ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lankan university workers continue indefinite strike

இலங்கை பல்கலைக்கழக தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடர்கின்றனர்

By W. A. Sunil
12 September 2019

இலங்கையில் 15 அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் 23 இணைந்த உயர் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 17,000 கல்விசாரா ஊழியர்கள், உதவித் தொழிலாளர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் தொடங்கியுள்ள தேசிய வேலைநிறுத்தம் இன்று மூன்றாம் நாளாகத் தொடர்கின்றது.

செவ்வாய்க்கிழமை தொடங்கிய காலவரையற்ற வெளிநடப்பு, வேலைநிறுத்தக் கோரிக்கைகளை வழங்க அரசாங்கம் மறுத்தமைக்கு பதிலிறுப்பாக இருந்தது. 2015 முதல் பிற பொதுத்துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சம்பள உயர்வுகளும், அத்துடன் அதிக ஊதிய ஊக்கத்தொகை மற்றும் ஓய்வூதியத் திட்டமும் தங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கைகளில் அடங்கும்.

அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டணி இந்த வேலைநிறுத்தத்துக்கு அழைப்புவிடுத்துள்ளது. இது பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் கமிட்டி மற்றும் தொழிற்சங்க மத்திய குழு ஆகியவற்றுடன் மொத்தம் 27 தொழிற்சங்கங்களை உள்ளடக்கியதாகும். தொழிற்சங்க உறுப்பினர்களிடமிருந்து வரும் "பாரிய அழுத்தம்" காரணமாக இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தொழிற்சங்க அதிகாரிகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.


வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நடத்திய பேரணி

முந்தைய செய்திகள், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பும் (FUTA) இந்த வேலைநிறுத்தத்தில் சேரும் என்று சுட்டிக்காட்டின. பல்கலைக்கழக ஆசிரியர்கள் அதிக சம்பளம் மற்றும் மேம்பட்ட கல்வி வசதிகளுக்காக போராட ஆர்வமாக இருப்பதாக சுட்டிக்காட்டிய போதிலும் இது இடம்பெறவில்லை.

உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) நிருபர் தொடர்பு கொண்ட போது, எஃப்.யு.டி.ஏ. தலைவர் ரொஹான் பெர்னாண்டோ, பல்கலைக்கழக சீர்திருத்த மசோதா குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தொழிற்சங்க அதிகாரிகள் செப்டம்பர் 4 அன்று கலந்துரையாடியதாகக் கூறினார். தொழிற்சங்கத் தலைவர்களிடம் கலந்தாலோசிக்காமல் இந்த மசோதா செயல்படுத்தப்படாது என்று விக்ரமசிங்க "உறுதியளித்தார்" என்று பெர்னாண்டோ கூறினார்.

பல்கலைக்கழக ஊழியர்களின் வெளிநடப்புடன் இணைந்து, பொது நிர்வாக அதிகாரிகள் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் இரண்டு நாள் தேசிய சுகயீன விடுப்பு பிரச்சாரத்தை நடத்தினர். அரச பாடசாலை ஆசிரியர்கள் செப்டம்பர் 26 மற்றும் 27 ஆகிய திகதிகளில் ஊதியம் மற்றும் சிறந்த நிலைமைகளைக் கோரி வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்தனர்.

தீவு முழுவதும் பல்கலைக்கழக வேலை நிறுத்தத்தை மட்டுப்படுத்தவும், ஏனைய தொழிலாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகளிலிருந்து தனிமைப்படுத்தவும் தொழிற்சங்கங்கள் முயற்சித்த போதிலும், வேலைநிறுத்தம் செய்பவர்கள் அந்தந்த வளாகங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள், சில பேரணிகளில் "இலங்கை பல்கலைக்கழக ஊழியர்களின் போராட்டத்திற்கான ஒரு சோசலிச முன்னோக்கு" என்ற சோ.ச.க.வின் அறிக்கையின் பிரதிகளை விநியோகித்தனர்.

வேலைநிறுத்தக்காரர்கள் சிலருடன் உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் பேசியபோது, கடினமான வேலை நிலைமைகள் மற்றும் குறைந்த ஊதியங்கள் மீதான தற்போதைய மற்றும் முந்தைய அரசாங்கங்களின் தாக்குதல்கள் குறித்து கோபத்தை வெளிப்படுத்தினர். அனைத்து தொழிலாளர்களும் ஒன்றுபட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் அழைப்பு விடுத்ததுடன், போராட்டங்களை கைவிடுவதற்கான தொழிற்சங்கங்களின் முயற்சிகளையும் விமர்சித்தனர்.

செவ்வாயன்று, சுமார் 300 தொழிலாளர்கள் கொழும்புக்கு தெற்கே உள்ள மொரட்டுவ பல்கலைக்கழக நுழைவாயிலுக்கு அருகில் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். போராட்டத்தின் பின்னர் ஒரு கூட்டத்தில் உரையாற்றிய பல்கலைகழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் கமிடிட்டியின் மொரட்டுவ கிளைத் தலைவர் கே.எம். சிறிசேன, "இந்த மாதம் 16 அல்லது 17 ஆம் தேதிகளில் [அதிகாரிகளுடன்] நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தலாம் மற்றும் இந்த கலந்துரையாடலில் இருந்து ஒரு தீர்வைப் பெறுவது சாத்தியமாகலாம்," என அறிவித்தார்.

கடந்த வாரம், இதே மொரட்டுவ கிளைத் தலைவர், வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம் விரைவில் அறிவிக்கப்பட்டால், தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர நேரும் எனக் கூறியதாகக் கூறப்படுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தொழிற்சங்கத் தலைமையானது தொழிற்சங்க நடவடிக்கையைத் தடுக்க எதாவதொரு காரணத்தை எதிர்பார்க்கிறது.

மொரட்டுவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொழில்நுட்பத் தொழிலாளியான அனுர, தனது உயர்தரப் பரீட்சை சித்தியின் பின்னர் வெளிநாடுகளில் வேலை தேட வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாக உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறினார். இலங்கைக்கு திரும்பியதைத் தொடர்ந்து, அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் AutoCAD வரைவு பணியாளராக தற்காலிக வேலைவாய்ப்பைப் பெற்றார், பின்னர் மொரட்டுவாவில் வேலை பெற்றார்.


மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் போராட்டம்

"எனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். மூத்தவர் ஒரு பட்டதாரி, மற்றவர் பல்கலைக்கழகத்தில் சேர காத்திருக்கிறார், எனவே இருவரும் வேலையில்லாமல் உள்ளனர். உடல்நலக்குறைவு காரணமாக எனது மனைவி தனது பல்கலைக்கழக வேலையை ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது,” என்று அவர் விளக்கினார்.

"எனது மொத்த மாத சம்பளம் சுமார் 55,000 ரூபாய் (சுமார் 305 அமெரிக்க டாலர்), எனவே எனது பல்கலைக்கழக சம்பளம் போதுமானதாக இல்லாததால் பகுதிநேர வேலைக்கு தள்ளப்பட்டேன்."

மொரட்டுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிரஞ்சலா, வேலைநிறுத்தம் செய்பவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அனைத்தும் பொருளாதார கஷ்டங்கள் தொடர்பானவை என்றார். "ஒரு பொதுவான போராட்டம் இல்லாமல் தொழிலாளர்கள் இந்த கஷ்டங்களை சமாளிக்க போராட முடியாது என்பது தெளிவாகிறது," "முதலாளித்துவ கட்சிகளை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு தொழிற்சங்கங்கள் செயல்படுவதை நாங்கள் எதிர்க்கிறோம்," என்று அவர் கூறினார்.

தொழிலாளர்கள் பொது வேலைநிறுத்தத்தை முன்னெடுக்க வேண்டும் என்று தொழில்நுட்ப ஊழியரான பிரியந்த கூறினார். "இலங்கையில் வெடித்த பல போராட்டங்களிலிருந்து தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடத் தயாராக உள்ளனர் என்பதை நீங்கள் காணலாம், ஆனால் தொழிற்சங்கங்கள் பிரித்து அவர்களை உட்சாகம் இழக்கச் செய்கின்றன," என்று அவர் கூறினார்.

"பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள் எங்கள் போராட்டங்களை காட்டிக் கொடுத்தன, அரசாங்கம் அளித்த போலி வாக்குறுதிகளை எப்போதும் ஏற்றுக்கொள்கின்றன. தொழிலாளர்கள் போராட்டங்களை விரிவுபடுத்துவதில் தொழிற்சங்கங்களே முக்கிய தடையாக இருக்கின்றன என்பதை நீங்கள் விளக்கியது போல் நான் புரிந்துகொள்கிறேன்.”

கண்டிக்கு அருகிலுள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தில், 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நிர்வாக அலுவலகத்திலிருந்து பிரதான வளாகம் வரை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் பேரணியாகச் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒரு தகவல் தொழிலாளி ஒரு மாதத்திற்கு 57,000 ரூபாயை மட்டுமே பெறுவதாகவும் வாழ்க்கையை கொண்டுநடத்த சிரமப்படுவதாகவும் WSWS இடம் கூறினார்.

"மின்சாரம், நீர் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட சேவைகளுக்கான அத்தியாவசிய செலவுகள் மற்றும் கட்டணங்கள் அனைத்தும் உயர்ந்துள்ளன. எனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர், எனவே அடிப்படை குடும்ப செலவினங்களைச் சமாளிக்க பகுதிநேர வேலைகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

இலங்கையின் வடக்கில், கிளிநொச்சி மற்றும் வவுனியா வளாகங்கள் உட்பட அனைத்து யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கின்றனர். மாணவர் சங்கத்தின் வேண்டுகோளைத் தொடர்ந்து சட்டம் மற்றும் முகாமைத்துவம் போன்ற சில பீடங்கள் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு விரிவுரைகளை நடத்தி வருகின்றன.

“மனிதவள நிறுவனங்களின் தொழிலாளர்கள்” -அதாவது, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி வளாகங்களில் ஒப்பந்த நிறுவனங்களால் பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள்- யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலுக்கு வெளியே உண்ணாவிரத போராட்டத்தை நடத்துகின்றனர். நிரந்தர நியமனம் கோரும் ஏனைய ஒப்பந்த ஊழியர்கள் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கின்றனர்.

நூற்றுக்கணக்கான குறைந்த ஊதியம் பெறும் மனிதவள மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதன் மூலம் பல்கலைக்கழகங்கள் செலவினங்களைக் குறைத்துள்ளன. இந்த அடிப்படையில் நூற்றுக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர், அவர்களில் சிலர் நான்கு ஆண்டுகள் வரை, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி வளாகங்களில் உள்ளனர்.


யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உண்ணாவிரதம் இருக்கும் தொழிலாளர்கள்

இலங்கையின் உயர்கல்வி அமைச்சு நிரந்தர வேலைகளுக்கான விண்ணப்பங்களை கோரும் போது, ​​பல்கலைக்கழக அதிகாரிகள், மனிதவளத் தொழிலாளர்களை புறக்கணித்து அமைச்சரின் கூட்டாளிகளை வேலைக்கு அமர்த்த முயற்சிப்பதாக உண்ணாவிரதம் செய்பவர்கள் WSWS இடம் கூறினர்.

எஸ். மணிமாரன், ஒரு மனிதவளத் தொழிலாளி, அவர் நான்கு ஆண்டுகளாக வளாகத்தில் இருப்பதாகக் கூறினார். “எங்களுக்கு ஒரு நாளைக்கு 1,000 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது, ஆனால் இதை கொண்டு வாழ முடியாது. சில காரணங்களால் எங்களால் வேலைக்கு வர முடியாவிட்டால், நாங்கள் எதையும் பெறமாட்டோம், சில சமயங்களில் சாதாரண வேலை நேரத்திற்கு அப்பால் வேலை செய்ய வேண்டியிருக்கும் போது எங்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவு வழங்கப்படுவதில்லை.”

பிரதான தமிழ் முதலாளித்துவக் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல்களின் போது போலி வாக்குறுதிகளை அளித்து தொழிலாளர்களை அரசியல் ரீதியாக ஏமாற்றுவதாக மணிமரன் குற்றம் சாட்டினார்.

கலை பீடத்தில் நிரந்தர தொழிலாளியான கே. பராமலிங்கம், வேலைநிறுத்தம் குறித்த சோ.ச.க. பிரசுரங்களைப் பற்றி பேசினார். "நான் உங்கள் துண்டுப்பிரசுரங்களைப் படித்திருக்கிறேன், நீங்கள் நல்ல விஷயங்களை எழுதியுள்ளீர்கள்" என்று அவர் கூறினார். “தொடர்ந்து போராடிக்கொண்டிருந்தோம், ஆனால் எங்களால் எதையும் பெற முடியவில்லை. அரசாங்கத்திடம் எந்த தீர்வும் இல்லை, எனவே எங்களுக்கு போராட்டம் இல்லாமல் ஒரு மாற்றீடு இல்லை."

பல்கலைக்கழகத்தின் புவியியல் ஆசிரியரான என். தசரதன் வேலைநிறுத்தம் செய்யும் கல்விசாரா ஊழியர்களுடன் தனது ஒற்றுமையை வெளிப்படுத்தினார். “நான் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை ஆதரிக்கிறேன். நாங்கள் சம்பள பாகுபாடுகளையும் எதிர்கொள்கிறோம். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, ​​இலங்கை விரிவுரையாளர்களுக்கு குறைந்த ஊதியம் தான் கிடைக்கிறது.”

செவ்வாயன்று, வேலைநிறுத்தம் செய்த 300 க்கும் மேற்பட்ட கொழும்பு பல்கலைக்கழக தொழிலாளர்கள், வளாகத்திற்கு வெளியே 30 நிமிட ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். தொழிற்சங்க அதிகாரிகள் சோ.ச.க. பிரச்சாரகர்களுக்கு விரோதமாக நடந்துகொண்டதுடன் கட்சியின் அறிக்கையை விநியோகிப்பதைத் தடுத்தனர்.


சோ.ச.க. உறுப்பினர் தொழிலாளர்களுடன் உரையாடுகின்றார்

சோ.ச.க. உறுப்பினர்கள் இந்த அப்பட்டமான தணிக்கைக்கு சவால் விடுத்து, தங்கள் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்தியபோது, தன்னை ஒரு தொழிற்சங்க ஊடக செயலாளராக அறிமுகப்படுத்திய​​ எல்.டி.ஜி. ரிச்மண்ட், "நீங்கள் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தால் [உங்களுக்காக] பிரச்சினை ஏற்படும்," என்று அச்சுறுத்தலுடன் பதிலளித்தார்.

ரிச்மண்டின் வெளிப்படையான மிரட்டல், சோ.ச.க.வின் சோசலிச முன்னோக்கு பற்றிய எந்தவொரு கலந்துரையாடலையும் தடுக்க தொழிற்சங்க அதிகாரத்துவம் விரும்புவதற்கான மற்றொரு அறிகுறியாகும். இந்த வேலைநிறுத்தம், கல்வித் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவுகளுக்கும் விரவடைந்து இலங்கை அரசாங்கத்துடனும் முழு அரசியல் ஸ்தாபனத்துடனும் ஒரு பரந்த அரசியல் மோதலாக வளர்வதைத் தடுக்க தொழிற்சங்கங்கள் உறுதியாக உள்ளன.