சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐக்கிய அமெரிக்கா

A reply to discussion on the Venezuelan elections

வெனிசூலா தேர்தல் தொடர்பான விவாதத்திற்கு ஒரு பதில்

By Bill Van Auken
14 December 2015

Use this version to printSend feedback

உலக சோசலிச வலைத் தளத்தில் டிசம்பர் 11 அன்று வெளியான வெனிசூலா தேர்தல்களும் இலத்தீன் அமெரிக்காவின் இடது நோக்கிய திருப்பத்தின் முட்டுச் சந்தும் என்ற முன்னோக்கிற்கு ஏராளமான பின்னூட்டங்கள் கிட்டியிருக்கின்றன. இந்தப் பின்னூட்டங்களில் பலவும், கடந்த ஒன்றரை தசாப்த காலத்தில் பல நாடுகளிலும் அதிகாரத்திற்கு வந்திருக்கக் கூடிய இடது அரசாங்கங்களை WSWS ஒரு மார்க்சிச பகுப்பாய்வுக்கு உட்படுத்துவது குறித்த கடுங்கோபத்தை தவிர்க்கவியலாமல் வெளிப்படுத்தின. இந்த அரசாங்கங்களின் இடது மற்றும் போலி-சோசலிச வாய்வீச்சுக்கள் எல்லாம் இருந்தபோதிலும் வர்க்க அடிப்படையில் அவை முதலாளித்துவ அரசாங்கங்களாகவே வரையறை செய்யப்பட வேண்டும் என்று அந்த முன்னோக்கு வலியுறுத்தியது.

ஒன்றன்பின் ஒன்றாய் இந்த அரசாங்கங்களைச் சூழுகின்ற நெருக்கடிகள் சர்வதேச அளவிலும் மற்றும் இந்த ஒவ்வொரு நாடுகளுக்குள்ளும் முதலாளித்துவத்தின் ஆழமடைகின்ற நெருக்கடியின் தவிர்க்கமுடியாத விளைபொருளே என்பதையும், வெனிசூலா, ஆர்ஜெண்டினா, பிரேசில் மற்றும் இந்த அரைக்கோளத்தின் பிறவெங்கிலும் இந்த அரசாங்கங்களை முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களுக்கு பயனுள்ளதாயும் ஆகவே சாத்தியமாயும் ஆக்கியிருந்த நிலைமைகளை இது தலைகீழாக்கி விட்டிருக்கிறது என்பதையும் அந்த முன்னோக்கு சுட்டிக்காட்டச் சென்றது.

புறநிலை நெருக்கடியின் இந்த ஆழமடைவின் அறிகுறியாகவும் அத்துடன் உழைக்கும் வெகுஜனங்கள் இந்த அரசாங்கங்களுக்கு எதிராய் திரும்புவது மேலும் மேலும் அதிகரித்துச் செல்வதின் அறிகுறியாகவுமே ஜனாதிபதி நிக்கோலா மாதுரோவின் PUSVக்கு (வெனிசூலா ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி) சென்ற வாரத்தில் கிட்டிய படுதோல்வியை WSWS அணுகியது.

வெனிசூலாவில் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்களும் ஏழைகளும் வலது-சாரி எதிர்க்கட்சியான MUD (Roundtable of Democratic Unity- ஜனநாயக ஐக்கியத்தின் வட்டமேசை) க்கு வாக்களித்தனர் என்றால், அது இந்த பிற்போக்குத்தனமான மற்றும் அரை-பாசிச அரசியல்வாதிகளின் கூட்டம் வெனிசூலாவின் அதிகரித்துச் செல்லும் சகிக்கவியலா நிலைமைகளை மேம்பாட்டைக் கொண்டுவரும் என்ற உறுதிப்பாட்டினால் அல்ல, மாறாக இந்த நிலைமைகளுக்குக் காரணமாய் அவர்கள் காணுகின்ற அரசாங்கத்திற்கு எதிரான ஒரு தண்டனை வாக்காக (voto castigo) ஆகும்.

மாதுரோ மற்றும் மறைந்த ஹியூகோ சாவேஸ் ஆகியோரின் கட்சியான PSUV இன் தோல்வியானது, ஆர்ஜெண்டினாவில் இடதாக காட்டிக்கொண்டிருந்த பெரோனிச இயக்கத்தின் ஒரு கன்னையான கிர்ஷ்னெரிஸ்ட்டாஸ் (kirchneristas) இன் ஒரு டஜன் வருட கால ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து வலது-சாரி வேட்பாளர் மௌரிசியோ மாக்ரி (Mauricio Macri) வெற்றி பெற்றிருந்தமையினை அடியொற்றியும், பிரேசிலில் தொழிலாளர்கள் கட்சியின் (PT) ஆழமான நெருக்கடிக்கு - ஜனாதிபதி டில்மா ரூஸ்செஃப் (Dilma Rousseff) மீது கண்டனத் தீர்மானம் கொண்டுவரும் பிரேசில் வலதின் முனைப்பிற்கு மக்கள்தொகையின் பெரும்பான்மையினர் ஆதரவளிப்பதாக கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன - மத்தியிலும் நிகழ்ந்திருந்தது என்பதை நாங்கள் சுட்டிக்காட்டினோம்.

இலத்தீன் அமெரிக்காவிலான இந்த புதிய வலது நோக்கிய திருப்பமாகச் சொல்லப்படுகின்ற ஒன்று, முதலாளித்துவத்தின் ஆழமடைகின்ற நெருக்கடியால் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் பரந்த எண்ணிக்கையினர் இடது நோக்கித் தள்ளப்பட்டு போராட்டத்திற்குள் தள்ளப்படுகின்ற நிலையில், முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தாலும் மற்றும் அதன் அத்தனை பிரதிநிதிகளாலும் - வெனிசூலாவில் MUD தொடங்கி PSUV வரையிலும், பிரேசிலில் PSBD தொடங்கி PT வரையிலும் -  எடுக்கப்படுகின்ற ஒரு வலதுநோக்கிய திருப்பத்தையே குறிப்பதாகும் என்பதே எங்கள் முன்னோக்கு ஆகும்.

எரிந்து கொண்டிருக்கும் பிரச்சினை புரட்சிகரத் தலைமை பற்றியதாகும், அதாவது, இந்த முதலாளித்துவ இயக்கங்கள் அத்தனையில் இருந்தும் தொழிலாள வர்க்கம் அரசியல் சுயாதீனம் பெறுவதற்கான போராட்டத்தின் அடிப்படையிலான புதிய கட்சிகளை, முதலாளித்துவத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கு தேவையான ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்ட ஆயுதத்துடன், கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியம் பற்றியதாகும்.

இந்த முன்னோக்கு குறித்த தங்களது கருத்துபேதங்களை எழுதியவர்கள் வெனிசூலா அரசாங்கம் மற்றும் அதன் இப்போதைய நெருக்கடியின் வேர்கள் குறித்த மதிப்பீட்டில் பிரச்சினை கண்டனர். நெருக்கடிக்கான பொறுப்பை பங்குபிரிப்பது குறித்த ஒரு பிரச்சினையாக இதனை சிலர் சித்தரித்தனர். வெனிசூலாவிலான நெருக்கடி வெனிசூலா அரசாங்கம் மற்றும் அதன் சாவேஸிச ஆளும் கட்சியின் தவறினால் விளைந்ததல்ல, மாறாக அமெரிக்க ஏகாதிபத்தியமும் வெனிசூலாவின் தன்னலக்குழுக்களுமே அதற்குக் காரணம் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தினாலும் நாட்டின் ஆளும் வர்க்கத்திற்குள் இருக்கின்ற அதன் கூட்டாளிகளாலும் வெனிசூலாவின் மீது வைக்கப்பட்ட அழுத்தங்களை நாங்கள் போதுமான அளவு உணர்ந்திருக்கவில்லை என்பதாக சில பின்னூட்டங்கள் கூறுகின்றன.

இது உண்மைக்கு வெகுதூரமாக இருக்கிறது. ஏகாதிபத்திய சூழ்ச்சிகளாலும் மூர்க்கத்தனத்தாலும் முன்வைக்கப்படுகின்ற கூர்மையான அபாயங்கள் குறித்து வெனிசூலாவின் தொழிலாள வர்க்கத்தை உலக சோசலிச வலைத் தளம் தொடர்ச்சியாக எச்சரித்து வந்திருக்கிறது, ஆனால் அதேசமயத்தில் சோசலிசத்திற்கான ஏதோ புதிய பாதையாக சாவிஸ்மோ (chavismo) மற்றும் பொலிவாரியன் சோசலிசம் Bolivarian Socialism ஐக் காட்டி வந்திருக்கிற போலி-இடது கூறுகள் இந்த அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்து நிற்கும் தொழிலாளர்களை அரசியல்ரீதியாக நிராயுதபாணியாக்கவே வேலைசெய்து வந்திருக்கின்றன என்பதையும் நாங்கள் வலியுறுத்தி வந்திருக்கிறோம்.

சுமார் 17 வருடங்களுக்கு முன்பாக சாவேஸ் பதவிக்கு வரும் முன்பாக இருந்ததை விடவும் அதிகமாய் நாட்டின் பொருளாதாரம் தனியார் மூலதனத்தின் பிடியில் சிக்கியிருக்கிறது, தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகள் கீழிறக்கப்பட்டுக் கொண்டிருக்க நிதி மூலதனம் மலை போன்ற இலாபங்களைக் குவித்துக் கொண்டிருக்கிறது, இத்தகையதொரு நிலைக்கு பூத்துக்குலுங்குவது போல் வண்ணம்தீட்டுவதன் மூலம், வெனிசூலாவின் தொழிலாள வர்க்கத்தின் மிக அபாயகரமான எதிரிகள் சிலருக்கான மறைப்பை எங்களை விமர்சிப்பவர்கள் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அரசாங்கத் தொடர்புகள் மூலமும் ஒட்டுமொத்த ஊழலின் மூலமும் தன்னை வளப்படுத்திக் கொண்டிருக்கக் கூடிய boliburguesia என்று அழைக்கப்படும் சமூக அடுக்கு ஒன்று, அத்துடன் அரசாங்கத்திற்குள் தீவிர அதிகாரம் செலுத்தக் கூடியதும் இருந்தும் பினோசே பாணியிலான ஒரு அரசியல் ஏற்பாட்டைத் திணிக்க எழுந்து வரத்தக்கதுமான இராணுவம் ஆகிய சாவிஸ்டா அரசாங்கத்தின் இரண்டு முட்டுத்தூண்களும் இதில் அடங்கும்.

ஒரு வாசகர் எழுதுகிறார்: அமெரிக்க அரசாங்கம், குடியரசுக் கட்சி, வெனிசூலாவின் தன்னல அதிகார வர்க்கம் மற்றும் வெனிசூலாவின் நடுத்தர வர்க்கம் இவர்களே பழிக்குரியவர்கள் ஆவர். உலகின் அனைத்து நாடுகளிலுமே நடுத்தர வர்க்கங்கள் வலது-சாரிகளில் இருந்து ரொம்ப தூரம் தள்ளி இருக்கின்றன என்பதை நாம் நினைவில் கொண்டிருக்க வேண்டும்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவோ அல்லது வெனிசூலாவின் தன்னலக் குழுக்களுக்கு எதிராகவோ ஒரு திறம்பட்ட போராட்டத்தை முன்நிறுத்துவதில் மாதுரோவின் அரசாங்கம் தோல்வியடைந்ததை மூடிமறைப்பதற்கே இத்தகையதொரு மதிப்பீடு சேவைசெய்கிறது. அத்துடன் நிதி ஆளும் தட்டு, மற்றும் இராணுவம் உள்ளிட்ட முதலாளித்துவ அரசின் முக்கிய ஸ்தாபகங்கள் இரண்டையுமே கைதொடாமல் விட்டுவைத்திருக்கக் கூடிய இந்த அரசாங்கமானது அதைச் செய்வதற்கு உயிர்ப்புத்திறனற்றதாக இருக்கிறது என்ற உண்மையையும் இது இருட்டடிப்பு செய்கிறது.

வெனிசூலாவின் நடுத்தர வர்க்கத்தைப் பொறுத்தவரையில், இத்தகையதொரு மதிப்பீட்டிற்கும், மார்க்சிசத்திற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்பதோடு, இது எந்தவொரு நாட்டிலும் சோசலிசப் புரட்சிக்கான வெற்றியை அத்தியாவசியமாக நடவாததாக்குகிறது. வெனிசூலாவின் நடுத்தர வர்க்கம் வலது நோக்கித் திரும்பியது என்றால், அதன் காரணம் இடதின் பக்கத்தில் இருந்து எந்தத் தீர்வுகளையும் அது கிடைக்க காணவில்லை என்பதனால் ஆகும்.

லியோன் ட்ரொட்ஸ்கி தனது பிரான்ஸ் எங்கே செல்கிறது? (1934) என்ற படைப்பில் எழுதியவாறாக:

குட்டி முதலாளித்துவ வர்க்கமானது அதன் பொருளாதாரச் சார்புநிலையாலும் அதன் சமூக பல்வித தன்மையாலும் வேறுபட்டு நிற்பதாகும். அதன் உயர் அடுக்கு நேரடியாக பெரு முதலாளித்துவத்துடன் பிணைந்து கொள்கிறது. அதன் கீழ் அடுக்கோ பாட்டாளி வர்க்கத்துடன் கலந்து நிற்கக் கூடியது, இன்னும் உதிரிப் பாட்டாளி வர்க்கத்தின் நிலைக்கும் வீழ்ச்சி காணக் கூடியது. அதன் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்பவே, குட்டி முதலாளித்துவ வர்க்கத்திற்கு என்று அதன் சொந்த கொள்கை என்று எதுவும் இருக்க முடியாது. அது எப்போதுமே முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் ஊசலாடக் கூடியது. அதன் சொந்த உயரடுக்கு அதனை வலது நோக்கித் தள்ளுகிறது; அதன் கீழ் அடுக்கோ, ஒடுக்கப்படுகின்ற மற்றும் சுரண்டப்படுகின்றதான நிலைமைகளின் கீழ், கூர்மையாக இடது நோக்கித் திரும்பக் கூடியது.

வெனிசூலாவில் நிலவுவது போன்று தீவிரமான நெருக்கடி நிலைமைகளின் கீழும், அத்துடன் ஒரு உண்மையான புரட்சிகரத் தலைமை இல்லாத நிலையிலும் குட்டி முதலாளித்துவ வர்க்கமானது, ட்ரொட்ஸ்கி எழுதுகிறார்,  பொறுமையை இழக்கத் தொடங்குகிறது. அது தன் சொந்த உயரடுக்கை நோக்கிய மேலும் மேலும் குரோதமானதொரு மனோநிலையை எடுக்கிறது. தனது அரசியல் தலைமையின் திவால்நிலை மற்றும் துரோகம் குறித்து அது மிக உறுதியான முடிவுகளுக்கு வருகிறது... குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் இந்த பிரமை விலகலை, அதன் பொறுமையின்மையை, அதன் விரக்தியைத் தான் பாசிசம் சுரண்டிக் கொள்கிறது...  பாசிஸ்டுகள் துணிச்சலைக் காண்பிக்கின்றனர், வீதிகளில் இறங்குகின்றனர், போலிசைத் தாக்குகின்றனர், நாடாளுமன்றத்தை பலவந்தமாய் விரட்டியடிக்க முனைகின்றனர். இது விரக்தியுடன் இருக்கும் குட்டி முதலாளித்துவத்தின் மனதில் கெட்டியானதொரு இடம்பிடித்து விடுகிறது.

வெனிசூலாவில் மாதுரோ அரசாங்கமானது, தனக்கு எதிராக பொருளாதாரப் போர் நடத்துவதாக முடிவில்லாமல் அது குற்றம்சாட்டுகின்ற முதலாளிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கைகளும் எடுத்திராத நிலைமைகளின் கீழ், தொழிலாளர்களுடன் சேர்ந்து நடுத்தர வர்க்கமும், தனது உண்மையான வருவாயிலான கூர்மையானதொரு வீழ்ச்சியாலும், மற்றும் கூர்மையாக தேய்ந்து செல்லும் பொதுச் சேவைகளுடன் சேர்ந்த தொடர்ச்சியான பற்றாக்குறைகளாலும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

மதுரோ அரசாங்கம், அதற்கு மாறாய், வெனிசூலாவின் வெளிநாட்டுக் கடனுக்கு சேவை செய்வதற்காய் பத்துபில்லியன்கணக்கான தொகைகளை வோல் ஸ்டீரீட்டுக்கு தொடர்ந்து செலுத்தி வருகின்ற அதேநேரத்தில், செவ்ரோன் மற்றும் பிற முதலாளித்துவ பெரும் எண்ணெய் கூட்டுநிறுவனங்கள் சுரண்டுவதற்காய் வெனிசூலாவின் எண்ணெய்வளத்தைத் திறந்து விட்டுக் கொண்டிருக்கிறது. இறக்குமதிக்கு என்ற பெயரில் முதலாளிகளுக்கு - தன்னலக்குழுக்களுக்கும்  மற்றும் boliburguesia இல் இருக்கும் தனது சொந்த ஆதரவாளர்களுக்கும் - சாதகமான பரிவர்த்தனை விகிதத்தில் அது வழங்குகின்ற டாலர்கள், பணவீக்கத்தை அதிகரித்து பற்றாக்குறைகளை ஆழப்படுத்தத்தக்க ஆபாச இலாபகரமான நாணயமதிப்பு ஊகவணிகம் மற்றும் கடத்தல் திட்டங்களுக்கே பாய்ந்து கொண்டிருக்கின்றன.

இதனிடையே, தொழிலாள வர்க்கத்தின் மீதான பொருளாதாரப் போரில் அரசாங்கமும் கைகோர்த்திருக்கிறது. பொதுத் துறைகளில் தொழிலாளர்கள் எண்ணிக்கையை அது குறைத்திருப்பதோடு தாக்குதல்களை எதிர்க்கின்ற தொழிலாளர்களை அது தொழிலாளர் குற்றவாளிகளாகவும் (labor criminals) அணுகுகிறது. போலியான இடது வாய்வீச்சைக் கொண்டு அது இத்தகைய பிற்போக்குத்தனமான கொள்கைகளை பாதுகாத்து நிற்பது அதனை இன்னும் வெறுப்புக்குரியதாக ஆக்கியிருக்கிறது.

WSWS முன்னோக்கை விமர்சிக்கின்ற சில கருத்துரைகள் வெனிசூலாவில் நிலவும் சிக்கலான அரசியல் சூழல் குறித்தும் அமெரிக்க ஏகாதிபத்தியம், தேசிய முதலாளித்துவம் மற்றும் மாதுரோ அரசாங்கம் ஆகியவற்றுக்கு இடையிலான உறவின் தன்மை குறித்துமான உண்மையான பிரச்சினைகளைப் பிரதிபலிப்பதாய் தோன்றுகின்றன. மற்றவை, தொழிலாள வர்க்கத்தை எதிர்ப்புரட்சிகர அதிகாரத்துவங்களுக்கும் - ஸ்ராலினிச அதிகாரத்துவம் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவம் இரண்டுக்கும் - மற்றும் பல்வேறு முதலாளித்துவ தேசியவாத இயக்கங்களுக்கும் கீழ்ப்படியச் செய்வதற்கேற்றவாறு அளவெடுத்துத் தைத்த அரசியலை நீண்டகாலமாக பின்பற்றி வந்திருக்கக் கூடிய ஏராளமான போலி-இடது குழுக்களுக்குப் பொதுவாக செதுக்கப்பட்ட ஒரு முன்னோக்கையே வெளிப்படுத்துகின்றன.

பிந்தைய வகைப்பாட்டில் வருபவர் தான் WVN", இவர் அந்த முன்னோக்கை குதர்க்கம் என்றும் அமெரிக்க ஏகாதிபத்தியம் விரவிக் கிடக்கிறது என்ற உண்மையை உணர்ந்து கொள்ளத் தவறுகின்ற வெற்று ஆவேசம் என்றும் கண்டனம் செய்கிறார். ஒருவேளை உணவையும் கூட தவற விட்டிராத நாற்காலி புரட்சியாளர்களால் மேற்கொள்ளப்படும் வாய்ச்சவடால் அலட்டல்களால் அது [அமெரிக்க ஏகாதிபத்தியம்] உதறியெறியப்பட்டு விட முடியாது.

அவர் தொடர்ந்து எழுதுகிறார்: இலத்தீன் அமெரிக்கர்கள், பின்னடைவுகளுடன், புரட்சி என்றால் எப்படி இருக்கும் என்பதை உலகுக்குக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள், போர்முனையில் இருந்து வெகுதொலைவில் இருக்கும் பல உயர் மன விமர்சகர்கள் [உள்ளவாறே] தாங்கள் இரத்தம் சிந்தாத கிளர்ச்சியை முட்டுச்சந்து என்று அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க ஃபிடெல்! வாழ்க சே, வாழ்க ஹியூகோ, வாழ்க இலத்தீன் அமெரிக்கப் போராளிகள்! என்று அவர் தனது இரண்டாவது பதிவை நிறைவு செய்கிறார்.

இத்தகைய அரசியலில் புரட்சிகரமானது மட்டுமல்ல தீவிரப்பட்டதும் கூட எதுவும் கிடையாது. மாதுரோ அரசாங்கத்தின் பிற்போக்குத்தனமான கொள்கைகளுக்கான ஒரு நொண்டிச்சாக்காக சர்வசக்தி படைத்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தை இழுப்பதானது, பராக் ஒபாமாவுக்கு ஆதரவளிப்பதை நியாயப்படுத்துவதற்கு இதே மனிதர்களால் உபயோகப்படுத்தப்படலாம், உபயோகப்படுத்தப்படுகிறது.

2013 மார்ச்சில் ஹியூகோ சாவேஸ் மரணத்தின் போது, சோசலிசத்திற்கான ஏதோ ஒரு புதிய பாதையைப் போன்று சாவேஸிசத்தைப் போற்றிப் புகழ்ந்த போலி-இடது கூறுகளை விவரிக்கையில் நாங்கள் எழுதினோம்: அவர்கள் சாவேஸின் 21 ஆம் நூற்றாண்டு சோசலிசத்தை நோக்கி ஈர்க்கப்பட்டார்கள் என்றால் அதற்கான துல்லியமான காரணம், முதலாளித்துவத்திற்கு ஒரு முடிவு கட்டவும் அதிகாரத்தை தனது கரங்களில் எடுக்கவும் தொழிலாள வர்க்கம் நடத்துகின்ற சுயாதீனமான மற்றும் நனவான போராட்டத்தின் ஊடாகவே ஒரு சோசலிச உருமாற்றமானது நடந்தேற முடியும் என்ற மார்க்சிசக் கருத்தாக்கத்திற்கு அவர்கள் கொண்டிருந்த குரோதமே ஆகும். இந்த குட்டி-முதலாளித்துவ அரசியல் கூறுகள் அதற்குமாறாய் மேலிருந்து ஒரு ஈர்ப்புமிக்க தலைவரால் திணிக்கப்பட்ட, முதலாளித்துவத்தை புரட்சியில் இருந்து காப்பாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த ஒரு கொள்கையை நோக்கி ஈர்க்கப்படுகின்றனர்.

மேலோட்டமான வாய்வீச்சுகளுக்கு இலத்தீன் அமெரிக்கப் புரட்சியினை இழுப்பதானது கடந்தகால போராட்டங்களின் இரத்தம் தோய்ந்த படிப்பினைகளையும் தொழிலாள வர்க்கத்தை ஏதோவொரு முதலாளித்துவ தேசியவாதத்திற்கு கீழ்ப்படியச் செய்வதற்கு வேலை செய்த குட்டி-முதலாளித்துவ இடதுகளினால் பின்பற்றப்பட்ட கொள்கைகளால் இலத்தீன் அமெரிக்கத் தொழிலாளர்கள் கொடுத்த கடும் விலையையும் மறக்கடிப்பதற்கே சேவைசெய்கிறது.

ஆர்ஜெண்டினாவில் ஜுவான் பெரோன் (Juan Peron) தொடங்கி பொலிவியாவில் ஜெனரல் ஜே.ஜே.டோரஸ் (J.J. Torres) மற்றும் பெருவில் ஜெனரல் ஜுவான் பிரான்ஸிஸ்கோ வெலஸ்கோ அல்வாரடோ (Juan Francisco Velasco Alvarado) வரையிலும், சாவேஸ் போலவே, பகுதியான தேசியமயமாக்கங்களை நடத்தியும், ஏகாதிபத்திய-எதிர்ப்பு வாய்வீச்சில் ஈடுபட்டும், அத்துடன் ஏழைகளுக்கான குறைந்தபட்ச சமூக உதவித் திட்டங்களை ஊக்குவித்தும் வந்திருந்த முதலாளித்துவ தேசியவாத இராணுவ அதிகாரிகளின் மீதான பிரமைகளை இவை ஊக்குவித்தன. இந்த ஒவ்வொரு நாட்டிலுமே, இந்த ஆட்சிகள் பத்தாயிரக்கணக்கிலான பேரைக் கொன்று குவித்த இராணுவக் கவிழ்ப்புகள் மற்றும் வலது-சாரி சர்வாதிகாரங்களின் நுழைவு அறைகளாகவே சேவை செய்தன.

இதே கூறுகள் தான் சோசலிசத்துக்கான சிலி காட்டும் பாதை என்று போற்றிப் புகழ்ந்தன. இதில் ஸ்ராலினிச சிலிய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் ஜனாதிபதி சல்வடோர் அலென்டே (Salvador Allende) இன் அரசாங்கமானது சிலித் தொழிலாளர்களது புரட்சிகர எழுச்சியை முதலாளித்துவத்துக்கு கீழ்ப்படிய வைத்ததோடு, 1973க்குள்ளாக, தொழிலாளர்கள் கையகப்படுத்தியிருந்த தொழிற்சாலைகள் அத்தனையையும் பலவந்தமாக திருப்பிப் பறித்தது என்பதோடு, ஒடுக்குமுறையை மேம்பட்ட முறையில் ஒழுங்கமைப்பதற்காக பினோசே உள்ளிட்ட ஜெனரல்களை அதன் அமைச்சரவைக்கு அழைத்தது. அதன் விளைவாகக் கிட்டியது 17 ஆண்டு கால பாசிச-இராணுவ சர்வாதிகாரம் தான்.

வாழ்க ஃபிடெல்! வாழ்க சே! என்று குரலெழுப்பி குட்டிமுதலாளித்துவ கெரில்லாவாதத்தை சோசலிசத்திற்கான ஏதோவொரு புதிய பாதை போல் சித்தரித்தவர்களும் 1970களில் இலத்தீன் அமெரிக்காவிலான இரத்தம்பாய்ந்த தோல்விகளுக்கான பாதை அமைத்துத் தந்தவர்களில் அடங்குவர். புரட்சிகரக் கூறுகளை தொழிலாளர்களிடம் இருந்து தனிமைப்படுத்துவதற்கும், அவர்களை அரசுடன் சமநிலையற்ற ஆயுத மோதல்களுக்கு அழைத்துச் செல்வதற்கும், அத்துடன் புரட்சிகர தொழிலாள வர்க்கக் கட்சிகளைக் கட்டியெழுப்புவதில் முட்டுக்கட்டை போடுவதற்குமே இந்த பிற்போக்குத்தனமான முன்னோக்கு சேவைசெய்தது.

பரந்த மக்களுக்கு சோசலிசத்தை கொண்டுவரப் போவதாக சொல்லுகின்ற முதலாளித்துவ தேசியவாதிகளுக்கு உற்சாகமூட்டிகளாய் செயல்படுவதன் மூலம் தமக்குத்தாமே மன ஆறுதல் கொள்ள முயலுகின்றதற்கு ஒப்பான அரசியலைக் கொண்டவர்களுக்கு இந்த வரலாறு ஆர்வம் எதனையும் ஏற்படுத்தும் என்பதான பிரமைகள் ஏதும் எங்களுக்கு இல்லை.

தொழிலாளர்களின் மூலமான ஒரு வெற்றிகரமான புரட்சிகரப் போராட்டம் - எல்லாவற்றுக்கும் மேல் அமெரிக்காவில் - சாத்தியமில்லாதது என்ற ஒரு ஆழமாய் பதிந்த உறுதியும், அத்துடன் மார்க்சிச அபிவிருத்தியின் மூலமாகவும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான புரட்சிகரக் கட்சிகளைக் கட்டியெழுப்புவதன் மூலமாகவும் அத்தகையதொரு போராட்டத்திற்கு தயாரிப்பு செய்ய போராடுபவர்களை நோக்கிய ஒரு கடுமையான குரோதமும் அவர்களது இந்த கண்ணோட்டத்தில் சம்பந்தப்பட்டுள்ளது.