ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

විශ්ව විද්‍යාල අනධ්‍යන කම්කරු අරගලය වටා අනෙකුත් කම්කරුවන් බලමුලු ගන්වමු !

இலங்கை பல்கலைக்கழக கல்விசாரா தொழிலாளர்களின் போராட்டத்தைச் சூழ ஏனைய தொழிலாளர்களை அணிதிரட்டுவோம்!

By Socialist Equality Party (Sri Lanka)
24 March 2018

இலங்கை பல்கலைக்கழக கல்விசாரா தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் 23 நாட்களைக் கடந்து தொடர்கிறது. ஊதிய உயர்வு, மருத்துவ காப்பீடு மற்றும் ஓய்வூதியம் உட்பட பல கோரிக்கைகளின் அடிப்படையில் பெப்ரவரி 28 தொடங்கிய இந்த வேலை நிறுத்தம், இலங்கையில் அண்மையில் இடம்பெறும் நீண்டகால வேலை நிறுத்தமாகும்.

அரசாங்கம் கல்விசாரா ஊழியர்களின் கோரிக்கைகளை தொடர்ந்தும் நிராகரித்து வரும் அதே வேளை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டி சில்வா, வேலைநிறுத்தத்தை முடித்துக்கொண்டால் மட்டுமே, வேலை நிறுத்தத்துக்கு அழைப்புவிடுத்த தொழிற்சங்க கூட்டுக் கமிட்டிக்கு பேச்சுவார்த்தைக்காகவாவது அனுமதி கொடுக்க முடியும், என்று அச்சுறுத்தியுள்ளார்.

மார்ச் 16 அன்று ஊடகங்களுடன் பேசிய தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியின் இணைத் தலைவர் எட்வர்ட் மல்வத்தகே, நிதி அமைச்சர் மற்றும் பிரதமரின் தொடர்பாடல் செயலாளருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் முற்றிலும் தோல்வியுற்ற காரணத்தால், வேலை நிறுத்தத்தை தொடர்வதைத் தவிர வேறு வழியில்லை என்றார்.

இதற்கிடையில், ஊடகங்களுக்கு பேட்டியளித்த உயர் கல்வி அமைச்சர் கபீர் ஹஷிம், மார்ச் 18 தனக்கும் கூட்டு கமிட்டிக்கும் இடையேயான பேச்சுவார்த்தையின் படி, 20ம் திகதிக்கு முன்னர் இந்தப் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என உயர்கல்வி பிரதி அமைச்சர் மோகன்லால் கெயிரோவுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

இருப்பினும், மார்ச் 22, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தீர்வு இன்றி முடிவுக்கு வந்தது என கூட்டுக் கமிட்டி தெரிவித்தது. தன்னுடைய “விட்டுக்கொடுப்பு” பூச்சியம் என்றும் உங்களுடைய “விட்டுக்கொடுப்பு” என்ன என தலைவர் டி. சில்வா கேட்டதாகவும், “எம்முடைய விட்டுக்கொடுப்பை கொடுத்த போதிலும்” இதுவரை அது பற்றி எந்தவொரு பிரதிபலிப்பும் கிடையாது என்றும் கூட்டுக் கமிட்டி கூறுகின்றது.

கல்விசாரா ஊழியர்களின் கோரிக்கையை முற்றிலும் நிராகரித்துள்ள அரசாங்கத்திற்கு எதிராக ஒரு வார்த்தை தன்னும் பேசாத தொழிற்சங்க தலைவர்கள், பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மோகன் டி சில்வா உட்பட அதிகாரிகளைக் குற்றம் சாட்டுகின்றது.

அரசாங்கம் தமது கோரிக்கைகளை அலட்சியம் செய்வது தொடர்பாக கல்விசாரா தொழிலாளர்கள் மத்தியில் பெருகி வரும் சீற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக, மார்ச் 20 அன்று கூட்டுக் கமிட்டியால் அழைக்கப்பட்ட கண்டன பேரணிக்கு சுமார் 4,000 பேர் வரை பங்குபற்றி போராட்டத்தை தொடர்வதற்கான தொழிலாளர்களின் உறுதிப்பாட்டை மீண்டும் நிரூபித்தனர்.

தொழிற்சங்கத் தலைவர்கள் அரசாங்கத்தை சந்தித்த மூடிய அறைகளுக்குள் விட்டுக்கொடுப்புகளை செய்கின்றபோது, அரசாங்கம் மறுபக்கம், வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறையைத் தொடங்கியுள்ளது. மார்ச் 22 அன்று, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பதிவாளர் ஊடாக பொலிசில் முறைப்பாடு ஒன்றைச் செய்த அரசாங்கம், பல்கலைகழகத்தின் நுழைவு வாயிலில் கூடியிருந்த போராட்டக்காரர்களை அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தது. மேலே கூறப்பட்ட புகாரின்படி பொலிசாரால் பெறப்பட்ட நீதிமன்ற உத்தரவு இதற்காகப் பயன்படுத்தப்பட்டது. “பல்கலைக்கழக நுழைவு வாயிலுக்கு இடைஞ்சல் இல்லாமல், பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் மாணவர்களுக்கும் தடங்கள் இன்றி மற்றும் பல்கலைக்கழக சொத்துக்களுக்கு சேதம் இல்லாமல்” நடந்துகொள்ளுமாறு, பல்கலைக்கழக தொழிற்சங்கத் தலைவர் எஸ். காலராஜ் மற்றும் ஏனைய 25 கல்விசாரா ஊழியர்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள இந்த கட்டளையை, எந்த சந்தர்ப்பத்திலும் அவர்களை தண்டிப்பதற்காக பயன்படுத்திக்கொள்ள முடியும்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்விசாரா தொழிலாளர்களுக்கு மட்டுமன்றி, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சகல கல்விசாரா ஊழியர்களுக்கும் எதிராக இத்தகைய நீதிமன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் ஆபத்து உள்ளது.

அரசாங்கத்தின் இந்த பிரதிபலிப்பின் எதிரில், நூற்றுக்கு 5 சதவிகிதம் அற்ப சம்பள உயர்வுக்காக வேலை நிறுத்தத்தை காட்டிக் கொடுப்பதற்காக கூட்டுக் கமிட்டி முனைந்துகொண்டிருப்பதாக கீழ்மட்ட உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் துரோகப் பாத்திரத்தை அடையாளம் காட்டி வேலைநிறுத்தத்தின் ஆரம்பத்திலேயே கல்விசாரா தொழிலாளர்களுக்கு ஒரு முன்னோக்கை வழங்கியது. உலக சோசலிச வலைத் தளம் "பல்கலைக்கழக கல்விசாரா தொழிலாளர்களுக்கு ஒரு முன்னோக்கிய பாதை" என்ற தலைப்பில் வெளியிட்ட முன்னோக்கில், சோ.ச.க. சுட்டிக் காட்டிய முக்கிய விடயங்களை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

நாங்கள் கூறியதாவது: "எந்தவொரு கோரிக்கையும் கிடைக்காமல் இருப்பது அமைச்சர்களின் அல்லது அதிகாரிகளின் அகங்காரத்தினால் அல்ல, என்பதை வேலைநிறுத்தம் செய்யும் கல்விசாரா ஊழியர்கள் முதலில் புரிந்து கொள்ளவேண்டும். இது தொழிற்சங்க அதிகாரத்துவத்தால் உறுப்பினர்களை ஏமாற்றுவதற்காக வேண்டுமென்றே கூறும் புணைகதையாகும். இதற்கு மாறாக, இந்த கோரிக்கைகளை சர்வதேச நாணய நிதியம் கடுமையாக எதிர்ப்பதே உண்மையான காரணம் ஆகும்."

அதே போல், “தொழிலாள-ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக முதலாளித்துவத்தின் தாக்குதலானது சர்வதேச அளவிலானதாக இப்பது போலவே, அந்த தாக்குதல்களுக்கு எதிராக பரந்தளவிலான தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்களும் உலக அளவில் வெடிக்கின்றன” என்பதை சுட்டிக் காட்டுகின்றோம்.

கல்வித் துறையை மட்டுமே எடுத்துக்கொண்டாலும் இது வெளிப்படையாக இருக்கிறது. நைஜீரியா மற்றும் கென்யாவில் பல்கலைக் கழகங்களில் கல்விசாரா தொழிலாளர்கள் அதிக ஊதியம் கோரி முன்னெடுக்கும் போராட்டமும், அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் இலட்சக் கணக்கான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கல்வி மீதான தாக்குதல்களுக்கு எதிராக முன்னெடுக்கும் போராட்டமும், இந்த சர்வதேச தீவிரமயமாதலின் பாகமாகும்.

இந்த சூழலில், அரசாங்கத்திற்கும் ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்பு முறைக்கும் எதிரான ஒரு அரசியல் போராட்டத்துடன் மட்டுமே கல்விசாரா ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை அடைய முடியும் என்பதை நாம் சுட்டிக் காட்டுகின்றோம். மேலும் முதலாளித்துவ வர்க்கத்தின் கருவிகளான தொழிற்சங்கங்கள், அத்தகைய போராட்டத்திற்கு முற்றிலும் விரோதமானவையாகும், மற்றும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் முதலாளித்துவ அமைப்பு முறையின் விளைவுகள் என்பதை மூடி மறைத்து, முதலாளித்துவ அமைப்பு முறையை பாதுகாப்பதற்கே அவை எப்போதும் முயல்கின்றன, என்பதை நாம் தெளிவுபடுத்துகின்றோம்.

"பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி பற்றி எந்த நம்பிக்கையும் வைக்க வேண்டாம் என்றும், போராட்டத்தை தம் கையில் எடுப்பதற்காக தொழிற்சங்கங்களில் இருந்து முழுமையாக விலகி, தொழிலாளர்களின் வாக்குகளில் தேர்வு செய்யப்படும், மற்றும் ஜனநாயக ரீதியில் கலந்துரையாடி முடிவுகள் மற்றும் தீர்மானங்களை எடுக்கும், சுயாதீன நடவடிக்கை குழுக்களை எல்லா பல்கலைக்கழகங்களிலும் கட்டியெழுப்புமாறும், கல்விசாரா தொழிலாளர்களுக்கு சோ.ச.க. அழைப்பு விடுக்கின்றது.

அரசாங்கத்தின் கொடூரமான அலட்சியம் மற்றும் தொழிற்சங்கங்களின் துரோகப் பாத்திரத்தை பாரதூரமானதாக கருதும் ஒருவருக்கு, சோ.ச.க முன்வைக்கின்ற முன்நோக்கின் அடிப்டையில் போராடாமல் கல்விசாரா தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஒருசதவீதமேனும் முன் செல்ல முடியாது என்பது தெளிவாகும்.

இந்த முன்னோக்குக்கு கல்விசாரா தொழிலாளர்கள் ஈர்க்கப்படுவார்கள் என்ற அச்சமடைந்துள்ள தொழிற்சங்க அதிகாரத்துவம், கல்விசாரா ஊழியர்கள் மத்தியில் தலையீடு செய்ய வேண்டாம் என சோ.ச.க. உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பதோடு, சோ.ச.க. உடன் கலந்துரையாட வேண்டாம் என உறுப்பினர்களையும் வலியுறுத்தி வருகிறது. சோ.ச.க. உறுப்பினர்களை அடிப்பதற்கும் தொழிலாளர்கள் மத்தியில் விநியோகிக்கப்படும் முன்நோக்கு துண்டுப் பிரசுரங்களை அபகரிப்பதற்கும் தொழிற்சங்க அதிகாரத்துவம் பல தடவை எடுத்த முயற்சிகள், கீழ் மட்ட உறுப்பினர்களின் ஆதரவுடன் தோற்கடிப்பதற்கு சோ.ச.க.யால் முடிந்தது.

வேகமாக உயரும் வாழ்க்கை செலவினத்தின் எதிரில், கல்விசாரா தொழிலாளர்களின் சம்பளக் கோரிக்கை முற்றிலும் நியாயமானதாகும். மேலும், சீரழிந்து வரும் பொது சுகாதார சேவை மற்றும் தனியார் மருத்துவ நிறுவனங்கள் அறிவிடும் பொறுக்க முடியாத கட்டனத்தின் எதிரில், தமது வாழ்க்கை ஆபத்தில் விழுந்திருப்பதை உணரும் தொழிலாளர்கள், மருத்துவ காப்பீட்டுக்காக முன்வைக்கும் கோரிக்கை முற்றிலும் நியாயமானதாகும்.

தமது அடிப்படை தேவைகளுக்காக பிரமாண்டமான கடன் தொகையைப் பெறுவதனால், ஒய்வு பெறும் போது அவர்களுக்கு கிடைக்கும் அற்ப ஊழியர் சேமலாப நிதி ஆவியாகிப் போகின்ற நிலைமையின் கீழ், ஓய்வூதியத்திற்கான அவர்களது கோரிக்கையானது​​ குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

கல்விசாரா தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், ஒட்டு மொத்த தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலின் ஒரு பகுதியாக இருப்பதோடு, அவர்களது கோரிக்கைகள் முழு தொழிலாள வர்க்கத்திதும் அவசரத் தேவைகளை பிரதிபலிக்கின்றன.

மறுபுறம், கல்விசாரா ஊழியர்களின் போராட்டமானது பிரதானமாக பொதுக் கல்வி மீது தொடுக்கப்படும் தாக்குதலுடன் தொடர்புபட்டுள்ளது. இதனால், கல்வி உரிமைகளுக்காகப் போராடிக்கொண்டிருக்கும் மாணவர்கள் கல்விசாரா ஊழியர்களின் போராட்டத்தை தமது சொந்தப் போராட்டமாகக் கருதி, அதனைச் சூழ அணிதிரள வேண்டும்.

போலி-இடது அரசியல் இயக்கமான முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைமையிலான அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அத்தகைய ஒரு அணிதிரள்வுக்கு, அதாவது மாணவர்களை தொழிலாள வர்க்கத்தின் தலைமையின் கீழ் அணிதிரட்டும் வேலைத்திட்டத்துக்கு கடும் எதிரியாகும். இதனால் இது கல்விசாரா ஊழியர்கள் சம்பந்தமாக மெத்தனமான போக்கையே கடைபிடிக்கின்றது.

இதற்கிடையில், சேவையில் இருந்து விலகி இருக்கும் தொழிலாளர்களுக்கு எதிராக, நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள “மாணவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துதல்” என்பதன் கீழ், பொலிசாரை தலையீடு செய்ய வைக்க முடியும். அத்தகைய ஆத்திரமூட்டல்களுக்கு இடம் கொடுக்காமல், கல்விசாரா ஊழியர்களின் போராட்டத்தை பாதுகாக்க மாணவர்கள் முன்வர வேண்டும்.

என்ன செய்ய வேண்டும்?

நீண்டகால வேலைநிறுத்தத்திலும் ஆயிரக்கணக்கானவர்கள் பங்குபெறும் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபடுவதன் மூலம், தமது உறுதிப்பாட்டில் எந்தக் குறையும் இல்லை என்பதை கல்விசாரா ஊழியர்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளனர். அவர்களுக்கு இல்லாதது சரியான முன்னோக்கு மற்றும் தலைமைத்துவமுமே ஆகும்.

வேலைநிறுத்தம் செய்யும் கல்விசாரா தொழிலாளர்கள், சோ.ச.க. இங்கு முன்வைத்துள்ள முன்னோக்கை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கைக் குழுக்களை அமைக்க முயற்சிக்க வேண்டும். இந்த குழுக்களின் பிரதிநிதிகள், அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக இப்போதே போராட்டத்திற்கு வந்திருக்கும் மின்சார சபை மற்றும் அஞ்சல் தொழிலாளர்கள் உட்பட ஏனைய தொழிலாளர்களையும், உறுதிப்பாடான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஒடுக்கப்பட்ட விவசாயிகளையும் மாணவர்களையும் தமது குழுக்களுடன் இணைத்துக்கொண்டு அரசாங்கத்திற்கு எதிராக சக்திவாய்ந்த அரசியல் எதிர்த் தாக்குதலை தயார் செய்யவேண்டியவர்களாவர்.

முதலாளித்துவ அரசாங்கத்தை தூக்கி வீசி ஆட்சிக்கு கொண்டுவரும் தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தின் மூலம், பிரமாண்ட பெருந்தோட்டங்கள், வங்கிகள் மற்றும் தொழிற்சாலைகளையும் தொழிலாளி வர்க்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் மக்கள்மயப்படுத்தி, இலாபத்தை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திக்கு பதிலாக, சமூகத் தேவைக்கான உற்பத்தியை உறுதிப்படுத்துகின்ற சோசலிச வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். வாழ்வதற்கு போதுமான ஊதியத்துடனான வேலை, நல்ல ஆரோக்கியம், முறையான கல்வி மற்றும் பாதுகாப்பான ஓய்வூதியத்தையும் இதன் மூலம் மட்டுமே உறுதிப்படுத்த முடியும்.

இந்தப் போராட்டத்திற்கு தலைமை வகிக்கும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர கட்சியாக சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்ப முன்வருமாறு பல்கலைக்கழக கல்விசாரா தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் விவசாயிகள் உட்பட ஏனைய ஒடுக்கப்பட்டவர்களிடமும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.