World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Indian unions call off stoppage after state government sacks 400,000 strikers

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 400,000 பேர்களை அரசாங்கம் வேலைநீக்கம் செய்ததன் பின்னர் இந்திய தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தை விலக்கிக் கொண்டன

By M. Kailasam
17 July 2003

Use this version to print | Send this link by email | Email the author

தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் அரசாங்கப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களை உள்ளடக்கிய தொழிற்சங்கங்கள், வேலை நிறுத்தம் செய்த 13 இலட்சம் தொழிலாளர்களில் 400.000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை அரசாங்கம் வேலை நீக்கம் செய்ததன் பின்னர், 11 நாட்கள் நடைபெற்ற பொதுத்துறை வேலை நிறுத்தத்தை கடந்த வார முடிவில் விலக்கிக் கொண்டன மற்றும் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைகளுக்கு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தன.

தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தைக் கைவிட்டதானது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆயிரக் கணக்கானவர்களை தனித்தனியாய் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினரிடம் திரும்ப வேலைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கெஞ்ச வைத்திருக்கிறது. குறைந்த பட்சம் அவர்களின் பதவிகளில் 5000 இடங்கள் ஏற்கனவே அரசாங்கத்தின் ஆதரவாளர்களாலும் வேலையில்லாது நம்பிக்கை அற்றுக்கிடந்த தொழிலாளர்களாலும் நிரப்பப்பட்டிருக்கிறது.

தொழிலாளர்களின் கோபத்தைத் திசைதிருப்பும் பொருட்டு, தொழிற்சங்கங்கள், பெரும் அளவில் பணிநீக்கம் செய்ததை எதிர்த்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் மனுச் செய்துள்ளன. மாதக்கணக்கில் இழுத்தடிக்கும், இந்த சட்ட நடவடிக்கையை எடுத்ததன் மூலம் தொழிற்சங்க தலைவர்கள் தாங்கள் பேச்சுவார்த்தைக்கு வரத் தயாராக இருப்பதை ஏற்றுக் கொள்ளச்செய்ய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதில் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் வலதுசாரி மாநில அரசாங்கம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டோரை பணிநீக்கம் மட்டும் செய்யவில்லை, போலீசாரால் அவர்களை நள்ளிரவில் கைது செய்ய உத்தரவிட்டதுடன் பல ஆண்டுகளாக அரசாங்க இல்லங்களில் வசித்துவந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களையும் அவர்களின் குடும்பங்களையும் வெளியேற உத்தரவிட்டது.

வேலை நீக்கமானது கடந்த ஆண்டு அரசாங்கம் அறிமுகப்படுத்திய அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டம் எனும் கொடூரமான சட்டத்தின் (ESMA) கீழ் இடம் பெற்றது. அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டத்திற்கு ஒரு திருத்தமாக அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு மேலாணை ஒன்று, ஜூலை 4 அன்று, வேலை நிறுத்தத்தின் நான்காவது நாள் அரசாங்கத்தால் அவசரம் அவசரமாகக் கொண்டு வரப்பட்டது.

திருத்தப்பட்ட எஸ்மாவின் (ESMA) கீழ் அரசாங்கமானது எந்த சேவையையும் அல்லது எந்தத் தொழில் துறையையும் ஒரு அத்தியாவசிய சேவையாக பிரகடனம் செய்ய முடியும். வேலை நிறுத்தம் செய்யும் எந்த அத்தியாவசிய சேவை பணியாளரும் அல்லது வேலை நிறுத்தத்தைத் தூண்டி விடும் ஏனையோரும், மற்றும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தரும் அல்லது வக்காலத்து வாங்கும் எவரும் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 5000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டையும் எதிர் கொள்வர்.

பணிநீக்கம் செய்யப்பட்டவர்களின் பதவிகளுடன் பெயர்களும் குறிப்பிட்டு வேலைநீக்கங்கள் ஜூலை 7 அன்று ஆரம்பமானது. அதே எஸ்மோ மேலாணையின் கீழ் (ESMO), அரசாங்கமானது, பணி இடங்களை நிரப்புவதற்காக ஆளும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக (AIADMK) ஆதரவாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் மத்தியில் இருந்து 15,500 தற்காலிக பணியாளர்களை பணிக்கு சேர்ப்பதை ஆரம்பித்தது.

மாநில அரசாங்க வட்டாரங்களின் படி, புதிதாக ஆள் சேர்க்கப்பட்டவர்களுக்கு, பொதுவாக ஒரு அலுவலக ஊழியர் வாங்கும் சம்பளத்தில் அரைப்பங்கிற்கும் குறைவாக 4,000 ரூபாய்கள் சம்பளம் கொடுக்கப்படும். இந்தத் தற்காலிக தொழிலாளர்கள் எந்தவிதமான அரசாங்க விரோத நடவடிக்கைகளிலோ அல்லது தொழிற்சங்க நடவடிக்கைகளிலோ ஈடுபடக்கூடாது என்று ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டும். தேவைப்பட்டால் அவர்கள் விடுமுறை நாட்களிலும் கூட வேலைக்கு வர வேண்டும் மற்றும் எந்தக் காரணமும் கொடுக்கப்படாமல் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படவும் முடியும்.

பிரிட்டிஷ் காலனித்துவவாதிகள் 1947ல் அதிகாரத்தை இந்திய மேல்தட்டின் கையில் ஒப்படைத்து அரசாங்கம் நடந்த பின்னர், வேலை நிறுத்தம் செய்வதற்கான தங்களின் அடிப்படை உரிமையைப் பயன்படுத்தியதற்காக இந்த அளவு தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டதில்லை. 1948ல் இரயில்வே தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்த பொழுது சுமார் 30,000 பேர் கைது செய்யப்பட்டனர், சிறையிடப்பட்டனர் அல்லது வேலை நீக்கம் செய்யப்பட்டனர். 1960களில் மத்திய அரசாங்க ஊழியர்கள் சம்பளம் தொடர்பாக வெளிநடப்பு செய்த பொழுது, ஆயிரம்பேர் கைது செய்யப்பட்டனர் மற்றும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். பிரதம மந்திரி இந்திராகாந்தியின் மோசமான அவசரநிலை ஆட்சியைத் தூண்டி விட்ட, புகழ்பெற்ற 1974 இரயில்வே தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் சில ஆயிரம் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

ஆசிரியர் கழகங்கள் மற்றும் அரசுப் பணியாளர்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (The Joint Action Council of Teachers Associations and Government Employees Organisations) மற்றும் அரசுப் பணியாளர்கள் கழகங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியன மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்தம் ஜூலை 2 முதல் தொடங்கும் என சட்டரீதியாகத் தேவைப்படும் மூன்று மாத முன்னறிவிப்பை மாநில அரசாங்கத்திற்குக் கொடுத்திருந்தது.

அவர்களின் 15 கோரிக்கைகள் கொண்ட பட்டியல் ஜெயலலிதா அரசாங்கத்தினால் பறித்துக் கொள்ளப்பட்ட உரிமைகளை மீட்பதற்காக பிரதானமாக அழைப்பு விட்டிருந்தது. இவற்றுள் ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக்காலத்தை 30 ஆண்டுகளில் இருந்து 33 ஆண்டுகளாக அதிகரிக்கும் மாநில அரசாங்கத்தின் முடிவையும் 50 சதவீத ஓய்வூதிய சம்பளத்தை ரொக்கமாகக் கொடுத்தல் மற்றும் மீதப்பணத்தை அரசாங்கக் கடன் பத்திரங்கள் வடிவில் கொடுத்தலையும் வாபஸ்வாங்குதல் ஆகியன உள்ளடங்கும்.

ஏனைய கோரிக்கைகளுள் பணி மூப்புத் தொகை (gratuities) முழுவதும் பணமாகக் கொடுத்தல் மற்றும் விடுமுறை எடுக்காத நாளுக்கு சம்பளம், விழாக்கால போனஸ் மற்றும் கடந்த அக்டோபரில் அனுமதிக்கப்பட்ட பஞ்சப்படியில் (DA) 4 சதவீதம் முழுவதையும் பணமாக வழங்குதல் ஆகியன உள்ளடங்கும். அப்பட்டியல் 1998ல் பறிக்கப்பட்ட ஓய்வூதியங்கள் மற்றும் சம்பளம், அலவன்ஸ் இவற்றில் கொடுபடாத பாக்கித் தொகைகளை வழங்கும்படியும் மற்றும் பஞ்சப்படியில் (DA) (அகவிலைப்படி) 20 சதவீதவெட்டை திரும்பப் பெறவும் கூட அழைப்பு விடுத்தது.

இரண்டு மாதங்களாக தொழிலாளர்களின் கோரிக்கைகளை அலட்சியம் செய்த, முதலமைச்சர் ஜெயலலிதா, அவர்கள் வேலை நிறுத்தம் செய்தால் எஸ்மா சட்டத்தை முழுப் பலத்துடன் தான் பயன்படுத்துவேன் என்று அறிவிப்பதற்கு மட்டுமே தொழிற்சங்கங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். பின்னர், வேலை நிறுத்தத்தை அது தொடங்கப்படுவதற்கு முன்னரே உடைக்கும் முன்கூட்டிய நடவடிக்கையில், அவர் தொழிற்சங்க உறுப்பினர்களையும் தலைவர்களையும் ஜூன் 30 அன்று நள்ளிரவே கைது செய்யத் தொடங்கினார்.

அவரது செய்கை தொழிலாளர்களைக் கோபமடையவே வைத்தது. திட்டமிடப்பட்டிருந்த அடுத்த நாளுக்குப் பதிலாக, ஜூலை 1 நண்பகலில் இருந்தே, அலுவலகத் தொழிலாளர்களும் ஆசிரியர்களும் தங்களது அலுவலகங்களிலும் பள்ளிகளிலும் இருந்து வெளியேற காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கியது. 2002ன் பொழுது நடைபெற்ற இரு வேலைநிறுத்தங்கள் அரசாங்கத்திடமிருந்து எந்த சலுகைகளையும் வென்றெடுக்கத் தவறியதன் பின்னர், இந்த வேலை நிறுத்த அழைப்பிற்கு பேராதரவு இருந்தது.

உலக சோசலிச வலைத் தளத்தால் பேட்டி எடுக்கப்பட்ட வேலை நிறுத்ததில் ஈடுபட்டோர் தங்களது தொழிற்சங்கங்கள் மீது ஐயுறவாதத்தைக் கொண்டிருந்ததும் இருக்கின்ற அரசியல் கட்சிகள் மீது அதிருப்தி கொண்டிருந்ததும் வெளிப்படுத்தப்பட்டது.

வேலைநிறுத்தப் போராட்டத்தில் முன்னணியில் இருந்த 30வயது நிரம்பிய ஜெகதீசன் எனும் ஆசிரியர்: "பல பத்தாண்டுகளாக நாங்கள் எங்கள் அமைப்புக்களின் கீழ் போராடிக் கொண்டு வருகிறோம். எங்கள் இயக்கம் இந்தப் போராட்டத்தில் வெற்றி பெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. எங்களது கோரிக்கைகளை வென்றெடுக்க மாற்று ஒன்றை நாங்கள் காணவேண்டும்." எனக் கூறினார்.

40 வயது மின்சார தொழிலாளர்: "நான் பார்த்ததிலேயே இது மோசமான அரசாங்கம். ஏனைய எல்லா அரசியல் கட்சிகளும் ஒரு சுண்டு விரலைக் கூட உயர்த்தாமல் கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். எமது இளைஞர்கள் மத்தியில் ஒரு புரட்சிகர மாற்றம் வரவேண்டும்." எனக் கூறினார்.

நாம் பேட்டி எடுத்தபொழுது, இதற்கு மாறாக, தொழிற்சங்க பொறுப்பாளர் பீட்டர் அல்போன்ஸ் ஜெயலலிதா நிர்வாகத்தை சாந்தப்படுத்தும் விதமாகக் கூறினார்: "எமது இயக்கம் அரசாங்கத்திற்கு எதிரானது அல்ல. எமது போராட்டம் ஒரு அரசியல் போராட்டம் அல்ல. அரசாங்கம் அழைத்தால், பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம்." அவர் இந்த வேலை நிறுத்தத்தை "கடந்த காலத்தில் வென்றெடுத்தவற்றைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அரசாங்கத்தின் மீது ஒரு அழுத்தம் கொண்டு வர" தொழிற்சங்கங்களால் செய்யப்பட்ட மூலோபாய நகர்வு என அழைத்தார்.

ஆனால் அரசாங்கமானது பெரு வர்த்தகர்கள் மற்றும் சர்வதேச கடன் வழங்குநர்களான உலக வங்கி மற்றும் பன்னாட்டு நாணய நிதியம் போன்றவற்றிடமிருந்து, அரசாங்க சேவைகளிலும் கல்வித்துறைகளிலும் பெருமளவில் பணி இடங்களை வெட்டிக் குறைக்கக் கோரும் அழுத்தத்தின் கீழ் இருக்கின்றது. ஏனைய இந்திய மாநிலங்களில் இருந்துவரும் கடும் போட்டிக்கு எதிராக, ஜெயலலிதா அரசாங்கமானது நாட்டிலேயே தமிழ்நாட்டை மலிவான கூலி உழைப்புச் சந்தையாக மாற்றுவதற்கு முயன்று கொண்டிருக்கிறது.

பல மாதங்களாக, அரசாங்கமானது, பொதுத்துறை ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எதிராக நடுத்தர வர்க்கத் தட்டினரையும் ஏழைகளையும் தூட்டி விடும் முகமாக, அவர்களின் சம்பளம் அரசின் வருவாயில் 94 சதவீதம் எடுக்கிறது என்று பொய்யாக கூறிக் கொண்டு ஒரு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது. 2003-ம் ஆண்டு வரவு -செலவுத் திட்ட அறிக்கையுடன் சமர்ப்பிக்கப்பட்ட, அரசாங்கத்தின் சொந்த வெள்ளை அறிக்கை, சம்பளங்கள் வருவாயில் 39 சதவீதத்தைக் கோருகின்றன, ஓய்வூதியமோ 19 சதவீதம் எடுக்கிறது என்று விளக்குகிறது.

சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் பெருமளவில் சம்பளம் உயர்த்துவதில் கட்டுப்பாடு காட்டப்படவில்லை. பல பத்துலட்சக்கணக்கான ரூபாய்கள் போலீசை ஊக்கப்படுத்துவதற்கும் போலீஸ் கொமாண்டோ பிரிவுகளை ஏற்படுத்துவதற்கும் செலவழிக்கப்பட்டுக் கொண்டு வருகின்றது. மேலும் நாடுகடந்த நிறுவனங்கள் "கவர்ச்சிகரமான" வரிச்சலுகைகள், இலவச நிலம் மற்றும் ஏனைய வசதி வாய்ப்புக்களுடன் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன.

இரண்டு ஸ்ராலினிச கட்சிகளான -இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி (சிபிஐ) மற்றும் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி -மார்க்சிஸ்ட் (சிபிஐ-எம்) உட்பட, அனைத்து பழைய இடது அரசியல் கட்சிகளாலும் ஆதரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள், வேலைநிறுத்தத்தை விலக்கிக் கொள்ள அழைப்பு விடுத்ததும் தொழிலாளர்களை தங்களின் வேலைகளுக்காக கெஞ்சுவதற்கு விட்டதும், இந்த வேலைத் திட்டத்திற்கு அவர்கள் மாற்று ஒன்றையும் வழங்கவில்லை என்பதை விளக்கிக் காட்டுகிறது.

ஒரு வாரத்திற்கு மேலாகவும் வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கு ஒன்றும் செய்யாமல், தேசிய தொழிற்சங்கங்கள் இந்தியாவெங்கும் ஜூலை 16ஐ எதிர்ப்பு நாளாக அறிவித்துள்ளன. அவை வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்யக் கூட அழைக்கவில்லை, பதிலாக ஜெயலலிதா அரசாங்கம் "தீர்வு காணப்படாத பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க" கோரி வாயிற் கூட்டங்களுக்கு முன்மொழிந்துள்ளன.

See Also:

இந்தியாவின், பாண்டிச்சேரியில் சிலிகோசிஸ் சாவுகள்,
பாதுகாப்பற்ற நிலையால் பலியான பெண்கள்

Top of page