wsws : Tamil

 


அமெரிக்க ஜனநாயகத்தின் நெருக்கடி...

Use this version to print | Send this link by email | Email the author

சுருக்கம்: அமெரிக்காவில் ஜனநாயகம் ஒரு நெருக்கடியான நிலையில் இருப்பதாக டேவிட் நோர்த் விளக்கியுள்ளார். இதை அவர் பொருளாதாரத்துடனும், திருகுச்சுருள் வடிவில் உயர்ந்து கொண்டிருக்கும் தேசியக் கடனுடனும், ஒரு சிலர் மிகப் பரந்த அளவில் செல்வத்தை பெருக்கியுள்ளதுடனும் தொடர்புபடுத்தி இது வரலாற்றிலேயே முன்னோடி இல்லாத தன்மையை கொண்டிருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

விவரங்கள் அல்லது உரையாடலின் பதிவு:

லின் கல்லச்சேர் (Lyn Gallacher): அமெரிக்க பாணி ஜனநாயகம் உலகின் மற்ற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுக் கொண்டுவருகிறது. ஆனால் இந்த முறை (முன்மாதிரி) உள்ளூரிலேயே சரிவரச் செயல்படுகிறதா? சோசலிச எழுத்தாளரான டேவிட் நோர்த் அமெரிக்க ஜனநாயகத்தின் நெருக்கடி என்று ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்; இப்பொழுதுள்ள நிலைமை தொடர்ந்து நீடிக்க இயலாததாக இருக்கிறது என்ற நிலையில் உலக அரசியலில் நாம் ஒரு பிரமாண்டமான மாற்றத்தை காண இருக்கிறோம் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவராக டேவிட் நோர்த் உள்ளார்; இந்தப் பதிப்பிற்கும் அவர்தான் தலைவர்; முன்னர் அவர், நாம் காக்கும் மரபியம் என்ற நூலையும் அவர் வெளியிட்டுள்ளார். டேவிட் நோர்த்தின் தற்போதைய கட்டுரைத் தொகுப்புக்கள், அமெரிக்க ஜனநாயகத்தின் நெருக்கடியை பற்றியவை, சமீபத்திய அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்களில் தொடங்கி, ஜனநாயகம் ஏன் நெருக்கடியில் இருக்கிறது என்றால் தேர்தல் முறை பிழைபொருந்தியதாக இருப்பதும் ஒரு காரணமாகும் என்ற கருத்தைக் கூறியுள்ளார். அமெரிக்க செய்தி ஊடகமும், அமெரிக்க பொருளாதாரமும் கூட பிழைபொருந்தியதாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். இந்த மூன்றாம் பொருளில் இருந்து நாம் தொடங்குவோம். ஈராக்கிய போரை கருத்திற்கொண்டு, தற்போதைய அமெரிக்க இராணுவச் செலவுகளின் மட்டம் நாட்டை திவாலாக்கி கொண்டிருக்கிறது என்று அவர் நம்புகிறாரா என்று டேவிட் நோர்த்தை கேட்டேன்.

டேவிட் நோர்த் (David North): ம், உண்மையில் அது திவாலுக்கு பெரும் வகைசெய்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா ஒரு மாபெரும் வல்லரசு, எந்த நாடும் அமெரிக்க போல் சக்திவாய்ந்ததாக இருந்ததே இல்லை என்று நிறையவே பல பேச்சுக்கள் உள்ளன, நீங்களும் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்தப் புத்தகத்தின் ஒரு மையக்கருத்து யாதெனில் கடந்த 30 ஆண்டுகளில் உண்மையில் அமெரிக்க முதலாளித்துவத்தின் உலக நிலைமையில் ஒரு நீடித்த சரிவுதான் இருந்திருக்கிறது; இந்த இராணுவவாதம் எனும் இயல்நிகழ்ச்சி, அதிகரித்த வகையில் தடையின்றி பயன்படுத்தப்படும் அமெரிக்க இராணுவ சக்தி, ஒரு வலிமையின் வெளிப்பாடு அல்ல மாறாக பலவீனத்தின் வெளிப்பாடுதான்; தன்னுடைய உலக அந்தஸ்தில் நீடித்திருக்கும் வீழ்ச்சியை சரி செய்வதற்காக அமெரிக்கா மேற்கொண்டுள்ள முயற்சிதான் இந்த இராணுவ பலத்தை பயன்படுத்துதல் ஆகும். உண்மையில், 1937ம் ஆண்டு ரூஸ்வெல்ட் ஆற்றிய புகழ் பெற்ற உரை ஒன்று உள்ளது, அவருடைய பெருமைவாய்ந்த "ஆக்கிரமிப்பாளரை தனிமைப்படுத்தி ஒதுக்கிவை" ('Quarantine the Aggresor') என்ற உரை, நாஜிக்களுடைய வெளியுறவுக் கொள்கைகளை கண்டித்து அவர் ஆற்றிய உரை ஆகும். அதில் அவர் கூறியுள்ள பல கருத்துக்களும் இன்றைய அமெரிக்க கொள்கை பற்றிய கடும் குற்றச்சாட்டு எனக் கூறவியலும்.

Google மூலம் "ஆக்கிரமிப்பாளரை தனிமைப்படுத்தி ஒதுக்கிவை" ('Quarantine the Aggressor') என்று தேடச்சொல்லுங்கள்; ரூஸ்வெல்ட்டின் உரை கிடைக்கும். அது எவ்வாறாயினும்கூட, அவர் கூறிய கருத்துக்களில் ஒன்று, அமெரிக்காவை நாஜி ஜேர்மனியுடன் ஒப்பிட்டுப் பேசுகையில் அக்காலக்கட்டத்தில் அமெரிக்கா தன்னுடைய தேசிய வருமானத்தின் மிகச் சிறிய பகுதியைத்தான் இராணுவச் செலவினங்களுக்காக ஒதுக்கியது என்றும், இது குறித்து அமெரிக்கா பெருமிதம் அடைகிறது, ஏனெனில் தன்னுடைய பணத்தை உள்கட்டுமானத்தை அமைப்பதற்கும், மக்களுடைய வாழ்வை முன்னேற்றுவிக்கவும் அது செலவழிக்கின்றதே அன்றி, வீணான ஆயுத தளவாடங்கள், ஆக்கிரமிப்புப் போர்களில் அல்ல என்று அவர் கூறியுள்ளார். அத்தகைய உரை இன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஒருவரால் கொடுக்கப்பட முடியாததொன்றாகும்.

இன்று, உலகத்தில் மிக அதிகமான கடனைக் கொண்டுள்ள நாடு அமெரிக்கா ஆகும்; அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை, 2005ல் 600 பில்லியன் டாலர்களை எட்டும்; அமெரிக்காவில் நிகர சர்வதேச முதலீட்டு நிலைமை 2004ம் ஆண்டின் இறுதியில் 3.3 டிரில்லியன் டாலர்கள் ஆக, அதாவது அதன் மொத்த உள்ளநாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பகுதியாக இருந்தது. இத்தகைய தொகைகள் நீடித்திருக்க முடியாதவை, ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியை அவை சுட்டிக்காட்டுகின்றன. இது தொடர்ந்து இருந்தால், அமெரிக்காவை ஆட்சி செய்யும் பணவெறி பிடித்து அலையும் ஒரு சிறு குழுவின் உலக ஆதிக்க பேரவாவிற்காக, ஜனநாயக உரிமைகள் அழிக்கப்பட்டுக் கொண்டிருத்தல், இன்னும் கூடுதலான இரக்கமற்ற முறையில் ஜனநாயகம் ஒடுக்கப்படுதல், மக்களுடைய நலன்கள் தாழ்த்தப்படுதல் ஆகியவை பெருகும்.

நான் மீண்டும் இந்த ஜனநாயகம், அதன் சமூக உள்ளடக்கம் பற்றிய கருத்திற்கு வருகிறேன். நாம் வரலாற்றில் இருந்து ஏதேனும் படிப்பினைகளை கற்றுக் கொண்டோம் என்றால், எங்கு சமூக சமத்துவமின்மை மிகத்தீவிரமான அளவில் இருக்கிறதோ அந்த சமுதாயத்தில் நிலவும் சூழ்நிலைமைகளுடன் ஜனநாயகம் இயைந்து செயல்பட முடியாது என்று அது தெரிவிக்கிறது. சில புள்ளிவிவரங்களை இந்நூலில் கொடுத்துள்ளேன்: 1960ம் ஆண்டில், நல்ல வருவாய் உள்ள 500 நிறுவனங்களில் ஒரு பெருநிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரியின் (CEO) வருமானம், உற்பத்திப் பகுதியில் வேலைபுரிபவரைவிட சராசரியாக 40 மடங்கு அதிகமாக இருந்தது. அது இப்பொழுது 40ல் இருந்து 40ன் பெருக்கங்களாக, இந்த ஆண்டு 500 மடங்கிற்கும் அதிகமாகப் போய்விட்டது. இவற்றின் உட்குறிப்புக்களை ஆராயும்போது இத்தகைய சமூக சமத்துவமின்மை மட்டங்களின் தன்மை அதிர்ச்சியூட்டுபவையாகும், பணத்தின் அளவு கற்பனைகூட செய்து பார்க்க இயலாததாக உள்ளது.

பெருநிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளின் ஊதியம் பற்றி தொகுத்து ஆவணமாக வெளியிட்டுள்ள ஒரு வலைதளத்தை சமீபத்தில் ஆராய்ந்தேன்; அது என்ன கூறுகிறது... அமெரிக்காவில் இருக்கும் உயர்மட்ட ஆயிரம் நிறுவனங்களில் உள்ள உயர்மட்ட நிர்வாகிகள் முதல் ஆயிரம் பேரின் வருமானம் பற்றி... அவர்களுடைய ஆண்டு வருமானம், ஊதியமும், பங்கு விருப்பங்களும், கிட்டத்தட்ட 25 முதல் 30 பில்லியன் டாலர்கள்வரை என்றுள்ளது. இது உலுக்கி எடுக்கக் கூடிய தகவல் ஆகும். கடந்த கால வரலாற்றில் இதற்கு ஒப்பிட்டு எதையும் கூறுவதற்கில்லை! அமெரிக்க முதலாளித்துவ முறையாயினும் சரி, உலக முதலாளித்துவ முறையாயினும் சரி அச்செல்வக் கொழிப்பானது, ஜனநாயகத்தை முற்றிலும் அரிக்கின்ற வகையில் உயர்ந்த நிலையில் உள்ளது. அந்த மட்டத்தில் வாழ்வை நடத்துபவர்கள் முற்றிலும் வேறுவிதமான உலகில் வாழ்பவர்களாவர். எதை விரும்பினாலும் செய்வதற்கு அவர்களுக்கு பணம் உள்ளது. அவர்கள் அரசியல்வாதிகளை, அரசாங்கங்களை விலைக்கு வாங்கலாம்; இத்தகைய செல்வக் கொழிப்புடையவர்களுடைய ஊழல் தாக்கத்தில் இருந்து அரசியல் முறை பாதிப்பிற்குட்படாமல் இருக்கும் என்ற நினைப்பு வெகுளித்தனமானது ஆகும். "ஒவ்வொரு பெருஞ் செல்வத்தின் பின்னணியிலும் ஒரு பெரும் குற்றம் உள்ளது." என்று Balzac தானே கூறியுள்ளார்? எனவே இப்பெரும் செல்வக் குவிப்பு என்னும் நிகழ்வு ஒரு மகத்தான முக்கியத்துவத்தை கொண்டுள்ளது, முழு அமெரிக்க அமைப்பு முறையின் நெருக்கடியின் மையத்தானத்தில் அது உள்ளது.

லின் கல்லச்சேர்: உங்களுடைய புத்தகத்தில் கொடுத்துள்ள ஒரு மேற்கோளில், செனட்டர் Zell Miller செய்தி ஊடகத்தின் சுதந்திரத்தை கொண்டுவந்தது படைவீரரே அன்றி கவிஞர் அல்ல என்று கூறியதாக இருக்கிறது. ஓர் அரசாங்கம் தன்னுடைய அரசியலமைப்பையே குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கு அதை நீங்கள் ஒரு உதாரணமாக கொடுத்துள்ளீர்கள்.

டேவிட் நோர்த்: ஆம், உண்மையிலேயே, அது அவர் கொடுத்த ஒரு முட்டாள்தனமான அறிக்கை. அமெரிக்க சுதந்திரங்கள் மற்ற போர்வீரர்களை எதிர்த்து நின்று வெற்றி கொள்ளப்பட்டவை; Tom Paine அல்லது Peter Zenger ஐ நான் குறிப்பிடுகிறேன். நீங்கள் பல அரசின் அரசியலமைப்புக்களையும் பார்த்தீர்கள் என்றால், உண்மையில் நிலைத்த இராணுவங்களை வைத்திருப்பதற்கு எதிராகத்தான் அவை கூறியுள்ளன.

ஜோர்ஜ் புஷ் பலமுறையும் அமெரிக்க மக்களின் தலைமைத்தளபதி என்று குறிக்கப்படுகிறார் என்று நானும் கூட சுட்டிக்காட்டியுள்ளேன். அவர் ஒன்றும் அப்படி அல்ல. இராணுவத்தின் தலைமை தளபதி; அந்தப் பட்டமும், அது ஒரு துணைப் பட்டம், மக்களுடைய, சாதாரண மக்களுடைய ஆதிக்கம் எவ்வாறு இராணுவத்தின்மீது உள்ளது என்பதை வெளிப்படுத்துவது ஆகும். இதை மாற்றி வேறு ஏதோ பொருள் காணும் வகையில் குறிப்பிடுகிறார்கள்; அதாவது நமக்கு ஒரு சர்வாதிகாரி (Fuhrer) இருப்பது போலவும், ஜனாதிபதி இல்லை போலும் குறிப்பிடுகிறார்கள். ஜனநாயம் எதைப் பிரதிநிதித்துவம் செய்கிறது, அதன் மூல கோட்பாடுகள் யாவை என்பதைப்பற்றி அறியும் உணர்வில் ஒரு பிரமாண்டமான சரிவு ஏற்பட்டுள்ளது.

ஏதோ இதை எப்படியும் ஏற்கவேண்டும் என்பதுபோல, உதாரணமாக சித்திரவதையின் நெறிமுறை பற்றி செய்தி ஊடகத்தில் விவாதங்கள் நடைபெற்று அவை மன்னிக்கப்படுகின்றன அல்லது ஊக்குவிக்கப்படுகின்றன. அபு கிறைப் சிறையில் நடந்த கொடும் சம்பவங்களும் இன்றும் குவாண்டநாமோவில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளும் ஏதோ ஒரு வெற்றிடத்தில் நடக்கவில்லை. மதிப்பிற்குரிய செய்தியாளர்கள், Ted Koppel போன்றவர்கள் உண்மையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நகரக் கூட்டங்களை (அல்லது நகரக் கூட்டங்கள் என்று கூறப்படுபவற்றில்), நடத்தி தங்கள் வழியில் ஜனநாயக உரிமைகள் கடுமையாக மீறப்படுதல் சட்டபூர்வமானவைதான் என்று பொதுமக்களுடைய கருத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்னும் அண்மையில், ஒரு புத்தகம் Michael Ignatieff என்பவரால் எழுதப்பட்டுள்ளது, நன்கு அனைவராலும் அறியப்பட்டு, The Lesser Evil என்ற பெயரில் வந்துள்ளது; இதில் அவர் "அமெரிக்க மக்கள் நெருக்கடிக் காலங்களில் தங்கள் அரசாங்கத்தை கண்டிப்பாக நம்ப வேண்டும்" என்பது போன்ற வியப்படையும் வகையில் சில அறிக்கைகளை கொடுக்கிறார். உண்மையில் அமெரிக்க அரசியலமைப்பின் தத்துவார்த்த அடிப்படையில் நிறைந்துள்ள கருத்தே அரசாங்கங்கள் நம்பகத்தன்மை உடையவை அல்ல என்பதுதான்.

ஜனநாயகம் பற்றிய அத்தகைய கருத்துருக்கள்... அதாவது மக்கள் தங்களுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளை நம்பவேண்டியது ஜனநாயகத்திற்கு தேவைப்படுகிறது, மற்றும் அவர்கள் அதிகாரிகளையும், அவர்களுடைய செயற்பாடுகளையும் தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டாம் என்று சிலர் மிகக்கவனமாக எழுதமுடிவது, ஜனநாயக நனவு வீழ்ச்சியடைந்துகொண்டிருக்கும் ஒரு சமுதாயத்தை குறிப்பாக எடுத்துக்காட்டுவது ஆகும். அல்லது, குறைந்த பட்சம், தங்கள் கையில் அதிகாரத்தை கொண்டுள்ள சமூகப் பகுதியினரிடையே ஜனநாயக நனவு காணப்படுவதற்கில்லை என்பதாகும்.

லின் கல்லச்சேர்: ஆனால் சில மக்கள் பெரும் விழிப்புணர்வுடன் இருக்கின்றனர். என்னுடைய கண்ணோட்டத்தில், நான் அமெரிக்க ஜனநாயகத்தின் நெருக்கடி பற்றி, உங்கள் புத்தகம் போல், நிறைய புத்தகங்களை படித்துள்ளேன். இந்தப் புத்தகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்த வண்ணமுள்ளன. அவற்றினால் எந்தத் தாக்கமும் இல்லை என்று நீங்கள் தெரிவிக்கிறீர்களா?

டேவிட் நோர்த்: இல்லை, இல்லை, நான் அப்படிக் கூறவே இல்லை. பல புத்தகங்கள் உள்ளன; அவற்றில் பலர் தெளிவாக கவலையும் அக்கறையும் கொண்டுள்ளனர் என்பது தெரிகிறது; அரசின் கொள்கைகளுக்கு மக்களுடைய எதிர்ப்பு பெருகுவதை அவை பிரதிபலிக்கின்றன. அவ்விதத்தில் அவை மிகவும், மிகவும் ஒரு சாதகமான நிகழ்வுப்போக்காகும். இந்த கொள்கைகளுக்கு பொதுமக்களின் பெருகிய எதிர்ப்பு வருவதையும் நாம் பார்க்கப் போகிறோம் என நான் நம்புகிறேன். இன்னும் திமிர்த்தனமான முறையில் அரசுகளும் அரசாங்கங்களும் முயற்சிகளை மேற்கொண்டு அவற்றை ஒடுக்கப் போவதைக் காண இருக்கிறோம். ஆனால் அமெரிக்க அரசாங்கத்தில் இப்போக்குகள் பற்றி நான் பேசும்பொழுது, இவை எதிர்ப்பை எதிர்கொள்ளவில்லை என்று நான் தெரிவிக்கவில்லை.

அமெரிக்காவிற்குள்ளேயே பரந்த எதிர்ப்பு இருக்கிறது என்பது பற்றி அரசாங்கம் நன்கு உணர்ந்துள்ளது... என நான் நினைக்கிறேன். இன்னும் மில்லியன் கணக்கான மக்களிடையே வலுவான ஜனநாயக நம்பிக்கைகள் இருக்கின்றன. ஆனால், இந்தக் கரு நிலையில் இருக்கும் எதிர்ப்பை சக்திவாய்ந்த, ஒத்திசைவான அரசியல் இயக்கமாக எப்படி மாற்றுவது என்பது, ஒரு பெரிய சிக்கலும் ஒரு பெரிய சவாலும் ஆகும்.

லின் கல்லச்சேர்: ஆக நீங்கள் அத்தகையவற்றை நேரடியாகக் கண்டுள்ளீர்களா? அதன் தாக்கம் உங்கள்மீது எப்படி இருந்தது, எவ்விதமான எதிர்ப்பை நீங்கள் சந்திக்கிறீர்கள்?

டேவிட் நோர்த்: நான் கட்டுரைகள் எழுதும், உலக சோசலிச வலைத்தளம் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியுடன் இணைந்ததாகும்; அமெரிக்காவில் எங்கள் கட்சி பல வேட்பாளர்களை நிறுத்தியது. அதுவே பெரும் கடினமான செயல் ஆகும். இருகட்சி முறை மூன்றாம் கட்சிகள் தோன்றுவதிலிருந்து தடுப்பதற்காகத்தான் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது. பல மாநிலங்களில் நாங்கள் ஆயிரக்கணக்கான மக்களிடம் கையெழுத்துக்களை பெற்றோம், எங்கள் மனுக்கள், ஆயிரக்கணக்கான மக்கள் அவற்றில் கையெழுத்திட்டது, விதிமுறைத் தேவைகளை நிறைவு செய்தல் மிகக் கடினமானவை --அப்படி இருந்தும் பல இடங்களில் வாக்குச்சீட்டில் பதிவுகூட செய்ய முடியாமல் போயிற்று; ஏனெனில் முடிவெடுக்கும் அதிகாரம் முழுவதும் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சியினரின் பொறுப்பில் இருந்தது; அவை ஒன்றாக இணைந்து, ஒத்துழைத்து எதிர்க்கட்சிகள் வாக்குச்சீட்டிலேயே வராமல் பார்த்துக் கொள்ளுகின்றன.

லின் கல்லச்சேர்: எனவே உங்கள் வேட்பாளர்கள் தேர்தலில் நிற்கக் கூட அனுமதிக்கப்படவில்லையா?

டேவிட் நோர்த்: பல இடங்களில் அனுமதிக்கப்படவில்லை. சில இடங்களில் வாக்குச் சீட்டில் பதிவு பெற்றனர். பல மாநிலங்களில், மைன், நியூ ஜெர்சி இன்னும் பல மாநிலங்களில் எங்களுடைய வேட்பாளர்கள் வாக்குச் சீட்டில் இடம் பெற்றனர். சில மாநிலங்களில் 4 சதவீத வாக்குகளையும் பெற்றோம். அது ஒன்றும் அதிக அளவு வாக்கு அல்ல; ஆனால் அது முக்கியத்துவம் வாய்ந்தது; அரசியல் மாற்றீடு வேண்டும் என்று அதிகரித்த வகையில் மக்களின் உணர்வு உள்ளது என்பதை நாங்கள் கண்டறிந்தோம். அமெரிக்காவிற்குள் உறுதியாக அத்தகைய போக்கை ஒருவர் உணரமுடிகிறது மற்றும் எதிர்கொள்ள முடிகிறது என நான் நினைக்கின்றேன்.

லின் கல்லச்சேர்: உலக 'சோசலிஸ்ட்' என்ற சொல் சிலருக்கு பெரும் தடையாக இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

டேவிட் நோர்த்: சிலருக்கு வெளிப்படையாகவே அது ஒரு தடைதான்; சோசலிசம் எதை அர்த்தப்படுத்துகிறது என்று பெரும் குழப்பம் உள்ளது. 20ம் நூற்றாண்டில் சோசலிசம் ஸ்ராலினிசத்தால் மட்டுமின்றி சமூக ஜனநாயகத்தாலும் காட்டிக் கொடுக்கப்பட்டதானது தொழிலாளவர்க்கத்திடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வரலாற்று அனுபவங்களில் இருந்து விடுபட்டு பொதுக் கருத்தின் மிக ஐயுறவிற்குரிய நிலையைப் பற்றி புரிந்துகொள்ளுவது உண்மையிலேயே சாத்தியம் என்று நான் நினைக்கவில்லை.

உண்மையில் 15 ஆண்டுகளுக்கு முன் சோவியத் ஒன்றியம் சரிந்தது. முந்தைய தலைமுறையை சேர்ந்தவர்கள் பலரும் ரஷ்ய புரட்சியின் நிழலில் வளர்ந்தவர்கள், அவர்கள் அப் புரட்சியை உலகம் முழுவதும் வரவிருக்கும் மாறுதலுக்கு ஒரு ஆரம்பமாக, ஒரு சோசலிச சமுதாயம் வருவதற்கு தொடக்கமாக எதிர்நோக்கியிருந்தனர். அந்த அபிலாஷைகள் கம்யூனிஸ்ட் கட்சிகளினால் காட்டிக் கொடுக்கப்பட்டுவிட்டன; அதே நேரத்தில் சிலர் சோசலிசத்திற்கு தேசிய சீர்திருத்தவாத பாதை வழிவகுக்கும் வாய்ப்பு உள்ளது என்று நம்பினார்கள்; அத்தகைய கருத்தைத்தான் ஆஸ்திரேலியாவில் இருந்த இன்னும் பல இடங்களில் இருந்த தொழிற்கட்சி மற்றும் சமூக ஜனநாயக கட்சிகள் நம்பின; இந்த அபிலாஷைகளும் காட்டிக் கொடுக்கப்பட்டுவிட்டன; அது மிகப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது. எனவே ஒரு புதிய சோசலிச கலாச்சாரம் புத்துயிர்ப்புப் பெறவேண்டும் என்பதுதான் உண்மையான தேவை என்று நாங்கள் கருதுகின்றோம்... அது எளிதான வேலையல்ல. அது அரசியல் கல்வியின் மிகப் பரந்த இயக்கமாகும்.

லின் கல்லச்சேர்: அந்த முத்திரையை அணிந்து கொள்ள விரும்புவர்களுக்கு அது சமூக தனிமைப்படல் உணர்வை தோற்றுவித்துள்ளதா?

டேவிட் நோர்த்: நன்று, செய்தி ஊடகம் ஒன்றும் அதை ஊக்குவிக்க முயற்சிக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். ஆனால் இதை நான் சொல்லுவேன்: அமெரிக்காவிற்கு வருபவர்கள் அனைவரும் எத்தகைய இழிந்த, நயமற்ற முறையில் நம்முடைய வெகுஜன ஊடகம் செயல்படுகிறது என்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார்கள். அமெரிக்காவிற்கு ஒருவர் வந்து, செய்தி என்று கூறப்படுவற்றை பார்க்கும்போது அது பெரும் அதிர்ச்சியை தருகிறது, அது முட்டாள்தனமாக இருக்கிறது; அது பின்தங்கியதாக இருக்கின்றது; அது நேர்மையற்றதாக உள்ளது; அமெரிக்காவில் உள்ள பொருளாதார மற்றும் அரசியல் நடைமுறையின் சட்டரீதியானதன்மை பற்றி எவரேனும் வினா எழுப்பினால், அத்தகைய நம்பிக்கை அல்லது அரசியல் கருத்தாய்வை இழிவிற்குட்படுத்தும் முயற்சிதான் இருக்கிறது. ஆனால் அதையும் எதிர்த்துப் போரிட ஒருவர் தயாராக இருக்க வேண்டும்.

உங்களுக்கு தெரியுமா, லிங்கன் ஓர் அருமையான அறிக்கை கொடுத்திருந்தார், ஒருவர் சிலரை எல்லாக்காலமும் ஏமாற்றலாம், பலரை சில காலம் ஏமாற்றலாம், ஆனால் எல்லா மக்களையும் எல்லாக்காலத்திலும் ஏமாற்றமுடியாது என்று. முடிவில் சமூக நெருக்கடியின் புறநிலை சக்தி அதன் தாக்கத்தை மக்களுடைய நனவின் மீது காட்டும். அதை ஒருவர் நம்பவில்லை என்றால், எந்த மாறுதலும் வரும் என்று அவர் எதிர்பார்ப்பதற்கில்லை.

ஆனால் ஒரளவு வரலாறு படித்த எவரும், விஷயங்கள் கடினமாக தோன்றுகின்றன, இருப்பினும் மாறுதல்கள் வரும், ஆனால் அவை மிக, மிக, வியத்தகு முறையில் ஏற்படும் என்பது மனிதகுலத்தின் சித்திரவதை செய்கின்ற அபிவிருத்தியில், இதுதான் முதல் தடவை அல்ல என்பதை அறிவர். மொத்தத்தில், ரஷ்ய புரட்சி முதல் உலகப்போரின் உச்சக் கட்டத்தில் வந்தது; நாகரிகம் முழுவதுமே அதனுடைய பைத்தியக்காரத்தனத்தினாலேயே அழிந்துவிடுமோ என்றிருந்த நிலையில் ஒரு புதிய பாதை திறக்கப்பட்டது. நாமும் ஆழ்ந்த மாறுதல்களை காண இருக்கிறோம் என்று நான் நம்புகிறேன்; அது மிக மிகத் தொலைவிலுள்ள காலமாக இராது என்று நான் நினைக்கிறேன்.

லின் கல்லச்சேர்: அதுதான் என்னுடைய கேள்வி...சற்று திமிர்த்தனமாகவே நான் கேட்க இருந்தேன் -- அது எப்பொழுது?

டேவிட் நோர்த்: ம், என்னிடம் மாயாஜாலக் கண்ணாடி இல்லை; அக்கேள்விக்குப் பதில் சொல்ல முடியுமானால், நான் கூறுவதையெல்லாம் நம்புவதற்கு உங்களுக்கு உரிமை இருக்காது. நான் கூறக்கூடியதெல்லாம் மிக வலிமை வாய்ந்த சக்திகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன என்பதுதான்... பிரமாண்டமான தொழில்நுட்ப மாறுதல்களை கண்டுள்ள உலகில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்; தொடர்புகளில் மாறுதல்கள், சமூக அமைப்புக்களில் மாறுதல்கள்; அப்படியும் சற்று ஓரடி பின் சென்று பார்த்தால் அவை அனைத்திலேயும் ஒரு பெரும் முன்னேற்றமான வளர்ச்சிக்கான சாத்தியம் உள்ளது. அதைச்செய்தால், இந்த வியத்தகு மாறுதல்களையும், தொழில்நுட்ப மாறுதல்களையும் கண்டால், ஒருகட்டத்தில், இந்த மாற்றங்களின் இதே அளவு முன்னேற்றகரமான அரசியல் வெளிப்பாடு தோன்றும் என நான் நினைக்கிறேன்.

வேறு வார்த்தைகளில் கூறினால், சிலவிதங்களில் நாம் ஒரு அரசியல் முறையில் பொறிக்குள் அகப்பட்டுள்ளதுபோல், தேசிய நாடுகள், தேசிய நலன்கள் என்று வேரூன்றியிருக்கிறோம்; நமது சமுதாயத்தின் பூகோளத் தன்மையை கருதிப்பார்க்கும்போது இந்த முறை அடிப்படையிலேயே காலத்திற்கு ஒவ்வாததாகிவிட்டது. இந்த சுனாமியை பாருங்கள்; இந்தக் கொடூர நிகழ்வு உடனே ஒரு உலக நிகழ்வாகிவிட்டது; அதற்கேற்ப, உலகம் முழுவதும் உள்ள மக்களால் உணரப்பட்ட உண்மையான உணர்வுகளுக்கு ஏற்ப உலகத் தலைவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள எப்படியேனும் (பல சமயம் பெரும் நம்பிக்கையற்ற தன்மையுடன் கூட) முயன்றனர்.

தொழில்நுட்பத்துறையில் வளர்ச்சி, இணையம், கணினிமயமாதல் போன்றவை உலகத்தை மிக நெருக்கமாகக் கொண்டுவந்துள்ளதுடன் மிக அசாதாரண முறையில் ஒற்றுமைப்படுத்தவும் செய்துள்ளது; அது ஒவ்வொரு நாட்டையும் பாதித்துள்ளது. ஆஸ்திரேலேயாவையும் அது ஆழ்ந்து பாதித்துள்ளது; கடந்த 25 ஆண்டுகளாக அங்கு சென்று வருபவர்கள் அதைக் காண்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். எனவே உலகப் பொருளாதாரத்தின் அஸ்திவாரங்களில், தொழில்நுட்ப வளர்ச்சியில் ஏற்பட்ட புறநிலை மாறுதல்கள் ஒரு புதிய அரசியல் இயக்கத்திற்கு அடிப்படையை கொடுக்கின்றன என நான் நினைக்கின்றேன்; அதைப்பொறுத்த அளவில் கடந்த காலம் என்பது, என்ன சாத்தியம் என்பதற்கான மிக மங்கிய குறிகாட்டலாக இருக்கும்.

லின் கல்லச்சேர்: உங்களுடைய வாழ்க்கைக் காலத்திற்குள்ளேயா?

டேவிட் நோர்த்: நன்று, நான் இன்னும் சிறிது காலம் இருப்பேன், எனவே நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன், ஆம், என்னுடைய வாழ்நாளுக்குள் என்று நான் நம்புகிறேன்; இருக்கட்டும், நான் இந்த கணிப்பை தைரியமாகக் கூறுகிறேன்... அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் உலக அரசியலில் நீங்கள் திகைப்படையச்செய்யும் மாறுதல்களை காணப்போகிறீர்கள். பெரும்பான்மையான மக்கள் இன்றுவரை கூட கேள்விப்பட்டிராத பரந்தமக்களின் ஆதரவை ஈர்க்கும் பெயர்களும் இயக்கங்களும் இருக்கும். அது என்னுடைய மிக, மிக உறுதியான நம்பிக்கை. உலக அரசியலின் மகத்தான மாற்றத்திற்கு சற்றே முன்னுள்ள காலத்தில்தான் நாம் இருக்கிறோம்.

லின் கல்லச்சேர்: டேவிட் நோர்த். அவர் கூறுவது சரி என்றால், அதன் அடையாளங்களை நாம் வெகு விரைவில் காண்போம். அமெரிக்க ஜனநாயகத்தின் நெருக்கடி என்னும் நூல் Mehring Books ஆல் பதிப்பிக்கப்பட்டுள்ளது.


மேலதிக வாசிப்புகளுக்கு

வரலாற்றிலிருந்து படிப்பினைகள்: 2000 தேர்தல்களும் புதிய "கட்டுப்படுத்த முடியாத முரண்பாடுகளும்"

ஈராக்கியப் போரும் 2004 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலும்

2004 தேர்தலுக்குப் பின்னர்: சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்குகளும் பணிகளும்

ரோனால்ட் றேகன் (1911-2004): ஒர் இரங்கல் செய்தி

கென்னடி படுகொலையின் 40 ஆண்டுகள் நிறைவில் சில நினைவுக் கருத்துக்கள்

 

Copyright 1998-2005
World Socialist Web Site
All rights reserved