லியோன் ட்ரொட்ஸ்கியும் இருபதாம் நூற்றாண்டில் சோசலிசத்தின் தலைவிதியும்: பேராசிரியர் எரிக் ஹோப்ஸ்வாமுக்கான பதில்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சமர்ப்பணம்

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர், ஆஸ்திரேலியாவில் பேராசிரியர் வாடிம் ரோகோவினின் சொற்பொழிவுகளில் கலந்து கொள்ள எனக்கொரு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. மெல்போர்னில் இரண்டாம் சொற்பொழிவு முடிந்தபோது, அங்கே ஒரு நல்ல நண்பரும் மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கி பாத்திரம் வகித்த இயக்கத்தின் ஆதரவாளருடன் ஒரு சுவாரசியமான உரையாடலை நடத்தி இருந்தேன். அந்த உரையாடலின் போது எனக்குள் நிறைய சிந்தனைகள் தோன்றின, அவற்றை அப்பெண்மணியுடன் விவாதித்தேன். அக்கருத்துக்களை எனது சொந்த சொற்பொழிவில் விரிவாக விளக்குவதற்கு என்றாவதொரு நாள் எனக்கொரு வாய்ப்பு கிடைக்குமென அவர் நம்புவதாக தெரிவித்தார். நானும் அந்த வாய்ப்புக்காக காத்திருப்பதாக அவருக்குத் தெரிவித்தேன்.

இந்த சர்வதேச கோடைகால பள்ளிக்குத் தலைமை வகித்துவரும் லின்டா டெனின்பாமின் தாயாரான அந்த நண்பர், ஜூடி டெனின்பாம், துரதிருஷ்டவசமாக கடந்த ஆண்டு தொடக்கத்தில் மரணமடைந்தார். அவரை அறிந்த அனைவருக்கும், அதுவொரு பேரிழப்பாகும். ஆகையால் நான் இந்த சொற்பொழிவை அவரது நினைவாக அவருக்கே அர்ப்பணிக்க விரும்புகிறேன். எனது நோக்கில், நான் ஆஸ்திரேலியாவுக்கு வரும்போதும், அவரை சந்திக்கையிலும் எப்போதும் என்னை பெரும் அன்போடு வரவேற்ற ஒருவருக்கு மிகவும் உவகையோடு திருப்பிச் செலுத்தும் ஒரு பொறுப்பாகவும், ஒரு கடமைப்பாடாகவும், இதை நான் கருதுகிறேன்.

* * * * * *

நம்பிக்கைவாதத்தின் இழப்பு

ஜேர்மன் சமூக ஜனநாயகத்தின் மாபெரும் மார்க்சிச தத்துவவியலாளர் ஃபிரான்ஸ் மெஹ்ரிங் (Franz Mehring) பத்தொன்பதாம் நூற்றாண்டு நம்பிக்கை கொண்டதாக இருக்கின்ற அதேவேளை, இருபதாம் நூற்றாண்டு புரட்சிகர நிறைவேற்றமாக இருக்கும் என 1899இல் எழுதினார். வரலாற்று முன்னேற்றத்தின் அணிநடையானது, எதிர்பார்த்ததையும் விட மிகவும் சிக்கலான பாதையில் செல்லக்கூடும், அங்கே எதிர்காலத்தை முற்றிலுமாக திட்டவட்டமாக கணிக்கும் எந்த தீர்க்கதரிசியும் கிடையாது என்பதை மெஹ்ரிங் ஒப்புக்கொண்டார். “ஆனால் உத்வேகமான மனவுறுதியோடும், பெருமைமிகு தன்னம்பிக்கையோடும், வர்க்க-நனவுடைய பாட்டாளி வர்க்கம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்க நிலையை கடந்து செல்லும்," என அவர் பறைசாற்றினார்.

மெஹ்ரிங்கின் வார்த்தைகள், 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த சோசலிச இயக்கம் முழுவதும் வியாபித்திருந்த பரந்துபட்ட திடமான நம்பிக்கைவாதத்தை (Optimism) வெளிப்படுத்தின. சோசலிசத்தின் வரலாற்றுப் பயணத்தில் உணர்வுபூர்வமாக நம்பிக்கை கொண்டிருந்த ஓர் இயக்கத்துக்காக அவர் பேசினார். அப்போது மார்க்சும் ஏங்கெல்சும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை எழுதி வெறும் ஐம்பது ஆண்டுகள்தான் கடந்திருந்தன. அதற்கு வெறும் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர்தான், மார்க்ஸ் லண்டனில் ஒரு வறிய, தனிமைப்படுத்தப்பட்ட புரட்சியாளராக நாடுகடத்தப்பட்டு வாழ்ந்து கொண்டிருந்தார். அதற்கு சரியாக வெறும் இருபது ஆண்டுகளுக்கு முன்னர்தான் பிஸ்மார்க், ஜேர்மனியில் பெரும்பாலான சோசலிச நடவடிக்கைகளை சட்டவிரோதமாக்கி இருந்தார். ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவுக்கு வந்து கொண்டிருந்த நிலையில், சமூக ஜனநாயகக் கட்சி, சோசலிச எதிர்ப்பு சட்டங்களில் இருந்து தப்பி, அந்நாட்டில் ஒரு மிகப்பெரும் அரசியல் கட்சியாக மாறியிருந்தது. அனைத்திற்கும் மேலாக, சோசலிசம், ஜேர்மனியின் எல்லைகளைக் கடந்து, ஒரு பலம் வாய்ந்த சர்வதேச இயக்கமாக மாறியிருந்ததுடன், அதன் ஆதரவாளர்களுள் அசாதாரணமான தைரியமும், தொலைநோக்குப்பார்வையும் கொண்ட எண்ணற்ற ஆண்களையும் பெண்களையும், அவ்வப்போது பல உண்மையான மேதைகளையும், காணக்கூடியதாக இருந்தது.

சோசலிஸ்டுகள் புரட்சிகர வெளிப்பாட்டை கொடுத்த அந்த நம்பிக்கைவாதம், முதலாளித்துவ வர்க்கம், மத்தியதர வர்க்கத்தின் பண்பாடுமிக்க பிரிவினர் உட்பட, சமுதாயம் முழுவதிலும் பரந்தளவில் உணரப்பட்டது. இரண்டாம் உலகப் போர் வெடித்ததற்கு பின்னர், ஆஸ்திரிய எழுத்தாளர் ஸ்ரெபான் ஷ்வைக் (Stefan Zweig) எழுதிய நினைவுக் குறிப்புக்களில், ஒரு பிரிந்துபோன அன்புக்குரிய ஆத்ம நண்பரை நினைவுகூர்வதைப் போல, அந்நூற்றாண்டின் திருப்பத்தில் மேலோங்கியிருந்த அந்த திடமான தன்னம்பிக்கையை நினைவு கூர்ந்தார்.

சாத்தியமாகக்கூடிய சிறந்த உலகை நோக்கி அது நேரான மற்றும் பிழையற்ற பாதையில் செல்வதாக, பத்தொன்பதாம் நூற்றாண்டு அதன் தாராளவாத கருத்துவாதத்தில் நிஜமாக நம்ப வைக்கப்பட்டு இருந்தது. மக்கள் முதிர்ச்சியின்றியும் மற்றும் போதிய அறிவொளியின்றியும் இருந்த ஒரு காலத்தில், ஒருவர் முந்தைய சகாப்தங்களை —அவற்றின் போர்கள், பஞ்சங்கள் மற்றும் கலகங்களுடன்— ஏளனமாக பார்த்தார் ... ஒரு தடையற்ற, தடுக்கவியலாத "முன்னேற்றத்தின்" மீதிருந்த நம்பிக்கை, அந்த காலகட்டத்தில் ஒரு மதத்திற்கு இணையான பலத்தைக் கொண்டிருந்தது; ஒருவர் பைபிளை நம்பியதைக் காட்டிலும் "முன்னேற்றத்தை" அதிகமாக நம்பினார். மேலும் அந்த உறுதியான நல்வார்த்தை, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தால் தோற்றுவிக்கப்பட்ட அன்றாட அதிசயங்களால் முற்றிலும் நிரூபிக்கப்பட்டு வந்ததாக தெரிந்தது.2

ஆனால் இந்த நம்பிக்கை இருபதாம் நூற்றாண்டின் அதிர்ச்சிகளால் மிகச் சிறியளவே உயிர் பிழைத்துள்ளதுடன், சில தருணங்களில் அந்நூற்றாண்டு, எல்லா மனிதர்களது நம்பிக்கைகளின் புதைகுழியாக கூட பார்க்கப்பட்டுள்ளது. இரண்டு உலகப் போர்கள், எண்ணற்ற பிராந்திய இரத்தஆறுகள், தோல்வியுற்ற புரட்சிகள் மற்றும் யூதஇன அழிப்பு படுகொலைகள் என அந்நூற்றாண்டின் அனைத்து படுகோரமான வெளிச்சத்தில், முன்னேற்றத்தின் மீதிருந்த நிலைநாட்டமுடியாத உறுதி மீதும் மற்றும் மனித பகுத்தறிவின் மீதும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் காணப்பட்ட நம்பிக்கைவாதம், மனித பகுத்தறிவின் மீது ஒரு அப்பாவித்தனமான நம்பிக்கையாகவும் மற்றும் முன்னேற்றத்தின் மீதான நியாயப்படுத்தமுடியாத நம்பிக்கையாகவும் பார்க்கும் நிலைமைக்கு வந்ததுள்ளது.

நாம் புதிய நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கின்ற வேளையில், எதிர்காலம் மனித நிலைமையில் தீவிரமான அபிவிருத்திகளை காணும் என்ற அபிப்பிராயம் அங்கே மிக குறைவாகவே நிலவுகிறது. முந்தைய ஒன்றைப் போலவே இருபத்தோராம் நூற்றாண்டிலும் மனிதன் கொடூரங்களை ஏற்றுக் கொள்வான் என்ற ஒரு நிம்மதியற்ற மற்றும் உறுதியற்ற நம்பிக்கையே பெரிதும் நிலவுகிறது. இந்நூற்றாண்டில் நிகழவிருக்கின்ற மாற்றங்கள், வேறெதையும் விட, குறிப்பாக ஒரு கரடுமுரடான மகிழ்ச்சியற்ற பயணம் இறுதியில் முடிவுக்கு வருவதைப் போல, அதுமாதிரியான ஒரு நிம்மதி உணர்வை எழுப்புகிறது என்பதுதான் வருத்தத்திற்குரிய உண்மையாகும்.

இந்நூற்றாண்டு முடிவதற்கு முன்னதாக நம்மீது விரைவில் தொடுக்கப்படும் பின்னோக்கி பார்க்கும் நிகழ்வுகளில் இருபதாம் நூற்றாண்டு என்பது கற்பனைக்குள் அடங்காத பயங்கரங்கள், பாரிய படுகொலைகள் மற்றும் சர்வாதிகார காட்டுமிராண்டித்தனங்களின் நூற்றாண்டாகும் என்பது மேலாதிக்கம் செலுத்தவிருப்பதை கற்பனை செய்து பார்ப்பது கடினமல்ல. இந்த விவரிப்புகள், குறிப்பிட்ட அளவுக்கு, பொருத்தமானதே என்பதை மறுக்க இயலாது. ஆனால் தவறான பிரயோகம் மற்றும் அதீத பிரயோகத்தின் மூலமாக, அவை வெற்றுரைகளின் குணாம்சத்தை ஏற்கக்கூடும். ஊடகங்களின் கரங்களில் இந்த வாக்கியங்கள், நனவை அறிவொளியூட்டுவதற்கு மாறாக, அதை மழுங்கடிக்க சேவை செய்யும் ஒலிக்கோர்வையாக மாற்றப்படுகின்றன. அனைத்து "சித்தாந்தத்தையும்" —குறிப்பாக மார்க்சிசத்தை— அழிவுகரமான பாத்திரமாக சித்தரிக்கவும் மற்றும் அதன் மூலமாக தற்போதிருக்கும் சமூக ஒழுங்கமைப்பை குறித்த எந்தவொரு புரட்சிகர விமர்சனத்தையும் பயனின்றி செய்வதை உறுதிப்படுத்தவும், இருபதாம் நூற்றாண்டின் வன்முறை மற்றும் துயரங்கள் பயன்படுத்திக் கொள்ளப்படும் என்பதை, இந்த விடயத்தில் ஏற்கனவே என்ன நடந்துள்ளது என்பதை மதிப்பிடுவதிலிருந்து, ஒருவரால் அனுமானிக்க முடியும்.

இந்நூற்றாண்டு, உலக வரலாற்றில் மிகப் பிரமாண்டமான எழுச்சிகளைக் கண்டுள்ளது. இந்த அளவிலான வேகத்துடன், இதுபோன்றவொரு உயர்ந்த நனவுடன் பெருந்திரளான மக்கள் இதற்கு முன்னர் ஒருபோதும் உத்வேகத்துடன் இருந்திருக்க மாட்டார்கள். இதற்கு நேர்மாறாக, புரட்சிகர வெகுஜன இயக்கங்களை ஒடுக்க இந்தளவுக்கு ஈவிரக்கமின்றி பலாத்காரமும் வன்முறையும் ஒருபோதும் பயன்படுத்தப்பட்டும் இருந்திருக்காது. உலக முதலாளித்துவ அமைப்புமுறையை பாதுகாப்பதற்காக நேரடியாகவோ (ஜேர்மன் மற்றும் ஸ்பெயினில் செய்யப்பட்டதைப் போல) அல்லது மறைமுகமாகவோ (சோவியத் ஒன்றியத்தில் செய்யப்பட்டதைப் போல) நடத்தப்பட்ட குற்றங்களே, மிக மிக மோசமான குற்றங்கள் என்பதை முதலாளித்துவ ஊடகங்களின் தார்மீகவாதிகள் குறிப்பிடுவதில்லை.

இருபதாம் நூற்றாண்டில் துயரங்களுக்கு பஞ்சம் இருக்கவில்லை. ஆனால் அத்துயரங்கள், முன்னெடுக்கப்பட்ட வரலாற்றுப் பணிகளின் அளப்பரிய வெளிப்பாடாக உள்ளன. முதல்முறையாக மனிதகுலம் அதன் நிகழ்ச்சிநிரலில், ஒரு நடைமுறை வேலையாக, வர்க்க சமூகத்தை ஒழிப்பதை நிலைநிறுத்தியது. மனிதன், மனித குலத்தின் முந்தைய வரலாறை முடிவுக்குக் கொண்டுவர முனைந்தான். அக்டோபர் 1917இன் போல்ஷிவிக் புரட்சியானது, அதற்குப் பின்னர் ஏற்பட்ட சோவியத் ஒன்றியத்தின் தலைவிதி என்னவாக இருந்தபோதிலும், மனிதனின் வரலாற்று வளர்ச்சியில் ஒரு அழிக்க முடியாத மைல்கல்லை பிரதிநிதித்துவம் செய்தது. இன்றைய காலகட்டத்தில் அத்தகைய "நியதிவாத" (deterministic) கருத்துருக்கள் நடைமுறைக்கு உதவாததாக தோன்றினாலும், ஒரு சமூக இருப்பாக மனிதனின் அபிவிருத்தியை, ஆளும் விதிகளின் மிகவும் பலம்வாய்ந்த போக்குக்கள், அவை எதிர்பார்த்திருந்தளவில் மட்டுமே, அக்டோபர் புரட்சியின் மூலமாக ஒரு அவசியமான வெளிப்பாட்டைக் கண்டது என நாம் நம்புகிறோம். 1917இல் தொடங்கியதை பூர்த்தி செய்வதற்கு ஒரு புதுப்பிக்கப்பட்ட முயற்சி, தவிர்க்கவியலாதது என்பதில் நாம் உடன்பட்டுள்ளோம்.

முதல் பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சியான அக்டோபர் 1917 மற்றும் அதற்குப் பிந்தைய காலம் பற்றிய, அதுவும் சோவியத் ரஷ்யாவில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதையும் குறித்த ஓர் ஆய்வாக கட்டாயம் இருக்க வேண்டும் என்பதே, நமது காலகட்டத்தின் மிகவும் பிரமாண்டமான அரசியல் மற்றும் புத்திஜீவித பணியாகும். இது, ஒட்டுமொத்தமாக, வரலாற்று மூலோபாய அனுபவங்களின் தொகுப்புக்குள் மிக முக்கிய உட்கூறுகளை பிரதிநிதித்துவம் செய்கிறது, அதிலிருந்துதான் மார்க்சிஸ்டுகள் இருபத்தோராம் நூற்றாண்டில் தொழிலாள வர்க்கத்தை வழிநடத்துவதற்கான தத்துவார்த்த மற்றும் நடைமுறை படிப்பினை பெறவேண்டும். சோசலிசத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்து —அவ்விதத்தில் மனிதகுலத்தின் எதிர்காலம் குறித்தே— ஒரு ஆழ்ந்த விவாதம், அக்டோபர் புரட்சியின் ஓர் ஆய்விலிருந்து எழ வேண்டும். இந்த புரட்சி ஆதரிக்கப்படலாம் அல்லது எதிர்க்கப்படலாம், ஆனால் அதைத் தவிர்க்க முடியாது. இன்றைய நாட்களின் பிரச்சினைகளுக்கு ஒருவர் அளிக்கும் பதில்கள், அக்டோபர் புரட்சியின், அதற்குப் பிந்தைய காலத்தின், தலைவிதி மற்றும் மரபைக் குறித்த அவரின் மதிப்பீட்டுடன் பிரிக்கவியலாதவாறு தொடர்புபட்டுள்ளது.

அக்டோபர் புரட்சி தோல்வியுற சபிக்கப்பட்டிருந்தது என்றால்; உண்மையில் தொடக்கத்திலிருந்தே போல்ஷிவிக் அதிகாரத்தைக் கைப்பற்றியமை ஒரு அழிவார்ந்த சாகச முயற்சி என்றால்; ஸ்ராலினிசம் போல்ஷிவிசத்தின் தவிர்க்கவியலாத விளைபொருள் என்றால்; “பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்" என்ற அந்த கருத்தியலில் இருந்துதான் ஸ்ராலினிச சகாப்தத்தின் குற்றங்கள் பெருக்கெடுத்தன என்றால்; சோவியத் ஒன்றியத்தின் இறுதி உடைவு சோசலிச பொருளாதாரத்தின் திவால்நிலையை நிரூபிக்கிறதென்றால், பின்னர், மார்க்சிசம் ஒரு பேரழிவுகரமான அரசியல், புத்திஜீவித மற்றும் தார்மீக பொறிவுக்கு ஆளாகியுள்ளது என்பதை ஒப்புக் கொள்ளவேண்டியதாகிவிடும். இதுதான், இன்றைய காலகட்டத்தில், பல்கலைக்கழக கல்வித்துறையாளர்கள் மத்தியில் மேலோங்கி இருக்கும் பார்வையாக உள்ளது. மறுபுறம், அக்டோபர் புரட்சி யதார்த்தமான ரீதியில் ஏனைய சாத்தியக்கூறுகளை உள்ளடக்கியிருந்ததென்றால், அதாவது ஸ்ராலினிசம் போல்ஷிவிசத்தின் விளைபொருளல்ல, மாறாக அதற்கு நேர்மாறான ஆய்வினது விளைபொருள் என்றால்; உண்மையில் ஸ்ராலினிசத்தின் வளர்ச்சி மார்க்சிசவாதிகளால் எதிர்க்கப்பட்டிருந்தால், பின்னர், புரட்சிகர சோசலிசத்தின் வரலாற்று நிலைமை மிகவும் வேறுபட்டதாக இருந்திருக்கும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு இரண்டாவது நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. இது முக்கியமாக நம்மை, முற்றிலும் வெட்கமற்ற பிற்போக்கின் பாதுகாவலர்களுடன் மட்டுமல்ல, மாறாக குறைந்தபட்சம் மிக அண்மைக்காலம்வரை, தங்களைத்தாங்களே சோசலிசலிஸ்டுகள் என்று கருதிய பலரின் மத்தியில் பொதுவாக காணப்பட்ட ஐயுறவுவாதம், விரக்தி மற்றும் அரசியல் துறப்பு மனோபாவத்துடனும், நம்மை மோதலுக்குள் கொண்டு வருகிறது.

ஸ்ராலினிசத்தின் செல்வாக்கிற்கு ஆட்பட்டவர்களிடையே, சோவியத் ஒன்றியத்தின் பொறிவானது —அவர்களால் அச்சம்பவம் முற்றிலுமாக முன்கணிக்கப்படவில்லை என்பதால்— அக்டோபர் புரட்சி மற்றும் வரலாற்றில் அதன் இடத்தை குறித்த அவர்களின் மனோபாவத்தை தீவிரமாக மாற்றம் காண வைத்துள்ளது. லியோன் ட்ரொட்ஸ்கி ஒருமுறை குறிப்பிட்டதைப் போல, பிற்போக்குத்தனம் வெற்றி கொள்வதுடன் மட்டுமின்றி, நம்பிக்கை கொள்ளவும் வைத்து விடுகின்றது. சோவியத் ஒன்றியத்தின், அல்லது, ஒருவேளை இன்னும் துல்லியமாக கூறுவதானால், சோவியத் அதிகாரத்துவத்தின் பல நீண்டகால நண்பர்கள், லெனினை மற்றும் "மகத்தான அக்டோபர் புரட்சியை" பெரிதும் வியந்து பாராட்டிய இவர்கள் —அவ்வாறு செய்வதற்காக தங்களைத்தாங்களே மிகவும் முற்போக்கான மனிதர்களாக கருதிய இவர்கள்— இப்போது அக்டோபர் புரட்சியை ஒரு பேரிடராகவும், அது நடந்திருக்கக்கூடாத ஒன்றாகவும் பார்க்கிறார்கள். அதிகாரத்தைக் கைப்பற்றியமை ஒரு படுமோசமான பிழை. 1917 அக்டோபர் புரட்சி மற்றும் அதற்குப் பிந்தைய காலகட்டத்திலிருந்து ஏதாவது படிப்பினையை பெற்றுக்கொள்ளமுடியுமென்றால், அது, மார்க்ஸால் சிந்திக்கப்பட்டு, லெனினால் நடைமுறைப்படுத்தப்பட்ட, ஒட்டுமொத்த புரட்சிகர சோசலிச திட்டமும் துன்பியலானரீதியில் மீட்டுப்பெற இயலாத அளவில் தோல்வி அடைந்துள்ளது என்பதேயாகும், என்று அவர்கள் நம்புகின்றனர்.

இது தான், பல ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு உறுப்பினராக இருந்த பிரிட்டிஷ் வரலாற்றாளர் எரிக் ஹோப்ஸ்வாமின் ஒரு நூலிலிருந்து எழும் முன்னோக்காக உள்ளது. வரலாற்றின் மீது (On History) என்ற தலைப்பிலான அந்நூல், கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக அவர் எழுதிய பல்வேறு கட்டுரைகள் மற்றும் விரிவுரைகளை உள்ளடக்கி உள்ளது. இந்த எழுத்துக்களில் பரந்த தலைப்புகள் கையாளப்பட்டுள்ள போதினும், அக்டோபர் புரட்சியின் வரலாற்று முக்கியத்துவமே அத்தொகுப்பில் மேலாதிக்கம் செலுத்தும் உட்பொருளாக உள்ளது.

பேராசிரியர் ஹோப்ஸ்வாமின் நூலைக் குறித்து நான் பல கடுமையான விடயங்களைக் கூற வேண்டியுள்ள நிலையில், எனது கருத்துக்களுக்கு முன்னுரையாக, அவர் ஒரு வரலாற்றாளராக அவரது நீண்ட தொழில் வாழ்வினூடாக பல மதிப்புடைய மேதைமைமிக்க படைப்புகளை எழுதியுள்ளார் என்பதை தெளிவாக கூற என்னை அனுமதியுங்கள். பிரெஞ்சு புரட்சி மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதலாளித்துவ வளர்ச்சி குறித்து அவர் எழுதியுள்ள தொகுப்புகள் சிந்தனைக்குரிய மற்றும் உணர்வுபூர்வமான ஆய்வுகளாகும். மிக சமீபத்திய ஒரு நூல், தேசியவாதம் மற்றும் தேசிய அரசின் பாத்திரம் குறித்த ஒரு விமர்சனரீதியிலான பகுப்பாய்வான அது, பல மதிப்புடைய மற்றும் காலத்திற்கு உகந்த விமர்சனரீதியிலான ஆய்வை அளித்தது.

இருந்தபோதினும் ரஷ்ய புரட்சியின் விடயம் பேராசிரியர் ஹோப்ஸ்வாமின் அபாயகரமான பகுதியாக உள்ளது, இந்த துறையைப் பொறுத்த வரையில் அவரது மேதைமை அவரது அரசியலால் சமரசப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPGB) ஒரு உறுப்பினராக அவர் ரஷ்ய புரட்சியைக் குறித்தும் மற்றும் இருபதாம் நூற்றாண்டு குறித்தும் எழுதுவதை அவர் தவிர்த்திருந்ததாகவும், ஏனென்றால் அவரது கட்சியினது அரசியல் போக்கு அவரை முற்றிலும் உண்மையாக இருக்க தடுத்திருந்ததாகவும், ஹோப்ஸ்வாம் ஒருமுறை ஒப்புக் கொண்டுள்ளார். அவரை பொய்களைக் கூற நிர்பந்தித்த ஒரு கட்சியின் உறுப்பினராக இருக்க அவர் ஏன் விரும்பினார் என்ற கேள்விக்கு, அவர் ஒருபோதும் நம்பிக்கையளிக்கும் பதிலை அளிக்கவில்லை. அவர், 1900க்கு முந்தைய சம்பவங்களோடு அவரை தொடர்ந்து மட்டுப்படுத்தி வைத்திருந்தால், அவருக்கும் நன்றாக இருந்திருக்கும், அதனால் வரலாற்று படைப்புகளுக்கும் எந்த இழப்பும் ஏற்பட்டிருக்காது.

எதிரிடை உண்மையின் வரலாறு

"ரஷ்ய புரட்சியின் வரலாற்றை நம்மால் எழுத முடியுமா?" (Can We Write the History of the Russian Revolution?) என்ற தலைப்பில், 1996 டிசம்பரில் அவர் அளித்த ஒரு விரிவுரையே, ஹோப்ஸ்வாமின் நூலில் உள்ள மிக முக்கிய ஆவணமாகும்.

அந்த விரிவுரையை ஆரம்பிக்கையில், பேராசிரியர் ஹோப்ஸ்வாம், “இருபதாம் நூற்றாண்டு ரஷ்ய வரலாறைக் குறித்த மிகவும் சூடான விவாதங்கள், என்ன நடந்தது என்பதைக் குறித்து இருக்கவில்லை, மாறாக என்ன நடந்திருக்க சாத்தியக்கூறு இருந்தது என்பதைக் குறித்து இருந்தது," என்ற ஒரு மதிப்புடைய புள்ளியை குறிப்பிடுகிறார். இவ்விதத்தில் சோவியத் ஒன்றியம் குறித்த விவாதம், "எதிரிடை உண்மை" (Counterfactual) வரலாறு குறித்த பிரச்சினையை எழுப்புகிறது — அதாவது ஒரு குறிப்பிட்ட வரலாற்று சூழ்நிலையைக் கருத்தில் கொள்ளும்போது, என்ன நடக்கவில்லை என்பதைக் குறித்தோ, அல்லது என்ன நடந்திருக்க சாத்தியக்கூறு இருந்தது என்பதைக் குறித்தோ, நம்பகமான முடிவுகளை எட்டுவது எந்தளவுக்கு சாத்தியம் என்றவர் எழுதுகிறார். சோவியத் வரலாறு மீதான விவாதம் எண்ணிலடங்கா எதிரிடை உண்மை சம்பந்தப்பட்ட கேள்விகளை எழுப்புகின்றதென அவர் காணும்போது ஹோப்ஸ்வாம் சரியாகவே உள்ளார். அதைக் குறித்து எழுப்பப்பட்டிருக்கக் கூடிய எதிரிடை உண்மை சம்பந்தப்பட்ட அனைத்துக் கேள்விகளிலும் மிகமிக முக்கியமானது, ரஷ்யப் புரட்சி ஸ்ரானிலிச சர்வாதிகாரத்திற்கு இட்டுச் சென்றதைவிட குறிப்பிடத்தக்க வேறு பாதையில் சென்றிருக்க முடியுமா என்பதே ஆகும்.

லெனினது கொள்கைகளும் மற்றும் போல்ஷிவிக் கட்சியும், 1917இல் நிலவிய அரசியல் நிலைமையினது கடுமையான யதார்த்தங்களாக எதை உற்றுணர்ந்து இருந்தனவோ, அவற்றைப் பின்தொடர்ந்து சென்று ஒரு சக்திவாய்ந்த, தடுக்கவியலாத மக்கள் ஆதரவு அலையைக் கொண்டு, அவை அதிகாரத்திற்கு வந்தன என்று கருதும் புரட்சிக்கு அனுதாபமுள்ள ஒருவரைப் போல ஹோப்ஸ்வாம் எழுதுகின்ற போதினும், அவர் இறுதியில், புரட்சி உண்மையில் அது சென்றிருக்கவேண்டியதிலிருந்து குறிப்பிடத்தக்கரீதியில் வேறுபட்டு திரும்பி இருக்க முடியுமென வாதிடுவதற்கு, அங்கே எந்த அடித்தளமும் இல்லையென முடிக்கிறார்.

இரக்கமற்ற சோசலிச சித்தாந்தவாதிகளால் ரஷ்ய மக்கள் மீது திணிக்கப்பட்ட ஒரு வஞ்சக சூழ்ச்சியே அக்டோபர் புரட்சியென கருதும் ரிச்சார்ட் பைப்ஸிடமிருந்து மாறுபட்டு, ஹோப்ஸ்வாமோ புரட்சியில் செயல்பட்டிருந்த வரலாற்று நிகழ்ச்சிபோக்குகளை அங்கீகரிக்கிறார். ஆனால், அந்த வரலாற்று நிகழ்ச்சிபோக்கில் அகநிலையான காரணிகளான கட்சிகள், கொள்கைகள், அரசியல் தலைவர்கள், வெகுஜன நனவு, இதர பிறவை வகித்த பாத்திரத்தைக் குறித்து அவர் எந்தவித குறிப்பிடத்தக்க மதிப்பீட்டையும் அளிக்க தவறுகிறார். ஒரு பொறுப்புணர்ச்சியுள்ள வரலாற்றாளரான ஹோப்ஸ்வாமுக்கு, அகநிலை காரணிகள் இருக்கின்றன என்பதும், அவை சம்பவங்களின் விளைவுகளில் செல்வாக்கு செலுத்துகின்றன என்பதும் தெரியும். ஆனால் புறநிலை மற்றும் அகநிலை காரணிகளுக்கு இடையிலான உறவைக் குறித்து அவர் என்ன கூறுகிறாரோ, அது குழப்புவதாக, முன்னுக்குப் பின் முரணானதாக, துல்லியமற்றதாக, தெளிவற்றதாக உள்ளது. லெனின் மற்றும் ஸ்ராலினைக் குறித்து எழுதுகையில், “இந்த நபர்களின் தனிப்பட்ட தலையீடு இருந்திருக்காவிட்டால், ரஷ்ய புரட்சியின் வரலாறு நிச்சயமாக மிகவும் வேறுவிதமாக இருந்திருக்கும்."4 என்பதை அவர் ஒப்புக் கொள்கிறார். இருப்பினும் அந்த வரலாறு என்ன வேறுவிதமாக இருந்திருக்கும் என்பதை அவர் தீர்க்கமாக கூற தவறுகிறார்.

ரஷ்ய புரட்சியில் லெனின் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தார் என்பதை ஹோப்ஸ்வாம் மறுக்கவில்லை. ஆனால் லெனின் உள்ளடங்காத ஒரு வரலாற்று சூழலில் இருந்த எதிரிடை உண்மைகள் —மாற்றீடுகள்— குறித்து கருத்தில் எடுக்க, அவர் தயங்குகிறார். ஹோப்ஸ்வாம் எழுதுகிறார், 1917இல் லெனின் சுவிட்சர்லாந்தில் இருந்து ரஷ்யாவுக்கு திரும்பி இருக்காவிட்டால், விடயங்கள் மிகவும் வேறுவிதமாக திரும்பி இருக்கும், அல்லது வேறுவிதமாக திரும்பாமல் போயிருக்கும் என்பதைத் தவிர, அதற்கும் அதிகமாக, ஒருவரால் ஒன்றும் கூற முடியாது. “அதற்கு மேற்கொண்டு உங்களால் கற்பனையைத் தவிர, வேறொன்றையும் பெற முடியாது.”5

அவரது விரிவுரையின் மற்றொரு பத்தியில், ஸ்ராலினின் வரலாற்று பாத்திரம் குறித்து குறிப்பிடுகையில், ஹோப்ஸ்வாம் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

மிகவும் வேகமான தொழில்துறைமயமாக்கும் திட்டத்திற்காக சோவியத் அரசினது திட்டமிடலின் கீழ், அங்கே அதிகமாகவோ அல்லது குறைவாகவோ கொடுமைகள் நடந்ததென ஒருவர் பெரிதும் நம்பத்தகுந்தரீதியில் வாதிட முடியும், ஆனால் ஸ்ராலினை விட முற்றிலும் குறைந்த கொடூரமும் கடுமையும் கொண்ட யாரோ ஒருவரால் சோவியத் ஒன்றியம் தலைமை தாங்கப்பட்டிருந்தாலும் கூட, அப்போது அதுபோன்றவொரு திட்டத்தை சோவியத் ஒன்றியம் செய்யவேண்டியிருந்தால், எவ்வளவுதான் சிறப்பாக மில்லியன் கணக்கானவர்களுக்கு நேர்மையோடு பங்களித்திருந்தாலும், அதற்கு நிறைய கட்டாயப்படுத்தும் அணுகுமுறை தேவையாகத்தான் இருந்திருக்கும்.”6

அகநிலைக் கூறுபாடு எந்தவொரு தீர்க்கமான முக்கியத்துவமும் எடுக்கமுடியாது என்பதே அந்த இரண்டு பத்திகளின் அடியிலுள்ள கருத்தியலாக உள்ளது. ரஷ்ய புரட்சிக்கு இருந்த வரலாற்று மாற்றீடுகளைக் குறித்து அர்ப்பணிக்கப்பட்ட ஒரு விரிவுரையில், இவ்விதமான வாதம், ஸ்ராலினிசத்திற்கான முழு அனுதாபமாக மாறுகிறது. ஹோப்ஸ்வாம் பின்வருமாறு வாதிடுகிறார்: ஜேர்மனியில் ஏற்படும் புரட்சி, இதை லெனின் உடனடியாக நிகழக்கூடியதாக நம்பியதுடன், அது சோவியத் ரஷ்யாவைக் காப்பாற்ற முன்வரும் என்ற நம்பிக்கையில் தான், 1917இல் போல்ஷிவிக் கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. அதுவொரு பேரழிவுகரமான அரசியல் பிழையாகும். லெனினின் கருத்து என்னவாக இருந்ததோ அதற்கு நேரெதிராக, உலக போரின் முடிவில் ஜேர்மன் புரட்சிக்கான தீவிரமான சாத்தியக்கூறுகள் அங்கே இருக்கவில்லை என்கிறார். ஜேர்மன் தொழிலாள வர்க்கம் 1918இல் சமூக ஜனநாயக தலைவர்களால் காட்டிக்கொடுக்கப்பட்டது என்ற வாதத்தைப் பொறுத்த வரையில், ஹோப்ஸ்வாம் அதையொரு கட்டுக்கதையாக உதறிவிடுகிறார். “ஜேர்மனிய அக்டோபர் புரட்சியோ, அல்லது, அதுபோன்ற வேறெதுவுமோ, உண்மையாக அங்கே இருக்கவில்லை, ஆகவே அது காட்டிக்கொடுக்கப்படவும் இல்லை."7

இந்த முடிவு, 1923இல் ஜேர்மனியில் நிலவிய நிலைமைகளைக் குறித்து எடுத்துரைப்பதையும் விட, ஹோப்ஸ்வாமின் வரலாற்று அவநம்பிக்கைவாதம் (historical pessimism) குறித்து நமக்கு நிறைய எடுத்துரைக்கிறது. ஜேர்மனியில் நிலவிய உண்மையான அரசியல் நிலைமையைக் குறித்த எந்தவொரு ஆய்வையும் வழங்காமல், அந்நாட்டில் ஒரு புரட்சி வெற்றி அடைவதற்கு சாத்தியக்கூறு இருக்கவில்லையென சாதாரணமாக அவர் ஒதுக்கி விடுகிறார். "ஜேர்மன் அக்டோபர்" குறித்த மதிப்பார்ந்த ஆய்வுகள் அங்கே உள்ளன. அவை, 1923 இலையுதிர் காலத்தில், ஜேர்மனியில் நிலவிய பெரும் நெருக்கடியின் விளைபொருள், கம்யூனிஸ்ட் கட்சியின் நடவடிக்கைகளை சார்ந்திருந்தது என்பதை நம்பத்தகுந்தவிதத்தில் எடுத்துரைக்கின்றன. இந்த வாதம்தான், ஒரு திட்டமிட்ட கிளர்ச்சியைக் கைவிடுவதென்று கம்யூனிஸ்ட் கட்சி கடைசி நிமிடத்தில் எடுத்த தீர்மானத்தால் விளைந்த அரசியல் தோல்வியை அடுத்து, 1924இல் ட்ரொட்ஸ்கியால் முன்வைக்கப்பட்டது.8

தத்துவார்த்த மட்டத்தில், சம்பவங்களினது போக்கின் மீது அகநிலை அரசியலினது தாக்கம் குறித்த ஹோப்ஸ்வாமின் தவறானது, விதிப்படியே நடக்கும் (Fatalistic) என்ற ஒரு அசட்டைத்தனத்திலிருந்து வருகிறது. ஹோப்ஸ்வாமின் வாதத்தை தொகுத்தளிக்கும் ஒரு பத்தியை நான் மேற்கோளிட விரும்புவேன், அது இந்த ஒருதலைப்பட்சமான அணுகுமுறை எவ்வாறு ஸ்ராலினிசத்திற்கான ஒரு அனுதாபமாக மாறுகிறது என்பதைக் காட்டும். அவர் எழுதுகிறார், அக்டோபர் 1917இல் ஜேர்மன் புரட்சி வடிவத்திற்கு அங்கே வாய்ப்பில்லாது இருந்த நிலையில், ரஷ்ய புரட்சி, பின்தங்கிய மற்றும் விரைவிலேயே முற்றிலும் சிதைந்து போகக்கூடிய ஒரு நாட்டில், சோசலிசத்தைக் கட்டியெழுப்பும் இலக்கைக் கொண்டிருந்தது…" (அழுத்தம் சேர்க்கப்பட்டது).9 இவ்விதத்தில், போல்ஷிவிக்குகள் "வெளிப்படையாக சோசலிச புரட்சியின் யதார்த்தத்திற்கு முரணான வேலைத்திட்டத்துடன்" அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி இருந்தனர்..."10 இங்கே, போகிற போக்கில், அகநிலை காரணியின் தீர்க்கமான பாத்திரத்தை ஹோப்ஸ்வாம் ஒப்புக் கொள்வதன் மூலம், அவருடன் அவரே முரண்படுவதாக தெரிகிறது. அதாவது, அவர் பேரழிவுகரமான வரலாற்று விளைவுகளை லெனினது பிழையென்று சாட்டுகிறார். எவ்வளவு தான் அவரது நேர்மையான நம்பிக்கைகளும் மற்றும் மதிப்பார்ந்த அவரது நோக்கங்களும் இருந்தபோதினும், லெனின் அபாயகரமாக இறங்கி தோல்வியடைந்தார். இதன் விளைவே தனியொரு நாட்டில் சோசலிசம் என்பதாகும். “என்ன நடந்ததோ அதிலிருந்து தான் வரலாறு தொடங்கப்பட வேண்டும்," “எஞ்சியவை எல்லாம் ஊகங்களே" என்று அவர் அறிவிக்கிறார்.11

இதுவொரு சாதாரணமான கருத்துரு, “என்ன நிகழ்ந்தது" என்பதைப் பொறுத்த வரையில் —அன்றாட பத்திரிகைகளில் குறிப்பிடப்பட்டதைத் தவிர அதற்கு மேலதிகமாக ஒன்றுமில்லை என்று கொண்டால்— அது நிச்சயமாக வரலாற்று நிகழ்ச்சிப்போக்கில் ஒரு சிறிய பாகம் மட்டுமே ஆகும். அனைத்தையும் விட, வெறுமனே "என்ன நிகழ்ந்தது" என்பதை மட்டும் வரலாறு பரிசீலிக்கக் கூடாது, மாறாக ஏன் இந்த அல்லது அந்த விடயம் நிகழ்ந்தது அல்லது நிகழவில்லை என்பதையும், மற்றும் என்ன நிகழ சாத்தியக்கூறு இருந்தது என்பதையும் கருத்தில் எடுக்க வேண்டும் — இது மிகவும் முக்கியமானதும் கூட. ஒரு சம்பவத்தை — அதாவது "என்ன நிகழ்ந்தது" என்பதை — ஒருவர் கருத்தில் எடுக்கின்ற தருணம், அவர் நிகழ்ச்சிப்போக்கு மற்றும் சூழலையும் கருத்தில் எடுக்க நிர்பந்திக்கப்படுகிறார். ஆம், 1924இல் சோவியத் ஒன்றியம் "தனியொரு நாட்டில் சோசலிசம்" கொள்கையை ஏற்றது. அது "நிகழ்ந்தது". ஆனால் "தனியொரு நாட்டில் சோசலிசத்திற்கு" எதிர்ப்பும் கூடவே "நிகழ்ந்தது" ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கும் மற்றும் இடது எதிர்ப்புக்கும் இடையிலான மோதலும் "நிகழ்ந்தது", இதைக் குறித்து ஹோப்ஸ்வாம் ஒரு வார்த்தை கூட கூறவில்லையே. சோவியத் ஒன்றியத்தின் கொள்கைகளை வேறுபட்ட திசையில் திருப்ப முனைந்திருந்த எதிர்ப்பு சக்திகளை முக்கியமற்றதென, எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு பெரும்பிரயத்தனத்துடன் அவர் தவிர்க்கிறார், அல்லது புறக்கணிக்கிறார். “என்ன நிகழ்ந்தது” என்பதற்கான அவரது விளக்கம், ஒருதலைப்பட்சமாக, ஒரே கோணத்தில், நடைமுறைவாதமாக மற்றும் மிகவும் சிக்கலான வரலாற்று யதார்த்ததை இழிவார்ந்து எளிமைப்படுத்துகிறது என்பதைத் தவிர வேறொன்றையும் உள்ளடக்கி இல்லை. ஹோப்ஸ்வாமை பொறுத்த வரையில், “என்ன நிகழ்ந்தது" என்பதிலிருந்து தொடங்குவதென்பது, "யார் வென்றது" என்பதிலிருந்து சுலபமாக தொடங்கி, முடித்துக் கொள்வதை அர்த்தப்படுத்துகிறது.

ஆனால் வரலாற்று சம்பவங்களை மனச்சாட்சியுடன் வரைந்தளிப்பவராலும் கூட, “என்ன நிகழ்ந்தது" என்பதன் ஒரு சிறிய பகுதியை மட்டுமே கையாள முடியும். வரலாற்று ஆய்வும் எழுத்தும் எப்போதுமே தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட கோணத்தையும் மற்றும் சிறப்பாய்வு பகுதிகளையும் (specialization) உள்ளடக்கி இருக்கும். இருப்பினும், இந்த தேர்ந்தெடுக்கப்பட்டவை மற்றும் சிறப்பாய்வு பகுதிகள் என்பது குறைந்தபட்சம் வரலாற்று நிகழ்ச்சிபோக்கிற்கு உண்மையானதாக இருக்க வேண்டும். வரலாற்று நிகழ்ச்சிப்போக்கு எந்த பிரதான நூலிழைகளில் நெய்யப்பட்டதோ அதனோடு அது ஒருங்கிணைந்து வரையப்பட வேண்டும். அனைத்தையும் விட “என்ன நிகழ்ந்தது” என்பது, அதை நடைமுறைப்படுத்தியவர்களால் நிராகரிக்கப்பட்ட வேறு கொள்கைகளின் அடிப்படையில் கூட வரையறுக்கப்பட்டதாக இருக்கலாம். எவ்வாறிருந்த போதினும், ட்ரொட்ஸ்கியால் முன்வைக்கப்பட்ட கொள்கைகள் ஒருசமயம் கம்யூனிஸ்ட் கட்சியால் நிராகரிக்கப்பட்டு, அவர் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டு, நாடுகடத்தப்பட்டார், அவை நிஜமான வரலாற்று நலன்களுக்கு உரியதாக இல்லாதிருந்தன என்ற விதத்தில் ஹோப்ஸ்வாம் தொடர்கிறார்.

கல்வித்துறையாளர்களது நேர்த்தியான வசனநடைக்கு அடியில் உள்ளதை ஒருவர் ஆராய்கிறார் என்றால், அவர் சோர்வூட்டும் ஒரே திசையிலான வரலாற்று அணுகுமுறைக்குள் விடப்படுவார். “ஸ்ராலின் வென்றார், அவர் வென்றிருக்காவிட்டால் என்ன நிகழ்ந்திருக்க சாத்தியக்கூறு இருந்தது என்பதைப் பரிசீலிப்பதில் உண்மையில் அங்கே அர்த்தமே இல்லை," என்று ஹோப்ஸ்வாம் நமக்கு கூறுகிறார். “என்ன நிகழ்ந்தது” என்பதைக் கடந்து செல்வதென்பது, வரலாற்று நிகழ்ச்சிப்போக்கை அதன் திடமான சாத்தியக்கூறுகளின் முழுமையான பரப்பெல்லையில் ஆராய்வதென்பது வெறும் ஊகமாக, வரலாற்று யதார்த்திலிருந்து விலகுவதாக, ஏற்றுக்கொள்ளவியலாத தீர்மானங்கள் மற்றும் சுயதிருப்தி கொள்ளும் பிரமைகளை நோக்கிய ஒரு பாய்ச்சலாகும் என்றவர் கூறுகிறார்.

ஆனால் வரலாற்று நிகழ்ச்சிப்போக்கில் இருந்த எதிர்மறையான மற்றும் முரண்பட்ட கூறுபாடுகளை நாம் "என்ன நிகழ்ந்தது" என்பதில் உள்ளடக்கினால், “என்ன நிகழ்ந்தது” மற்றும் "என்ன நிகழவில்லை" என்பதற்கு இடையிலான இடைவெளி, ஹோப்ஸ்வாம் குறிப்பிடுவதைப் போல வெறும் ஊகத்தின் இடைவெளியாக இருக்காது. அனைத்தையும் விட, அது ஒரு முழுமைப்படுத்தலாக இருக்கும் மற்றும் வரலாற்று நிகழ்ச்சிப்போக்கின் மேலதிக முழு ஆய்வும் குறைந்தபட்சம் "என்ன நிகழவில்லை" என்பதன் ஒரு பகுதியை, "என்ன நிகழந்திருக்க சாத்தியக்கூறு இருந்தது" என்பதற்குள் கொண்டு வரக்கூடும்.

முடிவுகளை தீர்மானித்தவர்கள், முன்னால் இருந்த மாற்றீடுகள் குறித்த ஓர் ஆய்வின் அடிப்படையில், “என்ன நிகழந்திருக்க சாத்தியக்கூறு இருந்தது" என்பதைப் பரிசீலிப்பது, வெறுமனே வெற்று ஊகமல்ல. வரலாற்றைக் கருத்தில் எடுக்கையில் “என்ன நிகழந்திருக்க சாத்தியக்கூறு இருந்தது" என்பதை நாம் தவிர்த்து கொண்டால், பின் அங்கே வரலாற்றை ஆராய்வதில் உண்மையில் காரணமே இருக்காது. அனைத்தினும் மேலாக, வரலாறு நமக்கு ஏதோவொன்றை கற்றுத் தரவேண்டும்.

இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியின்போது சர்வதேச முதலாளித்துவ வர்க்கம் ஏதோ வெகுசில பேரழிவுகளை அனுபவிக்கவில்லை. அது அந்த அனுபவங்களை கவனமாக ஆராய்ந்தது, அவற்றிலிருந்து சிலவற்றைக் கற்றுக் கொண்டது. முதலாம் உலக போருக்குப் பின்னர் கையெழுத்தான சமாதான உடன்படிக்கைகளை ஜோன் மேனாட் கீன்ஸ் கடுமையாக விமர்சித்தார். வெர்சாய்லிருந்து ஊற்றெடுத்து வந்த பேரழிவுகளால் தண்டிக்கப்பட்ட முதலாளித்துவ வர்க்கம், அதன் இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய கொள்கைகளுக்கு கீன்ஸின் கருத்துருக்களை அடித்தளமாக ஆக்கிக் கொண்டது.

வரலாற்று மாற்றீடுகளை —அதாவது "கடைபிடிக்காத பாதையைக்"— கருத்தில் எடுக்கையில், ஒரு வரம்பிற்கு அப்பால், அது ஏற்றுக் கொள்ள முடியாத ஊகமாக மாறிவிடுகிறது என்பதும் உண்மைதான். மேலும் ஒரே அணுகுமுறை சார்ந்த நிலைப்பாட்டிலிருந்து மாற்றீடுகளை பரிசீலிப்பதென்பது, உண்மையில் என்ன நிகழ்ந்ததோ அதிலிருந்து கணிசமாக வேறுபட்ட ஒரு வடிவத்தை ஏற்று, சாத்தியமான வரலாற்று பரிணாமத்தைக் குறிப்பிடத்தக்க அளவிற்குக் மாற்றி இருக்கக்கூடிய ஏனைய காரணிகளைக் குறைமதிப்பீடு செய்யக்கூடும், அல்லது புறக்கணித்துவிடக்கூடும். மார்க்சிஸ்டுகள் வரலாற்றை ஆய்வு செய்வதற்கு, அத்தகைய முறைதவறிய ஊக அணுகுமுறைகளைக் குறித்து, உள்ளவாறே மதிப்பார்ந்த விமர்சனங்களை செய்துள்ளனர்.

வரலாற்றில் புறநிலை மற்றும் அகநிலை காரணிகள்

ஹோப்ஸ்வாம் செய்திருப்பது ஒருவிதமான எச்சரிக்கையூட்டல் மற்றும் செல்லுபடியாகும் நிராகரிப்பு வகைப்பட்டதல்ல. மாறாக, ரஷ்ய புரட்சி மற்றும் சோவியத் ஒன்றியத்தின் வரலாறை அவர் பரிசீலிக்கையில், அவர் அதிதீவிர-நியதிவாத, அதீத-புறநிலைவாத மற்றும் விதிப்படியே நடக்கும் கோட்பாட்டு அணுகுமுறையை ஏற்கிறார்: “என்ன நிகழ்ந்ததோ” அதற்கு நம்பத்தகுந்த மாற்றீடுகள் அங்கே இருக்கவில்லை என்கிறார். சமூகப் புரட்சியின் நிகழ்ச்சிபோக்கை ஒரு இயற்கை நிகழ்ச்சிபோக்குடன் சாதாரணமாக அடையாளப்படுத்தி பார்க்கும் அடிப்படையில் இதை அவர் நியாயப்படுத்துகிறார்.

ஆனால் இந்த கட்டத்தில் நாம் ஊகங்களை விடுத்து, புரட்சியின்போது ரஷ்யாவில் இருந்த உண்மையான சூழ்நிலைக்குத் திரும்ப வேண்டும். அடிமட்டத்திலிருந்து மாபெரும் வெகுஜன புரட்சிகள் வெடித்து வருவதென்பது —மேலும், வரலாற்றில் அதுபோன்ற ஒரு புரட்சிக்கு மிகவும் பொருத்தமான சான்று அனேகமாக 1917 ரஷ்யாவாக இருந்தது— சில அர்த்தத்தில் "இயற்கை நிகழ்வுப்போக்காகும்." குறிப்பாக, ரஷ்யாவில் இருந்ததைப் போல, அரசின் மேற்கட்டுமானமும் தேசிய அமைப்புகளும் உண்மையில் சிதைந்திருக்கையில், அவை பூகம்பங்கள் மற்றும் பிரமாண்ட வெள்ளப்பெருக்குகள் போல உள்ளன. அவை பரந்துபட்ட விதத்தில் கட்டுப்படுத்த முடியாதவையாக உள்ளன.12

ஒருபுறம் பூகம்பங்கள் மற்றும் வெள்ளப் பெருக்குகள் மற்றும் மறுபுறம் புரட்சிகள் இவற்றிற்கு இடையே அங்கே ஓர் அடிப்படை வேறுபாடு உள்ளது. நில அடுக்குகளின் நகர்வோ அல்லது ஆறுகளோ சிந்திக்கக்கூடியவை அல்ல. பூமியைப் புரட்டிப்போட தீர்மானிப்பதும் இல்லை அல்லது ஒரு ஆறு அதன் நீர்தேக்கங்கள் கரைபுரண்டு ஓடினால் ஏற்படும் விளைவுகளை எடைபோடுவதும் இல்லை. ஆனால் சமூக புரட்சிகளில், நனவு ஒரு பிரமாண்டமான காரணியாக உள்ளது.13 புரட்சியானது சிந்திக்கக்கூடிய மனிதர்களின் நடவடிக்கையை உள்ளடக்கியுள்ளது. அதனைத் தயாரிப்பதற்காக தனது ஒட்டுமொத்த வாழ்வையும் அர்பணித்துள்ள புரட்சியாளர் தொடங்கி, வாழ்க்கை நிலைமைகள் சகிக்க முடியாததாகி விட்டதால், நிலவும் ஒழுங்கமைப்புக்கு எதிராக தான் போராடியே ஆக வேண்டுமென முடிவெடுக்கும் சாதாரண தொழிலாளர் வரையில், சமூகப் புரட்சி என்பது ஒரு நனவுபூர்வமான நடவடிக்கையாக உள்ளது. ஒரு சமூகம் வெடித்தெழுவதற்கு அடியில் தங்கியுள்ள “தூய" புறநிலை (“purely” objective), அதாவது பொருளாதார, தொழில்நுட்ப, இதரபிற சக்திகள் எவ்வளவு தான் பலம் வாய்ந்ததாக இருப்பினும் — மேலும் சமூகத்தில் அங்கே "தூய புறநிலையான" நிகழ்வுகள் என்று ஒன்றும் இருப்பதில்லை, ஏனென்றால் ஒவ்வொரு நிகழ்விலும் மனித முயற்சிகளின் நடவடிக்கைகள் சம்பந்தப்பட்டுள்ளன. ஒரு புரட்சிகர சூழல் என்பது புறநிலை தூண்டுதல்கள் மனித சிந்தனையுள் நுழைந்து, சிக்கலான அரசியல் சிந்தனை வடிவங்களாக மாற்றம் பெற்றுள்ளன என்பதையே எடுத்துக்காட்டுகிறது. சமூகப் புரட்சிகளை பல்வேறு பேரழிவுகரமான இயற்கை நிகழ்வுப்போக்குகளுடன் ஒப்பிடுவது, அது ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குட்பட்ட அர்த்தத்தில் மதிப்புடையதாக இருப்பினும், பெரிதும் தவறான உவமைப்பாடுகளில் ஒன்றாக உள்ளது. இயற்கை செயல்களுக்கும் மனிதனின் நடவடிக்கைகளுக்கும் இடையிலான வேறுபாட்டைக் குறிப்பிடாவிட்டால், இந்த உவமைகள் வரலாற்று நிகழ்ச்சிப்போக்குகளை கட்டுக்கதைகளாக்க, திரித்துக்கூற மற்றும் பொய்மைப்படுத்த மட்டுமே சேவை செய்யும்.

ஹோப்ஸ்வாம் எழுதுகிறார்:

போல்ஷிவிக்குகளின் அல்லது வேறு எவர் ஒருவருடையதாகவேனும் இருக்கட்டும், அவர்களது இலட்சியங்கள், நோக்கங்கள், அவர்களது நீண்டகால மூலோபாயம், மற்றும் அவர்களின் நடவடிக்கையைக் குறித்த ஏனைய மார்க்சிச விமர்சனங்களின் அடிப்படையில் ரஷ்ய புரட்சியைக் குறித்து சிந்திப்பதை நாம் நிறுத்திக் கொள்ள வேண்டும்.14

ஹோப்ஸ்வாமின் அறிவுறுத்தல்களை ஒருவர் ஏற்றுக் கொண்டால், ரஷ்ய புரட்சியைப் புரிந்து கொள்வது ஒருபுறம் இருக்கட்டும், அதைக் குறித்த ஒரு பொருத்தமான விளக்கத்தையுமே கூட வழங்குவது சாத்தியமில்லாமல் போகும். இருபதாம் நூற்றாண்டின் வரலாற்று அபிவிருத்தியில் உள்ளடங்கி இருக்கும் மிகவும் முக்கிய அம்சத்தை: அதாவது வரலாறை உருவாக்குவதில் நனவின் முன்னுதாரணமற்ற பாத்திரத்தை, துல்லியமாக புரிந்து கொள்வதில் அவரது இயலாமையை அவை எடுத்துக்காட்டுகின்றன. பரந்துபட்ட சோசலிச கட்சிகளின் தோற்றமே ஒரு புதிய வரலாற்று நிகழ்வுபோக்கை வெளிப்படுத்தியது, அது இரண்டு ஒன்றோடொன்று இணைந்த நிகழ்ச்சிப்போக்குகளான அதாவது, தொழிலாள வர்க்கத்தின் எழுச்சி மற்றும் மார்க்சிசத்தின் அபிவிருத்தியின் ஊடாக மட்டுமே சாத்தியமாகி இருந்தது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் கூட, சோசலிசப் புரட்சியின் வேலைத்திட்டம் அரசியல் கட்சிகளது பதாகையின் கீழ் பொறிக்கப்பட்டிருந்தது. மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸால் புத்திஜீவிதரீதியில் ஆயுதபாணியாக்கப்பட்ட, சமூக அபிவிருத்தியின் விதிகளுக்குள் நுண்மையாக ஆராய்ந்தறிந்த, புதிய சோசலிச கட்சிகளின் தலைவர்கள், முதலாளித்துவ-எதிர்ப்பு புரட்சிக்கு தொழிலாள வர்க்கத்தை தயார் செய்ய தொடங்கினர், அதில் அந்த வேலைத்திட்டம், தீர்க்கமான மற்றும் முன்னணி பாத்திரம் வகிக்கும் இடத்தைப் பெற்றது.

விஞ்ஞானபூர்வ அடித்தளத்தில் சமூக அபிவிருத்தியின் விதிகளை நுண்மையாக ஆராய்ந்தறிந்து பெற்ற பகுப்பாய்வுகள், முன்னோக்குகள், மூலோபாயங்கள் மற்றும் அரசியல் அமைப்புகளின் வேலைத்திட்டங்கள் — அவ்விதத்தில் அவை அரசியல் சம்பவங்கள் கட்டவிழத் தொடங்கியபோது, அதுவரையில் சாத்தியமில்லாதிருந்த அவற்றின் முக்கியத்துவம் மற்றும் தாக்கங்களை சமகாலத்தியத்திற்கு ஏற்ப விளங்கப்படுத்தி கொண்டு — அவை வரலாற்று நிகழ்போக்கில் ஒட்டுமொத்தமாக முன்னொருபோதும் இல்லாத பாத்திரத்தை ஏற்றன. வரலாறு வெறுமனே நடந்து முடிந்துவிடவில்லை. அது முன்கணிக்கப்பட்டது, அதற்காக தயாரிப்பு செய்யப்பட்டது மற்றும், அதுவரையில் சாத்தியமில்லாது இருந்தவை முடிந்தமட்டிற்கும் நனவுபூர்வமாக திசை திருப்பப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் அல்லது இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களில் அரசியல் நடவடிக்கைக்குள் இறங்கிய மார்க்சிஸ்டுகளின் தலைமுறை, சமூகப்பொருளாதார முரண்பாடுகளை அடையாளங்கண்டு, பகுத்தாராய்ந்து, அவற்றின் விளைவுகளாக புரட்சியை எதிர்நோக்கியது. அவர்கள் அவர்களது சொந்த அரசியல் வேலையை, அல்லது அவர்களது எதிராளிகளது அரசியல் வேலையை, புரட்சிக்கான இறுதி விளைவுகள் என்ற அர்த்தத்தில் உள்ளீர்த்துக் கொண்டனர். வெவ்வேறு கொள்கைகளினால் சேவைசெய்யப்படும் வர்க்க நலன்களை அம்பலப்படுத்துவதிலும் மற்றும் அரசியல் போக்குகளது "வர்க்க இயல்பை" அடையாளம் காண்பதிலும், மார்க்சிச விவாதங்களில் ஏன் அந்தளவுக்கு மேலோங்கிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்பதை இந்த உள்ளடக்கத்தில் மட்டுந்தான் புரிந்து கொள்ள முடியும்.

ரஷ்ய புரட்சி, 1917க்கு முந்தைய ஆண்டுகளில் ரஷ்யாவில், இந்த அல்லது அந்த வழியில் செயல்பட்டு வந்த அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் போக்குகளின் இலட்சியங்கள், உள்நோக்கங்கள், மூலோபாயங்கள் மற்றும் விமர்சனங்களின் புறநிலை முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியது. ஏப்ரல் மற்றும் அக்டோபர் 1917க்கு இடையே பிரதான அரசியல் நபர்கள் என்ன செய்தனரோ, தீர்க்கமான போராட்டங்களில் அவர்கள் எங்கே அணிவகுத்திருந்தனரோ, அவை அதற்கு முந்தைய இரண்டு தசாப்தங்களின் போது நடந்திருந்த பிரமாண்ட தத்துவார்த்த மற்றும் அரசியல் போராட்டங்களிலேயே முன்கணிக்கப்பட்டதாகும்.

மிக கவனமாக தயாரிக்கப்பட்ட திட்டங்கள் வழங்கும் தேவையற்ற ஒன்றாக, புரட்சியை ஒரு கட்டுப்படுத்த முடியாத பேரிடராக வர்ணிப்பது ஏற்புடையதாக தோன்றலாம். ஆனால் நனவை மிகத்தேவையற்ற ஒன்றாக எடுத்துக்கொண்டால், ஒரு புரட்சிகர சகாப்தத்தின் குழப்பங்களுக்கு மத்தியில் தத்துவார்த்த முன்நோக்குப்பார்வையின் கூறுபாடு முக்கியமற்றதென்றால், பின் 1917க்கு முன்னரும் மற்றும் அதன்போதும் இரண்டு காலகட்டத்திலும், மற்றும் குறிப்பாக அதற்குப் பின்னரும், எவ்வாறு லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் பணிகளை ஒருவரால் மதிப்பிட முடியும்?

1905 புரட்சிக்குப் பின்னர், ரஷ்ய சமூக ஜனநாயகத்தின் பல்வேறு கன்னைகள், தொழிலாள வர்க்கத்தின் கடமைகளை அந்த நிகழ்வினது அனுபவத்தின் வெளிச்சத்தில் வரையறுக்க முனைந்தன. அவை அளித்த பதில்கள், அடுத்தடுத்து வந்த பிந்தைய நிகழ்வுகளில் அவற்றின் சொந்த பாத்திரத்தை மட்டும் தீர்மானிக்கவில்லை, மாறாக ரஷ்ய புரட்சியின் எதிர்கால போக்கையுமே கூட தீர்மானித்தன. “லெனினின் எதை இலக்கில் வைத்திருந்தாரோ —இறுதி ஆய்வுகளில் லெனின் கட்சிக்குள் எடுத்த பாதையுமே கூட— பொருத்தமற்றதாக இருந்தது," என்று ஹோப்ஸ்வாம் வலியுறுத்துகிறார்.15

ஆனால் லெனினின் "ஏப்ரல் ஆய்வுரைகளின்" அடிப்படையில், 1917இன் இளவேனிற்காலத்தில் போல்ஷிவிக் கட்சியின் மறுதகவமைப்பு இல்லாது போயிருந்தால் —அதாவது, லியோன் ட்ரொட்ஸ்கியால் முன்னதாக முறைப்படுத்தப்பட்ட மூலோபாய போக்கை ஏற்றமை— அங்கே போல்ஷிவிக்குகள் அதிகாரத்தைக் கைப்பற்றி இருக்கவே முடிந்திருக்காது என்ற எளிமையான உண்மையால், அவரது அந்த வாதம் பொய்யாகிப் போகிறது. உண்மையில் புரட்சிகள் பலம் வாய்ந்த நிகழ்வுகளாகும்; ஆனால் நனவின் விளைபொருள்களான கொள்கையும் மற்றும் வேலைத்திட்டமும், அவற்றிற்குள் ஒரு தீர்க்கமான பாத்திரம் வகிக்கின்றன.

புரட்சிகர நிகழ்ச்சிப்போக்கில் நனவு வகிக்கும் பாத்திரத்தை ஹோப்ஸ்வாம் குறைத்துக்காட்ட முயல்கையில், அதை மறுக்கும் புள்ளி வரை செல்கிறார். அவர் எழுதுகிறார், “உடனடியாக உயிர் பிழைப்பதற்காக எடுக்கும் முடிவுகளுக்கும், உடனடி பேரழிவுகரமான ஆபத்தைக் கொண்ட முடிவுகளுக்கும் இடையே அன்றாடம் எதை தேர்ந்தெடுப்பது என்பதற்கு அப்பாற்பட்டு,” லெனினிடம் "எந்த மூலோபாயமோ அல்லது முன்னோக்கோ இருந்திருக்காது. இப்போதே முடிவுகளை எடுத்தாக வேண்டும், இல்லையென்றால் அங்கே புரட்சி முடிவுக்கு வந்துவிடும், மேற்கொண்டு விளைவுகளைப் பரிசீலிக்க முடியாதுபோகும் என்றால், புரட்சியால் சாத்தியமாக கூடிய நீண்டகால விளைவுகளுக்காக யாரால் முடிவுகளை எடுக்க முடியும்?"16

மேலெழும் சம்பவங்களுக்கேற்ப, நடைமுறைவாதரீதியில் மற்றும் உள்ளுணர்வு சார்ந்து எதிர்நடவடிக்கை எடுக்கும், ஓர் மோசமான யதார்த்த அரசியல்வாதியாக லெனினை இவ்வாறு சித்தரிப்பது, ஹோப்ஸ்வாமால் முன்வைக்கப்படும் வரையறைகளுக்கு உள்ளேயே கூட எந்த அர்த்தத்தையும் அளிப்பதாக இல்லை. புரட்சியை பாதுகாக்க ஒரு பரந்த மூலோபாய கருத்துரு அவசியமானது, மற்றும் அதன் வெற்றியானது ரஷ்ய சமூகத்தின் வர்க்க கட்டுமானம் மற்றும் இயக்கவியலுக்குள் ஒரு நனவுபூர்வமான உட்பார்வையைச் சார்ந்தது. லெனினும் ட்ரொட்ஸ்கியும், முற்றிலும் வெளிப்படையாக, புரட்சி மற்றும் உள்நாட்டு போர் காலத்தில் அதிக வேலைச்சுமையில் இருந்த மனிதர்கள். ஆனால் அவர்கள் சிந்திப்பதை நிறுத்திவிடவில்லை. அவர்களது எழுத்துக்களைக் குறித்த ஓர் ஆய்வில் இருந்த (அனைத்தினும் மேலாக, கம்யூனிஸ்ட் அகிலத்தின் மாநாடுகளுக்காக தயாரிக்கப்பட்ட ட்ரொட்ஸ்கியின் மகத்தான அறிக்கைகள் மற்றும் உரைகளில் இருந்த) அவர்களது மூலோபாய கண்ணோட்டத்தின் ஆழமும் அகலமும் இப்போதும் மலைப்பூட்டுகின்றன. புரட்சி மற்றும் உள்நாட்டுப் போரின் பெரும் சுழலில் செயல்பட்டு வந்த அனைத்து அரசியல் சக்திகளிலும், போல்ஷிவிக்குகளால் மட்டுமே, ஒரு பரந்துபட்ட மற்றும் கலாச்சாரரீதியில் வேறுபட்ட நாட்டின் பத்து மில்லியன் கணக்கான மக்களுக்கும் ஓர் ஐக்கியப்பட்ட பதாகையை வழங்கி, ஒரு மூலோபாய வழியை உருவாக்க முடிந்தது. E.H. கார் (Carr) பொருத்தமாக குறிப்பிட்டதைப் போல, உள்நாட்டுப் போரில் போல்ஷிவிக்களின் வெற்றி, எதிர்மறையான அழிவுகர குணாம்சத்தில் இருக்கவில்லை, மாறாக முற்றிலுமாக லெனினின் மேதைமை ஆழமாக ஆக்கத்திறனுடன் இருந்தது என்ற உண்மையைச் சார்ந்திருந்தது.

அரசியல் நனவினது கூறுபாடுகளின் முக்கியத்துவத்தை ஹோப்ஸ்வாம் சிறுமைப்படுத்துவது, மாறாக போல்ஷிவிக்கள் எவ்வாறு அதிகாரத்திற்கு வந்தார்கள் என்பதையும், மற்றும் உள்நாட்டு போரில் அவர்கள் ஏன் வென்றார்கள் என்பதையும் புரிந்துக் கொள்ள முடியாததாக ஆக்குகிறது. அரசியல் கட்சிகள் வெறுமனே வரலாற்றின் எரிமலை வெடிப்பின் தயவில் உள்ளன என்றால், பின் போல்ஷிவிக்குகளது வெற்றி ஒன்று அவர்களது அதிர்ஷ்டத்தால் ஏற்பட்டது அல்லது அவர்களது எதிராளிகளின் துரதிர்ஷ்டங்களால் ஏற்பட்டது என்றாகும். இது நீங்கள் பார்க்கும் விதத்தில் தங்கியுள்ளது.

ஹோப்ஸ்வாமின் விதிப்படியே நடக்கும் கோட்பாட்டு

புரட்சிக்குப் பிந்தைய காலகட்டத்திற்கு பொருத்திப் பார்த்தால், ஹோப்ஸ்வாமின் நிலைப்பாடு ஸ்ராலினிசத்திற்கு ஓர் அனுதாபமாக சேவை செய்கிறது. கட்டுப்படுத்த முடியாத வரலாற்று சக்திகளால் அங்கும் இங்குமாக அலைக்கப்பட்டு, அது அவசரமான முற்தயாரிப்பற்ற நடவடிக்கைகளுடன் மட்டுமே விடையிறுக்க முடிந்தது என்பதால், போல்ஷிவிசத்தின் தலைவிதி 1921இல் முடிவு செய்யப்பட்டது என்கிறார். ஹோப்ஸ்வாம் எழுதுவதைப் போல, “இந்த முறை அதன் எதிர்கால பாதை கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ தீர்மானிக்கப்பட்டு இருந்தது..."17 அதே தொகுப்பில் காணப்படும் மற்றொரு கட்டுரையில், ஹோப்ஸ்வாம் இன்னும் மேலதிக அழுத்தத்துடன் இந்த கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகிறார்: “சோவியத் ஒன்றியம் உண்மையில் என்னவாக ஆகி இருந்ததோ, அதற்கு முற்றிலும் மாறுபட்ட விதத்தில், அதன் நீண்டகால எதிர்காலத்தை எதிர்நோக்கிய எந்தவொரு நிஜமான முன்மதிப்பீடையும் துரதிருஷ்டவசமாக என்னால் சிந்திக்க முடியவில்லை."18

இவ்விதத்தில் சோவியத் வரலாற்று போக்கு குறைவான மூர்க்கத்தனத்தின் வழியோடு சேர்ந்தே அபிவிருத்தி அடைந்திருந்தாலும் கூட, வரலாற்று நிகழ்ச்சிப்போக்கின் விளைவு, அடிப்படையில் 1921ஆம் ஆண்டில் முடிவு செய்யப்பட்டது. முந்தைய அபிவிருத்திப்போக்கால் கையாளப்பட்டிருந்த வகையில், ஸ்ராலின் அதீத வன்முறை இருந்தபோதிலும், சர்வசாதரணமாய் கையாண்டார். அங்கே ஸ்ராலினிசத்திற்கு ஒரு மாற்றீடு இல்லாது இருந்திருக்கலாம் என்ற வழக்கமான பிற்போக்கு ஆய்வுரைகளின் "இடது" மாற்று வகையீடுகளிடம் ஹோப்ஸ்வாம் நம்மை விட்டுவிடுகிறார். ஸ்ராலினிச சர்வாதிகாரமே மார்க்சிசத்தினது தவிர்க்கவியலாத விளைபொருள் என்பதில் அவர் உடன்படவில்லை. மாறாக, 1917க்குப் பின்னர் சோவியத் ஒன்றியம் எதிர்கொண்ட நிலைமைகளிலிருந்து தவிர்க்கவியலாமலும் தடுக்கவியலாமலுமே ஸ்ராலினிசம் எழுந்தது என்றும், உண்மையில் என்ன நடந்ததோ அதற்கு ஒரு மாற்றீட்டைக் குறித்து பேசுவதென்பது வெறுமனே ஊகத்தில் இறங்குவதாக உள்ளது என்றும், புறநிலைமைகள் ஒரு மாற்றீட்டை அனுமதிக்கவில்லை என்றும் அவர் வாதிடுகிறார். ஆட்சியின் கொள்கைகள் ஓரளவுக்கு கடுமை குறைந்ததாக இருந்திருந்தால் அது அவ்விதத்தில் நடந்திருக்காது என்பது வெறுமனே ஒரு வித்தியாசமான கோணமாக மட்டுமே இருக்கக்கூடும் என்கிறார்.

இந்த மதிப்பீட்டுடன் நமக்கிருக்கும் கருத்துவேறுபாடுகள் என்ன? அனைத்திற்கும் மேலாக, ட்ரொட்ஸ்கிஸ்டுகள் போல்ஷிவிக் கட்சியினதும் மற்றும் சோவியத் அரசினதும் ஸ்ராலினிச சீரழிவு, இறுதி ஆய்வில், சாதகமற்ற நிலைமைகளின் விளைபொருளாக இருந்தது என்றே எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளனர். ரஷ்யாவின் வரலாற்று பின்தங்கிய நிலைமை; தடையில்லா ஏழு ஆண்டுகால உலக போரால் உருவாக்கப்பட்ட பொருளாதார சீரழிவு; புரட்சி மற்றும் உள்நாட்டுப் போர்; முதலாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பிய தொழிலாள வர்க்கம், அதுவும் குறிப்பாக ஜேர்மன் தொழிலாள வர்க்கம் கண்ட தோல்விகளின் விளைவால் சோவியத் ஒன்றியம் நீண்டகாலமாக தனிமைப்படுத்தப்பட்டு இருந்தமை என, பிரதானமாக, இவை அனைத்தும் இருந்தன.

இருப்பினும், ஸ்ராலினிசத்தின் சடவாத அடித்தளங்களை உணர்வதற்கும் மற்றும் அந்த அடித்தளங்களிலிருந்து அங்கே ஒரேயொரு அரசியல் விளைவு மட்டுந்தான் இருந்திருக்க முடியுமென அறிவிப்பதற்கும் இடையே — அதாவது சோவியத் ஒன்றியத்தின் மாற்றமுடியாத அதிகாரத்துவ சீரழிவும் மற்றும் இறுதியில் 1991இல் அதன் பொறிவும் — அங்கே கண்டிக்கத்தக்க வேறுபாடு உள்ளது. சோவியத் வரலாறு குறித்த இந்த கருத்துருவிலிருந்து ஒரு சிறிய விடயம் தவறுகிறது: அது என்னவென்றால், அரசியல், வேலைத்திட்டம், போக்குகளின் போராட்டம், நனவு ஆகியவை வகித்த பாத்திரமும் மற்றும் வரலாற்று நிகழ்ச்சிப்போக்கிற்குள், கூடவோ அல்லது குறையவோ அரசியல் உட்பார்வையால் ஊக்குவிக்கப்பட்டு தனிநபர்களால் எடுக்கப்பட்ட முடிவுகளின் முக்கியத்துவமும் ஆகும். வரலாறு முற்றிலும் அருவமான மற்றும் அதீத-நியதிவாத (super-deterministic) நிகழ்ச்சிப்போக்கிற்குள் மாற்றப்பட்டுள்ளது: அதாவது அனைத்தும் குருட்டுத்தனமான மற்றும் கட்டுப்படுத்த முடியாத சக்திகளால் தீர்மானிக்கப்படுகிறது என்பதாக மாற்றிவிடப்படுகிறது. வரலாறு போல்ஷிவிக்களை அதிகாரத்திற்குள் கொண்டு வந்து, பின்னர் அவர்களை, அதிகாரத்திலிருந்து வெளியேற்றவில்லை என்றாலும், குறைந்தபட்சம் ஒரு முட்டுச்சந்துக்குள் கொண்டு வந்ததாக காட்டப்படுகிறது.

"போல்ஷிவிக்களின் அல்லது வேறு எவரினதாகவேனும் இருக்கட்டும், இலட்சியங்கள், நோக்கங்கள், அவர்களது நீண்டகால மூலோபாயம், மற்றும் அவர்களின் நடவடிக்கையைக் குறித்த ஏனைய மார்க்சிச விமர்சனங்களின் அடிப்படையில் ரஷ்ய புரட்சியைக் குறித்து சிந்திப்பதை நாம் நிறுத்திக் கொள்ள வேண்டும்"19 என்று ஹோப்ஸ்வாம் ஏற்கனவே நமக்கு தெரிவித்திருக்கிறார். உண்மையில் இது, 1920களில் போல்ஷிவிக் கட்சிக்குள் நடத்தப்பட்ட அரசியல் போராட்டங்களின் மீது கவனம் செலுத்துவதில் அங்கே எந்த பிரயோசனமும் இல்லை என்பதையே அர்த்தப்படுத்துகிறது. ட்ரொட்ஸ்கி ஸ்ராலினிசத்தைக் குறித்து என்ன எழுதினார், சோவியத் கொள்கை மீது அவர் வைத்த விமர்சனங்கள், ஸ்ராலினிச தலைமையில் இருந்த மூலோபாயத்திற்கும் அவர் முன்னெடுத்த நீண்டகால மூலோபாயத்திற்கும் இடையிலான முரண்பாடு, ஹோப்ஸ்வாமை பொறுத்த வரையில், இவையெல்லாம் முக்கியமற்றுப் போகின்றன. சோவியத் ஒன்றியத்தின் தலைவிதி ஏற்கனவே 1921இல் கல்லில் செதுக்கப்பட்டு விட்டது, — யார் அதிகாரத்தில் இருந்தார்கள் என்பதை எல்லாம் கருத்தில் எடுக்க வேண்டியதில்லை— எந்தவித அடிப்படை மாற்றங்களையும் செய்வதற்கு கம்யூனிச ஆட்சிக்கு அங்கே ஒன்றும் இருக்கவில்லை. இதற்கு முரண்பட்ட வாதங்கள் எல்லாம் உயிரைப் பிடித்து போராடிய ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் அர்த்தமற்ற ஊகங்கள் என்பதற்கு கூடுதலாக ஒன்றுமில்லையென ஹோப்ஸ்வாம் நம்புகிறார் போலும் என ஒருவர் ஊகிக்கலாம். அதன்காரணத்தினால்தான் அவரது உரை, ஸ்ராலினிசத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கி மற்றும் இடது எதிர்ப்பின் போராட்டத்தை முற்றிலுமாக குறிப்பிடவில்லை என்பது வியப்பூட்டவில்லை. உண்மையில், இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றில் அக்டோபர் புரட்சியின் இடமென்ன என்பதை மையக்கருவாக கொண்ட கட்டுரைகள் மற்றும் விரிவுரைகளின் அந்த 300-பக்க நூலில், ட்ரொட்ஸ்கியின் பெயர் ஒரேயொரு முறை மட்டுமே காணக்கிடைக்கிறது.

ஹோப்ஸ்வாம், ஸ்ராலினிசத்திற்கு மார்க்சிசமே பொறுப்பாகிறது என்பதைப் பிடித்துக் கொண்டிருக்கவில்லை. ஆனால் அக்டோபர் புரட்சியின் நம்பத்தகுந்த ஒரே விளைபொருள், ஸ்ராலினிச சர்வாதிகாரமாக இருந்தது என்று கொண்டால், போல்ஷிவிக் அதிகாரத்தைக் கைப்பற்றியமை தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு சேவை செய்தது என்பதை மற்றும் அது வரலாற்றுரீதியிலான முன்னேற்றத்தின் விளைவு என்பதை விடயமாக்குவது கடினமாகிவிடும். பின், அக்டோபர் 1917 ஒரு பயங்கரமான தவறு என்றும், அந்த எழுச்சியின் எதிர்ப்பாளரான காமனேவ், லெனினை விட, போல்ஷிவிக் கட்சியின் கருத்துரையாடல்களில் மேலோங்கி இருந்திருந்தால் அனேகமாக அது எவ்வளவோ சிறப்பாக இருந்திருக்கும் என்ற முடிவுக்குத்தான் ஒருவர் விடப்படுவார் — அதைத்தான் ஹோப்ஸ்வாம் பலமாக எடுத்துக்காட்டுகிறார்.

ஹோப்ஸ்வாமின் இந்த வாதம் அக்டோபர் புரட்சியின் அரசியல் நியாயத்தன்மையை மட்டும் கேள்விக்குள் இழுக்கவில்லை; ஒட்டுமொத்த சோசலிச திட்டத்தின் செல்லுபடிதன்மையையே இருண்ட மேகத்தின் கீழ் கொண்டு வருகிறது. எந்தவொரு சமூகப் புரட்சியும், அதன் இறுதி வெற்றியின் உத்தரவாதத்துடன் மிகவும் பரிபூரண நிலைமைகளின் கீழ் தான் ஏற்படுமென கற்பனை செய்வதும் கூட கடினமாகும். அதன் இயல்பிலேயே — ஒரு பாரிய குழப்பமில்லாமல் இல்லாமல் மற்றும், நிலவும் அமைப்புமுறையின் அரசியல் பொருளாதார இயங்குமுறைகள் உடையாமல் புரட்சியை நினைத்தும் கூடப் பார்க்க முடியாது என்ற நிலையில்— புரட்சி என்பது முன்தெரிந்திராத ஒன்றுக்குள் பாய்வதாக உள்ளது. அந்த சூழல் அபாயத்தால் நிரம்பி இருக்கும். சூழ்நிலையை மேதைமைக் கொள்வதற்கான சாத்தியக்கூறின் மீதும், அதனை தொடர்ந்த நிகழ்வுகளின் ஆதிக்கம்செலுத்த முடியும் என்றும் மற்றும் அந்நிகழ்வை புரட்சிகர வேலைதிட்டத்தின் நோக்கங்களுக்கு அதை அடிபணிய செய்ய முடியுமென்றும் நம்பிக்கை கொள்ளாமல், ஒரு புரட்சிகர கிளர்ச்சிக்காக தொழிலாள வர்க்கத்திற்கு அழைப்பு விடுப்பதென்பது, ஒரு அரசியல் அமைப்பை பொறுத்த வரையில், குற்றகரமாக பொறுப்புணர்ச்சியற்றதாக இல்லாவிடினும், அசட்டு தைரியமாக இருந்திருக்கும்.

எவ்வாறிருந்த போதினும், புரட்சிகர கட்சிகள் வெறுமனே புறநிலைமைகளின் தயவில் இருந்தன என்பதும்; ஒரு வரலாற்று நிகழ்ச்சிப்போக்கு அந்த கட்சிகளுக்கு என்ன கட்டளைகள் கொடுத்தாலும், அவை எவ்வளவு தான் கொடூரமாக இருந்தாலும், அவற்றை நிறைவேற்ற நிர்பந்தித்த அந்த வரலாற்று நிகழ்ச்சிப்போக்கில் அவை வெறும் வேறுவழியற்ற கருவிகளாக இருந்தன என்பதுமே, அக்டோபர் 1917 மற்றும் அதற்குப் பிந்தைய காலத்திய படிப்பினையாகும் என்றால், அந்தளவுக்கு நம்பிக்கை வைக்க அங்கே என்ன நியாயமான அடித்தளம் உள்ளது?

இவ்வாறு ஹோப்ஸ்வாம், “புறநிலைமைகள் அவரை செய்யுமாறு ஆக்கியது” என ஸ்ராலினுக்கு வக்காலத்தை மட்டும் வாங்கவில்லை, மாறாக புரட்சிக்கு எதிரான தொல்சீர் தாராளவாத முதலாளித்துவ ஜனநாயக வாதத்தை, சமூக மாற்றத்திற்கான ஒரு கருவியாகவும் நிலைநாட்டுகிறார். இவ்வாறு ஹோப்ஸ்வாம் “புறநிலைமைகள் அவரை செய்யுமாறு ஆக்கியது” என ஸ்ராலினுக்கு வக்காலத்தை மட்டும் வாங்கவில்லை, புரட்சியை ஒரு சமூக மாற்றத்தின் கருவி எனும் தொல்சீர் தாராளவாத முதலாளித்துவ ஜனநாயக வாதத்தையும் கூட நிரூபணம் செய்கிறார். ஆனால் ஹோப்ஸ்வாமின் நிலைப்பாடு, முதலாவதாக, ஒரு தவறான அணுகுமுறையின் மீது அடித்தளம் கொண்டுள்ளது, மற்றும் இரண்டாவதாக உண்மையைக் கையாள்வதில் —இங்கே நான் நேர்மையின்மை என்ற வார்த்தையைத் தவிர்க்க விரும்புகிறேன்— அதற்கு பதிலாக சிரத்தையின்மையின் மீது அடித்தளம் கொண்டுள்ளது. அவரது விதிப்படியே நடக்கும் கோட்பாட்டிற்கு வரலாற்று சடவாத அணுகுமுறை உடன் எந்த சம்பந்தமும் இல்லை. ஹோப்ஸ்வாம் புறநிலைமைகளை ஏதோ அணிவகுத்துவரும் ஓர் ஒழுங்குமுறைகளின் தொகுப்பைப் போலவும், அது கட்சிகள் மற்றும் நபர்களுக்கு எந்த வாய்ப்பும் அளிப்பதில்லை என்பதாகவும், ஆனால் அது கூறியபடி செய்ய வேண்டியவர்களாக அவர்கள் இருப்பதைப் போலவும் காட்ட முயல்கிறார். அதுபோன்றவொரு கருத்துரு, நிகழ்வுகளை அதன் உச்சத்தில் எளிமைப்படுத்துவதாகும்.

புறநிலைமைகள் பரந்துபட்ட விடையிறுப்புகளை உருவாக்கின என்ற உண்மையை, 1921க்குப் பின்னர் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் உண்டான பிளவுகள் நிரூபிக்கின்றன. கட்சியின் தலைவர்கள் பிரச்சினைகளுக்கு எவ்வாறு விடையிறுத்தார்கள் என்பதும், மற்றும் அத்தகைய விடையிறுப்புகளைச் சுற்றி அபிவிருத்தி அடைந்த போக்குகளும், புறநிலைமைகளினது வெவ்வேறு மதிப்பீடுகளை மட்டும் பிரதிபலிக்கவில்லை, மாறாக பரஸ்பரம் விரோதமாக இருந்த வெவ்வேறு சமூக சக்திகளின் உறவையுமே கூட பிரதிபலித்தன.

"புறநிலைமைகளுக்கு" ஸ்ராலினின் விடையிறுப்பு, அதிகரித்துவந்த அரசு அதிகாரத்துவத்தின் சடவாத நலன்களை எடுத்துக்காட்டுவதாகவும் மற்றும் சமூக நிலைப்பாட்டை பிரதிபலிப்பதாகவும், மேலும் மேலும் வெளிப்படையாகியது. அந்த அரசு அதிகாரத்துவவாதிகள் நகர்ப்புற கீழ்நிலை மத்தியத்தர வர்க்கத்திலிருந்து அணிதிரட்டப்பட்டவர்களாவர். மறுபுறம், ட்ரொட்ஸ்கி மற்றும் இடது எதிர்ப்பின் கொள்கைகள், தொழில்துறை பாட்டாளி வர்க்கத்தின் நலன்களை உயர்ந்த நனவு வடிவத்தில் வெளிப்படுத்திக் காட்டின. உள்நாட்டுப் போரால் தோற்றுவிக்கப்பட்ட பொருளாதார மற்றும் சமூக இடப்பெயர்வால் இந்த சமூக சக்தி, சோவியத் ஒன்றியத்தினது மார்க்சிச அரசியலின் அடிப்படை அங்கமாக விளங்கிய இந்த சமூக சக்தி, எந்தளவுக்கு பலவீனம் அடைந்ததோ, அந்தளவுக்கு சோசலிச கொள்கைகளின் அபிவிருத்தியும் மற்றும் நடைமுறைப்படுத்துவதற்கான நிலைமைகளும் சாதகமின்றி வளர்ந்தன.

ஆனால் அத்தகைய "சாதகமற்ற நிலைமைகளை", கட்டுப்படுத்த முடியாத வானிலை நிகழ்வுப்போக்கிற்கு ஒப்பிட்டு பரிசீலிக்கக் கூடாது, மாறாக திடமான அரசியல் அர்த்தத்தில் —அதாவது எதிர்விரோத சமூக சக்திகளினது போராட்டத்தின் வெளிப்பாடாக பரிசீலிக்க வேண்டும். தொழில்துறை பாட்டாளி வர்க்கத்தின் நிலைமை —உள்நாட்டுப் போரால் சிதைக்கப்பட்டு— பலவீனப்பட்டிருந்த நிலையில், தொழிலாள வர்க்கத்தின் மார்க்சிச தலைவர்கள், கட்சிக்குள்ளும் மற்றும் அரசு அதிகாரத்துவத்திற்குள் இருந்த அந்த பிரிவுகளிடமிருந்து இரக்கமற்ற மற்றும் வன்முறையான எதிர்ப்பை அதிகளவில் எதிர்கொண்டனர், அத்தகைய பிரிவுகள், அவற்றின் சடவாத நலன்களுக்கு இடது எதிர்ப்பினால் முன்னெடுக்கப்பட்ட கொள்கைகளை அச்சுறுத்தலாக கருதின.

இது தான் 1920கள் முழுவதிலும் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் அகிலத்திற்குள் நடத்தப்பட்ட அரசியல் போராட்டத்தின் சாராம்சமாக இருந்தது.

இடது எதிர்ப்பு மேலோங்கி இருந்தால் என்ன நடந்திருக்கும்?

பேராசிரியர் ஹோப்ஸ்வாம் எதை ஏற்றுக்கொள்ள முடியாத ஊகமாகவும், பொருத்தமான வரலாற்று ஆய்வின் எல்லைக்கு அப்பாற்பட்டதாகவும் கருதுவாரோ, அத்தகைய தொடச்சியான கருத்துக்களை இவ்விடத்தில் நான் குறிப்பிடுவேன்:

முதலாவதாக, ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இருந்த போராட்டத்தில் இடது எதிர்ப்பு மேலோங்கி இருந்தால், சர்வதேச சோசலிசத்திற்கான நிலைமை கணக்கவிடவியலாத அளவில் பலப்பட்டிருக்கும். மிக மிக குறைந்தபட்சமாக, 1930களின் எதிர்ப்புரட்சிகர பேரழிவுகள் —அனைத்தினும் மேலாக, ஜேர்மன் பாசிசத்தின் வெற்றி— அனேகமாக தவிர்க்கப்பட்டிருக்கும்.

இரண்டாவதாக, எதிர்ப்பின் வெற்றியுடன் சேர்ந்து சோவியத் பொருளாதாரமும் அரசியல் வாழ்வின் ஒட்டுமொத்த குணாம்சமுமே ஒப்பிடவியலாத அளவில் மிகவும் முற்போக்கான பாதையில் அபிவிருத்தி அடைந்திருக்கும். 1930களின் சர்வாதிகார காட்டுமிராண்டித்தனத்தை நோக்கி சோவியத் ஒன்றியம் கீழ்நோக்கி சுழன்றமை கட்டுப்படுத்த முடியாத "புறநிலைமைகளால்" முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டவை என்ற வாதம் சுலபமாக செல்லுபடியாகாமல் போயிருக்கும். சோசலிசப் பாதையில் சோவியத் ஒன்றியத்தின் அபிவிருத்திக்கு "புறநிலைமைகள்" அதிகளவில் சாதகமற்று இருந்தன என்ற உண்மையே, எல்லாவற்றிற்கும் மேலாக பிறிதொருவகையில், ட்ரொட்ஸ்கி மற்றும் இடது எதிர்ப்பினது தோல்வியின் அரசியல் விளைபயனாகவும் இருந்தது.

மூன்றாவதாக, இந்த புள்ளி முதலிரண்டு புள்ளிகளிலிருந்து வருகிறது, ட்ரொட்ஸ்கி மற்றும் இடது எதிர்ப்பு இயக்கத்தின் தோல்விதான், சோவியத் ஒன்றியமும், சர்வதேச தொழிலாள வர்க்கமும் மற்றும் சோசலிச இயக்கமும் வீழ்ச்சியுறுவதற்கு இட்டுச் சென்ற, அடுத்தடுத்த மொத்த துயரங்களுக்கும் அரங்கம் அமைத்தது, அதன் நிழலுக்கடியில்தான் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்னுமொரு புள்ளியையும் நான் சேர்க்க விரும்புகிறேன்: இருபதாம் நூற்றாண்டின் சோசலிச தலைவிதி பற்றிய எந்த விவாதமும், ட்ரொட்ஸ்கியினது தோல்வியைக் குறித்த விளைவுகளை, முக்கிய கவனத்துடன், கருத்தில் எடுக்காவிடில், அது தீவிரமாக கருத்தில் எடுக்க தகுதியுடையதாகவே இருக்காது. ஸ்ராலினின் கீழ் "என்ன நிகழ்ந்தது" என்பதை மட்டுமல்ல; மாறாக ட்ரொட்ஸ்கி மேலோங்கி இருந்தால் "என்ன நிகழ்ந்திருக்க சாத்தியக்கூறு இருந்தது" என்பதையும் பரிசீலிப்பது அவசியமானதாகும்.

இது சாத்தியமற்ற ஒன்றைத் துணிச்சலாக ஊகிக்கும் ஒரு முயற்சியா? அத்தகைய ஒரு துணிச்சலான முயற்சி புத்திஜீவிதரீதியில் தகுதியானதா என்று கேட்பது நியாயமானதே என்பதை ஒருவர் ஏற்றுக் கொள்ள வேண்டும். எதிரிடை உண்மைகளைக் (Counterfactuals) கையாள்கையில், நாம் நம்மைநாமே நியாயப்படுத்த முடியாமல் ஊகப்படுத்தும் மற்றும் முழுமையாக இஷ்டம் போல சிந்தனைக்கு உட்படுத்தும், ஓர் அபாயம் நிச்சயமாக அங்கே இருக்கிறதுதான். வரலாற்று அபிவிருத்தியின் மாற்றீட்டு பாதைகளை அனுமானிக்கையில், உண்மையிலேயே அக்காலக்கட்டத்தில் இருந்த சாத்தியக்கூறுகளது பரப்பெல்லையை நாம் கடந்துவிடாமல் இருக்க வேண்டும். மேலும் வரலாற்றுரீதியில்-உருவான குறிப்பிட்ட நிலைமைகளின் விளைபொருளாகவும் மற்றும் வெளிப்பாடாகவும் விளங்கும் மனிதரின் அகநிலையான நடவடிக்கையானது, புறநிலைரீதியாக அளிக்கப்பட்ட அந்த சூழலில் எந்தளவுக்கு செல்வாக்கு செலுத்தி இருக்கலாம் மற்றும் அதை மாற்றி இருக்கலாம் என்ற வரம்புகளைக் குறித்து — அக்குறிப்பிட்ட சமூகத்தின் பொருளாதார அடித்தளங்கள், தொழில்நுட்ப மட்டம் மற்றும் வர்க்க கட்டுமானத்தைக் குறித்த முழுமையான ஆய்வு மற்றும் புரிதலின் அடிப்படையில் — ஓர் உறுதியான புரிதலை நாம் கொண்டிருக்க வேண்டும்.

இரண்டு வரலாற்று காலப்பிறழ்வுகள்: 1529இல் இங்கிலாந்தில் மற்றும் 1794இல் பிரான்சில்

உதாரணமாக, எட்டாம் ஹென்றியின் முதல் மனைவியான, அறகோன் கத்தரின் ஓர் ஆண் வாரிசை பெற்றிருந்தால் என்ன நடந்திருக்குமென, ருடோர் காலத்திய ஒரு வரலாற்றாளர், -அது பற்றி கவனமெடுக்க விரும்பியிருந்தால்- பரிசீலிக்கலாம். அது இங்கிலாந்து நிகழ்வுகளில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும்? குறிப்பிட்ட மட்டத்திற்கு அறிவார்ந்த அனுமானங்கள் சாத்தியமே, ஆனால் மிக அதிகமான ஊகத்தன்மையைக் கொண்ட ஒரு பகுதிக்குள் நம்மைநாமே தெளிவாக காண்பதற்கு முன்னர், அதிலிருந்து விலகி தொடர முடிந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். கத்தரின், ஒரு ஆண் குழந்தையை பெற்றிருந்தால், அந்த குழந்தையும் சிறுவயதில் உயிர்பிழைத்து இருந்திருந்தால், அப்பெண்மணி சிற்றின்ப உணர்வு மிகுந்த அவரது கணவரை விவாகரத்து வழக்கில் எதிர்கொண்டிருக்காமல் இருந்திருக்கலாம் என்பதும் அனேகமாக உண்மையே. ஆகவே ஹென்றியின் மிஞ்சிய ஆட்சி காலம், குறைந்தபட்சம் அவரது தனிப்பட்ட வாழ்க்கை அடிப்படையில், அது ஒளிமயமாக இருந்ததைப் போலில்லாமல் போயிருக்க சாத்தியக்கூறு உள்ளது. ஆனால் எவ்விதத்திலும் அது நிச்சயமானதல்ல.

ஆனால் நாம் அங்கிருந்து என்ன முடிவுக்கு வரப்போகிறோம் என்றால், இங்கிலாந்து ஓர் அரச திருமண வாழ்வு நெருக்கடியைத் தவிர்த்திருந்த நிலையில், ஒரு கத்தோலிக்க நாடாக இருந்திருக்குமா? அது நிச்சயமாக பெரிதும் ஊகமான மற்றும் கேள்விக்குரிய கருத்தாக இருக்கும். அந்த விவகாரத்தின் மீதான நெருக்கடி ஒரு அரசியல் நெருக்கடியை மேலே கொண்டு வந்தது, அது ஐரோப்பாவெங்கிலும் பரவியிருந்த சமூகப் பொருளாதார நிகழ்ச்சிப்போக்குகளில் ஆழமாக வேரூன்றி இருந்தது. ஏதோவொரு வழக்கத்திற்கு மாறானது என்றில்லாமல் ஒரு வாரிசுரிமை நெருக்கடியாக தொடங்கிய அது, ஏன் புரட்சிகர விளைவுகளுடன் தேவாலயத்திற்கும் அரசுக்கும் இடையிலான ஒரு போராட்டமாக திரும்பத் தொடங்கியது என்பதே, துல்லியமாக, எட்டாம் ஹென்றியின் ஆட்சியை ஆய்வு செய்கையில் உண்மையிலேயே பதிலளிக்க வேண்டிய சுவாரசியமான மற்றும் சிக்கலான கேள்வியாக உள்ளது. இந்த பின்னணி நிலவுகையில் தங்களின் நடவடிக்கைகளின் வரலாற்று பரிமாணங்கள் மற்றும் விளைவுகளைக் குறித்து பெரிதும் அறிந்திராத தனிநபர்களது நோக்கங்கள், மொத்தத்தில் தீர்க்கமானகரமானதாக இருந்ததாக தெரியவில்லை.

நாம் பல நூற்றாண்டுகள் முன்னோக்கி, பிரெஞ்சு புரட்சி சகாப்தத்திற்கு நகர்ந்தாலும் கூட, வரலாற்று பிரபல்யங்கள் வரலாற்று சக்திகளால் அப்போது அவர்கள் மீது சுமத்தப்பட்ட சுமையை ஒரு மட்டுப்பட்ட நனவுடன் மட்டுமே கையாண்டு வந்துள்ளனர். ஆகவே, ரொபேஸ்பியரின் வரலாற்று நனவுக்கும், எட்டாம் ஹென்றியினது அல்லது ஒலிவர் குரோம்வெல்லின் வரலாற்று நனவுக்கும் இடையிலும் கூட பிரமாண்ட வேறுபாடுகள் உள்ளது என்பது உண்மையே. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியின்போது, சமூக சக்திகளின் நனவுபூர்வமான விழிப்புணர்வும் மற்றும் அவற்றின் மற்றும் நலன்களும், அதற்கு ஒரு நூற்றாண்டுக்கு அல்லது இரண்டு நூற்றாண்டுக்கு முன்னர் இருந்ததை விடவும் நிச்சயமாக அதிக கூர்மையாக இருந்தது. ஆனால் வரலாற்று தேவைப்பாட்டின் பலம் இருந்தபோதினும், உரிய விஞ்ஞானபூர்வ சிந்தனையின் வடிவங்களாக —அதாவது நவீன முதலாளித்துவத்தின் அபிவிருத்தி மற்றும் தொழிலாள வர்க்கத்தின் தோற்றத்துடன் மட்டுமே சாத்தியமான ஒரு வெற்றி அளவுக்கு— மாற்றம் அடைந்திருக்கவில்லை. இவ்விதத்தில், பிரெஞ்சு புரட்சியின் ஒவ்வொரு கட்டத்திலும், அதன் முன்னணி பிரபல்யங்களின் மேதைமை இருந்தபோதினும் கூட, சம்பவங்கள் வரலாற்று தேவைப்பாட்டின் பாரியளவிலான பலத்தால் வடிவம் பெற்றன.

விடயங்கள் வேறுவிதத்தில் வேலை செய்திருக்க முடியாது என்பதை இது அர்த்தப்படுத்தாது. இந்த சம்பவங்களின் போக்கை மாற்றி இருக்கலாம் என ஒருவர் எத்தனையோ "எதிரிடை உண்மைகளை" அனுமானிக்க முடியும். ஆனால் சமூக அபிவிருத்தி மட்டம் மற்றும் வரலாற்று அபிவிருத்தியின் அடியிலிருக்கும் விதிகளை ஓரளவிற்கே மனிதனால் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும் நிலைமையில், அந்த சம்பவங்களின் பாதையில் ஏற்பட்ட மாற்றங்கள், அரசியல் பாத்திரங்களால் அவர்களின் நடவடிக்கையின் வரலாற்று விளைவுகளைக் குறித்து ஒரு தெளிவான புரிதலின் அணுகுமுறையோடு அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்காது.

1794இல் பிரான்சில், வரலாற்று அபிவிருத்தியின் போக்கை நனவுபூர்வமாக தீர்மானிக்க —அதாவது, சமூகப் பொருளாதார நிகழ்ச்சிப்போக்குகளின் தர்க்கத்தை குறித்த ஒரு புரிதலுடன் செயல்பட— அங்கே புறநிலை வழிவகையோ, அல்லது, அதற்கொத்த அளவில் அதிலிருந்து பெருக்கெடுத்த விஞ்ஞானபூர்வ நுண்ணறிவோ இருந்திருக்கவில்லை. ஐயத்திற்கிடமின்றி, பொதுமக்கள் பாதுகாப்பு குழுவின் (Committee of Public Safety) உறுப்பினர்கள், மொத்தத்தில் புரட்சியில் செயலூக்கத்துடன் இருந்த சமூக சக்திகளைக் குறித்து நுட்பமாக உணராமலேயே, நனவுபூர்வமாக செயல்பட்டார்கள். சான்றாக, முதலாளித்துவ வர்க்கத்தின் பிரிவுகளுக்குள் டான்ரோனுக்கு பலம்வாய்ந்த ஆதரவாளர்கள் இருந்ததை ரொபேஸ்பியர் அறிந்திருந்தார். தனிச்சலுகைப் பெற்றிருந்தவர்களுடன் (Indulgents) மோதுவதிலிருந்து வரக்கூடிய அபாயத்தை அவர் உணர்ந்தார். ஆனால், நவீனகால அர்த்தத்தில், ரொபேஸ்பியர் அவரது நடவடிக்கைகளின் வரலாற்று விளைவுகளைக் குறித்து அறிந்திருக்கவில்லை. வரலாற்று சடவாத அபிவிருத்திக்கான முன்நிபந்தனைகள் அப்போது முதிர்ந்திருக்கவில்லை, மேலும் வரலாற்று நடவடிக்கையை உந்திய நிஜமான சக்திகள் அப்போதும் உயிர்ப்புடன் இருந்ததுடன், பல்வேறு கட்டுக்கதை சித்தாந்த வடிவங்களில் (அதாவது பகுத்தறிவு, மனிதனின் உரிமை, ஒழுக்கம், சகோதரத்துவம் என) பொருள்விளக்கம் அளித்து வந்தன.

வரலாற்று சுய-நனவின் எழுச்சி

இவ்வாறு, பிரெஞ்சு புரட்சியின் மாற்று வரலாற்று விளைவுகளைக் குறித்த எந்தவொரு விவாதமும், உயர்ந்தளவில் ஓர் ஊகத்தன்மையின் புனைவுகோளை நோக்கி வேகமாக தள்ளப்படுகின்றன. இந்தளவுக்கு முன்னணி நபர்கள் அவர்களது சொந்த நடவடிக்கைகளின் வரலாற்று விளைவுகளைக் குறித்து முன்னறிய முடியாமல் இருந்ததால், ஜாகோபின்களின் ஒரு கன்னை மற்றொன்றை வெற்றி கொள்ளாமல் இருந்திருந்தால், எவ்வாறு வரலாற்றுப் போக்கு மாறியிருக்கும் என துல்லியமாக குறிப்பிடுவது ஒருபுறம் இருக்கட்டும், அது அதற்கடுத்து வந்த வரலாற்று போக்கை அடிப்படையில் மாற்றி இருக்கும் என்றே கூட நம்மால் எந்தவொரு அளவு நிச்சயத்தன்மையுடனும் கூற முடியாது.

மார்க்சிசத்தின் வருகையுடன், மனிதனுக்கும் அவனது சொந்த வரலாறுக்குமான தொடர்பு ஓர் ஆழ்ந்த மாற்றத்திற்கு உள்ளானது. மனிதன் அவனது சிந்தனையையும் சமூகப்பொருளாதார வரையறைகளில் அவனது நடவடிக்கைகளையும் நனவுபூர்வமாக விளங்கப்படுத்துவதற்கும், மற்றும், அவ்விதத்தில், சங்கிலி தொடர் போன்ற வரலாற்று காரண காரியத்திற்குள் அவனது சொந்த நடவடிக்கையை துல்லியமாக கண்டறிவதற்கும் தகைமையை பெற்றான்.

இதனால் தான், ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கம்யூனிச அகிலத்திற்குள் நடந்த போராட்டத்தில் மாற்றீட்டின் விளைவுகளைப் பரிசீலிப்பது ஒரு பயனற்ற ஊகிக்கும் முயற்சி அல்ல என்றாகிறது. பிரான்சில் 130 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததைப் போல, அரசியல் கன்னைகள் திரைமறைவில் குழு சேர்ந்து கொண்டும், பெரிதும் கருத்துவாத வரையறைகளில் அவற்றின் நடவடிக்கைகளை நியாயப்படுத்திக் கொண்டும், வரையறுத்துக் கொண்டும், அவற்றால் புரிந்துகொள்ள முடியாத சமூகப்பொருளாதார சக்திகளால் அவை நகர்த்தப்பட்டதைப் போன்ற நிலைமை அப்போது ரஷ்யாவில் இல்லை.

அதற்கு மாறாக, லியோன் ட்ரொட்ஸ்கியும் இடது எதிர்ப்பும், சோவியத் ஒன்றியமும் சர்வதேச சோசலிச இயக்கமும் எதிர்கொண்ட பிரச்சினைகளின் நீண்டகால வரலாற்று விளைவுகளை பற்றிய அசாதாரண புரிதலுடன் நுழைந்தனர். சோவியத் ஒன்றியத்தின் உள்நாட்டு மற்றும் சர்வதேச முரண்பாடுகளைக் குறித்த ஆய்வுகள் இரண்டிலும் மற்றும் ஸ்ராலினிஸ்டுகளுக்கு அவர் விடுத்த எச்சரிக்கைகளிலும், ட்ரொட்ஸ்கி அதிகாரத்துவத்தினது வளர்ச்சி கண்டுவந்த ஆளுமையின் மற்றும் சோவியத் தலைமையினது தவறான கொள்கைகளின் இறுதி விளைவுகளைக் குறித்து எந்த சந்தேகத்தையும் விட்டுவைக்கவில்லை.

டிசம்பர் 1923ஆம் ஆண்டிலேயே ட்ரொட்ஸ்கி, “அதிகாரத்துவமயமாக்கல், சீரழிவின் ஆபத்தை உள்ளடக்கியுள்ளதா அல்லது இல்லையா?" என்று கேள்வி எழுப்பினார். “அதை மறுக்கும் எவரும் குருடர்களாகத்தான் இருக்க முடியும்."20

இது, எழுச்சி அடைந்து வந்த ஸ்ராலினிச ஆட்சிக்கு எதிரான போராட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் எழுதப்பட்டது. அதற்கு ஏற்கனவே ஆரம்ப கட்டத்திலேயே, ட்ரொட்ஸ்கி அந்த சாத்தியக்கூறை எழுப்பி இருந்தார், கம்யூனிஸ்ட் கட்சியில் "அதிகரித்துவரும் சீரழிவு" “எதிர்ப்புரட்சி வெற்றி காணக்கூடிய… அரசியல் பாதைகளில்" ஒன்றாக மாறிவிடக்கூடும்.21

அந்த அபாயம் எவ்வளவுதான் தீவிரமாக இருந்தபோதினும், ஒரு மார்க்சிச ஆய்வை அடிப்படையாக கொண்ட நனவான அரசியல் முன்னோக்கிய பார்வை, அந்த நெருக்கடியை கடந்து வருவதற்கான சாத்தியக்கூறை கட்சிக்கு வழங்கியதாக ட்ரொட்ஸ்கி வாதிட்டார்:

இப்புனைவுகோள்களை நேரடியாகவே நாம் கூறுகிறோம் எனில், அது நிச்சயமாக அவற்றை நாம் வரலாற்றுரீதியில் சாத்தியமானவை என கருதுவதால் அல்ல (அதற்கு முரண்பட்ட விதத்தில், அவை சாத்தியமாவது மிகவும் குறைவாகவே இருந்தது), மாறாக அந்த கேள்வியை அதுபோன்ற வழியில் முன்வைப்பது, இன்னும் அதிகமாக சரியான மற்றும் அனைத்து-தரப்பிலிருந்தும் வரலாற்று நிலைநோக்கை சாத்தியமாக்கி, அதன் விளைவாக, அனைத்து சாத்தியமான முன்கூட்டிய நடவடிக்கைகளையும் ஏற்க செய்யும் என்பதனால் ஆகும். புதிய போக்குகளும் புதிய அபாயங்களும் அரும்பும் கட்டத்தில் இருக்கும்போதே, அவற்றை பாகுபடுத்திப் பார்ப்பது, உள்ளீர்த்துக் கொள்வதில்தான் மார்க்சிஸ்டுகளாகிய நமது மேன்மை உள்ளது.22

இடது எதிர்ப்பு வெற்றிபெற்றிருந்தால், சோவியத்தின் மற்றும் உலகின் வரலாற்று போக்கை கணிசமாக மாற்றி இருக்குமா என்பதைப் பரிசீலிக்கையில், சோவியத் ஒன்றியத்தின் தலைவிதியைத் தீர்மானிப்பதில், அடிப்படை முக்கியத்துவம் வகிக்கும் மூன்று பிரச்சினைகளை திடமாக கையாள நாம் பரிந்துரைக்கிறோம்: 1) சோவியத்தின் மற்றும் உட்கட்சியின் ஜனநாயகம், 2) பொருளாதார கொள்கை 3) சர்வதேச கொள்கை.

ஏதோவொரு வடிவத்தில் —மார்க்சிசத்தின் "அழிவார்ந்த குறைபாடுகள்" என்றோ அல்லது போல்ஷிவிசம் சாத்தியமே இல்லாத புறநிலைமைகளை எதிர்கொண்டிருந்தது என்றோ, கணக்கில் எடுத்துக் கொண்டு— சோவியத் ஒன்றியம் ஆரம்பத்திலிருந்தே அழிவுக்குள்ளாக இருந்தது என வலியுறுத்தும், அரசியல் மற்றும் புத்திஜீவித போக்குகளில் எதுவுமே தோற்றப்பாட்டளவில் இடது எதிர்ப்பால் முன்னெடுக்கப்பட்ட கொள்கைகளை திடமாக ஆராய ஒருபோதும் முயலவில்லை. ட்ரொட்ஸ்கி இன்றைய நாள் வரையில், சோவியத் வரலாறில் "பெரிதும் குறிப்பிடப்படாதவராகவே" இருந்து வருகிறார். அரிதாக எங்காவது அவர் குறிப்பிடப்பட்ட சந்தர்ப்பங்களிலும், வழக்கம்போல அது அவரது எழுத்துக்களை திரித்து பிரதிநிதித்துவம் செய்வதற்காகவும், பொய்மைப்படுத்துவதற்காகவும் உள்ளது.

மௌனமாக இருப்பதாகட்டும் அல்லது பொய்களாகட்டும் இரண்டுமே, ஸ்ராலினிசத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் போராட்டத்தினது வரலாற்று முக்கியத்துவத்தை அவற்றின் சொந்த வழிகளில் மதிப்பளிப்பதை பிரதிநிதித்துவம் செய்கின்றன. சோவியத் ஒன்றியத்தின் அழிவு தவிர்க்கவியலாததாக இருந்தது என்றும், சோசலிசப் புரட்சி அதன் இயல்பிலேயே ஒரு கற்பனாவாத முயற்சி என்றும், அவ்விதத்தில், அக்டோபர் புரட்சி ரஷ்ய தொழிலாள வர்க்கத்தை தப்பிக்க முடியாத ஒரு முட்டுச் சந்துக்குள் இட்டுச் சென்றது என்றும், மார்க்சிசம் தவிர்க்கவியலாமல் சர்வாதிகாரத்திற்கு இட்டுச் செல்கிறது என்றும், இன்னும் இதர இது போன்று கூறப்படும் அனைத்து வாதங்களும், இடது எதிர்ப்பால் விட்டுச் செல்லப்பட்ட வரலாற்று ஆவணங்களால் தவறென நிரூபிக்கப்பட்டுள்ளன. அது முன்வைத்த கொள்கைகளின் அடிப்படையில், அது ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு ஒரு நிலைத்திருக்கக்கூடிய, தத்துவார்த்தரீதியில் கூர்மையான மற்றும் சக்தி வாய்ந்த அரசியல் எதிர்ப்பைத் தெளிவாக பிரதிநிதித்துவம் செய்தது.

உட்கட்சி ஜனநாயகம்

நான் மேலே குறிப்பிட்ட அந்த மூன்று பிரச்சினைகள் குறித்து இப்போது நாம் பார்ப்போம். அனைத்திற்கும் முதலாவதாக, சோவியத் மற்றும் உட்கட்சி ஜனநாயகம் பற்றிய கேள்வி: நான் ஏற்கனவே மேற்கோளிட்ட 1923ஆம் ஆண்டு ஆவணத்தால் மெய்பிக்கப்பட்டுள்ளதைப் போல, அதிகாரத்துவமயமாக்கலின் அதிகரிப்பு மற்றும் உட்கட்சி ஜனநாயகத்தின் சீரழிவு, போல்ஷிவிசத்திற்கும் மற்றும் சோவியத் ஆட்சி பிழைத்திருப்பதற்கும் சாத்தியமானரீதியில் ஒரு தார்மீக அச்சுறுத்தலை முன்னிறுத்தியது என்பதை போராட்டத்தின் மிகவும் ஆரம்ப கட்டத்திலேயே —ஸ்ராலினிசம் என்ற வார்த்தை அரசியல் சொல்லாட்சிக்குள் புகுவதற்கு முன்னரே— ட்ரொட்ஸ்கி கண்டு கொண்டார் என்பது ஒரு வரலாற்று உண்மையாகும். போல்ஷிவிக் கட்சிக்குள் ஒரு ஜனநாயக ஒழுங்கமைப்புமுறை இல்லாமல், இதில் ஒரு மார்க்சிச காரியாளர் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் பரந்த அடுக்குகளை அரசியல் கல்வியூட்டுவதன் முக்கியத்துவம் குறித்து குறிப்பிட வேண்டியதே இல்லை, சோவியத் கொள்கையின் புத்திஜீவித மற்றும் சரியான சூத்திரமாக்கல் சாத்தியமில்லை என்பதை, எண்ணிலடங்கா ஆவணங்களில் ட்ரொட்ஸ்கியும் இடது எதிர்ப்பும் வலியுறுத்தி இருந்தனர். ட்ரொட்ஸ்கி 1923இல் எழுதினார்:

கட்சியின் பொதுக்கருத்தை உருவாக்குவது தவிர்க்கவியலாமல் கருத்து முரண்பாடுகள் மற்றும் வேறுபாடுகளில் இருந்து நிகழ்கிறது. கட்சி அமைப்பினுள் மட்டுமே இந்த நிகழ்ச்சிப்போக்கை மட்டுப்படுத்திக்கொண்டு, பின்னர் அதன் பணிகளின் பலன்களை முழக்கங்கள், ஆணைகள், இதர பிற வடிவத்தில் கட்சி அதன் அடிமட்ட தொழிலாளர்களுக்கு அதை கொண்டுசெல்லுவது, கட்சியை சித்தாந்தரீதியிலும் மற்றும் அரசியல்ரீதியிலும் பலவீனமாக்குவதாகும். … கட்சியின் முன்னணி அங்கங்கள் பரந்த கட்சி உறுப்பினர்களின் குரல்களைச் செவிமடுக்க வேண்டும், மேலும் ஒவ்வொரு விமர்சனத்தையும் கன்னைவாதத்தின் ஒரு வெளிப்பாடாக கருத வேண்டியதில்லை, மற்றும் அவ்விதத்தில் செய்தால் மனசாட்சியுடன் நேர்மையாக உள்ள மற்றும் ஒழுங்குமுறையோடு உள்ள கட்சி உறுப்பினர்களையே மூடிய வட்டங்களுக்குள் இழுத்து, கன்னைவாதத்திற்குள் வீழ்ந்துவிடச் செய்வதாகும்.23

கட்சியை நிர்வகிக்கும் அங்கங்களின் தீர்மானங்களை எதிர்ப்பதென்பது, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எதிர்விரோத வர்க்க சக்திகளது நலன்களின் வெளிப்பாடாகும் என்று கட்சி அமைப்பு குறிப்பிடும் அதன் சுய-சேவைக்கு உதவும் வாதங்களை ட்ரொட்ஸ்கி நிராகரித்தார்:

ஒரேயொரு பிரச்சினையை கட்சியால் வெவ்வேறு வழிவகைகளைக் கொண்டு தீர்க்க முடிகிறது என்பதும், இந்த வழிவகைகளில் எது சிறப்பானது, மிகவும் விரைவானது, மிகவும் சிக்கனமானது என்பதில் கருத்து வேறுபாடுகள் இருப்பதும், அடிக்கடி நிகழ்கிறது. பிரச்சினையை பொறுத்து, கட்சியின் கணிசமான பிரிவுகளை அத்தகைய கருத்துவேறுபாடுகள் தழுவியிருக்கும், ஆனால் அதற்காக அங்கே கட்டாயம் இரண்டு வர்க்க போக்குகள் இருக்கிறது என்று அர்த்தமாகாது.

நமது பாதை கடினமானது, மேலும் அரசியல் பணிகளும் அத்துடன் சோசலிச அமைப்பின் பொருளாதார கேள்விகளும் தவறாமல் கருத்து வேறுபாடுகளையும் மற்றும் அந்த கருத்துக்களின் அடிப்படையில் தற்காலிக குழுவாக்கங்களையும் எதிர்கொள்ளும் என்பதால், எதிர்காலத்தில் நாம் ஒரேயொரு உடன்பாடின்மையை கொண்டிருக்கப் போவதில்லை, மாறாக டஜன் கணக்கான உடன்பாடின்மைகளை கொண்டிருப்போம் என்பதில் அங்கே எந்த சந்தேகமும் இல்லை. மார்க்சிச பகுப்பாய்வைக் கொண்டு அனைத்து நுட்பமான கருத்து வேறுபாடுகளையும், அரசியல்ரீதியில் சரிபார்ப்பது தான், எப்போதுமே நமது கட்சிக்கான மிகவும் பயனளிக்கக்கூடிய முன்கூட்டிய தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக இருக்கும். ஆனால் இது திடமான மார்க்சிச சரிபார்ப்பில் தங்கியிருக்க வேண்டும், அதிகாரத்துவமயமாக்கலை பாதுகாக்கும் இயங்குமுறைகளான, ஒன்றையே திரும்பதிரும்ப கூறும் வார்த்தைகளாக இருக்கக்கூடாது.24

கட்சி ஒழுங்கமைப்புமுறை இயல்பிலேயே, சோசலிச கட்டுமானப் பணிகளின் மீது நேரடியாக தாக்கத்தைக் கொண்டிருந்தது. ட்ரொட்ஸ்கி எண்ணிலடங்கா சந்தர்ப்பங்களில் விளக்கியதைப் போல, அதன் இயல்பிலேயே, திறமையான பொருளாதார திட்டமிடுதலுக்கு, முடிவெடுக்கும் நிகழ்ச்சிப்போக்கில் பெருந்திரளான ஆர்வமிகுந்த மற்றும் ஜனநாயகரீதியிலான பங்களிப்பு அவசியமாகும். அது அதிகாரத்துவ உத்தரவுடன் பொருத்தமற்றது. இவ்விதத்தில் சோவியத் பொருளாதாரத்தின் முரண்பாடுகளைக் குறித்து ஒரு தொலைநோக்கிய மதிப்பீட்டையும் மற்றும் அவற்றை சரிசெய்வதற்கான திடமான பரிந்துரைகளையும் வழங்கிய அதேவேளையில், ட்ரொட்ஸ்கி ஒரு சரியான பொருளாதார கொள்கையை வகுப்பதும் மற்றும் அதை நடைமுறைப்படுத்துவதும் இரண்டுமே, ஒரு ஜனநாயக ரீதியான கட்சி ஒழுங்கமைப்புமுறையை சார்ந்திருப்பதாக வலியுறுத்தினார்.

உள்கட்சி ஜனநாயகத்தின் முக்கியத்துவம் என்பது வெறுமனே வார்த்தையளவிலான கோட்பாடு அல்ல, அல்லது அதன் நடைமுறை முக்கியத்துவம் பொருளாதாரத்துறை கொள்கையின் மீது அதன் நேரடியாக தாக்கம் கொண்டிருப்பதோடு மட்டுப்பட்டதும் அல்ல. ட்ரொட்ஸ்கியால் நடத்தப்பட்ட சோவியத் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான போராட்டத்தில் முடிவாக பணயத்தில் இருந்தது, சோசலிச கலாச்சாரத்தின் ஒட்டுமொத்த மரபும் மற்றும், முந்தைய நூற்றாண்டில் சர்வதேச தொழிலாளர்களது இயக்கத்தினூடாக அபிவிருத்தி செய்யப்பட்ட புரட்சிகர சிந்தனையின் தலைவிதியும் ஆகும். அதிகாரத்துவம் லெனினை அடக்கம் செய்ததைப் போலவே மார்க்சிசத்தையும் கையாண்டது: அது அதை சம்பிரதாயத்திற்குரிய விடயமாக மற்றும் பாதியளவிற்கு புரியாத மந்திரங்களைப் போல பதப்படுத்தியது. 1927க்குப் பின்னர் மார்க்சிசம், சோவியத் கொள்கையை வகுப்பதில், எல்லா விருப்பங்களுக்கும் நோக்கங்களுக்கும் ஏற்ப, எந்தவொரு பாத்திரத்தையும் வகிப்பதிலிருந்து நின்றுவிட்டது. இடது எதிப்பின் தோல்வியானது, புத்திஜீவித மற்றும் கலாச்சார நடவடிக்கையின் ஒவ்வொரு பரப்பெல்லையிலும், தோற்றப்பாட்டளவில் விமர்சனரீதியிலான சிந்தனையின் அபிவிருத்திக்கு சாவு மணியாக அமைந்தது.

பொருளாதாரக் கொள்கை

இந்த புள்ளியில் நான் இரண்டாவது பிரச்சினையான இடது எதிர்ப்பின் பொருளாதார கொள்கைக்கு திரும்பி ஆக வேண்டும். இதுவொரு பரந்த விடயம், அதை ஒருசில மேற்கோள்களுக்குள் குறைத்துவிட முடியாது. இருப்பினும், குறைந்தபட்சம் சோவியத் பொருளாதார அபிவிருத்தியின் பிரச்சினைகளில், இடது எதிர்ப்பின் அணுகுமுறைக்கும் மற்றும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் அணுகுமுறைக்கும் இடையிலான ஆழ்ந்த வித்தியாசங்களை சுட்டிக்காட்டுவதற்கு சில மேற்கோள்களை நான் வழங்குவேன்.

பொருளாதாரக் கொள்கை குறித்து இடது எதிர்ப்புக்கும், ஸ்ராலினிஸ்டுகளுக்கும் இடையிலான மோதல், வரலாற்று முன்னோக்கு பற்றிய மிகவும் அடிப்படை பிரச்சினையின் மீது குவிந்திருந்தது. சோவியத் ஒன்றியம் அதன் சொந்த தேசிய வளங்களின் அடிப்படையில், சோசலிசத்தைக் கட்டியெழுப்புவது சாத்தியமா, அல்லது, இறுதி ஆய்வில், சோவியத் ஒன்றியத்தின் சோசலிச அபிவிருத்தி, மேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவின் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளினது பாட்டாளி வர்க்க புரட்சியின் வெற்றியை சார்ந்திருந்ததா? ரஷ்யாவில் அதிகாரத்தை கைப்பற்றியமை உலக சோசலிசப் புரட்சியின் "முதல் வெற்றி" மட்டுமே ஆகும் என்பதே, 1924 வரையில் சோவியத் கொள்கையின் கேள்விக்குட்படாத மூலக்கூறாக இருந்தது — உண்மையில், இதுதான் அக்டோபர் 1917இல் போல்ஷிவிக்குகளால் முன்னெடுக்கப்பட்ட ஒட்டுமொத்த புரட்சிகர திட்டமாக இருந்தது. குறிப்பாக, ரஷ்யா போன்ற பொருளாதாரரீதியிலும் கலாச்சாரரீதியிலும் பின்தங்கிய ஒரு நாட்டை அடித்தளமாக கொண்டு, தேசியரீதியில் தனித்து-ஒதுக்கப்பட்ட ஒரு சோசலிச அரசு, நிலைத்திருக்க முடியாதுதான். 1924இன் இலையுதிர் காலத்தில், ஸ்ராலினினால் கொண்டு வரப்பட்ட "தனியொரு நாட்டில் சோசலிசம்" என்னும் “தத்துவம்" —உண்மையில் அதுவொரு "தத்துவமே" இல்லை, மாறாக அதற்கு முந்தைய ஆண்டில் ஜேர்மன் புரட்சியின் தோல்வி மற்றும் மேற்கு ஐரோப்பாவில் புரட்சிகர இயக்கத்தின் தற்காலிக வீழ்ச்சிக்கு விடையிறுப்பாக ஒரு முதிர்ச்சியற்ற நடைமுறைவாத விடையிறுப்பாக கொண்டு வரப்பட்ட அது, லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியினது தலைமையின் கீழ் போல்ஷிவிக்குகளால் முன்னெடுக்கப்பட்ட சர்வதேசியவாத நிலைநோக்குக்கு எதிராக முன்வைக்கப்பட்டது.

"தனியொரு நாட்டில் சோசலிச" கொள்கை அக்டோபர் புரட்சியின் நிஜமான நோக்குநிலையிலிருந்து பெரிதும் விலகியிருந்தது என்பதை பேராசிரியர் ஹோப்ஸ்வாம் மறுக்க மாட்டார். இருப்பினும், ரஷ்ய புரட்சி தவிர்க்கவியலாமல் தனியொரு நாட்டில் சோசலிசத்தை கட்டியெழுப்ப, அல்லது குறைந்தபட்சம் அதை கட்டியெழுப்ப முயலும் இடத்திற்கு "போய் சேர்ந்தது" என்பதால், அக்டோபர் புரட்சியின் நோக்குநிலை முற்றிலும் யதார்த்தமானதல்ல என்று மறைமுகமாக குறிப்பிடுகிறார். இந்த நிலைப்பாட்டை பாதுகாக்க துணிவதால், பொதுவாக ஒரு வார்த்தையளவிலான அர்த்தத்தில் கூறுவதானால், தத்துவார்த்த கோட்பாடு ட்ரொட்ஸ்கியின் தரப்பில் பலமாக இருந்த போதினும், நடைமுறை யதார்த்தம் ஸ்ராலினின் தரப்பில் பலமாக இருந்ததாக வாதிடுவதற்கு ஹோப்ஸ்வாம் கடமைப்பட்டிருந்தாரோ என நான் ஐயுறுகிறேன். அவ்வாறாயின், உலகப் புரட்சி குறித்த ட்ரொட்ஸ்கியின் கருத்துரு கட்டாயம் வாசிப்பதற்குரியதாக இருந்தது, ஆனால் 1920களின் மத்தியில் சோவியத் ஒன்றியம் எதிர்கொண்டிருந்த அரசியல் மற்றும் பொருளதார நிலைமையின் உண்மையான சூழலில், அது பலனளிக்கக்கூடியதாக இருக்கவில்லை என்றாகிறது. இவ்விதத்தில் ஸ்ராலினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகளுக்கு, ட்ரொட்ஸ்கி ஒரு நிஜமான மாற்றீட்டு கொள்கைகளை முன்நிறுத்தினார் என்று வாதிட்டால், அது ஒருவரது சொந்த புரட்சிகர நப்பாசைகளுக்குள் ஆழ்த்திவிடுகின்றது.

ஹோப்ஸ்வாம் துல்லியமாக இவ்விதத்தில்தான் வாதிடுவாரென என்னால் உறுதியாக கூற முடியாது. ஓரளவுக்கு, நான் "ஊகத்தில்" இறங்குகிறேன். ஆனால் இது ஹோப்ஸ்வாமின் கண்ணோட்டமாக இல்லாமல் போனாலும் கூட, முழுக்க முழுக்க ஸ்ராலினிசத்தின் அனுதாபிகளைப் பற்றி குறிப்பிட வேண்டியதே இல்லை என்ற நிலையில், இது பலமுறைகள் முதலாளித்துவ வரலாற்றாளர்களால் வெளிப்படுத்தப்பட்டதை நான் கேட்டிருக்கிறேன்.

இந்த வாதத்தின் அடிப்படை பிரச்சினை என்னவென்றால், ட்ரொட்ஸ்கியின் கண்ணோட்டங்களை ஆழமாக ஒருதலைபட்சமாக மற்றும் ஒரேமாதிரியாக பேசும் கருத்துருவிலிருந்து மற்றும் ஸ்ராலினுடன் அவருக்கிருந்த இயல்பான கருத்து வேறுபாடுகளிலிருந்தும் இந்த வாதம் வருகிறது என்பதாகும். அதனது தேசிய வளங்களைக் குறித்த ஒரு யதார்த்தமான மதிப்பீட்டின் அடிப்படையில் முடிவு செய்து, சோவியத் ஒன்றியத்தின் அபிவிருத்தியில் ஸ்ராலினின் மிகவும் விவேகமான மற்றும் அறிவுத்தெளிவான அக்கறைக்கு மாறுபட்டதாக, ட்ரொட்ஸ்கியின் முன்னோக்கை, உலக முதலாளித்துவத்தின் தடையரண்களை உடைப்பதற்கான ஒரு பொறுமையிழந்த கற்பனையான விருப்பமென்று சுருக்கிவிட்டால், பின் ட்ரொட்ஸ்கியின் முன்னோக்கை உதறிவிடுவது மிக சுலபமாகி விடுகிறது.

சொல்லப்போனால், ட்ரொட்ஸ்கி என்ன எழுதினார் என்பதை வாசிக்குமாறு சோவியத் வரலாறு எழுதுபவர்களை நாம் நிர்பந்திக்க முடியாது. ஆனால் அவர்களுக்கு அவசியமான ஈடுபாட்டுடன் —மேலும், எனது கருத்தில், இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த சிந்தனையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களில் ட்ரொட்ஸ்கியும் ஒருவராவார் என்றவிதத்தில்— அவரது கட்டுரைகள் மற்றும் நூல்களை வாசிப்பவர்கள், குறிப்பாக ட்ரொட்ஸ்கியின் புரட்சிகர சர்வதேசியவாதம், சோவியத் பொருளாதார அபிவிருத்தியின் முரண்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் மீதான அவரது ஆய்விலிருந்துதான், மிகவும் அறிவார்ந்த மற்றும் நேர்த்தியான வெளிப்பாட்டை கண்டது என்பதைக் காண்பார்கள்.

மேற்கு ஐரோப்பாவிலோ அல்லது அமெரிக்காவிலோ தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றும் வரையில் சோவியத் பொருளாதார கொள்கை காத்திருக்க வேண்டுமென அவர் நம்பியதாக வாதிடுவதற்குரிய எதுவும் ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களில் கிடையாது. சோவியத் ஒன்றியம் அது பிழைத்திருக்கவும் மற்றும் கூடவோ அல்லது குறையவோ நீடித்த இடைமருவு காலத்தில் —அதாவது, கால அவகாசத்தை முன்கணிக்க இயலாத ஒரு காலக்கட்டத்தில்— முன்னேற்றத்திற்கு உதவும் கொள்கைகளை அது வகுக்க வேண்டியிருந்தது என்பதும், அக்காலக்கட்டத்தின்போது சோவியத் ஒன்றியம் முதலாளித்துவ அமைப்புமுறை ஆதிக்கம் செலுத்தும் ஒரு சர்வதேச பொருளாதார சூழலுக்குள் இருக்க வேண்டியதிருக்கும் என்பதுவுமே, உண்மையில் சோவியத் பொருளாதார பிரச்சினைகளை அவர் கையாண்டதில் இருந்த அடிப்படை ஆதாரமாக இருந்தது.

ஸ்ராலினிச அதிகாரத்துவம் “தனியொரு நாட்டில் சோசலிசம்" என்ற வேலைத்திட்டத்தை கொண்டிருந்தபோதினும் கூட, 1920கள் முழுவதிலும் அது, ஆனால் முன்னுக்குப்பின் முரணாக, சர்வதேச புரட்சிக்கான சோவியத் ஒன்றியத்தின் கடமைப்பாட்டை பேணி வந்தது. பொருளாதார அபிவிருத்தியின் நிலைப்பாட்டிலிருந்து இந்த வேலைத்திட்டத்தின் மீதான ட்ரொட்ஸ்கியின் பிரதான விமர்சனம், குறைந்தபட்சம் நீண்டகாலப்போக்கில், அது சோவியத் ஒன்றியத்தின் தலைவிதிக்காக உலக புரட்சியின் முக்கியத்துவத்தை திட்டவட்டமாக நிராகரித்தது என்பதல்ல. மாறாக தேசியவாத நிலைநோக்கை அடித்தளத்தில் கொண்டிருந்த “தனியொரு நாட்டில் சோசலிச" கொள்கை, சோவியத் ஒன்றியத்தின் மீதான நேரடியான அல்லது மறைமுகமாகமான உலக பொருளாதாரத்தின் தாக்கத்தை அபாயகரமாக குறைமதிப்பீடு செய்து, சர்வாதிகார கொள்கைகளுக்கு இட்டுச் சென்றதாக அவர் வலியுறுத்தினார்.

உலகப் புரட்சிக்கு மிக முக்கிய ஆதார நபராக விளங்கிய ட்ரொட்ஸ்கி, சோவியத் ஒன்றியத்திற்கும் உலக முதலாளித்துவ சந்தைக்கும் இடையிலான நெருக்கமான பொருளாதார தொடர்புகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, அவரது காலத்திய வேறெந்த சோவியத் தலைவரையும் விட அதிகமாக வலியுறுத்தினார் என்பது முன்னுக்குப்பின் பொருந்தாமல் இருப்பதாக தோன்றலாம். ஆனால் சோவியத் பொருளாதார அபிவிருத்தி, உலக சந்தை வளங்களை அணுகுவதையும் மற்றும் சர்வதேச தொழிற் பங்கீட்டையும் புத்திஜீவிதரீதியில் பயன்படுத்துவதையும் என்ற இரண்டையும் கோருகின்றதென அவர் வலியுறுத்தினார். பொருளாதார திட்டமிடலை அபிவிருத்தி செய்வதற்கு, போட்டித்தன்மையிலிருந்து ஆதாயமெடுக்கும் மற்றும் சர்வதேச மட்டத்தில் திறமையாக கையாளும் குறைந்தபட்ச அறிவு அவசியமாகும். உலக முதலாளித்துவ சந்தையிலிருந்து மிக குறைந்த செலவில் அதனால் பெறக் கூடியதை, சோவியத் மண்ணில் உருவாக்குகிறோம் என்றவொரு வீண் முயற்சியில், அதன் சொந்த மட்டுப்பட்ட வளங்களை விரயப்படுத்துவது, ஒரு பகுத்தறிவான பொருளாதார நோக்கமாக இருக்காது என்று அவர் வலியுறுத்தி இருந்தார். ட்ரொட்ஸ்கி 1927இல் எழுதினார்:

ஒரு தனிமைப்பட்ட சோசலிச அபிவிருத்தியின் மீதும், ஓரளவிற்கு உலக பொருளாதாரத்திலிருந்து சுதந்திரமான ஒரு பொருளாதார வளர்ச்சி விகிதம் மீதும் நாம் நம்பிக்கை வைப்பதென்பது, ஒட்டுமொத்த கண்ணோட்டத்தையும் திரித்துவிடுகிறது. அது நமது திட்டமிடும் தலைமையை தடம்புரள செய்து, உலக பொருளாதாரத்துடன் நமது உறவுகளை ஒரு சரியான நெறிமுறைக்கு கொண்டு வருவதற்கு எந்தவித வழிகாட்டும் நூலிழைகளையும் வழங்காது. எதை நாமே உற்பத்தி செய்வது, எதை வெளியிலிருந்து கொண்டு வருவது என்பதை முடிவெடுக்க நமக்கு எந்த வழியும் இல்லை. ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சோசலிச பொருளாதார தத்துவத்தை தீர்க்கமாக கைவிடுவது என்பது, ஒருசில ஆண்டுகளின் போக்கில், ஒப்பிடவியலாதவாறு நமது ஆதாரவளங்களின் மேலதிகமான பகுத்தறிவார்ந்த உபயோகம், தொழில்துறைமயமாக்கலுக்கு மாறுதல், மற்றும் நமது சொந்த இயந்திர கட்டமைப்பின் மிகவும் திட்டமிட்ட மற்றும் பலம்வாய்ந்த வளர்ச்சி என்பதை அர்த்தப்படுத்தும். அது பணியில் அமர்த்தப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கையில் வேகமான அதிகரிப்பையும், நிஜமான விலை குறைவுகளையும் அர்த்தப்படுத்தும். ஒரே வார்த்தையில் கூறுவதானால், முதலாளித்துவ சூழலில் சோவியத் ஒன்றியம் நிஜமாக பலம் பெறுவதாக இருக்கும்.25

அபிவிருத்தி அடைந்த நாடுகளில் முதலாளித்துவ அமைப்புமுறை இயங்கும் விதத்தைக் கவனமாக கூர்ந்தறியவும் மற்றும் ஆராயவும், தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தியிருந்த நாடுகடத்தப்பட்ட புரட்சிகர ரஷ்ய மார்க்சிஸ்டுகளின் ஒரு தலைமுறையை சேர்ந்தவராக ட்ரொட்ஸ்கி விளங்கினார். அவர்கள் அதிகளவில்-வர்ணிக்கப்பட்ட முதலாளித்துவத்தின் "கொடூரங்களுக்கு" மட்டுமே பரிச்சயமானவர்களாக இருக்கவில்லை, மாறாக அதன் நேர்மறையான சாதனைகளுக்கும் பரிச்சயப்பட்டிருந்தனர். மூலதனம் (Das Kapital) நூலைப் படிப்பதில் அவர்கள் செலவிட்டிருந்த எண்ணிலடங்கா மணி நேரங்கள், மூலதனத்தை பல ஆண்டுகள் நடைமுறையில் கண்டுகொண்டதால் செறிவூட்டப்பட்டன. ரஷ்யாவுக்கு அவர்கள் திரும்பியபோது, அவர்கள் நவீன பொருளாதார அமைப்பின் சிக்கல்களைப் புரிந்து கொள்ளும் ஆர்வத்தையும் அவர்களுடன் கொண்டு வந்திருந்தனர் — இது நாடு கடத்தப்பட்ட ஆண்டுகளில் ட்ரொட்ஸ்கியுடன் மிக நெருக்கமாக இருந்த சிந்தனையாளர்களுக்கு முக்கியமாக பொருந்தும். இந்த கேள்வி அரசியல் போராட்டங்களுடன் அந்தளவுக்கு ஆழமான துன்பியல் தாக்கங்களுடனான பிரச்சினையை கொண்டு வந்திருக்காவிடில், அவர்கள், ரஷ்யா ஏதோவிதத்தில் அதன் சொந்த சொற்ப உற்பத்திக்கருவிகளை தேசியமயமாக்கியதன் மூலமாக சோசலிசத்திற்குள் பாய்ந்துவிடும் என்பதை வெறுமனே நகைப்பிற்கிடமானது என உதறி விட்டிருப்பார்கள். முதலாளித்துவ மேலாண்மை, ஒழுங்கமைப்பு, கணக்கிடுதல் மற்றும் உற்பத்தியின் அடிப்படை நுட்பங்களை உள்ளீர்த்துக் கொள்வதே, சோசலிசப் பாதையில் சோவியத் பொருளாதாரத்தின் அபிவிருத்திக்கு முன்நிபந்தனையாகும் என்று ட்ரொட்ஸ்கி வாதிட்டார்.

ட்ரொட்ஸ்கியின் பொருளாதார கொள்கைகளுக்கும், ஸ்ராலினின் பொருளாதார கொள்கைகளுக்கும் இடையே இருந்த முரண்பாடு குறித்த இந்த மிகச் சுருக்கமான கருத்தில், கூட்டு உற்பத்திமுறையின் (Collectivization) பிரச்சினையை தொடுவதும் அவசியமாக உள்ளது. நன்கறிந்த விதத்தில், 1929 மற்றும் 1932க்கு இடையே ஸ்ராலினின் அசட்டுத்துணிச்சலான மற்றும் கடுமையான விவசாய கூட்டு உற்பத்திமுறையின் அதிர்ச்சிகரமான விளைவுகளில் இருந்து, சோவியத் விவசாயத்துறை ஒருபோதும் முற்றிலும் மீளவில்லை. மிகத் தெளிவாக, சோவியத் விவசாய பிரச்சினைகளுக்கு, ஒரு மிகவும் பகுப்பறிவார்ந்த அணுகுமுறை இருந்திருந்தால், சோவியத் ஒன்றியத்திற்கு கணக்கிடவியலாத இழப்புகளையும் மற்றும் முடிவில்லா துயரத்தையும் தவிர்த்திருக்கும். துல்லியமாக இந்த பகுதியில் தான் ஒரு மாற்றீட்டு கொள்கையின் கேள்வி வரலாற்று முக்கியத்துவத்தை ஏற்கிறது என்பதால், பொதுவாக வலதுசாரி வரலாற்றாளர்கள் அவ்வாறு எதுவும் இருந்திருக்கவில்லை என்பதாக நகர்ந்து விடுகிறார்கள். உண்மையில், இடது எதிர்ப்பின் வேகமாக தொழில்துறைமயமாக்கும் வேலைத்திட்டத்தை, 1920களின் இறுதியில், ஸ்ராலின் ஏற்றுக் கொண்டதிலிருந்துதான் கூட்டு உற்பத்திமுறை வந்தது என்ற வாதமே பொதுவாக முன்வைக்கப்படுகிறது. நிஜத்தில் ஸ்ராலினிஸ்டுகளால் தொடங்கப்பட்ட மூர்க்கமான கூட்டு உற்பத்திமுறை நடவடிக்கையை ட்ரொட்ஸ்கி எதிர்த்தார் மற்றும் கண்டித்தார். அந்நடவடிக்கையுடன் கூட்டு சேர்ந்திருந்த போலி-சோசலிச வீராவேசங்களுக்கு இடையிலும், ட்ரொட்ஸ்கி எச்சரிக்கையில், தொழில்துறை மற்றும் கிராமப்புறம் இரண்டினது நிஜமான உற்பத்தி தகைமைகளை பொருட்படுத்தாமல் அசட்டைத் துணிச்சலுடன் நடைமுறைப்படுத்தப்பட்ட அக்கொள்கையும், ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் முந்தைய தோற்றுப்போன பொருளாதார வேலைத்திட்டங்களுக்கு அடியிலிருந்த அதே "தனியொரு நாட்டில் சோசலிசம்" என்ற தேசியவாத மற்றும் மார்க்சிச-விரோத கருத்துருக்களில் இருந்து வருவதாக எச்சரித்தார்.

ஸ்ராலினிச கூட்டு உற்பத்திமுறையை குறித்து 1930இல் எழுதிய ஒரு விமர்சனத்தில், ட்ரொட்ஸ்கி, முன்னதாக அவர் இன்னும் அதிகமாக தொழில்துறைமயமாக்கலை வேகப்படுத்துவதற்கும், கனரக தொழில்துறையின் அபிவிருத்திக்கு ஆதாரவளங்களை வழங்குவற்காக விவசாய செல்வந்த பிரிவுகளின் மீது (குலாக்குகள்) அதிக வரிவிதிப்பைப் பிரயோகிக்குமாறும் அறிவுறுத்தி இருந்ததை ஒப்புக் கொண்டிருந்தார்:

ஆனால் தொழில்துறைமயமாக்கலுக்கான வளங்களை நாம் ஒருபோதும் வற்றாததாக கருதியதில்லை. அதன் வேகத்தை நிர்வாக சாட்டையைக் கொண்டு மட்டுமே ஒழுங்குப்படுத்த முடியுமென நாம் ஒருபோதும் நினைத்ததில்லை. நாம் எப்போதுமே, தொழிலாள வர்க்கத்தின் நிலைமைகளில் திட்டமிட்ட முன்னேற்றம் அவசியம் என்பதை, தொழில்துறைமயமாக்கலுக்கான அடிப்படை நிபந்தனையாக முன்னெடுத்துள்ளோம். நாம் எப்போதுமே, கூட்டு உற்பத்திமுறை, தொழில்துறைமயமாக்கலை சார்ந்துள்ளது என்பதை கருத்தில் கொண்டுள்ளோம். விவசாயத்துறை பொருளாதாரத்தின் சோசலிச மறுநிர்மானத்தை நாம் பல ஆண்டுகளுக்கான ஒரு வாய்ப்புவளமாக மட்டுமே பார்த்தோம். தனியொரு நாட்டில் சோசலிச மறுநிர்மாணம் செய்கையில் ஏற்படும், தவிர்க்கவியலாத உள்முரண்பாடுகள் குறித்து நமது கண்களை நாம் ஒருபோதும் மூடிக் கொண்டதில்லை. கிராமப்புற வாழ்வின் முரண்பாடுகளை களைவதென்பது, நகர்ப்புறத்திற்கும் கிராமப்புறத்திற்கும் இடையிலான முரண்பாடுகளை களைவதன் மூலமாக மட்டுமே சாத்தியமாகும். இதை உலகப் புரட்சியால் மட்டுமே எட்ட முடியும். ஆகவே ஸ்ராலின் மற்றும் க்ரஸ்ஹைஸ்ஹனோவ்ஸ்கியின் (Krzhyzhanovsky) ஐந்தாண்டு திட்டத்தின் பரப்பெல்லைக்குள், வர்க்கங்களை ஒழிப்பது குறித்து நாம் ஒருபோதும் கோரியதில்லை.

... தொழில்துறைமயமாக்கலை வேகமாக்குவது குறித்த பிரச்சினை ஓர் அதிகாரத்துவ பகட்டு விடயமாக அல்ல, மாறாக வெகுஜனங்களின் வாழ்க்கை மற்றும் கலாச்சார விடயமாக இருந்தது.

ஆகவே சோசலிசத்தை கட்டியெழுப்பும் திட்டத்தை ஒரு முதன்மை அதிகாரத்துவ கட்டளையாக பிறப்பிக்க முடியாது. அது, சோசலிச நிர்மாணம் கைவரப் பெறக்கூடிய அதேவழியில், அதாவது பரந்த சோவியத் ஜனநாயகம் மூலமாக மட்டுமே, தயாரிக்கப்பட்டு சரி செய்யப்பட வேண்டும்.26

ஸ்ராலினிச கூட்டு உற்பத்திமுறை மீதான அவரது விமர்சனத்தின் அடித்தளத்தை ட்ரொட்ஸ்கி அழுத்தந்திருத்தமாய் அறிவித்தார்:

"சாத்தியமான குறுகிய காலத்தில்” ஒரு தேசிய சோசலிச சமூகத்தை கட்டியெழுப்பும் பணியை நாங்கள் மீண்டும் மீண்டும் தீர்க்கமாக நிராகரித்தோம். கூட்டு உற்பத்திமுறையை மற்றும் தொழிற்துறைமயமாக்கலை நாம் அறுந்துவிடாதவாறு உலகப் புரட்சியுடன் பிணைத்தோம். நமது பொருளாதார பிரச்சினைகள், இறுதி ஆய்வில், சர்வதேச அரங்கில் தான் முடிவு செய்யப்படுகின்றன.27

இடது எதிர்ப்பு வெற்றி அடைந்திருந்தால் அது சோவியத் ஒன்றியத்தின் வரலாற்றை எவ்வாறு மாற்றி இருக்குமென கருத்துருவாக்கும் முயற்சியில், அது எவ்வாறெல்லாம் பரிணமித்திருக்கும் என்றவொரு துல்லியமான சித்திரத்தை வழங்க முடியுமென நாம் வாதிடவில்லை. எதிர்காலத்தை முன்கணிப்பதைவிட, கடந்தகாலத்தை பற்றிய ஒரு விரிவான புனைவுகோளை மறுநிர்மாணம் செய்து காட்டுவது பெரிதும் சாத்தியமல்ல. 1924க்குப் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட பல்வேறு கொள்கைகளை, பரந்த பண்பு கொண்ட புதிய அரசியல், சமூக மற்றும் பொருளாதாரத்தின் மாறும் காரணிகளை, அவற்றின் பரஸ்பர சிக்கலான தொடர்புகளுக்குள் இருந்த இவற்றை, வரலாற்று சமன்பாட்டுக்குள் அறிமுகப்படுத்தி இருந்தால், அவை, மாற்றீடுகளை குறித்து ஒரு முன்கூட்டிய மதிப்பீட்டை உருவாக்கியவர்களால் முற்றிலும் அனுமானித்திருக்க முடியாதவாறு, சம்பவங்களின் போக்கை மாற்றி இருக்கக்கூடும். ஆனால் வரலாற்றின் "நிச்சயமற்றதன்மை" பற்றிய கோட்பாட்டை கையில் எடுப்பதென்பது, வரலாற்று மாற்றீடுகளைக் குறித்து உடன்படும் வகையிலோ அல்லது புத்திஜீவிதரீதியிலோ எதையும் கூறவியலாது என்பதை அர்த்தப்படுத்தாது. இடது எதிர்ப்பு வெற்றி பெற்றிருந்தால், ஒரு மிகவும் பகுத்தறிவார்ந்த, ஆக்கபூர்வ மற்றும் மனித பரிணாமத்திற்கு உதவும் சோவியத் பொருளாதாரத்தை பெரிதும் சாத்தியமாக்கி இருக்குமென தீர்மானிப்பதற்கு, அங்கே மிகவும் திடமான உண்மைகளும், தத்துவார்த்த அடித்தளங்களும் உள்ளன. தொழில்துறைமயமாக்கல் "ஒரு பெரும் அச்சறுத்தலை" நிலைநிறுத்தி இருந்ததென குறிப்பிட்டு ஹோப்ஸ்வாம், இந்த சாத்தியக்கூறைத்தான் வெளிச்சமிட்டுக் காட்ட முனைகிறார். அந்த அச்சுறுத்தல் எந்தளவுக்கு இருந்தது என்பதுதான் ஒரே கேள்வியாகும். விவசாயத்துறையின் செல்வச்செழிப்பான அடுக்கின் மீது உயர்விகித வரிவிதிப்புக்கும், ஸ்தூலமாக “குலாக்குகளை ஒரு வர்க்கமாக நிர்மூலமாக்குவதற்கும்" இடையே அங்கே நிறைய வேறுபாடு உள்ளது. எதிர்ப்பின் பொருளாதார கொள்கை, ஸ்ராலினிச கூட்டு உற்பத்திமுறையின் கொடூரங்களை தவிர்ப்பதை தவிர வேறொன்றையும் எட்டியிருக்காது என்றாலும் —இடது எதிர்ப்பு வென்றிருந்தால் அது மட்டுமே நடந்திருக்கும் என்பது தோற்றப்பாட்டளவில் ஏற்க முடியாது என்றாலும்— சோவியத் ஒன்றியம் ஒரு பேரழிவிலிருந்து, மேலும் அதிலிருந்து பெருக்கெடுத்த அனைத்திலிருந்தும் தப்பித்திருக்கும்.

சர்வதேச மூலோபாயம்

இப்போது நாம், லியோன் ட்ரொட்ஸ்கியின் மற்றும் இடது எதிர்ப்பின் தோல்வியால், சர்வதேச தொழிலாள வர்க்கம் மற்றும் உலக சோசலிச இயக்கத்தின் கதியின் மீது ஏற்பட்ட தாக்கங்களை குறித்து பரிசீலிக்க திரும்புவோம். இந்த சர்வதேச பரிமாணம், எதிரிடை உண்மைகளைக் கொண்ட மாற்றீடுகளை குறித்த ஹோப்ஸ்வாமின் பரிசீலனையில் உள்ளடக்கப்படவில்லை. சோவியத் ஒன்றியத்தின் இறுதி முறிவு, தவிர்க்கவியலாமல் அது 1921இல் எதிர்கொண்டிருந்த புறநிலைமைகளிலிருந்து வந்தது என்ற நிலைப்பாட்டை பிடித்துக் கொண்ட ஹோப்ஸ்வாம், ஸ்ராலினிச ஆட்சியால் பின்தொடரப்பட்ட சர்வதேச கொள்கைகள், உண்மையில் எவ்வாறு சோவியத் ஒன்றியத்தின் பரிணாமத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதென ஆராய எந்த முயற்சியும் செய்யவில்லை. அவர் அங்கே சர்வதேசத்திற்கும் உள்நாட்டுக்கும் இடையே வெகு குறைவான தொடர்பே இருந்ததென அறிவுறுத்தும் அளவுக்கு செல்கிறார்: “ரஷ்ய புரட்சி நிஜத்தில் இரண்டு ஒன்றோடொன்று பிணைந்த வரலாறுகளைக் கொண்டுள்ளது: ஒன்று ரஷ்யா மீதான அதன் தாக்கம், மற்றொன்று உலகின் மீதான அதன் தாக்கம். நாம் அவ்விரண்டையும் குழப்பிக் கொள்ளக் கூடாது."28

ஆனால் இதுபோன்றவொரு பிரிப்புமுறை ஸ்ராலினிசத்தின் நிகழ்வுப்போக்கை புரிந்துகொள்ள முடியாதவாறு செய்துவிடும். லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியினது தலைமையின் கீழ் போல்ஷிவிக் அரசாங்கத்தில் வடிவமெடுத்திருந்த பாட்டாளி வர்க்க சர்வதேச சோசலிசத்திற்கு எதிராக, ஒரு ரஷ்ய தேசியவாத பிற்போக்குத்தனத்தின் அடிப்படையில் ஸ்ராலினிச ஆட்சி எழுந்தது. ஒரு சக்தி வாய்ந்த தேசிய அரசாக சோவியத் ஒன்றியத்தை அபிவிருத்தி செய்வதுடன், தங்களின் சொந்த சடரீதியிலான நலன்களை அடையாளம் கண்ட அதிகாரத்துவத்திற்குள் இருந்த உட்கூறுகள் அனைத்திற்கும், தனியொரு நாட்டில் சோசலிசம் வேலைத்திட்டம், ஒரு பதாகையை வழங்கியது. அதிகாரத்துவம், உற்பத்தி கருவிகளின் அரசுடைமை இயங்குமுறை மூலமாக அதன் தனிச்சலுகைகளை பெற்றது. அதிகாரத்துவம் அதன் தனிச்சலுகைகளுக்காக, தேசிய-அரசு அடித்தளங்களை சார்ந்து எந்தளவுக்கு அதிகமாக நனவுபூர்வமாக மாறியதோ, அது உலக புரட்சியின் நலன்களுக்காக அவற்றை அந்தளவுக்கு குறைவாகவே பணயத்தில் வைக்க விரும்பியது. தனியொரு நாட்டில் சோசலிசம் வேலைத்திட்டம், சோவியத் அரசின் தேசிய நலன்களுக்கு சர்வதேச சோசலிச இயக்கத்தின் நலன்களை அடிபணியச் செய்வதை சட்டபூர்வமாக்கியது, ஏனெனில் அந்த தேசிய நலன்களே அதிகாரத்துவத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தன.

துல்லியமாக சர்வதேச வர்க்கப் போராட்ட மட்டத்தில், இடது எதிர்ப்பின் தோல்வியால் ஏற்பட்ட விளைவுகள் மிகவும் துன்பியலாகவும் நீண்டகால தாக்கம் கொண்டதாகவும் இருந்தன, அதனால்தான் அங்கே சோவியத் ஒன்றியம் வேறுபட்ட வழிகளில் அபிவிருத்தி அடைந்திருக்க முடியுமா என்ற கேள்வி மிகவும் தீவிரமாகவும் ஆழமாகவும் முன்னால் வருகிறது. ஸ்ராலினிச ஆட்சியின் வளர்ச்சி குறித்த அவரது சொந்த பகுப்பாய்வில் ட்ரொட்ஸ்கி, சர்வதேச தொழிலாள வர்க்கம் கண்ட தோல்விகளால் அக்டோபர் வேலைத்திட்டத்திற்கும் பாரம்பரியங்களுக்கும் எதிராக சோவியத் ஒன்றியத்திற்குள் இருந்த அரசியல் பிற்போக்குத்தனம், பெரிதும் பலப்படுத்தப்பட்டதென எப்போதும் வலியுறுத்தினார். 1923இன் இலையுதிர்கால இறுதியில் இடது எதிர்ப்பு கண்ட ஆரம்ப பின்னடைவு, நிச்சயமாக ஜேர்மன் புரட்சியின் தோல்வியுடன் பிணைந்திருந்தது. அது அண்மித்த எதிர்காலத்தில் ஐரோப்பிய தொழிலாளர்கள் சோவியத் ஒன்றியத்தின் உதவிக்கு வருவார்கள் என்ற நம்பிக்கைகளை மங்கச் செய்தது. இந்த சூழல்தான், தனியொரு நாட்டில் சோசலிசத்தின் தேசியவாத முன்னோக்கிற்கு ஒரு பரந்த ஆதரவாளர்களை உருவாக்கியது. கம்யூனிச அகிலத்திற்குள் சோவியத் தலைவர்களின் தேசியவாத போக்கால் உருவாக்கப்பட்ட அரசியல் நிலைநோக்கு பிறழ்ச்சியானது, மறுபக்கத்தில் சோவியத் ஒன்றியத்திற்கு வெளியே தொழிலாள வர்க்கத்தின் மேலதிக தோல்விகளுக்கு இட்டுச் சென்றது. அத்தகைய தோல்விகள் ஒவ்வொன்றும் சோவியத் ரஷ்யாவின் தனிமைப்பாட்டை தீவிரப்படுத்தியதுடன், உலகப் புரட்சியின் முன்னோக்கில் சோவியத் தொழிலாளர்களுக்கு இருந்த நம்பிக்கையை மேற்கொண்டும் குறைத்தன, அத்துடன் ஸ்ராலினிச ஆட்சிக்கு இருந்த மார்க்சிச மற்றும் சர்வதேசவாத எதிர்ப்பின் அரசியல் நிலைப்பாட்டிற்கும் குழிபறித்தன.

புரட்சியின் சாத்தியக்கூறு குறித்து இயல்பிலேயே பெரிதும் நம்பிக்கையற்ற தொழில்ரீதியிலான வரலாற்றாளர்கள், வரலாற்று அபிவிருத்தியின் வழக்கமான போக்கை அது மீறுவதாக நோக்க விழைந்தனர், அத்துடன் அக்டோபர் புரட்சி இயக்கமூட்டிய அந்த சர்வதேச முன்னோக்கை யதார்த்தத்திற்கு முரணானதாகவும், கற்பனாவாதமாகவும் அவர்களால் எளிமையாக புறக்கணிக்க முடிந்தது. ஜேர்மன் புரட்சிக்கான சாத்தியக்கூறுகளின் மீது லெனின் கொண்டிருந்த நம்பிக்கையை, அவரது அரசியல் தீர்மானத்தில் இருந்த ஓர் அழிவார்ந்த பிழையாக ஹோப்ஸ்வாம் எவ்வாறு பரிசீலித்தார் என்பதை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். தனியொரு நாட்டில் சோசலிச அரசியல் போக்குக்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் போராட்டம் குறித்து, ஹோப்ஸ்வாம் முற்றிலும் ஒன்றும் கூறவில்லை என்றபோதினும், அதைக் குறித்து கருத்துரைக்குமாறு நாம் அவரைக் கேட்டுக் கொண்டால், அவர் 1920கள் மற்றும் 1930களில் ட்ரொட்ஸ்கியின் சர்வதேச முன்னோக்கு, 1918இல் லெனின் கொண்டிருந்ததைப் போலவே யதார்த்தத்திற்கு முரணானதென பதிலளிப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ட்ரொட்ஸ்கியின் சர்வதேச வேலைத்திட்டத்தை ஒரு நம்பகமான மாற்றீட்டாக, மற்றும் அதைப் பின்தொடர்ந்திருந்தால், அது சோவியத் வரலாற்றின் போக்கை மாற்றி இருக்குமென்று கருதுவது, வெறும் ஒரு முட்டுச்சந்துக்கு இட்டுச் செல்கின்ற, எதிரிடை உண்மைகளை குறித்த ஊகத்திலிருந்து வரும் மற்றொரு அணுகுமுறையென ஹோப்ஸ்வாம் வாதிடக்கூடும்.

அவ்வாறாயின், பின்னர், நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் அடிப்படையில் அமைந்த இடது எதிர்ப்பின் சர்வதேச கொள்கைகள், கம்யூனிச அகிலத்தை பெரிதும் பலப்படுத்தி இருக்கும் என்றும், சோவியத் ஒன்றியத்தின் சர்வதேச அந்தஸ்தை மேம்படுத்தியிருக்குமென்பதையும் நாம் எவ்வாறு எடுத்துக்காட்டுவது? நிச்சயமாக, இடது எதிர்ப்பு வெற்றி அடைந்திருந்தால் அது சோவியத் ஒன்றியத்திற்கு வெளியே நடந்த புரட்சிகர போராட்டங்களின் வெற்றிக்கு உத்தரவாதம் அளித்திருக்கும் என்பதை, நம்மால் ஓர் அரசியல்ரீதியிலான மற்றும் தார்மீகரீதியிலான நிச்சயத்தன்மையுடன் நிரூபிக்க முடியாது. புரட்சிகர அரங்கில் விளைவுகள் தர்க்க ஆதாரங்களால் அல்லாது மாறாக நிஜமான போராட்டங்களால் தீர்மானிக்கப்படுகிறது என்பதை ஒப்புக்கொள்ள நாம் முற்றிலும் தயாராக உள்ளோம். ஆனால் அதற்காக, உலக புரட்சிகர இயக்கத்திற்கான இந்த இடது எதிர்ப்பு வெற்றி பெற்றிருந்தால் அதனால் ஏற்பட்டிருக்கக்கூடிய விளைவுகளைக் குறித்து, வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில், சில நம்பத்தகுந்த தீர்மானங்களுக்கு நம்மால் வர முடியாது என்றாகாது.

சர்வதேச தொழிலாள வர்க்க வரலாற்றில் நாம் இரண்டு முக்கிய நிகழ்வுகளை மட்டும் சுருக்கமாக பார்ப்போம்.

சீனப் புரட்சி

முதலாவது, 1927இல் சீனப் புரட்சியின் பேரழிவுகரமான தோல்வி. இந்த தோல்வியின் காரணம், சியாங் கேய் ஷேக் தலைமையிலான முதலாளித்துவ கோமின்டாங்கிற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியை (CCP) அடிபணிய செய்ததாகும். சியாங் மற்றும் கோமின்டாங்கை ஜனநாயக புரட்சியின் அங்கீகரிக்கப்பட்ட தலைமையாக ஏற்றுக் கொள்ளுமாறு ஸ்ராலினால் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அறிவுறுத்தப்பட்டது. அந்த அறிவுறுத்தல்களின் அரசியல் பின்னணியில், சியாங் உடன் ஓர் அரசியல் கூட்டணி மூலமாக சோவியத் ஒன்றியம் மற்றும் சீனாவுக்கு இடையே நெருக்கமான உறவுகளை ஸ்தாபிக்க ஸ்ராலினால் முயற்சிக்கப்பட்டது. சீன கம்யூனிஸ்ட் கட்சியை முதலாளித்துவ கோமின்டாங்கிற்கு அடிபணிய செய்வது, அது 1917இன் போல்ஷிவிக் மூலோபாயத்தின் மிகவும் அடிப்படை படிப்பினைகளை மீறுகிறது என்பதுடன், தொழிலாள வர்க்கத்திற்கு அழிவுகரமான விளைவுகளைக் கொண்டிருக்கும் என்றும், சியாங் ஒரு கூட்டாளி அல்ல, அவர் மீது கம்யூனிஸ்ட் கட்சியும் தொழிலாளர்களும் சிறிதளவிலும் கூட நம்பிக்கை வைக்க முடியாது என்பதையும், ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் உடனே, சியாங், அவரது ஏகாதிபத்திய மற்றும் முதலாளித்துவ ஆதரவாளர்களின் அழுத்தங்களுக்கு விடையிறுத்து, சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக மற்றும் புரட்சிகர ஷங்காய் தொழிலாளர்களுக்கு எதிராக காட்டுமிராண்டித்தனமாக திரும்புவார் என்றும் ட்ரொட்ஸ்கி உறுதியாக எச்சரித்தார். அந்த எச்சரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டன: சியாங்கின் நடவடிக்கைகள் கூடுதலாக அச்சுறுத்தும் விதத்தில் அதிகரித்தபோதும் கூட, ஸ்ராலின் வெளிப்படையாக இன்னும் மேலதிகமாக கோமின்டாங்கிற்கு அதன் விசுவாசத்தை எடுத்துக்காட்டுமாறு சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு அழுத்தம் அளித்தார். இறுதியில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, அந்நகருக்குள் சியாங்கின் துருப்புகள் நுழையும்முன் ஆயுதங்களை கீழே வைக்குமாறு, ஷங்காயின் புரட்சிகர தொழிலாளர்களுக்கு உத்தரவிட்டது. ஸ்ராலினின் கொள்கைகளுக்கு ட்ரொட்ஸ்கியின் கண்டனங்கள் கம்யூனிச அகிலம் முழுவதும் எதிரொலித்தபோது, சீனாவில் சம்பவங்கள் ஒரு அழிவுகரமான உச்சக்கட்டத்திற்கு நகர்ந்திருந்தன. ட்ரொட்ஸ்கி மற்றும் இடது எதிர்ப்பு எச்சரித்ததைப் போலவே, சியாங்கினது துருப்புகள் ஷங்காய்க்குள் நுழைந்து, அங்கே அவை பத்தாயிரக் கணக்கான கம்யூனிச தொழிலாளர்களை படுகொலை செய்யத் தொடங்கின. சீன கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் அதிலிருந்து மீண்டு வரமுடியாத தாக்குதலுக்கு உள்ளானது.

இந்த விடயங்களின் இயல்பில், எது நிரூபிக்க முடியாததென கூறப்பட்டதோ அதை வலியுறுத்த வேண்டிய அவசியமே இல்லை: அதாவது 1920களில் சீனப் புரட்சியை, இடது எதிர்ப்பின் கொள்கைகள் வெற்றி பெற செய்திருக்கக்கூடும் — எவ்வாறிருந்த போதினும், அதுபோன்றவொரு வெற்றி சாத்தியமாகி இருக்குமென்றே நான் நம்புகிறேன். ஆனால் மிகவும் நிச்சயமாக என்ன கூறலாம் என்றால், சியாங்கின் ஏப்ரல் 1927 ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பலியாகாமல் இருந்திருந்தால், தொழிலாள வர்க்கத்தின் நிலைமை இந்தளவுக்கு அழிவுகரமாக பலவீனப்பட்டிருக்காது. ஸ்ராலின் தலைமையின் கீழ் சம்பவங்கள் தலைகீழாக திரும்பியதால், சீனத் தோல்வியின் வரலாற்று விளைவுகள் கணக்கிட முடியாதளவுக்கு பெரும் பரிமாணத்தில் இருந்தன. அதன் சோவியத் ஒன்றியத்தின் மீதான உடனடி தாக்கத்திற்கு அப்பாற்பட்டு —அது சோவியத் ஒன்றியத்தின் அரசியல் தனிமைப்படலை ஆழப்படுத்தியது, அவ்விதத்தில், அதிகாரத்துவ ஆட்சியைப் பலப்படுத்தியது— 1927 தோல்வி துன்பியலானரீதியில் சீனாவிலேயே புரட்சிகர இயக்கத்தின் குணாம்சத்தை மாற்றிவிட்டது. சீன கம்யூனிஸ்ட் கட்சியில் குழப்பத்துடன் தங்கியிருந்த எஞ்சிய நபர்கள், சியாங்கின் எதிர்புரட்சிகர பாய்ச்சலால் நிலைகுலைந்து போய் நகரங்களுக்குள் அவர்கள் இருந்த நிலைமைகளிலிருந்து கிராமப்புறங்களுக்கு பின்வாங்கினர், சீன கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாள வர்க்கத்திற்கான அதன் வரலாற்று நிலைநோக்கையும் கைவிட்டது. அப்போதிருந்து, மாவோ தலைமையின் கீழ் —இவர், அப்போது, நிலைக்குலைந்த அந்த கட்சியின் வலதுசாரி தரப்பில் நின்றிருந்தார்— சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வேலை, விவசாயிகளை அடிப்படையாக கொண்டது. இவ்விதத்தில், 1949இல் ஆட்சிக்கு வந்த அக்கட்சி, தொழிலாள வர்க்கத்துடன் மிகக்குறைவான முக்கிய தொடர்புகளையே கொண்டிருந்தது என்பதுடன், 1927 பேரழிவுக்கு முன்னர் நிலவிய இயக்கத்திற்கு சிறிதும் ஒத்தவகையில் இருக்கவில்லை. இன்று வரையிலும் கூட, மாவோ வழிவந்தவர்கள் நாடுகடந்த பெருநிறுவனங்களால் சீன மக்கள் சுரண்டப்படுவதை ஊக்குவித்து மேற்பார்வையிடுகின்ற நிலையில், நாம் ஸ்ராலினால் பின்பற்றப்பட்ட அழிவுகரமான கொள்கைகளின் நேரடியான விளைவுகளின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இடது எதிர்ப்பு வெற்றிபெற்றிருந்தால், ஸ்ராலின் கொள்கைகளால் சீனாவில் தோற்றுவிக்கப்பட்ட பேரழிவுகளை தடுத்திருப்பதை விட மேலதிகமாக ஒன்றும் செய்திருக்காது என்று கொண்டாலுமே, அதுவே கூட சோவியத் ஒன்றியம் மற்றும் சர்வதேச புரட்சிகர இயக்கத்திற்கு ஊக்கங்கொடுத்து, உலக வரலாற்றின் போக்கை ஆழமாக மாற்றி இருக்கக்கூடும்.

ஹிட்லர் அதிகாரத்திற்கு எழுச்சியுறுதல்

இப்போது இரண்டாவது நிகழ்வினைப் பரிசீலிப்போம்: அதாவது, ஜேர்மனியில் பாசிசம் அதிகாரத்திற்கு வருதல். ஜனவரி 1933இல் ஹிட்லரின் வெற்றிக்கு முன்னதாக, ஜேர்மனியில் இரண்டு பாரிய தொழிலாளர் கட்சிகளான சமூக ஜனநாயகக் கட்சியும் (SPD) மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியும் (KPD) பதின்மூன்று மில்லியன் வாக்காளர்களின் அரசியல் நம்பிக்கையைக் கொண்டிருந்தன. ஹிட்லர் சான்சிலராக நியமிக்கப்படுவதற்கு முன்னதாக நடத்தப்பட்ட கடைசி ஜேர்மன் தேர்தல்களில், இந்த இரண்டு கட்சிகளின் மொத்த வாக்குகள் நாஜிக்கள் பெற்றதைவிட மிகவும் அதிகமாகும். இருப்பினும், வாக்குகளின் எண்ணிக்கை பாசிச மற்றும் சோசலிச இயக்கங்களின் பலத்தை ஒப்பீட்டுரீதியில் முழுமையாக வெளிப்படுத்திவிடாது. அதிரடி துருப்புகளுடன் ஹிட்லரின் இயக்கம் —சீர்குலைந்த குட்டி முதலாளித்துவம் மற்றும் உதிரிப்பிரிவுகளை (lumpenized strata) அடிப்படையாக கொண்டிருந்த அது— ஓர் ஒழுங்கு வடிவமற்று உறுதியற்ற கூட்டமாக இருந்தது. மறுபுறம் தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாக கொண்ட இரண்டு சோசலிச கட்சிகளும், முக்கிய உற்பத்தி சக்திகளுடனான அவற்றின் உள்ளார்ந்த உறவு காரணமாக, ஒரு பலம்வாய்ந்த சமூக மற்றும் அரசியல் பலத்தைப் பிரதிநிதித்துவம் செய்தன.

எவ்வாறிருந்த போதினும் ஹிட்லருக்கு மிகப்பெரும் சாதகமாக இருந்தது என்னவென்றால், தொழிலாளர் இயக்கத்திற்குள் இருந்த அரசியல் பிளவாகும். சமூக ஜனநாயக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டினது தலைவர்களும் பாசிச அச்சுறுத்தலுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை பாதுகாக்க எவ்வித கூட்டு நடவடிக்கை எடுக்கவும் மறுத்தனர். சமூக ஜனநாயகவாதிகளின் மனோபாவம், அழுகிப் போயிருந்த முதலாளித்துவ வைய்மார் ஆட்சிக்கு அடிபணிந்த அவர்களின் கோழைத்தனத்திலிருந்தும், பாசிசவாதிகளுக்கு எதிராக சமூக ஜனநாயக மற்றும் கம்யூனிஸ்ட் தொழிலாளர்களின் ஐக்கியப்பட்ட தாக்குதலினால் சாத்தியமாகக்கூடிய புரட்சிகர விளைவுகளைக் குறித்த அவர்களது அச்சத்திலிருந்தும் பெருக்கெடுத்தது.

பாசிச அச்சறுத்தலை திருப்பித்தாக்கும் விதத்தில், சமூக ஜனநாயகவாதிகளுடன் இணைந்து ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்க வாய்ப்பளிப்பதன் மூலமாக, தொழிலாள வர்க்கத்தின் இந்த பலவீனமான பிளவைக் கடந்து வருவதே கம்யூனிஸ்ட் கட்சி முகங்கொடுத்த மத்திய பிரச்சினையாக இருந்தது. SPD தலைவர்களின் அரசியல் எதிர்ப்பு இருந்தபோதினும், KPD உத்தியோகபூர்வமாக, நேரடியாக மற்றும் உறுதியாக ஐக்கிய முன்னணிக்காக முறையீடுகள் செய்திருந்தால், மிக குறைந்தபட்சமாகவாவது, அது சமூக ஜனநாயக தொழிலாளர்கள் மீது ஓர் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதுடன், ஜேர்மன் பாட்டாளி வர்க்க அணிகளுக்கு இடையில் இருந்த பிளவுகளுக்கு கம்யூனிஸ்டுகள் பொறுப்பாக மாட்டார்கள் என்பதையும் எடுத்துக்காட்டி இருக்கும். சமூக ஜனநாயகவாத பரந்த கருத்து மாற்றம், ஹிட்லருக்கு எதிரான ஒரு தீவிர போராட்டத்திற்கு SPD மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் காட்டிய எதிர்ப்பை கடந்துவர தவறி இருந்தாலுமே கூட, கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு உறுதியான பிரச்சாரம், மில்லியன் கணக்கான சமூக ஜனநாயவாத தொழிலாளர்களின் கண்களில் அதன் அந்தஸ்தை உயர்த்தி இருக்கும், அவர்களது கணிசமான பிரிவுகளை அதன் தரப்பிற்குக் கொண்டு வந்திருக்கும்.

ஆனால் அதுபோன்றவொரு பிரச்சாரம் KPD ஆல் ஒருபோதும் நடத்தப்படவில்லை. அதற்கு மாறாக, KPD கம்யூனிச அகிலத்தின் ஆறாவது மாநாட்டில் ஸ்ராலினிசவாதிகளால் கொண்டு வரப்பட்ட அதிதீவிர-இடதுவாத "மூன்றாம் காலகட்ட" போக்குடன் இணைந்து கொண்டு, சமூக ஜனநாயகமே பாசிசத்தின் ஒரு வகைப்பட்டது — துல்லியமாக கூறுவதானால், "சமூக பாசிசம்" என்று அறிவித்தது. இத்தகைய "சமூக பாசிசத்துடனான" அனைத்து உடன்பாடுகளையும் கருத்திலெடுப்பதே ஏற்றுக்கொள்ள முடியாது எனப்பட்டது.

1930களின் தொடக்கத்தில், அப்போது, துருக்கிய கடல் எல்லையில் பிரின்கிபோ (Prinkipo) தீவுக்கருகில் நாடு கடத்தப்பட்ட நிலையில் இருந்துவந்த, ட்ரொட்ஸ்கி, ஜேர்மன் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு மரணகதியிலான அச்சுறுத்தலை பாசிசம் பிரதிநிதித்துவம் செய்வதாக எச்சரித்ததுடன், ஒரு ஐக்கிய முன்னணிக்காக KPD போராட தவறுவது, ஹிட்லர் அதிகாரத்திற்கு வர பாதை அமைத்து விடுமென்றும் எச்சரித்தார். செப்டம்பர் 26, 1930 இல் ட்ரொட்ஸ்கி எழுதினார்:

ஜேர்மனியில் முதலாளித்துவ ஆட்சியின் கையாலாகாத தன்மை, அந்த ஆட்சியில் சமூக ஜனநாயகம் வகிக்கும் பழமைவாத பாத்திரம், மற்றும் அதை அகற்றுவதற்கு கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றுதிரண்ட சக்தியின்மை ஆகியவற்றின் ஒரு கூர்மையான வெளிப்பாடாக, ஜேர்மனியில் பாசிசம் ஒரு நிஜமான அபாயமாக மாறியுள்ளது. இதை நிராகரிப்பவர் யாராயினும் அவர் ஒரு குருடர் அல்லது வீம்புக்காரனாவார்.29

அவர் எழுதினார், பாசிசத்திற்கு எதிராக தற்காத்துக் கொள்வதற்குரிய ஒரு வெற்றிகரமான போராட்டம் என்பது, “பெரும்பான்மை ஜேர்மன் தொழிலாள வர்க்கத்துடன் நெருக்கமாவதற்கான ஒரு கொள்கையை உருவாக்குவதும், பாசிச அச்சுறுத்தலுக்கு எதிராக சமூக ஜனநாயகவாதத்தையும், கட்சி-சாராத தொழிலாளர்களையும் கொண்ட ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்குவதுமே அதன் அர்த்தமாகும்.”30

நவம்பர் 26, 1931இல் ட்ரொட்ஸ்கி எழுதினார்:

எச்சரிக்கை அளிக்க வேண்டியது இடது எதிர்ப்பின் கடமையாகும்: கம்யூனிச அகிலத்தின் தலைமை, ஜேர்மன் பாட்டாளி வர்க்கத்தை ஒரு பாரிய பேரழிவை நோக்கி உந்திச் செல்கிறது, பாசிசத்தின் முன்னால் நடுநடுங்கி மண்டியிடுவதே அந்நடவடிக்கையின் சாராம்சமாக உள்ளது.

தேசிய சோசலிஸ்டுகள் அதிகாரத்திற்கு வருவதென்பது, அனைத்திற்கும் முதலாவதாக, ஜேர்மன் பாட்டாளி வர்க்க தலைமையை நசுக்குவது, அதன் அமைப்புகளை அழிப்பது, அதன் மீதிருக்கும் அதன் நம்பிக்கையை மற்றும் அதன் எதிர்காலத்தை வேருடன் களைவது என்பதையே அர்த்தப்படுத்தும். ஜேர்மனியில் பிரமாண்டமாக முதிர்ச்சி அடைந்து கூர்மையுடன் இருக்கும் சமூக முரண்பாடுகளை கருத்தில் கொண்டால், ஜேர்மன் தேசிய சோசலிஸ்டுகளின் வேலையுடன் ஒப்பிடுகையில், இத்தாலிய பாசிசத்தின் நரக வேலை, சிலவேளை ஒரு அர்த்தமற்ற ஏறக்குறைய இரக்கமுள்ள அனுபவம் போல தோன்றக்கூடும்.31

ஜனவரி 27, 1932இல், ஹிட்லர் வெற்றி பெற்றால் அது ஒரு கம்யூனிச வெற்றிக்கே பாதையைத் திறந்துவிடும் என்று ஸ்ராலினிச தலைவர்களால் கூறப்பட்ட பரிதாபகரமான வாதங்களுக்கு பதிலளித்து, ட்ரொட்ஸ்கி எழுதினார்:

பாசிசம் வெறுமனே ஒடுக்குமுறை நடவடிக்கைகளின், கொடூரமான படைகளின், மற்றும் பொலிஸ் பயங்கரங்களின் ஒரு அமைப்பு அல்ல. பாசிசம், முதலாளித்துவ சமூகத்திற்குள் பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தின் அனைத்து அடிப்படை கூறுகளையும் வேரூடன் களைவதை அடிப்படையாக கொண்ட ஒரு பிரத்தியேகமான ஆட்சி செலுத்தும் அமைப்பு முறையாகும். கம்யூனிச முன்னணிப்படையை அழிப்பது மட்டுமே பாசிசத்தின் வேலையல்ல, மாறாக ஒட்டுமொத்த வர்க்கத்தையும் பலவந்தமாக ஒற்றுமையின்மைக்குள் வைத்திருப்பதே அதன் வேலை. தொழிலாளர்களின் மிகவும் புரட்சிகர பிரிவுகளை ஸ்தூலமாக நிர்மூலமாக்குவதையும் இதில் சேர்க்காமல் விட முடியாது. அனைத்து சுயாதீனமான, சுயஆர்வ அமைப்புகளையும் நசுக்குவது, பாட்டாளி வர்க்கத்தின் தற்காப்புக்குரிய அனைத்து பாதுகாப்பு அரண்களையும் அழிப்பது, சமூக ஜனநாயகம் மற்றும் தொழிற்சங்கங்களால் ஒரு நூற்றாண்டின் முக்கால் பங்கு காலப்பகுதியில் என்னவெல்லாம் சாதிக்கப்பட்டதோ அவற்றை வேரோடு களைவது இவையே அதற்கு அவசியமாகிறது.32

நான் ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களில் இருந்து இன்னும் ஒரேயொரு பத்தியை மேற்கோளிடுவேன். ஹிட்லர் வெற்றி பெற்றால், ஜேர்மனி மற்றும் சோவியத் ரஷ்யாவுக்கு இடையே தவிர்க்கவியலாமல் போர் எழுமென எச்சரித்து, ஏப்ரல் 1932இல் ட்ரொட்ஸ்கி ஓர் அறிக்கை விடுத்தார். ட்ரொட்ஸ்கி அவரது வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடுத்திருந்ததுடன், அவர் பதவியில் இருந்தால் எவ்வாறு ஜேர்மனியில் ஒரு பாசிச வெற்றிக்கு விடையிறுப்பார் என்பதை விவரித்தார்:

அத்தகையவொரு சம்பவம் குறித்து தந்திச் செய்தி கிடைத்ததும், நான் வளங்களை ஒன்றுதிரட்டும் ஆணையில் கையெழுத்திடுவேன். நீங்கள் உயிராபத்தான ஓர் எதிரியை உங்கள் முன்னால் காண்கிறீர்கள் என்றால், தேவையை ஒட்டி புறநிலைமைகளின் தர்க்கத்திலிருந்து போர் வருகிறதென்றால், அந்த எதிரி தன்னைத்தானே ஸ்தாபித்துக் கொள்ளவும் பலப்படுத்திக் கொள்ளவும் அவகாசம் அளிப்பது மன்னிக்க முடியாத அசட்டைத்தனமாக இருக்கும், அவசியமான கூட்டணிகளை தீர்மானியுங்கள், அவசியமான உதவிகளைப் பெறுங்கள், ஒரு பிரமாண்டமான அபாயகரமான வடிவத்தை எடுப்பதற்கு விடாது, மேற்கிற்கு மட்டுமல்லாது கிழக்கிற்குமான ஒருங்குவிந்த இராணுவ நடவடிக்கைக்கான ஒரு திட்டத்தை உருவாக்குங்கள், அவ்விதத்தில் ஒரு பிரமாண்டமான அபாயத்தின் பரிமாணங்களுக்கு வளர்ந்து நில்லுங்கள்.33

இன்று எமக்கு தெரியும் என்ன நடந்தது என்று. அதாவது நாஜிக்களின் வெற்றி, ஸ்ராலினின் அதற்கடுத்த துரோகமாக ஹிட்லருடன் வலிந்து-தாக்காத உடன்படிக்கை (non-aggression pact), இரண்டாம் உலக போர் வெடிப்பு, பார்பரோசா தாக்குதலை ஹிட்லர் தொடங்க தயாரானபோது சோவியத் பாதுகாப்பு தயார்நிலையை ஸ்ராலின் கோழைத்தனமாக கலைத்தமை, ஜேர்மன் படையெடுப்பை எதிர்ப்பதில் இருபத்தி ஏழு மில்லியன் சோவியத் சிப்பாய்களின் இழப்பு எனபவற்றை நாம் அறிந்துள்ள நிலையில், அந்த துயரகரமான இழப்புகளைக் குறித்தும், மனித உயிர்களின் அழிவு குறித்த ஓர் உணர்வில்லாமல் ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களை ஒருவரால் வாசிக்கவே முடியாது. ட்ரொட்ஸ்கியின் —புரட்சிகர மார்க்சிசத்தின்— கொள்கைகள் மேலோங்கி இருந்தால், எத்தனையோ மனித அவலங்களும், பாதிப்புகளும் தவிர்த்திருக்கலாம், இருபதாம் நூற்றாண்டின் போக்கு எவ்வளவோ வேறுபட்டதாகவே இருந்திருக்கும்.

சீனா மற்றும் ஜேர்மனியின் தோல்விகளைக் குறித்து நாம் செய்த சுருக்கமான மீளாய்வு, சர்வதேச தொழிலாளர் இயக்கத்தில் ஸ்ராலினிசத்தின் எதிர்ப்புரட்சிகர பாத்திரத்தையும், சோவியத் ஒன்றியத்தின் பரிணாமத்தில் அது ஏற்படுத்திய தாக்கத்தையும் குறித்த விடயத்திற்கு ஓர் ஆரம்ப அறிமுகத்தை வழங்கக்கூட போதுமானதாக இருக்காது. ஆனால் நாம் ஏற்கனவே ஒரு விரிவுரையின் கட்டமைப்புக்குள் நியாயமாக எவ்வளவு எடுத்துக்காட்ட முடியுமோ அந்த வரம்புகளையும் வலுக்கட்டாயமாக மீறி உள்ளோம். இருப்பினும் வரலாற்று தெளிவுக்காக நான் ஒரு புள்ளியைச் சேர்த்தே ஆக வேண்டும். ஜேர்மன் தொழிலாள வர்க்கத்திற்கு ஏற்பட்ட தோல்வி, ஸ்ராலினிச ஆட்சியின் பரிணாமத்திலேயே ஒரு தீர்க்கமான திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஸ்ராலினின் சொந்த கொள்கைகளே முக்கிய பொறுப்பாக இருந்த சக்திவாய்ந்த பாசிச ஆட்சியிடமிருந்து ஒரு தீவிர அச்சுறுத்தலை எதிர்கொண்டிருந்த அவர், சோவியத் அரசையும் உலக சோசலிசப் புரட்சி இலட்சியத்தையும் இணைத்த அப்போதுகூட இருந்துவந்த மெல்லிய இழைகளையும் துண்டிக்க நகர்ந்தார். அப்போதிருந்து, சோவியத் ஒன்றியத்தின் பாதுகாப்பு, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நலன்களை விலையாகக் கொடுத்து ஏகாதிபத்திய அரசுகளுடன் —சூழ்நிலையை பொறுத்து ஜனநாயகமா அல்லது பாசிசமா என— அரசியல் கூட்டணிகளை ஜோடிப்பதன் அடிப்படையில் இருந்தது. உலக விவகாரங்களில் சோவியத் ஒன்றியத்தின் பாத்திரம் நேரடியாக ஒரு எதிர்புரட்சிகர சுபாவத்தை ஏற்றது, அந்த மாற்றம் ஸ்பானிய புரட்சியின் காட்டிக்கொடுப்பில், பழைய போல்ஷிவிக்களது படுகொலையில், சோவியத் ஒன்றியத்தின் எல்லைகளுக்கு வெளியே இருந்த ஸ்ராலினிச ஆட்சிகளுக்கு எதிரான புரட்சிகர எதிராளிகளை வேட்டையாடுவதில், இறுதியாக ஸ்ராலின்-ஹிட்லர் உடன்படிக்கையில் மரணகதியிலான வெளிப்பாட்டைக் கண்டது.

ஹோப்ஸ்வாம் இதையெல்லாம் அறியாதவர் அல்ல. பல தசாப்தங்களாக பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் ஓர் உறுப்பினராக இருக்க அவரை அனுமதித்த அரசியல் கருத்துருக்கள் மீது எந்தவித விமர்சனரீதியிலான மீளாய்வையும் செய்ய அவர் தவறி உள்ளார் என்பதையே அவரது எழுத்துக்கள் எடுத்துக்காட்டுகின்றன: ஹோப்ஸ்வாம் நமது முகத்திற்கு நேராக கூறுகிறார், “சோவியத் சகாப்தத்தில் இருந்த கொடுமையான முரண்பாடு என்னவென்றால், சோவியத் மக்கள் எதிர்கொண்ட ஸ்ராலினும், அந்நாட்டிற்கு வெளியே ஒரு விடுவிக்கும் சக்தியாக பார்க்கப்பட்ட ஸ்ராலினும் ஒரேமாதிரியாக இருந்தார். மேலும் அவர் ஒரு தரப்பினருக்கு சர்வாதிகாரியாக இருந்ததால்தான், மற்றவர்களுக்கு அவர், குறைந்தபட்சம் பகுதியாகவாவது, விடுதலை அளிப்பவராக இருந்தார்."34

உண்மையில் ஹோப்ஸ்வாம் என்ன எழுதியிருக்க வேண்டுமென்றால் "சோவியத் மக்கள் எதிர்கொண்ட ஸ்ராலினும், வஞ்சகத்தனமான முறையில் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியால் சித்தரிக்கப்பட்ட ஸ்ராலினும் முற்றிலும் ஒரே மாதிரியாக இருக்கவில்லை," என்று எழுதி இருக்கலாம். அதற்கு மாறாக, துரதிருஷ்டவசமாக, இழிந்த ஸ்ராலினிச-சார்பு அனுதாபங்களில் ஈடுபட்டதன் மூலமாக ஹோப்ஸ்வாம் தன்னைத்தானே சமரசப்படுத்திக் கொள்கிறார், மேலும் அவ்விதத்தில் அவரது சொந்த புத்திஜீவித வாழ்வின் துயரகரமான முரண்பாட்டையும் அம்பலப்படுத்தி விடுகிறார்.

கட்சி ஆட்சிமுறை, பொருளாதார கொள்கை, மற்றும் சர்வதேச மூலோபாயம் ஆகிய மூன்று விடயங்களில் ஸ்ராலின் ஆட்சிக்கும் இடது எதிர்ப்புக்கும் இடையில் இருந்த பிரதான வேறுபாடுகளைக் குறித்த நமது மீளாய்வில், ட்ரொட்ஸ்கிசம் —அதாவது நிஜமான மார்க்சிசம்— வெற்றி பெற்றிருந்தால், அனைத்து சாத்தியக்கூறுடன் சோவியத் வரலாற்றின் போக்கையும் சர்வதேச சோசலிச இயக்கத்தின் போக்கையும் ஆழமாக மாற்றி இருக்கும் என்பதை எடுத்துக்காட்ட நாம் முயன்றுள்ளோம். வரலாற்று தோல்வியை குறித்து ஒருவித முழுமையான நியதிவாதத்தின் (Determinism) கட்டமைப்பிற்குள் இருந்து கொண்டு, சோவியத் ஒன்றியத்தின் வரலாற்றை விளக்கமளிப்பவர்கள் இவ்வாறான வாதமுறையை நிராகரிப்பார்கள் என்று நாம் அனுமானிக்கிறோம். அத்தகைய திருத்தமுடியாத ஐயவாதிகள் மற்றும் அவநம்பிக்கைவாதிகளை பொறுத்த வரையில், மற்றும் சோசலிசத்தின் தோற்றுவாய் ஆரம்பத்திலிருந்தே மங்கலாக இருந்துள்ளதென நம்புபவர்களைப் பொறுத்த வரையில், கொள்கைகள், வேலைத்திட்டங்கள் மற்றும் அகநிலை நடவடிக்கையின் ஏனைய எல்லா வடிவங்களும் வரலாற்றில் எவ்வித பங்கும் வகிப்பதில்லை.

ஸ்ராலினிசத்திற்கு வரலாற்று மாற்றீடு ஆய்வு செய்யப்பட வேண்டும்

நாம் ஏற்கனவே விவரித்திருப்பதைப் போல, ட்ரொட்ஸ்கி வென்றிருந்தால் சோவியத் ஒன்றியம் உயிர் பிழைத்திருக்கும், சோசலிசத்தின் வெற்றியை உத்தரவாதப்படுத்தி இருக்கும் என நிச்சயத்தன்மையுடன் குறிப்பிடுவது சாத்தியமில்லை. ஆனால் அதுபோன்றவொரு வாதம், அரசியல் மற்றும் புத்திஜீவித நேர்மையோடு வரலாற்று மாற்றீடுகளை குறித்த நமது கருத்துக்களை பதிவு செய்வதற்கு மிக அரிதாகவே அவசியப்படுகிறது. என்ன நிகழ்ந்தது என்பது மட்டுமில்லாமல் வேறொரு நிஜமான சாத்தியக்கூறும் வரலாற்று அபிவிருத்தியின் போக்கில் இருந்தது என்பதையும்; மேலும், அவ்விதத்தில் கூறுவதானால், சோவியத் ஒன்றியம் அதன் வரலாற்றில் தீர்க்கமான புள்ளிகளை எட்டிய குறிப்பிட்ட முக்கிய கட்டங்களில், ஏனைய கொள்கைகளை அதாவது மார்க்சிச கொள்கைகளை நடைமுறைப்படுத்தி இருந்தால், நிகழ்ந்த சம்பவங்களில் இன்னும் அதிக சாதகமான விளைவை சாத்தியமாக்கி இருக்கலாம் என்பதை ஸ்தாபிப்பது மட்டுமே நமக்கு அவசியமாக உள்ளது.

இங்கே நாம் மற்றொரு கேள்வியை எதிர்நோக்குகிறோம், அது ஆழமானதும் மற்றும் பொருத்தமானதும் ஆகும்: அதாவது, ட்ரொட்ஸ்கியும் இடது எதிர்ப்பும் பிரதிநிதித்துவம் செய்த நிலைப்பாடுகளை ஒருவர் ஒதுக்கிவிட்டாலும் கூட, தத்துவார்த்த நிலைப்பாட்டிலிருந்து, ஸ்ராலினிச ஆட்சியில் இருந்தவற்றில் ஒரு நிஜமான மார்க்சிச மாற்றீடாக, இந்த இடது எதிர்ப்பு, சோவியத் ஒன்றியத்திற்குள் ஓர் உண்மையான முக்கிய அரசியல் சக்தியாக எப்போதேனும் இருந்ததா? அனைத்திலும் மேலாக, ஒரு பயனற்ற ஊக அணுகுமுறையாக இல்லாத மாற்றீடுகள் குறித்த பரிசீலினை, அது அப்போதிருந்த புறநிலைமைகளின் கட்டமைப்புக்குள் என்ன சாத்தியமாக இருந்தது என்ற வரம்புக்குள் அதனை நிறுத்திக்கொள்ளவேண்டும்.

இந்த முக்கிய கேள்விக்கு பதிலளிப்பதில், நான் ஜேர்மன் வரலாற்றாளர் மிகையில் ரைய்மானின் ஸ்ராலினிசத்தின் பிறப்பு (The Birth of Stalinism) என்று தலைப்பிட்ட ஒரு மதிப்பார்ந்த படைப்பை மேற்கோளிட விரும்புவேன்.

பொதுவாகவே இடது எதிர்ப்பின் முக்கியத்துவம் இலக்கியங்களில் குறைமதிப்பீடு செய்யப்படுகிறது. ... பாரிய கட்சி உறுப்பினர்கள் மீதும், குறைந்தளவில் பரந்த மக்கள் அடுக்குகளிடையேயும் இடது எதிர்ப்புக்கு கணிசமான செல்வாக்கு இருந்தது என்றால் பல எழுத்தாளர்கள் ஐயுறுகின்றனர். உண்மையில் அந்த ஆண்டுகளில் எதிர்ப்பின் மீது கட்சியால் பயன்படுத்தப்பட்ட மலைப்பூட்டும் அசகாய நடவடிக்கைகளின் வெளிச்சத்தில் —உத்தியோகபூர்வ பிரகடனங்கள், அறிக்கைகள், துண்டறிக்கைகள், மற்றும் நூல்களின் தொகுப்புகள், சோவியத் ஒன்றியத்தின் தொலைதூர பகுதிகளிலும் கூட ஊடுருவி இருந்த பாரிய அரசியல் பிரச்சாரங்களை குறிப்பிட வேண்டியதே இல்லை— அவை அனைத்தும் அதுபோன்ற கண்ணோட்டங்களுடன் ஒருவரை அரிதாகவே உடன்படச் செய்யும்.

பழைய மற்றும் அனுபவம் வாய்ந்த கட்சி தலைவர்களின் ஆதரவுடன் இருந்த அங்கத்தவர்களின் ஒரு பிரிவான ஐக்கிய எதிர்ப்பு (united opposition), 1926இன் இளவேனிற்காலத்தில், நிஜமாகவே சில முக்கிய இடங்களைக் கைப்பற்றியது. அது லெனின்கிராட், உக்ரேன், ட்ரான்ஸ்காக்கேசியா, மற்றும் யூரல் பகுதியில்; பல்கலைக் கழகங்களில்; சில மத்திய அரசாங்க அலுவலகங்களில்; மாஸ்கோ மத்திய தொழில்துறை பகுதியின் பல ஆலைகளில்; மற்றும் உள்நாட்டு போரின் கடுமையான ஆண்டுகளில் ட்ரொட்ஸ்கியின் தலைமையின் கீழ் கடந்து வந்திருந்த இராணுவம் மற்றும் கடற்படையின் கட்டளைப் பிரிவின் ஒரு அடுக்கினரிடையேயும் செல்வாக்கு பெற்றிருந்தது. கட்சி தலைமையால் நடத்தப்பட்ட ஒடுக்குமுறை, எதிர்ப்பு வளர்வதை தடுத்தது, ஆனால் கட்சி குழுக்களில் எடுக்கப்பட்ட பல்வேறு வாக்கெடுப்புகளில் எடுத்துக்காட்டப்பட்டதையும் விட, எதிர்ப்பு அப்போது பெரிதும் அதிகமாக செல்வாக்கு பெற்றிருந்தது.35

ட்ரொட்ஸ்கியும், இடது எதிர்ப்பின் ஏனைய பிரதான தலைவர்களும், 1927 ஜூலை மற்றும் ஆகஸ்டில் நடந்த மத்திய குழு பிளீனத்தில், ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். இதுவுமேகூட இடது எதிர்ப்பை மௌனமாக்குவதில் தோல்வியுற்றது.

ரைய்மான் எழுதுகிறார்:

அந்த மாநாட்டிற்குப் பின்னரும் கூட, கட்சி அமைப்புகளில் —அதுவும் குறிப்பாக நகர்ப்புறங்களிலும் இரண்டு தலைநகரங்களிலும் இருந்த மையங்களில்— எதிர்ப்பின் இலக்கியங்களும், துண்டறிக்கைகளும் நிரம்பி வழிந்தன. எதிர்ப்பின் அதிகரிக்கப்பட்ட நடவடிக்கையைக் குறித்த அறிக்கைகள், பல்வேறு நகரங்களில் இருந்தும் ஒட்டுமொத்த மாகாணங்களில் இருந்தும் —லெனின்கிராட், உக்ரேன், ட்ரான்ஸ்காக்கேசியா, சைபீரியா, யூரல், மற்றும் நிச்சயமாக, எதிர்ப்பின் பெரும் எண்ணிக்கையிலான அரசியல் தலைவர்கள் வேலை செய்து வந்த மாஸ்கோவிலிருந்தும்— ஒன்றுக்கு பின் ஒன்றாக வந்த வண்ணம் இருந்தன. அங்கே தொழில்துறை தொழிலாளர்களும் இளைஞர்களும் பங்கெடுத்த சட்டவிரோதமான மற்றும் பாதியளவுக்கு சட்ட அங்கீகாரம் கொண்ட கூட்டங்களின் எண்ணிக்கை ஒரே சீராக அதிகரித்து வந்தன. பல பெரிய கட்சி பிரிவுகளிடையேயும் கணிசமான அளவில் வெளிப்படையாகவே எதிர்ப்பின் செல்வாக்கு நிலவியது. இவை ஸ்ராலினிச கட்சி எந்திரத்தின் முந்தைய சுதந்திரமான செயல்பாடுகளை பாதித்தன. எதிர்ப்பின் நடவடிக்கை இராணுவத்தையும் பலமாக பாதித்தது. லெனின்கிராட் இராணுவ பிரிவு மற்றும் லெனின்கிராட்டில் உள்ள படைப்பிரிவிலிருந்தும், குரோன்ஸ்ராட்டில் இருந்தும், உக்ரேன் மற்றும் பைலோரஷ்யாவில் இருந்த துருப்பு பிரிவுகளிடமிருந்தும் கணிசமான அளவில் எதிர்ப்பின் ஆளுமை அதிகரித்திருந்ததைக் குறித்த செய்திகள் வந்தன.

ஆனால் பிரதான பிரச்சினை, எதிர்ப்பினரின் நடவடிக்கையில் அதிகரிப்பு இருக்கவில்லை, மாறாக கட்சிக்குள் ஒட்டுமொத்தமாக அதிகார சமநிலையைக் குறித்து இருந்தது. வெளிப்படையாகவே பெரும் எண்ணிக்கையிலான பிரபல அரசியல் தலைவர்கள் எதிர்ப்பின் தரப்பில் இருந்தனர். கட்சி கொள்கையின் பின்னடைவுகள் மற்றும் தோல்விகளை ஆதாயங்களாக திருப்புவதற்கு கட்சி தலைமையின், குறிப்பாக ஸ்ராலின் மற்றும் புக்ஹாரினது, பலவீனமான அதிகாரம் போதுமானதாக இருக்கவில்லை.36

அவ்வாறாயின், இடது எதிர்ப்பு பிரதிநிதித்துவம் செய்த சவாலை, ஸ்ராலின் கன்னையால் எவ்வாறு கடந்து வர முடிந்தது? ரைய்மான் விளக்குகிறார்: “சோவியத் உளவுப் பிரிவான GPUவை இந்த மோதலுக்குள் இழுத்து வராமல் தலைமையால் நிலைமையைச் சமாளிக்க முடியவில்லை."37

அதற்குப் பிந்தைய சோவியத் ஒன்றியத்தின் மற்றும் சர்வதேச சோசலிச இயக்கத்தின் வரலாறு, ஸ்ராலினிச அதிகாரத்துவம் அதன் அதிகாரத்தையும், தனிச்சலுகைகளையும் ஒன்றுதிரட்டி வைக்க பயன்படுத்திய இரத்தந்தோய்ந்த வன்முறை, விளைவுகளின் பதிவுகளாக உள்ளது. ஸ்ராலினிச ஒடுக்குமுறையின் பாதிப்பு குறித்தும், அதற்கு கொடுக்கப்பட்ட விலைகள் குறித்தும் பரிசீலிக்காமல் வரலாற்று மாற்றீடுகள் குறித்த ஒரு விவாதத்தை முடிப்பது சாத்தியமல்ல. நாம் பார்த்துள்ளதைப் போலவே, ஹோப்ஸ்வாம், இந்த பிரச்சினையிலிருந்து நழுவி விடுகிறார். "சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினை விட முற்றிலும் கடுமை குறைந்த யாரோ ஒருவரது தலைமை இருந்திருந்தாலும்,” தொழில்துறைமயமாக்கலுக்கு "ஒரு பெருமளவு நிர்ப்பந்தம் தேவையாக இருந்திருக்கும்" என அவர் நமக்கு தெரிவிக்கிறார். அதிகாரத்துவம் ஒழுங்கமைத்த வன்முறையின் அரசியல் நோக்கத்தையும், சமூக அடித்தளங்களையும் ஹோப்ஸ்வாம் அடியோடு புறக்கணித்துவிடுகிறார். ஸ்ராலினிச வன்முறை, ஏதோவொரு வகையிலான புரட்சிகரத்தன்மையின் அதீதம் அல்ல, மாறாக அது எதிர்புரட்சி பயங்கரமாகும்.

ஹோப்ஸ்வாம் இந்த விடயத்தை கையாள விரும்பவில்லை, ஏனென்றால், சோவியத் ஒன்றியத்தின் மற்றும் சர்வதேச சோசலிச இயக்கத்தின் வரலாற்று அர்த்தத்தையும் களையெடுத்தலின் விளைவுகளையும் நேர்மையாக கையாள்வது என்பது, அனேகமாக அவரது வரலாற்று ஆதாரவாதங்களைக் கொண்டு செல்வதற்குப் பொருந்தாமல் போகும். ஸ்ராலினிச வகைப்பட்ட சோவியத் அபிவிருத்திக்கு அங்கே ஒரு மாற்றீடு இருந்தது, ஆனால் ஸ்ராலினிச பயங்கரம் என்ற வழிவகையைக் கொண்டு அது நிர்மூலமாக்கப்பட்டது. லூப்யான்கா சிறைச்சாலைகளிலும், சோவியத் ஒன்றியம் முழுவதிலும் இருந்த ஏனைய எண்ணற்ற மரணதண்டனை கூடங்களிலும், அக்டோபர் புரட்சியின் வெற்றிக்கு பங்களிப்பு செய்திருந்த நூறாயிரக் கணக்கான புரட்சிகர சோசலிஸ்டுகள் கொல்லப்பட்டனர். தொழிலாள வர்க்கம் மற்றும் சோவியத் சமூகம் மீதிருந்த அவர்களது ஆதிக்கம், வெறுமனே குறிப்பிட்ட அரசியல் சிந்தனைகளை, அவை எவ்வளவுதான் முக்கியமானவையாக இருந்த போதினும், அவற்றை பரப்புவதோடு மட்டுப்பட்டு இருந்திருக்கவில்லை. ஸ்ராலினால் கொல்லப்பட்டவர்கள், அவர்களது கூட்டு நடவடிக்கையில், ரஷ்ய தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர இயக்கத்தை ஒரு உலக வரலாற்று முக்கியத்துவமாக எடுத்துக்காட்டிய, ஓர் அசாதாரண சோசலிச கலாச்சாரத்தின் பிரதிநிதிகளாக இருந்தனர்.

இந்த கலாச்சாரம், ட்ரொட்ஸ்கியிடம், அதன் மிக உயர்ந்த வெளிப்பாட்டைக் கண்டது. விக்டர் சேர்ஜ் மிக அறிவார்ந்தரீதியில் விளக்கியதைப் போல:

ட்ரொட்ஸ்கி போன்றவொரு மனிதர் உருவாக வேண்டுமானால், ஒரு நீண்ட வரலாற்று காலகட்டத்தில் ஆயிரம் ஆயிரக்கணக்கான அவ்வாறான மனிதர்கள் உருவாக வேண்டும். அது ஒரு பரந்த சமூக நிகழ்வுப்போக்கே தவிர, ஒரு வால்நட்சத்திரம் தோன்றுவது போன்றதல்ல...

... இந்த மகத்தான சமூக மாதிரியின் உருவாக்கம் —அது நவீன மனிதனின் உச்சபட்ச இலக்கென நான் நினைக்கிறேன்— 1917க்குப் பின்னர் நிறுத்தப்பட்டது. அதில் உயிர்பிழைத்திருந்த அதன் பெரும்பாலான பிரதிநிதிகளும் 1936-37இல் ஸ்ராலினின் உத்தரவுகளின்படி படுகொலை செய்யப்பட்டனர். இந்த வரிகளை நான் எழுதுகையில், அவர்களது பெயர்களும் முகங்களும் என் முன்னால் வருகின்றன. இம்மாதிரியான மனிதர்களும் அவர்களின் ஒட்டுமொத்த பாரம்பரியமும், தலைமுறையும், நமது காலகட்டத்தின் தரம் கணிசமாக குறைக்கப்படுவதற்கு முன்னதாக, முற்றிலும் ஒழித்துக்கட்டப்பட வேண்டியிருந்தது. எதிர்காலத்திற்கான மனித குலத்தின் சாத்தியக்கூறுகள், சோர்வு மற்றும் பிற்போக்குத்தனத்தின் ஒரு காலகட்டத்தில் உயிர்பிழைத்திருக்க வேண்டுமென ட்ரொட்ஸ்கி போன்ற மனிதர்கள் மிகவும் சங்கடத்துடன் அறிவுறுத்துகின்றனர்.38

நாம் ஏன் இந்த விரிவுரையை, அக்டோபர் புரட்சியின் வரலாற்று விளைவில் இருந்த சாத்தியமான மாற்றீடுகள் குறித்து பரிசீலிப்பதற்காக அர்பணித்துள்ளோம்? நிச்சயமாக, கடந்த காலத்தை மாற்ற முடியாது தான், அதன் விளைவுகளுடன் தான் நாம் வாழ்ந்தாக வேண்டும். ஆனால் கடந்த காலத்தை —மற்றும் அத்தகைய விளைவுகளைக் கொண்டுவந்த நிகழ்ச்சிப்போக்கை— எவ்வாறு நாம் புரிந்து கொள்கிறோம் என்பது தான், நிகழ்கால வரலாற்று சூழலையும், அதற்குள் இருக்கும் சாத்தியக்கூறுகளையும் நாம் புரிந்து கொள்வதற்கு இன்றியமையாத அடித்தளமாகும். எதிர்காலத்தில் சோசலிசத்திற்கான வாய்ப்புவளங்கள் குறித்த மதிப்பீடு, இந்த நூற்றாண்டின் போக்கில் அது கண்ட தோல்விகளுக்கான காரணங்களைப் பற்றிய நமது பொருள்விளக்கத்துடன் பிரிக்கவியலாதவாறு பிணைந்துள்ளது.

இருபதாம் நூற்றாண்டிலிருந்து என்ன படிப்பினைகளை நாம் எடுத்துக்கொள்கின்றோம்? முதலாம் உலகப் போர் வெடித்ததிலிருந்து நடந்துள்ள அனைத்தும் வெறுமனே கட்டுப்படுத்த முடியாத மற்றும் புரிந்துகொள்ள முடியாத சக்திகளின் வெளிப்பாடு என்றால், பின்னர் —உங்கள் விருப்பு வெறுப்புகளைப் பொறுத்து— எதிர்காலத்தில் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்க வேண்டுமென்று நம்பிக்கை வைப்பதையோ அல்லது பிரார்த்தனை செய்வதையோ தவிர, அதற்கதிகமாக அங்கே ஒருவர் செய்வதற்கு வேறொன்றும் இல்லை.

ஆனால் இந்த நூற்றாண்டின் அனுபவங்களைப் படித்து உள்ளீர்த்துக் கொண்டுள்ளவர்களுக்கோ, இப்போதைய வரலாற்று நிலைமை மற்றும் எதிர்கால வாய்ப்புவளங்கள் முற்றிலும் வேறுவிதமாக தோற்றமளிக்கிறது. இந்த நூற்றாண்டின் சம்பவங்கள் ஒரு பரந்த வரலாற்று உள்ளடக்கத்தையும் அர்த்தத்தையும் பெறுகிறது. வரலாற்றில் வேறெந்த காலகட்டத்திலும் இந்தளவுக்கு புரட்சிகர மற்றும் எதிர்ப்புரட்சிகர அனுபவங்கள் நிறைந்திருக்காது. முரண்பட்ட சமூக சக்திகளுக்கு இடையிலான மோதல் முன்னொருபோதும் இல்லாத மட்டத்தில் தீவிரத்தை அடைந்தது. 1917இல் அதன் முதல் மகத்தான புரட்சிகர திருப்பத்தை எட்டிய தொழிலாள வர்க்கம், அதைத் தொடர்ந்து வந்த எதிர்ப்புரட்சியின் பயங்கர சக்திக்கு முன்னால் நிலைக்க முடியாமல் போனதை இந்நூற்றாண்டு நிரூபித்துள்ளது. ஆயினும், ட்ரொட்ஸ்கியின் வேலைகள் மூலமாக இடது எதிர்ப்பும் நான்காம் அகிலமும், அந்த எதிர்புரட்சியின் இயல்பையும் தோல்விகளுக்கான காரணத்தையும் பகுப்பாய்வுக்கு உட்படுத்தி விளங்க வைத்துள்ளது. மேலும் இந்த தத்துவார்த்த மற்றும் அரசியல் அடித்தளத்தின் மீதுதான் நான்காம் அகிலம் நனவுபூர்வமாகவும், வளைந்து கொடுக்காத புரட்சிகர நம்பிக்கையுடனும், எதிர்காலத்திற்கு தயாரிப்புச் செய்கிறது.

1 மார்க்சிசமும் இருபதாம் நூற்றாண்டின் அடிப்படை பிரச்சினைகளும் என்ற தலைப்பில் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடந்த சர்வதேச பாடசாலையில் ஜனவரி 3, 1998இல் வழங்கப்பட்ட விரிவுரை.

2 Stefan Zweig, Die Welt von Gestern: Erinnerungen eines Europäers (Frankfurt am Main: Fischer Taschenbuch Verlag, 1997), (translation by D. North), p. 17.

3 Eric J. Hobsbawm, On History (London: Weidenfeld & Nicolson, 1997), p. 243.

4 Ibid., p. 245.

5 Ibid., p. 246.

6 Ibid., p. 245.

7 Ibid., p. 247.

8 1923 சம்பவங்களைக் குறித்த விரிவான விளக்கத்திற்கு, Pierre Broué எழுதிய The German Revolution 1917–1923 என்பதைப் பார்க்கவும், மொழிபெயர்ப்பு John Archer (Chicago: Haymarket Books, 2006). ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் பிழைகள் குறித்த ட்ரொட்ஸ்கியின் மதிப்பீடு பக்கம் 822இல் மேற்கோளிடப்பட்டுள்ளது.

9 On History, p. 248.

10 Ibid., p. 243.

11 Ibid., p. 249.

12 Ibid.

13 இயற்கை நிகழ்வுகளில் நனவான காரணி எந்த பாத்திரமும் வகிப்பதில்லை என்று கூற முடியாது. ஒரு பூகம்பம் அல்லது வெள்ளப்பெருக்கால் ஏற்படும் சேதத்தின் அளவு, அதற்கு முன்கூட்டியே எந்தளவுக்கு நனவுபூர்வமாக தயாரிப்பு செய்யப்பட்டிருந்தது என்பதையும், பேரிடர் தாக்குதல்களுக்குப் பின்னர் என்ன வேகத்தில் நனவுபூர்வமான எதிர்நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதையும் சார்ந்திருக்கும். ஓர் இயற்கை பேரிடரான 2005இன் நியூ ஓர்லியன் சூறாவளி சம்பவத்தில், நனவான காரணி போதுமான அளவுக்கு பாத்திரம் வகிக்கவில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது.

14 Ibid.

15 Ibid.

16 Ibid.

17 Ibid.

18 Ibid., p. 48.

19 Ibid., p. 249.

20 Leon Trotsky, “The New Course,” The Challenge of the Left Opposition 1923–25, (New York: Pathfinder Press, 1975), p. 79.

21 Ibid., p. 98.

22 Ibid., pp. 98–99.

23 Ibid., p. 88.

24 Ibid., p. 94.

25 The Platform of the Joint Opposition 1927 (London: New Park Publications, 1973), p. 41.

26 Writings of Leon Trotsky 1930 (New York: Pathfinder Press, 1975), pp. 115–117.

27 Ibid., p. 118.

28 On History, p. 251.

29 Leon Trotsky, The Struggle Against Fascism in Germany (New York: Merit Publishers, 1971), p. 78.

30 Ibid., p. 94.

31 Ibid., p. 160.

32 Ibid., p. 186.

33 Writings of Leon Trotsky 1932 (New York: Pathfinder Press, 1973), p. 92.

34 On History, p. 252.

35 Michal Reiman, The Birth of Stalinism: The USSR on the Eve of the “Second Revolution”, trans. George Saunders (Bloomington: Indiana University Press, 1987), pp. 19–20.

36 Ibid., pp. 27–28.

37 Ibid., p. 28.

38 David Cotterill, ed., The Serge-Trotsky Papers (London: Pluto Press, 1994), p. 209.

Loading