WSWS : Tamil : õóô£Á

மை. பண்டா ட்ரொட்ஸ்கிசத்தை நிராகரித்தல்
முன்னுரை
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
 

Chapter1: M. Banda Renounces Trotskyism

மை. பண்டா ட்ரொட்ஸ்கிசத்தை நிராகரித்தல்

Use this version to print | Send this link by email | Email the author

மார்க்கிசம் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்தைப் பொறுத்தவரை, தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) யின் பொதுச் செயலாளர் மைக்கல் பண்டாவை, உயிர் வாழ்பவர்களில் ஒருவராகக் கணக்கிற் கொள்ள முடியாது. அவர், ''ஏன் அனைத்துலகக் குழுவை உடனே புதைத்துவிட்டு நான்காம் அகிலத்தைக் கட்ட வேண்டும் என்பதற்கான'' அவருடைய ''27 காரணங்களை'' வெளியிட்டுள்ளதன் மூலம் அவர் மறுபடியும் உறுதியான முறையில், ட்ரொட்ஸ்கிசத்துடனான அவரது அரசியல் முறிவைப் பிரகடனப்படுத்தியுள்ளார். அத்தோடு அவர் தனது வாழ்நாள் முழுவதும் எந்தப் புரட்சிகர இயக்கத்தின் பதாகையின் கீழ் போராடினாரோ, அதனுடனான அவரது உறவுகள் அத்தனையையும் துண்டித்துள்ளார். பண்டா பல ஆண்டுகளை ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கு அர்ப்பணித்திருந்த பொழுதும் பண்டாவின் தலைவிதியானது அவர் எப்படி நினைவில் இருப்பார் என்றால், அவர் இயக்கத்திற்கு அர்ப்பணித்திருந்த ஆண்டுகளுக்காக அல்லாது, அந்த இயக்கத்தை அவர் என்ன முறையில் காட்டிக் கொடுத்ததன் பின்னர் அதை விட்டோடினார் என்பதற்காகவே அதாவது நான்காம் அகிலத்திற்கு எதிராக அவதூறை எழுதிய ஒரு ஓடுகாலியென்றே நினைவில் இருப்பார். ட்ரொட்ஸ்கிச இயக்கத்தினுள் 38 வருடங்களைச் செலவிட்ட பின்னர் நான்காம் அகிலத்திற்கு எதிராகப் பின்வரும் குற்றப்பத்திரத்தை அவர் முன்வைக்கின்றார்:

''ட்ரொட்ஸ்கி எதிர்பார்த்ததிற்கு மாறாக நாம் எதைப் பார்த்துள்ளோம் என்றால், இடையற்ற தொடர்ந்த நெருக்கடிகள், பிளவுகள், துரோகங்கள், தேக்கம் மற்றும் குழப்பம் போன்றவற்றைக் கொண்ட, முழுதாக மூலோபாயம் மற்றும் முன்னோக்கும் அற்ற போக்கால் எடுத்துக் காட்டப்பட்டதுடன், வெளிப்படையாகத் தத்துவத்திலும், நடைமுறையிலும், சகாப்தத்தின் தன்மையைக் கிரகித்து, ட்ரொட்ஸ்கிசத்தை இன்றைய மார்க்சிசமாக வளப்படுத்த வெளிப்படையாகத் தவறியதேயாகும்.''

''வரலாற்று மாற்றுப் போக்கை குறுக்குப் பாதையில் எடுத்துச் செல்லப் பப்லோவாத பாணியில் தொழிலாள வர்க்கத்திற்குப் பதிலாக பதிலீட்டாளர்களைத் தேடுவது, ஏமாற்றான, மாயமான "இயற்கை மார்க்சிஸ்ட்டுகளை" கெனன் (Cannon) பாணியில் நாடி அலைவது அல்லது ஹீலியின் பாணியில் இயங்கியல் சடவாதத்தைப் பிற்போக்கு அகநிலைக் கருத்துவாத முறை மூலமும், அறிவாதார முறையியல் மூலமும் பிரதியீடு செய்யும், அனுபவவாத மற்றும் அகநிலைக் கருத்துவாத ரீதியில் தம்மைத் தாமே ட்ரொட்ஸ்கிஸ்டுக்கள் என்று அழைத்துக் கொள்ளும் குழுக்களைத்தான் நாம் பார்த்துள்ளோம்........''

''அதனுடன் கட்சியின் ஜனநாயக மத்தியத்துவத்தின் இடத்தில் தன்னைக் காத்துப் பேணும் அதிகாரத்துவ தன்னலக் குழுவால் பிரதியீடு செய்தல் இடம்பெற்றது. ட்ரொட்ஸ்கியின் நான்காம் அகிலம் பற்றிய கொள்கையின் இடத்தில், ஒரே நலன்களை கொண்ட குட்டி முதலாளித்துவவாதிகள், திறமையான நடிகர்களும், மற்றும் பகற்கனவாளர்களால் ''உலகக் கட்சி'' என்ற கபடத் தோற்றத்துடன் நடமாடி வந்துள்ளனர். இது நிச்சயமாகத் தற்செயலானது அல்ல. உண்மையில் அது 1953ம் ஆண்டு அனைத்துலகக் குழுவின் கொள்கையில் இருந்தே தர்க்க ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் தொடர்கின்றது. ஐக்கிய அமெரிக்க அரசுகளின் தொழிலாளர் கழகத்தையும் (Workers League) உள்ளடங்கலாக அனைத்துலகக் குழுவின் ஒரு பகுதி கூட கடந்த 32 வருடங்களில் எந்த ஒரு நேரத்திலும் தொழிலாள வர்க்கத்திற்கு நிலைத்திருக்கக் கூடிய ஒரு முன்னோக்கை விரிவாக முன்வைக்க முடியவில்லை. ஏன்?''

''கேள்வியைக் கேட்பது என்பது, அதற்குப் பதில் கொடுப்பதற்காகும். இதை உறுதியாகக் கூற வேண்டியுள்ளது. இல்லை, திட்டவட்டமாகக் கூற வேண்டியுள்ளது. நான்காம் அகிலம் பிரகடனப்படுத்தப்பட்டதே அன்றி, அது ஒருபோதும் கட்டப்படவில்லை. ட்ரொட்ஸ்கியின் காலத்தில் கூட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அவருடைய வேலையைக் காத்துப் பேணவல்ல காரியாளர்கள் இருந்ததில்லை.''

அனைத்துலகக் குழுவிற்கு எதிரான பண்டாவின் இந்தக் குற்றச்சாட்டு அவரால் தெளிவுபடுத்தவோ, அல்லது தீர்த்துவைக்கவோ முடியாத, தெளிவான முனைப்பாய் உள்ள முரண்பாடுகளின் மேல் கட்டி எழுப்பப்பட்டுள்ளது. இதை ட்ரொட்ஸ்கியின் ''வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வேலையிலிருந்து'' தோன்றியதெல்லாம் பிரயோசனமற்றவற்றின் பரிதாபமான கூட்டு என்றால், அவரின் வேலையின் வரலாற்றுப் பெறுமதியின் மேல், ஒரு கேள்விக்குறியை நிறுத்த வேண்டியுள்ளது.

எந்த ஒரு இசைக்குழுவும் இசைக்க முடியாத சுரங்களை எழுதிய ஒரு இசை அமைப்பாளரோ, அல்லது போலிகளைக் கவரக் கூடிய தத்துவங்களை முன்வைத்த ஒரு விஞ்ஞானியோ, மனித கலாச்சாரத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெற முடியாது. ட்ரொட்ஸ்கி போராடிய அரசியல் போக்கு, அழிவுகளை மட்டும் உண்டாக்கியதோடு, அது ஏமாற்றுப் பேர்வழிகளையும், முட்டாள்களையும் மற்றும் கோழைகளையும்தான் தன்பக்கம் ஈர்த்தது என்றால், நான்காம் அகிலத்தை அமைக்க வழிவகுக்க அடிப்படையாக இருந்த கொள்கைகளிலேயே ஏதேனும் தவறு இருக்க வேண்டும்.

எனவே பண்டாவின் தாக்குதல், அனைத்துலகக் குழுவுடன் மட்டுப்படுத்தப்படவில்லை. நான்காம் அகிலம் மற்றும் ட்ரொட்ஸ்கிசம் என்று அறியப்படும் திட்டவட்டமான போக்கு அரசியல் சட்டபூர்வ தன்மையைக் கொண்டதா? என்று அவர் சவால் விடுகிறார். அனைத்துலகக் குழுவை அழிக்க வேண்டும் என்பதற்காக அவர் முன்வைக்கும் ''27 காரணங்களில்'' 16 க்கு குறைவில்லாமல், அது 1953ம் ஆண்டில் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் நடந்த சம்பவங்களுடன் தொடர்புடையனவாக உள்ளன.

பண்டாவின் வாதங்கள் ஏற்புடையவை என்று ஒத்துக் கொள்ளப்பட்டால், மார்க்சிச வரலாற்றில், நமது சர்வதேச இயக்கம், வழமையாக ட்ரொட்ஸ்கிக்கு பிரத்தியோகமாகக் கொடுத்து வந்த முழு ஸ்தானத்தையும் மறுபரிசீலனை செய்யவேண்டும் என்பதை ஏற்றுக் கொள்வதாகும். ஆனால், ட்ரொட்ஸ்கிசத்தை நிராகரிப்பதற்கு கண்டிப்பாக இட்டுச் செல்லும் பண்டாவின் வாதங்கள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை அபகீர்த்தியடையச் செய்யும் அவரது முயற்சியைக் கீழறுக்கின்றன. நான்காம் அகிலத்தின் முழு வரலாற்றையும் நிராகரிக்காமல், அனைத்துலகக் குழுவைத் தாக்க முடியாது என்பது துல்லியமாக இருப்பதினால், பண்டா தவிர்க்க முடியாத முறையில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, ட்ரொட்ஸ்கிசத்தின் தொடர்ச்சியைப் பிரநிதித்துவம் செய்கின்றது என்பதை ஏற்றுக் கொள்கிறார்.

பண்டா தனது பயனற்ற ஆய்வுக் கட்டுரை மார்க்சிசத்திற்கு ஒரு புதுமையான பங்களிப்பை வழங்குகிறது என்று சிலவேளை நம்பினாலும், இது ட்ரொட்ஸ்கிசத்தின் எண்ணற்ற எதிரிகள் ஏற்கனவே கூறியவற்றிற்குப் புதிதாக அவர் எதையும் சேர்த்து விடவில்லை. மிக அண்மையில் போலீஸ் ஊடுருவிய சோசலிசத் தொழிலாளர் கட்சியின் ஐயத்திற்குரிய தலைவர் ஜக் பார்ண்ஸ், (Jack Barnes) ''ட்ரொட்ஸ்கிசமும் அதனுடைய நிரந்தரப் புரட்சித் தத்துவமும், இன்று நம்மை அல்லது மற்றைய புரட்சியாளர்களை ஆயுதபாணிகளாக்குவதற்கு பங்களிக்கவில்லை. அவை நமது அரசியல் தொடர்ச்சியை மார்க்ஸ், ஏங்கல்ஸ் லெனின் மற்றும் கம்யூனிச அகிலத்தின் முதல் நான்கு மாநாடுகளுடன் மீண்டும் பின்னிப் பிணைத்துக் கொள்வதற்கு ஒரு தடையாக உள்ளன. அவை நமது இயக்கத்தினுள் மார்க்சிசத்தின் ஆசான்களைக், குறிப்பாக லெனினைப் புறநிலை ரீதியாகப் படிப்பதற்குத் தடையாக இருந்து வந்துள்ளன'', என்று பகிரங்கமாகப் பிரகடனப்படுத்தியுள்ளார்.1

பண்டாவும், தொழிலாளர் புரட்சிக் கட்சியினுள் உள்ள அவரது சக ஓடுகாலிகளும், அவர்கள் ''தொடர்ச்சியை'' மீண்டும் ''பின்னிப்பிணைப்பதற்கு'' அனைத்துலகக் குழு தடையாக உள்ளது என்று காணுகின்றார்கள். எதனுடன்....... தொடர்ச்சியாக இருப்பதற்கு? அவர்கள் இன்னமும் அதைக் கூறுவதற்கு அக்கறை கொள்ளவில்லை. பார்ண்ஸ் வெளிப்படையாகவே முன்வந்து நான்காம் அகிலம் ''புதிய பரந்துபட்ட லெனினிச சர்வதேசத்திற்கு'' இடம் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று, அதாவது ஒரு வர்க்கக் கூட்டுக் கலவைக்கு, குட்டிமுதலாளித்துவ தேசியவாதிகள், ஸ்ராலினிச சார்பு, விவசாய ஜனரஞ்சக மற்றும் திரிபுவாத இயக்கங்களின் கூட்டுக் கலவைக்கு இடம் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று வெளிப்படையாகவே பிரகடனப்படுத்தியுள்ளார். ஆனால் பண்டாவோ, தான் உருவாக்குவதில் ஈடுபட்டிருக்கும் அரசியல் விலங்கு, எந்த உயிரின வகையைச் சேர்ந்தது என்பதை இன்னமும் இனங்காட்ட முன்வரவில்லை. இதற்குப் பதிலாக, அவர் தனது நேரத்தை ஸ்ராலினிசத்திற்கு எதிராகவும் மற்றும் பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிராகவும் நிரந்தரப் புரட்சித் தத்துவத்தின் முன்னோக்கை காக்கத் தொடுத்த போராட்டத்தை, வரலாற்று ரீதியாகத் தனது அடிப்படையாகக் கொண்ட ஒரே ஒரு அரசியல் போக்கான அனைத்துலகக் குழுவை அழிக்க வேண்டும் என்பதற்காக, ''27 காரணங்களைக்'' கூறுவதில் தன்னை அர்ப்பணித்துள்ளார். அவருடைய கட்டுரையின் தலைப்பு ''ஏன் உடனே அனைத்துலகக் குழுவை புதைத்துவிட்டு நான்காம் அகிலத்தைக் கட்டுவதற்கு வேண்டியதற்கான 27 காரணங்கள்'', என்றிருந்த பொழுதும் அவர் ஏன் நான்காம் அகிலத்தை கட்ட வேண்டும் என்பதற்கு ஒரு காரணத்தைக் கூட முன் வைக்கவில்லை.

தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்ள அல்லது நனவாக நான்காம் அகிலத்தை தாம் விட்டோடுவதற்கு தம்மைத் தயாரித்துக் கொண்டு இருக்கின்றவர்கள்தான் பண்டாவின் பத்திரம் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாறு பற்றிய கலந்துரையாடலுக்கு அளிக்கப்பட்ட நியாயபூர்வமான பங்களிப்பு எனக்கூற முடியும். புரட்சிகரக் கோட்பாடுகளை தற்காத்து நிற்கும் மார்க்சிஸ்டுகள் பண்டாவின் பத்திரத்தில் நியாயபூர்வமான எதையும் காணமுடியாது. பப்லோவாதிகளுடன் சேர்ந்து வெளிப்படையாகவே ஸ்ராலினிசத்திற்கும், மாவோயிசத்திற்கும் தம்மை அடிபணியச் செய்ய விரும்புகின்றவர்களுக்கு, அப்படி செய்து கொள்வதற்கு அவர்களுக்கு முழுச் சுதந்திரம் உண்டு. ஆனால் பண்டாவின் படைப்பை தாம் மார்க்சிசத்துடனான தமது முறிவை நியாயப் படுத்துவதற்காகப் பற்றிக் கொண்டுள்ள ஐயுறவாத மற்றும் அரசியல் ரீதியில் நோயுற்றுள்ள குட்டி முதலாளித்துவ ஓடுகாலிகளுடன் கலந்துரையாட நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கு விருப்பம் எதுவும் இல்லை. தொழிலாள வர்க்கத்தையும், ஒடுக்கப்படும் பரந்த மக்களையும் முதலாளித்துவ அமைப்பைத் தூக்கி வீசிப் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை அமைத்து, சோசலிச சமுதாயத்தைக் கட்டப் பாடுபட்டுவரும் ஒரு புரட்சிகரக் கட்சியே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவாகும். நாம், நமது இயக்கத்தின் வரலாற்றைப் பொய்மைப்படுத்தி, அதை அழிக்கப் பகிரங்கமாக அழைப்பு விடுக்கும், ஒரு ஓடுகாலியின் பொய்களை ''நியாயபூர்வமானவை'' என்று எதற்காக வரவேற்க வேண்டும்?

ஹீலியின் தலைமையின் கீழ் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் காட்டிக் கொடுப்புக்கள் எல்லாவற்றையும் கேள்விக்கு உள்ளாக்குவதை அவசியமாக்கியுள்ளது, என்று கூறிச் சிலர் தமது பின்வாங்கலை நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர். இது தொழிலாள வர்க்க இயக்கத்தினுள் ஸ்திரமான வேர்கள் இல்லாத மத்தியதர வர்க்கப் பகுதியினரின் சிறப்பியல்பாகும். ஆனால் புறநிலை ரீதியான உண்மைக்கான தேடல், கடந்தகால வெற்றியீட்டல்களின் மரபை மலட்டு ரீதியான மறுதலிப்பினூடு ஒரு பொழுதும் முன்னேற்ற முடியாது. வைத்தியரின் கவனக் குறைவால் நோயாளி இறந்தமை மருத்துவ விஞ்ஞானத்திற்கு எதிராக உள்ள வாதம் என்று ஏற்றுக் கொள்ளலாமென ஆழமாக சிந்திக்கும் எவரும் முன் வைக்கமாட்டார். துரதிஷ்டவசமாக, புரட்சிகர அரசியலின் அரங்கில் நான்காம் அகிலத்தின் ஒவ்வொரு நெருக்கடியினுள்ளும் ட்ரொட்ஸ்கிசத்தின் தோல்வியைக் கண்டுபிடிப்பதில் நாட்டம் கொண்டுள்ள ஐயுறவாதிகளுக்குப் பற்றாக்குறை இருந்ததில்லை. ஆனால் தமது இயக்கத்தினுள் உள்ள நெருக்கடி ஒன்றின் தாக்கத்தின் கீழ் அரசியல் ரீதியில் முற்று முழுதாக நிலைகுலைந்து போகும் புரட்சியாளர்களின் வாதங்களினால் நாம் கவரப்பட வேண்டுமா? இப்படியான நபர்கள் தொழிலாள வர்க்கத்திற்கு எதையும் கற்றுத்தர முடியாது. ஏனெனில் ஐயுறவாதிகளினால் முன்வைக்கப்படும் பாகுபாடற்ற முறையில் ''கேள்விகளைக் கேட்பது'', வழமையாக அவர்கள் தனிப்பட்ட ரீதியில் புரட்சிகர இயக்கத்தை விட்டோடுவதில்தான் சென்று முடியும்.

தொழிலாளர் புரட்சிக் கட்சியினுள் ஏற்பட்ட பிளவின் பின்னர், ஹீலியுடன் அவர்களது கட்சியின் சீரழிவிற்குப் பிரதான பொறுப்பைக் கொண்டுள்ள பண்டா மற்றும் சுலோட்டர் நான்காம் அகிலத்தின் ஒவ்வொரு கோட்பாட்டையும், மரபையும் தூக்கி எறிவதற்காக வெறிபிடித்த பிரச்சார இயக்கத்தை தொடுப்பதில் ஈடுபட்டுள்ளனர். நான்காம் அகிலத்திற்கு எதிராக அவதூறுகளை அள்ளி வீசுவதில் அவர்கள் எறக்குறைய ஏறுமாறான திருப்தியைப் பெறுகின்றனர். வருத்துகின்ற பாவம் செய்தவர்கள் மீட்டெழுப்புக் கூட்டம் ஒன்றில் எக்களிப்புடன் தாம் தமது வாழ்நாட்களை எப்படி விரயம் செய்துவிட்டார்கள் என்று கண்டவர் நின்றவருக்கு முன்னால் எப்படி எல்லாம் பிரகடனப்படுத்துவார்களோ, அப்படியே இவர்களும் செய்கின்றார்கள். இந்த மட்டற்ற தன் விருப்பின் கேளிக்கைக் கூத்தாட்டத்தையும், வெட்கமற்ற சிறுமைப்படுத்தலையும் அவர்கள் ''பகிரங்கக் கலந்துரையாடல்'' என்கின்றனர். இந்தப் பரிதாபமான காட்சியின் அரசியல் வஞ்சக நிகழ்ச்சி நகைச்சுவை என்னவென்றால், "ஹீலியிசத்திற்கு" எதிராக நடந்து கொண்டு இருக்கும் போராட்டத்தின் பெயரில் நடத்தப்படுகின்றது என்பதாகும்.

எப்படியான பிரமாண்டமான மோசடி!, தொழிலாளர் புரட்சிக் கட்சியினுள் இன்று பண்டா- சுலோட்டர் பிரிவானது ஒட்டு மொத்தமாக புரட்சிகர கோட்பாடுகளை நிராகரிக்கும் வெள்ளப் பெருக்கின் ஊற்றுக்கால், ஹீலியின் தனிப்பட்ட சீரழிவு அல்ல. எப்படி இருந்தபோதும் பண்டாவும் சுலோட்டரும் ஐம்பதிலும் அதிகமாக வயதில் வளர்ந்த மனிதர்கள் மட்டுமல்லாது, அவர்கள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தலைமையில் தசாப்தங்களாக இருந்த அனுபவம்மிக்க அரசியல்வாதிகள் என்பதையும் நாம் நினைவிற் கொள்ள வேண்டும். அவர்கள் தமது அரசியல் கருத்துக்களையும், வரலாற்றுக் கருத்துருக்களையும், தீடீரென ஹீலியின் பாலியல் ரீதியான தவறான நடத்தையை (அதைப் பற்றிய அவர்களது கூற்றை ஒருவர் ஏற்றுக் கொள்ளத் தயார் என்றால்) கண்டுபிடித்ததன் காரணமாக மாற்றிக் கொள்ளவில்லை.

பண்டாவும், சுலோட்டரும் போன்ற மனிதர்களின் அரசியல் நிலை நோக்கில் ஏற்படும் கடும் மாற்றங்கள், மாறும் வர்க்கப் போராட்டத்தினதும், அவர்களது சொந்த அரசியல் வளர்ச்சியில் உள்ள தீர்க்கப்படாத முரண்பாடுகளினதும், அதன் ஒரு பகுதியாக தலைமையின் தீர்க்கப்படாத முரண்பாடுகளினதும் சிக்கல் மிக்க முறையில் ஒன்றின் மீது ஒன்று பின்னிச் செயலாற்றியதன் விளைபயனாகும். தொழிலாளர் புரட்சிக் கட்சியினுள் தலைவர்களுக்கு இடையில் மற்றும் உறுப்பினர்களுக்கு இடையில் கோட்பாடு ரீதியான போராட்டம் தலைமை தாங்கும் குழுக்களினுள் இருந்த குழு உறவுகளினால் பிரதியீடு செய்யப்பட்டிருந்தது. இங்கு தலைமையின் ஐக்கியம், கௌரவம் என்பனவற்றை பேணுதல் என்ற பெயரில் தத்துவார்த்த மற்றும் அரசியல் சமரசங்கள் செய்யப்பட்டன. இதன் மூலம் பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்று ரீதியான நலன்களுக்கான புரட்சிகர பிரதி நடவடிக்கையை முறைப்படி வகுக்கும் ஆற்றல் தொடர்ச்சியாகக் கீழறுக்கப்பட்டது. கட்சித் தலைமை படிப்படியாகத் தொழிலாளர்களுக்குக் குரோதமான வர்க்க சக்திகளின் ஓசைகளை ஒலிக்கும் அமைப்பாக மாறியது.

வரலாற்று முன்னோக்கில் இருந்து பார்க்கையில், உட்கட்சி நெருக்கடியை தொடங்கி வைத்தன் முக்கியத்துவம், ஹீலி தனிப்பட்ட ரீதியில் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததுதான் என்பது முற்றிலும் இரண்டாம் பட்ச தன்மையைக் கொண்டதாகும். தொழிலாளர் புரட்சிக் கட்சிக்குள் நெருக்கடியின் வெடித்தெழலுக்கு இது ஒரு காரணமாக இருந்த பொழுதும், அவருடைய தனிப்பட்ட ரீதியான சீரழிவும் மிகவும் வெறுக்கத்தக்க சந்தர்ப்பவாத வடிவங்களுள் அவர் வீழ்ச்சியுற்றதும், ஒட்டு மொத்த தலைமை நெருக்கடி மற்றும் விரோதமான வர்க்க சக்திகளுக்கு அது சரணாகதி அடைந்தமையினதும் ஒரு பகுதியாகும். பண்டாவின் ''27 காரணங்கள்'' மற்றும் அனைத்துலகக் குழுவிற்கு எதிராக மேலும் மேலும் உணர்ச்சிவசப்பட்ட முறையில் தொழிலாளர் புரட்சிக் கட்சி ஓடுகாலிகள் தொடுத்த தாக்குதல்கள் என்பன, கடந்த தசாப்தத்தினூடு தொழிலாளர் புரட்சிக் கட்சியினுள் கட்டற்று வளர்ந்த ட்ரொட்ஸ்கிச விரோதம் மற்றும் எல்லை கடந்த சோவினிசத்திலிருந்து உள்ளார்ந்த ரீதியாக வளர்ந்தவையாகும்.

கடந்த 10 வருடங்களாக ஹீலி அரசியல் ரீதியாக ஊட்டம் கொடுத்து வளர்த்து, அனைத்துலக் குழுவிற்கு எதிராகப் பயன்படுத்திய ட்ரொட்ஸ்கிச விரோதப் பகுதியின் அதிவலதுசாரிப் பகுதியையே பண்டா - சுலோட்டர் பிரிவு பிரதிநிதித்துவம் செய்கின்றது. உண்மையான ட்ரொட்ஸ்கிசத்தின் மேலான பற்று உறுதியின் அடிப்படையில், ஹீலியின் துஷ்பிரயோகத்திற்கு எதிராகத் தொழிலாளர், மற்றும் இளைஞர்களின் முக்கிய பகுதியினரிடம் இருந்து எழுந்த எதிர்ப்பைத் தவிர - 1985ம் ஆண்டு கோடைக்காலம் முழுவதும் ஹீலி, பண்டா மற்றும் சுலோட்டர் ஆகியோர் எந்தச் சக்திகளுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தார்களோ, அதே சக்திகள்தான், அக்டோபர் பிளவிற்குப் பின்னர் பட்டாளி வர்க்க சர்வதேசியத்தைச் சளையாது பாதுகாத்து நின்றன. அக்டோபர் 26, 1985ம் ஆண்டு பிளவிற்கு முன்னர் கோட்பாடு ரீதியான வேறுபாடுகள் எவையும், ஹீலி மற்றும் பண்டா - சுலோட்டர் கன்னைகளுக்கு இடையில் இருக்காததுடன், இரு பிரிவினரில் ஒன்றுகூடக் கட்சி நெருக்கடியின் மூலகாரணம் பற்றிய எந்த ஒரு ஆய்வையும் முன் வைக்கவில்லை. ஹீலிக்கும் பண்டா - சுலோட்டர் பிரிவுக்கும் இடையிலான பிளவின் பின், வெறும் ஒரு வாரத்தினுள், இப்போரட்டத்தில், வேலைத்திட்டம் அல்லது தந்திரோபாய ரீதியான தன்மை கொண்ட வேறுபாடுகள் எதுவும் சம்பந்தப்படவில்லை என்று பண்டா எழுதினார். அவர் தொழிலாளர் புரட்சிக் கட்சியினுள் உள்ள வேறுபாடுகள், வெறும் பாலியல் உறவுகளுக்கு இடையிலான தன்மையைக் கொண்டவை எனப் பிரகடனப்படுத்தினார். இருந்த பொழுதும், பண்டா அவரது ''27 காரணங்களை'', இதன் பின் இரு மாதங்களினுள் முன் வைத்தார். இது முற்று முழுதாக அனைத்துலகக் குழு, வரலாற்று ரீதியாக அபிவிருத்தி செய்த வேலைத்திட்டத்தை மறுதலிப்பதாக அமைந்துள்ளது.

பிளவின் பிந்திய வாரங்களில், இந்தக் கருத்துக்கள் பண்டாவின் தலையினுள் மாயஜால வித்தையின் மூலம் தோன்றியவை அல்ல. இவை தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தலைமையில் நீண்டகாலமாக கரு முதிர்ச்சி பெற்றுவந்த வலதுசாரி கலைப்புவாத நிலைப்பாடுகளை இணைத்துத் தெளிவாகக் கூறுகின்றன. ''எனது மனவேதனை என்னவென்றால் நான் இவற்றை 10 வருடங்களுக்கு முன்னர் எழுதவில்லை என்பதே'', என்று அவரே ஒத்துக் கொள்கின்றார். அது எதை உறுதிப்படுத்துகின்றது எனில், கட்சி மேலும், மேலும் அதன் ட்ரொட்ஸ்கிச அத்திவாரங்களில் இருந்து சந்தர்ப்பவாத பக்கம் நகர்ந்து சென்றதும், தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தலைமை அனைத்துலகக் குழுவுடன் தவிர்க்க முடியாத முறையில் பிளவுண்டு செல்லும் திக்கில் சென்று கொண்டிருந்தது என்பதையாகும். இந்தக் காலப்பகுதி முழுவதும் பண்டா, ஹீலி மற்றும் சுலோட்டர் அனைத்துலகக் குழுவினுள் கோட்பாடற்ற தன்னலக் குழுவாகத்தான் செயற்பட்டார்கள். அவர்கள், திட்டமிட்ட நெறிப்படுத்தப்பட்ட முறையில் உலகக் கட்சியைக் கட்டும் போராட்டத்தை, பிரித்தானியாவில் உள்ள தொழிலாளர் புரட்சிக் கட்சியின் உடனடி நடைமுறை ரீதியான தேவைகளுக்கு கீழ்நிலைப்படுத்தி வந்தனர். அவர்கள் நாக்கூசாது, அவர்களது சர்வதேசத் தோழர்களுக்கு போலி அரசியல் அறிக்கைகளைச் சமர்ப்பித்தார்கள். அரசியல் விமர்சனங்களை ஒடுக்கி வைத்தார்கள். மற்றும் அனைத்துலக் குழுவின் ஏனைய பகுதிகளின் வளங்களைச் சூறையாடினார்கள். அவர்கள் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் சந்தர்ப்பவாத சீரழிவை மூடி மறைப்பதற்காக, ஹீலியின் தனிப்பட்ட செல்வாக்கை உலக இயக்கத்தினுள் கட்டி எழுப்புவதற்காக பண்டாவையும் சுலோட்டரையும் போல எந்தவொரு இரு மனிதர்கள் ஒரு பொழுதும் கடுமையாக உழைத்ததில்லை.

கலைப்புவாதம் ஒரு சமூக ரீதியான இயல் நிகழ்வேயன்றி (Phenomenon) ஒரு தனிநபர் ரீதியான இயல் நிகழ்வல்ல. அது தொழிலாளர் இயக்கத்தின் மேல் ஏகாதிபத்தியம் தொடுக்கும் மிகவும் முனைப்பான அழுத்தத்தின் விளைபயனாகும். பண்டா அவரது ''27 காரணங்களில்'' தனக்காக மட்டும் பேசவில்லை. அவர் தொழிலாளர் புரட்சிக் கட்சியினுள் உள்ள குட்டி முதலாளித்துவ மிதவாதிகளின் மற்றும் அறிவுஜீவிகளின் சார்பில், ட்ரொட்ஸ்கிசத்தை, தொழிலாள வர்க்கத்தை, மற்றும் சமூகப் புரட்சியைக் கைவிட்ட முழு தட்டினரின் சார்பிலும் பேசுகின்றார். பிளவிற்கு முன்னர் 10 வருடங்களுக்கு அதிகமாகத் தொழிலாளர் புரட்சிக் கட்சியினுள் நிலையான முறையில் பலம் திரட்டி வந்த திரிபுவாத நிலைப்பாடுகளின் முழுமை பெற்ற வெறும் வடிவம்தான் பண்டாவின் பத்திரமாகும். கடந்த பத்தாண்டுகளுள் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் அரசியல் நிலையின் போக்கைப்பற்றிய எந்த ஒரு கருத்தூன்றிய ஆய்வு செய்யப்படுமாயின், அது 1961 முதல் 1966 வரை இடைப்பட்ட வருடங்களில் பிரித்தானிய ட்ரொட்ஸ்கிஸ்டுகள், பப்லோவாத திரிபுவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் முன்னனியில் நின்று பாதுகாத்த கோட்பாடுகள் மற்றும் வேலைத்திட்டம் என்பனவற்றிலிருந்து திட்டமிட்ட முறையில் பின்வாங்கியமை கட்சி நெருக்கடியுடன் பின்னிப் பிணைந்துள்ளது என்பதை எடுத்துக் காட்டும்.

கோட்பாடற்ற முறையில் சோசலிசத் தொழிலாளர் கட்சி (SWP), பப்லோ மற்றும் மண்டேலின் சர்வதேச செயலாளர் குழுமத்துடன் மறு ஐக்கியம் செய்ததிற்கு எதிரான போராட்டத்தில், சோசலிசத் தொழிலாளர் கழகம் (ஷிலிலி) என்றும் அழியாப் பங்களிப்பை நான்காம் அகிலத்தைக் கட்டுவதற்கு வழங்கியது. அதன் தலைமை தீட்டிய பத்திரங்கள் சம்மட்டித் தாக்குதல்களைத் திரிபுவாதிகளின் சந்தர்ப்பவாதத்திற்கு எதிராகத் தொடுத்தன. அவர்கள் குட்டி முதலாளித்துவ தேசியவாதத்திற்கு சரணாகதியடைந்ததன் அரசியல் முக்கியத்துவத்தை அம்பலப்படுத்தின. சோசலிசத் தொழிலாளர் கழகம், ட்ரொட்ஸ்கிசத்தின் வரலாற்று முன்னோக்கினைத் தற்பாதுகாத்து உலகம் முழுவதிலும் உள்ள புரட்சியாளர்களின் ஒரு புதிய தலைமுறையினரைக் கல்வியூட்டியது. இந்த போராட்டத்தின் பின்னர் சோசலிசத் தொழிலாளர் கழகம் கணிசமான அளவு அரசியல் ஆதாயத்தை பெற்றது. பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவினுள் எழுந்த பாட்டாளி வர்க்கப் போராட்ட அலையின் உச்சியில் நின்று அது மார்க்சிசத்திற்காகப் போராடியது. வியட்நாமில், அமெரிக்காவின் தலையீட்டுக்கு எதிரான புரட்சிகரப் போராட்டத்தினால் மத்தியதர வர்க்கத்தின் பரந்த பகுதியினர் தீவிரமடைந்தனர். இதனால் பிரித்தானிய ட்ரொட்ஸ்கிஸ்டுகள், தொழிலாளர் கட்சியின் [Labour Party] இளம் சோசலிஸ்டுகளின் தலைமையை வென்றனர். சக்திமிக்க இளைஞர் இயக்கத்தை அவர்கள் கட்டி, 1969ம் ஆண்டில் ஒரு நாளாந்த பத்திரிகையை நிலை நாட்டினர்.

இருந்த பொழுதும், இந்த முக்கிய பெறுபேறுகளை சோசலிசத் தொழிலாளர் கழகம் பெற்றதற்கு அது காட்டிய பிரதிவிளைவுகள், சில பாதகமான அம்சங்களை வெளிப்படுத்தின. பிரித்தானியாவில் சோசலிசத் தொழிலாளர் கழகம் வளரத் தொடங்கியதும், அது நான்காம் அகிலத்தைக் கட்டுவது, அதன் தேசிய நடவடிக்கைகளின் வெறும் விஸ்தரிப்பு என்று மேலும் மேலும் எண்ணும் போக்கைக் கொள்ள ஆரம்பித்தது. படிப்படியாக அது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அபிவிருத்தி அதன் பிரித்தானியப் பகுதியின் இயக்க ரீதியான வெற்றிகளில் இருந்து பிரதானமாக ஊற்றெடுக்கின்றது என்ற எண்ணம் சோசலிசத் தொழிலாளர் கழகத்தைப் பற்றிக் கொண்டது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை நிறுவுவதிலும், மற்றும் 1963 இல் மறு ஐக்கியத்திற்கு எதிரான போராட்டத்திலும், பிரித்தானியர்களுடன் ஓ.சி.ஐ.யின் [O.C.I-பிரெஞ்சுப் பிரிவு] தலைவர்கள் ஒத்துழைத்தார்கள். 1968 மே-யூன் கிளர்ச்சி எழுச்சிகளின் பின் ஒ.சி.ஐ.யும் அதன் முன்னேற்றத்தை அனுபவித்தது. பிரான்சிலும், பிரித்தானியாவைப் போன்றே தேசியவாத நிலைநோக்கு வளர ஆரம்பித்தது. ஒ.சி.ஐ.யின் மத்தியவாதப் போக்குகளை 1967ம் ஆண்டுக்கு முன்பாகவே, சோசலிசத் தொழிலாளர் கழகம் விமர்சித்திருந்தது. இது பிரெஞ்சுத் தலைமை, நூற்றுக் கணக்கில் அதன் இயக்கத்தில் சேர்ந்த குட்டி முதலாளித்துவ மாணவ இளைஞர்களின் சந்தர்ப்பவாத போக்குகளுக்கு தானும் இசைந்து போகத் தொடங்கியதுடன், அதன் மத்தியவாதப் போக்கு மேலும் அதிகரித்தது.

1971ம் ஆண்டில் சோசலிசத் தொழிலாளர் கழகம், ஒ.சி.ஐ.க்கு எதிரான அதன் அரசியல் போராட்டத்தை மீண்டும் ஆரம்பித்தது. ஆனால் அதனுடனான பிளவுடன் இதைத் திடீரென முறித்துக் கொண்டது. இந்தப் பிளவானது அனைத்துலகக் குழுவின் அணிகளுள் ஏறக்குறைய எந்த ஒரு அரசியல் கலந்துரையாடலையும் செய்யாமல் அவசரமாக, முடிவிற்கு கொண்டுவரப்பட்டது. ஓ.சி.ஐ யின் மத்தியவாதப் போக்கை விமர்சித்தது ஐயத்துக்கு இடமின்றி சரியானதாக இருந்த பொழுதும், சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் தலைமையினுள்ளும் எல்லாம் முற்று முழுதாக ஒழுங்காக இல்லை என்பதற்கான அறிகுறிகள் இருந்தன. 1967ம் ஆண்டு தொட்டு பின்தங்கிய நாடுகளில் உள்ள ஏகாதிபத்திய விரோதப் போராட்டங்கள் பற்றியும், சீனக் கலாச்சாரப் புரட்சி சம்பந்தமாகவும் பண்டா முன் வைத்து வந்த நிலைப்பாடுகள், குறைந்த பட்சம் ஆராயும் முறைகள் பப்லோவாதிகளுக்கு கணிசமான அளவு கிட்டுமானமாக இருந்தன. இருந்த பொழுதும் ஹீலி விடா முயற்சியுடன் பண்டாவுடன் வெளிப்படையாக இந்தத் தீர்க்கமான பிரச்சினைகள் சப்பந்தமாக மோதுவதை தவிர்த்து வந்தார். ஹீலி, ஓ.சி.ஐயுடன் அவசரப்பட்டு பிரிந்து கொண்டது, குறைந்த பட்சம் மத்தியவாதத்திற்கு எதிரான நீடித்த போராட்டம் ஒன்று, சோசலிசத் தொழிலாளர் கழகத்தினுள் அபாயகரமான எதிர் அதிர்வுகளை உண்டாக்கும் என்ற அச்சத்தினால் தூண்டப்பட்டது என்ற முடிவிற்கு வருவதைத் தவிர்ப்பது முடியாததொன்றாகும். இது எப்பொழுதென்றால், பிரித்தானியாவின் வர்க்கப் போராட்டத்தின் கிளர்ச்சி எழுச்சி, கட்சியைக் கட்டுவதற்கு தனிச் சிறப்பு வாய்ந்த சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் பொழுதேயாகும். தொழிலாள வர்க்க எழுச்சிக் காலப் பகுதிகளில் கட்சியினுள் சந்தர்ப்பவாத மற்றும் மத்தியவாத வடிவங்கள் அனைத்திற்கும் எதிரான போராட்டமானது, வாழ்வா சாவா என்ற முக்கியத்துவத்தைப் பெறுகின்றன என்று மீண்டும், மீண்டும் வரலாற்று முன்னோடி நிகழ்வுகள் நிரூபித்ததை பொருட்படுத்தாது இருக்க ஹீலி தேர்ந்துகொண்டார்.

பிரதம மந்திரி எட்வேட் ஹீத் (Edward Heath) இன் அரசாங்கம் தொழிற் சங்க விரோதச் சட்டத்தைக் கொண்டுவர எடுத்த முயற்சி, தொழிலாள வர்க்கத்தின் ரோறி (Tory) விரோத இயக்கத்தை தூண்டிவிட்ட பொழுது சோசலிசத் தொழிலாளர் கழகம் பெரும் பலன்களை அடைந்தது. ஆனால் இதற்கு அது மிகவும் பாரிய விலையைக் கொடுக்க வேண்டியிருந்தது. ஓ.சி.ஐ யுடனான பிளவுக்கு இட்டுச் சென்ற பிரச்சினைகளை தத்துவார்த்த ரீதியில் தெளிவுபடுத்தத் தவறியமை, கட்சியின் அரசியல் அத்திவாரங்களைப் பலவீனப்படுத்தியது. சோசலிசத் தொழிலாளர் கழகத்தினுள், வெள்ளம் போலப் பெருக்கெடுத்த நூற்றுக்கணக்கான உறுப்பினர்களில் அநேகர் மத்தியத்தர வர்க்க பின்னணியைக் கொண்டிருந்தனர். இவர்களுக்கு அனைத்துலகக்குழுவின் கோட்பாடுகள் மற்றும் வரலாறு பற்றி ஆரம்ப மட்டத்திலான அரசியல் கல்வி மட்டுமே ஊட்டப்பட்டது. இந்தக் காலப் பகுதியில் சோசலிசத் தொழிலாளர் கழகம் போர்க்குணம் மிக்க தொழிலாளர்களின் தொழிற் சங்கவாத நனவிற்குக் கூடுதலாக ஒத்துப்போகும் அரசியல் போக்கைக் கொண்டிருந்தது. இது ட்ரொட்ஸ்கிசத்தையும் அதன் சர்வதேச முன்னோக்கையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு வேலைத்திட்டத்தின் இடத்தில், பிரித்தானியாவில் உள்ள ரோறி எதிர்ப்பு இயக்கத்தின் தன்னியல்பான தொழிற்சங்க நனவை அடிப்படையாகக் கொண்ட ஒரு வேலைத்திட்டத்தை தொழிலாளர் புரட்சிக் கட்சியை ஆரம்பிக்க சோசலிசத் தொழிலாளர் கழகம் வெளியிட எடுத்த முடிவு எடுத்துக்காட்டாக விளங்கிற்று.

தொழிலாளர் புரட்சிக் கட்சி நவம்பர் 1973 இல் ஆரம்பித்தபொழுது, அதன் தலைவர்கள், பிரித்தானியாவில் மிகவும் விரைவான சோசலிசப் புரட்சியை நோக்கிய வளர்ச்சியை எதிர்ப்பார்த்தார்கள். இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை: பிரிட்டன் வூட்ஸ் (Bretton Woods) அமைப்பு ஆகஸ்ட் 1971 இல் தகர்ந்தமை உலகம் பரந்த ரீதியில் பணவீக்கத்தையும் பிரமாண்டமான ரீதியில் வர்க்கப் போராட்டத்தையும் மேலோங்கச் செய்தது. போர்த்துக்கல் மற்றும் கிரேக்கத்தில் உள்ள சர்வாதிகார ஆட்சிகள் பொறிந்தன. நிக்சன் நிர்வாகம் இழிவுக்குரிய அரசியல் அவதூறுகளில் சிக்கி ராஜினாமாச் செய்ய வைக்கப்பட்டது. பிரித்தானியாவில் தொழிலாள வர்க்கத்தின் பிரமாண்டமான ரோறி விரோதப் போராட்டம் 1974ம் ஆண்டின் முதல் மாதங்களில் சுரங்கத் தொழிலாளர்களின் வேலை நிறுத்ததில் உச்சத்தை அடைந்து, ஹீத் அரசாங்கத்தை ராஜினாமாச் செய்ய நிர்பந்தித்து தொழிற்கட்சியினரை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வந்தது.

இருந்தபோதும் தொழிற்கட்சியின் 1974ம் ஆண்டு தேர்தல் வெற்றிகளின் பின், தொழிலாளர் புரட்சிக் கட்சி தொழிலாள வர்க்கத்தின் நனவின்மேல் இருந்த சீர்திருத்தவாதத்தின் மிச்சசொச்சத்தின் தாக்கத்தில் இருந்து எழுந்த புதிய அரசியல் பிரச்சினைகளை எதிர் கொண்டது. சமூக ஜனநாயகவாதிகளின் துரோகக் கொள்கைகள், தொழிலாளர் இயக்கத்தினுள் மட்டுமல்லாது தொழிலாளர் புரட்சிக் கட்சியினுள்ளும் திக்குத் தெரியாத குழப்ப நிலையை உண்டாக்கியது. ஹீலி இப்பொழுது ஓ.சி.ஐ.க்கு எதிரான அரசியல் போராட்டத்தை அபிவிருத்தி செய்யத் தவறியதற்கு விலை கொடுக்க வேண்டி இருந்தது. ஹீத் அரசாங்கத்திற்கான எதிர்ப்பின் அடிப்படையில் மட்டும் கட்சிக்குச் சேர்க்கப்பட்ட தொழிற்சங்கத்தில் உள்ள தொழிலாளர் புரட்சி கட்சியின் உறுப்பினர்களின் பெரும் பகுதியினர் மத்தியில் மீண்டும் வில்சன் ஆட்சிக்கு வந்ததும், சீர்திருத்தவாத பிரமைகளை மீண்டும் புத்தெழுச்சி கொள்ளச் செய்தது. இந்தப் போக்கை எதிர்த்து தொழிலாளர் புரட்சிக் கட்சி செயல்படும் ஆற்றல் மிகவும் பாரிய முறையில் பலவீனப்பட்டிருந்தது. இது எதனால் என்றால் தொழிற்சங்கங்களுள் கட்சியின் வேலைகளுக்கு தலைவராக இருந்த அலன் தோர்ணற் (Alan Thornette), ஓ.சி.ஐயின் பிரித்தானிய ஆதரவாளர்களின் நிலைபாட்டிற்கு வென்றெடுக்கப்பட்டிருந்தார். உண்மையாக இயக்க ரீதியில் யாருடன் இணைந்திருக்கிறார் என்பதை வெளிப்படுத்தாமலும் ஓ.சி.ஐயின் ஆதரவாளர்கள் எழுதிய பத்திரங்களுடன் செயற்பட்டுக் கொண்டும் தோர்னற் புதிய தொழிற்கட்சி அரசாங்கத்திற்கு எதிராக தொழிலாளர் புரட்சிக் கட்சி தொடுத்த தாக்குதல்களை எதிர்த்தார். பொறுமையுடனும் அரசியல் உறுதிப்பற்றுடனும் கையாளப்பட்டிருக்க வேண்டிய இப்படியான கஷ்டமான நிலமையில், ஹீலி, பண்டா மற்றும் சுலோட்டரின் தலைமை ஆற்றொணா அமைப்பு ரீதியான நடவடிக்கைகளில் இறங்கிற்று. இது அனைத்துலகக் குழுவினுள் மட்டுமின்றி, தொழிலாளர் புரட்சிக் கட்சியினுள்ளும் மீண்டும் எந்த ஒரு கருத்தூன்றிய அரசியல் கலந்துரையாடல்கள் எதுவும் இன்றி தோர்னற்றையும் அவரது ஆதரவாளர்களையும் கட்சியிலிருந்து வெளியேற்ற இட்டுச் சென்றது.

இந்தப் பிளவின் மிகவும் மோசமான சேதத்தை விளைவித்த விளைபயன் என்னவென்றால், அது இதிலும் பார்க்க எவ்வளவோ அபாயகரமான அரசியல் போக்கை தொழிலாளர் புரட்சிக் கட்சியினுள் பலப்படுத்திற்று. இந்தப் போக்கு மத்தியதர வர்க்கப் பகுதியினரைக் கொண்டிருந்தது. இவர்கள் வில்சனின் வெற்றியைப் பின் தொடர்ந்து ஏற்பட்ட தொழிற்துறைப் போராட்டங்களின் மட்டத்தில் ஏற்பட்ட பொதுவான தளர்ச்சியடைதலுடன், விரைவாகத் தொழிலாள வர்க்கத்துடன் பொறுமையை இழந்தனர். அவர்கள் தொழிலாள வர்க்கத்தின் பரந்துபட்ட இயக்கங்களினுள் விடாப்பிடியான போராட்டம் தொடுக்க வேண்டியதன் தேவையை நிராகரித்தார்கள்.

கட்சியினுள் 1970ம் ஆண்டின் நடுப்பகுதியில் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தலைமையின் எண்ணிக்கையில் மேலோங்கி இருந்த, இந்த மத்தியதர வர்க்க சக்திகளுக்கு நெகிழ்ந்து கொடுத்தவண்ணம், தொழிலாளர் புரட்சிக் கட்சி மிகவும் வலுவாக தொழிலாள வர்க்கத்திடமிருந்து விலகிச் சென்றது. இது 1975ம் ஆண்டில் அதிதீவிர இடதுசாரி முன்னோக்கின் வடிவத்தை, உடனடியாக வில்சனின் தொழிற்கட்சி அரசாங்கத்தை பதவியில் இருந்து இறக்க அழைப்புவிடும் வடிவத்தை எடுத்தது. இது நடைமுறையில் தொழிற் கட்சியின் வலதுசாரிப் பகுதிக்கு எதிரான போராட்டத்தை, அதற்கு வக்காலத்து வாங்கும் மத்தியவாதிகளுக்கும் எதிரான போராட்டத்தைக் கைவிடுவதாகும். இந்தத் தவறான அரசியல் நிலைப்போக்கு கட்சியைத் தொழிலாள வர்க்கத்திடமிருந்து தனிமைப்படுத்த வழிவகுத்ததோடு, வழமையாக நடப்பது போல அதிதீவிர இடதுசாரிக் கொள்கைக்குத் துணைபோகும் ஒரு சந்தர்ப்பவாத நடைமுறைக்கு இட்டுச் சென்றது. வேர்க்கஸ் பிரஸ் (Workers Press) ஒரு மத்தியவாதப் வகைப்பட்ட நியூஸ் லைன் (ழிமீஷ்s லிவீஸீமீ) என்ற "ஜனரஞ்சகப்" பத்திரிகையாக உருமாற்றப்பட்டது.

அதேநேரத்தில் வியட்நாமில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தோல்வியின் வெளிப்பாடு ஸ்ராலினிசத்தினதும் மற்றும் பின்தங்கிய நாடுகளின் தேசிய இயக்கங்களினதும் புரட்சிகர சாத்தியக் கூறுகள் பற்றிய ஊகங்களை ஊக்கப்படுத்தியது. மத்திய கிழக்கில் உள்ள முதலாளித்துவ தேசியவாதிகளுடனான கூட்டு அமைப்பதற்கான தேடல், கோட்பாடு அற்ற தன்மையை எடுக்க ஆரம்பித்தது. இது இறுதியில் பணத்தை நாட்டம் கொண்ட சந்தர்ப்பவாத, வியாபார உறவு மட்டத்திற்குச் சீரழிந்தது. இந்த உறவுகளின் மூலம் பெற்ற வளங்கள் தற்காலிகமாக மிகவும் நெருக்குவாரம் கொடுத்துக் கொண்டிருந்த அமைப்பு ரீதியான பிரச்சனைகளை தற்காலிகமாகத் தீர்த்தபோதும், நிரந்தப் புரட்சித் தத்துவம் செல்லாக் காசாக்கப்பட்டு, வரலாற்று ரீதியாக நிலை நாட்டப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுதந்திரம் மற்றும் அதன் புரட்சிகரப் பங்கு பற்றிய கொள்கை என்பன திட்டமிட்ட முறையில் கீழறுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் அடிப்படையான உலக மூலோபாயமான புரட்சிகரத் தலைமை நெருக்கடியைத் தீர்க்க நான்காம் அகிலத்தின் பகுதிகளைக் கட்டுவது கைவிடப்பட்டது. அதன் இடத்தில் நீண்டகாலமாக கருக்கொண்டு வளர்ந்துவரும், பிரித்தானியாவில் உள்ள தொழிலாளர் புரட்சிக் கட்சியின் சடரீதியான வளர்ச்சி மற்றும் அதன் வெற்றிகளினதும் பக்க விளைபயனாகவேதான் அனைத்துலகக் குழுவைக் கட்டும் பணியைப் பார்த்தார்கள்.

1970ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் வலதுசாரி மத்தியவாத நடைமுறை, ட்ரொட்ஸ்கிச கோட்பாடுகளுக்கு வாயளவில்தன்னும் செலுத்தப்படும் சேவையுடன் சமரசப்படுத்த முடியவில்லை. காரியாளர்களின் கல்வியூட்டல், ஹீலியால் முன்வைக்கப்பட்ட அகநிலைக் கருத்துவாத ரீதியில் கொச்சைப்படுத்தப்பட்ட இயங்கியல் சடவாதம் முக்கியப்படுத்தி ஒருமுகப்படுத்தப்பட்டிருந்தது. அவர் ''நடைமுறையை அறியும் தன்மை'' என்று அழைத்தது உண்மையில் அவரது செய்முறைவாத அகத்திறன் (Pragmatic Intuition) உணர்வையேயாகும். இதை சரியாகப் பின்பற்றினால், கட்சி உறுப்பினர்களை, வர்க்கப் போராட்டத்தின் உண்மையான வளர்ச்சியைப் பற்றிய எந்த ஒரு திட்டவட்டமான விஞ்ஞான ரீதியான ஆய்வும் இல்லாமல் ''விரைவாக'' பலனை வழங்கும் நடைமுறைக்கு வர ஆற்றல் உள்ளவர்களாக்குவதாகும். ஒரு கட்சிப் பத்திரத்தில், "சிறப்பாக வர்ணிக்கப்பட வேண்டுமாயின் நனவற்ற முறையில் இயங்கியலை பயன்படுத்தல் என்று சொல்லக் கூடியதில்'' கட்சி உறுப்பினர்களைப் பயிற்ற ஹீலி உத்தரவாதம் கொடுத்தார். இது மார்க்சிசத்தை ஒரு அசாதாரண முறையில் உருத்திரிப்பதாகும். 40 வருடங்களுக்கு முன்னர் ட்ரொட்ஸ்கி, மக்ஸ் சற்மன் (Max Shchtman) ஜேம்ஸ் பேர்ண்ஹா£¢மை (James Burnham) பாதுகாத்ததைப்பற்றி குறிப்பிடுகையில், அவரது புகழ் பெற்ற மறுதலிப்பில் இப்படியான உருத்திரிப்பை கண்டனம்¢ செய்துள்ளார்.

இப்படியான தத்துவார்த்த பெரும் பிழைகளை ஹீலி செய்தார் என்பதும், அவை தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தலைமையினுள் எதிர்க்கப்படாது விடப்பட்டது என்பதும் தற்செயலானது அல்ல. ''பிரச்சாரவாதத்திற்கு'' எதிரான போராட்டம் என்பதன் கீழ் ட்ரொட்ஸ்கியின் ஆக்கங்களை வாசிப்பது கைவிடப்பட்டது. திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டமானது, தத்துவார்த்த வேலையின் ஒரு திட்டவட்டமான இலக்காக அது எல்லாவகையிலும் கைவிடப்பட்டு இருந்தது. வர்க்கப் போராட்டத்தில் எவ்வித அனுபவமும் இல்லாத குட்டி முதலாளித்துவப் பகுதியினரை பெரும்பாலும் கொண்டிருந்த தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தலைமையினுள் ஹீலி சூழ்ச்சித் திறமையைப் பயன்படுத்தி செயற்பட்டுக் கொண்டு இருக்கும் பொழுது தொழிலாளர் புரட்சிக் கட்சியினுள் எழுந்த அரசியல் வேறுபாடுகள் ஒன்றில் நசுக்கப்பட்டன அல்லது பூசிமெழுகப்பட்டன.

எனவே 1979 இல் மாக்ரட் தட்சரின் வெற்றியும் அதைத் தொடர்ந்து இரண்டாம் உலக யுத்தத்தின் பின் மிகவும் வலதுசாரி ரோரி அரசாங்கம் அமைக்கப்பட்ட பொழுது, அவை தொழிலாளர் புரட்சிக் கட்சியை அரசியல் ரீதியிலும் தத்துவார்த்த ரீதியிலும் தயாரற்ற நிலையில் கண்டன. பெயரளவில் அதனது அதிதீவிர இடதுசாரி அரசியல் போக்கைப் பேணிய வண்ணம் தொழிற்கட்சியின் மேல் கோரிக்கைகள் எதையும் முன்வைக்க மறுப்பதோடு, தட்சருக்குப் பதிலாக தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தலைமையின் கீழான புரட்சிகர தொழிலாளர் அரசாங்கத்தால் மட்டுமே பிரதியீடு செய்ய முடியும் என்று வலியுறுத்திய வண்ணம் - தொழிலாளர் இயக்கத்தினுள் அதன் தலையீடுகள் முற்று ழுழுதாக ஒரு சந்தர்ப்பவாதத் தன்மையைப் பெற்றன. ஏறக்குறைய எல்லாப்பிரதான வேலைநிறுத்தத்திலும், தொழிலாளர் புரட்சிக் கட்சி, தொழிற் சங்கத் தலைமையின் வலதுசாரிப் பகுதியைப் பாதுகாத்து ஆதரித்தது. உதாரணத்திற்கு உருக்கு (Steel) தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பில் சேர்ஸ் (Bill Sirs) சைப் பாதுகாத்தது. கென் லிவிங்ஸ்ரோன் (Ken Livingstone) இன் தலைமையின் கீழ், தொழிற் கட்சியினுள் உள்ள இடதுசாரி வாய்வீச்சாளர்கள் லண்டன் மாநகர சபையைத் தமது ஆட்சிக்குள் கொண்டுவந்தது. அப்பொழுது தொழிலாளர் புரட்சிக் கட்சி தன்னை அவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களாக மாற்றிக் கொண்டது. சீர்திருத்த வாதிகளின் தலைமையின் கீழான லண்டன் மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு சம்பள உயர்வு வழங்க கட்டுப்படியாகாது என்பதற்காகப் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை எதிர்த்து, ஒன்றன் பின் ஒன்றாக நான்காம் அகிலம் ஈட்டிய தத்துவார்த்த வெற்றிகள் மற்றும் வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையான கருத்துக்கள் என்பன கைவிடப்பட்டன. மல்வினாஸ் (Malvinas) இன் மேல் நடந்த பிரித்தானிய ஆக்கிரமிப்பிற்கு தொழிலாளர் புரட்சிக் கட்சி முதலில் ஒரு அமைதிவாத நிலைப்பாட்டைக் கடைப் பிடித்தது. பின்னர் கட்யூனிஸ்ட் கட்சிக்குள், அதன் பத்திரிகையை தமது கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவர உட்கட்சிக் கன்னைகளுள் சண்டை வெடித் தெழுந்ததை எதிர் கொள்கையில், தொழிலாளர் புரட்சிக் கட்சி பெரிய பிரித்தானிய கம்யூனிஸ்ட் கட்சி (CPGB) அமைப்பின் ஐரோப்பிய - ஸ்ராலினிச பிரிவின் சார்பில் மிகவும் உற்சாகத்துடன் பிரச்சாரம் செய்தது. மோர்ணிங் ஸ்டார் (Morning Star), ஸ்ராலினிச கந்தல் நாளிதழை அக் கன்னை அதன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், இந்தக் பழைய பத்திரிகையை அக்டோபர் புரட்சியின் ஒரு விளைபயன் என்றும் நம்பவே முடியாத முறையில் வாதிட்டது.

1982 மற்றும் 1984ம் ஆண்டுகளுக்கு இடையில் தொழிலாளர் கழகம், தொழிலாளர் புரட்சிக் கட்சியை அதன் அரசியல் நிலைப் போக்கைப் பற்றியும் மற்றும் அதன் தத்துவார்த்த முறையைப் பற்றியும் கலந்துரையாடலுக்கு வரச்செய்ய முயன்றது. அது ஹீலியின் இயங்கியல் சடவாதத் திரிபுபற்றி, மற்றும் தொழிலாளர் புரட்சிக் கட்சி, பப்லோவாதத்துடன் வரலாற்று ரீதியாக இனம் கொள்ளப்பட்ட நிலைபாடுகளுக்கு மீண்டும் திரும்பியுள்ளது பற்றிய விரிவான ஆய்வுகளை முன் வைத்தது. தொழிலாளர் புரட்சிக் கட்சி இந்த விமர்சனங்களை தொழிலாளர் கழகத்துடன் பிரிவினைக்குச் செல்லும் என்று மிரட்டுவதன் மூலம் எதிர் கொண்டது. இப்படியானதொரு எதிர் கொள்ளல், மார்க்சிச நிலைப்பாட்டிலிருந்து எதைக் காட்டியதென்றால் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் சீரழிவு ஒரு மிகவும் முன்னேறிய கட்டத்தை அடைந்து விட்டது என்பதையே ஆகும். வர்க்கப் போராட்டத்தின் நிஜமான வளர்ச்சி இதை ஊர்ஜிதம் செய்தது. 1926 பிரித்தானிய பொதுவேலை நிறுத்தத்தைப் பற்றியும் புர்செல், குக் மற்றும் அங்கிலோ ரஷ்யன் குழுவைப் பற்றிய சுட்டெரிக்கும் ட்ரொட்ஸ்கியின் விமர்சனங்களையும் பற்றி எல்லாவற்றையும் மறந்துவிட்டு 1983ம் ஆண்டின் இறுதிப் பகுதியில், அச்சகத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர்களின் ஊசலாடும் கொள்கைகளை ஆதரித்ததோடு அவர்களின் காட்டிக் கொடுப்புகளை, அரசியல் ரீதியில் மிதமான கருத்துடைய தலைவர்களிடம் இருந்து வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது என்ற அடிப்படையில் தொழிலாளர் புரட்சி கட்சி மன்னித்து விட்டது.

ஒவ்வொரு திருத்தப்படாத தப்பும் புதிய மோசமான தவறுகளை உண்டுபண்ணின. பிரிட்டனின் போருக்கு பிந்திய முழு வரலாற்றிலும் சுரங்கத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தந்தான் தீர்க்கமானது. மீண்டும் ஒரு முறை அது தான் பிரெஞ்சுத் தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் உள்ள கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சோசலிசக் கட்சி ஆகியவற்றிற்கு 1968ம் ஆண்டு பொதுவேலை நிறுத்தத்தின்போது ஓ.சி.ஐ. (OCI) அரசியல் கோரிக்கைகளை முன்வைக்க மறுத்தது சம்மந்தமாக தான் எழுதியவை எல்லாவற்றையும் மறந்து விட்டு (இதே பிரச்சினை பற்றி லெனினும் ட்ரொட்ஸ்கியும் ஏராளமாக எழுதியவை ஒருபுறம் இருக்க) தொழிலாளர் புரட்சிக் கட்சி ஒரு கோரிக்கையைத் தன்னும் தொழிற் கட்சியின் மேல் வைக்கவில்லை. 1960ம் மற்றும் 1970ம் ஆண்டுகள் முழுவதும் பண்டாவும் ஹீலியும் கடமை உணர்ச்சியுடன் எதிர்த்து போராடிய குட்டி முதலாளித்துவ இடதுசாரித்துவத்தை அடிப்டையாகக் கொண்ட இந்த அரசியல் தவிர்ப்புவாதம் (Political abstentionism) சுரங்கத் தொழிலாளர்களின் தேசிய சங்கத்தின் ஸ்கார்கில் (Scargill) தலைமை அடிபணிந்துபோவதை முழுமைப்படுத்தியது. ஸ்கார்கில் ஒரு பொழுதும் தொழிற்சங்கக் காங்கிரசை (TUC) பொது வேலைநிறுத்தம் செய்யும்படி அழைக்கவோ அல்லது தொழிற் கட்சி, ரோறிகளை ஆட்சியில் இருந்து இறக்க புதிய தேர்தலுக்காகப் போராடும்படி கோரவோ இல்லை. அவர் தொழிற் கட்சி அதிகாரத்துவத்துடன் அரசியல் மோதுதல் ஒன்று ஏற்படுவதைத் தவிர்க்க மிகவும் ஜாக்கிரதையாக இருந்தார். தொழிலாளர் புரட்சிக் கட்சி அவருடைய தொழிற்சங்க மற்றும் மத்தியவாத போக்கிற்கு நெகிழ்ந்து துணைபோனது.

குறிப்பிட்டளவு தொழிற் கட்சியை அம்பலப்படுத்தத்தொடுக்கும் போராட்டத்தை அது நிராகரித்ததை நியாயப்படுத்தவும் ஆனால் அதிலும் மோலாக தொழிலாளர் புரட்சிக் கட்சி மிக மோசமான நிலைகுலைவின் வெளிப்பாடாக தட்சர் சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்ததின் முதல் மாதத்தில் பொனபாட்டிச சர்வாதிகாரியாக உருமாற்றம் பெற்றுவிட்டார் என ஹீலி பிரகடனப்படுத்தினார். வேலைநிறுத்தமானது, ஒரு சோசலிசப் புரட்சியில் அல்லது ஒரு பாசிச சர்வாதிகாரத்தில் சென்று முடியும் என்று கூறிய தொழிலாளர் புரட்சிக் கட்சி, இன்னுமொரு தொழிற்கட்சி அரசாங்கத்தின் சாத்தியக்கூறை விலக்கி வைத்துவிட்டு, ஆணித்தரமாக சுரங்கத் தொழிலாளர்களைத் தற்காக்க தொழிற் கட்சியை, தட்சரை ஆட்சியில் இருந்து இறக்கப் போராடும்படி நிற்பந்திக்கப்பட வேண்டும் என்ற எந்த ஒரு யோசனையையும் நிராகரித்தது. 1984 நவம்பரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில், சுரங்கத் தொழிலாளர்கள் தோற்கடிக்கப்படுவார்களாயின், நாம் தட்சரின் பிரிட்டனில் சட்ட விரோதமாக்கப்படுவோம். அவர் தொழிற் சங்கங்களை அழிப்பதை முன்னெடுத்துச் செல்ல உத்தேசித்திருப்பது மட்டுமல்லாது, அவர் தன்னை எதிர்க்கும் போராட்டத்தில் உள்ள மிகப் புரட்சிகரமான பகுதிகளை சட்ட விரோதமாக்கவும் போகின்றார் என ஹீலி பிரகடனப்படுத்தினார்.

எதிர்பார்த்தபடியே வெற்றியேதும் பெறாது நிலக்கரிசுரங்கத் தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்புவது தொழிலாள வர்க்கத்திற்கு ஏற்பட்ட தோல்வியைப் பொருள்படுத்தும், சர்வாதிகாரத்தை பலப்படுத்தும் மற்றும் தொழிலாளர் புரட்சிக் கட்சி சட்ட விரோதமாக்கப்படுவதை சாத்தியமாக்கும் என்பதும், வேலை நிறுத்தத்தின் முடிவில் கட்சியை அதன் அடிவேர்வரை உலுப்பியது. ''உடனடியான புரட்சி'' என்ற மார்க்சிசத்தை சிறுபிள்ளைத்தனமாக வரைந்த கேலிச் சித்திரத்தின் முதிர்வளர்ச்சியற்ற முன்னோக்கின் பொறிவு, திரண்டுபோய் இருந்த குட்டி முதலாளித்துவ ஐயுறவவுவாத அலையைக் கட்சி முழுவதும் கட்டவிழ்ந்து விட்டது. சுரங்கத் தொழிலாளர்களின் தோல்வி, தொழிலாளர் புரட்சிக் கட்சியின் உள்ளே உள்ள மத்தியதரவர்க்கத்தை, ஹீலியின் முன்னோக்கு மட்டுமல்லாது, ட்ரொட்ஸ்கிசத்தின் முழு மரபும் தப்பானது என்பதை நம்ப வைத்தது.

இப்படியான பின்னணியில் ஹீலியின் அந்தரங்க செயலாளராக 20 வருடங்களுக்கு அதிகமாக இருந்தவர் எழுதிய, கட்சியின் பெண் உறுப்பினர்கள் திட்டமிட்ட முறையில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதை அம்பலப்படுத்தும் கடிதம் ஒன்று கட்சியின் தலைமையகத்திற்கு 1985 ஜீலையில் வந்து சேர்ந்தது. அடுத்த மூன்று மாதங்களாக இந்த இழிசெயலை, தொழிலாளர் புரட்சிக் கட்சியின் அரசியல்குழு மூடிமறைக்க முயன்றது. மத்திய குழு உறுப்பினரான டேவ் ஹைலண்ட் (Dave Hyland) இன் கோட்பாட்டு ரீதியான முறையிலும் கட்டுப்பாட்டு ரீதியான முறையிலும் கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் விசாரணை நடாத்த எடுத்த முயற்சிகள் கோடைக்காலம் முழுவதும் பண்டாவாலும், சுலோட்டராலும் எதிர்க்கப்பட்டு ஒடுக்கப்பட்டது. இந்த கீழ்த்தரமான குளறுபடியின் மத்தியில் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் சந்தர்ப்பவாத அரசியல் வேர் கொண்டு, பல வருடங்களாக வளர்ந்து வந்த நிதி நெருக்கடி இறுதியில் வெடித்தது. தலைமையினால் தொடர்ந்தும் இத்து அழுகிப்போன பெரும் அமைப்பு முழுவதும், பொறிந்து போவதைத் தடுக்க முடியவில்லை. ஹீலியினுடைய தனிப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய செய்திகள் உறுப்பினர்களிடம் போய்ச் சேர்ந்தன. எல்லாவகையான அரசியல் மற்றும் அறநெறிச் செல்வாக்கும் முழுமையாக இழந்த நிலையில், இதைத் தொடர்ந்து வெடித்தெழுந்த ட்ரொட்ஸ்கிச விரோத ஆத்திரமூட்டல் செயல்களைக் கட்டுப்படுத்த ஹீலியால் எதுவும் செய்ய முடியவில்லை. இதற்கு முந்திய பத்தாண்டுகாலமாக ஹீலி கடைப்பிடித்து வந்த அரசியல் நிலைப்போக்கே இதற்கான தயாரிப்பை செய்து வைத்திருந்தது. உண்மையில் அவரே நான்காம் அகிலத்தின் வரலாற்று ரீதியான முன்னோக்கில் நம்பிக்கை இழந்திருந்தார். இந்தக் காரணத்தினாலேயே அவரது செல்வாக்கை அவர் ஒழுக்கம் சிதைந்த முறையில் துஷ்பிரயோகம் செய்வதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

1985 அக்டோபரில் அடக்கி வைக்கப்பட்ட குட்டி முதலாளித்துவ மனக்கசப்புகள் தொழிலாளர் புரட்சிக் கட்சியினுள் வெடித்து சிதறின. நம்பிக்கையிழந்து மனக்கசப்புடன், வருடக் கணக்கில் கடுமையாக உழைந்து எந்தவித பலாபலன்களையும் பெறாது வெறுப்படைந்த தமது சொந்த நிலமைகளைப் பற்றி அதிருப்தி கொண்டு, வீணாக நேரத்தை இழந்துவிட்டோம், வெறுமனே புரட்சிளைப் பற்றி எல்லா பேச்சுகள் பற்றி சலிப்புற்றும் களைப்புற்றும் இந்தக் குட்டி முதலாளித்துவ பகுதிகளின் அகநிலையான வெஞ்சினம் அரை இளைப்பாறிய பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் கலவைக்கூளமான கும்பலால் வழி நடத்தப்பட்ட இது, அரசியல் ரீதியில் கலைப்புவாத வடிவத்தை பெற்றது. திட்டவட்டமாக இவற்றின் ஊற்றுக்கால் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தலைமையின் அகநிலை ரீதியான தவறுகளில் மட்டும் இருக்கவில்லை, மாறாக அடிப்படையில் வர்க்க உறவுகளில் ஏற்படும் புறநிலையான மாற்றங்களில் இருந்தமையால், கட்சியின் பெரும் பகுதியினூடு அடித்துக் கொண்டு சென்ற இந்த ஐயுறவுவாதம் தொழிலாளர் புரட்சிக் கட்சியினுள் இருந்த சக்தி மிக்க சமூகப் போக்கின் வெளித் தோற்றமாகும்.

1970ம் ஆண்டுகளின் பணவீக்கத்திலான ஸ்திரமின்மையும், பொதுவான சமூக நெருக்கடிக்கு சீர்த்திருத்த வாதத்தால் எந்த தீர்வையும் தரமுடியாத இயலாத்தன்மையினாலும், மத்தியதர வர்க்கத்தினரின் பரந்த பகுதியினால் வலதுசாரி பக்கம் திரும்பும் போக்கை உண்டாக்கியது. இந்த வலதுசாரி வளர்ச்சியின் விளைபயன்தான் தேர்தல்களில் 1979 இல் தட்சர், 1980 இல் றீகன் மற்றும் 1983 இல் கோலும் (Helmut Kohl- ஜேர்மனி) தேர்ந்தெடுக்கப்பட்டமையாகும். இவை எல்லா முதலாளித்துவ நாடுகளிலும் குறிப்பாக பிரித்தானியாவிலும் தொழிலாளர் இயக்கத்தின் மேல் பிரமாண்டமான பாதிப்பை ஏற்படுத்தின. பிரித்தானியாவில் குறிப்பாக பெரிய ஒடுகாலி வலதுசாரிக் குழுவொன்று சமூக ஜனநாயக் கட்சியை அமைத்து தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக தாராண்மைக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தது.

வேலையின்மையின் வளர்ச்சி, பழைய நலன்புரி சேவைகள் தகர்த்து தரை மட்டமாக்கல், சம்பளப் பொது மட்டம் கீழ்நோக்கிக் குறைக்கப்படல், வேலை நிறுத்தங்களின் பலனளியாத் தன்மை, தொழிற்சங்கள் பலவீனமாகுதலின் எளிதான வெளிப்பாடு, றேகன் தட்சரின் ஆதிக்கத்தின் கீழ் வினியோக-பக்க பொருளாதாரத்தின் பாதிப்பின் கீழ் மத்தியதர வர்க்கத்தின் பகுதியினர்கள் சீர்திருத்தவாத்தை விட்டுவிட்டு வலதுசாரித்துவம் பக்கம் செல்லல், அவர்கள் 1960 ஆண்டுகளின் பணியிலான செயல் ஊக்க நடவடிக்கைகளை விட்டு விட்டு, இன்பமே சிறந்த நலம் என்ற நுகர்வுவாதம் பக்கம் மற்றும் சுய திருப்திப்படுத்தல் பக்கம் திரும்புதல்: இந்த அபிவிருத்திகள் ஒருபிரமாண்டமான தாக்கத்தைத் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் மேல் ஏற்படுத்தியது. அதனுள் இருந்த மத்தியதர வர்க்கப் பகுதிகள் தாம் பத்திரிகைகளில் வாசித்தவற்றை நம்பத் தொடங்கியிருந்தனர். உற்பத்தியின் எல்லா கட்டங்களிலும் தானியங்கி இயந்திரங்களைப் பயன்படுத்தல் தொழிலாள வர்க்கத்தின் பலத்தை ஏறக்குறைய எல்லாம் உறிஞ்சி எடுத்துவிட்டது. கணணித் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் தகவல் பரிமாற்றம் முதலாளித்துவத்திற்குப் புதியதொரு பொருளாதார அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளது. தொழிற்துறை தொழிலாள வர்க்கமானது பழமைப்பட்டு வழக்கற்றுப் போகச் செய்யப்பட்டுள்ளது. மற்றும் மார்க்சிசமானது அர்த்தமற்றதாகிவிட்டது. பல வருடங்களாக அவர்கள் பொருளாதார நிகழ்ச்சிகளின் இணைவில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி ஒரு ஆழமான ஆய்வு இன்றி அல்லது வர்க்கப் போராட்டத்தில் ஏற்படும் ஸ்தூலமான அபிவிருத்திகளைப் பற்றி ஆய்வு செய்யாது பிரிட்டனில் சமூகப் புரட்சி உடனடியாக நிகழக் கூடியது என்று மீண்டும் மீண்டும் கூறிவந்துள்ளனர். இப்பொழுது இதுதான் அவர்களது முன்னோக்கின் மையமாகும். அவர்கள் தொடர்ந்தும் இந்த நூற்றாண்டில் அல்லது அடுத்த நுற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களில் கூட ஒரு புரட்சி ஏற்படுவதற்குச் சாத்தியக் கூறு உண்டு என்று நம்புவர்களாக இல்லை.

தொழிலாளர் இயக்கத்திற்கு அவர்கள் பொறுப்பானவர்கள் என்று தொடர்ந்து உணராத ஆட்கள் தான், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பங்குபற்றி விஞ்ஞான ரீதியான நம்பிக்கையில் வேர் ஊன்றியதிலிருந்து தம்மை முறித்துக் கொண்டவர்கள்தான் பண்டா, சுலோட்டர் மற்றும் அவர்களது ஆதரவாளர்களைப் போலப் பேச, எழுத நடந்து கொள்ள முடியும். அவர்களது சமூக அடித்தளம் தொழிலாள வர்க்கம் அல்ல ஆனால் றீகன் மற்றும் தட்சரின் விநியோக-பக்க பொருளாதாரத்தால் முதலாளித்துவம் வரலாற்று ரீதியாக நிலைத்திருப்பது பற்றிய பிரமைகள் மீண்டும் கொழுந்து விட்டெரிய வைக்கப்பட்ட மத்தியதர வர்க்கப் பகுதியினராகும்.

இந்தக் கலைப்புவாதிகளின் உண்மையான முன்னோக்கை, பண்டா - சுலோட்டர் கன்னையின் ஆர்.எம். என்கிற உறுப்பினரால் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் உட்கட்சி பத்திர வெளியீட்டிற்கு சமர்ப்பித்த பத்திரத்தில் விவரமாகக் கூறியுள்ளார்.

உள்ளதை உள்ளபடி பேசுவோமாயின் முதலாளித்துவ சமுதாயத்தினுள், நடைமுறையில் தனது வாழ்க்கைத் தொழிலாகப் புரட்சியாளனாக இருப்பது ஒரு கருத்துவாத நிலைப்பாடாகும். ஏனென்றால் அது ஒருவருக்கு பயங்கரவாதத்திற்கு அல்லது கலவரத்திற்கு அல்லது சதிக்கு சிறைவாசத்தைப் பெற்றுத்தரும். பரந்துபட்ட பாட்டாளி வர்க்கத்திற்கு சோசலிச கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு புரட்சிக் கட்சி தேவை ஆனால் காலத்தின் இந்த நேரத்தில் கட்சியானது இந்த அமைப்பினுள் செயற்பட வேண்டும். அப்படி அது செயற்படாவிட்டால் அது முதலாளித்துவ வர்க்கத்தினதும் அதன் அரசினதும் நிஜமான உள்ளார்ந்த ஆற்றலை மறுக்கின்றது. குறிப்பாக இங்கிலாந்தில் இருப்பது உலகின் மிக முதிர்ந்த முதலாளித்துவ வர்க்கம் என்றபடியால், முதலாளித்துவத்தை உடைத்துத் தகர்க்கும் மிகப் பெரும் பணி நமக்கு உண்டு.2

ஹீலிக்கு எதிரான கோட்பாட்டு ரீதியான போராட்டத்திற்குப் பதிலாக பண்டாவின் "27 காரணங்கள்" நான்காம் அகிலத்தை தொழிலாளர் புரட்சிக் கட்சி காட்டிக் கொடுத்ததன் இறுதி விளைவாகும். அவர் ட்ரொட்ஸ்கிசத்தின் மேலேயே தொழிலாளர் புரட்சிக் கட்சி ஆற்றிய அரசியல் குற்றங்களுக்கான பழியைப் போடுவது தொழிலாளர் புராட்சிக் கட்சியின் சந்தர்பவாதத்திற்கான திரிக்கப்பட்ட தற்காப்பு முயற்சியாகும். பண்டாவின் பத்திரம் 1976ம் ஆண்டிலிருந்து தொழிலாளர் புரட்சிக் கட்சி சீரழிவுற்றதைப் பற்றி எதையும் குறிப்பிடவில்லை. பண்டாவின், அனைத்துலகக் குழுவைப் புதைக்க விடும் அழைப்பு 1985 டிசம்பரில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, தொழிலாளர் புரட்சிக் கட்சியை அதன் பிரித்தானிய பகுதி என்ற நிலையிலிருந்து இடைநீக்கம் செய்ய எடுத்த தீர்மானத்தைத் தூற்றுவதிலிருந்து ஆரம்பித்துத் தொடருகின்றது. அநேகமாக தொழிலாளர் புரட்சிக் கட்சியின் அரசியல் காட்டிக் கொடுப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததும் பண்டா அனைத்துலகக் குழு அழிக்கப்பட வேண்டும் என்று உணர்ந்துள்ளார். மேலும், பண்டாவைப் பொறுத்தவரை தொழிலாளர் புரட்சிக் கட்சி செய்தவை எல்லாம் நான்காம் அகிலத்தை அமைத்ததன் விளைபயனாகும். அத்தோடு அவரதும் மற்றும் ஹீலியினதும் தலைமையின் கீழ் பிரித்தானியாவில் நடந்தவை முழுவதனையும் அனைத்துலகக் குழுவின் தலையில் போட்டுவிட வேண்டியது தான். தான் கூறுவதை நிருபிக்க, தனது பொதுச் செயலாளர் என்ற பொறுப்பினைக் கைவிட்டு விட்டு, இலங்கையில் உள்ள அவரது மூதாதையர் வழிவந்த பெருந்தோட்டத்திற்குப் பின்வாங்கினார். அங்கு அவர் பணியிலிருந்து விலகி நிற்கும் தத்துவ வாதியாகவும் இலங்கை சமசமாஜக் கட்சியின் கொல்வின் ஆர் டி சில்வாவுடனான நட்பு ரீதியான உரையாடல்களுக்கும் இடையில் அவர் கடந்த 48 வருடங்களாக நான்காம் அகிலம் சறுக்கிய வாழைப்பழத் தோல்கள் எல்லாவற்றையும் பட்டியல் வரிசையில் தொகுக்கத் தொடங்குவதன் மூலம் அவர் தனது சொந்த ஓடுகாலித்தனத்தையும் தொழிலாள வர்க்கத்தைக் காட்டிக் கொடுத்ததையும் நியாயப்படுத்த முயன்றுள்ளார்.

Copyright 1998-2003
World Socialist Web Site
All rights reserved