World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

An interview with French Socialist Party spokesman Karim Pakzad

பிரான்சில் சோசலிஸ்ட் கட்சியின் பேச்சாளர் கரீம் பக்சாத்துடன் ஓர் பேட்டி

By David Walsh
27 February 2003

Use this version to print | Send this link by email | Email the author

பிப்ரவரி 14ம் திகதி; ஐரோப்பாவில் லட்சக்கணக்கான மக்கள், ஈராக்கிற்கு எதிராக அமெரிக்கா நடத்த இருக்கும் போரை கண்டித்து, பேரணி நடத்துவதற்கு ஒரு நாள் முன்னர், உலக சோசலிச வலைத் தளத்தின், நிருபர்கள், பிரான்ஸ் நாட்டு சோசலிஸ்ட் கட்சி (PS) தலைமையகத்திற்கு சென்றனர். அந்த அலுவலகம், பிரஞ்சு பாராளுமன்றத்திற்கு(National Assembly) அருகாமையில் உள்ளது. அன்றைய தினம் பிற்பகலில் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் டொமினிக் வில்ப்பந் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்காவிற்கு எதிராக உரையாற்றியதுடன், இரண்டாவது உலகப்போர் முடிந்த பின்னர் முதல் தடவையாக, அமெரிக்க-ஐரோப்பிய உறவுகளில் மிகவும் கூர்மையான நெருக்கடியை கிளப்பிவிட்ட, ஈராக் தொடர்பான விவாதங்கள் நிறைந்த ஒரு முக்கியமான வாரம் முடிவிற்கு வந்தது.

ஈராக் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் சோசலிஸ்ட் கட்சியின் பேச்சாளரான Karim Pakzad உடன் நாங்கள் உரையாற்றினோம். அவரது கருத்துக்கள் பல நோக்குநிலைகளில் இருந்தும் தெளிவு தருபவையாக அமைந்திருந்தன. இப் பேட்டிக்கு பின்னர் எங்களது ஆய்வை தருகிறோம்.

Karim Pakzad: பிரான்ஸ் சோசலிஸ்ட் கட்சி இந்த போரை, பல்வேறு காரணங்களால் எதிர்க்கிறது. முதலாவதாக, புஷ் நிர்வாகம் இந்தப் போர் தொடர்பாக கொண்டிருக்கின்ற கருத்து, ஒருதலைபட்சமான போர், திடீர் தாக்குதல் நடத்தும் போர், சர்வதேச சட்டத்தோடு பொருந்தி வரவில்லை, உலகில் நெருக்கடிகள் தோன்றியிருக்கினற பகுதிகளில் எல்லாம், ஐ.நா.வின் நடவடிக்கைகள்தான் மிக வலுவான அடிப்படையில் இருக்கவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

சர்வதேச பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை விவாதித்து முடிவு செய்வதற்கு ஏற்ற இடம் ஐ.நா. ஒன்றுதான். ஐ.நா. அனுமதியோடு, அல்லது அனுமதி பெறாமல், ஈராக்கில், தலையிடுவதற்கு முடிவு செய்திருப்பதாக ஜனாதிபதி புஷ் அறிவித்திருக்கிறார். சர்வதேச உறவுகளை நெறிமுறைப்படுத்துவதற்கு, நடைமுறையில் உள்ள விதிகளுக்கு ஏற்ப புஷ் கருத்து தெரிவிக்கவில்லை.

இந்தச் சூழ்நிலையில் ஈராக்கிற்கு எதிரான போர், அப் பிராந்தியத்தில் ஸ்திரமின்மையை ஏற்படுத்திவிடும். ஏற்கெனவே அங்கு பெருமளவில் ஸ்திரமில்லா நிலை நிலவுகின்றது. குறிப்பாக பாலஸ்தீன மற்றும் ஸ்ரேலுக்கு இடையில் நடைபெறுகின்ற மோதல் அப் பிராதியத்தின் ஸ்த்திரமின்மைக்கு மிகவும் அடிப்படையாக உள்ளது. நாம் கருதுகின்றோம், இங்கு இரண்டாவது மோதலை உருவாக்குவதை விடுத்து இந்த தகராறுக்கு தீர்வு காண்பததென்பது அதிக கால அவகாசத்தினையும் ஆற்றலில் பெரும்பகுதியை செலவிடுவதனையும் வேண்டிநிற்கின்றது..

எனவே இந்தச் சூழ்நிலையில் அந்த பிராயந்தியம் முழுவதிலும், இந்தப் போர் ஸ்த்திரமின்மையை உருவாக்கிவிடும், மேலும் இந்த தலையீட்டின் மூலம் ஈராக்கில் ஜனநாயகம் உருவாகும் என்று நாங்கள் நம்பவில்லை. எங்கள் கருத்துபாடு என்னவெனில் எவரேனும் ஒருவர் ஜனநாயகத்தை ஏற்றுமதி செய்துவிட முடியாது, அல்லது எந்த அரசியல் அமைப்புவடிவம் என்பதனை பொருட்படுத்தாது விடினும் போர் மூலமோ, ராணுவ வழிகளிலோ அது நடந்தேறாது.

பிரான்ஸ் சோசலிஸ்ட்டுகளாகிய நாங்கள், ஈராக்கில் செயல்பட்டு வரும் எதிர்க்கட்சியை ஆதரிக்கிறோம். ஈராக்கில் ஜனநாயக மாற்றம் ஏற்படவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஈராக்கில் ஆயுத குறைப்பு நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட வேண்டுமென்று விரும்புகிறோம். ஆனால், போரினால் அதை செய்ய முடியும் என்று நாங்கள் நம்பவில்லை. இதற்காகத்தான், தற்போது பிரான்ஸ் அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும், மற்ற இதர ஐரோப்பிய ஆட்சிகளின் கருத்தையும் ஆதரிக்கிறோம். ஐ.நா. ஆயுத ஆய்வாளர்களை வலுப்படுத்தி அவர்கள் தங்களது பணியை முடிப்பதற்கு அனுமதிக்கவேண்டும்.

ஈராக்கில் சமாதான வழிகளில் ஆயுதக்குறைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சமாதான முறையில் ஆயுதக்குறைப்பு செய்வதால், அந்நாட்டில் ஜனநாயக கட்சியான எதிர்க்கட்சியும் அனுமதிக்கப்படும். வெளிநாட்டு தலையீடு வரும் என்று காத்துக்கொண்டிருக்காமல், ஈராக் மக்களே ஆட்சி மாற்றத்தை எதிர்க்கட்சி மூலம் கொண்டு வந்துவிட முடியும். இங்குதான் இறுதி காரணம் அடங்கியிருக்கிறது; பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தை, சர்வதேச சமுதாயம் வெற்றிகரமாக நிறைவேற்றுவது இனறு மிக முக்கியமான பணியாகும் என்று நாங்கள் கருதுகிறோம்.

(ஈராக்குடன்னான) இந்தப் போர், பயங்கரவாதத்தை ஊட்டி வளர்க்கும், வலுப்படுத்தும் என்று நாங்கள் கருதுகிறோம். இந்த போர் நாசம் விளைவிக்கும் போராக மாறிவிடும். பல்லாயிரக்கணக்கானோர் பலியாவார்கள். முஸ்லீம் உலகத்திற்கும் மேற்கத்திய உலகிற்கும் இடையிலுள்ள இடைவெளி இந்தப் போருக்குப் பின்னர் பெரிதாக ஆகிவிடும். எனவேதான், இந்தப் போர் பயங்கரவாதத்தை எதிர்ப்பதைவிட வலுப்படுத்தவே உதவும் என்று நாங்கள் கருதுகிறோம். இந்தக் காரணங்களினால்தான் இந்த போருக்கு எதிராக நாங்கள் இருக்கிறோம். சோசலிஸ்ட் கட்சி ஒரு சாத்வீக கட்சியல்ல, எல்லாப் போர்களுக்கும் நாம் எதிரானவர்கள் அல்ல, ஆனால் நான் கூறியுள்ள இவ் அனைத்துக் காரணங்களுக்காகவும் நாம் இந்தப் போரை எதிர்க்கிறோம்.

WSWS: இந்த போருக்கு ஐ.நா. அனுமதி வழங்குமானால் ராணுவத் தலையீட்டை நீங்கள் ஆதரிப்பீர்களா?

KP: தனது ரத்து அதிகாரத்தை பயன்படுத்துவது உட்பட பிரான்ஸ் அரசு இந்த போர் நடக்காது தடுப்பதற்கு தன்னால் முடிந்த எல்லாவிதமான நடவடிக்கையையும் எடுக்க வேண்டுமென்று நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கிறோம். ஐ.நா.வும் பாதுகாப்பு கவுன்சிலு ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட ஒரு போரை, சட்டப்பூர்வமானதாக ஆக்குகின்ற ஓர் கருவியாக மாற்றப்படக்கூடாது என்று நாங்கள் விரும்புகின்ற காரணத்தினால்தான், இத்தகைய கோரிக்கையை பிரான்ஸ் அரசிற்கு விடுத்திருக்கிறோம். தற்போது அமெரிக்க அதிகாரிகள் தங்களது விருப்பத்தை மறைக்கவில்லை. "என்ன நடந்தாலும் சரி, நாங்கள் தலையிடுகிறோம்" என்ற பாணியில் சென்று கொண்டிருக்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில், ஏற்கெனவே, ஈராக்கில் தலையிடவேண்டும், என்று முடிவு செய்துவிட்ட நிலையில் அமெரிக்க தலைவர்கள் ஐ.நா.வின் ஒப்புதலை பெறுவதற்காக முயலுவார்கள். எனவே, போர் செய்யும் முடிவை நியாயப்படுத்துவதற்கு பதிலாக, ஐ.நா. தன்னால் முடிந்தால் மேலும் பயனுள்ள வகையில், ஈராக் ஆயுதகுறைப்பு செய்வதற்கு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

WSWS: புஷ் நிர்வாகத்தின் உண்மையான நோக்கம், ஆயுதக் குறைப்பு என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

KP: அது ஒன்றே உண்மையான நோக்கம் என்று, நாங்கள் நம்பவில்லை. அமெரிக்க நிர்வாகத்தின் பல அதிகாரிகள் அந்த பிராயந்தியத்தின், அரசியல் முகத்தையே மாற்றிவிட விரும்புவதாக, தெளிவாக கூறிவருகின்றனர். சிலர் அமெரிக்காவின் பணி அந்த பிராய்தியத்தில் ஒரு குறிப்பிட்ட நாட்டின் நிர்வாகத்தை மாற்றியமைப்பது என்று கூறுகிறார்கள். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, அமெரிக்கர்கள் ஐ.நா. அங்கீகரித்தாலும், அங்கீகரிக்காவிட்டாலும் தலையிடுவது என்று முடிவு செய்துவிட்டார்கள். இந்தக் காரணத்தினால்தான், ஐ.நா. அங்கீகாரத்தாலும், அங்கீகரிக்காவிட்டாலும் போர் தொடுப்பதே என்ற ஒரே தர்க்க அடிப்படையை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

WSWS: இந்தப் பிரச்சனையில் நீங்கள் ஜாக் சிராக்கோடு உடன்படுகிறீர்களா?

KP: இதர நாடுகளுக்கு ஜாக் சிராக் அதிக அளவில் நிர்பந்தம் கொடுக்க வேண்டுமென்று, நாங்க்ள் கருதுகிறோம். அதற்கு எல்லாம் மேலாக சர்வதேச அளவில் மக்களது பொதுக் கருத்தை அதிக அளவில் சிராக் வலியுறுத்த வேண்டும் என்று விரும்புகிறோம். நாளை இலட்சக்கணக்கான மக்கள், உலகில் அறுபதுக்கு மேற்பட்ட நாடுகளில் இந்தப் போருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வார்கள். இப்படி ஆர்ப்ாட்டம் செய்பவர்கள், சதாம் உசேன் ஆட்சியை ஆதரிப்பவர்கள் அல்ல. இந்தப் போரை அமெரிக்கர்கள் நடத்த விரும்புகிற வழி நியாயமற்றது. எனவே நமது அரசும் இதர அரசுகளும் சமாதான வழிமுறைகளில் ஈராக்கில் ஆயுதக் குறைப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்காவிற்கு நிர்ப்பந்தம் கொடுக வேண்டும்.

WSWS: அமெரிக்காவிற்கும் பிரான்சிற்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதல் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

KP: இங்கு மோதல் எதுவும் இல்லை, கருத்து வேறுபாடுதான் ஏற்பட்டிருக்கிறது. ஒரு நிலவரம் தொடர்பாக, இரண்டு வகையான கருத்துக்கள் கூறப்படுகின்றன. நாம் அமெரிக்காவின் நண்பர்கள் என்பது நீங்கள் அறிந்ததே. அதே நேரத்தில் நாம் அமெரிக்காவின் கட்டளைப்படி நடக்கிற பணியாட்கள் அல்ல. நமக்கு அமெரிக்கா கட்டளையிட முடியாது. நட்பு முறையில் அமைந்தது நமது உறவு. உலக விவகாரங்களில் ஒவ்வொரு அம்சத்திலும் நாம் நமது சொந்த முடிவையே எடுக்கிறோம்.

WSWS: அமெரிக்காவை இந்தப் போருக்கு நெருக்கித் தள்ளுவது எது? இதற்குப் பின்னால் உள்ள உண்மையான காரணங்கள் என்ன?

KP: கவனமாகக் கேளுங்கள், பல்வேறு ஆய்வுகள் இதுபற்றி நடத்தப்பட்டுள்ளன. ஈராக் ஆட்சியை மட்டுமல்ல, மத்திய கிழக்கு முழுவதையுமே மாற்றியமைக்கும் வசதிகள், வழிமுறைகள் தங்களிடமிருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள். இது அதிகார வேட்டையின் வேட்கை. பொருளாதாரக் காரணங்கள், பூகோள மற்றும் கேந்திர அடிப்படையிலான காரணங்கள், எரிபொருள் தொடர்புடைய காரணங்கள், இவை அனைத்து காரணங்களும் இதில் இடம்பெற்றிருக்கின்றன. இதில் பிரதான காரணம் என்று நான் கருதுவது அமெரிக்காவில் ஒரு குழு இருக்கிறது, அவர்கள் கன்சர்வேடிவ் கட்சியில் இடம்பெற்றுள்ள அதீத-பழமைவாத குழுவைச் சேர்ந்தவர்கள், அவர்கள் அமெரிக்காவிற்கே ஒரு குறிக்கோள் உள்ளது என்று சொல்கிறார்கள். வளைகுடா பிராயந்தியம் மற்றும், உலகம் முழுவதன் தோற்றத்தையே மாற்றி அமைத்து புதிய வடிவம் தந்துவிட, அமெரிக்காவால் முடியும் என்று நினைக்கிறார்கள். இந்த வழியில் உலகத்தைப் பார்ப்பது மிகவும் ஆபத்தானது.

* * *

கரீம் பக்சாத் மற்றும் சோசலிஸ்ட் கட்சி புஷ் நிர்வாகத்தின் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறியுள்ள கருத்துக்கள் நேர்மையற்றவை, கொள்கைநெறியற்றவை மேலும், ஏற்றுக்கொள்ள முடியாதவை.

பொதுவாக பார்க்கும்போது அவரது கருத்துக்கள் சோசலிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டை மட்டுமே எதிரொலிக்கவில்லை, ஈராக்கில் அமெரிக்கா நடத்தவிருக்கின்ற ராணுவ தாக்குதல்கள் தொடர்பாக, பிரான்ஸ் ஆளும் குழுவின், பொதுக்கருத்தை அவர் பிரதிபலிக்கிறார். இந்த ஆளும் குழுவினர் அமெரிக்க-பிரிட்டிஷ் போர்க் கொள்கையை எதிர்ப்பதற்கு அடிப்படையான ஓர் காரணம் என்னவெனில், பாரசீக வளைகுடாவிலும் மிகவும் பொதுவாக உலகம் முழுவதிலும் பிரான்ஸ் ஏகாதிபத்தியத்தின் நலன்களை பிரதிபலிக்கின்ற வகையில் பிரான்ஸ் ஆளும் குழுவின் கருத்துக்கள் அமைந்திருக்கின்றன. ஈராக் தொடர்பாக சோசலிஸ்ட் கட்சியின் ஒட்டுமொத்த அணுகுமுறையைப் பார்க்கும்போது, அதன் கருத்துகளுக்கும் ஜனாதிபதி ஜாக் சிராக் மற்றும் அவரது வலதுசாரி UMP(Union for a Popular Movement) ஆட்சிக்குழுவின் கருத்துகளுக்கும் இடையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் எதுவும் இல்லை.

அமெரிக்காவின் தாக்குதலுக்கும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று கூறப்படுவதற்கும் அமெரிக்கா உருவாக்கியுள்ள அடிப்படைகளை கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொண்டு, நியாயப்படுத்துகின்ற வகையில் சோசலிஸ்ட் கட்சி பேச்சாளர் கருத்து தெரிவித்துள்ளார். சர்வதேச தீங்கு என்று புஷ் நிர்வாகம் வர்ணிக்கும்; செயலுக்கு எதிராக புனிதப் போர் என்று கூறி புஷ் நிர்வாகமானது அமெரிக்க ராணுவமயமாதல் மிகப்பெரும் அளவிற்கு வளருவதை நியாயப்படுத்துகிறது. அதே நேரத்தில் அமெரிக்க அரசாங்கமும் மற்றும் எல்லா பூர்சுவா ஆட்சிகளும் பயங்கரவாத தாக்குதல் மிரட்டல்களை ஒரு சாக்குபோக்காக எடுத்துக்கொண்டு ஜனநாயக உரிமைகளை துடைத்துக்கட்டும் தாக்குதல்களை நடாத்திவருகின்றன. இதில் பக்சாத் இந்த சர்வதேச "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" நடத்தப்படும் முறையை மட்டுமே கண்டிக்கிறார்.

ஈராக் நடந்துகொண்ட முறையினால்தான் இன்றைய நெருக்கடி உருவாயிற்று என்பது வாஷிங்டனின் அடிப்படை பொய்யாகும், இந்த பொய்க்கு பக்சாத் நம்பகத்தன்மை கொடுத்திருக்கிறார். ஈராக் "ஆயுதங்களை துறந்துவிட" வேண்டும், ஆயுத ஆய்வாளர்கள் தங்களது பணிகளைச் செய்ய அனுமதிக்கப்படவேண்டும். ஈராக்கிய "எதிர்க் கட்சியை" ஆதரிக்க வேண்டும். சதாம் ஹுசைன் ஆபத்தானவர், போன்ற பல்வேறு காரணங்களை பக்சாத் கூறி ஈராக்கின் இறையாண்மையை ஒழித்துக்கட்டுவதை மறைமுகமாக ஏற்றுக்கொண்டிருக்கிறார். இதனுடைய தர்க ரீதியிலான முடிவு என்ன, ஐ.நா. மேற்பார்வையின் கீழ் ஏதாவது ஒரு வகையில் உண்மையிலேயே ஓர் ஏகாதிபத்திய காபந்து நிர்வாகத்தை ஏற்படுத்துவதுதானே!

ஐ.நா.வின் பாத்திரம் பற்றி ஒரு கற்பனைக் கதையை பக்சாத் கூறியிருக்கிறார். ஈராக் நெருக்கடியானது ஐ.நா ஏகாதிபத்திய நடவடிக்கைகளின் ஓர் கருவி என்பதையே மிக அப்பட்டமாக நமக்கு காட்டியிருக்கின்றது, ஆனல் அங்கே சர்வதேச பிரச்சனைகளை விவாதித்து முடிவு எடுக்க முடியும் என்று பக்சாத் சொல்கிறார். பிரான்ஸ் நாட்டு ஆளும் குழுவினர், ஐ.நா.வை இறுக்கமாக பிடித்துக்கொண்டிருப்பதற்கு ஓர் காரணம் உண்டு. இரண்டாவது உலகப்போருக்குப் பின்னர் சர்வதேச உறவுகளில் பிரஞ்சு பூர்சுவா வர்க்கத்தினருக்கு ஓரளவிற்கு ஸ்திரத்தன்மையை உருவாக்கித் தந்த அமைப்பு ஐ.நா; அது தற்போது புதிதாக உருவாகிவரும் அதிக அளவில் நிச்சயம் இல்லாத எதிர்காலத்தில், அமெரிக்காவின் அதிகாரத்திற்கு ஐ.நா. சரியான சமநிலையை(counterweight) உருவாக்கும் என்று, பிரான்ஸ் ஆளும் குழுவினர் நம்புகின்றனர்.

ஈராக் தொடர்பாக அமெரிக்காவிற்கும் பிரான்சிற்கும் இடையில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள், இந்த இரண்டு அரசுகளின் ஒன்றுக்கொன்று முரண்பட்ட நலன்களை எதிரொலிப்பதாக அமைந்திருக்கிறது. வளைகுடாப் பகுதி கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியம், உலக எண்ணெய் வளத்தின் மீது அமெரிக்காவின் ஏகபோக கட்டுப்பாடு ஏற்பட்டுவிடுமானால், அதனால் தனது நலன்கள் பாதிக்கப்படலாம் என்று கருதி ஓர் முடிவிற்கு வந்துள்ள பிரான்சின் ஆளும் குழுவினர் அமெரிக்கத் தலையீட்டை எதிர்த்து வருகின்றனர்.

பக்சாத் அவரது பேட்டியில் குறிப்பிட்டிருப்பதைப்போல், ஐரோப்பிய பூர்சுவா வர்க்கத்தாரின் ஒரு பிரிவினர், புஷ் நிர்வாகத்தின் கவனக்குறைவானதும் வெறித்தனமானதுமான கொள்கைகளால் "ஈராக்குக்கு எதிரான போர் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு மிகப்பெரும் ஆபத்து உருவாகிவிடும்" என்று அஞ்சுகின்றனர்.

பிரான்ஸ் ஒரு பிரதான ஏகாதிபத்திய வல்லரசு, குறிப்பாக மேற்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் மிகக் கொடூரமான காலனி ஆதிக்க வரலாற்றுக்கு சொந்தக்கார நாடு பிரான்ஸ். சிராக் ஆட்சி சாது வேடம் போடுகிறதென்றால் அதற்குக் காரணம் தன்னிடம் அமெரிக்காவை எதிர்த்து நிற்கின்ற ராணுவ வலிமை தன்னிடம் இல்லையே, "பெரிய பட்டாளங்கள்" இல்லையே, என்ற கவலைதான். ஆனால், பிரான்ஸ் வேறு சூழ்நிலைகளில் தனது சொந்த முறையிலான சூறையாடும் போர்களை நடத்துகின்ற வல்லமையுள்ள நாடுதான். உண்மையில் தற்போது, பிரான்ஸ் நாட்டு துருப்புக்கள் ஐவரி கோஸ்ட்டில் புதிய காலனி ஆதிக்க நலன்களை காப்பதற்காக நடவடிக்கையில் இறங்கியிருக்கிறன.

வாஷிங்டன் உடன் தனக்குள்ள கருத்து வேறுபாடுகள் கொள்கை அடிப்படையில் அமைந்தவை அல்ல, என்பதை பாரீஸ் பகிரங்கமாக தெளிவுபடுத்திவிட்டது. அமெரிக்க நிலைப்பாட்டிற்கும், பிரான்சிற்கும் இடையே, அடிப்படையில் எந்தவிதமான இடைவெளியும் இல்லை வேறுபாடும் இல்லை - நடைமுறைப் பற்றிதான் -ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஊடாக நடவடிக்கை- என்பதில் தான் எங்களுக்கு கருத்து வேறுபாடு" என்று UMP -இன் பாராளுமன்ற உறுப்பினர், Pierre Lellouche சென்ற மாதம் Le Monde பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

ஈராக் தொடர்பாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் நோக்கங்களை, அம்பலப்படுத்துகின்ற வல்லமை பக்சாத்திற்கு இல்லை. ஏனென்றால், பிரான்ஸ் நாட்டு சோசலிஸ்ட் கட்சியே, அந்நாட்டு ஏகாதிபத்திய கட்சிதான். தனது உண்மையான சதி நோக்கங்களை மறைத்துக்கொள்ளும் புஷ் ஐப் போலவே பக்சாத்தும் அவரது சோசலிஸ்ட் கட்சியும் இவற்றினை மறைப்பதில் உறுதியுடன் இருக்கின்றன.

பக்சாத் வாஷிங்டனின் நடைமுறை நோக்கங்களுக்கு வரும் அளவிற்கு நிர்பந்திக்கப்படும்போது, அவரது நிலைப்பாடு, உள்ளார்ந்த முரண்பாடுடையதாகவும், அறிவுப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியாதவையாகவும் அமைந்திருக்கின்றது. ஒருபுறம் இவர் அமெரிக்க "குடியரசுக்கட்சியின் அதீத- பழமைவாதிகளின்" ஈராகிய எரிபொருள் வினியோகம் தொடர்பான வரைவுத் திட்டங்களை சாடுகின்றார்; அனால் மறுபுறம். ஈராக் "ஆயுதக்குறைப்பு" செய்யவேண்டும் என்ற புஷ் நிர்வாகத்தின் மத்திய நோக்கத்தினை மிகப் பெறுமதியானதாக ஏற்றுக்கொண்டு, அவ் இலக்குடன் உடன்பாட்டினை வெளிப்படுத்துகின்றார்.

ஈராக் மீதான கொள்கை தொடர்பாக அமெரிக்காவிற்கும் பிரான்சிற்கும் இடையே மோதல் என்பதைக்கூட பக்சாத் ஏற்றுக்கொள்ளவில்லை, "நண்பர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு" என்று சொல்கிறார். பிரான்ஸ் சோசலிஸ்ட் கட்சித் தலைமை, போர் வெறிபிடித்த புஷ் நிர்வாகத்தின் நண்பனாக தன்னை கருதுகிறது என்பதுதான் உண்மை. இந்த அணுகுமுறையில், தன்னைத்தானே மாயையில் சிக்க வைத்துக்கொள்கின்ற ஓர் அம்சமும் நிராகரிப்பும் இடம்பெற்றிருக்கிறன.

சோசலிஸ்ட் கட்சி பிரதிநிதி ஒன்றுக்கொன்று சம்மந்தம் இல்லாத நிலைப்பாடுகளை, சமரசமாக இணைப்பதற்கு முயன்றிருக்கிறார். இந்த போக்கு, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய பூஸ்வாக்களின் ஆழமான, "இரு தலை கொள்ளி" நெருக்கடி நிலையை எதிரொலிக்கிறது. ஐரோப்பிய ஆளும் குழுக்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக்கொள்வதற்காக அமெரிக்காவின் மேலாதிக்கம் எல்லையற்று செல்வதை எதிர்த்தாக வேண்டுமென்ற கடப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் வாஷிங்டன் உடன் திட்டவட்டமாக, உறவை வெட்டி முறித்துக்கொள்வதற்கு பயப்படுகிறார்கள். அத்தகைய நிலைப்பாட்டால் மிகவும் ஆபத்தான கணக்கிட முடியாத விளைவுகள் ஏற்படக்கூடும்.

சோசலிஸ்ட் கட்சி தற்போது சிராக்கிற்கும் UMP-அரசிற்கும் அரசியல் ஆதரவு தருகிறது. கடந்த பனிரெண்டு மாதங்களில் இரண்டாவது தடவையாக பிரான்சின் பாரம்பரிய "இடதுசாரி" கட்சிகளான, சோசலிஸ்ட் கட்சி(PS) மற்றும், பிரான்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி(PCF), மற்றும் அவர்களது தீவிர இடதுசாரி எடுபிடிகள் ஆகியோர் இரண்டாவது தடவையாக பிரான்ஸ் நாட்டு வலதுசாரிகளோடு அணி சேர்ந்திருக்கின்றனர்.

இதற்கு முன்னர் நடந்த குடியரசுத்தலைவர் தேர்தலில் முதல் சுற்றில் சோசலிஸ்ட் வேட்பாளரான முன்னாள் பிரதமர் ஜொஸ்பன் தோற்றுவிட்டதன் பின்னர் இரண்டாவது சுற்று வாக்குப்பதிவு நடந்தபோது, நவீன பாசிஸ்டான ஜோன்-மரி லு பென்-னை சிராக் எதிர்கொள்ள வேண்டி வந்தது. அந்தச் சூழ்நிலையில் இடதுசாரி கட்சிகளும் தொழிற்சங்கங்களும் சிராக்கிற்கு ஆதரவாக திரண்டனர். பிரான்ஸ் "குடியரசின் மகிமைகளை காப்பவர்" அவர் என்று பாராட்டினார்கள். இந்தக் கொள்கையை கடைப்பிடித்ததன் காரணமாக தற்போது பிரான்ஸ் அரசியலில் அதிகாரம் செலுத்தும் எல்லா நிலைகளிலும் வலதுசாரிகளது ஆதிக்கம் ஏற்பட்டுவிட்டது.

சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட் மற்றும் பிரான்ஸ் நாட்டு இடதுசாரிகள் அனைவரும், சிராக் ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். ஏனென்றால், பிரான்ஸ் ஐ.நா.வில் வாஷிங்டனுக்கு தனது எதிர்ப்பை தெரிவித்திருக்கிறது. இந்த நேரத்தில் சிராக் அரசு வலுவாக காலூன்றி நிற்கவேண்டும் என்று, இடதுசாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். "நமது ரத்து அதிகாரத்தை பயன்படுத்துவோம்" என்ற சோசலிஸ்ட் கட்சியின் சுவரொட்டிகளை பாரீஸ் முழுவதும் காணமுடிகின்றது. அதே போன்று, கம்யூனிஸ்ட் கட்சியும்(PCF) முழக்கம் எழுப்பி வருகிறது. "முழுவதுமாக நாம் போரை தடுத்துவிடலாம்! இதோ ஐ.நா.வில் பிரான்சின் ரத்து அதிகாரம்" என்று கம்யூனிஸ்ட் கட்சியின் சுலோகம் ஒன்று முழக்கமிடுகின்றது.

தற்போது சீராக் மற்றும் UMP-அரசை தாங்கி நிற்பதற்கு பாடுபடுகிறார்கள். இதே அரசு வேலை வாய்ப்புக்களை குறைக்கிறது,. ஓய்வூதியம் மற்றும் முன்னர் வென்றெடுக்கப்ட்ட சமூக நல சலுகைகளை ஒழித்துக்கட்டுகின்து. வரலாறு காணாத அளவிற்கு ஜனநாயக உரிமைகளை பறிக்கிறது.

சோசலிஸ்ட் கட்சியின் அரசியல் முன்னோடிகளான Guy Mollet மற்றும் François Mitterrand ஆகியோர் ஐம்பதுகளில் அல்ஜீரியாவில், பிரான்ஸ் ஏகாதிபத்தியத்தின் நலன்களை முழுமையாக பேணிக்காத்தவர்கள்; எனவே இது தொழிலாளர்களது கட்சி அல்ல; அல்லது சமுதாய சீர்த்திருத்தத்திற்கான கருவியும் அல்ல, பல தசாப்தங்களான கால ஓட்டத்தில் சோசலிஸ்ட் கட்சி பிரான்ஸ் முதலாளித்துவ ஆட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கருவிகளில் ஒன்றாகிவிட்டது.

பக்சாதின் விமர்சனங்கள் மற்றும் ஈராக் நெருக்கடியில் பிரான்ஸ் சோசலிஸ்ட் கட்சி நடந்துகொள்ளும் முறை, ஆகியவற்றைக் கொண்டு பார்க்கும்போது, இந்தக் கட்சி மற்றும் ஒட்டுமொத்தமாக பிரான்ஸ் இடதுசாரிகள், ஏகாதிபத்திய போரை எதிர்ப்பதற்கு ஏற்ற அமைப்புகள் அல்ல; இது பிரான்ஸ் சமுதாயத்தில் உழைக்கும் பரந்துபட்ட மக்களது நலன்களையும், கவலைகளையும் முன்வைக்கும் வல்லமையில்லாத அணியாகும். இது முழுக்க முழுக்க கொள்கைகளை அடகு வைத்து, ஊழலில் சிக்கிக்கொண்ட கும்பலாகும்.

பிரான்ஸ் தொழிலாளர்களும், மற்றும் இளைஞர்களும் ராணுவவாதத்தையும், மற்றும் போரையும் எதிர்ப்பதற்கு சோசலிஸ்ட் கட்சியிலிருந்தும், அதன் ஸ்டாலினிச தொங்கு சதையான கம்யூனிச கட்சியிலிருந்தும், தங்களை விடுவித்துக்கொண்டு, சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஓர் புதிய கட்சியை கட்டியெழுப்பவேண்டும்.

See Also :

பிரான்ஸ்: முன்னாள் பிரதமர் ஜொஸ்பன் மீண்டும் லு மொன்ட் பத்திரிகை பக்கங்களில் தலைகாட்டுகிறார்.

பிரெஞ்சு அரசாங்க கட்சித் தலைவர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் நட்புறவு

Top of page