World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

The diplomacy of imperialism: Iraq and US foreign policy

Part five: Donald Rumsfeld and the Washington-Saddam Hussein connection

ஏகாதிபத்தியத்தின் இராஜதந்திரம்: ஈராக்கும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையும்

ஐந்தாம் பகுதி: டொனால்டு ரம்ஸ்பெல்டும், வாஷிங்டன்-சதாம் ஹுசைன் தொடர்பும்

By Alex Lefebvre and Joseph Kay
19 March 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக்கின் வரலாறு, அமெரிக்காவுடனான தொடர்புகளைப் பற்றிய தொடர்கட்டுரைகளில் இது ஐந்தாவது ஆகும். முந்தைய கட்டுரைகள் (ஆங்கிலத்தில்) மார்ச் 12, 13, 16, 17 தேதிகளில் வெளியிடப்பட்டன. இப்பொழுது நாம் 1980 களில் நடைபெற்ற ஈரான்-ஈராக்கியப் போரின்போது அமெரிக்க இராஜதந்திர உறவு எவ்வாறு ஈராக்குடன் இருந்தது என்பதை ஆராய்கிறோம். இக்கால கட்டத்தில், வாஷிங்டன் பலமுறை சதாம் ஹுசைன் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்திய போதிலும்கூட தொடர்ந்து கூடுதலான, வெளிப்படையான முறையில் அவருக்கு ஆதரவு கொடுத்து வந்தது. கீழே சான்றுகளாக மேற்கோளிடப்பட்டுள்ள ஆவணங்கள் சமீபத்தில் இரகசியக் காப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ள தேசியப் பாதுகாப்பு ஆவணங்களாகும்; இவை தேசியப் பாதுகாப்பு பழைய ஆவணங்களில் அனைவராலும் பார்க்கப் படலாம்; அதன் வலைத் தளம்; http://www.gwu.edu/~nsarchiv or http://nsarchive.chadwyck.com.

அமெரிக்க அரசாங்கம் 1980ம் ஆண்டு ஈராக்கை, ஈரான்மீது படையெடுக்கத் தூண்டிவிட்டாலும், ஆரம்பத்தில், அது அதிகாரபூர்வமான நடுநிலையைத்தான் கொண்டிருந்தது. ஈராக்கின் வலிமை ஓங்கியிருந்தாலோ அல்லது இரு நாடுகளும் தமக்கிடையே இரத்தத்தை சிந்துவதில் மூழ்கியிருந்ததால், அமெரிக்கா போர் தொடர்ந்து நடைபெறட்டும் என்று திருப்தியுடன் இருந்தது. பெரு வல்லரசுகள் அனைத்துமே அதிகாரபூர்வமாக சண்டையிடும் நாடுகளுக்கு ஆயுதம் வழங்கப்படக்கூடாது என்ற நடுநிலையைக் கொண்டிருந்தலும், இரண்டு நாடுகளுக்குமே ஆயுதம் வழங்கல் மூன்றாவது நாடுகளின் மூலம் நிகழ்ந்தது.

1982ல் ஈரான்-ஈராக்கியப் போரின் போக்கு தெஹ்ரானுக்குச் சாதமாகப் போகத் தொடங்கியது. அதன் படைகள் முதலில் உள்வந்திருந்த ஈராக்கியப் படையினரை தங்கள் பகுதியிலிருந்து வெளியே துரத்தி, ஜூலை மாதம் முதல் மறு தாக்குதல்களை ஈராக்கிய மண்ணில் பாஸ்ராவிற்கு அருகே தொடர்ந்தன. பாரசீக வளைகுடா வழியே எண்ணெய் ஏற்றுமதி, ஈரானிய விமானப்படை மற்றும் கடற்படையின் முற்றுகையினால் இயலாமற் போய்விட்டதால், நாடே பெரும் நிதிநிலை வீழ்ச்சிற்கு தள்ளப்பட்டது. அயல்நாடுகளிலிருந்து ஏராளமான ஆயுதங்கள் வாங்குவதை நம்பியிருந்த ஈராக்கின் இராணுவ முயற்சியையும் இது ஆபத்திற்கு உட்படுத்தியது. ஈராக் மேற்கத்திய ஆயுதங்களை ஐரோப்பா மூலமும், சோவியத்தின் ஆயுதங்களை எகிப்திலிருந்தும் அமெரிக்க உட்குறிப்பான இசைவுடன் வாங்கியது.

முந்தைய கட்டுரைகளில் விளக்கியுள்ளதுபோல், ஈரான் வெற்றிகண்டால் அப்பகுதியின் உறுதிக்கும் அமெரிக்காவிற்கு எண்ணெய் வழங்குவதிலும் பெரும் ஆபத்திருக்கும் என்று அமெரிக்கா கருதியது. 1995ம் ஆண்டு, றீகன் நிர்வாகத்தின் தேசிய பாதுகாப்பு சபையின் முன்னாள் உறுப்பினரான ஹோவர்ட் டீஷர் (Howard Teicher) கொடுத்துள்ள சாட்சியம், 1982ல் அமெரிக்க அரசாங்கம் றீகன் வெள்ளை மாளிகை உத்திரவின்படி, ஈராக்கிற்கு இரகசியமாக உதவவேண்டும் என்ற கொள்கையை அதிகாரபூர்வமாக்கியதை எடுத்துக்காட்டுகின்றது. அதில் அவர் "ஜனாதிபதி றீகன் இந்த கொள்கையை தேசியப் பாதுகாப்பு முடிவு வழிகாட்டியை (National Security Decision Directive-NSDD) 1982 ஜூன் முதல் முறைப்படுத்தினார். ...CIA இயக்குனர் கேசி நேரடியாக, ஈராக்கிற்குப் போதுமான இராணுவ ஆயுதங்கள், வெடிமருந்துகள், வாகனங்கள் ஆகியவை ஈரான்-ஈராக் போரில் தோல்வி காணாத வகையில் இருக்குமாறு தக்க ஏற்பாடுகளை செய்திருந்தார். இந்த இரகசிய NSDD ஐ ஒட்டி அமெரிக்கா, தீவிரமாக ஈராக்கியப் போருக்கு ஈராக்கியருக்கு பில்லியன்கள் டொலர் மதிப்புடைய கடன்கள், அமெரிக்க உளவுத்துறைச் செய்திகள், ஈராக்கியர்களுக்கு ஆலோசனைகள், வழங்குதல், மூன்றாம் நாடுகள் ஈராக்கிற்குத் தேவையான அளவு இராணுவ ஆயுதங்கள் கொடுக்கின்றனவா என்பதைக் கண்காணித்தல் ஆகியவற்றை மேற்கொண்டது'' என குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா, ஈராக்கிற்கு உதவி செய்வதற்கு வசதியாக, றீகன் நிர்வாகம், ஈராக்கை பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் அரசாங்கங்கள் என்ற பட்டியலில் இருந்து நீக்கியது. இந்தப் பட்டியல் கார்ட்டர் காலத்தில், ஏதேனும் ஒருவிதத்தில் அமெரிக்க நலன்களுக்கு இடையூறு செய்யும் நாடுகளுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகள் போடுவதை நியாயப்படுத்துவதற்குத் தயாரிக்கப்பட்டது ஆகும். இந்தப்பட்டியலிலிருந்து பெயர்நீக்கம் ஆன உடன், ஈராக், அமெரிக்க அரசாங்க நிறுவனங்களான ஏற்றமதி-இறக்குமதி வங்கி போன்றவற்றிலிருந்து கடன்கள் பெறத் தகுதியைப் பெற்றது.

அக்டோபர் 7, 1983, லோரன்ஸ் ஈகள்பர்ஹர் (Lawrence Eagleburger- அப்பொழுது வெளிவிவகாரத்துறையின் மூன்றாம் உயர் அதிகாரியாக இருந்து, அரசியல் விவகாரங்களில் துணைநிலை அரசுத்துறை செயலர் என்ற அந்தஸ்தில் இருந்தவர்) பார்வைக்குத் தயாரிக்கப்பட்ட ஆவணம் ஒன்றில், அரசுத் துறை அதிகாரிகளான நிக்கோலஸ் வேலியோடிஸ்ஸும் (Nicholas Veliotes), ஜோனதன் ஹோவும் (Jonathan Howe), முறையாக இருந்திருந்த அமெரிக்க நடுநிலை அகற்றப்படுவதற்கான காரணங்களைக் கோடிட்டுக் காட்டியிருந்தனர்.

அது முந்தைய அமெரிக்க நடுநிலை நிலைப்பாட்டிற்குக் கூறிய விளக்கம்: "இதுவரை இந்தக் கொள்கை நம்முடைய நோக்கத்தையும், நலன்களையும் நன்கு பராமரித்துள்ளது. இது 1) நேரடியான வல்லரசு குறிக்கீட்டை தவிர்த்திருந்தது, 2) போரில் ஈடுபடும் நாடுகளின் எல்லையைக் கடந்து வளைகுடா எண்ணெய் வழங்குதலை பாதிப்பு ஏற்படாமல் தடுத்தது 3) தற்பொழுதைய இராணுவ நடவடிக்கைகள் ஸ்தம்தித்துபோவதற்கு வகை செய்தது, 4) வருங்காலத்தின் உறவுகளை ஈரானுடன் வளர்ப்பதைக் காக்கவும், அதேநேரத்தில் சோவியத் ஒன்றியத்தின் விரிவாக்க முயற்சிகள் குறைக்கப்பட்டதிலும் பங்கு கொண்டிருந்தது''.

இப்போர் முன்பு அமெரிக்காவிற்கு நன்மைகள் கொடுத்திருந்தபோதிலும், இந்த ஆவணத்தின்படி, சோவியத் ஒன்றியத்தின் செல்வாக்கை குறைத்து இப்பகுதியை வலுவற்றதாகவும், பிரிவினைகளுக்கு உட்படுத்தியும் வைத்திருந்தபோதிலும், இப்போர் பரவி இப்பகுதியில் இருக்கும் ஸ்திரநிலை சிதைந்து போகும் ஆபத்தையும் கொண்டு இருந்தது. "இராணுவக் கெடுபிடியுடன் இணைந்த நிதித்துறை நெருக்கடி மூலம் ஈராக்கின் ஆட்சி சரிவை ஏற்படுத்தும் ஈரானிய மூலோபாயம் மெதுவாக தனது விளைவைக் காட்டிக் கொண்டிருக்கிறது." என வெலியோடிஸ், ஹோவே இருவரும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த அறிக்கை, ஈராக்கின் வறிய கடன் நிலை காரணமாக சர்வதேச நிதியுதவி வழங்க முடியாது என்றும், புதிய எண்ணெய் குழாய்கள் ஈராக் நாட்டில் எண்ணெய் வருவாயைப் பெருக்குவதற்கு, அமைக்கப்படலாம் என்று ஆலோசனை கூறியது. அமெரிக்க நிதி உதவி, ஈராக்கின் நிதி நிலைப்பாடு பற்றி தனிப்பட்ட கடன் வழங்குவோரிடையே நல்ல எண்ணத்தைக் கொடுக்கும் என்றும் தெரிவித்தது. ஒரு "மட்டுப்படுத்தப்பட்ட சாய்தல்", அதேநேரத்தில் "பொதுவான நடுநிலை போக்கை காண்பிக்கும் நிலையும்" இருந்தால், அமெரிக்காவிற்குள் எதிர்ப்பைக் குறைக்கவும், ஈரானுடன் உறவுகளை மேம்படுத்திக்கொள்ளவும் இயலும் என்று அறிக்கை முடிவடைந்திருந்தது.

இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்படல்

1925ல் அமெரிக்கா, ஈரான், ஈராக் மூன்றுமே கையெழுத்திட்டிருந்த ஜெனிவா உடன்படிக்கைக்கு மாறாக, ஈராக் விஷவாயு ஆயுதங்கள் பயன்படுத்துகிறது என்ற அக்டோபர் 22, 1983ல் ஈரானிய குற்றச் சாட்டுக்கள் அமெரிக்க அரசாங்கத்தை கூடுதலான அரசியல் பிரச்சனைகளை எதிர்கொள்ள வைத்தது. வெளிப்படையாக அமெரிக்க அரசாங்கம், ஈராக் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதா என நிர்ணயம் செய்வதற்கு தன்னிடம் போதுமான தகவல் இல்லை என்ற நிலைப்பாட்டை கொண்டது.

ஆனால், தனிப்பட்டவகையில், றீகன் நிர்வாகத்தின் அதிகாரிகள் ஈராக் இராசயன ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளது என்பதைப் பற்றிச் சந்தேகப்படவில்லை. அவர்களைப் பொறுத்தவரையில், ஈராக்கின் போர் முயற்சிக்கு கூடுதலான உந்ததுதல் எப்படிக் கொடுக்கப்படலாம், அதே நேரத்தில் ஜெனிவா உடன்பாடு மீறப்படாமலும் இருக்க வேண்டும் என்பதுதான் பிரச்சினை.

அரசுத் துறையின் அரசியல் இராணுவ விவகாரங்கள் பிரிவிலிருந்து, நவம்பர் 1, 1983ல் அரசுத் துறை செயலாளர், ஜோர்ஜ் ஷல்ஸுக்கு (George Shultz ) வந்த ஒரு குறிப்பு, கிட்டத்தட்ட "ஒவ்வொரு நாளும்" ஈராக் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது எனக் குறிப்பிடுகிது. "ஈராக் ஒரு இராசயன தாக்குதல் திறனையும் பெற்றுள்ளது என்று அறிகிறோம், முக்கியமாக மேற்கத்திய நிறுவனங்களிலிருந்து, அமெரிக்க அயல்நாட்டு துணைநிறுவனமாகக்கூட இருக்கலாம். (வலியுறுத்தல் சேர்க்கப்பட்டுள்ளது)

இந்த குறிப்பை தயாரித்தவர், ஈராக் தொடர்ந்து இராசயன ஆயுதங்களைப் பயன்படுத்தினால், "அமெரிக்கா இரசாயன ஆயுதங்களுக்கு (chemical weapon) எதிராகக் கொண்டுள்ள கொள்கை பற்றிய மதிப்பு" தாழ்ந்துவிடும் என்ற அக்கறையை வெளிப்படுத்தியுள்ளார். தான் வெளிப்படையாக ஈராக்கை இரசாயன ஆயுதங்களை பயன்படுத்த அனுமதித்தால், மற்ற நாடுகள், குறிப்பாக அமெரிக்கா ஆதரவு அளித்துள்ள ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு எதிராக, சோவியத் ஒன்றியம் தன்னுடைய இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடிய அபாயம் இருந்தது.

நவம்பர் 10, 1983ல், ஒரு அரசுத்துறை பின்னணிக் கருத்தாய்வு ஈராக் இராசயன ஆயுதங்களை பயன்படுத்துதலை பற்றி அமெரிக்கா எந்த அளவு அறிந்துள்ளது என்பது பற்றி தெரிவிக்கிறது. "முன்பே, ஜூலை 1982 இலேயே, ஈராக் கண்ணீர் வாயு, தோல் எரிச்சல்தரும் இராசயன முறையை ஈரானிய படைகள் எதிர்த்து வந்தபோது வெற்றிகரமாக பயன்படுத்தியுள்ளது. அக்டோபர் 1982ல், பெயரிடாத அயல்நாட்டு உயர் அலுவலர்கள் சதாம் உத்திரவின்பேரில் மண்டல பகுதி போர்களில் பெரும் தீங்கு விளைவிக்கும் இராசயன முறைகளை பயன்படுத்தினர்... [பந்தி ஒழுங்குபடுத்தப் பட்டுள்ளது] ஜூலை, மற்றும் ஆகஸ்ட் 1983ல், ஈராக்கியர்கள் ஒரு இரசாயன முறையை, ஹஜ் உமரன்மீது படையெடுத்து வரும் ஈரானியப் பிரிவுகள்மீதும், அண்மையில், குர்திஷ் எழுச்சியினருக்கு எதிராகவும் பயன்படுத்தினர்."

ஈராக்கியர், ஈராக்கிய குர்துகளுக்கு எதிராக இரசாயன ஆயதங்களைப் பயன்படுத்தியது (சதாம் ஹுசைனின் "நம்முடைய மக்கள்"), பின்னர் தற்போதைய புஷ் நிர்வாகத்தினால், ஹுசைனால் இழைக்கப்பட்ட மாபெரும் குற்றமாகக் கூறப்பட்டுள்ளது.

அதேநாள், பாக்தாதிலுள்ள அமெரிக்க அதிகாரிகளுக்கு அனுப்பிய தனிச்செய்தியில், அரசு துறை எழுதியது: "ஐக்கிய நாடுகள் சபையில் இந்தப் பிரச்சினை பெருகியுள்ளதற்கு எப்படிப் பதில் கூறுவது என்று பரிசீலனை செந்துகொண்டிருக்கிறோம். ஈரானின் பிடிக்குள், அதன் ஈராக்கிற்கு எதிரான பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுக்கொண்டிருக்கும் தன்மையில், அகப்பட்டுக்கொள்ள நாங்கள் விரும்பவில்லை." அரசு துறை அமெரிக்க அதிகாரிகளிடம் ஈராக்கின் வெளியுறவு அமைச்சர் தாரிக் அஜிசிடம், "உங்களோடு மோதுதல் நிலையைக் கொள்ளவோ, மற்றவர்களுக்கு ஆதரவு கொடுப்பதற்காகவோ, இந்தப் பிரச்சினையை இப்பொழுது எழுப்பவில்லை; மாறாக இது நீண்ட காலமாக அமெரிக்கா பெரும் ஆபத்து விளைவிக்கும் இரசாயன ஆயுதங்களை எதிர்த்து வந்துள்ள கொள்கைதான் என்பதைத் தெளிவாக்குகிறோம்."

றீகன் நிர்வாகத்தின் அதிகாரிகள் எப்பொழுதுமே, ஈராக் விஷவாயுவைப் பயன்படுத்துவதைச் சிக்கல் வாய்ந்ததாகத்தான் கருதி வந்துள்ளது; ஏனெனில், இது அவர்களை வெளிப்டையாகக் கொண்டுள்ள நிலைப்பாட்டிற்கு மாறாகக் காண்பித்துவிடும். 1983, நவம்பர் 23ல், ஈகிள்பர்க்கருக்கு அனுப்பிய ஒரு குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: "அண்மையில் ஈராக் இராசயன ஆயுதங்களை (CW) பயன்படுத்தியதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வந்துள்ளன. ...ஈராக்கியரிடம் நம்முடைய அணுகுமுறை பற்றி விரைவில் தெளிவுபடுத்திவிடுவது, மேலும் அவர்கள் இந்த இரசாயன முறையை பயன்படுத்துவதை தடைசெய்யவும், இந்த நிலைப்பாடு பற்றிப் பொதுவில் நாம் கொண்டுள்ள முறையை அறிவித்து அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தாமல் இருக்கவும், இது இன்றியமையாதது."

ரம்ஸ்பெல்டின் முதல் பாக்தாத் வருகை

ஈராக் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதால் ஏற்பட்ட பிரச்சனைகளைப் பற்றிப் பேச்சு வார்த்தைகள் நடத்த முயற்சி செய்ததை அடுத்து, அமெரிக்கா பாக்தாத் ஆட்சியுடனான உறவுகளை நெருக்கமாக தொடரவேண்டிய கருத்தைக் கொண்டிருந்தது. டிசம்பர் 1983ல், டொனால்ட் ரம்ஸ்பெல்ட், அப்பொழுது சேர்ல் மருந்துத் தயாரிப்பு நிறுவனத்தில் (Searle pharmaceutical company) முதன்மை அதிகாரியாக இருந்தவர், ஜனாதிபதி றீகனின் மத்திய கிழக்கு சிறப்புத் தூதராக, பாக்தாதிற்கு அனுப்பப்பட்டார்.

ஈராக்கிய வெளியுறவு அமைச்சர் தாரிக் அசீஸ்ஸை டிசம்பர் 19 அன்றும், டிசம்பர் 20 அன்று சதாம் ஹுசைனையும் ரம்ஸ்பெல்ட் சந்தித்தார். பாக்தாத்தில் அமெரிக்க நலன்கள் பிரிவிலிருந்து, ஜோர்டானிலிருந்து அமெரிக்கத் தூதரகத்திற்கு ஒரு குறிப்பு 1983 டிசம்பர் 14 அன்று அனுப்பப்பட்டது, அது கூறுகிறது: "சதாம் ஹசைனை சந்திப்பதின் முக்கிய குறிக்கோள், ஓர் உரையாடலுக்கும், தனிப்பட்ட தொடர்பு வளரவும் முயற்சியை மேற்கொள்வதற்கு ஆகும். அந்தக்கூட்டத்தில், தூதர் ரம்ஸ்பெல்ட், ஜனாதிபதி றீகனுடனான தன்னுடைய பிரத்தியேகமான, நெருங்கிய உறவை வற்புறுத்திக் கூற விரும்புவார்." ரம்ஸ்பெல்ட் விவாதிக்க விரும்பிய கருத்துக்களில், "அமெரிக்க அரசாங்கம், ஈராக்கின் தற்போழுதைய கஷ்டநிலையை, அதிலும் கசப்பான போர்நிலையை, குறிப்பாக ஈரான் வளைகுடாவை அணுகமுடியும்போது, ஈராக்கினால் முடியவில்லை என்பதை அறிந்து, ஈராக்கிய நலன்கள் பெரும் பின்னடைவிற்கு உட்பட்டால் அவை மேற்கத்திய ஒரு மூலோபாய தோல்வி என்பதையும் வலியுறுத்துவார்." (வலியுறுத்தல் சேர்க்கப்பட்டுள்ளது.)

அசீசைத் தான் சந்தித்தது பற்றிய விவரத்தை அரசுத் துறைக்கு தந்தி மூலம் அனுப்பிய ரம்ஸ்பெல்ட் எழுதினார்: "இராஜதந்திர உறவுகளை நாம் பெறுவதற்காக நான் அங்கு வரவில்லை என்று அவரிடம் கூறினேன். ...அவர்கள் சற்று உயர்ந்த அளவு உறவுமுறைகளை நம்முடன் கொண்டு உலக்த்திற்கு நமக்கிடையே உள்ள உறவுகள் முக்கியமானவை எனத் தெரிவிக்க விரும்பினால் நாம் அதற்குத் தயாரென்றும், நம் இரு நாடுகளுக்கும் இடையிலான வேற்றுமைகளைவிட ஒற்றுமைகள் அதிகம் என்றும் கூறினேன் ...அமெரிக்க ஓர் ஈரானிய வெற்றியை விரும்பவில்லை என்றும், மாறக ஈராக்கின் இழப்பில், ஈரான் தன் செல்வாக்கை வளர்த்துக் கொள்ளக் கூடாது என்பதைத்தான் நாம் விரும்புகிறோம் என்றும் தெரிவித்தேன்."

ரம்ஸ்பெல்டும், அசீசும், ஈராக்கிய எண்ணெய் ஏற்றுமதி பற்றியும் விவாதித்தனர். ரம்ஸ்பெல்ட், ஜோர்டான் வழியாக அக்வபா (Aqaba) வளைகுடாவிற்கு இணைக்கும் எண்ணைய் குழாய்கள் பற்றிய திட்டத்தை பெட்கலோடு (Bechtel) நிறுவனத்தால் செய்யப்படலாம் என தெரிவித்தார். (பெட்கலின் முன்னாள் உயர் அதிகாரியான ஜோர்ஜ் ஷல்ஸ் (George Shultz) அப்பொழுது அரசுத்துறை செயலராக இருந்தவர்.) அவர்கள் மத்திய கிழக்கு விவகாரங்களையும், குறிப்பா ஈரான்-ஈராக் போர் பற்றியும் பேச்சுவார்தைகள் நடத்தினர். ஈரானுக்கு ஆயுதங்களை விற்பனையை தடுப்பது பற்றியும், ஐ.நா. இது பற்றி ஈராக்கை கண்டனம் செய்து அறிக்கை விடாமலும் இருப்பது பற்றி தடுப்பதைய் பற்றி, ரம்ஸ்பெல்ட் எழுதினார்; "கூடுதலாக நாம் விரும்பிச்செய்ய இருப்பது பற்றியும் தெரிவித்தேன். (நீண்ட பந்தி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது). நான் அவர்களுக்குக் கூடுதலான உதவி அளித்தல், அவர்கள் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்துவது போன்றவற்றில் ஈடுபட்டிருப்பது எப்படி நம் பணியைக் கடினமாக்குகிறது என்று எடுத்துரைத்தேன்."

ரம்ஸ்பெல்டுடன் நடத்திய பேச்சுக்களில், ஹுசைன் ஆரம்பத்தில் அவர் எப்படி எல்லா சட்டபூர்வமான தடைகளையும், அமெரிக்க-ஈராக் இராஜதந்திர உறவுகள் மீண்டும் கொண்டு வருவதற்காக அகற்றிவிட்டதை எடுத்துக் கூறி, இராணுவ நிலை முன்னேறும் வரை அவர் முறையாக உறவுகள் புதுப்பித்தலுக்குக் காத்திருப்பேன் என்றும் கூறினார்; மிகுந்த ஏக்கத்தில் அவர் இவ்வாறு கூறுவதாக எடுத்துக் கொள்ளப்படவேண்டாம் என்ற கருத்தில் அவர் அவ்வாறு சொன்னார். "அமெரிக்க இத்தன்மையை உணர்ந்ததைக் கண்டு தான் மகிழ்ச்சி அடைவதாகவும், உரிய நேரம், சூழ்நிலையை ஈராக் தேர்ந்தெடுக்க விட்டுவிடுமாறும்" கூறினார்.

அமெரிக்க-ஈராக்கிய கூட்டினை தொடர்வதற்கான உந்துதலைப் பற்றி விவாதிக்கையில், அத்தைகைய உறவு தொழிலாள வர்க்கம், ஒடுக்கப்பட்ட வெகுஜனம் இவர்களுடைய எதிர்ப்பை மழுங்கச் செய்துவிடும் என்றும் சோவியத் ஒன்றியத்தின் செல்வாக்கைக் குறைக்கும் என்ற கருத்தையும் தெரிவித்தார்: "அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, ஜப்பான் ஆகியவை இன்னும் கூடுதலான நிதியுதவி அளிக்க முன்வரவேண்டும் என்றும் ..... வர்க்க மோதல்களுள் பலவழிகளில் வெளிநாட்டுச் செல்வாக்குகள் புகாமல் தடுக்கப்பட அவை பயன்படும் என்றும் கூறினார்."

இக்கூட்டத்தில் பலதரப்பட்ட தலைப்புக்களும் சுருக்கமாக விவாதிக்கப்பட்டன - ஈராக்-ஜோர்டான் எண்ணெய் குழாய்க்கான திட்டம், அதை இஸ்ரேலியர் தாக்குதலிருந்து காப்பாற்ற வேண்டிய தேவை, அமெரிக்க, ஈராக்கிய அரசாங்கங்கள் சிரியாவின் செல்வாக்கைக் குறைக்க மேற்கொள்ளவேண்டிய பொது அக்கறைகள், குறிப்பான லெபனானின் உள்நாட்டுப்போர், இஸ்ரேலிய-பாலஸ்தீனிய பேச்சுவார்த்தைகளுக்கு ஓர் அடிப்படை காணப்படவேண்டியது போன்றவை விவாதிக்கப்பட்டன. ரம்ஸ்பெல்டோ, ஹுசைனோ, ஈராக்கிய இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது பற்றிக் குறிப்பிடவில்லை.

ஈராக்கிற்கு வாஷிங்டன் கொடுத்த ஆதரவு, பாக்தாத் அமெரிக்க அரசாங்கத்தைக் கூடுதலாக நம்பியிருக்கவேண்டிய நிலையை ஏற்படுத்திவிட்டது. போரின் செலவுகள் மிகவும் உயர்ந்தவுடன், ஈராக் அமெரிக்காவிற்கும், அதன் ஐரோப்பிய, மத்திய கிழக்கு நட்பு நாடுகளுக்கும், வளைகுடா முடியரசுகள், எகிப்து ஆகியவற்றிடம் பணத்திற்கும் ஆயுதத்திற்கும் முறையீடு செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது அசிசால் ரம்ஸ்பெல்டுடனான தன்னுடைய பேச்சுவார்த்தைகளில் தெளிவாக்கப்பட்டிருந்தது.

கூட்டத்தை பற்றிய குறிப்புக்கள், "ஈராக் தன்னுடைய சிந்தனையையும், கருத்து உறுதிப்பாடுகளையும் கொண்டிருந்தபோதிலும், உலகில் பிறருடன் அவர்கள் இருக்கும் நிலை அறிந்து அதன்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதை உணர்வதாகவும் ... மேலும், தற்பொழுது பாக்தாதில் இருப்பது போன்ற பாத் அரசாங்கம் போன்ற ஒரு சோசலிச-புரட்சிகர ஆட்சி 5000 ஆண்டு மெசபொடேமிய நாகரிகப் பின்னணியைக் கருத்திற்கொண்டும் நடந்து கொள்ளவேண்டும். ஈராக்கின் அதிகரித்துவரும் முதிர்ச்சியும், திறமையும், கடந்த 15 ஆண்டு காலப் பிழைகளினால் படிப்பினைகளை ஏற்றுக்கொள்ளும் தன்மையும் அவரால் (அசிசால்) வலியுறுத்தப்பட்டன. (ஈராக்கியப் பொருளாதார முன்னேற்றத்திற்கு) எண்ணெயின் முக்கியத்துவம் அசீசினால் குறிப்பிடப்பட்டதுடன், எண்ணெய் ஏற்றுமதியாளர் என்னும் முறையில் தங்கள் வாடிக்கையாளரிடம் ஈராக் நீண்ட கால, உறுதியான, நல்லுறவுகளையே விரும்பியது என்றும் தெரிவித்தார். மேற்கத்திய நாடுகளும் ஈராக்கின் வளர்ச்சியினால் நன்மைகளைத்தான் பெற்றுக் கொண்டு இருக்கின்றன. ஈராக்கிலுள்ள 800 வெளிநாட்டு வணிக நிறுவனங்களில் 500க்கும் மேற்பட்டவை மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவைதாம். அவர்கள் பொருளாதாரத்தில் பங்கு பெறுவது, ஈராக்கியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், ஈராக்கும் அத்தகைய நாடுகளுடனான நீண்ட கால உறவைக் கருத்திற் கொள்ளவைக்கிறது. பிராந்திய மற்றும் சர்வதேச உறுதியற்ற தன்மை ஈராக்கிய நலனுக்கு எதிராக இருக்கும் என்றும் ... இதன் பின்னர் அசீஸ், ஈரான்-ஈராக் போர் முடிவதற்கு அமெரிக்க, மேற்கத்திய உதவியை நாடினார்."

அசீசுடைய பாத் அரசாங்கத்தின் தன்மை தொடர்பான "சோசலிச-புரட்சிகர" என்ற அபத்த கருத்தை தவிர, மற்றைய கருத்துக்கள் உள்நாட்டு பிரச்சினைகளில் நிதான போக்கை காட்டுவதுடன், வெளிநாட்டு முதலீட்டை வரவேற்கும் பாங்கையும் காட்டுகின்றன. அதிகமான மேற்கத்திய நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்கள் இவற்றுடனான நல்லுறவுகளை வளர்க்கவேண்டும் என்ற தன்மையைக் காட்டியதுடன், பாத் அரசாங்கம் ஈராக்கிய மக்களுக்கு கொடுத்த சலுகைகள் மற்றும், அரேபிய முதலாளித்துவம் அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்தியத்திலிருந்து சுயாதீனமாக இயங்க அனுமதித்த எண்ணெய்த்துறை தேசியமயமாக்கப்படுதல், கனரக தொழில் தேசியமயமாக்கப்படல், எண்ணெய் விற்பனைத் தடை ஏற்படுத்தப்படும் என்ற பயமுறுத்தல் போன்ற எல்லா முந்தைய நடவடிக்கைகளிலிருந்தும் விலகவிருப்பதாக அசிஸ் தெரிவித்தார்.

தொடரும்.....

See Also :

முதல் பகுதி: ஈராக்கிய முடியாட்சியும், சமூக முரண்பாடுகளின் வளர்ச்சியும்

இரண்டாம் பகுதி: ஈராக்கியத் தேசிய இயக்கங்கள், நிரந்தரப் புரட்சி, மற்றும் பனிப்போர்

மூன்றாம் பகுதி: ஈராக்கின் பாத் கட்சியின் தோற்றுவாயிலிருந்து, அரசியல் அதிகாரம் பெற்ற வரை

நான்காம் பகுதி: 1970 களில் ஈராக்கும், ஈரான்-ஈராக் போரின் ஆரம்பமும்

Top of page