ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

ආචාර්ය නිර්මාල් දේවසිරි විධායක ජනාධිපති ක‍්‍රමය රැකගත යුතුයැයි ආන්ඩුවට උපදෙස් දෙයි

இலங்கை: கலாநிதி நிர்மால் தேவசிறி நிறைவேற்று ஜனாதிபதி முறையை பாதுகாக்க வேண்டும் என அரசாங்கத்துக்கு அறிவுரை கூறுகின்றார்

By Wasantha Rupasinghe
26 October 2017

திவயின பத்திரிகைக்கு இம்மாதம் 22 ஞாயிறு அன்று பேட்டி ஒன்றைக் கொடுத்த கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி, தற்போதைய நெருக்கடி நிறைந்த ஆளும் அதிகாரத்தை பாதுகாப்பதற்காக, நிறைவேற்று ஜனாதிபதி முறையை பேணிக்கொள்ள வேண்டிய அவசியம் பற்றி உபதேசம் செய்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டுவந்து, அமெரிக்க ஆதரவிலான ஆட்சி மாற்றத்தில் முன்னணியில் நின்று ஒத்துழைத்த கலாநிதி தேவசிறி, அப்போது பொது மக்களை ஏமாற்றுவதற்காக நிறைவேற்று ஜனாதிபதி முறையை தூக்கி வீசவேண்டும் என கூச்சலிட்டுக்கொண்டிருந்தார். இப்போது அவர் அது பற்றி கொண்டுள்ள நிலைப்பாடு பற்றி திவயின பத்திரிகை கேட்டபோது, தேவசிறி பின்வருமாறு கூறினார்: “இப்போது ஜனாதிபதி பதவியை அகற்றுவதை நான் எதிர்க்கின்றேன். அதற்கு சரளமான காரணம் உள்ளது. உதாரணமாக ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் குளிர் யுத்தம் ஒன்று இருப்பதால்தான் எமது நாட்டில் பிணை முறி பிரச்சினையைக் கூட இந்தளவிலாவது விசாரிக்கின்றனர். நாட்டில் அதிகாரத்தை சமநிலைப்படுத்தும் தூண்கள் இரண்டு இருக்கும் போது, ஒரு தூண் உடைந்து விழுந்தால் ஏற்படக்கூடிய விளைவு பயங்கரமானது.”

விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) மற்றும் சிறிசேனவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் இடையில் ஏற்படுத்திக்கொண்டுள்ள பிற்போக்கு கூட்டரசாங்கத்தில் இருப்பதாக தேவசிறி கூறும் அதிகார சமநிலை, கடந்த இரண்டு ஆண்டுகள் பூராவும், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்துவதற்கும், அதற்கு எதிராக வளரும் தொழிலாளர், மாணவர்கள் மற்றும் வறியவர்களின் போராட்டங்களை நசுக்குவதற்குமே செயற்பட்டுள்ளது. இந்த சமநிலை வீழ்ச்சியடைவதனால், பயங்கரமான விளைவுகள் ஏற்படும் எனக் கூறி, அடுத்துவரும் புரட்சிகர போராட்டங்களை நசுக்குவதற்கு இயலுமை கொண்ட “ஸ்திரமான” அரச இயந்திரம் ஒன்று முதலாளித்துவ வர்க்கத்துக்கு இல்லாமல் போகும் என குட்டி முதலாளித்துவத்துக்குள் நிலவும் பீதியை இது வெளிப்படுத்துகின்றது. அதனால், நிறைவேற்று ஜனாதிபதி முறையை அகற்றுவதை தேவசிறி எதிர்ப்பது புதுமையானது அல்ல. 1970களின் கடைப்பகுதியில் தற்போதைய நிறைவேற்று ஜனாதிபதி முறை உருவாக்கப்பட்டதில் இருந்தே, அது வெகுஜனப் போராட்டங்களை நசுக்கி, முதலாளித்துவ அமைப்பு முறையை பேணி “ஸ்திரத்தன்மையை” பாதுகாப்பதற்கே பயன்படுத்தப்பட்டது.

கலாநிதி கூறும், ஆளும் தட்டுக்களுக்குள் ஏற்பட்டுள்ள “குளிர் யுத்தமானது” அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டத்துக்கு வந்துகொண்டிருக்கும் தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்களின் புரட்சிகர போராட்டங்களை நசுக்குவதற்கு மிகவும் பொருத்தமான ஒடுக்குமுறை ஆட்சி முறை என்ன என்பதைப் பற்றிய தந்திரோபாய பிரச்சினையே தவிர, ஜனாநாயகத்தை ஸ்தாபிக்கும் குறிக்கோளைக் கொண்டது அல்ல. பயங்கரமான ஏகாதிபத்திய உலக யுத்தம் வெடிக்கும் நிலைமை வரை வளரச்சியடைந்துள்ள, முதலாளித்துவ அமைப்பு முறையின் நெருக்கடியானது சமூக ஜனநாயகத்தை துடைத்துக்கட்டி, கடும் வலதுசாரிக் கட்சிகளை ஆட்சிக்கு கொண்டு வந்துகொண்டிருக்கும் ஒரு நிலைமையிலேயே, இலங்கை ஆட்சியாளர்கள் ஜனநாயகத்தை ஸ்தாபிப்பதற்கு செயற்படுகின்றனர் என்பது மோசடியாகும்.

அவர் உதாரணமாகக் காட்டும் பிணைமுறி பிரச்சினையைக் கூட எடுத்துக்கொண்டால், தேவசிறி உட்பட போலி “நியாயமான சமூகத்துக்கான இயக்கம்”, பிரஜைகள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) போலி இடது முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற சக்திகளால், வெள்ளை பூசி ஆட்சிக்கு கொண்டுவரப்பட்ட போலி “நல்லாட்சியின்” நாற்றமெடுப்பையே அது காட்டுகின்றனது. தேவசிறி கூறும் போலி “குளிர் யுத்தத்தின்” விளைவாக அல்லாமல், அது வெகுஜனங்கள் மத்தியில் மூடி மறைக்க முடியாதளவுக்கு, பகல் கொள்ளையாக இருந்ததனாலேயே, பிணை முறி பற்றிய மட்டுப்படுத்தப்பட்ட தகவல்கள் அம்பலப்படுத்தப்பட்டன. அதன் மூலம் வெளிப்படும் ஒட்டு மொத்த முதலாளித்துவ முறையின் நாற்றமெடுப்பை மக்கள் மத்தியில் மூடி மறைப்பதற்கே அது பற்றி விசாரிப்பதாகக் கூறப்படும் மட்டுப்படுத்தப்பட்ட விசாரணைகளை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. இந்த விசாரணை, பிரச்சினையுடன் தொடர்புபட்ட ஒன்றிரண்டு நபர்கள் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி நழுவிக்கொள்ளும் இலக்கிலேயே மேற்கொள்ளப்பட்டது.

திவயின அதன் பேட்டியின் மூலம் மேற்கோள் காட்டியிருக்கும், “நல்லாட்சி” என்ற சொல்லுக்கு அரசாங்கம் முடிந்தளவு “பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது” என்ற தேவசிறியின் புலம்பலானது, “நல்லாட்சி” என்ற சொல்லுக்கு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு அப்பால், தேவசிறி போன்றவர்கள் அதற்கு பூசியிருந்த ஆதாரங்கள், அந்தளவு வேகமாக கரைந்துபோய், அதன் உண்மையான முகம் அம்பலத்துக்கு வரத் தொடங்கியிருப்பதையிட்ட கவலையியையே வெளிப்படுத்துகின்றது. முதலாளித்துவ சிந்தனைக் குழுக்களால் உருவாக்கப்பட்டு சோடிக்கப்பட்ட “நல்லாட்சி” என்ற சொல்லின் குறிக்கோள், வலதுசாரி அரசாங்கங்களின் நச்சுக் கொள்கைகளுக்கான ஒரு போர்வையை வழங்குவதாகும். தேவசிறி உட்பட குழுக்கள், அமெரிக்க ஏகாதிபத்தியம் திரைக்குப் பின்னால் இருந்து இயங்கிய, ஒரு ஊழல்மிக்க முதலாளித்துவ கும்பலிடம் இருந்து, அதே போல் இன்னொரு ஊழல் மிக்க கும்பலின் கைக்கு ஆட்சியை மாற்றும் நடவடிக்கையையே, இந்த “நல்லாட்சி” என்ற சொல்லின் மூலம் புனிதப்படுத்தினர். இந்த நடவடிக்கையின் போது, அப்போதிருந்த இராஜபக்ஷ ஆட்சியின் கொடூரமான சிக்கன கொள்கைகள் மற்றும் ஜனநாயக விரோத பகற்கொள்ளைகளுக்கு எதிராக தோன்றிவந்த பெரும் வெகுஜன எதிர்ப்பையே அவர்கள் சுரண்டிக்கொண்டனர்.

இராஜபக்ஷ ஆட்சியுடன் சீனா ஏற்படுத்திக்கொண்டிருந்த நெருக்கமான உறவுகள், அமெரிக்காவின் புவி மூலோபாய அவசியங்களுக்கு எதிராக காணப்பட்டதால், வாஷிங்டன் இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிராக, சிறிசேனவுக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஜனாதிபதி தேர்தலில் தலையிட்டது என்பது இப்போது கண்முன்னால் நிரூபிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் அமெரிக்க இராணுவத்துடன் பாதுகாப்பு உடன்படிக்கைகளை ஏற்படுத்திக்கொண்டு, கூட்டு போர் பயிற்சிகளில் ஈடுபட்டு, போலி “நல்லாட்சி” அரசாங்கம் இந்த தீவை பயங்கரமான ஏகாதிபத்திய போர் சுழிக்குள் நேரடியாக இழுத்துப் போட்டுள்ளது.

சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டுவந்து இந்த அரசியல் சதியை “ஜனவரி புரட்சி” என்றே தேவறிசி வர்ணித்தார். ஆட்சிக்கு வந்த சில மாதங்களுக்குள்ளேயே தாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என மக்கள் புரிந்துகொள்ளத் தொடங்கியபோது, இந்த “அரசாங்கம் சொல்வதை இப்போது மக்கள் நம்புவதில்லை” என தேவசிறி கவலை வெளிப்படுத்துகிறார்.

எவ்வாறெனினும், தேவசிறியின் கவலைக்கு காரணம், அரசாங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக நடத்தியுள்ள தாக்குதல் பற்றியதோ அரசாங்கத்தின் ஜனநாயக விரோத கொள்கைகள் பற்றியதோ அல்ல. அவரது பேட்டியில் ஒரு இடத்திலும், கொடூரமான சிக்கன நடவடிக்கைகள் மற்றும் தனியார்மயமாக்கலுக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக இந்த அரசாங்கம் மேற்கொள்ளும், இராஜபக்ஷ அரசாங்கம் நடத்திய அதே அளவிலான கொடூரமான பொலிஸ்-இராணுவத் தாக்குதல் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்தது, ஒரு பக்கம் ஆச்சரியத்துக்கு உரிய விடயம் அல்ல.

நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதும், அது அரசாங்கத்தால் மூடி மறைக்கப்படுவதையும் பற்றி திவயின கேட்ட போது, தேவசிறி, இராஜபக்ஷ காலத்திலும் பொருளாதாரம் வளர்ச்சியடையவில்லை எனக் கூறி, அரசாங்கத்தை தூண்டிலில் இருந்து கழற்றிவிடுவதற்கு முயற்சித்தார். வாய்ச்சவடால் மற்றும் புலம்பல்களுக்கு அப்பால், உலகம் பூகோளமயமாகியுள்ளது மற்றும் முதலாளித்துவ அமைப்பு முறையே நெருக்கடிக்குள் போயுள்ளது என்பதை மட்டுமன்றி, சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கொள்கைகள் அதன் சர்வதேச அரசியல் பொருளாதார நெருக்கடியுடன் நேரடியாக பிணைந்துள்ளது என்பதும் கூட இந்த கலாநிதியின் அவதானத்துக்குள் அகப்படவில்லை. பிரச்சினை ஒட்டு மொத்த முதலாளித்துவ அமைப்பு முறைக்குள்ளேயே இருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்ள நேர்வதாலும், அதற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தாக்குதலை முன்னெடுக்கும் அவசியம் ஏற்படுவதாலேயுமே, உண்மையில் அவரால் அவ்வாறு நோக்க முடியவில்லை. தேவசிறி சர்வதேச சோசலிசத்தின் கடும் எதிரியாக செயற்படும் விதத்திலும் கூட, அவர் பிரச்சினையை இந்த விதத்தில் திரிபுபடுத்துவதை புரிந்துகொள்ள முடியும்.

அரசாங்கம் விழுந்துள்ள குழியில் இருந்து அதை தூக்கிவிடுவதற்கான பரிதாபமான முயற்சியில் ஈடுபடும் தேவசிறி, “வெகுஜனங்களுக்கு உண்மை நிலைமையை இந்த அரசங்கம் சொல்லியிருக்க வேண்டும், அவ்வாறு கூறினால், மத்திய வங்கி செய்தது போன்ற சூறையாடலை செய்யவும் முடியாது. யதார்த்தத்திற்கு முகம் கொடுக்கும் அரசாங்கமே இந்த நாட்டுக்கு அவசியம், அத்தகைய ஒரு அரசாங்கத்தைத்தான் நாங்கள் உருவாக்க முயற்சித்தோம். சோபித துறவியை தேர்தலில் நிறுத்தவேண்டும் என்ற நிலைப்பாட்டுக்காக மிகவும் முன்னிலையில் நின்றவன் நானே. சோபித பிக்குவுக்கு வேறு நிகழ்ச்சி நிரல் இல்லாததால்தான் நான் அவ்வாறு செய்தேன்,” என கூறினார்.

“வெகுஜனங்களுக்கு உண்மை நிலைமையை” மூடி மறைக்கும் கொந்தராத்தை இட்டு நிரப்பியவர்கள் தேவசிறி உட்பட பிற்போக்கு கும்பலே என்பதே உண்மையான காரணம் ஆகும். இராஜபக்ஷவின் சீனா-சார்பு கொள்கைக்கு அமெரிக்காவும் இந்தியாவும் எதிராக இருந்தன என்பதும், அந்த கொள்கையை அமெரிக்காவுக்கு சார்பானதாக மாற்றிக்கொள்வதற்காக, அந்த அரசாங்கம் இழைத்த போர்க் குற்றங்களை பயன்படுத்தி வந்தது என்பதும் மட்டுமன்றி, நாட்டுக்குள் அந்த அரசாங்கத்தின் நீண்ட விளைவுகளைக் கொண்ட சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக புரட்சிகர போராட்டங்கள் தோன்றி வந்தன என்பது கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயப் பிரச்சினை, ரதுபஸ்வலவில் குடி நீர் பிரச்சினை மற்றும் சிலாபத்தில் மீனவர் போராட்டம் போன்று தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை இரத்தோட்டத்தில் நசுக்கியதனால் அரசாங்கத்தின் ஒட்டுமொத்த முதலாளித்துவ ஆட்சியே அபகீர்த்திக்கு உள்ளாகி இருந்தது என்பதும், அது வெறுமனே இராஜபக்ஷவின் ஆட்சியினால் தோன்றியது அன்றி ஒட்டுமொத்த ஆட்சி முறையின் நெருக்கடியின் வெளிப்பாடாகும் என்பதும் தேவசிறியின் விபரீதமான புலம்பல்களுக்கும் மேலாக இருக்கும் யதார்த்தமாகும். இந்த உண்மையை மக்களிடம் மூடி மறைத்து, போலி நல்லாட்சி என்ற முகமூடியை அணிவித்து, அந்த முதலாளித்துவ அமைப்பு முறையை தொடர்ந்தும் பேணும், சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவந்தவர்கள் தேவசிறி உட்பட கூட்டத்தினரே.

“நியாயமான சமூகத்துக்கான தேசிய இயக்கத்தின்” முன்னணி உறுப்பினரான சிங்கள இனவாதத்தினதும், தமிழர் விரோத கொடூர யுத்தத்தினதும் பிரச்சாரகரான சோபித பிக்குவுக்கு “தனியான நிகழ்ச்சி நிரல் இல்லை” என கூறுவது மோசடியாகும். திரைக்குப் பின்னால் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் திட்டமிடலில் பிரதான பங்காற்றிய சோபிதவை, சிறிசேனவுக்கு முன்னதாக, போலி “பக்கச்சார்பற்ற பொது வேட்பாளராக” ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தும் பிரச்சாரம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. நிறைவேற்று, அரசியலமைப்பு மற்றும் நீதித்துறை உட்பட இலங்கையின் முதலாளித்து ஸ்தாபகம் சம்பந்தமாக வெகுஜன நம்பிக்கை வீழ்ச்சியடைந்திருந்த நிலைமையின் கீழ், “பக்கச்சார்பற்ற” சோபிதவின் மூலம் முதலாளித்துவ அமைப்பு முறையை பாதுகாப்பதே இதன் குறிக்கோளாகும்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தினதும், முதலாளித்துவ வர்க்கப் பகுதியினரின் அவசியங்களையும் பிரதிநித்துவம் செய்யும் பௌத்த பிக்குவின் ஜனாதிபதி பதவியின் மூலம் கடும் வலதுசாரி பௌத்த அரசு ஒன்றை உருவாக்கும் பிற்போக்கு வேலைத்திட்டத்துக்கே தேவசிறி மிகவும் பக்தியுடன் ஒத்துழைப்பு கொடுத்து வந்தார். முடிவில், சோபிதவினதும் தேவசிறியினதும் இயக்கம், ஐ.தே.க.வைச் சூழ போலி இடது கட்சிகள் மற்றும் பிரஜைகள் சக்தி போன்ற மத்திய தர வர்க்க இயக்கங்களை அணிதிரட்டிக்கொள்ளும் போது, மையப் பங்கு வகித்ததோடு, அந்த “முன்னிலை மற்றும் மைய பங்கிற்கு” நன்றிதெரிவிப்பதன் பேரில், 2015 ஆகஸ்ட் மாதம், இலங்கையில் முன்னாள் அமெரிக்க தூதுவர் மிசல் சீசோன் நாகவிகாரையை நோக்கிப் பயணித்தமையை இங்கு நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

அதே போல், போரின் போது அரசாங்கத்தின் இராணுவம் இழைத்த மனித உரிமை மீறல்களை சுரண்டிக்கொண்டு, இந்த நாட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட ஏகாதிபத்திய தலையீடுகளினதும் பாதுகாவலனாக தேவசிறி திகழ்ந்தார். இலங்கை சம்பந்தமாக ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் பிரதிபலிப்பு பற்றி அவரது கருத்து என்ன எனக் கேட்டபோது, “நாம் போர்க் குற்றங்களை செய்துள்ளோம், தனி நபர்களை காணாமல் ஆக்கியுள்ளோம் என மேற்கத்தைய நாடுகளும் எம்மீது குற்றம் சாட்டும் எனில், ஒரேயடியாக நாம் எதிர்ப்பு காட்டாமல் அப்படி ஒன்று நடந்துள்ளதா? என நாம் தேடிப்பார்ப்போம் என்றவகையில் ஒரு மத்தியஸ்த நிலைமைக்கு எம்மால் போக முடியும் எனில், இந்த மேற்கத்தைய அழுத்தங்களை நாம் குறைத்துக்கொள்ள முடியும்” என தேவசிறி கூறினார்.

திவயின நிருபர் இந்தப் பேட்டியில் ஒரு இடத்தில், “தமிழ் மக்களின் உரிமைகளுக்காக முன்நிற்கும் ஒருவர்” என போலியாக காட்டிக்கொள்ளும் தேவசிறியின் இந்த பிரேரணைகளின் இலக்கு, தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கானது அல்ல. இப்போது அரசாங்கம் செய்வதைப் போலவே, நேரடியாக போர்க் குற்றச்சாட்டுக்களை நிராகரிக்காமல், அந்தக் குற்றங்களை மூடி மறைக்கும் ஏதாவது ஒரு சூழ்ச்சி முறையை பயன்படுத்த வேண்டும் என அவர் அரசாங்கத்திற்கு அறிவுரை கூறுகின்றார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஊடாக, போர்க் குற்றச்சாட்டுக்களை ஆராய சர்வதேச விசாரணை நடத்துவதாக அப்போது இராஜபக்ஷ அரசாங்கத்தை அச்சுறுத்தி வந்த அமெரிக்க தலைமையிலான மேற்கத்தைய ஏகாதிபத்தியங்கள், இப்போது அமைதியாக இருக்கின்றார்கள் எனில், இந்த அரசாங்கம் அந்த விசாரணைகளை நடத்தியதால் அல்ல, மாறாக ஏகாதிபத்தியங்களின் நலன்களுக்கு பொருத்தமான ஆட்சி ஒன்று இப்போது கொழும்பில் ஸ்தாபித்துக்கொண்டிருப்பதாலேயே ஆகும்.

திவயின போன்ற முதலாளித்துவ பத்திரிகை கந்தல்களாலும் சமூக வலைத்தளங்கள் மற்றும் போலி இடது கட்சிகளாலும் தூக்கிப் பிடிக்கப்படும் தேவசிறியின் இந்த முதலாளித்துவ சார்பு கருத்துக்களுக்கும் இன்னும் திரிபுபடுத்தல்களுக்கும் நிச்சயமான அரசியல் குறிக்கோள்கள் உள்ளன. அது முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிராக தீவிரமாயமாகி வரும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை திசை திருப்பி விடுவதாகும். தேவசிறி உட்பட அவர் உறவு கொண்டாடும் உலகம் பூராவும் உள்ள போலி இடதுகள், இந்த தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒப்பந்தத்தை பொறுப்பேற்றுள்ளன.