ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Socialist Equality Party (US) 2016 Congress Resolutions
Perspectives and Tasks of the Socialist Equality Party

சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) 2016 காங்கிரஸ் தீர்மானங்கள்

சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்குகளும் பணிகளும்

24 August 2016

சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா) தனது நான்காவது தேசிய காங்கிரசை மிச்சிகன், டெட்ரோயிட்டில் ஜூலை 31-ஆகஸ்டு 5 நடத்தியது.

சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும்” என்ற நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அறிக்கையை காங்கிரஸ் ஒருமனதாக ஏற்றுக்கொண்டது. அத்துடன் “சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்குகளும் கடமைகளும், “அமெரிக்காவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்காக” மற்றும் “சோசலிசத்திற்கான போராட்டமும் சோசலிச சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் பணிகளும்” ஆகிய மூன்று கூடுதல் தீர்மானங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

***

1. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு இருபத்தியைந்து வருடங்களுக்குப் பின்னர், உலக முதலாளித்துவ அமைப்புமுறை பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடிகளால் உருக்குலைந்து கிடக்கிறது. 1991 டிசம்பரில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதானது முதலாளித்துவத்தின் தீர்மானகரமான வெற்றியாகவும் “வரலாற்றின் முடிவு” என்றும் போற்றப்பட்டது. ஆனால், அதன் கால் நூற்றாண்டு காலத்திற்குப் பின்னர், உலகப் பொருளாதாரம் முரண்பாடுகளால் பின்னிக் கிடக்கிறது, ஏகாதிபத்திய சக்திகள் ஒரு புதிய உலகப் போர் என்னும் அதளபாதாளத்திற்குள் மனிதகுலத்தை இட்டுச் சென்று கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு பிரதான முதலாளித்துவ நாட்டிலும் ஜனநாயக ஆட்சி வடிவங்கள் தாக்குதலுக்கு இலக்காகி இருக்கின்றன, வலது-சாரி தேசியவாத மற்றும் பாசிச சக்திகள் மேலெழுந்து கொண்டிருக்கின்றன அத்தோடு வர்க்கப் போராட்டமும் உலகெங்கிலும் மறுஎழுச்சி கண்டுவருகிறது.

2. 1930களுக்குப் பிந்தைய மோசமான உலகளாவிய பொருளாதார நெருக்கடியைத் தூண்டிய 2008 இன் நிதிப் பொறிவு நடந்து எட்டு ஆண்டுகள் கடந்து விட்டன. வங்கியமைப்பு முறை உருக்குலைவதையும் அத்துடன் வோல் ஸ்ட்ரீட்டில் முதலீடு செய்யப்பட்டுள்ள பரந்த தனியார் செல்வம் கலைக்கப்படுவதையும் தடுப்பதற்கான ஒரு நப்பாசை முயற்சியில், வரலாற்றில் முன்கண்டிராத அளவுக்கு வட்டிவிகிதங்களைக் குறைப்பது, அத்துடன் நிதிச் சந்தைகளுக்குள் டிரில்லியன் கணக்கான டாலர்களை இறைப்பது ஆகியவை கொண்ட “பணத்தைப் புழக்கத்தில் விடும் கொள்கைகள்” (Quantitative Easing) வேலைத்திட்டத்தை அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் கையிலெடுத்தது. அரசாங்க கொள்கைகள் பங்கு விலைகளை புதிய முன்எட்டியிராத உயரங்களுக்கு உந்திக்கொண்டிருக்க, அதேநேரத்தில், “உண்மையான” பொருளாதாரமோ, நிதித் துறையின் ஆதிக்கத்திற்கு அப்பால் தேக்கமடைந்து கொண்டிருக்கிறது, உழைக்கும் மக்களின் பரந்த எண்ணிக்கையினரின் வாழ்க்கைத் தரங்கள் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகின்றன. 

3. புவியரசியல் பதட்டங்கள் முதல் மற்றும் இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய நிலைமைகளை ஒத்திருக்கின்றன. 1990-91 இல் ஈராக் மீதான முதல் அமெரிக்கப் படையெடுப்பு முதலான கால் நூற்றாண்டு காலப் போர், அணு ஆயுதங்களைக் கொண்டான ஒரு மூன்றாம் உலகப் போராக வெடித்தெழுவதற்கு அச்சுறுத்துகின்ற வகையில் உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் ஒரு முனைப்பாக வளர்ந்து பரவியிருக்கிறது. அமெரிக்காவின் “பயங்கரவாதத்தின் மீதான போரின்” பின்விளைவுகள் பேரழிவுகரமானவையாக இருந்திருக்கின்றன. மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் ஒட்டுமொத்த சமூகங்களின் அழிவானது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மிக மோசமான உலகளாவிய அகதிகள் நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது. நேட்டோ, “ரஷ்யாவின் வலிந்த மூர்க்கத்தனத்தை” கண்டனம் செய்கின்ற அதேநேரத்தில் கிழக்கு ஐரோப்பாவை பாரிய அளவில் இராணுவமயமாக்குவதிலும் அது ஈடுபட்டிருக்கிறது. ஒபாமா நிர்வாகத்தின் “ஆசியாவை நோக்கிய முன்னிலை”யின் மூலமாக இந்தியா தொடங்கி ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் வரையிலும், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பெருகி வருகின்ற மோதலுக்குள்ளாக இழுத்து விடப்பட்டு வருகின்றன. ஜேர்மனி மீண்டும் இராணுவமயமாகி வருவதோடு, மேலாதிக்கமான ஐரோப்பிய சக்தியாக தனது பாத்திரத்தை உறுதிப்படுத்தி  வருகிறது.

4. ஆளும் வர்க்கம் தனது நலன்களை முன்னெடுப்பதற்கும் உலகப் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் அடிப்படையாய் இருந்த தேசிய-அரசு அமைப்புமுறையின் அரசியல் கட்டமைப்புகள் ஒரு ஆழமான சட்டபூர்வத்தன்மைக்கான நெருக்கடிக்கு முகம்கொடுத்து நிற்கின்றன. ஐக்கிய இராச்சியத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கும் அத்துடன் ஐக்கிய இராச்சியமே கூட சிதறும் சாத்தியத்திற்கும் வாக்களிக்கப்பட்டுள்ளமை; ஆஸ்திரேலியாவில் பெரிய கட்சிகள் எதுவொன்றின் மூலமான பெரும்பான்மை அரசாங்கத்திற்குமான ஒரு கட்டமைப்பை உருவாக்க தேர்தல்கள் தவறியமை; உலகெங்கிலும் அதி-வலது சக்திகளின் எழுச்சி; பிரேசில் மற்றும் வெனிசூலாவில் ஆழமான அரசியல் நெருக்கடிகள்; நேட்டோவின் ஒரு அங்கத்துவநாடான துருக்கியில் தோல்வியடைந்த இராணுவ சதி ஆகிய அனைத்தும் முதலாளித்துவ ஜனநாயக ஸ்தாபனங்கள் மற்றும் ஆட்சி வடிவங்களின் நிலைமுறிவுக்கு சாட்சியமளிக்கின்றன.

5. முதலாளித்துவ ஆட்சியின் உலகளாவிய நெருக்கடி, 2016 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் அசாதாரண கூர்மையுடன் வெளிப்பாடு காண்கிறது. ஆளும் வர்க்கத்தின் இரண்டு பிரதான கட்சிகளும் அரசியல் மறதிநோயின் முன்னேறிய நிலையின் அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றன. குடியரசுக் கட்சி டொனால்ட் ட்ரம்ப் என்ற ஒரு பாசிச வாய்வீச்சாளரை வேட்பாளராக பரிந்துரை செய்துள்ளது. இவர் பல சூதாட்ட மையங்களை (Casinos) திவால்நிலைக்கு கொண்டுவந்த தனது கட்டுக்கதைகளாய் விபரிக்கக்கூடிய அதே தொழில்முனைவுத் திறன்களைக் கொண்டு “அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக்க” வாக்குறுதியளிக்கிறார். ஜனநாயகக் கட்சி, ஹிலாரி கிளிண்டனை முன்வைத்துள்ளது. அமெரிக்க அரசியல் வரலாற்றில் வேறெந்த மனிதரை விடவும் அதிகமாய் ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பி வந்திருக்கிறார் என்பதே ஜனாதிபதி பதவிக்கான அவரது பிரதான தகுதியாக இருக்கிறது. அவரை ஒரு பல மில்லியன்களுக்கு அதிபதியாக்கியிருக்கும் நான்கு தசாப்தங்களுக்கும் கூடுதலான ஒரு அரசியல் வாழ்க்கைக்கு பின்னர், ஹிலாரி கிளிண்டன், இராணுவ-உளவுத்துறை ஸ்தாபகத்திற்கும் மற்றும் வோல்-ஸ்ட்ரீட்டின் நிதி நலன்களுக்கும் இடையிலான கூட்டணியின் உருவடிவமாகத் திகழ்கிறார். தேர்தல் முடிவு என்னவாக இருந்தாலும், அது ஆழமைடைகின்ற பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிக்கு முகம்கொடுக்கின்ற, மற்றும் வெளிநாட்டில் போரைக் கூர்மையாய் அதிகரிப்பது உட்பட மக்கள் ஆதரவற்ற கொள்கைகளை பின்பற்றுகின்ற ஒரு பிற்போக்குத்தனமான அரசாங்கத்தையே உருவாக்கும்.

6. தன்னை ஒரு சோசலிஸ்டாக விவரித்துக் கொண்டு “பில்லியனர் வர்க்கத்திற்கு” எதிரான ஒரு “அரசியல் புரட்சி”க்கு அழைப்புகள் விடுப்பதன் அடிப்படையில் தனது பிரச்சாரத்தை அமைத்துக் கொண்ட வேர்மண்ட் செனட்டரான பேர்னி சாண்டர்ஸுக்குக் கிடைத்த பாரிய ஆதரவானது, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள், சாண்டர்ஸின் முயற்சிகளையும் தாண்டி, இரு-கட்சி அமைப்புமுறையின் கட்டமைப்புக்குள்ளாக மட்டுப்படுத்தி வைக்கப்பட முடியாத வண்ணம், ஒரு இடது-சாரி, முதலாளித்துவ-எதிர்ப்பு அரசியல் தீவிரமயப்பட்டதன் ஆரம்பகட்ட வெளிப்பாடாக இருந்தது. அமெரிக்கா தீவிர வர்க்கப் போராட்டத்தின் ஒரு காலகட்டத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கிறது. இது, அதன் வழியில், முதலாளித்துவ வர்க்கத்திற்கும் அதன் அரசு எந்திரத்திற்கும் எதிரான நனவான அரசியல் போராட்டத்தின் பாதையில் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தை இட்டுச்செல்லும்.

7. முதலாளித்துவ அமைப்புமுறையின் வரலாற்று நெருக்கடியில் இருந்து அமைதியாய் வெளிவருவதற்கான வழியேதும் இல்லை. அது இரண்டு வழிகளில் தான் தீர்க்கப்பட்டாக முடியும். ஒன்று, ஆளும் வர்க்கமானது போர், சர்வாதிகாரம் மற்றும் உலகின் மக்களை பரந்த அளவில் வறுமைக்குள் தள்ளுவது ஆகியவற்றின் மூலமாக ஒரு புதிய சமநிலையை உருவாக்க முனையும், இல்லையேல் தொழிலாள வர்க்கமானது, சர்வதேசரீதியாக ஒன்றுபட்டும் ஒரு சுயாதீனமான அரசியல்சக்தியாக அணிதிரண்டும், முதலாளித்துவத்தை தூக்கிவீசி விட்டு, பகுத்தறிவான திட்டமிடல் மற்றும் சமூக சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு உலகளாவிய சோசலிச சமூகத்தை ஸ்தாபிக்கும்.

8. ஏகாதிபத்திய போரையும் எதேச்சாதிகாரத்தையும் உருவாக்குகின்ற அதே நெருக்கடி தான் சோசலிசப் புரட்சிக்கான உந்துசக்தியையும் கூட உருவாக்குகிறது. அமெரிக்காவின் இராணுவவாதத்திற்கும், வேலைகள் மற்றும் ஊதியங்கள் மீதான தாக்குதல்களுக்கும், பொதுக் கல்வி அழிக்கப்படுவதற்கும், உள்கட்டமைப்பு சிதைவதற்கும், மாணவர் கடன் மற்றும் அதிகரித்துச் செல்லும் கல்விக் கட்டணம் ஆகியவற்றுக்கும், மற்றும் போலிஸ் வன்முறைக்கும் எதிரான வெகுஜன எதிர்ப்பானது, சோசலிசத்திற்கான ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் ஒரு பொதுவான அரசியல் போராட்டத்தில் ஐக்கியப்படுத்தப்பட்டாக வேண்டும். நடுத்தர வர்க்க, போலி-இடது அரசியலின் அத்தனை வடிவங்களுக்கும் எதிராக, சோசலிச சமத்துவக் கட்சியானது இராணுவவாதத்திற்கு எதிராகவும் மற்றும் சோசலிசத்திற்காகவும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதில் தொழிலாள வர்க்கத்தின் மையமான மற்றும் தலைமையான பாத்திரத்தை ஐயத்திற்கிடமின்றி உறுதிபட தாங்கி நிற்கிறது. அமெரிக்காவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் புரட்சிகரத் தலைமையை கட்டியெழுப்புவதே மனிதகுலத்தின் தலைவிதி தங்கியிருக்கும் தீர்மானகரமான மூலோபாயப் பிரச்சினை ஆகும்.

உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியும் அமெரிக்காவின் வர்க்க உறவுகளின் மறுசீரமைவும்

9. நிதி ஊகவணிகத்தின் தொடுஎல்லையை விரிவுபடுத்திய அதேநேரத்தில் பெருநிறுவன மற்றும் நிதி உயரடுக்கின் செல்வத்தை பிரம்மாண்டமாக அதிகரித்து, வரலாற்றில் சமூக சமத்துவமின்மையின் மிக உச்சமான மட்டங்களை உருவாக்கியதே அமெரிக்க பெடரல் ரிசர்வ் மற்றும் உலகின் மத்திய வங்கிகள் பின்பற்றிய கொள்கைகளின் பிரதான விளைவாய் இருக்கிறது. அமெரிக்காவில் பங்குச் சந்தைகள் முன்கண்டிராத உச்சத்தில் இருக்கின்ற அதேநேரத்தில் கடன் சந்தைகளில் பாய்ச்சப்பட்ட பரந்த பண விநியோகமானது ஐரோப்பாவில் கடன்பத்திர வருவாய்களை முன்கண்டிராத குறைந்தநிலைகளுக்குள் தள்ளியிருக்கிறது. அதிகரித்துச் செல்லும் சொத்து விலைகளால் ஊக்கம்பெற்று, 62 பில்லியனர்கள் இப்போது உலகின் பாதி மக்கள்தொகை அளவுக்கு, அதாவது 3.5 பில்லியன் பேர் கொண்டிருக்கும் அளவுக்கான சொத்துகளைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளனர்.

10. இதனிடையே, உலகப் பொருளாதாரம் மந்தநிலைக்குள் அமிழ்ந்து கிடக்கிறது. தலைமை பொருளாதார அறிஞர்கள் உலகின் “ஏககால மந்தநிலை”யின் ஒரு காலகட்டம் குறித்தும் “நீடித்த மந்தநிலை” (secular stagnation) குறித்தும் எச்சரித்துக் கொண்டிருக்கின்றனர். இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய தசாப்தத்தின் குணாம்சமாய் இருந்த பொருளாதார தேசியவாதத்தின் ஒரு வகைக்கு —நாணயமதிப்பு போர்கள் மற்றும் வர்த்தகத் தடைகளின் எழுச்சி ஆகியவை உட்பட— உலகம் திரும்பிக் கொண்டிருப்பதன் மத்தியில், 2008க்கு முந்தைய காலத்துடன் ஒப்பிட்டால் உலக வர்த்தகம் கூர்மையாக மந்தமடைந்திருக்கிறது.

11. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, சீனாவின் துரித வளர்ச்சியானது உலகளாவிய சிதைவின் வீச்சை மறைத்துக் கொண்டிருந்தது. அதுவும் முடிந்து போனது. அரசாங்க செலவினம் மற்றும் கடன்களால் நிதியாதாரம் அளிக்கப்பட்ட 2008க்குப் பிந்தைய சொத்துக் குமிழி உடைந்த அதேவேளையில், சீனாவிலான பொருளாதார வளர்ச்சி 4.1 சதவீதத்திற்கு வீழ்ச்சி கண்டிருக்கிறது. சீனாவிலான மந்தநிலை உலகளாவிய தாக்கங்களைக் கொண்டிருக்கிறது. இது சந்தைப்பண்டங்களின் விலைகளிலான பொறிவுக்கு பங்களித்து, ஏற்றுமதி சார்ந்த நாடுகளில் பொருளாதார நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது. பிரேசில் பெருமந்த நிலைக்குப் பிந்தைய மிக மோசமான பொருளாதார நெருக்கடியின் மத்தியில் இருக்கிறது, வெனிசூலா அதிகரித்துச் செல்லும் பணவீக்கம் மற்றும் பாரிய வறுமைப்படல் ஆகியவற்றின் ஒரு காலகட்டத்தின் வழியாக பயணித்துக் கொண்டிருக்கிறது. ரஷ்ய பொருளாதாரம் 2015 இல் 3.7 சதவீதம் வரை சுருங்கியது, இந்திய ஏற்றுமதி கூர்மையாக சரிந்திருக்கிறது, 2016 இன் முதல் மூன்று மாதங்களில் தென்னாபிரிக்காவின் பொருளாதாரம் 1.2 சதவீதம் சுருங்கியிருக்கிறது.

12. ஐரோப்பாவில், அதன் இரண்டாவது பெரிய பொருளாதாரமான பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதென்பது, ஐரோப்பிய “ஐக்கியம்” என்னும் ஒட்டுமொத்தத் திட்டத்தின் மிகப் பரந்த ஒரு நெருக்கடியின் பகுதியாகும். யூரோவை தங்கள் நாணயமதிப்பாகப் பயன்படுத்துகின்ற நாடுகளைக் கொண்ட யூரோமண்டலத்தைப் பொறுத்தவரை, இந்த ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சி வெறும் 1.6 சதவீதத்தையே எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது, தொடர்ந்து அடுத்த ஆண்டிலும் இது வெறும் 1.4 சதவீதமாகவே இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. பிரெக்ஸிட் வாக்களிப்பானது நிதிரீதியான தொற்றுப்பரவல், பிரிட்டனில் வீட்டுச் சந்தை குமிழியின் ஒரு உடைவு மற்றும் கண்டம் முழுமையாக ஒரு பொதுவான வங்கி நெருக்கடி ஆகியவற்றின் அச்சங்களை எழுப்பியிருக்கிறது. ஒரு பொதுவான, கண்டம்-முழுவதிலுமான பொருளாதார மலிந்தநிலைக்கு மத்தியில் பிரெக்ஸிட் வாக்களிப்பு வந்திருக்கிறது. கிரீஸ், போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆகியவை, வங்கிகளால் திணிக்கப்பட்ட மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைகளின் விளைவாக, ஆழமான மந்தநிலையின் மத்தியில் இருக்கின்றன. இத்தாலியில், அரசின் கடன் உச்சநிலையை அடைந்திருக்கிறது, 2008 முதலாய் மொத்த உள்ளீட்டு சதவீதம் வரை சுருங்கி விட்டிருக்கிறது.

13. அமெரிக்காவில், சூழ்நிலை “மிக நன்றாகவே இருக்கிறது” என்ற ஒபாமாவின் கூற்று பிரமையூட்டுவதாகும். தேக்கநிலை, இடைவிடாத பாரிய வேலைவாய்ப்பின்மை மற்றும் மக்களின் பரந்த பெரும்பான்மையினருக்கு மோசமடைந்து செல்கின்ற வாழ்க்கை நிலைமைகள் ஆகியவற்றால் அமெரிக்கப் பொருளாதாரம் நோய்வாய்ப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் எஞ்சிய பகுதிக்கும் அடுத்த ஆண்டிற்குமான பொருளாதார வளர்ச்சி 2 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, இது முந்தைய மந்தநிலைகளைக் காட்டிலும் மிகவும் குறைந்த அளவாகும். அத்துடன் இந்த மதிப்பீடு உலகெங்கிலும் பெருகிவருகின்ற பொருளாதார ஸ்திரமின்மையால் அமெரிக்கப் பொருளாதாரம் கணிசமாகப் பாதிக்கப்படுவதில்லை என்று அனுமானித்துக்கொள்கிறது. அமெரிக்காவில் சராசரி வருவாய் 2000 ஆம் ஆண்டு முதலாய் 7 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டிருக்கிறது, வருவாயில் தொழிலாளர்களின் பங்கு 66 இல் இருந்து 61 சதவீதமாய் வீழ்ச்சி கண்டுள்ளது.

14. 2007-08 இல் தொடங்கிய நெருக்கடியானது இடையிட்டு வந்துபோகின்ற ஒரு கீழ்நோக்கிய வீழ்ச்சி அல்ல மாறாக அது உலக முதலாளித்துவத்தின் உலகளாவிய கட்டமைப்பிலான ஒரு நிலைமுறிவைக் குறிப்பதாகும் என்று உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு கூறிய பகுப்பாய்வை, உலகப் பொருளாதாரத்தின் இன்றைய நிலை ஊர்ஜிதம் செய்கிறது. அமெரிக்காவில் செலுத்தமுடியாத வீட்டு அடமானக் கடன்களுடன் தொடர்புடைய நச்சு சொத்துகளினால் சந்தை நிலைகுலைந்ததால் தூண்டப்பட்ட 2008 நெருக்கடியானது முதலாளித்துவ அமைப்புமுறையின், குறிப்பாக அமெரிக்க முதலாளித்துவத்தின் ஊழலடைந்த மற்றும் ஒட்டுண்ணித்தன குணாம்சத்தை தோலுரித்துக் காட்டியது.

15. முந்தைய மூன்று தசாப்தங்கள் சமூக சமத்துவமின்மையின் ஒரு முன்கண்டிராத பெருக்கத்தைக் கண்டிருந்தன. அமெரிக்காவில் பெருநிறுவன மற்றும் நிதி உயரடுக்கின் மூலமாக மலைபோன்ற சொத்துகளின் குவிப்பானது, உற்பத்தி நிகழ்முறையில் இருந்து அதிகமான அளவில் விலகிச் சென்றிருந்தது. அதற்குப் பதிலாய் சொத்துச் சந்தைகளின் முடிவற்ற வளர்ச்சி, ஊக வணிகம், மற்றும் அப்பட்டமான குற்றத்தன்மை ஆகியவற்றுடன் அது கட்டப்பட்டிருந்தது.

16. இந்த நிதியமயமாக்க நிகழ்வுப்போக்கானது அமெரிக்காவிற்குள்ளான சமூக மற்றும் அரசியல் உறவுகளுக்கு கணிசமான பின்விளைவுகளைக் கொண்டிருந்திருக்கிறது.  அமெரிக்க ஆளும் வர்க்கமானது, பொதுமக்கள் கருத்துக்கும், அத்துடன் தாயகத்திலும் வெளிநாட்டிலும் ஜனநாயக ஆட்சி வடிவங்களுக்கும் சட்டரீதியான அணுகுமுறைக்கும் அது காட்டும் திமிரான அலட்சியத்தில் பிரபுத்துவத்தின் அத்தனை முத்திரைகளையும் தாங்கியுள்ளது. நிதியப் பிரபுத்துவம்தான் அரசியல் அமைப்புமுறையையும் ஊடகங்களையும் கட்டுப்படுத்துகிறது. அரசியல்வாதிகள் ஆளும் வர்க்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்வது மட்டுமல்ல; அவர்கள் தமது சொந்த வழிவகையில் மில்லியனர்களாவதும் பில்லியனர்களாவதும் அதிகரிக்கிறது. ஆளும் உயரடுக்கு இந்த செல்வத்தை பாதுகாப்பதற்காகவும் தன் நலன்களைப் பாதுகாப்பதற்காகவும் போலிஸ்-அரசு பொறிமுறைகளையும் மற்றும் ஒரு பரந்த உள்நாட்டு வேவு எந்திரத்தையும் கட்டியெழுப்பியுள்ளது.

17. ஆயினும், நிதிமயமாகலை நோக்கிய திருப்பமானது அமெரிக்க மற்றும் உலகப் பொருளாதாரத்தின் ஒரு ஆழமான மற்றும் நீண்ட-கால நெருக்கடியில் வேரூன்றியிருக்கிறது. 1960களின் காலத்திலேயே, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலகட்டத்தின் பொருளாதார எழுச்சிக் கட்டமைப்பு நொருங்கிக் கொண்டிருந்ததற்கான அறிகுறிகள் இருந்தன. போருக்குப் பிந்தைய அமைப்பு தனக்கான அடிப்படையாகக் கொண்டிருந்த அமெரிக்காவின் மேலாதிக்க நிலையை, ஐரோப்பா மற்றும் ஜப்பானின் பொருளாதார மறுமலர்ச்சி அரித்துக் கொண்டிருந்தது. 1960களின் மத்திக்குள்ளாக, அமெரிக்காவின் முக்கிய உற்பத்தித் துறைகளில் இலாபவிகிதமானது கணிசமாய் வீழ்ச்சியடையத் தொடங்கியது, 1970களுக்குள்ளாக அனைத்து முக்கிய முதலாளித்துவ நாடுகளிலும் பொருளாதார வளர்ச்சி தேக்கம் காணத் தொடங்கியிருந்தது. 1967 முதல் 1975 வரையான காலகட்டமானது உலகெங்கிலும் தொழிலாள வர்க்கப் போர்க்குணத்தின் வெடிப்பையும் கண்டது.

18. அமெரிக்காவின் ஆளும் வர்க்கம் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு எதிர்த்தாக்குதலைத் தொடுத்து இந்தப் போக்குகளுக்கு பதிலிறுப்பு செய்தது. ஜிம்மி கார்ட்டரின் ஜனநாயகக் கட்சி நிர்வாகம், 1979 இல் பெடரல் ரிசர்வின் தலைமையில் போல் வோல்கரை, நியமனம் செய்ததுடன் இது தொடங்கியது. வோல்கர் கூர்மையாக வட்டி விகிதங்களை ஏற்றி, ஒரு கடுமையான மந்தநிலையைத் தூண்டியதுடன் வேலைவாய்ப்பின்மையை அதிகரிக்கச் செய்தார். 1981 இல் அதிகாரத்திற்கு வந்த ரீகன் நிர்வாகமானது, AFL-CIO தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடன், அரசாங்க மற்றும் பெருநிறுவன வேலைநிறுத்த முறியடிப்புகளின் ஒரு அலையைத் தொடக்கியது. ஒட்டுமொத்த தொழிற்துறைகளும் ஏறக்குறைய மூடப்பட்டன, நூறாயிரக்கணக்கான வேலைகள் துடைத்தழிக்கப்பட்டன. தொழிற்துறை உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 1950களில் 7 முதல் 9 சதவீதமாய் இருந்ததில் இருந்து 1980களில் 2 முதல் 3 சதவீதம் வரையான நிலைக்கு வீழ்ச்சி கண்டது.

19. அமெரிக்காவில் தொழிற்துறை உற்பத்தியின் தேய்வானது, நிதியவணிகத் துறையின் வளர்ச்சியுடன் நேரடியாகத் தொடர்புபட்டிருந்தது. ஆளும் வர்க்கம் தன்னை வளப்படுத்திக் கொள்வதற்கான பிரதானமான வழிவகையாக நிதி ஊகவணிகம் ஆகியது. பெருநிறுவன இலாபங்களில் நிதியவணிகத் துறையால் எட்டப்பட்ட விகிதாச்சாரம், 1980 இல் 6 சதவீதமாய் இருந்ததில் இருந்து 2005 இல் 40 சதவீதமாய் அதிகரித்தது. பொருள் உற்பத்தித் துறையின் சதவீதத்தில், நிதி, காப்பீடு மற்றும் ரியல் எஸ்டேட் (Finance, Insurance and Real Estate - FIRE) ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பங்கு 1970களில் வெறும் 30 சதவீதத்திற்கு மேலாக இருந்ததில் இருந்து 2000களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானதாகவும் 2010 இல் 90 சதவீதத்திற்கும் அதிகமானதாகவுமான நிலைக்கு உயர்ந்திருந்தது. 1990களில் தொடங்கிய ஒரு பங்குச் சந்தை எழுச்சிக்கு, குறைந்த வட்டி விகிதங்களின் மூலமாக கடன்களை பாரிய அளவில் வாங்கிக் குவிப்பதை ஊக்குவிக்கின்ற ஒரு பெடரல் ரிசர்வ் கொள்கை, வசதி செய்து கொடுத்தது.

20. இந்தப் பொருளாதார உருமாற்றங்கள், உலகளாவிய நிகழ்ச்சிப் போக்குகளுடன் தொடர்புபட்டிருப்பவை ஆகும். உயர் இலாப விகிதங்களைத் தேடி, பெருநிறுவனங்கள் மலிவான கச்சாப் பொருட்களுக்காகவும் மற்றும் தொழிலாளர் சந்தைகளுக்காகவும் உலகத்தை கசக்கிப் பிழிந்திருக்கின்றன. போக்குவரத்து மற்றும் தகவல்தொடர்பில் ஏற்பட்ட புரட்சிகரமான முன்னேற்றங்களால் உற்பத்தியின் உலகமயமாக்கமும் பிரம்மாண்டமான நாடுகடந்த பெருநிறுவனங்களின் எழுச்சியும் ஊக்கம் அளிக்கப் பெற்றன. உலகளாவிய ஒரு உழைப்புப் பிரிவினைக்கும் ஒரு உலகச் சந்தைக்கு நேரடியாக விற்பதற்கும் இது நிறுவனங்களுக்கு வசதி செய்து கொடுத்திருக்கிறது. சோவியத் ஒன்றியத்தின் கலைப்பும், சீனாவில் முதலாளித்துவ உறவுகளின் மீட்சியும் உலகளாவிய தொழிலாளர் திரட்டுக்கு சுமார் 2 பில்லியன் தொழிலாளர்களை கூடுதலாய் சேர்த்துள்ளது.

21. இந்த அதிகரித்துச் செல்லும் பூகோளமயமாகும் பொருளாதாரத்தின் உச்சியில், நிதிய ஊகவணிகத்தின் ஒரு பாரிய சந்தை தங்கியிருக்கிறது. 2008 நெருக்கடியே கூட ஒரு நிதிக் குமிழியின் பொறிவால் உலகப் பொருளாதாரம் ஒரு தசாப்த காலத்திற்குள் மூன்றாம் முறையாக உலுக்கப்பட்ட நிகழ்வாய் இருந்தது. அதற்கு முன்பாக, 1997-98 கிழக்கு ஆசிய நிதி நெருக்கடி வந்தது, இது தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா, தென் கொரியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சூழ்ந்தது; அத்துடன் ஒரு உலகளாவிய நிதிப் பொறிவைத் தூண்டியது. இதனைத் தொடர்ந்து 2000 ம் ஆண்டில் டாட் காம் எழுச்சியின் பொறிவும் அத்துடன் என்ரோன் திவால் உள்ளிட சந்தை ஊகவணிகத்துடன் தொடர்புபட்ட ஊழல் மோசடிகளின் ஒரு அலையும் வந்தது. இந்த முந்தைய நெருக்கடிகளின் சமயத்தில் போலவே, வட்டி விகிதங்களைக் குறைப்பதும் சந்தைகளில் பணத்தை இறைப்பதுமே 2008 பொறிவுக்கு பெடரல் ரிசர்வும் உலகின் மத்திய வங்கிகளும் அளித்த பதிலிறுப்பாகும். இது புதிய சொத்துக் குமிழிகளையே உருவாக்கியுள்ளது என்பதோடு புதிய மற்றும் கூடுதல் அழிவுகரமான நிதிப் பொறிவுக்கு மேடையமைத்திருக்கிறது.

22. 1921 இல், முதலாம் உலகப் போருக்கும் ரஷ்யப் புரட்சிக்கும் பிந்தையதான காலத்தில், லியோன் ட்ரொட்ஸ்கி கடன்களின் ஒரு பாரிய திரட்சி நிலவுவதை சுட்டிக் காட்டினார். அதற்கு இணையான நிலைமைகளே இன்று நிலவுகின்றன. போருக்குப் பிந்தைய ஐரோப்பாவின் நாடுகள் வறுமைக்குள் தள்ளப்பட்ட அதேவேளையில், “என்ன அழிக்கப்பட்டது என்பதன் ஒரு ஞாபகமும்... என்ன ஈட்டப்படமுடியும் என்ற ஒரு நம்பிக்கையும்” என்ற வகையில் இறுதி ஆய்வில், இலாபத்தை உரிமைகோருவதற்காக, வங்கிப் பணங்கள் மற்றும் அரசாங்கப் பத்திரங்களின் ஒரு பாரிய பெருக்கம் இருந்தது. இந்த பண மூலதனமானது, “ஒட்டுமொத்த சமூகத்தின், ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் வடிவையும் சீர்குலைக்கிறது. சமூகம் எந்த அளவுக்கு வறுமையாய் வளர்கிறதோ, அந்த அளவுக்கு அது கற்பனா மூலதனத்தின் கண்ணாடியில் செழிப்பானதாய் தோற்றமளிக்கிறது.” [ட்ரொட்ஸ்கி, கம்யூனிச அகிலத்தின் மூன்றாம் காங்கிரசுக்கு அளித்த உரை, பரந்த மக்களுக்கு: கம்யூனிச அகிலத்தின் மூன்றாவது காங்கிரசின் முன்னேற்றங்கள், பக் 108-109]

23. ஆக, இன்றும் கூட, கற்பனையான மூலதனத்தின் பிரம்மாண்டமான உபரியானது தொழிலாள வர்க்கத்திடம் இருந்து முன்னெப்போதினும் பெரிய இலாபவிகிதத்தை பிழிவதன் மூலமாய், பொதுச் சொத்து மற்றும் அரசு சொத்துக்களை கலைப்பதன் மூலமாய் மற்றும் ஏகாதிபத்திய சூறையாடலின் மூலமாய், விலைசெலுத்தப்பட்டாக வேண்டும் அல்லது அழிக்கப்பட்டாக வேண்டும்.

அமெரிக்க ஏகாதிபத்தியமும் மூன்றாம் உலகப் போரை நோக்கிய முனைப்பும்

24. நெருக்கடியில் இருந்து வெளிவருவதற்கான ஒரு வழியைக் காண்பதற்கு அமெரிக்க ஆளும் வர்க்கம் மேற்கொள்கின்ற முயற்சிகளானவை, ஒருபக்கத்தில், உழைப்பின் உற்பத்தியில் ஒரு கூடுதல் பெரிய பங்கினைப் பிழிவதற்காக தொழிலாள வர்க்கத்தின் மீதான அதன் தாக்குதல்களைத் தீவிரப்படுத்துவதற்கும், இன்னொரு பக்கத்தில், வெளிநாடுகளில் முன்னெப்போதினும் பொறுப்பற்ற வகையிலான இராணுவ வன்முறையில் ஈடுபடுவதற்கும் அதனை உந்தித் தள்ளுகிறது. உற்பத்தியின் உலகமயமாக்கமானது, சர்வதேச மோதல்களை குறைப்பதற்கெல்லாம் எட்டாத் தூரத்தில், உலகப் பொருளாதாரத்திற்கும் தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையிலான அடிப்படை முரண்பாடுகளை புதிய உச்சங்களுக்குக் கொண்டுசென்றுள்ளது.

25. 25 ஆண்டுகளுக்கு முன்பாக, சோவியத் ஒன்றியத்தின் கலைப்பை, சோவியத் ரஷ்யாவின் எதிர்த்துநிற்கும் இராணுவ வலிமை அல்லது சோசலிசப் புரட்சியின் அச்சுறுத்தல் ஆகியவற்றின் இடையூறின்றி அமெரிக்க முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களின் பேரில் ஒட்டுமொத்த உலகத்தையும் மாற்றியமைப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாயவாதிகள் அர்த்தப்படுத்திக்கொண்டனர். முதல் புஷ் நிர்வாகமானது ஒரு “புதிய உலக ஒழுங்கை” பிரகடனம் செய்தது, அமெரிக்காவின் நலன்களுக்கு எந்த பிராந்திய அல்லது உலக சவாலாளரும் எழுந்து விடுவதைத் தடுப்பதற்கான திட்டங்களை பென்டகன் தீட்டியது. 1990-91 வளைகுடாப் போரை தொடர்ந்து, கிளிண்டன் நிர்வாகத்தின் கீழ், ஈராக் மீதான ஒரு தசாப்த கால பொருளாதாரத் தடைகள் மற்றும் அவ்வப்போதான குண்டுவீச்சுகள், சோமாலியா, ஹைத்தி, சூடான் மற்றும் ஆப்கானிஸ்தானிலான இராணுவத் தலையீடுகள், மற்றும் 1999 இல் சேர்பியாவுக்கு எதிரான மிருகத்தனமான ”மனித உரிமைகள்” போர் ஆகியவை பின்தொடர்ந்து வந்தன.

26. 2001, செப்டம்பர் 11 பயங்கரவாத தாக்குதல்களை தொடர்ந்து, இரண்டாவது புஷ் நிர்வாகமானது, 2001 இலையுதிர்காலத்தில் ஆப்கானிஸ்தான் மீது போர்தொடுத்து “21 ஆம் நூற்றாண்டுப் போர்கள்” என்று புஷ் அழைத்த ஒன்றை தொடங்கிவைத்தது. “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்ற வடிவமைப்பின் கீழ், புஷ் நிர்வாகமானது ஆப்கான் போரைத் தொடர்ந்து 2003 இல் ஈராக் மீதான இரண்டாவது படையெடுப்பை தொடங்கியது. அமெரிக்க வரலாற்றிலேயே இரண்டு முழுப் பதவிக் காலங்களிலும் நாட்டை தொடர்ச்சியாக போரில் ஈடுபடுத்தியிருந்த முதல் ஜனாதிபதியாகி இருக்கின்ற ஒபாமா, லிபியா, ஏமன் மற்றும் பாகிஸ்தான் மீதான குண்டுவீச்சுகள் மற்றும் சிரியாவில் சிஐஏ ஆதரவுடன் நடக்கின்ற ஒரு உள்நாட்டு யுத்தம் ஆகியவற்றையும் இராணுவ நடவடிக்கைகளின் பட்டியலில் சேர்த்திருக்கிறார்.

27. இந்த காலகட்டம் முழுவதிலும், அமெரிக்க ஆளும் வர்க்கமானது அதிகப்படியான குருதிகொட்டும் யுத்தங்கள் எனும் ஒரு திட்டவட்டமான மூலோபாயத்தைப் பின்பற்றி வந்திருக்கிறது. கால் நூற்றாண்டு போர்: உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் முனைப்பு, 1990-2016 , புத்தகத்தின் முகவுரை கூறுவதைப் போல:

கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் அமெரிக்காவினால் தூண்டப்பட்ட போர்களை, இடைத்தொடர்புள்ள நிகழ்வுகளின் ஒரு சங்கிலியாக ஆய்வுசெய்யப்பட வேண்டும். உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க முனைப்பின் மூலோபாய தர்க்கமானது, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவிலான நவகாலனித்துவ நடவடிக்கைகளையும் தாண்டி விரிந்து செல்வதாகும். ரஷ்யா மற்றும் சீனாவுடன் துரிதமாய் தீவிரப்பட்டுச் செல்லும் அமெரிக்காவின் மோதல்களது பாகக் கூறுகளாகவே நடைபெற்று வரும் போர்கள் இருக்கின்றன.

மூலோபாயரீதியாய் மிக முக்கியத்துவம் வாய்ந்த யூரோஆசிய நிலப்பரப்பின் மீதான கட்டுப்பாட்டை ஸ்திரப்படுத்திக்கொள்வதற்கான அமெரிக்காவின் முயற்சிகள் என்ற கண்ணாடிப்பெட்டகத்தின் வழியாகவே 1990-91 நிகழ்வுகளின் அத்தியாவசியமான முக்கியத்துவம் வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆயினும், ரஷ்யா மற்றும் சீனா உடனான மோதலின் இருதயத்தானமாய் அமைந்திருக்கக் கூடிய, உலக மேலாதிக்கத்திற்காய் நடைபெற்று வருகின்ற போராட்டத்திலான சமீபத்திய கட்டமானது, அமெரிக்காவுக்கும் ஜேர்மனி (எதிரியாகும் சாத்தியம் கொண்ட மிக முக்கியமான நாட்டைக் குறிப்பிடுவதானால்) உள்ளிட்ட அதன் இன்றைய நாள் ஏகாதிபத்திய கூட்டாளிகளுக்கும் இடையிலான உட்பொதிந்த மற்றும் வெடிப்புசாத்தியம் கொண்ட பதட்டங்களை மேற்பரப்புக்குக் கொண்டுவந்து கொண்டிருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் இரண்டு உலகப் போர்கள் தவறான புரிதல்களால் விளைந்தவையல்ல. கடந்தகாலம் அறிமுக உரை மட்டுமே. 1990-91 இல் அனைத்துலகக் குழு முன்னெதிர்பார்த்தவாறாக, உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க முயற்சியானது உலக அரசியலின் மேற்பரப்பின் கீழ் கொதிநிலைக்கு வந்து கொண்டிருந்த ஏகாதிபத்தியங்களுக்கு-இடையிலான பகைமைகளை மீண்டும் பற்றவைத்திருக்கிறது.

28. அணு ஆயுதங்களைக் கொண்ட ஒரு மூன்றாம் உலகப் போர் வெறுமனே ஒரு தத்துவார்த்தரீதியக சாத்தியமன்று; அது ஒரு உடனடியான நடைமுறைச்சாத்தியமான அபாயம் ஆகும். பெரும் சக்திகளிடையே மோதல்கள் தீவிரமடைவதில் இருந்து இது எழுகிறது. இந்த சக்திகள் அனைத்துமே அணு ஆயுதங்கள் கொண்டிருப்பவையாகும். மே மாதத்தில், அக்கறை கொண்ட விஞ்ஞானிகள் ஒன்றியம் (Union of Concerned Scientists), “சீனாவுடனான அணு ஆயுதப் போரின் அபாயம்: மன உளைச்சலை அளிப்பதாக இருக்கும் அவசர உணர்வின்மை” என்ற தலைப்பின் கீழ் ஒரு அறிக்கை வெளியிட்டது. அது பின்வருமாறு எச்சரித்தது:

வருடத்தின் 365 நாட்களும், அத்தனை இருபத்தி நான்கு மணி நேரமும், அமெரிக்கா மற்றும் சீன மக்கள் குடியரசு அரசாங்கங்கள், துரிதமாய் அதிகரித்து ஒரு அணு யுத்தத்தில் முடிவடையக் கூடிய ஒரு போரைத் தொடங்குவதில் இருந்து ஒரு சில மோசமான முடிவுகளுக்கு சற்று அருகிலேயே உள்ளன. பொருந்தாத புரிதல்களால் போரின் சாத்தியம் மற்றும் அது அணு ஆயுதங்களை பயன்படுத்துவதில் விளையக் கூடிய சாத்தியம் இரண்டையுமே அதிகரிக்கின்றன. தவறான தகவல் தொடர்போ அல்லது தவறான புரிதலோ இரண்டு அரசாங்கங்களும் நிறுத்துவதற்குக் கடினமாக உணரத்தக்க ஒரு மோதலை தூண்டக் கூடும்.

29. இராணுவத்தின் திட்டமிடல் நிபுணர்கள் போரில் அணு ஆயுதங்கள் பயன்பாட்டிற்கு செயலூக்கத்துடன் மூலோபாயம் வகுத்துக் கொண்டிருக்கின்றனர். ஒபாமா நிர்வாகம் தொடக்கியிருக்கும் 1 டிரில்லியன் டாலர் அணு ஆயுத நவீனமயமாக்கல் திட்டத்தில் போர் பயன்பாட்டுக்காய் வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய உருவாக்க குறைந்த- விளைவுகளை கொடுக்கும் ஆயுதங்களின் உற்பத்தியும் அடங்கும். அமெரிக்க வெளியுறவுத்துறை, பென்டகன் மற்றும் உளவு முகமைகளுக்கான ஒரு முன்னணி சிந்தனைக் குழுவான மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையம் சென்ற ஆண்டில் வெளியிட்ட ஒரு அறிக்கை, “இரண்டு உலக வல்லரசுகளுக்கு இடையில் ‘பயங்கரவாதத்தின் சமநிலை’ மாறியதில் இருந்து அணு ஆயுத பயன்படுத்தல்கள் பற்றிய சூழல்களும் பெருமளவில் மாறிவிட்டிருக்கின்றன.” இதன் விளைவாக, “இரண்டாவது அணு யுகத்தில்’, “ஒரு மோதலில் முந்திக் கொண்டும், அத்துடன் தனித்துவமான வகையிலும் அவர்கள் எவ்வாறு ஒரு அணு ஆயுதத்தைப் பயன்படுத்தக் கூடும் என்று சிந்திப்பதும்” அடங்கியிருக்கிறது.

ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஜப்பான் தொடங்கி கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து வரையிலும் அத்தனை ஏகாதிபத்திய சக்திகளுமே உலகின் ஒரு புதிய வடிவத்தில் தமக்கான இடத்தை எதிர்நோக்கியிருக்கின்றன. ஜேர்மனிக்கும் அமெரிக்காவுக்கும் (இது ஐரோப்பாவை எந்தவொரு ஒற்றை சக்தியும் மேலாதிக்கம் செய்யும் நிலை வருவதைக் கண்டு அஞ்சுகிறது) இடையிலான வரலாற்றுவழியான குரோதம் என்ற இருபதாம் நூற்றாண்டின் இரண்டு உலகப் போர்களில் ஒரு முக்கிய காரணியாக இருந்த ஒன்று இப்போது மீண்டும் தன்னை திட்டவட்டமாக முன்நிறுத்திக் கொண்டிருக்கிறது. ஜேர்மனி “அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்தில் அதன் வெளியுறவுக் கொள்கையை வழிநடத்தியிருந்த கோட்பாடுகளை மீள்வாசிப்பு செய்ய” தள்ளப்படும் ஒரு “பெரும் ஐரோப்பிய சக்தி” என்ற நிலைக்குத் திரும்புகின்றதான ஒரு கொள்கையை ஜூன் மாதத்தில் ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான ஃபிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் கோடிட்டுக் காட்டினார். அமெரிக்காவுக்கு நேரடியானதொரு சவால் விடுக்கும் விதமாக, “ஒற்றைத்துருவ உலகம் குறித்த பிரமை தேய்ந்து விட்டது” என்று வலியுறுத்திய ஸ்ரைன்மையர், “நமது வரலாற்று அனுபவம் தேசிய பிரத்தியேகவாதத்தின் மீதுமான எந்த நம்பிக்கையையும் அழித்து விட்டிருக்கிறது” என்று கூறினார்.

31. போருக்கான உந்துதல் எதேச்சாதிகாரத்தின் வளர்ச்சியுடன் பிரிக்கவியலாத தொடர்புடையதாகும். “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்ற கட்டமைப்பின் கீழ், அமெரிக்க ஆளும் வர்க்கமானது, அத்தனை பெரிய முதலாளித்துவ நாடுகளின் ஆளும் வர்க்கங்களை போல, ஒட்டுமொத்த உலக மக்களையும் சட்டவிரோதமாகக் கண்காணிக்கின்ற ஒரு பரந்த இராணுவ-உளவு எந்திரத்தைக் கட்டியெழுப்பியிருக்கிறது. அமெரிக்காவில், உள்ளூர் போலிஸ் பில்லியன் கணக்கான டாலர்களை கொண்டு நவீன இராணுவ சாதனங்களின் வசதிகள் கொடுக்கப்பட்டிருப்பதோடு வருடத்திற்கு 1,000 க்கும் அதிகமான பேரைக் கொல்லுகின்ற ஒரு துணை-இராணுவப் படையாக உருமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. 2016 தேர்தலுக்கு பின்னர், போரின் பரந்தவொரு விரிவாக்கத்துக்கான திட்டங்களுடன் கைகோர்த்து, நிதியப் பிரபுத்துவ கொள்கைகளுக்கான அத்தனை எதிர்ப்புக்கும் எதிரான உள்நாட்டு ஒடுக்குமுறையும் தவிர்க்கவியலாமல் வரவிருக்கிறது.

வர்க்கப் போராட்டத்தின் உலகளாவிய மீளெழுச்சி

32. உற்பத்தியின் பூகோளளமயமாக்கமானது தேசிய-அரசுகளுக்கு இடையிலான மோதல்களை தீவிரப்படுத்தியது மட்டுமல்ல; அது சர்வதேச தொழிலாள வர்கக்த்தின் எண்ணிக்கையிலும் மிகப்பெரும் ஒரு அதிகரிப்புக்கு இட்டுச் சென்றிருக்கிறது. மெக்கன்சி குளோபல் இன்ஸ்டிடியூட்டின் சமீபத்திய ஒரு அறிக்கையின் படி, 1980க்கும் 2010க்கும் இடையிலான காலத்தில் உலகின் தொழிலாளர் சக்தி 1.2 பில்லியன் வரை அதிகரித்து சுமார் 2.9 பில்லியனாக வளர்ச்சி கண்டிருந்தது. “வளரும் பொருளாதாரங்களில்”, விவசாய வேலைகளில் இருந்து தொழிற்சாலை வேலைகளுக்கு வேலைவாய்ப்பு பாரிய அளவில் நகர்ந்திருக்கிறது. உலகளாவிய மொத்த வேலைவாய்ப்புகளில் விவசாயம்-சாராத வேலைகளின் பங்களிப்பு 1980 இல் 54 சதவீதமாக இருந்ததில் இருந்து இப்போது 70 சதவீதமாக உயர்வு கண்டிருக்கிறது.

33. உலகளவில், சரியும் ஊதியங்கள், சமூக வேலைத்திட்டங்களின் அழிப்பு மற்றும் பாரிய வேலைவாய்ப்பின்மை என தொழிலாள வர்க்கத்தின் மீது பொருளாதார நெருக்கடியின் தாக்கம் அழிவுகரமானதாக இருந்து வந்திருக்கிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் புள்ளிவிவரப்படி, உலகளாவிய வேலைவாய்ப்பின்மை 2015 இல் 197.1 மில்லியனை எட்டியது, இது நெருக்கடிக்கு முன்பிருந்ததை விட 25 மில்லியன் கூடுதலாகும். இந்த எண்ணிக்கை இந்த ஆண்டில் இன்னுமொரு 2.3 மில்லியனும் அடுத்த ஆண்டில் 1.1 மில்லியனும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேலைவயதில் இருக்கும் மனிதர்கள் வேலை கிடைக்கும் எதிர்பார்ப்பின்றி இருக்கும் எண்ணிக்கையும் 2015 இல் 26 மில்லியனாக இருந்ததில் இருந்து 2 பில்லியனுக்கும் அதிகமான எண்ணிக்கைக்கு கூர்மையாக அதிகரிப்பு கண்டிருக்கிறது. இளைஞர்களில் சுமார் 75 மில்லியன் பேர் வேலைவாய்ப்பற்றுள்ளனர், இளைஞர்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் வயது முதிர்ந்தவர்களில் இருப்பதை விட சுமார் மூன்று மடங்கு அதிகமாய் இருக்கிறது. இந்தக் காரணிகளும், இவற்றுடன் சேர்ந்து மோசமடைகின்ற ஒரு பொருளாதார நிலையுமாய், “சமூக அமைதியின்மையின் புதுப்பிக்கப்பட்ட அபாயங்கள்” குறித்து எச்சரிப்பதற்கு ILO ஐ இட்டுச் சென்றுள்ளது.

34. உலக நிலைமையின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று சர்வதேச அளவில் வர்க்கப் போராட்டம் மீளெழுச்சி கண்டுள்ளமை ஆகும். இந்த ஆண்டில், “பயங்கரவாதத்தின் மீதான போர்” எனும் வரையறையின் கீழ் கொண்டுவரப்பட்ட ஜனநாயக-விரோதச் சட்டத்திற்கு எதிராகவும், பிற்போக்குத்தனமான தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராகவும், பிரான்சிலும் பெல்ஜியத்திலும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. இச்சட்டங்கள் ஆளும் வர்க்கத்தின் கொள்கைகளுக்கான எதிர்ப்புகள் அனைத்தையும் ஒடுக்குவதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. உணவு வினியோகத்திற்கு எதிரான கலகங்களும் மடுரோ அரசாங்கத்திற்கு எதிரான மற்ற ஆர்ப்பாட்டங்களும் வெனிசூலாவை உலுக்கியிருக்கின்றன. பொதுக் கல்வி மீதான தாக்குதல்களுக்கு எதிரான வேலைநிறுத்த நடவடிக்கையை மெக்சிகோவில் ஆசிரியர்கள் தொடங்கியிருக்கின்றனர். கிரீசில் போலி-இடது சிரிசா கட்சியால் திணிக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான பொது வேலைநிறுத்தங்களை தொழிலாளர்கள் நடத்தியிருக்கின்றனர்.

35. சீனாவில் தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரும் அதிகரிப்பு கண்டுள்ளது. சீன தொழிலாளர் சுற்றிதழின் படி, 2011க்கும் 2013க்கும் இடையில் 1,200 வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் இருந்தன. 2014 இல் இந்த எண்ணிக்கை 1,300க்கும் அதிகமானதாகவும், 2015 இல் 2,700க்கும் அதிகமானதாகவும் அதிகரித்திருந்தது. 2016 பிப்ரவரிக்குள்ளாக, சுமார் 800 ஆக இந்த எண்ணிக்கை இருக்கிறது, அதாவது வருடாந்திரத்திற்கு மாற்றினால் 4,800 வரும்.

36. அமெரிக்காவில், சென்ற இலையுதிர்காலத்தில் அமெரிக்காவின் வாகன உற்பத்தித் தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தங்கள் விலைபேசப்பட்டதற்கு பாரிய எதிர்ப்பு எழுந்தமை, மற்றும் 2015 தொடக்கத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் மேற்கொண்ட ஒரு வேலைநிறுத்தம் ஆகியவற்றைப் பின்தொடர்ந்து இந்த ஆண்டில் 39,000 வெரிசோன் தொழிலாளர்களது வேலைநிறுத்தம் வந்தது. அத்துடன் இந்த ஆண்டில், டெட்ரோயிட், அட்லாண்டா, கோம்ப்டன், கலிபோர்னியா மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் பள்ளிகளின் சீர்குலைப்பு, சார்ட்டர் பள்ளிகளாக்குதல், மற்றும் தங்களது ஊதியம் மற்றும் நல உதவிகள் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை தொடக்கியிருக்கின்றனர்; ஃபிளின்ட் (Flint) வாசிகளின் ஆர்ப்பாட்டங்கள், நகரின் நீர் விநியோகம் நஞ்சாகியிருப்பதை தேசிய கவனத்திற்குக் கொண்டுவந்திருக்கின்றன.

37. அமெரிக்காவில் வேலைநிறுத்தங்கள் மற்றும் கதவடைப்புகளால் இழக்கப்பட்டிருக்கும் மனித-நாட்கள் குறித்த புள்ளிவிவரங்கள், வர்க்கப் போராட்டத்தின் வளைகோடு மேலெழுந்து சென்று கொண்டிருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த மனித-நாட்களின் இழப்பு எண்ணிக்கை 2013 இல் 200,000 ஆகவும், 2014 இல் 290,000 ஆகவும் இருந்தது. 2015 இல் இந்த எண்ணிக்கை 740,000க்கு தாவியது. எண்ணெய் தொழிலாளர்களின் வேலைநிறுத்தமும் ATI நிறுவனத்தின் உருக்குத் தொழிலாளர்களது நீண்ட கதவடைப்பு போராட்டமும் இதற்கு முக்கிய காரணமாகும். 2016 இன் முதல் பாதியில் மட்டும், வேலைநிறுத்தத்தில் தொலைந்த மனித நாட்களின் எண்ணிக்கை சுமார் 2 மில்லியனுக்கு அதிகரித்தது, வெரிசோன் நிறுவனத்தில் 54 நாட்கள் நடைபெற்ற புறக்கணிப்பு போராட்டம் இதற்கான முக்கிய காரணமாகும்.

38. தொழிலாளர் ஒப்பந்ததாரர்களாகவும் பெருநிறுவன நிர்வாகம் மற்றும் அரசின் கரங்களாகவும் செயல்பட்டு வந்திருக்கக் கூடிய தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் மீதான தங்கள் பிடியை இழந்து கொண்டிருப்பதன் அறிகுறிகள் பெருகிக் கொண்டிருப்பதுதான் ஆளும் வர்க்கத்திற்கு இன்னும் கூடுதலாய் மனஉளைச்சலைத் தருவதாக இருக்கிறது. சென்ற ஆண்டில் விட்டுக்கொடுப்பு ஒப்பந்தங்களுக்கு வாகன உற்பத்தித் தொழிலாளர்களிடையே எழுந்த பாரிய எதிர்ப்பு, மற்றும் டெட்ரோயிட் ஆசிரியர்கள், கிழக்கு கடற்கரை சுமைதூக்கிகள் மற்றும் Uber ஓட்டுநர்கள் ஆகியோரது திடீர் வேலைநிறுத்த நடவடிக்கைகள் ஆகியவையும் இந்த அறிகுறிகளில் அடங்கும். மேலும், பேர்னி சாண்டர்ஸின் பிரச்சாரத்திற்கு தொழிலாளர்களிடையே, இன்னும் குறிப்பாக இளைஞர்களிடையே எழுந்த பாரிய ஆதரவானது, ஆளும் உயரடுக்கிற்கு அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக, முதலாளித்துவ-விரோத மனோநிலை பரவலாய் வளர்ச்சி கண்டிருப்பதை வெளிப்படுத்தியிருக்கிறது.

39. வர்க்கப் போராட்டமானது உள்ளடக்கம் மற்றும் வடிவம் இரண்டிலுமே அதிகமான அளவில் உலகளாவியதாக ஆகிக் கொண்டிருக்கிறது. 1988 இல் அனைத்துலகக் குழு எழுதியது, “வர்க்கப் போராட்டமானது வடிவத்தில் மட்டுமே தேசியமயமானது, ஆனால்  உள்ளடக்கத்தில் அது ஒரு சர்வதேசப் போராட்டமாகும் என்பது மார்க்சிசத்தின் அடிப்படை முன்மொழிவாக நீண்டகாலமாய் இருந்து வந்திருக்கிறது. ஆயினும், முதலாளித்துவ அபிவிருத்தியின் புதிய அம்சங்களைக் கொண்டு பார்த்தோமேயானால், வர்க்கப் போராட்டத்தின் வடிவமும் கூட ஒரு சர்வதேச குணாம்சத்தை எடுத்தாக வேண்டும். தொழிலாள வர்க்கத்தின் மிக அடிப்படையான போராட்டங்களும் கூட அதன் நடவடிக்கைகளை ஒரு சர்வதேச மட்டத்தில் ஒருங்கிணைப்பதற்கான அவசியத்தை முன்நிறுத்துகின்றன.” தேசிய-அடிப்படையிலான கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் உருமாற்றம் குறித்த அனைத்துலகக் குழுவின் பகுப்பாய்வில் இருந்து பிறந்திருந்த இந்த மதிப்பீடு ஊர்ஜிதமாகிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் வர்க்கப் போராட்டத்தின் அபிவிருத்தியானது சர்வதேச அளவில் தொழிலாளர்கள் ஐக்கியப்படுவதன் அவசியத்தை முன்நிறுத்துகிறது.

40. உற்பத்தியின் பூகோளமயமாக்கத்திற்கும் வர்க்கப் போராட்டத்தின் மீளெழுச்சிக்கும், ஆளும் வர்க்கமானது தேசியவாதத்தின் மிக அதீத வடிவங்களுக்கு புத்துயிர் கொடுப்பதன் மூலம் பதிலிறுப்பு செய்து கொண்டிருக்கிறது. “தேசியவாத்தின் மூல ஊற்றுக்களே எதிர்காலத்திலான பயங்கர மோதல்களுக்கான சோதனைச்சாலைகளாகவும் இருக்கின்றன. ஒரு பசி கொண்ட புலியைப் போல, ஏகாதிபத்தியமானது ஒரு புதிய பயங்கர பாய்ச்சலுக்காகவே தனது சொந்த தேசியவாதப் புதருக்குள் பதுங்கியிருக்கிறது.” [லியோன் ட்ரொட்ஸ்கி, தேசியவாதமும் பொருளாதார வாழ்வும்]. உலகளாவிய ஒருங்கிணைந்துள்ள முதலாளித்துவத்தை சிக்கலுக்குள்ளாக்கும் முரண்பாடுகள் அசாதாரணமான கூர்மையைப் பெறுகின்ற அந்த புள்ளியில்தான், துல்லியமாய், முதலாளித்துவ வர்க்கமானது, ஏகாதிபத்தியப் போருக்கு ஆதரவாய் பரந்த மக்களை அணிதிரட்டும் முனைப்பில், தேசியவாத வெறியை கிளறிவிடுவதற்கு தன் சக்திக்குட்பட்ட அனைத்தையையும் செய்கிறது.

41. ஆஸ்திரியாவில் நவ-பாசிச சுதந்திரக் கட்சி, பிரான்சில் மரின் லு பென், பிரிட்டனில் ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சி, ஜேர்மனிக்கான மாற்று மற்றும் அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் ஆகிய அனைவருமே, மரபுவழியான “இடது” இவ் அமைப்புமுறையுடன் ஆழமாக சமரசப்பட்டு விட்டிருக்கிறது என்ற உண்மையை தமக்கு சாதகமாக சுரண்டிக் கொள்ள முனைந்து கொண்டிருக்கிறார்கள். இந்த சக்திகளை நோக்கி ஆளும்வர்க்கம் திரும்புவது பலத்தின் வெளிப்பாடு அல்ல மாறாக பலவீனத்தின் வெளிப்பாடே ஆகும். ஆளும் உயரடுக்குகள் அத்தனை திசைகளிலுமிருந்து முற்றுகைக்குள்ளாகி இருப்பதாக உணர்கின்றனர். அவர்கள் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தீவிரப்படலுக்கு முந்திக் கொண்டு, அதி-வலது சக்திகளை அணிதிரட்டுவதன் மூலமாக அதை நடவாமல் செய்ய முயற்சி செய்கின்ற அதேசமயத்தில் சமூக எதிர்ப்பின் மீது மேலும் வன்முறையான மற்றும் மிருகத்தனமான ஒடுக்குமுறைக்கான நிலைமைகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

அமெரிக்காவில் சமூக நெருக்கடி

42. அமெரிக்காவில் உள்ள தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக, ஏகாதிபத்திய போர் மற்றும் தேசியவாதத்தின் அத்தனை வடிவங்களுக்கும் எதிராய், சர்வதேச சோசலிசப் புரட்சி மூலோபாயத்தை கொண்டுவருவதே சோசலிச சமத்துவக் கட்சியின் பணியாகும். அனைத்துலகக் குழு, தனது வரலாறு முழுமையாக, அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரத்தின் மீது வலியுறுத்துவதில் தனித்துவத்துடன் இருந்து வந்திருக்கிறது. இந்த “உலக அரசியலின் உறங்கிக் கொண்டிருக்கும் பிரம்மாண்ட சக்தி” இப்போது விழித்தெழத் தொடங்குகின்றது.

43. அமெரிக்க முதலாளித்துவத்தின் நெருக்கடியும் அமெரிக்க ஆளும் வர்க்கத்தால் நடத்தப்பட்ட பல தசாப்த கால சமூக எதிர்ப்புரட்சியும் 1930களின் பெருமந்தநிலைக்கு முன்வந்த ஆண்டுகள் மட்டுமே விஞ்ச இயலக்கூடிய மட்டத்திற்கான சமூக சமத்துவமின்மை மட்டங்களை உருவாக்கியுள்ளன. அமெரிக்காவில் வேர்க்கஸ் லீக்  1995-96 இல் சோசலிச சமத்துவக் கட்சியாக மாறுகின்ற நிகழ்ச்சிப்போக்கை தொடங்கிய போது, “மக்களின் ஒரு சிறு சதவீதத்தினர் முன்கண்டிராத செல்வத்தை அனுபவிப்பதற்கும் உழைக்கும் மக்களின் பரந்த பெரும்பான்மையினர் பல்வேறு மட்டங்களிலான பொருளாதார நிச்சயமற்ற தன்மையிலும் துயரத்திலும் வாழ்ந்து கொண்டிருப்பதற்கும் இடையிலான பிளவு விரிந்து செல்வதானது” அரசியல் வாழ்வின் “மேலாதிக்கமான அம்சமாக” இருப்பதை அது சுட்டிக் காட்டியது. [டேவிட் நோர்த், வேர்க்கஸ் லீக்கும் சோசலிச சமத்துவக் கட்சியின் ஸ்தாபகமும், 1996] சமத்துவத்திற்கான போராட்டத்தின் புரட்சிகர முக்கியத்துவம் குறித்த அங்கீகரிப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட பெயரிலேயே பொறிக்கப்பட்டதாய் இருந்தது, அதனைத் தொடர்ந்து அனைத்துலகக் குழுவின் அத்தனை பிரிவுகளிலும் சோசலிச சமத்துவக் கட்சிகள் உருவாக்கப்பட்டன.

44. இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டிருந்த இந்த முடிவானது பெரும் தீர்க்கதரிசனமாக நிரூபணமாகியிருக்கிறது. சமூக சமத்துவமின்மைதான் அமெரிக்காவின் சமூக மற்றும் அரசியல் வாழ்வின் வரையறுக்கும் அம்சமாக இருக்கிறது. எட்டு ஆண்டுகளில், கணக்கில்லாத பணம் நிதிச் சந்தைகளில் பாய்ச்சப்பட்டதன் ஒரு விளைவாய், நாட்டில் 400 தனிப்பட்ட செல்வந்தர்களின் சொத்துமதிப்பு 2009 இல் 1.27 ட்ரில்லியன் டாலர்களாய் இருந்ததில் இருந்து சென்ற ஆண்டில் 2.34 ட்ரில்லியன் டாலர்களுக்கு அதிகரித்துச் சென்றிருக்கிறது. அதே காலகட்டத்தில், முழு-நேர வேலைகளின் எண்ணிக்கை உண்மையில் வீழ்ச்சி கண்டிருக்கிறது: 2009 முதலாய் வேலைவாய்ப்பில் அதிகரித்திருக்கின்ற ஒட்டுமொத்த எண்ணிக்கையுமே தற்காலிக, ஒப்பந்த, பகுதி-நேர மற்றும் அவ்வப்போதைக்கான உழைப்பின் பிற வடிவங்களில்தான் அதிகரித்துள்ளது.

45. குறைந்த ஊதியங்கள், வறுமை, கடன், பொருளாதார பாதுகாப்பின்மை: இவைதான் அமெரிக்க மக்களின் பரந்த பெரும்பான்மைக்கான யதார்த்தமாய் இருக்கிறது. ஏழில் ஒருவர் உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டின் கீழ் வருகிறார், குழந்தைகளில் ஐந்தில் ஒருவர் இதில் வருகின்றனர். வேலைவாய்ப்பின்மை விகிதத்திலான உத்தியோகபூர்வ வீழ்ச்சி எண்ணிக்கை உண்மையான வேலைவாய்ப்பின்மை நிலை மற்றும் வேலை பாதுகாப்பின்மையை மறைப்பதாக உள்ளது. மில்லியன் கணக்கான மக்கள் வேலை கண்டடையும் நம்பிக்கையை விட்டு விட்டதன் விளைவாக, உற்பத்தியில் பங்கெடுக்கும் விகிதம் —இது பொருளாதாரத்தின் நிலை குறித்த ஒரு கூடுதல் துல்லியமான அளவுகோலாகும்— 63 சதவீதமாக இருக்கிறது, இது 38 வருடத்தின் குறைந்த அளவுக்கு நெருங்கிய அளவாகும்.

46. “மீட்சிக்காலம்” என்றழைக்கப்பட்ட 2009 மற்றும் 2014க்கு இடையிலான காலத்தில் முழுமையாகவே ஊதியங்கள் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு, உண்மையான ஊதியம் 4 சதவீதம் வரை குறைந்திருக்கிறது. மிகக் குறைந்த வருவாய் ஈட்டும் பிரிவில் இருப்பவர்கள்  இந்தக் காலகட்டத்தில் தமது ஊதியங்கள் 5.7 சதவீதம் வரை வீழ்ச்சியடையக் கண்டுள்ளனர். ஒருகாலத்தில் தொழிலாள வர்க்கத்தின் மற்ற பிரிவுகளுக்கான நிர்ணய அளவுகோலாய் இருந்த உற்பத்தித்துறை தொழிலாளர்களின் ஊதியங்கள் இப்போது சராசரியாய் மணிக்கு 15.66 டாலர்களாய் இருக்கிறது. இது அனைத்து வேலைத்துறைகளின் சராசரி ஊதியத்தில் இருந்து 7.7 சதவீதம் குறைவானதாகும்.

47. இன்னும் சொன்னால், சமூகத்தின் சிதைவு மற்றும் நிர்க்கதி நிலையின் விளைபொருட்களான போதைமருந்து மிகையாக உட்கொள்ளல், கல்லீரல் நோய்கள் மற்றும் தற்கொலை ஆகிய காரணங்களால் கணிப்பு ஆயுள் வீழ்ச்சி கண்டிருப்பது என்பது பரந்த பெரும்பான்மை மக்களின் நிலைமைகளில் ஏற்பட்டிருக்கின்ற வீழ்ச்சியின் மிகத் தெளிவான வெளிப்பாடாகும். மக்களின் மிக வசதியான 1 சதவீதத்திற்கும் ஏழ்மையான மிக 1 சதவீதத்தினருக்கும் இடையிலான கணிப்பு ஆயுளிலான இடைவெளியானது இப்போது ஆண்களில் சராசரியாக 14.6 சதவீதமாகவும் பெண்களில் 10.1 சதவீதமாகவும் இருக்கிறது. கணிப்பு ஆயுட்காலத்திலான வீழ்ச்சி குறிப்பாக வெள்ளை தொழிலாள வர்க்க ஆண்களை பாதித்திருக்கிறது: வெள்ளை இனத்தவரில் உயர்நிலைப் பள்ளிப் படிப்புக்கு மேல்  அதிகம் படித்திராதவர்களில் 45 முதல் 54 வயது வரையானவர்களின் இறப்புவிகிதம் 1999க்கும் 2014க்கும் இடையிலான  காலத்தில் 100,000 பேருக்கு 134 பேர் வரை அதிகரித்தது. “வெள்ளை தனிச்சலுகை நிலை” மற்றும் “ஆண் தனிச்சலுகை நிலை” நிலவுவதாக போலி-இடது சக்திகள் கூறுவதை இது தகர்க்கிறது.

48. வயதானவர்களுக்கு ஆரோக்கிய பராமரிப்பை வழங்கும் செலவுகளைக் குறைப்பதற்கான அவசிய அம்சமாக கணிப்பு ஆயுளிலான ஒரு சரிவை ஆளும் வர்க்கத்தின் மூலோபாய நிபுணர்கள் காண்கின்றனர். ஒபாமா நிர்வாகத்தின் பிரதான உள்நாட்டு முன்முயற்சியான ஒபாமாகேர் உள்ளிட்ட ஆரோக்கியப் பராமரிப்பு மீதான தாக்குதலானது இந்த நிகழ்முறையை துரிதப்படுத்துவதை நோக்கமாய் கொண்டுள்ளது. ஆரோக்கியப் பராமரிப்புத் திட்டங்களை வெட்டுவதற்கு நிறுவனங்களை ஊக்குவிப்பது; மருந்துகள், பரிசோதனைகள் மற்றும் மருத்துவ நடைமுறைகளை வரம்புபட்ட விநியோகத்திற்கு உட்படுத்துவது; மற்றும் அரசாங்கம் நடத்தும் காப்பீடு பரிவர்த்தனைகளின் மீது தனியார் நிறுவனங்களிடம் இருந்து விலைஅதிகமான மற்றும் பற்றாக்குறையான காப்புறுதிகளை வாங்குவதற்கு தனிநபர்களை நிர்ப்பந்தம் செய்வது ஆகியவற்றின் மூலம் ஆரோக்கிய பராமரிப்புச் செலவுகளை பெருநிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்திடம் இருந்து உழைக்கும் மக்களின் முதுகின்மேல் ஏற்றுவதுதான் கட்டுப்படியாகும் பராமரிப்புச் சட்டத்தின் மையமான நோக்கமாய் இருந்து வந்திருக்கிறது.

49. இளைஞர்களின் நிலைமை குறிப்பாக படுபரிதாபமாய் இருக்கிறது. விண்ணை முட்டும் கல்விக் கட்டணங்கள், சரிந்து செல்கின்ற ஊதியங்கள் மற்றும் அரசு உதவியிலான வெட்டுகள் ஆகியவற்றின் விளைவாய், மாணவர் கடன் அளவு மலைக்க வைக்கும் 1.3 ட்ரில்லியன் டாலர்களை எட்டியிருக்கிறது. சுமார் 40 மில்லியன் அமெரிக்கர்களுக்கு மாணவர் கடன் உள்ளது, இவர்களில் சுமார் 7 மில்லியன் பேர் 2015 ஆம் ஆண்டின் தங்கள் கூட்டரசாங்க மாணவர் கடன்களைச் செலுத்த இயலாமல் இருக்கின்றனர். 2014 இல்  இருந்தான அளவிலிருந்து இது 6 சதவீதம் அதிகமாகும். அமெரிக்காவில் வீடற்ற மாணவர்களின் எண்ணிக்கை இப்போது 1.7 மில்லியனாக இருக்கிறது, இது ஒரு தசாப்தத்திற்கு முன்பிருந்த அளவைக் காட்டிலும் இரட்டிப்பாகும். வீட்டு விலைகள் மற்றும் வாடகைகளின் அதிகரிப்பாலும், சரிந்து செல்கின்ற ஊதியங்களாலும் மற்றும் பாரிய வேலைவாய்ப்பின்மையாலும், அமெரிக்கர்களின் ஒரு ஒட்டுமொத்தத் தலைமுறையும் ஒரு வீடு வாங்க இயலாத நிலையில் அல்லது ஒரு குடும்பத்தைத் தொடக்கவியலாத நிலையில் உள்ளது. அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக, இளம் தலைமுறையின் நிலை அவர்களது பெற்றோர் மற்றும் தாத்தாக்கள் காலத்து நிலையை விடவும் மோசமாய் இருக்கிறது.

50. இதனிடையே, வயதான தொழிலாளர்கள் தமது ஓய்வூதியமும் ஆரோக்கியப் பராமரிப்புத் திட்டங்களும் சூறையாடப்பட்டு, ஓய்வுபெறுவதைச் சாத்தியமில்லாததாக ஆக்குகின்ற நிலையைக் கண்டுவருகின்றனர். 55 வயது அல்லது அதற்கும் கூடுதல் வயதான அமெரிக்கர்களில் சுமார் 35 சதவீதம் பேருக்கு எந்த ஓய்வூதிய நிதிகளோ அல்லது ஒரு வழக்கமான ஓய்வூதியத் திட்டமோ இல்லை. 55 மற்றும் 64 வயதுக்கு இடையில் இருக்கின்ற பணசேமிப்பைக் கொண்டுள்ளவர்களுக்கு, சராசரித் தொகை மாதத்திற்கு 310 டாலருக்குச் சமமான அளவிலேயே இருக்கிறது. 25 முதல் 64 வயதுக்கு இடையிலுள்ளோரின் “ஓய்வூதிய சேமிப்புப் பற்றாக்குறை” 6.8 ட்ரில்லியன் டாலர் முதல் 14 ட்ரில்லியன் டாலர் வரை இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்தது. இதன்விளைவாக, வயதான தொழிலாளர்களிடையே வறுமை அதிகரித்துச் செல்கின்ற அதேநேரத்தில், பல தொழிலாளர்களும் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு தொடர்ந்தும் வேலைசெய்யத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

50. சமூக நெருக்கடியை உணர்த்தும் இத்தகைய குறியீடுகளின் பின்னால், பெருநிறுவனக் கொள்ளையாலும் வரவு-செலவுத் திட்ட வெட்டுகளாலும் நாசம் செய்யப்பட்ட உள்கட்டமைப்பின் உருக்குலைவும் மற்றும் பரந்தவொரு சிதைவும் அமைந்திருக்கிறது. காரியம் கலந்த தண்ணீரால் Flint நகரில் ஆயிரக்கணக்கான தொழிலாள வர்க்கக் குடும்பங்களும் அவற்றின் பிள்ளைகளும் நஞ்சூட்டப்பட்டிருப்பது அம்பலப்பட்டிருப்பதானது நாடெங்கிலும் குடிநீர் அமைப்புமுறையின் அவலமான நிலையின் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது. ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் தொழிற்சங்கங்களின் உதவியுடன் பொதுப் பணத்தை இலாப நோக்கத்தினைகொண்ட சார்ட்டர் பாடசாலைகளுக்கு பாய்ச்சி விடுவதால் அரசுப் பள்ளிகள் நிதியின்றித் தவிக்கின்றன.

2016 அமெரிக்கத் தேர்தல்

51. வெளிநாடுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெடிப்பும் அமெரிக்காவிற்குள்ளாக தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலுமாய் இணைந்து 2016 தேர்தலின் அதீத நிச்சயமற்றதன்மைக்கான பின்புலத்தினை உருவாக்குகின்றன. அனைத்துக்கும் மேலாய் சமூக கோபத்தினாலும் எதிர்ப்பினாலும் குணாம்சப்படுத்தப்படுகின்ற ஒரு முதனிலை நிகழ்ச்சிப்போக்கில், ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும், வெவ்வேறு வகைகளில் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் ஊழல் மற்றும் குற்றவியல் தன்மையின் உருவடிவமாய் விளங்குகின்ற இருவரை தமது வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளனர். நவம்பரில் தேர்ந்தெடுக்கப்படுவது யாராய் இருந்தாலும், உலகப் போருக்கோ அல்லது சோசலிசப் புரட்சிக்கோ இட்டுச் செல்கின்ற முரண்பாடுகளைத் தீர்க்கும் திறனற்றவராகவே அவர் இருப்பார்.

52. முதலாளித்துவ ஆட்சியின் நெருக்கடியின் கீழே தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பரந்தவொரு தீவிரமயப்படலும், ஒட்டுமொத்த அரசியல் அமைப்புமுறைக்கு எதிரான குரோதமும் கீழமைந்திருக்கிறது. முதனிலைத் தேர்தல்களின் போது நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், மக்களில் 58 சதவீதம் பேர் தங்களுக்கு முன் நிறுத்தப்பட்டிருக்கும் குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் மற்றும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் மீது அதிருப்தி நிலவுவதாகக் கூறியிருந்தனர்; இதில் 55 சதவீதம் பேர் ஒரு சுயேச்சை ஜனாதிபதிப் பிரச்சாரத்திற்கு ஆதரவாய் கருத்துத் தெரிவித்திருந்தனர். இதில் மலைக்க வைக்கும் அளவுக்கு 91 சதவீத வாக்காளர்கள் 29 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களாய் இருந்தனர். உலக முதலாளித்துவத்தின் மையத்தில், கூடுதலான இளைஞர்கள் தங்களை முதலாளித்துவவாதிகளாய் கருதுவதை விடவும் சோசலிஸ்டுகளாய் கருதுவதாய் கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன. சுகாதாரப் பராமரிப்பு, உணவு மற்றும் உறைவிடம் ஆகிய அடிப்படைத் தேவைகள் அரசாங்கத்தினால் உத்தரவாதம் அளிக்கப்படுகின்ற சமூக உரிமைகளாக இருக்க வேண்டும் என மக்களின் அதிகரித்துச் செல்லும் சதவீதத்தினர் நம்புகின்றனர். வசதிபடைத்தவர்களுக்கு வரிகளை அதிகரிப்பதற்கு பெருவாரியான ஆதரவு இருக்கிறது.

53. சோசலிச சிந்தனைகள் பல தசாப்தங்களாய் ஒடுக்கப்பட்டிருந்த ஒரு நாட்டில், மில்லியன் கணக்கான மக்கள் முதலாளித்துவத்திற்கான ஒரு மாற்றை எதிர்நோக்கத் தொடங்குகின்றனர் என்பதையே சாண்டர்சுக்கான ஆதரவு எடுத்துக்காட்டியது. ஆயினும், அவரது பிரச்சாரத்தின் ஆரம்பம் தொட்டே, தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் சாண்டர்ஸ் எந்த முன்னோக்கிய பாதையையும் காட்டவில்லை என்பதை சோசலிச சமத்துவக் கட்சியும் உலக சோசலிச வலைத் தளமும் எச்சரித்தன. 2016 பிப்ரவரியில், நியூ ஹாம்ப்ஷயர் முதனிலைப் போட்டியில் சாண்டர்ஸ் ஒரு மிகப்பெரும் வெற்றியை பெற்றதனை தொடர்ந்து நாங்கள் எழுதினோம், “சாண்டர்ஸ் பேசுவது தொழிலாள வர்க்கத்திற்காய் அல்ல, மாறாக சமூக எதிர்ப்பை அச்சத்துடன் பார்த்து அதனை மட்டுப்படுத்துவதற்கான ஏதேனும் வழியை எதிர்நோக்குகின்ற ஆளும் வர்க்கம் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் ஒரு பிரிவுக்காகவே அவர் பேசுகிறார்.”

54. சாண்டர்ஸ், தனது பிரச்சாரம் முழுமையிலும், போர் மற்றும் இராணுவவாதம் குறித்த எந்த விவாதத்தையும் தவிர்த்த அதேநேரத்தில், ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கிலான போர்கள், ஆளில்லா விமானக் குண்டுவீச்சுகள் மற்றும் ரஷ்யாவுடனான மூர்க்கமான மோதல் உள்ளிட ஒபாமா நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கைக்கான தனது ஆதரவையும் பிரகடனம் செய்தார். அவரது உள்நாட்டு வேலைத்திட்டம் மெல்லிய சீர்திருத்தவாத திட்டஆலோசனைகளுடன் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது, அத்துடன் வங்கிகள் மற்றும் முக்கிய பெருநிறுவனங்களை தேசியமயமாக்குவது உள்ளிட முதலாளித்துவ அமைப்புமுறையை சவால் செய்கின்ற எந்த நடவடிக்கைகளையும் அவர் நிராகரித்தார். அமெரிக்காவிற்குள்ளான சமூக நெருக்கடிக்கான மூலாதாரம் என்று கூறி சீனா மற்றும் பிற நாடுகளுடனான வர்த்தக உடன்படிக்கைகளை கண்டனம் செய்து டொனால்ட் ட்ரம்புக்கும் முன்னதாக சாண்டர்ஸ் ஒரு பொருளாதார தேசியவாத வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துக் கொண்டிருந்தார்.

55. கிளிண்டனை வழிமொழிவதில் வந்து உச்சம்கண்ட சாண்டர்ஸின் பிரச்சாரம், மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஒரு அதிமுக்கியமான அரசியல் அனுபவமாக இருந்து வந்திருக்கிறது. ஜனநாயகக் கட்சியை உருமாற்ற முனைவதின் பயனற்ற தன்மையை அது இன்னுமொரு முறை எடுத்துக்காட்டுவதாக இருந்தது. ஆயினும், சாண்டர்ஸ் பிரச்சாரத்திற்கு ஆதரவளித்ததில் வெளிப்பாட்டைக் கண்ட சமூக மற்றும் அரசியல் துன்பங்கள் எங்கும் போய்விடாது. அவை மீண்டும் வெடிப்பான மற்றும் தீவிரப்பட்ட வடிவங்களில் வெளிப்படும்.

56. சாண்டர்ஸ் கிளிண்டனை ஆதரிப்பதால், எதிர்ப்பினை ஜனநாயகக் கட்சியின் பின்னால் அணிவகுக்கச் செய்வதற்கான ஒரு புதிய அரசியல் சட்டகத்தினை உருவாக்குவதற்கான முயற்சிகளும் கூட நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சாண்டர்ஸை ஊக்கத்துடன் ஆதரித்த அமைப்புகளில் சில இப்போது பசுமைக் கட்சியையும் அதன் வேட்பாளரான ஜில் ஸ்ரைனையும் ஆதரித்துக் கொண்டிருக்கின்றன. பசுமைக் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவதற்கு சாண்டர்ஸ் உடன்படுவாரேயானால் தான் வழிவிடுவதற்கும் தயார் என்று ஸ்ரைன் முன்னதாகக் கூறியிருந்தார். உத்தியோகபூர்வமாக சுயேச்சை வேட்பாளர்களை நிறுத்துவதன் மூலமாக, ஜனநாயகக் கட்சியினரை மேம்பட்ட வகையில் இடது திசையில் தள்ள முடியும் என்பதாய் கூறி, பசுமைக் கட்சி, ஜனநாயகக் கட்சிக்கு ஒரு அரசியல் முட்டுத்தூணாக நீண்ட காலமாய் செயல்பட்டு வந்திருக்கின்ற ஒரு முதலாளித்துவக் கட்சி ஆகும். சர்வதேச அளவில், பசுமைக் கட்சியினர் அதிகாரத்திற்கு வந்த சமயத்தில், குறிப்பாக ஜேர்மனியில், அவர்கள் சிக்கன நடவடிக்கை மற்றும் போர்க் கொள்கைகளை ஆதரித்து வந்திருக்கின்றனர்.

57. ஒருசில சீர்திருத்தங்கள், பொருளாதார தேசியவாதம் மற்றும் நுகர்வைக் குறைப்பதற்கும் “பொறுப்பான” பெருநிறுவனங்களை ஊக்குவிப்பதற்குமான பிற்போக்குத்தனமான ஆலோசனைமொழிவுகள் இவற்றின் ஒரு தேர்ந்தெடுத்த கலவையே அமெரிக்க பசுமைக் கட்சியின் வேலைத்திட்டம் ஆகும். இது உற்பத்தியின் தனியார் உடைமையை எதிர்ப்பதில்லை என்பதுடன், பெருநிறுவன மற்றும் நிதி உயரடுக்கின் நலன்களை குறிப்பிடும்படி சவால் செய்யக் கூடிய எதுவொன்றையும் ஆலோசனை வைப்பதில்லை.

58. சோசலிச சமத்துவக் கட்சியின் ஜெர்ரி வைட் மற்றும் நீல்ஸ் நிமூத்தின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரமானது, அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் எழுந்து வருகின்ற போராட்டங்களுக்கான அடித்தளங்களை தயாரிப்பு செய்வதற்காக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஒரு புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவதை நோக்கமாய்க் கொண்டிருக்கிறது. போர், சமூக சமத்துவமின்மை மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்திற்கு முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அணிதிரட்டல் அவசியமாக இருக்கிறது என்று சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகின்றது. வங்கிகள் மற்றும் முக்கிய பெருநிறுவனங்களைத் தேசியமயமாக்குவது; பெருநிறுவன மற்றும் நிதிய உயரடுக்கின் சொத்துகளைப் பறிமுதல் செய்வது; இராணுவ மற்றும் போலிஸ்-அரசு வேவு எந்திரத்தை பிரித்தகற்றுவது ஆகியவை உள்ளிட்ட உண்மையான சோசலிசக் கொள்கைகளுக்கான எமது பிரச்சாரம் இதுபற்றி தொழிலாளர்களை பயிற்றுவிப்பதற்கான போராட்டமாகும். ஏகாதிபத்திய போருக்கு எதிராய் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்காக SEP போராடும். தொழிலாளர்களும் இளைஞர்களும் எதிர்கொண்டு நிற்கும் வரலாற்றுப் பிரச்சினைகள் எதுவுமே, தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கையிலெடுப்பது மற்றும் ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தையும் தனியார் இலாபத்திற்காய் அல்லாமல் சமூகத் தேவை மற்றும் பகுத்தறிவான திட்டமிடல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உருமாற்றுவது ஆகியவற்றுக்கு வெளியே தீர்க்கப்பட இயலாது என்பதை அவர்களுக்கு அது விளக்கிக் கூறும்.

வலது-சாரி இனவாத மற்றும் பாலின அடையாள அரசியல்

59. சாண்டர்ஸிற்குக் கிடைத்த ஆதரவின் வீச்சு ஆளும் வர்க்கத்தை அச்சமடையச் செய்திருக்கிறது-சாண்டர்ஸ் மீது கொண்ட அச்சத்தால் அல்ல, மாறாக வர்க்கப் பிரச்சினைகள் அதிகமான அளவில் முன்னிலைக்கு வந்து கொண்டிருக்கின்றன என்ற உண்மையை அது வெளிப்படுத்தியது என்ற காரணத்தால். பிரான்சிஸ் புகுயாமா, சமீபத்திய வெளியுறவு விவகாரங்கள் இதழ் ஒன்றில் கருத்திட்டார்: “இந்தத் தேர்தலின் உண்மையான தலையங்கமாக இருப்பது என்னவென்றால், மக்களின் பெரும்பான்மையானோர் அனுபவித்த சமத்துவமின்மையின் அதிகரிப்பு மற்றும் பொருளாதார மந்தநிலைக்கு அமெரிக்க ஜனநாயகம் இறுதியில் பதிலிறுப்பு அளித்துக் கொண்டிருக்கிறது. சமீபத்திய தேர்தல்களில் ஆதிக்கம் செலுத்திய நிறம், இனம், பாலினம், பாலின நோக்குநிலை, பூகோளம் ஆகிய மற்ற சிற்சிறு பிளவுகளைக் கீழழுத்தி சமூக வர்க்கமானது மீண்டும் அமெரிக்க அரசியலின் இருதயத்தானத்திற்குத் திரும்பியிருக்கிறது.

60. ஆளும் வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதிகளைப் பொறுத்தவரை, இந்த போக்கு மீண்டும் அகற்றப்பட்டாக வேண்டும். விவாதப் பொருள் மீண்டும் சமூக அசமத்துவத்தில் இருந்து மாற்றப்பட்டு நிறம், பால் மற்றும் பாலின அடையாளத்திற்கு மாற வேண்டும். இந்தக் காரணத்திற்காகத் தான் ஊடகங்களும் ஜனநாயகக் கட்சியும், பாலினத்தை மாற்றிக்கொண்டவர்கள் கழிப்பறைகளுக்கு செல்லும் உரிமை மற்றும் இராணுவத்தில் பங்குபெறுதல், வளாகங்களில் பாலின வன்முறை பரவி வருவதாகச் சொல்லப்படுவது, மற்றும் அமெரிக்காவில் நிற வெறுப்பு மற்றும் மோதல் மீண்டும் எழுச்சி கண்டுள்ளதாகக் கூறப்படுவது ஆகிய பிரச்சினைகளின் மீது இடைவிடாமல் கவனத்தைக் குவித்து வந்திருக்கின்றன.

61. குறிப்பாக, அமெரிக்காவில் போலிஸ் வன்முறைப் படுகொலையின் பரவலை ஊடகங்களும் ஜனநாயகக் கட்சியும் அணுகும்விதம் சிடுமூஞ்சித்தனமானதாக இருக்கிறது. வர்க்க ஆட்சியின் ஒரு சாதனமாக போலிசின் ஒரு இயல்பின் வெளிப்பாடாக இது சித்தரிக்கப்படுவதில்லை, மாறாக வெள்ளை இனத்தவர் ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் மீது கொண்ட வஞ்சத்தின் வெளிப்பாடாக சித்தரிக்கப்படுகிறது. ஒன்றையொன்று புரிந்து கொள்ள இயலாத இரண்டு தனி தேசங்களாய் “வெள்ளை அமெரிக்கா”வுக்கும் “கறுப்பு அமெரிக்கா”வுக்கும் இடையில் பரந்த பிளவு இருப்பதாக ஊடக பண்டிதர்கள் திட்டவட்டம் செய்கின்றனர். வெள்ளை தொழிலாளர்கள் பிற்போக்கானவர்களாகவும் நிறவெறி கொண்டவர்களாகாவும் சித்தரிக்கப்பட்டு, அவர்களது அத்தனை சமூக மற்றும் பொருளாதார துன்பங்களும் “தனிச்சலுகை” மற்றும் அதிகாரம் கொண்ட ஒரு கடந்த காலத்திற்குத் திரும்ப அவர்கள் கொண்ட ஆசையினால் உந்தப்படுவதாக காட்டப்படுகிறது.

62. அமெரிக்கா “வெள்ளை அமெரிக்கா”வாகவும் “கறுப்பு அமெரிக்கா”வாகவும் பிரிந்து கிடப்பதாகக் கூறப்படுவதை அல்லது அத்தனை “வெள்ளை” இனத்தவரும் தனிச்சலுகைகளை அனுபவித்து வருவதாகக் கூறப்படுவதை சோசலிச சமத்துவக் கட்சி நிராகரிக்கிறது. நாடு இன துவேசத்தில் நிரம்பிக் கிடப்பதாகக் கூறப்படும் விவரிப்பை நாம் நிராகரிக்கிறோம். தெற்கில் ஜிம் குரோ பிரிவினை மற்றும் வடக்கில் பரவலான இனவாத பாகுபாட்டின் காலகட்டத்தில் இருந்தே மக்களின் பொதுவான நனவில் ஒரு பிரம்மாண்டமான அபிவிருத்தி இருந்து வந்திருக்கிறது. அத்தனை இனங்களையும் சேர்ந்த மக்களும் இணைந்து வாழ்கின்றனர் அன்றாடம் ஒருவருரோடொருவர் இணைந்துள்ளனர் மற்றும் வறுமை, வேலைவாய்ப்பின்மை மற்றும் ஊதியங்கள் மற்றும் நல உதவிகள் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றுக்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்திற்கு முகம்கொடுக்கின்றனர்.

63. போலிஸ் வன்முறையின் குறிப்பான பிரச்சினையை எடுத்தோமென்றால், போலிஸ் கொலைகளில் பொருத்தமற்ற சதவீதத்திற்கு ஆபிரிக்க-அமெரிக்கர்கள் இருக்கின்ற அதேசமயத்தில், கொல்லப்படுபவர்களின் அதிகமான எண்ணிக்கையினர் வெள்ளை இனத்தவரே. ஆனால் வெள்ளை இளைஞர் போலிசால் கொல்லப்படுவது பொதுவாக எந்த ஊடக வெளிச்சத்தையும் பெறுவதில்லை, ஏனென்றால் அது இனவாத விவரிப்புக்கு ஊர்ஜிதம் செய்யக் கூடியதாக இருக்காது என்பதால். கார்டியன் செய்தித்தாள் தொகுத்திருக்கும் தரவின் படி, ஜூலை மத்தி வரை போலிசால் கொல்லப்பட்ட 587 பேரில், 145 பேர் கறுப்பினத்தவர், 94 பேர் ஹிஸ்பானிக், 292 பேர் வெள்ளை இனத்தவர். ஒட்டுமொத்த மக்களின் சதவீதத்திலான எண்ணிக்கையில் பார்த்தால், போலிஸ் ஆப்பிரிக்க-அமெரிக்கர்களின் ஏறக்குறைய அதே வீதத்திற்கு பூர்விக அமெரிக்கர்களைக் குறிவைத்திருக்கிறது.

64. மேலும், டெட்ரோயிட் மற்றும் ஃபிளிண்ட் போன்ற நகரங்களில் போலிஸ் வன்முறையும் சமூக துன்பங்களும் அடிப்படையாக நிறவெறியின் விளைபொருளாக இருப்பதாகக் கூறுவது, ஆப்பிரிக்க-அமெரிக்க மேயர்கள், நகர சபையினர் மற்றும் போலிஸ் தலைவர்களின் எண்ணிக்கை பரவலால் பொய்யாக்கப்படுகிறது. கடந்த ஏழரை ஆண்டுகளாய் அமெரிக்காவின் தலைமையில் ஒரு ஆப்பிரிக்க-அமெரிக்க ஜனாதிபதி இருந்து வந்திருக்கிறார், அவர் அத்தனை இனங்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களிலுமான பரந்த சீரழிவை மேற்பார்வை செய்திருக்கிறார் என்பதோடு போலிஸ் வன்முறை முன்னெப்போதினும் விட இன்று மிக அதிகமாய் இருக்கிறது. நிறவெறி போலிஸ் கொலைகளில் குறிப்பாக ஒரு பாத்திரத்தை ஆற்றுகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆயினும், நிறவெறி நிலவுகின்ற மட்டத்திற்கு, அது ஆளும் வர்க்கத்தின் சொத்துகளைப் பாதுகாப்பதற்கான ஒரு கருவியாக போலிஸ் ஆற்றும் சமூக மற்றும் அரசியல் செயல்பாட்டுடன் பிணைந்ததாக இருக்கிறது. ஆகவே, நிறவெறி மற்றும் போலிஸ் கொலைக்கு எதிரான போராட்டத்திற்கு பொதுவான வர்க்க நலன்களின் அடிப்படையில் அத்தனை தொழிலாளர்களின் ஒரு ஐக்கியப்பட்ட இயக்கம் அவசியமாக உள்ளது.

65. நிறவெறி அரசியலின் ஊக்குவிப்பு என்பது தொழிலாள வர்க்கத்தின் ஒரு பிரிவை இன்னொரு பிரிவுக்கு எதிராய் களமிறக்குவது என்கிற உலகளாவிய மூலோபாயம் அமெரிக்காவிற்குள் எடுத்துள்ள வடிவமே ஆகும்.  ஜனநாயகக் கட்சியின் அடையாள அரசியல், ட்ரம்ப்பின் பொருளாதார தேசியவாதம் (இது சாண்டர்ஸின் தேசியவாத வேலைத்திட்டத்திற்கு இணைசொல்லக் கூடியது) இரண்டுமே தொழிலாள வர்க்கத்தை அனைத்து தேசிய, பாலின மற்றும் நிற ரீதிகளைத் தாண்டி அதன் நலன்கள் புறநிலையாக ஐக்கியப்படுவது குறித்து நனவு பெற விடாமல் தடுப்பதற்கான முயற்சிகளே ஆகும். இவ்வாறாக நிறவெறி மற்றும் அடையாள அரசியலுக்கு எதிரான போராட்டமானது அசமத்துவம், போர் மற்றும் சர்வாதிகாரம் ஆகியவற்றின் மூலவளமான உலக முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான SEP இன் போராட்டத்தின் ஒரு மூலபாகமாக அமைந்திருக்கிறது.

மார்க்சிசம் Vs. போலி-இடது

66. இன்று முதலாளித்துவ ஆட்சியின் ஸ்திரத்தன்மைக்கு மையமானதாய் அமைந்திருக்கக் கூடிய இனவாத மற்றும் அடையாள அரசியலானது ICFI “போலி-இடதுகள்” என வரையறை செய்யும் மார்க்சிச-விரோத அமைப்புகளாலும் தத்துவார்த்த போக்குகளாலும் பல தசாப்த காலங்களில் அபிவிருத்தி செய்யப்பட்டவையே ஆகும். கடந்த பல ஆண்டுகளின் போது, சர்வதேச தொழிலாள வர்க்கமானது போலி-இடதுகளின் ஏகாதிபத்திய ஆதரவு மற்றும் தொழிலாள வர்க்க குணத்தை விளங்கப்படுத்துகின்ற ஏராளமான அதிமுக்கிய அனுபவங்களின் வழி கடந்து வந்திருக்கிறது. எகிப்தில், ஹோஸ்னி முபாரக்கின் சர்வாதிகாரத்திற்கு எதிரான புரட்சிகர இயக்கத்தை தடம்புரளச் செய்ததில் அவற்றின் பாத்திரம்; லிபியாவில் நேட்டோ தலைமையிலான போருக்கும் சிரியாவில் சிஐஏ ஆதரவுடனான உள்நாட்டு யுத்தத்திற்கும் அவை ஆதரவு அளித்தமை; உக்ரைனில் வலது-சாரி கவிழ்ப்பு சதிக்கு அவை ஆதரவளித்தமை; மற்றும் எல்லாவற்றுக்கும் மேல், கிரீசில் சிரிசாவின் (தீவிர இடதுகளின் கூட்டணி) நடவடிக்கைகள் ஆகியவையும் இதில் அடங்கும்.

67. 2015 ஜனவரியில், ஐரோப்பிய ஒன்றிய உத்தரவிலான சிக்கன நடவடிக்கைகளை எதிர்ப்பதாக சூளுரைத்ததன் அடிப்படையில் சிரிசா ஆட்சிக்கு வந்தது. இது ஐரோப்பிய அரசியலின் பாதையையே மாற்றியமைக்கத்தக்க ஒரு உருமாற்றகரமான நிகழ்வு என ஒவ்வொரு போலி-இடது அமைப்பும் அதனைப் பாராட்டின. அதிகாரத்திற்கு வந்த ஒரு சில வாரங்களிலேயே, பிப்ரவரியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைகளை நீட்சி செய்வதற்கான ஒரு உடன்பாட்டில் கையெழுத்திட்ட பின்னர், சிரிசா அரசாங்கம், சிக்கன நடவடிக்கை தொடர்பாக அதன் ஜூலை வாக்கெடுப்பில் கிட்டிய ஒரு மிகப்பெருவாரியான “வேண்டாம்” வாக்கெடுப்பை காலில்போட்டு நசுக்கி விட்டு, நாடாளுமன்றத்தின் மூலமாக ஒரு பாரிய புதிய சிக்கன நடவடிக்கை பிணையெடுப்பைத் திணித்தது. மத்திய கிழக்கிலும் ஆபிரிக்காவிலும் ஏகாதிபத்தியத்தால் உருவாக்கப்பட்ட அழிவுக்குத் தப்பி ஓடி வருகின்ற அகதிகளை தடுத்து நிறுத்தி “ஐரோப்பிய கோட்டை”யை நிலைநிறுத்துவதில் ஒரு முன்னிலை போலிஸ் படையாக அது இப்போது செயல்புரிந்து கொண்டிருக்கிறது. சிரிசாவின் நடவடிக்கைகள் முதலாளித்துவ அரசியலின் ஒரு கன்னையாக போலி-இடதுகள் ஆற்றுகின்ற பாத்திரத்தை திட்டவட்டமாக விளங்கப்படுத்தியுள்ளதோடு, அமெரிக்காவில் சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு, சோசலிஸ்ட் மாற்று மற்றும் ஆக்கிரமிப்பு இயக்கத்தின் பல்வேறு எச்சசொச்சங்கள்; ஸ்பெயினில் Podemos; ஜேர்மனியில் Die Linke; பிரான்சில் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி ஆகியவற்றால் வெவ்வேறு வடிவங்களில் மறுநிகழ்வு காண்கின்றன.

68. போலி-இடதுகளின் அரசியலானது இருப்பியல்வாதம், ஃபிராங்பேர்ட் பள்ளி, பின்நவீனத்துவம், “பின்மார்க்சிசம்” மற்றும் நவ-அராஜகவாதம் ஆகியவற்றுடன் தொடர்புபட்ட பகுத்தறிவற்ற, கருத்துவாத மற்றும் மார்க்சிச-விரோத தத்துவங்களுடன் நெருங்கிய தொடர்புடையதாகும். இந்தப் பாரம்பரியத்தின் ஒரு சமகாலப் பிரதிநிதி அதன் கண்ணோட்டத்தைப் பின்வருமாறு சுருங்க உரைத்தார்:

அதிகாரம் மற்றும் சித்தாந்தத்தில் இருந்து விடுதலை செய்யப்பட வேண்டிய அடிப்படையாய் பகுத்தறிவு கொண்ட மனித உருவகமாக இருப்பதற்கு பதிலாக, பலதரப்பட்ட விருப்பங்கள் மற்றும் தீவிரங்களில் கலைந்துபோய், பலதுறை மற்றும் அதிகாரக் கட்டமைப்புகளுக்குள் தீவிரமாக பின்னப்பட்டதாய் அடையாளத்தைக் கொண்ட ஒரு உருவகத்தை நாம் கொண்டிருக்கிறோம். இது தொடர்பில்தான் தீவிரவாத அரசியலில் வர்க்க வரையறை என்பது மறைப்பு செய்யப்படுகின்றது: அதாவது பாட்டாளி வர்க்கம் இனியும் முக்கியமான தீவிரமயப்பட்ட உருவகம் அல்ல, அத்துடன் இனியும் அரசியல் போராட்டங்கள் மார்க்சிச வரையறைகளின் படியான ’வர்க்கப் போராட்டங்களால்’ மிகைநிர்ணயம் செய்யப்பட்டவை அல்ல. மாறாக, கடந்த சில தசாப்தங்களில் புதிய தீவிரமயப்பட்ட அரசியல் உள்வாழ்க்கைகளும் செயல்பாட்டு வடிவங்களும் எழுந்திருப்பதை பலரும் சுட்டிக் காட்டியிருக்கின்றனர் — நிறவெறிக்கு எதிரான கறுப்பின மற்றும் இன சிறுபான்மையினர், ஆணாதிக்கத்திற்கு எதிராக பெண்ணியவாதிகள், ஓர்பால் வெறுப்புக்கு எதிராக ஓர்பால் விருப்பினர், இப்படியே நிறைய சொல்லலாம். இவையே பின்நவீனத்துவ அரசியல் களத்தை வண்ணம் நிரப்பியிருக்கக் கூடிய ‘புதிய சமூக இயக்கங்களாகும்’. [சால் நியூமேன், Unstable Universalities: Poststructuralism and radical politics, 2007, p. 3]

69. போலி-இடதுகள், “நடுத்தர வர்க்கத்தின் தனிச்சலுகை படைத்த மற்றும் வசதிபடைத்த அடுக்கின் சமூகப்பொருளாதார நலன்களை ஊக்குவிப்பதற்காக ஜனரஞ்சக சுலோகங்களையும் ஜனநாயக சொல்லாடல்களையும் பயன்படுத்திக் கொள்கின்ற அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் தத்துவார்த்த/சித்தாந்த போக்குகளை” குறிக்கின்றன என்று ICFI வரையறை செய்துள்ளது. போலி-இடதுதானது “சோசலிசத்திற்கு விரோதமானது, வர்க்கப் போராட்டத்தை எதிர்க்கிறது, தொழிலாள வர்க்கத்தின் மையமான பாத்திரத்தையும் சமூகத்தின் முற்போக்கான உருமாற்றத்தில் புரட்சியின் அத்தியாவசியத்தையும் அது மறுக்கிறது.” “மக்களின் வசதிபடைத்த உயர் 10 சதவீத அடுக்கிற்குள் கூடுதல் அனுகூலமான வகையில் செல்வம் பரவலாக்கப்பட வேண்டுகின்ற நோக்கத்துடன், பெருநிறுவனங்கள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள், உயர்-ஊதிய தொழில்கள், தொழிற்சங்கங்கள், மற்றும் அரசாங்கம் மற்றும் அரச ஸ்தாபனங்களில் கூடுதலான செல்வாக்கை ஈட்டுவதற்காக, தேசியம், இனம், நிறம், பால், மற்றும் பால்விருப்பம் ஆகியவை தொடர்பான பிரச்சினைகளில் கவனத்தை செலுத்தும் ‘அடையாள அரசியலை’ அது ஊக்குவிக்கிறது”. இது “ஏகாதிபத்திய-ஆதரவானது என்பதோடு, நவ-காலனித்துவவாத இராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கு, அத்துடன் நேரடியாக ஆதரிப்பதற்கும் கூட, ‘மனித உரிமைகள்’ சுலோகங்களை பயன்படுத்திக் கொள்கிறது.” [டேவிட் நோர்த், ஃபிராங்க்பேர்ட் பள்ளி, பின்நவீனத்துவம் மற்றும் போலி-இடதுகளின் அரசியல்: ஒரு மார்க்சிச விமர்சனம் புத்தகத்திற்கான முன்னுரை]

சோசலிச சமத்துவக் கட்சியும் தொழிலாள வர்க்கத்தை நோக்கிய திருப்பமும்

70. தொழிலாள வர்க்கத்திலும் அதன் முக்கியமான பிரிவுகளிலும் ஒரு அரசியல் தலைமையைக் கட்டியெழுப்புவதே அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சியின் மையமான மூலோபாயப் பணியாகும். ஊதியங்கள் மற்றும் சமூகநல உதவிகள் மீதான தாக்குதல்கள், சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சி மற்றும் பாரிய வேலைவாய்ப்பின்மை, போலிஸ் வன்முறை மற்றும் ஏகாதிபத்திய போர் ஆகியவற்றுக்கு எதிரான எண்ணற்ற போராட்டங்களுக்கான நிலைமைகளை உலக முதலாளித்துவத்தின் புறநிலைப் போக்குகள் உருவாக்குகின்றன. தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் இந்தப் போராட்டங்களை, தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச சோசலிச இயக்கத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்காவில் அதிகாரத்தைக் கையிலெடுப்பதற்கும் ஒரு தொழிலாளர் அரசை ஸ்தாபிப்பதற்குமான ஒரு அரசியல் இயக்கத்தினுள் SEP ஐக்கியப்படுத்த வேண்டும்.

72. போலி-இடதுகள் முதல் அதி வலதுகள் வரையிலும் முதலாளித்துவ வர்க்கத்தின் ஒவ்வொரு அரசியல் அமைப்பிற்கும் எதிராக தனது சுயாதீனமான நலன்களை வரையறை செய்வதற்கான போராட்டத்தின் மூலமாக மட்டுமே தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனமானது ஸ்தாபிக்கப்பட இயலும். ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றிலும் மற்றும் ஸ்ராலினிசம், சீர்திருத்தவாதம், திருத்தல்வாதம் மற்றும் தேசியவாதத்தின் அத்தனை வடிவங்களுக்கும் எதிரான அதன் போராட்டத்தின் வரலாற்றிலும் பொதிந்திருக்கும் சர்வதேச தொழிலாள வர்க்க இயக்கத்தின் வரலாற்று அனுபவங்களை தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களது தீவிரமயப்படலுக்குள் கொண்டுவருவதற்கான ஒரு போராட்டம் இதற்கு அவசியமாக உள்ளது. இந்த அரசியல் போராட்டத்தின் அடிப்படையில் மட்டுமே, கட்சியானது, அத்தியாவசியமான தந்திரோபாய மற்றும் அமைப்புரீதியான முன்முயற்சிகளை அபிவிருத்திசெய்ய முடியும்.

72. 1966 இல் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான வேர்க்கஸ் லீக்  ஸ்தாபிக்கப்பட்டு அரை நூற்றாண்டிற்குப் பின்னர் இந்த காங்கிரஸ் நடத்தப்படுகிறது. 1960களின் அரசியல் தீவிரமயப்படலது ஆரம்ப கட்டங்களின்போது, பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிரன அனைத்துலகக் குழுவின் போராட்டத்தின் அடிப்படையில் வேர்க்கஸ் லீக் உருவாக்கப்பட்டது. நிற, இன, பாலியல் மற்றும் பாலின அரசியலின் பல்வேறு வடிவங்களை ஊக்குவித்த சோசலிச தொழிலாளர் கட்சியில் (SWP) இருந்த திருத்தல்வாதிகள் உட்பட்ட பல்தரப்பட்ட குட்டி-முதலாளித்துவப் போக்குகளுக்கு எதிரான சமரசமற்ற ஒரு போராட்டத்தின் ஊடாக அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பாத்திரத்தை அங்கீகரிப்பதை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே மார்க்சிச இயக்கத்தின் அபிவிருத்தியானது முன்செல்ல முடியும்.

73. வேர்க்கஸ் லீக்கிற்கு வழங்கிய தனது வாழ்த்துச் செய்தியில், சோசலிச தொழிலாளர் கழகத்தின் தலைவரான ஜெர்ரி ஹீலி பின்வருமாறு கூறியிருந்தார்:

அமெரிக்காவிலுள்ள தொழிலாள வர்க்கம் உலகின் மிகவும் சக்திவாய்ந்ததாகும், இந்த வர்க்கத்திற்குள்ளாகத்தான் நீங்கள் உங்கள் கட்சியை கட்டியெழுப்பியாக வேண்டும். இது மார்க்சிசத்தின் ஒரு அடிப்படைக் கோட்பாடு என்பதோடு அமெரிக்காவிற்குள் நிலவுகின்ற நிலைமைகளுக்கு குறிப்பான அவசரத்துடன் பொருந்தக் கூடியதாகும். நமது காலத்தின் அடிப்படைப் பிரச்சினைகளை கறுப்பு சக்தி (Black Power) அல்லது நாடெங்கிலும் நீண்டு பரவிக் கிடக்கின்ற மக்கள் உரிமை இயக்கங்களோ தீர்க்கப் போவது கிடையாது, மாறாக ஒரு புரட்சிகரக் கட்சியின் தலைமையிலான தொழிலாள வர்க்கமே தீர்க்கும். இந்த இடத்தில்தான் நாம் நம்மை முழுமையாக திருத்தல்வாதிகளிடம் இருந்து பிரித்துக் கொள்கிறோம். கறுப்பினத்தவரை போல் நடுத்தர வர்க்கங்களும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் தாங்களாகவே கணக்குத் தீர்த்துக் கொள்ள முடியும் என்பதான அவர்களது யோசனையை நாம் திட்டவட்டமாய் நிராகரிக்கிறோம். அவ்வப்போது இத்தகைய இயக்கங்களுக்கு விமர்சனரீதியான ஆதரவை அளிக்க நாம் அழைக்கின்ற போதும், நமது ஆதரவின் சாரமானது அந்த இயக்கங்களின் பலவீனங்கள் மீதான நமது விமர்சனங்களை தெளிவாக்குவதை அடிப்படையாகக் கொண்டிருந்தாக வேண்டும்.

74. அரை-நூற்றாண்டுக்குப் பின்னர், அமெரிக்க முதலாளித்துவத்தின் நெருக்கடி இன்னும் கூடுதலாய் முன்சென்றிருக்கிறது, இன மற்றும் அடையாளத்தின் தேசியவாத அரசியல் கூடுதல் பிற்போக்குத்தனமானதாய் ஆகியிருக்கிறது. 1966 இல், வேர்க்கர்ஸ் லீக் ஸ்தாபிக்கப்பட்டபோது, அமெரிக்காவில் தம்மை சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட் அல்லது ட்ரொட்ஸ்கிஸ்ட் என்று கூறிக்கொண்டு தொழிலாள வர்க்கத்திற்காக பேசுவதாக காட்டிக் கொண்டிருந்த அரசியல் அமைப்புகள் ஏராளமாய் இருந்தன. இன்று, அந்த அமைப்புகளில் வெகுசிலவே எஞ்சியிருக்கின்றன, அவையும் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான முயற்சி மற்றும் அதன் அரசியல் சுயாதீனத்திற்கான போராட்டம் ஆகியவற்றின் இடத்தில், இன, பால் மற்றும் பால்விருப்ப நோக்குநிலை ஆகியவற்றை நோக்கிய நோக்குநிலையை வெளிப்படையாக பிரதியீடு செய்துவிட்டிருக்கின்றன.

75. SEP மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் அரசியல் செல்வாக்கு ஒரு மிக முக்கியமான மற்றும் துரிதமான வளர்ச்சி காண்பதற்கான சாத்தியத்தை காட்டும் ஏராளமான அபிவிருத்திகள் கடந்த ஆண்டில் காணப்பட்டன. 2015 இலையுதிர்காலத்தில் வாகன உற்பத்தி தொழிலாளர்களின் போராட்டத்தின்போது, Big Three மற்றும் United Auto Workers மூலம் விலைபேசப்பட்ட ஒப்பந்தங்கள் திணிக்கப்பட்டதற்கு எழுந்த எதிர்ப்பின் மையத்தில் WSWS எழுந்திருந்தது. வாகன உற்பத்தித் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் WSWS இன் Autoworker Newsletter செய்தி ஏட்டை வாசித்தனர், அத்துடன் சுயாதீனமான தொழிற்சாலைக் கமிட்டிகளை உருவாக்குவதற்கான அதன் அழைப்பு பரவலான ஆதரவைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து 39,000 வெரிசான் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தில் கட்சியின் தலையீடு வந்தது. இதன்போது ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் WSWS ஐ தொடர்ந்து வாசித்தனர். SEP ஒழுங்கமைத்த இணையவழி விவாதங்களில் நூற்றுக்கணக்கானோர் பங்குபெற்றதோடு, முழு ஒப்பந்தம் வெளியாவது நிலுவையிலிருக்கும் போது வேலைக்கு திரும்புவதற்குக் கூறுகின்ற உத்தரவை திரும்பப் பெறவும் உறுப்பினர்களின் ஒரு ஜனநாயக வாக்கெடுப்புக்கும் கோரி கட்சியால் முன்னெடுக்கப்பட்ட ஒரு மனுவையும் ஆதரித்தனர்.

76. வாகனத் தொழிலாளர்கள் மற்றும் தொலைத்தொடர்பு துறை தொழிலாளர்களின் போராட்டங்கள் தொடர்பான கட்சியின் தந்திரோபாய முன்முயற்சிகளானவை, உலக முதலாளித்துவத்தின் நெருக்கடி, பப்லோவாதம் மற்றும் சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான நமது பல தசாப்த கால போராட்டம், மற்றும் தொழிலாள வர்க்கத்தில் ஊடுருவிச் செல்வதற்கும் ஒரு மார்க்சிச முன்னோக்கிற்கு அதன் மிகச் சிறந்த கூறுகளை வென்றெடுப்பதற்குமான நமது நீண்ட நெடிய போராட்டம் ஆகியவற்றின் மீதான இயக்கத்தின் பகுப்பாய்வில் வேரூன்றியிருந்தன. குறிப்பாக, தொழிற்சங்கங்களின் சீரழிவு மற்றும் அவை தொழிலாள-வர்க்க விரோத அமைப்புகளாக உருமாறியமை ஆகியவை குறித்த ICFI இன் பகுப்பாய்வானது மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் இந்த பிற்போக்குத்தனமான அமைப்புகளைக் குறித்து அனுபவங்களில் கண்டதுடன், சந்தித்துக் கொண்டுமிருக்கிறது.

77. தொழிலாள வர்க்கத்தை நோக்கிய SEP இன் நோக்குநிலையானது, அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் மற்றும் ஆழப்படுத்தப்பட வேண்டும். இயக்கத்தின் அரசியல் செல்வாக்கிலான கணிசமான முன்னேற்றங்கள் தொழிலாளர்களை கட்சிக்குள் கொண்டுவருவதற்கானதாக மாற்றம் செய்யப்பட வேண்டும். வாகன உற்பத்தி, இரும்பு, எண்ணெய் மற்றும் பிற உற்பத்தித்துறை தொழிலாளர்கள்; ஆசிரியர்கள் மற்றும் அரசாங்க பணியாளர்கள்; சுகாதாரப் பராமரிப்புத் தொழிலாளர்கள்; தொலைதொடர்பு தொழிலாளர்கள்; தொழில்நுட்ப தொழிலாளர்கள்; சேவைத் தொழிலாளர்கள்; வேலைவாய்ப்பற்றோர் மற்றும் ஓய்வுபெறுவோர் என தொழிலாள வர்க்கத்தின் அத்தனை முக்கிய பிரிவுகளிலும் SEP தனது முறைப்படியான அரசியல் வேலைகளை முன்னெடுக்க வேண்டும். அமெரிக்காவிலுள்ள தொழிலாள வர்க்கம், கடுமையான போராட்டத்தின் ஒரு நெடிய பாரம்பரியம் கொண்ட ஒரு பாரிய சமூக சக்தியாகும். அது ஒரு நனவான அரசியல் சக்தியாக உருமாற்றப்பட்டாக வேண்டும்.

78. நாடெங்கிலும் கல்லூரி வளாகங்களிலும், உயர்நிலைப் பள்ளிகளிலும் மற்றும் இளம் தொழிலாளர்கள் இடையிலும் சோசலிச சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பை (IYSSE) கட்டியெழுப்புவதில் ஒரு குறிப்பான கவனம் செலுத்தப்பட்டாக வேண்டும். இளம் வாக்காளர்கள் இடையே சாண்டர்ஸுக்கு மிகப்பெரும் ஆதரவு இருந்தமையானது, தொழிலாளர்களின் ஒரு ஒட்டுமொத்த தலைமுறையிடையே பரந்தவொரு அரசியல் தீவிரமயப்படல் இருப்பதையே பிரதிபலித்தது. இளம் தொழிலாளர்களின் நனவான வாழ்க்கை என்பது, பொருளாதார நெருக்கடி, முடிவில்லாத போர் மற்றும் ஜனநாயக உரிமைகளின் அழிப்பு ஆகியவற்றின் ஒரு காலகட்டத்திலேயே கழிந்துள்ளது. ஒரு நூற்றாண்டில் முதன்முறையாக, இன்றைய இளம் தலைமுறை, அவர்களின் பெற்றோர் வாழ்ந்த நிலைமைகளை விட மோசமான நிலைமைகளின் கீழ் வளர்ந்து கொண்டிருக்கிறது. IYSSE இன் வளர்ச்சியானது SEP ஐ கட்டியெழுப்புவதற்கும் அதன் அரசியல் செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கும் ஒரு இன்றியமையாத அடித்தளமாய் இருக்கும். ஆயினும் இளைஞர்களிடையே ஒரு சோசலிச அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான நமது திறன் என்பது, கல்லூரி வளாகங்களில் திட்டமிட்டு ஊக்குவிக்கப்படுகின்ற பின்-நவீனத்துவ மற்றும் போலி-இடது அரசியலுக்கு எதிரான போராட்டத்தில் தங்கியிருக்கிறது.

79. சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு சோசலிச இயக்கத்தை அபிவிருத்தி செய்வதிலும் புரட்சிகரத் தலைமையின் நெருக்கடியை தீர்ப்பதிலுமே மனிதகுலத்தின் எதிர்காலம் தங்கியிருக்கிறது. இந்தப் பணி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினாலும், சோசலிச சமத்துவக் கட்சியினாலும் மட்டுமே முன்னெடுத்துச் செல்லப்பட முடியும்.