ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The Ryanair strike and the resurgence of international class struggle

ரைன்எயர் வேலைநிறுத்தமும், சர்வதேச வர்க்க போராட்டத்தின் மீளெழுச்சியும்

Robert Stevens
8 August 2018

அயர்லாந்து, பெல்ஜியம், ஸ்வீடன், நெதர்லாந்து மற்றும் ஜேர்மனியின் ரைன்எயர் விமானிகள், அவர்களின் சம்பளம் மற்றும் வேலை நிலைமைகள் மீதான தாக்குதல்களை எதிர்த்து வெள்ளியன்று வேலைநிறுத்தத்தில் இறங்குவார்களென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வேலைநிறுத்தங்கள் பல பிரச்சினைகள் மீது அமைந்துள்ளது. ரைன்எயர் நிறுவனத்திற்காக விமானம் ஓட்டும் பெரும் எண்ணிக்கையிலான விமானிகள் அந்த விமானச் சேவை நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்டவர்கள் இல்லை. அவர்கள் ஒரு-நபர் நிறுவனத்தை (a one-person company) நிறுவி, அயர்லாந்தில் ஒரு வங்கிக் கணக்கு தொடங்கவும் கூட நிர்பந்திக்கப்பட்டார்கள்.

அந்நாட்டில், சுமார் 100 முழு நேர விமானிகள் பணிமுதிர்வு (seniority) பிரச்சினைகள் சம்பந்தமாக வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். ஜேர்மனியில், 400 விமானிகள் அதிகரித்தளவில் முகமை தொழிலாளர்களை (agency workers) பயன்படுத்துவதை எதிர்த்து வருவதுடன், விமானம் பறக்க விடும் நேரத்தின் அடிப்படையில் மாறுபடும் தொகைகளை மொத்த ஊதியத்தில் ஒரு சிறிய பகுதியாக்கும் வகையில், அதிக அடிப்படை சம்பளம் கோரி வருகின்றனர். அவர்கள், மருத்துவ விடுப்பு கால தொகைகளை அதிகரிக்கவும் மற்றும் ஜேர்மன் எங்கிலுமான வேலைகளுக்கு ஒரே சம்பளமும் கோரி வருகின்றனர்.

சுவீடனில், ரைன்எயர் பேச்சுவார்த்தைக்கு மறுப்பதாக கூறி சம்பந்தப்பட்ட தொழிற்சங்கம் ஒரு கூட்டு உடன்படிக்கையை எட்ட முடியாது இருப்பதால் விமானிகள் பிரச்சினையில் இறங்கியுள்ளனர். நெதர்லாந்தில், தொழிலாளர்கள், முழு-நேர வேலைகள், அதிகரித்த மருத்துவ விடுப்பு கால தொகைகள் மற்றும் ஓய்வூதிய வழிவகைகள் உட்பட டச்சு தொழிலாளர் சட்டத்திற்குப் பொருந்திய ஒரு கூட்டு ஒப்பந்தத்தைத் கோரி வருகின்றனர். பெல்ஜியத்தில், விமானிகள், ஜூன் மாதத்தில் இருந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு, நிர்வாகத்தின் மிரட்டலை முகங்கொடுத்துள்ள விமானச் சிப்பந்திகளின் பாதுகாப்பிற்காக வெளிநடப்பு செய்து வருகின்றனர்.

இந்த ஐந்து நாடுகளின் விமானிகளும் வேலைநிறுத்த நடவடிக்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ள நிலையில், நெதர்லாந்து மற்றும் ஜேர்மனியின் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் எப்போது என்று இன்னமும் உத்தியோகபூர்வமாக முடிவெடுக்கவில்லை. நெதர்லாந்து விமானிகள் தொழில்துறை நடவடிக்கைக்காக 99.5 சதவீதம் வாக்களித்து, திருப்பி போராடுவதில் ஈடுபட்டுள்ள அனைத்து ஐந்து நாடுகளது விமானிகளின் பொதுவான தீர்மானத்தையே அவர்களும் வெளிப்படுத்தினர். ஜேர்மன் விமானிகளும் இதே வித்தியாசத்தில் வேலைநிறுத்த நடவடிக்கைக்கு வாக்களித்தனர்.

ரைன்எயர் நிறுவனம் தலைமை இடத்தைக் கொண்டுள்ள அயர்லாந்தில் ரைன்எயர் விமானிகள் ஏற்கனவே இந்தாண்டு நான்கு ஒருநாள் வேலைநிறுத்தங்களை நடத்தி உள்ளனர்.

சர்வதேச அளவில் அபிவிருத்தி அடைந்து வரும் வர்க்க போராட்ட மீளெழுச்சியின் உள்ளடக்கத்தில் இந்த வேலைநிறுத்தங்கள் பார்க்கப்பட வேண்டும். ஜனவரி 3 முன்னோக்கு கட்டுரையில், உலக சோசலிச வலைத் தள தலைவர் டேவிட் நோர்த் எழுதுகையில், 2018 இன் இந்த புது வருடம், “எல்லாவற்றுக்கும் மேல் உலகெங்கிலும் சமூகப் பதட்டங்களின் ஒரு அதி தீவிரப்படலின் மூலமாகவும் வர்க்க மோதல்களின் ஒரு அதிகரிப்பினாலும் குணாம்சப்படுத்திக் காட்டப்படுவதாக இருக்கும்” என்று எழுதினார்.

நோர்த் தொடர்ந்து எழுதினார்: “முதலாளித்துவ அமைப்புமுறையின் உள்ளார்ந்த முரண்பாடுகள் … முதலாளித்துவத்திற்கு எதிரான பாரிய பெருந்திரளான தொழிலாள வர்க்க எதிர்ப்பை இனிமேலும் ஒடுக்குவது சாத்தியமில்லை என்ற புள்ளியை இப்போது துரிதமாக எட்டி வருகிறது.”

இந்த மதிப்பீடு சரியானது என்பதை சம்பவங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அமெரிக்காவில் ஆசிரியர்களின் பாரிய வேலைநிறுத்தங்கள், ஜேர்மனியில் தொழில்துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், ஓய்வூதிய உரிமைகளின் பாதுகாப்பிற்காக இங்கிலாந்தில் 50,000 பல்கலைக்கழக விரிவுரையாளர்களது போராட்டம், பிரான்சில் மக்ரோன் அரசாங்கம் திணித்த வணிக-சார்பு சட்டமசோதாவுக்கு எதிராக இரயில்வே துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் உட்பட, தொழிலாளர்களின் சம்பளங்கள், நிலைமைகள் மற்றும் தொழில் வாழ்க்கை மீதான தாக்குதல்களுக்கு எதிராக உலகம் முழுவதிலும் போராட்டங்கள் வெடித்து வருகின்றன.

கடந்த மாதம் Politico இல் வெளியான ஒரு கட்டுரை, இந்த ஆரம்பக்கட்ட ரைன்எயர் வேலைநிறுத்தத்தை விமானச் சிப்பந்திகள் மற்றும் விமானிகளின் "கண்டந்தழுவிய கிளர்ச்சிக்கான" ஒரு முன்னறிவிப்பாக குறிப்பிட்டது. இந்த கிளர்ச்சி—ஐரோப்பா மற்றும் வட ஆபிரிக்கா எங்கிலும் 37 நாடுகளில் 86 விமான நிலையங்களில் இருந்து 13,000 தொழிலாளர்களுடன் செயல்பட்டு வரும் ஒரு பன்னாட்டு பெருநிறுவனத்திற்கு எதிரான ஓர் உலகளாவிய போராட்டமாக—வேகமெடுத்து வருகிறது.

இது உலகளாவிய விமானப் போக்குவரத்து தொழில்துறையில் பாதிப்புகளைக் கொண்டிருக்கும். கடந்த ஆண்டு 130 மில்லியன் பயனர்களை ஏற்றிச் சென்றிருந்த ரைன்எயர், விமானப் பயனர் எண்ணிக்கையில் ஐரோப்பாவின் மிகப்பெரிய விமானச் சேவை நிறுவனமாக உள்ளது. அது, குறைந்த சம்பளங்கள் மற்றும் நீண்ட வேலை நேரங்களைத் திணிக்கும் அதன் வியாபார மாதிரியின் அடிப்படையில் அதீத-சுரண்டலுக்கான புதிய நிர்ணய வரம்புகளை அமைப்பதில் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கிறது.

ரைன்எயர், ஒரு பயணச் சேவைக்குச் செய்திகளின்படி மிகக் குறைந்தளவாக 10 டாலர் சம்பளம் வழங்கப்படும் விமானச் சேவை பணியாளர்களைப் பணியமர்த்த, குறைவூதிய நாடுகளில்—குறிப்பாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளில்—பிழிந்தெடுக்கும் முகமைகளைப் பயன்படுத்தி, அடிமட்ட சம்பள விகிதங்களில் பணியாளர்களை நியமிக்கிறது. Ryanairdontcare வலைப்பதிவிலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, 4,000 க்கும் அதிகமான ரைன்எயர் பணியாளர்கள் பூஜ்ஜிய-மணி நேர ஒப்பந்தங்களில் இருந்து, மாதத்திற்கு மிகக் குறைவாக 600 டாலர் அளவுகே சம்பாதிக்கின்றனர்.

நாளொன்றுக்கு ஐந்து மணி நேரத்திற்காவது சம்பளம் வழங்கப்படுவதில்லையென ரைன்எயர் விமானச் சேவை பணியாளர் அறிக்கை குறிப்பிடுகிறது. பணியாளர்கள் விமான நிலையத்தில் தயார் நிலையில் இருக்க வேண்டும், அதற்காக ஒரு மணி நேரத்திற்கு வெறும் 3.75 பவுண்டு மட்டுமே கொடுக்கப்படும் என்றவொரு கொள்கையை இந்நிறுவனம் பேணி வருகிறது. விமானிகள் முன்னதாக பயிற்சி கட்டணமாக 29,500 யூரோ ரைன்எயர்க்குச் செலுத்தி வேண்டியிருந்தது, இது இந்தாண்டு தான் குறைக்கப்பட்டது. ஆனாலும் "பயிற்சி பெறும் விமானிகள்" இப்போதும் முன் கட்டணமாக 5,000 யூரோ செலுத்த நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.

தொழிலாளர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள அழுத்தம் சகிக்கவியலாதது. அந்நிறுவனத்தில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஒரு டச் ரைன்எயர் விமானி Jouke Schrale கடந்த வெள்ளியன்று, மலாகா விமான நிலையத்தின் பணியாளர் கார் நிறுத்தப்பகுதியில் இறந்து கிடந்தார்—அவர் புரூசெல்ஸிற்கு விமானம் செலுத்த வேண்டியிருந்த நேரத்திற்கு சற்று முன்னர் தான் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் தெரிவித்தன. இது 2011 க்குப் பின்னர் ஒரு ரைன்எயர் விமானியின் இரண்டாவது தற்கொலையாகும், அப்போது லிவர்பூலில் ஜோன் லென்னன் விமான நிலையத்தில் விமானி Paul Ridgard அவர் உயிரை மாய்த்துக் கொண்டார்.

தொழிலாள வர்க்க போராட்டங்கள், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவுக்கு முன்னரும் மூலோபாய பிரச்சினைகளை முன்னிறுத்தி, அபிவிருத்தி மற்றும் தீவிரத்தில் ஓர் உயர்ந்த கட்டத்தை எட்டி வருகின்றன.

பொருளாதார வாழ்வின் மீது மிகப் பெரிய பன்னாட்டு பெருநிறுவனங்கள் மேலாதிக்கம் செலுத்தவதன் மீதும் மற்றும் உலகளாவிய உற்பத்தியின் மீதும் வர்க்க போராட்டத்தின் எதிர்கால போக்கின் தாக்கம் குறித்து 1988 இல், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு தொலைநோக்கு பார்வையுடன் ஒரு மதிப்பீட்டை வைத்தது:

நீண்டகாலமாக மார்க்சிசத்தின் அடிப்படைக் கூற்று, வர்க்கப் போராட்டமானது, வடிவத்தில் மட்டுமே தேசிய ரீதியானது என்றும் சாராம்சத்தில் அது சர்வதேச ரீதியான போராட்டம் என்றும் இருந்தது. என்றாலும் முதலாளித்துவ வளர்ச்சியின் புதிய தோற்றங்களில் வர்க்கப் போராட்டத்தின் வடிவம் கூட ஒரு சர்வதேசத் தன்மையை எடுக்கவேண்டியுள்ளது. தொழிலாளர் வர்க்கத்தின் மிக அடிப்படை ரீதியான போராட்டங்கள்கூட அதன் நடவடிக்கைகளை ஒரு சர்வதேச ரீதியில் ஒருங்கிணைக்க வேண்டிய தேவையை முன்வைக்கிறது.

இதுபோன்றவொரு நடவடிக்கைக்கு மிகப் பெரிய தடையாக இருப்பது தேசியவாத, முதலாளித்துவ-சார்பு தொழிற்சங்கங்களாகும், இவை பெருநிறுவனங்கள், வங்கிகள் மற்றும் தேசிய அரசாங்கங்களின் சார்பாக ஒரு தொழில்துறை போலிஸ் படையாக செயல்படுகின்றன.

வெள்ளிக்கிழமை கூட்டு நடவடிக்கையானது, ஓர் ஆரம்ப கிளர்ச்சியைத் தடுப்பதற்காக பல மாதங்களாக வேலை செய்து வந்துள்ள தொழிற்சங்கங்களுக்கு எதிராக நடக்கவுள்ள அதுபோன்றவொரு விளைவுக்கு முன்னதாக நடக்க உள்ளது. ஜேர்மனியின் Cockpit சங்கம் வேலைநிறுத்தத்திற்கான தேதியை அறிவிக்கவில்லை ஏனென்றால் அது ரைன்எயர் உடன் கடைசி நிமிடத்தில், கௌரவமான ஒரு உடன்படிக்கையை ஆர்வமாக எதிர்பார்த்து வருகிறது.

இவ்வார வேலைநிறுத்தங்களுக்கு முன்னர், ஸ்பெயினில் 800 ரைன்எயர் விமானிகளில் 500 பேரைப் பிரதிநிதித்துவம் செய்யும் Sepla தொழிற்சங்கம், ரைன்எயர் உடன் கூட்டு பேரம்பேசும் ஒப்பந்தத்தை எட்ட தவறிய போதும், அது வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுக்கப் போவதில்லை என்றும், அதற்கு பதிலாக சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அறிவித்தது.

ரைன்எயர் விமானிகளில் சுமார் 25சதவீதத்தினர் இங்கிலாந்தில் உள்ளனர். ஜனவரியில் அந்நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட BALPA தொழிற்சங்கம், இந்த சமீபத்திய சர்வதேச வேலைநிறுத்தங்களின் அலை நெடுகிலும், “பல்வேறு துண்டுதுண்டான சம்பள முறையை முடிவுக்குக் கொண்டு வருமாறும், ஒப்பந்த விமானிகளின் எண்ணிக்கையைக் குறைக்குமாறும் மற்றும் பணிமுதிர்வை ஏற்றுக் கொள்ளுமாறும்" கோரி, ரைன்எயர் உடன் பிரயோசனமற்ற பேரம்பேசல்களைத் தொடர்ந்தது.

அதன் பங்கிற்கு, ஐரிஷ் விமானிகளின் சங்கம் (lalpa-Fórsa) அடுத்த வார தொடக்கத்தில் மூன்றாம் தரப்பை உள்ளடக்கிய பேரம்பேசல்களுக்கு ஒப்புக் கொண்டுள்ளது.

தொழிற்சங்கங்கள் பல்வேறு நாடுகளில் விமானிகளின் வேலைநிறுத்தங்களைத் ஒன்றிலிருந்து ஒன்றை எங்கெல்லாம் சாத்தியமோ பிரித்து வைத்தன என்பது மட்டுமல்ல, அவை ரைன்எயரின் அதீத-சுரண்டலுக்கு உள்ளான விமானச் சேவை பணியாளர்களிடம் இருந்து விமானிகளைத் தனிமைப்படுத்தி வருகின்றனர். ஜூலை இறுதியில், விமானச் சிப்பந்திகள் ஸ்பெயின், போர்ச்சுக்கல் மற்றும் பெல்ஜியத்தில் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினர், அதில் விமானிகள் ஈடுபடவில்லை.

கூர்மையான எதிர்முரணாக, ரைன்எயர் போன்ற பெருநிறுவனங்கள் முன்பினும் அதிக சுரண்டல் மட்டங்களைத் திணிக்க உலகளாவிய பொருளாதாரத்தைப் பயன்படுத்துகின்றன. இந்நிறுவனம் பிற்போக்குத்தனமான பொருளாதார தேசியவாத முன்னோக்கின் அடிப்படையில் உள்ள தொழிற்சங்கங்களின் திட்டமிட்ட ஆதரவுடன் தொழிலாளர்களுக்கு இடையிலான பிளவுகளைச் சார்ந்துள்ளன. டப்ளின் விமான நிலையத்தில் பணியில் உள்ள 100 க்கும் அதிகமான விமானிகள் மற்றும் 200 விமானச் சேவை பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க ரைன்எயர் அச்சுறுத்தி உள்ளது, அவர்கள் தொடர்ந்து வேலைநிறுத்தம் செய்தால் நிறுவனம் அதன் வேலைகளை அயர்லாந்தில் இருந்து போலாந்துக்கு நகர்த்துமென அதன் தலைமை செயலதிகாரி மைக்கெல் ஓ'லெரி எச்சரித்துள்ளார்.

முதலாளிமார்களின் இந்த உலகளாவிய தாக்குதலை எதிர்ப்பதற்கான ஒரே வழி, தொழிலாளர்கள் தங்களின் சொந்த உலகளாவிய தாக்குதலைத் தொடங்க வேண்டும்!

ரைன்எயர் விமானிகள், விமான சிப்பந்திகள் மற்றும் விமான நிலைய பணியாளர்கள் தொழிற்சங்கங்களின் பிடியிலிருந்து உடைத்துக் கொண்டு, போராட்டத்தைத் தங்களின் சொந்த கரங்களில் எடுக்க வேண்டும்.

தொழிற்சங்கங்களில் இருந்து முற்றிலும் சுயாதீனமாக சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்க வேண்டும். அனைத்து தேசிய பிளவுகளைக் கடந்து அனைத்து ரைன்எயர் தொழிலாளர்களின் போராட்டத்தையும் அவர்கள் இணைத்துக் கொள்ள வேண்டும், அதேவேளையில் உலகெங்கிலும் உள்ள விமானச்சேவை, போக்குவரத்து மற்றும் சரக்கு பரிவர்த்தனை தொழிலாளர்களுக்கு ஆதரவு கோரும் ஒரு முறையீட்டையும் செய்ய வேண்டும்.

இதற்கு, விமானச்சேவை தொழில்துறையைப் பொதுவுடைமையின் கீழ் நிறுத்தி, அவற்றை தனியார் இலாப திரட்சிக்காக அல்லாமல், மனித தேவையின் அடிப்படையில் ஒரு திட்டமிட்ட உலகளாவிய பொருளாதாரத்தின் பாகமாக ஜனநாயகரீதியில் செயல்படுத்துவது உள்ளடங்கலாக, ICFI போராடுவதைப் போன்ற, ஒரு சோசலிச, சர்வதேசவாத வேலைத்திட்டத்தை ஏற்பது அவசியமாகும்.

இந்த முன்னோக்குடன் உடன்படும் ரைன்எயர் தொழிலாளர்கள் WSWS க்கு எழுத வேண்டும் மற்றும் சர்வதேச அளவில் உங்கள் சக-தொழிலாளர்களுடன் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

கட்டுரை ஆசிரியர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரை:

மார்க்சின் இருநூறாவது பிறந்த ஆண்டும், சோசலிசமும், சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் மீளெழுச்சியும் [PDF]

[3 January 2018]