World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil

The Heritage We Defend: A Contribution to the History of the Fourth International

Chapter 13:The Origins of Pabloism

நாம் காக்கும் மரபியம்: நான்காம் அகிலத்தின் வரலாற்றுக்கு ஒரு பங்களிப்பு

அத்தியாயம் 13 : பப்லோவாதத்தின் தோற்றுவாய்

Use this version to print | Send this link by email | Email the author

கிழக்கு ஐரோப்பாவின் அரசியல் மற்றும் பொருளாதார புற இயல்புகளில் (Physiognomy) ஏற்பட்ட முக்கியத்துவம் மிக்க மாற்றங்களால் 1948ம் ஆண்டு தனிச்சிறப்பு பெற்றது. இது ஏப்ரலில் நடந்த நான்காம் அகிலத்தின் இரண்டாவது உலக அகல் பேரவை (காங்ரஸ்) யில் செய்யப்பட்ட ஆய்வினை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவையை வேண்டிற்று.

மார்ஷல் திட்டத்தை தனது தாக்கு முனையாகக் கொண்ட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கெடுபிடி யுத்தக் கொள்கைகளுக்கு எதிரான செயற்பாடாக மிதவாத முதலாளித்துவ கொள்கைகளை ''இடைத்தடை அரசுகளில்'' (Buffer States) சோவியத் அதிகாரத்துவம் செயற்படுத்த நிர்ப்பந்திக்கப்பட்டது. பல்கேரியா, செக்கோஸ்லோவாகியா மற்றும் போலந்தில் அடிப்படைத் தொழிற்துறை வங்கியமைப்பு தொடர்பு மற்றும் போக்குவரத்து அமைப்புகளில் தேசிய மயமாக்கல் ஒன்றில் முற்று முழுதாக முடிவு பெற்று இருந்தன, அல்லது அவை ஏறக்குறைய முற்றுப்பெறும் நிலையில் இருந்தன. ரூமேனியாவில் உற்பத்தி சாதனங்கள் அரசுடமையாக்கல் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.

இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் விதிவிலக்கான மற்றும் சிறப்பியல்பு கொண்ட நிலைமைகள் நிலவின. இவற்றின் விளைபயனாக உருவான சமூக மற்றும் வர்க்கத் தன்மையை வரையறை செய்யும் பொழுது நான்காம் அகிலம் இந்த வளர்ச்சிகளை கணக்கிற் கொள்ளவேண்டி இருந்தது.

ஸ்ராலினுக்கும், ஆங்கில- அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் இடையில் தெகிரான், யால்டா மற்றும் பொற்ஸ்டாமில் உடன்பாடுகள் ஏற்பட்டன. இவற்றின் அடிப்படையில் பிரான்ஸ், இத்தாலி, மற்றும் ஜேர்மனியில் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர இயக்கத்தை மற்றும் கிரேக்க தொழிலாளர்களின் விவசாயிகளின் ஆயுதப்போராட்டத்தை நசுக்குவதற்கு பிரதி உபகாரமாக கிழக்கு ஐரோப்பாவின் மேல் சோவியத் மேலாதிக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கிழக்கு ஐரோப்பாவில், கைப்பற்றிக் கொண்ட சோவியத் துருப்புக்கள் நிலைகொண்டிருந்த பொழுதும், உற்பத்தி சாதனங்களின் தனியுடமை மற்றும் முதலாளித்துவ அரசின் அமைவு (Apparatus) என்பன உடனடியாக அழிக்கப்படவில்லை. இதற்கு பதிலாக 1947ம் ஆண்டின் இறுதிப் பகுதிவரை கிரெம்ளினின் நடவடிக்கைகள் எதை எடுத்துக்காட்டினவை என்றால் அதற்கு இடைத்தடை நாடுகளில் முதலாளித்துவத்தை அழிப்பதற்கான ஒரு நீண்டகால முன்னோக்கு இல்லாது இருந்தமையேயாகும். அதனது பொருளாதாரக் கொள்கையில் சோவியத் அதிகாரத்துவமானது இடைத்தடை நாடுகளின் உற்பத்திச் சக்திகளை தேசியமயமாக்குவதிலும் பார்க்க இந்நாடுகளின் ஜடரீதியான சொத்துக்களை பயன்படுத்துவதில்தான் அக்கறை கொண்டிருந்தது. உள்நாட்டு முதலாளித்துவ வர்க்கத்தின் உடைமைகள் கைப்பற்றப்படவில்லை. தேசியமயமாக்கலோ யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் தொழிலாளர்களால் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிறுவனங்களுக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டது.

மார்ஷல் திட்டத்தால் தோற்றுவிக்கப்பட்ட இராணுவ மற்றும் பொருளாதார அச்சுறுத்தல்களுக்கு எதிரான நடவடிக்கையாக சோவியத் அதிகாரத்துவம் கிழக்கு ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தது. இந்த வளர்ச்சிகளினதும் அதேபோல யூகோஸ்லாவியாவில் ஏற்பட்டவையும் அர்த்தப்படுத்துபவை பற்றி 1949ம் ஆண்டு ஏப்ரலில் நடந்த நான்காம் அகிலத்தின் சர்வதேச செயற் குழுமத்தின் (International Executive Committee) ஏழாவது முழு அவை (Plenum) ஆழமாக ஆராய்ந்தது. சோவியத் அதிகாரத்துவத்தின் கொள்கையில் ஏற்பட்டுள்ள புதிய திருப்பத்தின் பிரதான அம்சங்களை கனரக தொழிற்துறை தேசியமயமாக்கல் பொருளாதாரத் திட்டமிடலை ஆரம்பித்தல், விவசாயிகளில் செல்வம்மிக்க தட்டுகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்தல் என்பனவற்றை விவரிக்கையில் ''அதிகாரத்துவ திட்டமிடல் முயற்சிகள் சம்பந்தமாக பாட்டாளி வர்க்கம் கொண்டிருந்த அக்கறையின்மை மற்றும் பெரும்பாலும் கடைப்பிடித்த எதிர்ப்பை'' சர்வதேச செயற்குழு குறிப்பிட்டதோடு அது இந்த வடிவிலான ''திட்டமிடல்'' ஆனது அதன் இனக் கலப்புத் (Hybrid) தன்மையைப் பேணுகின்றது; இருந்தபொழுதும் கட்டமைப்பு ரீதியாக அது அடிப்படையில் சோவியத் திட்டமிடலில் இருந்து-நிஜமான சோசலிசத் திட்டமிடலில் இருந்து அதிகாரத்துவ உருக்குலைவுற்ற சோவியத் திட்டமிடலில் இருந்தே வேறுபடுகின்றது என விளக்குகின்றது. (1)

கிழக்கு ஐரோப்பாவில் கிரெம்ளினின் நடவடிக்கைகளின் முரண்பட்ட தன்மையை ஆராயும் பொழுது சர்வதேச செயற் குழுமம் கூறியதாவது:

அதிகாரத்துவத்தின் அரசியலில் உள்ள மாறுபடுதல்கள் புறநிலையான நிலைமைக்கு மட்டும் ஒத்திருக்கவில்லை உடனடி நச்சரிப்புத் தொல்லைகள் என்ற முகமூடியின் கீழ் அதிகாரத்துவ அனுபவவாதம் வரலாற்று முன்னோக்கு இல்லாமையை மற்றும் அடிப்படையான நிலைநோக்கினை கடைப்பிடிக்க முடியாமையையும் பிரதிபலிக்கின்றது. இது முறையே அதிகாரத்துவத்திற்கும், முதலாளித்துவ வர்க்கத்திற்கும் இடையில் உள்ள ஸ்தூலமான உறவுக்கு ஒத்ததாக இருக்கின்றது. ஏனென்றால் எல்லாவற்றிலும் முதலாக பாட்டாளி வர்க்கப் புரட்சியின் சாத்தியக்கூறுகள் அத்தனையினதும் குரல்வளையை நெரிக்க அது நாடிநின்றது; முதலாளித்துவ வர்க்கத்துடன் சமரசம் செய்ய அது இட்டுச் செல்லப்பட்டது; ஏனென்றால் அதன் சலுகைகள் வரலாற்று ரீதியாக முதலாளித்துவ ஆட்சியைப் பேணுவதோடு ஒவ்வாதிருந்தது. அது இடைத்தடை வளையத்தில் முதலாளித்துவ சக்திகளை படிப்படியாக அதிகாரத்துவ முறையில் ''தீர்த்துக் கட்டும்'' பாதையில் செல்ல வேண்டியிருந்தது.(2)

கிழக்கு ஐரோப்பிய அரசுகளின் சமூக சிறப்பியல்பு பற்றி மேலும் மேலும் துல்லியமான வரையறை செய்ய முயற்சிக்கும் பொழுது சர்வதேச செயற் குழுமம் கூறியதாவது: பின்லாந்தையும், சோவியத் துருப்புகள் பற்றிக் கொண்ட ஜேர்மனியிலும், அவுஸ்திரியாவிலும் உள்ள வளையங்களைத் தவிர்த்து இடைத்தடை நாடுகள் இன்று உருமாற்றுப் போக்கில் உள்ள தனித்தன்மை வகையான இனக்கலப்புள்ள மருவும் சமுதாயமாகும். அதன் தோற்றங்கள் இன்றும் நிலையுறுதி அற்றனவாகவும், துல்லியம் அற்றனவாகவும் உள்ளன. அதன் அடிப்படைத் தன்மையை சுருக்கமாக சூத்திரம் ஒன்றில் தொகுத்துக் கூறுவது மிகவும் கடினமானதாகும்.'' (3)

சர்வதேச செயற் குழுமம் கூறியதாவது:

சோவியத் சோசலிசத் குடியரசுகளின் ஒன்றியத்தினைப் போல வரலாற்று அர்த்தத்தில் மட்டுமல்லாது, அதிலும் பார்க்க உடனடியான அர்த்தத்தில் இடைத்தடை நாடுகளின் விதி இன்னமும் தீர்க்கப்படவில்லை இன்றைய உலகில் உலவுகிற அரசியல் ஓட்டங்களின் ஒட்டு மொத்தம்தான்: மார்ஷல் திட்டம், சார்பு ரீதியாக மேற்கு ஜேர்மனியை ''மறுபடி கட்டி எழுப்புதல்'' அமெரிக்கா திரும்பவும் ஆயுதபாணியாகுதல் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார முன்னோக்குகள் மற்றும் சோவியத் ஐந்தாண்டுத்திட்டம் பாட்டாளி வர்க்கத்தின் மற்றும் காலனித்துவ மக்களின் போராட்டங்கள் இவை அனைத்துக் கூறுகளும் எதிர் வரும் மாதங்களில் இடைத்தடை நாடுகளின் உடனடி விதியை நிர்ணயிக்க இருக்கின்றன. (4)

நான்காம் அகிலம் வந்துள்ள முடிவுகளைத் தொகுத்து சர்வதேச செயற்குழுமம் அறிவித்ததாவது: இந்த முழு வர்ணனையும் பின்லாந்தையும் மற்றும் அவுஸ்திரியாவிலும், ஜேர்மனியிலும் ரஷ்யா பற்றியுள்ள வளையங்களைத் தவிர்த்து இடைத்தடை வளையங்கள் சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்துடன் கட்டமைப்பு ரீதியாகக் தன்னியலாக்கும் (Structural Assimilation) பாதையில் அடி எடுத்து வைத்துள்ளன என்ற முடிவுக்கு இட்டுச் செல்லுகின்றது. ஆனால் இந்தத் தன்னியலாக்கல் இன்னமும் நிறைவு அடையவில்லை.'' (5)

யூகோஸ்லாவியா சம்பந்தமாக சர்வதேச செயற்குழுமம் அதன் அரசின் மற்றும் அதன் பொருளாதாரக் கொள்கைகளின் தோற்றுவாய்களின் முக்கியமான வேறுபாடுகளைக் கவனத்திற் கொண்டது.

எல்லா இடைத்தடை நாடுகளிலும் யூகோஸ்லாவியாவில் மட்டும் பரந்த மக்களின் நடவடிக்கை மூலம் உடைமை உடைய வர்க்கங்களின் பெரும் பகுதியும் அதேபோல முதலாளித்துவ அரசின் அமைவும் அழித்தொழிக்கப்பட்டன, அதாவது கொரில்லா யுத்தத்தின் மூலம். இது இந்நாட்டில் நிஜமான உள்நாட்டு யுத்தத்தின் வடிவத்தை எடுத்தது. மற்றைய இடைத்தடை நாடுகளுக்கும், யூகோஸ்லாவியாவிற்கும் இடையில் உள்ள இந்த அடிப்படையான வேறுபாட்டில் இருந்து பல்வேறு தளங்களில் திட்டவட்டமான வேறுபாடுகள் ஊற்று எடுக்கின்றன. கம்யூனிஸ்ட் கட்சிக்குப் பரந்த மக்கள் மத்தியில் ஒரு உண்மையான அடித்தளம் இருக்கின்றது; புதிய அரசிற்குப் பரந்த மக்கள் அடிப்படைரீதியில் வேறுபட்ட மனப்பான்மையைக் கொண்டுள்ளார்கள்; யூகோஸ்லாவிய கம்யூனிஸ்ட் கட்சி சோவியத் அதிகாரத்துவத்துடன் வேறுபட்ட உறவுகளைக் கொண்டிருந்தது; நாட்டில் மறுக்க மடியாத முறையில் போலீஸ் ஆட்சி ஒன்று இருந்திருந்த பொழுதும் டிட்டோ நெருக்கடியைத் தொடர்ந்து, தொழிலாளர் இயக்கத்தினுள் வேறுபாடுகளுக்கான உண்மையான சாத்தியக்கூறு உண்டு. இக் கூறுகளின் ஒட்டு மொத்தம் உண்மையான திட்டமிடலுக்கு உள்ள கட்டமைப்பு ரீதியான தடைகளை அகற்றாவிட்டால் இக் காரணத்தினால் யூகோஸ்லாவியாவின் பொருளாதாரத்தைப் பண்பியல் ரீதியாக ரஷ்யப் பொருளாதாரத்திலிருந்து வேறுபட்டதாக விட்டு வைத்த பொழுதும் அது இந்நாட்டை எவ்வித ஐயப்பாடும் இன்றி சமூக மற்றும் அரசியல் தளத்தில் சோவியத் கட்டமைப்புக்கு கிட்டுமானதாகக் கொண்டு வருகின்றது. யூகோஸ்லாவியாவை அதற்கு எதிராக சோவியத் அதிகாரத்துவம் தொடுத்துவரும் அவதூறுப் பிரச்சார இயக்கம் மற்றும் முற்றுகைத் தடை போன்ற இன்னோரன்ன பிறவிற்கும் எதிராகக் காப்பது இந்த நாட்டின் தொழிலாளர் இயக்கத்தைப் பற்றி அதன் அரசின் தோற்றுவாய் இந்தத் தொழிலாளர் இயக்கத்தின் காரணமாக தோற்றுவிக்கப்பட்டுள்ள புரட்சிகரச் சாத்தியக் கூறுகள் மற்றும் இந்த அரசின் தோற்றுவாய் என்பனவற்றின் வரம்பிற்குள் ஆழ்ந்த ஆராயப்பட வேண்டும். இது வெறும் பொருளாதாரக் காரணிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதிலும் பார்க்க முன்னிடம் கொடுக்கப்பெற வேண்டும். (6)

சர்வதேச செயற்குழுமத்தின் ஆய்வு மிகவும் தீர்க்கமான நிலைப்பாட்டுடன் முடிவுக்கு வந்தது. அது விரைவில் நான்காம் அகிலத்திற்குள் தாக்குதலுக்கு உள்ளானது. ஆனால் அது 1949-ஏப்ரல் அளவில் பிந்தி, கிழக்கு ஐரோப்பாவின் வளர்ச்சிகளினுடைய புறநிலை ரீதியான முக்கியத்துவத்தைப் பற்றிப் புரியப் போராடிக்கொண்டிருந்தது. அப்பொழுது அது பின்வருமாறு எச்சரிக்கை செய்தது:

(அ) ஸ்ராலினிசம் பற்றிய ஒரு மதிப்பீடானது அதன் கொள்கைகள் ஒரு எல்லைக்குள் உண்டுபண்ணிய விளைபயன்களின் அடிப்படையில் செய்ய முடியாது. ஆனால் உலக அளவில் அதன் நடவடிக்கைகளின் ஒட்டுமொத்தத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். யுத்தம் முடிந்து நான்கு ஆண்டுகளுக்குப் பின் இன்றும்கூட முதலாளித்துவம் இற்றுப்போன நிலைமையில் இருப்பதையும், 1943-45-ம் ஆண்டுகளின் ஸ்தூல நிலைமைகளை ஆழ்ந்து ஆராயும் பொழுதும் உலக அளவில் ஐரோப்பாவில் மற்றும் ஆசியாவில் திடீரென ஏககாலத்தில் முதலாளித்துவ முறையின் தகர்வைத் தடுத்ததில் ஸ்ராலினிசம்தான் தீர்க்கமான காரணக் கூறாக இருந்தது. என்பது பற்றி எந்தவித ஐயப்பாடும் இருக்க முடியாது. இந்த அர்த்தத்தில் இடைத்தடை வளையத்தில் அதிகாரத்துவம் அடைந்த ''வெற்றி'' யானது அதிக பட்சம் உலக அரங்கில் அதிகாரத்துவம் ஆற்றிய சேவைக்கு ஏகாதிபத்தியம் செலுத்திய விலையாகும். இருந்தபோதும் இந்த விலை ஒவ்வொரு கட்டத்திலும் தொடர்ச்சியாகக் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றது.

(ஆ) சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்துடன் இடைத்தடை வளையத்தை தன்னியலாக்கிய அர்த்தத்தில் சோவியத் அதிகாரத்துவம் அடைந்த சீர்திருத்தங்கள் உலகக் கண்ணோட்டத்திலிருந்து எடைபோடப்படும் பொழுது ஒப்பிட முடியாத முறையில் சோவியத் அதிகாரத்துவம் தொடுத்த தாக்குதல்களிலும் பார்க்கக் குறைவாக, குறிப்பாக இடைத்தடை வளையத்தில் அது நடத்தும் நடவடிக்கைகள் மற்றும் அதன் முழு அரசியல் என்பனமூலம் உலக பாட்டாளி வர்க்கத்தின் நனவுக்கு எதிரான தாக்குதல்களைத் தொடுக்கின்றது. அது பாட்டாளி வர்க்கத்தின் மன உரத்தைக் குலைக்கின்றது, திசை தெரியாது குழப்பி விடுகின்றது. இவை மூலம் அது பாட்டாளி வர்க்கத்தை ஏகாதிபத்தியத்தின் யுத்த தயாரிப்புப் பிரச்சாரத்தினால் குறிப்பிட்ட மட்டத்திற்கு எளிதில் பாதிக்கப்படக் கூடிய அளவில் தாக்குகின்றது. சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்தின் நோக்கு நிலையில் இருந்தே, இடைத்தடை வளையத்தைத் திடப்படுத்தல் ஒரு வலிமையூட்டலாக இருப்பதிலும் பார்க்க ஸ்ராலினிசத்தால் உலகப் பாட்டாளி வர்க்கத்தின்மேல் கொண்டுவரப்பட்ட தோல்விகள் மற்றும் மன சோர்வு என்பன ஒப்பிட முடியாத அளவு அபாயகரமானதாக உள்ளன. (7)

கிழக்கு ஐரோப்பிய அரசுகளின் பண்புரு (Character) பற்றி ஒரு முழுமை பெற்றுவிட்ட வரையறை ஒன்றிற்கு நான்காம் அகிலம் வந்திருக்கவில்லை. அது ''இனக்கலப்புற்ற'' (Hybrid) "இடை மருவு" ''கட்டமைப்புத் தன்னியலாக்கலை நோக்கிய பாதையில்'' (On The Road Toward Structural Assimilation) என்பன போன்ற பதங்களைப் பயன்படுத்தியது எதை எடுத்துக் காட்டியதென்றால் ஆய்வின் தற்காலிகமான, முடிந்த முடிவாய் இல்லாத (Hypothetical) முழு நிறைவு பெறாத (Incomplete) போதுமானதாக இல்லாத தன்மையையே ஆகும். எனவே ''இடைத்தடை நாடுகளின்'' வர்க்க தன்மை பற்றி மேலும் பரந்த விவாதத்தை (கலந்தாராய்சியை) தொடங்கிவைப்பது என முடிவு செய்யப்பட்டது.

பண்டா போன்ற தற்போதைய பதிவு வாதிகளும் (Impressionists) மற்றும் திரட்டுவாதிகளும் (Eclectics) அவர்கள் ஒன்றில் பப்லோயிசத்திற்கு எதிரான போராட்டத்தில் தாம் கற்றுக்கொண்ட அனைத்தையும் மறந்துவிட்டார்கள் அல்லது அவர்கள் ஒருவேளை அப்போராட்டத்தின் தத்துவார்த்த படிப்பினைகளை ஒரு பொழுதும் கருத்தூன்றித் தம்மியல்பாக்கிக் (Seriously Assimilated) கொள்ளவில்லை. இவர்கள் புதிய சமூக இயல் நிகழ்வை ஜாக்கிரதையுடன் நான்காம் அகிலம் அணுகியதை ஏளனம் செய்ய முயற்சிக்கின்றார்கள். உற்பத்தி சாதனங்கள் அரசுடமை ஆக்கப்பட்டவுடன் ஏன் நான்காம் அகிலம் உடனடியாக கிழக்கு ஐரோப்பாவில் தொழிலாள வர்க்க அரசுகள் இருப்பதாக அறிவிக்கவில்லை என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. அனுபவவாதிகளாகத் தொடருகின்ற அவர்கள், ''இடைத்தடை நாடுகளை'' த் தொழிலாளர் அரசுகள் என வரையறை செய்வதன் மூலம் ஏற்படும் நுண்நயமான (Subtle) அரசியல், தத்துவார்த்த மற்றும் நடைமுறை ரீதியான விளைவுகள் பற்றி முற்று முழுதாக நனவற்ற ரீதியில் உணர்வற்றவர்களாக (Oblivious) உள்ளனர்.

ஆனால் 1949-ம் ஆண்டில் நான்காம் அகிலத்தின் பிரதான தலைவர்களின் உள்ளங்களில் சட்மனுக்கும் மற்றும் பேர்ன்ஹாமுக்கும் எதிரான போராட்டத்தின் படிப்பினைகள் பசுமையாக இருந்தன. அவர்கள் நினைவில் அப்பொழுது கூட ட்ரொட்ஸ்கியின் எச்சரிக்கை- ''ஒவ்வொரு சமூகவியல் ரீதியான வரையறையும் அதன் அடித்தளத்தில் ஒரு வரலாற்று முன் கணிப்பாகும் (Prognosis)'' என்பது மறவாதிருந்தது. ஒரு பதம் சம்பந்தமாக ஒரு வகையில் வெறும் அருவமான வாதமாக ஆரம்பிக்கக் கூடியதொன்று, வர்க்க சக்திகளின் அழுத்தத்தின் கீழ் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் முற்றுமுழுதான வரலாற்று முன்னோக்கையும் அடிப்படை ரீதியில் திருத்தல் செய்யும் திசை திரும்பும் புள்ளியாக மாறமுடியும் இறுதியில் உண்மையாக இதுதான் நிகழ்ந்தது.

நான்காம் அகிலம் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள அரசுகளின் தன்மை பற்றிய விவாதத்தில் ஸ்ராலினிசத்தின் வரலாற்று ரீதியான பங்கு பற்றிய பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சோவியத் அதிகாரத்துவத்தின் இராணுவத் தலையீட்டினோடு, உற்பத்தி சாதனங்களின் முதலாளித்துவ தனியுடமை ஒழிக்கப்பட்டதோடு வெளிநாட்டு வர்த்தகத்தில் அரசின் ஏகபோகமும் நிலைநாட்டப்பட்டது. எனவே முன்வைக்கப்பட்ட கேள்வி என்னவென்றால்: ஊனமுற்றதாக உருவாக்கப்பட்ட பொழுதும் இது கிழக்கு ஐரோப்பாவில் முதலாளித்துவ அரசை அழித்தொழித்து ஒரு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துவத்தை உருவாக்கியதாக இருக்கின்றதா? என்பதாகும். இந்தப் பிரச்சனையைப் பற்றி ஆராய்ந்தவர்களுக்கு அருமதிப்புள்ள மூலக் குறிப்பீடு ட்ரொட்ஸ்கியின் 1939-40ம் ஆண்டு எழுத்துக்களில் இருந்திருக்கின்றது. 1939ம் ஆண்டு ஆகஸ்டில் ஏற்பட்ட ஸ்ராலின், ஹிட்லர் ஒப்பந்தத்தை தொடர்ந்து செம்படை, வெள்ளை ரஷ்யாவினுள் மற்றும் கிழக்கு போலந்தினுள் இராணுவ தலையீடு செய்தது. இதைத்தொடர்ந்து முதலாளித்துவ உறவு முறைகள் அழித்தொழிக்கப்பட்டதைப் பற்றிய ட்ரொட்ஸ்கியின் ஆய்வு இருக்கின்றது.

ஆனால் இவை இரண்டிற்கும் இடையில் ஒற்றுமைகள் இருந்தன என்பது மட்டுமல்லாது முக்கியமான வேறுபாடுகளும் இருந்தன. ''சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்தின் பகுதியாக மாற இருக்கும் நிலப்பரப்புகளில்''(8) பெரும் நில உடைமையாளர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டதைப் பற்றியும், உற்பத்தி சாதனங்கள் அரசுடமையாக்கப்பட்டதை பற்றியும் ட்ரொட்ஸ்கி பேசினார்.

இவற்றிற்கு முரண்பாடாக கிழக்கைரோப்பாவில் உள்ள அரசுகள் இன்னமும், "கட்டமைப்பு ரீதியாக தன்னியல்பாக்கப்" படவில்லை. (உண்மையில் கிழக்கைரோப்பிய அரசுகளின் தேசிய எல்லைகள் ஒருபோதும் ஒழிக்கப்படவில்லை) இதுமட்டுமன்றி சோவியத் ஒன்றியம் பற்றிக்கொண்ட பிரதேசங்களில் பரந்த மக்கள் உடமைகளை புரட்சிகர பறிமுதல் செய்வதற்கு அதிகாரத்துவம் ஒரு "உந்து விசையை" கொடுக்கவேண்டித் தள்ளப்பட்டது என ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். பரந்த மக்களின் சுதந்திரமான நடவடிக்கைக்கு அழைப்பு விடாது "ஒரு புதிய ஆட்சியை உருவாக்க முடியாது" (9) என அவர் கூறினார்.

ஆனால் முதலாளித்துவ உடமை முறையை ஒழித்துவிடல், யூகோஸ்லாவியாவிற்கு வெளியில் பாட்டாளி வர்க்கத்தின் குறிப்பிடக்கூடிய எந்தவிதமான பரந்த சுதந்திர செயற்பாட்டோடு ஏற்படவில்லை. அங்குகூட உண்மையான சோவியத் மாதிரியான தொழிலாளர் ஆட்சி இல்லாமை, டிட்டோ தலைமையில் அதிகாரத்துவ ரீதியான இயக்க அமைப்பு, யூகோஸ்லாவிய கம்யூனிஸ்ட் கட்சி கடைப்பிடித்து வந்த கொள்கைகளின் பொதுவான தேசியவாத தன்மை என்பன வரலாற்று முன்னோக்கின் மிகவும் அடிப்படைப் பிரச்சனைகளுடன் பின்னிப்பிணைந்திருந்த தத்துவார்த்தப் பிரச்சனைகளை கிளப்பின.

சரியான வரையறை பற்றிய பிரச்சனையின் அடியில் அத்தியாவசியமான வேலைத்திட்டம் பற்றிய; எந்த மாற்றுப் போக்கின் மூலம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும் மற்றும் சோசலிசத்திற்கு மாறிச்செல்லும் இடைமருவுதலையும் அடையமுடியும்? என்ற கேள்வி இருந்தது. திட்டவட்டமாக இந்தப் பிரச்சனையில் தான் சமூகவியல் ரீதியான வரையறைக்கும் மற்றும் வரலாற்று ரீதியான முன்கணிப்பிற்கும் இடையில் உள்ள உறவு மிகவும் தெளிவாக வெளிவந்தது. தொழிலாள வர்க்கத்தினுள் புரட்சிகர தலைமை நெருக்கடியைத் தீர்க்க நான்காம் அகிலம் தொடுத்துவந்த போராட்டத்தின் சூழமைவில் (Context) ஆழ்ந்து ஆராயும் பொழுது இடைத்தடை நாடுகள் பற்றிய விவாதம் நடக்கும் பொழுது இயக்கத்தினுள், முன்னோக்கை மற்றும் வேலைத்திட்டத்தைப் பற்றி கடத்திவரப்பட்ட அபாயகரமான திருத்தல்களுடன் பார்க்கும் பொழுது சரியான சமூகவியல் வரையறை பற்றிய பிரச்சனை முற்று முழுதாக இரண்டாம் பட்சமானதாகும். இறுதியில் தெளிவானதுபோல் பப்லோ மற்றும் (ஹான்சனால் ஆதரிக்கப்பட்ட) கொக்கிரான் போன்றவர்கள் தொழிலாளர் அரசு பற்றிய போதுமான தொடக்க நிலையிலான வரையறையை ஸ்தூலமான அனுபவவாத ரீதியிலான ஒப்பளவு முதலை (Criteria) நிர்ணயிப்பதில் மையமான தமது வலியுறுத்தலைச் செய்வதன் மூலம் அவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ மறைவில் இருந்த ஒரு நிகழ்ச்சி நிரலுடன் செயற்பட்டார்கள்.

1939-40ல் ட்ரொட்ஸ்கி சோவியத் அதிகாரத்துவம் ஒரு வர்க்கம் என வரையறை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்த்தார். அதே நேரத்தில் அவர் பேர்ன்ஹாம் - சட்மன் சிறுபான்மையுடனான வேறுபாடுகள் வெறும் பதங்கள் பற்றிய தன்மை கொண்டவையா? இல்லையா? என்பதை நிலைநாட்ட முயன்றார். அவர் ''இந்த வரையறைகளில் இருந்து நமக்கு என்ன புதிய அரசியல் முடிவுகள் தொடருகின்றன?'' என்ற கேள்வியைக் கேட்டார்.

நான்காம் அகிலம் அதிகாரத்துவத்தைத் தூக்கிவீசுவதற்காக நின்றது என்ற உண்மையான நிலை இருக்கும் பொழுது நிலவும் தேசியமயமாக்கப்பட்ட உடைமை உறவுகளைக் காப்பதுடன் இப்புரட்சி பிணைக்கப்பட்டுள்ளது என்பதைச் சிறுபான்மை ஒத்துக் கொள்ளும்வரை, அவர்கள் இப்புரட்சியை அரசியல் புரட்சிக்குப் பதிலாக சமூகப் புரட்சி என்று அழைக்க விரும்புவார்களாயின், அவர்கள் பெரும்பான்மையினருடன் கொண்டிருக்கும் வேறுபாடுகள் வெறும் பதங்கள் பற்றிய தன்மையைத்தான் கொண்டிருக்கும். எனவே ட்ரொட்ஸ்கி இவ்வாறு எழுதினார்: நாம் இப்பதங்கள் ரீதியான விட்டுக் கொடுத்தல்களைச் செய்வோமாயின் நாம் நமது விமர்சகர்களை மிகவும் கஷ்டமான நிலையில் நிறுத்துவோம். இது எவ்வளவுக்கு என்றால் அவர்கள் தமது வெறும் சொல் அளவிலான வெற்றியை வைத்துக்கொண்டு செய்வது என்னவென அறியாதிருப்பார்கள்'' (10)

நிச்சயமாக 1939-40ம் ஆண்டு சர்ச்சை, பதங்கள் பற்றியதல்ல. சிறுபான்மை அதிகாரத்துவத்தை ஒரு வர்க்கம் என வரையறை செய்வதில் இருந்து ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தை நிபந்தனையின்றிப் பாதுகாப்பதை நிராகரிக்கச் சென்றது. 1949-ம் ஆண்டில் தோன்றிய பதம் பற்றிய வேறுபாடுகள் அவ்வளவு விரைவாக வேலைத்திட்டம் பற்றிய வேறுபாடுகளை வெளியே கொண்டுவரவில்லை. முதலில் இடைத்தடை நாடுகளையும், யூகோஸ்லாவியாவையும் எப்படி வரையறை செய்வது என்பது பற்றி உண்டான உடன்பாடு, தத்துவார்த்த சர்ச்சையைத் தீர்த்துவிட்டதுபோலத் தோற்றம் அளித்தது. என்றாலும் சர்ச்சையுடன் மேலும் ஆழமான மட்டத்தில் சம்பந்தப்பட்டவை அதன்பின் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை சரீர ரீதியாக துடைத்துக் கட்டும் நிலையை முன்வைக்கும் முன்னோக்கின் வடிவில் வெடித்தெழுந்தது.

பெரும் தத்துவார்த்த சர்ச்சைகள் அனைத்தினுள்ளும் ஆழமாகப் பதிந்திருப்பது வர்க்க சக்திகளின் மோதுதலாகும். யுத்தத்திற்குப் பின்னர் ஏற்பட்ட உடன்பாடு உண்டாக்கிய ''தோற்றத்தின் வடிவங்கள்'' என்றும் இல்லாத அளவு ஸ்ராலினிசம் சக்திமிக்கதாகவும், அதன் கடந்த காலக் குற்றங்கள் இருந்த பொழுதும், சோவியத் அதிகாரத்துவமானது வரலாற்று ரீதியாக ஒரு முற்போக்குப் பங்கை ஆற்ற ஆற்றல் உள்ளது என்றும் சுட்டிக் காட்டுவது போலத் தோன்றியது. அரசியல் நிகழ்ச்சிகளின் இணைவில் (Conjuncture) கூர்மையான மாற்றங்கள் ஏற்படும் பொழுது அவை அநேகமாக புரட்சிகர இயக்கத்தின் அணியினுள் மீண்டும் பழைய குட்டிமுதலாளித்துவ சிந்தனை வடிவங்களுக்கு சறுக்கிச் செல்லும் நிலமையை உருவாக்கும் என்று ட்ரொட்ஸ்கி எச்சரிக்கை செய்தார். இப்படியாக விமர்சனமற்ற முறையில் அரசியல் நிலவும் நிலைமையின் வெளித்தோற்றங்களுக்கு இயைந்து போவதன்மூலம், பகைமை வர்க்க சக்திகளின் அழுத்தம் அதன் மிகவும் ஆபத்தான வடிவத்தைப் பெறுகின்றது.

1949-ம் ஆண்டிற்கும், 1951-ம் ஆண்டிற்கும் இடையில் விவாதத்தில் ஏற்பட்ட வளர்ச்சி நான்காம் அகிலத்தினுள்ளும் குறிப்பாக சோசலிசத் தொழிலாளர் கட்சியினுள்ளும் ஆழமாகி வரும் அரசியல் நெருக்கடியைப் பிரதிபலித்தது. சோசலிசத் தொழிலாளர் கட்சியின் (SWP) தலைமையில் தோன்றத் தொடங்கிய அரசியல் வேறுபாடு ஐக்கிய அமெரிக்க அரசுகளினுள் வர்க்க உறவுகளில் ஏற்பட்ட அடிப்படை ரீதியான மாற்றங்களைப் பிரதிபலித்தன. கெயின்சிய (Keynesian) பற்றாக்குறை செலவுசெய்தலை பொருளாதார ரீதியாக அடிப்படையாகக் கொண்ட அமைப்புமுறைப் படுத்தப்பட்ட "புதிய பங்களிப்பு" (புதிய திட்டமிடப்பட்ட சமூகப் பொருளாதார ஏற்பாடு) முறையிலான வர்க்க சமரசம் மற்றும் வர்க்க ஒத்துழைப்பு என்பன ஐக்கிய அமெரிக்க அரசுகளினுள் வர்க்க உறவுகளில் ஏற்படுத்திய அடிப்படை ரீதியான மாற்றங்களைப் பிரதிபலித்தன. நான்காம் அகிலத்தினுள் மற்றும் சோசலிச தொழிலாளர் கட்சியினுள் ஏற்பட்ட இந்த ஒன்றோடு ஒன்று பின்னி இணைக்கப்பட்ட அரசியல் மற்றும் தத்துவார்த்த நெருக்கடியின் மாற்றுப்போக்கின் படிமுறை வளர்ச்சி கவனமாகப் படிக்கப்பட வேண்டும்.

கிழக்கு ஐரோப்பாவில் தொழிலாளர் அரசுகள் இருக்கின்றன என்று நான்காம் அகிலம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முதலில் வலியுறுத்தியவர்களில் ஒருவர்தான் பேட் கொக்கிரான் (ஈ.ஆர். பிராங்). அவர் 1949-மார்ச் மாதத்தில் சமர்பித்த அவரது மகஜரில் இடைத்தடை நாடுகளில் உற்பத்தி சக்திகள் அரசுடமை ஆக்கப்பட்டுள்ளன; இது அந்த நாடுகளில் ''சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்துடன் ஏறக்குறைய ஒத்த'' (11) பொருளாதார மற்றும் அரசியல் ஆட்சி முறைகளை உருவாக்கியுள்ளன என்று வாதிட்டார்.

மேலே மேற்கோள் காட்டப்பட்ட பிரேரணை, ஏழாவது முழு அவையில் முன் வைக்கப்பட்டது. இதைப்பற்றிய விவாதத்தை மொறிஸ் ஸ்ரெயின், 1949 ஜூலை, 12ம் தேதி நடந்த சோசலிசத் தொழிலாளர் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் ஆரம்பித்து வைத்தார். அக்கூட்டத்தில் அவருடைய அறிக்கை பெரும்பாலும் அந்தப் பத்திரத்தைத் திரும்பக் கூறுவதாக இருந்தது. அக்கூட்டத்தில் கொக்கிரான் தனது மகஜரின் நிலைப்பாட்டின் அடிப்படையில் வாதிட்டார். இந்த விவாதம் மீண்டும் 1949 ஆகஸ்ட், 2ம் தேதி தொடர்ந்தது. அப்பொழுது ஸ்ரெயின் நான்காம் அகிலத்தினுள் மற்றும் சோசலிசத் தொழிலாளர் கட்சியினுள் நிலவிவந்த வேறுபாடுகளை விவரித்தார்.

கடந்த கூட்டத்தில் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பற்றி முன்வைத்த பிரேரணையில் நான் பிரிட்டிஷ் புரட்சிக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டைப் பற்றிக் கூறத் தவறிவிட்டேன். இப்பொழுது அதைப்பற்றி நான் சுருக்கமாகப் பேசுகிறேன். அவர்கள் அண்மையில் வெளியிட்ட பத்திரங்களை நான் படிக்கவில்லை, ஆனால் இது அற்ப முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால் அவர்களது நிலைப்பாடு ஏறத்தாழ பதினாறு மாதங்களுக்கு முன் தொடங்குகின்றது. அப்பொழுதே அவர்கள் இடைத்தடை நாடுகளைத் தொழிலாளர் அரசுகள் என்று பிரகடனப் படுத்தியிருந்தார்கள். நடைமுறையில் உண்மையிலேயே அவர்கள் இன்று சீனா சம்பந்தமாக இதை ஒத்த நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார்கள். அவர்கள் ஸ்ராலினிசம் ஆட்சியில் இருப்பது, தொழிலாளர் அரசுக்குச் சமமானது என்ற கருத்துருவில் இருந்து தொடருகின்றார்கள். அவர்கள், முதன் முதலில் இடைத்தடை நாடுகள் தொழிலாளர் அரசுகள் என்ற நிலைப்பாட்டை எடுத்த பொழுது இந்த நாடுகள் எந்த ஒரு விரிவான, தேசியமயமாக்கல்களையும் செய்திருக்கவில்லை. ஓர் அர்த்தத்தில் அவர்களின் வாதிடும் முறையானது, அவர்களை மற்றும் சச்மனைட்டுகளை எதிரான முடிவுக்குக் கொண்டுவந்த பொழுதும், அது சட்மனைட்டுகளினதைப் போன்றதாகும்.

சட்மனைட்டுகளுக்கு, ஸ்ராலினிஸ்டுகள் அரசைத் தம் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருத்தல், அதிகாரத்துவ கூட்டமைவுக்குச் (Collectivism) சமமானதாகும். அதாவது ஸ்ராலினிட்டுகள் அரச ஆட்சியை அடைந்ததும் புதிய சமூக வர்க்கம் ஒன்று பிறந்துவிடுகின்றது. புரட்சிக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், அரசை ஸ்ராலினிஸ்டுகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததும் தன்னியக்கமாக சமூக மாற்றம் ஏற்பட்டுவிடுகின்றது. ஆனால் அவர்கள் அதைத் தொழிலாளர் அரசு என்று பெயர் இடுகின்றனர். இது ஒரு வசதியான முறையாகும். இந்த முறை அதனைக் கடைப்பிடிப்பவர்களை ஸ்தூலமான உயிர்வாழும் மாற்றுப்போக்கை ஆராயும் முழுப்பொறுப்பில் இருந்தும் விடுவிக்கின்றது.

(இந்த) நிலை நோக்கில் இருந்து குறிப்பிடக்கூடியது எதுவென்றால் இடைத்தடை நாடுகளின் பரிணாமவளர்ச்சி (Evolution) பற்றிய கருத்தூன்றிய (Serious) ஆய்வு ஒன்றை அகிலத்தின் பெரும்பான்மைப் போக்கு மட்டும் செய்துள்ளது என்பதாகும். இடைத்தடை நாடுகள் பற்றிய பிரச்சனையை எளிமையாக்க முயலுவதன் மூலம் புரட்சிக் கம்யூனிஸ்ட் கட்சி இப்பிரச்சனையை முற்றிலும் மாறாக சிக்கலாக்கி, ட்ரொட்ஸ்கிசத்தின் சித்தாந்த நிலைப்பாடுகளைக் கேள்விக் குறிக்கு முன் நிறுத்துகின்றது.

ஸ்ராலினிசம் ஆட்சியில் இருந்தால் அதன் பொருள் தொழிலாளர் அரசுகள் என்றால் நான்காம் அகிலத்திற்கு அதன் பின் என்ன பங்குதான் உண்டு? அரசு பற்றிய மார்க்சிச கருத்துருவுக்கு என்ன நேரிடப் போகின்றது?

புரட்சிக் கம்யூனிஸ்ட் கட்சியினுள் பல போக்குக்கள் மேலெழத் தொடங்கி வந்தன. இவைக்கு முற்றிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பற்றிய அவர்களின் நிலைப்பாட்டில் உள்ள முரண்பாடுகளினால் ஊட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு அவர்களின் தலைமை உறுப்பினர் ஒருவர், ஸ்ராலினிசம் இப்படி ஒரு புரட்சிகர சக்தியாயின் நாம் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து விடலாமே என்ற முடிவுக்கு வந்தார். மற்றவர்கள் நான்காம் அகிலம் இருப்பதைப் பற்றிக் கேள்விகள் எழுப்புகின்றார்கள். அவர்கள், நிலைமை முதிர்ச்சியடைவதற்கு முன்னராக, நான்காம் அகிலம் அமைக்கப்பட்டதாகக் கூறுகின்றார்கள்.

இப்பொழுது நாம், நமது கடந்த விவாதத்தின் பொழுது வந்திருந்த சில வாதங்களை எடுப்போம். நான் இப்பிரச்சனையைக் கொக்கிரான் அணுகிய முறையைக் கண்டு திகைத்துப்போனேன். நான் அடிப்படைப் பிரச்சனைகள் என்று எவற்றைக் கருதுகின்றேனோ அவற்றை அவர் ஒதுக்கித் தள்ளிய முறையைப் பார்த்து நான் மலைத்துப் போனேன். உதாரணத்திற்கு அவர் இடைத்தடை நாடுகளில் விவசாயம் தனியார் கையில் உள்ளது அது தனியாரால் சுரண்டப்படுகின்றது என்பதை ஒத்துக் கொள்ளுகின்றார். ஆனால் அது அதிகம் முக்கியத்துவம் உள்ளது அல்ல என்று அவர் நமக்கு கூறுகின்றார். அவர் அது ஏன் முக்கியத்துவம் அற்றது என்பதை ஆராய எந்த ஒரு முயற்சியும் எடுக்காது இருக்கின்றார். அவர் அதை வெறுமனே ஒதுக்கித் தள்ளி விடுகின்றார்.

சர்வதேச செயற்குழுமத்தின் பிரேரணை தேசிய எல்லைகளைப் பற்றி மற்றும் அவற்றின் பிற்போக்குப் பங்கைப் பற்றி கேள்வியை எழுப்புகின்றது. அது சிறிய தேசிய எல்லைகளினுள் சிறையுண்ட வண்ணம் திட்டமிடலுக்குச் சாத்தியக் கூறு இல்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றது. ஆனால் அதையும் அவர் ஒதுக்கித் தள்ளிவிடுகின்றார். ஏன்? (12)

கொக்கிரான் தனது நிலைப்பாட்டை தற்காத்தார். அவர் ஐரோப்பிய அரசுகளின் பண்புருவை (Character) நிர்ணயிப்பதில் விவாதத்தில் தீர்க்கமானதாக இருப்பது அவற்றின் வரலாற்று ரீதியான தோற்றுவாயோ அல்லது தொழிலாள வர்க்கத்தின் பரந்த இயக்கம் ஒன்று இல்லாமையோ அல்ல- ஆனால் தொழிற் துறையின் மீது, அரச உடைமை நிலைநாட்டப்பட்டுள்ளது என்ற உண்மையே என்று வலியுறுத்தினார். கிழக்கு ஐரோப்பாவிற்கும், மற்றும் சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்திற்கும் இடையில் உள்ள "சமூகவியல் ரீதியான ஒத்த தன்மைகள்'' மிகவும் பெரிதாக எவ்வளவோ உள்ளன அவை வரலாற்று ரீதியான தோற்றுவாய்களுக்கு இடையில் உள்ள வேறுபாடுகளைவிட முக்கியத்துவம் வாய்ந்தவை என்று அவர் வாதிட்டார்.

அதன் பின் கொக்கிரான் விவாதத்தின் அடியில் தனிச்சிறப்புள்ளதாகத் தான் கருதியவற்றைப் பற்றிக் கூறினார். செக்கோஸ்லோவாகியா அல்லது யூகோஸ்லேவியா போன்ற அரசுகளை சமூகவியல் ரீதியாக சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்திற்கு ஒப்புடமை உடையவை என்று ஏற்றுக் கொள்ளுவதன் மூலம் நாம் ஸ்ராலினிசத்திற்கு ஒரு முற்போக்குக் குறிக்கோளை வழங்குகின்றோம், அப்படி ஸ்ராலினிசத்திற்கு முற்போக்கு குறிக்கோள் ஒன்று இருக்குமாயின் அது நான்காம் அகிலத்தின் பாத்திரத்தைப் பற்றி மறுபரிசீலனை செய்யவேண்டி நிற்கவில்லையா என்ற அச்சம் இந்த வாதங்களின் (கிழக்கு ஐரோப்பாவில் தொழிலாளர் அரசுகள் இருக்கின்றன என்பதற்கு எதிராக) பின் புலத்தில் பதுங்கிக் கொண்டு இருக்கின்றது.

இதைப் பற்றி நீங்கள் சிந்தித்துப் பார்ப்பீர்களாயின் உண்மையில் பிரச்சனையானது முற்று முழுதாக வேறு ஒரு தளத்தில் தங்கியிருக்கின்றது என்பதை இன்று எமது மாலை நேரத்தை எடுத்துள்ள விவாதத்திலிருந்து தெரிகின்றது. நான் இதைக் கூறுவேன். செக்கோஸ்லாவாகியாவில் மற்றும் போலந்தில் தான் சாதித்ததை ஸ்ராலினிசம் உலகில் அமெரிக்காவில், மேற்கு ஐரோப்பாவில் சாதிக்கும் என்று நாம் நம்புவோமாயின்; அதற்கு நீங்கள் இஷ்டப்பட்டபடி பெயரிட்டுக் கொள்ளுங்கள் --முதலாளித்துவ, நவ முதலாளித்துவ, இரண்டிற்கும் இடைப்பட்ட அரசு நீங்கள் விரும்பும் எந்த ஒரு வரையறையையும் அதற்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்-- செக்கோஸ்லாவக்கியாவில் அது சாதிக்க கையாண்ட வழிமுறைகளை, ஸ்ராலினிசம் அமெரிக்காவிலும், கையாளுமாயின், அப்பொழுது இதிலிருந்து ஸ்ராலினிசம்தான் எதிர்காலத்தின் அலை, புதியதொரு சமுதாயத்தைக் கொண்டுவர அதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என நான் நினைக்கிறேன். (13)

கொக்கிரான் சரியாக உயிர்நாடியில் கைவைத்துள்ளார். உண்மையில் அந்த விவாதம் சமூகவியல் வரையறைகள் பற்றிய ஒன்றல்ல, ஆனால் வரலாற்று முன்கணிப்பை பற்றி மற்றும் நான்காம் அகிலத்தின் பணிகளைப் பற்றி அக்கறை கொண்டிருந்தது. கொக்கிரான் அவசரப்பட்டு இடைத்தடை நாடுகளில் அது ஆற்றியவற்றை ஸ்ராலினிசம் ஐக்கிய அமெரிக்க அரசுகளிலும், மேற்கு ஐரோப்பாவிலும் அடைய முடியாது என்று தான் நம்புவதாக வலியுறுத்தினார். "எனவே வரலாற்று ரீதியாக ஸ்ராலினிசம் திவால். அதைப் பற்றிய நமது அடிப்படை ஆய்வு அப்படியே இருக்கின்றது.'' (14)

சோசலிசத் தொழிலாளர் கட்சியினுள் பப்லோவின் திருத்தல் வாதக் கருத்துக்களை மிகவும் வலிமையுடன் எடுத்துரைப்பவராக மாற இருந்த கிளாக், உடனடியாக கொக்கிரானின் நிலைப்பாட்டிற்குச் சவால் விட்டார். புரட்சிகர இயக்கத்தின் காரியாளர்கள் மேல் புறநிலையான வர்க்க சக்திகளின் தாக்கத்தை கிளார்க்கின் அரசியல் பரிணாமம் (Evolution) தெளிவாக்குகின்றது. ''தனிப்பட்ட'' நிலைப்பாடுகளில் இது திடீர் என்றும், எதிர்பாராத விதத்திலும் உருமாற்றீடுகளை (Transformations) உண்டாக்குகின்றது. கொக்கிரானுடைய கருத்துக்கள், ஸ்ராலினிசம் ஒரு முற்போக்குப் பாத்திரத்தை வகிக்கின்றது என்ற முடிவுக்கு இட்டுச்செல்லும் என்று எச்சரித்த பின் கிளார்க், ''குறிப்பாக உலக நெருக்கடியின் கண்ணோட்டத்திலிருந்தும், மற்றும் உலகின் வேறு பகுதிகளில் நிலவும் போராட்டத்தினாலும் ''இந்த அரசுகளின் தன்மையை நிர்ணயிக்க ஏதோ ஒரு வாய்ப்பான சூத்திரம் ஒன்றைக் கண்டு பிடிப்பது குறித்து'' (15) சோசலிசத் தொழிலாளர் கட்சி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று யோசனை கூறினார்.

அப்பொழுது கனன் விவாதத்தில் தலையிட்டார்: உச்சியில் நின்று திறமையாக கையாளுதலின் (Manipulation) மூலம் அரசின் வர்க்கத் தன்மையை உங்களால் மாற்ற முடியும் என்று நான் நினைக்கவில்லை. புரட்சியின் மூலம்தான் அதைச் செய்ய முடியும். புரட்சியைத் தொடர்ந்து அடிப்படை ரீதியான உடமை உறவுகளில் மாற்றம் ஏற்படும். இதைத்தான் நான் அரசின் வர்க்க தன்மையில் ஒரு மாற்றம் என்று புரிந்து கொண்டுள்ளேன். இதுதான் சோவியத் ஒன்றியத்தில் நிகழ்ந்தது. முதலில் தொழிலாளர்கள் ஆட்சியைக் கைப்பற்றி உடைமை உறவுகளை உருமாற்றீடு செய்ய ஆரம்பித்தார்கள்.....

இடைத்தடை நாடுகளில் சமூகப்புரட்சி ஒன்று நடந்துள்ளதாக நான் கருதவில்லை. மற்றும் ஸ்ராலினிசம் ஒரு புரட்சியை நடத்தியுள்ளது என்று நான் எண்ணவில்லை. நிலைமை பற்றிய எனது கருத்து எதுவென்றால் யுத்தத்தின் முடிவில் செம்படையின் வெற்றிகளோடு பிரமாண்டமான புரட்சிகர இயக்கத்தின் அறிகுறி தோன்றியது. முதலாளித்துவத்தைத் துடைத்துக் கட்ட தொழிலாளர்கள் ஆட்சியைக் கைப்பற்ற உடனடியாக சோவியத் ஒன்றியத்துடன் அல்லது பால்கன் அரசுகளைக் கூட்டரசாக்கி அதனுடன் தம்மை ஐக்கியப்படுத்தி, சோசலிச திட்டமிடலுக்குப் போதுமான அரங்கு ஒன்றை உருவாக்க, பரந்த மக்களின் இயல்புணர்ச்சியான இயக்கம் இடர்கடந்து நிறைவுறச் செய்ய முயன்றது.

ஸ்ராலினிசத்தின் பங்கு எவ்வகையிலும் புரட்சிகரமானது அல்ல என்று நான் கருதுகிறேன். செம்படையின் வெற்றிகள் புரட்சிகர இயக்கத்தை விரைவூக்கம் செய்தன, என்ற அர்த்தத்தில் அது புரட்சிக்கு ஒரு உந்துதலைக் கொடுத்தது. ஆனால் ஸ்ராலினிசத்தின் நிஜமான பங்கு அந்தப் புரட்சியின் குரல் வளையை நெரித்ததாகும். தொழிலாளர்களின் பரந்த இயக்கத்தை அடக்கியது, மீண்டும் முதலாளித்துவ அரசை மற்றும் முதலாளித்துவ சொத்து உறவுகளை நிலைநிறுத்தியதாகும்.......

உயர் வட்டங்களில் நடத்தப்படும் திறமையான கையாளுதல் வாயிலாக ஓர் அரசின் வர்க்க தன்மையை மாற்ற முடியும் என்ற கருத்தோடு நீங்கள் விளையாட ஆரம்பிப்பீர்களாயின், நீங்கள் அடிப்படைத் தத்துவத்தைத் திருத்தல் செய்ய அனைத்துவகை திருத்தல் வாதிகளுக்கும் கதவுகளைத் திறந்து விடுகின்றவர்களாவீர்கள். இடைத்தடை நாடுகள் மீண்டும் முதலாளித்துவ வரம்பிற்குள் செல்ல முடியும் என்று மட்டுமல்லாது ஐரோப்பாவில் நிலமை, ஒரு புரட்சிகர நிலைமையின் இயக்கத்தினால் மாற்றப்படாது இருக்குமாயின், நிகழக்கூடியது எதுவென்றால் அவை அப்படித்தான் செல்ல முடியும் என்று நான் நம்புகின்றேன்.

இன்றைய நேரத்தில் இந்த அரசுகள் இரு வல்லரசுகளுக்கு இடையில் -மேற்கத்தைய முதலாளித்துவத்திற்கும், சோவியத் ஒன்றியத்திற்கும் இடையில் உள்ள சதுரங்கக் காய்கள் என்றுதான் நான் கருதுகிறேன். குளிர் யுத்தத்தில் ஏற்படக்கூடிய உடன்பாடு ஒன்று, இந்த நாடுகளின் அரச அமைவுகளின் மேல் உள்ள ஸ்ராலினிசப் பிடி தளர ஆரம்பிப்பதற்கும் மற்றும் படிப்படியாக இந்நாடுகளினுள் முதலாளித்துவத்தின் உண்மை பிரதிநிதிகள் மீண்டும் ஊடுருவல் செய்வற்குமான தொடக்கப் புள்ளியாக உருவாக முடியும் என்று முற்றிலும் எண்ணிப் பார்க்கக் கூடியதொன்றாகும். அப்படியான ஒரு வளர்ச்சி ஏற்படும் என்று நான் கூறுவது சரியானதா என்பது நிலைமையை மாற்றப் போவதில்லை. அப்படி நடக்க முடியும் என்று நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களாயின், அப்பொழுது ஓர் அரசின் வர்க்க தன்மையை முன்னும் பின்னுமாக, புரட்சி அல்லது எதிர் புரட்சி இல்லாமல், திடுமென மாற்ற முடியும் என்ற நிலைப்பாட்டை நீங்கள் எடுக்க வேண்டியவர்கள் ஆவீர்கள். இந்தக் கருத்தைத்தான் அதன் உச்ச முனைக்கு எடுத்துச்சென்று அதனுடன் சிலர் விளையாடுகின்றார்கள்; சிலவேளை படிப்படியாக சுரங்கங்களை, வங்கிகளை, இரும்பாலைகளை மற்றும் ஏனைய தொழிற் துறைகளை இங்கிலாந்து தேசியமயமாக்கி புரட்சி இல்லாமல் தவழ்ந்து சென்று சோசலிசத்தை அது அடைய முடியும் என்ற கருத்துத்தான் இது. நாம் என்றும் இதைச் சீர்திருத்தவாதம் என்று கருதி வந்துள்ளோம்.

கலப்பற்ற முறையில் ஒன்று மட்டும் நிச்சயமானது: இன்று அங்கு இருப்பது தொடர்ந்து நீடித்திருக்க முடியாது. அது இடைமருவும் தன்மை கொண்டது, என்று எல்லோரும் உடன்படுகின்றார்கள்...... இதற்கிடையில் நீங்கள் இவற்றை சமூகப் புரட்சி ஏற்படாத ஆனால் இன்னும் சரியாகக் கூறுமிடத்து புரட்சியின் கருச்சிதைவு ஏற்பட்ட இடைமருவு உரு அமைவுகள் என்ற மட்டத்தில் இவற்றை தற்சமயம் நீங்கள் விட்டு வைக்க வேண்டியதுதான். அறுதியான பண்பியல்பு வரையறை ஒன்றைக் கொடுக்கக் காலம் அதிகம் முந்தியதாக உள்ளது.

சோவியத் ஒன்றியத்தைப் பற்றிய கிளார்க் கூறிய பொருளுடன் -தேசியமயமாக்கலுடன் வெளிநாட்டு வர்த்தகத்தையும் கூட்டினால் அது தொழிலாள வர்க்க அரசுக்கான ஒப்பளவு முதலாக (Criterion) அமையாது என்பதுடன் நான் உடன்படுகிறேன். அதுதான் ரஷ்ய புரட்சியினால் உருவாக்கப்பட்ட தொழிலாளர் அரசில் இருந்து எஞ்சியிருப்பது. அதாவது ரஷ்ய புரட்சியின் எச்சமிச்சம். அதன் காரணமாகத்தான் சோவியத் அரசு "உருக்குலைந்த அரசு" என்று அழைக்கப்படுகின்றது.

பாட்டாளி வர்க்க புரட்சியின் விளைபயனாக ஒரு அரசு, தேசியமயமாக்கப்பட்ட சொத்து உறவுகளைக் கொண்டிருக்கின்றதா, இல்லையா என்பதற்கும் ஒன்றில் ஸ்ராலினிஸ்டுகளால் அல்லது ஆங்கில சீர்திருத்தவாதிகளினால் ஒரு குறிப்பிட்ட முற்போக்கு முயற்சிகள் தேசியமயமாக்கும் திக்கில் எடுக்கப்படுகின்றனவா என்பதற்கும் இடையில் பிரம்மாண்டமான வேறுபாடுகள் உண்டு. (16)

வாதத்தை தொகுத்துக் கூறுகையில் ஸ்ரெயின், ''எனது சொந்த மனதில் இன்னமும் இங்குள்ள வேறுபாடுகளின் உண்மைத் தன்மையைப் பற்றி தெளிவில்லை.'' (17) என்றார்.

ஆனால் நான்காம் அகிலத்தினுள் அடிப்படைத்தன்மை உள்ள வேறுபாடுகள் இருப்பது தெளிவுபடத் தொடங்கியது. 1949-செப்டம்பரில் பப்லோ ஒரு கட்டுரையை எழுதினார். அதில் அவர், யூகோஸ்லேவியாவை "பிறப்பில் இருந்தே ஊனமுற்ற (Deformed) அரசு" என்று சுட்டிக்கூற வேண்டும் என்று வாதிடும்பொழுது அவர், முற்றும்முழுதாக புதியதொரு முன்னோக்கின் கருவின் உருவை (Embronic) விரித்துரைத்தார்:

சோசலிசமானது, பாட்டாளி வர்க்கத்தின் சித்தாந்த மற்றும் அரசியல் இயக்கம் என்ற ரீதியிலும், அதே போல ஒரு சமூக அமைப்பு என்ற ரீதியிலும் அது இயல்பாகவே சர்வதேசியமானதும், பகுக்க முடியாததொன்றுமாகும். இந்தக் கருத்து எமது இயக்கத்தின் அத்திவாரத்தில் உள்ளது. இந்த ஒன்றின் மேல் மட்டுமே மனித இனத்தின் சோசலிச வளர்ச்சிக்கு உத்தரவாதம் செய்யும் நனவான பரந்த இயக்கத்தை கட்ட முடியும்.

ஆனால் இதை மனதில் வைத்துக்கொண்டிருந்த பொழுதும் எது உண்மையாக இருப்பது என்றால், முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு இடைமருவும் வரலாற்று காலப்பகுதி முழுவதும், நூற்றாண்டுகளுக்கு நீடிக்கக்கூடிய ஒரு காலப்பகுதி முழுவதும் நமது ஆசான்கள் எதிர்பார்த்ததைவிட நாம் மிகவும் வளைவு நெளிவுமிக்க மற்றும் சிக்கல் மிக்க வளர்ச்சியை எதிர்கொள்வோம் என்பது உண்மையாக உள்ளது - தொழிலாளர் அரசுகள் வழமையாக அல்லாமல் தவிர்க்க முடியாது கணிசமான அளவு ஊனமுற்றவையாக இருக்கும். (18) (வலியுறுத்தல் சேர்க்கப்பட்டுள்ளது).

1953ம் ஆண்டு உட்கட்சி கோஷ்டி (Faction) மோதலின் சூட்டில் பப்லோவின் நூற்றாண்டுகளாக ஊனமுற்ற அரசுகள் என்ற கருத்துருவை கனன் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று வலியுறுத்தினார். இப்படி கனன் கூறுவது உண்மையென்று அவர் நவம்பர் 4, 1949 தேதி ரஷ்ய புரட்சியின் 32-வது நிறைவு வைபவத்தில் ''இருபதாம் நூற்றாண்டு செல்லும் திசை (Trend)'' என்ற தலைப்பின் கீழ் ஆற்றிய பகிரங்க உரையின் மூலம் கண்கூடாக காட்டப்பட்டுள்ளது. பப்லோ தனது செப்டம்பர் பத்திரத்தில் விவரித்த முன்னோக்கிற்கான நேரடி பதில் என்பதை இந்த உரையை படிக்கும்போது ஒருவர் முடிவுக்கு வராமல் இருக்க முடியாது.

கனன், மார்க்சிசத்தின் புரட்சிகர முன்னோக்கிற்கு எதிராக திருத்தல் வாதத்தால் தொடுக்கப்பட்ட தாக்குதல்களை மீளாய்வு செய்தார். இது முதலாளித்துவத்தின் வரலாற்று ரீதியான திவாலையும், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பங்கையும் நிலைநாட்டிற்று. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முந்தய காலப்பகுதியில் பொருளாதார செல்வச்செழிப்பின் மத்தியில் ''வெற்றிக்களிப்புடைய முதலாளித்துவத்தின் சித்தாந்தவாதிகள், மார்க்சிசத்தின் தொலை முன்னோக்கை தவறு என்று நிராகரித்து கொண்டாடுவதற்கான அருஞ்சிறப்பு மிக்க நாட்களாக இருந்தன'' (19) என்பதை கனன் குறிப்பிட்டார்.

அவர் தொழிலாள இயக்கத்தினுள் சீர்திருத்த வாதத்தின் அஸ்திவாரங்களாக மாறிய இந்த கருத்துருக்கள் எப்படி முதலாவது உலக யுத்தம் வெடித்தெழுதலுடன் மற்றும் மார்க்சிசத்தை மிகப்பெரும் முறையில் மெய்பித்துக்காட்டிய ரஷ்ய புரட்சியுடனும் தகர்த்தெறியப்பட்டன என்பதை விளக்கினார். அதைத்தொடர்ந்து கனன், ஸ்ராலினிசத்தின் மற்றும் அதன் ''தனி ஒரு நாட்டில் சோசலிசம்'' என்னும் தத்துவத்தின் ஜடரீதியான மற்றும் சித்தாந்த ரீதியான ஊற்றுக்கால்கள், அவை தோன்றி வளர்ந்த வழியையும் தெளிவுப்படுத்தினார். ''தனி ஒரு நாட்டில் சோசலிசம்'' என்னும் தத்துவம் ''எதை பொருள்படுத்துகிறது என்றால் சர்வதேச புரட்சியை கைவிடுதலை; உலகின் ஆறில் ஐந்து பகுதியில் முதலாளித்துவம் நிரந்தரமாக நிலைத்திருப்பதை மற்றும் சோவியத் அதிகாரத்துவம் அதற்கு ஏற்றாற்போல தன்னை மாற்றி அமைத்துக்கொள்ளவும், அதனுடன் வாழவும்தான் ஆர்வம் காட்டுவதேயாகும்.'' (20) என்றார் அவர்.

இந்த கருத்துருவானது பேர்ன்ஸ்ரைனுடைய ஆதி திருத்தல் வாதத்திலும் பார்க்க எவ்வகையிலும் பொய்மையில் குறைந்ததல்ல என்பதையும் அது, 1920, 1930ம் ஆண்டுகளின் பிற்பகுதியின் திடீர் எழுச்சிகரமான புரட்சிகர போராட்டங்களினாலும் மற்றும் பொருளாதார நெருக்கடியினாலும் தகர்த்தெறியப்பட்டது என கனன் வலியுறுத்தினார். ஆனால் 1930-ம் ஆண்டுகளில் புரட்சிகர சாத்தியக்கூறுகள் காட்டிக்கொடுக்கப்பட்டு அவை ஒரு தொடராக பேரழிவுமிக்க தோல்விகளை உண்டாக்கின.

ஸ்ராலினிசத்தின், பாசிசத்தின் மற்றும் இரண்டாம் உலக யுத்தத்தின் திகிலூட்டும் அனுபவங்கள், அவற்றிற்கு இட்டுச்சென்ற மற்றும் அவற்றிலிருந்து பின் எழுந்த அனைத்தும், பலவற்றை மாற்றி, பல எதிர்பார்ப்புகளை ஏமாற்றி, புதிய பிரச்சனைகளை தத்துவார்த்த ஆய்வுக்கு எழுப்பிவிட்டன. மீண்டும் ஒரு முறை தமது கண்கள் முன் உடனடியாக இருப்பனவற்றை மட்டும் காண்பவர்களும், எப்பொழுதும் அவை என்றும் நிலைத்திருப்பவை என கற்பனை செய்பவர்களால், இவர்களால் எதிர்பார்க்கப்படாத புதிய இயல் நிகழ்ச்சிகள், இவர்களை, அவர்கள் உழைத்து உருவாக்கிய தத்துவங்கள் என்ற மாறுவேடத்தில் நிறைய மேலோட்டமான எண்ணப்பதிவுகளை உலாவிற்கு விடச் செய்கின்றனர். (21)

பாசிசம் தான் எதிர்காலத்தின் அலை என பிரகடனப்படுத்தியவர்களை கனன் வெறுத்து ஒதுக்கினார்.

தமது சொந்த அச்சங்கள் மற்றும் திகில்களின் இருள்படிந்த மடுவில் இருந்து இந்த பீதியை பரப்புபவர்கள் ''பின்னோக்கி போகும் தத்துவம்'' என்று அழைக்கப்படும் அவர்களது தத்துவத்தை தூண்டில்போட்டு எடுத்துள்ளனர். ஆனால் இந்த எதுவும் முடியாது என்ற சரணாகதி மனப்பான்மையானது, முதலாளிகளின் ஒரு பகுதியினரின் எதிலும் களிப்பூட்டும் வெற்றியைக்காணும் மனப்பான்மையைப்போல, பாசிசத்தின் பங்கு மற்றும் அதன் எதிர்கால வாய்ப்புகளைப் பற்றிய ஓர் உண்மையான மதிப்பீட்டை செய்வதற்கு எவ்வகையிலும் பலனுள்ளதல்ல.....

ஹிட்லரும், முசோலினியும், தமது வீம்புரைகளிலும் (Boasts) போலிப்பகட்டுகளிலும் அதேபோல அவர்களது இறுதிக் கதியிலும், ஒரு நாட்டில் அல்லது மற்றொரு நாட்டில் தமது குறுகியகாலத் தோற்றமளித்தலை இதன் பின்னரும் செய்யக்கூடிய அனைத்து பாசிச சர்வாதிகாரிகளின் பிரதிநிதித்துவ அடையாளங்களாக வெளிப்படையாக வரலாற்றில் நிற்கின்றார்கள். ஹிட்லர் தனது பைத்தியத்தின் உச்சக்கட்டத்தில் தனது நாசிச ஆட்சி ஆயிரம் ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று வீம்புப் பேச்சு பேசினார் ஆனால் அவர் வெறும் பன்னிரண்டு வருடங்களுடன் அமைதி அடைய வேண்டியிருந்ததோடு அவரது ஆட்சியின் பேரழிவுமிக்க சரிவுடன், பேரத்தினுள் தனது சொந்த தலையையும் அதன் பின் தூக்கிப்போட வேண்டியிருந்தது. முசோலினி ரோம பால்கனியில் பெருமையுடன் நடைப்போட்டு தான் ஓர் அசைக்கமுடியாத மீமனிதன் (Super man) என பல மக்களை கவர்ந்தார். ஆனால் அவரது ஆட்சியும் ''அழுகிய ஆப்பிள் போல வெறும் இருபது ஆண்டுகளின் பின் பொடிப்பொடியாய் பிளந்து சாய்ந்தது. முசோலினியே, கசாப்பு கடையில் வெட்டப்பட்ட பன்றி ஒன்றைப்போல தலைக்கீழாய் பகிரங்க சதுக்கத்தில் குதிகாலிலிருந்து தொங்கவிடப்பட்ட நிலையில் தனது முடிவை எய்தினார். இந்த இரு பாசிச மீமனிதர்களின் பேரழிவுமிக்க முடிவுகளில் கவிதை நயம் செறிந்த நீதியும் அதேபோல தீர்க்க தரிசனமும் இருந்தது. (22)

கனன் அதன் பின் தனது கவனத்தை, சோவியத் அதிகாரத்துவம் வகிக்கும் பாத்திரத்தின் பக்கம் திரும்பினார்.

ஸ்ராலினிசக் கிரிமினல்களின் கதியும் இதிலும் பார்க்க புகழ் மிக்கதாக இருக்காது. திகிலடைந்த உயர் இலட்சியம் அற்றவர்களும் (பிலிஸ்தின்களும்) மற்றும் சோர்வுவாதத்தை தமது வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டவர்களும், ஸ்ராலினிசத்திற்கு அளித்த உவகை வெல்லும் வரலாற்றுப் பணியானது முன்னர் பாசிசத்திற்கு அளிக்கப்பட்டனவற்றிலும் பார்க்க எவ்வகையிலும் கட்டற்ற பொருந்தாப் புனைவில் குறைவானது அல்ல. ஸ்ராலினிசம் விரிவு அடைவதில் அதன் மிகப்பெரும் வெற்றி வாகையைச் சூடியுள்ள தருணத்தில் அதை மரண நெருக்கடி மேற்கொண்டுள்ளது. யூகோஸ்லாவியாவின் எதிர் கிளர்ச்சி கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச ஆட்சி பரப்பினுள் நச்சுக் கடுப்புள்ள நோயாகப் பரவ ஆரம்பித்துள்ளது. --அது நாளை சீனாவிற்கும் பரவும்-- இது ஸ்ராலினிசம் விரிவடைதலுக்கான அல்லது உயிர்தப்புவதற்கான, உரிமையின் மேல் வரலாற்றின் மரண தண்டனையைக் கட்டியம் கூறுகின்றது. ஸ்ராலினிசம் அப்படியிருந்தும் விரிவடையுமாயின் அல்லது உயிர்தப்புமாயின் அது மனித இனத்தின் தளராத முன்னேற்றத்தில் ஏற்பட்ட ஒரு கோரமான இடைவெளியாகத்தான் இருக்கும்.

மனித இனம் சோசலிசத்தையும், சுதந்திரத்தையும் நோக்கி முன்னேறுகின்றதே ஒழிய காட்டுமிராண்டித் தனத்தையும், அடிமைத்தனத்தையும் நோக்கிப் பின்னேறவில்லை. இந்த வழியின் இடையில் நிற்க பாசிசத்திற்கோ அல்லது ஸ்ராலினிசத்திற்கோ எந்த ஒரு வரலாற்று உரிமையும் இல்லை. தொழிலாளர் இயக்கத்தின் கீழ்நிலை நோக்கிய வளர்ச்சிதான் ஸ்ராலினிசம். --பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான சகல நிலைமைகளும் அழுகும் அளவு பழுத்த நிலையில் அதை அளவுக்கு மிஞ்சி தடுத்து நிறுத்தியும் மற்றும் தாமதிக்கச் செய்ததினாலும் ஏற்பட்ட விளைபயன்தான் ஸ்ராலினிசம். பாசிசமோ அல்லது ஸ்ராலினிசமோ ''எதிர்காலத்தின் அலையை'' ப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை. இரண்டும் பிற்போக்கான மற்றும் நிலையாமை உடைய இயல் நிகழ்சிகளாகும். பாசிசமோ அல்லது ஸ்ராலினிசமோ வரலாற்றின் வளர்ச்சியின் பிரதான செல்வழியை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. இதற்கு எதிர்மாறாக அவை இதிலிருந்து விலகிச்சென்றனவையாகும். அவை அடுத்த காலனித்துவ கிளர்ச்சி எழுச்சிகளுடனும், பாட்டாளி வர்க்கப் புரட்சிகளினது மாபெரும் அலையுடன் துடைத்துக் கட்டியேயாக வேண்டும் என்பது மட்டுமல்லது அவை துடைத்தும் கட்டப்படும்.

கிழக்கு ஐரோப்பிய மற்றும் யூகோஸ்லாவிய வளர்ச்சிகளை மட்டுமல்லாது, வியட்நாமினது மற்றும் சீனாவினது வளர்ச்சிகளை நான்காம் அகிலம் "சரியாகக் கணிக்கத்தவறியது" என பண்டா கூறுவதற்குப் பதிலளிக்கும் வகையில் கனனினுடைய தனிச் சிறப்புக்குரிய சொற்பொழிவின் முடிவுறும் பகுதியிலிருந்து நாம் மேற்கோள் காட்டுவோமாக:

யுத்தத்தைப் பின் தொடர்ந்து தோன்றிய காலனித்துவ பரந்த மக்களின் ஈடு இணையற்ற பொங்கிய எழுச்சிகள் மேற்கத்தைய ஏகாதிபத்திய வல்லரசுகள் தொடர்ந்தும் தமது காலனித்துவ ஆதிக்கத்தைப் பேணவும் மற்றும் பாதுகாக்கவும் ஆற்றல் அற்றவை என்ற அதிர்ச்சியூட்டத்தக்க பலவீனத்தை எடுத்துக்காட்டின. கீழ்த்திசை நாடுகளின் பற்றி எரியும் வானில், ஏகாதிபத்தியத்தின் இறுதித்தீர்ப்பு துல்லியமாக எழுதப்பட்டுள்ளது. தன் வாழ்நாள் கடந்து வாழும் முதலாளித்துவத்திற்கு எங்கும் பாதுகாப்பான எதிர்காலம் இல்லை.

யுத்தம் முடிந்தவுடன் தோன்றிய காலப்பகுதியில், ஐரோப்பாவின் தொழிலாளர்கள் புரட்சி செய்ய அவர்களது இரண்டாவது சந்தர்ப்பத்தைப் பெற்றார்கள். இதற்கு அவர்கள் பெருமளவு தயாராகவும் இருந்தார்கள். மீண்டும் ஒரு முறை இந்த இலக்கை அடைய அவர்கள் தவறினார்கள் ஏனென்றால் அப்பொழுதும் போதுமான அளவு செல்வாக்குள்ள புரட்சிக் கட்சி போராட்டத்தை அணிதிரட்டி அதற்குத் தலைமை கொடுக்க அவர்களுக்கு இருக்கவில்லை. இதிலிருந்து வரவேண்டிய முடிவு என்னவென்றால், புரட்சியை ஒதுக்கித் தள்ளுபடியாக்குவதல்ல, ஆனால் அதை அணிதிரட்டி தலைமை கொடுத்து இட்டுச் செல்ல, புரட்சிக் கட்சியைக் கட்டுவதாகும். இங்கு நாம் இருப்பது அதற்காகத்தான்.

திவாலான முதலாளித்துவத்தின் நெருக்கடி தொடருகின்றது, அதன் பலவீனம் மேலும் உக்கிரம் அடைகின்றது; புதிய காலனித்துவ கிளர்ச்சிகள் என்றும் பிரமாண்டமான அளவாகக் கூடுகின்றன; முதலாளித்துவத்தின் பிரதான நாடுகளில் வேலை நிறுத்தங்கள் மற்றும் வர்க்கப் போராட்டங்கள் மேலும் கூடுகின்றன. நாம் நமக்கு பின்னேயுள்ள அரை நூற்றாண்டில் நடந்தேறிய சம்பவங்களின் ஓட்டப் போக்கிலிருந்து அறியக்கூடியதாய் இருப்பது இவைதான். இவைதான் வரும் வருடங்களின் முன்நோக்குகளாகும். இந்தப் போராட்டங்களின் பொழுது தொழிலாளர்கள் தமது சொந்த அனுபவங்களில் இருந்து மிகவும் இன்றியமையாத படிப்பினைகளை கற்றுக் கொள்வார்கள். அவர்கள் நயவஞ்சக ஸ்ராலினிசத்துடனும் மற்றும் சமூக ஜனநாயகத்துடனும் கணக்குகளை தீர்த்து, அவற்றைத் தொழிலாளர் இயக்கத்திலிருந்து விரட்டியபடிப்பார்கள். இந்த நூற்றாண்டிற்கு ஏற்ற புரட்சிக் கட்சிகளை இரத்தத்தையும், இரும்பையும் ஒன்றாய் உலையில் உருக்கி உருவாக்குவார்கள். அவர்களின் போராட்டங்களை இக்கட்சிகள் அணிதிரட்டி அவற்றை அவற்றின் புரட்சி இலக்கிற்கு இட்டுச் செல்லும்......

இந்த ஒப்புயர்வற்ற பணியைத்தான் வரலாறு இருபதாம் நூற்றாண்டிற்கு வகுத்துக் கொடுத்துள்ளது, அது நிறைவேற்றப்படும். வேலை நடந்து கொண்டு இருக்கின்றது, இலக்கு கண்களுக்குத் தென்படுகின்றது. உலகிற்கு அத்தியாவசியமான சமூக உருமாற்றத்தை இருபதாம் நூற்றாண்டின் முதல் அரைப்பகுதி கண்ணுற்றது. அது ஒரு வெற்றிகரமான முடிவிற்கு எடுத்துச் செல்லப்படுவதை இருபதாம் நூற்றாண்டின் இரண்டாவது அரைப்பகுதி காணும். சோசலிசம் உலகை வென்று, உலகை மாற்றி, அதைச் சமாதானத்திற்கும் மற்றும் சுதந்திரத்திற்கும் பாதுகாப்பானதாக ஆக்கும்.

**********************************************

குறிப்புகள்

1. சோசலிசத் தொழிலாளர் கட்சியின் தேசியக் கல்வித்துறை. சோசலிஸ்டுகளுக்கான கல்வி: வர்க்கம்; கட்சி, மற்றும் அரசும், கிழக்கு ஐரோப்பிய புரட்சியும், நவம்பர் 1969, பக்கம்-12.

2. அதே சுவடியில்

3. அதே சுவடியில், பக்கங்கள்12-13.

4. அதே சுவடியில், பக்கங்கள் 13-14.

5. அதே சுவடியில், பக்கம் 14.

6. அதே சுவடியில், பக்கம் 15

7. அதே சுவடியில், பக்கம் 16

8. லியோன் ட்ரொட்ஸ்கி மார்க்சிசத்தைப் பாதுகாக்க (லண்டன் நியூபார்க் வெளியீடுகள், 1971) பக்கம் 22

9. அதே சுவடி, பக்கம் 23

10. ட்ரொட்ஸ்கி, மார்க்சிசத்தைப் பாதுகாக்க பக்கம் 5

11. சோசலிசத் தொழிலாளர் கட்சியின் உள் சுற்று வெளியீடு, தொகுதி 11, எண் 5, அக்டோபர் 1949, பக்கம் 12

12. அதே சுவடி, பக்கம் 19

13. அதே சுவடி, பக்கம் 23

14. அதே சுவடி

15. அதே சுவடி, பக்கம் 25

16. அதே சுவடி பக்கங்கள் 25-27

17. அதே சுவடி பக்கம் 30

18. சோசலிசத் தொழிலாளர் கட்சி, சர்வதேச செய்திச் சுற்று டிசம்பர், 1949, பக்கம் 3.

19. ஜேம்ஸ் பி. கனன் சோசலிசத்திற்கான சொற்பொழிவுகள் (நியூ யோக் பாத் ஃபயிண்டர் அச்சகம், 1971) பக்கங்கள் 365-66

20. அதே சுவடி பக்கம் 372.

21. அதே சுவடி, பக்கம் 373-74.

22. அதே சுவடி, பக்கங்கள் 374-75.

23. அதே சுவடி, பக்கங்கள் 375-76.

24. அதே சுவடி, பக்கங்கள், 377-80.

See Also :

அத்தியாயம் 17 : நான்காம் அகிலத்தில் பிளவு

அத்தியாயம் 18: ஜேம்ஸ் பி. கனனின் "பகிரங்க கடிதம்"

Top of page