World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

A profile of the new leadership in Beijing

புதிய சீனத்தலைமையின் விவரக்குறிப்புகள்

By John Chan
2 December 2002

Use this version to print | Send this link by email | Email the author

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 16வது தேசிய மாநாடு நவம்பர் 14ந் தேதி முடிவடைந்தது. புதிய மத்திய தலைமை தொடக்கிவைக்கப்பட்டது. ஸ்ராலினிச கட்சி அமைப்பு விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன. தொழிலாள வர்க்கத்தையும், சோசலிசத்தையும் பிரதிபலிப்பதாக முன்னர் கூறிக் கொண்ட கூற்றுக்கள், சம்பிரதாய முறையில் நீக்கப்பட்டன.

அமைப்பு விதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள், மாவோ சேதுங், டெங்சியாவோ பிங் போல், கட்சித்தலைவர்கள் வரிசையில் அந்தஸ்து உயர்த்தப்பட்டவராக ஆகி விட்ட ஓய்வு பெறும் தலைவர், ஜியாங் ஜெமினின் "மூன்று பிரதிநிதித்துவங்கள்" தத்துவங்களைப் பேணுகின்றது. ஜியாங்- நீண்ட காலம் கட்சி நிர்வாகத்தில் பணியாற்றிய அதிகாரத்துவம் ஆவார். 1989 மே-ஜூனில் அரசாங்கத்திற்கு எதிராக, தியான்ன்மென் சதுக்கத்தில் நடைபெற்ற ஆர்பாட்டங்களை ஒடுக்க கொடூரமான அடக்கு முறைகளைக் கையாண்டபொழுது புதிய தலைவராக அமர்த்தப்பட்டார்.

கட்சியின் புதிய அமைப்பு விதிகள், மூலதனத்தின் சொந்தக்காரர்கள், கட்சி உறுப்பினர்களாக அனுமதிக்கின்றது மற்றும் ''முதலாளித்துவ சமுதாயத்தை, சோசலிச சமுதாயம், தவிர்க்க முடியாத வகையில் மாற்றீடு செய்யும்''- என்பது போன்ற வாசகங்கள் கட்சி அமைப்பு விதிகளிலிருந்து நீக்கப்பட்டு விட்டன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி', "தொழிலாள வர்க்கத்தின் முன்னணிப்படை'' என்ற பதம், ''சீன தேசத்தின் முன்னணிப்படை'' என மாற்றப்பட்டு விட்டது.

பெய்ஜிங் முதலாளித்துவத்தை வெளிப்படையாக அரவணைத்துக் கொள்வதற்கு ஏற்ப, கட்சி அமைப்பு விதிகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டில் கொள்கைகள் விளக்க உரையாற்றியவர்கள், சுதந்திர சந்தையை நிலை நாட்டுவதிலும், உலக வர்த்தக அமைப்பில் சீனா, உறுப்பினராக சேருவதற்கு சீனா ஏற்றுக்கொண்டுள்ள நிபந்தனைகளை நிறைவேற்றுவதிலும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கொண்டுள்ள உறுதிப்பாட்டை வலியுறுத்துவதாகவே அமைந்திருந்தன.

வெளிநாடுளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள், சீனாவில் செயல்பட்டு வரும், 500 மிகப் பெரும் நிறுவனங்களில் (அரைவாசி பகுதி அரசிற்குச் சொந்தமான நிறுவனங்கள்), பெரும்பான்மைப் பங்குகளை வாங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்படும். "மூலோபாயப் பகுதிகளான" எரிபொருள், இயற்கை வளங்களிலும் இத்தகைய முதலீடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளும் நீக்கப்படும். ஒரு பகுதி அரசிற்கு சொந்தமான நிறுவனங்கள், தங்களது ஊழியர்களுக்கு, சுகாதார வசதிகள் வீட்டுவசதி போன்றவற்றைச் செய்துதர வேண்டுமேன்ற நிபந்தனையை ரத்துச்செய்யவும் அகல் பேரவை (Congress) இணக்கம் தெரிவித்துள்ளது.

வங்கிகள் செயல்பாடும், வட்டி விகிதங்களும், "சந்தைகளின் போக்கில் இயங்குவதற்கு அனுமதிக்கிற வகையில்" அரசாங்க கட்டுப்பாட்டு திட்டங்கள் நீக்கப்படும் என ஜியாங் ஜெமின் அறிவித்துள்ளார். மேலும் அதிக அளவில் சீனாவிற்குள் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கின்ற வகையில், புதிய குறைந்த ஊதிய தொழிலாளர்கள் இடம் பெறும் "சிறப்பு பொருளாதார மண்டலங்களை" உருவாக்குவது குறித்தும் இதர சலுகைகள் வழங்குவது தொடர்பாகவும் அகல் பேரவையில் விவாதிக்கப்பட்டது. கிராமப்புறங்களில் முழுமையான தனியார் நில உடைமைகள உருவாக்குவது தொடர்பாகவும் ஆதரவு கோரப்பட்டது.

இந்த கொள்கை மாற்றங்களின் நேரடியான பக்க விளைவுதான், நாட்டின் மத்திய குழுவிற்கு சில மிகுந்த செல்வாக்கு படைத்த வர்த்தகர்களை அகல்பேரவை தேர்ந்தெடுத்ததாகும், இப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் சீனாவின் முன்னணி உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான ஹையர்-ன் தலைமை நிர்வாகி ழாங் ரூமின் (Zhang Ruimin), அமெரிக்க பங்குச் சந்தை பட்டியலில் இடம் பெற்றுள்ள சீனாவின் இராட்சத நிறுவனமான பெட்ரோ-சீனா நிறுவனத்தின் தலைவர் மா ஃபக்காய் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

இப்படிப்பட்ட பகிரங்கமான முதலாளித்துவ செயல் திட்டத்திற்கு சர்வதேச அளவில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. குறிப்பாக, அமெரிக்கா சிறப்பான வரவேற்பைத் தந்திருக்கிறது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொலின் பாவெல் நவம்பர் 18-ம் தேதி அன்று பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில் இனி சீனாவில் "இரும்புத்திரை" இல்லை என கூறி இருக்கிறார். மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனங்களும், முதலீட்டு நிதி நிறுவனங்களும், சீனாவில் மிகப் பெருமளவிற்கு முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்த நிறுவனங்களில், அமெரிக்க ஜனாதிபதி புஷ் நிர்வாகத்தோடு நெருக்கமாக உள்ளவர்களின் நிறுவனங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. சீனா வெளிநாட்டு முதலீடுகளுக்கு அனுமதி அளித்திருப்பதாலும், வந்த விலைக்கு விற்போம் என பெரிய அரசு நிறுவனங்களை விற்க முன் வந்திருப்பதாலும், அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனங்கள் மிகப்பெரும் அளவிற்கு இலாபத்தை குவிக்க இருக்கின்றன.

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நியூஸ் வீக், சீன அதிபர் ஜியாங்கின் மகன் தொடர்பாக கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறது: "அமெரிக்காவில் கல்வி கற்ற ஜியாங் மியான்கெங் சீனாவின் தகவல் தொழில் நுட்ப இளவரசர் என அழைக்கப்படுகிறார். அதற்குக் காரணம், ஷாங்காய் பகுதியில் இருந்து இயங்கும் பல்வேறு நிறுவனங்களில் அவர் சம்பந்தப்பட்டிருப்பதாகும். அதில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றுள் ஒன்றில் முதலீடு செய்துள்ளவர்களுள் அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் டொனால்ட் ட்ரம்ஸ்பெல்டும் ஒருவர் ஆவார்."

புதிய தலைமை

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அகல் பேராயம் தெளிவான முடிவுகளை அறிவிப்பதை குறிக்கோளாகக் கொண்டு நடாத்தப்பட்டது. சொத்துடைமையை, செல்வத்தை, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை சீனாவின் புதிய வர்த்தக செல்வந்தத் தட்டுக்களைக் காப்பாற்றுவதில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உறுதி கொண்டிருக்கிறது. இதற்கு தொழிலாளர்களும், விவசாயிகளும், ஏதாவது எதிர்ப்பு தெரிவித்தால் அவர்களை, 1989 மே- ஜூன் மாதங்களில் நடந்ததைப் போல் ஒடுக்குவதற்கு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தயங்காது.

ஜியாங்குடன் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என்று அழைக்கப்படும் சீன கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் மாவோவிற்கும் டெங்கிற்கும் பின்னர், கட்சித் தலைமை, அரசாங்கம் மற்றும் இராணுவ பதவிகளிலிருந்து அவர்களது வயது மூப்பு காரணமாக ஓய்வு பெற்று விட்டனர். இப்படி ஓய்வு பெற்றவர்களில் தேசிய மக்கள் காங்கிரஸ் தலைவர் லீ பெங் மற்றும் 1998 முதல் பிரதமராகவும் மேலும் சீனா உலக வர்த்தக அமைப்பில் உறுப்பினர் ஆவதைத் தொடர்ந்து எடுக்கப்பட்டு வந்த சுதந்திர சந்தைகளுக்கான நடவடிக்கைகளை உருவாக்கியவருமான ழு ரோங்ஜி உம் ஆகும். இதர பல மூத்த அதிகாரிகளும் தளபதிகளும் பதவியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். இந்த அதிகாரிகள், தளபதிகள் 1989ல் மாணவர்களும் தொழிலாளர்களும் கிளர்சி செய்தபொழுது, அந்தக் கிளர்ச்சியை ஒடுக்கியதன் மூலம் தங்களது விசுவாசத்தை நிரூபித்துக் காட்டியவர்களாவர்.

பழைய காவலர் அனைவரும் அரசாங்கக் கொள்கை மற்றும் இராணுவ, உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்புகள் மீதான தங்களது கட்டுப்பாட்டினை உடனடியாக கைவிட்டுவிட மாட்டார்கள். இராணுவத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மத்திய இராணுவக் கமிஷனுக்கு ஜியாங் மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். சீன ஆட்சியின் உயிர்நாடி தொடர்பே இராணுவம்தான். அனைத்து அதிகாரங்களையும் உள்ளடக்கிய பொலிட் பீரோ- நிரந்தரக் குழுவை, அகல் பேரவை விரிவுபடுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிரந்தரக் குழுதான், கட்சி மற்றும் அரசாங்கத்தின் கொள்கையை முடிவு செய்கிறது. இந்தக் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை ஏழாக இருந்து ஒன்பதாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இவர்களில் ஏழுபேர் ஜியாங் மற்றும் லீபெங்கின் நெருங்கிய நண்பர்கள்.

எதிர்பார்க்கப்பட்டதைப்போல், மாநாடு 59 வயதான ஹூ-ஜிண்டாவோவை, ஜியாங்கின் பதவிக்கு பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்திருக்கிறது. அவர் ஒரு டெங் ஆதரவாளர்- 90களின் தொடக்கத்தில் கட்சியின் மத்திய தலைமைக்குள் கொண்டுவரப்பட்டார். அதுமுதல் ஜியாங்கின் இடத்தைப் பிடிப்பதற்கு வளர்க்கப்பட்டார். அவர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கொள்கைப் பிரகடனத்திற்கு விளக்கம் தந்தார். "ஸ்திரத்தன்மை" யை உத்தரவாதம் செய்து தருவதாக ஹூ உறுதி எடுத்துக் கொண்டார். ஜியாங்கின் "மூன்று பிரதிநிதித்துவங்கள்" கொள்கைய முழுமையாக செயல்படுத்துவதாக குறிப்பிட்டார். சீனாவின் சீர்திருத்தத்தை முடுக்கிவிட வழிவகைகள் செய்வதாகவும் , பகிரங்க சந்தைக்கு வழிசெய்வதாகவும் ஹூ விளக்கம் தந்தார்.

ஹூ ஜிண்டாவோ சீனாவின் அதிபராக பொறுப்பேற்க இருக்கிறார். அவருக்கு சீனாவின் புதிய முதலாளித்துவ வர்க்கத்தோடு நெருக்கமான உறவு உண்டு. 1980களில் அரசியலில் செல்வாக்குப் பெற்ற தலைமுறையைச் சேர்ந்தவர். அவர் 1978க்குப் பின்னர், "செல்வந்தனாக ஆகு" என டெங் குரல் கொடுத்த, அந்தக் காலகட்டத்தில் உருவான சந்தை சீர்திருத்தங்களால் பயன் அடைந்தவர்களில் ஹூ ஒருவராவர்.

1980 களின் நடுப்பகுதியில் இளம் கம்யூனிஸ்டுகள் லீக்கிற்கு அவர் தலைமை வகித்தார். இந்த அமைப்பில் கட்சி நிர்வாகிகளின் குழந்தைகள்தான் பெரும்பாலும் இடம் பெற்றிருந்தனர். எனவே, அந்தக் குழந்தைகள் தங்ளது அரசியல் தொடர்புகளைப் பயன்படுத்தி, சீனப் பொருளாதாரத்தைக் கொள்ளையடித்தனர், சொத்துக்களையும் செல்வத்தையும் குவித்தனர். இத்தகைய சமூகத்தட்டிற்கு தொழிலாளர்கள் எத்தகைய அளவிற்கு வெறுப்பைக் காட்டினர் என்பதை, அவர்களை விவரிக்கப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் "இளவரசர்கள்" என்ற வார்த்தை தெளிவுபடுத்துகின்றது.

1988-ம் ஆண்டு ஹூ திபெத்தில் கட்சித் தலைவராக இருந்தவர் என்ற வகையில், திபெத் விடுதலைக்கான கிளர்ச்சியைக் கடுமையாக நசுக்கினார். 1989-ல் தொழிலாளர்களும் மாணவர்களும் தியனென்மென் சதுக்கத்திலும் இதர நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியபோது ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு இராணுவ சட்டத்தைப் பிரகடனப்படுத்துவதை ஆதரித்த முதலாவது மாகாண ஆளுநர் ஹூ தான். 1992-ம் ஆண்டு கட்சியின் முடிவுகள் எடுக்கும் குழுவிற்கு அவர் நியமிக்கப்பட்டார். கட்சியின் கொள்கைகளை வகுக்கும் பொறுப்பையும் அவர் ஏற்றுக் கொண்டார்.

ஹ, 1949 புரட்சியுடன் எந்தவிதமான தொடர்பும் இல்லாதவர். அவர் ஸ்ராலினிச வார்த்தை ஜாலங்களைத் தவிர்த்தார். சுதந்திர சந்தைக் கொள்கைகளை முழுமையாக ஆதரித்தார். இவற்றின் காரணமாக செல்வ வளம் மிக்க நடுத்தர வகுப்பின் பல மட்டங்களில் அவரது செல்வாக்கு வளர்ந்தது, அதை சாதகமாகக் கொண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியில் தனக்கு ஒரு தளத்தையும் அமைத்துக் கொண்டார். 1990 களின் தொடக்கத்தில் பகிரங்கமாக ஜியாங்கின் பின் வருபவர் என்று அவர் டெங்கால் அறிவிக்கப்பட்டார். சீனாவின் பொருளாதார சீர்திருத்தங்கள் மந்த நிலையில் சென்றுகொண்டிருப்பதால், அதை முடுக்கி விடாவிட்டால் பொதுச்செயலாளர் பதவியை பதிலீடு செய்யப் போவதாகவும் டெங் மிரட்டினார்.

கட்சியின் நிர்வாகக் குழு

ஹூ, உயர் பதவிக்கு வந்திருந்தாலும், நிரந்தர குழுவில் அவருக்கு போட்டியாளர்களாக வரக்கூடியவர்கள் நிறைந்திருக்கிறார்கள், அவர்களுடன் மோதலுறுவார். அவர்கள் பழைய மூத்த தலைவர்களுக்கு விசுவாசமானவர்கள். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தலைமையைச் சார்ந்த எட்டுத் தலைவர்களும் நவம்பர் 14-ம் தேதி சர்வதேச அளவில் பத்திரிகைகள், தொலைக்காட்சி முன்னர் தோன்றினர். அவர்கள் ஹூ ஜிண்டாவோவிற்குப் பின்னால் அணிவகுத்து நின்ற முறையானது அதிகாரத்துவத்தின் அடுக்கில் அவர்கள் ஒவ்வொருவரது அந்தஸ்தையும் கோடிட்டுக் காட்டியது.

துணை முதல்வர் வென் ஜியாபாவோ கட்சி அதிகார பீடத்தில் மூன்றாவது வரிசையில் இருப்பவர். இவர் ழு ரோங்ஜிக்கு பின் பிரதமர் பதவிக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய மத்திய தலைமையில் ஹூ-விற்கு மிகவும் நெருக்கமான ஒரே சகா இவர்தான் என்று கருதப்படுகிறது. இவருக்கும் 59 வயது ஆகிறது. இவர் முதலாளித்துவத்தை மிகுந்த ஆர்வத்தோடு ஆதரிப்பவர். சர்வதேச வர்த்தக அமைப்பில் சீனா இணைவதற்கு முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டி, வென் 1990 களின் கடைசிப் பகுதியில் சீனாவின் சுதந்திர சந்தை சீரமைப்புத் திட்டங்களை மேற்பார்வையிட பிரதமரால் உயர்த்தப்பட்டவர். கோடிக்கணக்கான ஏழை விவசாயிகள் அவர்களுக்குச் சொந்தமான நிலத்திலிருந்து விரட்டி அடிக்கப்படுவதற்கு காரணமான கொள்கைகளை செயல்படுத்தியவர்.

பழைய தலைவர்கள் வென் செயல்பாட்டை சந்தேகக் கண்ணோடு பார்க்கின்றனர். அதற்குக் காரணம் அவர் முன்னாள் பொதுச் செயலாளர் ழாவோ ஜியாங்குடன் தொடர்பு கொண்டிருந்தவர். கிளர்ச்சி செய்து வரும் பொதுமக்களை சாந்தப்படுத்துகின்ற வகையில் கோர்பச்சேவ் பாணி அரசியற் சீர்திருத்தங்களை கொண்டு வரவேண்டுமென்று ழாவோ ஜியாங் வலியுறுத்தி வந்தார். எனவேதான் அவர் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். டெங் அவர் மீது அந்த நடவடிக்கையை எடுத்தார்.

ஹூ தனது மற்றொரு நெருங்கிய சகாவான லீ ருய்குவானுக்கு அரசியல் ஆதிக்கக் குழுவில் இடம் பிடித்துத் தரமுடியவில்லை. முந்திய நிரந்தரக் குழுவில் உறுப்பினராகவும், மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டுத் தலைவராகவும் இருந்தவர் லீ ருய்குவான். அவருக்கு 68 வயது ஆகின்ற போதிலும் அவருக்கு எதிராகவும் ஹூவின் நிலையை பலவீனப்படுத்துவதற்காகவும் அரசியல் ஆதிக்க பொலிட் பீரோ முடிவுகள் எடுக்கும் குழுவில் கடுமையான ஆதிக்கத்தை நிலைநாட்டவும் ஜியாங் மற்றும் அதிகாரம் படைத்த இராணுவ மற்றும் அதிகாரத்துவ பகுதிகளால் பதவியிலிருந்து வெளியேறுமாறு நிர்பந்திக்கப்பட்டார்.

லீருருவான், ஹூ, வென் மற்றும் இதர பேர்கள் அடையாள பூர்வமாக ஜனநாயக சீர்திருத்தங்களைக் கொண்டு வரும் கருத்தை மீண்டும் புதுப்பிக்க தற்காலிகமாக முயன்று வருகின்றனர். அரசாங்கம் சுதந்திர சந்தைக் கொள்கையை கடைப்பிடித்து வருவதற்கு எதிர்ப்பும் அதிருப்தியும் வளர்ந்து வருவதால் அவற்றை மட்டுப்படுத்த இத்தகைய முயற்சியில் இந்தக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதில் பழைய தலைவர்கள் புதிய தலைவர்களின் போக்கு குறித்து அச்சம் கொண்டிருக்கின்றனர். தியனென்மென் சதுக்க படுகொலைகள் நடைபெற்றதை புதிய தலைவர்கள் பகிரங்கமாக கண்டிக்கக் கூடும் என பழைய தலைவர்கள் ஜியாங் மற்றும் லீ பெங் போன்றோர் பயப்படுகின்றனர். ஜியாங்கும் லீபெங்கும்தான் அந்தப் படுகொலைகளுக்குக் காரணமாய் இருந்தவர்களாவர்.

புதிய முடிவுகள் எடுக்கும் குழுவின் மீதமிருக்கும் ஏழு உறுப்பினர்களில் ஆறுபேர் ஜியாங்கிற்கு நெருக்கமானவர்கள் என இனம் காணப்பட்டவர்கள்.

இரண்டாவது இடத்தில் இருப்பவர் 60 வயதான, துணைப் பிரதமர் வூ பாங்குவோ (Wu Bangguo), ஜியாங்கின் கோஷ்டி அரசியல் தளமான ஷாங்காயில் கட்சித் தலைவராகப் பணியாற்றியவர். அரசாங்கத்திற்கு சொந்தமான தொழிற்சாலைகளை சீரமைக்கும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் நான்கு கோடிக்கும் (40 million) மேற்பட்ட தொழிலாளர்களை வேலையில் இருந்து நீக்கியதற்கு மேற்பார்வையாளராக இருந்தவர். தேசிய மக்கள் அகல் பேரவை அடுத்த ஆண்டு நடக்கும்போது அதன் தலைவராக வூ தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

62 வயதான, ஜியா கிங்லின் பெய்ஜிங் கட்சி செயலாளர். அவர் தலைமைப் பீடத்தில் நான்காவது இடத்தில் இருக்கிறார். அவரது குடும்பத்திற்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டன. அவர் புஜியன் மாகாண தலைவராக இருந்தபோது, க்சியாமென் வர்த்தக மண்டலத்தில் மிகப் பெரிய கடத்தல் மோசடி 2000-ம் ஆண்டில் அம்பலப்படுத்தப்பட்டது. இராணுவம் சுங்க அதிகாரிகள் மற்றும் நகர நிர்வாக அதிகரிகளின் பாதுகாப்போடு யூவான் குவா குழுவினர் க்சியமென் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் வழியாக சீனாவிற்குள் 9.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பொருட்களைக் கடத்தினர் என்று குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டன. அது 2000 ஆண்டில் அம்பலப்படுத்தப்பட்டபோது, ஜியா மீது குற்றச்சாட்டுக்கள் வந்த நேரத்தில் அவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் விசாரணை எதுவும் நடைபெறாமல் ஜியாங் அவரைப் பாதுகாத்தார்.

ஐந்தாவது இடத்தில் இருப்பவர் 63 வயதன ஜெங் குயின்ஹோங் (Zeng Qinghong). இவர் தனது அதிகாரத்திற்கு மிஞ்சிய செல்வாக்குப் படைத்தவர் என்று நம்பப்படுகிறது. இவர் ஜியாங்கின் மிக நெருக்கமான ஆலோசகராய் இருந்து அவரது ஆதரவுடன் கட்சி படிநிலை அமைப்பு மூலம் கட்சியில் செல்வாக்கை வளர்த்துக் கொண்டார். ஜியாங்கின் "மூன்று பிரதிநிதித்துவங்களை" யும், இதர முக்கிய கொள்கைகளையும் ஜியாங்கோடு இணைந்து உருவாக்கியவர் என நம்பப்படுகிறது. 1999-ம் ஆண்டு பலுங் ஹாங் மத இயக்கம் ஒடுக்கப்பட்டது போன்ற முக்கிய கொள்கைகளில் ஜெங் முக்கிய பங்கு வகித்திருக்கிறார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பின் அன்றாட நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான அதிகாரம் படைத்த மத்திய குழு தலைமைச் செயலகத்துக்கு பொறுப்பு வகிக்கின்றார்.

மத்திய அதிகார குழுவில் ஆறாவது, ஏழாவது, எட்டாவது வரிசையில் இருப்பவர்கள் ஜியாங்கின் விசுவாசிகள். இவர்கள் பெய்ஜிங் ஆதிக்கத்தை, அதிகாரத்தை முக்கிய துறைமுக மாநிலங்களில் செயல்படுத்தி வருபவர்கள். இந்தத் துறைமுக மாகாணங்களில்தான் மிகப் பெரும்பாலும் சர்வதேச முதலீடுகள் வந்துகொண்டிருக்கின்றன. பொருளாதார வளர்ச்சியும் இந்த மாகாணங்களில்தான் குவியலாக வளர்கின்றன. ஷாங்காய் சீனாவின் முதலாளித்துவ கேந்திரமாக வளர்க்கப்பட வேண்டும் என்பதற்காக 63 வயதான ஹூவாங் ஜூ ஐ ஜியாங் தேர்ந்தெடுத்தார். ஹாங்காங் மற்றும் தைவானுக்குப் போட்டியாக ஷாங்காய் பகுதியை வளர்ப்பது இந்த நடவடிக்கையின் நோக்கமாகும். வூ குவான்ஜெங் (Wu Guanzheng) செழித்து வளர்ந்து வளரும் கிழக்கு கடற்கரை மாகாணமான சாங்டாங்கின் முன்னாள் கட்சித் தலைவர் மற்றும் லீ சாங்சுன் சீனாவின் பெரிய ஏற்றுமதி மாகாணமான ஹூவாங் டாங்கின் அரசாங்கத் தலைமைப் பொறுப்பை வகித்தவர்.

லீ பெங்கின் ஒரே ஆதரவாளர், 66 வயதான லுவோ கான். அவர் கட்சித் தலைமையில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார் மற்றும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பாதுகாப்பு தலைமைப் பொறுப்பை வகிக்கிறார். இவர் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் இயக்குநர். பிரதான நகர பகுதிகளில் மக்கள் ஆயுத போலீஸ் என்கிற துணைநிலை இராணுவ அமைப்பை நிறுவி இயக்கி வருகிறார். இண்டர் நெட் செயல்பாட்டை மூன்று லட்சம் உளவாளிகள் மற்றும் தகவல் தருவோர் மூலம் செய்தி அறிவிப்புக்கள், வெளியீடுகள் மற்றும் மின்மடல்களை கண்காணித்து வருகின்றார்.

அகல் பேராயம் முடிந்த இரண்டு நாட்களுக்குப் பின்னர், மக்கள் விடுதலை இராணுவ நாளிதழ் இராணுவத்தின் மிக உயிர் நாடியான ஆதரவைப் பாராட்டி எழுதியது; ஹூ ஜிண்டாவோ தலைமையில் உருவாகியுள்ள நான்காவது தலைமுறை தலைவர்களை அந்த நாளிதழ் பாராட்டி உள்ளது. அதன் மூலம் இராணுவம் மற்றும் ஆயுதம் தாங்கிய போலீசாரின் விசுவாசத்தை அறிவித்து சமிக்கை செய்தது.

தற்போது சீனாவில் தலைமைப் பொறுப்பிற்கு வந்துள்ள தலைவர்களின் கோஷ்டி அபிமானங்கள், மற்றும் செயல்திட்ட தந்திர வேறுபாடுகள் எப்படி இருந்தாலும், புதிய தலைவர்கள் முதலாளித்துவ சந்தையை நிலைநாட்டுதில் உறுதி கொண்டிருக்கின்றனர். வெளிநாட்டு முதலீடுகளை சீனாவில் அனுமதிப்பதிலும், கொள்கைகளை சீரமைப்பதிலும் புதிய தலைமை உறுதியோடு செயல்பட்டு வருவதால், ஒரு சிறிய செல்வந்த வசதி படைத்த குழுவிற்கும், மிகப் பெரும்பாலான மக்கள் கூட்டத்தை உள்ளடக்கிய சாதாரண தொழிலாளர் மற்றும் விவசாயிகளுக்கும் இடையே மிகப் பெரும் இடைவெளி உருவாகிவிட்டது. அவர்களது பொதுவான ஒரு அச்சம் என்னவென்றால், 1989-ம் ஆண்டில் நடைபெற்றதைவிட பலமடங்கு பிரம்மாண்டமான கிளர்ச்சி வெடிக்கக் கூடும் என்பதுதான். ஒவ்வொரு தலைவரும் தங்களது அதிகாரத்தை விடாப்பிடியாக பிடித்துக் கொள்ள, அரசியல் ரீதியாக திவாலான ஆட்சியை நிலைநாட்ட, மிகக் கொடூரமான முறைகளை பயன்படுத்தும் அவர்களது விருப்பத்தை அவர்களது தனிப்பட்ட வரலாறுகள் விளக்கிக் காட்டுகின்றன.

See Also :

சீன கம்யூனிஸ்ட் கட்சி முதலாளித்துவ செல்வந்தத் தட்டுக்கு கதவு திறக்க தானே அறிவிப்பு

Top of page