World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Europe on rations: the Afghan war and the dilemma of European capitalism

பங்கீட்டில் ஐரோப்பா: ஆப்கான் யுத்தமும் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் தடுமாற்றமும்

பகுதி 1 | பகுதி 2

By Peter Schwarz
20 March 2002

Use this version to print | Send this link by email | Email the author

உலக சோசலிச வலைத் தளத்தின் அனைத்துலக ஆசிரியர் குழுவின் உறுப்பினரான பீட்டர் சுவாட்ஸ் ஜனவரி 17 2002 அன்று வழங்கிய விரிவுரையின் இரண்டாவது பகுதியை இங்கு பிரசுரிக்கின்றோம். இந்த விரிவுரை அவுஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியால் சிட்னி நகரில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த அனைத்துலகப் பாடசாலையில் வழங்கப்பட்டது.

புஷ் நிர்வாகத்துடன் தமது ஒற்றுமையை தெரிவித்து அறிக்கை வெளியிட்டமையானது அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் இடையிலான பதட்ட நிலையை குறைத்துக் கொண்டுள்ளது என்ற முடிவுக்கு வருதல் முழுமையான தவறாகும். இராஜதந்திர ரீதியில், பொதுவாக உத்தியோகபூர்வ அறிக்கைகளை மத்தியஸ்தமான அரசாங்க பிரதிநிதிகள் வெளியிட்டாலும் நேரடியான அரசாங்கப் பொறுப்புகளில் இல்லாத அரசியல்வாதிகளின் அறிக்கைகளும், பத்திரிகை வெளியீடுகளும் ஐரோப்பிய ஆளும்தட்டினரின் உண்மையான மனப்பாங்கை வெளிப்படுத்தியது. உண்மையில், அரசியல்வாதிகளால் எடுக்கப்பட்ட நிலைப்பாட்டிற்கும், சில பத்திகைகளில் வெளிவந்த கருத்துக்களுக்கும் உள்ள இடைவெளியானது யுத்தம் தொடர்பான ஐரோப்பாவின் பிரதிபலிப்பு பற்றிய குறிப்பிடத்தக்க அம்சங்களையும் புலப்படுத்தியது.

முன்னைய ஜேர்மனியின் அதிபராக விளங்கிய ஒரு அரசியவாதியான எண்பதாவது வயதை எட்டியுள்ள ஹெல்முட் ஷிமிட் (Helmut Schmidt) அமெரிக்க வெளியுறவு கொள்கை பாதை பற்றிய ஐரோப்பிய கனவான்களின் உணர்வுகளை நன்கு வெளிப்படுத்தி காட்டினார். செப்டெம்பர் 11 ம் திகதி சம்பவத்திற்கு ஓராண்டுக்கு முன் அவர் ஹம்போல்ட் பல்கலைக் கழகத்தில், (Humboldt University / Berlin) "புதிய நூற்றாண்டில் ஐரோப்பாவின் உரிமைகளை பாதுகாத்தல்" என்ற தலைப்பிலான உரை ஒன்றில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். [1]

''அமெரிக்கர்கள், சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின் தாமே உலகின் ஒரே ஒரு வல்லரசு பலம் கொண்டவர்கள் என்று கருதுகின்றனர், அது உண்மையாகயிருக்கலாம். சிலர் இதற்கும் மேலாக போய் முழு உலகையும் ஆளுபவர்கள் தாமே என்றும் கருதுகின்றனர். இது தவறாகும். அவர்கள் விரும்புவதைப் போல் தாம் இல்லை என்பதை அறியாமல் உள்ளார்கள். அமெரிக்காவின் அரசியல் வர்க்கம் தற்போதைய காலகட்டம் தொடர்பாகவும், உலக நிகழ்வுகள் தொடர்பாகவும் முன்னர் இருந்ததை போலல்லாமல் மிகவும் வரையறுக்கப்பட்ட விளக்கங்களையே கொண்டிருக்கின்றது".

சிமிட், 1999 இல் இணக்கம் காணப்பட்ட ஓர் கொள்கை அறிக்கையை தாக்குகிறார். அது நேட்டோ, கூட்டு நாடுகளின் எல்லைக்கப்பால் சென்று உலக ரீதியில் தலையீடு செய்வதை அனுமதிக்கின்றது. "இதற்கு பின்னணியிலுள்ள நோக்கம் என்னவெனில், அமெரிக்கா ஜெனரல்களையும், விமானங்களையும், எறிகணைகளையும் வழங்குகிறது ஐரோப்பா படைவீரர்களை வழங்குவதாகும்'' எனக் குறிப்பிட்டார்.

அவர் பின்னர் விசேடமாக, தற்போதைய போரின் பின்னாலுள்ள நிபுணர் ஒருவரான ஸ்பிக்னேவ் பிரெசின்ஸ்கியின் (Zbigniew Brzezinski) எழுத்துக்களைப் பற்றி சுட்டிக் காட்டுகிறார். மேலும் அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்: "ஒரு புத்தகத்தில் உள்ள ஒரு பிரதான கட்டுரையில், பிரெசின்ஸ்கி வெளிப்படையாகவே 'யூரோஆசிய கண்டத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்' கடமை உள்ள ஒரேயொரு வல்லரசு அமெரிக்கவே என குறிப்பிட்டுள்ளார். இவ் எல்லைகள் பேராசை பிடித்தவனின் போல் உள்ளன.''

"இது ஒன்றும் அதிசயமானதல்ல", என சிமிட் முடிவுரையாக கூறுகிறார், "அதாவது பொஸ்னியா, கொசோவோ சம்பவங்களின் அனுபவங்களின் பின்னர் அண்மையில் கூடி முடிவெடுத்த ஐரோப்பிய அரசாங்கத் தலைமைகள், ஒரு பொதுவான வெளியுறவு பாதுகாப்பு கொள்கை நிறுவப்பட வேண்டுமென தீர்மானித்தன. பத்தாண்டுகளுக்கு முன் ஒரு பிரான்ஸ் குடிமகனுக்கு இத்தகைய எண்ணம் இருந்திருக்கக் கூடும். ஆனால் வேறெந்த ஐரோப்பியனுக்கும் இருந்திருக்கவில்லை. இது வாஷிங்டனின் மேலாண்மைக்கு எதிரான பொதுவான பிரதிபலிப்பாக இன்று அமைந்துவிட்டது" என குறிப்பிட்டார்.

ஐரோப்பிய பத்திரிகைகளில் அமெரிக்கா மீதான தாக்குதல்கள்

யுத்தம் ஆரம்பமானதும், பிரான்ஸ், ஜேர்மனிய, பிரித்தானிய பத்திரிகைகள் பல வெளிப்படையாக அமெரிக்காவை தாக்கின. அரசாங்கத்தின் உள் வட்டாரத்தில் கூடிய நெருங்கிய தொடர்புகளை கொண்டதாயும் ஏறத்தாள இரண்டு மில்லியனுக்கு மேற்பட்ட பிரதிகளையும் விற்பனை செய்யும் குறிப்பாக Der Spiegel எனும் ஜேர்மன் சஞ்சிகை யுத்தத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், அகமட் ரசிட்டின் (Ahmed Rashid) புத்தகமான, "தலிபான்: இஸ்லாம், எண்ணெய், மற்றும் மத்திய ஆசியாவில் புதிய பெரும் விளயாட்டும்" (Taliban: Islam, Oil and the New Great Game in Central Asia) எனும் இந்த யுத்தத்தின் உண்மை நோக்கை சுட்டிக் காட்டி அதைத் தொடராக வெளியிட்டது.

Der Spiegel எனும் இப் பத்திரிகை ஒரு கட்டுரையில், ''வாஷிங்டனின்' புதிய சாம்ராஜ்ஜிய கனவு" என்று கசப்பாக கூறி அதைக் கண்டிக்கிறது. கூட்டுறவுக்கான ஆரம்ப நம்பிக்கை, ''முற்றாக சிதைக்கப்பட்டுவிட்டது. செப்டெம்பர் 11 ம் திகதி தாக்குதலின் பின் நிபந்தனையின்றி அமெரிக்க பக்கம் சார்ந்த பல ஐரோப்பியர்கள் இது பற்றி சிந்திக்க தலைப்பட்டுள்ளனர்" எனவும் அது குறிப்பிடுகிறது.

இது மென்மேலும் குறிப்பாக, அமெரிக்கா சர்வதேச கூட்டுறவை நிராகரித்த பலவற்றையும் குறிப்பிட்டது: ஆயுதக்குறைப்பு ABM உடன்படிக்கையை (ABM - treaty) ஒரு தலைபட்சமாகக் கலைத்துக் கொண்டமை, உயிரியல் ஆயுதப் பரிகரணத்தில் (biological weapons) சர்வதேசக் கட்டுப்பாட்டை ஏற்க மறுத்தமை, Hague இல் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றத்துக்கு ஆதரவளிக்க மறுத்தமை, அமெரிக்கர்கள் அல்லாத குடிமக்களுக்கு அமெரிக்க போர்மன்றங்களை உருவாக்கியமை போன்ற விடயங்களை சுட்டிக் காட்டுகிறது.

அதே சமயம், அத்திலாந்திக்கின் மறு பக்கமானது முன்னைய கிளின்டன் நிர்வாகத்திலும் பார்க்க அமெரிக்க தேசிய நலன்களை அதன் வெளியுறவு கொள்கையை வழிநடாத்தும் கொள்கையாக வெளிப்படையாக மேற்கொண்டது. இந்தக் கண்ணோட்டத்தை மிகக் கூடுதலாக விளங்க வைக்க ஒரு உதாரணத்தை எடுத்துக்காட்ட என்னை அனுமதியுங்கள்.

ஜனாதிபதி தேர்தலுக்கு சற்று முன்னதாக, ஜனாதிபதியின தேசிய பாதுகாப்பு ஆலோசகரான கொன்டோலிசா ரைஸ் (Condoleezza Rice) வெளியுறவுத் துறை (Foreign Affairs) எனும் சஞ்சிகையில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில் அவர் இந்த உண்மையை அதாவது, "அமெரிக்காவிலுள்ள அநேகர் (எப்போதும் போல்) அதிகார அரசியல், பாரிய அதிகாரம் மற்றும் சமபல அதிகாரங்கள் ஆகியவற்றை பற்றி கிலேசமடைந்துள்ளனர் எனவும், அவர் மேலும், சற்று கூடிய வகையில், "இத்தகைய கிலேசமானது அநேக அரசுகளால் ஆதரிக்கப்பட்டும், குறிப்பாக ஐக்கிய நாடுகளால் ஆதரிக்கப்படும் நம்பிக்கையான, சட்ட பூர்வமான அதிகார பிரயோகம் அவசியம் என்பதற்கு இட்டுச் செல்லக்கூடியது. 'தேசிய நலன்' என்பது மனிதாபிமான 'நலன்' அல்லது 'சர்வதேச சமூகத்தின் நலன்' என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கால சிந்தனைகளில் ஆழமாக வேரூன்றிய ஒன்று அல்லது ஒருவருக்காக அமெரிக்கா சட்டபூர்வமாக அதிகாரத்தை பிரயோகிப்பது என்ற நம்பிக்கை கிளின்டன் நிர்வாகத்திலும் பலமாக ஒலித்தது. உண்மையில் சகல சமூகங்களுக்கும் நலன் புரியும் ஏதாவதொன்றை செய்வதில் தவறொன்றுமில்லை. ஆனால் அது இரண்டாம்தரமானது. அமெரிக்காவின் தேசிய நலன்களுக்கான நடவடிக்கையானது, சுதந்திரம், சந்தை மற்றும் சமாதானத்தை முன்னேற்றும் நிபந்தனைகளை உருவாக்கும்" என்றெல்லாம் எழுதுகிறார். [2]

நாம் இத்தகைய அறிக்கைகளையும், அண்மைக்கால அரசியல் அபிவிருத்திகளையும், அமெரிக்க, ஐரோப்பிய உறவுகள் மேலும் அதன் கீழுள்ள பொருளாதார காரணிகளை கவனிப்பின் நாம் நிச்சயமாக அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் இடையிலான மோதலானது எதிர்கால அரசியல் அபிவிருத்திகளில் அதிகரித்த ஆதிக்க பங்கினை வகிக்கப் போகிறதென முன்கூட்டியே யோசனை சொல்ல முடியும். இதுவரை அரசியல் விவாதத்தின் பின்னணியாயிருப்பது நிச்சயமாக தவிர்க்கமுடியாத விதத்தில் வெளிப்படையாக வெடித்தெழுவதுடன் அரசியலை நிர்ணயிக்கும் காரணியாகவும் அமையும்.

இந்த போக்கினை பற்றிய தெளிவான விளக்கமும், இதையிட்ட தெளிவான கருத்தும் இல்லாவிடில் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை நிறுவுவதென்பது அசாத்தியமாகும். அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும், அதே சமயம் ஐரோப்பிய முதலாளித்துவத்தின், ஏகாதிபத்திய மோதலுக்கும் விட்டுக் கொடுக்காத எதிர்ப்பைக் காட்டுவதும் எமது கடமையாகும்.

ஐரோப்பாவின் பொருளாதார அரசியல் பிரச்சினைகளுக்கு ஐரோப்பிய மக்கள், குறிப்பாக மத்தியதர வர்க்கம் அமெரிக்காவை குறை கூறுவதற்கான முயற்சிக்கு குறைவே இல்லை. இவர்கள் அமெரிக்காவுக்கு எதிர்ப்பு என்ற போர்வையின் கீழ் தமது அரசாங்கத்தின் பின்னால் செல்லுகின்றார்கள். மேலாண்மை மிக்க அமெரிக்காவுடன், ஐரோப்பிய இராணுவவாதத்திற்கு ''சமத்துவத்தை'' கோரும் பிரச்சாரத்தை நியாயப்படுத்தலுக்கும் ஒருவிதமான குறைவுமில்லை.

தற்போதுகூட இத்தகைய முயற்சிகள் குட்டிமுதலாளித்துவ தீவிரவாத பிரிவினரிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன. ஜேர்மன் பசுமை கட்சியினர் மிக விரைவாக அமைதிவாத போக்கை கைவிட்டு ஏகாதிபத்திய யுத்த முகாமில் நுழைந்தமை புறநிலை முக்கியத்துவம் உடையது. அவர்களது தேர்தல் மேடைகளில், ஜேர்மனியின் படைகள், பிரதேசத்துக்கு வெளியே உதாரணமாக நேட்டோ பிரதேசத்துக்கு வெளியே நிறுத்தப்படுவதை எதிர்த்து வந்தனர். அதன் பின் வெளியுறவு அமைச்சர் ஜொஸ்கா பிஷ்ஷர் (Joschka Fischer) தலைமையில் அவர்கள் ஜேர்மனியின் படை கொசோவோ, மசடோனியாவுக்குள் நிலை நிறுத்தப்படுவதை ஆதரித்ததுடன் மட்டுமல்லாமல் சோமாலியாவுக்கும் அண்மையில் காபூலுக்கும் அனுப்பப்படுவதையும் ஆதரித்துள்ளனர்.

லெனினின் ஏகாதிபத்தியம்

முதலாம் உலகப் போரின்போது, லெனின் தனது ஏகாதிபத்தியம் என்ற நூலில், ''போர் தம்மிடமுள்ள மொத்த வர்க்கங்களையும் ஏகாதிபத்திய வழிக்குள் கொண்டு செல்லும் ஒரு பாதை'' என விபரிக்கிறார், மேலும் இது ஏகாதிபத்திய சகாப்தத்தில் ஒரு பண்பாகும் என்றார். எனவே தொழிலாள வர்க்கம் இதற்கு எதிராக தடுப்புமருந்து ஏற்றப்பட்டிருக்கவில்லை என அவர் எச்சரித்தார். "ஏனைய வர்க்கங்களில் இருந்து அதை எந்தவொரு சீனப் பெருஞ்சுவருமே பிரித்துவைக்காது" என லெனின் விபரித்துள்ளார். [3]

லெனின் கூறியதற்கமைய, சந்தர்ப்பவாதமானது தொழிலாள வர்க்கத்தின் பிரிவினரை ஏகாதிபத்திய பக்கம் இழுத்துச் செல்லும் ஒரு அரசியல் தத்துவார்த்த பொறிமுறையாக (Political - ideological mechanism) சேவையாற்றுகிறது. இது ஓர் முக்கிய பண்பாக இன்று உள்ளது. பூகோளமயமாக்கலுக்கு எதிரான இயக்கங்கள் என்று சொல்லப்படுகின்ற இயக்கத்தின் மத்தியிலும், குட்டி முதலாளித்துவ தீவிரவாதிகள் மத்தியிலும், சமூகஜனநாயகவாதிகளின் இடதுசாரி பிரிவினரிடமும், தொழிற்சங்க மற்றும் பழைய ஸ்டாலினிச அதிகாரத்துவத்தின் மத்தியிலும், தொழிலாளர்களின் சமூக நலன்களுக்காக வார்த்தைஜால கோசம் எழுப்புவதிலும், ஐரோப்பியவாதம் அல்லது தேசிய இனவெறியை முன்வைப்பதிலுமான பல போக்குகளிலும் இவர்கள் இணைந்து நிற்கின்றனர். மேலும் அவர்கள், ''புதிய தாராளவாத - பூகோளமயப்படுத்தல்'' ("neo-liberal globalisation") என்பதை, அமெரிக்காவுடன் ஒப்பீட்டாக கூறி அடையாளம் காட்டுகின்றனர்.. அமெரிக்க மேலாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் தத்தமது அரசாங்கங்களுடன் பொதுவான அம்சத்தை ஏற்படுத்திக் கொள்ளவே அவர்கள் விரும்புகின்றனர்.

ஜேர்மனியில் இந்த அடிப்படையில் இது, புதிய அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்பும் முயற்சியில் முன்னேறியுள்ளது. அட்டாக் (ATTAC) என்ற இயக்கம், முன்னாள் சமூக ஜனநாயக கட்சியின் தலைவர் ஒஸ்கா லாவொன்ரைன் (Oskar Lafontaine), PDS தலைவர் கிரேகோ கீசி, (Gergor Gysi) முன்னாள் அச்சக யூனியனின் தலைவரான டெட்லெவ் கென்சே, (Detlef Hensche) பசுமைக் கட்சியனரின் விமர்சகர்கள் போன்ற மற்றும் ஏனையோருக்கும் அரங்கமைத்துக் கொடுத்துள்ளது. கூடியளவான பார்வையாளர்கள் உள்ள பொது மேடைகளில் அவர்கள் தோள்களை உரசி, ஒருவரை ஒருவர் மோப்பமிட்டு, தமது வேறுபாடுகளை விவாதித்து பார்வையாளரது பிரதிபலிப்பை பரீட்சித்து பார்க்கின்றனர்.

இந்த போக்குகளின் வெற்றியானது, உண்மையிருந்து வெகுதூரத்தில் உள்ளன. ஆளும் பிரிவினருக்கு அடிபணியும் நிகழ்வுப் போக்கில் அவர்கள் விரைவாக வலது பக்கமாக நகர்ந்து கொண்டுள்ள சமயத்தில், சக்திவாய்ந்த புறநிலை நிலைமைகள் மக்களை இடது பக்கமாக இழுத்துச் செல்கின்றன. எமது பக்கத்தில் இருந்து செய்யும் பலமான அரசியல் தலையீடே, தொழிலாள வர்க்கத்துக்கு புதிய மத்தியவாத பொறிக்கிடங்கை உருவாக்கும் இவர்களது முயற்சிகளை முறியடிக்க வல்லது.

1924 ல் வெளியிட்ட, "உலக அபிவிருத்திக்கான முன்நோக்குகள்" என்ற உரையில் லியோன் ட்ரொட்ஸ்கி, "அமெரிக்காவானது ஐரோப்பாவை பங்கீட்டில் வைக்க துரிதப்படுத்தும்" என்றார்.

''அமெரிக்க முதலாளித்துவமானது, ஐரோப்பாவை போட்டியிடும் தகுதியுடன் இருப்பதற்கு இடமளிக்காதிருக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது; அது இங்கிலாந்தை அனுமதிக்கப் போவதில்லை, அவ்வாறேதான் ஜேர்மனியையும், பிரான்சையும், குறிப்பாகவும் ஜேர்மனியை அமெரிக்க முதலாளித்தும் தான் தேடியுள்ள அனைத்துலக சந்தைகளை மீளப்பெறுவதை அனுமதிக்காது. ஏனெனில் அது தற்போது ஏற்றுமதி முதலாளித்துவமாக, பண்ட முதலீட்டு ஏற்றுமதிக்கான முதலாளித்துவமாகியுள்ளது. அமெரிக்க முதலாளித்துவம் உலக ஆதிக்கத்துக்கான நிலையை தேடி அலைகிறது; எமது கண்டத்தில் ஓர் அமெரிக்க ஏகாதிபத்திய எதேச்சதிகாரத்தை நிறுவ விரும்புகிறது. இதுதான் அதனது விருப்பமாகும்." [4]

ட்ரொட்ஸ்கி எழுதுகிறார், "அது முதலாளித்துவ ஐரோப்பாவை பங்கீட்டில் தள்ளிவிட விரும்புகிறது." ''அது சந்தைகளை பிரிவுகளுக்கு உள்ளாக்கும், அது ஐரோப்பிய நிதியிடல் மற்றும் கைத்தொழில்துறை நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும்.... அது எவ்வளவு தொன், எவ்வளவு லீட்டர், எவ்வளவு கிலோ கிராம் எடையுள்ள எந்தப் பொருட்களை ஐரோப்பாவிற்கு வாங்கவோ விற்கவோ உரிமை உள்ளது என்பதை மிகவும் கறாராக தெரிவிக்கும்.''

இரு ஆண்டுகளுக்குப் பின் இந்த உரைக்கு முகவுரையாய் எழுதிய பிரசுரத்தில் ட்ரொட்ஸ்கி எழுதுகிறார், "அமெரிக்காவின் சடத்துவபொருட்களின் ஆதிக்க பலத்தின் தள்ளாட்டமானது, முதலாளித்துவ ஐரோப்பாவிற்கான சீர்திருத்தத்திற்கும், பொருளாதார மேன்மைக்குமான சாத்தியப்பாடுகளை தன்னிச்சையாக அகற்றியுள்ளது. முன்னைய காலங்களில் உலகின் பின்தங்கிய பிரிவுகளை புரட்சிகரமாக்கியது ஐரோப்பிய முதலாளித்துவமேயாயின், இன்று அதி முதிர்ச்சியுள்ள ஐரோப்பாவை புரட்சிகரமாக்குவது அமெரிக்க முதலாளித்துவமேயாகும். பாட்டாளி வர்க்க புரட்சியைத் தவிர்ந்த, சுங்கவரிகள், அரச எல்லைகளைத் தவிர்த்தல், ஐக்கிய சோவியத் அரசுகளை ஐரோப்பாவில் உருவாக்குதல், மற்றும் ஐக்கிய சோசலிச சோவியத் ரஷ்யாவுடனும், சுதந்திர ஆசிய மக்களின் கூட்டுறவுடனான ஐக்கியம் போன்ற இவற்றைத் தவிர்த்து, குருட்டுத்தனமான பொருளாதாரக் கூட்டில் இருந்து விலக்கிக் கொள்ள அதற்கு வேறு வழியெதுவுமே கிடையாது. இத்தகைய பிரமாண்டமான போராட்டத்தின் தீர்க்கமான அபிவிருத்தியானது தவறின்றி தற்போதைய முதலாளித்துவ அதி உயர் அதிபதியான அமெரிக்காவுக்கு மாறான புரட்சிகர சகாப்தத்தை தோற்றுவிக்கும்". [5]

இந்த ஆய்வானது குறிப்பிட்ட சில சாத்தியமான திருத்தங்களுடன் இன்றும் அதன் பெறுமதியை பேணிவருகின்றது.

அமெரிக்க பொருளாதார சார்பு பலமானது 75 வருடங்களுக்கு முன்னர் இருந்ததிலும் பார்க்க குறைந்துள்ளது. வேர்சல்ஸ் (Versailles treaty) உடன்படிக்கையின் போது காணப்பட்டதிலும் பார்க்க ஐரோப்பிய சீர்குலைவும் தகர்வும் மிகக் குறைந்தளவிலுள்ளது என்ற காரணியானது, உலக ஆளுமைக்கான போராட்டமானது மேலும் மூர்க்கமானதாகவும், பரந்துபட்ட பண்புடையதாகவும் இடம் பெறுவதுடன், 1926ல் ட்ரொட்ஸ்கி தொலை நோக்காக கண்டதிலும் பார்க்க பாட்டாளி வர்க்கப் புரட்சி ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் மேலும் நெருங்கிய தொடர்புடையதாக அமையப் போகின்றது என்பதையே உணர்த்துகின்றது."

தற்போது 1920களில் காணப்பட்டதைப் போன்று, அமெரிக்காவுடனான மோதல் முதலாளித்துவ ஐரோப்பாவை, பாட்டாளி வர்கக் புரட்சியைத் தவிர்ந்த வேறெந்த வழியுமற்ற, ஒரு குருட்டுப் போக்கான பாதைக்கே அது தள்ளப்பட்டிருக்கிறதென்பதையும் காட்டி நிற்கிறது. இது பழைய கண்டத்தில் பொருளாதார, சமூக, தேசிய மோதல்களை அதிகரிக்கச் செய்யும்.

இது குறித்து பல அறிகுறிகள் காணப்படுகின்றன. யூரோ நாணயத்தின் வெற்றி அத்துணை நிச்சயமில்லை என ஏற்கனவே மிக கவனமான எச்சரிக்கைக் குரல்கள் ஒலித்திருந்தன. பொருளாதாரக் கொள்கை, வரிக் கொள்கை, சமூகக் கொள்கை, வெளியுறவு கொள்கை போன்ற பன்னிரண்டு கொள்கைகள் தனிப்பட்ட அரசாங்கங்களின் கைகளில் இருக்கும் போது பொதுவான நாணயமொன்று எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படலாம் என அவர்கள் கூறுகின்றனர். "கொள்கையிலிருந்து நாணயத்தை பிரிப்பதென்பது ஒரு கீழ்தரமான வேலை என அண்மையில் Süddeutsche Zeitung எனும் பத்திரிகை அதன் ஆசிரியர் தலையங்கத்தில் எழுதியது. அரசியல் நெருக்கடியினால் அரசுகள் பிளவுபடும்போது அல்லது அவை ஒன்றுக்கு ஒன்று எதிராக வரும்போது, வெவ்வேறு நாடுகளினால் கூட்டாக உபயோகிக்கப்படும் நாணயம் துண்டுகளாக உடைக்கப்படும் என வரலாறு எங்களுக்கு கற்பிக்கின்றது," என அது எச்சரிக்கை செய்தது. [6]

தேசிய அரசுகளுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே சமநிலைக்கான புதிய விதிகள் அபிவிருத்தியடையாது இருப்பின், "முதலில் ஒன்றியம் ஸ்தம்பிதம் அடைந்து பின்னர் அது முடமாக்கப்படும். இதுவே அதன் மரணப்படுக்கையாகி ஒரு அரசியல் எண்ணத்தின் முடிவாகவும் அமையும். யூரோ நடைமுறைப்படுத்தப்பட்ட பின் பிரச்சினைகள் பெருக்கெடுக்கும். ஐரோப்பா ஆழமான நெருக்கடியை நோக்கி தள்ளப்படும்", என அப் பத்திரிகையின் ஆசிரியர் குழு மேலும் எச்சரிக்கிறது.

ஆப்கானிஸ்தானிய யுத்தத்துக்கு ஒரு பொதுவான பதிலை வழங்க ஐரோப்பிய அரசாங்கங்கள் இலாயக்கற்றுப் போனமையும், யூரோ நாணயத்தையிட்டு தனது சகபாடிகளின் அவமதிப்பு குறிப்புக்களின் காரணத்தால் தனது அரசாங்கத்திலிருந்து இத்தாலிய வெளியுறவு அமைச்சர் றினாடோ றுஜேரியோ (Renato Ruggiero) இராஜினாமா செய்தமையும் ஐரோப்பிய வர்த்தக வட்டாரங்களில் ஏற்கனவே அபாய மணியை ஒலிக்கச் செய்திருக்கின்றது. ஐரோப்பா தகர்க்கப்பட்டு, பிளவுபடுத்தப்படும் என்ற அச்சம் இவற்றிற்கு இடையே தெளிவாக்கப்பட்டுள்ளது. ஆபத்து மட்டுமல்ல பழைய தேசியவாத உணர்வு தம்மிடையே மீண்டும் ஊட்டப்பட்டதாக பிரதேசவாத இயக்கங்களான இத்தாலிய லீகா நோட், (Lega Nord) ஆஸ்திரிய ஜோர்க் கைடர் (Jörg Haider) இன் சுதந்திரக் கட்சியும், பிரதேச அடிப்படையில் ஏனையவர்களும் பிரிந்து செல்வதென்பதையும் காணக் கூடியதாகவுள்ளது.

இதற்கும் மேலாக, சமூக சேவைகள், ஓய்வூதியம், நலன்புரி சேவைகள் போன்றவை அமெரிக்க தரத்திற்கு தகுந்தால்போல் வெட்டப்பட்டால்தான், அதாவது கிட்டத்தட்ட இல்லாதொழிக்கப்பட்டால்தான் யூரோ நாணயம் வெற்றியளிக்க முடியும் என சகல பொருளியலாளர்களும், நிபுணர்களும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அதாவது ஆய்வாளர்களின் தகவல்களின்படி, யூரோவுக்கு எதிரான டொலரின் உயர்ச்சியானது கடந்த இரு தசாப்தங்களாக அமெரிக்க வரவுசெலவு திட்டத்தில் அமுலாக்கப்பட்டு வந்த பாரிய வெட்டுக்களின் பெறுபேறாகும். அமெரிக்க அரச செலவினம், ஐரோப்பாவின் மொத்த தேசிய உற்பத்தியின் 46 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், மொத்த தேசிய உற்பத்தியின் 30 சதவீதத்தையே அமெரிக்கா கொண்டுள்ளது. [7]

ஏற்கனவே வேலையில்லாப் பிரச்சினை 10 வீதமாகவும், மேலும் தெளிவான பொருளாதார மந்தத்திற்கான அறிகுறிகள் தென்படும் வேளையிலும் இத்தகைய வெட்டுக்கள் அமுல் செய்யப்பட்டால் அவை கோடிக்கணக்கான மக்களை பாதித்து, பிரம்மாண்டமான சமூக வெடிப்பினை பரந்தளவில் உருவாக்கிவிடும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் விரிவாக்கம்

இச்சகல பிரச்சினைகளும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கிழக்கு நோக்கிய விரிவாக்கத்துடன் மேலும் மோசமடையும்.

தற்போதுள்ள திட்டப்படி, அநேகமாக முன்னாள் ஸ்ராலினிச கிழக்கு ஐரோப்பிய நாடுகளை கூடுதலாகக் சேர்ந்த புதிய பத்து அங்கத்தவர்கள் 2004ம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரவுள்ளார்கள். கூடுதலானவை மிகவும் வறிய நாடுகளாகும். மேற்கு ஐரோப்பிய வாழ்க்கைத் தரத்தில், அனேகமாக பத்தில் ஒரு பங்கையே இவை கொண்டுள்ளன. இந்த ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் உட்பட வேண்டியதான நிபந்தனைகள் என்பன அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் கீழே தள்ளுவதுடன், கோடிக்கணக்கான சிறிய விவசாயிகள், சிறிய வியாபாரிகள், தொழிற்சாலையில் உள்ள தொழிலாளர்கள் போன்றவர்களை உலக சந்தையில் போட்டியிட முடியாத நிலையில் அழித்தொழிக்கும்.

ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தின் வட்டாரங்களின் மத்தியில், குறிப்பாக ஜேர்மனியில் கிழக்கு ஐரோப்பிய விரிவாக்கம் தொடரப்பட வேண்டும் என்ற பரந்த ஒருமைப்பாடு காணப்படுகிறது. அவர்களுக்கு இது ஓர் மூலோபாயப் பிரச்சினையாகும். கிழக்கு ஐரோப்பா அப்படியே விடப்பட்டால் அது அமெரிக்காவின் கீழ் செல்லலாம் அல்லது மீண்டும் ரஷ்ய அதிக்கத்தின் கீழ் வரலாம். அது யூகோஸ்லாவியாவைப் போன்று, உள்நாட்டுப் போருக்கு உட்பட்டு பிளவுபடலாம், அத்துடன் "பாதுகாப்பு பிரச்சினை" வேறு உருவாகலாம் என்ற கருத்து அவர்களிடையே காணப்படுகின்றது.

ஆனால் இத்தகைய பாரிய புதிய இணைப்பினை சமாளிக்குமளவில் ஐரோப்பிய ஒன்றியம் தயார் நிலையில் இல்லை. முன்னைய கிழக்கு ஜேர்மனியில் பெற்ற அனுபவத்தில் நிலைமைகள் அப்போது, அங்கு சாதகமாயிருந்தன. முதலாளித்துவ ஐரோப்பாவிற்கு அத்தகைய நாடுகளில் அவற்றின் பிரச்சினைகளை தீர்க்குமளவு வல்லமை இருக்கவில்லை. ஜேர்மனியின் ஒருங்கிணைப்பின் பின்னர் பன்னிரண்டு ஆண்டுகள் கழிந்த பின்னரும் கிழக்கு ஐரோப்பிய வேலையில்லாப் பிரச்சினையானது மேற்கிலும் பார்க்க இருமடங்கு உயர்ந்தும், மேற்கிற்கு சகலரும் சிறந்த வேலைகளை தேடிச் சென்றுவிட்ட காரணத்தால் முன்னாள்் ஜேர்மன் ஜனநாயக குடியரசின் (GDR) முழுப் பிரதேசமும் வெறிச்சோடியும் காணப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் கிழக்கை நோக்கிய விரிவாக்கமானது, கிழக்கில் ஓர் சமூக அழிவை உண்டுபண்ணுவதுடன் மட்டுமல்லாமல், மேற்கிலும் சமூக பதட்ட நிலையையும் உருவாக்கும். கோடிக்கணக்கான பயிற்சி பெற்ற ஆனால் குறைவாக ஊதியம் பெறும் தொழிலாளர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரவேசிப்பது தற்போதுள்ள சம்பளம் மற்றும் வேலை நிலைமைகளை மேலும் கீழ் நோக்கி தள்ளும் உந்து விசையாக அமையலாம்.

ஐரோப்பிய ஒன்றியம் 15 அங்கத்துவத்திலிருந்து 25 அங்கத்தவராக விரிவாக்கப்டுவது அனைத்துலக மட்டத்தில் தீர்க்கமானது என ஐரோப்பிய நிறுவனத்தின் மறுசீரமைப்பு கருதுகின்றது. ஆனால் இதுவரை எந்தவொரு முன்னேற்றமுமே காணப்படவில்லை. அது ஜேர்மனி, பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு இடையிலான பகைமையாலும், பெரிய சிறிய நாடுகளினது பகமைகளாலும் பின்தள்ளப்பட்டு வருகின்றன.

பொருளாதார ரீதியில் பார்ப்பின், கிழக்கு விரிவாக்கத்தினால், தற்போதுள்ள மட்டத்தில் விவசாயிகளுக்கும், வறிய மாநிலங்களுக்குமாக மானியம் வழங்கப்பட்டால் ஐரோப்பிய ஒன்றியமானது வங்குரோத்தடைய நேரும். உதவித் தொகை குறைக்கப்படின், அது மேலதிகமான சமூக பதட்ட நிலையை உருவாக்குவதுடன் தற்போதைய அங்கத்தவர்களின் மத்தியிலும் மேலும் பிளவுகளையும் உருவாக்கும்.

ஐரோப்பிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்

தவிர்க்க முடியாத தீர்க்கமான சமூக முரண்பாடுகளை எதிர்பார்த்து ஐரோப்பிய அரசாங்கங்கள் அவற்றின் முக்கிய தயாரிப்பாக பாரிய அடக்குமுறை இயந்திரங்களை கட்டியெழுப்பி வருகின்றன. இதன் உள்ளடக்கத்திலேயே, செப்டெம்பர் 11 ன் சம்பவங்களிலான, அவர்களது பிரதிபலிப்பை காணவேண்டும். இதுபோன்ற ஒரு தாக்குதல் இதுவரையில் ஐரோப்பாவில் இடம்பெறாதிருப்பினும், அவர்கள் அதற்கான அம்சத்தை புஷ் நிர்வாகத்திடமிருந்து பெற்றுக் கொண்டு, ஜனநாயக உரிமைகளுக்கு மீதான பாரிய தாக்குதலை தூண்டியுள்ளனர். ஒரே விதமானவகையில் அநேக ஐரோப்பிய பாராளுமன்றங்களில், இப் பெயரளவிலான புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்கள் விரைந்து கொண்டுவரப்பட்டன: பொலிசாருக்கும், இரகசிய சேவைகளுக்கும் மேலதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதே சமயம் சிவில் உரிமைகள், முக்கியமாக வெளிநாட்டவரது சிவில் உரிமைகள் பாரியளவு வெட்டப்பட்டுள்ளன. உதாரணமாக ஜேர்மனியை எடுத்துக் கொண்டால், பொலிஸுக்கும், இரகசிய சேவைகளுக்கும் இடையே என கடுமையாக பிரித்து வைக்கப்பட்டிருந்த ஒரு முறை முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது. இந்த பிரித்து வைக்கப்பட்டிருந்த முறையானது ஹிட்லரின் சகல அதிகார பலமுள்ள அரசின் இரகசிய பொலிசான கெஸ்டாபோ (Gestapo) நாசி ஆட்சியின் வீழ்ச்சியின் பின்னர் நிறுவப்பட்டிருந்த ஒன்றாகும்.

இத்தகைய சகல நடவடிக்கைகளும், ஒரு தனி நபர் பயங்கரவாதத்துக்கோ அல்லது ஒரு இயக்கத்திற்கு எதிராகவோ தொடுக்கப்பட்டவையாக இருக்கவில்லை, ஆனால் அவற்றிற்கு மாறாக இவை, தற்போது ஆட்டம் கண்டுள்ள ஆட்சி முறைக்கு எதிராக உருவாகியுள்ள சமூக அல்லது அரசியல் மக்கள் இயக்கத்துக்கு எதிராக கொண்டுவரப்பட்டவையே என்பது மிகவும் தெளிவானதாகும்.

இராணுவ மயமாக்கலுக்கும், யுத்தத்திற்கான எதிர்ப்பு, ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு, சீரழியும் சமூக நிலைமைகளுக்கு எதிர்ப்பு என்பன ஐரோப்பா முழுவதும் பரந்த மக்கள் கிளர்ச்சிக்கான இயக்கங்களை உருவாக்கும் என்பதில் எதுவித ஐயமுமே கிடையாது. இச்சகல விடயங்களிலும் நாம் முன்னணியில் நிற்கவேண்டும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்நோக்கிலிருந்தும், உலக சோசலிசப் புரட்சி மூலோபாயத்தில் இருந்தும் பிரிந்து கொண்டு யுத்தத்திற்கு எதிராகவும், சமூக நிலைமைகள், ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் தொடர்ச்சியான போராட்டத்தை நடத்த முடியாது.

ஐரோப்பிய முதலாளித்துவத்தை பாதுகாப்பவர்களிடம் தவிர்க்க முடியாதவாறு ஓர் தர்க்கம் உள்ளது. அவர்கள் அது மிகவும் சமூக மயமானது, மிகவும் கலாச்சாரமுடையது, மிகவும் நியாயமானது -அமெரிக்க மேலாதிக்கத்துக்கு எதிரானது என கூறுகின்றனர். பூகோளமயமாக்கத்திற்கு எதிர் எனும் பதத்தை கொண்டுள்ள இவ் இயக்கத்தினர், "சமூக சந்தைப் பொருளாதாரத்திற்கு'' (Social market economy) எதிராக ''புதிய தாராண்மை பூகோளமயமாக்கம்" (Neo - liberal globalisation) என்பதை பாதுகாக்கின்றனர். அமெரிக்காவுக்கு எதிரான போராட்டத்தில் ஐரோப்பிய முதலாளித்துவம் உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்துக்கு எதிராக தாக்குதல் நடத்தும் போது, அமெரிக்க எதிர்ப்பு போராட்டங்களில் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் பக்கம் சார்வது என்பது நடைபெற முடியாததொன்றாகும். ஐரோப்பாவின் சமூக அல்லது அரசியல் மக்கள் இயக்கம், அமெரிக்காவுடனான மூலதன போட்டியில் ஐரோப்பிய மூலதனத்தை தீர்க்கமாக குறைத்து மதிப்பிடுகிறது. இதனால் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு எதிரான போராட்டத்திற்கு, இத்தகைய இயக்கங்களை அடக்கி வைக்க அல்லது நடுநிலைப்படுத்தி வைக்க, ஒரு யுத்த நிறுத்தக் கொள்கை அல்லது முதலாம் உலகப் போரின் போது ஜேர்மன் சமூக ஜனநாயகவாதிகள் கையாண்ட "பாரிய சமாதானம்" (Burgfrieden) போன்ற கொள்கை தேவைப்படுகிறது.

நாம் குட்டிமுதலாளித்துவ தீவிரவாதிகளது அநாகரிகமான அமெரிக்க எதிர்ப்பியக்கத்தினை நிராகரிக்கின்றோம். இரு அமெரிக்கா (இரு ஐரோப்பா) உள்ளது என்பது எமது நிலைப்பாடாகும். முதலாளித்துவத்தின் அமெரிக்கா ஒன்று. தொழிலாளர் வர்க்க அமெரிக்கா மற்றொன்று. நாம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அனத்துலக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான போராட்டத்தையே அடிப்படையாக கொண்டுள்ளோமே அன்றி, ஐரோப்பிய முதலாளித்துவ பிரிவினரையும் அவர்களின் நடுத்தரவர்க்க ஆதரவாளர்களையும் அல்ல.

அமெரிக்க - ஐரோப்பிய மோதல் தீவிரமாகவும், மேலும் பரந்துபட்டதாக்கப்படும் போதும் இந்த கேள்வி நிச்சயமாக முன்னுக்கு கொண்டு வரப்படுவதுடன் சகலவிதமான சந்தர்ப்பவாத போக்குகளையும், சோசலிசத்தையும் பிரித்துக் காட்டும் கோடொன்றாகவும் அது விளங்கும்.

கடந்த தசாப்தத்தில் ஆழமான மாற்றங்கள் ஐரோப்பிய நிலப்பரப்பின் அரசியலில் தமது அறிகுறிகளை விட்டுச் சென்றுள்ளன. பழைய சகல கட்சிகளுமே ஆழ்ந்த நெருக்கடிக்குள் உள்ளன. இந் நிலமை மரபுரீதியான முதலாளித்துவ வலதுசாரியின் சீர்குலைவிலிருந்து ஆரம்பமாகிறது: இத்தாலிய கிறிஸ்தவ ஜனநாயகவாதிகள் அரசியல் அரங்கிலிருந்து அகன்று விட்டார்கள். பிரான்சின் கோலிஸ்டுகளும், (Gaullists) தாராண்மைவாதிகளும் அநேகமான பிளவு பிரிவுகளுக்கு உள்ளாகியுள்ளனர். பிரித்தானிய டோரிகள் கடந்த தேர்தலில் ஓட்டப் பட்டுவிட்டனர். கடைசியாக, ஜேர்மன் கிறிஸ்தவ ஜனநாயகவாதிகள் தமது நிதி ஊழல்கள் மற்றும் உட்பிரிவுகளின் ஊழல்களை வெகுவாக குறைத்து மதிப்பிட்டதைத் தொடர்ந்து 1998 ல் அதிகாரத்தை இழந்துள்ளனர்.

இந்தக் கட்சிகள் மரபுரீதியாக தங்கியிருந்த மத்தியதர வர்க்கத்தின் துருவப்படுத்தலை இந்நெருக்கடிக்கான முக்கிய காரணமாகும். பெரு வர்த்தகர்களின் நலன்களுடன், மத்தியதர வர்க்கத்தின் பெரிய பகுதிகளையும், தொழிலாள வர்க்கத்தின் நலன்களையும் ஒன்றிணைப்பது என்பது இனியும் சாத்தியமாகாது.

பழமைபேணும் கட்சிகளின் நெருக்கடி சமூக ஜனநாயகவாதிகளின் மீள் எழுச்சிக்கு வழிகோலியது. 1998 ல் சகல பிரதான ஐரோப்பிய நாடுகளும் ஸ்பெயினை தவிர்த்து, சமூக ஜனநாயகவாதிகளின் ஆட்சியிலிருந்தன. சற்று குறைந்த தீங்கு விளைவிக்க கூடியதாக தொழிலாள வர்க்கம் அவர்களை கருதியதால் ஓரளவுக்கு தொழிலாளர்களின் ஆதரவை அவர்கள் பெற்றிருந்தனர். பழமை பேணும் வாதிகளிடம் இருந்து விலகிய சில மத்திய தரவர்க்க பிரிவினரது ஆதரவையும் ஓரளவிற்கு அவர்களால் பெற முடிந்தது. பிளேயர் முன்வைத்த சுலோகமான "மூன்றாது பாதை" க்கு பின்னால் இருந்தது இதுதான். இதுவேதான் ஜேர்மனியில், ''புதிய நடுவழி'' (Neue Mitte) என மொழி பெயர்க்கப்பட்ட ஷ்ரோடரின் சுலோகமுமாகும். பிளேயரும், ஷ்ரோடரும் தாங்கள் அடிப்டையாக கொண்ட இந்த ''நடுவழி'' படிப்படியாக அற்று போகின்றது என்பதை அவர்கள் கவனிக்கத் தவறிவிட்டனர்.

சமூக ஜனநாயகவாதிகள் பதவியிலிருக்கையில், அவர்கள் பழமை பேணும்வாதிகளுக்கு எந்தவொரு மாற்றீடாகவும் விளங்கவில்லை என்பதை வெகுவிரைவில் காண்பிக்கப்பட்டதுடன், அவர்களது வீழ்ச்சியும் ஆரம்பமாகியது. இத்தாலியில் பதவிக்கு வர ஐம்பதாண்டுகள் தேவைப்பட்ட முன்னாள் ஸ்ராலினிஸ்டுகளுக்கு, அதனை இழக்க மூன்றாண்டுகளே தேவைப்பட்டது. பிரான்சில் கோலிஸ்ட்வாதியான ஜாக் ஷிராக் (Jacques Chirac) ஏப்ரல் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி கொள்ள வாய்ப்பிருந்ததுடன், ஜேர்மனியில் ஷ்ரோடர் இரண்டாவது தடவையாக வருவதற்கான வாய்ப்பு இருவாரங்களுக்கு முன்னரே தென்பட்டது, மற்றும் இலையுதிர்காலத்தின் சமஷ்டித் தேர்தல் முடிவுகள் தற்போது வெளிப்படையாகவே தென்பட ஆரம்பித்துள்ளன.

நான் முன்பு குறிப்பிட்டதை போல, ஜேர்மன் பசுமைக்கட்சி படிப்படியாக ஏகாதிபத்திய இராணுவமயமாக்கல் முகாமுக்குள் நுழைந்ததானது புறநிலையாக முக்கியத்துவமானது. அவர்கள் 68ன் எதிர்ப்பு இயக்கத்திலிருந்து உருவான ஒரு தூய மத்தியதர வர்க்க கட்சியினராவர். தமது முன்னைய நிலைப்பாடுகளை அவர்கள் கைவிட்ட வேகமானது அதன் ஆழ்ந்த, பரந்து வெடித்தெழும் முரண்பாடுகளையும், சமுதாயத்தை துண்டுதுண்டாக கிழித்தெறியப்படுவதின் ஒரு அளவுகோலாகும். அவர்களுக்கு அரைகுறையான நிலைப்பாட்டுக்கு என எந்தவொரு இடமும் இருக்கவில்லை.

அதிதீவிர வலதுசாரி அரசியல் உருவாக்கத்தின் பங்கு

கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக மரபுவழி கட்சிகளின் சீரழிவினால் ஏற்பட்ட வெற்றிடத்தை தீவிரவாத வலதுசாரி அமைப்புகளினால் நிரப்பும் பல முயற்சிகள் மீண்டும் மீண்டும் மேற்கொள்ளப்பட்டன. ஒரு விதியாக இக் குழுக்கள், சமூக பிரச்சினைகளுக்காக அந்நிய நாட்டினரிடம் வெறுப்பைக் காட்டி வார்த்தையால முழக்கமிட்டன. சட்டத்தையும், ஒழுங்கையும் அத்துடன் லிபரல்வாத பொருளாதார கோட்பாடுகளையும் காக்கும் பொருட்டு, இவர்கள் பொருளாதார மூலதனத்தின் நலன்களைப் பேணும் ஒட்டுண்ணி பேர்வழிகளிடம் கோரிக்கை விடுத்தனர். ஒரு சில விடயங்களில், பொதுவான அதிருப்தியிருந்து அவர்கள் இலாபத்தை பெற முடிந்ததுடன் கணிசமானளவு வாக்குகளையும் வெற்றி கொண்டனர். ஆனால் அரசாங்கத்தினுள் நுழைந்ததும் அவர்கள் ஸ்திரமற்றும் ஊழல் மோசடிகளுக்கு உட்பட்டவராகின்றனர். ஆஸ்திரிய கைடரின் (Haider) சுதந்திரக் கட்சி போல தாராண்மை பொருளாதார கொள்கையை அமுல்படுத்துபவர்களுக்கும், மக்களிடையேயுள்ள பிரபல வேண்டுகோளுக்கு செவிசாய்ப்போர் இடையேயும் பிளவுகள் ஏற்பட்டன.

இது அவர்களை புது முயற்சிகளை உருவாக்குவதிலிருந்து தடுக்காததுடன் ஆளும் அதிகாரத்துவத்தின் பரந்த பகுதியினரின் மத்தியிலும் கணிசமானளவு ஆதரவையும் பெறவைத்தது. முதலாளித்துவத்தின் கணிசமானளவு பிரிவினருடனான ஆதரவுடன் இத்தாலியில் பெலுஸ்கோனி (Berlusconi) அரசாங்கம் நிறுவப்பட்டமை நிச்சயமாக இத்திசையிலான ஒரு திறமை வாய்ந்த புது நடவடிக்கை ஆகும். பெலுஸ்கோனி, அவர் உட்பட அதி - தீவிரவாத வலதுசாரி சக்திகளில் காலூன்றியிருந்தார்: தேசிய கூட்டமைப்பின் பாசிஸ்டுகள், வெளிநாட்டினரிடம் வெறுப்பு காட்டும் லீகாநோட் (Lega Nord) பிரிவினைவாதிகள் போன்றோரும் இதில் அடங்கியிருந்தனர். தனது சுய கட்சியான போர்ஸா இத்தாலியா (Forza Italia-இத்தாலி முன்னே) என்பதை தனது சுய வர்த்தக நலன்களின் ஒரு கருவியாக கொண்டிருந்தார். "எல்லாமே ஒன்று, தனக்கே அந்த ஒன்று!", என ஒரு ஜேர்மன் பத்திரிகை இதன் நோக்கைப் பற்றி இவ்வாரம் குறிப்பிட்டது. இந்த அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்த தீவிரவாத குறுகிய நபர்களும், வலதுசாரி சக்திகளும் இதன் மீது பிரயோகித்த செல்வாக்கானது, புஷ் நிர்வாகத்துக்கு சமமான ஒன்றாகவே இதை நிட்சயப்படுத்திக் காட்டும்.

பெலுஸ்கோனி அரசாங்கமானது, ஐரோப்பாவின் புதுப்பிக்கப்பட்ட உடைவு ஒன்றின் ஆபத்தினை புலப்படுத்துகிறது. அண்மைக்கால ஐரோப்பிய பிடி வராந்துக்கான கைதுகளின் (warrant of arrest) மோதல்கள் ஒரு ஸ்திரமற்ற ஒன்றாக மாறியது. மேலும் பெலஸ்கோனியின் இஸ்லாமிய மறுப்பு, யூரோ நாணயம் தொடர்பாக அரசாங்க அங்கத்தவர்களுடன் மேற்கொண்ட தாக்குதல்கள், வெளியுறவு அமைச்சர் றுஜேரியோவின் (Ruggiero) இராஜினாமா போன்றவை மேலும் இவற்றையே புலப்படுத்துகின்றன.

ஆஸ்திரிய சுதந்திர கட்சியானது, ரெமலின் (Temelin) என்னுமிடத்தில் உள்ள செக் நாட்டினுடைய (Czech) அணுவாயுத உலை மூடப்பட வேண்டும் என்பதுவே, செக் குடியரசை ஐரோப்பிய ஒன்றியத்தில் நுழைய இடமளிப்பதற்கான ஓர் முன் நிபந்தனையாக இருத்தல் வேண்டும் என்ற ஒரு சர்வஜன வாக்கெடுப்பை கோரியது. கிழக்கு நோக்கி ஐரோப்பிய ஒன்றியம் விரிவாக்கப்படுவதை தடுக்க, அணுவாயுத அழிவுபற்றிய நியாயமான அச்சத்தை அணிதிரட்டிக் கொள்ள அக் கட்சி முயற்சிக்கிறது.

ஜேர்மனியில் பிரதமர் ஷ்ரோடருக்கு உத்தியோக பூர்வ சவாலாக வரப்போகும் சமஷ்டி தேர்தலில் கத்தோலிக்க சமூக யூனியனின் (CSU) பவேரியரான (Bavarian) எட்மன்ட் ஸ்டோய்பேர் என்பவரை (Edmund Stoiber) அபேட்சகராக்குவது என்பதும் இதே திசையிலான ஒரு அபிவிருத்தியையே சுட்டிக் காட்டுகிறது. ஸ்டோய்பரது நியமனத் தாக்குதலானது, அங்கேலா மேர்க்கலுடனான (Angela Merkel) நீண்டபூசலினை தொடர்ந்து ஏற்பட்டதாகும். மேர்க்கல், கத்தோலிக்க ஐனநாயகக் கட்சியின் (CDU) தலைவியும், முன்னாள் சான்சலர் ஹெல்மட் கோலினால் ஆதிரிக்கப்பட்டவரும், மேலும் ஸ்டோய்பேரை விடவும் மத்தியவாத மற்றும் சமரசவாத மரபுவழி கொள்கையுடையவராயும், கிறிஸ்தவ ஜனநாயகவாதிகளிலும் கூடிய ஒரு வலதுசாரியும் ஆவார்.

ஸ்டோய்பர், சட்டத்திற்கும், ஒழுங்குக்குமான ஒரு மனிதராக புகழ் பெற்றவர். கைடரின் (Haider) சுதந்திர கட்சியுடனான ஆஸ்திரிய அரசாங்கம் கூட்டிற்கு ஐரோப்பிய ஒன்றியம் உத்தியோகபூர்வமாக பகிஷ்கரிப்பு செய்தபோது பகிரங்கமாக அதற்கு ஆதரவு வழங்கினார். இத்தாலியின் பெலுஸ்கோனியின் போர்ஸா இத்தாலியாவுடன் (Forza Italia) நெருங்கிய தொடர்புடையவர். அத்துடன் "பிரதேசங்களின் ஐரோப்பா", உதாரணமாக பிரதேச ரீதியில் ஐரோப்பாவை பிளவுபடுத்துவதற்கு பலமான ஆதரவைக் கொடுத்தவர். இத்தகைய வலதுசாரி சக்திகளின் உதயமானது பொதுமக்கள் மத்தியில் அவர்களுக்கு ஏற்பட்ட உண்மையான ஆதரவால் ஏற்படவில்லை. மாறாக, இவை சமூக ஜனநாயகவாதிகள், பசுமை கட்சியினர் மற்றும் பழைய ஸ்ராலினிஸ்டுகள் போன்ற சக்திகளின் முற்றான வங்குரோத்தே இதற்கு காரணமாகும். மிகவும் ஆரம்ப நிலையிலான ஜனநாயக உரிமைகளை தன்னும் கூட, வாழ்க்கைத் தர உரிமைகளை தன்னும் கூட பாதுகாப்பதற்கு முற்றாக இலாயக்கறற்வர்கள் இவர்கள் என்பது நன்கு நிரூபிக்கப்பட்டிருந்தது. அந்நிய நாட்டினரை வெறுக்கும் மனப்பாங்கை முன்னெடுத்து செல்லும் தம்மிடையே, சட்டம் ஒழுங்கு கொள்கைகளை தழுவியவாறு இவர்கள் இத்தகைய வலதுசாரி சக்திகளுக்கு வழியமைத்து கொடுத்துள்ளனர்.

இவற்றின் விளைவாக ஜனநாயக சமூக உரிமைகளை பேணும் பணி முற்றாக தொழிலாள வர்க்கத்திடமே ஒப்படைக்கப்பட்டுள்ளதை காணலாம்.

இவற்றைத் தொகுத்துப் பார்ப்பின்: ஐரோப்பா எங்கே செல்கிறது? ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான மோதல்களின் அதிகரிப்பதானது, தற்போதைய ஆப்கானிஸ்தானிய போருக்கு பின்னணியாக அமைந்ததுடன், ஐரோப்பாவிற்குள் சகல பொருளாதார, சமூக மோதல்களையும் கிளப்பியுள்ளது. அமெரிக்காவுடனான கூர்மையான மோதல், இராணுவமயமாக்கல் அதிகாரத்துவ மயமாக்கலின் தோற்றத்துக்கு வழி கோலியுள்ளது. அது அரசியல் அபிவிருத்திகளை விரைவுபடுத்தி ஒரு பாரியளவிலான சமூக எழுச்சியை தூண்டும். ட்ரொட்ஸ்கியின் வார்த்தைகளில் கூறின், அது ஐரோப்பாவை புரட்சி மயமாக்கும்.

இதற்கான எமது பதில் யாது? நாம் எப்படி இதற்கு தயாராக வேண்டும்? இவ் விடயத்தை, ஒரு மேலெழுந்தவாரியாக, ஏதோ செயல்முறை ரீதியான முறையில் அணுக முடியாது, மாறாக இதற்கு ஒரு அரசியல் ரீதியான திசை நோக்கு அவசியமாக உள்ளது.

நன்கு ஊறிப்போய்விட்ட இந்த செயல்முறைவாதத்தை (activism) கடைப்பிடித்த பிரித்தானியாவின் தொழிலாளர் புரட்சிக் கட்சி, (WRP) அனைத்துலகக் குழுவுடனான உடைவுக்கு முன்னால் இது அதனது ஒவ்வொரு அரசியல் நிகழ்வுகளையும் அதற்கே உரித்தான செயல் முறைவாத நிலைப்பாட்டில் இருந்து நோக்கிற்று: ''நான் இதைப் பாவித்து (செயல் முறைவாதத்தை) எவ்வாறு தொழிலாள வர்க்கத்தை அணிவகுக்க முடியும்? நான் இதைப் பாவித்து எவ்வாறு சில நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும், ஊர்வலத்தை ஒழுங்கு செய்ய முடியும்?'' என்பதே அவர்களின் நிலைப்பாடாக இருந்தது.

இதுதான் திரிபுவாத மிலிற்றன் (Militant) குழுவின் அல்லது அரச முதலாளித்துவ (State capitalists) குழுவின் நோக்கு நிலையாகும். ''எதையாவது செய்வோம்'' எனும் பெயருடன் அவர்கள் அற்றாக் (ATTAC), ஸ்ராலினிஸ்டுகள், சமூக ஜனநாயகத்தின் இடதுசாரி பிரிவினர், பசுமைக் கட்சியின் தீவிரவாதிகள், மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவம் போன்றோருடன் தாமாகவே இணைந்து கொள்கின்றனர். ''ஐக்கியம்'' எனும் பெயருடன், அமெரிக்காவின் யுத்தக் கொள்கையை எதிர்க்கும் அனைவரையும் அவர்கள் வரவேற்கின்றனர். இது அவர்களை நேரடியாக ஐரோப்பிய ஏகாதிபத்திய முகாமுக்குள் சேர்க்கும்.

நாம் இந்த யுத்தத்தை, இந்த முதலாளித்துவ அமைப்பு முறையின் வரலாற்று முரண்பாடுகளின் ஒரு முழுமையான வெளிப்பாடாகவே விளங்கிக் கொண்டுள்ளோம். ஐரோப்பாவுக்கும், மற்றும் அமெரிக்காவுக்கும் இடையே வளர்ந்து வரும் மோதல்களுக்கு எமது பதிலாக, ஐரோப்பிய, அமெரிக்க தொழிலாளர் வர்க்கத்தின் ஐக்கியமே விளங்குகின்றது.

இந்த வழியில், தேசிய சுயாதீனம் என்ற அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்ப்பவர்களுடன் நாம் ஒத்துப் போகவில்லை, அல்லது மேற்கின் தொழிற் தரத்தை பாதுகாப்பது என்ற அடிப்படையில் கிழக்கின் ஒன்றிணைவை எதிர்க்கும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் நிலைப்பாட்டுடனும் நாம் ஒத்துப்போகவில்லை. வியாபார நலன்களும் மற்றும் பெரும் ஐரோப்பிய வல்லரசுகளும் செல்வாக்குச் செலுத்தும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எமது பதில், ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளேயாகும்.

Notes:

1. Helmut Schmidt, Die Selbstbehauptung Europas im neuen Jahrhundert, 8 November 2000

2. Condoleezza Rice, Life after the Cold War, Foreign Affairs, January/February 2000 (vol. 79, no. 1)

3. Lenin, "Der Imperialismus...", Werke Band 22, Kap. IX, pp. 290

4. Two speeches by Leon Trotsky, p. 17

5. ibid. p. 3

6. Stefan Kornelius, Europas Scheinwelt, Süddeutsche Zeitung, 5 January 2002

7. Angaben laut iwd, 21 September 2001, Ausgabe Nr. 38, Jg. 21

Top of page