World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தோனேசியா

The political origins and outlook of Jemaah Islamiyah

ஜெமா இஸ்லாமியாவின் அரசியல் தோற்றமும், கண்ணோட்டமும்

பகுதி 1 | பகுதி 2 |பகுதி 3

By Peter Symonds
13 November 2003

Use this version to print | Send this link by email | Email the author

ஜெமா இஸ்லாமியா பற்றிய மூன்று பகுதித் தொடர் கட்டுரையில் இரண்டாம் பகுதியைக் கீழே கொடுத்துள்ளோம்.

இருபதாம் நூற்றாண்டு ஆரம்பத்தினுள் தனது வேர்களை கொண்டுள்ள, ஜெமா இஸ்லாமியாவின் வலதுசாரி இஸ்லாமியப் பார்வையின் மிகத்தீவிரமான வெளிப்பாடாக இருபத்தோராம் நூற்றாண்டில் இந்தோனேசியாவில் உள்ளது. முகமதுவினதும் அவரை பின்பற்றுவோரினதும் கருத்துக்களான புனிதமான இஸ்லாத்திற்கு திரும்புதல், 19ம் நூற்றாண்டுப் பிற்பகுதியில் மத்திய கிழக்கில், முதன் முதலாகத் தோன்றியது. பின்னர் இது காலனித்துவத்திற்கு எதிராக எழுந்த முதலாளித்துவ பிரிவினரின் பிரதிபலிப்பாக இந்தோனேசியாவில் வேரூன்றியது. "நவீன இஸ்லாம்" (தற்கால இஸ்லாம்) என அழைக்கப்பெற்ற இப்பார்வை, தத்துவ அளவில் சமய புத்துயிர்ப்பை, தற்கால அறிவியல், தொழில்நுட்பம் இவற்றின் முன்னேற்றங்களுடன் இணைத்து தொகுக்கும் முயற்சியில் முனைந்தது.

20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், நவீன இஸ்லாம் தொழிலாளிகளையும், நகர்ப்புற மத்தியதர வர்க்கத்தின் தட்டுகளையும் கவர்ந்த ஒரு பரவலான காலனித்துவ எதிர்ப்பு இயக்கமாக இருந்தது. ஆனால் கிராமப்புறங்களில் அது அதிகமாகச் செல்வாக்கு பெறவில்லை; அங்கு பெரும்பாலான மக்கள் கலவையான ஒரு இஸ்லாம் முறையை, இந்து மதக்கூறுபாடுகள், பெளத்தம், ஆவிவழிபாடு போன்றவற்றைக் கொண்டிருந்தனர். நவீன இஸ்லாமியத்தின் முற்போக்கான பிரிவினர் ரஷ்ய புரட்சிக்குப் பின்னர் எழுச்சிபெற்ற தேசிய இயக்கத்தினுள்ளும் இந்தோனேசியக் கம்யூனிஸ்ட் கட்சியிலும் இருந்தனர்.

இரண்டாம் உலகப்போர் காலத்தில், நவீன இஸ்லாமியம் ஒரு குறைந்தளவு வலதுசாரி பிரிவினராக, நகர்ப்புற சிறுமுதலாளித்துவ, பழமைவாத பிரிவினரிடையே ஆதரவைக் கொண்டிருந்தது. இப்பிரிவினர் இந்தோனேசியாவின் டச்சுக் காலனித்துவ ஆட்சியாளர்களால் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதாலும், ஜாவானியப் பிரபுக்கள், சீன வர்த்தகர்களும் பெற்றிருந்த சிறப்புச் சலுகைகள் பற்றி மிகவும் கசப்படைந்திருந்தனர். அதேநேரத்தில், அவர்கள் இந்தோனேசியக் கம்யூனிஸ்டுக் கட்சிக்கு தீவிர எதிர்ப்பு காட்டியதுடன், எழுச்சி பெற்று வந்த தொழிலாள வர்க்கத்தினால் எழுந்த அச்சுறுத்தல் பற்றியும் ஆழ்ந்த விரோதப் போக்கு கொண்டிருந்தனர்.

போருக்குப்பின்னர், இந்தோனேசியாவில் ஜப்பானியர் ஆக்கிரமிப்பின்பொழுது மஸ்யுமி (Masyumi) என்ற அமைப்பு முக்கிய நவீன இஸ்லாமியக் கட்சியாக தோன்றியது. இந்தோனேசியக் கம்யூனிஸ்டுக் கட்சிக்கும், மதச்சார்பற்ற தேசியவாதியாக விளங்கி, பல இஸ்லாமியக் கட்சிகளும், அமைப்புக்களும் ஷரியத் சட்டத்தை நாட்டின் அரசியலமைப்புடன் சேர்க்கும் முயற்சிகளை எதிர்த்திருந்த ஜனாதிபதி சுகார்ணோவிற்கும் இவ்வியக்கம் எதிரானதாக இருந்தது. சுகார்ணோ மக்களுடைய அமைதியற்ற நிலையை அடக்குவதற்கு தொடர்ந்து கூடுதலான இந்தோனேசியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் உதவியை நாடியதாலும், அதேநேரத்தில் பெய்ஜிங்கின் ஸ்ராலினிச ஆட்சியுடனும், அரசியல், நிதி உதவி பெற தந்திர உத்திமுறைகளைக் கையாண்டதாலும், மஸ்யூமியின் எதிர்ப்பு தீவிரமாயிற்று. 1958-59ல் சுமத்ராத் தீவில் குறுகிய காலத்திற்குச் செயல்பட்ட CIA ஆதரவழித்த எதிர்ப்பு அரசாங்கத்தில் அதன் தலைவர்கள் பங்குகொண்டதால் மஸ்யூமி தடைசெய்யப்பட்டது.

1940களில், அரசியல்வாதியாக இருந்து சமயகுருவாக மாறிய S. M. Kartosuwirjo, சுகர்ணோவிற்குத் தீவிரமான எதிர்ப்பாளர்கள் நிறைந்த, தாரூல் இஸ்லாம் இயக்கத்தை (Darul Islam movement) ஆரம்பித்தார். 1949 ஆகஸ்டு மாதம், கார்டோசுவிர்ஜோ, புதிதாக ஏற்படுத்தப்படுத்திருந்த சுகார்ணோவின் தலைமையிலான இந்தோனேசியக் குடியரசிற்கு எதிராக ஆரம்பித்து தன்னுடைய இந்தோனேசிய இஸ்லாமிய அரசு (Indonesian Islamic State-NII) என்ற தனிநாட்டிற்கு அழைப்புவிட்ட Aceh, Sough Sulewesi ஆகிய பகுதிகளில் ஏற்பட்டிருந்த பிராந்திய எதிர்ப்பியக்கத்துடன் இணைந்து செயல்பட்டார். தாரூல் இஸ்லாமின் போராளிகள் கடும் வெறுப்பு உணர்வுடன் ஜாகர்த்தாவுடன் தொடர்ந்த போரினால் 15,000-20,000 மக்கள் இறந்து போயினர். 1962 இல் தான், கார்டோசிவிர்ஜோ பிடிபட்டுத் தூக்கிலிடப்பட்ட பின்னர்தான், இந்த எதிர்ப்பு இறுதியாக முடிவிற்கு வந்தது.

மஸ்யூமி மற்றும் மறைவாக இருந்த தாரூல் இஸ்லாத்தின் எஞ்சிய பகுதியினர் உட்பட அனைத்து இஸ்லாமிய அமைப்புக்களும், 1965-66ல் CIA ஒழுங்கமைத்த ஆட்சிக்கவிழ்ப்பிற்கு மகிழ்ச்சியுடன் ஆதரவு கொடுத்தன. இதனால் சுகார்ட்டோவின் சர்வாதிகார ஆட்சி உருவாக்கப்பட்டது. அத்துடன் இவை அனைத்தும் கிட்டத்தட்ட 500,000 இந்தோனேசியக் கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்கள், தொழிலாளர்கள், கிராம மக்கள் ஆகியோரை பின்னர் படுகொலை செய்ததில் பங்கு கொண்டவை. தாரூல் இஸ்லாம் இயக்க படையினர் மேற்கு ஜாவாவில் சுபங் மாவட்டத்தில், தோட்டத் தொழிலாளர்கள் கொலையில் நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

"சுகார்ட்டோ ஜனாதிபதியாக இருந்தபோது முதல் பத்தாண்டுகாலம் அவருக்கு முக்கிய ஆலோசகராகவும் இருந்த சக்திவாய்ந்த உளவுத்துறையின் தலைவர் அலி மூர்டோபோ (Ali Murtopo) இந்தோனேசியாவின் புதிய ஒழுங்குமுறையின் தலைமைச் சிற்பி என சரியாகவே கருதப்படுகின்றார். தாரூல் இஸ்லாமின் சிலபிரிவினருடன் இவர் நல்ல தொடர்பு கொண்டிருந்தாரென்றும், அவர்கள் ஒரு இணைந்தகுழுக்களாக இரகசியமாக கம்யூனிஸ்டுகள் அல்லது மற்ற விரோதிகளுக்கு எதிராக தேவைப்படும்பொழுது பயன்படுத்தக்கூடிய முறையில் செயல்பட அனுமதித்தாரென்றும் கூறப்படுகிறது." என்று டச்சுக் கல்வியாளர், Martin vam Bruinessen தெரிவிக்கிறார். [Genealogies of Islamic Radicalism in post-Suharto Indonesia, July, 2002,p.7]

இஸ்லாமியக் கட்சிகளின் பணிகளைச் சுரண்டி ஆட்சிக்கு வந்தபோதிலும்கூட, சுகார்ட்டோ அவற்றின் ஷாரியச் சட்டமியற்றுதல், அவர்கள் சார்ந்திருந்த குறுகிய சமூக தட்டுகளுக்கு கணிசமான பொருளாதார, அரசியல் உரிமைகள் அளித்தல் போன்றவற்றைச் செய்யவில்லை. அவருக்கு முன்பு ஆட்சி செய்தவரைப்போலவே, சுகார்ட்டோவும், இந்தோனேசிய முதலாளித்துவப் பிரிவினரின் ஆதரவுடன் இராணுவத் தலைமையைக் கொண்டு, சுகார்ணோவால் கட்டுப்படுத்த முடியாதிருந்த தொழிலாள வர்க்கத்தினதும் மற்றும் விவசாயிகளினுதம் தீவிரமடைந்த தட்டுக்களை நசுக்கும் பணியை செய்து வந்த அரசியல் கருவியாகத்தான் இருந்து வந்தார்.

மஸ்யூமியின் கோரிக்கைகளைச் செயல்படுத்த, சுகார்ட்டோ மறுத்தமை இரண்டு எதிர்விளைவுகளைக் கொடுத்தது. மஸ்யூமியின் தலைவர்களில் சிலரும், அதன் இணை மாணவப்பிரிவான முஸ்லீம் மாணவர்கள் அமைப்பின் (HMI) சில பிரிவினரும், இராணுவத்தின் அரசியல் பிரிவாகிய கோல்கரோடு (Golkar) வெளிப்டையாகச் சுகார்ட்டோவின் கம்யூனிச விரோதத்திற்கு ஆதரவிற்காகச் சேர்ந்து செயல்பட்டனர். ஆனால், மற்றவர்கள் இஸ்லாமிய நாடு தோற்றுவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தத் தலைப்பட்டு மற்ற திசைகளில் திரும்பினர்.

இக்குழுவில் மிகமுக்கியமானவர்கள் Dewan Dakwah Islamiayah Indonesia (DDII) என்ற அமைப்பை உருவாாக்கி, அரசியலை விட மறைமுகமாக இஸ்லாமிய மதமாற்றத்திற்கான அமைப்பாக இயங்கியது. DDII மத்தியகிழக்கை நோக்கி சார்ந்து சவுதி அரேபியாவிலிருந்து தத்துவார்த்த மற்றும் நிதி உதவி பெற்றது. 1962ம் ஆண்டு, சவுதி ஆட்சி தன்னுடைய சொந்த இஸ்லாமிய அடிப்படை நெறியான வகாபியத்திற்கான (Wahhabism) அமைப்பாக உலக இஸ்லாமிய கழகத்தை, தீவிர தேசிய முதலாளித்துவத்துற்கு எதிராக தன்னுடைய எதேச்சிகார ஆட்சிக்கு முட்டுக் கொடுக்கும் வகையில் அமைத்தது. DDII இக்குழுவின் முக்கிய கூட்டாளியாக இந்தோனேசியாவில் செயல்பட்டதுடன், முன்னாள் மஸ்யூமியின் தலைவர் முகமத் நட்சிர் இதன் துணைத்தலைவராகவும் விளங்கினார்.

சுங்க்கரும் பஷீரும்

சுங்க்கரும் பஷீரும், மஸ்யுமி/DDII உடன் இணைந்த மிகத்தீவிர பிரிவினராவர். இவர்கள் இருவரும் தாருல் இஸ்லாம் கிளர்ச்சியிலிருந்து தங்களுக்கு தேவையான ஊக்கத்தைப் பெற்றிருந்து, நவீன இஸ்லாமுடனும் வலுவான தொடர்பு கொண்டிருந்தனர். இருவருமே, 1930களில் ஜாவாவில் பிறந்து தற்காலத்திய பள்ளிகளில் பயின்றவராவார்கள். 1950களில் கெரகன் பெமுடா இஸ்லாம் இந்தோனேசியா (Gerakan Pemuda Islam Indonesia -GPII) என்ற மஸ்யூமாவுடன் தொடர்பு கொண்டிருந்த மாணவர் குழுவிற்குத் தலைவர்களாக இருந்தனர். இருவரும் ஒருவரை ஒருவர் 1963ல் சந்தித்து ஒத்துழைத்துச் செயல்பட ஆரம்பித்தனர்.

வெளிப்படையான காரணங்களுக்காகவே, இருவரும் தங்கள் தலைமறைவு இயக்கத்துடனான தொடர்பைப் பற்றிப் பொதுவில் ஒப்புக்கொள்ளுவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தனர். தாருல் இஸ்லாமுடன் அவர்கள் தொடர்பு வைத்திருந்தனர் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை என்பதோடு, அதன் இஸ்லாமிய நாடு அமைப்பதற்கான இராணுவப்போராட்டத்திற்கும் ஆதரவு கொடுத்தனர். 1997ம் ஆண்டு ஆஸ்திரேலிய தளத்தையுடைய இஸ்லாமிய மாணவர் இதழான Nida'ul Islam க்குக் கொடுத்த பேட்டியில், சுங்க்கர், கார்டோசுவிர்ஜோவைப் புகழ்ந்து வரவேற்றதுடன், ஜெமா இஸ்லாமிய உடைய மூலங்கள் தாருல் இஸ்லாமிலிருந்து வருவதாக காண்பித்து, ஜிகாத் பிரகடனத்தை விடுத்துடன், சுகார்ட்டோவின் ஆட்சிக்கு எதிராக போராட்டத்திற்கு Quwwatul Musallaha (இராணுவபலம்) அமைப்பு உட்பட முக்கியமானது எனக் கூறினார்.

1965-66 ஆட்சி வீழ்ச்சிக்குப் பின்னர், DDII உடைய மத்திய ஜாவாக்கிளையின் தலைவராக சுங்க்கர் இருந்துடன் பஷிர் வெளிப்படையாக ஓர் இஸ்லாமிய நாட்டிற்காகப் பிரச்சாரத்தை மேற்கொண்டார். 1967ல் இருவரும் சோலோவில் ஒரு வானொலி நிலையத்தையும், 1971ல் ஒர் இஸ்லாமியப் பள்ளியையும் நிறுவினர்; இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவை இப்பொழுதுள்ள என்க்ரூகி கிராமத்திற்கு மாற்றப்பட்டன. சுகார்ட்டோ குழுவினரின் மதச் சார்பற்ற நாட்டையும், அதன் கொள்கையான பஞ்ச சீலத்தையும் (ஐந்து கொள்கைகளான, கடவுள்மீது நம்பிக்கை, நீதி, தேசியம், ஜனநாயகம், சமூக நீதி) ஏற்க மறுத்ததால், அவருடன் முரண்பட நேர்ந்தது.

உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு 1975ல், அரசாங்க எதிர்ப்புப் பிரச்சாரத்தை செய்ததற்காக இந்த வானொலி நிலையத்தை மூடிவிட்டது. 1977ல் சுங்க்கர், தேசியத் தேர்தல்களில் மக்களை வாக்களிக்கக் கூடாது என்று வலியுறுத்தியதற்காக ஆறு வாரங்கள் சிறையில் அடைத்து வைத்திருந்தது.

சுங்க்கர், பஷீர் இருவருமே 1978 நவம்பரில் கைதுசெய்யப்பட்டனர்; ஹாஜி இஸ்மாயில் பிரனோடோ (Haji Ismail Pranoto) என்ற மேற்கு ஜாவாவின் மூத்த தாருல் இஸ்லாமியத் தளபதியோடு தொடர்பு இருந்ததாகவும், அரசாங்கத்தில் கொமாண்டா ஜிகாத், அல்லது ஜெமா இஸ்லாமியா எனவும் அழைக்கப்பட்ட போராளிக்குழுவிடம் தொடர்பு கொண்டிருந்ததாகவும் குற்றச்சாட்டிற்கு உட்படுத்தப்பட்டனர். இந்த விவகாரம் முழுவதுமே எந்த அளவிற்கு அமெரிக்க ஆதரவுடைய சுகார்ட்டோ குழு தன்னுடைய நோக்கங்களுக்காக வலதுசாரி முஸ்லீம் இயக்கங்களைத் தன் விருப்பப்படி மறைமுகமாக ஆட்டிவைக்க முடிந்தது என்பதைப் புலப்படுத்துகிறது. சுகார்ட்டோவுடனும் மற்றும் இராணுவத்துடனும் இவர்களுக்கு எவ்வளவு வேறுபாடுகள் இருந்தபோதிலும், இந்த மதத்தீவிரவாதிகள் தொழிலாள வர்க்கத்துடனும், ஸ்ராலினிச இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சியால் அரசியல் சீரழிவுக்குள்ளாக்கப்பட்டிருந்த போதிலும் சோசலிசம் மற்றும் மார்க்சிசத்துடனான ஏதாவது ஒரு தொடர்புக்கும்கூட எதிரான தமது வர்க்க எதிர்ப்பை அவர்களுடன் பங்குபோட்டுக்கொண்டனர்.

1970ன் கடைசி ஆண்டுகளில், சுகார்ட்டோவும், இராணுவத்தினரும், வலதுசாரி முஸ்லிம் அமைப்புக்கள், அரசியல் எதிர்ப்புக்களுக்கு வடிகாலாகப் போய்விடக்கூடாது என்ற கவலையில் தொடர்ந்து ஆழ்ந்திருந்தனர். சர்வதேச நெருக்கடிக் குழுவின் (ICG) அறிக்கையின்படி, உளவுத்துறைத் தலைவர் மூர்டோபோ, தாருல் இஸ்லாமில் தன்னுடைய தொடர்புகளைப் பயன்படுத்தி ஒரு பெரிய தொடர் நடவடிக்கையைத் திட்டமிட்டார். உளவுத்துறை அமைப்பான BAKIN, 1975ல் வியட்நாமில் அமெரிக்கா தோல்வியுற்றதை அடுத்து, புத்துயிர் பெற்ற கம்யூனிசத்தின் ஆபத்துக்களுக்கு எதிராகச் செயல்படுவதற்காக ஓர் ஆயுதமேந்திய போராளிக்குழு கொமாண்டோ ஜிகாத் அமைக்கப்படுவதை தீவிரமாக ஆதரித்தது. ஆனால் அதன் உண்மையான நோக்கம், இஸ்லாமியப் போராளிகளை அடையாளம் கண்டு பொறிக்குள் சிக்கவைத்து இஸ்லாமிய அரசியல் கட்சிகளையும், அமைப்புக்களையும் மதிப்பிழக்க செய்யவேண்டும் என்பதுதான்.

1979ன் மத்தியபகுதியில், பாதுகாப்பு படையினர் கொமாண்டோ ஜிகாத் தலைவர்களெனப்பட்ட பிரனோடோ மற்றும் ஹாஜி தனு மகம்மது ஹசன் உட்பட 185 பேரை வளைத்துப்பிடித்தது. ஹாஜி தனு மகம்மது ஹசன் நீதிமன்றத்தில், தான் BAKIN ஆல் சேர்க்கப்பட்டதாகக் கூறினார். கம்யூனிச அச்சுறுத்தல்களுக்கு எதிராக, பழைய தாருல் இஸ்லாம் உறுப்பினர்களை அழைக்குமாறு இராணுவம் தனக்கு உத்திரவு இட்டதாகவும் தெரிவித்தார். மூர்டோபோவின் இந்த நடவடிக்கையினால் சுங்கரும், பஷீரும் வலையில் விழுந்து மறு ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தான் பிரனோடோவைச் சந்தித்ததை நீதிமன்றத்தில் சுங்க்கர் ஒப்புக்கொண்டாலும், தாருல் இஸ்லாமிற்காக உறுதிமொழி எடுத்துக்கொண்டதாகக் கூறப்படுவதை மறுத்துவிட்டார். பிரனோடோ நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்படவில்லை; அரசாங்கம் அவருக்கு எதிரான வழக்கிற்கு முற்றிலும் சுங்கரும், பஷீரும் விட்ட பகிரங்க அறிக்கைகளில் தங்கியிருந்தது.

இக்காலகட்டத்தில் இவர்களுடைய செயல்களின் சரியான தன்மை தெளிவற்றதாக உள்ளது; எந்த அமைப்பில் இருந்தார்கள் என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. சர்வதேச நெருக்கடிக் குழு விளக்கியுள்ளதுபோல், "1979 இறுதியில், ஜெமா இஸ்லாமிய, ஒரு அரசாங்கக் கருவியா அல்லது தாருல் இஸ்லாமுடைய புத்துயிர்ப்பா அல்லது தெளிவற்றநிலையில் ஒரேமாதிரியான கருத்துக்களை உடைய முஸ்லீம்களின் கூட்டமா அல்லது சுங்க்கர், பஷீர் ஆகியோரின் தலைமையின்கீழ் இயங்கிவந்த அமைப்பா எனத் தெளிவில்லை. ஒருவிதத்தில், இந்த எல்லாத் தன்மையையும் கொண்டிருந்தது; இப்பெயர் பலருக்கும் பலவிதமான கருத்துக்களைத் தெரிவித்தது." [Al Qaeda in South East Asia: the case of the 'Ngruki Network' in Indonesia, August 2002, p.8]

பஷீரும், சுங்க்கரும் குற்றவாளிகள் எனத்தீர்மானிக்கப்பட்டு அவர்களுக்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் மூன்று ஆண்டுகளுக்குள்ளேயே, மேல்முறையீட்டில் சிறைக்காலம் குறைக்கப்பட்டு 1982ல் விடுதலை அடைந்தனர். 1985ல் இந்தோனேசியத் தலைமை நீதிமன்றம், மேல்முறையீட்டுமன்றத்தின் தீர்ப்பை விலக்கி முதலில் கொடுக்கப்பட்ட தண்டனையை மீண்டும் சுமத்தவே இவர்கள் நாட்டைவிட்டு ஓடி மலேசியாவில் தஞ்சம் புகுந்து 1999 வரை அங்கேயே இருந்தனர்.

CIA இன் சோவியத்-எதிர்ப்பு ஜிகாத்

வாஷிங்டனின் றேகன் நிர்வாகத்திற்கான சில செயல்களில் ஈடுபடாவிட்டால், சுங்க்கரும், பஷீரும் இன்னும் இரண்டு முதிய இந்தோனேசிய அகதிகளாகவே குமுறிக் கொண்டும் சுகார்ட்டோவிற்கு எதிராகச் சதிசெய்துகொண்டும் இருந்திருப்பர். CIA அப்பொழுதுதான் ஆப்கானிஸ்தானத்தில் சோவியத் ஒன்றியத்தின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக சர்வதேச இஸ்லாமியத் தீவிரவாதப்படை ஒன்றைத் திரட்டிய 'மறைமுக' நடவடிக்கை ஒன்றை தீவிரப்படுத்த இருந்தது.

சோவியத் ஒன்றியத்தின் இராணுவத்தை வெற்றிபெற முடியாத கொரில்லாப் போரில் திணறச் செய்துவிடும் வாஷிங்டனுடைய நோக்கம், பல அரசியல் பிற்போக்கு சக்திகளுடைய நலன்களின் திரட்டோடு இசைந்து நின்றது. பாகிஸ்தானின் சர்வாதிகாரியான தளபதி ஜியாவுல் ஹக் தன்னுடைய நாட்டைத் தளமாகப் பயன்படுத்த ஆர்வத்துடன் அனுமதித்தார். இதனால் தன்னுடைய இஸ்லாமியப் பெருமைக்கு மரியாதையும், அமெரிக்க ஆதரவும் கிடைக்கும் என்ற கருத்து அவருடையது ஆகும். சவுதி ஆட்சி வாஷிங்டனுடைய பில்லியன்களுடன் தன்னுடைய பணத்தையும் அள்ளி வீசியது. ஈரானியப் புரட்சிக்குப் பின்னர், அப்புரட்சியினால் விளையக்கூடிய எதிர்ப்புக்களை சமாளிக்கும் வகையிலும், தங்கள் நாட்டில் மதிப்புக்குறைவை சீரமைக்கும் வகையிலும் இவ்வாறு அது செயல்பட்டது. எல்லாவிதமான தீவிரவாதக் குழுக்களும் பணம் பெறவும், ஆயுதங்கள், பயிற்சி பெறவும், தங்கள் செல்வாக்கைப் பெருக்கிக் கொள்ளவும் ஆப்கானிய ஜிகாத்திற்கு அணிதிரண்டு நின்றன.

தங்களுடைய மலேசியத் தளத்திலுருந்து, சுங்க்கரும் பஷீரும் இவ்வாய்ப்பை இருகைகளாலும் பற்றியிழுத்துக் கொண்டனர். "புனிதப்போருக்காக" வீரர்கள் திரட்டியது அவர்களுடைய குழு மட்டும் இல்லை. ஆனால், சவுதி அரேபியாவிலுருந்து பணமும் ஆதரவும் பெற்றதில் இருவருக்கும் கூடுதலான நன்மையே கிடைத்தது. DDII உடன் அவர்களுடைய தொடர்பு, அதன் மூலம் இஸ்லாமிய உலக கழகத்திடம் தொடர்பு இவையெல்லாம் இப்பொழுது பலனளித்தன. டச்சுக்கல்வியாளர் Van Bruinessen விளக்குகிறார்; ''உச்ரா இயக்கத்தில் (Usrah movement) நெருங்கிய தொடர்புடையோரின் (பஷிரும், சுங்க்கரும் இவ்வாறு கருதப்படுகின்றனர்) கருத்தின்படி, ஒரு சவுதி ஆள் சேர்க்கும் அதிகாரி 1984 அல்லது 1985ல் இந்தோனேசியாவிற்கு வந்து சுங்க்கருடையதையும், மற்றொரு தாருல் இஸ்லாம் தொடர்புடைய குழுவையும்தான் உறுதியான, கட்டுப்பாடு நிறைந்த (ஜெமா), ஜிகாத் நடத்தக்கூடிய ஆற்றல் படைத்த இஸ்லாமியக் குழுக்கள் எனக் குறிப்பிட்டார். [The violent fringes of Indonesia's radical Islam, December 2002, p.5].

ஒரு சமீபத்திய சர்வதேச நெருக்கடிக் குழுவின் Jemaah Islamiyah in South East Asia: Damaged but still Dangerous என்ற அறிக்கையின்படி, ஜெமா இஸ்லாமியா குழுவின் 200க்கும் மேற்பட்டவர்கள் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். பெரும்பாலானவர்களைப் பொறுத்தவரையில் இஸ்லாமிய உலகக்குழு அவர்கள் செலவுத் தொகையை ஏற்றுக்கொண்டது. அவர்கள் அனைவருமே அப்துல் ரசூல் சய்யிப் தலைமையிலான முஜாஹதீன் பிரிவில் இருந்த இராணுவ முகாம்களில் பயிற்சி பெற்றனர். அவர் வகாபி இயக்கத்தைச் சேர்ந்து அதற்குப் போராடியபோது, சவுதி அரேபியாவுடன் மிக நெருங்கிய தொடர்பும் கொண்டிருந்தவர் ஆவார். அவ்வியக்கத்தின் செயல்கள்பற்றிய ஒருங்கிணைப்பு பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானத்திலும் ஒசாமா பின் லேடன் உட்பட பலரால் நடத்தப்பெற்றன.

1980களில் சுகார்ட்டோ, இஸ்லாமிய இயக்கங்களை இல்லாதொழிக்க முயன்றது சுங்க்கருக்கும், பஷீருக்கும் நிறைய புதிய போராளிகள் சேர வாய்ப்பினை அளித்தது. தன்னுடைய இராணுவ அமைப்பையே ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்துடன், சுங்க்கர், நன்கு படித்தவர்களைத் தேர்ந்து எடுத்தார். சய்யாபின் முகாம்களில் பயிற்சி பெற்றவர்கள் மூன்று ஆண்டுகள் கடுமையான இராணுவ, தத்துவார்த்த பயிற்சி பெற்றனர். இந்தோனேசியர்கள், தாய்லாந்தினர், மலேசியநாட்டினர், பிலிப்பினோக்கள் ஆகியோருடன் குழுக்களாக இணைக்கப் பெற்றனர். இதையொட்டி அப்பகுதியில் உள்ள இஸ்லாமியத் தீவிர வாத அமைப்புக்களிடையே முக்கிய தொடர்புகள் ஏற்பட்டன --குறிப்பாகப் பிலிப்பினோ தனிநாட்டிற்கான போராளிக்குழு, மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணி (MILF), அபு சயாவ் அமைப்பிலிருந்து பிரிந்து சென்றவை போன்றவை இதில் அடங்கும்.

ஏதோ, விளங்கிக் கொள்ளமுடியாத மாக்கியவல்லியின் சதித் திட்டம் போல ஜெமா இஸ்லாமியா தோன்றியது என்று செய்தி ஊடகங்கள் கூறுவது அபத்தமானவை ஆகும். CIA இன் அழுக்குப் பிடித்த செயல்கள் ஆப்கானிஸ்தானில் நடந்திராவிட்டால் ஜெமா இஸ்லாமியாவோ, அல் கொய்தா தோன்றியிருக்கவே முடியாது. சோவியத்திற்கெதிரான போர் பணத்தையும் பயிற்சியையும் அளித்தது மட்டுமல்லாது, கட்டமைப்பு அற்று இருந்த பல சர்வதேச அமைப்புக்கள் நல்ல தொடர்பு கொண்டு வருங்காலத்தில் எவ்வாறு அவை இணைந்து செயல்படமுடியும் என்பதும் பலப்படுத்தப்பட்டது. மேலும் இதில் பங்குபெற்ற அமைப்புக்களுக்கு ஒரு சக்திமிக்க அங்கீகாரமும் கிடைத்தது. இவை தென்கிழக்கு ஆசியாவிற்குத் திரும்பிய பின்னர், வாஷிங்டனின் "விடுதலை வீரர்கள்", இஸ்லாமிய வட்டத்திற்குள் பெரும் சிறப்புடன் போற்றப்பட்டனர். இந்தோனேசியாவில், அவை தங்கள் மூத்த அமைப்பைக்கூட நிறுவிக் கொண்டனர் -Group 272- என, எண்கள் மொத்த பழைய விடுதலை வீரர்களைக் குறிக்கிறது.

சர்வதேச நெருக்கடிக் குழு விளக்குகிறது: "ஜெமா இஸ்லாமியாவின் உயர்தலைவர்கள், பலர் ஜெமா இஸ்லாமியா குண்டுவீச்சுக்களில் தொடர்பு உடையவர்கள், ஆப்கானிஸ்தானில் 1985-95 என்று பத்தாண்டுகள் பயிற்சி பெற்றவர்கள் ஆவார். ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற ஜிகாத் அவர்களுடைய உலகப் பார்வையை உருவாக்கியதோடு, ஜிகாத்திற்கு காட்டிய தீவிரத்தை இன்னமும் அதிகப்படுத்தியதுடன் நன்கு கொலை செய்யும் திறனையும் வளர்த்தது. ஆப்கானிஸ்தானிற்கு போராளிகளை அனுப்பிவைத்தல் ஜெமா இஸ்லாமியா தோன்றுவதற்கு 7 ஆண்டுகள் முன்பே தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். பல விதங்களிலும் 1992ல் முறையான இவ் அமைப்பு தோன்றியது. இது ஏற்கனவே இருந்த வலைப்பின்னலை நெறிப்படுத்தி ஒன்றிணைப்பு செய்தது ஆகும்." [Jemaah Islamiyah in South East Asia: Damaged but still Dangerous, August, 2003, p.2].

1980களின் அமெரிக்காவின் முக்கிய உடைமைகள், 1990களில் அமெரிக்க எதிர்ப்பு பயங்கரவாத அமைப்புக்களாக எவ்வாறு மாறின என்பது, எல்லாவற்றையும்விட ஓர் அரசியல் பிரச்சினையாகும். 1960களில் CIAஉம் இந்தோனேசிய இராணுவமும் இஸ்லாமியப் பிரிவுகளிடையே இருந்த வேறுபாடுகளைச் சுரண்டி தொழிலாளர்களையும், கம்யூனிஸ்டுகளையும் கொன்றனரோ, அதுபோல் ஆப்கானிஸ்தானிய செயல்பாடுகளும் சூழ்நிலைக்கு ஏற்ப நடத்தப்பட்டவை. சோவியத் ஒன்றியம் சரிந்தவுடன், காபூலில் 1992ல் அதன் கைப்பாவை அரசாங்கமும் சரிந்தது. சோவியத்-எதிர்ப்பு "ஜிகாத்" உடன் ஒத்துழைத்தவர்கள், பலநாடுகளில் உள்ள அதிருப்தியடைந்த முதலாளித்துவ பிரிவுகளைச் சேர்ந்தவர்களாவர். ஆப்கான் போரின்போது அமெரிக்க நலன்களோடு இசைந்து நின்ற இவர்களுடைய வர்க்க நலன்கள், போர் முடிந்தவுடன் வெவ்வேறு திசைகளில் செல்லத் தலைப்பட்டன.

உலக சோசலிச வலைத் தளத்தினுடைய ''What is bin Ladenism?" என்ற கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது போல்; "அல் கொய்தா, ஒடுக்கப்பட்ட, ஆனால் அரசியல் ரீதியாக குழப்பம் அடைந்திருக்கும் மக்களுடைய அவாக்களை வெளிப்படுத்தும், குழப்பமுற்ற விடுதலைப் போராளிகளின் அரசியல் இயக்கம் அல்ல. தன்னுடைய அரசியல் கருத்துக்களிலும், நடவடிக்கைகளிலும் பின் லேடன் பொதுவாக சவுதி அரேபியா, மத்திய கிழக்குப் பகுதிகளில் உள்ள அதிருப்தியடைந்த மற்றும் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்ட தேசிய முதலாளித்துவ பிரிவைப் பிரதிபலிக்கிறார். இந்தச் சலுகைமிக்க தட்டின் அதன் செயல்களில், ஏகாதிபத்தியத்தால் முறையாக நடத்தப்படவில்லை என்று கருதுவதோடு, அதன் பேரவாக்களின்மீது சுமத்தப்படும் வரம்புகளைக் கண்டும் மனம் குமுறுகிறது''.

1990-91இல் அமெரிக்கத் தலைமையிலான வளைகுடாப் போரின்போது, வாஷிங்டனுடனான பின் லேடன் போக்கில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது. ஈராக்கிய மக்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறிமிகுந்த இராணுவத்தாக்குதல் பற்றியோ, பாத்திஸ்டுகள் மீதான தாக்குதல்கள் பற்றியோ அவருக்கு ஆட்சேபனையும் இருக்கவில்லை. இரண்டையுமே, மதசார்பற்ற தன்மை காட்டியதற்காக அவர் எதிர்க்கத்தான் செய்தார். அப்பொழுது அவருடைய எதிர்ப்பிற்கு காரணம் "சமய நெறியற்ற" அமெரிக்கப் படைகள் புனிதமான மெக்கா, மெதினா நகரங்களில் நிறுத்தப்பட்டது ஆகும். சவுதிய ஆட்சி வாஷிங்டனுடைய நலன்களுக்கு தன்னை மிகவும் நேரடியாக அடிபணிய செய்கின்றது என்ற சவுதி அரேபிய, மத்தியகிழக்கு ஆளும் தட்டினரின் கருத்தைத்தான் வெளிப்படுத்தினார்.

எப்பொழுது, எவ்வாறு வாஷிங்டனுக்கும் அதன் பழைய இஸ்லாமியக் கூட்டாளிகளுடன் உண்மையிலேயே இறுதியாகப் பிளவு நிகழ்ந்தது என்பது தெளிவாக்கப்படவில்லை. 1993-94ல் பாகிஸ்தானும், சவுதி அரேபியாவும் ஆப்கானிஸ்தானில் தலிபான் இராணுவப் போராளிகளின் ஆட்சியை ஏற்படுத்தியதை உட்குறிப்பாக அமெரிக்கா ஆதரித்தது; இதற்குக் காரணம் அந்நாட்டில் ஒழுங்கு பராமரிக்கப்படுவதற்கும், பழைய சோவியத் ஒன்றியத்தின் மத்திய ஆசியப்பகுதிகளுக்கு செல்வம் கொழிக்கச் செய்யக்கூடிய எண்ணெய் குழாய்களை நிறுவுவதற்குத்தான். அமெரிக்கா, ஆப்கான் முன்னாள் படையினர், செச்செனியாவிலும், மேற்கு சீனத்திலும் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றியும், அவர்களை விடுதலைக்குப் போராடுபவர்கள் எனக்கூறுவதா அல்லது பயங்கரவாதிகள் எனக் கண்டனத்திற்கு உட்படுத்துவதா என இருமனப் போக்கைத்தான் கொண்டுள்ளது. ஆனால், நேரடியாகவோ, மறைமுகமாகப் பாக்கிஸ்தான் அல்லது சவுதி அரேபிய உளவுத்துறையினர் மூலம் ஆப்கானியப் போர் முடிந்து பலநாட்களாகியும்கூட தனது ஆப்கானிய "சொத்துக்களுடன்" CIA தொடர்பு வைத்துக்கொண்டுதான் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

தொடரும்........

Top of page