ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

ඈන්ෆීල්ඩ් වතු සමාගම දොට්ට දමනු ලැබූ බාලසුබ්‍රමනියම් කම්කරුවා යලි සේවයේ පිහිටු වීම ප්‍රතික්ෂේප කරයි

இலங்கை: என்ஃபீல்ட் பெருந்தோட்ட கம்பனி வேலை நீக்கம் செய்த தொழிலாளி பாலசுப்பிரமணியத்துக்கு மீண்டும் வேலை கொடுக்க மறுக்கிறது

By M. Thevarajah and W.A. Sunil 
29 March 2019


எஸ். பாலசுப்பிரமணியம்

டிக்கேயா என்ஃபீல்ட் தோட்டத் தொழிலாளியான எஸ். பாலசுப்பிரமணியம் தோட்டத் தொழிலாளர் போராட்டத்தில் செயற்பாட்டாளராக இயங்கியதால் தோட்ட நிர்வாகத்தால் அவர் வேலை நீக்கப்பட்டார். தோட்ட நிர்வாகம் அவரை மீண்டும் வேலையில் அமர்த்த மறுத்து வருகின்றது. என்ஃபீல்ட் தோட்டத்தை களனிவெலி பெருந்தோட்ட கூட்டுத்தாபனமே நிர்வகித்து வருகின்றது. பாலசுப்ரமணியம் நிரந்தரமாக வேலை நீக்கப்பட்டு ஒரு மாதமாகியுள்ள அதே வேளை, அவர் வேலை இடைநீக்கம் செய்யப்பட்டு நான்கு மாத காலமாகின்றது.

பாலசுப்பிரமணியம் உறுப்பினராக இருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) உட்பட பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள், இந்த பழிவாங்கலுக்கு எதிராக எந்தவொரு போராட்டத்தையும் ஏற்பாடு செய்வதை முற்றிலும் கைவிட்டுவிட்டன. பாலசுப்பிரமணியம் என்ஃபீல்ட் தோட்டத்தின் சென் எலியாஸ் பிரிவின் இ.தொ.கா. தோட்டத் தலைவராவார். அவருக்கு எதிரான பழிவாங்கல் தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீது முதலாளிமார் தொடுத்துள்ள தாக்குதலாகும்.

கம்பனியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேலை வாங்கித் தருவதாக கூறி, வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளியை, தொழிற்சங்க அதிகாரிகள் கொழும்பில் உள்ள கலனி வெலி நிறுவனத்தின் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று வெறுங்கையோடு திருப்பி அனுப்பினர். கடந்த வாரம், ஒரு கிழமைக்குள் மீண்டும் வேலை தருவதற்கு தோட்ட நிர்வாகம் வாக்குறுதி கொடுத்துள்ளதாக இ.தொ.கா. தலைவர்கள் பாலசுப்ரமணியத்திடம் கூறியிருந்தாலும் அது ஒரு பொய்யாகும்.

பாலசுப்பிரமணியத்தை வேலை நீக்கியது கலனிவெலி தோட்ட கம்பனியின் முடிவு என்றும், அது சம்பந்தமாக கொழும்பு தலைமை அலுவலகத்திலிருந்து ஒரு ஆலோசனையுமின்றி எதுவும் செய்ய முடியாது என்றும் தோட்ட முகாமையாளர் கூறியதாக, பாலசுப்ரமணியத்திடம் டிக்கோயா இ.தொ.கா. அலுவலகத்தின் பொறுப்பாளர் கே. கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

டிசம்பர் 13 அன்று, பாலசுப்பிரமணியத்தை வேலை இடை நீக்கம் செய்த என்ஃபீல்ட் தோட்ட நிர்வாகம், ஜனநாயக விரோதமான உள் விசாரணை என்று அழைக்கப்படுவதை நடத்திய பின்னர், பெப்ரவரி 27 அன்று அவரை நிரந்தரமாக வேலை நீக்கியது.

பலாசுப்பிரமணியம், இன்னொரு குழுவினருடன் சேர்ந்து, டிசம்பர் 5 அன்று என்ஃபீல்ட் தேயிலை தொழிற்சாலையின் பிரதான வாயிலை மூடி, தேயிலை கொழுந்து கொண்டு செல்லும் வாகனங்களை உள்ளேயும் வெளியேயும் செல்லவிடாமல் தடுத்தார், என்பது உட்பட ஏழு குற்றச்சாட்டுக்கள் அவர் மீதும் அந்தக் குழுவினர் மீதும் சுமத்தப்பட்டுள்ளன. இந்த குற்றச்சாட்டுகள் தோட்ட நிர்வாகிகளால் புணையப்பட்டவை ஆகும்.

பாலசுப்பிரமணியம் மற்றும் அவரது “குற்றத்திற்கு” உதவியதாக கூறப்படும் ஏனைய மூன்று தொழிலாளர்களான பத்மநாதன், சுப்பிரமணியம், கிருஷ்ணன் மற்றும் டிக்கோயா இ.தொ.கா. காரியாலய அலுவலர்களான அருள்நாயகி, கிளேரா மற்றும் சிவசாமியும் இந்த குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கின்றனர். தொழிலாளர்களை மிரட்டுவதற்காக தோட்ட நிர்வாகிகள் இந்த குழுவினர்களுக்கு எதிராக புகார் செய்த காரணத்தால், பொலிஸ் அவர்களிடம் வாக்குமூலங்களைப் பெற்று குற்றச்சாட்டுக்களை பதிவு செய்யும் அச்சுறுத்தலையும் அவர்கள் எதிர்கொள்கின்றனர்.

தமது 500 ரூபா அடிப்படை நாள் சம்பளத்தை நூற்றுக்கு நூறுவீதம் 1000 ரூபா வரை அதிகரிக்குமாறு கோரி 100,000 இற்கும் அதிகமான தோட்டத் தொழிலாளர்கள் டிசம்பர் 5 முதல் வேலை நிறுத்தம் செய்திருந்த சூழ்நிலையிலேயே பாலசுப்பிரமணியம் மற்றும் அவருக்கு ஆதரவு கொடுத்ததாக கூறப்படும் குழுவுக்கு எதிரான பழிவாங்கால் முன்னெக்கப்பட்டது.

சம்பள பிரச்சனையை தீர்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொடுத்த பொய்யான வாக்குறுதியை அடிப்படையாகக் கொண்டு இ.தொ.கா. தலைவர்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக நடந்த வேலை நிறுத்தத்தை நிறுத்தினர். இந்தக் காட்டிக்கொடுப்பின் காரணமாகவே, என்ஃபீல்ட் உட்பட பல தோட்டங்களில் தொழிலாளர்களை பழிவாங்குவதற்கு நிர்வாகங்களுக்கு உத்வேகம் கிடைத்தது. தொழிலாளர்கள் தொழிற்சங்கங்கத் தலைமைகளை நிராகரித்தே, மேலும் இரண்டு நாட்களுக்கு வேலைநிறுத்தத்தை தொடர்ந்தனர்.

தொழிலாளர்களின் போராட்டத்தை நிறுத்திய இ.தொ.கா. தலைவர்கள் ஏனைய தொழிற்சங்கங்களின் உதவியுடன் முதலாளிமார் சங்கத்தின் பிரேரணையின் படி, உண்மையில் 20 ரூபா அற்ப சம்பள உயர்வை மட்டுமே கொடுக்கும் கூட்டு ஒப்பந்தமொன்றிற்கு சென்றனர். அதே உடன்படிக்கையில், தொழிலாளர்களால் கடுமையாக நிராகரிக்கப்பட்ட வருமான பகிர்வு முறைக்கு சமமான ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் தொழிற்சங்கங்கள் உடன்பட்டுள்ளன.

சம்பளப் போராட்டத்தின் போது பழிவாங்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை கொடுக்க, கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போது கம்பனிகள் ஒப்புக் கொண்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கமான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவரும் பெருந்தோட்ட தொழிற்துறை இராஜாங்க அமைச்சருமான வடிவேல் சுரேஷ் டிசம்பர் 28 அன்று நடத்திய ஒரு செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். ஆனால் அது தொழிலாளர்களை ஏமாற்றுவதற்கான ஒரு பொய் என்பது, பாலசுப்ரமணியத்துக்கு மீண்டும் வேலை கொடுக்க தோட்ட நிர்வாகம் மறுத்துள்ளதில் இருந்து அம்பலப்படுத்திற்கு வந்துள்ளது.

சம்பள அதிகரிப்பு என்ற பெயரில் செய்த பெரும் ஏமாற்று நடவடிக்கை சம்பந்தமாக தொழிலாளர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு தலைதூக்கியதால், பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க, அரசாங்கத்தின் செலவில் மே மாதத்தில் இருந்து 50 ரூபா உயர்த்துவதாக வாக்குறுதியளித்தார். இதுவும் ஒரு வருடத்திற்கு மட்டுமே.

பாலசுப்பிரமணியத்தை மீண்டும் வேலையில் அமர்த்துவதற்கான போராட்டத்திற்கு இ.தொ.கா. அதிகாரத்துவம் எதிராக நிற்பது தற்செயலானது அல்ல. தோட்ட நிர்வாகம் மற்றும் பொலிசுடன் சேர்ந்து, போராட்டங்களை நசுக்குவதற்காக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை பொலிசில் சிறைப்படுத்துவதில் இந்த தொழிற்சங்கங்கள் பேர் போனவை ஆகும்.

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தத்தின் போது, தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறையில், டசின் கணக்கான தோட்டத் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் போலீசார் கைது செய்தது, இ.தொ.கா. உட்பட தொழிற்சங்கங்களால் வழங்கப்பட்ட பட்டியலின் அடிப்படையிலேயே ஆகும். அதே போல் 2006 இல் சம்பள உயர்வு போராட்டத்தை காட்டிக்கொடுத்த பின்னர், அதற்கு எதிரான போராட்டத்தில் இறங்கிய தொழிலாளர்கள் மத்தியில், பொகவந்தலாவை பிரதேசத்தில் டசின் கணக்கான தொழிலாளர்கள் இந்த தொழிற்சங்க தலைவர்களால் பொலிசில் அடைக்கப்பட்டனர்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் எபோட்சிலி தோட்ட தொழிலாளர் நடவடிக்கை குழுவும் மட்டுமே பாலசுப்பிரமணியம் உட்பட தோட்டத் தொழிலாளர்கள் மீதான பழிவாங்கலுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. அதன் ஒரு பகுதியாக ஹட்டன் நகரில் பெப்ரவரி 17 அன்று மறியல் போராட்டத்தையும் கூட்டத்தையும் சோ.ச.க. மற்றும் எபோட்சிலி தொழிலாளர் நடவடிக்கை குழுவும் ஏற்பாடு செய்திருந்ததோடு, மார்ச் 7 அன்று உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையில், பாலசுப்பிரமணியத்தை நிபந்தனையற்று உடனடியாக மீண்டும் பணியில் அமர்த்த கோரும் போராட்டத்திற்கு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. (பார்க்க: இலங்கை தோட்டத் தொழிலாளி எஸ். பாலசுப்பிரமணியத்திற்கு நிபந்தனையின்றி மீண்டும் வேலை வழங்க கோருவோம்!)

பாலசுப்பிரமணியத்தை நிபந்தனையின்றி மீண்டும் வேலையில் அமர்த்துவதற்கான போராட்டத்தை சோ.ச.க. மற்றும் எபோட்சிலி தொழிலாளர் நடவடிக்கை குழு தொடர்ந்தும் முன்னெடுக்கும். இந்த போராட்டத்தில் சேர்ந்துகொள்ளுமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் ஆர்வங்கொண்ட அனைவரிடமும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். எபோட்சிலி தொழிலாளர் நடவடிக்கை குழுவை உதாரணமாகக் கொண்டு, தொழிற்சங்கங்களில் இருந்து விலகி, எல்லாத் தோட்டங்களிலும் நடவடிக்கை குழுக்களை அமைத்துக்கொண்டு, வேட்டையாடல்களுக்கு எதிராக, தமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தை தொழிலாளர்கள் தம் கையில் எடுக்க வேண்டும்.

என்ஃபீல்ட் தோட்டத்திலான ஒடுக்குமுறையும் சம்பள உரிமைகளுக்கான போராட்டமும், சோசலிச திட்டத்திற்கான போராட்டத்தின் அவசியத்தை நிரூபித்துள்ளன.

தோட்டத் தொழிலாளர் போராட்டத்தின் படிப்பினைகளும் முன்நோக்கிய பாதையும் பற்றி கலந்துரையாடுவதற்காக, எபோட்சிலி நடவடிக்கை குழுவும் சோ.ச.க.வும் மார்ச் 17 அன்று ஹட்டன் நகர சபை மண்டபத்தில் நடத்திய சக்திவாய்ந்த தோட்டத் தொழிலாளர் மாநாடு, தொழிலாள வர்க்கத்தை சோசலிச முன்நோக்கின் அடிப்படையில் அணிதிரட்டுவதற்கான முக்கியமான முன் நடவடிக்கை ஆகும்.

ஆசிரியரின் பரிந்துரை: இலங்கை: எபோட்சிலி தோட்ட தொழிலாளர் நடவடிக்கை குழுவும் சோசலிச சமத்துவக் கட்சியும் பலம்வாய்ந்த மாநாட்டை நடத்தின