World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : தென் அமெரிக்கா

Washington maneuvers toward Venezuelan coup

வெனிசூலா ஆட்சிக் கவிழ்ப்பை நோக்கி வாஷிங்டன் சூழ்ச்சி

By Bill Vann
19 December 2002

Use this version to print | Send this link by email | Email the author

முதலாளிகள் ஏற்பாடு செய்த கதவடைப்பு மூன்றாவது வாரமாக நடந்து கொண்டிருப்பதுடன், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ஹூகோ சாவேசை (Hugo Chavez) கவிழ்ப்பதற்கு, வெனிசுலாவின் வலதுசாரிகளோடு கைகோர்த்து புஷ் நிர்வாகம் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.

அமெரிக்கா இறக்குமதி செய்யும் எண்ணெயில் கிட்டத்தட்ட 14 சதவீதத்தை கொண்டிருக்கும் வெனிசூலாவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து வாஷிங்டன் பெரும் கவலை தெரிவித்துள்ளது. வெனிசூலா ஆட்சிக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனம் (Petroleos de Venezuela - PDVSA) கதவடைப்பிற்கு உள்ளாகி இருப்பதால், எண்ணெய் உற்பத்தி பெருமளவிற்கு குறைந்து விட்டது. இதன் விளைவாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் பீப்பாய் 31 அமெரிக்க டாலர்களாக உயர்ந்துவிட்டது.

டிசம்பர் 13ந் தேதியன்று வெள்ளை மாளிகையானது, வெனிசூலாவின் முதலாளிகள் கூட்டமைப்பு, அமெரிக்க நிதிபெறும் தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் வர்த்தகர்களின் அரசியல் கட்சிகள், ஆகியவற்றின் கருத்துக்களை ஆதரிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ''விரைவில் தேர்தல் நடத்துவது ஒன்றே நெருக்கடியைச் சமாளிக்கும் சமாதான, அரசியல் அடிப்படையில் ஏற்புடைய வழி'' என கருத்துத் தெரிவித்தது.

வெனிசூலாவின் அரசியலமைப்பின்படி, 2006 இறுதிவரை சாவே ஜனாதிபதியாக பதவியில் நீடிப்பார். பதவியிலிருப்பவர்கள் சரியில்லை என மக்களின் பொதுவாக்கெடுப்பு (referendum) மூலம் திரும்ப அழைக்கும் விதியைப் பயன்படுத்த 2003 ஆகஸ்டில் தான் முடியும். அப்போது கூட, அவரை பதவி நீக்கம் செய்வதற்கு தேவையான வாக்குகளை எதிர்கட்சிகள் பொதுவாக்கெடுப்பில் பெறவேண்டும். சென்ற தேர்தலில் ஜனாதிபதி பதவிக்கு ஆதரவாக வாக்களித்தவர்களை விட, கூடுதலான வாக்காளர்கள் பொதுவாக்கெடுப்பில் வாக்களித்தால் மட்டுமே ஜனாதிபதி பதவி விலகுவார்.

இத்தகைய அரசியலமைப்பு ரீதியான நடைமுறைகளை வாஷிங்டன் துச்சமாக மதிக்கிறது. எனவே மீண்டும், வலதுசாரி இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியை ஆதரிக்க அமெரிக்கா தயாராகிவிட்டது. சென்ற ஏப்ரல் மாதம் வெனிசூலா ஜனாதிபதியின் எதிரிகள் இரண்டு நாட்கள் அவரைப் பதவியிலிருந்து நீக்கினார்கள். காரகாஸ் வீதிகளில் பொதுமக்கள் ஜனாதிபதிக்கு ஆதரவாகத் திரண்டு கிளர்ச்சிகளில் ஈடுபட்டதால், அமெரிக்க ஆதரவு பெற்ற இராணுவக் குழுவினர் மீண்டும் ஜனாதிபதியிடமே ஆட்சியை ஒப்படைத்தனர்

வழக்கத்துக்கு மாறான தேர்தல்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் மக்கள் ஆதரவை இழந்த, அமெரிக்கா ஆதரிக்கும் மதிப்பற்ற குழுவினர் ஆட்சிக்கு வந்திருப்பார்களானால், வெனிசூலாவின் தொழிலாளர்களும் ஏழை மக்களும் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிகளில் ஈடுபட்டு பதவியிலிருந்து அவர்களை நீக்கியிருப்பர். அந்த நேரத்தில் புஷ் நிர்வாகம், அரசியலமைப்பு நடைமுறைகளின் புனிதத்தன்மை குறித்து ''ஜனநாயக விரோத'' நடவடிக்கைகளைக் கண்டித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

வெனிசூலாவில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் கண்மூடித்தனமான கொள்கை குறித்து வாஷிங்டன் நிர்வாகத்திற்குள்ளேயே பிளவுகள் தோன்றி இருப்பது கோடிட்டுக் காட்டப்படுகிறது. தற்போதுள்ள அரசிற்கு எதிராகத் தொடர்ந்து வலதுசாரி கிளர்ச்சிகளைத் தூண்டிவிடுவதன் மூலம், புஷ் நிர்வாகம் அந்த நாட்டையே உள்நாட்டுப் போரில் மூழ்கடிக்கப் பார்க்கிறது என அவரது நிர்வாகத்தைச் சேர்ந்த சிலர் கருதுகின்றனர்.

இந்த வாரம், வெள்ளை மாளிகை அதிகாரி ஆரி பிலிஷர், நிர்வாகம் விரைவில் தேர்தலை நடாத்த முன்னர் விடுத்த கோரிக்கைக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் கருத்துக் கூறியதுடன், விரைவில் சாவே ஆட்சி மீதான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்றுதான் அமெரிக்கா கோருவதாக அவர் விளக்கம் தந்தார். அப்படி உடனடியான வாக்குப் பதிவிற்கு ஏற்பாடு செய்வதும், வெனிசூலா அரசியலமைப்பை மீறும் நடவடிக்கை என்பதால், சாவேயை பதவியிலிருந்து தூக்கி வீசுவதற்குப் பதிலாக ஏதாவதொரு மாற்று ஏற்பாடு செய்யலாம் என்று அமெரிக்க நிர்வாகத்தில் சிலர் கருதுகின்றனர்.

ஈராக்கிற்கு எதிராக அமெரிக்கா போர்புரியும் நிலை ஏற்படும் பட்சத்தில் ஈராக், தனது எண்ணெய் விநியோகத்தை நிறுத்தி விடுமானால், அமெரிக்காவிற்கு வழக்கமான மேலும் கூடுதலான எண்ணெயை தடையின்றி வழங்க வழி செய்வதாக வெனிசூலாவின் ஜனாதிபதி திரும்பத் திரும்ப அமெரிக்காவிற்கு உறுதிமொழி தந்தார். அவர், அரசு எண்ணெய் நிறுவனத்தில் (PDVSA) அதிக ஊதியம் பெறும் நிர்வாகிகள் எண்ணெய் விநியோகத்தை நிறுத்தி இருப்பதை கண்டித்ததுடன், தங்களது சுய செல்வச் செழிப்புக்காக அரசு எண்ணெய் நிறுவனத்தை தனியார்மயமாக்க அவர்கள் ''நாச வேலைகளில்'' ஈடுபடத் துடித்துக் கொண்டிருப்பதாக் குற்றம் சாட்டினார்.

இராணுவத்தை அனுப்பி எண்ணெய் நிறுவனங்களையும் மற்றும் எண்ணெய்க் கப்பல்களையும் கைப்பற்ற சாவே அரசாங்கம் கட்டளையிட்டிருந்தாலும், தனியாருக்கு சொந்தமான உணவு உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனங்களை இராணுவம் தொடவில்லை. அந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் அரசிற்கு எதிரான கிளர்ச்சிக்கு ஆதரவாகத் தங்கள் விநியோகத்தை நிறுத்த இந்த ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

வெனிசூலாவில் வறுமையில் வாடும் மக்களின் தலையீடுகள், அமெரிக்காவுடன் நடைபெறும் வர்த்தக உறவுகளுக்கு எந்த வகையிலும் இடையூறாக அமையாது அல்லது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதற்கு ஒரு தடையாக அமையாது என்று சாவே, தெளிவுபடுத்தியுள்ளார். ஆனால் புஷ் நிர்வாகத்தில் இடம் பெற்றுள்ள வலதுசாரி சக்திகள் கியூபாவின் பிடல் காஸ்ட்ரோவுடன் சாவேக்கு உள்ள உறவுகளையோ ஆப்கனிஸ்தான் போரின்போது அவர் அமெரிக்காவை கண்டனம் செய்ததையோ மறந்து விடுவதற்குத் தயாராக இல்லை.

இத்தகைய வலதுசாரி சக்திகள் -அமெரிக்க வெளியுறவுத்துறையில் உள்ள ஒட்டோ ரீச், தேசிய பந்தோபஸ்து குழுவில் உள்ள எலியட் ஆப்ராம்ஸ்- ஆகிய இருவரும் தலைமை தாங்குவதுடன் ஏப்ரல் மாதம் தோல்வியில் முடிந்த ஆட்சிக் கவிழ்ப்பு கிளர்ச்சிக்காரர்களுடன் நேரடியாக ஒத்துழைத்து அதனை ஒழுங்கமைத்துமுள்ளனர். இவர்கள் இருவரும் றீகன் காலத்தில் நிக்கரகுவாவுக்கு எதிரான பயங்கரவாதத்தை ஏற்பாடு செய்தவர்களாகும். எனவே இதே நடவடிக்கைகளை இங்கும் மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பதுடன், காரகாசில் (வெனிசுலா) தங்களுக்கு தலை அசைக்கும் ஒரு ஆட்சியை உருவாக்குவதிலும் உறுதி கொண்டிருக்கின்றனர்.

சாவே அரசைக் கவிழ்ப்பதற்கு அமெரிக்கா மேற்கொண்டுள்ள முயற்சிகளை அமெரிக்காவின் வாடிக்கையாளர்களாகச் செயல்படும் லத்தீன் அமெரிக்க நாடுகளும் நிதிச் சந்தைகளும் ஆதரித்து நிற்கின்றன. அமெரிக்கா நாடுகளில் அமைப்பு (Organization of American States-OAS) வெனிசுலா தகராறில் சமரசம் செய்து வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த அமைப்பு வெனிசுலாவில் தேர்தெடுக்கப்பட்டுள்ள அரசிற்கு ஆதரவாக அறிக்கை விடவேண்டும் என்று அந்நாட்டு தூதர் கோரிக்கை விடுத்தார். அந்தக் கோரிக்கையை OAS ஏற்காமல் வெனிசுலாவின் வலதுசாரி செய்தி நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கண்டன அறிக்கை தந்திருக்கிறது. வெனிசுலாவில் இயங்கும் தனியாருக்குச் சொந்தமான தொலைக்காட்சி நிலையங்கள் சாவே அரசிற்கு எதிராக, கடுமையான பிரசாரத்தில் ஈடுபட்டதைக் கண்டித்து பொதுமக்கள் திரண்டு தொலைக்காட்சி நிலையங்களுக்கு எதிரான ஆர்பாட்டங்களை நடத்தினர். நெருக்கடி நீடித்தால், விரைவில் தேர்தல் நடத்த வேண்டுமென்ற கோரிக்கையை ஆதரிக்கப்போவதாகவும் OAS கோடிட்டுக் காட்டியுள்ளது.

இதனை மேலும் ஊறுபடுத்தும் விதமாக, வெனிசுலாவிலுள்ள கொலம்பியாவின் சுற்றுலாப் பயணிகள் உடனடியாக நாடு திரும்பும்படி காரகாசிலுள்ள கொலம்பியா நாட்டுத் தூதுவர் கேட்டுக் கொண்டதுடன், வெனிசுலாவில் ''நெருக்கடியான அரசியல் சூழ்நிலை'' நிலவுவதாகவும் அவர் கூறியுள்ளார். இரத்தம் சிந்தும் உள்நாட்டுப்போரில் ஈடுபட்டுள்ள ஒரு நாட்டின் பிரநிதியிடமிருந்து இவ்வாறான கருத்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் Standard & Poor's பொருளாதார நிர்ணய அமைப்பு, வெனிசுலா அரசாங்கம் மற்றும் அரசு எண்ணெய் நிறுவனத்தின் தரத்தை வெகுவாகக் குறைத்து மதிப்பீடு செய்துள்ளதால் நாட்டினுடைய பொருளாதார நெருக்கடி மேலும் ஆழமாகியுள்ளது.

வெனிசுலாவில் சாவேக்கும் அவரது எதிரிகளுக்கும் இடையில் நடைபெற்றுக் கொண்டுள்ள போராட்டமானது, இராணுவத்தை மையாமாகக் கொண்டு நடைபெற்று வருகிறது. இராணுவத் தலைமை அதிகாரி அரசிற்கு ஆதரவு தெரிவித்துள்ளதுடன் ''பெட்ரோலிய நாச வேலைகளை'' அவர் கண்டித்தும் உள்ளார். அதே நேரத்தில் எதிர்கட்சித் தலைவர்கள் அரசைக் கவிழ்க்க இராணுவ ஜெனரல்களை நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர்.

''நமது மக்களையும் அவர்களது சுதந்திரத்தையும் பாதுகாக்க இராணுவத்தினர் முன்வர வேண்டும்'' என அரசிற்கு எதிராக கிளர்ச்சி செய்யும் ''கடமை ஆற்றத் தவறிய'' அதிகாரியான ஹென்ரிக் மதினா குறிப்பிட்டார். ''இராணுவத் தளபதிகள் எங்கே இருக்கிறார்கள்? எதற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்? நாடு தன்னைத்தானே அழித்துக் கொள்ளட்டும் என்று காத்திருக்கிறார்களா? என எதிர்கட்சித் தலைவர் அந்தோனியா லெடஸ்மா கேட்டார்.

அமெரிக்காவின் AFL-CIO அமைப்போடு தொடர்புடைய வெனிசுலா தொழிலாளர் சம்மேளனம் என்ற ஊழல் மிக்க தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் தலைவரான கார்லோஸ் ஓட்டேகா, இராணுவ சதிக்கு நேரடியாக வேண்டுகோள் விடுக்காமல், தான் ''ஜனநாயக வழியை'' ஆதரிப்பதாகக் கூறியதுடன் ''மக்களுக்கு எதிராகச் செயற்பட வேண்டாம்'' எனவும் இராணுவத்தைக் கேட்டுக் கொண்டார்.

''ஜனநாயகம்'' என்கிற போர்வைக்குள் ஒட்டேகாவும், அவரது கூட்டான வெனிசுலா முதலாளிகள் சம்மேளனமும் தொடர்ந்து எண்ணெய்த் தொழில் முடக்கத்தை ஆதரிப்பதுடன் நெடுஞ்சாலைகள் முற்றுகையை தோற்றுவிக்கின்றன. ஒரு குழப்ப சூழ்நிலையை உருவாக்கி அதன்மூலம் ஆட்சிக்கவிழ்ப்பு சதியைத் துண்டிவிடச் செயல்படுகின்றன.

வெளியுறவுத்துறை அதிகாரி ரிச்சர்ட் பெளச்சர் ''விரைந்து திட்டவட்டமான'' முடிவு எடுக்கப்படவேண்டும் என்ற வெனிசுலாவின் வலதுசாரி அணியினர் கோரிக்கையை மறைமுகமாக ஆதரித்தார். ''வெனிசுலா நிலமை மிகவும் கொந்தளிப்பாக உள்ளது. மிக வேகமாகச் சீர்குலைந்து கொண்டு வருகிறது. வன்முறைகள் வெடிக்கும் அளவிற்கு நிலைமை முற்றுவதற்கு முன்னர் முடிந்தவரை விரைவாகத் தீர்வு காணப்படவேண்டும் என அமெரிக்கா கருதுகிறது'' என பெளச்சர் தெரிவித்தார்.

வெனிசுலா நிகழ்ச்சிகளை புறந்தள்ளுகிற வகையில் ஈராக்கிற்கு எதிரான அமெரிக்கப் போர் நிலவரம் முற்றிக்கொண்டு வருகிறது. வெனிசுலாவின் பெரும் பகுதிகளில் சாவேக்கும் அவரது எதிரிகளுக்கும் குழப்பமான மோதல் ஏற்பட்டிருப்பது குறித்து ''பெரும் கவலை'' கொண்டிருப்பதாக வாஷிங்டன் அறிவித்துள்ளது. இராணுவத் தலையீட்டால் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து பெட்ரோலியப் பொருட்கள் சப்ளை சீர்குலையுமானால் அமெரிக்காவிற்கு நம்பகமாக வெனிசுலா எண்ணெய் கிடைக்க வேண்டும். வெனிசுலா நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணாவிட்டால் அமெரிக்கா தனது போர்திட்டங்களை ஒத்திவைக்க வேண்டிவரும் என்று பெட்ரோலியத் தொழில் நிபுணர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

''வெனிசுலா நிலவரம் சீராவதற்கு முன்னர் அமெரிக்கா ஈராக் தொடர்பாக எந்த முடிவையும் எடுக்காது என நான் நம்புகிறேன்'' என்று வெனிசுலாவின் முன்னாள் எரிபொருள் அமைச்சர் கால்டான் பெர்டி பிரேஸில் தினசரி ஜெர்னல் டோ பிரேஸில் க்கு புதனன்று அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். வெனிசுலா எண்ணெய் நிறுவனத் தலைவராகப் பணியாற்றியுள்ள இவர், உலகின் ஐந்தாவது எண்ணெய் ஏற்றுமதி நாடான வெனிசூலாவில் இதனைச் செய்ய முடியாத நிலை இருக்கும் போது, பாரசீக வளைகுடாவில் யுத்தத்தை ஆரம்பிப்பது சமாளிக்க முடியாத மிகப் பெரும் ஆபத்தாகும் என கூறியுள்ளார்.

பாரிய யுத்தம் நடக்கும் போது உலக சந்தைக்கு ஒரு நாளைக்கு 5.5 மில்லியன் பீப்பாய் எண்ணெய் கிடைக்காது தடைப்பட்டுவிடும். வெனிசுலா தினசரி 3 மில்லியன் பீப்பாய்களுக்கு மேல் உற்பத்தி செய்யும் ஆற்றல் கொண்டது. இப்படி இரண்டு சப்ளையும் துண்டிக்கப்பட்டு விட்டால் ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 40 அமெரிக்க டொலருக்கு மேல் உயர்ந்து விடும். அப்போது அமெரிக்கா மற்றும் உலகப் பொருளாதாரம் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகும் என பெர்ட்டி விளக்கம் தந்தார்.

இப்படி ஒரு சர்வாதிகாரியை நீக்கும் நோக்கோடு அதைச் சாக்காகக் கொண்டு ஈராக்கிற்கு எதிரான யுத்தத்துக்கு ஆயத்தம் செய்து வரும் புஷ் நிர்வாகமானது, வெனிசுலா ஆட்சி கவிழ்ப்பு இராணுவப் சதிப்புரட்சி உருவாவதையும் விரும்புகிறது. இந்த இரு நாடுகளிலும் வெளிப்படையாகப் பேசப்படாத உயிர்நாடிப் பிரச்சனை கச்சா எண்ணெய் ஆகும்.

See Also :

வெனிசூலா: இன்னொரு ஆட்சிக் கவிழ்ப்புக்கு சீ.ஐ.ஏ ஆயத்தம் செய்து வருகிறதா?

Top of page