World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பால்கன்

European Rapid Reaction Force to deploy in Macedonia

மசடோனியாவில் ஐரோப்பிய அதிரடிப்படையை நிறுத்த ஏற்பாடு

By Paul Stewart
1 February 2003

Use this version to print | Send this link by email | Email the author

ஐரோப்பிய யூனியன் (EU) மார்ச் மாதம் மசடோனியாவில் நேட்டோவின் ஆம்பர் பொக்ஸ் (Amber Fox) திட்டத்துக்கு பதிலாக தனது சொந்த அதிரடிப்படையை நிறுத்துவதற்கு தயாராகி வருகிறது. ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் சேவியர் சோலனோ, தமது முதலாவது அதிரடிப்படைப் பிரிவு (EURRF) அனுப்பப்படுவது ஐரோப்பிய யூனியன் - நேட்டோவின் ''உறவுகளை வேறுபட்ட அடிப்படையில்'' அமைக்கும் எனக் கருத்து தெரிவித்தார். அவரது கருத்துக்களைப் பார்க்கும்போது அமெரிக்காவை நீக்கிவிட்டு சுதந்திரமான இராணுவ வல்லமையைப் பெருக்கிக்கொள்ள வேண்டும் மற்றும் பெருக்கி கொள்ள முடியும் என்பதை நிரூபிக்க மசடோனியாவிற்கு இப்படைகளை அனுப்புகிறார்கள் என்பது தெளிவாகிறது.

மசடோனியாவில் நேட்டோவின் இராணுவ நடவடிக்கை 2001 இளவேனிற் காலத்தில் துவங்கியது. அப்போது அல்பேனிய பிரிவினைவாதிகளின் தேசிய விடுதலைப் படையானது, (NLA) கொசாவோவிலிருந்து, மசடோனியாவிற்குள் புகுந்து மசடோனிய அரசிற்கு எதிரான ஆயுதந்தாங்கிய கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். NLA அமெரிக்கப்படைகளுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்ததுடன், அமெரிக்க இராணுவம் NLA வை மசடோனிய படைகளிடமிருந்தும் காப்பாற்றின. பின்னர் நேட்டோ படைகளின் அளவு 3000 திலிருந்து 800 ஆக குறைக்கப்பட்டதோடு, இதிலிருந்த பெரும்பாலான ஐரோப்பிய யூனியன் துருப்புக்கள் கண்கானிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தற்போதய (EURRF) அதிரடிப்படைப்பிரிவுகள் ஆகாய நீலத் தொப்பிகளுடன், ஐரோப்பிய யூனியன் சின்னமும் தேசிய சீருடைகளுடன் இணைக்கப்பட்டு மசடோனியாவிற்கு அனுப்பப்படும். சென்ற டிசம்பர் நேட்டோவுடன் கையெழுத்திடப்பட்ட உடன்பாட்டின் பின்பு, பெல்ஜியத்தின் தென்பகுதியிலுள்ள மொன்ஸ் என்ற இடத்தில் நேட்டோவிலுள்ள ஐரோப்பிய யூனியன் துருப்புகளின் தலைமையகம் உருவாக்கப்பட்டது. ஐரோப்பாவிற்கான நேட்டோ துணை தலைமை கமாண்டர் ஜேர்மனியைச் சேர்ந்த அட்மிரல் ரெய்னர் பீஸ்ட் தலைமையில் இத் தலைமையகம் இயங்கி வருகின்றது.

ஜனவரி தொடக்கத்தில் பொஸ்னியா-ஹெர்சகோவினாவிற்கு ஐரோப்பிய யூனியனின் போலீஸ் படை அனுப்பப்பட்டதுடன், தற்போது இராணுவப் படையை அனுப்பும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. டென்மார்க் போலீஸ் கமிஷ்னர் தலைமையில் 500 அதிகாரிகள், பொஸ்னியா-ஹெர்சகோவினா சிவில் போலீஸ் அதிகாரிகளுக்கு அடுத்து மூன்றாண்டுகளில் பயிற்சியளிப்பார்கள்

சராஜேவோ நகரில் இந்தப் படைப்பிரிவு தொடக்கவிழாவில் உரையாற்றிய சோலனோ ''இப்போது முதல் தடவையாக ஐரோப்பிய யூனியனின் அதிரடிப்படையை தனிச் சின்ன முத்திரையோடு தொடக்கி வைப்பதில் நாம் உணர்ச்சிபூர்வமான பெருமை அடைகிறோம். ஐரோப்பிய கண்டத்தின் பாதுகாப்பிற்கும் நிலையான தன்மைக்கும் இணைந்து பணியாற்ற இந்தப்படை வலுவான சின்னமாக செயல்படும்'' என்று குறிப்பிட்டார்.

சென்ற டிசம்பரில் கோப்பன்ஹெகன் நகரில் நடைபெற்ற ஐரோப்பிய யூனியன் மாநாட்டில், ஐரோப்பிய யூனியன் தலைவர் உரையாற்றும் போது வியப்பூட்டும் கோரிக்கை ஒன்றை வைத்தார். நேட்டோவின் பொஸ்னியா-ஹெர்சகோவினா பணிகள் முழுவதையும் ஐரோப்பிய யூனியன் தலைமையில் ஒப்படைக்க வேண்டும் என்பது தான் அந்தக்கோரிக்கையாகும். இதற்கு பதிலளிக்கும் வகையில் நேட்டோவின் அதிகாரி ஒருவர் ''ஐரோப்பிய யூனியன் தலைவர் இப்போது தான் தனது முடிவை அறிவித்திருக்கிறார். இதற்கு முன்னர் நேட்டோவையோ அல்லது பொஸ்னியாவையோ அல்லது SFOR யோ கலந்து ஆலோசிக்கவில்லை. இப்படி அறிவிப்பது உயர்நிலைக்கு உகந்தது அல்ல'' என்று குறிப்பிட்டார். இந்த அறிவிப்பிற்குப்பின் பொஸ்னியாவிலுள்ள சர்வதேச பிரதிநிதி பேடி ஆஸ்டன் இந்த ஆலோசனை குறித்து சோலனோவுடன் விவாதிப்பதற்காக அழைக்கப்பட்டார்.

ஐரோப்பிய யூனியன், மசடோனியாவில் இராணுவ நடவடிக்கைகளை தன் பொறுப்பில் எடுத்துக்கொள்வதற்கு இதற்கு முன்னர் இரண்டு முறை காலக்கெடுவை நிர்ணயித்தபோதும் அவற்றை ஐரோப்பிய யூனியன் தவற விட்டுவிட்டது. முதலாவது தடவை ஐரோப்பிய யூனியனின் அரசுகளுக்கிடையிலும் தனித்தனியாக ஐரோப்பிய நாடுகளுக்கு உள்ளேயும் அரசியல் பிளவுகள் நிலவியதால் ஒரு இராணுவப் படையைத் திரட்ட முடியவில்லை. இரண்டாவது தடவை நேட்டோவின் இராணுவத் தளங்கள் மற்றும் வசதிகளை பயன்படுத்துவதை துருக்கி தனது ரத்து அதிகாரத்தின் மூலம் தடுத்து நிறுத்திவிட்டது. இந்த வசதிகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. சைபிரஸ் தொடர்பாக கிரேக்கத்திற்கும் துருக்கிக்கும் இடையே நிலவுகின்ற தகராறுகளில் ஐரோப்பிய யூனியனின் படை பயன்படுத்தப்படக்கூடாது என்று துருக்கி கோரியது. அடுத்த சுற்று ஐரோப்பிய யூனியன் விரிவாக்கத்தின் போது, துருக்கியை யூனியன் உறுப்பினராக சேர்த்துக் கொள்வது தொடர்பாக பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் துருக்கி விரும்பியது.

அண்மையில் ஐரோப்பிய யூனியன் விரிவு படுத்தப்படுவது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றபோது, சைபிரஸ் தொடர்பாக எதிர்காலத்தில் உருவாகும் நெருக்கடிகளில் ஐரோப்பிய அதிரடிப்படை பயன்படுத்தப்படமாட்டது என்று துருக்கி ஓர் உடன்பாட்டை தனக்கு சாதகமாக பெற்றுக்கொண்டது. அப்படியிருந்தும் ஜேர்மனியின் தலைமையிலும், பிரான்சின் தலைமையிலும் இயங்கி வருகின்ற ஐரோப்பிய யூனியன் துருக்கிக்கு உறுப்பினர் அந்தஸ்தை தர மறுத்து, அதனது மனுவை 2004 ஆம் ஆண்டில் ''பரினைக்கு'' எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அறிவித்தது. துருக்கிக்கும் அமெரிக்காவிற்கும் நெருக்கமான உறவுகள் நிலவுவதை ஒரு பிரஞ்சுத் தூதர் சுட்டிக்காட்டி, ஐரோப்பிய யூனியனில் துருக்கியை உறுப்பினராக சேர்த்துக் கொள்வது என்பது அமெரிக்காவிற்கு, ஐரோப்பிய யூனியனில் உறுப்பினர் அந்தஸ்தை தருவதற்கு சமமானதாக ஆகிவிடும் என்றும் குறிப்பிட்டார்.

இப்படி ஐரோப்பிய யூனியன் எடுத்த நடவடிக்கை துருக்கி அரசையும் புஷ் நிர்வாகத்தையும் ஆத்திரம் கொள்ளச் செய்தது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொலின் பவல் ஐரோப்பிய யூனியன் முடிவை கண்டித்து கடுமையான வாசகங்கள் அடங்கிய கடிதம் ஒன்றை அனுப்பினார்.

அதிரடிப்படை அமைக்கப்படுவதை சீர் குலைக்கும் வகையில் கடந்த செப்டம்பர் மாதம் தெளிவான முயற்சி ஒன்றை அமெரிக்காவின் நேட்டோத் தளபதிகள், நேட்டோவின் சார்பிலேயே இத்தகைய படை ஒன்றை அமைப்பதற்கான ஆலோசனைகளை வெளியிட்டனர். இந்த நேட்டோ அதிரடிப்படையில் முக்கியமாக 20,000 ஐரோப்பிய துருப்புகள் இடம் பெற்றிருக்கும் என்றும், அவற்றில் தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படைப் பிரிவுகள் இடம் பெற்றிருக்கும் என்றும் நேட்டோவின் அமெரிக்கத் தளபதிகள் தெரிவித்தனர். இந்த நேட்டோ அதிரடிப்படைபிரிவு ஐரோப்பிய யூனியன் இராணுவத்திற்கு வசதிப்படாத இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அமெரிக்க அதிகாரிகள் வலியுறுத்தி கூறியதாக Euobserver பத்திரிகையில் செய்திகள் வெளியிடப்பட்டன.

ஐரோப்பிய யூனியனுடன் கலந்து ஆலோசிக்காமல் டிசம்பர் மாதம் பராக்கில் நடைபெற்ற நேட்டோ நாடுகளின் உச்சி மாநாட்டின்போது, நேட்டோ அதிகாரிகள் உத்தேச அதிரடிப்படை பற்றிய விபரங்களை வெளியிட்டனர். அப்படியிருந்தும் இதுவரை இரண்டு படைகளுக்குமிடையே ஒத்துழைப்புத் தொடர்பான உடன்பாடு எதுவும் நடைமுறையில் இல்லை. நேட்டோ அதிகாரிகள், நேட்டோ அதிரடிப்படைக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று வலியுறுத்தி வருவதால் ஐரோப்பிய அதிரடிப்படைக்கான வசதிகள் குறைக்கப்படும் என்று குறிப்பிட்டனர்.

1999 முதல் மூத்த பிரஞ்சு ஜெனரல்கள், இராஜாங்கத்துறை செயல்பாட்டு நடைமுறைகளுக்கு எந்த விதமான மரியாதையும் கொடுக்காமல் தொடர்ந்து ஐரோப்பிய யூனியனின் அதிரடிப்படை நேட்டோ வுடன் கலந்துரையாடாமலேயே சுதந்திரமாக வளரவேண்டும் என்று விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். 2002 மார்ச் மாதம் மசடோனியாவில் இராணுவ நடவடிக்கையை மேற்கொள்வது தொடர்பாக ஐரோப்பிய யூனியன் பகிரங்கமாக விவாதித்தது. அப்போது பிரஞ்சு ஜனாதிபதி ஜாக் சிராக் ''ஐரோப்பா தனது சொந்த முயற்சியிலேயே நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். நேட்டோவிற்கு கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை'' என்று குறிப்பிட்டார்.

ஐரோப்பிய யூனியன், நேட்டோவின் இராணுவ வசதிகளை பயன்படுத்திக் கொள்வதற்குப் பதிலாக தனது சொந்தமான, நேட்டோவிற்கு தொடர்பில்லாத இராணுவ தலைமையகங்களை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று பிரான்ஸ் வாதிட்டது. பிரான்சினுடைய ஆலோசனைகளை இதர ஐரோப்பிய அரசாங்கங்கள் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டன. ஏனென்றால் ஏதாவது ஒரு ஐரோப்பிய நாடு தனது இராணுவ வசதிகளை பயன்படுத்தி, புதிய ஐரோப்பிய யூனியன் அதிரடிப்படைப் பிரிவை தனது நிலையை வலுப்படுத்திக் கொள்ளவதற்காக பயன்படுத்தக்கூடும் என்ற கவலையின் காரணமாகவே பிரான்சின் யோசனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ஐரோப்பிய யூனியன் தனியாக அதிரடிப்படை அமைப்பதை சீர்குலைப்பதற்காக புஷ் நிர்வாகம் முயன்று வருவதுடன், பிரான்சின் கருத்துகளுக்கு பெருமளவில் நம்பகத்தன்மை உருவாகின்ற முறையில் புஷ் நிர்வாகம் நடந்து கொள்கிறது. ஐரோப்பிய யூனியனின் தனிப்படை உருவாகுவது உறுதியாகிக் கொண்டு வருவதால், ஐரோப்பிய நாடுகளின் அரசியல் கட்சிகளும், பாராளுமன்றங்களும் இந்தப்படைப்பிரிவை அமைப்பதற்கு ஆதரவாகவோ அல்லது இதற்கு எதிராகவோ அரசியல் நிலையை எடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.

சென்ற மாதம் பிரிட்டன் வெளியுறவுத் துறைக்கும் பிரிட்டனின் பாதுகாப்புத்துறைக்கும் இடையில் பரிமாறிக் கொள்ளப்பட்ட கடிதப் போக்குவரத்துக்கள், அதன் நிர்வாகத்திற்குள்ளேயே கடுமையான அரசியல் கருத்து வேறுபாடுகள் நிலவுவதை வெளிப்படுத்தின. பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் ஜாக் ஸ்ட்ரோ மசடோனியாவில் ஐரோப்பிய யூனியன் படைகளுடன் பணியாற்றுவதற்காக பிரிட்டனின் துருப்புக்கள் அனுப்பப்படவேண்டும் என்று கோரியதுடன், எதிர்காலத்தில் பிரிட்டனை அவர்கள் ஒதுக்கி விடுவார்கள் என்ற அச்சத்தையும் தெரிவித்தார். ஆனால் பிரிட்டனின் பாதுகாப்புத் துறை ஸ்டாரோவின் ஆலோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, மசடோனியாவில் இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு ஐரோப்பிய யூனியனின் படைக்கு வல்லமையில்லை என்றும் கூறியது. ஏற்கெனவேயே மசடோனியாவில் நடைபெறுகின்ற குழப்பம் அத்து மீறி சென்று கொண்டிருப்பதுடன், இது பால்கன் பிராந்தியம் முழுவதிலும் குழப்பத்தை ஏற்படுத்திவிடும் என்ற அச்சமும் நிலவுகிறது. இதனால் பிரிட்டனின் பாதுகாப்புத்துறையின் கருத்து இறுதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அமெரிக்க இராணுவ மேலாதிக்கத்தை சவால் செய்யும் வகையில், இந்த ஆண்டு ஐரோப்பிய தனிப்படையை அமைப்பதில் மிகவும் ''நெருக்கடியான'' ஆண்டாக அமையும் என ஐரோப்பிய இராணுவ ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர். தற்போது ஜனவரி முதல் தேதி சுழற்சி முறையில் கிரேக்கம் ஐரோப்பிய யூனியன் தலைமை பொறுப்பை ஏற்றிருக்கிறது. மசடோனியாவில் எடுக்கப்படும் இராணுவ நடவடிக்கையின் வெற்றியின் அடிப்படையிலேயே தனது தலைமைப்பதவியின் சாதனை மதிப்பிடப்டும் என்று இந்த நாடு கருதுகிறது. பிரான்சும், ஜேர்மனியும் ஆதரவு தந்து வருவதால் ஐரோப்பிய யூனியனுக்கு ''பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி பொதுச் சந்தையை'' உருவாக்க தலைமை முயலும் என்று கிரேக்கம் அறிவித்திருப்பதோடு, மேலும் ஐரோப்பிய யூனியனுக்கு தனி ஆயுத ஏஜென்சியை அமைக்கவும் இது விரும்புகிறது.

தற்போது உருவாக்கப்பட்டுவரும் புதிய ஐரோப்பிய யூனியன் அரசியல்சாசனத்தில், நேட்டோ ஒப்பந்தத்தின் 5 வது பிரிவு அடிப்படையில் ''ஐக்கிய பிரிவு'' ஒன்றை இணைத்துக்கொள்ள வேண்டுமென்று ஆலோசனை கூறப்பட்டு வருகிறது. ஏதாவது ஒரு ஐரோப்பிய யூனியன் நாட்டின் மீது நடத்துப்படும் தாக்குதல் ஐரோப்பிய யூனியன் முழுவதையும் தாக்குவதாக எடுத்துக் கொள்ளவேண்டும் என்பதே அந்தப்பிரிவு. இந்தப்பிரிவு இணைக்கப்பட்டவுடன் தனி இராணுவ உடன்பாடும் உருவாகி விடும்.

மசடோனியாவில் ஐரோப்பிய யூனியன் இராணுவத் தலைமை மேற்கொள்ளும் நடவடிக்கை வெற்றி பெறுமா? அல்லது தோல்வியுறுமா? என்பதில் அனைவரது கவனமும் திரும்பியுள்ளது. ராய்ட்டர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள பல்வேறு கட்டுரைகளைக் கொண்டு பார்க்கும் போது அமெரிக்கா பொறுப்புகளை ஒப்படைப்பதை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தாமதப்படுத்தும் போக்கில் நடந்து கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது. ஜேர்மனியின் முன்னணி பத்திரிகையான Sueddeutsche Zeitung, புஷ் நிர்வாகம் ஐரோப்பிய அரசுகள் பலவற்றிற்கும் சோலனோவிற்கும் கடிதம் எழுதியிருப்பதாகவும் இரண்டு படைகளுக்குமிடையே நிலவும் உறவுகள் குறித்து விரிவான விவாதம் நடத்திய பின்னர் ஜுன் மாதம் தான் பொறுப்புகளை ஐரோப்பிய யூனியன் படைகளிடம் ஒப்படைக்க முடியும் என்று கூறிவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

ஐரோப்பிய பூர்சுவாசி துணிச்சலான, ஆபத்தான அரசியல் முயற்சியில் ஈடுபட்டிருப்பதுதான் மசடோனியா நடவடிக்கையாகும். அத்தோடு, ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவுக் கொள்கையானது ''விவேகமாக மற்றும் புரிந்துகொள்வதாக'' இருக்கும் என்ற அடிப்படையில் அதிரடிப்படை என்பது வெறும் கற்பனையாகவே முடிந்து விடும்.

Top of page