World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

UK government's hypocritical stance over World Cup cricket match in Zimbabwe

ஷிம்பாவேயில் கிரிக்கெட் போட்டி; உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பிரிட்டன் அரசாங்கத்தின் அகந்தைப்போக்கு
By David Rowan and Julie Hyland
25 February 2003

Use this version to print | Send this link by email | Email the author

ஆபிரிக்காவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் தொடக்கத்தில் கரும் புள்ளியாக ஒரு தகராறு நடைபெற்றது. அது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (International Cricket Council - ICC) இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை (England and Wales Cricket Board - ECB) மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி சம்பந்தப்பட்டதாகும்.

கிரிக்கெட் போட்டிகள் தொடங்குவதற்குப் பலவாரங்களுக்கு முன்னர் டோனி பிளேயரின் தொழிற்கட்சி அரசாங்கம் வெளியிட்ட அறிக்கைகளை மையமாகக்கொண்டு இந்தத் தகராறு உருவாயிற்று. டிசம்பர் 2002 ல் அரசாங்கத்தின் மூத்த அமைச்சர்கள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக தார்மீக ஒழுக்க நெறிமுறைகள் பற்றிய கூக்குரலைக் கிளப்பினர். அவர்கள் ஷிம்பாவேயில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ளச் சம்மதித்தற்காக இந்தக் கிரிக்கட் வீரர்களைக் கண்டனம் செய்தனர். ஷிம்பாவேயின் தலைநகரான ஹரேரேயில் பிப்ரவரி 13 ந் தேதி நடைபெறும் போட்டியை இங்கிலாந்து அணி புறக்கணிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

தொழிற்கட்சியின் சர்வதேச மேம்பாட்டுத்துறை அமைச்சர் கிளேயர் ஷார்ட், ஷிம்பாவே புறக்கணிப்பு இயக்கத்தை தொடக்கி வைத்ததோடு, அவர் ஷிம்பாவேயுடனான கிரிக்கெட் போட்டியை கைவிட வேண்டுமெனவும் வலியுறுத்தினார். இங்கிலாந்து அணி ஷிம்பாவே செல்வது ''அதிர்ச்சியூட்டுவது, மற்றும் வருந்தத்தக்கது'' என்று அவர் கூறியதுடன், முகாபே ஆட்சி ஒடுக்குமுறையைக் கொண்டுள்ளது எனவும் வர்ணித்தார். ஜனாதிபதி றொபேட் முகாபே அண்மையில் நடைபெற்ற தேர்தலையே ''கொள்ளையடித்தவர்'' எனக் குறிப்பிட்டு ''மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கத் துணிந்தார்கள்'' என்பதற்காக அவர்களைப் பட்டினி போட்டுக்கொண்டிருக்கிறார் என்றும் வர்ணித்தார். இன்று தெற்கு ஆபிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளைப் போன்று ஷிம்பாபேயும் பஞ்சத்தின் பிடியில் சிக்கியுள்ளது.

பிரதமர் டோனி பிளேயர் இந்த நிர்பந்தத்தை மேலும் அதிகப்படுத்தினார். இங்கிலாந்து அணி ஷிம்பாவே செல்லக்கூடாது என்று பிரதமர் விரும்புவதாக அரசு அதிகாரிகள் தெளிவுபடுத்தினர். ''ஷிம்பாவேவில் நிலவும் அரசியல் மற்றும் மனிதநேய நெருக்கடிகளை 'சிந்தித்துப்'' பார்க்குமாறு கிரிக்கெட் வீரர்களை பிரதமர் கேட்டுக்கொண்டார். அந்த நாட்டில் விளையாடுவதா? இல்லையா? என்பதில் இறுதி முடிவு எடுக்க வேண்டியது கிரிக்கெட் தொடர்பான அதிகாரிகளும், அதன் நிர்வாகிகளும் ஆகும். ஆனால் இங்கிலாந்து அணி அங்கு செல்லக்கூடாது என்பதே அரசாங்கத்தின் ஆலோசனையாக இருக்கின்றது என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தினர். வெளியுறவு அமைச்சர் ஜாக் ஸ்ட்ரோ, ஷிம்பாவேயுடன் நடக்கும் போட்டியை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என்று பகிரங்கமாகவே அறிவித்துவிட்டார்.

போட்டிகள் தொடங்குவதற்கு 6 வாரங்களுக்கு முன்னர் இவ்வாறு அரசு தலையிட்டிருப்பது கிரிக்கெட் நிர்வாகிகளிடையே பெரும் நெருக்கடியை உருவாக்கிவிட்டிருந்தது. கடைசி நேரத்தில் போட்டியிலிருந்து விலகிக்கொண்டால் கடுமையான அளவிற்கு அபராதம் விதிக்கப்பட்டு பெருந்தொகையைச் செலுத்த வேண்டி வரலாம். இங்கிலாந்து வேல்ஸ் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை நிர்வாகியான டிம் லாம்ப், (Tim Lamb) அரசாங்கம் ''இரட்டை அளவு கோல்களைப் பயன்படுத்தி'' வருவதாக குற்றம் சாட்டினார். ''பிரிட்டனின் 300 வகையான வர்த்தகங்கள் ஷிம்பாவேயுடன் நடப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் தொடர்ந்தும் வர்த்தகம் செய்து வருகிறார்கள். இதை அமைச்சர்கள் மட்டம் தட்டுவதில்லை. ஆனால் கிரிக்கெட்டை மட்டுமே வேறுவிதமாக நடத்துகிறார்கள்'' என டிம் லாம்ப் நிருபர்களிடம் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் ஆட்சேபனை சற்றும் எதிர்பாராததாக அமைந்துவிட்டது. ஷிம்பாவேயில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற இருப்பதாக கடந்த 4 ஆண்டுகளாகவே அரசாங்கத்திற்கு தெரிந்திருந்தும் கடைசி நிமிடத்தில்தான் இப்புகாரைத் தெரிவித்திருக்கிறது. அதே நேரத்தில் 2001 அக்டோபரில் ஷிம்பாவேயில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஐந்து ஒரு நாள் போட்டிகளில் விளையாடியும் இருக்கின்றது. அப்போது எந்தவிதமான கண்டனமும் தெரிவிக்கப்படவில்லை.

ஜூலை 2002 ல் பிரிட்டனின் வெளியுறவுத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் லாம்ப் கலந்து கொண்டபோது, ஷிம்பாவேயில் இங்கிலாந்து அணி விளையாடுவதற்கு எந்த விதமான தடையும் இருக்கப்போவதில்லை என்று திட்டவட்டமாக அவருக்குத் தெரிவிக்கப்பட்டதாக கன்சர்வேட்டிவ் ஆதரவுப் பத்தரிகையான டெய்லி டெலிகிரஃப் தகவல் தந்திருக்கிறது. முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரான கேட் ஹோயி (Kate Hoey) எந்த விதமான கட்டளையும் இல்லை. எனவே ''நிச்சயமாக'' ஷிம்பாபேயுடன் போட்டி நடக்கும் என்று கூறினார்.

இங்கிலாந்து அணி மற்றும் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல்கள் வர ஆரம்பித்தபோது, ECB இங்கிலாந்து விளையாடும் போட்டிகளை ஷிம்பாவேயிலிருந்து மாற்றுவதற்கு ICC க்கு வேண்டுகோள் விடுத்தது. உதாரணமாக, அவுஸ்திரேலியாவில் இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் செய்த நேரத்தில் மிரட்டல் குறிப்புகள் ''எதிர்ப்பு இயக்கம்'' என்ற பெயரில் கிரிக்கெட் வீரர்கள் தங்கியிருந்த அறைக் கதவுகளுக்குள் செருகப்பட்டிருந்தன. ''ஷிம்பாவே புதல்வர்களும், புதல்விகளும்'' என்ற அறியப்படாத அமைப்பு ஒன்றிடமிருந்து லாம்பிற்கு ஒரு கடிதம் வந்திருந்தது. ஷிம்பாவே தலைநகர் ஹரேரேயில் விளையாடும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களைக் கொன்று விடுவதான மிரட்டல் அந்தக் கடிதத்தில் இடம்பெற்றிருந்தது. இதே போன்று பிரிட்டனில் உள்ள அவர்களது குடும்பங்களுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

இந்த இரண்டு கோரிக்கைகளையும் ஏற்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) மறுத்துவிட்டதோடு, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை (ECB) தாக்கல் செய்துள்ள சில விவரங்கள் ''தெளிவில்லாதவை, நிச்சயமற்ற நம்பகத்தன்மை கொண்டவை'' எனவும் ICC கூறிவிட்டது. உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கு பாதுகாப்பு பொறுப்பு ஏற்றுள்ள தென்னாபிரிக்க போலீஸ் துணை தேசிய கமிஷ்னர் ஆன்ரி பிரியூஸ் ''ஷிம்பாவே புதல்வர்களும், புதல்விகளும்'' என்ற அமைப்பு எழுதியுள்ள கடிதம் ''வெறும் பிரச்சாரமே தவிர நேரடியான மிரட்டல்'' அல்ல எனக் கூறினார். அத்துடன் இது ''முட்டாள்தனமானது'' எனவும் வர்ணித்தார். பல உறுதிமொழிகள் தரப்பட்ட பின்னரும் இங்கிலாந்து அணி ஹரேரேயில் விளையாட மறுத்துவிட்டதால், இந்தப்போட்டி ரத்துசெய்யப்பட்டது. இதனால் ஷிம்பாபே அணி வெற்றிபெற்றதற்கான 4 புள்ளிகளும் அதற்கு வழங்கப்பட்டன.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை நடாத்தும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கும் அதன் வர்த்தகர்களுக்கும் இடையிலான 500 மில்லியன் டொலர் பேரத்தில், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை தற்போது ஒரு மில்லியன் பவுன்வரை அபராதம் செலுத்த வேண்டியுள்ளது. அத்துடன் ஒளிபரப்பு உரிமை இழப்பிற்காக குளோபல் கிரிக்கட் ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்திற்கு நஷ்ட ஈடும் அது வழங்கவேண்டும். அரசாங்கத்தின் கட்டளையை நிறைவேற்றியதால் ஏற்பட்ட நிதி இழப்பிற்கு நஷ்டஈடு தருமாறு ECB பிரிட்டன் அரசாங்கத்தை கோரியுள்ளது. ''தனிப்பட்ட சுதந்திரமான ஒரு விளையாட்டு அமைப்பிற்கு வரி செலுத்துபவர்கள் பணம் கொடுக்க வேண்டுமென்று கோருவது பொருத்தமற்றதாகும்'' என்று பிரிட்டன் அரசாங்கம் இதற்கு பதில் அளித்துள்ளது.

முகாபே மிகக் கொடூரமான சர்வாதிகாரி என்பதில் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது. அவரது ZANU-PF முதலாளித்துவ தேசிய அரசானது ஷிம்பாவேயின் பெரும்பாலான மக்களது நலன்களுக்கு விரோதமாக மிகச்சிறிய அளவிலான செல்வமிக்க ஒரு குழுவினரின் நலன்களுக்காக பணியாற்றி வருகிறது. கிரிக்கெட் போட்டி தொடர்பான கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் முகாபே, விளையாட்டுக்கள் தொடங்குவதற்கு முன்னரே பல கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். உலகத் தொலைக்காட்சி அமைப்புக்களின் கேமிராக்கள் முன்பு தோன்றிய அவர், எதிர்ப்புக்காட்டும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். ''கலவரம் செய்யக்கூடும் என்று கருதப்படுகின்ற நபர்கள் மீதும் இதர சமூக விரோதிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக'' ஷிம்பாவே தலைமை பாதுகாப்பு அதிகாரி ஆர்பர்ட் மன்டிசிசா தெரிவித்தார். அத்துடன் ஜனநாயகத்தை ஆதரிக்கும் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஆகியோர் கைகளில் கறுப்புச் சின்னங்களை அணிந்திருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டது.

கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள்பற்றி செய்திகளை வெளியிட்டுள்ள, அரசாங்கத்திற்கு ஆதரவான ஹெரால்ட் பத்திரிகை இரண்டு ஷிம்பாவே கிரிக்கெட் வீரர்கள் மீது ICC நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. இந்த இருவரும் ''கிரிக்கெட் போட்டியை இழிவுபடுத்தியிருப்பதாக'' இந்தப் பத்திரிகை குற்றம் சாட்டியுள்ளது. முகாபே ஆட்சி ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதைக் கண்டித்து ஷிம்பாவேயைச் சேர்ந்த இந்த இரண்டு கிரிக்கெட் வீரர்கள் நமிபியாவிற்கு எதிரான தொடக்கப் போட்டியில் விளையாடும் போது கையில் கறுப்புச்சின்ன வளையம் கட்டியிருந்தனர்.

கிரிக்கெட் போட்டிகளில் பிளேயர் அரசாங்கம் தலையிட்டதற்கு உண்மையான காரணம் ஷிம்பாவேயில் ஜனநாயக உரிமைகள் இல்லை என்பதற்காகவில்லை. அத்துடன், சர்வாதிகாரம் மற்றும் மனித உரிமைகள் மீறல் ஆகியவை ஆங்கில கிரிக்கெட் வீரர்களை இது போன்ற நாடுகளில் விளையாடாமல் தடுத்து நிறுத்தவுமில்லை. எடுத்துக்காட்டாக இங்கிலாந்து கிரிக்கெட் அணி கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அங்கு இராணுவ சர்வாதிகாரி ஜெனரல் பர்வேஸ் முஷாரப்பின் ஆட்சி நடக்கிறது. இலங்கையில் முறையாக இங்கிலாந்து அணி தொடர்ந்தும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டுதான் இருக்கிறது. அங்கு கடந்த 19 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்துகொண்டு இருப்பதோடு, சிறுபான்மைத் தமிழர்கள் மீது கொடூரமான அடக்குமுறையும் நடைபெற்று வருகின்றது. இந்த இரண்டு ஆட்சிகளும் பிரிட்டனின் நட்பு நாடுகளாக கருதப்படுவதால், இந்த நாடுகளில் நடைபெறுகின்ற மனித உரிமை மீறல்களை அவர்கள் புறக்கணித்து விடுகிறார்கள்.

தற்போது பிளேயர் அரசாங்கம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சிடுமூஞ்சித்தனமான சாயலை பல முன்னாள் காலனிகளில் நிலைநாட்டுவதற்கு முயன்று வருகிறது. அதன் அண்மைக்கால தொடர் நிகழ்ச்சிதான் கிரிக்கெட் தொடர்பான தகராறு ஆகும்

சதாம் ஹூசேன் மற்றும் மிலோசேவிக் போன்ற தலைவர்கள் வரிசையில் முகாபேயும் இப்போது சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார். இவர்கள் அனைவரும் இதற்கு முன்னர் மேற்கு அரசாங்கங்களால் ஊட்டி வளர்க்கப்பட்டவர்களாகும். பின்னர் மேற்கு நாடுகளை இவர்கள் முறைத்துக் கொண்டதால் ''ஆட்சிமாற்றம்'' நடக்க வேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டுவிட்டது. அத்துடன் இப்படிப்பட்ட தலைவர்களின் பட்டியல்களும் வளர்ந்து கொண்டே போகிறது.

ஷிம்பாவே ஜனாதிபதி உலகவங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆகியவற்றின் கோரிக்கைகளை போதுமான வேகத்தோடு செயல்படுத்தவில்லை என்று கருதப்படுகிறார். பொருளாதாரத்தை சர்வதேச முதலீடுகளுக்கு ஏற்ப முழுமையாக திறந்துவிடப்பட வேண்டும் என்று இவை கோரிவருகின்ற போதிலும், அத்தகைய நடவடிக்கைகள் தனது சொந்த ஆட்சிக்கும் தனி உரிமைகளுக்கும் ஆபத்தாக முடிந்துவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக முகாபே தயக்கம் காட்டி வருகின்றார்.

பிரிட்டன் அரசாங்கம் முகாபே ஆட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தும் இயக்கத்தை முன் நின்று நடத்தி வருவதுடன், அவருக்குப் பதிலாக மேற்கு நாடுகளின் கோரிக்கைகளை கண்ணை மூடிக்கொண்டு செயல்படுத்துபவரை பதவியில் அமர்த்தவும் முயன்று வருகிறது. எனவேதான் மேற்கு நாடுகள் மனித உரிமைகள் மீறலை அகழ்வாராய்ச்சி நடத்தி ''கண்டுபிடித்து'' அவற்றை வலியுறுத்தி இயக்கம் நடத்துவதோடு, எதிர்கட்சிகளுக்கு பணம் கொடுத்தும் தூண்டிவிடுகின்றன.

மேற்கு நாடுகளின் உண்மையான அணுகுமுறை என்ன என்பதை ஷிம்பாவே மக்கள் படும் துயரத்திலிருந்து புரிந்துகொள்ளலாம். தற்போது அங்கு கடுமையான உணவு பற்றாக்குறை நிலவுகிறது. ஷிம்பாவேயில் மட்டும் 8 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் கடுமையான பட்டினிக்கு முகம் கொடுக்கின்றனர். தெற்கு ஆபிரிக்கா முழுவதிலும் இந்தப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்தப் பேரழிவிற்கான காரணம் ''பொருளாதார சீரமைப்பிற்கு'' வேளாண்மையும் உட்பட வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் இட்ட கட்டளைகளாகும். இந்த நெருக்கடி பற்றி அறிவிக்கப்பட்ட போதிலும், ஷிம்பாவேக்கு போதுமான உணவு உதவி மறுக்கப்பட்டு வருகிறது. அத்துடன், பிரிட்டனும் இதர மேற்கு நாடுகளும் பஞ்சத்தை ஒரு கருவியாக்கி தங்களது கட்டுப்பாட்டை இந்த நாட்டில் இறுக்குவதற்கு பயன்படுத்தி வருகின்றன என்பது தெளிவாகும்.

Top of page