By the Socialist Equality Party (Sri Lanka)
22 October 2005

Use this version to print | Send this link by email | Email the author

By the Socialist Equality Party (Sri Lanka)
22 October 2005

நவம்பர் 17 நடைபெறவுள்ள இலங்கை ஜனாதிபதி தேர்தலில், சோசலிச சமத்துவக் கட்சியை ஆதரிப்பதோடு அதன் பிரச்சாரத்திலும் பங்குபற்றுமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள், யுவதிகள், புத்திஜீவிகள் மற்றும் குடும்பத் தலைவிகளுக்கும் அது அழைப்பு விடுக்கின்றது.

யுத்தத்திற்கும் சமூக சமத்துவமின்மைக்கும் ஒரு சோசலிச மாற்றீட்டை பரிந்துரைப்பவர் எமது வேட்பாளரான விஜே டயஸ் மட்டுமே. 64 வயதான விஜே டயஸ் சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளரும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு உறுப்பினருமாவார். அவர் தனது இளமைக்கால வாழ்க்கை முழுவதையும் சோசலிசத்திற்கான அடிப்படை போராட்டத்தின் மூலம் தொழிலாள வர்க்கத்தின் விடுதலைக்காக அர்ப்பணித்துக் கொண்டவராவார்.

சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்தின் அடித்தளம் அனைத்துலக வாதமாகும். சோசலிச சமத்துவக் கட்சி இந்த தேர்தலில் போட்டியிடுவது, வெறுமனே வாக்குகளை சேகரித்துக்கொள்வதற்காக அன்றி, தொழிலாளர்கள் சோசலிச வேலைத் திட்டத்தையும் முன்நோக்கையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை பற்றி இந்திய துணைக் கண்டம் பூராவும் ஒரு கலந்துரையாடலை ஆரம்பித்து வைப்பதற்கேயாகும். பூகோள மூலதனத்தின் கொள்ளையடிக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக போராடுவதற்காக, தொழிலாள வர்க்கத்திற்கு அதன் சொந்த சர்வதேச மூலோபாயம் தேவை: அது உலக பொருளாதாரத்தை ஒரு சிலரின் இலாபங்களுக்காக அன்றி, பெரும்பான்மையானவர்களின் சமூக தேவைகளை அடைவதற்காக, சோசலிச அடிப்படையில் மறு ஒழுங்கு செய்வதாகும்.

தொழிலாளர்கள் எதிர்கொள்கின்ற எந்தவொரு பிரச்சினையையும் ஒரு சிறிய தீவின் எல்லைகளுக்குள்ளேயோ அல்லது எந்தவொரு தனி தேசிய அரசுக்குள்ளேயோ தீர்த்துக்கொள்ள முடியாது. உழைக்கும் மக்கள் ஆளும் வர்க்கத்தின் கட்சிகள் மீது எந்தவொரு நம்பிக்கையும் வைக்க முடியாது. கடந்த அரை நூற்றாண்டுகளாக, இலங்கையிலும் மற்றும் துணைக்கண்டம் பூராவும் உள்ள அனைத்து அரசியல் வண்ணங்களையும் கொண்ட அரசாங்கங்கள், வெகுஜனங்களின் அடிப்படை தேவைகளையும் அபிலாஷைகளையும் இட்டுநிரப்புவதற்கு இலாயக்கற்றவை என்பதை பல சந்தர்ப்பங்களிலும் மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளன.

டிசம்பர் 26 சுனாமி மற்றும் மிக அண்மையில் வடக்கு பாகிஸ்தானிலும் இந்தியாவிலும் நிகழ்ந்த மிகப்பெரிய பூகம்பத்திற்கும் காட்டப்பட்ட உத்தியோகபூர்வ பிரதிபலிப்புகள், பிராந்தியத்தில் வாழும் வறியவர்களின் அவலநிலைமையை ஆளும் வட்டாரங்கள் முழுமையாக அலட்சியம் செய்துள்ளதை அம்பலப்படுத்தியுள்ளன. இந்தோனேஷியா, இலங்கை, இந்தியா மற்றும் தாய்லாந்திலும் முழு நகரங்களும் கழுவிச் செல்லப்பட்டு, 300,000 ற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு பத்து மாதங்கள் கடந்த பின்னரும், உயிர்தப்பியவர்களில் பெரும்பாலானவர்கள் இன்னமும் தரம்குறைந்த தற்காலிக தங்குமிடங்களில் கைக்கும் வாய்க்கும் ஒன்றுமில்லாத நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். கடந்த ஜனவரியில் ஜஹார்த்தா மாநாட்டில் வாக்குறுதியளிக்கப்பட்ட 4 பில்லியன் டொலர் சர்வதேச நிதியில் பெரும்பாலானவை பாதிக்கப்பட்டவர்களை சென்றடையவில்லை.

அதேபோல், முன்கூறமுடியாத நில அமைப்பியல் சக்திகள் அக்டோபர் 8 அன்று பிரமாண்டமான நடுக்கத்தை தோற்றுவித்தபோதிலும், அதனால் ஏற்பட்ட பயங்கரமான சமூக விளைவுகள், எல்லாவற்றுக்கும் மேலாக இலாபத்தை நோக்காகக் கொண்டிருக்கும் இந்த பொருளாதார அமைப்பின் உற்பத்தியேயாகும். 40,000 ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததோடு 2.5 மில்லியன் மக்கள் வீடற்றவர்களாகி உள்ளனர். வீடமைப்பு, சாலைகள் மற்றும் உட்கட்டமைப்புக்கள் தக்கமுறையில் கட்டுவிக்கப்படாமையானது, பிரதான ஏகாதிபத்திய மையங்களில் உள்ள மிகச்சிறிய செல்வந்த தட்டுக்களுக்கு மிக அதிக இலாபத்தை வழங்குவதற்காக ஆசியா, ஆபிரிக்கா போன்ற ஏனைய ஒடுக்கப்பட்ட நாடுகளில் உள்ள மலிவு உழைப்பும் வளங்களும் முறையாக கொள்ளையடிக்கப்படுவதன் தவிர்க்க முடியாத விளைவாகும்.

வாஷிங்டன், லண்டன், டோக்கியோ மற்றும் பேர்லினில் பிரதானமாக முன்னீடுபாடு காட்டுவது, பூகம்பத்திலோ அல்லது சுனாமியாலோ பாதிக்கப்பட்ட மக்கள் மீதான அக்கறையினால் அல்ல. மாறாக, நிதி சந்தைகள் மீதான தாக்கம் மற்றும் அரசியல் ஸ்திரமின்மையின் ஆபத்து பற்றிய அக்கறையினாலேயே ஆகும். நிவாரண உதவி வாக்குறுதிகள் அனைத்தும், உள்ளூர் அரசாங்கங்களை தூக்கிநிறுத்துவதையும் பிராந்தியத்தில் தமது பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை பெருக்குவதையும் இலக்காக கொண்டதாகும். அமெரிக்க இராஜாங்க செயலாளர் கொண்டோலீஸா ரைஸ் சுனாமியை பற்றி விபரிக்கையில், "அமெரிக்க மக்களின் இதயத்தை" வெளிக்காட்ட "ஒரு மிகச் சிறந்த சந்தர்ப்பமாகும்," "அது எமக்கு உயர்ந்த ஆதாயப்பங்குகளை வழங்கியுள்ளது," என்றார்.

அமெரிக்காவின் தென் பகுதியில் கத்ரினா சூறாவளி தாக்கியதிலும் புஷ் நிர்வாகத்தின் "இதயம்" காட்சிக்கு வந்துள்ளது. தெற்காசியாவில் வறுமை பீடித்த பரந்த மக்கள் அலட்சியம் செய்யப்பட்டதை போலவே நியூ ஓர்லியன்ஸின் உழைக்கும் மக்கள் அலட்சியப்படுத்தப்பட்டிருப்பது அம்பலத்திற்கு வந்துள்ளது. இந்தப் பேரழிவு அமெரிக்க முதலாளித்துவத்தின் முகத்திரையை கிழித்தெறிந்துள்ளதுடன் தசாப்தகாலங்களாக சந்தையின் கட்டுப்பாடற்ற இயக்கத்தால் தோற்றுவிக்கப்பட்ட, செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையிலான ஆழமான இடைவெளி, சீரழிந்துகொண்டிருக்கும் உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை சேவைகளின் பற்றாக்குறை போன்ற, கீழ்மட்டத்தில் இருந்த சமூக அழுகலை அம்பலத்திற்கு கொண்டுவந்துள்ளது. நியூ ஓர்லியன்ஸிலும் சரி கொழும்பில் அல்லது புது டில்லியிலும் சரி, தொழிலாளர்கள் தற்போதுள்ள வங்குரோத்தான சமூக ஒழுங்கை அவர்களின் தேவைகள் மற்றும் அபிலாஷைகளை அடையும் வகையில் பதிலீடு செய்வதில் ஒரு பொதுவான ஆர்வத்தை பகிர்ந்துகொண்டிருக்கின்றனர்.

ஆளும் வர்க்கங்களானது தங்களது சலுகைமிக்க அந்தஸ்தை பேணிக்கொள்வதற்கு நாடுகளுக்கிடையேயும் நாடுகளுக்குள்ளும் தொழிலாளிக்கு தொழிலாளியை எதிரியாக இருத்துவதற்காக தூண்டிவிடும் எல்லாவடிவங்களிலுமான இனவாதம், வகுப்புவாதம் மற்றும் தேசியவாதத்தை நிராகரிப்பது இந்திய துணைக்கண்டம் பூராவும் உள்ள உழைக்கும் மக்களின் ஒன்றிணைந்த போராட்டத்திற்கு அத்தியாவசியமான முன்நிபந்தனையாகும். வேறெங்கும் இல்லாத விதத்தில் இனவாதம் மிகவும் கேடுவிளைவிக்க கூடிய பாத்திரத்தை இட்டுநிரப்பியுள்ள இலங்கையில், அழிவுகரமான உள்நாட்டு யுத்தத்தால் 60,000ற்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகியுள்ளன. தீவின் மிகப்பெரும் பிரதேசங்கள் அழிவுக்குள்ளாகியிருப்பதோடு எண்ண முடியாத அளவு ஆயிரக்கணக்கானவர்களை ஊனமுற்றவர்களாக அல்லது வீடற்றவர்களாக ஆக்கியுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீ..சு.) பிரதமர் மஹிந்த இராஜபக்ஷ, எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் (.தே.) தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இரு பிரதான முதலாளித்துவ கட்சிகளின் ஜனாதிபதி அபேட்சகர்களும் தங்களை "சமாதான" விரும்பிகளாக காட்டிக்கொள்கின்றனர். ஆயினும் இவர்களில் எவரும் இந்த மோதலுக்கு ஒரு முற்போக்கான தீர்வை வழங்குகிறார்கள் இல்லை. இவர்கள் இருவருக்கும் இடையிலான வேறுபாடுகள் தந்திரோபாயரீதியானவையாக இருந்தபொழுதும், அவை கசப்பானவை.

இராஜபக்ஷ, அரச அதிகாரத்துவம், இராணுவம், பௌத்த உயர்பீடம் மற்றும் வியாபார தட்டினரால் பின்னிருந்து ஆதரிக்கப்படுகின்றார். இவர்களது நலன்கள், சிங்கள மேலாதிக்கத்தை பேணிப்பாதுகாப்பதுடன் கட்டுண்டுள்ள அதேவேளை, விடுதலைப் புலிகளுக்கோ அல்லது நாட்டின் தமிழ் சிறுபான்மையினருக்கோ எந்தவொரு சலுகையும் வழங்குவதை எதிர்க்கின்றனர். இராஜபக்ஷ, இராணுவத்தை பலப்படுத்தவும் தற்போதைய யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீளாய்வு செய்யவும் மற்றும் சுனாமி நிவாரணம் வழங்குதவற்காக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் கைச்சாத்திடப்பட்ட பொதுக் கட்டமைப்பு உடன்படிக்கையை கைவிடுமாறும் கோரிக்கை விடுக்கும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) மற்றும் ஜாதிக ஹெல உறுமயவின் சிங்கள தீவிரவாதிகளுடன் அணிசேர்ந்துள்ளார். இந்தக் கொள்கைகளின் தர்க்கம் யுத்தத்திற்கு வழிவகுப்பதாகும்.

மறுபக்கம் விக்கிரமசிங்க, "சமாதான முன்னெடுப்புகளை" புதுப்பிக்க வேண்டும் என பிரகடனம் செய்கின்றார். ஆனால் இந்த யுத்தத்தை 1983ல் ஆரம்பித்து வைத்து ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அதனை இரக்கமின்றி முன்னெடுத்ததற்கு ஐ.தே.க பொறுப்பாளியாகும். அவர் இப்போது தீவை பூகோள உற்பத்தி முன்னெடுப்புடன் இணைப்பதற்கு யுத்தம் தடையாக இருப்பதாக கருதும் பெரும் வல்லரசுகளின் ஆதரவைக் கொண்ட கூட்டுத்தாபன கும்பலில் உள்ள தட்டுக்களையே தெளிவாகப் பிரதிநிதித்துவம் செய்கின்றார். விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தை மூலமான தீர்வானது தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகளின் மீது பிரமாண்டமான தாக்குதல்களை முன்னெடுப்பதற்காக சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் செல்வந்தத் தட்டுக்களுக்கிடையிலான ஒரு அதிகார பரவலாக்கல் ஒழுங்கையே ஸ்தாபிக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, அதன் ஜனநாயக விரோத மற்றும் இனவாத பண்பானது, அடிமட்டத்தில் உள்ள எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்காமல், எதிர்கால மோதல்களுக்கே தவிர்க்கமுடியாமல் களம் அமைக்கும்.

ஆளும் வர்க்கம் தனது பூசல்களை தீர்த்துக்கொள்ளவோ அல்லது தனது நிகழ்ச்சித் திட்டத்திற்காக வெகுஜன ஆதரவை பெற்றுக்கொள்ளவோ இலாயக்கற்றிருப்பதானது அடுத்தடுத்து அரசியல் நெருக்கடிகளையே முன்கொணர்ந்துள்ளது. கடந்த ஐந்து வருடங்களாக நான்கு பொதுத் தேர்தல்கள் நடைபெற்றிருந்த போதிலும், அவை எப்பொழுதும் ஆழமடைந்துவரும் அரசியல் முடக்குவாதத்தை முன்வைத்தனவே ஒழிய எதையும் தீர்த்துவைக்கவில்லை. ஆளும் செல்வந்தத்தட்டுக்கள் சர்வாதிகார முறையிலான ஆட்சிக்கு திரும்ப வேண்டும் என்பதையிட்டு அதிகரித்தளவில் அக்கறை செலுத்திக்கொண்டிருக்கின்றன.

இந்த தேர்தலே கூட, ஆகஸ்ட்டில் வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்ட அவசரகால நிலைமையின் கீழேயே நடைபெறுகின்றது. கொழும்பின் முழு அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபனமும் ஒன்று சேர்ந்து விடுதலைப் புலிகளை குற்றஞ் சாட்டிய போதிலும், கொலை நடந்து இரண்டு மாதங்களாகியும் இதுவரை முடிவான ஆதாரங்கள் எவையும் பகிரங்கமாக வெளியிடப்படவில்லை. இந்தக் குற்றத்தை யார் செய்திருந்தாலும், தமது யுத்த ஆரவாரத்தை உக்கிரமாக்கிய ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமயவும் தற்போதைய யுத்த நிறுத்தத்தை கடுமையாக எதிர்க்கும் இராணுவ உயர்மட்டத்தினருமே பிரதானமாக இலாபமடைந்தவர்களாவர். இராணுவம் ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தமிழர்கள் மீது பாய்ந்து விழவும் அவசரகால அதிகாரங்களை பயன்படுத்திக் கொண்டதோடு பதட்டமான மற்றும் பீதியான சூழ்நிலையை பரவச் செய்தது.

13 வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிட்ட போதிலும், உண்மையான தேர்வுகள் இரண்டே உள்ளன. ஒரு புறம் இராஜபக்ஷ மற்றும் விக்கிரமசிங்கவால் தலைமை வகிக்கப்படும் ஆளும் வர்க்கத்தினதும் மற்றும் அதன் பகைமை கொண்ட கோஷ்டியினதும் முகாமாகும். இவர்களிடம் பொதி நிறைய போலி வாக்குறுதிகள் இருந்த போதிலும், உழைக்கும் மக்கள் எதிர்கொள்கின்ற எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு கிடையாது. மறு பக்கம், சோசலிச சமத்துவக் கட்சி, யுத்தத்தை நிறுத்தி உண்மையான சமூக சமத்துவத்தை ஸ்தாபிக்கும் ஒரு சோசலிச எதிர்காலத்திற்காக போராடுவதற்காக, அனைத்து ஆளும் கும்பல்களில் இருந்தும் சுயாதீனமாக ஒரு புதிய அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டிய தேவையை தொழிலாள வர்க்கத்திற்கு தெளிவுபடுத்துவதற்காக தேர்தலில் போட்டியிடுகின்றது. ஏனைய எல்லா வேட்பாளர்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இராஜபக்ஷவின் அல்லது விக்கிரமசிங்கவின் பின்னால் அணிதிரண்டுள்ளனர்.

அமெரிக்க இராணுவவாதத்தின் வெடிப்பு

இலங்கையில் ஆழமடைந்துவரும் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடியானது தற்காலிகமான அல்லது அதற்குமட்டும் உரிய ஒரு இயல்நிகழ்ச்சியல்ல. மாறாக, இலாப அமைப்பையே சூழ்ந்துகொண்டுள்ள, எல்லாவற்றுக்கும் மேலாக உற்பத்தி நிகழ்ச்சிப்போக்குகளின் வளர்ச்சியடைந்துவரும் பூகோளமயப்படுத்தப்பட்ட பண்புக்கும் மற்றும் முதலாளித்துவம் வேரூன்றியுள்ள வங்குரோத்தான தேசிய அரச அமைப்புக்கும் இடையிலான தீர்க்கமுடியாத முரண்பாடுகளின் உற்பத்தியாகும். இன்று உலக அரசியலில் மிகவும் ஸ்திரமின்மையை ஏற்படுத்தும் காரணியாக இருப்பது, பூகோளத்தின் ஒவ்வொரு மூலையிலும் தனது எதிரிகள் மீது தன்னுடைய ஆதிக்கத்தை ஸ்தாபிப்பதன் மூலம் இந்த அடிப்படை முரண்பாடுகளில் இருந்து மீள்வதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் எடுக்கும் முன்பின் பாராத முயற்சியேயாகும்.

"பயங்கரவாதத்தின் மீதான யுத்தம்" என்ற போலி பதாகையின் கீழ், புஷ் நிர்வாகம் ஆப்கானிஸ்தானையும் ஈராக்கையும் நவகாலனித்துவ ஆட்சிமுறைக்கு உட்படுத்தியது. வாஷிங்டனின் குறிக்கோள், மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் நிறைந்த பிராந்தியத்தை ஆதிக்கம் செய்யும் தனது இலக்கிற்காக இந்த நாடுகளை பயன்படுத்திக்கொள்வதே அன்றி, இந்த இரு நாடுகளுக்கும் சமாதானத்தையும் ஜனநாயகத்தையும் கொண்டுவருவதல்ல. மற்றும் அமெரிக்கா, இந்திய துணைக்கண்டத்தில் அதனது செல்வாக்கு முத்திரையை பதிக்கும் உறுதியில் எந்த அளவும் குறைவாக இல்லை. புஷ் நிர்வாகம், 2001ல் இருந்து, இலங்கையில் "சமாதான முன்னெடுப்பை" புதுப்பிக்கவும், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் சமாதானப் பேச்சுக்களை முன்னேற்றவும் அழுத்தம் கொடுத்ததோடு, நேபாளத்தில் மாஓ வாதிகளின் கிளர்ச்சிக்கு பேச்சுவார்த்தை மூலமான தீர்வு காணப்பட வேண்டும் எனவும் நெருக்கியது.

தெற்காசியாவில் "சமாதானத்திற்கான" வாஷிங்டனின் ஆதரவு, பூகோளத்தின் ஏனைய பாகங்களில் அதன் வலியத்தாக்கும் இராணுவவாதத்துடன் முரண்படவில்லை. இந்த இரு தந்திரோபாயங்களும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களே ஆகும். இலங்கையிலான மோதல்களும் மற்றும் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பகைமையும் பிராந்தியத்தில் அரும்புவிட்டிருக்கும் அமெரிக்க பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. சீனாவைப் போல், இந்தியாவும் பூகோள முதலீடு குவியும் பிரதான இடமாகியுள்ளது. இலாப வீத வீழ்ச்சிக்கு முகங்கொடுத்துள்ள போட்டி நாடுகடந்த கூட்டுத்தாபனங்களுக்கு மலிவான, கல்வியறிவுள்ள வெளிப்படையாகவே வரையறையற்ற மலிவு உழைப்பு தடாகத்திற்கான ஒரு நுழைவாயில் அத்தியாவசியமானதாகி உள்ளது. 1991-92ம் ஆண்டுகளில் 129 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த இந்தியாவிலான வருடாந்த நேரடி வெளிநாட்டு முதலீடு, இந்தாண்டு 5 பில்லியன் டொலர்கள் வரை உயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா, அமெரிக்க மூலோபாய திட்டங்களில் ஒரு பிரதான அடிப்படைக் கூறாகும். அது சீனவுக்கு எதிரான ஒரு சாத்தியமான நண்பனாக இருப்பதோடு மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவிற்குமான ஒரு பயனுள்ள படிக்கல்லாகும். தெற்காசியாவில் வாஷிங்டனின் சூழ்ச்சி திட்டம், சமாதானத்தை கொண்டுவருவதற்கு பதிலாக, எதிர்காலத்தில் புதிய மற்றும் மிக அழிவுகரமான மோதல்களுக்கே களம் அமைக்கும். இலங்கையை பொறுத்தளவில், "சமாதான முன்னெடுப்பின்" மூலம் அமெரிக்காவின் குறிக்கோள்கள் அடையப்படாவிட்டால், இந்த சிறிய தீவை மீண்டும் யுத்த சூழலுக்குள் தள்ளிவிட வெள்ளை மாளிகை தயங்கப் போவதில்லை என்பதையே ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீதான ஆக்கிரமிப்புகள் தெளிவாக எச்சரிக்கின்றன.

தமது முன்னைய ஏகாதிபத்திய எதிர்ப்பு வாய்வீச்சுக்களை ஒரே சீராய் கைவிட்ட துணைக்கண்டத்தில் உள்ள ஆளும் செல்வந்தத்தட்டுக்களால், புஷ் நிர்வாகத்தின் சூழ்ச்சித் திட்டங்கள் எதிர்க்கப்படாமல் செயற்படுத்தப்படுகின்றன. குளிர் யுத்தத்தின் முடிவானது, வாஷிங்டனுக்கும் மொஸ்கோவுக்கும் இடையில் சூழ்ச்சித் திட்டங்களை கையாளும் மற்றும் தங்களை "அணி சேராதவர்களாக", "சுயாதீனமானவர்களாக" அல்லது "சோசலிஸ்டுகளாக" கூட காட்டிக்கொள்ளும் அவர்களின் இயலுமையை நீக்கியுள்ளது. "நீங்கள் எங்களுடனா அல்லது எங்களுக்கு எதிரா" என்ற புஷ்ஷின் கட்டளைக்கு பிரதிபலித்த அனைத்து பிராந்திய தலைவர்களும் மற்றும் கட்சிகளும், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீதான ஆக்கிரமிப்பை அடிமைகள் போல் ஏற்றுக்கொண்டதோடு தங்களது சொந்த தேவைகளுக்காக "பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்தை" சுரண்டிக்கொள்ள முயற்சித்தனர்.

ஒருபுறம், இலங்கையில் "சமாதான முன்னெடுப்பின்" ஆதரவாளர்கள், விடுதலைப் புலிகளை தங்களது நிபந்தனைகளின்படி பேச்சுவார்த்தை மேசைக்கு தள்ளுவதற்கான ஒரு சந்தர்ப்பமாக இதைக் கண்டனர். ஸ்ரீ..சு.க உறுப்பினர்கள் ஐ.தே.க க்கு கட்சி மாறியதால் 2001ல் தேர்தல் நடைபெற்றதோடு விக்கிரமசிங்கவின் புதிய அரசாங்கம், 2002ல் விடுதலைப் புலிகளுடன் யுத்த நிறுத்த உடன்படிக்கையை கைச்சாத்திட்டுக் கொண்டு சமாதான பேச்சுக்களையும் ஆரம்பித்தது. மறுபுறம், விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் நசுக்கும் எதிர்பார்ப்புடன் உள்ளவர்களும் விடுதலைப் புலிகளை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் "பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்தில்" பட்டியிலிடுமாறு கோரினர். கடந்த காலத்தில் உணர்ச்சிப் பூர்வமாக, ஆனால் வெற்று ஏகாதிபத்திய எதிர்ப்பு கண்டனங்களை விடுத்துக்கொண்டிருந்த ஜே.வி.பி தலைவர்களும், இப்போது கொழும்புக்கு வரும் அமெரிக்க உயர்பதவியாளர்களுடன் கருத்துக்களை பகிர்ந்துகொள்வதற்காக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு செல்லும் நிரந்தர விருந்தாளிகளாகி உள்ளனர்.

இந்திய துணைக் கண்டத்தில் சோசலிசத்திற்கான போராட்டமானது, எல்லா முறையிலுமான ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு மற்றும் நவகாலனித்துவ ஒடுக்குமுறைகளை எதிர்ப்பதுடன் இணைக்கப்பட்டுள்ளது. முதலாளித்துவத்தின் கோழைத்தனமான அரசியல் பிரதிநிதிகளை போல் அன்றி, சோசலிச சமத்துவக் கட்சி, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள வெளிநாட்டு துருப்புக்கள் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் வெளியேற்றப்பட வேண்டும் எனக் கோருவதோடு, குவாண்டனமோ குடா, டியாகோ கார்சியா மற்றும் உலகம் பூராவும் உள்ள அமெரிக்க சிறைச்சாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள யுத்தக் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் கோருகிறது. யுத்தத்தை திட்டமிடுவதிலும் ஒழுங்கு செய்வதிலும் ஈடுபட்டுள்ள பொறுப்பாளிகள் அனைவரும் அம்பலப்படுத்தப்பட்டு விசாரணை செய்யப்படுவதோடு யுத்தக் குற்றவாளிகளாக தண்டிக்கப்படல் வேண்டும். அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் மற்றும் உலகின் ஏனைய பகுதிகளிலும் உள்ள தங்களின் வர்க்க சகோதரர்களுடன் அக்கம்பக்கமாக நின்று, தெற்காசியாவில் உள்ள தொழிலாளர்களால் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு பூகோள எதிர் தாக்குதலை அபிவிருத்தி செய்ய நாம் முயற்சிக்கின்றோம்.

யுத்தத்திற்கு பிந்திய "சுதந்திரத்தின்" மதிப்பீடு

தெற்காசியாவில் உள்ள தொழிலாள வர்க்கம் கடந்த அரை நூற்றாண்டின் அனுபவங்களின் இருப்புநிலை ஏட்டை வரைந்துகொள்ள வேண்டிய தருனம் இதுவே. யுத்தத்திற்கு பிந்தைய "சுதந்திர" உடன்படிக்கைகளுடனான முழு நீண்ட பரிசோதனைகளும் முற்றிலும் பேரழிவுகரமானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. துணைக்கண்டத்தில் எங்கும் முதலாளித்துவ வர்க்கமானது, உழைக்கும் மக்களின் ஜனநாயக அபிலாஷைகளையும் சமூகத் தேவைகளையும் நிறைவேற்றக்கூடியதாக இருக்கவில்லை. கோடிக்கணக்கான மக்கள் பொருத்தமான சுகாதாரம், கல்வி மற்றும் ஏனைய சமூக சேவைகளும் இல்லாதது என்பது ஒருபுறம் இருக்க, துப்பரவான தண்ணீர் மற்றும் மின்சார வசதியின்றி மிகவும் வறுமையான நிலையில் தங்கள் வாழ்க்கையை கொண்டுசெல்ல தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த அவசரத் தேவைகளுக்கான அரசாங்கங்களின் பதில், இதே நிலைமையை மேலும் அதிகரிக்க செய்வதாகவே உள்ளது. அவை, செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையிலான சமூகப் பிளவை குறைப்பதற்கு பதிலாக, அதை விரிவடைய செய்யும் வகையில் சந்தையின் தடையற்ற இயக்கத்திற்கு வழிதிறந்து விடுகின்றன.

மிகப்பெரும் சமூக நெருக்கடியை தீர்ப்பதற்கு இலாயக்கற்றுள்ள ஆளும் வர்க்கங்கள், பிரிட்டிஷ் காலனித்துவத்தின் "பிரித்து ஆளும்" கொள்கையை தொடர்ந்து முன்னெடுப்பதோடு, பேரழிவுகரமான விளைவுகளுடன் உழைக்கும் மக்களை ஒருவருக்கு ஒருவர் எதிரியாக இருத்துவதற்காக இன, வகுப்பு மற்றும் சாதிப் பிளவுகளையும் மீண்டும் மீண்டும் கிளறிவிடுகின்றன. பிராந்தியத்தின் செயற்கையான தேசிய எல்லைகள், வெகுஜனங்களின் காலனித்துவ எதிர்ப்பு இயக்கத்தை கருச்சிதைவு செய்வதற்காக இந்திய தேசியக் காங்கிரசின் முதலாளித்துவ தலைவர்கள், பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் ஏற்படுத்திக்கொண்ட கூட்டு மோசடியின் உற்பத்தியே ஆகும். துணைக்கண்டத்தை முஸ்லிம் பாகிஸ்தானாகவும் மற்றும் பெரும் பகுதியை இந்து இந்தியாவாகவும் தான்தோன்றித்தனமாக பிரித்தமையானது, காஷ்மீர் மீதான கட்டுப்பாட்டுக்காக உடனடியாக ஒரு யுத்தத்திற்கு வழிவகுத்ததுடன், இலட்சக்கணக்கான உயிர்களை பலிகொண்ட இனவாத வன்முறைகளுக்கும் எதிர்கால படுகொலைகள் மற்றும் யுத்தத்திற்கும் களம் அமைத்தது.

பிரிட்டிஷ் சிலோன், ஸ்ரீலங்கா தேசிய அரசாக மாற்றப்பட்டமை, கொழும்பில் அன்றி லண்டனில் உள்ள காலனித்துவ அலுவலகத்திலேயே திட்டமிடப்பட்டது. பிராந்தியம் பூராவும் புரட்சிகர கிளர்ச்சிக்கு முகங்கொடுத்த காலனித்துவ ஆட்சியாளர்கள், தெற்காசியாவில் பிரிட்டிஷ் நலன்களை தக்கவைத்துக்கொள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வகையில் அமைந்துள்ள தீவு பாதுகாப்பான அடித்தளத்தை வழங்கும் என கணக்கிட்டனர். டீ.எஸ் சேனாநாயக்க மற்றும் ஏனைய இலங்கையை "ஸ்தாபித்த தந்தைகளும்", இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியின் (Bolshevik Leninist Party of India -BLPI) ட்ரொட்ஸ்கிஸ்டுகள் தலைமையிலான காலனித்துவ எதிர்ப்பு இயக்கத்திற்கு எதிரானவர்களாக இருந்தனர் மற்றும் அவர்கள் மீது "சுதந்திரம்" திணிக்கப்பட்டது. இந்த ஒழுங்கின் விதிகளில், தீவில் பிரிட்டிஷ் இராணுவ தளத்தை பேணிக்காப்பதும் உட்படுத்தப்பட்டிருந்தது.

தொலைநோக்கான ஆய்வில், தெற்காசியாவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அரசுகள் வெறுமனே ஏகாதிபத்திய ஒழுங்கின் "ஒரு மறு ஒழுங்கமைப்பே" அன்றி உண்மையான சுதந்திரத்தை உள்ளடக்கியதல்ல என இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியின் தலைவர்கள் விளக்கியிருந்தனர். 1948ல், இனவாத யுத்தத்தின் ஆபத்தை பற்றி தீர்க்கதரிசனத்துடன் எச்சரிக்கை செய்திருந்த அவர்கள், "இரு பகுதிகளதும் எல்லைகளை விரிவாக்க முயலும் பிற்போக்கு விஸ்தரிப்புவாதிகளை" நிராகரிப்பதோடு "துணைக்கண்டத்தை தாமாகவிரும்பி மீள் ஒன்றிணைப்பு செய்ய" போராடுமாறும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்தனர். அது "இந்திய ஒன்றியத்திலும் மற்றும் பாகிஸ்தானிலும் சோசலிசப் புரட்சியின்றி சாத்தியமாகாது" என்பதையும் அவர்கள் வலியுறுத்தினர்.

சிலோனில், 1948ல் பிரித்தானியரால் நடத்தப்பட்ட கையளிப்பு வரலாற்று நிகழ்ச்சிக்கு "ஸ்தாபக தந்தைகள்" கடமையுணர்ச்சியுடன் சமூகமளித்திருந்த அதேவேளை, இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியின் தலைவர்கள் இந்த போலி சுதந்திரத்திற்கு தமது எதிர்ப்பை வெளிக்காட்டும் முகமாக காலிமுகத் திடலில் 50,000 தொழிலாளர்கள் பங்குபற்றிய ஒரு கூட்டத்தை நடத்தினர். இலங்கை முதலாளித்துவ வாதிகள் தொடக்கத்தில் இருந்தே தமது உறுதியற்ற ஆட்சிக்கான ஒரு தர்க்கரீதியான அடித்தளைத்தை உருவாக்குவதற்காக சிங்கள பௌத்த மேலாதிக்கவாதத்தை நாடினர். முதலாவதாக ஆட்சியில் இருந்த ஐ.தே.க அரசாங்கம், தனது முதல் நடவடிக்கையாக, ஜனத்தொகையில் பத்தில் ஒரு பகுதியினராக இருந்த ஒரு மில்லியன் தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களின் பிரஜா உரிமையை பறித்தது.

பின்னர், இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியின் தலைவர்கள் யுத்தத்திற்கு பிந்திய கட்டமைப்புக்கு அடிபணிந்தமையானது தெற்காசிய தொழிலாள வர்க்கத்திற்கு துன்பகரமான விளைவுகளை தந்தது. துணைக்கண்டம் பூராவும் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்காக ஒரு அனைத்து இந்திய முன்நோக்கில் நிறுவப்பட்ட இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி, இந்தியாவின் காங்கிரஸ் சோசலிசக் கட்சியினுள் கரைத்துவிடப்பட்டதுடன், மீள்ஸ்தாபிதம் செய்யப்பட்ட லங்கா சமசமாஜக் கட்சியின் சந்தர்ப்பவாதிகளுடன் ஒரு கோட்பாடற்ற மறு ஐக்கியத்திற்குள்ளும் நுழைந்துகொண்டது. லங்கா சமசமாஜக் கட்சி வெகுஜனங்களை நெருக்கமாக அணுகுதல் என்ற பெயரில், பிற இன பழிப்பு சிங்களவாதத்திற்கு எதிராக போராடுவதற்கு பதிலாக, முடிவில் சோசலிச அனைத்துலகவாத கொள்கைகளை முழுமையாக கைவிட்டு, 1964ல் ஸ்ரீ..சு.க தலைமையிலான ஸ்ரீமா பண்டாரநாயக்க அம்மையாரின் அரசாங்கத்திற்குள் நுழைந்துகொண்டது. முதலாளித்துவ அரசாங்கத்தில் அமைச்சர்கள் என்ற வகையில், பௌத்தத்தை அரச மதமாகவும் சிங்களத்தை உத்தியோகபூர்வ மொழியாகவும் நிறுவிய 1972 அரசியலமைப்பை வரைவதற்கு லங்கா சமசமாஜக் கட்சி தலைவர்கள் பொறுப்பாளிகளாக இருந்தனர்.

லங்கா சமசமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்பு உள்நாட்டு யுத்தத்திற்கு விதைகளை தூவியது. ஐக்கியப்பட்ட அடிப்படையில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பிரிவினரதும் நலன்களை அபிவிருத்தி செய்வதற்கான போராட்டத்தை கைவிட்டதன் மூலம், லங்கா சமசமாஜக் கட்சி, குட்டி முதலாளித்துவ தீவிர அமைப்புக்கள் தமது பிற்போக்கு இனவாத அரசியலுக்கு ஒரு அரங்கை வெற்றிகொள்வதற்காக கதவுகளை திறந்துவிட்டது. தெற்கில் மாஓவாதம் மற்றும் குவேரவாதத்தையும் கலந்த சிங்களப் பேரினவாதத்தின் அடிப்படையில் கிராமப்புற சிங்கள இளைஞர்களுக்கு ஜே.வி.பி அழைப்புவிடுத்தது. வடக்கில், அரச அங்கீகாரத்துடனான பாரபட்சங்களுக்கு முடிவுகட்டுவதற்கான ஒரு வழிமுறையாக, தனியான ஈழ அரசு என்ற பெயரில் தமிழ் பிரிவினைவாத்திற்காக போராடுவதற்காக அதிருப்தியடைந்த தமிழ் இளைஞர்களுக்கு விடுதலைப் புலிகள் அழைப்புவிடுத்தனர்.

அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த கொழும்பு அரசாங்கங்கள், அதிகாரத்தில் தமது பிடியை பாதுகாத்துக்கொள்வதற்காக பிற இன பழிப்பு சிங்களவாதத்தை தூண்டிவிட்டனர். 1983ல் உள்நாட்டு யுத்தத்திற்கு முன்னதாக, .தே.க தனது கட்டமைப்பு சீர்திருத்தக் கொள்கைகளால் உருவாக்கப்பட்ட சமூக அழிவுகளில் இருந்து கவனத்தை திசை திருப்புவதற்காக தீவு பூராவும் கொடூரமான தமிழர் விரோத படுகொலைகளை கட்டவிழ்த்து விட்டது. தூணைக்கண்டம் பூராவும் இதற்கு சமாந்தரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. தொழிலாள வர்க்கத்தை பிரிக்கவும் மற்றும் தமது சொந்த சலுகைமிக்க நிலை¬யை பலப்படுத்தவும் பாகிஸ்தானிலும் இந்தியாவிலும் உள்ள ஆளும் தட்டுக்களால் ஜாதி மற்றும் இன அரசியலுடன் சேர்த்து இஸ்லாமிய அடிப்படைவாதமும் இந்து மேலாதிக்கவாதமும் வேண்டுமென்றே ஊட்டிவளர்க்கப்பட்டன.

தனது சுயாதீனமான வர்க்க நலன்களை பாதுகாப்பதற்காக, தொழிலாள வர்க்கம் பி.எல்.பீ.ஐ ஸ்தாபித்த அனைத்துலகவாத மரபுகளை மீளாய்வு செய்தல் வேண்டும். சோசலிச சமத்துவக் கட்சி தெற்காசியாவின் ஐக்கிய சோசலிச அரசுகளின் ஒரு பாகமாக ஸ்ரீலங்கா--ஈழம் ஐக்கிய சோசலிச குடியரசை ஸ்தாபிக்க போராடுகின்றது. முதலாளித்துவத்தை இல்லாமற்செய்வதற்கான பூகோளப் போராட்டத்தின் ஒர் பாகமாக பிராந்தியம் பூராவும் தொழிலாளர்களையும் ஒடுக்கப்பட்டவர்களையும் ஐக்கியப்படுத்தும், அணிதிரட்டும் வழிவகை இதுவேயாகும்.

உள்நாட்டு யுத்தத்திற்கு சோசலிச தீர்வு

ஆரம்பத்தில் இருந்தே உள்நாட்டு யுத்தத்தை உறுதியாக எதிர்த்து வந்த ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமுமே ஆகும். நாம், உண்மையான மற்றும் நிலையான சமாதானத்தை உருவாக்குவதற்கான ஒரே வழியாக வடக்கு கிழக்கில் இருந்து இலங்கை இராணுவப் படைகளை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் வெளியேற்றுமாறு கோருகிறோம். யுத்தத்திற்கு முடிவுகட்டுவதற்கான தனது வேலைத் திட்டத்தை அபிவிருத்தி செய்வதில், சோசலிச சமத்துவக் கட்சி எல்லாவற்றுக்கும் மேலான ஒரு கோட்பாட்டால் வழிநடத்தப்படுகிறது: அது தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ கட்சிகளில் இருந்தும் மற்றும் முதலாளித்துவ அரசில் இருந்தும் தனது அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிதம் செய்துகொள்வதாகும்.

விக்கிரமசிங்கவின் அல்லது இராஜபக்ஷவின் அனுசரணையின் கீழ் சமாதானத்தை அடைய முடியும் என்று நம்புவது ஒரு மாயையாகும். அதற்கு மாறாக, தொழிலாளர்கள் ஐ.தே.க மற்றும் ஸ்ரீ..சு.க வுடன் கட்டுண்டிருக்கும் வரை, சாதாரண இலங்கையர்கள் எப்பொழுதும் யுத்த அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்க வேண்டியிருக்கும். தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே ஒரு நிலையான தீர்வை வழங்க முடியும். மிக வறுமையான கிராமப்புற மக்களுக்கு அழைப்பு விடுப்பதோடு, சகல வடிவங்களிலுமான வகுப்புவாதம், பேரினவாதம் மற்றும் பிரிவினைவாதங்களையும் பொதுவில் நிராகரிப்பதன் ஊடாக, தமிழ், சிங்கள, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்களை ஐக்கியப்படுத்துவதை அடிப்படையாக கொண்ட, தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான புரட்சிகர இயக்கத்தைக் கட்டியெழுப்புவதன் மூலமே அது சாத்தியமாகும்.

சோசலிச சமத்துவக் கட்சி ஆயுத பலத்தால் ஒற்றை அரசை பாதுகாப்பதை எதிர்க்கின்றது. இத்தகைய கொள்கை, தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் தொடுப்பது மட்டுமன்றி, தவிர்க்க முடியாத வகையில் இராணுவவாதத்தின் செல்வாக்கிற்கு வழிவகுப்பதோடு, நாடு முழுவதும் ஜனநாயக உரிமைகளுக்கு குழிபறிக்கின்றது.

அதே சமயம், ஒரு தனியான முதலாளித்துவ தமிழீழ குட்டிஅரசுக்கான விடுதலைப் புலிகளின் கோரிக்கையையும் சோசலிச சமத்துவக் கட்சி எதிர்க்கின்றது. இந்தக் கோரிக்கையின் மூலம் முன்வைக்கப்படுவது, தமிழ் மக்களின் நலன்கள் அல்ல. மாறாக பாலஸ்தீன விடுதலை இயக்கம், ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் மற்றும் ஐரிஷ் குடியரசு இராணுவம் போன்ற ஏனைய தேசிய இயக்கங்களின் முதலாளித்துவ தலைவர்களை போல், தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதற்காக பூகோள மூலதனத்துடன் தனது சொந்த உறவை ஸ்தாபிதம் செய்துகொள்ள முயற்சிக்கும், தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களேயாகும். விடுதலைப் புலிகள் வடக்கு கிழக்குக்கான கட்டுப்பாட்டை பொறுப்பேற்றால், அது, தமிழ் தொழிலாளர்களின் நேரடி இழப்பில், பரஸ்பரம் சாதகமான உடன்பாட்டை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக, பூகோள முதலீட்டாளர்களுக்கு உடனடியாக அழைப்பு விடுக்கும்.

அதேபோல், "சமாதான" கொடுக்கல் வாங்கல்களின் ஒரு அங்கமாக பிரேரிக்கப்பட்டுள்ள பலவிதமான அதிகாரப் பகிர்வு திட்டங்களையும் சோசலிச சமத்துவக் கட்சி எதிர்க்கின்றது. இந்த திட்டங்களில் இரண்டு பொதுத் தன்மைகள் காணப்படுகின்றன: அவை இனவாதமும், ஜனநாயக உரிமைகள் பற்றிய அலட்சியமுமாகும். அவர்கள் அனைவரும், வடக்குக் கிழக்கில், பூகோள மூலதனத்தின் கட்டளைகளை அமுல்படுத்துவதில் கொழும்பு அரசாங்கத்துடன் கூட்டாக செயற்படும், தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்படாத, இனவாதத்தை அடிப்படையாக கொண்ட ஒரு இடைக்கால நிர்வாக சபையை அமுல்படுத்துவதில் ஈடுபாடுகொண்டுள்ளனர். அதேசமயம், முஸ்லிம், தமிழ் மற்றும் சிங்கள சமூகங்களுக்கு இடையில் பிரிவினையை நிறுவனமயப்படுத்துவதானது, தவிர்க்க முடியாத வகையில் எதிர்கால பதட்ட நிலைமைகளுக்கும் மோதல்களுக்கும் அடித்தளமிடும்.

நிஜமான ஜனநாயக தீர்வுக்காக அடித்தளமிடுவதன் பேரில், தீர்க்கப்படாத சகலவிதமான ஜனநாயக உரிமைகள் பற்றிய பிரச்சினைகளை தீர்ப்பதை இலக்காகக் கொண்ட அரசியலமைப்பு சபை ஒன்றை கூட்டுமாறு சோசலிச சமத்துவக் கட்சி சிபார்சு செய்கின்றது. சோசலிச சமத்துவக் கட்சியின் பிரேரணைகள், இராஜபக்ஷ இந்தத் தேர்தலின் பின்னரும் அமுல்படுத்த விரும்பும், 1972 மற்றும் 1978 அரசியலமைப்பை வரைவதற்காக மேற்கொள்ளப்பட்ட சிடுமூஞ்சித்தனமான செயல¢களுடன் பொதுவான எதையும் கொண்டிருக்கவில்லை. உண்மையாகவே பெரும்பான்மையான மக்களின் நலன்களை வெளிப்படுத்தும் ஒரு புதிய அரசியலமைப்பு, மக்களின் முதுகுக்கு பின்னால் செயற்படும் முதலாளித்துவ அரசியல்வாதிகளின் கும்பல்களால் அல்லாமல், சாதாரண உழைக்கும் மக்களால், அவர்களுக்காகவே வெளிப்படையாகவும் மற்றும் ஜனநாயக முறையிலும் தேர்வுசெய்யப்பட்ட ஒரு பிரதிநிதிகள் சபையால்தான் கட்டாயம் வரையப்பட வேண்டும்.

அரசில் இருந்து மதத்தை வேறுபடுத்தாமல், உண்மையான ஜனநாயகத்தை ஸ்தாபிதம் செய்வது என்பது சாத்தியமற்றதாகும். இது பௌத்தத்தை அரச மதம் என்ற ஸ்தானத்தில் இருந்து கீழிறக்குவதையும், மத அமைப்புக்களுக்கான அரச நிதிகளை இல்லாமல் செய்வதையும் அர்த்தப்படுத்துகிறது. இது பெருந்தோட்டங்களில் உள்ள தமிழ் மக்களின் முழுஉரிமைகளை தொடர்ந்து பறிக்கும் சகலவிதமான ஒடுக்குமுறையான மற்றும் பாரபட்சங்களை உருவாக்கும் சட்டங்களையும் இல்லாதொழிக்க வேண்டி நிற்பதுடன், அவற்றோடு சேர்த்து வெகுஜன பாதுகாப்பு சட்டம், அவசரகால சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டம் ஆகியவற்றையும் ஒழித்துக்கட்டவும் வேண்டுகோள் விடுக்கின்றது.

ஆழமடைந்துவரும் சமூக சமத்துவமின்மை

இராஜபக்ஷவும் விக்கிரமசிங்கவும் வாக்காளர்களை ஏமாற்றுவதற்காக வெற்றுத் தேர்தல் வாக்குறுதிகளை வழங்கும் ஒரு சிடுமூஞ்சித்தனமான பேரத்தில் ஈடுபட்டுக்கொண்டுள்ளனர். அரசாங்கத்தின் பொருளாதார நிகழ்ச்சித் திட்டங்கள் அவர்களது தேர்தல் விஞ்ஞாபனங்களில் அன்றி, சர்வதேச நாணய நிதியத்தினாலும் உலக வங்கியாலுமே தீர்மாணிக்கப்படுகின்றன என்பதை இரு வேட்பாளர்களும் அறிவர். பூகோள மூலதனம், தேர்தல் முடிந்த கையோடு, எரிபொருள் மானிய வெட்டு மற்றும் அத்தியாவசியமான சமூக சேவைகளில் மேலதிக வெட்டுக்களையும் உள்ளடக்கிய வரவுசெலவுத் திட்டத்தில் ஒரு புதிய சுற்று வெட்டுக்களையும் கோரும். மிகப் பாரமான சுமைகள் அதை சற்றும் தாங்கமுடியாதவர்கள் மீதே தவிர்க்க முடியாமல் சுமத்தப்படும்.

ஆளும் வர்க்கம், டிசம்பர் 26 சுனாமியின் அழிவுகரமான தாக்கத்தை எதிர்கொள்ள தவறியதில் இருந்து அதன் அரசியல் வங்குரோத்து அம்பலத்திற்கு வந்துள்ளது. டிசம்பர் 26 சுனாமி தீவின் கரையோர வலயங்களில் கிட்டத்தட்ட 40,000 உயிர்களை பலிகொண்டதோடு, குறைந்தபட்சம் 800,000 ற்கும் மேற்பட்டவர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 80,000 வீடுகளும், அதே போல் பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் ஏனைய அத்தியாவசிய சேவைகளும் பிரமாண்டமான அலைகளால் அழிவுற்றுள்ள போதிலும், இன்னமும் கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கப்படவில்லை. உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, பேரழிவு நடந்து 10 மாதங்கள் கடந்த பின்னரும் 1,126 புதிய வீடுகள் மட்டுமே முழுமைப்படுத்தப்பட்டுள்ளதோடு மேலும் 15,619 வீடுகள் இன்னமும் அரைகுறையாக கட்டப்பட்டுள்ளன. பெரும்பாலான பாதிக்கப்பட்ட வறியவர்கள் தற்காலிக முகாம்களில் தங்கியிருக்க தள்ளப்பட்டுள்ளனர் அல்லது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தங்கியிருக்கின்றனர்.

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களின் அவல நிலையானது, அடுத்தடுத்து ஆட்சி செய்த ஐ.தே.க மற்றும் ஸ்ரீ..சு.க தலைமையிலான அரசாங்கங்களின் கடந்த இரு தாசப்த கால சுதந்திர சந்தை கொள்கைகளால் உருவாக்கப்பட்டுள்ள பொருளாதார சமூக அழிவுகளின் தெளிவான அறிகுறியாகும். உடன்பிறந்தவர்களை கொல்லும் யுத்தத்திற்காக பில்லியன் கணக்கான டொலர்கள் செலவிடப்பட்டுள்ள அதேவேளை, இயற்கை பேரழிவுகளை தடுக்கும் அடிப்படையான திட்டங்கள் உட்பட, இன்றியமையாத சமூக மற்றும் பௌதீக உட்கட்டமைப்புக்கள் அலட்சியம் செய்யப்பட்டும் குறைக்கப்பட்டும் வந்துள்ளன. ஒரு தொடர்ச்சியான புள்ளிவிபரங்கள் செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையில் ஆழமடைந்துவரும் இடைவெளியை விளக்கிக்காட்டுகிறது.

*2003/2004 க்கான மத்திய வங்கியின் நுகர்வோர் நிதி ஆய்வு அறிக்கையின் படி, ஜனத்தொகையில் 20 சதவீதமான பெரும் செல்வந்தர்களின் தேசிய வருமானத்தின் பங்கு, 1996/97ல் 53 வீதத்தில் இருந்து 2003/2004ல் 55.1 வீதம் வரை அதிகரித்துள்ளது. இந்தப் புள்ளிவிபரத்தின் படி 20 வீதமான வறியவர்களின் தேசிய வருமானத்தின் பங்கு, 4 வீதத்தில் இருந்து 3.6 வீதமாக குறைந்துள்ளது. அதே அறிக்கை, உச்சியிலுள்ள பத்து சதவீதத்தினர் தேசிய வருமானத்தில் பெறும் 39.9 வீதத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் வறியவர்களான 10 வீதமானவர்கள் தேசிய வருமானத்தில் வெறும் 1.1 வீதத்தையே பெறுவதாக காட்டுகிறது.

* இருபத்தாறு சதவீதமான மக்கள், ஒரு நாளைக்கு 1 அமெரிக்க டொலருக்கும் குறைவான வறுமைக் கோட்டிற்கு கீழ் உயிர்வாழ போராடிக்கொண்டிருக்கின்றனர். சுமார் ஜனத்தொகையில் அரைவாசி பேர் (45 வீதமானவர்கள்) 2 அமெரிக்க டொலர்களுக்கும் குறைவான வருமானத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். மிகவும் அண்மையில் வெளிவந்த உலக வங்கியின் கொள்கை ஆய்வின்படி, 1991 முதல் 2001 வரையான தசாப்தத்தில் வறுமையில் வாழும் தோட்டத் தொழிலாளர்களின் தொகை 50 வீதத்தால் அதிகரித்துள்ளது. சுமார் 1.7 மில்லியன் குடும்பங்கள் அரசாங்கத்தின் சமுர்த்தி திட்டத்தில் (வறுமை நிவாரணம்) தங்கியிருக்கின்றனர். இதன் மூலம் மாதம் ஒர் குடும்பத்திற்கு 500 ரூபாய்கள் (5 அமெ.டொலர்கள்) அல்லது அதற்கும் குறைவான தொகையே மக்களுக்கு கிடைக்கின்றது.

* 2003/2004 ற்கான நுகர்வோர் நிதி ஆய்வு அறிக்கை, நாட்டின் 19 மில்லியன் ஜனத்தொகையில் 15.4 சதவீதமானவர்கள் வரிச்சு மற்றும் பூச்சு, மண் அல்லது ஓலைகளால் அமைக்கப்பட்ட கூடாரங்களிலேயே வாழ்கின்றனர். "இவை வீடுகள் என்று வகைப்படுத்த முடியாதவை. 31 சதவீதமானவர்களே குழாய் நீரை பயன்படுத்துகின்றனர். ஜனத்தொகையில் கால்வாசிப் பேருக்கு மின்சாரம் கிடையாது.

* இரண்டு தாசப்தகால யுத்தம், குறிப்பாக யுத்த வலயமான வடக்கு மற்றும் கிழக்கில் பெருந் தொகையானவர்களை பலிகொண்டுள்ளது. 2002ல் யுத்த நிறுத்தம் கைச்சாத்திடப்பட்ட போதிலும், ஒரு மதிப்பீட்டின்படி 800,000 பேர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளதுடன் 172,000 பேர் இன்னமும் அகதி முகாம்களில் வாழ்கின்றனர். சுமார் 30,000 பெண்கள் யுத்தத்தால் விதவைகளாகியுள்ளனர்.

தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு சோசலிச வேலைத்திட்டம்

மிகச் சிறுபான்மையாக உள்ள பெரும் செல்வந்தர்களுக்கு செல்வக் குவிப்பையும் மற்றும் இலாபத்தையும் உருவாக்குவதற்கு மாறாக, முழு ஜனத்தொகையின் மனிதத் தேவைகளை பூர்த்திசெய்வதை ஒழுங்கமைக்கும் கோட்பாடாக கொண்டிருக்கும் ஒரு பொருளாதார முறையை சோசலிச சமத்துவக் கட்சி முன்வைக்கின்றது. அத்தகைய ஒரு சமுதாய மாற்றத்திற்கான பொருளாதார அஸ்திவாரத்தை தொடக்கிவைப்பதற்காக, நாம், அனைத்து பெரும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களையும் தேசியமயமாக்க வேண்டும், சுதந்திர வர்த்தக வலயத்திற்குள் இயங்கும் நிறுவனங்கள் உட்பட, பரந்தளவிலான தொழிற்துறை மற்றும் உற்பத்தி கூட்டுத்தாபனங்கள் அனத்தையும் பொது உடமையின் கீழும் பொதுக் கட்டுப்பாட்டின் கீழும் இயங்கும் தொழில்நிறுவனங்களாக மாற்றவேண்டும் மற்றும் அனைத்து தீர்க்கமான இயற்கை வளங்களையும் பொது உடமையின் கீழும் பொதுக் கட்டுப்பாட்டின் கீழும் கொண்டுவரவேண்டும் என்கின்றோம்.

* அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் சிறந்த ஊதியத்துடனான வேலை

வேலையின்மை தற்போதைய பொருளாதார ஒழுங்குக்கே உரித்தான வியாதியாகும். 2003-04ல் வேலைற்றோர் தொகை 8.9 வீதத்தால் குறைந்துள்ளதாக அரசாங்கம் தம்பட்டமடித்துக்கொண்ட போதிலும், உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் உண்மையான வீதத்தை தகாவழியில் குறைமதிப்பிட்டுக்காட்டியது. போதியவேலை இல்லாதோர் மட்டமானது 21.6 ஆக உள்ளது. இளைஞர்களின் வேலையின்மை தொகை மட்டுமீறியதாக உள்ளது. 15 - 18 வயதுக்கு இடையிலானவர்களில் 36 வீதமானவர்கள் வேலையற்று இருப்பதோடு, 19 - 24 வயதுக்கிடையிலானவர்களில் 30 வீதமானவர்கள் வேலையற்றுள்ளனர். உயர்பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழக பட்டதாரிகளில் 18.2 வீதமானர்கள் வேலையற்றவர்கள். அதேசமயம், 5-17 வயதான சிறுவர்கள் வறுமைப்பிடிக்குள் அகப்பட்டுள்ள தமது குடும்பத்திற்கு உதவுவதற்காக ஏதாவதொரு வகையான தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் அரைவாசிப் பேர் 15 வயதுக்கும் கீழ்பட்டவர்களாவர். இந்த புள்ளிவிபரங்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டங்களையும் சேர்த்தால் பிரம்மாண்டமான முறையில் அதிகரிக்கும்.

இராஜபக்ஷ, விக்கிரமசிங்க ஆகிய இருவரும் வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதாக வாக்குறுதியளித்துள்ளனர். 2002 க்கும் 2004 க்கும் இடைப்பட்ட காலத்தில் தனது அரசாங்கத்தின் கீழ் பொதுத்துறை வேலைகளை இரக்கமின்றி சீரழித்த விக்கிரமசிங்க, ஆண்டுக்கு 200,000 வேலைகள் என்றளவில் அடுத்த தசாப்தத்திற்கு இரண்டு மில்லியன் வேலைகளை உருவாக்குவதாக வாக்குறுதி கொடுத்துக்கொண்டிருக்கின்றார். அதையும் விஞ்சும் வகையில், ஆறு வருடங்களுக்குள் 2.4 மில்லியன் வேலைகளுக்கு இராஜபக்ஷ வாக்குறுதியளிக்கின்றார். 2004 தேர்தலுக்கு முன்னதாக அவரது கூட்டணி அரசாங்கம், பல்கலைக்கழக மற்றும் உயர் பாடசாலை பட்டதாரிகளுக்கு 100,000 வேலைகளுக்கும் அதிகமாக உருவாக்குவதாக பிரகடனம் செய்தது. இதுவரை அது 32,000 நிரந்தர வேலைகளையே வழங்கியுள்ளது.

ஊதியக் குறைப்பின்றி, வேலை நேரத்தை வாரத்திற்கு 30 மணித்தியாலமாக குறைப்பதன் மூலம் வேலைவாய்ப்பை விரிவுபடுத்த வேண்டும் என சோசலிச சமத்துவக் கட்சி முன்மொழிகின்றது. நியாயமான சம்பளத்துடனான இலட்சக்கணக்கான தொழில்களை உருவாக்கவும், உடனடித் தேவையாகவுள்ள பொது வீட்டுத்திட்டம், பாடசாலை, ஆஸ்பத்திரி, வீதி மற்றும் நீர்ப்பாசன திட்டங்களை கட்டியெழுப்பவும் பில்லியன் கணக்கான ரூபாய்கள் செலவு செய்யப்பட வேண்டும். சுனாமியாலும் இரண்டு தசாப்தகால உள்நாட்டு யுத்தத்தாலும் அழிவுக்குள்ளான வாழ்க்கைகளை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கைக்கு உடனடி முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும்.

விலைவாசி ராக்கட் வேகத்தில் உயர்கிறது, உண்மையான வருமானம் வீழ்ச்சியடைந்து வருகின்றது. 2000 ஆண்டில் இருந்து தோட்டத் தொழிலாளர்களின் உண்மையான சம்பளம் 14 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதுடன் வர்த்தக மற்றும் தொழில் துறையில் சேவையாற்றும் தொழிலாளர்களின் ஊதியங்கள் 34 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. சகல தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச மாத சம்பளமாக ரூபா 10,000 (ஏறத்தாழ 100 அமெ. டொலர்கள்) வரையான உடனடி சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என சோசலிச சமத்துவக் கட்சி பிரேரிக்கின்றது. அத்தோடு இந்த சம்பளம் வாழ்க்கைச் செலவு புள்ளிக்கேற்ப தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட வேண்டும்.

சகல விதத்திலுமான சிறுவர் உழைப்பும் மற்றும் இளைஞர்களையும் பெண்களையும் இரவு வேலைகளில் ஈடுபடுத்துவதையும் நிறுத்த வேண்டும் என நாம் கோருகிறோம். சகல இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும், அவர்களின் திறமைகளை வளர்த்துக்கொள்வதற்காக, அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் தொழிற்பயிற்சி திட்டங்களில் பயிற்சியின்போதும், அவசியமான உபகரணங்கள் அடங்கிய கலாச்சார மற்றும் விளையாட்டு வசதிவாய்ப்புக்களில் பயிற்சிபெறும்போதும் பயிற்சிக்கால ஊதியம் கட்டாயம் கிடைக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.

* உயர் தரத்திலான இலவசக் கல்வி

இளைஞர்கள் தமது திறமைகளையும் சிருஷ்டி திறனையும் முழுமையாக அபிவிருத்தி செய்ய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். தற்போது, கல்விமுறையானது சமத்துவமின்மையால் சிதைவுற்றுள்ளது -- தொழிலாள வர்க்க மற்றும் கிராமப்புற சிறுவர்கள், அவசியமான வசதிகளற்ற மற்றும் குறைந்த அலுவலர்களை கொண்ட பாடசாலைகளில் கல்விகற்க தள்ளப்பட்டுள்ள அதேவேளை, செல்வந்தர்களின் புத்திர புத்திரிகள் பணம் செலுத்தி பெறக்கூடிய முன்னேற்றமடைந்துள்ள வளங்கள், வழிமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை அனுபவிக்கின்றனர்.

தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் மத்தியில் 20 வீதமானவர்களுக்கு பாடசாலை செல்வதற்கான வசதிகள் இல்லை. மேலும் 44 வீதமானவர்கள் அடிப்படையான பாலர் மட்ட கல்வியை மட்டுமே பெறுகின்றனர். 1997 க்கும் 2004 க்கும் இடைப்பட்ட காலத்தில், இன்னும் 592 அரசாங்க பாடசாலைகள் மூடப்பட்டுள்ள அதேவேளை, தனியார் பாடசாலைகளின் எண்ணிக்கை 125ஆல் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 110,000 மாணவர்கள் பல்கலைக்கழக தகுதி பெற்றபோதிலும் 16,500 பேர் மட்டுமே பல்கலைக்கழக அனுமதியை பெற்றனர்.

சோசலிச சமத்துவக் கட்சி, தங்களின் படிப்பை தொடரவிரும்பும் அனைவருக்கும், பல்கலைக் கழகம் வரைக்கும், இலவச மற்றும் உயர்ந்த தரமான கல்வியை வழங்குவதற்கு பொதுக் கல்வித்திட்டத்தை பரந்த அளவில் விரிவுபடுத்த வேண்டும் என்கின்றது. இன்றுள்ள பாடசாலைகளும் கல்வி நிலையங்களும் விஞ்ஞான ஆய்வு கூடங்கள், கணனி வசதிகள் மற்றும் நவீன "ஓடியோ-விசுவல்" (ஒலி-ஒளி) கல்விமுறை தொழில்நுட்பம் கிடைக்கக்கூடியதாகவும், அதேபோல விளையாட்டு மற்றும் கலை வாய்ப்பு வசதிகள் கிடைக்கக்கூடியதாகவும் கட்டாயம் தரம் உயர்த்தப்படவேண்டும்

* இலவசமானதும் முதல்தரமானதுமான சுகாதார பணிகளும் நலன்புரி சேவைத் திட்டங்களும்

மருத்துவ விஞ்ஞானத்தில் ஏற்பட்டுள்ள புரட்சிகரமான அபிவிருத்திகளுக்கு மத்தியிலும் இலங்கை மக்கள் முற்றிலும் தடைசெய்யக் கூடிய நோய்களுக்கு தொடர்ந்தும் பலியாகின்றனர். ஒரு முறை கட்டுப்படுத்தப்பட்ட மலேரியா, வாந்திபேதி, கூவக்கட்டு போன்ற நோய்கள் மீண்டும் பரவி வருகின்றன. அதிகரித்தளவில், தனியார் வைத்தியர்களுக்கும் மற்றும் சிகிச்சை நிலையங்களுக்கும் பணம் செலவழிக்கக் கூடியவர்கள் உள்ள அதேவேளை, பணம் செலவு செய்ய முடியாதவர்கள் நிதி குறைக்கப்பட்டுவருகின்ற பொது சுகாதார அமைப்பை பயன்படுத்த தள்ளப்பட்டுள்ளனர். பலர் டாக்டர்கள் குறித்துக் கொடுக்கும் மருந்துகளை வாங்க இயலாது இருக்கின்றனர். மொத்த தேசிய உற்பத்தியில் அரசாங்கம் சுகாதாரத்திற்காக செலவிடும் தொகை 1997ல் 2.3 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதோடு 2004ல் 1.4 வீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சி சகலருக்கும் உயர்தரமான சுகாதார சிகிச்சைகள் கிடைக்க செய்வதன் பேரில் நவீன கருவிகள் பொருத்தப்பட்டதும் பயிற்சி பெற்ற ஆளணி கொண்டதுமான அரசாங்க ஆஸ்பத்திரிகளையும் சிகிச்சை நிலையங்களையும் அபிவிருத்தி செய்வதற்காக ஒரு தீவிரமான வேலைதிட்டத்திற்கு வாதிடுகிறது.

வறுமை, போதியளவு ஆகாரமின்மை மேலும் பரவிவருகின்றது. உலக சுகாதார நிறுவனத்தின் 2004 ஆண்டு அறிக்கையின்படி, யுத்த வலயமான வடக்கு மற்றும் கிழக்கில் 5 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறுவர்களில் 46.2 வீதமானவர்கள் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இந்த வீதம் தீவு பூராவும் 29.4 ஆக உள்ளது. தாய்மார் போஷாக்கின்மையும் கடுமையானதாக உள்ளது. அரசியல் குறிக்கோள்களுக்காக பரந்தளவிலான துஷ்பிரயோகத்திற்குள்ளாகும், தற்போதைய மட்டுப்படுத்தப்பட்ட வசதிகள், அனைவருக்குமான போதிய வருமானத்தை உறுதிப்படுத்தும், சர்வஜன பொது நல மற்றும் ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் பதிலீடு செய்யப்பட வேண்டும்.

* சகல குடும்பங்களுக்கும் கண்ணியமான வீட்டு வசதி

பல குடும்பங்கள் தண்ணீர், மின்சாரம், கழிவறைகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் தரங்குறைவான வீடுகளில் வசித்து வருகின்றன. வீட்டு வாடகைகள் மக்களில் பெரும்பான்மையானவர்களின் கைக்கு எட்டாதளவுக்கு உயர்ந்துள்ளது. சுனாமியின் விளைவாக பத்தாயிரக்கணக்கானவர்கள் ஒட்டுமொத்தமாக வீடுகளை இழந்துள்ளனர். கொழும்பு நகர எல்லைக்குள் 51 சதவீதமான சனத் தொகையினர் சேரிகளில் வாழ்கின்றனர். இதற்கான அரசாங்கத்தின் பதில் பெரு வர்த்தகர்களுக்கு காணிகள் வழங்கும் பொருட்டு இந்த ஏழை மக்களை சேரிகளில் இருந்து கலைப்பதாக இருக்கின்றது.

சோசலிச சமத்துவக் கட்சி சகல குடும்பங்களுக்கும் அவசியமான சகல வசதிகளையும் கொண்ட தாக்குப் பிடிக்கக் கூடிய அரசாங்க வீடமைப்புகளை அமைக்கும்படி பரிந்துரைக்கின்றது. வாடகை கட்டுப்பாட்டு முறை அமுல் செய்யப்படுவதோடு முறைகேடான நிலச்சுவாந்தார்கள் இலாபம் சம்பாதிப்பதை தடுக்கவும் வேண்டும். காலியான வீடுகளும் மாடி வீடுகளும் ஏழைக் குடும்பங்களுக்கு நியாயமான வாடகையில் வழங்கப்பட வேண்டும்.

* பெண் தொழிலாளர்கள் மீதான ஒடுக்குமுறையை நிறுத்து

பெண் தொழிலாளர்கள், தொழிலாள வர்க்கத்தில் மிகவும் ஒடுக்கப்பட்ட தட்டினராவர். அவர்கள் வறுமையால் குறைந்த சம்பளத்திலான தொழில் மற்றும் குடும்பச் சுமைகள் ஆகிய இரண்டையும் சுமக்க தள்ளப்பட்டுள்ளார்கள். பெண்கள், ஆடைத் தொழிற்சாலைகள், தேயிலை பறித்தல், இறப்பர் வெட்டல் மற்றும் ஏனைய விவசாய தொழில்களில் பெருஞ் சுமைகளை சுமப்பது வழக்கமானதாகியுள்ளது. இன்னமும், தேயிலை தொழிலில் ஆண்களின் சம்பளத்தை விட பெண்களின் சராசரி சம்பள வீதம் 71 ஆகும். இது இறப்பர் தொழிலில் 75 வீதமாகவும் தற்போதைய விவசாய உற்பத்தியில் 78 வீதமாகவும் உள்ளது.

பூகோளமயமான உற்பத்தியின் மிகத் தெளிவான விளைவு ஆடை தொழிற்துறையின் வளர்ச்சியேயாகும். இதில் 300,000 ற்கும் மேற்பட்ட, குறிப்பாக வறுமையில் வாடும் கிராமப்புறங்களில் இருந்து வந்த இளம் யுவதிகளே இப்போது வேலை செய்கின்றனர். சுதந்திர வர்த்தக வலயங்களில், "எளிதில் மாறக்கூடிய" வேலை நாள் ஒன்றுக்கு 2 அமெரிக்க டொலர்களுக்கும் குறைவான சம்பளத்துடன் பெண்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதோடு, எந்தவொரு வசதிகளுமற்ற ஒரு அடிமட்ட தங்குமிடங்களில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். முன்னைய சர்வதேச ஒதுக்கீட்டு முறை முடிவுக்கு வந்துள்ளமையால், இந்த ஆண்டு இந்த யுவதிகளில் பலர் மீண்டும் கிராமங்களுக்கு தள்ளப்படும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அங்கு நிலைமைகள் இதைவிட மோசமானதாகும்.

அவர்களது குடும்பங்களுக்கு ஒரு வருமானத்தை வழங்குவதன் பேரிலும், தமது பிள்ளைகளுக்கு ஒரு தரமான கல்வியை பெறும் சாத்தியத்திற்காகவும் இலட்சக்கணக்கான பெண்கள் மத்திய கிழக்கிற்கு வீட்டுப் பணிப்பெண்களாகவும் அடிமைப்பாங்கான தொழில்செய்யும் தொழிலாளர்களாகவும் செல்கின்றனர். அங்கு அவர்கள் அவர்களின் எசமானர்களால் அடிக்கடி துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுவதுண்டு. ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் இத்தகைய தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க ஒரு விரல் கூட உயர்த்துவது கிடையாது. சில சந்தேகத்திற்கிடமான மரணங்களின் போதும் கூட. தற்போது நாட்டில் பெருமளவில் வெளிநாட்டு நாணயத்தை சம்பாதித்துத் தரும் இந்த நவீன அடிமை வர்த்தகத்தை சிதைக்காமல் இருப்பதே கொழும்பின் பிரதான இலக்காகும்.

இலவச உயர்தர குழந்தை பராமரிப்பு மற்றும் முழு சம்பளத்துடனான கர்ப்பகால விடுமுறை உட்பட பெண்களுக்கான சம ஊதியம் மற்றும் கண்னியமான நிலைமைகளை அனுபவிப்பதற்கான உரிமையை சோசலிச சமத்துவக் கட்சி பாதுகாக்கின்றது. பெண்களை இரண்டாந்தர பிரஜையாக தரம் குறைக்கும் திருமண சட்டங்கள் உட்பட பெண்களுக்கு எதிரான அனைத்து விதமான பாரபட்சங்களையும் களைய நாம் அழைப்பு விடுக்கின்றோம். கருக்கலைப்பு சட்டமாக்கப்படுவதோடு அனைத்து பெண்களுக்கும் இலவசமாக கருக்கலைப்பு செய்துகொள்ள வழியமைக்க வேண்டும். சட்ட அதிகாரங்களின் நூற்றாண்டுகால கட்டளைகளை முடிவுக்கு கொண்டுவருவது சாத்தியமற்றதாக இருக்கும் அதேவேளை, பெண்களும் ஆண்களும் கூட்டாக தமது திறமைகளையும் சிறப்பியல்புகளையும் முழுமையாக அபிவிருத்தி செய்துகொள்ளும் அறிவூட்டும் காலாச்சார சூழலை உருவாக்க சோசலிச சமத்துவக் கட்சி சமரசமற்று போராடும்.

* சிறிய விவசாயிகளின் அவலநிலையை அகற்று

காணிகளுக்கான அவசியம் நாடுபூராவும் பெரிதும் சிக்கலான பிரச்சினையாக தோன்றியுள்ளது. உத்தியோகபூர்வமான புள்ளிவிபரங்களின்படி பெரும்பான்மையான விவசாயிகள் -72 வீதத்தினர்- 1.6 ஹெக்டருக்கும் குறைவான காணிகளையே கொண்டுள்ளனர். இதில் கிட்டத்தட்ட 7 வீதத்தினர் எதுவித காணியும் இல்லாதவர்கள். .தே.க வும் பொதுஜன முன்னணியும், பெரும்பான்மையினராக தமிழர்கள் வாழும் பிரதேசத்தில் வடக்கில் வன்னிப் பிரதேசத்திலும் மற்றும் கிழக்கு பிராந்தியத்திலும் குடியிருப்புக்களை அமைத்து, அங்கு நிலமற்ற சிங்கள ஏழைகளை வேண்டுமென்றே குடியேற்றுவதன் மூலம் அவர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினையை சுரண்டிக்கொண்டன. இது இனவாத பதட்டங்களை உக்கிரப்படுத்துவதற்கு சேவைசெய்யும் ஒரு கொள்கையாகும்.

உற்பத்திச் செலவுகள் உயர்ந்த போதிலும் பண்டங்களின் விலைகள் பெருமளவில் தொடர்ச்சியாக வீழ்ச்சிகண்டுவருகின்றதால், வறிய விவசாயிகள் எல்லா இடங்களிலும் "கத்தரிக்கோல் நெருக்கடிக்குள் அகப்பட்டுப் போயுள்ளனர். விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கீழ் வெட்டித்தள்ளப்பட்ட உர மானியங்கள், 2004 தேர்தல் வாக்குறுதிகளின் படி இராஜபக்ஷ நிர்வாகத்தின் கீழ் முழுமையாக மீள்விக்கப்படவில்லை. 2000 மற்றும் 2004 ற்கும் இடையில் இரு பிரதான அரச வங்கிகளில் கடன்கள் இரட்டிப்பாக்கப்பட்ட போதிலும், விவசாயிகளின் கடன் சுருள் வடிவில் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. பழிபாவத்திற்கு அஞ்சாத கடன்கொடுப்பவர்களும் இடைத் தரகர்களும் அதிலும் பார்க்க கூடிய சேதத்தை விளைவிக்கின்றனர். கடன் குவிந்தவுடன் விவசாயிகளின் நிதி நிலைமை மேலும் மேலும் மோசமாகின்றது. சுகாதார அமைச்சின் புள்ளி விபரங்களின்படி, நெல் உற்பத்தி செய்யும் பிரதேசங்களில் தற்கொலை வீதம் 2000 ஆண்டில் 100,000 ற்கு 34.33 இருந்தது, உறுதியாக 2004ல் 35.91 ஆக உயர்ந்தது.

சோசலிச சமத்துவக் கட்சி எந்த இனத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சகல காணியற்ற விவசாயிகளுக்கும் அரச காணிகள் வழங்கப்பட வேண்டும் என்கின்றது. ஏழை விவசாயிகளும் மீனவர்களும் பெற்ற பழைய கடன்கள் இரத்துச் செய்யப்படும் அதேவேளை, வங்கிக் கடன்கள், விவசாய உபகரணங்கள், உரம், இரசாயன திரவியங்கள் ஆகியனவும் மீன்பிடி உபகரணங்களும் சகல ஏழை விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் இலகுவான கடன் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். உரம் போன்ற விவசாய மூலப்பொருட்களுக்கான மானியங்கள் கட்டாயம் மீண்டும் வழங்கப்படுவதோடு அதிகரிக்கவும் வேண்டும். கமத்தொழிலில் ஈடுபடும் குடும்பங்களின் கண்ணியமான வாழ்க்கைத் தரத்தை ஊர்ஜிதம் செய்யும் வகையில் விவசாய உற்பத்திப் பொருட்களின் விலைகள் உத்தரவாதம் செய்யப்பட வேண்டும்.

தொழிலாள வர்க்கத்தின் அரசில் சுயாதீனத்திற்காக

இலாப அமைப்பு முறைக்கு எதிரான தாக்குதலுக்கான முன்நிபந்தனை, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனமாகும். அதன் போராட்டங்களை ஒன்றிணைப்பதன் மூலமும், அனைவரதும் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதன் மூலமும் மற்றும் வறுமையை ஒழிப்பதற்காக தனது சொந்த சோசலிசத் தீர்வை முன்னெடுப்பதன் மூலமும், தொழிலாள வர்க்கத்தால் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களை ஈர்க்கும் ஒரு துருவமாக உருவெடுக்க முடியும். இதன் மூலம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றவும் தொழிலாளர்கள் விவசாயிகள் அரசாங்கத்தை அமைக்கவும் ஒரு சக்திவாய்ந்த இயக்கத்தை முன்னெடுக்க முடியும்.

தமது நலன்களுக்காக போராடுவதற்காக தொழிலாளர்களுக்கு ஒரு வெகுஜனக் கட்சி தேவை. லங்கா சமசமாஜக் கட்சி (...), கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தொழிற்சங்கம் போன்ற பழைய தொழிலாள வர்க்க அமைப்புக்கள் அனைத்தும் பெறுமதியற்றவை என்பதை நிரூபித்துள்ளன. 1960 களிலும் 1970களிலும் மற்றும் மீண்டும் 1990களிலும் ஸ்ரீ..சு.க தலைமையிலான முதலாளித்துவ கூட்டரசாங்கத்தில் பங்காளிகளாக இருந்துவந்துள்ள லங்கா சமசமாஜக் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் ஸ்ரீ..சு.க வின் பகுதிகளாகவே செயற்படுகின்றன. 1950களிலும் 1960களிலும் பரந்தளவில் தொழிலாளர்களாலும் கிராமப்புற ஏழைகளாலும் பின்பற்றப்பட்டு வந்த ல..., 2004 தேர்தலில் எந்தவொரு தேர்தல் தொகுதியிலும் வெற்றிபெறவில்லை. இறுதியாக ஸ்ரீ..சு.க தனது தேசிய பட்டியலில் ஒரு ஆசனத்தை வழங்கியதால் தன்னைக் காப்பாற்றிக்கொண்டது. ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமயவுடனான இராஜபக்ஷவின் உடன்படிக்கைகள் சம்பந்தமான மனக்கசப்புகள் இருந்தபோதிலும் லங்கா சமசமாஜக் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் அவர் வேட்பாளர் ஆவதை ஏற்றுக்கொண்டன.

ஜே.வி.பி ஆரம்பத்தில் இருந்தே தொழிலாள வர்க்கத்தை அன்றி, அதிருப்தியடைந்துள்ள சிங்கள கிராமப்புற இளைஞர்களையே அடித்தளமாக கொண்டிருந்தது. லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிக்கான ஆதரவுகள் சரிந்து போயிருந்த நிலையில், 1990களில் போர்க்குணத்திற்கு வெற்று அழைப்புக்களை விடுப்பதன் மூலமும் ஜனரஞ்சக வாய்வீச்சுக்களின் மூலமும் ஒரு தொழிற்சங்க அடித்தளத்தை அமைத்துக்கொண்டது. ஆனால், ஜே.வி.பி தலைமையிலான தொழிற்சங்கங்களும் ஏனையவற்றுடன் வேறுபட்டவையல்ல என்பது நிரூபிக்கப்பட்டது. அவர்களும் கூட தொழிலாளர்களின் நலன்களை முதலாளித்துவ அமைப்பின் வரையறைகளுக்கு அடிபணியச் செய்கின்றார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, தனது சோசலிச வாய்வீச்சுக்களை கைவிட்டுள்ள ஜே.வி.பி, முதல்முறையாக ஆட்சியதிகாரத்தில் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. 2004 தேர்தலில் ஐ.தே.க மற்றும் ஸ்ரீ..சு.க யிற்கு மாற்றீடாக ஜே.வி.பி க்கு வாக்களித்தவர்களின் எதிர்பார்ப்புகள் சிதைந்துபோயுள்ளன. இராஜபக்ஷ அரசாங்கத்தின் பிற்போக்கு பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஜே.வி.பி யும் மற்றும் விவசாய மற்றும் மீன்பிடித்துறை அமைச்சுக்களையும் தம் பொறுப்பில் கொண்டிருந்த அதன் சொந்த அமைச்சர்களும் பொறுப்பாளிகளாவர்.

அதன் ஆதரவு வீழ்ச்சி காண்கின்ற நிலைமையின் கீழ், ஜே.வி.பி என்றும் அதிகரிக்கும் நச்சுத்தன்மையுள்ள பிற இன பழிப்பு சிங்களவாதத்தை நாடியுள்ளது. சுனாமி நிவாரணத்தை விநியோகப்பதற்காக விடுதலைப் புலிகளுடன் ஒரு பொதுக் கட்டமைப்பை கைச்சாத்திடுவதை, ஜாதிக ஹெல உறுமயவுடன் சேர்ந்து ஜே.வி.பி எதிர்ப்பதானது தெற்கில் பேரழிவால் பாதிக்கப்பட்ட சிங்களவர்களை, வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக இருத்துவதை இலக்காகக் கொண்ட முயற்சியாகும். ஜூன் மாதம் அரசாங்கத்தில் இருந்து விலகியதில் இருந்து, பொதுக்கட்டமைப்பு உடன்படிக்கை மற்றும் யுத்தநிறுத்தத்தை நாட்டைக் "காட்டிக்கொடுக்கும் செயல்" என்று அதன் கண்டனங்களை உக்கிரப்படுத்தியுள்ளது. அதன் பிரச்சாரத்தின் பாசிசத் தன்மை, இந்திய--இலங்கை உடன்படிக்கைக்கு எதிராக 1980களின் கடைப்பகுதியில் அதன் பிரச்சாரத்தை மீண்டும் ஞாபகப்படுத்துகிறது. அந்த காலகட்டத்தில், தமது ஆர்ப்பாட்டங்கள் வேலைநிறுத்தங்களுக்கு ஆதரவளிக்க மறுக்கும் தொழிலாளர்கள், தொழிற்சங்க அலுவலர்கள் மற்றும் அரசியல் எதிரிகளை ஜே.வி.பி குண்டர்களின் கும்பல்கள் தொகை தொகையாக கொன்றன.

தொழிலாள வர்க்கம், ஜனநாயக இடதுசாரி முன்னணி, நவ சமசமாஜக் கட்சியின், புதிய இடதுசாரி முன்னணி மற்றும் ஐக்கிய சோசலிச கட்சி ஆகிய மோசடியான குட்டி முதலாளித்துவ தீவிர அமைப்புக்களையும் நிராகரிக்க வேண்டும். தேசியவாதமும் சந்தர்ப்பவாதமும் இந்தக் கருவிகளின் பிரதான பண்பாகும். தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அணிதிரள்விற்கான கோட்பாடுரீதியான அரசியல் போராட்டத்தை எதிர்க்கும் இந்த "சோசலிச" கட்சிகள், பிரதான முதாலாளித்துவ கட்சிகளுடனான அரசியல் சூழ்ச்சித் திட்டங்களை செய்வதில் நீண்ட மற்றும் இழிந்த வரலாற்றை கொண்டுள்ளன.

இந்த தேர்தலில் ஜனநாயக இடதுசாரி முன்னணி இராஜபக்ஷவை வெளிப்படையாக ஆதரிக்கின்றது. புதிய இடதுசாரி முன்னணி மற்றும் ஐக்கிய சோசலிச கட்சியும் தமது சொந்த வேட்பாளர்களை நிறுத்துவதன் மூலம் ஒரு சற்றே வேறுபட்ட நெறியைக் கையாண்டுள்ள போதிலும், அவை விக்கிரமசிங்கவை "குறைந்த தீங்காக" கருதுகின்றன என்பதை சுட்டிக்காட்டியுள்ளன. இரு கட்சிகளும் பெயரளவிலான சமாதான முன்னெடுப்புகளுக்கு விமர்சனமின்றி வக்காலத்துவாங்குவதுடன், பெரும் வர்த்தகர்களும் மற்றும் பெரும் வல்லரசுகளும் பலவிதமான சமாதான உடன்படிக்கைகளை தள்ளிச் சென்ற பாதையில், யுத்தத்திற்கு ஒரு "சமஷ்டி தீர்வு" காணுமாறு அழைப்பு விடுக்கின்றனர். அவர்கள் தனியார்மயமாக்கத்தையும் "சந்தை சீர்த்திருத்தத்தையும்" எதிர்ப்பது, பூகோள முதலாளித்துவத்தை இல்லாமற்செய்யும் நிலைப்பாட்டில் இருந்து அன்றி, மூன்று தசாப்தத்திற்கு முன்னரான தேசிய பொருளாதார நெறிப்படுத்தல்களின் காலம் மீண்டும் வரும் என்ற நடைமுறைசாத்தியமற்ற ஒரு மாயையின் அடிப்படையிலேயே ஆகும்.

தெற்காசியாவில் சோசலிசத்திற்கான போராட்டம்

சோசலிச சமத்துவக் கட்சியானது, அனைத்துலக சோசலிச இயக்கத்தின் உயர்ந்த மரபுகளை --சமஉரிமை, அனைத்துலகவாதம் மற்றும் ஒடுக்குமுறை மற்றும் இல்லாமையில் இருந்து மனிதகுலத்தின் சட ரீதியான மற்றும் ஆன்ம விடுதலை இவற்றை-- அடித்தளமாக கொண்டதாகும். இவை இன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உட்கொள்ளப்பட்டுள்ளன.

விஞ்ஞான சோசலிச வேலைத் திட்டத்தால் வழிநடத்தப்பட்ட ரஷ்யாவின் பரந்த வெகுஜன இயக்கம் 1917ல், முதலாளித்துவத்தை தூக்கிவீசி சோவியத் ஒன்றியத்தை ஸ்தாபித்தது. ரஷ்யாவின் சோசலிச புரட்சி உணர்வுபூர்வமான மற்றும் பரந்த அனைத்துலக சோசலிச இயக்கத்தின் ஒரு பாகமாக இருந்த அதேவேளை, பல இடங்களிலும் புரட்சிகர போராட்டங்களின் தோல்வியானது மிகப்பெரும் அழுத்தங்களை தோற்றுவித்ததுடன், முதலாவது தொழிலாளர் அரசு தனிமைப்படுத்தப்பட்டதிலும் ஜோசப் ஸ்ராலின் தலைமையிலான ஒடுக்குமுறை அதிகாரத்துவ கருவி தோன்றியதிலும் வெளிப்பாட்டைக் கண்டது. போல்ஷவிக் கட்சியின் அனைத்துலகவாதத்தை கைவிட்ட ஸ்ராலின், "தனியொரு நாட்டில் சோசலிசத்தைக் கட்டியெழுப்பும்" மார்க்சிச விரோத முன்நோக்கை முன்னெடுத்தார்.

இந்த தேசியவாத கருத்துருவின் அடிப்படையில், அக்டோபர் புரட்சியை காட்டிக்கொடுத்த ஸ்ராலினிச அதிகாரத்துவம், தொழிலாளர்களின் ஜனநாயகத்தை அழித்ததுடன், உண்மையான மார்க்சிஸ்டுகளை ஒழித்துக்கட்டியதோடு, உலகம் பூராவுமான தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டங்களை கவிழ்த்தது. தெற்காசியா பூராவும், முதலாளித்துவ அமைப்பை தாங்கிப்பிடிப்பதில் ஸ்ராலினிச கட்சிகள் பிரதான பாத்திரம் ஆற்றியுள்ளன. முதலாளித்துவ தேசியவாதியான சுகர்னோவுடன் இந்தோனேஷிய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டுச் சேர்ந்ததானது, 1965-66 சீ..ஏ ஆதரவுடனான இராணுவச் சதிக்கு வழி வகுத்தது. இது அரை மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினப்பினர்கள் கொல்லப்படுவதை கண்டது. இந்தியாவில் ஸ்ராலினிச சி.பி.ஐ மற்றும் சி.பி.-எம் ஆகியவை இன்னமும் காங்கிரஸ் கட்சியின் அழுகிக்கொண்டிருக்கும் பிணத்தின் பின்னால் வாழ்க்கையை ஓட்ட முயற்சிக்கின்றன. 1991 அளவில், ஸ்ராலினிசத்தின் பிற்போக்கு தர்க்கமும் மற்றும் ஏகாதிபத்தியத்துடனான அதன் ஒத்துழைப்பும் சோவியத் ஒன்றியத்தின் உடைவிலும் முதலாளித்துவத்தை மீளஸ்தாபிப்பதிலும் உச்சநிலையை அடைந்தது. சீனாவில் "கம்யூனிஸ்ட்" தலைமை, நாட்டை உலகின் கடும் உழைப்பு தொழிற்கூடமாக்கும் பொருட்டு தனது பொலிஸ் அரசாங்கத்தை பயன்படுத்தி வருவதோடு, பிரமாண்டமான அளவில், 19ம் நூற்றாண்டு முதாலாளித்துவத்தின் சமூகக் குற்றங்களை பாரியளவில் மீண்டும் முன்கொணர்ந்துள்ளது.

எமது இயக்கமானது சோசலிச அனைத்துலக வாதத்திற்கான போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் சிறந்த, மிகவும் துணிவான மற்றும் தூரதிருஷ்டியுள்ள தொழிலாள வர்க்க பிரதிநிதிகளை அடித்தளமாகக் கொண்டது. இந்த மரபின் மிக உயர்ந்த பண்புருவம் லியோன் ட்ரொட்ஸ்கியாவார். ட்ரொட்ஸ்கி, ரஷ்ய புரட்சியின் துணைத் தலைவரும், ஸ்ராலினிசத்தின் காட்டிக்கொடுப்புக்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை வகித்ததோடு 1938ல் நான்காம் அகிலத்தை ஸ்தாபித்ததன் ஊடாக சர்வதேச தொழிலாளர் இயக்கத்தின் மறுபிறப்பிற்கு அடித்தளம் அமைத்தவருமாவார்.

இந்த சம்பவங்கள், இலங்கையிலும் மற்றும் தெற்காசியா பூராவும் உள்ள தொழிலாள வர்க்கத்திற்கு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. 1940களில், ஸ்ராலினிசத்திற்கு எதிராக ட்ரொட்ஸ்கியால் முன்னெடுக்கப்பட்ட அரசியல் போராட்டத்தை அடித்தளமாக கொண்ட இலங்கை ட்ரொட்¢ஸ்கிஸ்டுகள், இந்தியத் துணைக்கண்டத்தின் தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களுக்கு ஒரு ஜனநாயக மற்றும் சோசலிச முன்நோக்கை அபிவிருத்தி செய்வதற்காக ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் கோட்பாடுகளை பயன்படுத்தி இந்திய போல்ஷவிக் லெனினிஸ்ட் கட்சியை ஸ்தாபிப்பதில் பெரும் பங்கு வகித்தார்கள். 1964ல் லங்கா சமசமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்புடன் உச்சக் கட்டத்தை அடைந்த இந்திய போல்ஷவிக் லெனினிஸ்ட் கட்சியின் அழிவானது, ஆசியா பூராவும் ஸ்ராலினிசத்தின் ஆதிக்கம் தொடர்வதற்கு வகித்த பங்கு சிறியதல்ல.

சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம், லங்கா சமசமாஜக் கட்சியின் தேசிய சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான நேரடியான அரசியல் போராட்டத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் இலங்கைப் பகுதியாக 1968ல் ஸ்தாபிக்கப்பட்டது. சோசலிச சமத்துவக் கட்சியும் மற்றும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் மூன்றரை தசாப்த காலங்களாக அனைத்து வகையான பிற இன பழிப்புவாதம், பாரபட்சங்கள் மற்றும் ஒடுக்குமுறைகளை இடைவிடாமல் எதிர்த்து வந்துள்ளதோடு தொழிலாள வர்க்கத்தினதும் கிராமப்புற ஏழைகளதும் ஜனநாயக உரிமைகளுக்காகவும் போராடி வந்துள்ளதுடன், தேசியவாத கொள்கைகளால் உருவாக்கப்படும் ஆபத்துக்களை பற்றி தத்துவார்த்த ரீதியில் தெளிவுபடுத்தவும் போராடிவந்துள்ளது.

இலங்கையிலும் பிராந்தியம் பூராவும் உள்ள தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டுள்ள சவாலானது, இந்திய போல்ஷவிக் லெனினிஸ்ட் கட்சி மற்றும் லங்கா சமசமாஜக் கட்சி முன்னெடுத்த முன்னைய போராட்டங்களுக்கு உயிரூட்டிய உயர்ந்த சோசலிச மரபுகள் மற்றும் கருத்துக்களை புத்துயிர்ப்பு செய்வதும் அபிவிருத்தி செய்வதும் ஆகும். இந்தப் பணிக்கு, இந்தியாவிலும் இலங்கையிலுமான தீர்க்கமான போராட்டங்கள் உட்பட இருபதாம் நூற்றாண்டு பூராவும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மூலோபாய அனுபவங்களின் படிப்பினைகளை உள்ளீர்த்துக்கொள்வது மையப் பணியாகும்.

உண்மையான சமாதானத்தின் தேவையையும் மற்றும் சமுதாயத்தை சோசலிச வழியில் மாற்றியமைக்கவேண்டியதன் உடனடித் தேவையையும் புரிந்துகொண்டவர்கள் எமது தேர்தல் பிரச்சாரத்திற்கு செயலூக்கத்துடன் ஆதரவளிக்குமாறு நாம் கேட்டுக்கொள்கிறோம். இதன் பொருள், எமது வேட்பாளரையும் கூட்டங்களையும் பலர் அறியுமாறு செய்தல், எமது தேர்தல் வெளியீடுகளை விநியோகிப்பதுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளல் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் வலைத்தள மையமான உலக சோசலிச வலைத் தளத்திற்கு பரந்த வாசகர்களை உருவாக்கி ஊக்குவிப்பதாகும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, எமது வேலைத்திட்டத்துடனும் மற்றும் எமது முன்நோக்குடனும் உடன்பாடு கொண்டவர்கள் சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து அதை தொழிலாள வர்க்கத்திற்கான புதிய கட்சியாக கட்டியெழுப்ப பங்களிப்பு செய்யுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

See Also :

ஆசிய சுனாமி, கத்ரீனா பெரும்புயல் மற்றும் காஷ்மீர் பூகம்பம்: தொழிலாள வர்க்கத்திற்கான படிப்பினைகள்

சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விஜே டயஸ், இலங்கை ரூபவாஹினி தொலைக் காட்சி சேவையில் ஆற்றிய உரை

அரசாங்க பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக அறுபது மில்லியன் இந்திய தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

இலங்கை: ஜாதிக ஹெல உறுமய--இராஜபக்ஷ உடன்படிக்கையும் பௌத்த மேலாதிக்கவாதத்தின் பிற்போக்கு பாத்திரமும்
 


Copyright 1998-2005
World Socialist Web Site
All rights reserved