World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

No resolution to Sri Lankan political crisis

இலங்கை அரசியல் நெருக்கடிக்கு முடிவு இல்லை

By K. Ratnayake
15 November 2003

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, நாட்டை கடுமையான அரசியல் நெருக்கடிக்குள் மூழ்கடித்து சற்றே ஒரு வாரமான பின்னர், தற்போதைய விட்டுக்கொடுப்பற்ற நிலைக்கு முடிவுகட்டும் வழியைத் தேடுவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை புதன் கிழமை சந்தித்தார்.

இரண்டரை மணித்தியால சந்திப்பின் பின்னரும் எந்தவொரு தீர்வும் காணப்படவில்லை. இரு சாராரும் பேச்சுவார்த்தைகள் "சினேகமானதாகவும் மனப்பூர்வமானதாகவும்" இடம்பெற்றதாக மொட்டை அறிக்கையை வெளியிட்டதோடு, "அங்கு பலவிதமான விடயங்கள் தொடர்பாக கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றதாக" பிரகடனம் செய்தனர். எதிர்வரும் வாரங்களில் மேலதிகக் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

எந்தவொரு உடன்பாடும் காணப்படாமை ஆச்சரியத்துக்குரியதல்ல. குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில், கூட்டம் தொடர்ந்தும் இடம்பெற்றதேயாகும். குமாரதுங்க தனது எதேச்சதிகார ஜனாதிபதி அதிகாரங்களைப் பயன்படுத்தி மூன்று முக்கிய அமைச்சுக்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததோடு, துருப்புக்களையும் வீதிகளில் நிறுத்தி, பராளுமன்றத்தையும் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்ததுடன், அவசரகால நிலைமையையும் அறிவித்தது சற்றே ஒரு வாரத்திற்கு முன்னரேயாகும்.

ஜனாதிபதியின் தலைகீழ் நடவடிக்கையானது அதிகாரத்தை அபகரிப்பதில் இருந்து விலகி, ஐக்கிய தேசிய முன்னணி (ஐ.தே.மு) அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்படுவதற்கான உடன்பாட்டை அடையக்கோரி அவர் மீது திணிக்கப்பட்டுவரும் அழுத்தங்களை பிரதிபலிக்கின்றது.

இந்த முரண்பாடுகளின் மையமாக விளங்குவது நீண்ட உள்நாட்டு யுத்தமாகும். பெரு வல்லரசுகளும் பெரு வர்த்தகர்களும் அழிவுகரமான மோதல்களுக்கு முடிவுகட்டுவதன் பேரில், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஒரு அதிகாரப் பகிர்வு கொடுக்கல் வாங்கல்களுக்கு செல்லவும், முழுத் தீவையும் பூகோளப் பொருளாதாரத்திற்கு ஏற்றவகையில் அமைக்கவும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். 2001 தேர்தலில் வெற்றியீட்டிய பின்னர், ஐ.தே.மு. அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் ஒரு யுத்த நிறுத்த உடன்படிக்கையை கைச்சாத்திட்டதோடு பேச்சுவார்த்தைகளையும் ஆரம்பித்தது.

எவ்வாறெனினும், பெயரளவிலான சமாதான முன்னெடுப்புகளை எதிர்க்கக் கோரும் தனது சொந்த பொதுஜன முன்னணியில் உள்ள சில பிரிவினர், மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), சிங்கள உறுமய போன்ற சிங்களத் தீவிரவாத அமைப்புகளின் கோரிக்கைகளுக்கும் குமாரதுங்க முகம் கொடுத்தார். ஐ.தே.மு, தேசிய பாதுகாப்பை ஆபத்துக்குள்ளாக்குவதாகவும் விடுதலைப் புலிகளுக்கு அதிகம் சலுகை வழங்குவதாகவும் பிரகடனம் செய்த ஜனாதிபதி, நவம்பர் 4 அன்று பாதுகாப்பு, உள்துறை, மற்றும் தகவல்துறை அமைச்சுக்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார்.

ஆனால் இரண்டு நாட்களுக்குள் அவசரகால நிலைமையை அமுல்படுத்துவதில் இருந்து ஜனாதிபதி பின்வாங்கினார். அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் கொபி அனானும் பெயரளவிலான சமாதான முன்னெடுப்புகளுக்கு ஏற்படவுள்ள விளைவுகளையிட்டு கவலை தெரிவித்தனர். 20 நிமிடங்கள் குமாரதுங்கவுடன் தொலைபேசியில் உரையாடிய இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயியும் அரசியலமைப்பு நெருக்கடி ஏற்படுவதைத் தடுக்குமாறு வேண்டினார்.

கடந்த வெள்ளிக் கிழமை வாஷிங்டனில் இருந்து திரும்பிய விக்கிரமசிங்க, அரசாங்கத்துக்கும், விடுதலைப் புலிகளுடனான அதன் பேச்சுவார்த்தைகளுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஆதரவளிப்பதாக பறைசாற்றினார். அதேவேளை வர்த்தக உடன்படிக்கைகளும் பொருளாதார நடவடிக்கைகளும் ஆபத்துக்குள்ளாகும் எனவும் அமெரிக்கா சுட்டிக் காட்டியுள்ளது. கொழும்பில் உள்ள சர்வதேச நாணைய நிதியத்தின் பிரதிநிதியான ஜெரமி காடர், 567 மில்லியன் டாலர்கள் நிதி உதவியின் முதற் பகுதியான 80 மில்லியன் டாலர்கள் கிடைப்பது நிச்சயமில்லை என எச்சரிக்கை செய்துள்ளார்.

கடந்த வாரம் முழுவதும் ஆழமான அரசியல் சூழ்ச்சிகள் ஆதிக்கம் செலுத்தியது. குமாரதுங்க கடந்த வெள்ளிக் கிழமை தொலைக் காட்சியில் மக்களுக்கு ஆற்றிய உரையில், "சமாதான முன்னெடுப்புகளுக்கு" தாம் ஆதரவளிப்பதாகவும், யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு கட்டுப்படுமாறு ஆயுதப் படைகளுக்கு கட்டளையிடுவதாகவும் சுட்டிக் காட்டினார். அதேசமயம், அவர் தேசியப் பாதுகாப்பை கீழறுப்பதாக ஐ.தே.மு.வைத் திட்டுவதை நிறுத்தாததோடு, தேசிய ஐக்கியத்துக்கான தேசாபிமான அரசாங்கத்தை அமைக்க அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார்.

விக்கிரமசிங்கவும் ஐ.தே.மு.வும் தேசிய ஐக்கியத்துக்கான அழைப்பை நிராகரித்தனர். அதற்குப் பதிலாக, அவர்கள் சமாதான முன்னெடுப்பை பொறுப்பேற்குமாறு அழைப்பு விடுப்பதன் மூலம் ஜனாதிபதியை தர்மசங்கடத்திற்குள் தள்ளினர். அரச கருவியின் மீதான முழுக் கட்டுப்பாடும் இன்றி அரசாங்கத்தால் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியுமா என அமைச்சரவை செயலாளர் ஜீ.எல். பீரிஸ் கேள்வி எழுப்பினார். அவர் குமாரதுங்கவால் சுவீகரிக்கப்பட்டுள்ள மூன்று அமைச்சுக்களுக்குமான நிதியை தடைசெய்ய தமது நிதி அமைச்சை அரசாங்கம் பயன்படுத்த வேண்டும் எனவும் சமிக்ஞை செய்தார். அரசாங்கம் புதிய தேர்தலுக்கு அழைப்பு விடுக்குமாறு கோரியும் ஜனாதிபதிக்கு சவால்விட்டது.

விட்டுக்கொடுப்பற்ற நிலைமை இன்னமும் தொடர்கின்றது. தற்போதைய சூழ்நிலையில் பேச்சுவார்த்தைகளுக்கான பொறுப்பை ஏற்க முடியாது என சமாதான முன்னெடுப்புகளுக்கான நோர்வே உதவியாளர்களுக்கு அரசாங்கம் அறிவித்துள்ளது. தனது சொந்த கட்சிக்குள் உள்ள சில பிரிவினரின் அனுதாபத்தை இழக்க நேரிடுவதோடு, ஜே.வி.பி.யுடனான சாத்தியமான கூட்டணியையும் கீழறுக்கும் என்ற பீதியில் குமாரதுங்க பேச்சுவார்த்தைகளை பொறுப்பேற்ற மறுத்தார்.

புதன் கிழமை சந்திப்பு உடன்பாடுகள் எதனையும் முன்வைக்கத் தவறிய அதேவேளை, விக்கிரமசிங்கவும் குமாரதுங்கவும் ஒரு முடிவை எட்ட முடியாதவர்களாக உள்ளனர். சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் அரசாங்கத்தின் திட்டமிடப்பட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகளுடன் சமாதான முன்னெடுப்புகள் தொடரவேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக கடந்த புதன் கிழமை ஜனாதிபதியை சந்தித்தனர். பாராளுமன்றம் இலங்கை வரவு செலவுத் திட்டத்தை முன் வைப்பதற்காக 19ம் திகதி கூடவுள்ளது.

பிரதி வெளிவிவகார அமைச்சர் விதார் ஹெல்கிசன் உட்பட நோர்வே ராஜதந்திரிகள் குழுவொன்று, ஏதாவதொரு கொடுக்கல் வாங்களுக்கு ஒட்டு போடுவதற்காக சகல பகுதியினரையும் சந்தித்தனர். நோர்வே, பேச்சுவார்த்தைகளிலான தமது தலையீடு உத்தியோகபூர்வமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அதேவேளை, அரசியல் ஸ்திரமற்ற நிலைமைக்கு முடிவுகட்டுமாறு ஜனாதிபதியையும் பிரதமரையும் நெருக்கினர்.

பெரு வர்த்தகர்களில் பிரதான பகுதியினரை பிரதிநிதித்துவம் செய்யும் கூட்டு வர்த்தகர் சங்கம் அவசரச் சந்திப்புகளைக் கோரி குமாரதுங்கவுக்கும் விக்கிரமசிங்கவுக்கும் கடிதங்கள் அனுப்பியிருந்தது. கடந்த வாரம் ஒரு அறிக்கை வெளியிட்ட இந்த அமைப்பு இரு சாராரையும் கூட்டாக செயற்படக் கோரியது. இந்த நகர்வுகளின் பின்னணியில், அரசியல் ஸ்திரமற்ற நிலைமையானது வெளிநாட்டு முதலீடுகள் தடைப்பட்டு, பங்கு விலைகள் வீழ்ச்சியடைந்து பொருளாதார மீளெழுச்சிக்கு முடிவு கட்டிவிடுமோ என்ற ஆழமான கவலை கம்பனி வட்டாரங்களுக்கு மத்தியில் இருந்து கொண்டுள்ளதைக் குறிக்கின்றது.

கூட்டு வர்த்தக சபையின் அறிக்கையானது, ஐ.தே.மு.வும் பொதுஜன முன்னணியும் தமது வேற்றுமைகளை ஒழித்து, விடுதலை புலிகளுடனான பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு கூட்டு அணுகுமுறையை அபிவிருத்தி செய்யக் கூடிய தேசிய ஐக்கிய அரசாங்கம் ஒன்றை அமைக்குமாறு அழைப்பு விடுத்து வர்த்தகத் தலைவர்களும் மற்றும் ஊடகங்களும் வெளியிட்டுவரும் தொடர்ச்சியான அறிக்கைகளில் புதியதாகும். உதாரணமாக ஐலண்ட் பத்திரிகை தன்னுடைய ஆசிரியர் தலையங்கத்தில் இந்தக் கோரிக்கையை மீண்டும் மீண்டும் வலியுறுத்திய அதே சமயம், இந்த இரு கட்சிகளும் ஒன்றிணைவது "அதிசயத்துக்குரியதாகும்" எனவும் அது கவலை தெரிவித்தது.

இரண்டு பெயரளவிலான தொழிலாளர் கட்சிகளான லங்கா சமசமாஜக் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும், பெரு வல்லரசுகள் மற்றும் பெரு வர்த்தகர்களும் விடுக்கும் "கூட்டுழைப்பு அரசாங்கத்துக்கான" கோரிக்கையுடன் விமர்சனமின்றி அணி சேர்ந்துகொண்டுள்ளனர். "சமாதான முன்னெடுப்புகளுக்கு" அவர்களின் ஆதரவானது, ஐ.தே.மு. அரசாங்கத்தின் தனியார்மயமாக்கம், அரசாங்க செலவு வெட்டு மற்றும் தொழில் வெட்டு உட்பட்ட திறந்த சந்தை மறுசீரமைப்பு பொதிக்கு கணிசமானளவு இரகசிய ஆதரவு வழங்குகின்றது.

தேசிய ஐக்கிய அரசாங்கத்துக்கான அழுத்தங்கள் இருந்துகொண்டுள்ள அதேவேளை, கூட்டு நிர்வாகமானது சிங்கள தீவிரவாத அமைப்புக்களின் பகிரங்க அரசியல் தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் என்பதையிட்டு குமாரதுங்கவும் விக்கிரமசிங்கவும் அக்கறை கொண்டுள்ளனர்.

விசேடமாக குமாரதுங்க பாதிப்புக்குள்ளாகக் கூடியவர். இதுவரை ஜே.வி.பி.யும் சிங்கள உறுமயவும் அவரை தேசத்தைக் காப்பவராக புகழ்ந்து வந்துள்ளனர். ஆனால் ஜனாதிபதி விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளில் ஐ.தே.மு.வுடன் இணைந்து கொள்வாரேயானால் இத்தகைய உணர்வுகள் மிக வேகமாக அவருக்கு எதிராக மாற்றமடையும். அடுத்த பக்கம் அவர் ஜே.வி.பி.யையும் சிங்கள உறுமயவையும் சமாதானம் செய்ய முயற்சிப்பாரேயானால், விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகயை மேற்கொள்வதன் பேரில் தனது பாதுகாப்பு அமைச்சு அதிகாரங்களை பயன்படுத்தக் கூறும் கோரிக்கைக்கு முகம் கொடுப்பார் -இத்தகைய நடவடிக்கை மீண்டும் மோதலை வெடிக்கச் செய்யும் உடனடிச் சாத்தியங்களைக் கொண்டுள்ளது.

இதன் பெறுபேறாக, அரசியல் நிலைமை மிகவும் இறுக்கமானதாக உள்ளது, அரசாங்கமும் சரி எதிர்க் கட்சியும் சரி எந்தவொரு கட்சியும் அடிப்படை ஜனநாயக உரிமை, சிறந்த வாழ்க்கை நிலைமைகள் மற்றும் இனக்குரோதங்களுக்கு அப்பாற்பட்ட நேர்மையான சமாதானத்துக்கான பெரும்பான்மை சாதாரண உழைக்கும் மக்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளையிட்டு ஆலோசிக்கக்கூட இல்லை என்பதை கடந்த 10 நாட்களின் நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

See Also:

இலங்கை ''சமாதான பேச்சுவார்த்தையின்'' அரசியல் பொருளாதாரம்.
பகுதி 1 | பகுதி 2

இலங்கையில் அவசரகால நிலைமை பற்றிய குழப்பநிலை நிலவுகிறது

சோசலிச சமத்துவக் கட்சி இலங்கை ஜனாதிபதியின் அரசியலமைப்பு சதியை கண்டனம் செய்கின்றது

இலங்கை அரசியல் யாப்பு நெருக்கடிக்குள் மூழ்கிப்போயுள்ளது

Top of page