WSWS : Tamil : õóô£Á

Chapter 6: Trotsky's Proletarain Military Policy
முன்னுரை
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
 

Chapter 6: Trotsky's Proletarain Military Policy

ட்ரொட்ஸ்கியின் பாட்டாளி வர்க்க இராணுவக் கொள்கை

Use this version to print | Send this link by email | Email the author

மினியாப்பொலிஸ் (Minneapolis) ஆட்சி எதிர்ப்பு வழக்கு விசாரணையை சோசலிசத் தொழிலாளர் கட்சி நடத்திய முறைபற்றிய தனது விமர்சனத்தில் கிரண்டிசோ முனிஸ் பின்வரும் கனனின் அறிக்கைக்கு தனது ஆட்சேபனையைத் தெரிவித்தார். 

"நாம் மனித இனத்தின் மிகப்பெரும் எதிரியாக ஹிட்லரையும், ஹிட்லரிசத்தையும் கருதுகின்றோம். பூமியின் நிலப்பரப்பில் இருந்து அதை நாம் துடைத்துக்கட்ட விரும்புகின்றோம். அமெரிக்க ஆயுதங்களின் யுத்தப் பிரகடனத்தை நாம் ஆதரிக்காததற்கான காரணம் என்னவென்றால், அமெரிக்க முதலாளிகளால் ஹிட்லரையும், ஹிட்லரிசத்தையும் தோற்கடிக்கமுடியும் என்ற நம்பிக்கை நமக்கில்லை. தொழிலாளர்களின் தலைமையின் கீழ், யுத்தம் ஒன்றைத் தொடுப்பதன் மூலம் மட்டும்தான், ஹிட்லரிசத்தை அழிக்க முடியும் என்று நாம் கருதுகின்றோம்.''1

இதற்கு முனிசின் பதில் :

''நாம் யுத்தப் பிரகடனப்படுத்தலை ஆதரிக்கவில்லை, ஏனென்றால் ஹிட்லரையும், ஹிட்லரிசத்தையும் அமெரிக்க முதலாளிகளால் தோற்கடிக்கமுடியும் என்று நாம் நம்பவில்லை'' என்று கூறுவது, நமக்கு அந்தத் தோல்வியில் நம்பிக்கை இருக்குமாயின், நாம் அதை ஆதரிப்போம் என்ற புரிதலைக் கொடுப்பதாக உள்ளது; இது ஐக்கிய அமெரிக்க அரசுகளின் வெற்றியில் நம்பிக்கை கொண்டவர்களை, யுத்தத்தை ஆதரிக்கத் தூண்டுகின்றது. நாம் யுத்தத்தை நிராகரிப்பதன் அடிப்படை, அதை உண்டு பண்ணுகின்ற சமூக அமைப்பின் தனிச்சிறப்புப் பண்பை அடிப்படையாகக் கொண்டுள்ளதேயன்றி, பாசிசத்தின் இந்த, அல்லது அந்தத் தோல்வியின் நம்பிக்கையின் அடிப்படையில் அல்ல.'' 2

கனனின் உறுதியான தெளிவான கூறலுக்கு முனிஸ் கிளப்பிய ஆட்சேபனை ஒரு சிறுபிள்ளைத்தனமான குதர்க்கமாகும். அமெரிக்க ஏகாதிபத்தியம் ஹிட்லருக்கு எதிராகத் தொடுக்கும் யுத்தத்தை ட்ரொட்ஸ்கிஸ்டுகள் ஆதரிக்கவில்லை என்ற சோசலிசத் தொழிலாளர் கட்சியின் நிலைப்பாட்டைக் கனன் விசாரணையின் பொழுது உறுதியாகக் கடைப்பிடித்தார். இருந்தபோதிலும், சோசலிசத் தொழிலாளர் கட்சியானது அது எப்படி நாஸி ஜேர்மனிக்கு எதிராக சோவியத் ஒன்றியம் தொடுக்கும் யுத்தத்தை ஆதரிக்கின்றதோ, அப்படி அது ஹிட்லருக்கு எதிரான ஒரு இராணுவப் போராட்டத்தையும், ஐக்கிய அமெரிக்க அரசுகளில் தொழிலாளர்கள் அரசாங்கம் ஒன்று அமைக்கப்படுமாயின் அதனை ஆதரிக்கும். அரசாங்கத் தரப்பு வழக்குரைஞரின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் கனன், சோசலிசத் தொழிலாளர் கட்சியின் யுத்த விரோத நிலைப்பாட்டைப் பாதுகாத்தார்:

கேள்வி: யுத்தத்தின் பொழுது, நீங்கள் இன்றைய அரசாங்க அமைப்புமுறையை, யுத்தத்தைப் பயன்படுத்தி அழிக்க முயற்சிப்பீர்கள். அப்படி நீங்கள் செய்வீர்கள் அல்லவா?

பதில்: சரி, நாம் இன்றைய அரசாங்க அமைப்புமுறையை மாற்ற விரும்புகின்றோம் என்பது ஒன்றும் இரகசியம் இல்லை. 

கேள்வி: இதை நீங்கள் சாதிக்கக்கூடிய நேரம், வரவிருக்கும் யுத்தம் என்று, அதை நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றீர்கள், அப்படியல்லவா?

பதில்: ஆம், வரவிருக்கும் யுத்தமானது, கேள்விக்கு இடமின்றி அனைத்து ஏகாதிபத்திய அரசாங்கங்களையும் பலவீனப்படுத்தும், என்று நான் கருதுகின்றேன்.

கேள்வி : யுத்தத்தை நீங்கள் ஆதரிக்க மாட்டீர்கள் என்று நீங்கள் கூறியதாக நான் நம்புகின்றேன்?

தேசிய பாதுகாப்பில், அடியோடு நீங்கள் நம்பிக்கை இல்லாதவர், அப்படியல்லவா?

பதில்: இல்லை, ஏகாதிபத்திய நாடுகளில் இல்லை

கேள்வி: நான் இந்த நாட்டைப் பற்றிப் பேசுகின்றேன்.

பதில்: நான் இந்த நாட்டை, நமது சொந்த முறைகளைக் கொண்டு 100 வீதம் பாதுகாப்பதில் நம்பிக்கை கொண்டுள்ளவன். ஆனால் எனக்கு உலகின் ஏகாதிபத்திய நாடுகளைப் பாதுகாப்பதில் நம்பிக்கை

இல்லை --- 

கேள்வி: அரசியல் சட்ட அமைப்புரீதியாக இன்று அமைந்துள்ள ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தைப் பற்றி நான் பேசுகின்றேன். நீங்கள் அதைப் பாதுகாப்பதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை, அப்படித்தானே?

பதில்: இல்லை, அரசியல் அர்த்தத்தில் இல்லை.

கேள்வி; நீங்கள் எந்த ஒர் அர்த்தத்திலும் அதைப் பாதுகாப்பதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை அப்படித்தானே?

பதில்: மக்களின் பெரும்பான்மையினர் யுத்தத்திற்கென்று முடிவெடுத்து, அதில் பங்கு கொள்வார்களாயின், நமது ஆட்களும், நமது செல்வாக்கின் கீழுள்ள மக்களும், யுத்தத்தில் பங்கு கொள்வார்கள் என்று அன்றொரு நாள் நான் விளக்கினேன். நாம் யுத்தத்தை நாசப்படுத்துவதில்லை, நாம் யுத்தத்தைத் தடுக்க முயலுவதில்லை, ஆனால், யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்ற, அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என்ற, நமது கருத்துக்களைத் தொடர்ந்து பிரச்சாரம் செய்வோம்.3

இந்த முறைப்படுத்திக் கூறல்கள், புரட்சிகரத் தோற்கடிப்பு வாதத்திற்கான, மூலோபாயத்தின் மற்றும் தந்திரோபாயத்தின் காட்டிக்கொடுப்பாக இருக்குமாயின், இக்குற்றத்திற்கான பொறுப்பை ட்ரொட்ஸ்கிக்கு உரித்தாக்கப்பட வேண்டும். ட்ரொட்ஸ்கி தனது வாழ்வின் இறுதி மாதங்களின் பொழுது வகுத்த ''இராணுவக் கொள்கை'' யையே தனது அடிப்படையாகக் கனன் கொண்டிருந்தார்.

ஐக்கிய அமெரிக்க அரசுகள் இரண்டாம் உலக யுத்தத்தினுள் சேரும் தறுவாய் நெருங்கியுள்ள நிலையில், இது தொடர்பாகச் சோசலிசத் தொழிலாளர் கட்சியின் அரசியல் நிலைப்பாடு பற்றி அதன் தலைவர்களுடன், ட்ரொட்ஸ்கி ஜூன் 12, 1940 ம் தேதி கலந்துரையாடலை ஆரம்பித்து வைத்தார். (இந்தக் கலந்துரையாடலின் இறுதியில்தான், 1940 ம் ஆண்டுத் தேர்தலில் ஸ்ராலினிஸ்டுகள் சம்பந்தமாக சோசலிசத் தொழிலாளர் கட்சியின் மனப்பான்மை பற்றிய பிரச்சனை கையாளப்பட்டது. பண்டா கலந்துரையாடலின் இந்தப் பகுதியை, ட்ரொட்ஸ்கியைச் சோசலிசத் தொழிலாளர் கட்சிக்கு எதிராக நிறுத்துவதற்காகப் பொய்யான முறையில் மேற்கோள் காட்டுகின்றார். ஆனால் அவர் ட்ரொட்ஸ்கி, முதலாளித்துவ இராணுவவாதம் பற்றிய பிரச்சனையில், கூறியவற்றை அவருக்கு வசதியாகப் புறக்கணித்துள்ளார்.)

சோசலிசத் தொழிலாளர் கட்சியின் அரசியல் கிளர்ச்சியில் ஒரு மிக முக்கியமான வளர்சிக்காக ட்ரொட்ஸ்கி வாதிட்டார் - அவர் ஏகாதிபத்திய யுத்தத்தை அருவமாகக் கண்டனம் செய்வதிலிருந்து விலகி, யுத்தம் தவிர்க்க முடியாதது என்ற அடிப்படையில், சோசலிசப் புரட்சிக்குப் பாட்டாளி வர்க்கத்தை ஸ்தூலமான வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்க வேண்டும் என்றார்.

இராணுவமயமாக்கல் இன்று பிரமாண்டமான அளவில் நடந்து கொண்டிருக்கின்றது. இதை நாம் அமைதிவாத சொற்தொடர்கள் கொண்டு எதிர்க்க முடியாது. இந்த இராணுவமயமாக்கலுக்குத் தொழிலாளர்கள் மத்தியில் பரந்த ஆதரவு உண்டு. அவர்கள் ஹிட்லருக்கு எதிராகக் கொண்டுள்ள உணர்ச்சிவசப்பட்ட வெறுப்பு, குழப்பமான வர்க்க உணர்வுகளுடன் கலந்ததாக உள்ளது. (வெற்றி பெற்றுள்ள கொள்ளைக் கூட்டத்தினருக்கு எதிராக அவர்கள் வெறுப்பைக் கொண்டுள்ளனர்) அதிகாரத்துவமானது, இதைப் பயன்படுத்துகின்றது. அது தோற்கடிக்கப்பட்ட கொள்ளைக்காரனுக்கு உதவும்படி கூறுகின்றது. எமது முடிவுகள் முற்று முழுதாக வேறுபட்டவை. ஆனால் இந்த உணர்ச்சியே, இறுதித் தயாரிப்புக் காலப்பகுதியின், தவிர்க்க முடியாத அடித்தளமாகும். இந்தத் தயாரிப்புக்கு நாம் ஒரு புதிய யதார்த்த ரீதியான அடித்தளத்தைக் கண்டு பிடிக்க வேண்டும். நாம் பயிற்சி அளிக்கப்படாத இளைஞர்களை யுத்தத்திற்கு அனுப்புவதை எதிர்க்க வேண்டும். சமாதானக் காலங்களில் தொழிலாளர்களின் தொழிற்துறைப் பயிற்சித் திறன்களைத் தொழிற்சங்கங்கள் பாதுகாத்துக் கொள்ளுவது மட்டுமல்லாது, அவை இப்பொழுது இராணுவக் கலையை அரசிடம் இருந்து கற்றுக் கொள்ளுவது சாத்தியமாக்கப்பட வேண்டும் என்று, கோரவேண்டும்.

உதாரணத்திற்குத் தொழிற்சங்கங்களுள் நாம் இப்படி வாதிடமுடியும்: நான் ஒரு சோசலிஸ்ட், நீங்கள் ஒரு தேசபக்தன். நல்லது. இந்த வேறுபாட்டை நாம் நம்மிடையில் கலந்துரையாடுவோம். ஆனால், தொழிலாளர்கள், இராணுவ நிபுணர்களாக அரசாங்க செலவில் பயிற்றப்பட வேண்டும் என்று நாம் உடன்பட வேண்டும். தொழிற் சங்கங்களுடன் இணங்காது, பாடசாலைகள், அரசாங்க செலவில், தொழிற் சங்கங்களின் கட்டுப்பாட்டின் கீழ் நிறுவப்பட வேண்டும். இந்த மாதிரியான அணுகுமுறை இன்று கூட, 95 முதல் 98 வீதம்வரை தேசபக்தி உள்ளவர்களாக இருக்கும் தொழிலாளர்களை, நாம் அடைய வழியை அமைத்துத் தரும். 

இராணுவத்திற்கு எதிரான அருவமான எதிர்ப்பின் மூலம் அல்லாமல், இந்த முன்னோக்குடன் மட்டுமே, தொழிற் சங்கங்களினுள்ளும், மற்றும் இராணுவ அமைப்புகளினுள்ளும், நாம் வெற்றிகளைப் பெற முடியும். இந்த வழி மூலம், சட்ட விரோத நிலைமைகளின் பொழுது புதிய பாதைகளை மற்றும் அனுதாபங்களை, நாம் பெற முடியும். நிச்சயமாகத் தலைமறைவான நடைமுறையின் தொழில்நுட்ப ரீதியான அம்சம் முக்கியமானதுதான், ஆனால் அது சட்ட விரோத நடவடிக்கையின் ஒரு சிறிய பகுதி மட்டுமே.4

''ஐக்கிய அமெரிக்க அரசுகளின் பின்தங்கிய தொழிலாள வர்க்கப் பகுதிகளுக்கு'' கனன் அரசியல் ரீதியில் அடிபணிந்தார் என்று குற்றம் சுமத்தப்படுவாராயின், இந்த ''அரசியல் கோழைத்தனத்திற்குப்" பொறுப்பு ட்ரொட்ஸ்கியையே சார்ந்ததாகும். ஏனென்றால் அவர்தான், 1940ம் ஆண்டிலிருந்து அமெரிக்காவில், 10 தொழிலாளர்களில் 9.8 பேர் தேசபக்த உணர்வுகள் உள்ளவர்களாக இருப்பதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளும்படி சோசலிசத் தொழிலாளர் கட்சிக்கு அறிவுரை வழங்கியவர். 

ட்ரொட்ஸ்கியைப் பொறுத்தவரையில், சோசலிசத் தொழிலாளர் கட்சி எதிர் கொள்ளும் பிரதான அபாயம், ஏகாதிபத்திய யுத்தத்திற்கு எதிரான அதன் எதிர்ப்பு பலவீனம் அடையும் என்பதில் இருக்கவில்லை. ஆனால் அது, தனது புரட்சிகரக் கடமைகளை எதிர் கொள்ளும் பொழுது, இந்த எதிர்ப்பானது, அமைதிவாதமாக உருமாறிச் சோசலிசத் தொழிலாளர் கட்சியை அரசியல் ரீதியில் நிராயுதபாணியாக்கிவிடும் என்பதிலேயே இருந்தது. அதன் புரட்சிகரக் கடமைகள் தீவிரவாத வாய்வீச்சில் இருக்கவில்லை. ஆனால் அவை அமெரிக்க ஏகாதிபத்தியத்தை வீழ்த்துவதற்கான தயாரிப்பைச் செய்வதிலேயே இருந்தன. ''அமைதிவாதிகளுடன் ஏற்படும் எந்த ஒரு குழப்பமும், முதலாளித்துவ இராணுவவாதிகளுடன் ஏற்படும் தற்காலிகக் குழப்பத்திலும் பார்க்க நூறு மடங்கு அபாயகரமானது,'' என்று ட்ரொட்ஸ்கி உறுதியிட்டுக் கூறினார்.5 

ட்ரொட்ஸ்கியின் இந்த வாதம், நான்காம் அகிலமானது ஏகாதிபத்திய யுத்தத்தைச் சோசலிசப் புரட்சிக்குத் தயாரிப்பதற்காகக் கண்டிப்பாகப் பயன்படுத்தியாக வேண்டும் என்ற கருத்துருவை அடிப்படையாகக் கொண்டிருந்தது. எனவே, ''நாம் இராணுவவாதிகள் என்று அழைக்கப்பட முடியமா? என்ற கனனின் கேள்விக்கு ட்ரொட்ஸ்கி, ''ஆம் -ஒரு குறிப்பிட்ட பொருளில் நாம் பாட்டாளி வர்க்க புரட்சிகர சோசலிச இராணுவவாதிகள்தான்''6 என்றார்.

ஆகஸ்ட் 7, 1940ல் ட்ரொட்ஸ்கி சோசலிசத் தொழிலாளர் கட்சியின் உறுப்பினர்களுடன் ஒரு கலந்துரையாடலைச் செய்தார். அதில் அவர், ஐக்கிய அமெரிக்க அரசுகள் இரண்டாம் உலக யுத்தத்தினுள் சேரும் தறுவாயில் நிலவிய அரசியல் நிலமையை ஆராய்ந்து, யுத்தம் ஆரம்பித்ததும் கட்சி எதிர்கொள்ளக் கூடிய பணிகளை ஆராய்ந்தார். இந்த மோதுதலில் அமெரிக்கா பங்குபற்றுதல் என்பது தவிர்க்க முடியாததொன்று என்றதிலிருந்து ஆரம்பித்து, யுத்த நிலமைகளின் கீழ், சோசலிசத் தொழிலாளர் கட்சி அமெரிக்க தொழிலாள வர்க்கத்தை அணுக, ட்ரொட்ஸ்கி ஒரு தொடர்ச்சியான இடைமருவுக் கோரிக்கைகளை அபிவிருத்தி செய்தார்.

ட்ரொட்ஸ்கியைப் பொறுத்தவரை - முனிசிற்கு அப்படி இல்லாவிட்டாலும் - "புரட்சிகரத் தோற்கடிப்புவாதம்'' என்ற கொள்கை வெறும் சொற்தொடராக இருக்கவில்லை. ''தனது சொந்த'' ஆளும் வர்க்கத்தின் தோல்விக்காக யுத்தகாலத்தில் அரசியல் ரீதியில் வேலை செய்வது என்பது, அனைத்து வகை வெறிகொண்ட தேசியவாதங்களிடம் இருந்து தொழிலாள வர்க்கத்தை பிரித்தெடுப்பதைத் துரிதப்படுத்தக் கூடிய திட்டவட்டமான கொள்கைகள், மற்றும் முன்முயற்சிகளை ஸ்தூலமாகவும், விரிவாகவும் வகுப்பதை வேண்டி நிற்கின்றது.

''ஏகாதிபத்திய யுத்தத்தை உள்நாட்டு யுத்தமாக மாற்று'' என்ற வரலாற்று வளர்ச்சியின் புறநிலை ரீதியான தர்க்கத்தை எடுத்துக் கூறிப் பாட்டாளி வர்க்கத்தை எதிர் கொள்ளும் அத்தியாவசிய புரட்சிகரப் பணிகளைச் சுட்டிக் காட்டிய பொது சூத்திரத்திற்கும், கட்சி முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிராகப் பரந்த மக்களை அணிதிரட்டும் அதன் போராட்டத்தில், அது கையாளும் திட்டவட்டமான மற்றும் இடைமருவு ரீதியிலான முறைப்படுத்திக் கூறல்களுக்கும் இடையில், உள்ள மிகவும் முக்கியமான தனிச்சிறப்புடைய வேறுபாட்டை ட்ரொட்ஸ்கி வரைந்தார்.

ட்ரொட்ஸ்கி அமைதிவாதத்தை வெறுத்து ஒதுக்கினார். ஏனென்றால் அது, அணிதிரட்டப்பட்ட பரந்த மக்களை அவர்களின் கதிக்கு விட்டுவிட்டு, ''தனிப்பட்ட ரீதியில்'' முதலாளித்துவ இராணுவவாதத்தை நிராகரிப்பதைத் தவிர, இழையும் வழுவாமல் வேறொன்றிலும் போய் அது முடியவில்லை. அவர் இராணுவ சேவைக்குத் தகைமையுள்ள கட்சி உறுப்பினர்கள், இராணுவ ஆட்சேர்ப்பில் பங்கேற்றுத் தமது தலைமுறையினருடன் யுத்தத்தில் பங்கு கொள்ளவேண்டும் என்று வற்புறுத்தினார்.

இந்த சமுதாயத்தின் வாழ்வு, அரசியல் என்று அனைத்தும் யுத்தத்தையே தமது அடிப்படையாகக் கொண்டிருக்கப் போகின்றன என்பதை நாம் புரிய வேண்டும். எனவே புரட்சிகர வேலைத்திட்டமும் யுத்தத்தைத் தனது அடிப்படையாகக் கண்டிப்பாகக் கொண்டிருக்க வேண்டும். யுத்தம் என்கின்ற நேர்வை [fact] விருப்பங்களை அடிப்படையாகக் கொண்ட எண்ணங்கள் மூலமும், நன்னோக்கம் கொண்ட அமைதிவாதத்தின் மூலமும், எதிர்க்க முடியாது. இந்த சமுதாயத்தால் உண்டுபண்ணப்பட்ட அரங்கின்மேல் நாம் நம்மை நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்த அரங்கானது பயங்கரமானது - இது யுத்தமாகும் - ஆனால் நாம் பலவீனமாகவும், சமுதாயத்தின் கதியை நமது கைகளில் எடுக்க முடியாதவர்களாக இருக்கும் வரை; ஆளும் வர்க்கம் இந்த யுத்தத்தை நம்மேல் திணிக்கக்கூடிய அளவு பலமாக இருக்கும்வரை, நாம் நமது நடவடிக்கைகளுக்கு, இந்த அடிப்படையை ஏற்றுக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம்.7

யுத்த நிலமைகளின் கீழ், அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவு என்ற திட்டவட்டமான பிரச்சனை பக்கம் ட்ரொட்ஸ்கி திரும்பினார். 

இலட்சக் கணக்கானோரைக் கொண்டுள்ள இந்தப் பிரமாண்டமான இராணுவத்தை உண்டுபண்ண, இராணுவ அதிகாரிகளை உண்டுபண்ண, புதிய இராணுவ உணர்வை உண்டுபண்ண, முதலாளிகள் விரும்புகின்றார்கள். அவர்கள் நாட்டின் பொதுஜனக் கருத்தை இராணுவவாதம் பக்கம் மாற்ற ஆரம்பித்துள்ளனர் ரூஸ்வெல்ட் தனது பிரச்சார உரையை ஆற்றியபொழுது, தனித்திருத்தல் வாதத்திற்காகப் பொதுஜனக் கருத்து வெடித்தெழுந்தது. ஆனால் இந்த உணர்வுகள் அனைத்தும் ஒரு சில மாதங்களுக்கு முன்பே நடந்தனவாக இருந்த பொழுதும், அவை கடந்த காலத்திற்கு - நாட்டின் குழந்தைப் பருவத்திற்கு - இப்பொழுது சொந்தமாகிவிட்டன.

இப்பொழுது உள்ள தேசிய உணர்வு, பிரமாண்டமான அளவுள்ள இராணுவம், கடற்படை, விமானப்படை என்பனவற்றிற்காகவே உள்ளது. இதுவே ஒரு இராணுவ யந்திரத்தை உருவாக்க வேண்டிய உளவியல் ரீதியான சூழ்நிலையாகும். இது ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாரமும் மேலும், மேலும் பலம் பெற்று வருவதைப் பார்ப்பீர்கள். இராணுவப் பாடசாலைகள் மற்றும் இன்னோரன்ன பிறவும் தோன்றும். ஐக்கிய அமெரிக்க அரசுகள் பிரஷ்யமயமாக்கப்படும். முதலாளித்து வர்க்கக் குடும்பங்களின் புதல்வர்கள் பிரஷ்சிய உணர்வுகளில் மற்றும் இலட்சியங்களில் செறிவுற ஊறச் செய்யப்படுவார்கள். அவர்களது பெற்றோர்கள் அவர்களது புதல்வர்கள் பிரஷ்சிய துணைநிலை இராணுவ அதிகாரிகள் போலத் தோற்றம் அளிக்கின்றார்கள் என்று பெருமிதப்படுவார்கள். ஒரு குறிப்பிட்ட அளவிற்கு இது தொழிலாளர்களைப் பொறுத்தவரையும் உண்மையாக இருக்கும். 

இக்காரணத்தினாலேயே கல்வி, தொழிலாளர்கள் பாடசாலைகள், தொழிலாள இராணுவ அதிகாரிகள், தொழிலாளர்களின் நலன்களுக்காகத் தன்னை அர்ப்பணித்துள்ள இராணுவம், என்ற இன்னோரன்னவற்றைக் கொண்ட ஒரு வேலைத்திட்டத்தின் மூலம் மற்றவர்களிடம் இருந்து தொழிலாளர்களை வேறுபடுத்திப் பிரிக்க முயற்சிக்க வேண்டும். இராணுவமயமாக்கலில் இருந்து நாம் தப்பிக்க முடியாது. ஆனால் இராணுவ யந்திரத்தினுள் நாம் வர்க்க நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்க முடியும். அமெரிக்கத் தொழிலாளர்கள் ஹிட்லரினால் வெற்றி கொள்ளப்பட விரும்பவில்லை; "சமாதான வேலைத்திட்டத்தை முன்வைப்போம்" என்று கூறுகின்றவர்களுக்குத் தொழிலாளர்கள், "ஆனால் ஹிட்லர் சமாதான வேலைத்திட்டத்தை வேண்டவில்லை" என்று பதிலளிப்பார்கள். 

எனவே நாம் கூறுகின்றோம்: ஒரு தொழிலாளர் இராணுவம் கொண்டு, ஒரு தொழிலாளர் இராணுவ அதிகாரிகளைக் கொண்டு, ஒரு தொழிலாளர் அரசாங்கம் மற்றும் இனனோரன்ன கொண்டு, நாம் ஐக்கிய அமெரிக்க அரசுகளைப் பாதுகாப்போம். நாம் ஒரு நல்ல எதிர்காலதிற்காகக் காத்திருக்கும் அமைதிவாதிகள் அல்ல. நாம் செயலூக்கம் கொண்ட புரட்சியாளர்களாயின் நமது வேலை முழு இராணுவ எந்திரத்தினுள்ளும் ஊடுருவுவதாகும். 

மேலும் எமது தோழர்கள் மிகச் சிறந்த சிப்பாய்களாகவும், மிகச் சிறந்த இராணுவ அதிகாரிகளாகவும், அதே நேரத்தில் மிகச் சிறந்த வர்க்கப் போராளிகளாகவும் இருக்க வேண்டும். அவர்கள் பழைய மரபுகள் மற்றும் முதலாளித்துவ வர்க்கத்தினதும், இராணுவ அதிகாரிகளினதும் இராணுவத் திட்டங்கள் என்பன மேல் அவநம்பிக்கையைத் தூண்ட வேண்டும். பாட்டாளி வர்க்கத்திற்கு முழுக்க முழுக்க விசுவாசமாக இருக்கக் கூடிய தொழிலாள இராணுவ அதிகாரிகளைக் கல்வியூட்ட வேண்டியதன் இன்றியமையாமையை வலியுறுத்த வேண்டும்.... 

முதற் காலப்பகுதியில் தேசியவாத வெறியின் வெடித்தெழல் இருக்கும் என்பதும், நாம் இன்றிலும் பார்க்கக் கூடுதலாகத் தனிமைப்படுவோம் என்பதும் முற்று முழுதாகச் சரியானவையாகும். இந்தக் காலத்திய செயற்பாடுகள், ஒடுக்குமுறைகளினால் தவிர்க்க முடியாது மட்டுப்படுத்தப்படுவன. ஆனால் நாம் நிலமைக்கு ஒத்த மாதிரி நம்மை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். இதன் காரணமாகத்தான் இன்று முழுமையாக ஒரு அருவமான அமைதிவாத நிலைப்பாட்டை முன்வைப்பது இருமடங்கு முட்டாள்த்தனமானதாகும். பரந்த மக்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வுகளை கொண்டுள்ளனர். நாம் கூற வேண்டியது எதுவென்றால்: ''ரூஸ்வெல்ட் (அல்லது வில்க்கி) கூறுகின்றார் நாட்டைப் பாதுகாப்பது இன்றியமையாதது என்று; நன்று! ஆனால் அது நமது நாடாக இருக்க வேண்டும். அது அறுபது குடும்பங்களினதும், அவர்களது வோல் ஸ்ரீட்டினதுமாக (wall street) இருக்கக் கூடாது. இராணுவமானது நமது சொந்தக் கட்டளைகளுக்கு கீழ்ப்பட்டதாக இருக்க வேண்டும்: நமக்கு விசுவாசமான, நமது சொந்த இராணுவ அதிகாரிகள் நமக்கு இருக்க வேண்டும்''. இந்த முறையில் பரந்த மக்களை நாம் நம்மிடம் இருந்து விலக்கித் தள்ளாத அணுகுமுறையைக் கண்டுபிடிக்க முடியும்; இப்படி நாம் இரண்டாம் கட்டத்திற்கு - இதிலும் பார்க்கக் கூடிய புரட்சிகரக் கட்டத்திற்கு - தயாரிக்க முடியும்.

நாம் பிரான்சின் உதாரணத்தை இறுதிக் கட்டம்வரை பயன்படுத்த வேண்டும். நாம் கூற வேண்டும், "தொழிலாளர்களே, நான் உங்களை எச்சரிக்கின்றேன் அவர்கள் (முதலாளித்துவ வர்க்கத்தினர்) உங்களைக் காட்டிக் கொடுப்பார்கள்! ஹிட்லருடைய நண்பனான பெற்றனை (Petain) பாருங்கள். அதையே, இந்த நாட்டிலும் நடக்க விடுவோமா? நாம் நமது சொந்த எந்திரத்தை தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உருவாக்க வேண்டும். "நாம் நம்மைத் தேசிய வெறியர்களுடன், அல்லது குழம்பிய சுய பேணல் உணர்வுகளுடன், நம்மை ஒன்றுபடுத்திக் காட்டாதிருக்க கவனமாக இருக்க வேண்டும். ஆனால் நாம் அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, இந்த உணர்வுகளுக்கு விமர்சன ரீதியாக நம்மை மாற்றியமைத்துக் கொண்டு பரந்த மக்களை, நிலமையை மேலும் நன்றாகப் புரிய வைக்கத் தயாரிக்க வேண்டும். இல்லாவிட்டால், மிக மோசமான அமைதிவாத ரகத்தை சார்ந்த ஒரு குறுங்குழுவாகத்தான் இருக்கவேண்டியிருக்கும். இதில் அமைதிவாத ரகம்தான் மிக அதிகளவு வெறுக்கத்தக்கதாகும்.8

ட்ரொட்ஸ்கி அவரது வாழ்வு முடிவுறும் நாட்களில் இப்பிரச்சனைகளுக்கு மீண்டும் மீண்டும் திரும்பினார். அவர் சோசலிசத் தொழிலாளர் கட்சி எவ்வளவுக்கு எவ்வளவு நீண்ட காலத்திற்கு அது, அதன் வேலைகளைச் சட்டரீதியாக நடத்தக் கூடிய ஆற்றலைப் பேண முடியுமோ, அந்தளவிற்கு அதைப் பேணிய வண்ணம், அது அதன் ஏகாதிபத்திய எதிர்ப்புப் பிரச்சாரத்தை அபிவிருத்தி செய்யப் பல்வேறு முறைகளை எடுத்துக் கூறினார். ஆகஸ்ட் 12, 1940 இல் ஒரு சோசலிசத் தொழிலாளர் கட்சி உறுப்பினருக்கு எழுதினார். அதில் அவர் :

ஸ்ராலினிஸ்டுகளைப் பின்பற்றி, முதலாளித்துவ ஜனநாயகத்திற்கு  நாம் நமது முற்று முழுதான அடிபணிவை நிச்சயமாகப் பிரகடனப்படுத்த முடியாது. இருந்தபொழுதும், நாம் அடக்குமுறை அட்டூழியத்திற்கு எந்த ஒரு சாக்குப் போக்கையும் வழங்க விரும்பவில்லை. 

மற்றயவற்றிற் போல இதிலும், நாம் உண்மையை அப்படியே பேச வேண்டும்; அதாவது, பரந்த மக்கள், இந்த சமுதாயத்தை மிகச் சிறந்த, மிகச் சிக்கனமான மற்றும் அவர்களுக்குச் சாதகமான முறையில் உருமாற்றி அமைப்பதற்கான ஜனநாயக முறைகள் பற்றிப் பேச வேண்டும். பரந்த மக்களைக் கூட்டிணைக்கவும் மற்றும் கல்வியூட்டவும் ஜனநாயகம் தேவைப்படுகின்றது. இக்காரணத்தினாலேயே நாம், நமது சொந்த முறைகளக் கையாண்டு எப்பொழுதும் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கத் தயாராக இருக்கின்றோம். இருந்த பொழுதும் பிரமாண்டமான வரலாற்று அனுபவத்தின் அடிப்படையில் நமக்குத் தெரியும் இந்த அறுபது குடும்பங்களும், சோசலிசக் கோட்பாடுகளை ஜனநாயக ரீதியில் அடைய அனுமதிக்க மாட்டார்கள் என்று. ஒரு குறிப்பிட்ட தருணத்தில் இவர்கள் தவிர்க்க முடியாத முறையில் ஜனநாயக நிறுவனங்களைக் கவிழ்த்து அல்லது கவிழ்க்க முயற்சித்து அவற்றின் இடத்தில் ஒரு பிற்போக்கான சர்வாதிகாரத்தைப் பிரதியீடு செய்வார்கள். இதுதான் இத்தாலியில் நடந்தது. ஜேர்மனியில் மற்றும் பிரான்சின் இறுதி நாட்களில் - இவற்றிலும் சிறிய நாடுகளை குறிப்பிடாது விடுவோமாயின்- நடந்ததும் கூட. அப்படியான ஒரு முயற்சியை நாம் ஆயுதமும் கையுமாக நிராகரிப்போம் என்று முன்கூட்டியே கூறி வைக்கின்றோம்.... 

இந்த நிலைப்பாடு நிலவும் நிலமைக்கு வரலாற்று ரீதியாக ஒத்ததாக உள்ளது, மற்றும் அதைச் சட்ட ரீதியாகவும் தாக்க முடியாது. 9

ஒரு நாளுக்குப் பின்னர், ஆகஸ்ட் 13,1940 இல் ட்ரொட்ஸ்கி மற்றுமொரு கடிதத்தை எழுதினார். அதில் அவர், பிரான்சில் நடக்கும் சம்பவங்களில், விஷியின் (Vichy) மார்ஷல் பெற்றனின் தலைமையின் கீழ் முதலாளித்துவ வர்க்கமானது நாஸி சார்பு சர்வாதிகாரத்தை நிறுவியுள்ளதன் தனிச் சிறப்பை வலியுறுத்தினார். 

அவர் விளக்குகையில் நான்காம் அகிலமானது தொழிலாளர்களைப் பார்த்து,

குடிமக்களின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க தொழிலாளர்களும், விவசாயிகளும் தமது உடமையையும், இரத்தத்தையும் கொடுக்க வேண்டும் என்று கூறி, பிரெஞ்சுபாணியில் - முதலாளிகள் கட்டளையிடும் அதிகாரத்தை தமது கைகளில் குவித்து கொள்வதை தொழிலாளர்கள் திட்டவட்டமாக நிராகரிக்க வேண்டும். இப்பொழுது பெற்றனின் ஆராய்ச்சி, நமது யுத்தப் பிரச்சாரத்தின் மையமாக அமைய வேண்டும். முன்னேற்றம் அடைந்த தொழிலாளர்களுக்குப் பாசிசத்திற்கு எதிரான நிஜமான போராட்டமானது, சோசலிசப் புரட்சி என்பதை நிச்சயமாக விளக்க வேண்டும். ஆனால் கோடிக்கணக்கான அமெரிக்கத் தொழிலாளர்ளகளுக்கு அவர்களது "ஜனநாயகத்தை"ப் பாதுகாப்பதை ஒரு அமெரிக்க மார்ஷல் பெற்றனிடம் - அந்தப் பங்கை வகுப்பதற்கு முன்வரப் பலர் உள்ளனர் - கையளித்து விட முடியாது என்பதை விளக்குவது அதைவிட அதிக அவசரமானது, மேலும் தவிர்க்க முடியாததும் கூட.10 என்று அழைப்புவிட வேண்டும் என்றார்.

அதன்பின் இந்த விடயம் சம்பந்தமாக மேலும் ஒரு கடிதம் தொடர்ந்தது. அவர் ஆகஸ்ட் 17, 1940 இல் சோசலிசத் தொழிலாளர் கட்சியின் அமைதிவாத எதிர்ப்பு நிலையின் "பயன் தரல்கள்" பற்றி விளக்கிக் கூறினார்: "முதலாவதாக அது அதன் சாராம்சத்தில் புரட்சிகரமானது. அது நமது சகாப்தத்தின் முழுச் சிறப்பியல்பையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்த சகாப்தத்தில் அனைத்துப் பிரச்சனைகளும் விமர்சகர்களின் ஆயுதங்கள் கொண்டு தீர்மானிக்கப்படுவது மட்டுமல்லாது, அவை ஆயுதங்களின் விமர்சனம் கொண்டு தீர்மானிக்கப்படும். இரண்டாவதாக அது முற்று முழுதாக குறுங் குழுவாதத்திலிருந்து விடுபட்டதாகும். சம்பவங்களையும் மற்றும் பரந்த மக்களின் உணர்வுகளையும் எமது தூய்மையின் அருவமான உறுதிப்படுத்தலாக எதிர்க்கவில்லை."

துல்லியமாக, யுத்த நிலமைகளின் கீழ் புரட்சிகர வேலையை அபிவிருத்தி செய்யும் ட்ரொட்ஸ்கியின் முன்னோக்கே, சோசலிசத் தொழிலாளர் கட்சி கடைப்பிடித்த இராணுவக் கொள்கையின் அடிப்படையாக இருந்தது. சமூக வெறியுடன் எந்த ஒரு சமரசமும் செய்யாது, ஹிட்லர்வாத பாசிசத்திற்கு எதிரான அமெரிக்கத் தொழிலாளர்களின் நிஜமானதும், நியாயமானதுமான வெறுப்பிற்கு வேண்டுகோள் விடுக்க வழியைக் கண்டு பிடிக்கும்படி ட்ரொட்ஸ்கி மீண்டும் மீண்டும் சோசலிசத் தொழிலாளர் கட்சியை வற்புறுத்தினார்.

இங்கு சம்பந்தப்பட்டிருப்பவை தந்திரோபாயம் பற்றிய வெறும் கருத்துக்கள் அல்ல. திட்டவட்டமாக ஏகாதிபத்திய யுத்தம் உலக முதலாளித்துவத்தின் அனைத்து முரண்பாடுகளின் மிகப்பெரிய உக்கிரம் அடைதலை வெளிப்படுத்தியதோடு, இந்த முரண்பாடுகள் எதிர்கால முரண்பாடுகளின் புரட்சிகர வெடித்தெழல்களுக்கான புறநிலை ரீதியான அடித்தளம் ஆகையால், ட்ரொட்ஸ்கி எல்லாவற்றிலும் மேலாக, யுத்தத்தினால் எழும் வர்க்க உறவுகளில் ஏற்படக் கூடிய கூர்மையான மாற்றங்களுக்குக் கட்சியைத் தயாரிப்பது பற்றி கருசனை கொண்டிருந்தார்.

அவர் படுகொலை செய்யப்பட்ட நாளான, ஆகஸ்ட் 20, 1940லேயே, இப் பிரச்சனையைக் கையாளும் கடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். கொயோகானில் உள்ள நகர்ப்புற மனைக்கு ஜீ.பி.யூ. கொலையாளி ரமொன் மக்கடர் வந்த பொழுது, எழுதிக் கொண்டிருந்த முடிவுறாத கட்டுரையில், ட்ரொட்ஸ்கி பின்வருமாறு குறிப்பிட்டார் :

இன்றைய யுத்தமானது கடந்த யுத்தத்தின் தொடர்ச்சி என்று நாம் ஒரு தடவையிலும் அதிகமான தடவைகள் கூறியுள்ளோம். ஆனால் ஒரு தொடர்ச்சி என்பது திரும்பத் திரும்ப நிகழ்வது என்று பொருள்படாது. ஒரு பொதுவான நியதிப்படி, ஒரு தொடர்ச்சியானது ஒரு வளர்ச்சியை காட்டுவதுடன் அது ஆழமான ஒரு கூர்மைப்படுத்தலைப் பொருள்படுத்தும். நமது கொள்கை, இரண்டாவது ஏகாதிபத்திய உலக யுத்தம் சம்பந்தமாகப் புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தின் கொள்கையாகும். அது கடந்த ஏகாதிபத்திய யுத்ததத்தின் போது பிரதானமாக லெனினின் தலைமையின் கீழ் விரிவாக்கம் செய்யப்பட்ட கொள்கையின் தொடர்ச்சியாகும். ஆனால் ஒரு தொடர்ச்சி என்பது திரும்பத் திரும்ப நிகழ்வது என்று பொருள்படாது. இந்த விடயத்திற் கூட, ஒரு தொடர்ச்சி ஒரு வளர்ச்சியை காட்டுவதுடன் அது ஆழமான ஒரு கூர்மைப் படுத்தலைப் பொருட்படுத்துகின்றது.12

புரட்சிகரத் தோற்கடிப்புவாதம் என்ற கருத்துருவை லெனின் அபிவிருத்தி செய்த வரலாற்று உள்ளடக்கத்தை ட்ரொட்ஸ்கி ஆராய்ந்தார். 1917 பெப்ரவரிப் புரட்சி நடந்த பொழுதிற் கூட, லெனின் ஒரு சோசலிசப் புரட்சியை முன்னறியக் கூடிய எதிர்காலத்தில் எதிர்பார்க்கவில்லை. லெனின் கையாண்ட முறைப்படுத்திக் கூறல்கள் போல்ஷிவிக்குகள் ஏகாதிபத்திய யுத்தத்திற்கு "அதி இடது எதிர்ப்பினராக" இருந்தனரேயன்றி "ஆட்சி அதிகாரத்திற்காகப் போட்டியிடுபவர்களாக" இருக்கவில்லை என்று ட்ரொட்ஸ்கி விளக்கினார்.

ஆகஸ்ட் 1914ல் முதலாவது ஏகாதிபத்திய யுத்தம் வெடித்தெழலுக்கும், மற்றும் பெப்ரவரிப் புரட்சி வெடித்தெழலுக்கும் இடையில் தொழிலாளர் ஆட்சிக்கான போராட்டம் "கால வரையறைபடாத வரலாற்று முன்னோக்கின் பிரச்சனையாகவே அன்றி, நாளைய பணியாகப்" பார்க்கப்படவில்லை. இன்றியமையாது இந்த நிலைநோக்கானது யுத்தம் சம்பந்தமாகப் போல்ஷிவிக் கொள்கையை எடுத்துக் கூறுவதில் பாதிப்பை ஏற்படுத்தியது.

புரட்சிகரக் கன்னையின் கவனம் முதலாளித்துவ தாய்நாட்டைப் பாதுகாப்பதில் மையம் கொண்டிருந்தது புரட்சியாளர்கள் இயற்கையாகவே இப்பிரச்சனைக்கு எதிர்மறையான பதிலை அளித்தார்கள். இது முற்று முழுதாகச் சரியானதுதான். ஆனால் இது முழுமையாக எதிர்மறையான பதில் பிரச்சாரத்தின் மற்றும் பயிற்சியின் அடிப்படையாக அமைந்திருந்த பொழுதும், அது அன்னிய ஆக்கிரமிப்பாளன் ஒருவனை வேண்டாதவர்களாக இருந்த பரந்த மக்களை வென்றெடுக்க முடியவில்லை.

யுத்தத்திற்கு முன்னர் போல்ஷிவிக்குகள் பாட்டாளி வர்க்கத்தின் முன்னணியின், அதாவது அரசியல் வாழ்வில் (பத்திரிகைகள், தேர்தல்கள், என்னும் இன்னோரன்னவற்றில்) பங்கு கொள்ளும் தொழிலாளர்களில் ஐந்தில் நான்கினரைக் கொண்டிருந்தனர். பெப்ரவரிப் புரட்சியைத் தொடர்ந்து வரையறை அற்ற ஆட்சி, பாதுகாப்புவாதிகளிடம், மென்ஷிவிக்குகளின் மற்றும் சமூகப் புரட்சியாளர்களின் கைகளுக்குச் சென்றது. எட்டு மாத கால எல்லைக்குள் போல்ஷிவிக்குகள் அளப்பரிய பெரும்பான்மையை வென்றெடுத்தார்கள் என்பது போதுமான உண்மைதான். ஆனால் இந்த வென்றெடுத்தலில் தீர்க்கமான பங்கை முதலாளித்துவ தாய்நாட்டைக் காக்க மறுத்தல் பங்கு கொள்ளவில்லை". இதற்குப் பதிலாக அனைத்து அதிகாரங்களும் சோவியத்துக்களுக்கே! என்ற முழக்கமே தீர்க்கமான பங்கை வகுத்தது. ஏகாதிபத்தியத்தைப் பற்றிய விமர்சனம், அதன் இராணுவவாதம், முதலாளித்துவ ஜனநாயகத்தை மறுதலித்தல் என்பன போன்றவைகள் போல்ஷிவிக்குகளின் பக்கம் மக்களின் ஏகப்பட்ட பெரும்பான்மையினரை வென்றெடுத்திருக்க முடியாது...13

ஐக்கிய அமெரிக்க அரசுகளினுள் புரட்சிகரப் போராட்டத்திற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ட்ரொட்ஸ்கி மீளாய்வு செய்தார்:

ஐக்கிய அமெரிக்க அரசுகளில் உள்ள தொழிலாள வர்க்கத்தின் தீவிரமயப்பட்ட போக்கு (radicalization) அதன் ஆரம்ப கட்டத்தினூடு, ஏறக்குறைய முழுமையாகத் தொழிற்சங்க (சீ.ஐ.ஓ.) அரங்கில் ஏற்பட்ட தீவிரமயப்பட்ட போக்கினூடு மட்டும் சென்றுள்ளது என்பது தானாகவே தெரிகின்றது. யுத்தத்திற்கு முந்திய காலப்பகுதியில், அதன் பின் யுத்தமே இந்த தீவிரமயப்பட்ட போக்கினைக், குறிப்பாக கணிசமான அளவு தொழிலாளர்கள் யுத்த தொழிற்துறையினுள் உள்ளெடுக்கப் படுவார்களாயின், தற்காலிகமாகக் குறுக்கிட்டுத் தடுக்க முடியும். ஆனால் இந்த தீவிரமயப்பட்ட போக்கினைக் குறுக்கிட்டுத் தடுத்தல் நீண்ட காலத்திற்கு நிலைக்காது. இந்த தீவிரமயப்பட்ட போக்கின் இரண்டாம் கட்டம் மேலும் கூடுதலாகக் கூர்மையாக வெளிப்படுத்தும் தன்மை கொண்டதாகவும் இருக்கும். சுதந்திரமான தொழிற் கட்சியை அமைக்கும் பிரச்சனை அந்நாளில் நடக்க வேண்டிய நிகழ்வாக முன்வைக்கப்படும். நமது இடை மருவு கோரிக்கைகள் மிகப் பெரும் ஜனரஞ்சகத்தைப் பெறுவன. மறுபுறம் பாசிச பிற்போக்குப் போக்குகள் பின்னணிக்குப் பின்வாங்குவன. அவை உகந்த தருணத்தை எதிர்நோக்கி ஒரு தற்காப்பு நிலைப்பாட்டை எடுப்பன. இதுதான் மிகக் கிட்டுமானமான முன்னோக்காகும். நாம் சக்தி மிக்க தலைமை - கட்சியை உருவாக்குவதில் வெற்றி காண்போமா என்ற ஊகத்தில் ஈடுபடுவலும் பார்க்க வேறு எவையும் முற்று முழுதாகப் பலனற்றதாக இருக்க முடியாது. புரட்சிகர நடைமுறைவாதத்திற்கு அனைத்து நியாயப்படுத்தல்களையும் தருகின்ற ஒரு சாதகமான முன்னோக்கு நமக்கு முன்னே இருக்கின்றது. நமக்கு முன்னே தோன்றுகின்ற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திப் புரட்சிகரக் கட்சியைக் கட்டுவது இன்றியமையாததாகும்.

முதலாவது உலக யுத்தத்திலும் பார்க்க இரண்டாவது உலக யுத்தம், ஆட்சிகளின் மாற்றம் பற்றிய பிரச்சனையை மேலும் தவிர்க்க முடியாத முறையிலும், கூடிய தீர்க்கமான முறையிலும் முன் நிறுத்துகின்றது. அது முதலாவதாகவும் எல்லாவற்றிலும் மேலாகவும் ஆட்சி பற்றிய பிரச்சனையாகும். ஜனநாயகமானது எங்கு பார்த்தாலும் தகர்வுறுவதையும், பாசிசம் இல்லாத நாடுகளிற் கூட அவர்கள் பாசிசத்தினால் அச்சுறுத்தப்படுவதையும், தொழிலாளர்கள் உணர்ந்துள்ளார்கள். ஜனநாயக நாடுகளில் உள்ள முதலாளித்துவ வர்க்கங்கள், இயற்கையாகவே, தொழிலாளர்கள் பாசிசம் சம்பந்தமாகக் கொண்டுள்ள திகிலை பயன்படுத்துவர். மறுபுறம் ஜனநாயகங்களின் திவால், அவற்றின் பொறிவு, நோவற்ற முறையில் அவை பிற்போக்கான சர்வாதிகாரங்களாக உருமாறுவது என்பன, தொழிலாளர்களைத் தமக்கு முன்னே ஆட்சி பற்றிய பிரச்சனையை முன் வைக்கச் செய்கின்றது. அதன் மூலம் அது, அவர்கள் முன் ஆட்சிப் பிரச்சனையை முன் வைப்பதை உணர்வுபூர்வமாக ஏற்கக் கூடியவர்களாக்குகின்றது. 14

ட்ரொட்ஸ்கி புரட்சிகரத் தோற்கடிப்புவாதக் கோட்பாட்டிற்குச் செயலூக்கம் மிக்க, ஸ்தூலமான மற்றும் இயக்க ஆற்றல் கொண்ட உள்ளடக்கத்தைப் பாச்சவும், ஏகாதிபத்திய யுத்தத்திற்கு எதிரான போராட்டத்திற்கும், உண்மையில் தொழிலாள வர்க்கத்தின் தலைமையை வென்று, ஆட்சி அதிகாரத்தை வெற்றி கொள்ளுவதற்கும் இடையில், ஓர் உயிரூட்டமுள்ள நடைமுறை ரீதியான உறவை நிலை நாட்டும் முயற்சியிலும் தெளிவாக ஈடுபட்டிருந்தார்.

இன்றுகூட அமெரிக்க தொழிலாள வர்க்கமானது ஒரு பரந்துபட்ட தொழிற் கட்சி ஒன்றில்லாது இருக்கின்றது. ஆனால் புறநிலை ரீதியான நிலமையும், அமெரிக்க தொழிலாளர்கள் திரட்டியுள்ள அனுபவமும், ஒரு குறுகிய காலத்தினுள் ஆட்சியை வெற்றி கொள்ளுவதை அந்நாளின் பணியாக முன் வைக்கும். இம் முன்னோக்கு, கிளர்ச்சியின் அடிப்படையாக்கப் படவேண்டும். இது வெறும் முதலாளித்துவ இராணுவவாதம் சம்பந்தமாகவும் முதலாளித்துவ அரசைப் பாதுகாப்பதை மறுதலிப்பது பற்றிய பிரச்சனை மட்டுமல்ல. ஆனால் நேரடியாக ஆட்சியை வெல்லத் தயாரிப்பதும் பாட்டாளி வர்க்க தாய்நாட்டை தற்காப்பதும் பற்றிய பிரச்சனையாகும்.15

ட்ரொட்ஸ்கியின் இயங்கியல் ரீதியான ஆய்தலின் நுட்பநுணுக்கம் நிச்சயமாக முனிசின் புரிதலுக்கு எட்டவில்லை. முனிஸ் "புரட்சிகரத் தோற்கடிப்புவாதம்" என்கின்ற முழக்கத்தில், தனது குட்டி முதலாளித்துவ மிதவாத பகட்டை வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பத்தைக் கண்டார். கனனை இடதுசாரிவாதத் தொனியில் அவர் தூற்றிய பொழுதும், உண்மையில் அவர், "புரட்சிகரத் தோற்கடிப்புவாதத்தின்" சாத்தியத்தில், அதைச் சூழப் பரந்த மக்களை அணிதிரட்டமுடியும் என்றோ, அல்லது அதை நடைமுறை சாத்தியம் கொண்ட ஒரு ஸ்தூலமான வேலைத்திட்டம் என்றோ நம்பவில்லை.

அவரது தாக்குதல்களுக்கு உள்ளான தற்காப்பு முறைப்படுத்திக் கூறல்கள், அமெரிக்க தொழிலாளர்களின் நனவை ஊடுருவி, அவர்கள் பாசிசத்தின் மேல் கொண்டுள்ள அவர்களது வெறுப்புணர்ச்சியை, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக புரட்சிகரப் போராட்டத்திற்கான ஒரு நெம்புகோலாக உருமாற்றுவதை தமது இலக்காக அவை கொண்டிருந்தன.

"குற்றவியல் ரீதியான (Criminal) காட்டிக் கொடுப்பு" என்று ஓடுகாலி பண்டாவால் வர்ணிக்கப்படும் மினியாபொலிஸ் விசாரணையானது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் பாதுகாக்கப்பட்டுவரும் புரட்சிகர மரபியத்தின் (Heritage) ஒரு பகுதியாகும். ஐக்கிய அமெரிக்க அரசுகளில் தொழிலாள வர்க்க இயக்கத்தினுள் ஏகாதிபத்திய யுத்தத்தை எதிர்க்கும் அதேநேரத்தில் சோவியத் ஒன்றியத்தை, ஜேர்மன் பாசிசத்திற்கு எதிரான அதன் போராட்டத்தில் நிபந்தனை இன்றி பாதுகாத்ததோடு, ஆதரித்ததுமான ஒரே ஒரு அரசியல் போக்காக சோசலிசத் தொழிலாளர் கட்சி இருந்தது.

முனிசைத் தவிர, சோசலிசத் தொழிலாளர் கட்சியின் இராணுவக் கொள்கைக்கு எதிரான ஒரே ஒரு விமர்சனம் 1940ம் ஆண்டு பிளவின் நெறிதவறிப் பிறப்பான, மக்ஸ் சட்மனின் குட்டி முதலாளித்துவ "தொழிலாளர் கட்சியிடம்" இருந்து வந்தது. அது சோசலிசத் தொழிலாளர் கட்சியின் கொள்கை "சமூக தேசபக்திவாதத்திற்கு விட்டுக் கொடுக்கப்பட்ட சலுகை" என்றும் "புரட்சிகர சர்வதேச நிலைப்பாட்டை கைவிடல்" என்றும் அது பிரகடனப்படுப்படுத்தியது. (புதிய சர்வதேசம், ஜனவரி, 1941)

சட்மனுடைய சோசலிசத் தொழிலாளர் கட்சியின் இராணுவக் கொள்கையைப் பற்றிய "இடதுசாரி" பகட்டுப் பேச்சுகள் எதுவாக இருந்தாலும், அத்தூற்றல்களின் உண்மையான வர்க்க உள்ளடக்கம், மத்தியதர வர்க்க அமைதிவாதமாகும். இது பிரசித்தி பெற்ற லேபர் அக்ஷனின் ஆகஸ்ட் 12,1940 ம் தேதி இதழில் அம்பலப்படுத்தப்பட்டது. இதில், படைகளுக்கு ஆட் சேர்ப்பதை ஜோன் எல். லூயிஸ் எதிர்ப்பதை, சட்மன் மிகவும் உற்சாகத்துடன் ஆமோதித்தார். அவர் அதில் "படைகளுக்கு ஆட்திரட்டலில் நாம் லூயிசுடன் 100% இருக்கின்றோம்" என்றார்.

இதற்கு ட்ரொட்ஸ்கி ஒரு சவுக்கடி கொடுக்கும் பதிலைத் தீட்டினார். "நாம் ஒரு சதவீதத்திற்குக் கூட லூயிசுடன் இல்லை. ஏனென்றால் லூயிஸ் முற்று முழுதாகக் காலவாதியாகிப்போன முறைகளைக் கொண்டு முதலாளித்துவ தாய்நாட்டைப் பாதுகாக்க முயலுகின்றார். இந்த முறைகள் (ஊழியத்துறை பணியாக (Professional) விரும்பி ஆயுதம் தரித்தல்) இராணுவக் கண்ணோட்டத்தில் இருந்து காலாவதியானவை, வர்க்கக் கண்ணோட்டத்தில் இருந்து அவை மிகவும் அபாயகரமானவை, என்று தொழிலாளர்களில் மிகப் பெரும்பான்மையினர் புரிந்து கொள்ளுகின்றார்கள், அல்லது உணருகின்றார்கள்." 16

சட்மனின் குட்டி முதலாளித்துவ அதிதீவிரவாத இடதுசாரிப் போக்கானது அரசியல் வளைவரை (Trajectory) ஒன்றில் உள்ள ஒரு புள்ளி மட்டுமே என்பதால் அது இறுதியில் அவரை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சூழ் வளையத்தினுள் (Orbit) கொண்டு சென்று வைக்கும் என்பதை இறுதியில் வரலாறு நிரூபித்தது. இதை இயற்கையாகவே அமெரிக்க முதலாளித்துவம் இனம் கண்டுகொண்டது. அது சட்மனின் குறுங்குழுவாத பகட்டாரவாரப் பேச்சைத் தேவையற்ற அதிர்ச்சியுடன் பார்க்கவில்லை. அது, இரண்டாம் உலக யுத்தத்தின் பொழுது, தொழிலாளர் கட்சிக்கு எதிரான அரச நடவடிக்கைகளை எடுக்க ஒரு பொழுதும் முயற்சி செய்யவில்லை.

விசாரணையைத் தொடர்ந்து, சோசலிசத் தொழிலாளர் கட்சி அதன் தோற்கடிப்புவாத நிலைப்பாட்டை பேணியதோடு, அதை மேலும் வளர்த்தெடுத்தது. ஜேம்ஸ் பி. கனன் ஐக்கிய அமெரிக்க அரசுகள் இரண்டாம் உலக யுத்தத்தினுள் சேருவது பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த அறிக்கை மிலிற்ரன்ட் பத்திரிகையின் பெப்ரவரி 7, 1942 ம் தேதி இதழில் வெளியிடப்பட்டது.

ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்கும் மற்றும் ஹிட்லரின் தலைமையிலான வல்லரசுகளுக்கும் இடையில் போர் மூண்ட நாள்வரை, யுத்தம் சம்பந்தமாக நமது நிலைப்பாட்டை நிர்ணயித்த அக்கறைகள், புதிய நிலமையிலும் அவை, தமது செல்லுபடியாகும் தகுதியை பேணிக் கொண்டுள்ளன.

ஜேர்மனி மற்றும் பிரான்ஸ், இத்தாலி மற்றும் பெரிய பிரித்தானியா ஆகிய அனைத்து முதலாளித்துவ வல்லரசுகளின் யுத்தத்தை, ஒரு ஏகாதிபத்திய யுத்தம் என்று நாம் கருதினோம்.

யுத்தம் பற்றிய இந்தப் பண்புரு வர்ணணையானது, சம்பந்தப்பட்ட வல்லரசுகளின் பண்பியலால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஏகாதிபத்திய சகாப்தத்தில் உள்ள முலாளித்துவ அரசுகளாகும்; அவையே ஏகாதிபத்திய நாடுகள் - அவை மற்றைய நாடுகளை, அல்லது மக்களை, ஒடுக்குகின்ற - அல்லது ஏகாதிபத்திய வல்லரசுகளின் மேல் சார்ந்து இருக்கின்ற, நாடுகளாகும். பசுபிக் பகுதிக்கு யுத்தத்தை விஸ்த்தரித்தல், முறையாக ஐக்கிய அமெரிக்க அரசுகளும், யப்பானும் யுத்தத்தில் புகுதல், என்பன இந்த அடிப்படை ஆய்வில் எதையும் மாற்றிவிடவில்லை.

லெனினைப் பின் தொடர்ந்து நமக்கும், முதலாவது வேட்டை எந்தக் கொள்ளைக்காரன் சுட்டான் என்பது, எந்த ஒரு வேறுபாட்டையும் ஏற்படுத்தவில்லை. ஒரு கால் நூற்றாண்டு காலமாகப் பொருளாதார மற்றும் அரசியல் வழிகளில் ஒவ்வொரு ஏகாதிபத்திய நாடும் மற்றைய ஏகாதிபத்திய நாட்டைத் தாக்கி வந்துள்ளது. இந்த மாற்றுப் போக்கு உச்ச நிலை அடைதல்தான், இறுதி வழியாக ஆயுதங்களைக் கையாளச் செய்துள்ளது. இது முதலாளித்துவம் நீடித்திருக்கும்வரை தொடரும்.

ஜேர்மன் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்தின் போராட்டத்தை மற்றும் சீனப் பரந்த மக்கள் யப்பானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகத் தொடுத்த போராட்டத்தை - சியாங் கே ஷேக் இருந்த பொழுதும் - சோசலிசத் தொழிலாளர் கட்சி ஆதரித்ததை விளக்கியபின் கனன் எழுதினார்:

சோவியத் ஒன்றியத்தை மற்றும் சீனாவை, அவற்றின் எதிரிகளுக்கு எதிராக ஆதரிக்கச் செய்யும் காரணங்கள் எவையும் பிரான்சிற்கோ அல்லது ஸ்பெயினிற்கோ பொருந்தும் என்று கூற முடியாது. இந்த ஏகாதிபத்திய "ஜனநாயகங்கள்" யுத்தத்தில் புகுந்தது தமது பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு சாம்ராஜ்ஜங்களில் உள்ள கோடானு கோடி கீழடக்கப்பட்ட மக்களின் மேல் தமது மேலாண்மை ஆட்சியை பேணுவதற்காகவாகும். இந்த "ஜனநாயகங்களை"ப் பாதுகாப்பது என்பது ஆபிரிக்கா மற்றும் ஆசியாவில் உள்ள பரந்த மக்களை ஒடுக்குவதைப் பாதுகாப்பதாகும். எல்லாவற்றிலும் மேலாக இற்றுக் கொண்டிருக்கும் முதலாளித்துவ சமூக முறையைப் பாதுகாப்பதாகும். நாம் அதை இத்தாலியில் மற்றும் ஜேர்மனியில் என்றாலும் சரி, அல்லது பிரான்சிலும் மற்றும் பிரிட்டனிலும் என்றாலும் சரி - அல்லது ஐக்கிய அமெரிக்க அரசுகளில் என்றாலும் சரி - பாதுகாப்பதில்லை.

சோசலிசத் தொழிலாளர் கட்சி ஒரு அரைப் பாதுகாப்புக் கொள்கையைக் கடைப்பிடித்தது ஒரு உண்மையென பண்டா கூறுவது - நான்காம் அகிலத்தை அபகீர்த்தி அடையச் செய்ய அவர் ஒரு முழுத் தொடராகத் தொடுத்த தாக்குதல்களுக்கு அடிப்படையாக அமைந்த இக் குற்றச் சாட்டானது - ஒரு முற்று முழுதான பொய்யாகும்.

சோசலிசத் தொழிலாளர் கட்சி அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் அதன் நட்பு நாடுகளையும் அம்பலப்படுத்தச் சளையாது பிரச்சாரம் செய்து வந்தது. யுத்த காலத்தில் வெளிவந்த மிலிற்ரன்ட் பத்திரிகையின் ஒரு மதிப்பாய்வு, தொழிலாள வர்க்கத்தினுள் எப்படி ஏகாதிபத்திய விரோத பிரச்சாரத்தை மற்றும் கிளர்ச்சியை மார்க்சிஸ்டுகள் தொடுக்க வேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டான உதாரணத்தைக் கொடுக்கும்.

சோசலிசத் தொழிலாளர் கட்சியின் பத்திரிகையில் மிகவும் விடாப்பிடியாக வெளிவந்து கொண்டிருந்த கட்டுரைகளின் பொருள்கள், யுத்தகாலத்தில் அரசாங்கத்தின் அடக்குமுறை அட்டூழியத்தை மற்றும் அமெரிக்க கறுப்பர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விட்ட சட்டவிரோதமான நீதிமன்ற விதிமுறைகளை, அதித இராணுவ இலாபங்ளைத் தேடி, முதலாளிகள் கோரமாகச் சுரண்டலை அதிகரித்தல் மற்றும் சுயநிர்ணய உரிமைக்காக ஆசிய பரந்த மக்களின் போராட்டங்களை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் பலாத்காரமாக நசுக்கல், என்பனவற்றைச் சளையாது அம்பலப் படுத்தியது. மிலிற்ரன்ட் பத்திரிகை இலங்கையில் பிரிட்டிஷ் ஆளுனர் சேர் அன்டிரு கல்டிக்கொற்றின் குற்றவியல் செயல்களுக்கு பதாகைத் தலைப்புக்கள் கொடுத்து அவற்றைப் பற்றி எழுதியது. அத்தோடு அது இலங்கை சமசமாஜக் கட்சிக்கு எதிரான அடக்குமுறையைப் பற்றிய செய்திகளையும் பிரசுரம் செய்தது.

அதே நேரத்தில் அது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இந்திய பரந்த மக்கள் தொடுத்த போராட்டத்தைத் தொடர்ந்து ஆதரவளித்து வந்தது. சோசலிசத் தொழிலாளர் கட்சியின் தேசியக் குழு 1942 இல் பின்வருமாறு அறிவித்தது:

"அத்லாந்திக் உரிமை ஆவணம்" அதன் முதலாண்டு நிறைவின் பொழுது, அதைக் கொண்டு பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் காலனித்துவ பரந்த மக்களின் மேலான தனது கொடுங்கோல் ஆட்சியை மூடி மறைத்து வைத்திருக்க உதவிவரும் ஒரு கந்தல் திரை என்பது அம்பலப்படுத்தப் பட்டுள்ளது. இந்திய பரந்த மக்கள் சேர்ச்சில் -ரூஸ்வெல்ட் ஆகியோரின் "நான்கு சுதந்திரங்களை" ப் பற்றிய அவர்களது முதல் ருசி பார்த்தலைக் கண்ணீர்ப்புகை மற்றும் துப்பாக்கி ரவைகள் வடிவில் பெற்று வருகின்றார்கள். இந்திய மக்களுக்கு எதிரான பயங்கரவாதமும், பலாத்காரமும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று நாம் கோருகின்றோம்!

நேற்று பிரிட்டனின் ஆட்சியாளர்களிடம், இந்திய பரந்த மக்களுக்குக் கொஞ்சம் சிறிய சலுகைகளைத் தூக்கி வீசும்படி கெஞ்சியவர்கள், தம்மைத் தாமே "ஜனநாயக வாதிகள்" என்று அழைத்துக் கொண்டவர்கள், இன்று அந்த இயக்கத்தை வெளிப்படையாகக் கண்டனம் செய்வதோடு, அதற்கு எதிரான அடக்குதலைப் "பாசிசத்திற்கு எதிராக ஜனநாயகம்" தொடுக்கும் போர், என்று நியாயப் படுத்துகின்றனர். அவர்கள் தமது கோஷம் என்று அழைத்ததை, வெறும் கலப்பற்ற கள்ளச் சரக்கு என்பதோடு, தாம் ஏகாதிபத்தியத்திற்கு விபச்சாரம் போன கருவிகள் என்பதையும் அவர்கள் அப்பட்டமாக அம்பலப்படுத்தியுள்ளனர்.17

தொழிலாளர் இயக்கத்தினுள் ஐக்கிய அமெரிக்க அரசுகள் யுத்தத்தில் தலையிட்டதை, இந்த முறையின் மூலம் மட்டுமே, பாசிசத்தைத் தடுக்க முடியும் என்று நியாயப்படுத்த முயன்ற எல்லோரையும் சோசலிசத் தொழிலாளர் கட்சி எதிர்த்துப் போராடியது. சமூக ஜனநாயகவாதியான நோமன் தோமஸ் பேழ் துறைமுகத் தாக்குதலைத் தொடர்ந்து, உடனடியாகத் தனது வாதத்தைக் கனன் முன் கூட்டியே கூறியது போலக் கைவிட்டு விட்டு, ஜனவரி 1942 இல்: "இன்று பாசிச சர்வாதிகாரத்தை உலகளாவிய ரீதியில் வெற்றி கொள்வதைத் தடுக்க, யுத்தத்தைத் தவிர நடைமுறை ரீதியான மாற்று மார்க்கம் எதுவும் எனக்குத் தென்படவில்லை" என பிரகடனப்படுத்தினார். இதற்கு சோசலிசத் தொழிலாளர் கட்சி காட்டமான பதிலை வெளியிட்டது :

நரகத்தினுள் சறுக்கிச் செல்வதைக் கடந்த யுத்தத்திலும் பார்க்க இந்த யுத்தத்தில் ஆங்கில- அமெரிக்க நட்பு நாடுகளுக்குக் கிடைக்கும் வெற்றியானது நிறுத்தி வைக்கும் என்பது, மேலும் குறைவாகவே இருக்கும். அனைத்து அரசியல், சமூக மற்றும் பொருளாதார பிற்போக்கின் அடிப்படைக் காரணி, உலக முதலாளித்துவம் இற்றுப் போதலிலேயே உள்ளது. யுத்தம் எவ்வளவோ அழிவை உண்டு பண்ணுகின்றது. முதலாளித்துவ அமைப்பானது மோசமான நிலையிலிருந்து மேலும் மோசமான நிலைக்குத்தான் செல்ல முடியும். எந்த ஒரு முதலாளித்துவ கூட்டும் மேலுக்கு வந்தாலும் ஒரு மட்ட பிற்போக்கில் இருந்து மேலும் ஆழமான பிற்போக்கிற்கே முதலாளித்துவ அமைப்பானது செல்ல முடியும். ஹிட்லரிசம்தான் முதலாளித்துவ சீரழிவு உண்டுபண்ணக் கூடிய அதி கோரமான இயல் நிகழ்வாக இருக்க வேண்டியதில்லை! அல்லது பிரிட்டனுக்கும், ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்கும் கிடைக்கும் வெற்றி, இந்த நாடுகளில் பாசிசம் நிறுவப்படுவதற்கு எதிரான எந்த ஒரு வகையிலும் உத்தரவாதமாக இருக்கப் போவதில்லை!...

இந்த அறிக்கையில் தோமஸ், சோசலிசத்தை மட்டுமின்றி, யுத்தத்திற்கு முன்னர் தனது ஆதரவாளர்களை ஏமாற்றி வந்த போரொழிப்பு சொற்ரொடர்களையும் தன்னிலிருந்து கழைந்து விடுகின்றார்....இப்பொழுது அவர் உண்மையிலே அவர் எதுவாக உள்ளாரோ, அதுவாக அவர் முன்வந்துள்ளார்: ஸ்ராலினிஸ்டுகள், சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் தொழிலாளத் தலைவர்களாக உத்தியோக ரீதியில் உள்ளவர்களைத் தலைமையிற் கொண்ட சமூக-தேசபக்தர்கள் பேரணியின் கடைக் கோடியில் இழுபட்டுச் செல்லும் மழுப்புப் பேச்சுக் கபட வேடதாரியாக தோமஸ் முன்வந்துள்ளார். 18

ட்ரொட்கிஸ்டுகளின் இந்த நிலைப்பாடு, ரூஸ்வெல்ட்டின் அரசியல் பொலிசாக அப்பொழுது தொழிலாளர் இயக்கத்தினுள் செயற்பட்டுக் கொண்டிருந்த அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ராலினிஸ்டுகளை வெஞ்சினம் கொள்ளச் செய்தது. அவர்கள் சோசலிசத் தொழிலாளர் கட்சியின் உறுப்பினர்களைக் கொலைசெய்ய தான்தோன்றித் தனமாகக் கொலைத் தண்டனை விதிக்கும் கும்பல்களை ஒழுங்கமைக்க முயன்றனர். ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு எதிராக யுத்த காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் நடவடிக்கையின் மாதிரி எடுத்துக் காட்டுத்தான் "உங்கள் ஆலை வாயிலில் ஹிட்லரின் ஏஜண்டுகள்!" என்று தலைப்பிட்ட அவர்களின் ஆலைத் துண்டுப் பிரசுரம்.

இந்தத் துண்டுப் பிரசுரம், "மிலிற்ரன்ட் ஒரு நாஸி பிரச்சார ஏடு. இந்த ஐந்தாம் படையின் தாளை ஏற்பதன் மூலம் எந்த ஒரு தேசபக்த அமெரிக்கத் தொழிலாளியும் தனது கைகளை அழுக்கடையச் செய்யமாட்டான்"19 என்று பிரகடனம் செய்தது.

இந்தமாதிரியான எண்ணற்ற ஆத்திரமூட்டல்களை ஸ்ராலினிஸ்டுகள் நடத்திய பொழுதும், பெரிய தொழிற்சாலைகளின் முன் மிலிற்ரன்ட் விற்கப்படுவதை அவர்களால் தடுக்க முடியவில்லை. ட்ரொட்கிஸ்டுகளின் பிரதான தலைவர்கள் சிறைப்படுத்தப்பட்ட பொழுதும் அவர்களைச் செயலற்றுப் போகச்செய்ய முடியவில்லை என்பதை ரூஸ்வெல்ட் நிர்வாகம் உணர்ந்தது. அப்பொழுது அது, மிலிற்ரன்ட் பத்திரிகை அஞ்சலகத்தின் மூலம் விநியோகிக்கப்படுவதைத் தடுக்க, இரண்டாம் வகுப்பு அஞ்சல் மூலம் அது அனுப்பப்படும் உரிமையை இல்லாமற் செய்ய நடவடிக்கை எடுத்தது. ஐக்கிய அமெரிக்க அரசுகளின் சட்டத்துறையின் தலைவர் ஃபிரான்சிஸ் பிடில், அஞ்சல்துறைத் தலைவருக்கு டிசம்பர் 28,1942 இல் எழுதிய கடிதத்தில் அவரது தண்டிக்கும் நடவடிக்கைக்கான காரணங்களை விளக்கினார்:

உங்களது துறைக்கும் மற்றும் இந்தத் துறைக்கும் இடையில் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் நிலவி வந்த ஒத்துழைப்பின் ஒரு பகுதியாகவும், அதில் இரு துறைகளுக்கும் இருக்கும் பொதுவான அக்கறையின் அடிப்படையிலும், நான் மிலிற்ரன்ட் பற்றிய - மிலிற்ரன்ட் வெளியீட்டுச் சங்கம், 116, பல்கலைக் கழக இடம், நியூயோர்க், என்.வை.யினால் வெளியிடப்பட்டு வரும் வார இதழைப் பற்றிய தகவல்களை உங்களுடைய ஆராய்விற்கு அனுப்பி வைக்கின்றேன்.

டிசம்பர் 7, 1941 இல் இருந்து இந்த வெளியீடு பரந்த மக்கள் யுத்தத்தில் பங்கு கொள்ளும் ஊக்கத்தை வெளிப்படையாகவே கெடுத்து வந்துள்ளது. யுத்தம் ஆளும் குழுக்களின் நலன்களுக்காகவும், தொழிலாள வர்க்கம் தொடர்ந்தும் அடிமைப்பட்டிருப்பதற்காக சேவை செய்யவுமே தொடுக்கப்பட்டு வருகின்றது என்ற பொருள் விளக்கமானது இவ் வெளியீடு முழுவதும் புரையோடிக் கிடக்கின்றது. இந்த யுத்தமானது மக்களின் உயிர்கள் மற்றும் வாழ்க்கைத் தரங்களின் இழப்பின் அடிப்படையில், ஏகாதிபத்திய சூறையாடல்களுக்கான ஒரு மோதல், ஆகவே இந்த யுத்தத்தை ஆதரிக்கக் கூடாது, என்று அது தூண்டுகின்றது. இந்த வெளியீட்டின் நிலை, ஜனநாயகத்தை மற்றும் "நான்கு சுதந்திரங்களை" வஞ்சிக்கும் மோசடி என்று நையாண்டி செய்தல், பிரிட்டிஷ் விரோதத் தாக்குதல்கள், பாசிஸ்ட்டுகளுடன் ஐக்கிய அமெரிக்க அரசுகள் ஒத்துழைக்கின்றது என்ற குற்றச்சாட்டுகள், இனப் பிரச்சினைகளைத் தூண்டிவிடல் மற்றும் பிரிவினைத் தன்மைகொண்ட விஷயங்கள் என்பன, திட்டமிட்டு யுத்த முயற்சிக்கு எதிர்ப்பை உண்டு பண்ணுவதோடு, ஆயுதப் படைகளின் கட்டுப்பாட்டுடனும் தலையிடுகின்றது. நான் மிலிரன்டில் இருந்து டிசம்பர் 7, 1941 முதல் தொடர்ந்து எடுத்த பகுதிகளை மட்டும் கொண்டுள்ள, நினைவுக் குறிப்பை உறையுள் சேர்க்கின்றேன்.

இரண்டாம் வகுப்பு அஞ்சலில் அனுப்பும் சலுகையை ஏன் மிலிரன்டிற்கு மறுக்கக் கூடாது என்ற கட்டளை ஒன்றை பிறப்பிப்பது பற்றி நீங்கள் ஆராயக்கூடும் என்ற யோசனையை நான் முன்வைக்க விரும்புகின்றேன். இது சம்பந்தமாக முன்னைய வழக்குகளில், 1917 ம் ஆண்டு உளவுச் சட்டத்தின் தலைப்பு 1 இன் பகுதி 3ஐ நான் உங்களது கவனத்துக்கு கொண்டு வந்தேன். அத்தோடு நான், மில்வாகி வெளியீட்டுக் கம்பனியை வாதியாகவும், பேர்லெசனை பிரதிவாதியாகவும் கொண்ட, 255, ஐக்கிய அமெரிக்க அரசுகள் 407 (1921) உள்ள வழக்கில் ஐக்கிய அமெரிக்க அரசுகளின் உச்சநீதி மன்றம், ஒரு காலப்பகுதியில், கொள்கை மாறாது அரசுக்கு எதிர்ப்பான விஷயங்களைத் தொடர்ச்சியாக வெளியிட்டுவரும் ஒரு வெளியீட்டின் இரண்டாம் வகுப்பு அஞ்சலில் அனுப்பும் சலுகையைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் அல்லது திரும்பப்பெறும், அஞ்சல்துறைத் தலைவரின் உரிமையை, ஆதரித்தது என்பதையும் உங்களது கவனத்திற்குக் கொண்டு வந்தேன் என்பதும் உங்களுக்கு நினைவிருக்கலாம்.

நீங்கள் உசிதமானது என்று கருதும், எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்க, இந்தத் துறை அதன் முழு ஒத்துழைப்பையும் உங்களுக்கு முன் வைக்கின்றது.20

இரண்டாம் உலக யுத்தத்தின் பொழுது "கனனின் அரசியல் கோழைத்தனத்தை"ப் பற்றிய பண்டாவின் தூற்றுதலுக்கு, ரூஸ்வெல்டின் சட்டத்துறைத் தலைவரின் மேசையில் இருந்து சென்ற இப்பத்திரம், மிகச் சிறந்த, மறுக்க முடியாத பதிலாகும்.


1. ஜேம்ஸ் பி. கனன், விசாரணைக் கூண்டில் சோசலிசம் (நியூ யோர்க்; பாத் ஃபைன்டேர்ஸ் பிரஸ், 1973) பக்கம் 119.

2. அதே நூல், பக்கம் 120.

3. அதே நூல், பக்கம் 105. 

4. லியோன் ட்ரொட்ஸ்கி, லியோன் ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்கள் [1939 -1940] (நியூ யோர்க்: பாத் ஃபைண்டேர்ஸ் பிரஸ், 1973), பக்கம் 253.

5. அதே நூல், பக்கம் 256.

6. அதே நூல், பக்கம் 257. 

7. அதே நூல், பக்கம் 331. 

8. அதே நூல், பக்கங்கள் 332 - 34. 

9. அதே நூல், பக்கம் 343.

10. அதே நூல், பக்கம் 344.

11. அதே நூல், பக்கம் 392. 

12. அதே நூல், பக்கம் 411. 

13. அதே நூல், பக்கங்கள் 411-12.

14. அதே நூல், பக்கங்கள் 412 - 13.

15. அதே நூல், பக்கம் 414 

16. லியோன் ட்ரொட்ஸ்கி, மார்க்சிசத்தைப் பாதுகாப்பதற்காக (லண்டன்: நியூ பார்க் வெளியீடுகள், 1971), பக்கம் 231.

17. மிலிற்ரன்ட், 15 ஆகஸ்ட் 1942.

18. மிலிற்ரன்ட், 14 பெப்ரவரி 1942.

19. மிலிற்ரன்ட், 14 மார்ச் 1942.

20. மிலிற்ரன்ட், 30 ஜனவரி 1943.
 
Copyright 1998-2003
World Socialist Web Site
All rights reserved