ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் முதல் தேசிய மாநாடு

WSWS : Tamil : நூலகம்

தீர்மானம்: 1 உலக முதலாளித்துவ நெருக்கடியும், சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகளும்

தீர்மானம் 2: ஏகாதிபத்தியப் போருக்கு எதிராக

தீர்மானம் 3: சீனாவுக்கு எதிரான அமெரிக்க போர் முனைப்பை எதிர்ப்போம்

தீர்மானம் 4: அமெரிக்க-ஆஸ்திரேலிய இராணுவ உடன்பாட்டை எதிர்ப்போம்

தீர்மானம் 5: 2010 பதவிக்கவிழ்ப்பும் முதலாளித்துவ ஆட்சியின் நெருக்கடியும்

தீர்மானம் 6: ஜூலியன் அசாஞ்சைப் பாதுகாப்போம்

தீர்மானம் 7: சோசலிச சமத்துவக் கட்சியைக் கட்டியெழுப்புவோம்!

Resolution 5: The 2010 coup and the crisis of bourgeois rule

தீர்மானம் 5: 2010  பதவிக்கவிழ்ப்பும் முதலாளித்துவ ஆட்சியின் நெருக்கடியும்

9 May 2012

Use this version to print | Send feedback

1. கடந்த இரண்டு ஆண்டுகளாக தொழிற்கட்சி அரசாங்கத்தையும் நாடாளுமன்ற அமைப்புமுறையையும் சூழ்ந்திருக்கும் வரலாறுகாணா குழப்பத்தின் முக்கியத்துவத்திற்கு இந்த காங்கிரஸ் கவனத்தை செலுத்துகிறது. உலக முதலாளித்துவத்தின் ஆழமடைகின்ற நெருக்கடியின் தாக்கம் மற்றும் ஆளும் உயரடுக்கினால் உத்தரவிடப்படுகின்ற போர் மற்றும் சமூக எதிர்ப்புரட்சியின் பிற்போக்குவாத திட்டநிரல் ஆகியவை ஆஸ்திரேலியாவிற்குள் கொண்டுவந்திருக்கும் அரசியல் வெளிப்பாடே இது.

2. 2010 ஆம் ஆண்டு ஜூன் 23-24 தொழிற்கட்சிக்குள் இருந்த கன்னை அதிகாரத் தரகர்கள் ஒரு சிலர் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட தலைமை பதவிக்கவிழ்ப்பில் ஒரேநாள் இரவில் பிரதமர் பதவியில் இருந்து கெவின் ரூட் இறக்கப்பட்டதானது சீனாவுக்கு எதிராய் ஆசிய-பசிபிக் பிராந்தியத்துக்கான ஒபாமா நிர்வாகத்தின்சுழல்மையம்”(pivot) தொடர்பான ஆழமான புவி-மூலோபாய நகர்வுகளாலும் அத்துடன் சர்வதேச அளவில் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவாய் பொருளாதார ஊக்குவிப்பை ஒதுக்கி வைப்பதற்கு நிதி மூலதனம் அளித்த வற்புறுத்தலாலும் செலுத்தப்பட்டதாய் இருந்தது.

3. ரூட் அகற்றப்பட்டதை 1975 இல் கோக் விட்டலாமையும் அவரது தொழிற்கட்சி அரசாங்கத்தையும் அகற்றிய கான்பெரா பதவிக்கவிழ்ப்பிற்கு இணையாக கூறமுடியும். அந்தச்சதி போருக்குப் பிந்தைய பொருளாதார எழுச்சி உருக்குலைந்து போனது, அமெரிக்க ஏகாதிபத்தியம் வியட்நாமில் தோற்கடிக்கப்பட்டது அத்துடன் 1968 முதல் 1975 வரை தொடர்ச்சியாய் புரட்சிகர எழுச்சிகள் நிகழ்ந்த ஆழமடைந்து சென்ற பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் கடைசிக்காலகட்டத்தில் நடந்தது. அதன் முக்கியத்துவம் அடுத்து வந்த நிகழ்வுகளில் வெளிப்பட்டது. விட்டலாம் பதவி அகற்றப்பட்டமையானது ஒரு புதிய தொழிற்கட்சி தலைமை உருவாக்கப்படுவதில் விளைந்த ஒரு நிகழ்முறையின் தொடக்கமாய் இருந்தது. 1983-96 வரையிலான ஹாக்-கீடிங் (Hawke-Keating) அரசாங்கங்களின் வடிவத்தில், தொழிற்கட்சியானது அதன் முந்தைய தேசிய சீர்த்திருத்தவாத வேலைத்திட்டத்தைக் கைவிட்டு விட்டு, அமெரிக்காவில் ரீகனாலும் இங்கிலாந்தில் தாட்சராலும் திணிக்கப்பட்ட சுதந்திரச் சந்தை திட்டநிரலின் வரிசையில் வரும் ஒரு சுதந்திரச் சந்தை திட்டநிரலை அமல்படுத்தியது. அது ஆஸ்திரேலிய முதலாளித்துவத்தைமறுசீரமைப்புசெய்ததோடு தொழிற்சங்கங்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு தொழிலாள வர்க்கத்தின் மீது ஒரு வரலாற்று இணை காண முடியாத தாக்குதலை நடத்தியது.

4. சமீபத்தில் வாஷிங்டனில் இருக்கின்ற சமயத்தில் ரூட் வெளியுறவுத் துறை அமைச்சர் பொறுப்பை இராஜினாமா செய்தது, தொழிற்கட்சியின் தலைமைக்கு சவால் விட்டு அவர் தோற்றது, மற்றும் அவருக்குப் பதிலாக பொப் கார் நியமிக்கப்பட்டதைச் சுற்றி நடந்த படுதோல்விகள் ஆகியவை உட்பட ரூட் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் அரசியல் குழப்பங்கள்  இன்றைய நெருக்கடி 1975 இன் நெருக்கடியை விட இன்னும் ஆழமானது என்ற உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபகங்கள் கூறிக் கொண்டிருப்பதைப் போல ஆளுமை அல்லது தலைமைப்பாணியிலான மோதல்களின் விளைபொருள் அல்ல இது, மாறாக உலகளாவிய முதலாளித்துவ நிலைமுறிவின் இந்த புதிய காலகட்டத்தில் ஆஸ்திரேலிய ஆளும் வர்க்கம் முகம் கொடுக்கின்ற அடிப்படையான பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளில் இருந்து எழுவதாகும்

5. வெளியுறவுக் கொள்கையிலான மோதல்கள் ஒரு முக்கியமான காரணியாக இருக்கின்றன. ஆஸ்திரேலிய முதலாளித்துவ வர்க்கம் ஒரு பக்கத்தில் சீனாவை, மற்றும் மொத்தமாய் ஆசியாவை, பொருளாதாரரீதியில் கனமாகச் சார்ந்திருக்கும் நிலைக்கும், மறுபக்கத்தில் அமெரிக்காவுடன் அது மூலோபாயச் சார்பைக் கொண்டுள்ள நிலைக்கும் இடையில் வரலாற்றுரீதியான இருதலைக்கொள்ளி நிலைக்கு முகம் கொடுக்கிறது. ரூட் அமெரிக்க-ஆஸ்திரேலியக் கூட்டணியின் ஒரு சளைக்காத ஆதரவாளராய் இருந்தார் என்கிற அதே சமயத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் கூர்மையடைந்து வந்த புவி-அரசியல் பதட்டங்களை ஒரு மத்தியஸ்தரைப் போல செயல்பட்டு சீர்செய்வதற்கு அவர் முனைந்தார் என்பது மட்டுமன்றி, முதலாவதாய் அதில் அவர் அமெரிக்காவைக் கலந்தாலோசிப்பதற்குத் தவறினார். அவ்வாறு செய்ததன் மூலம், அமெரிக்க அரசியல் மற்றும் இராணுவ ஸ்தாபகத்தின் சக்திவாய்ந்த நலன்களின் அதிருப்தியை அவர் சம்பாதித்தார். எப்படியிருப்பினும், ஒபாமா நிர்வாகத்தின்சுழல்மையத்திற்கு கிலார்ட் அளிக்கும் அடிமைத்தன ஆதரவும் இந்தச் சிக்கலை தீர்ப்பதில் தோல்வி கண்டிருக்கிறது. இந்தக் குழப்ப விடயத்தில் தொழிற்கட்சிக்கு உள்ளாகவும், மற்றும் ஆஸ்திரேலிய அரசியல், நிதி மற்றும் பெருநிறுவன ஸ்தாபகமெங்கிலும் தொடர்ந்து தழைத்துக் கொண்டிருக்கும் மோதல்கள் ஆசிய-பசிபிக் பிராந்தியம் மற்றும் உலகம் முழுவதிலும் இருக்கக் கூடிய நாடுகளில் இருக்கும் ஆளும் உயரடுக்கினரை உலுக்கி வரும் மோதல்களையே பிரதிபலிக்கின்றன

6. 2010 ஜூனின் பதவிக்கவிழ்ப்பானது ஒரு பெருகி வந்த நெருக்கடியின் உச்சமாக, தொழிற்கட்சி அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைக்கு பெருகிய முறையில் குரோதம் பெற்றுக் கொண்டிருந்த ஊடக, நிதி மற்றும் பெருநிறுவன உயரடுக்கின் சக்திவாய்ந்த பிரிவுகளால் முடுக்கி விடப்பட்டு நிகழ்ந்தது. 2008 செப்டம்பரில் லெஹ்மன் பிரதர்ஸ் பொறிவுக்குப் பிந்தைய உடனடிக் காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஊக்குவிப்பு நடவடிக்கைகளுடன் மிக நெருக்கமாய் தொடர்புபட்டிருந்த ரூட் ஜனவரியில் முர்டோக்கின் ஆஸ்திரேலிய செய்தித்தாளால்ஆண்டின் சிறந்த ஆஸ்திரேலியர் என்று பெருமை சூட்டப் பெற்றார். மே மாதத்திற்குள்ளாக, அவரது அரசாங்கத்தின்வீணடிக்கும் ஊக்குவிப்புத் திட்டங்களுக்காக அவரது அரசாங்கத்தை தினசரிகளின் முன்பக்கத் தலைப்புகள் எல்லாம் தீவிரமாக தாக்கிக்கொண்டிருந்தன. அந்த மாதத்தில் ரூட் தனது சுரங்க வரி உத்தேசத்தை அறிவித்தார். ஆஸ்திரேலியக் கருவூலத்தால் வரைவு செய்யப்பட்டிருந்த இந்த வரி சுரங்க நிறுவனங்களின் மிதமிஞ்சிய இலாபங்களின் ஒரு பகுதியை சுரங்கத்தொழில் எழுச்சியால் ஆஸ்திரேலிய நாணய மதிப்பின் மீதும் திறமையான தொழிலாலாளர்களின் தேவையின் மீதும் ஏற்படுத்திய எதிர்மறையான தாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருந்த தொழிற்துறையின் பிரிவுகளுக்கு மாற்றுவதை நோக்கமாய்க் கொண்டிருந்தது. அதற்குப் பதிலிறுப்பாக BHP Billiton, Xstrata and Rio Tinto ஆகிய மூன்று பெரிய நாடுகடந்த சுரங்க நிறுவனங்கள் முன்னர் கண்டிராத வகையில் பல மில்லியன் டாலர் செலவில் அரசாங்க-விரோத விளம்பரப் பிரச்சாரத்தைத் தொடக்கின. பதவிக்கவிழ்ப்பிற்கு உடனடி பிந்தைய காலத்தில், Rio இன் தலைமை அதிகாரியான ரொம் அல்பானீஸ், ’இதேபோன்ற நடவடிக்கைகளைச் சிந்தித்து வரும் எந்த மற்ற அரசாங்கமும்ஆஸ்திரேலிய அணுகுமுறையின் அபாயத்தைஎண்ணிப் பார்த்து சம்பந்தப்பட்ட காரணிகளைகவனமாக சிந்தித்துக் கொள்ள வேண்டும்என்று எச்சரித்தபோது தான் இதன் நோக்கங்கள் வெளிப்பட்டன.

7. பெருகிய நெருக்கடி மற்றும் வெறிக்கூச்சலின் இந்தச் சூழலில் தான் தொழிற்கட்சியின் நாடாளுமன்ற விவாதக் குழு, அதன் உறுப்பினர்கள் மற்றும் ஒட்டுமொத்த மக்கள் ஆகியோரின் முதுகுக்குப் பின்னே ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ஆட்சிப்பொறுப்பில் இருந்து அகற்றப்பட்டார். அதில் சம்பந்தப்பட்ட அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணிகளை அடிக்கோடிட்டுக் காட்டும் விதமாக, பிரதமராக அமர்ந்த கிலார்டின் முதல் நடவடிக்கைகளாய் இருந்தவை என்னவென்றால், அவரது அரசாங்கம் அமெரிக்கக் கூட்டணிக்கும் ஒபாமா நிர்வாகத்திற்குமான நிபந்தனையற்ற ஆதரவினை உறுதி செய்தது; சுரங்கத் துறை அரக்கர்களின் கோரிக்கைகளுக்கு அடிபணிந்துதிருத்தப்பட்டவரிச் சட்டங்களை வரைவதில் உதவுவதற்கு அந்நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்தது; நிதிநிலை உபரியை சாதிப்பதையே தனது அரசாங்கத்தின் அடிக்கல்லாக ஆக்கி, சுகாதாரம், சமூகநல உதவிகள் மற்றும் கல்வி உள்ளிட்ட அடிப்படை சேவைகளிலான பொதுத்துறைச் செலவினங்களில் பெரும் வெட்டுகளுக்குக் கோரியது. அதே நேரத்தில்அளவிலும் இலட்சியநோக்கிலும் ஹாக்-கீடிங் அரசாங்கங்களின் சீர்திருத்தங்களின் அளவுக்கு ஆழமாய் ஆஸ்திரேலியப் பொருளாதாரத்திலான ஒரு அடிப்படையான மறுவடிவமைப்பை அமல்படுத்தவும் அவர் உறுதியளித்தார். 18 மாதங்களுக்குள்ளாக முன்னுதாரணமற்ற ஒரு இராணுவ ஒப்பந்தத்தில் ஒபாமாவுடன் சேர்ந்து அவர் கையெழுத்திட்டார். ஜூன் 2008 வாக்கிலேயே கிலார்ட்ரூட்டுக்கு அடுத்து ஆட்சியில் அமரத்தக்க முன்னணி நபர்என அப்போதிருந்த அமெரிக்கத் தூதரான ரொபேர்ட் மெக்கலத்தினால் அடையாளம் காட்டப்பட்டிருந்தார் என்பதை விக்கிலீக்ஸினால் வெளிக்கொண்டு வரப்பட்ட தகவல்கள் வெளிப்படுத்தியிருக்கின்றன. பதவிக்கவிழ்ப்பிற்கு ஒரு வருடத்திற்கு முன்னால், 2009 ஜூன் மாதத்திலான இன்னொரு தகவல், ”கிலார்ட்: ஆஸ்திரேலியாவின் அடுத்த பிரதமராவதற்கான பாதையில்என்று தலைப்பிடப்பட்டதாய் இருந்தது.

8. ஆழமடைகின்ற அரசியல் நெருக்கடியானது எல்லாவற்றுக்கும் மேலாய் ஒட்டுமொத்த நாடாளுமன்ற அமைப்புமுறையின் சிதைவினாலும் சிதறுண்ட நிலையாலும் குறிக்கப்படுகிறது. ரூட்டை வெளியேற்றுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஜனநாயக-விரோத, நாடாளுமன்ற-வரம்பு-கடந்த வழிமுறைகளால் கிலார்டை சுற்றிச் சூழ்ந்த ஒரு அரசியல் நாற்றம் ஒருபோதும் மறைந்திருக்கவில்லை. 2010 ஆகஸ்டுத் தேர்தல்கள் ஒரு கபடநாடகத்தின் விளிம்பில் நின்றன. மக்கள் முகம் கொடுத்து நின்ற உண்மையான பிரச்சினைகளில் எதுவும், விவாதிக்கப்படுவது இருக்கட்டும், எழுப்பப்படவும் கூட இல்லை. தேர்தல், கிலார்ட் அரசாங்கத்திற்கு ஒரு தெளிவான கட்டளையை வழங்குவதற்கு பதிலாக, எழுபது ஆண்டுகளின் முதல் தொங்கு பாராளுமன்றத்திலும் பசுமைவாதிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவை நம்பியிருக்கும் நிலையிலான ஒரு ஸ்திரமற்ற சிறுபான்மை தொழிற்கட்சி அரசாங்கம் உருவாக்கப்படுவதிலும் முடிந்தது.  

9. நாடாளுமன்ற அமைப்புமுறையின் நெருக்கடி, வரலாற்றுரீதியாக அந்த அமைப்புமுறையின் தலைமைப் புகலிடமாய் திகழ்ந்து வந்திருக்கக் கூடிய தொழிற்கட்சி சிதைந்து நாற்றமடிப்பதில், தன் மிகத் தெளிந்த வெளிப்பாடுகளில் ஒன்றைக் கண்டிருக்கிறது. கடந்த நூற்றாண்டு முழுவதிலும் மற்றும் அதற்கும் அதிகமான காலத்திலும் ஆளும் வர்க்கமானது முதலாம் உலகப் போர், பெரு மந்த நிலை, இரண்டாம் உலகப் போர் மற்றும் போருக்குப் பிந்தைய பொருளாதார எழுச்சியின் 1970களின் தொடக்கத்திலான உருக்குலைவு இவற்றுடன் தொடர்புபட்ட அரசியல் புயல்களில் தாக்குப் பிடிப்பதற்கு தொழிற்கட்சியையே நம்பியிருந்து வந்திருக்கிறது. இப்போது, 1930களுக்குப் பிந்தைய மிகப்பெரும் முதலாளித்துவ நிலைமுறிவுக்கு இடையே, அதன் முக்கியமான அரசியல் கருவியானது உள்வலுவற்ற ஓடாக இருக்கிறது. எந்த கணிசமான சமூக ஆதரவும் இல்லாத நிலையில் அதன் கருத்துக்கணிப்பு வாக்கு விகிதங்கள் எல்லாம் வரலாற்று வீழ்ச்சிகளுக்குச் சரிந்திருக்கிறது

10. தொழிற்கட்சியின் நிலைகுலைவு ஒரு தற்காலிக தடப்பிறழ்வு அல்ல மாறாக திரும்பவியலாத வரலாற்று நிகழ்முறைகளில் வேரூன்றியதாகும். உற்பத்தி பூகோளமயமாக்கப்பட்டதன் பாதிப்பின் கீழ், தனது தேசிய சீர்திருத்தவாத வேலைத்திட்டத்தை எல்லாம் வீசியெறிந்து விட்டு, தொழிற்கட்சியானது 1980கள் மற்றும் 90களில், “சர்வதேச போட்டித்திறன் என்ற பெயரில் தொழிலாள வர்க்கத்தின் மீது மூலதனத்தின் கட்டளைகளைத் திணிப்பதற்கான தலைமை அரசியல் கருவியாய் ஆனது. ஹாக்-கீடிங் அரசாங்கங்களின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்முறையானது 1996 தேர்தலில் தொழிற்கட்சிக்கு தொழிலாள வர்க்க ஆதரவு உருக்குலைந்து போவதில் விளைந்தது. அதன்பின் 11 வருடங்கள் ஆட்சியில் இருந்த கன்சர்வேடிவ் ஹோவார்ட் அரசாங்கம் பரவலால மதிப்பிழந்து  வெறுக்கப்பட்ட நிலையில், அதனுடன் ஒப்பிடுகையில் இது ஒருகுறைந்த தீமையைக் குறிக்கிறது என்கிறதான அடிப்படையில் தான் இந்தக் கட்சி மீண்டும் 2007 இல் தேர்ந்தெடுக்கப்பட முடிந்தது. இதற்கு அடித்தளமாகவிருந்த போக்கு இப்போது தன்னை மீண்டும் நிலைநாட்டியிருக்கிறது.  

11. ஆளும் வர்க்கத்திற்குள்ளாக, கிலார்டின் அரசாங்கத்தின் கீழ் பொருளாதார மறுசீரமைப்பு நடைபெறும் வேகம் குறித்து ஒரு ஆழமான ஏமாற்றம் இருக்கிறது. நிதி மற்றும் பெருநிறுவன உயரடுக்கினர் தமது உடனடியான பொருளாதார சாத்தியவளங்களைப் பற்றி மட்டுமல்ல, ஐரோப்பிய கடன் நெருக்கடி மற்றும் சீனாவில் ஏற்கனவே ஒரு மந்தநிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிற உலகளாவிய மந்தநிலைப் போக்குகள் ஆகியவற்றின் நீண்டகாலப் பின் விளைவுகள் குறித்தும் அஞ்சுகின்றனர். சுரங்கத் துறை எழுச்சியின் உற்சாகமான காலத்தின் போது, ஊடகங்கள் மற்றும் பெருநிறுவன ஆஸ்திரேலியாவின் முக்கியமான பிரிவுகள் எல்லாம் சந்தை-ஆதரவு சீர்திருத்த வாய்ப்புகளை வீணடிப்பதற்காக ஹோவார்டின் கூட்டணி அரசாங்கத்தைத் தாக்கியதோடு, ரூட் தேர்ந்தெடுக்கப்படுவதை வரவேற்றிருந்தன. ஆனால் அவர்களது நம்பிக்கைகள் எல்லாம் துரிதமாக அதிருப்தியாகவும் குரோதமாகவும் மாறியது. ஹாக் மற்றும் கீட்டிங் ஆகியோரின் வார்ப்பிலான ஒரு பிரதமர் என்றும், ஆஸ்திரேலிய முதலாளித்துவத்திற்கு பாரிய மறுகட்டமைப்பை அமுல்படுத்தும் திறன் தனக்கு இருப்பதாகவும் இப்போது கிலார்ட் தன்னை தொடர்ந்து விளம்பரப்படுத்திக் கொள்கிறார் என்ற போதிலும் ஆளும் உயரடுக்கில் வெகுசிலருக்குத் தான் அவர் மீது நம்பிக்கை இருக்கிறது. அதற்கும் குறைந்த எண்ணிக்கையிலான சிலர் தான் வலதுசாரி ஜனரஞ்சகவாத எதிர்க்கட்சித் தலைவரான டோனி அபாட்டை ஒரு உபயோகமான மாற்றாகக் கருதுகின்றனர்.

12. இங்கே தான் முதலாளித்துவ ஆட்சியின் அதிகரித்துச்செல்லும் நெருக்கடியின் அடிப்படை அமைந்திருக்கிறது. ஆளும் வர்க்கம் தனது கொள்கைகளைத் திணிப்பதற்கு இனியும் இரு-கட்சி ஆட்சிமுறையை நம்பியிருக்க முடியாத நிலையில் உள்ளது, எனவே அது ஜனநாயக-விரோத, நாடாளுமன்ற வரம்பு கடந்த ஆட்சிமுறைகளுக்குத் திரும்ப நிர்ப்பந்தப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒருமுறை லியோன் ட்ரொட்ஸ்கி இதனை மிக நன்றாக விளக்கினார்: “மின் பொறியியலுடன் ஒப்பிட்டால், தேசிய அல்லது சமூகப் போராட்டத்தினால் கூடுதல் சுமையேற்றப்படுகின்ற மின்னோட்டங்களுக்கு எதிரான பாதுகாப்பிற்காக பாதுகாப்பு கடத்திகள் மற்றும் சுற்றுத்தடைகள் கொண்ட ஒரு அமைப்புமுறையாக ஜனநாயகத்தை வரையறை செய்யலாம். மிக அதிகமான மின்விசை செறிவு பெற்றிருக்கின்ற வர்க்க மற்றும் சர்வதேச முரண்பாடுகளின் தாக்கத்தின் கீழ், ஜனநாயகத்தின் பாதுகாப்பு கடத்திகள் எல்லாம் எரிந்து போகும் அல்லது வெடித்து விடும். இது தான் அடிப்படையாக சர்வாதிகாரம் பிரதிநிதித்துவப்படுத்தும்  மின்கசிவினை குறிப்பதாகும்.” 

13. போலி-இடது அமைப்புகள் இந்த பதவிக்கவிழ்ப்பின் வரலாற்று முக்கியத்துவத்தை இருட்டடிப்பு செய்வதற்கு தளர்ச்சியின்றி வேலை செய்திருக்கின்றன. இது வெறும் சலசலப்பு தான் என்றும் அதிமுக்கியமான எதுவும் இல்லை என்றும் அவை வலியுறுத்துகின்றன. ஊடகங்களாலும் அரசியல் ஸ்தாபகங்களாலும் நடத்தப்படும் பிரச்சாரத்துடன் கைகோர்த்து தொழிலாள வர்க்கத்தை மயக்குவதற்கு முனையும் இவை ஆழமடையும் நெருக்கடிக்கான தனது சொந்த சுயாதீனமான பதிலிறுப்பை தொழிலாள வர்க்கம் அபிவிருத்தி செய்வதில் இருந்து தடுக்கின்றன.

14. தவிர்க்கவியலாமல் வெடிக்கின்ற பரந்த தொழிலாளர் போராட்டங்களை கிலார்ட் அரசாங்கம் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான அதன் தாக்குதலை அதிகப்படுத்துவதன் மூலமாக எதிர்கொள்ளும். சென்ற ஆண்டின் ஒரு போராட்டத்தில், கண்டாஸ் ஏர்வேஸ் விமானங்கள் பறக்காதிருந்த சமயத்தில், அது தொழிற்துறை நடவடிக்கையை முடக்குவதற்கான பிற்போக்குத்தனமான ஆஸ்திரேலிய நியாய வேலைச் சட்டத்தின் (Fair Work Australia -FWA) கீழான தனது புதிய அதிகாரங்களை முதன்முறையாக செயல்படுத்தி பதிலிறுப்பு செய்தது. தொழிலாளர்கள் தங்களது நலன்களை பாதுகாப்பதற்காய் நடத்துகின்ற எந்தவொரு போராட்டமும் அவர்களை முதலாளித்துவ அரசுடன் நேரடி மோதலுக்குள் கொண்டு வருகிறது என்பதை அதன்மூலம் அது விளங்கப்படுத்தியது. இதுவரையில், இந்தப் போராட்டங்களை தனிமைப்படுத்துவதற்கும் ஒடுக்குவதற்கும் , தொழிற்கட்சி அரசாங்கமானது தொழிற்சங்கங்களையும் போலிஇடதுகளில் இருக்கும் அவற்றின் ஊக்குவிப்பாளர்களையும் நம்பியிருக்க முடிந்திருக்கிறது. ஆனால், அபராதங்கள் மற்றும் சிறைத் தண்டனைகளைக் காட்டி அச்சுறுத்திய போதும் FWA உத்தரவுகளை எதிர்த்து விக்டோரியா மாகாண செவிலியர்கள் மன உறுதியுடன் போராடியதில் வெளிப்பட்டதைப் போல, தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற்கட்சி அரசாங்கம் இரண்டுக்குமே எதிரான ஒரு கிளர்ச்சிக்கான நிலைமைகள் துரிதமாக முதிர்ச்சி கண்டு வருகின்றன.

15. வர்க்கப் போராட்டத்தை மட்டுப்படுத்துவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் கடந்த 120 ஆண்டு காலத்தில் அபிவிருத்தி செய்யப்பட்டிருந்த பொறிமுறைகள் எல்லாம் சிதைவின் ஒரு முன்னேறிய கட்டத்தில் இருக்கின்றதான நிலைமைகளில், தொழிலாள வர்க்கமானது தீவிரமான தொழிற்துறை, சமூக மற்றும் அரசியல் யுத்தங்களுக்குள் உந்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இறுதிப் பகுப்பாய்வில், இது தான் 2010 ஜூன் பதவிக்கவிழ்ப்பின் முக்கியத்துவமாகும். இந்தப் புதிய காலகட்டத்தில், எந்த முக்கியமானதொரு போராட்டமும் உடனடியாக அரசியல் அதிகாரத்தைக் குறித்த கேள்வியை எழுப்பத் தொடங்கும்; அது தொழிலாள வர்க்கத்திற்கும் சோசலிச சமத்துவக் கட்சிக்கும் தீர்மானகரமான சவால்களை முன்வைப்பதாகும். சோசலிச சர்வதேசிய வேலைத்திட்டத்திற்கு ஆதரவை வெல்வதற்கும், அத்துடன் சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையிலான ஒரு தொழிலாளர்அரசாங்கத்தை ஸ்தாபிப்பதை நோக்கமாய்க் கொண்ட தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை அபிவிருத்தி செய்வதற்கும் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சோசலிச சமத்துவக் கட்சி தலையீடு செய்யும்.