World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

Bush picks Kissinger to head official probe: new stage in the September 11 coverup

அதிகாரபூர்வ விசாரணைக்கு புஷ், கிஸ்ஸிங்கரை தேர்ந்தெடுத்தார்: செப்டம்பர்-11 நிகழ்வுகளின் பின்னணியை மூடிமறைப்பதில் புதிய கட்டம்

By the Editorial Board
28 November 2002

Use this version to print | Send this link by email | Email the author

செப்டம்பர்-11-ல் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதல் குறித்து அமெரிக்காவில் அதிகாரபூர்வமாக விசாரணை நடத்தவதற்கான குழுவின் தலைவராக, அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கிஸ்ஸிங்கர் நியமிக்கப்பட்டார். அது ஒரு சுதந்திரமான நடுநிலை விசாரணையாக இருக்காததுடன் வெறும் கண்துடைப்பிற்கு உத்தரவாதம் செய்துதரப்பட்டிருக்கிறது. அமெரிக்க நாட்டின் வரலாற்றிலேயே மிகக் கொடூரமான பயங்கரவாதிகள் தாக்குதல் தொடர்பாக எந்தவிதமான, ஆழமான விசாரணைக்கும், புஷ் நிர்வாகம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், கிஸ்ஸிங்கரை அந்த விசாரணைக் கமிஷன் தலைவராக நியமித்திருப்பது என்ற புஷ் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை பொதுமக்களையே அவதூறு செய்வதாக அமைந்திருக்கின்றது.

இந்த நியமனத்தின் மூலம் சர்வதேச மக்கள் கருத்தின் முன்னர் அமெரிக்கா தனது மூக்கை சொறிந்து கொண்டு நிற்கின்றது. கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்கா, சர்வதேச அளவில் தலையிட்ட மிக பயங்கரமான ரத்தம் சிந்திய தலையீடுகளில் நேரடியாக பங்குபெற்றவர், இயக்கியவர் என்ற கெட்ட பெயரை பெற்ற ஒருவரை விசாரணைக் குழுவின் தலைவராக இன்றைய அமெரிக்க அரசு நியமித்திருக்கின்றது.

அவரது நியமனத்தின் மூலம் சுதந்திரமான விசாரணை என்பது, கேலிக் கூத்தாக்கப்பட்டிருக்கிறது. கிஸ்ஸிங்கர், செப்டம்பர்-11 இனதும் அதற்கு பின்னர் நடைபெற்ற விசாரிக்கவேண்டிய பல நடவடிக்கைகளில் சம்மந்தப்பட்ட பலருக்கு முன்னாள் நெருங்கிய சகாவாக இருந்தவர். இவர் 1969முதல் 1976வரை அமெரிக்க வெளியுறவு கொள்கைக்கு அவர் பொறுப்பாளியாகயிருந்தார். இவர் பதவியிலிருந்த கடைசி இரண்டாண்டுகளில் டொனால்டு ரம்ஸ்பெல்ட் அமெரிக்க அரசின் தலைமை தளபதியாகவும், பின்னர் பாதுகாப்பு தலைமை தளபதியாக இருந்தார். ரம்ஸ்பெல்ட் அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகனை பொறுப்பை ஏற்றபோது, இன்றைய குடியரசுத் தலைவர் ரிச்சர்ட் சென்னி தலைமை தளபதியாக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அப்போது இன்றைய குடியரசுத் தலைவரின் தந்தை மூத்த ஜோர்ஜ் புஷ், மத்திய உளவுத்துறையின் (CIA) தலைவராக இருந்தார்.

கிஸ்ஸிங்கர் நியமனம் அமெரிக்க நாடாளுமன்ற, ஜனநாயக கட்சியினரால் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவருக்குத் துணையாக செனட் சபையின் பெரும்பான்மைத் தலைவர் ஜோர்ஜ் மிற்சலை (George Mitchell) ஜனநாயக கட்சியினர் தேர்ந்தெடுத்தனர். அவர் வடக்கு அயர்லாந்து மத்திய கிழக்கு போன்ற கலவர கொந்தளிப்பு பகுதிகளில் அமெரிக்க தூதரக பிரதிநிதியாக பணியாற்றியவர். அப்படிப்பட்டவரை விசாரணைக் கமிஷனின் துணைத் தலைவராக நியமித்திருக்கிறார்கள்.

அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை நேரடியாக கிஸ்ஸிங்கர் வழிநடத்திய ஆண்டுகளில் அவர் பல்வேறு படுகொலைகளுக்கும், அரசாங்க பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் பச்சைக்கொடி காட்டியதால், பல்வேறு நாடுகளில் அவரது நடிவடிக்கைகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. ஐரோப்பாவிலும், இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும் கிஸ்ஸிங்கர் சுதந்திரமாக இனி சுற்றுப்பயணம் செய்ய முடியாது. பிரேசில் நாட்டில் சென்ற ஆண்டு மனித உரிமைகள் மீறல் தொடர்பான கண்டனங்கள் எழுந்ததால், அவரது பிரேசில் பயணம் ரத்துச் செய்யப்பட்டது. அவர் பாரீஸ் நகரத்திற்குச் சென்றிருந்தபோது, சிலி நாட்டில் அமெரிக்கா ஆதரித்த இராணுவ சர்வாதிகாரம் பிரான்ஸ் நாட்டு பிரஜை ஒருவரை கொலை செய்த வழக்கு தொடர்பான பிரான்ஸ் நாட்டு போலீஸார் அவரை விசாரணைக்காக அழைத்தனர். சிலி நாட்டு இராணுவ தளபதி ஜெனரல் ரெனே ஷ்னைடர் (Rene Schneider) கொலை செய்யப்பட்டதில் அவரது பங்கு குறித்து சிலி நாட்டிலும், அமெரிக்காவிலும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. அந்த தளபதி கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து சிலி நாட்டில் ஜெனரல் ஒகஸ்டோ பினோசேயின் (Augusto Pinochet) சர்வாதிகாரத்திற்கு வழிவகை ஏற்பட்டது.

கிஸ்ஸிங்கர் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும், வெளியுறவு அமைச்சராகவும், முதலில் நிக்சன் காலத்திலும், அதற்குப் பின்னர் ஜெனரல் போர்டு காலத்திலும் இருந்தபோது அமெரிக்க அரசாங்கத்தின் குற்றச் செயல்களின் தாக்கம் இல்லாத நாடே உலகில் இல்லையென்றே கூறலாம்:-

வங்கதேசம்:-

1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் ஜெனரல் யாகியா கான், இராணுவப் புரட்சியை செய்ததற்கு கிஸ்ஸிங்கர் அங்கீகாரம் அளித்தார். முன்னாள் கிழக்குப் பாகிஸ்தானி பகுதியைச் சார்ந்த வங்காளி மக்கள் புரட்சியில் ஈடுபட்டபோது அந்த இரத்தம் சிந்தும் புரட்சியை ஒடுக்குவதற்கு நடைபெற்ற முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

கிரேக்க நாடு:-

1967 ஆம் ஆண்டு அதிகாரத்தை பறித்துக்கொண்ட கிரேக்க நாட்டு இராணுவ தளபதிகள் நடத்திய சித்திரவதை ஆட்சியோடு கிஸ்ஸிங்கர் நெருக்கமான உறவு வைத்திருந்தார்.

இந்தோனேஷியா:-

1975-ம் ஆண்டு கிழக்கு தீமோர் மீது இந்தோனேஷிய இராணுவ ஆட்சியாளர் சுகார்டோ படையெடுத்தார். அப்போது கிஸ்ஸிங்கரும், போர்டும் அந்த நாட்டிற்கு விஜயம் செய்தனர். இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு முன்கூட்டியே இரண்டு அமெரிக்கத் தலைவர்களும் ஒப்புதல் வழங்கினர்.

சிலி நாடு:-

1973-ம் ஆண்டு நடைபெற்ற இராணுவ புரட்சிக்கான ஆயத்தங்களை அமெரிக்க உளவு அமைப்பான CIA மேற்க்கொண்டபோது, கிஸ்ஸிங்கர் அந்த நடவடிக்கைகளை நெருக்கமாக கண்காணித்து வந்தார். அந்த இராணுவ சதியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சமூக ஜனநாயக இயக்கத்தலைவர் அலன்டே மற்றும் 20,000- சிலி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது ``ஒரு நாடு அந்நாட்டு மக்களது பொறுப்பில்லாத, நடவடிக்கைகள் காரணமாக கம்யூனிஸ்ட் நாடாக மாறுவதை அமெரிக்கர்களாகிய நாம் ஒதுங்கி நின்று ஏன் வேடிக்கை பார்க்க வேண்டும்? என்று கிஸ்ஸிங்கர் கேட்டார்.

ஆர்ஜன்டினா:-

கிஸ்ஸிங்கர் 1976-ல் நடைபெற்ற அங்கு நடந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ஆதரித்தார். அதன் மூலம் இராணுவ சர்வாதிகாரம் அந்நாட்டில் உருவாயிற்று. சர்வதேச அரங்குகளில், ''மக்கள் காணாமல் போய்விடுவது,'' ''மரணகுழுக்கள்'' என்ற சொற்கள் உலாவ ஆரம்பித்தது ஆர்ஜன்டினா சர்வாதிகாரிகளின் கொடூரச் செயல்களுக்குப் பின்னர்தான்.

ஆஃப்ரேஷன் கொன்டோர் (Operation Condor):-

சிலி, ஆர்ஜன்டினா, பிரேசில், பொலிவியா, பராகுவே ஆகிய நாடுகளில் ஒட்டுமொத்தமாக இடதுசாரிகளை படுகொலை செய்யும் இராணுவ சர்வாதிகார ஆட்சிகளின் திட்டத்திற்கு கிஸ்ஸிங்கர் ஒப்புதல் தந்தார்.

மத்திய கிழக்கு:-

1973 இன் அரபு, இஸ்ரேல் போருக்குப் பின்னர் இஸ்ரேல் அரசிற்கு பெருமளவில் ஆயுதங்களை வழங்கவும், இஸ்ரேலின் ஆயுத குவிப்பிற்கும் கிஸ்ஸிங்கர் ஆதரவு தந்தார். அப்போது நடைபெற்ற போரில் அமெரிக்காவும், சோவியத் யூனியனும், அணு ஆயுதப்போரில் ஈடுபடுமோ என்ற அளவிற்கு நெருக்கடி தோன்றியது. அப்போது பாலஸ்தீன மக்களை கைவிட்டுவிடுமாறும் இஸ்ரேலுடன் சமாதானத்தை ஏற்படுத்திக்கொள்ளுமாறும் அரபு நாடுகளின் முதலாளித்துவ ஆட்சிகளை தனது இராஜதந்திரத்தின் மூலம் தூண்டினார்.

அமெரிக்க ஏகாதிபத்தியம், தென்கிழக்கு ஆசியாவில் புரிந்த குற்றங்களில் மறைக்க முடியாத அளவிற்கு, கிஸ்ஸிங்கரும், நிக்சனும் சம்மந்தப்பட்டிருக்கின்றனர். கம்போடியாவிலும், லாவோஸிலும் இரகசிய குண்டு வீச்சுக்களுக்கும், வடக்கு வியட்நாமில் ''கிறிஸ்துமஸ் குண்டு வீச்சுக்களும்'', கம்போடியா மீது 1970-ம் ஆண்டு படையெடுப்பு நடத்தியதன் விளைவாக, கமர்ரூஜ் மற்றும் பொல்போட் அமைப்புக்கள் உருவாயின. ஏழு ஆண்டுகள் நீடித்த வியட்நாம் போர் பத்து லட்சத்திற்கு மேற்பட்ட வியட்நாம் மக்களையும், 30,000 அமெரிக்கர்களையும் பலிகொண்டது.

கிஸ்ஸிங்கர் போரை எதிர்க்கும் அமெரிக்க மக்கள் மீது சட்ட விரோதமாக, அரசியல் வேவு பார்க்கும் கொள்கையை உருவாக்கியவர். அதனுடைய இறுதி வடிவம்தான் வாட்டர்கேட் நெருக்கடி (Watergate crisis) அந்த நெருக்கடியை தொடர்ந்து நிக்சன் ஆட்சி வீழ்ந்தது. 1971ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு குழுவில் தனக்கு உதவியாளர்களாக பணியாற்றியவர்களது தொலைபேசி தொடர்புகளையே சட்ட விரோதமாக வேவு பார்க்க கிஸ்ஸிங்கர் கட்டளையிட்டார். இது தொடர்பாக பாதுகாப்பு குழுவின் முன்னாள் அதிகாரி டானியல் எல்ஸ்பேர்க் (Daniel Ellsberg) பென்டகன் இரகசிய தஸ்தாவேஜுகளை பத்திரிகைகளுக்கு வெளிவிட்டதை தொடர்ந்து, எல்ஸ்பேர்க்கின் மருத்துவரது அலுவலகங்களில் திருட்டு வேலைகளை செய்வதற்கு, ''பொருத்துனர் குழு'' (plumbers unit) ஒன்றை நிக்சன் நியமித்தார். வாட்டர்கேட் கட்டிட வளாகத்தில் தான் அப்போது, ஜனநாயகக் கட்சியின் தேசியக்குழு தலைமையகம் செயல்பட்டது.

செப்டம்பர் 11ன் நிகழ்ச்சிகளின் உண்மையை கண்டுபிடிக்க வேண்டுமென்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள குழுவிற்கு கிஸ்ஸிங்கருக்கு தலைமை பதவி தரப்பட்டிருக்கிறது. அவரது அரசியல் பின்னணியை கருத்தில் கொண்டு பார்க்கும்போது, இந்த நியமனம், அரசியல் ஆத்திரம் மூட்டும் நடவடிக்கையாகவும், கபட நாடகமாகவும் தெரிகின்றது. ஏனென்றால், அண்மைக்கால அமெரிக்க வரலாற்றில், அவரது சகசதி ஆலோசகரான ரிச்சர்ட் நிக்சன் நீங்கலாக வேறு எவரும் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடுவதிலும், படுகொலைகளை மறைப்பதிலும், திரைமறைவு தந்திரங்களை செய்வதிலும் இணையானவர்கள் இருந்ததில்லை.

தனது நியமனத்தை அறிவிக்கும் பத்திரிகையாளர் பேட்டியில் ''உண்மைகள் எங்கு இட்டுச் செல்கின்றனவோ, அங்கு இக்குழுவும் செல்லும்'' என கிஸ்ஸிங்கர் அறிவித்தார். ''எங்களுக்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை, மற்றும் நாங்கள் எந்த கட்டுப்பாடுகளையும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்'' எனவும் கிஸ்ஸிங்கர் குறிப்பிட்டார். எவ்வாறிருந்தபோதிலும், 1977-ம் ஆண்டு இவர் பதவி விலகியபோது, தனது பதவி காலத்து வெளியுறவு மற்றும் தேசிய பாதுகாப்பு குழுவின் தஸ்தாவேஜுகள் அனைத்தையும் நாடாளுமன்ற நூலகத்தில் பாதுகாப்பாக வைத்தார். அத்துடன் நிற்கவில்லை தான் இறந்து ஐந்தாண்டுகள் பூர்த்தியாவதற்கு முன்னர் அந்த தஸ்தாவேஜுகள் எதையும் பொதுமக்களுக்கு வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையும் விதித்திருக்கிறார்.

முன்னாள் வெளியுறவு அமைச்சரை நியமிக்கும் முடிவை புஷ் அறிவித்தபோது, ''டாக்டர் கிஸ்ஸிங்கரும் நானும் ஒரே உறுதிப்பாடுகளை பகிர்ந்துகொள்கிறோம்'' என அறிவித்தார். அந்த நிகழ்ச்சியில் அந்த சொற்றொடர் மட்டுமே உண்மையாகும். புஷ், மற்றும் கிஸ்ஸிங்கர் ஆகிய இருவரும் அமெரிக்க இராணுவ புலனாய்வு அமைப்புக்களை பாதுகாப்பதில் உறுதி கொண்டவர்கள். செப்டம்பர் 11ன் சம்பவங்களில் இந்த இராணுவ புலனாய்வு அமைப்புக்கள் தொடர்பு கொண்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றது. குறிப்பாக, மத்திய உளவு அமைப்பு, மத்திய புலனாய்வு அமைப்பு, மற்றும் இராணுவ தலைமையகமான பென்டகன் ஆகியவை மிகுந்த கவனக்குறைவோடு கடமை தவறிய குற்றம் புரிந்திருக்கின்றன. விமானங்களை கடத்திய தற்கொலை குழுவினரான பயங்கரவாதிகளுக்கும், அரசு ஏஜென்சிகளை சார்ந்தவர்களுக்குமிடையே ஏதோ ஓர் மட்டத்தில் நேரடியாக ஒத்துழைப்பு இருந்ததற்கான சாத்தியப்பாடுகள் உள்ளன.

செப்டம்பர் 11ன் நிகழ்ச்சிகளுக்கான சூழ்நிலைகள் குறித்து நியாயமான விசாரணைகள் எதுவும் நடைபெறாமல் தடுப்பதற்கு புஷ் நிர்வாகம் ஓர் ஆண்டு மேல் போராடியது. ஆரம்பத்தில் எந்த விசாரணையும், வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதற்குப் பின்னர், அமெரிக்க நாடாளுமன்ற இரு அவைகளின் புலனாய்வு குழுக்கள் விசாரணைக்கு அதுவும் பெரும்பாலும் இரகசிய விசாரணைக்கு சம்மதித்தார்கள். அந்தக்குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் தேசிய பாதுகாப்பு அமைப்பை பாதுகாத்து நிற்பவர்கள்.

இத்தகைய அதிகாரம் இல்லாத, குழுவின் நடைமுறையால் அரசாங்கத்தின் மேல் பரவலாக எழுந்துள்ள சந்தேகத்தை அடக்க முடியவில்லை. அரசாங்கத்திற்கு இத்தாக்குதலில் சம்மந்தம் உண்டு என்பதிலும், விசாரணையை மூடி மறைப்பதில் அரசாங்கம் சம்மந்தப்பட்டிருப்பதாகவும், பொதுமக்களிடையே சந்தேகம் பரவலாக வளர்ந்தது. தாக்குதலில் பலியானவர்களது குடும்பத்தைச் சார்ந்தவர்கள் தீவிர விசாரணையை அரசு எதிர்ப்பதாக பகிரங்கமாகவே அரசாங்கத்தின் மீது குற்றம்சாட்டியதால், சுதந்திரமான விசாரணைக் குழுவை நியமிக்குமாறு புஷ் நிர்ப்பந்திக்கப்பட்டார்.

கிஸ்ஸிங்கர் அந்த அமைப்பிற்கு தலைமை தாங்க தேர்ந்தெடுத்திருப்பது, செப்டம்பர் 11 தொடர்பாக அமெரிக்க அரசு மறைக்க விரும்புவது அதிகம் இருக்கிறது என்பதை அமெரிக்க அரசு ஒப்புக்கொள்வதையே எடுத்துக்காட்டுகின்றது. புஷ் நிர்வாகம் நாடாளுமன்ற ஜனநாயகக் கட்சியினர் மற்றும் செய்தித்துறையினருடன் இணைந்து கைகோர்த்து நின்று உண்மையை ஆழக்குழி தோண்டி புதைத்துவிட முடிவு செய்திருக்கின்றது.

See Also :

செப்டம்பர் 11 விசாரணையிலிருந்து தப்பி ஓட வெள்ளை மாளிகை ஆத்திரமூட்டலை பயன்படுத்துகிறது

செப்டம்பர் 11 விசாரணை தொடக்கம்; புஷ், காங்கிரஸ் அரசாங்கத்தின் பங்கை மூடி மறைக்க முயற்சி

சதியும் மூடி மறைப்பும்: புஷ் நிர்வாகமும் செப்டம்பர் 11ம்

அமெரிக்க அரசாங்கம் செப்டம்பர் 11 தாக்குதல் தொடர்பாக எச்சரிக்கை செய்யப்பட்டதா?
பகுதி 1: முன்கூட்டிய எச்சரிக்கைகள்
பகுதி 2: விமானக் கடத்தல்காரர்களைக் கண்காணித்தல்
பகுதி 3: அமெரிக்க ஐக்கிய அரசுகளும் மத்திய கிழக்கு பயங்கரவாதமும் 
பகுதி 4: விசாரணை செய்ய மறுப்பு

Top of page