ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Imperialist conflicts dominate Munich Security Conference

ஏகாதிபத்திய மோதல்கள் மூனிச் பாதுகாப்பு மாநாட்டில் ஆதிக்கம் செலுத்துகின்றன

Peter Schwarz
18 February 2019

நேற்று முடிவடைந்த மூனிச் பாதுகாப்பு மாநாடு, ஒரு முதலாளித்துவ உலக ஒழுங்கை விரைவாக உடைத்து, பேரழிவை நோக்கி செல்வதை வெளிப்படையாக காட்டியது.

மாநாட்டின் குறிக்கோள் என ஒழுங்கமைப்பாளர்கள் ஒரு துண்டு துண்டாக்கப்பட்ட புதிர் படத்தை தேர்ந்தெடுத்து யார் துண்டுகளை ஒன்று சேர்ப்பீர்கள் என கேள்வி எழுப்பினர். அந்த புதிர் துண்டுகள் மீதான போராட்டம் என்பது, இருபதாம் நூற்றாண்டின் இரண்டு உலகப் போர்களை விட வன்முறையானதும் இரத்தக்களரியானதும் என்பதற்கு குறைவானதாக இருக்காது என்பதை கூட்டத்தின் போக்கே தெளிவுபடுத்தியது. மாநாட்டில் கலந்து கொண்டவர்களும் ஊடகங்களும் இதை மறைக்க சிறு முயற்சி கூடச் செய்யவில்லை.

கிறிஸ்தவ சமூக ஒன்றியத்தின் (CSU) பொதுச் செயலாளர் மார்கூஸ் ப்ளூம், Frankfurter Allgemeine Zeitung பத்திரிகையில், முப்பது ஆண்டுகளுக்கு முன்னரான பனிப்போரின் முடிவை நினைவு கூர்ந்தார், "பலர் நிரந்தர ஸ்திரத்துடனான ஒரு புதிய சகாப்தத்தை எதிர்பார்த்தனர்" என்றும் பிரான்சிஸ் புக்குயாமா "வரலாற்றின் முடிவு" பற்றியும் பேசினார். "இன்று, 2019 இல், அது வேறொரு சகாப்தத்தின் அறிக்கையைப் போல் ஒலிக்கிறது" என்று ப்ளூம் முடித்தார். "முன்பு எப்போதும் அறிந்திராத அளவிலான விரைவான மற்றும் தீவிரமான முன்னொருபோதுமில்லாத மாற்றங்களை நாம் அனுபவித்து வருகிறோம்." எங்கள் உலக ஒழுங்கமைப்பு "இந்த அடிப்படை மாற்றங்களுக்கு தயாராக இல்லை."

Süddeutsche Zeitung "அது பிரச்சினைகளை சரியாக பகுப்பாய்வு செய்யக்கூடிய நேரங்களின் அறிகுறியாகும், ஆனால் அவர்களது தீர்வுக்கான எந்த அறிவார்ந்த சூத்திரமும் இல்லாதுள்ளது. இந்த அமைப்பின் எச்சங்களின் மீது கீழே இறங்க கழுகுகள் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன என்று கருத்து தெரிவித்தார்.

ரஷ்யாவுடன் நேட்டோவின் மோதல் மற்றும் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையேயான வர்த்தக யுத்தத்தை தவிர, நேட்டோவிற்குள்ளான மோதல்கள் பல நூற்றுக்கணக்கான தலைவர்கள், அமைச்சர்கள், இராணுவ நிபுணர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கலந்து கொண்ட மூன்று நாள் கூட்டத்தை ஆதிக்கம் செலுத்தியது. அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தலையீடானது அமெரிக்காவுக்கும் ஜேர்மனிக்கும் மற்றும் பிற ஐரோப்பிய சக்திகளுக்கும் இடையேயான கூர்மையான வேறுபாடுகளை வெளிப்படுத்தியது.

வார்சோவிலிருந்து பென்ஸ் நேரடியாக இங்கு வந்தார், அங்கு அவர் ஈரானுக்கு எதிராக போரிடுவதற்கு இஸ்ரேல், போலந்து மற்றும் பல அரபு நாடுகளுடன் ஒரு போலி கூட்டணியை உருவாக்கியிருந்தார். வார்சோவில், அமெரிக்காவின் ஐரோப்பிய நட்பு நாடுகளை "எங்கள் பக்கம் நிற்க வேண்டும்" என்று கட்டளையிட்டதுடன், அவர்கள் மறுத்தால் நேட்டோ கூட்டணி பிளவுபடுவதுபற்றி மறைமுகமாக அச்சுறுத்தினார். "இந்த உன்னதமான காரணத்துக்கு நீங்கள் எங்களுடன் நின்றால், நாங்கள் உங்களுடன் நிற்போம்," என்று அவர் அறிவித்தார்.

முனிச்சில் அதே திமிரான கட்டளையிடும் தொனியில் பென்ஸ் பேசினார். ஈரான் புதிய பேரழிவைத் திட்டமிட்டு இஸ்ரேலை அழிக்க முயல்கிறது என்று அவர் குற்றம் சாட்டினார். அமெரிக்கா தெஹ்ரானில் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகி வருவதாகவும், ஐரோப்பா தனது அணுசக்தி ஒப்பந்தத்தை ஈரானுடன் முறித்துக் கொண்டு அதற்கு பதிலாக அமெரிக்காவின் ஒப்பந்தத்தை ஆதரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பென்ஸ் மேலும் நோட் ஸ்ட்ரீம் 2 (Nord Stream 2) குழாய்த்திட்டத்தை வன்மையாக தாக்கினார், இது ஏற்கனவே கட்டுமானத்தில் உள்ளதுடன் இது நேரடியாக ஜேர்மனியை பால்டிக் கடல் வழியாக ரஷ்யாவுடன் இணைக்கிறது. "நம்முடைய நட்பு நாடுகள் அதிகளவில் கிழக்கில் தங்கியிருந்தால் மேற்கின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது," என்று அவர் அச்சுறுத்தினார்.

முனிச் மாநாட்டின்போது Handelsblatt பத்திரிகை, அரசாங்க வட்டாரங்களை மேற்கோளிட்டு ட்ரம்ப் நிர்வாகம், ஜேர்மனியின் ஏற்றுமதித் துறைக்கு கடுமையான தாக்கங்களைக் கொண்ட வர்த்தக யுத்தத்தின் ஒரு புதிய கட்டமாக, ஜேர்மன் கார் இறக்குமதியை அமெரிக்க தேசிய பாதுகாப்பிற்கு ஒரு அச்சுறுத்தல் எனவும் சுங்க வரி விதிக்கவும் திட்டமிட்டுள்ளது என்று அறிவித்தது.

ஐரோப்பிய நேட்டோ உறுப்பினர்கள் தங்கள் இராணுவ செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பென்ஸ் மீண்டும் வலியுறுத்தினார். 2024 ஆம் ஆண்டில் இந்த இலக்கை எப்படி அடையலாம் என "நம்பகமான திட்டங்களை" கோருவதற்கு அவர் இறுதி எச்சரிக்கை ஒன்றையும் வெளியிட்டார். அவரது உரைக்குப் பின்னர், முனிச்சில் வழமைக்கு மாறாக, கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அல்லது மாநாட்டின் மற்றைய பங்கேற்பாளர்களின் உரைகளை கேட்காமல் அமெரிக்க உதவி ஜனாதிபதி மேடையில் இருந்து சென்றுவிட்டார்.

ஜேர்மனி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் சீற்றம் அடைந்தனர். செய்திகளில் “வழமைக்கு மாறான உணர்ச்சிபூர்வமான உரை” எனக்குறிப்பிடப்பட்ட உரையை மேர்க்கெல் வழங்கினார், அவ்வுரை ஒரு பாரிய எழுந்துநின்ற கைதட்டலை பெற்றது. அமெரிக்கத் தூதுக்குழுவின் குற்றச்சாட்டுகளை அவர் எதிர்த்ததோடு ஒரு பன்முகக் கொள்கைக்கு முறையிட்டார். "மற்றவர்களின் கோணத்தில் இருந்து சூழ்நிலையைப் பார்க்க முயற்சி செய்து, பொதுவான எல்லோருக்குமான வெற்றிக்கு தீர்வுகளை அடைந்து கொள்ள முடியுமா என்று பார்த்துக் கொள்வது" ஒவ்வொருவரும் தத்தமது பிரச்சனைகளை தீர்ப்பதை விடச்சிறந்ததாக இருக்கும் என்று அவர் நம்பினார்.

பன்முகத்தன்மைக்கான மேர்க்கெலின் அழைப்பு, ஜேர்மனியும் ஐரோப்பாவும் தங்கள் பொருளாதார மற்றும் பூகோள மூலோபாய நலன்களை இரக்கமின்றி தொடரும் என்ற உண்மையை மறைக்க முடியவில்லை. ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் ஊர்சுலா வொன் டெர் லெயன், தனது ஆரம்ப உரையில், "வல்லரசுகளுக்கு இடையிலான போட்டிக்கு திரும்புவது" என்பது "நாட்டின் புதிய பாதுகாப்பின் மிக முக்கிய அம்சம்" என்றார். "நாங்கள் விரும்பினாலும் இல்லாவிட்டாலும், ஜேர்மனியும் ஐரோப்பாவும் இந்த போட்டிப் போராட்டத்தின் பாகமாக உள்ளன. நாங்கள் நடுநிலையாக இல்லை" என்று அவர் கூறினார்.

வொன் டெர் லெயனைப் போலவே, மேர்க்கெல் தன்னுடைய உரையின் பெரும்பாலான பகுதிகளில் ஜேர்மனியும் ஐரோப்பிய ஒன்றியமும் ஏற்கனவே செய்து வந்தவற்றையும், ஒரு புதிய சுற்று இராணுவ மோதல்களுக்கு தயாராவதற்கு இன்னும் என்ன செய்ய வேண்டும் என்பவற்றையும் பட்டியலிட்டனர்.

நேட்டோவின் இரண்டு சதவிகித இராணுவ செலவின அதிகரிப்பு இலக்கை வெளிப்படையாக ஏற்றுக் கொண்டதுடன் ஆப்கானிஸ்தான் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் அமெரிக்காவுடன் சேர்ந்து ஜேர்மன் இராணுவ நடவடிக்கைகளை மேர்க்கெல் பாராட்டினார். நேட்டோவிற்கு வெளியேயும், குறிப்பாக மாலி மற்றும் பிற ஆபிரிக்க நாடுகளில் ஜேர்மனியும் இப்போது தீவிரமாக செயல்பட்டு வருவதைப் பற்றி அவர் அழுத்திக் கூறினார். அவர் ஒரு ஐரோப்பிய இராணுவம் மற்றும் பொதுவான ஆயுதக் கொள்கையை மட்டுமல்லாமல், ஒரு பொதுவான ஐரோப்பிய ஆயுத ஏற்றுமதிக் கொள்கைக்கும் வழிமொழிந்தார். இது ஏற்கனவே ஆயுதங்கள் மீது இருக்கும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது ஆகும்.

சமூக ஜனநாயக ஜேர்மனிய வெளியுறவு அமைச்சர் ஹைய்கோ மாஸ் (Heiko Maas), உலக அதிகாரத்திற்கான ஜேர்மன்-ஐரோப்பிய உந்துதலுக்கான சூத்திரத்தை சுருக்கிக் கூறினார்: "உலக அரசியலின் நபர் அல்லது பொருள் — இது ஐரோப்பா எதிர்கொள்ளும் எதிர்காலத்தின் முக்கிய பிரச்சினையாகும்." "ஐரோப்பாவின் சுய கருத்தை வற்புறுத்தலுக்கான விருப்பமே இந்த மாநாட்டின் கருப்பொருள் என்று ஒரு செய்தித்தாள் கருத்து தெரிவித்தது.

சில மாநாட்டின் பங்கேற்பாளர்கள் தனியாளாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை அட்லான்டிக் இடையிலான கடும் அழுத்தங்களுக்கு குற்றம் சாட்டினர். மற்றவர்கள் அடிப்படை காரணங்கள் பற்றி பேசினர். ஜேர்மன் பாராளுமன்ற வெளியுறவுக் குழுவின் தலைவரான நோர்பேர்ட் றொட்கன், ட்ரம்ப் இதற்கு காரணம் இல்லை என்று அறிவித்தார், மாறாக பூகோளஅரசியலில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றங்களின் ஒரு அறிகுறியாகும், இது பெரும் வல்லரசுகளுக்கிடையிலான போட்டியையும், பன்முகத்தன்மையையும் சிதறடிக்கும் மையவிலக்கு சக்திகளுக்கு திரும்ப வழிவகுக்கும். "ட்ரம்பிற்கு பிந்தைய சகாப்தத்தில், ட்ரம்புக்கு முந்திய சகாப்தத்திற்கு திரும்ப முடியாது" என்று றொட்கன் கூறினார். "ஐரோப்பாவின் பாதுகாப்பு அமெரிக்காவால் உத்தரவாதமளிக்கப்பட்டது என்று இதுவரை அந்த நிலைப்பாடு இருந்தது. அது மீண்டும் நடக்கப்போவதில்லை.

இரண்டு உலகப் போர்களில் ஒன்றுக்கு எதிராக இன்னொன்று போரிட்ட, அமெரிக்காவிற்கும் ஜேர்மனிக்கும் இடையேயான கூர்மையான மோதல்களின் வெடிப்பு, இது ஐரோப்பிய சக்திகளுக்கு இடையியான கடுமையான மோதல்களுடன் இணைந்துள்ளது. பிரான்சிற்கும் இத்தாலிக்கும் இடையிலான உறவு ஒரு புதிய இறுகிய மட்டத்தை அடைந்துள்ளதுடன் ஜேர்மனி மற்றும் பிரான்சுக்கு இடையே உறவுகள் மேலும் குறிப்பிடத்தக்களவு உறைநிலையை அடைந்துள்ளன.

சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் ஸ்ராலினிச ஆட்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்திய உலகப் பொருளாதாரத்திற்கும் தேசிய அரசு அமைப்பு முறைக்கும் இடையேயான முரண்பாடுகள், பிரதான முதலாளித்துவ சக்திகளுக்கு இடையே புதிய மோதல்களுக்கும் வர்க்கப் போராட்டத்தின் மீள்எழுச்சிக்கும் வழிவகுக்கும் என 1980 களின் பிற்பகுதியில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) முன்னறிவித்திருந்த முன்னோக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

சோவியத் ஒன்றியத்தின் கலைப்புடன் உலக சோசலிசப் புரட்சியின் சகாப்தம் முடிவுற்றது என முதலாளித்துவத்தின் பாதுகாவலர்களும் அவர்களுடைய போலி-இடது ஆதரவாளர்களும் வாதிட்டபோது, 20ம் நூற்றாண்டு முடிவுறவில்லை என அனைத்துலக் குழு தொடர்ந்து பேணி வந்தது.

இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மனிதகுலம் எதிர்கொள்ளும் மத்திய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் முரண்பாடுகள் பிரதானமாக இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எதிர்கொண்டவை போலவே உள்ளதாக "உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் அமெரிக்காவின் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியத் தலைவருமான டேவிட் நோர்த், ரஷ்ய புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும் என்ற நூலின் முன்னுரையில் "இந்த நூற்றாண்டின் போராட்டங்களுக்கு அடித்தளமாக இருந்த பாரிய சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகளுக்கான எந்தவொரு தீர்வும் எட்டப்படவில்லை" என்று எழுதியுள்ளார்.

நேட்டோ "பங்காளிகளுக்கு" இடையேயான கூர்மையான மோதல்களின் வெளிப்பாடானது, இந்த மதிப்பீட்டை உறுதிப்படுத்துகிறது. அதே நேரத்தில் தொழிலாள வர்க்கம் ஏகாதிபத்திய போர்வெறியர்களை சவால் செய்யவில்லை என்றால் மூன்றாவது, அணு ஆயுதப் போர் அச்சுறுத்தல் ஒரு கூர்மையான எச்சரிக்கையாக உள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஆசிரியர்கள், மெக்சிகோவில் உள்ள கார் தொழிலாளர்கள் மற்றும் இலங்கையில் தோட்டத் தொழிலாளர்கள் உட்பட உலகம் முழுவதும், தொழிலாள வர்க்கம் சமூகப் போராட்டங்களின் அலைக்குள் நுழைந்துள்ளது. வர்க்கப் போராட்டத்தின் இந்த எழுச்சிக்கு பதிலளிக்கும் வகையில் ஆளும் உயரடுக்குகள், பொலிஸ்-அரசு ஆட்சியில் தங்கியிருப்பது மற்றும் தேசியவாதத்தையும்  இராணுவவாதத்தையும் முன்னெடுப்பதன் ஊடாக செயல்படுகின்றன.

அதே நேரத்தில் வர்க்கப் போராட்டம் தீவிரப்படுத்தப்படுவது ஒரு புதிய போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டமைப்பதற்கான புறநிலை நிலைமைகளை உருவாக்குகிறது. 2016 ல் அதன் "சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும்" என்ற அறிக்கையில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு விளக்கியதைப் போல, இந்த இயக்கமானது தொழிலாள வர்க்கத்தை அடித்தளமாக கொண்டிருக்க வேண்டும்.  இதுதான் மக்களின் அனைத்து முற்போக்கான பிரிவுகளையும் ஒன்றிணைக்கும் திறன் கொண்ட உண்மையான புரட்சிகர சமூக சக்தியாகும். இந்த "புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது, முதலாளித்துவ எதிர்ப்புத்தனமானதாகவும் சோசலிசத்தன்மை உடையதாகவும் இருந்தாக வேண்டும், ஏனென்றால் நிதி மூலதனத்தின் சர்வாதிகாரத்திற்கும், இராணுவவாதம் மற்றும் போருக்கு அடிப்படையான காரணமாக இருக்கின்ற பொருளாதார அமைப்புமுறைக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கான போராட்டத்தின் வழியாக அல்லாமல் போருக்கு எதிரான எந்த பொறுப்புணர்ச்சி வாய்ந்த போராட்டமும் இருக்க முடியாது".

எனவே, “புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது, அத்தியாவசியமான வகையில், முதலாளித்துவ வர்க்கத்தின் அத்தனை அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்தும் முழுமையாகவும் குழப்பத்திற்கிடமின்றியும் சுயாதீனமானதாகவும், குரோதமானதாகவும் இருந்தாக வேண்டும்”. எல்லாவற்றுக்கும் மேலாக, “புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது சர்வதேசமயமானதாக, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு ஒன்றுபட்ட உலகளாவிய போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் பரந்த சக்தியை அணிதிரட்டக்கூடியதாக இருந்தாக வேண்டும்”.