிடாது போரில் ஈடுபட்டு வந்திருக்கிறது. அமெரிக்கா கடந்த 12 மாதங்களில் ஈரான், சிரியா, மற்றும் இப்போது ரஷ்யாவுடன் மோதல்களை அதிகரிப்பதில் ஈடுபட்டு வந்திருக்கிறது. ரஷ்யாவுடன் மோதல் நடந்து கொண்டிருப்பதன் மத்தியில், ஜப்பானுக்கு விஜயம் செய்த ஒபாமா ஜப்பான் இராணுவவாதத்திற்குத் தூண்டுதலளித்து சீனாவுக்கு எதிரான அழுத்தத்தை தீவிரப்படுத்த முனைந்தார். அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் நடத்தை, பொறுப்பற்ற தன்மையின் அசாதாரண மட்டத்தை எட்டியிருக்கிறது. அமெரிக்கா தூண்டுகின்ற ஏதோவொரு மோதல், கைமீறி அமெரிக்காவுக்கும் அத்துடன் ஒட்டுமொத்த பூமிப் பந்திற்கும் பேரழிவுகரமான பின்விளைவுகளை கொண்டு முடியலாம்.

ஆனால் அமெரிக்காவின் பொறுப்பற்ற துணிச்சல் என்பது இறுதி ஆய்வில், அமெரிக்க முதலாளித்துவத்தின் அதீத நெருக்கடியின் வெளிப்பாடே ஆகும். அமெரிக்க முதலாளித்துவத்தின் உலகளாவிய பொருளாதார நிலையிலான நெடிய சரிவை சரிக்கட்டுவதற்கு வாஷிங்டனில் இருக்கும் ஏகாதிபத்திய மூலோபாயவாதிகளுக்கு போர் பொறிமுறையின் ஊடாக அல்லாமல் வேறெந்த வழியும் புலப்படவில்லை. மிகச் சமீபத்திய அறிக்கைகளின் படி 2014 ஆம் ஆண்டின் இறுதிக்குள்ளாக உலகின் மிகப் பெரும் பொருளாதாரமாக சீனா அமெரிக்காவை விஞ்சிச் சென்று விடும் வாய்ப்பைக் கொண்டிருக்கிறது என்ற உண்மையானது அதிகாரத் தராசை தன்பக்கமாய் திருப்புவதற்கு இராணுவ வலிமையைப் பயன்படுத்துவதற்கான அமெரிக்காவின் தீவிரத்தை அதிகப்படுத்தும். அதேபோல அமெரிக்காவிற்குள் சமூகப் பதட்டங்கள் பெருகிச் செல்வதும் அமெரிக்க ஆளும் வர்க்கத்தை போரை நோக்கிச் செலுத்துகின்ற காரணிகளில் முக்கியத்துவம் குன்றாததாக இருக்கிறது. பெருகும் பொருளாதாரத் தேக்கநிலை, வீழ்ச்சி காணுகின்ற வாழ்க்கைத் தரங்கள், சமூக சேவைகள் தேய்வடைந்து செல்லும் நிலை, அத்துடன் அளவிட முடியாத செல்வம், வசதிபடைத்த ஒரு சதவீதத்தினரிடம் குவிந்திருப்பது இவற்றின் மீதான கோபம் பெருகப் பெருக, வெகுஜன கோபம் முதலாளித்துவத்திற்கு எதிரான சமூகப் போராட்டங்களாய் உருப்பெறுவதைத் தடுத்து திசைதிருப்பி விடுவதற்கான ஒரு வழிவகையாக, ஆளும் உயரடுக்கு போரைக் காண்கிறது.

மனிதகுலம் மிகப் பிரம்மாண்டமான அபாயங்களுக்கு முகம் கொடுத்து நிற்கிறது. ஆனால், நவீன விஞ்ஞான சோசலிசத்தின் மாபெரும் ஸ்தாபகர்களான மார்க்ஸும் ஏங்கல்ஸும் வெகுகாலத்திற்கு முன்பே விளக்கியது போன்று, தீர்வே இல்லாத எந்தக் கடமையையும் வரலாறு முன்வைப்பது கிடையாது. உலக சோசலிசப் புரட்சியென்னும் கருவியைக் கொண்டே நமது காலத்தின் மிகப்பெரும் பிரச்சினைகளைத் தீர்க்க இயலும், தீர்த்தாக வேண்டும். சுரண்டப்பட்டு ஒடுக்கப்பட்ட நிலையில், தொழிலாள வர்க்கத்தின் நிலை பெரும் சிரமமான நிலையில் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஆளும் வர்க்கத்தின் நிலையோ, ஒரு வரலாற்றுச் சூழலில் பார்த்தால், நம்பிக்கையற்றதாக இருக்கிறது. முதலாளித்துவம் கொண்டுவந்து சேர்த்திருக்கும் இக்கட்டில் இருந்து வெளியேறுவதற்கான முன்நோக்கிய வழி எதனையும் மக்களுக்கு வழங்குவதற்கு இலாயக்கற்றதாக ஆளும் வர்க்கம் இருக்கிறது. பகுத்தறிவற்ற வன்முறையே அதன் வேலைத்திட்டம். மூளையற்ற பேராசை, மனித வாழ்க்கைக்கு காட்டும் அலட்சியம், மற்றும் இறுதியாக, முற்றுமுதலான விரக்தி ஆகியவற்றின் ஒரு வகையாக அதன் முன்னோக்கு இருக்கிறது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் உறுதிப்படுத்தப் பெற்றிருக்கும் சோசலிச சர்வதேசியவாத முன்னோக்கு உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் முரண்பாடுகளை விஞ்ஞானரீதியாக மதிப்பீடு செய்வதை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அமெரிக்க முதலாளித்துவத்தின் நெருக்கடியானது வெறும் தேசிய முரண்பாடுகளினது அல்லாமல், உலகளாவிய முரண்பாடுகளது செறிந்த வெளிப்பாடாகும். முதலாளித்துவத்தின் நிலைமுறிவு சர்வதேச அளவிலானது, அமைப்புமுறைரீதியானது. இந்தக் காரணத்தினால் தான், உலக சோசலிசப் புரட்சியின் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒருங்கிணைந்த போராட்டத்தின் மூலமாக மட்டுமே இந்த நெருக்கடிக்கான தீர்வு எட்டப்பட முடியும்.

வெவ்வேறான நாடுகளின் தொழிலாளர்கள், தேசிய நிலைமைகளை ஆரம்பப் புள்ளிகளாக கொண்டு முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்களின் அடிப்படையில், சோசலிசத்தின் வெற்றியை எட்டுவதை விடுங்கள், முதலாளித்துவத்தின் தாக்குதல்களை தடுத்து விடலாம் என்று நம்புவது கூட அரசியல்ரீதியாக ஒரு மரணகரமான தவறாக ஆகும். சந்தர்ப்பவாத அமைப்புகள் அத்தனையினது குணநலனாக அமைந்திருக்கும் இந்த அணுகுமுறையானது தவிர்க்கவியலாமல் சரணாகதிக்கும் தோல்விக்குமே இட்டுச் செல்கிறது. அனைத்து நாடுகளிலும் உள்ள தொழிலாள வர்க்கப் போராட்டங்களை வழிநடத்துவதற்கு ஒரு சர்வதேச மூலோபாயம் மற்றும் வேலைத்திட்டம் தீர்மானகரமான முக்கியத்துவம் பெற்றதாக இருப்பதை இருபதாம் நூற்றாண்டின் வர்க்கப் போராட்டத்தின் கசப்பான படிப்பினைகள் மீண்டும் மீண்டும் நமக்கு விளங்கப்படுத்தியிருக்கின்றன.

வரலாறு முடிந்து விடவில்லை. சொல்லப் போனால், இருபதாம் நூற்றாண்டின் தீர்க்கப்படாத வரலாற்றுப் பிரச்சினைகளுக்கு, இந்த புதிய நூற்றாண்டில் தீர்வு காண வேண்டிய கடமைக்கு தொழிலாள வர்க்கம் முகம்கொடுக்கிறது. அந்தப் பிரச்சினைகள் அத்தனையிலும் மிகத் தலையாயது லியோன் ட்ரொட்ஸ்கி நான்காம் அகிலத்தின் ஸ்தாபக வேலைத்திட்டத்தின் முதல் வாக்கியத்திலேயே கவனத்தை ஈர்த்த ஒரு பிரச்சினை தான். 1938 இல் அவர் எழுதினார்: ஒட்டுமொத்தமாக உலக அரசியல் சூழ்நிலை என்பது பிரதானமாக பாட்டாளி வர்க்கத் தலைமையின் ஒரு வரலாற்று நெருக்கடியால் குணாம்சப்படுத்தப்படுகிறது.

நான்காம் அகிலம் மற்றும் அதன் தலைமையான அனைத்துலக் குழு இவற்றின் ஒட்டுமொத்த வரலாறுமே தலைமை நெருக்கடியைத் தீர்ப்பதற்கு நடத்தப்பட்ட, பல தசாப்த காலங்கள் நீண்ட, ஒரு கடினமான போராட்டத்தின் பதிவுகளே ஆகும். இந்த மூலோபாயக் கடமையில் தான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளது மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் அத்தனை முயற்சிகளும் குவிக்கப்படுகின்றன. சர்வதேச சோசலிசத்துக்கான போராட்டத்தை முன்னெடுப்பதாக முழுத்தகுதியுடன் கூறத்தக்க ஒரு இயக்கம், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கு வெளியே, வேறெதுவும் இன்று கிடையாது. மிக முன்னேறிய தத்துவார்த்த மற்றும் அரசியல் சிந்தனையின் செறிந்த பாரம்பரியத்தின் மீதே எங்களது இயக்கம் தனது வேலைக்கான அடித்தளத்தை அமைத்துக் கொள்கிறது.

எங்களுடன் இணைந்து சர்வதேசிய சோசலிசத்துக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல உங்களை அழைக்கிறோம். மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கான போராட்டத்தில் அவசியமான அரசியல், புத்திஜீவித மற்றும் அறரீதியான உறுதிப்பாட்டை மேற்கொள்ளுங்கள். இருபதாம் நூற்றாண்டில் உலக சோசலிசப் புரட்சியின் மாபெரும் மூலோபாயவாதியாய் திகழ்ந்த லியோன் ட்ரொட்ஸ்கியின் எழுத்துகளை படியுங்கள்! உலக சோசலிச வலைத் தளத்தில் நாள்தோறும் வெளியாகின்ற பதிவுகளை கவனமாகப் படித்து வாருங்கள்! நீங்கள் வாழும் நாட்டில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சியில் இணைவதற்கு இந்த உரையைக் கேட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். நீங்கள் வாழும் நாட்டில் இக்கட்சிகள் இன்னும் இல்லை என்றால், அனைத்துலகக் குழுவைத் தொடர்பு கொண்டு எங்களது உலக இயக்கத்தின் ஒரு புதிய பிரிவினை அங்கு ஸ்தாபிப்பதற்கான போராட்டத்திற்கு முன்முயற்சியளிக்க உங்களை வலியுறுத்துகிறோம்.

தொழிலாள வர்க்கத்தில் சோசலிச சர்வதேசியவாதத்திற்கு புத்துயிரூட்டுவதற்கான போராட்டத்தில் இந்தப் பேரணி ஒரு மைல்கல் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்தப் பேரணியின் வெற்றி என்பது வெறுமனே இன்று நாம் என்ன பேசுகிறோம் என்பதைப் பொறுத்ததல்ல, மாறாக உலகெங்கிலுமான தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களுக்குள் நான்காம் அகிலத்தின் மார்க்சிச வேலைத்திட்டத்தையும் கோட்பாடுகளையும் கொண்டுசெல்வதற்கு வரவிருக்கும் நாட்களில், வாரங்களில் மற்றும் மாதங்களில் நாம் கூட்டாக என்ன செய்யவிருக்கிறோம் என்பதிலேயே அது தங்கியிருக்கிறது.

டேவிட் நோர்த்தின் மே தின உரையைக் கேட்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

மேலதிக வாசிப்புகளுக்கு:

ஏகாதிபத்திய யுத்தத்தை எதிர்ப்போம்! மே தினத்தின் புரட்சிகர பாரம்பரியங்களை மீட்டெடுப்போம்!

2010 மே தினம்

முதலாளித்துவ அமைப்புமுறையின் வரலாற்று நெருக்கடியின் பின்னணியில் 2009 மே தினம் இடம்பெறுகிறது

மே தினம் 2005: இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து 60 ஆண்டுகள்