ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

What the September 11 commission hearings revealed
Part One

செப்டம்பர் 11 விசாரணைக் குழு எவற்றை வெளிப்படுத்தின

முதல் பகுதி

பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4

By Patrick Martin
22 April 2004

நியூ யோர்க், மற்றும் வாஷிங்டன் மீதான செப்டம்பர் 11 தாக்குதல்கள் பற்றிய விசாரணை நடத்தும் சுதந்திரமான விசாரணைக் குழு தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்ட ஐந்து நாட்கள் அமர்வை நடத்தியுடன், இவற்றில் நூற்றுக்கணக்கான பக்கங்கள் கொண்ட உயர் அலுவலர்களின் அறிக்கைகள், மற்ற ஆவணங்கள், அமெரிக்க உளவுத்துறை, எதிர்-உளவுத்துறை நிறுவங்களின் 9/11 தாக்குதல்கள் பற்றிய செயல்பாடுகளின் புதிய தகவல்கள் உட்பட வெளியிடப்பட்டன.

தற்கொலைப் படைகள் மூலம் விமானம் கடத்தப்பட்டு தாக்குதல்கள் நடைபெறும் என்பது எதிர்பார்க்கப்படாதவை, எதிர்பார்க்கப்படமுடியாதவை, எந்த அமெரிக்க அரசாங்க நிறுவனத்திற்கும் வணிக விமானங்கள் கைப்பற்றப்பட்டு ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படமுடியம் எனச் சிறிதும் தெரிந்திருக்கவில்லை என்று செப்படம்பர் 11 தாக்குதல்களைப் பற்றி இதுவரை கூறிவந்திருந்த புஷ் நிர்வாகத்தின் கூற்று, இங்கு வெளியிடப்பட்டுள்ள தகவல்களினால் தகர்ந்து, சிதைந்து போயிற்று. விசாரணைக் குழுவின் பல உறுப்பினர்கள், தாக்குதல்கள் தவிர்க்கப்பட்டிருக்க முடியும் எனச் சான்றுகள் தங்களை நம்பவைத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

குழு உறுப்பினர் பாப் கெர்ரி (Bob Kerrey) விவரித்துள்ளதுபோல், வெளிவந்துள்ள தோற்றம் பாதுகாப்பு நிறுவனங்களின் கருத்துக்கள் வேண்டுமென்றே ஏற்கப்படாதவை போலவும், போர்த் தளத்தில் மட்டுமின்றி, முற்றிலும் ஆயுதக் குவிப்புக்களினால் சூழப்பட்டிருந்த அரசாங்கத்தின் நிலை நன்கு புலப்படுகிறது. புஷ் நிர்வாகத்தின் அதிகாரிகள், அமெரிக்க மண்ணின் ஒரு பெரிய பயங்கரவாதச் செயல் வரவிருப்பது பற்றி விளக்கமுடியாத அளவு அசட்டையைக் காட்டினார்கள் என்பதும் நன்கு தெரிய வந்துள்ளது. 2001 கோடையில் ஒரு காலகட்டத்தில், தலைமை வழக்குரைஞரான ஜோன் ஆஸ்கிரோப்ட், FBI உடைய இடைக்கால இயக்குனர் தோமஸ் பிக்கார்ட் (Thomas Pickard) இடம், வளரும் ஆபத்தைப் பற்றி பலமுறை எடுத்துக்கூறிய பின்னர், இனி இதைப்பற்றி என்னிடம் பேசாதீர்கள் என்று ஜோன் ஆஸ்கிரோப்ட் அவரிடம் கடுமையாகக் கூறிவிட்டார். இதேநேரம், ஆஷ்கிரோப்ட் அரசாங்கப் பணியில் செல்லும்போது, வர்த்தக விமானங்களைப் பாதுகாப்புக் காரணம் காட்டி, பயன்படுத்துவதை நிறுத்திவிட்டார்.

இதேபோல், துணை ஜனாதிபதி டிக் செனி, பயங்கரவாத அச்சத்தை அகற்றுபவர் என்று நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ளவர், FBI மூலம் பலமுறை தகவல்கள் வழங்கப்பட்டிருந்தார்; அமெரிக்காவிற்குள் அல்கொய்தாவின் பிரிவுகள் மிகவும் செயலூக்கத்துடன் உள்ளன என்ற எச்சரிக்கையும் அவற்றில் அடங்கியிருந்தது. ஆனால் இந்தத் தகவல்கள் பற்றி செனி சிறிதும் பொருட்படுத்தாத தன்மையைத்தான் காட்டினார், அதையும் விட குறைவான செயல்பாட்டினைத்தான் கொண்டிருந்தார் என்று பிக்கார்ட் சாட்சியம் அளித்தார்; தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள பொப் வூட்வார்ட்டின் (Bob Woodward) நூல், இக்காலகட்டத்தில் ஈராக்கியப் போரின்போது "சக்திவாய்ந்த நீராவி இயந்திரமாக" அவர் செயல்பட்டார் என்று கூறுகிறது.

தோற்றமளிக்கும் அக்கறையற்ற தன்மையின் உச்சக் கட்டம், ஆகஸ்ட் 6, 2001 ல் நிகழ்ந்தது. அன்று புஷ், அவருடைய டெக்சாஸ் கிராபோர்ட் பண்ணையில் விடுமுறையில் இருந்தபோது, அல்கொய்தாவின் அச்சுறுத்தல் பற்றிய தகவலை சுருக்கமாக பெற்றார். அங்குதான் அவர் இப்பொழுது புகழ்பெற்றுவிட்ட "பின் லேடன் அமெரிக்காவிற்குள்ளேயே தாக்குதல் நடத்த உறுதிசெய்துள்ளார்", என்ற, CIA ஜனாதிபதிக்குக்குக் கொடுக்கும் அன்றாட அறிவிப்பை (President’s Daily Brief - PDB) பெற்றார்; இதில் வாஷிங்டனும், நியூ யோர்க்கும், விமானக் கடத்தலை பயன்படுத்தி தாக்குதல்கள் நடத்தப்படக்கூடும் இலக்குகளாக இடம் பெற்றுள்ளன. செப்டம்பர் 11 தாக்குதல்கள், எந்த எச்சரிக்கையும் இன்றி வந்தவை எனப்படும் புஷ் நிர்வாகத்தின் கூற்றை இந்த அறிக்கை உறுதியாக எதிர்த்துக் கூறுகிறது.

ஆகஸ்ட் 6-ம் தேதி PDB-க்கு புஷ் நிர்வாகம் எந்த அக்கறையையும் காட்டவில்லை. இன்னும் சொல்லப் போனால், அல்க்கொய்தா அச்சுறுத்தல்கள் பற்றி CIA, இன்னும் சில உளவுத்துறை அமைப்புக்கள் கொடுத்திருந்த தொடர் எச்சரிக்கைகளை ஒட்டி மே மாதத்தில் கடுமையாக்கப்பட்டிருந்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் பொதுவான தளர்த்தல்கள்தான் கொண்டுவரப்பட்டன. விமானப் பாதுகாப்பு முறைகள் தளர்வாக இல்லை, ஆனால் அவை உண்மையில் கடுமையாக்கப்படவே இல்லை. விமானத்துறை நிறுவனங்கள் கூடுதலான பாதுகாப்பைக் கொள்ளுமாறு கோரப்பட்டன; ஆனால் கூட்டாட்சி விமான போக்குவரத்து நிர்வாகம் (Federal Aviation Administration - FAA) அவற்றை, பொதுவாக முக்கியமான முறையான விமானக் கடத்தலை தவிர்க்க தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தவில்லை.

இந்த நடவடிக்கை மேற்கொள்ளாத நிலைப்பாடு, வெட்டவெளிச்சமான தன்மையைக் கொண்டிருந்த முறை, பொதுவாக அக்கறையற்ற அமெரிக்கச் செய்தி ஊடகத்தைக்கூட கவனம் காட்டவைத்தது. பதவி ஏற்றபின்னர் மூன்றாவது முறையாக நடத்தப்பட்ட ஏப்ரல் 13-ம் தேதி, நாடு முழுவதும் ஒளிபரப்பப்பட்ட பத்திரிகையாளர் கூட்டத்தில், ஆகஸ்ட் 6-ம் தேதி PDB பற்றி அவருடைய நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்தது என்று நேரடியாக புஷ்ஷிடம் கேட்கப்பட்டது. இதற்கு உரிய விடை கூறாமல் புஷ் தவிர்த்துவிட்டார். CIA உடைய அன்றாட தகவல் பற்றி அவருடைய நிலைப்பாடு எவ்வாறு இருந்தது என்று கேட்கப்பட்டிருந்தால், "நான் என்னுடைய விடுமுறைக் காலத்தை இன்னும் மூன்று வாரங்களுக்கு நீட்டித்திருப்பேன்." என்று கூறியிருப்பார்.

இந்த PDB பற்றி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் வெள்ளை மாளிகை செய்தியை வெளியிடவில்லை; அதற்கு இது கூறிய காரணம் சில தகவல்கள் மிகவும் இரகசியமானவை என்றும் அவற்றின் வெளியீடு அமெரிக்க தேசியபாதுகாப்பிற்கு தீங்கு விளைவித்திருக்க கூடும் என்று கூறப்பட்டது. ஆயினும் அது பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டபின்னர், தேசிய பாதுகாப்பு ஆலோசகரான கொண்டலீசா ரைஸ், அந்த ஆவணம் "ஒரு வரலாற்று மறு ஆய்வுதான்" என்று கூறினார். ஐந்து வாரங்களுக்குப் பின் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை, அந்த அறிக்கையை கணக்கில்கொண்டு தவிர்த்திருக்கக் கூடிய அப்போதைய அபாயத்தை பற்றிய தகவலை அது கூறவில்லை என்றும் தெரிவித்தார். அப்படியானால் ஏன் அதை அவ்வளவு இரகசியமாக வைத்திருக்கவேண்டும்?

அப்படியானால் அதை அசட்டை செய்தது வேண்டுமென்றே நடந்ததா?

தாக்குதல்களுக்கு முன் நிகழ்ந்தவை பற்றிய புதிய தகவல்களை செப்டம்பர் 11 விசாரணைக் குழு வெளிக் கொண்டுவந்துள்ளது; ஆனால் மிகவும் விளம்பரப்படுத்தப்பட்ட விசாரணை, ஒரு மத்திய கேள்வியை தவிர்த்துள்ளது; அதாவது அமெரிக்க பாதுகாப்பிற்குச் செலுத்தப்படவேண்டிய மிக அசாதாரணமான விழிப்பு நிலையைக் குறைத்ததன் மூலம், தன்னுடைய இலக்கான ஈராக்கை வெற்றி கொண்டு, உலக எண்ணெய் வளங்கள் மிக அதிகம் குவிந்துள்ள அப்பிராந்தியத்தில் அமெரிக்க ஆதிக்கத்தை ஏற்படுத்தவதை நிறுவுவதற்காக, பயங்கரவாதச் செயல்களுக்கு இடமளிக்கும் வகையில், நிர்வாகம் நடந்துகொண்டதா? என்பதே அந்த மத்திய வினா ஆகும்.

புஷ், மற்றும் கிளின்டன் நிர்வாகங்களின் மிக உயர்மட்ட தேசியப் பாதுகாப்பு அதிகாரிகளே, மத்திய கிழக்கிலும், மத்திய ஆசியாவிலும் அமெரிக்கத் தலையீட்டிற்கு செப்டம்பர் 11-க்கு முன்னர் பொதுமக்களிடையே ஆதரவு இல்லை என தெரிவித்திருந்தனர். இவர்களில் பலரின் சாட்சிய அறிக்கை, குறிப்பாக உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன் மீதான தாக்குதல்களின் பெருந்திரளான இறப்பால் அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள அரசியல் ரீதியாக சாத்தியமாகி இருக்கிறது எனக் கூறியது.

ஒரு சாட்சியான, பழைய புஷ் நிர்வாகத்தின் பயங்கரவாத-எதிர்ப்பு இயக்குனரான ரிச்சார்ட் கிளார்க், செப்டம்பர் 11 தாக்குதல்களை வெள்ளை மாளிகை இறுகப்பிடித்து கொண்டு, அவற்றை ஈராக்கிய போருக்குக் போலி காரணமாக காட்ட முற்பட்டதால், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் கீழறுக்கப்பட்டது என்று குற்றஞ் சாட்டினார். ஆனால் கிளார்கிக்கின் குற்றச்சாட்டை விசாரணைக் குழு ஏறத்தாழ புறக்கணித்துவிட்டன, ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸ் முன்னாள் உறுப்பினரும் துணைத்தலைவருமான லீ ஹாமில்டன், இக்குழு ஈராக் போர் பற்றிய காரணத்தை ஆராய்வதற்கு அமைக்கப்படவில்லை என்று அறிவித்தார்.

புஷ் நிர்வாகமானது அதன் வெளியுறவுக் கொள்கை இலக்குகளை அடைய பயங்கரவாத தாக்குதல்களை பயன்படுத்தியது மட்டுமல்ல, மாறாக அந்த சோகத்துக்கான உண்மையை கண்டறிய முன்னரே நனவாகவே அவற்றை ஊக்குவித்தனர் என்று கருத்துரைக்கவோ அல்லது ஒரு கேள்வியில் அதற்கான சாத்தியத்தை எழுப்பவோ கூட செப்டம்பர் 11 விசாரணைக் குழுவின் விசாரணை அதிகாரிகளுள் ஒருவர் கூட முயற்சிக்கவில்லை. கிட்டத்தட்ட 3000 பேரை மக்கட்படுகொலை செய்த ஒரு பரந்த அளவிலான படுகொலை நடவடிக்கையான, இந்த நூற்றாண்டின் மாபெரும் குற்றங்களுள் ஒன்றைப் பற்றிய அவர்களின் விசாரணையில், விசாரணை அதிகாரிகள் மிகவும் அடிப்படையான கேள்வியான, "யார் ஆதாயம் (பலன்) அடைகின்றனர்?" என்பதை முன்வைக்கத் தவறியுள்ளனர்.

இருகட்சி ஆளும்-வர்க்க குழு

இந்த தோல்வியும் முற்றிலும் கணிக்கக்கூடியதுதான். 9/11 விசாரணைக் குழு, அரசியல் மோதல்களில் இருந்தும் அமெரிக்க சமுதாயத்தின் வர்க்கப் பிளவுகளிலிருந்தும் தனித்து உள்ள நடுநிலை ஆய்வாளர்களைக் கொண்ட ஒரு குழு அல்ல. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தேர்வுகளுக்கு முற்றிலும் உட்பட்ட ஐந்து ஜனநாயகக் கட்சி, ஐந்து குடியரசுக் கட்சி உறுப்பினர்களைத்தான் அது கொண்டுள்ளது. இவர்களில் பலரும் தேசிய பாதுகாப்புக் கருவிகளில் பெரும் அனுபவம் உடையவர்கள் ஆவர். உயர் இயக்குனரான Philip Zelikow, தேசிய பாதுகாப்பு சபை கிளிண்டனிடமிருந்து புஷ் நிர்வாகத்திற்கு பொறுப்பு மாறியபோது மேற்பார்வையிட்டிருந்த கொண்டலீசா ரைசின் நெருங்கிய நண்பர் ஆவார்.

இந்த விசாரணைக் குழு உறுப்பினர்களுக்கு (commissioners) மூன்று முக்கிய இலக்குகள் உள்ளன. முதலில், செப்டம்பர் 11 தாக்குதல் பற்றிய பின்னணி, சூழ்நிலை பற்றி பொதுமக்கள், மற்றும் பாதிக்கப்பட்வர்கள் குடும்பங்களின் நம்பிக்கை பெறும் வகையிலும், சமாதனம் அடையும் வகையில் போதுமான தகவலை வெளியிட விரும்புகின்றனர். இரண்டாவதாக, அரசின் முக்கிய நிறுவனங்கள் பற்றி குறிப்பிடத்தக்க சேதமில்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்; அதாவது பென்டகன், உளவுத்துறை அமைப்புக்கள், ஜனாதிபதி பதவி உட்படவாகும். மூன்றாவதாக, அரசை பலப்படுத்தவும், மூர்க்கமான இராணுவவாதத்தை வெளிநாட்டில் உருவாக்க சாத்தியத்தையும், உள்நாட்டில் இன்னும் முறையான அடக்குமுறையைக் கையாளவும் தேவையான அரசியல் செயற்பட்டியலை முன்னெடுக்க இந்த பொது விசாரணையை- ஜூலையில் வரவிருக்கும் இவர்களுடைய இறுதி அறிக்கையை- பயன்படுத்த முனைகின்றனர்.

சமீபத்திய இரு விசாரணைகளிலும், முதலாவது கடந்த மாதம் நடந்தது, இப்போதுள்ள பழைய தேசிப் பாதுகாப்பு அதிகாரிகளை விசாரித்தது, இரண்டாவது இம்மாத தொடக்கத்தில் நடைபெற்றதில், இப்பொழுதுள்ள, மற்றும் முன்னாள் எதிர்-உளவுப்பிரிவு அதிகாரிகள் விசாரிக்கப்பட்டனர் - விசாரணைக் குழு உறுப்பினர்கள் ஒரே மாதிரியான இருகட்சி நிலையையே கொண்டுள்ளனர்: ஜனநாயகக் கட்சியினரும், குடியரசுக் கட்சியினரும் "பயங்கரவாதத்தின் மீதான போர்" நடத்தப்படுவதற்கு இன்னும் தீவிரமான, வலுவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற கருத்தைத்தான் கோரியுள்ளனர்.

தேசிய பாதுகாப்பு பகுதி பகிரங்க விசாரணைகளில், நெப்ரெஸ்காவின் பழைய ஜனநாயகக் கட்சி செனட் உறுப்பினரும், தற்பொழுது நியூ யோர்க் நகரப் புதிய பல்கலைக்கழகக் கூடத்தின் தலைவருமான கெர்ரியின் குரல் மேலோங்கியிருத்தது. அமெரிக்க கடற்படைப் பிரிவு ஒன்று பெண்கள், குழந்தைகள், முதியோர் என்று பலரை வியட்நாம் போரில் கொலைசெய்ததற்காக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போர் குற்றவாளியாக இவர் அம்பலப்படுத்தப்பட்டிருந்தார்; இதற்காக முன்பு அவர் பாராட்டுகளை வென்றுள்ளார்.

1998-99-இல் கிளின்டன் நிர்வாக அதிகாரிகள் ஆப்கானிஸ்தானில் அல்க்கொய்தா முகாம்களுக்கு எதிராக ஏன் முழு அளவிலான இராணுவத் தாக்குதல்களை நடத்தவில்லை என்று பலமுறையும் கெர்ரி சவால் விட்டுக் கேட்டர்; அமெரிக்க படையெடுப்பு அந்நாட்டின்மீது தொடுப்பதற்கான சர்வதேச ஆதரவோ, உள்நாட்டில் பொதுமக்கள் ஆதரவோ இல்லை என்ற அவர்களுடைய விளக்கங்களை அவர் ஏற்றுக்கொள்ள மறுத்தார். (ஆப்கானிஸ்தான் நான்கு புறமும் நிலத்தால் சூழப்பட்டுள்ளதால் அமெரிக்கப் படையெடுப்பு ஈரான், பாகிஸ்தான், அல்லது பழைய சோவியத் ஒன்றியத்தின் மத்திய ஆசியக் குடியரசுகளின் வழியாகத்தான் நிகழ்த்தப்பட முடியும்.). பொதுக்கருத்தை அவ்விதத்தில் மாற்றுவதும் போருக்கான ஆதரவு திரட்டுவதும் எவ்வளவு கசப்பாக இருந்தாலும், அதைச்செய்ய வேண்டியது ஜனாதிபதியினுடைய வேலைதான் என்று அவர் குறிப்பிட்டார்.

அக்டோபர் 2000 ல் USS Cole என்ற அமெரிக்கப் போர்க் கப்பல்மீது பயங்கரவாதிகள் யேமனில் நடத்திய தாக்குதலில் 17 கடற்படையினர் உயிரிழந்ததற்கு இராணுவமுறையில் பதிலடி கொடுக்காததற்கும் அவர் கிளின்டன், புஷ் நிர்வாக அதிகாரிகளைக் கடுமையாகக் விமர்சித்தார். கிளின்டனுடைய அதிகாரிகள், யார் தாக்குதலை நடத்தினர் என்று தெரியாத நிலையில் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதற்கு ஏதும் செய்யமுடியவில்லை என்று கூறினர்; புஷ்ஷின் அதிகாரிகளோ, CIA இறுதியாக அல்க்கொய்தா தான் தாக்குதலை நடத்தியது என்ற இறுதி முடிவிற்கு 2001 ஆரம்பத்தில் வந்தபோது, நிகழ்ச்சி மிகவும் "பழமையானதாகி விட்டது" என்ற கருத்தைத் தெரிவித்தனர்.

எதிர்-உளவு (counter-intelligence) பொது விசாரணையில் வந்தபோது, விசாரணைக் குழுவின் பல உறுப்பினர்கள், மாறி மாறி FBI ஐயும் CIA ஐயும் கடுமையாகச் சாடினர்; விசாரணை குழுவின் தலைவரான குடியரசுக் கட்சியின் பழைய நியூ ஜேர்சி கவர்னர் தோமஸ் கீன், FBI -க் குறிப்பாக 9/11 பாதுகாப்புத் தயாரிப்புக்களில் பெரும் தவறிழைத்ததற்குக் கண்டனம் தெரிவித்து ஓர் அறிக்கையை படித்தார்.

"உளவுத்துறையின் தோல்வி" என்பதால் 9/11 நிகழ்வு நடந்ததாக கருதப்படுவதற்கான ஒரு தீர்வாக, ஒரு புதிய மத்தியப்படுத்தப்பட்ட உயர்ந்த அமைப்பினை அதாவது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அனைத்து உளவு மாற்று நடவடிக்கைகளையும் ஒருங்கிணைப்பதற்கு அமெரிக்க உளவுத்துறை வரவு-செலவு திட்டத்தின் 40 பில்லியன் டாலர்களை கட்டுப்படுத்தும் பொறுப்பிற்கு தலைமை தாங்கும் ஓர் இயக்குனரை நியமிப்பதுதான் என்று விசாரணைகுழு உறுப்பினர்கள் பலமுறை ஆலோசனை தெரிவித்தனர். இது, FBI மற்றும் CIA அதிகாரிகளினதும் மற்றும் பழைய தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த அதிகாரிகளினதும் ஒரு போலீஸ் அரசு ஏற்பட்டுவிடக்கூடிய அபாயத்தை எடுத்துரைக்கும் வினோத காட்சியை உருவாக்கியது.

அரசைப் பலப்படுத்துவது என்பதும் இப்பொழுது அதில் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர்களுடைய நிலையைக் காப்பது என்பதும் ஒரே விஷயம் அல்ல. சில தலைகள் உருளக் கூடும். 9/11 குழு FBI அல்லது CIA அதிகாரிகளில் சிலரை அல்லது வெள்ளை மாளிகையை பற்றிக்கூட கடுமையான விமர்சனங்களை வெளியிடக்கூடும். ஏற்கனவே அது பலமுறை புஷ் நிர்வாகத்தை துன்பப் படுத்தியுள்ளது. ஆனால் அது இவ்வாறு செய்வதின் காரணம் இராணுவ/உளவுத்துறை அமைப்பின் அதிகாரங்களை அதிகப்படுத்துவதற்கும், இன்னும் கூடுதலான முறையில் ஜனநாயக உரிமைகள்மீது உள்நாட்டில் தாக்குதல்களை மேற்கொள்ளவுமே ஆகும்.

இந்த விசாரணை ஒரு தேர்தல் ஆண்டில் நடைபெறுகிறது என்ற உண்மையால் விசாரணைக் குழுவின் பணிகள் சிக்கலாகியுள்ளன; மேலும் ஆளும் செல்வந்த தட்டினரிடையே பெரும் மோதல்களும் நிகழும் நேரமாக இது உள்ளது; ஈராக்கின் பாதுகாப்பு நிலையில், அமெரிக்க இராணுவம் மோசமாகிக் கொண்டிருக்கும் நிலையினால் தூண்டப்பட்டுள்ளது. இவ்விசாரணைக் குழுவினை ஏற்படுத்துவதற்கு புஷ் நிர்வாகம் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி, பல ஆவணங்கள் மற்றும் சாட்சியம்கள் வெளிப்படுத்தப்படுவதையும் தடுக்கப் பார்த்தது; ஆனால் இறுதியில் அவற்றிற்கெல்லாம் உட்படவேண்டியதாயிற்று.

இக்குழுவின் தன்மையை விளக்குகையில், அவர்களில் ஐந்து பேர் கெர்ரிக்கும், ஐந்து பேர் புஷ்ஷிற்கும் வாக்களிப்பர் என்று கெர்ரி கூறினார். எப்படியிருந்தபோதும், மொத்தப் பத்து பேருமே ஈராக் போரை ஆதரிப்பவர்கள், ஜனநாயக் கட்சியில் வரக்கூடிய வாய்ப்பு உள்ள ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் கெர்ரியும், இப்பொழுதுள்ள ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷும், மற்றும் அதேபோல் இந்த பத்து பேருமே அமெரிக்க நிதி உயர் அடுக்குகளின் கருவிகளாக உள்ளனர் என்பதை எளிதில் ஒருவர் குறிப்பிட்டிருக்கமுடியும்.

இதில் தொடர்புடைய நபர்களைப் பொறுத்தவரையில், குடியரசுக் கட்சியின் ஐந்து உறுப்பினர்கள் எவரும், புஷ் நிர்வாகத்தில் பெரிய அளவு பிரதிநிதித்துவம் பெற்றுள்ள கிறிஸ்துவ அடிப்படைவாதிகளுடனோ அல்லது புதிய பழமைவாத பிரிவுகளுடனோ தொடர்பு கொள்ளாதவர் அல்லர்; ஐந்து ஜனநாயகக் கட்சிக்காரர்களும் அக்கட்சியின் "போர்-எதிர்ப்பு" பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறுவதற்கில்லை. இவர்கள் அனைவரும் பொதுவாக அமெரிக் முதலாளித்துவ அரசியல் நிறமாலையின் (spectrum) ''மையப்பாதை'' என்று கூறப்படும் தளத்தைச் சேர்ந்தவர்கள் எனலாம். அவ்விதத்தில், முடிவுகளை இறுதியாக்கும் முன்னேரே, அமெரிக்க அரசியல் நடைமுறையில் பரந்தமுறையிலான ஒருமித்த கருத்தைப் பிரதிபலிப்பவர்கள் என்று கூறமுடியும்.

ஆஷ்கிரோப்ட் பற்றி இரு நிகழ்ச்சிகள்

விசாரணைக் குழுவின் இருகட்சித் தன்மை ஒற்றுமை, கடந்த வாரம் இரு முக்கியமான நிகழ்ச்சிகளில் வெளிப்படுத்தப்பட்டது. தலைமை வழக்குரைஞர் விசாரணை நடவடிக்கைளில் தன்னுடைய ஆரம்ப அறிக்கையில் துர்நாற்றத்திற்குச் சமமான ஒரு குண்டை எறிந்தார்; செப்டம்பர் 11 தாக்குதலுக்கு அமெரிக்க அரசாங்கம் தயார்நிலையில் இல்லாததின் பொறுப்பு முற்றிலும் கிளின்டன் நிர்வாகத்தைச் சேர்ந்தது என்றும், எதிர்-உளவு மற்றும் குற்ற விசாரணை இவற்றிற்கிடையே உள்ள "சுவர்" 1995ம் ஆண்டு அப்பொழுது துணைத் தலைமை வழக்குரைஞராக இருந்து, இப்பொழுது ஜனநாயகக் கட்சி உறுப்பினராக 9/11 விசாரணைக் குழுவில் இருக்கும் ஜேமி கோர்லிக் இயற்றிய குறிப்பின் விளைவினால்தான் ஏற்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வாஷிங்டன் மாநிலத்தின் பழைய செனட்டரும், குடியரசுக் கட்சியை சேர்ந்தவருமான குழு உறுப்பினர் ஸ்லேட் கார்டன், செப்டம்பர் 11-க்கு எட்டு மாதங்கள் முன்பு ஆஷ்கிரோப்ட், கோர்லிக்கின் குறிப்பை அகற்றுவதற்கு எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லையா என்று கேட்டு ஆஷ்கிரோப்டை சிறுமையில் நிறுத்தினார். அதற்கு ஆஷ்கிரோப்ட் தன்னுடைய உதவியாளரே, அதாவது லாரி தோம்சனே, 2001 ஆகஸ்ட் 6ம் தேதி வெளியிட்ட உத்திரவின்படி, கோர்லிக்கின் உத்திரவுக் குறிப்புக்களை மீண்டும் ஏற்று உறுதிப்படுத்திவிட்டதாகக் கூறினார். இரண்டு அதிகாரிகளுமே சட்டமன்றம், உள்நாட்டு ஊழல்கள் மலிந்திருந்த வாட்டர்கேட் சகாப்தத்தில், நீதித்துறை அதிகாரிகள் கூறியிருந்த சட்ட விதிகளுக்கு ஒப்புதல் கொடுத்திருந்தைத்தான் ஏற்றிருந்தனர்.

அப்பொழுதிலிருந்து, குடியரசிக் கட்சி, மற்றும் ஜனநாயகக் கட்சி விசாரணைக் குழு உறுப்பினர்கள் கோர்லிக்கிற்கு ஆதரவை பெரிய முறையில் கொடுத்தனர்; அதிலும் சில வலதுசாரி குடியரசுக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் குடியரசுக் கட்சியின் வலதுகளுக்கு குரல் (சார்பு பேச்சு) கொடுக்கும் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் மற்றும் வாஷிங்டன் டைம்ஸ் போன்றவை கோர்லிக் குழுவிலிருந்து விலக வேண்டும் என்று ஆர்ப்பரித்தபோது இது நிகழ்ந்தது.

இரண்டாவது நிகழ்வாக, இருகட்சி முறையின் ஒத்துழைப்புத் தன்மை, ஆஷ்கிரோப்ட்டை பற்றியதில் வெளிப்பட்டது. விசாரணைக் குழுவின் முன் தலைமை வழக்குரைஞர் தன் கருத்துக்களைக்கூறி முடிக்க இருந்த நேரத்தில், முன்னாள் வாட்டர்கேட் வக்கீலான, ஜனநாயகக் கட்சியின் ரிச்சார்ட் பென்-வெனிஸ்ட், 2001 கோடைகாலத்தில் இருந்து வணிக விமானங்களை பயன்படுத்துவதை ஆஷ்கிரோப்ட் ஏன் நிறுத்திவிட்டார் என்பதை, படிப்படியாக முன்னரே ஒத்திகை பார்க்கப்பட்டிருந்திருக்க வேண்டும் என்று, தெரிந்த விளக்கங்கள் மூலம் தெளிவாக வைத்தார். இது மிகவும் வியப்பாக இருந்தது; ஏனென்றால் பிக்கார்ட் இன் சாட்சியத்திற்கு பென்-வெனிஸ்ட்டின் கடுமையான தாக்குதலுக்குப் பின்னர், ஆஷ்கிரோப்ட் பயங்கரவாத எதிர்ப்பு எதிர்-உளவின் (counter-intelligence) முக்கியத்துவம் பற்றி அசட்டையுடன் உதறியிருந்ததோடு, FBI செலவினங்கள் அத்துறையிலும் குறைக்கப்பட்டிருந்தன எனக் கூறியிருந்தார்.

பிக்கார்ட் வெளியிட்டிருந்த அறிக்கைகள் பற்றித் தன் கேள்விகளைக் கேட்டபின்னர் பென்-வெனிஸ்ட் திடீரென்று விஷயத்தை மாற்றியதுடன், வாரன் குழு கென்னடி படுகொலை பற்றி சதித்திட்டக் கருத்தாய்வுகள் பற்றி விடையறுக்காதை குறைகூறி ஒரு குறிப்பைக் கூறினார். 9/11 இன் விசாரணைக் குழுவும் அத்தகைய குறைபாட்டை கொள்ளக் கூடாது என்று அவர் தெருவித்து, ஆஷ்கிரோப்ட் வணிக விமானங்களை ஏன் பயன்படுத்தியதை நிறுத்தி, அதற்குப் பதிலாக வாடகை விமானத்தைப் பயன்படுத்தினார் என்று விளக்குவது பற்றி ஒரு வாய்ப்புத் தருவதாக தெரிவித்தார். (இந்த நடவடிக்கை பரந்த அளவில் ஆஷ்கிரோப்ட்டும் அவருடைய உதவியாளர்களும் வரவிருக்கும் விமானக் கடத்தலைப் பற்றி முன் எச்சரிக்கை கொண்டிருந்தனர் என்ற ஊகத்தை ஏற்படுத்தியிருந்தது). தான் தொடர்ந்து வணிக விமானத்தை சொந்த வேலையில் செல்லும்போது பயன்படுத்தி வந்ததாகவும், நீதித்துறைப் பாதுகாப்புக்குழு ஒன்றின் மதிப்பீட்டின் பேரில் அதைக் கைவிடவேண்டியதாக போயிற்று என்று ஒரு தயார் செய்துவந்திருந்த விடை ஒன்றை ஆஷ்கிரோப்ட் கூறினார்.

இதையொட்டி கீழ்க்கண்ட வாக்குவாதம் நிகழ்ந்தது:

ஆஷ்கிரோப்ட்: இது பயங்கரவாத அச்சுறுத்துலுடன் தொடர்பு உடையது என்பதை விட நாட்டிற்கு அச்சுறுத்தல் என்பதுடன் தொடர்பு கொண்டுள்ளது. தலைமை வழக்குரைஞரின் பாதுகாப்பு பற்றிய மதிப்பீடு, அவருடைய பொறுப்புக்கள், வேலையின் தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு செய்யப்பட்டது. இது தலைமை வழக்குரைஞருடன் பயணம் செய்யும் நபர்கள் வைத்துக் கொள்ளவேண்டிய ஆயுதங்கள் மற்ற தளவாடங்கள் பற்றியதுடன் தொடர்பு கொண்டுள்ளது. அவர்களுடைய மதிப்பீடு நாம் அரசாங்க விமானத்தைப் பயன்படுத்துவதுதான் சிறந்த முறை என்பது ஆகும். இவை தனியாருடைய சிறப்பு ஜெட் விமானங்கள் அல்ல. இவை அமெரிக்க அரசாங்கத்தின் விமானங்கள் ஆகும். அத்தகைய விமானங்களில் ஒன்றில்தான் நான் மில்வோக்கிக்கு செப்டம்பர் 11 காலை ஒரு நிகழ்ச்சிக்காக சென்றுகொண்டிருந்தேன்.

பென்-வெனிஸ்ட்: விசாரணைக் குழுவிற்கு இந்தப் பிரச்சினைகள் எழுப்பியவர்கள், இன்னும் பலமுறைகளில் அதோடு இதைப்பற்றித் தொடர்பு உடையவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் உங்களுக்கு இதைப்பற்றி தெளிவாக்குவதற்கு ஒரு வாய்ப்பு அளித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா.

பென்-வெனிஸ்ட் உடனடியாக ஏற்றுக் கொண்டாலும், இந்த விடை ஒரு தவிர்த்தலே ஆகும். ஆஷ்கிரோப் இற்க்கு முன்னால் அப்பதவியில் இருந்து, இடைவிடாமல் பல அச்சுறுத்துதல்களுக்கு தொடர்ந்த இலக்காக இருந்த, அதிலும் 1993 வேக்கோ படுகொலையை ஒட்டி அவர் வகித்த பாத்திரத்தால் அச்சுறுத்தல் இருந்தபோதிலும் ஜெனட் ரெனோவிற்கு (Janet Reno) இத்தகைய வசதி கொடுக்கப்படவில்லை. நீதித்துறைப் பொறுப்பை ஏற்ற சிலமாதங்களில், இவர் வணிக விமானத்தில் பயணிக்கக் கூடாது என்ற முடிவைக் கொள்ள, அப்படி என்ன மாற்றம் ஏற்பட்டது? இந்த விஷயம் விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டியது ஆகும்.

தொடரும்....