World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

Bush taps antiterrorism advisor as Iraq pro-consul

The shaping of a repressive colonial regime

புஷ், பயங்கரவாதத்திற்கெதிரான ஆலோசகரை ஈராக்கிய நிர்வாக தலைமையாளராக்குகிறார்
ஒரு காலனித்துவ அடக்குமுறை ஆட்சியின் வடிவம்
By Bill Vann
3 May 2003

Use this version to print | Send this link by email | Email the author

புஷ் நிர்வாகம், ரீகன் நிர்வாகத்தின் பழைய "பயங்கரவாதத்திற்கு-எதிரான தூதராக" இருந்த L. போல் பிரேமரை ஈராக்கில் புதிய கைப்பொம்மை ஆட்சியை அமைப்பதில் மேற்பார்வையிடும் உயர்ந்த அமெரிக்க அதிகாரியாக நியமித்துள்ளது.

அரச திணைக்களத்திற்கும் பென்டகனுக்கும் இடையே எப்பொழுதும் நடக்கும் உட்பூசல்களைப் பற்றி, இந்த அறிவிப்பு கிடைத்தவுடன் செய்தி ஊடகத்தாரின் பெருங்கவனம் திரும்பியது. பெரும்பாலான பத்திரிகை அறிக்கைகள் தூதரகப் பணியிலேயே வாழ்நாளைக் கழிக்கும் பழைய தூதரின் உயர்ச்சியானது, வெளியுறவுத்துறை அமைச்சர் கொலின் பவலுக்கு, குறிப்பாக பாதுகாப்புச் செயலர் டொனால்ட் ரம்ஸ்பெல்ட் தலைமையிலான சக்தி வாய்ந்த எதிரிகளுக்கு எதிரான ஒரு வெற்றியென்று கூறுகின்றன.

ஈராக்கில் கைக்கொள்ள வேண்டிய மூலோபாய, தந்திரோபாய வழிமுறைகள் பற்றி, நிர்வாகத்தினுள் கசப்பான உட்பிளவுகள் இருக்கின்றன என்பதில் ஐயமில்லை. மேலும் ரம்ஸ்பெல்டால் தெரிந்தெடுக்கப்பட்ட ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ஜே கார்னர், பென்டகன் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட சீரமைப்பு மற்றும் மனிதாபிமான உதவி அலுவலகத் தலைமையிலிருந்து கொண்டு, "இடைக்கால அரசாங்கம்" ஒன்றை உருவாக்கும் முயற்சியில் (பெருமளவு மக்கள் எதிர்ப்புணர்வுக்கு இடையே) மிகத் தத்தளிக்கும் நிலையில் இருக்கிறார் என்பதும் தெளிவாகிவிட்டது.

இருப்பினும் எல்லாவற்றிற்கும் மேலாக, பிரேமரின் நியமனத்தின் முக்கியத்துவமானது, வாஷிங்டன் உருவாக்க இருக்கும் ஆட்சி எத்தன்மையைக் கொண்டிருக்கும் என்பதை தெளிவுபடுத்துகிறது. ஒரு கேள்வி கேட்கப்பட்டேயாகவேண்டும்: புஷ் நிர்வாகத்தின் "மக்களால், மக்களுக்காக, மக்களுடைய ஆட்சியை ஈராக்கில் ஏற்படுத்தப்பட இருக்கும் அரசாங்கம்" என்று அமெரிக்கரால் கூறப்படும் இலக்கை அடைவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ள இந்த மனிதரின் தகுதிகள் எவ்வாறானவை?

அரச திணைக்களத்தில் 23 ஆண்டுகளாக அரச திணைக்கள ராஜதந்திரியாக பதவி வகித்திருக்கும் பிரேமர் அதில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் குடியரசுக் கட்சியின் வலதுசாரிப் பிரிவினரோடு நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தார். 1981ல் அப்பொழுதிருந்த ஜனாதிபதி ரொனல்ட் ரீகனின் வெளியுறவுத்துறை அமைச்சர் Alexander Haia, அவரைத் தன்னுடைய சிறப்பு உதவியாளராக, திணைக்களத்தின் "நெருக்கடி நிர்வகிப்பு மையத்தின்" பொறுப்பைக் கொடுத்திருந்தார்.

நான்கு ஆண்டுகள் கழித்து, ஒரு பயங்கரவாதத்திற்கு எதிரான சிறப்புத் தூதராக, அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான போராட்ட நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்து நடைமுறைப்படுத்த நியமிக்கப்பட்டார். இந்தக் காலகட்டத்தில்தான், வாஷிங்டன் தென்னாபிரிக்காவின் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் ஐயும் மற்றும் பல தேசிய விடுதலை இயக்கங்களையும் "பயங்கரவாத" அமைப்புக்களாக அறிவித்திருந்தது.

பிரேமரின் பொறுப்பில்தான் ரீகன் ஆட்சி, அமெரிக்கப் போர் விமானங்களை லிபியாவில் ஒரு பயங்கரவாத குண்டு வீச்சிற்கு கட்டளையிட்டு 40 குடிமக்களைக்கொன்றது - நாட்டின் தலைவர் முமார் கடாஃபியின் வளர்ப்பு மகளும் இதில் ஒருவாராவார். தற்போதைய "முன்கூட்டியே தாக்கும்" நடவடிக்கையின் முந்தைய வெளியீடான இந்தக் குண்டு வீச்சை நிர்வாகம் "வரவிருக்கும் தாக்குதல்களுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கை" எனக் கூறியது.

அரச திணைக்களத்தில் இருந்து வெளியேறிய பின்னர் பிரேமர், கிசிங்கர் நிறுவனத்தில் சேர்ந்தார்; இது முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹென்றி கிசிங்கரின் ஆலோசனை நிறுவனமாகும், அங்கே இவர் நிர்வாக இயக்குனராக பதவிவகித்தார். இந்த நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்களாக பல அமெரிக்கப் பன்னாட்டு வணிக நிறுவனங்களிருந்தன. அவர்கள் வெளிநாட்டுச் சந்தைகளில் தங்கள் நிறுவனங்கள் ஊடுருவி வேரூன்ற உதவியை நாடின.

1996TM Wall Street Journal க்கு ஆலோசனை கூறும் வகையில், "தீவிரவாதிகளின் நண்பர்கள் கட்டாயம் ஒரு விலை கொடுக்கவேண்டும்" என்ற தலைப்புடைய கட்டுரையை அளித்தார்; அதில் கிளிண்டன் நிர்வாகத்திற்கு மத்திய கிழக்கு நாடுகளுக்கெதிராக முதலில் இறுதி எச்சரிக்கை கொடுத்த பின்னர் தூண்டலில்லாத இராணுவ போர் நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ளுமாறு அழைப்புவிடுத்தார்.

அவர் தாக்கவேண்டும் என்ற குறிப்பிட்ட நாடுகளில் லிபியா, சிரியா, ஜோர்டன், ஈரான், சூடான் ஆகியவை அடங்கியிருந்தன. ஆச்சரியமாக, ஈராக் பட்டியலிலிருந்து விடுபட்டிருந்தது.

1999ல் குடியரசுக் கட்சிக்காரரின் கட்டுப்பாட்டிற்குட்பட்டிருந்த அமெரிக்க பிரதிநிதிகள் சபை, இவருக்கு தீவிரவாதத்திற்கு எதிரான குழு ஒன்றிற்குப் பொறுப்பு கொடுத்தது, இது கிளிண்டன் நிர்வாகத்தை தேசியப் பாதுகாப்புப் பிரச்சினைகளில் குறிப்பிட்ட செயல்களைச் செய்யத் தூண்டுமாறு அழுத்தம் கொடுத்தது.

2001 அக்டோபரில் பிரேமர், Crisis Consulting Practice of Marsh Inc, என்ற Marsh & McLennan Companies உடைய ஒரு துணை நிறுவனத்தின் நிறைவேற்று தலைமை அதிகாரியாக இருந்தார். இந்நிறுவனம், பெரும் வணிக நிறுவனங்கள் மீதான பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கும் மற்றும் எதிர்பார்க்கப்படும் நெருக்கடிகளுக்கும் எவ்வாறு முகங்கொடுப்பது என்ற ஆலோசனைகளை வழங்கின.

செப்டம்பர் 11, 2001 பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் பிரேமர் அதிகரித்தவிதத்தில் நிர்வாகத்திற்குப் பல விஷயங்களில் ஆலோசகராகப் பணியாற்றினார். Heritage Foundation ஆல் உருவாக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு குழுவிற்கு தலைவராக இருந்தார்; இது புஷ்ஷின் வெள்ளை மாளிகைக்கு நெருங்கிய தொடர்புடைய ஒரு வலதுசாரி சிந்தனைக் குழுவாகும்.

இவருடைய முக்கிய ஆலோசனை, CIA மீதான கட்டுப்பாடுகளை அகற்றவேண்டும் என்பதாகும்; 1975TM Church Commission அயல்நாட்டுத் தலைவர்கள் பலரைக் கொன்றதிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை கவிழ்ப்பதிலும் பங்குபெற்றிருந்த குழுக்களை விசாரணை செய்தது. CIA அதிகாரிகள், மேலதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற்றுத்தான் நன்கறிந்த கொலைகாரர்களைப் பணியில் ஈடுபடுத்தவேண்டும் என்ற விதிகளையும் தளர்த்தச் சொன்னார்.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் பிரேமர், பழைய CIA டைரக்டர் ஜேம்ஸ் வுல்ஸியுடன் "பயங்கரவாதத்தின் மீதான அமெரிக்கரின் வெற்றி" மற்றும் UCLA யின் குடியரசுக் கட்சியின் மாணவர் அமைப்பும் ஏற்பாடு செய்திருந்த "teach-in" என்ற கருத்தரங்கில் பங்குகொண்டார். அந்த மாநாட்டில்தான், பிரேமரின் நெருங்கிய தொடர்புடைய வுல்ஸி, நடந்துகொண்டிருக்கும் "பயங்கரவாதத்திற்கெதிரான போர்`` நான்காம் உலகப்போர்" என விவரித்து, முதல் இரண்டு உலகப்போர்களையும்விட இது நீண்ட காலம் நடைபெறும் என்று முன்கணிப்பாகக் கூறியுள்ளார்.

"எதிர்வரும் தசாப்தங்களில் பல மக்களை நாம் பதற்றமுறச் செய்வோம்" எனக் கூறினார். பல அராபியத் தலைவர்களைப் பற்றி குறிப்பிடுகையில், ``நாங்கள் உங்களை பதற்றமுறச் செய்வோம், நீங்கள் இந்த நூறு ஆண்டுகளில் நான்காவது தடவையாக இதை உணரவேண்டும், இந்த நாடும் இதனுடைய தோழமை நாடுகளும் போரை நடத்தும் திசையில் முன்னேறுகின்றது" என்றார். அமெரிக்கா, ஈராக்கியப் போரை தொடங்கவேண்டும் என்று உரத்த குரலில் முழங்கிய ஆதரவாளர்களில் ஒருவரான வுல்ஸிக்கு ஈராக்கிய "சீரமைப்பு" பணியில் ஒரு முக்கிய பாத்திரம் அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பவலுக்கும், `மிதவாதத்துக்கும்` கிடைத்த வெற்றியைத்தான் பிரேமரின் நியமனம் குறிக்கிறது என்ற பரந்த அளவிலான அறிக்கைகளைப் பிசுபிசுக்கும் வகையில், வாஷிங்டன் போஸ்ட் கூறுகிறது: ``61 வயதில் பிரேமர், பென்டகனின் புதிய பழைமைவாதப் பிரிவில் நெருக்கம் கொண்ட கடுமையான நெஞ்சுடைய ஒரு பருந்து போன்றவராவார். அவர் ரம்ஸ்பெல்டினாலும், துணைப் பாதுகாப்புச் செயலர் போல் டி. வொல்போவிச்சினாலும் ஆதரவு பெற்றவர் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்; மேலும் வெள்ளை மாளிகை உதவியாளர்கள், அவருடைய நியமனம் ஒரு புதிய அரசாங்கம் அமைக்கப்படும் வரையில் பென்டகன் ஈராக்கின் மீதான கட்டுப்பாட்டைச் செலுத்துவது புஷ்ஷிற்கு அதன்மீதுள்ள திருப்தியையே, காட்டுகிறது.``

எனவே, பிரேமரின் தகுதிகள் யாவை? அவருடைய வாழ்க்கைக் காலத்தின் முழு பாத்திரமும் பிணைந்திருப்பது, ஒருபுறத்தில் தேசியப் பாதுகாப்பு, உளவுத்துறை, அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பு ஆகியவற்றிலும், மறுபக்கத்தில் அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட பன்நாட்டுப் பெரு நிறுவனங்களின் தேவைகளுக்கு ஆலோசனை வளங்குவதிலுமே ஆகும்.

இதைவிடத் தெளிவாக ஈராக்கில் உருவாக்கவிருக்கும் வாஷிங்டன் நோக்கங்களை செயல்படுத்தும் அரசாங்கத்தின் தன்மையைக்கூற முடியாது. அதனுடைய மிக முக்கியமான பணி, ஈராக்கிய மக்களின் எதிர்ப்பை கருணையின்றி ஒடுக்குதலும், ஈராக்கின் செல்வத்தை அமெரிக்க வங்கிகளும் பெருநிறுவனங்களும் கொள்ளையடிக்க வழிவகுத்திடலுமாகும்.

ஜெனரல் கார்நர், இதற்கிடையில் பிரேமருக்கு உட்பட்டுத் தன் பணியைச் செய்வார். ஈராக்கின் அடிப்படைக் கட்டுமானப் பணிகளைச் சீரமைப்பது மற்றும் ஈராக்கின் மனிதாபிமான தேவைகளை அளித்திடல் என்பவை அவருடைய வேலையாகக் கொள்ளப்படுகிறது. ஆனால் அவரோ, நாடு உண்மையான நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கவில்லை என தொடர்ச்சியாக வலியுறுத்திக் கூறியுள்ளார். ``எந்தவிதமான மனிதாபிமான நெருக்கடியும் இல்லை.... மேலும் அடிப்படைக் கட்டுமானச் சிக்கலும் அதிக அளவு இல்லை; மின்சார அமைப்பை மீண்டும் செயல்படுத்தச் செய்வதைத் தவிர...`` என்று நிருபர்களிடம் கடந்த வாரம் கூறியுள்ளார்.

கார்நர், அமெரிக்கச் செய்தி ஊடகம் ஈராக்கியரைப் பற்றிக் கவலைப்படுவதைவிட அவரோடு சேர்ந்து போரில் வெற்றிபெற்றதைக் களிப்புடன் கொண்டாடவேண்டும் என்கிறார். "ஒவ்வொரு நாளும் எமது மார்பில் இறுமாப்புடன் தட்டிக்கொள்ளவேண்டும்`` ``நாம் கண்ணாடியைப் பார்த்துப் பெருமிதம் அடையவேண்டும், நம்முடைய நெஞ்சங்களை நிமிர்த்திக்கொண்டு, வயிற்றை உள்ளடக்கிக் கூவிட வேண்டும். ஹ, நாம் அமெரிக்கர்கள்`` என்று அவர் கூறுகிறார்.

கார்நர் இந்த அறிக்கையை வெளியிட்டுச் சிறிது நேரத்தின் பின்னர் 8 பாரிய பன்னாட்டு உதவி அமைப்புக்கள், எவ்வாறு ஒரு பெரிய மனிதாபிமான நெருக்கடி ஈராக்கில் உருவாகிக்கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி அமெரிக்கா அக்கறை காட்டவில்லை என குறிப்பாகச் சுட்டிக்காட்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

"ஏற்கனவே போர் தொடங்குவதற்கு முன் கடுமையான நிலமையையும், குறைவான அடிப்படை வசதிகளையும் கொண்டிருந்த ஆஸ்பத்திரிகளும், குடிநீர் அமைப்புக்களும், வடிகால் முறைகளும் பூசல்களினாலும் சூறையாடுவதினாலும் பெரிதும் முடங்கிவிட்டன" என்ற அறிக்கையின் ஒரு பகுதி கூறுகிறது.

"மருத்துவமனைகள் அதிக அளவில் நோயாளிகளைக் கொண்டும், காலரா நோய் கடுமையாகப் பரவியும், இறப்பு எண்ணிக்கை பெருகிக்கொண்டு போதலும் நிகழ்ந்துள்ளன. மருத்துவமனைக் கழிவு உட்பட குப்பைகள் பெருகிக்கொண்டு போகின்றன. நல்ல தண்ணீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டதோடு, தைபோய்ட் போன்ற வியாதிகள் தெற்கு ஈராக்கில் தோன்றியுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன."

கார்நரும், அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளும், வேண்டுமென்றே இந்த நெருக்கடியை மூடிமறைத்து, ஈராக்கில் அமெரிக்கச் செய்கைகளைப் பற்றி கேள்விகள் எழுதலையும் அமெரிக்கப் போர் இலக்குகள் அடையப்பெறாமல் பன்னாட்டு அமைப்புக்கள் கேள்வி கேட்பதையும் அடக்கிவைத்துள்ளனர்.

அமெரிக்க இராணுவத்தில் தன்னுடைய பணியை "ஆலோசகர்" என்ற முறையில் தொடக்கிய ஜெனரல் கார்னர், வியட்நாம் போரின்போது "மூலோபாய ஹாம்லெட்" என்ற திட்டத்தை மேற்பார்வையிடும்போது, பல்லாயிரக்கணக்கான வியட்நாமிய விவசாயிகள் தங்கள் நிலங்களிலிருந்து துரத்தப்பட்டு, சுற்றிலும் இரும்பு முள்வேலியினால் சூழ்ந்த பெரிய அளவிலான சித்திரவதை முகாங்களில் அடைக்கப்பட்டனர். சமீபத்தில் New York Times க்குக் கொடுத்த பேட்டி ஒன்றில் "ஜனாதிபதி புஷ், வியட்நாம் போரின்போது ஜனாதிபதியாக இருந்திருந்தால், நாம் போரில் வெற்றி பெற்றிருப்போம்" எனக் கூறினார், மேலும் அமெரிக்கா, வட வியட்நாம் மீதும் படையெடுத்திருக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா தன்னுடைய இந்த முகத்தைத்தான் ஈராக்கிய மக்களுக்கு காட்டிக்கொண்டிருக்கிறது. பிரேமர், கார்நர் இருவருடைய வேலையும், விரைவில் ஊழல் நிறைந்த புலம்பெயர்ந்தோர், பழைய பாதிஸ்டுகள் இவர்களில் எவரை விலைக்கு வாங்க முடியுமோ அவர்கள் அனைவரையும் இணைத்துப் பெயரளவிலான ஈராக்கிய ஆட்சியைக் கொண்டு வருவதேயாகும். அப்படிப்பட்ட ஆட்சியின் பணி அமெரிக்க ஆக்கிரமிப்பை சட்டபூர்வமாக ஆக்குவதும், நாட்டின் எண்ணெய் வளத்தொழில் துறையை அமெரிக்க நிறுவனங்கள் கையேற்றுக்கொள்ளுதலும் ஆகும். ஈராக்கிய மக்களின் நிலைமைகளும் உரிமைகளும் கணக்கில் கொள்ளப்படமாட்டா. மாறாக பொறுப்பில் இருப்பவர்களின் கடமை, அமெரிக்க காலனித்துவ ஆதிக்கத்தை செயல்படுத்துவதில் தங்குதடையற்ற அடக்குமுறையையும், வன்முறையையும் கையாள்வதேயாகும்.

See Also :

அதிகாரபூர்வ விசாரணைக்கு புஷ், கிஸ்ஸிங்கரை தேர்ந்தெடுத்தார்: செப்டம்பர்-11 நிகழ்வுகளின் பின்னணியை மூடிமறைப்பதில் புதிய கட்டம்

Top of page