ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

වටවල වතු සමාගම කම්කරුවන් “කොන්ත‍්‍රාත් කරුවන්” මට්ටමට පිරි හෙලයි

இலங்கை: வட்டவள பெருந்தோட்டக் கம்பனி தொழிலாளர்களை பால்பண்ணை “ஒப்பந்தக்காரர்களாக்கி” சீரழிக்கின்றது

M. Thevarajah
22 June 2017

இலங்கையின் பிரதான பெருந்தோட்டக் கம்பனிகளில் ஒன்றான வட்டவள பெருந்தோட்டக் கம்பனி, இப்போது தனது லொனாக் தேயிலை தோட்டத்தை கலைத்து, தோட்டச் சொத்துக்களில் இருந்து தொழிலாளர்களை வெளியேற்றுவதன் மூலம், அதனை ஒரு பால் பண்ணையாக மாற்றுவதற்கான ஒழுங்குகளை செய்து வருகின்றது. கடந்த மார்ச் மாதம், முதலீட்டு சபையினால் அங்கீகரிக்கப்பட்ட புதிய திட்டமான வட்டவள டயரி லிமிடட்டின் (வரையறுக்கப்பட்ட வட்டவள பால் பண்ணை) கீழ், லொனாக் தோட்டத் தொழிலாளர்களை பதிவு செய்வதற்கு நிர்வாகம் முயற்சித்துள்ளது. இந்த பால் பண்ணை, வட்டவள பெருந்தோட்டக் கம்பனியின் ஒரு துணை நிறுவனமாகும்.

தற்போது, லொனாக் தோட்டத்தின் 60 ஹெக்டர் பரப்பளவினைக் கொண்ட மூன்று பிரிவுகளில் வேலை செய்யும் சுமார் 250 பேர், தமது வேலை இழக்கும் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றார்கள். கம்பனி, தோட்டத்தில் கைவிடப்பட்ட பகுதிகளை புல் வளர்ப்பதற்காக துப்புரவு செய்யும் வேலையில் ஏற்கனவே ஈடுபட்டு வருகின்றது. கம்பனி, தோட்டத்தில் புல் வளர்ப்பதற்காக ஒரு ஹெக்டருக்கு 35,000 ரூபாவை (233 டாலர்) தொழிலாளர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்குகிறது. அறுக்கப்பட்ட ஒரு கிலோ புல்லுக்கு 5 ரூபாவும் சேர்த்து கொடுக்கிறது.

இதனால், தொழிலாளர்கள் பால் பண்ணையின் “ஒப்பந்தக்காரர்களாக” மாற்றப்பட உள்ளதோடு, அவர்களுடைய ஊதியம், பெரும் வர்த்தகர்களின் இலாபத்தை பெருக்கும் நோக்கத்தினால் இயக்கப்படுகின்ற கம்பனிகளின் சுயாதீன முடிவிலேயே முழுமையாக தங்கியுள்ளது. தொழிலாளர்கள் கடந்த காலப் போராட்டங்களின் பலனாகப் பெற்றுக் கொண்ட வீடு, மருத்துவம் மற்றும் கல்வி வசதிகளுடன் ஓய்வூதிய திட்டங்களையும் சேர்த்து அற்ப சலுகைகளைக் கூட இழக்க நேரும். உழைக்கும் தொழிலாளர்களுக்கு எந்தவித நட்டஈடும் இன்றி, அவர்களுடனான “ஒப்பந்தத்தை” எந்த நேரத்திலும் கம்பனியால் இரத்துச் செய்ய முடியும்.

தோட்டங்களை துண்டாடுவதானது, அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் தோட்டக் கம்பனிகளால் முன்வைக்கப்படும் “தீர்வாக” இருந்து வருகின்றது. தொழிலாளர்கள் மீதான இந்தப் பாரிய தாக்குதல்களை முன்னெடுப்பதற்கு தொழிற்சங்கங்கள் கம்பனிகளுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

பூகோள நிதி நெருக்கடியாலும் மத்திய கிழக்கில் வளர்ந்து வரும் பூகோள-அரசியல் பதட்டங்களாலும் மற்றும் ரஷ்யாவிலான நெருக்கடிகளாலும் நுகர்வோர் கேள்வி வீழ்ச்சியடைந்து வருவதையும் சர்வதேச போட்டி அதிகரித்து வருவதையும் எதிர்கொள்வதால், தேயிலை தோட்டக் கம்பனிகள் தற்பொழுது நெருக்கடிக்குள் இருக்கின்றன. இந்த நாடுகள் இலங்கைத் தேயிலைக்கான பிரதான சந்தைகளாகும். பத்தாயிரக் கணக்கான தொழிலாளர்களின் செலவில், தோட்டங்களை இலாபமீட்டக் கூடிய துறைக்கு மாற்றுவதற்கு கம்பனிகள் ஆற்றொணா முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

பெருந்தோட்டக் கம்பனிகள், அரசாங்கம் மற்றும் கூட்டுத்தாபன ஊடகங்களும் “தாங்கமுடியாத தொழிலாளர் ஊதியங்களே” இந்த நெருக்கடிக்களுக்கு காரணம் என பொய் கூறுகின்றன. யூன் 11 அன்று த ஐலண்ட பத்திரிகையின் ஆசிரிய தலையங்கம் கூறியதாவது: “சில நேரங்களில், தோட்டத் தொழிலாளர்களின் வாக்குகள் மீது கண்வைத்து மேற்கொள்ளப்படும் அரசாங்கத்தின் தலையீடும் தாங்க முடியாத மட்டத்துக்கு சம்பளத்தை உயர்த்திவிடுகிறது. சம்பளம் உற்பத்தித் திறனுடன் இணைக்கப்பட வேண்டும் என்ற தொழிற்துறையின் கோரிக்கை எடுபடவில்லை” என்கிறது. உண்மையில், தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம், அவர்களது குடும்பத்துக்கு சாப்பாடு கொடுக்கவே போதாதுள்ளது.

அண்மைய மாதங்களில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பெருந்தோட்டத்துக்கு “புதிய முறை” ஒன்றை பிரேரித்தார். “நட்டத்தில் இயங்கும்” தோட்டங்களை வேறு துறைகளில் முதலிட்டு இலாபத்தை பெறுமாறு அவர் கேட்டுக்கொண்டார். அந்த தோட்டங்களில் இருந்து இட்ம்பெயரும் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் உதவியளிக்கும் என விக்ரமசிங்க தெரிவித்தார். லொனாக் தோட்டத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு உதவிகள் ஏதாவது வழங்கப்படுவதற்கான எந்த அறிகுறியும் கிடையாது. அவர், நெருக்கடிகளின் சுமைகளை தொழிலாளர்களின் முதுகில் சுமத்துவதற்கு கம்பனிகளை ஊக்கப்படுத்துகின்றார்.

லொனாக் தோட்டத் தொழிலாளர்கள், பால் பண்ணைத் திட்டத்துக்கு எதிராக கடந்த மார்ச் 22, 23ம் திகதிகளில் வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டார்கள். ஹட்டன் உதவித் தொழில் ஆணையாளருடனான ஒரு கலந்துரையாடலின் பின்னர், இத்திட்டம் தொழிற்சங்கங்களின் ஆதரவினைப் பெறுவதற்காக ஒத்திவைக்கப்பட்டது.

வேலை நிறுத்தப் போராட்டத்துக்குப் பின்னர், வட்டவள தோட்டக் கம்பனி தொழிற்சங்கங்களுக்கு எழுதிய கடிதத்தில், லொனாக் தோட்டம் பயன்பாட்டுக்கு பொருத்தமானதாக இல்லாத காரணத்தால், அதை பொருத்தமுள்ளதாக்குவதற்கு ஒரு பால் பண்ணை திட்டத்தினை முன்மொழிந்திருப்பதாக குறிப்பிட்டது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா), தொழிலாளர் தேசிய தொழிற்சங்கம் (NUW), மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு), இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் (SPWU) ஆகியவற்றின் கிளைகள் லொனாக் தோட்டத்தில் இயங்குகின்றன. NUW தலைவர் ப. திகாம்பரம் மற்றும் ம.ம.மு. தலைவர் ஆர். ராதாகிருஸ்னனும் கொழும்பு அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருக்கின்றனர். SPWU, ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான கே.கே. பியதாச தலைமையிலானதாகும்.

மதுரட்ட பெருந்தோட்டக் கம்பனியின் வலப்பனையில் உள்ள மகா ஊவா தோட்டம் மற்றும் களனி வலி பெருந்தோட்டக் கம்பனிக்கு சொந்தமான பட்டல்கல தோட்டத்தினதும் சில பகுதிகளில் ஏற்கனவே வருமான பங்கீட்டு முறை செயற்படுத்தப்பட்டு வருகின்றது. (பார்க்க: கம்பனிகள் வேலை நிலமைகளை வெட்டுவதை ஏற்றுக் கொளுமாறு இலங்கை தோட்ட தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை நிர்பந்திக்கின்றன)

வட்டவள பெருந்தோட்டக் கம்பனியின் தாய் நிறுவனமான சண்சைன் கோல்டிங்ஸ், சிங்கப்பூரை தளமாகக் கொண்ட ஒரு முதலீட்டுக் கம்பனியான டக்ஸ்டன் அசட் மனேஜ்மன்ட் கம்பனியுடன் இணைந்து, 11.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்த பால் பண்ணைத் திட்டத்தில் முதலீடு செய்துள்ளது. சண்சைன் ஹோல்டிங்ஸின் குழு முகாமைத்துவப் பணிப்பாளர் விஷ் கோவிந்தசாமியின் படி, தேயிலை பயிர்ச்செய்கை இனிமேலும் இலாபமற்றதாக உள்ள இடங்களில், இறக்குமதி செய்யப்பட்ட பசுக்களையும், இந்த வர்த்தகத் துறையில் நிபுணத்துவத்தையும் பயன்படுத்தி, 17 வீத வருவாயை இந்த முதலீட்டில் எதிர்பார்க்கின்றது.

ஏற்கனவே பண்ணை நிர்வாகம் 400 பசுக்களை நியூசிலாந்தில் இருந்து வாங்கியுள்ளதுடன் இன்னும் 1000 பால்மாடுகளை இறக்குமதி செய்யவுள்ளதோடு வருட முடிவில் 30,000 லீட்டர் பால் உற்பத்தி செய்யவுள்ளது.

மறுபக்கம், கம்பனி லொனாக் தோட்டத்தில் பல பரம்பரைகளாக வாழ்ந்து வந்த தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்றும் திட்டத்தினைக் கொண்டுள்ளது. லொனாக் தோட்டத்தில் இருந்து 18 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள டிக்கோயாவில் இந்தக் கம்பனிக்கு சொந்தமான தரவளை தோட்டத்தில் 100 வீடுகளைக் கட்டிக்கொண்டிருக்கின்றது. இவை லொனாக் தொழிலாளர்களுக்கு கட்டப்படுவதாக கூறப்படுகின்றது.

தோட்டங்களில் கூலித் தொழிலாளர் முறையை ஒழித்து, தொழிலாளர்களை குத்தகை விவசாயிகள் மட்டத்துக்கு “ஒப்பந்ததாரர்களாக” மாற்றுவதானது முழு தொழிலாள வர்க்கத்தின் உரிமைகள் மீதான பரந்த தாக்குதலின் ஒரு பாகமே ஆகும். பெரு வர்த்தகர்களதும் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களதும் வேண்டுகோளின் பேரில், சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ள பொருளாதார மறுசீரமைப்பினை அராசாங்கம் துரிதப்படுத்தி வருகின்றது.

லொனாக் தோட்டத்தின் பல தொழிலாளர்கள், தங்களின் வாழ்க்கை நிலமைகள் மற்றும் தற்போது முகம் கொடுக்கும் அச்சுறுத்தல்கள் பற்றியும் உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசினார்கள்.

“எமது சம்பளம் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய போதாமல் உள்ளது. நாங்கள் அபாயகரமான சூழ்நிலைக்கு முகம் கொடுக்கின்றோம். இப்போது எமது வேலையும் ஆபத்தில் உள்ளது. கம்பனியின் புதிய திட்டத்தின் கீழ், நாங்கள் எமது தோட்டத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தரவளைத் தோட்டத்துக்கு போகுமாறு கேட்கப்பட்டோம். அங்கு போவதை நாங்கள் நிராகரித்தோம். தோட்டக் கம்பனிகள் நாங்கள் தற்போது பெறும் அற்ப உரிமைகளைக் கூட இல்லாமல் செய்து, தங்களின் இலாபத்தினை அதிகரிப்பதற்கு முயன்று கொண்டிருக்கின்றன. தொழிற்சங்கங்கள் எமது உரிமைகளுக்காகப் போராடவில்லை” என ஒரு தொழிலாளி கூறினார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான மற்றுமொரு தொழிலாளி கூறியதாவது: “நான் கடந்த 7 வருடங்களாக சகிக்க முடியாத சூழ்நிலைகளின் மத்தியில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கின்றேன். தற்பொழு நான் இந்த தோட்டத்தில் இருந்து விலகி தனியாக மேசன் வேலை செய்கின்றேன். தோட்டத்தில் கிடைக்கும் சம்பளம் எமது உணவுத் தேவைக்கே போதாமல் உள்ளது. எங்களின் பிள்ளைகளின் கல்வியை பற்றி எம்மால் சிந்திக்க கூட முடியவில்லை. நாங்கள் முழுமையாக பின்தங்கிய பிரதேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது தோட்டத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் வட்டவள நகரம் அமைந்துள்ளது. ஆனால் பொருத்தமான போக்குவரத்து வசதிகள் இல்லை. வீதிகள் முற்றாகச் சேதமடைந்துள்ளன, எங்களுக்கு அரசாங்கப் போக்குவரத்து வசதிகள் கிடையாது. எமது தோட்டத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ஹட்டன் நகரத்திற்கு ஒரு நாளைக்கு இரண்டு தடவைகள் மட்டும், தனியார் பஸ் சேவையில் ஈடுபடுகின்றது. போக்குவரத்துக் கட்டணம் 100 ரூபா செலாவாகும். பஸ்ஸிற்குப் போதுமான பயணிகள் இல்லாவிடில் அன்று சேவை நிறுத்தப்படும்.

“எமது தோட்டப் பாடசாலையில் தரம் 9 வரை மட்டுமே உள்ளது. இதற்கு மேல் எமது பிள்ளைகள் படிக்க வேண்டுமானால், வட்டவளை அல்லது ஹட்டனுக்கு செல்ல வேண்டும். எமது தோட்ட வைத்தியசாலையும் மூடப்பட்டுள்ளது. நோயாளிகளை வட்டவள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்கு 300 ரூபாவுக்கு முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமர்த்த வேண்டும். எமது தோட்ட தேயிலை தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. இப்பொழுது எமது மட்டுப்படுத்தபட்ட தண்ணீர் வசதியையும் நிர்வாகம் பால் பண்ணைக்குப் மற்றும் அதன் முகாமையாளரின் பங்களாவுக்கும் திருப்பிவிட திட்டமிட்டுள்ளது.” 

ஓய்வுபெற்ற தொழிலாளி பேசுகையில், “வட்டவளை தோட்டக்கம்பனி பால்பண்ணைக்காக பாரிய கட்டிடத்தினைக் கட்டிக்கொண்டிருக்கின்றது. அத்துடன் அதனையும் அதன் முகாமையாளர் பங்களாவையும் பிரதான வீதியுடன் இணைக்கும் பாரிய வீதியொன்றையும் அமைத்து வருகின்றது,” என்றார். “இப்போது எங்களுக்கிருந்த தண்ணீர் வசதியைக் கூட நிறுத்தி, பால் பண்ணைக்கு திருப்பி விட்டுள்ளார்கள். இங்குள்ள தொழிலாளர்கள் 100 வருடங்களுக்கு மேலாக, கஸ்டமான சூழ்நிலமைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றார்கள். ஆனால் தற்பொழுது வெளிநாட்டினைத் தளமாகக் கொண்ட பால் பண்ணை வியாபாரத்துக்கே நவீன வசதிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன”.

“அவர்கள் தோட்டங்களை மூடிவிட்டு தொழிலாளர்களை தோட்டத்தில் இருந்து துரத்துவதற்கான தாயாரிப்புக்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த திட்டத்தினை தோட்ட தொழிற்சங்கங்கள் எதிர்க்கவில்லை. சகல தொழிற்சங்கத் தலைவர்களும் அரசாங்கத்தின் அமைச்சர்களாக இருக்கின்ற காரணத்தினால் அவர்கள் தொழிலாளர்களுக்கு ஆதரவளிக்கமாட்டார்கள். அவர்கள் அரசாங்கத்தின் திட்டத்துடன் இணைந்துள்ளார்கள்” என அவர் மேலும் கூறினார்.