ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

“Old Europe” comes to Washington

“பழைய ஐரோப்பா” வாஷிங்டனுக்கு வருகிறது

Alex Lantier and Andre Damon
28 April 2018

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக, ஈராக் மீதான அமெரிக்க-பிரிட்டிஷ் படையெடுப்புக்கு முன்வந்த காலத்தில், அமெரிக்க போர் முனைப்பிற்குப் பின்னால் அணிவகுக்கத் தவறியதற்காக அமெரிக்க ஊடகங்கள் ஜேர்மனியையும், குறிப்பாக, பிரான்சையும் ஆவேசத்துடன் கண்டனம் செய்தன. பாதுகாப்புச் செயலரான டொனால்ட் ரம்ஸ்ஃபீல்ட் “பழைய ஐரோப்பா”வை மோசமாக சாடினார், பிரெஞ்சுக்காரர்கள் கோழைகளாகவும் முதுகில் குத்துபவர்களாகவும் சித்தரிக்கப்பட்டனர், ஊடகப் பெருந்தகைகள் பிரெஞ்சு ஃபிரைஸ் (பிரெஞ்சு பொரியல்) என்ற பெயரை “ஃப்ரீடம் ஃபிரைஸ்” (freedom fries) என்று மாற்றுவதற்கு அழைத்தனர்.

அமெரிக்காவை சமாளிப்பது எப்படி? ஐரோப்பாவின் தர்மசங்கட நிலை” என்ற தலைப்பிலான ஒரு கட்டுரையில் உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு கூறியது:

அமெரிக்காவின் பின்னால் அணிவகுக்க ஐரோப்பா மறுத்தால் விளையக் கூடிய பின்விளைவுகளை எடுத்துரைப்பதில் புஷ் நிர்வாகத்தின் அதிகாரிகள் அதிக வெளிப்படையாக ஆகியிருக்கின்றனர். அதிகாரி ஒருவர் நியூ யோர்க் டைம்ஸிடம் வியாழனன்று கூறியதைப் போல, “அவர்களது மூக்கை யதார்த்தத்தில் புரட்டி, அதன்பின் அது குறித்து நாம் என்ன செய்கிறோம் என்பதை விவாதிப்பது என்பதே எங்கள் இலக்காக இருக்கிறது”.

அது என்ன யதார்த்தம்? போருக்குப் பிந்தைய காலத்தில் ஈராக்கின் எண்ணெய் துறை பங்குபோடப்படுவதில் பங்குபெறுவதில் இருந்து பிரெஞ்சு மற்றும் ஜேர்மன் நிறுவனங்கள் விலக்கி வைக்கப்படும் என்பதை சுட்டிக் காட்டுவதில் புஷ் நிர்வாகம் அத்தனை நுண்ணிய சூசகத்தை எல்லாம் கடைப்பிடிக்கவில்லை. அதனினும் முக்கியமாக, அமெரிக்கா, ஈராக்கை ஆக்கிரமித்த பின்னர், மேற்கு ஐரோப்பாவுக்கு ஒரு அதிமுக்கியமான எண்ணெய் விநியோகஸ்தராக இருக்கின்ற ஈரான் மீது அழுத்தமளிக்கவிருப்பதாகவும் ஆலோசனைகள் இருந்து வருகின்றன.

பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியின் பார்வையில், அமெரிக்காவின் நடத்தை முற்றிலும் பொறுப்பற்றதாய் இருப்பதோடு, உலக முதலாளித்துவத்தின் விவகாரங்களை நெறிப்படுத்துகிற ஒட்டுமொத்த சட்ட மற்றும் ஸ்தாபனக் கட்டமைப்பில் எஞ்சியிருப்பதும் முழுமையாகப் பொறிந்து போகின்ற அபாயத்தை எழுப்புகிறது.  மேற்கு ஐரோப்பியர்களைப் பொறுத்தவரை அமெரிக்காவின் கட்டளைகளுக்கு அடிபணிவதென்பது, பழமைவாத பிரெஞ்சு தினசரியான Le Figaro இன் வார்த்தைகளில் சொல்வதானால், “அமெரிக்காவின் ஒரு காபாந்து நாடாக” தாங்கள் குறுக்கப்படுவதை அவர்கள் ஏற்பதற்கு ஒப்பானதாய் இருக்கும்.

பதினைந்து வருடங்களுக்குப் பின்னர், பிரெஞ்சு ஜனாதிபதியான இமானுவல் மக்ரோன், மத்திய கிழக்கிலான அமெரிக்காவின் புதுப்பிக்கப்பட்ட தாக்குதலில் ஒரு இளைய பங்காளியாக வாஷிங்டனில் தன்னைக் காட்டிக் கொண்டார். பிரெஞ்சு ஜனாதிபதி ஒரு முழு அரசு இரவுவிருந்தை பெற்றார் -இது ட்ரம்ப் நிர்வாகத்தின் முதலாவதாகும்- அத்துடன் ஜனநாயகத்தின் காவலனாகவும் அமெரிக்க ஊடகங்களால் பாராட்டப்பட்டார்.

மக்ரோனின் அரசு விருந்து ஏப்ரல் 14 அன்று சிரியா மீது நடத்தப்பட்ட அமெரிக்க-பிரெஞ்சு-பிரிட்டிஷ் ஏவுகணைத் தாக்குதலது வெற்றிக் கொண்டாட்டமாக இருந்தது. “பழைய ஐரோப்பா”வின் சக்திகள் தமது சமாதானவாத நடிப்புகளைக் கைவிட்டு மறுஆயுதபாணியாவதையும் மறுஇராணுவமயமாவதையும் நோக்கி விரைந்து சென்று கொண்டிருக்கின்றன என்ற உண்மையை அது அடிக்கோடிட்டுக் காட்டியது. மத்திய கிழக்கிலான புதிய ஏகாதிபத்திய துண்டுபோடலில் தமது பங்கைக் கோருவதற்காக சிரியாவிலான அமெரிக்கத் தலையீட்டில் அவை நேரடியாக பங்குபெற்றுக் கொண்டிருக்கின்றன அல்லது அதற்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கின்றன.

15 ஆண்டுகளுக்கு முன்பான காலத்தில் இருந்து இப்போது நிறைய மாறி விட்டதாகத் தோன்றலாம். ஆனால், வெளித் தோற்றங்கள் மற்றும் முரட்டுப் பிடிவாத அமெரிக்க ஜனாதிபதி மீது பிரெஞ்சு கவர்ச்சி என்பதாக வருணிக்கப்பட்ட ஒன்றைப் பயன்படுத்த மக்ரோன் செய்த முயற்சி எல்லாம் இருந்தபோதிலும், திரைக்குப் பின்னால், அடுத்த இரண்டே நாட்களின் பின்னர் மேர்க்கெலுக்கும் ட்ரம்புக்கும் இடையிலான ஓரளவுக்கு வேண்டாவெறுப்பான பேச்சுவார்த்தையில் கூடுதல் வெளிப்படையாக பிரதிபலித்ததை ஒத்த அதேமாதிரியான பதட்டங்கள், பாரிஸுக்கும் வாஷிங்டனுக்கும் இடையிலும் நிலவின.

மக்ரோனுக்கு குட்டியாட்டு இறைச்சி, ஆட்டுப்பாலாடை ரொட்டி, மற்றும் வெங்காயச் சாறு (copilini soubise) எல்லாம் இடம்பெற்ற ஒரு அசத்தலான அரசு இரவுவிருந்து கொடுக்கப்பட்ட நிலையில், மேர்கெலுக்கு தொழில்நிமித்த சிறிதுநேர மதியஉணவு மட்டுமே கிடைத்தது. தலைவர்கள் வெளியில் வந்த சமயத்திலான அவர்களின் முகபாவத்தைக் கொண்டு கூறுவதானால், முக்கியெடுத்த சூரை மீன் சாண்ட்விச்சுகள் அதில் இருந்திருக்கலாம் என்றே ஒருவர் முடிவுக்கு வர முடியும்.

மேர்கெலுக்கு கிட்டிய வரவேற்புக்கும் மக்ரோனுக்கு கிட்டிய வரவேற்புக்கும் இடையிலான பரந்த வித்தியாசமானது அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய ஆற்றல்மையமான ஜேர்மனிக்கும் இடையில் மிகத் தீவிரமான போட்டி நிலவுவதையும், அத்துடன் ஐரோப்பிய செல்வாக்கில் இருந்து பிரான்சை பிரித்தெடுக்க நடக்கும் முயற்சியையும் வெளிப்படுத்தியது என்பதில் சந்தேகமில்லை.

ட்ரம்ப்பின் வம்பிழுப்பான குரலுயர்த்தல்களுக்கு மக்ரோன் சலாம் போட்டது, மேர்கெல் வாயை இறுக்கமூடிக் கொண்டு தலையாட்டியது எல்லாம் இருந்தபோதிலும், 15 ஆண்டுகளுக்கு முன்பாக நிலவிய அதே பிரச்சினைகள் இன்றும் நீடிக்கின்றன. ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு உருக்கு மற்றும் அலுமினிய ஏற்றுமதிகளின் மீது தண்டத் தீர்வைகளை விதிக்கும் ட்ரம்ப்பின் உடனடித் திட்டம் முதலாக ஐரோப்பிய சக்திகளின் பொருளாதார நலன்களுக்கு குறுக்காய் பாயத்தக்க வகையில் ஈரான் அணு ஒப்பந்தத்தினை கிழித்தெறிய அவர் விடுக்கும் மிரட்டல் வரையிலும் வர்த்தகம் மற்றும் வெளியுறவுக் கொள்கையின் அத்தனை விடயங்களிலும் ஐரோப்பிய சக்திகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பெரும் விரிசல்கள் நிலவுகின்றன.

மே 1 அன்று உருக்கு மற்றும் அலுமினியம் மீதான தீர்வைகளின் ஒரு புதிய சுற்று அமலுக்கு வரவிருக்கும் நிலையில், ஜேர்மன் சான்சலருடனான சந்திப்புக்குப் பிந்தைய கூட்டான செய்தியாளர் சந்திப்பில் ட்ரம்ப், வர்த்தகப் போர் நடவடிக்கைகளது மிரட்டலைத் திரும்பப் பெறுவதற்கே போக வேண்டாம், ஒரு தாமதத்தை வழங்குவதற்கும் கூட அவர் தயாரிப்புடன் இல்லை என்பதை தெளிவாக்கினார். அமெரிக்காவுடன் ஐரோப்பிய ஒன்றியம் கொண்டிருக்கும் வர்த்தக உபரி ஒரு “பெரும் அநீதி” என்று ட்ரம்ப் அறிவித்தபோது மேர்க்கெல் முகத்தை சுளித்தார், தீர்வைகள் விடயத்தில் என்ன நிலவரம் நிலவுகிறது என்ற ஒரு பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த ஜேர்மன் சான்சலர் “ஜனாதிபதி முடிவு செய்வார்” என இறுக்கத்துடன் அறிவித்தார்.

அதேபோல ஈரானுடன் அணு ஒப்பந்தத்தை கைவிடுவது குறித்து சாத்தியமாகத்தக்க தனது முடிவு குறித்தும் ட்ரம்ப் அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் எந்த உறுதியும் கொடுக்கவில்லை. மாறாக, தெஹ்ரானுக்கு எதிராக ஒரு வசைமாரி தொடுத்ததோடு அதனுடன் போர் புரிவதற்கும் மிரட்டினார்.

ஐரோப்பிய சக்திகள் அமெரிக்காவின் பொறுப்பற்ற தன்மை குறித்து பெரும் அச்சமும் அதைத் தங்களால் தடுத்த நிறுத்த முடியுமா என்பதில் ஆழ்ந்த ஐயமும் கொண்டிருக்கின்றன என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை.

ட்ரம்ப் நிர்வாகத்தின் தேசியவாதப் பொருளாதாரக் கொள்கைகள் கணக்கிடமுடியாத பின்விளைவுகளின் சாத்தியத்துடன் சர்வதேச உறவுகளிலான ஒரு பொறிவைத் தூண்ட அச்சுறுத்துவதாக கடந்த வார காலத்தில், ஐரோப்பிய அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். வர்த்தகப் போரானது உலகின் மிகப்பெரும் பொருளாதாரங்களுக்கு இடையில் வணிகத்தை நிறுத்துவதும் அணு ஆயுத வல்லமையுடைய அரசுகளுக்கு இடையிலான இராணுவ மோதலும் உண்மையான சாத்தியங்களாய் இருக்கின்றன. “அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் சாத்தியமாகக் கூடிய ஒரு வர்த்தகப் போரில் பக்கவாட்டு சேதாரப்பலி”யாக ஐரோப்பா ஆகக் கூடிய சாத்தியம் குறித்து பிரெஞ்சு பொருளாதார அமைச்சரான புரூனோ லு மேர் எச்சரித்தார்.

ஜேர்மனியின் ஆளும் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்தின் மற்றும் ஜேர்மன் பசுமைக் கட்சியின் உயர்நிலை நிர்வாகிகளின் குழு ஒன்று ரஷ்யாவுடனான போர் குறித்து எச்சரிக்கை செய்தது. “மேற்கு ஐரோப்பியர்களில் பலரும் ஒரு போர் குறித்து எச்சரிக்கையடைந்துள்ளனர், அச்சம் கொண்டுள்ளனர்” என்று Frankfurter Allgemeine Zeitung இல் அவர்கள் எழுதினர்: “ரஷ்யாவுக்கும் மேற்குக்கும் இடையிலான அதிகரிக்கும் மோதலை பெரும் கவலையுடன் நாங்கள் கவனித்துக் கொண்டிருக்கிறோம்.”

இத்தகைய கவலைகள் எல்லாம் இருந்தபோதிலும், ஒரு காரணி மேலோங்கி நிற்கிறது: மத்திய கிழக்கிலான அமெரிக்காவின் புதிய துண்டு போடலிலும் உலகின் நவ-காலனிய மறுபங்கீட்டிலும் தமக்கான பங்கினைப் பெற்றாக வேண்டும் என்று பிரெஞ்சு ஏகாதிபத்தியமும் ஜேர்மன் ஏகாதிபத்தியமும் விரும்புகின்றன.