ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

German Secret Service denies neo-Nazi violence in Chemnitz

ஜேர்மன் இரகசிய சேவை கெம்னிட்ஸ் நகர நவ-நாஜி வன்முறையை மறுக்கிறது

By Johannes Stern
10 September 2018

கடந்த மாத இறுதியில் கிழக்கு ஜேர்மன் நகரமான கெம்னிட்ஸ் நெடுகிலும் ஆயிரக் கணக்கான நவ-நாஜிக்கள், நாஜி வீர வணக்கம் செலுத்தியும் வெளிநாட்டவர்களைத் தாக்கியும் அடாவடி நடவடிக்கைகளில் இறங்கியதற்குப் பின்னர், ஜேர்மன் அரசும் அரசியல் ஸ்தாபகத்தின் செல்வாக்கான பிரிவுகளும் இந்த பாசிசவாதிகளைப் பாதுகாக்க முன்வந்துள்ளன.

வெள்ளியன்று இரகசிய சேவையின் (BfV) தலைவர் ஹன்ஸ்-கியோர்க் மாஸன், புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல்கள் நடத்தியதை மறுத்தார். “கெம்னிட்ஸ் இல் அதிவலது தீவிரவாதிகள் மக்களை வேட்டையாடியமை குறித்த ஊடக செய்திகள் சந்தேகத்திற்கிடமாக இருப்பதை நான் பகிர்ந்து கொள்கிறேன். அதுபோன்ற சம்பவங்கள் நடந்ததற்கான எந்த நம்பகமான தகவலும் இரகசிய சேவைக்குக் கிடைக்கவில்லை,” என்று மாஸன் Bild சஞ்சிகைக்கு தெரிவித்தார்.

இரண்டு ஆப்கான் அகதிகள் மீது வலதுசாரி தீவிரவாதிகள் நடத்திய ஒரு தாக்குதலை ஆவணப்படுத்தி, இணையத்தில் பகிரப்பட்ட மற்றும் தொலைக்காட்சிகளில் காட்டப்பட்ட ஒரு காணொளியைக் குறிப்பிட்டு மாஸன் கூறுகையில், “இந்த குற்றஞ்சாட்டப்படும் சம்பவம் குறித்து இணையத்தில் சுற்றி வரும் காணொளி உண்மையானது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை,” என்றார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “கெம்னிட்ஸ் படுகொலையிலிருந்து மக்களைத் திசைதிருப்புவதற்காக இது திட்டமிட்டு பரப்பப்படும் பொய் தகவல் என்று நம்புவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன என்பதே எனது எச்சரிக்கையான மதிப்பீடு,” என்றார்.

மாஸனின் கருத்துக்கள் ஒரு திட்டமிட்ட அரசியல் ஆத்திரமூட்டலாகும், இவை அரசு மற்றும் அரசு எந்திரத்தினுள் உள்ள மிகவும் வலதுசாரி சக்திகளைப் பலப்படுத்த நோக்கம் கொண்டுள்ளது. கிறிஸ்துவ சமூக ஒன்றியத்தின் (CSU) உள்துறை அமைச்சர் ஹோர்ஸ்ட் சீகோவர் வியாழனன்று, புலம்பெயர்ந்தவர்களே "அனைத்து பிரச்சினைக்கும் பிறப்பிடமாக" இருப்பதாக குறிப்பிட்டதுடன், மாஸன் மீது அவரின் "முழு நம்பிக்கையை" உடனடியாக வெளிப்படுத்தினார்.

முன்னதாக மாஸனை ஒரு "இலட்சிய உயரதிகாரியாக" புகழ்ந்திருந்த அதிவலது தீவிரவாத ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) கட்சி தலைவர் அலெக்சாண்டர் கௌலான்ட், “கெம்னிட்ஸில் வெளிநாட்டவர்கள் தொல்லைப்படுத்தப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை" என்பதை இரகசிய சேவை தலைவர் தெளிவுபடுத்தி இருப்பதாக தற்பெருமை பீற்றிக் கொண்டார்.

உண்மையில் கெம்னிட்ஸில் நடந்த அதிவலது வன்முறை காணொளிகளிலும் நேரில் பார்த்தவர்கள் கூறிய விபரங்களிலும் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. நிறுவனம்-சாரா பத்திரிகையாளர் ஜொஹானஸ் க்ரூனெர்ட் கூறுகையில், "திட்டமிட்டு பரப்பப்படும் பொய்தகவல்கள்" என்று மாஸன் குறிப்பிட்ட காணொளி காட்சிகளை அவர் நேரில் பார்த்ததாக Bild க்கு உறுதிப்படுத்தினார்.

ஒளிபரப்பு நிறுவனங்கள் ARD மற்றும் ZDF அக்காணொளியில் வலதுசாரி போராட்டக்காரர்களால் விரட்டப்பட்ட இரண்டு ஆப்கான் அகதிகளை நேர்காணல் செய்தது. அமைதி சீர்குலைப்பு, உடல்ரீதியில் காயப்படுத்தியமை, ஹிட்லர் வீரவணக்கம் செய்தமை (இது ஜேர்மனியில் சட்டவிரோதமானது) மற்றும் அதுபோன்ற அத்துமீறல்கள் குறித்து ட்ரெஸ்டன் மாநில பொது வழக்கறிஞர் அலுவலகத்திற்கு இப்போது 120 குற்ற புகார்கள் வந்துள்ளன.

இதற்கு எதிர்முரணாக, 35 வயதான கியூபன்-ஜேர்மன் டானியல் எச். என்பவர் கொல்லப்படுவதற்கு இட்டுச்சென்ற சூழல்கள் நவ-நாஜிக்களால் வன்முறைக்கான சாக்குபோக்காக பயன்படுத்துகின்றது, இச்சம்பவம் இன்னும் தெளிவின்றியே உள்ளது. “வெவ்வேறு தேசங்களைச் சேர்ந்த பலரும்" அந்த நகர விழாவின் போது நடந்த பிரச்சினையில் சம்பந்தப்பட்டிருந்தனர், அப்போது தான் டானியல் எச். தாக்கிக் கொல்லப்பட்டார் என்று போலிஸ் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

அதே நாள் இரவு 22 வயதான ஈராக்கியர் ஒருவருக்கும் 23 வயதான சிரியர் ஒருவருக்கும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த கைது பிடியாணை பின்னர் ட்ரெஸ்டன் சிறையதிகாரி ஒருவரால் வலதுசாரி தீவிரவாத சம்பவத்திற்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இவ்வார செவ்வாய்கிழமை, கெம்னிட்ஸ் மாவட்ட நீதிமன்றம் பின்னர் மற்றொரு ஈராக்கியருக்கு மூன்றாவது கைது பிடியாணையைப் பிறப்பித்தது. அந்த வழக்கு அம்மூவரையும் கொலைக்காக அல்ல, கூட்டு மனித படுகொலைக்காக விசாரித்து வருகிறது. மாஸன் "படுகொலை" குறித்து பேசும் போது இத்தகைய குற்றச்சாட்டு இருப்பதைக் குறித்து எதையும் குறிப்பிடாமல் பேசுவது, அதன் தீர்ப்பு ஒருபுறம் இருக்கட்டும், இது அந்த இரகசிய சேவை தலைவர் விரும்பக்கூடியதை விட கூடுதலான கேள்விகளை எழுப்புகிறது. அந்த கியூப-ஜேர்மன் நபரின் கொலை அதிவலதால் சாதகமாக்கப்பட்டு வருகின்ற வேளையில், அந்த இளைஞர் ஒரு புலம்பெயர்ந்த பின்புலத்துடன் அரசியல்ரீதியில் இடதைச் சேர்ந்தவர் என்கின்ற நிலையில், வலதுசாரி தீவிரவாதிகளோ அல்லது அரசு எந்திரத்தின் பகுதியினரோ அவர் கொலையில் சம்பந்தப்பட்டிருந்தனரா என்ற கேள்வி எழுகிறது.

சாக்சோனியில், பிற்போக்குத்தனமான அரசியல் நோக்கங்களைப் பின்தொடர்வதற்காக பாதுகாப்பு சேவைகள் வலதுசாரி தீவிரவாத வட்டாரங்களுடனான நெருக்கமான தொடர்புகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி உள்ளன. அனைத்திற்கும் மேலாக, அந்த நவ-நாஜி சம்பவத்தில் இரகசிய சேவையே ஆழமாக உள்ளிணைந்துள்ளதுடன், வலதுசாரி தீவிரவாத வன்முறை நடவடிக்கையில் உடந்தையாக இருந்துள்ளது.

ஒன்பது புலம்பெயர்ந்தோர் மற்றும் ஒரு பெண் போலிஸைக் கொன்ற நவ-நாஜி அமைப்பான தேசிய சோசலிஸ்ட் தலைமறைவு இயக்கம் (NSU), உளவுத்துறை சேவைகள் மற்றும் போலிஸ் உடன் இணைந்து செயல்படும் பல டஜன் கணக்கான நிழலுலக உளவாளிகளைக் கொண்டது. ஹெஸ்ஸ மாநில இரகசிய சேவையின் ஓர் அதிகாரியே கூட ஒரு படுகொலையில் போது அந்த குற்ற சம்பவ இடத்தில் இருந்தார். ஒரு நவ-நாஜி வலையமைப்பான துரிங்கிகர் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பில் (“Thüringer Heimatschutz”) இருந்து தான் NSU பலரை நியமித்திருந்தது என்பதுடன், அது BfV வழங்கிய நிதியிலிருந்து கட்டமைக்கப்பட்டது.

அரசியலமைப்பு பாதுகாப்புக்கான கூட்டாட்சி அலுவலகம் என்றழைக்கப்படும் ஜேர்மனியின் இரகசிய சேவையின் தலைவராக மாஸன் ஆகஸ்ட் 2012 இல் பொறுப்பேற்றதில் இருந்து, அவர் உள்நாட்டு உளவுபார்ப்பை தீவிர வலதை ஊக்குவிப்பதற்கான ஒரு கருவியாக ஆக்கியுள்ளார்.

இரகசிய சேவை மற்றும் AfD க்கும் இடையிலான நெருங்கிய கூட்டுறவை எடுத்துக்காட்டி சமீபத்திய வாரங்களில் எண்ணற்ற செய்திகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. 2015 இல், மாஸன் இரண்டு முறை முன்னாள் AfD தலைவர் ஃபிரவ்க்க பிட்ரியைச் சந்தித்தார். BfV கண்காணிப்பு பட்டியலில் இருந்து AfD எவ்வாறு தவிர்த்துக் கொள்ளலாம் என்று அவருக்கு ஆலோசனை வழங்குவதற்காக அந்த சந்திப்பு நடந்ததாக கூறப்பட்டது. பின்னர் மாஸன், AfD தலைவர் கௌலான்ட் மற்றும் AfD நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் பிராண்ட்னெர், ஜேர்மன் நாடாளுமன்றத்தின் சட்ட விவகார குழுவின் தலைவர் ஆகியோரையும் கூடுதலாக சந்தித்து பேசியுள்ளார்.

உள்துறை அமைச்சர் சீகோவரின் முன்னுரையுடன் ஜூலை இறுதியில் பிரசுரிக்கப்பட்ட இரகசிய சேவையின் தற்போதைய வருடாந்தர ஆண்டறிக்கை, AfD தலைமையகத்தில் தயாரிக்கப்பட்ட ஓர் ஆவணம் போன்றுள்ளது. அதில் AfD மற்றும் அதன் வலதுசாரி தீவிரவாத சுற்றுவட்டம் "இடதுசாரி தீவிரவாதிகள்" எனப்படுவதால் "பாதிக்கப்பட்டதாக" வெறுமனே குறிப்பிடப்படுகின்ற அதேவேளையில், ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei – SGP) “இடதுசாரி தீவிரவாத கட்சியாக" மற்றும் "கண்காணிப்பிற்குரிய விடயமாக" பெயரிடப்பட்டுள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சி (SGP) எந்த குற்றமும் செய்ததாக குற்றஞ்சாட்டப்படவில்லை; “இப்போதிருக்கும் முதலாளித்துவ அரசு மற்றும் சமூக ஒழுங்கமைப்பிற்கு எதிராக, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக, தேசியவாதம் என்று குற்றஞ்சாட்டப்படுவது (மூலப்பிரதியில் உள்ளவாறு), ஏகாதிபத்தியம் மற்றும் இராணுவவாதத்திற்கு எதிராக திருப்பி விடப்பட்டுள்ள" ஒரு சோசலிச வேலைத்திட்டத்தைப் பகிரங்கமாக அறிவுறுத்துவதே அதன் "குற்றமாக" உள்ளது.

இம்மாதம் கெம்னிட்ஸ் மற்றும் ஏனைய நகரங்களில் தீவிர வலதுக்கு எதிரான பாரிய போராட்டங்களில் பத்தாயிரக் கணக்கானவர்கள் பங்கெடுத்த நிலையில், மாஸன் மற்றும் சீகோவரும் அவர்களின் தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். அவர்கள், இராணுவவாதம், சமூக சிக்கன நடவடிக்கைகள், அதிகரிக்கப்படும் அரசு அதிகாரங்கள் மற்றும் அகதிகளுக்கு எதிரான பிரச்சாரத்திற்கும் எதிராக அதிகரித்து வரும் எதிர்ப்பை ஒடுக்குவதற்காக, தீவிர வலதைத் திட்டமிட்டு பலப்படுத்த விரும்புகிறார்கள். கிறிஸ்துவ ஜனநாயகவாதிகள் மற்றும் சமூக ஜனநாயகவாதிகளின் மகா கூட்டணியினதும் மற்றும் இரகசிய சேவையினதும் நிலைப்பாட்டின்படி, நவ-நாஜிக்கள் பிரச்சினையாக இல்லை, மாறாக அவர்களை எதிர்ப்பவர்கள் தான் பிரச்சினையாக இருக்கிறார்கள்.

இடது கட்சி மற்றும் பசுமைக் கட்சியின் அரசியல் தலைவர்கள் இந்த மகா கூட்டணியின் வலதுசாரி கொள்கைகளுடன் அணிசேர்ந்துள்ளனர். அவர்கள் இப்போது பாசாங்குத்தனமாக மாஸன் மீது விமர்சனங்களை வைத்து, அவர் இராஜினாமா செய்ய வேண்டுமென அழைப்பு விடுத்தாலும் கூட, சமீபத்திய ஆண்டுகளில் அவர்கள் அவருடன் நெருக்கமாக இணைந்து செயல்பட்டுள்ளனர். உள்துறை அமைச்சகத்தின் உத்தியோகபூர்வ தகவல்களின்படி, மாஸன் பதவியேற்றதில் இருந்து, அவர் நாடாளுமன்றத்தின் அனைத்து கட்சிகளது அரசியல்வாதிகளுடன் சுமார் 200 விவாதங்கள் நடத்தி உள்ளார். மார்ச் 2013 இல் இடது கட்சி மாஸன் மற்றும் இரகசிய சேவையுடன் நெருங்கி இருப்பவர்களை ஒரு பகிரங்க விவாத கூட்டத்திற்கு அழைத்திருந்தது. அப்போதிருந்து, அது அனைத்து முக்கிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விவகாரங்களிலும் மகா கூட்டணியின் கொள்கைகளை ஆதரித்துள்ளது.

ஜேர்மனியில் தீவிர வலதின் மீளெழுச்சியை எதிர்க்க தகைமை கொண்ட ஒரே சமூக சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே ஆகும். ஆகவே இந்த வலதுசாரி பயங்கரவாதத்திற்கு எதிரான, ஒரு போலிஸ் அரசு மற்றும் இராணுவ மீள்ஆயுதமயமாக்கலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை விரிவாக்குவதற்கு SGP அழைப்பு விடுக்கிறது. SGP இன் கோரிக்கைகள் இவை:

• மகா கூட்டணி, அரசு எந்திரம் மற்றும் அதிவலது தீவிரவாதிகளின் சூழ்ச்சியை நிறுத்து!

• இனியும் போர் வேண்டாம்! ஜேர்மன் மீண்டும் இராணுவவாத வல்லரசு அரசியலுக்குத் திரும்புவதை நிறுத்து!

• இரகசிய சேவையைக் கலைத்து விட்டு, ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (SGP) மற்றும் பிற இடதுசாரி அமைப்புகளைக் கண்காணிப்பதை உடனடியாக நிறுத்து!

• தஞ்சம் கோரும் உரிமையைப் பாதுகாக்க வேண்டும்! அரசு அதிகாரங்கள் மற்றும் கண்காணிப்பை அதிகரிக்காதே!

• சமூக சமத்துவத்திற்காக—வறுமை மற்றும் சுரண்டல் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்! நிதியியல் செல்வந்த தட்டுக்கள், வங்கிகள் மற்றும் பிரதான பெருநிறுவனங்களின் செல்வவளங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்!

SGP மற்றும் அதன் இளைஞர்-மாணவர் அமைப்பான IYSSE இன் உறுப்பினர்கள் ஜேர்மனி எங்கிலுமான போராட்டங்களில் பரவலாக வினியோகித்து வருகின்ற, "ஜேர்மனியில் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு சோசலிச முன்னோக்கு அவசியப்படுகிறது,” என்ற SGP அறிக்கையை ஆங்கிலத்தில் இங்கே அணுகலாம், ஜேர்மன் மொழியில் துண்டறிக்கையாக இங்கே பதிவிறக்கம் செய்யலாம்.