ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

ලේඛක සත්කුමාර නිදහස් කරන ලෙස සසප හා සසජාතශි කොලඹ පිකට් උද්ඝෝෂනයක් පවත්වති

இலங்கை எழுத்தாளர் சாகுமாராவை விடுவிக்க கோரி சோ.ச.க. மற்றும் IYSSE கொழும்பில் மறியல் போராட்டம் நடத்தின

By our reporters
19 June 2019

முகநூலில் ஒரு சிறுகதையை வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள எழுத்தாளர் சக்திக சத்குமாராவை விடுவிக்கக் கோரி சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க) மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பும் ஜூன் 17 அன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக மறியல் போராட்டம் ஒன்றை நடத்தின.


சோ.ச.க. பிரச்சாரம்

ஏப்ரல் 1 அன்று, பொல்கஹவெல பொலிசார் சத்குமாராவைக் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தினர். அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட “அர்த” என்ற சிறுகதையில், பௌத்த மத்திற்கு “அவமரியாதையும் அவமதிப்பும்” ஏற்படுத்தியுள்ளதாக கூறி, பொல்கஹவெல (பௌத்த) சாசன காப்பு சபையின் மான்கடவல சுமன என்ற பிக்கு முறைப்பாடு செய்திருந்தார்.

அடக்குமுறை இயக்கத்தைத் தூண்டிவிட்டு, மேற்குறிப்பிட்ட அமைப்பும் ’பௌத்தத்தை பாதுகாக்கும் இளைஞர் முன்னணி’ என்ற பெயரிலான ஒரு பௌத்த கும்பலும், மார்ச் 3 அன்று இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகத் தலைவர்களுக்கு அனுப்பிய அறிக்கையில், “பௌத்தத்தை அழிக்கும் சூழ்ச்சியான எழுத்துக் கலையில் ஈடுபட்டுள்ள” சத்குமார போன்ற "குழம்பிப்போன நபர்களின்" படைப்புகள் மீது ஊடக தணிக்கை ஒன்றை விதிக்குமாறு ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்தன.

பொலிசார் பௌத்த தீவிரவாத கும்பல்களின் கோரிக்கைகளுக்கு அடிபணிந்து, ஐ.நா. சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையின் (ஐ.சி.சி.பி.ஆர்) அடிப்படையில் இலங்கையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் விதிகளின் கீழேயே சத்குமாராவை கைது செய்துள்ளனர். இது சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் குறித்த வரையறுக்கப்பட்ட விதிகளை உள்ளடக்கியிருந்தாலும், பிற்போக்குவாதிகளுக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க ஆயுதமாக இருந்து வருகிறது.

சத்குமாராவின் விடுதலைக்காக, அவர் கைது செய்யப்பட்ட ஏப்ரல் மாதம் முதலே உலக சோசலிச வலைத் தளத்தின் ஊடாக சோ.ச.க. முன்னெடுத்து வரும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகவே சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. இந்த மறியல் போராட்டத்தை நடத்தியிருந்தது. சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. அறிக்கைகளுக்கு பிரதிபலிக்கும் வகையில், சத்குமாராவை விடுவிக்கக் கோரி பல கலைஞர்களும் எழுத்தாளர்களும் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். (இலங்கை: எழுத்தாளர் சக்திக சத்குமாரவை விடுதலை செய்வதற்கான சோ..க போராட்டதிற்கு கலைஞர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர்)

சோ.ச.க. பிரச்சாரத்தில் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் கலைஞர்கள் உட்பட சுமார் 100 பேர் வரை பங்கேற்றனர். போராட்டக்காரர்கள், “எழுத்தாளர் சக்திக சத்குமாராவை உடனடியாக விடுதலை செய்!” “கலை சுதந்திரத்தில் கைவைக்காதே!” “பேச்சு சுதந்திரத்தில் கை வைக்காதே!” “ஜனநாயக, சமூக உரிமைகளை அழிக்கின்ற, அணு ஆயுத போரைத் தூண்டும், முதலாளித்துவத்தை தோற்கடிப்போம்!, ஜூலியன் அசான்ஜை விடுதலை செய்! போன்ற சுலோகங்களை உற்சாகமாக கோஷத்தனர்.

இதன் போது உலக சோசலிச வலைத் தளத்தில் ஏப்பிரல் 13 வெளியான “இலங்கை எழுத்தாளர் பௌத்த தீவிரவாதிகளின் தூண்டுதலால் சிறை வைக்கப்பட்டுள்ளார்” என்ற அறிக்கை, மற்றும் “கொழும்பின் பொலிஸ்-அரசு தயாரிப்புக்களை தோற்கடிக்க இலங்கை தொழிலாளர்களுக்கு ஒரு சோசலிச வேலைத்திட்டம் தேவை” என்ற சோ.ச.க.வின் அறிக்கையினதும் நூற்றுக்கணக்கான பிரதிகள் வழிப்போக்கர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் விநியோகிக்கப்பட்டன.

இந்த போராட்டத்தை பல ஊடகங்கள் செய்தியாக்க வந்திருந்தன, டெய்லி மிரர் பத்திரிகையின் இணைய பதிப்பு அதே நாளில் செய்தி வெளியிட்டது. ஐ.டி.என், சிரச, ஸ்வர்ணவாஹினி, சியத, ரன்கிரி ஆகிய தொலைக் காட்சி சேவைகளும் இதில் அடங்கும். ஆர்ப்பாட்டத்தின் பின்னர் சுமார் 30 நிமிடங்கள் நடந்த கூட்டத்தில் பேசிய வழக்கறிஞர் சன்ஜய வில்சன், சத்குமார மீது பௌத்த ஸ்தாபனம் முன்னெடுத்துள்ள தாக்குதலின் தோற்றுவாய் குறித்து விளக்கினார்.

 


சன்ஜய வில்சன்

குறிப்பாக இலங்கையின் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த கொழும்பு அரசாங்கங்கள் நடத்திய கிட்டத்தட்ட 30 ஆண்டுகால வகுப்புவாதப் போரின்போது, ​​ஆளும் வர்க்கம் அதன் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள பௌத்த ஸ்தாபகத்தை வளர்த்து விட்ட விதத்தை அவர் விவரித்தார். அதிலிருந்து தோன்றிய தீவிரவாத அமைப்புகள் இப்போது ஜனநாயக உரிமைகளைத் தாக்கப் பயன்படுத்தப்படுகின்றன. உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள், குறிப்பாக 2008 இல் ஏற்பட்ட உலகளாவிய நிதி நெருக்கடியின் பின்னர் முன்னெடுக்கப்பட்ட சமூக எதிர்ப் புரட்சியின் பாகமாக, கலை மற்றும் ஊடக சுதந்திரம் மீது முன்னெடுக்கப்படும் தாக்குதல், இலங்கையிலும் கட்டவிழ்த்து விடப்பட்டு சத்குமார வேட்டையாடப்பட்டுள்ளார்” என்று வில்சன் கூறினார்.

சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் பாணி விஜேசிறிவர்தன உரையாற்றுகையில், அதிதீவிரவாத பௌத்த கும்பல் செய்த போலி முறைப்பாட்டின் அடிப்படையில் சத்குமாராவை கைது செய்த குற்றத்திற்கு ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளும் ஊடக ஸ்தாபகத்தின் பிரிவுகளும் பங்குகொண்டுள்ளன என்று தெரிவித்தார். "இலங்கை ஆளும் வர்க்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, சிங்கள-பௌத்த இனவாதத்தை மீண்டும் மீண்டும் தூண்டுவதன் மூலம் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்த செயற்பட்டுள்ளன," என்று அவர் கூறினார். 1972 இல் சிங்களத்தை அரச மொழியாக ஆக்கியதற்கு மேலாக, பௌத்தத்தை அரச மதமாக ஸ்தாபித்து, 1983இல் இனவாத போரைத் தொடங்கியதிலிருந்து, ஒவ்வொரு துறையிலும் பௌத்த ஸ்தாபனம் தலையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதை அவர் விவரித்தார்.


பாணி விஜேசிரிவர்தன

ஆழமடைந்து வரும் முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியின் சுமையை தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது சுமத்தும் நோக்கத்துடன், உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் அனைத்து ஜனநாயக உரிமைகளையும் நசுக்குகின்றன என்று விஜேசிறிவர்தன குறிப்பிட்டார். அமெரிக்கா, பிரான்ஸ், இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலகெங்கிலும் வர்க்கப் போராட்டங்கள் மீண்டும் தலை தூக்கும் நிலைமையின் மத்தியிலேயே இந்த தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இந்த தாக்குதல்களின் பிரதான நோக்கம், இவ்வாறு வளர்ந்து வரும் வர்க்கப் போராட்டங்களை நசுக்குவதே ஆகும்.”

சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம், ஏப்ரல் 21 அன்று நடந்தபயங்கரவாத தாக்குதல்களை முன்கூட்டியே தெரிந்துகொண்டு, வளர்ந்து வரும் தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை ஒடுக்குவதை இலக்காகக் கொண்டு, அந்த தாக்குதலை அனுமதிப்பதன் மூலம் ஒரு கடுமையான ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. அந்த தாக்குதலுக்குப் பின்னர் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள முஸ்லிம்-விரோத பேரினவாத தாக்குதல்களுக்கும் தலைமை கொடுப்பது ஆளும் வர்க்கமும் பௌத்த ஸ்தாபகமுமே ஆகும்.

போலி இடதுகளும் இந்த தாக்குதலின் பக்கமே நிற்கின்றனர். தற்போது உலகின் முன்னணி அரசியல் கைதியான விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஜ் பற்றியும் குறிப்பிட்ட விஜேசிரிவர்தன, அசான்ஜ் குறித்து எந்தவொரு கட்சி அல்லது குழுவும் எடுக்கும் நிலைப்பாடு, அவர்களது வர்க்க உறவுகளை வெளிப்படுத்தும் என்று கூறினார். அசான்ஜ் போன்றே சத்குமாராவைப் பொறுத்தவரையிலும், போலி-இடதுகள் மௌனம் காக்கின்றனர். போலி இடதுகளால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் உயர் மத்தியதர வர்க்கம், ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவத்துடன் உறுதியாக பிணைந்திருப்பதே இதற்குக் காரணமாகும்.

“பேச்சு சுதந்திரத்தைக் காப்பதற்கான போராட்டம், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாகும். அந்த உரிமைகளுக்கான போராட்டம் சோசலிசத்திற்கான போராட்டத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் இளைஞர் அமைப்புமே முன்வைக்கின்றன,” எனக் கூறிய விஜேசிறிவர்தன, தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளை இந்தப் போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு வலியுறுத்தினார்.

ஐ.வை.எஸ்.எஸ்.இ. அழைப்பாளர் கபிலா பெர்னாண்டோ, அமெரிக்க ஏகாதிபத்தியம் சர்வதேச சட்டத்தை முற்றிலும் மீறியே செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். அமெரிக்கா, ஈரானுடனான போர் அச்சுறுத்தல் விடுத்தும் சீனாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளுக்கு அச்சுறுத்தியும் ஒரு போருக்குத் தயாராகி வருகின்றது. ஏகாதிபத்தியவாதிகள் மேற்கொண்ட பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என அழைக்கப்படுவதில் மில்லியன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.


கபிலா பெர்னாண்டோ

"இலங்கையிலும், அதிதீவிரவாத பௌத்த கும்பல்களை வளர்க்கப்பட்ட ஆளும் வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளும், ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்களுக்கு பொறுப்பாளிகள் ஆவர். சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் முதலாளித்துவ ஸ்தாபனம், ஏகாதிபத்தியத்தின் குற்றங்களுக்கு உடந்தையாக இருப்பதே அதற்கு காரணமாகும்.” சிறந்த வேலை நிலைமைகளைக் கோரிப் போராடிய இந்தியாவில் 13 மாருதி-சுசுகி தொழிலாளர்களை வேட்டையாடி மரண தண்டனை விதித்திருப்பதிலும், ஆளும் வர்க்கங்கள் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக எவ்வளவு தூரமும் செல்லத் தயாராக உள்ளன என்பது தெளிவாகின்றது.

கலை சுதந்திரம் சம்பந்தமாக எடுத்துக்கொண்டால், நிகழ்காலத்தில் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் கலையைக் கற்கும் வழிவகைகள் அபகரிக்கப்பட்டிருப்பதாக பெர்னாண்டோ தெரிவித்தார். பாடசாலை முறையிலிருந்து அடிப்படைக் கல்விக் கல்வியை படிப்படியாக அழித்து வரும் முதலாளித்துவ ஆளும் வர்க்கம், பாடசாலைகளை மூடி வருகின்றது. இதற்கு எதிரான போராட்டங்களை தனிமைப்படுத்தவும் திசைதிருப்பவும் போலி-இடதுகளும் முதலாளித்துவ கல்வியாளர்களும் செயல்பட்டு வருகின்றனர்.

ஜூலியன் அசான்ஜ் மற்றும் சத்குமாராவைப் பாதுகாப்பதற்கான ஒரே வழியான, முதலாளித்துவத்தை தூக்கி வீசுவதற்கான போராட்டத்திற்கு தலைமை கொடுக்கக் கூடிய ஒரே சமூக சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கமாகும். தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்பி, சோசலிசத்திற்கான போராட்டத்தில் சேருமாறும், உலக சோசலிச வலைத் தளத்தை தவறாமல் படிக்குமாறும் பெர்னாண்டோ வலியுறுத்தினார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட சக்திக சத்குமாராவின் மனைவி யனூஷா லக்மாலி பின்வருமாறு கூறினார்: “இன்றுடன் என் கணவர் 78 நாட்களாக சிறையில் இருக்கிறார். ஒரு பெண் எழுத்தாளர் மற்றும் அரசு ஊழியர் என்ற முறையில் நான் அதிர்ச்சியில் இருக்கிறேன். ஏனென்றால், கலைப் படைப்பாளி ஒருவர் பயங்கரவாத குற்றச்சாட்டில் எவ்வாறு சிறையில் அடைக்கப்படுவார் என்ற கேள்வி எனக்கு உள்ளது. நான் வேலைக்குச் செல்லும் போது மிகவும் சங்கடமாக இருக்கின்றது. மற்ற எல்லோரும் என்னை ஒரு மோசமான குற்றவாளி போல் பார்க்கிறார்கள். ஆனால் இன்று இங்கு ஏராளமானோர் கூடியிருக்கின்றனர், நானும் எனது கணவரும் தனியாக இல்லை என்று நினைக்கிறேன்.”


யனுஷா லக்மாலி

சோ.ச.க.இன் மறியல் போராட்டம் நடந்த நேரத்தில், "கருத்து சுதந்திரத்திற்கான கூட்டு" என்று அழைக்கப்படும் ஒரு அமைப்பு சாகுமாராவை விடுவிக்க கோரி தனியாக கோஷங்களை முழங்கி பிரச்சாரம் செய்தது. இதில் போலி குழுக்களின் கலைஞர்கள் மற்றும் பிரிவினர் கலந்து கொண்டனர்.


கருத்து சுதந்திரத்திற்கான கூட்டு

எமது பிரச்சாரத்திற்கு மாறாக, அவர்களின் கோஷங்களில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து சாகுமாராவை விடுவிக்குமாறு அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுக்கும் கோஷங்களே அடங்கியிருந்தன. சோ.ச.க. பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ​​அந்த அமைப்பின் மறியல் போராட்டம் விரைவில் முடிந்தது. அதில் பங்குபற்றிய போலி இடது பிரிவினர், சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதில் முக்கிய பங்குவகித்த அமைப்புகளாகும் தனிநபர்களுமாவர்.

சத்குமாரவை வேட்டையாடுவதில் முன்னணியில் இருந்த பௌத்த அதிதீவிர கும்பல், அரசாங்கம் மற்றும் அரசின் ஆதரவோடேயே இயங்கியிருந்தாலும், அந்தப் பிரச்சாரத்தில் "தீவிரவாதத்தை" எதிர்த்துப் போராடுவதே பொதுவில் முக்கிய இடம் பிடித்திருந்தது.

அங்கு ஊடகத்திடம் உரையாற்றிய ஒருவர், தான் சிறிசேனவிற்கு வாக்களித்ததாக கூறியதோடு, இப்போது எங்களை இப்படித்தானா நடத்துவீர்கள் என்று கேட்கிறார். சத்குமாராவை விடுதலை செய்வதற்கான போராட்டத்தை, அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்ற மற்றும் "மனிதநேயத்தைப் பாதுகாப்பதற்கான" ஒரு தார்மீக அழைப்பாக மட்டுப்படுத்துவதற்கே அந்த பிரச்சாரகர்கள் செயற்பட்டனர்.