ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Arbitrary wage cuts imposed on Sri Lankan estate workers

இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் மீது எதேச்சதிகாரமான ஊதிய வெட்டு திணிக்கப்படுகின்றது

By W.A. Sunil 
12 April 2019

லண்டனை தளமாகக் கொண்ட தாம்சன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளை (டி.ஆர்.எஃப்) சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை, இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் கடுமையாக சுரண்டப்படுவதை மேலும் அம்பலப்படுத்துகிறது.

டி.ஆர்.எஃப் ஆராய்ச்சியானது குறிப்பாக பிராந்திய தோட்ட நிறுவனங்களால் (ஆர்.பி.சி.) திணிக்கப்பட்டுள்ள சட்டவிரோத வருமான வெட்டுக்களை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இது, உலக சோசலிச வலைத் தளம் (WSWS) மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியும் தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி வந்துள்ள, வறிய மட்டத்திலான ஊதியங்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களும் அவர்களது குடும்பங்களும் எதிர்கொள்ளும் கடுமையான நிலைமைகளை உறுதிப்படுத்துகிறது.


கமுகுவத்தை தோட்டத் தொழிலாளர் குடும்பத்தின் தற்காலிக சமையலறை

தோட்டத் தொழிலாளர்கள் தங்களது அன்றாட அடிப்படை ஊதியமான 500 ரூபாயை (2.86 அமெரிக்க டாலர்) 100 சதவீதம் அதிகரிக்கக் கோரினர். தொழிற்சங்கங்கள் காட்டிக்கொடுப்பதற்கு முன்னதாக அவர்கள் கடந்த டிசம்பரில் ஒன்பது நாள் தேசிய வேலைநிறுத்தத்தை நடத்தினர்.

குறைந்தபட்ச வாழ்க்கை நிலைமைகளைப் பாதுகாப்பதற்காக தொழிலாளர்கள் முன்வைத்த கோரிக்கைகளை பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் நிராகரித்தன. அவை 40 சதவீத சம்பள உயர்வை வழங்கி, மறுபக்கம் வருகைக்கான கொடுப்பனவு மற்றும் ஊக்கக் கொடுப்பனவுகள வெட்டிக்கொண்டன. இதன் விளைவாக, தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 20 ரூபாய் அல்லது 11 அமெரிக்க சதங்கள் மட்டுமே சம்பள அதிகரிப்பு கிடைத்தது. இந்த ஒப்பந்தத்தை அரசாங்கம் முழுமையாக ஆதரித்ததுடன், தொழிற்சங்கங்கள் அதைச் செயல்படுத்துகின்றன.

தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சமூக துயரங்களுக்கு, சட்டவிரோத வெட்டுக்கள் மற்றும் அதிக வேலைச் சுமையும் முக்கிய காரணிகளாக இருப்பதாக டி.ஆர்.எஃப் அறிக்கை கூறுகிறது. "ரெயின்ஃபோரஸ்ட் அலயன்ஸ் மற்றும் ஃபெயார்ட்ரேட் ஆகியவற்றால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட தேயிலைத் தோட்டங்களில் உள்ள சில தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 26 இலங்கை ரூபாய்களை (14 அமெரிக்க சதம்) மட்டுமே வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர்.

ரெயின்ஃபோரஸ்ட் அலயன்ஸ் என்பது நியூ யோர்க்கை தளமாகக் கொண்ட அரசு சாரா அமைப்பாகும், இது “பல்லுயிர் பாதுகாப்பிற்காக செயல்படுகிறது.” ஃபெயார்ட்ரேட் “வளரும் நாடுகளில் உற்பத்தியாளர்களுக்கு உதவ வடிவமைக்கப்பட்ட ஒரு நிறுவன ஏற்பாடு” என்று கூறுகிறது.

வட்டவளை, பொகவந்தால்வா, களனி, மஸ்கெலியா மற்றும் பாலங்பகொட உள்ளிட்ட பல பெருந்தோட்ட நிறுவனங்கள், ரெயின்ஃபோரஸ்ட் அலயன்ஸ் மற்றும் ஃபெயார்ட்ரேட் சான்றிதழை வைத்துக்கொண்டு, அதை சாதகமான நுகர்வோர் விளம்பரம் மற்றும் உலக சந்தையில் அதிக விலைகளைப் பெற பயன்படுத்துகின்றன.


எபோட்சிலி தோட்டத் தொழிலாளர்களின் வரிசை குடியிறுப்புகள்

ஆராய்ச்சி குறிப்புகள்: “ஒன்பது ரெயின்ஃபோரஸ்ட் அலயன்ஸ் சான்றளிக்கப்பட்ட தேயிலைத் தோட்டங்களில் ஆறு தோட்டங்களுக்கு ஃபெயார்ட்ரேட் சான்றிதழும் உள்ளன. அவற்றில் 17 தொழிலாளர்களின் ஊதிய சீட்டுகள், கடன் திருப்பிச் செலுத்துதல், சம்பள முற்பணம் மற்றும் சலவை கட்டனம் போன்ற பட்டியலுக்காக தொழிலாளர்களின் தினசரி வருவாயில் முக்கால்வாசிக்கும் மேலாக வெட்டப்படுவதைக் காட்டியது.

"ஃபெயார்ட்ரேட் சான்றளிக்கப்பட்ட தோட்டங்களில் உள்ள தொழிலாளர்கள், சராசரியாக 74 சதவிகித சம்பள வெட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ள அதே வேளை, ரெயின்ஃபோரஸ்ட் அலயன்ஸ் ஆதரவு தோட்டங்களில் உள்ளவர்களின் ஊதியத்தில் 65 சதவிகிதம் பறிக்கப்பட்டுகிறது."

நுவரெலியா தோட்டத் தொழிலாளர்களின் மாத ஊதிய சீட்டுக்களையும் இந்த அறிக்கை மேற்கோளிட்டு, தினசரி இலக்குகளை அடையத் தவறினால் அல்லது வேலைக்கு தாமதமாக வந்தால் அவர்களின் ஊதியங்கள் பாதியாக குறைக்கப்பட்டுள்ளன என்பதைக் காட்டுகிறது.

இந்த வெட்டுக்கள் சட்டவிரோதமானவை. தொழில்துறை முரண்பாட்டு சட்டம், ஊதிய சபை கட்டளை மற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கான கொடுப்பனவு சட்டம் உள்ளிட்ட இலங்கையின் வரையறுக்கப்பட்ட தொழிலாளர் சட்டங்களையும் இந்த கம்பனிகள் மீறியுள்ளன.

டி.ஆர்.எஃப் இன் குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டால், அது " ஃபெயார்ட்ரேட் தரநிலைகளின் கடுமையான மீறல்களைக் குறிக்கிறது" என்று ஒரு ஃபெயார்ட்ரேட் செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தினார். இந்த தரங்களில் ஒழுங்கமைக்கும் உரிமை, கட்டாய அல்லது சிறுவர் தொழிலாளர்கள் இருக்க முடியாது, சமமான வேலை நிலைமைகள் இருக்க வேண்டும், குறைந்தபட்ச ஊதியத்தை விட சமமாக அல்லது அதிகமாக இருக்க வேண்டும், நல்ல பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.


டிக்கோயா தோட்டத்தில் தண்ணீருக்காக காத்திருக்கும் குடும்பம்

டி.ஆர்.எஃப் ஆய்வாளர்களிடம் பேசிய தொழிலாளர்கள், கணக்காய்வின் போது தங்கள் தோட்டங்கள் "சான்றிதழ்களின் நெறிமுறைத் தரங்களை" மட்டுமே பின்பற்றுகின்றன என்றும், தாங்கள் நிர்வாகத்தால் பழிவாங்கப்படுவோம் என்ற அச்சத்தால் தோட்ட ஊழியர்கள் கணக்காய்வாளர்களிடம் இதைப் பற்றி புகார் செய்ய பயப்படுகின்றனர்.

தோட்டத் தொழிலாளர்களின் ஊதியங்கள் பாதியாக வெட்டப்படுகின்றன என்று டி.ஆர்.எஃப். கண்டுபிடித்துள்ளதை பெருந்தோட்டத் தொழில்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க நிராகரித்தார். எவ்வாறாயினும், "தோட்டத் தொழிலாளர்கள் அதிக ஊட்டச்சத்து குறைபாட்டைக் கொண்ட மிகவும் வறிய சமூகங்களில் ஒன்றாகும்" என்று திசானாயக் பாசாங்குத்தனமாக ஒப்புக் கொண்டார்.

பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெருந்தோட்ட உரிமையாளர் சங்கம், டி.ஆர்.எஃப். அறிக்கை தவறாக வழிநடத்துவதாகக் கூறி ஒரு அறிக்கையை வெளியிட்டது. பெருந்தோட்ட உரிமையாளர் சங்கத்தின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த டி.ஆர்.எஃப்., அதன் அறிக்கை துல்லியமானது என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை முன்வைத்தது.

பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் "தொழிலாளர்களின் மருத்துவ தேவைகளைப் பற்றி எப்போதும் உணர்வுடனேயே இருக்கின்றன" என்றும் ஆண்டுக்கு 300 நாட்கள் கட்டாய வேலை, முழு ஊதியத்துடனான 20 விடுமுறைகள், மற்றும் 14 நாட்கள் மருத்துவ விடுப்புடன் கூடியவாறு 18 முதல் 60 வயது வரை தொழிலாளர்களுக்கு "உத்தரவாதம் அளிக்கப்பட்ட" வாழ்நாள் குடும்ப வேலைவாய்ப்பை கொடுக்கின்றது என்றும் தோட்ட உரிமையாளர் சங்கம் கூறிக்கொண்டது.


பட்டல்கல தோட்டத்தில் தொழிலாளரிகளின் லயின் குடியிருப்புகள்

தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் ஊட்டச்சத்துக் குறைபாட்டை மறுக்கும் முயற்சியில், பெருந்தோட்ட உரிமையாளர் சங்கமானது மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் துறை அறிக்கையை மேற்கோள் காட்டி, தொழிலாளர்களின் தினசரி கலோரி உட்கொள்ளல் ஆனது, பரிந்துரைக்கப்பட்ட 2,030 கலோரிகளை விட 2,307 வரை அதிகமாக இருப்பதாகக் கூறியது.

இந்த புள்ளி விபரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவை மற்றும் பொய்யானவை ஆகும். நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் கூட்டு சராசரி மாத வருமானம் 34,000 ரூபாயாக இருந்தாலும், அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, மாதச் செலவுக்கு அந்த வருமானத்தில் 100 சதவீதத்திற்கும் அதிகமாக தேவைப்படுகின்றது.

அரசாங்க புள்ளிவிவரங்கள், தோட்டங்களில் சுமார் 9 சதவீத சிறுவர்கள் மிகவும் வளர்ச்சி குறைவானவர்களாக இருக்கும் அதே வேளை, நுவரெலியா மாவட்டத்தில் 29.5 சதவீதமானவர்கள் எடை குறைவாக இருப்பதாகவும் காட்டுகின்றன. தோட்டங்களில் சிசு மரண விகிதமானது -13 சதவீதமாக- இலங்கையின் எந்தவொரு துறையிலும் இல்லாதளவு அதிகமாக உள்ளது.

முழு ஊதியத்துடன் தொழிலாளர்கள் பெறும் விடுமுறைகளின் எண்ணிக்கையைப் பற்றிய பெருந்தோட்ட உரிமையாளர் சங்கத்தின் கூற்று முற்றிலும் பொய்யாகும். தொழிலாளர்கள், உண்மையில், மூன்று ஊதிய விடுமுறைகளை மட்டுமே பெறுகிறார்கள்.


என்ஃபீல்ட் தோட்டத்தில் ஒரு தொழிலாளர் குடும்பம்

பெருந்தோட்ட உரிமையாளர் சங்கத்தின் அறிக்கையானது, சமீபத்திய ஊதிய கூட்டு ஒப்பந்தத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு "நாளொன்றுக்கு அவர்கள் விரும்பிய 1,000 ரூபாயை சம்பாதிக்க கூடியவாறு தொழிலாளர்களுக்கு "ஒரு கவர்ச்சிகரமான சம்பளத்தை" கொடுத்துள்ளதாக கூறியுள்ளது.

இது ஒரு பொய். இந்த ஒப்பந்தத்தின் கீழ் அனைத்தையும் உள்ளடக்கிய 730 ரூபாய் தினசரி ஊதியத்தை மட்டுமே பெறுகின்றனர். தொழிலாளர்களின் கோபத்தைத் திசைதிருப்பும் முயற்சியில், ஒரு வருடத்திற்கு தற்காலிக கொடுப்பனவாக 50 ரூபாயை கொடுப்பதாக அரசாங்கம் கூறிய போதிலும், அது கிடைக்காது என்பது உறுதியாகி உள்ளது. மேலதிக வருமானத்தைப் பெற, தொழிலாளர்கள் உயர்ந்த உற்பத்தி இலக்குகளை எட்ட வேண்டும்.

பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் ஐந்து வயது வரை குழந்தைகளுக்கு இலவச பால் தா, கோதுமை மாவு மற்றும் அரிசியும் வழங்குவதாக பெருந்தோட்ட உரிமையாளர் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. தொழிலாளர்கள் இத்தகைய உதவிகளைப் பெறவில்லை என தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.

பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளின் “மருத்துவத் தேவைகளுக்கான உணர்திறனைப்” பொறுத்தவரை, பெரும்பாலான தோட்ட மருத்துவமனைகளில் அடிப்படை மருந்துகள் ஒருபுறம் இருக்க தகுதி வாய்ந்த மருத்துவர்கள் அல்லது பொருத்தமான ஊழியர்களோ கூட கிடையாது.

ஒரு தெரேசியா தோட்டத்தின் தொழிலாளி ஒருவர் உலக சோசலிச வலைத தள நிருபர்களிடம் பேசும்போது, “எங்களுக்கு ஒரு தாதி மற்றும் ஒரு உதவியாளருடன் ஒரு மருந்தகம் மட்டுமே உள்ளது. மருந்துகள் மிகக் குறைவாகவே உள்ளன. நாங்கள் ஏனைய மருந்துகளை வெளியிலேயே வாங்க வேண்டும்,” என்றார்.


எபோட்சிலி தோட்டத் தொழிலாளர்கள்

தினசரி தேயிலை பறிக்கும் இலக்கான 18 கிலோவை தொழிலாளர்கள் பூர்த்தி செய்யாவிட்டால் நிர்வாகம் ஊதியத்தை வெட்டுவதாக என்ஃபீல்ட் மற்றும் டிக்கோயா தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

டி.ஆர்.எஃப். அறிக்கையால் "ஆழ்ந்த கவலை" அடைந்துள்ளதாக யூனிலிவர் கூறியுள்ள அதே சமயம், இந்தியருக்கு சொந்தமான டாடா குளோபல் பெவரேஜஸின் துணை நிறுவனமான டெட்லி, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவை பற்றி "நடவடிக்கை எடுப்பதாக" பாசாங்குத்தனமாக கூறியுள்ளது.

மிகப்பெரிய தேயிலை வர்த்தக நிறுவனங்களான இந்த ராட்சத கம்பனிகளுக்கு தோட்டத் தொழிலாளர்கள் குறித்து சிறிதும் அக்கறை கிடையாது. மாறாக, தோட்டத் தொழிலாளர்களை கொடூரமாக சுரண்டுவதன் மூலம் அவை பெரும் லாபத்தைப் பெறுகின்றன.

தேயிலையை உள்ளடக்கிய யூனிலிவரின் “புத்துணர்ச்சி” வணிகத்தின் நிகர லாபம், 2017 இல் லாப மட்டம் 11.3 சதவீதமாக, 6,486 மில்லியன் பவுன்களாக (8,466 மில்லியன் அமெரிக்க டொலர்) இருந்தது. இது முந்தைய ஆண்டின் லாப எல்லை 9.8 சதவீதம், அதாவது 5,547 மில்லியன் பவுன்களை விட அதிகம் ஆகும். 2017–2018 நிதியாண்டில் டெட்லியின் நிகர லாபம் 5,670 மில்லியன் இந்திய ரூபாய் (80 மில்லியன் அமெரிக்க டொலர்) ஆகும், இது முந்தைய ஆண்டின் 4,640 மில்லியன் ரூபாயிலிருந்து பெற்ற அதிகரிப்பாகும். (பார்க்க: இலங்கை பெருந்தோட்டக் கம்பனிகள் தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் நிலைமைகளை வெட்டும் அதே வேளை பாரிய இலாபத்தினை குவிக்கின்றன)

அண்மையில் ஷெஃபீல்ட் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று குறிப்பிட்டதாவது: “உலகளாவிய தேயிலை மற்றும் கொகோ வழங்கல் சங்கிலிகளின் அடியில், கட்டாய உழைப்பு உட்பட சுரண்டல் காணப்படுகிறது.” முதலாளிகள் “குறைவேதனம்” மற்றும் “குடிநீர் மற்றும் கழிப்பறைகள் போன்ற சட்டப்படி கட்டாயப்படுத்தப்பட்ட அத்தியாவசியமானவை சேவைகளை முழுமையாக வழங்குவதில்லை.”

அண்மைய சம்பள கூட்டு ஒப்பந்தத்தில் "வருமான பங்கீடு முறைமையை" அறிமுகப்படுத்துவதற்கான உட்பிரிவுகள் அடங்கியுள்ளன. இது ஊதிய முறைமையையும் மட்டுப்படுத்தப்பட்ட சமூக நலன்களையும் ஒழிப்பதோடு தொழிலாளர்களையும் அவர்களது குடும்பங்களையும் ஏறத்தாழ குத்தகை விவசாயிகளாக மாற்றி விடும்.

பொகவந்தலாவாவில் உள்ள ரொப்கில் தோட்டத்தைச் சேர்ந்த பெயர் குறிப்பிடாத ஒரு முகாமையாளர் டி.ஆர்.எஃப். இற்கு கருத்து தெரிவிக்கையில், கம்பனிகள் தொழிலாளர்களின் ஊதியத்திலிருந்து வெட்டிக்கொள்ளும் பணத்தை தொழிலாளர்களின் வாழ்க்கையை "எளிதாக்க" உதவுவதற்காகவே பயன்படுத்துகின்றன, என்றார். இது ஒரு அப்பட்டமான பொய் ஆகும். தோட்டத் தொழிலாளர்களுக்கு வீட்டுவசதி, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற மிக அடிப்படையான சமூக உரிமைகள் கூட மறுக்கப்படுகின்றன. பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் போது கட்டப்பட்ட சிறிய, நெரிசலான மற்றும் பாதுகாப்பற்ற லயின் அறைகளிலேயே பெரும்பாலான தொழிலாளர் குடும்பங்கள் இன்னும் வாழ்கின்றன.


எபோட்சிலி தோட்டத் தொழிலாளி நிறுப்பதற்கு தேயிலை கொழுந்துகளை சுமந்து செல்கிறார்

இந்த லயின் அறைகள் அல்லது தோட்டப்புற வீடுகளில் பேரழிவு தரும் தீ விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகிறன்றன. ஜனவரி 29 அன்று, ரொப்கில் தோட்டத்திலுள்ள 12 லயின் அறைகள் தீவிபத்தில் எரிந்து போயின, இதனால் 16 குடும்பங்கள் வீடற்ற நிலையில் உள்ளன. கடந்த ஆண்டு டிசம்பர் 29 அன்று, ஹட்டனுக்கு அருகிலுள்ள ஃபோர்டைஸ் தோட்டத்தில் சுமார் 20 லயின் வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது.

ஆசிரியர்களின் பரிந்துரை:

இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களின் விற்றுத்தள்ளும் ஊதிய ஒப்பந்தத்தை எதிர்க்கின்றனர்

[29 ஜனவரி 2019]

இலங்கை தோட்டத் தொழிலாளர் வேலைநிறுத்தத்தின் சர்வதேச முக்கியத்துவம்

[17 டிசம்பர் 2018]