World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

No to war against Iraq
Editorial of Gleichheit, magazine of the Socialist Equality Party of Germany

ஈராக்கிற்கு எதிராக போர் வேண்டாம்

ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் சஞ்சிகையின் ஆசிரிய தலையங்கம்

8 January 2003

Use this version to print | Send this link by email | Email the author

ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் சஞ்சிகையான சமத்துவம் (Gleichheit) தனது தனது ஜனவரி- பெப்ரவரி இதழில் எழுதியுள்ள தலையங்கம் வருமாறு:-

Gleichheit சஞ்சிகையின் இந்தப் பதிப்பு அச்சகத்திற்குச் செல்லுகின்ற இந்த நேரத்தில், உடனடியாக ஈராக் மீது இராணுவத் தாக்குதல் தொடுப்பதற்கு அமெரிக்கா முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறது. அத்தகைய முன்னேற்பாடு மும்முரமாகி வருகிறது என்பதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. டிசம்பர் இறுதியில், அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பெல்டு கூடுதலாக 50,000 அமெரிக்க துருப்புக்களை வளைகுடாவிற்கு அனுப்பக் கட்டளையிட்டார். அங்கு ஏற்கனவே அமெரிக்கத் துருப்புகள் நிலை கொண்டுள்ளன. அவற்றுடன், சேர்த்து தற்போது அமெரிக்கத் துருப்புக்களின் எண்ணிக்கை ஒரு இலட்சமாகும். பெப்ரவரியில் போர் ஆரம்பமாகும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக பத்திரிகைகள் அனுமானிக்கன்றன.

உடனடியாக வெடிக்கவிருக்கும் போரின் நிலை குறித்து கோடிக்கணக்கான மக்கள் கவலையடைந்திருக்கின்றனர். உலகின் கண்களின் முன் ஒரு சீரழிவை மெதுவாக அசையும் (slow motion) படமாகக் காட்டுவதற்கு முயற்சி நடப்பது போலுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுத பரிசோதகர்கள் போருக்கான சிறிய ஆதாரத்தைக்கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள், தற்போது ஐ.நா பாதுகாப்பு சபையின் இராஜதந்திர பேச்சுப்பட்டறை கலந்துகொண்டு போலிச்சாட்டுக்கான ஆதாரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட நோக்கங்களுக்கு மாறாக பல மாதங்களுக்கு முன்னரே போர் தொடுப்பதற்கு அமெரிக்கா திட்டமிட்டுவிட்டது.

பாரசீக வளைகுடாவிலும், காஸ்பியன் கடற்பகுதியிலும் எண்ணெய் உற்பத்தி செய்யும் பிராந்தியங்களை தனது மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வருவது உள்நாட்டு பொருளாதாரத்திற்கும், சர்வதேசரீதியில் முதலாளித்துவ அமைப்பை ஆதிக்கம் செலுத்துவதற்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அமெரிக்கா கருதுகின்றது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாயத்தை வகுப்பவர்கள் இதுபோன்ற எண்ணெய் விநியோகம் மீது அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துவது அமெரிக்காவின் ஆளும் வர்க்கத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால போட்டியாளர்களை சமாளிப்பதற்கு வழிவகை செய்யும் என்று கருதுகிறார்கள். தனது இராணுவ வலிமையை நிலைநாட்டுவதன் மூலம் உலக அளவில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று அமெரிக்க மேலாதிக்க மூலோபாயத்தை வகுப்பவர்கள் விவாதித்து வருகின்றனர்.

கடந்த பத்தாண்டுக்கு சற்று அதிகமான காலகட்டத்தில் அமெரிக்கா பாரசீக வளைகுடாவிலும், யூகோஸ்லோவியாலும், ஆப்கானிஸ்தானிலும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு, தற்போது நான்காவது முறையாக பாரிய இராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதற்கு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

இவ்வாறு அமெரிக்கா மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை அதன் வலிமையின் வெளிப்பாடல்ல, மாறாக அமெரிக்க சமுதாயத்திலும், ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்பு முறையிலும் ஏற்பட்டுள்ள மிகப்பெரும் நெருக்கடிகளின் வெளிப்பாடுதான். உண்மையிலேயே சர்வதேச அளவில் அமெரிக்காவின் அளப்பரிய பூகோள நோக்கங்களுக்கும் அமெரிக்காவின் பொருளாதார வளங்களுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது.

வரலாற்று அடிப்படையில் ஆராய்ந்தால் அமெரிக்கா 57-ஆண்டுகளுக்கு முன்னர், இரண்டாவது உலகப்போர் முடிவில் இருந்ததைவிட தற்போது பொருளாதார அடிப்படையில் மிக பலவீனமாகிவிட்டது. அந்த நேரத்தில் அமெரிக்காவின் அன்றைய முதலாளித்துவ எதிரி நாடுகளைவிட அமெரிக்க மகத்தான இராணுவ வலிமைபெற்றதாக விளங்குகிறது. அப்போது அமெரிக்காவின் இராணுவ வலிமை, உலக முதலாளித்துவத்தில் அதனது பொருளாதார நிலைமையைவிட முக்கியத்துவம் குறைந்ததாக இருந்தது. அந்த நேரத்தில் முதலாளித்துவத்தின் உற்பத்தி திறனில் 75% அமெரிக்காவின் எல்லைகளுக்குள்ளேயே இடம்பெற்றிருந்தது.

அமெரிக்காவின் இராணுவ வலிமை எப்படியிருந்தாலும் இன்றைய அமெரிக்காவின் சர்வதேச நிலைமை மிகப்பெரும் அளவில் மாறுப்பட்டதாக உள்ளது. ஐரோப்பிய நாடுகள், சீனா மற்றும் ஜப்பான் முதலிய நாடுகள் எந்த நேரத்திலும் தன்னை மிஞ்சி சென்றுவிடக்கூடும் என்ற பீதியின் காரணமாக அமெரிக்கா அரசாங்கம் பரபரப்பாகவும், தீவிரமாகவும் நடவடிக்கை எடுக்கும் கொள்கைகளை உருவாக்கி வருகிறது. பொருளாதார வீழ்ச்சியின் விளைவுகளை சமாளிக்கவும், அமெரிக்க சமுதாயத்தில் குழப்பத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுகளை, வர்க்க ரீதியிலான ஏற்றத்தாழ்வுகளை சமாளிப்பதற்கு புஷ் நிர்வாகம் தனது இராணுவ வலிமையை பயன்படுத்த விரும்புகிறது.

90களில் அமெரிக்க முதலாளித்துவ உற்பத்தித்திறனில் மகத்தான மறுமலர்ச்சி ஏற்பட்டிருப்பதாக தங்களுக்கு தாங்களே மனநிறைவிற்காக கூறிக்கொண்ட சமாதானத்தை பொய்யாக்குகின்ற வகையில் வோல்ஸ்டீர்ட் பங்கு சந்தையில் மிகப்பெரிய நெருக்கடி உருவாயிற்று. அந்த நெருக்கடிகளை ஆராயும்போது கடந்த 20 ஆண்டுகளில் நிதி சொத்துக்கள் அசாதாரணமான முறையில் பிரயோசனமற்றதாக்கப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகின்றது. பல்லாயிரம் கோடி டொலர்கள் எந்த விதமான உற்பத்திக்கும் பயன்படாத வகையில் ஊகவாணிபத்தில் ஈடுபடுத்தப்பட்டன. இவற்றில் மிகப்பெரும்பாலான முதலீடுகள் முழுக்க முழுக்க வீணாக்கப்பட்டவை. பொருட்கள் உற்பத்தியில் இருந்து அந்நியப்பட்டு ஊகவாணிப நடவடிக்கைகளூடாக போலியான பெறுமதியை உருவாக்குவது அமெரிக்க முதலாளித்துவத்தினதும், அதன் ஆளும் தட்டின் போலியான சமூக தன்மை மீதும் முக்கிய தாக்கத்தை உருவாக்கிவிட்டது.

நிறுவனங்களின் நடவடிக்கைகள் மிகப்பெரும் அளவிற்கு கிரிமினல் குற்றங்களை அடிப்படையாகக்கொண்டு அமைந்துவிட்டன. அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் அன்றாட நடவடிக்கைகள் சுயலாப நோக்கில், எப்படியும் செல்வத்தை குவித்துவிட வேண்டும் என்ற அடிப்படையில் மிகத் தீவிரமாக செயல்பட்டன. இது சமுதாயச் சொத்துக்களை சூறையாடும் அளவிற்கு மனிதாபிமானமற்ற வகையில் வளர்ந்தது. இப்படி மிகப்பெரும் அளவிற்கு தனி மனிதர்கள் செல்வத்தை குவிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டதன் விளைவு, பரந்துபட்ட அமெரிக்காவில் உழைக்கும் மக்களின் சமூக அந்தஸ்தை தேக்க நிலைக்கும், மற்றும் சீர்குலைவிற்கும் இட்டுச்சென்றது. புதிய நூற்றாண்டின் ஆரம்பத்தில் அமெரிக்கா மற்றைய முன்னேறிய முதலாளித்துவ நாடுகளிலேயே சமுதாய ஏற்றத்தாழ்வுகள் அதிகமுள்ள நாடாக வளர்ந்துவிட்டது. அமெரிக்காவிற்குள் சமுதாயத்தில் நிலவும் மிகப்பெரும் ஏற்றத்தாழ்வுகளை விளக்கும் ஓர் புள்ளி விபரம் வருமாறு: அமெரிக்காவில் வாழ்ந்து வரும் 2 கோடி ஏழைக்குடும்பங்களின் மொத்த ஆண்டு வருமானத்தைவிட 13,000 முன்னணி செல்வந்தர்களது குடும்பங்கள் அதிக அளவில் இருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கின்றது.

அமெரிக்க சமுதாயத்தின் அடிமட்டத்தில் மிகக் கடுமையான வர்க்க மோதல்கள் உருவாகி வருகின்றன. இந்த மோதல்கள் அமெரிக்க அரசியல் மட்டத்தில் எதிரொலிக்கவில்லை. அதற்குக் காரணம் இரண்டு பாரம்பரிய கட்சிகளான குடியரசுக் கட்சியும், ஜனநாயக கட்சி ஆளும் ஆதிக்க வர்க்கத்தின் நலன்களை மட்டுமே ஆதரித்து வருகின்றன. சமுதாய முரண்பாடுகள் தீவிரமாகிக் கொண்டிருக்கையில், ஐரோப்பிய நாடுகளில் சமூக ஜனநாயகக் கட்சிகளைப்போல் அமெரிக்க ஜனநாயக கட்சியும் தீவிர வலதுசாரி போக்கில் சென்று கொண்டிருக்கின்றது.

அமெரிக்காவில் ஆளும் குழுவினர் அதன் கொள்கைகளுக்கு உருவாகி வரும் விரிவான எதிர்ப்பு உணர்வுகளை உணர்ந்துதான், புஷ் நிர்வாகத்தின் மூலம் பெருமளவிற்கு மக்களது ஜனநாயக உரிமைகளை தகர்க்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 2001 செட்பம்பர் 11 அன்று பயங்கரவாதிகள் தாக்குதலை காரணம் காட்டி ஜனநாயக உரிமைகளை ஒடுக்கும் நடவடிக்கைகளுக்கு நியாயம் கற்பித்து வருகிறார்கள். உண்மையில் இவை தற்போதுள்ள சமுதாய நிலைகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களுக்கு எதிராகவே இத்தகைய நடவடிக்கைகளை புஷ் நிர்வாகம் மேற்க்கொண்டிருக்கின்றது.

நீண்ட கால அடிப்படையில் பார்த்தால், அரசியல் வெற்றிடத்தில் நடக்க முடியாது. அதிகரித்துவரும் சமூககொந்தளிப்புகள் தவிர்க்கமுடியாதபடி ஒரு அரசியல் வெளிப்பாட்டை கண்டுகொள்ள வேண்டும். இதிலிருந்துதான் ஈராக்கிற்கு எதிரான போரை எதிர்க்கும் கடுமையான முயற்சி எதுவும் ஆரம்பிக்கப்படவேண்டும். உலகம் முழுவதிலும் உள்ள உழைக்கும் மக்களளின் சமூக நலன்கள் அடித்தளமாக கொண்டு உலகம் முழுவதும் உள்ள தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதை, குறிப்பாக அமெரிக்காவிலுள்ள தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதை அடிப்படையாக கொண்ட ஒரு சோசலிச வேலைத் திட்டத்தினை அடிப்படையாக கொள்ள வேண்டும்.

ஐரோப்பிய அரசுகளின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு போர் முயற்சிகளை புறக்கணிப்பது பொருளற்றது என்பதை ஜேர்மன் அபிவிருத்திகள் உறுதிப்படுத்திகின்றன. ஜேர்மன் பிரதமர் ஷ்ரோடர் (சமூக ஜனநாயகக் கட்சி- SPD) சென்ற ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது போருக்கு எதிராக தெளிவான எதிர்ப்பை பிரகடனம் செய்தார். அந்தப் பிரகடனம் தற்போது காற்றில் மறைந்துவிட்டது.

அமெரிக்க படைகள் ஜேர்மனியின் வான்வெளியை எந்த விதமான கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாக பயன்படுத்திக்கொள்வதற்கும், ஜேர்மனியில் உள்ள அமெரிக்க தளங்களை பயன்படுத்திக்கொள்வதற்கும் அவர் உடன்பட்டிருக்கிறார். போர் ஆரம்பிக்கும் நேரத்தில் ஜேர்மனியின் "Fuchs" டாங்கிகள் குவைத்தில் நிலைகொண்டிருப்பதுடன், போர் பிராந்தியத்தில் பறக்கும் அவாக்ஸ் ரக வேவு விமானங்களில் ஜேர்மன் இராணுவத்தினர் இருப்பார்கள். ஐக்கிய நாடுகள் சபையில் போர் ஆரம்பிப்பதற்கான தீர்மானம் வருமானால் அதை ஜேர்மனி ஆதரித்து வாக்களிக்கும் என்று ஜேர்மனி வெளியுறவு அமைச்சர் ஜொசிஸ்கா பிஷ்ஷர் (பசுமை கட்சி) கோடிட்டு காட்டியுள்ளார்.

ஈராக் மீது படையெடுப்பு நடக்கும்போது, ஜேர்மன் போர் வீரர் எவரும் நேரடியாக பங்கு எடுத்துக்கொள்ளமாட்டார்கள் என்று தற்போது அரசாங்கம் கூறிக்கொண்டிருக்கின்றது. இத்தகைய கோரிக்கை எதையும் எவரும் ஜேர்மன் அரசிடம் முன்வைக்கவில்லை. மாறாக, ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பொறுப்பை ஜேர்மன் படைகள் ஏற்றுக்கொண்டு, அமெரிக்க படைகளை ஈராக் போரில் பங்குபெற அனுமதித்திருக்கிறது. மேலும் ஜேர்மனியில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை பாதுகாக்க ஏற்பாடு செய்வதற்கு உடன்பட்டிருக்கின்றது.

ஜேர்மனியின் சமூக ஜனநாயக- பசுமை கட்சி கூட்டணி அரசு இப்படி அரசியலில் தனது போக்கை தலைகீழாக மாற்றிக்கொண்டதற்கு காரணம் அராங்கம் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூக நலன்களை பாதுகாப்பதாகும். அரசின் வெளிநாட்டு, மற்றும் உள்நாட்டுக் கொள்கைகள் பெரிய முதலாளித்துவத்தினது நலன்களை காப்பதற்கு உறுதியளிக்கும் அடிப்படையில் அமைந்துள்ளன. தன் சொந்த நாட்டில் இடைவிடாது, உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரான கொள்கைகளை கடைபிடித்துவரும் அரசாங்கம், உள்நாட்டில் சமுதாய மற்றும் ஜனநாயக உரிமைகளை ஒடுக்கி வருகின்ற அரசாங்கம், வெளிநாடுகளில் சமாதான கொள்கைகளை கடைபிடிக்க முடியாது.

ஈராக்கிற்கு எதிராக அமெரிக்கா போர் நடத்தக்கூடாது என்று பேர்லின் அதிக அளவில் விருப்பம் கொண்டிருக்கலாம். அத்தகைய போர் நடக்குமானால் மத்திய கிழக்கில் ஜேர்மனிய நலன்களுக்கு ஆபத்து ஏற்படும். ஆனால் உலக அரங்கில் ஜேர்மனியின் செல்வாக்கில் பாதிப்பு ஏற்படக்கூடும் என கருதுவதால், வாஷிங்டனுடன் வெளிப்படையாக மோதுவதற்கு ஜேர்மனி அதிக அளவில் பயப்படுகின்றது. இதிலிருந்துதான் ஷ்ரோடர் அரசிற்கு எதிரான வலதுசாரிகளின் கண்டனங்கள் ஆரம்பிக்கின்றன. அவர்கள் புஷ் அரசிற்கு எதிராக மிகவும் நெருக்கடியை விளைவிக்கும் அறிக்கைகளை ஷ்ரோடர் அரசு வெளியிட்டுக் கொண்டிருப்பதால், ஜேர்மனியை சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தி வருவதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் பேர்லினில் Aspen Institute கூட்டம் ஒன்றில் ஜேர்மனியின் ஹஸ் மாநில முதலமைச்சர் றோலான்ட் கொக் (கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் -CDU) "துரதிருஷ்டவசமாக இந்த சிக்கலான நேரங்களில், ஜேர்மன் குடியரசு அதன் பொருளாதார மற்றும் அரசியல் பூகோள அடிப்படையிலான வலுவிற்கு ஏற்ற செல்வாக்கை பெறவில்லை. அதற்குக் காரணம் ஜேர்மன் அரசு மிகவும் முட்டாள்தனமான ஈராக் கொள்கையை கடைபிடித்து வருகிறது. இதனால் உலக அரசியலில் ஜேர்மனியின் செல்வாக்கு மோசமடைந்துவிட்டது என்ற நிலைமையை ஐரோப்பாவில் உருவாக்கிவிட்டது என்றுதான் கூறவேண்டும்.'' என குறிப்பிட்டார்.

கொக், அமெரிக்காவின் ''தன்னிச்சையான போக்குகளையும்'' கண்டித்தார். உலகிலுள்ள ஏனையோரின் அரசியல் நலன்களையும் கருத்தில் கொள்வதற்கு அமெரிக்க நிர்வாகம் விருப்பமில்லாமல் இருப்பது கவலையளிக்கும் நிகழ்ச்சியாகும். இப்படி அமெரிக்க தன்னிச்சையாக ஓர் நிலையை எடுத்திருப்பது நமது நலன்களுக்கு ஏற்றதல்ல என்றும் கொக் விளக்கினார்.

மேலும் ''இந்தப் பிரச்சனையை மன்றாடியோ அல்லது அமெரிக்காவை குற்றம்கூறியோ தீர்த்துவிட முடியாது. பலமுனை கொண்ட அதிகார கட்டமைப்புக்களை உருவாக்குவதன் மூலந்தான் அதைச் செய்ய முடியும். இந்த வகையில் ஜேர்மனியின் வெளிநாட்டுக் கொள்கையில் கவனம் செலுத்துவதாக அமைய வேண்டுமென்றும்'' கொக் ஆலோசனை கூறியுள்ளார்.

''இவற்றையெல்லாம் ஆராயும்போது, இறுதியாக ஒரே ஒரு வாய்ப்புதான் உண்டு. அந்த வாய்ப்பு ஐரோப்பா முழுவதும் வெளிநாட்டு கொள்கைகளில் ஒரே கருத்தை கூறுவதுதான்'' என்று அவர் குறிப்பிட்டார். இதற்காக ஜேர்மனி, இராணுவ தலையீட்டுப் படையை உருவாக்கவேண்டும். ஜேர்மனியின் பொருளாதார நிலை நமது இராணுவ வீரர்களுக்கு சிறந்த பயிற்சி அளிக்கின்ற வகையில் வளரவேண்டும். மேலும் சிறந்த நுட்பமான போர்க் கருவிகளையும் வழங்கவேண்டும்'', என்றும் கொக் ஆலோசனை கூறினார்.

இப்படி பரஸ்பரம் குற்றம் கூறிக்கொண்டாலும், கொக் கூறிய அணுகுமுறை அடிப்படையில்தான் ஷ்ரோடர் அரசு உடன்பாட்டுடன் செயல்பட்டு வருகிறது. பொருளாதார மற்றும் சமுதாய கொள்கைகளைப்போல் ஜேர்மன் அரசு வெளியுறவுக் கொள்கைகளிலும் எதிர்க்கட்சிகளின் வழியிலேயே சென்று கொண்டிருக்கின்றது.

அதே நேரத்தில், புஷ் நிர்வாகத்தின் போர் முயற்சிக்கு ஏற்ப தனது போக்கை மாற்றிக்கொண்டிருக்கின்றது, அத்துடன் சுதந்திரமான இராணுவ வல்லமைகளை ஜேர்மனிக்கு உருவாக்குவதற்கும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. இத்தகைய முடிவு வெளியுறவுக் கொள்கையில் இராணுவ மையம் அதிகரித்து வருவதில் காணக்கூடியதாக உள்ளது. ஆயுத குவிப்பிற்கு கூடுதல் நிதி ஆதாரங்கள் தேவை. இந்தச் செலவு முழுவதும் மக்கள் மீதுதான் சுமத்தப்படும்.

அத்தகைய நடவடிக்கைகளால் ஏற்படுகின்ற ஆபத்துக்களை சந்தித்து சமாளிப்பதற்கு அத்லாண்டிக் பெருங்கடலின் இரண்டு பக்கங்களையும் சார்ந்த உழைக்கும் மக்களின் பரந்த தட்டினரை ஒன்று திரட்ட வேண்டும். சோசலிச அடித்தளத்தில் ஒரு சர்வதேச வெகுஜன இயக்கத்தை உருவாக்குவதுதான் உலக சோசலிச வலைத் தளத்தில் வெளிவரும் நாளாந்த விமர்சனங்களினதும், ஆய்வுகளினதும் நோக்கமாகும்.

See Also :

ஈராக்கிற்கு எதிராக அமெரிக்காவின் போர் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில்: 2003-ம் ஆண்டின் அரசியல் சவால்

ஈராக்கிற்கு எதிரான போரும் உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க முன்னெடுப்பும்

Top of page