முன்னுரை

ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் ஹீலியின் ஆரம்ப வருடங்கள்

பப்லோவாத திரிபுவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஹீலியின் பங்கு

ஹீலி நான்காம் அகிலத்தை பாதுகாத்தல்

தேசியவாதம் எதிர் சர்வதேசியவாதம்: சோசலிச தொழிலாளர் கழகம் முட்டுச்சந்தியில்
சோசலிச தொழிலாளர் கழகத்தில் இருந்து தொழிலாளர் புரட்சி கட்சியை நோக்கி: நெருக்கடி ஆழமடைகின்றது
ட்ரொட்ஸ்கிசம் காட்டிக்கொடுக்கப்பட்டது.
மார்க்கிசத்தை கேலிக்கூத்தாக்குதல்
சந்தர்ப்பவாதத்தின் இயங்கியல்
கடைசி வருடங்கள்
முடிவுரை

முன்னுரை

Use this version to print | Send this link by email | Email the author

பிரிட்டனில் 35 ஆண்டுகள் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் தலைவராக இருந்தவரும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக்குழுவின் இணைநிறுவனருமான ஜெரி ஹீலி, தன்னுடைய 76வது வயதில் லண்டனில் டிசம்பர் 14 வியாழனன்று காலமானார்.

1985 அக்டோபர் 25ம் திகதி அனைத்துலகக் குழுவிலிருந்து வெளியேற்றப்பட்டது, ஓர் அரசியல் மரணம் என்ற உண்மையைக் கொண்டால் அந்த இறப்பின் உடலியல்ரீதியான மரணத்தின் உறுதிப்படுத்தல்தான் இப்பொழுது நடந்தது ஆகும். அனைத்துலகக்குழுவில் இருந்து ஜெரி ஹீலி வெளியேற்றப்பட்ட தேதியில் இருந்து, லியோன் ட்ரொட்ஸ்கியின் புரட்சிகர மார்க்சியத்திற்காக மிகுந்த ஆர்வத்துடன் ஒரு காலத்தில் போராடிவந்தவரின் வாழ்க்கை நின்றுவிட்டது.

அவர் இறக்கும்போது, பழைய போல்ஷிவிக்குகளை மாஸ்கோ விசாரணைகளுக்கு உட்படுத்தியதையும் ஸ்பானியப் புரட்சியை ஸ்ராலினிச காட்டிக்கொடுப்பினையும் எதிர்த்ததற்காக, கட்சியிலிருந்து 1937 ஆரம்பத்தில் வெளியேற்றப்பட்ட பின்னர், போராடிவந்த அனைத்து அடிப்படை ட்ரொட்ஸ்கிசக் கோட்பாடுகளுக்கும் துரோகம் செய்துவிட்டு இறந்தார். நீண்டகாலம் தேசியவாத-சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளின் வழியே சீரழிந்த பின்னர், ஹீலி மார்க்சிசத்திலிருத்து சந்தேகத்திற்கிடமில்லாதபடி முறித்துக் கொண்டார். மிகையில் கோர்பச்சேவின் ஆதரவாளராகவும், அவருடைய முதலாளித்துவ மறுசீரமைப்பு வேலைத் திட்டத்திற்கு வக்காலத்து வாங்குபவராகவும் இறந்துபோனார்.

ஆனால், மனிதர்கள் இறந்தபின்பு, அவர்களுடைய தீய செயல்கள் மட்டும் வாழ்வதில்லை. அவருடைய வாழ்வின் கடைசி ஆண்டுகளில் அவருடைய செயல்களை நாம் மன்னிக்கத் தயாராக இல்லை என்றாலும், அதற்கு வெகு நாட்கள் ஆரம்ப காலகட்டத்தில், அவர் சாதித்ததை மறப்பதை பொறுத்துக்கொள்ளமுடியாது. அனைத்துலகக்குழு, அவரைத் தன்னிடமிருந்து வெளியேற்ற வேண்டிய கட்டாயமிருந்தாலும், அவருடைய சந்தர்ப்பவாத சீரழிவை இரக்கமின்றி வெளிப்படுத்துவதற்குப் போராடவேண்டியிருந்த போதிலும்கூட, கடந்த நான்கு ஆண்டுகளில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வளர்ச்சிக்கு மிக நீண்டகாலம் அவர் ஆற்றிய அரசியல் பணியைக் குறைத்துப் பேசியதோ அல்லது மறுக்க முயற்சித்ததோ கிடையாது. உண்மையில் ஹீலிதான் தன்னுடைய கடந்த காலத்தை மறுத்தாரேயொழிய, அனைத்துலகக்குழு அல்ல.

புரட்சிகரத் தொழிலாளர் இயக்கத்தில் ஹீலி எதிர்பாராமல் தோன்றிய அல்லது தற்செயலாகத் தோன்றிய மனிதர் அல்லர். உண்மையில் ஹீலியின் வாழ்க்கை வரலாறு இறுதியாக எழுதப்படும்பொழுது, அதில் நான்காம் அகிலத்தின் வரலாறும் மற்றும் பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கத்தின் வரலாறு பற்றிய ஒரு முக்கியமான அத்தியாயத்தையும் உள்ளடக்கியிருக்கும். இந்தப் பன்முகமாக விரிந்திருந்த, மாபெரும் திறமை மிக்க மனிதருடைய முரண்பாடுகளும், வியத்தகு புதிர்களும்- சிக்கல்கள் நிறைந்த, உருக்குலைந்த (சித்திரவதைக்குட்பட்ட) சர்வதேச கம்யூனிச இயக்கத்தின் வரையறைக்குள்தான் அறியப்படமுடியும்.

தற்போதைய தொழிலாளர் புரட்சிக் கட்சியின் மனநோய் பிடித்த அகநிலைவாதிகள், தங்களுடைய சிதறிப்போயிருக்கும் உணர்வுகளைத் திரட்டி அமைதிப்படுத்திக் கொள்ளவும், தங்களுடைய காட்டிக்கொடுப்பை நியாயப்படுத்தவும், ஹீலியைத் தங்கள் நினைவிலிருந்து மட்டுமல்லாமல் வரலாற்றிலிருந்தே துரத்திவிடும் முயற்சிகளில் ஈடுபடுவதால், அத்தகைய முயற்சிகளின் அடிப்படையில் அவர்கள் பரிதாபத்திற்குரிய சுயஏமாற்றின் ஒரு வடிவைத்தான் அடையமுடியும். லெனின் மரணத்திற்கு நான்கே ஆண்டுகளுக்குப் பின்னர் தொடங்கிய, ஹீலியின் அரசியல் வாழ்வு 20ம் நூற்றாண்டின் கம்யூனிச இயக்கத்தின் வரலாற்றின் பெரும் பகுதியில் பரந்து, படர்ந்து நின்றுள்ளது என்பது இவர்கள் என்ன கூறினாலும் அல்லது செய்தாலும் அழிக்க முடியாத உண்மையாகும். ஹீலி, தன்னுடைய 14 வயதில், ஓர் ஐரிஷ் பகுதி தொழிலாள வர்க்க இளைஞனாக பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியில் 1928ம் ஆண்டு சேர்ந்த பொழுது, லியோன் ட்ரொட்ஸ்கி அல்மா அடாவில் மூன்றாம் அகிலத்தின் ஆறாம் காங்கிரசின் வரைவு வேலைத் திட்டம் பற்றிய விமர்சனத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். இவ்வாறு ஹீலியுடைய அரசியல் வாழ்வானது, கம்யூனிச அகிலத்தினுடைய சீரழிவு, 1930களின் பேரழிவான காட்டிக்கொடுப்புக்கள் மற்றும் தோல்விகள், நான்காம் அகிலம் தோற்றுவிக்கப்படல், ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டமை, இரண்டாம் உலகப்போர், போருக்குப்பின் முழுக்காலமும் என பரந்து விரிந்திருந்தது.

இத்தகைய மனிதரின் வாழ்வு, ஒரு முழு சகாப்தத்தின் தவிர்க்கமுடியாத ஒருங்கிணைந்த, முக்கியமான வெளிப்பாடு ஆகும். ஹீலியின் வாழ்க்கை வரலாற்றைப் படிப்பது என்றால், நான்காம் அகிலத்தினுடைய வளர்ச்சியில், பிரிக்கமுடியாமல் பிணைந்திருந்த மிகமுக்கியமான சிக்கல்களை விமர்சன ரீதியாய் ஆய்வு செய்வது போலாகும். நம்முடைய நோக்கம் கண்டனத்திற்கு உட்படுத்துவதோ, நியாயப்படுத்துவதோ அல்ல. இவருடைய வாழ்க்கையையும், போராட்டங்களையும், வெற்றிகளையும், தோல்விகளையும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் ஒரு முக்கிய மனிதரின் எழுச்சியையும் வீழ்ச்சியையும், "அழுவதற்கல்ல, சிரிப்பதற்கும் அல்ல, அறிந்து கொள்ளுவதற்காகத்தான்" என்று மாபெரும் ஸ்பினோசா கூறியுள்ள அடிப்படையில் மதிப்பீடு செய்வதுதான் நம்முடைய நோக்கமாக இருக்கவேண்டும்.