ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் முதல் தேசிய மாநாடு

WSWS : Tamil : நூலகம்

தீர்மானம்: 1 உலக முதலாளித்துவ நெருக்கடியும், சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகளும்

தீர்மானம் 2: ஏகாதிபத்தியப் போருக்கு எதிராக

தீர்மானம் 3: சீனாவுக்கு எதிரான அமெரிக்க போர் முனைப்பை எதிர்ப்போம்

தீர்மானம் 4: அமெரிக்க-ஆஸ்திரேலிய இராணுவ உடன்பாட்டை எதிர்ப்போம்

தீர்மானம் 5: 2010 பதவிக்கவிழ்ப்பும் முதலாளித்துவ ஆட்சியின் நெருக்கடியும்

தீர்மானம் 6: ஜூலியன் அசாஞ்சைப் பாதுகாப்போம்

தீர்மானம் 7: சோசலிச சமத்துவக் கட்சியைக் கட்டியெழுப்புவோம்!

SEP (Australia) first national congress

Resolution 4: Oppose the US-Australia military agreement

தீர்மானம் 4: அமெரிக்க-ஆஸ்திரேலிய இராணுவ உடன்பாட்டை எதிர்ப்போம்

Use this version to print | Send feedback

9 May 2012

1. கில்லார்டின் தொழிற்கட்சி அரசாங்கம் ஒபாமா நிர்வாகத்துடன் 2011 நவம்பரில் செய்து கொண்ட இராணுவ ஒப்பந்தத்தை எதிர்க்க வேண்டும் என சோசலிச சமத்துவக் கட்சியின் இந்த காங்கிரஸ் ஆஸ்திரேலிய தொழிலாள வர்க்கத்திற்கு அறைகூவல் விடுக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது வரலாற்றுவழியான சரிவை சீனாவுடனான ஒரு இராணுவ மோதலின் வழியாகச் சரிக்கட்டுவதற்கு செய்கின்ற முன்யோசனையற்ற முயற்சிகளை அரங்கேற்றுகின்ற தளமாக ஆஸ்திரேலியாவின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளை தொழிற்கட்சி வழங்கியிருக்கிறது. அவ்வாறு செய்ததன் மூலம், இந்தப் பிராந்தியத்திலும் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள் ஒரு புதிய உலகப் போருக்குள் மூழ்கடிக்கின்ற அபாயத்தை அது அதிகப்படுத்தியிருக்கின்றது.

2. 2016 ஆம் ஆண்டுக்குள்ளாக டார்வினில் 2,500 அமெரிக்க மரைன் படையினரை நிறுத்துவதற்கும், அத்துடன் கோகோஸ் தீவுகளில் இருந்து ஆளில்லாத இராணுவ விமானங்கள் இயங்குவது உட்பட அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கு ஆஸ்திரேலிய துறைமுகங்கள் மற்றும் விமானத்தளங்களை பயன்படுத்துவதை அதிகப்படுத்துவதற்குமான ஒப்பந்தம் ஆழமான ஆத்திரமூட்டல் நடவடிக்கை ஆகும். அமெரிக்க-ஆஸ்திரேலிய கூட்டு இராணுவ செயல்பாடுகள் இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களுக்கு இடையில் இருக்கும் முக்கியமான கடல் வழிப் பாதைகளைத் தடை செய்கின்ற சாத்தியத்தைக் கொண்டு சீனாவுக்கு அச்சுறுத்தல் விடுக்கின்றன. அதன் மூலம் சீனா அத்தியாவசியமான எரிசக்தி ஆதாரங்கள் மற்றும் கச்சாப் பொருட்கள் கிடைப்பதிலிருந்து துண்டிக்கப்படும். ஆஸ்திரேலியக் கரைகளுக்கு அகதிகள் வந்து சேருவதைத் தடுக்கின்ற பிற்போக்குத்தனமானஎல்லைப் பாதுகாப்புஎன்ற போலிச்சாட்டு, கிறிஸ்துமஸ் தீவுகளின் தளங்களில் இருந்து இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் நடக்கின்ற அனைத்துக் கடல் போக்குவரத்தின் மீதும் ஒரு பரந்த கண்காணிப்பு அமைப்புமுறையைப் பராமரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவின் இந்த மூர்க்க நிலைப்பாடு தவிர்க்கவியலாமல் சீனாவிடம் இருந்து எதிர்-நடவடிக்கைகளை உருவாக்கும் என்பதோடு தென் கிழக்கு ஆசியா முழுவதிலுமான உறவுகளை ஸ்திரம் குலைக்கும்

3. ஒபாமா நிர்வாகத்தின் இராணுவவாத திட்டநிரலின் அணிவரிசையில் தொழிற்கட்சி அரசாங்கம் நிற்பதென்பது, ஆஸ்திரேலியா தனது உலகளாவிய பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களைப் பாதுகாப்பதற்கு வரலாற்றுரீதியாக அமெரிக்காவுடனான கூட்டில் சார்ந்திருக்கும் நிலையால் உந்தப்படுகின்றது. 1941க்கு முன்பு வரை, இந்த நலன்கள் எல்லாம் பிரிட்டிஷ் சாம்ராஜ்யக் குடையின் கீழ் பின்தொடரப்பட்டன. இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் நுழைந்ததைத் தொடர்ந்து ஆசியாவில் பிரிட்டிஷ் சக்தி நிலைகுலையத் தொடங்கியதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா அமெரிக்காவை நோக்கித் திரும்பியது.

120க்கும் மேலான ஆண்டுகளாய், இக்கண்டத்திற்கு வடக்கே இருக்கின்ற மற்றும் தென் மேற்கு பசிபிக்கில் இருக்கின்ற தீவுகளை தனது செல்வாக்கிற்கு உட்பட்ட வட்டமாகவே கருதி வந்திருக்கும் ஆஸ்திரேலிய ஆளும் வர்க்கம் அவற்றின் வளங்களை இரக்கமின்றி கொள்ளையடித்ததோடு அந்த மக்களைச் சுரண்டியும் வந்திருந்தது. இன்று, ஆஸ்திரேலியாவுக்கு ஆசியாவுடன் மிக அதிகமான பொருளாதாரப் பிணைப்புகள் இருக்கின்றன, குறிப்பாக சீனாவுடன் அதன் இலாபகரமான வர்த்தக உறவுகள் இருக்கின்றன என்ற போதிலும் கூட அதன் ஆளும் அமைப்புமுறையானது பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கு பெருகுவதைக் கண்டு அஞ்சுகிறது. அதனால் மூலோபாயரீதியாக அமெரிக்க ஆதரவைச் சார்ந்திருக்கும் நிலையைத் தொடர்கிறது.

4. அமெரிக்க-ஆஸ்திரேலியக் கூட்டணி, ஒரு கூலிக்கு வேலைபார்க்கும் உறவாகும். இது ஆஸ்திரேலிய தொழிலாள வர்க்கம் மற்றும் பிராந்தியத்தின் ஒடுக்கப்பட்ட பரந்த மக்களின் நலன்களைப் பலியிட்டு பராமரிக்கப்படுகிறது. அடுத்தடுத்து வந்த ஆஸ்திரேலிய அரசாங்கங்கள் எல்லாம் அமெரிக்க ஆதரவுக்கான கட்டணத்தை அமெரிக்க தளங்களுக்கு இடம் வழங்குவதின் மூலமும், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை நிபந்தனையற்று வழிமொழிந்து, கொரியா மற்றும் வியட்நாம் போர் தொடங்கி, 1991 இல் ஈராக்கிலான வளைகுடாப் போர், 2001 இல் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்புப் போர் மற்றும் 2003 இல் ஈராக் ஆக்கிரமிப்புப் போர் வரை 1945 முதலாக அமெரிக்கா நிகழ்த்தி வந்திருக்கும் ஒவ்வொரு முக்கியமான போரிலும் போரிட்டு உயிர் துறப்பதற்கு துருப்புகளை அனுப்புவதன் மூலமும் செலுத்தி வந்திருக்கின்றன. அமெரிக்கா இதற்கான பிரதிபலனாக, கிழக்கு தீமோர், சாலமன் தீவுகள், டோங்கா, பபுவா நியூ கினியா, ஃபிஜி மற்றும் வனாடு (Vanuatu) ஆகிய நாடுகளில் சமூகக் கிளர்ச்சிகளை ஒடுக்கும் பொருட்டோ அல்லது அந்த நாடுகளின் அரசாங்கங்கள் பிற சக்திகளின் செல்வாக்கிற்குள் செல்வதைத் தடுக்கும் பொருட்டோ ஆஸ்திரேலியா மேற்கொள்கின்ற இராணுவ/இராஜதந்திரத் தலையீடுகளை ஆதரித்து வந்திருக்கிறது.  

5. ஒபாமா-கிலார்ட் இடையிலான இராணுவ உடன்பாடு அமெரிக்க-ஆஸ்திரேலிய கூட்டணியில் மேலதிகமான, பண்புரீதியான விரிவாக்கத்தை அடையாளப்படுத்தி நிற்கிறது. ஒரு நாடாளுமன்ற விவாதமெனும் போலிவேடமும் கூட இல்லாமல் இது நடந்திருக்கிறது எனும் போது மக்கள் வாக்கெடுப்பின்றி நடந்திருக்கிறது என்பது பற்றி கூறத்தேவையில்லை. இந்த விடயத்தில், கிலார்டின் தொழிற்கட்சி அரசாங்கமானது ஏகாதிபத்தியம் மற்றும் போரின் தனிச்சிறப்பு வாய்ந்ததொரு கட்சியாக தொழிற்கட்சி பங்காற்றி வந்திருக்கக் கூடிய ஒரு வரலாற்று வழியான பாத்திரத்தையே தொடர்ந்து வகித்துக்கொண்டிருக்கிறது. ஆளும் வர்க்கமானது, நெருக்கடி மற்றும் இடைமாற்றுக்காலத்தின் ஒவ்வொரு புள்ளியிலும் (முதலாம் உலகப் போர், பெருமந்த நிலை, இரண்டாம் உலகப் போர், 1970களின் ஆரம்ப காலத்திலும் மற்றும் 1980களிலுமான அரசியல் எழுச்சிகள் ஆகியவை தொடங்கி இன்று வரையிலும்)கொள்கை மற்றும் நோக்குநிலையிலான பெரும் நகர்வுகளுக்குத் தலைமைவகிப்பதற்கு தனது மிகவும் பழமையானதும் மிக முக்கியமானதுமான முட்டுத்தூணான தொழிற்கட்சியையே சார்ந்திருந்து வந்திருக்கிறது.  

6. போருக்கான தற்போதைய தயாரிப்புகளுடன் சேர்த்து சமூகத்தையும் இராணுவமயமாக்குவதை இந்த காங்கிரஸ் கண்டனம் செய்கிறது. இராணுவப் படைகளில் ஆட்பற்றாக்குறைப் பிரச்சினையை ஈடுசெய்வதற்காகவும் அத்துடன் வருங்கால போர்களில் எதிரிநாடுகளின் பீரங்கிகளுக்கு பலிகொடுப்பதற்குமாய் கட்டாய இராணுவச் சேவை முறையை வியட்நாம் காலத்திற்குப் பின்னர் முதன்முறையாக அறிமுகம் செய்வதற்கு இராணுவ மூலோபாயவாதிகள் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். பாடசாலைகளில் இளைஞர்கள் எல்லாம் ஆஸ்திரேலிய இராணுவவாதத்தை போற்றும் தேசியவாதப் பரப்புரைக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். கடந்த காலத்தின் போர்களை தேசம் நினைவு கூரும் சந்தர்ப்பங்களாக மூன்று புதிய நினைவுதினங்களை 2008 ஆம் ஆண்டு முதலாக தொழிற்கட்சி ஒதுக்கிக்கொடுத்துள்ளது. மோசடியானபயங்கரவாதத்தின் மீதான போர்என்கின்ற கவசத்தின் கீழாக உளவுத் துறையினர் மற்றும் போலிஸ் முகமைகளின் கரங்களில் குவிக்கப்பட்டிருக்கும் அசுரத்தனமான சக்திகள் உள்நாட்டில் அரசியல் எதிர்ப்பாய் தோன்றக் கூடியவற்றை முன்கண்டிராத அளவுக்கு கண்காணிப்பதற்காய் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிற அதே நேரத்தில்தேசிய அவசரநிலைகள்என்று அழைக்கப்படுவதான காலங்களின் போது போலிஸ் நடவடிக்கைகளுக்கு வலுச்சேர்க்க இராணுவம் அணிதிரட்டப்படுவது வழமையாகி இருக்கிறது.

7. பெயர் குறிப்பிடாத வட பக்க ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்தான படையெடுப்பு அச்சுறுத்தலை நாடு எதிர்கொள்கிறதுஎன்ற அடிப்படையில் அந்நியர் வெறுப்புவாதத்திற்கு புத்துயிரூட்ட தொழிற்கட்சி அரசாங்கம் செய்கின்ற முயற்சியை இந்த காங்கிரஸ் கண்டனம் செய்கிறது. போருக்கான முனைப்பை நியாயப்படுத்துவதற்கே பெருமளவில் பயன்படவிருக்கின்ற இந்தக் கூற்று 1950கள் மற்றும் 1960களில் நிலவியஆஸ்திரேலியா அதன் வடக்குப் பக்கத்தில் சீன கம்யூனிஸ்ட்மஞ்சள் ஆபத்துக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறதுஎன்ற இனவாத வாய்வீச்சுக்கு திரும்பவும் கொண்டு செல்கிறது. உண்மையில் போர் அபாயம் அமெரிக்க-ஆஸ்திரேலிய மூர்க்கத்தனத்தில் இருந்து தான் எழுகிறது.   

8. தொழிற்கட்சி அரசாங்கம் அமெரிக்காவுடன் நிபந்தனையற்று அணிவகுப்பதில் சில அரசியல் மற்றும் வணிக பிரதிநிதிகள் கருத்துபேதம் கொண்டுள்ளனர், அவர்கள் இதற்குப் பதிலாக சீனாவுடன் அமைதியாக இணங்கிச் செல்வதற்கு விண்ணப்பிக்கின்றனர் என்றால் எந்த வகையிலும் அது இராணுவவாதத்திற்கான எதிர்ப்பாக அர்த்தமாகி விடாது. மோதலை நோக்கி இறங்குவது சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதில் கிட்டும் பெரும் இலாபங்களுக்கு அச்சுறுத்தலைக் கொண்டு வரும் என்று ஆளும் உயரடுக்கின் பிரிவுகளுக்குள் தோன்றியிருக்கும் கவலைகளையே அவர்கள் வெளிப்படுத்துகின்றனர். அவர்களின் தயக்கமெல்லாம் இருந்தபோதிலும், அவர்கள் இராணுவ மோதலுக்குப் பின் அணிவகுக்கத் தான் போகிறார்கள். சீனாவுக்கும் இடமளிக்கும் முயற்சிகளுடன் கைகோர்த்துஎல்லாமே தவறாய் முடியும் பட்சத்தில் படைகளை பயன்படுத்துவதற்கான தயாரிப்புகளும் நடைபெற வேண்டும் என்று 2009 மார்ச் மாதத்தில் முன்னாள் பிரதமரான கெவின் ரூட் அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டனிடம் கூறியது இவர்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாகத் தான்

9. ஆஸ்திரேலியாவின் பசுமைக் கட்சியினர், என்னதான் அவர்களது அமைதிவாத மற்றும் போர்-எதிர்ப்பு வேடங்கள் எல்லாம் இருந்தாலும் கூட, தொழிற்கட்சி அரசாங்கம் மற்றும் இராணுவவாதத் திட்டநிரலின் நேரடியான உடந்தையாளர்களாய் சேவை செய்கின்றனர். ஈராக் போரில் ஆஸ்திரேலிய ஈடுபாட்டை பசுமைக் கட்சியினர் விமர்சனம் செய்த போது, இராணுவம் அதற்குப் பதிலாக தென் பசிபிக் மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் ஆஸ்திரேலியாவின் மூலோபாய நலன்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்பது தான் அந்த விமர்சனத்துக்கான அவர்களது முகாந்திரமாக இருந்தது. வடக்கில் புதிதாக இராணுவப் படைகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்கள் தங்களது நோக்கங்களைப் பெருமளவில் சாதித்து விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். சீன ஆட்சிக்கு எதிரான ஒபாமா நிர்வாகத்தின் மூர்க்கமான நிலைப்பாட்டிற்கு சீனாவின் மோசமான மனித உரிமைகள் வரலாற்றைக் காரணமாய் காட்டிய பராக் ஒபாமாவுடன் உடன்பட்டு பசுமைக் கட்சித் தலைவர் பாப் பிரவுன் குரல் கொடுத்தது என்பது இராணுவவாதத்தை அங்கீகரிப்பதில் அவர்கள் ஆற்றவிருக்கும் பாத்திரத்திற்கான ஒரு தெளிவான அடையாளமாக அமைந்தது. 1999 இல் கிழக்கு தீமோரில் புதிதாக உருவாக்கப்பட்ட அரசில் ஆஸ்திரேலிய மேலாதிக்கத்தை உறுதி செய்யும் பொருட்டு இராணுவத் தலையீட்டிற்கு அழைப்பு விடுக்கும் போதும், மறுபடியும் 2010 இல் லிபியாவுக்கு எதிராய் நடத்தப்பட்ட அமெரிக்கா தலைமையிலான கொலைகார வான்வழி யுத்தத்திற்கு ஆதரவளிக்கும் போதும் பசுமைக் கட்சியினர் இதேபோன்றமனிதாபிமான சாக்குப்போக்குகளையே பயன்படுத்தினர்.    

10. சோசலிசக் கூட்டணி(Socialist Alliance)மற்றும் சோசலிச மாற்று (Socialist Alternative)போன்ற போலி-இடது அமைப்புகள் குறிப்பாக ஒரு மிகக்கேடுவிளைவிக்கும் பாத்திரத்தை ஆற்றுகின்றன. தொழிலாள வர்க்கத்திற்கு அது முகம் கொடுக்கும் அபாயம் குறித்து அறிவதற்கு வழியின்றி இருட்டடிப்பு செய்வதன் மூலம் ஒரு சுயாதீனமான சோசலிச இயக்கம் அபிவிருத்தி காண்பதை இவை தடை செய்ய முனைகின்றன. ஏகாதிபத்தியப் போரின் பின்னால் நிற்கும் புறநிலையான உந்து சக்திகளை மறுக்கும் இவைஆஸ்திரேலிய ஆளும் வர்க்கத்திற்கு இராணுவவாதத்தை மறுதலிக்கும் வகையில் பரந்த மக்கள் எதிர்ப்பைக் கொண்டு அழுத்தம் கொடுத்து விட முடியும்என்பதான ஒரு மாயையை ஊக்குவிக்கின்றன. சீனாவுடன் அமெரிக்க மோதல் கூர்மையடைந்துவருவதை நோக்கிய அவர்களது மனோநிலையை சோசலிச மாற்றின்(Socialist Alternative)ரொம் பிராம்பிள் கூறியதில் இருந்து சுருங்கக் கூறி விடலாம். சென்ற வருடத்தில் எழுதிய ஒரு கட்டுரையில் அவர்சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் அண்மை எதிர்காலத்தில் ஒரு போர் நடக்க சாத்தியமில்லைஎன்று முடித்திருந்தார்.  

11. உத்தியோகபூர்வ அரசியல் ஸ்தாபகத்திற்குள்ளும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்குள்ளும் முழுமையாக ஒன்றுகலந்து விட்ட நடுத்தரவர்க்கத்தின் ஒரு வசதியான பிரிவிற்காக போலி-இடதுகள் பேசுகின்றனர். வியட்நாம் போருக்குப் பின்னர் முதன்முதலாய் கடல்கடந்து ஆஸ்திரேலிய இராணுவம் பயன்படுத்தப்பட்ட 1999இல் கிழக்கு தீமோரிற்கு படைகளை அனுப்ப ஆரவாரத்துடன் அழைப்பு விடுத்ததன் மூலம் அங்கு ஆஸ்திரேலிய இராணுவத் தலையீட்டுக்கு வசதி செய்து தருவதில் இவர்கள் ஒரு முக்கியமான பாத்திரத்தை ஆற்றினர். அதனையடுத்து அந்த சிறிய வறுமைப்பட்ட நாட்டில் ஆஸ்திரேலிய இராணுவம் ஆக்கிரமிப்பு செய்வதற்கும் பசுமைவாதிகளைப் போலவே இவர்களும் தங்களது முழு ஆதரவை வழங்கி, ஆளும் வர்க்கத்திற்கு கிழக்கு தீமோரின் இலாபகரமான எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் உள்ளடங்கிய அதன் மிக முக்கியமான மூலோபாய மற்றும் பொருளாதார நலன்கள் பணயத்தில் இருந்ததொரு சமயத்தில் அதிமுக்கியமான ஆதரவை வழங்கினர். சர்வதேச பதட்டங்கள் அதிகரிக்கின்றதொரு நேரத்தில் அவர்கள் இதே வேலையைத் தான் செய்வார்கள், போலியானஇடது வார்த்தைஜாலங்களை பயன்படுத்தி நவ-காலனித்துவவாதம் மற்றும் போரை நியாயப்படுத்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

12. இராணுவவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்திற்கு வழிகாட்டியாக அமையக் கூடிய அரசியல் கோட்பாடுகள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மார்க்சிச இயக்கத்தால் இடப்பட்டன. பிரதான எதிரி இருப்பது நாட்டுக்குள்ளேயே தான், அது ஆஸ்திரேலிய அரசாங்கமும் அது சேவை செய்கின்ற நிதி மற்றும் பெருநிறுவன உயரடுக்கும் தான் என்ற புரிதலில் தான் அக்கோட்பாடுகள் வேரூன்றியிருக்கின்றன. ஆசிய-பசிபிக் பிராந்தியத்திலும், அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும், மற்றும் உலகெங்கிலும் இருக்கக் கூடிய தொழிலாள வர்க்கமும் ஒடுக்கப்பட்ட பரந்த மக்களும் தான் ஆஸ்திரேலியத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் முக்கிய கூட்டாளிகளாவர். தேசியவாதம், பேரினவாதம் மற்றும் வர்க்க சமரசம் ஆகியவற்றின் ஒவ்வொரு வடிவத்திற்கும் எதிரான ஒரு தொடர்ச்சியான போராட்டத்தின் வழியாக தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியமானது உருவாக்கப்பட வேண்டும்.

13. முதலாளித்துவ இலாப அமைப்புமுறையைத் தூக்கியெறிந்து விட்டு ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு தொழிலாளர்அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாய் அரசியல்ரீதியாக அணிதிரட்டுவது தான் ஏகாதிபத்தியப் போர் அச்சுறுத்தலுக்கான ஒரே பதில் என்பதை இந்த காங்கிரஸ் உறுதிப்பட உரைக்கிறது. ஒரு தொழிலாளர் அரசாங்கமானது அரச மற்றும் இராணுவ எந்திரத்தினை இல்லாதொழித்துவிட்டு ஆஸ்திரேலியாவிற்குள்ளும் மற்றும் பிராந்தியம் முழுவதிலும் தொழிலாள வர்க்கத்தின் நெருக்கும் சமூகத் தேவைகளை பூர்த்தி செய்வதை நோக்கி ஆதார வளங்களைச் செலவிடும்.

14. அனைத்து இராணுவக் கூட்டணிகள் மற்றும் அணுகல் உடன்பாடுகளையும் மறுதலிப்பதற்கும், அமெரிக்க இராணுவத்தின் அனைத்து நபர்களையும் நாட்டில் இருந்து அகற்றுவதற்கும் இந்த காங்கிரஸ் கோருகிறது. ஆஸ்திரேலிய துருப்புகளும், போலிசும், அதிகாரிகளும் ஆப்கானிஸ்தானில் இருந்தும், கிழக்கு தீமோரில் இருந்தும், சாலமன் தீவுகளில் இருந்தும், பபுவா நியூ கினியாவில் இருந்தும் மற்றும் அவை எங்கெல்லாம் நிறுத்தப்பட்டுள்ளனவோ அந்த ஒவ்வொரு நாட்டில் இருந்தும் நிபந்தனையில்லாமல் உடனடியாக வெளியேற வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். எதிர்காலத்தில் பசிபிக்கிலோ அல்லது வேறெங்குமோ ஆஸ்திரேலிய இராணுவ நடவடிக்கைகளை நாங்கள் எதிர்ப்போம், அத்துடன் அதன் வேட்டையாடும் நோக்கங்களை அம்பலப்படுத்துவோம்.

15. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் இருக்கும் தன் சக சிந்தனையாளர்களுடன் நெருக்கமாய் இணைந்து உழைக்கின்ற சோசலிச சமத்துவக் கட்சி, இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிரான போராட்டத்தை தனது அரசியல் பணியின் வெகு மையத்தில் இருத்தும் என்பதை இந்த காங்கிரஸ் உறுதிசெய்கிறது.