நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு
உலக சோசலிச வலைத் தளம் குறித்து

உலக சோசலிச வலைத் தளளம் (WSWS) என்பது, உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவினதும், உலகெங்கிலும் உள்ள அதன்  பிரிவுகளான சோசலிச சமத்துவக் கட்சிகளினதும் இணைய தள வெளியீடாகும். இது 1998 பிப்ரவரியில் தொடங்கி, கடந்த 22 ஆண்டுகளாக தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

சமகால சமூகத்தின் பிரச்சினைகள் குறித்து அறிவுக்கூர்மையுடன் மதிப்பிட வேண்டும் என்று பரந்தளவில் இன்று உணரப்பட்டுள்ளது, இந்த தேவையை பூர்த்தி செய்வதை WSWS குறிக்கோளாக கொண்டுள்ளது. மேலும் வாழ்வின் தற்போதைய நிலை குறித்தும்  அதேபோல, ஸ்தாபக ஊடகங்களால் இழிவாகவும் பிற்போக்குத்தனமாகவும் அவர்கள் நடத்தப்படுவது குறித்து அதிருப்தி அடைந்த வெகுஜனங்களின் குரலாகவும் அது உள்ளது.

எங்கள் வலைத் தளம் சமூக சமத்துவமின்மையின் கொடூரமான மட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு அரசியல் முன்னோக்கிற்கான ஆதாரத்தை வழங்குகிறது.இந்த மட்டம், செல்வந்தர்கள் சிலருக்கும் உலக மக்களில் பாரிய பரந்துபட்ட மக்களுக்கும் இடையில் எப்போதும் விரிவடைந்து வரும் ஒரு இடைவெளியை உருவாக்கியுள்ளது. நிதி நெருக்கடிகள் முதல் இராணுவவாதம் மற்றும் போரின் வெடிப்புகள் வரை, வர்க்க உறவுகளின் தற்போதைய நிலையின் உடைவு ஆகிய பெரிய நிகழ்வுகள் உழைக்கும் மக்களின் அணிகளை போராட்டத்திற்குள் தூக்கி வீசும்போது அவர்களுக்கு ஒரு அரசியல் நோக்குநிலையை WSWS வழங்குகிறது.

வேலையின்மை, குறைந்த ஊதியம், சிக்கன நடவடிக்கை கொள்கைகள் மற்றும் ஜனநாயக உரிமை மீறல்களுக்கு எதிராக ஒவ்வொரு நாட்டிலும் மிகப்பெருமளவில் போராட்டங்கள் வெடிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். எவ்வாறாயினும், இந்த போராட்டங்களின் வெற்றி ஒரு மார்க்சிச உலக கண்ணோட்டத்தால் வழிநடத்தப்படும் ஒரு சோசலிச அரசியல் இயக்கத்தின் செல்வாக்கின் வளர்ச்சியிலிருந்து பிரிக்க முடியாதது என்று உலக சோசலிச வலைத் தளம் வலியுறுத்துகிறது.

இந்த வலைத் தளத்தின் நிலைப்பாடு, முதலாளித்துவ சந்தை முறைக்கு புரட்சிகர எதிர்ப்பை கொண்ட ஒன்றாகும். உலக சோசலிசத்தை ஸ்தாபிப்பதே அதன் நோக்கம். இந்த மாற்றத்திற்கான வாகனம் சர்வதேச தொழிலாள வர்க்கம் என்றும், இருபத்தியோராம் நூற்றாண்டில் உழைக்கும் மக்களின் தலைவிதியும், இறுதியில் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் தலைவிதியும் சோசலிசப் புரட்சியின் வெற்றியில் தான் தங்கியிருக்கிறது என்று அது தொடர்ந்து பேணி வருகிறது.

உலக சோசலிச வலைத் தளத்தின் ஒரு தலைப்பட்சமாக இருப்பது என்பது எந்த வகையிலும் புறநிலையான அல்லது நேர்மையான விவாதத்திலிருந்து விலகி நிற்பது என்பதை அர்த்தப்படுத்தவில்லை. முதலாளித்துவ அரசியல் மற்றும் முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு ஒரு மாற்றீட்டை தேடும் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் புத்திஜீவிகளுடன் பரந்த கருத்துப் பரிமாற்றத்தை நாங்கள் வரவேற்கிறோம். அறிவு மற்றும் உண்மை நிலைநாட்டப்படுவதற்கான வழிமுறைகளான இயங்கியல், மெய்யியல் வாதம் மற்றும் விவாதம் ஆகியவை WSWS இன் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. இந்த தளத்திற்கு பங்களிக்க விரும்புவோருக்கு தேவையாக இருப்பது அறிவுசார் நேர்மை மற்றும் வரலாற்று உண்மை குறித்த அர்ப்பணிப்பு மட்டுமே.

அதன் 20 ஆண்டுகளுக்கும் மேலான வெளியீட்டின் போது, WSWS சர்வதேச புரட்சிகர சோசலிசத்தின் நம்பகமான குரலாக இருந்து வருகிறது. இது உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இன்றியமையாத அரசியல் மற்றும் அறிவுசார் வழிகாட்டியாக செயல்பட்டுள்ளது, அவர்கள் பெரும் நெருக்கடி மற்றும் மனித துயரங்கள் நிறைந்த காலங்களில் நிகழ்வுகள் குறித்து உண்மையை உணர முயல்கின்றனர், அதாவது  காட்டுமிராண்டித்தனத்திற்குள் வீழ்ச்சியடைந்து வரும் ஒரு செயலற்ற முதலாளித்துவ உலகத்திற்கு மாற்றாக ஒரு உண்மையான முற்போக்கான புரட்சிகரமான மாற்றீடை தேடுகின்றனர்.