David North
1917 சரஷ்ய புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும்

ஏகாதிபத்திய சகாப்தத்தில் சீர்திருத்தமும் புரட்சியும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இருபதாம் நூற்றாண்டு ஓர் மலைப்பூட்டும் புதிரை நம் முன் வைக்கிறது: அன்றாட வாழ்வின் அடிப்படை வடிவங்கள் மற்றும் ஒழுங்கமைப்புகளில் இந்தளவுக்கு ஆழமான மாற்றத்தைக் கண்ட சகாப்தம் மனித வரலாற்றிலேயே வேறெதுவும் இருந்திருக்கவில்லை. விஞ்ஞான முன்னேற்றங்களின் விரிவெல்லையும் வேகமும், ஏறத்தாழ தொடர்ச்சியாக, இந்த பிரபஞ்சம் மற்றும் அதில் நமது பூமி வகிக்கும் இடத்தைப் பற்றிய நமது கருத்தாக்கத்தில் நம்மிடமிருந்து ஒரு புரட்சியை கோருகின்றன. இப்போதும் கூட, செவ்வாய் கிரகத்தில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் நமது தொழில்நுட்ப உபகரணத்திலிருந்து வரும் ஆச்சரியமூட்டும் தகவல்பரிமாற்றங்களை பார்க்கும்போது, நமக்கு மூச்சுவிட மறந்து போகின்றது. விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கேற்ப காலம், வெளி, மற்றும் உயிர்வாழ்வு குறித்த தன் கருத்துருக்களை மாற்றியமைத்துக் கொள்வதற்கும் மற்றும் விரிவுபடுத்திக் கொள்வதற்கும் மனிதகுலம் நிர்பந்திக்கப்படுகிறது. இந்நூற்றாண்டின் சமூகப் பேரழிவுகள் மற்றும் பிரளயங்களின் பின்னணியில்தான் இத்தகைய விஞ்ஞான வளர்ச்சிகள் சாதிக்கப்பட்டுள்ளன. உலக வரைபடம் மீண்டும் மீண்டும் மறுவரையறை செய்யப்பட்டுள்ளது; அத்துடன் எண்ணிலடங்கா எழுச்சிகளும் மற்றும் அவற்றின் பின்விளைவுகளும் நூறுமில்லியன்கணக்கான மக்களை வேரோடு பெயர்த்தெடுத்து உலகெங்கிலும் அவர்களை சிதறியோடச் செய்துள்ளன.

ஆனால், வாழ்க்கை நிலைமைகளில் எழுச்சிகளும் மாற்றங்களும் இருந்தபோதினும், அரசியல் கருத்துக்களத்தில் விஞ்ஞானபூர்வ சிந்தனையின் முன்னேற்றங்களோடு ஒப்பிடுவதற்கு அங்கே ஒன்றுமே இருக்கவில்லை. பிரபஞ்சத்தை குறித்த மனிதனின் அறிவு 1900 தொடங்கி அதிவேகமாக விரிவடைந்து வந்திருக்கிறது; ஆனால் அவனது சொந்த சமூகபொருளாதார இருப்பை ஆளுகின்ற விதிகள் குறித்த அவனது உணர்வாற்றல், நவீன சோசலிசத்தின் ஸ்தாபகர்களான கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெடெரிக் ஏங்கெல்ஸால் எட்டப்பட்ட மட்டத்தையும் விட மிகமிகக் குறைவாகவே உள்ளது.

இன்றையகால முதலாளித்துவ அரசியலின் நிலையை நாம் பரிசீலிப்புக்கு எடுத்துப் பார்த்தால், அங்கே ஒரு குறிப்பிடத்தக்க சிந்தனையாளர் என்றோ அல்லது மூலோபாயவாதி என்றோ ஒரேயொருவரைக் கூட எவராலும் சுட்டிக்காட்ட முடியாது. இருந்தும்கூட, முதலாளித்துவம் அளவிடவியலாத பொருளாதார வலிமை மற்றும் செல்வவளத்தைக் கொண்டிருக்கும் அனுகூலத்தைப் பெற்றுள்ளது. குறைந்தபட்சம், தென்கிழக்காசிய பொருளாதாரக் கொந்தளிப்பு வரும்வரையேனும், உயர்ந்துவந்த பங்குச்சந்தையும் மற்றும் சாதனையளவிலான இலாபங்களும் ஒரு பரந்த மூலோபாய தொலைநோக்கு பார்வைக்கான அவசியத்தை அத்தனை அவசரமானதாக ஆக்கியிருக்கவில்லை. மேலும், முதலாளித்துவ வர்க்க மேலாளுமைக்கு நீண்டகாலமாக எவ்வித வெளிப்படையான அரசியல் சவாலும் இல்லாதிருந்ததால், அது சமூகப் புரட்சியின் அச்சுறுத்தலுக்கு எதிராக தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய பெரிய சிக்கலான பிரச்சினை எதுவுமின்றி, செல்வவளத் திரட்சியின் மீது தன் கவனத்தை குவித்து வைக்க அதனை அனுமதித்தது.

முதலாளித்துவ அரசியலின் நிலையைப் போலவே அதேயளவு மோசமானவகையில், “தொழிலாளர் இயக்கம்" என்ற பெயரில் இடக்கரடக்கலாய் அழைக்கப்படுவதும் வரம்பிலாத வகையில் மோசமடைந்துள்ளது. தொழிலாளர்களின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்வதாக கூறிக்கொண்டே அந்நலன்களில் ஆர்வமின்றியும், மற்றும் அதற்கு விரோதமாகவும் இருக்கும் அதிகாரத்துவவாதிகளின் தலைமையில், உத்தியோகபூர்வ தொழிலாளர் இயக்கங்களோ மரணிக்கும் தறுவாயில் உள்ளன. தொழிலாளர் இயக்கத்தின் நெருக்கடியானது, வெறுமனே தொழிலாளர் அதிகாரத்துவத்தினது நேர்மையின்மை, ஊழல், அலட்சியம் மற்றும் இயலாமையின் விளைவு மட்டுமன்று. மாறாக, இத்தகைய கவர்திறனற்ற பண்புகள், ஒரு ஒட்டுமொத்த வரலாற்றுக் காலகட்டத்தின் சமயத்தில், தொழிலாளர் இயக்கத்தின் இணக்கவாத (accommodationist) மற்றும் சோசலிச-விரோத குணாம்சத்தை தீர்மானித்த சமூக நிகழ்ச்சிப்போக்கில், அவற்றின் தோற்றுவாயை கொண்டுள்ளன. யுத்தத்திற்குப்-பிந்தைய ஏகாதிபத்திய ஒழுங்குமுறைக்கு தொழிலாள வர்க்கத்தை திட்டமிட்டு அடிபணிய செய்ததன் அடிப்படையில், சந்தர்ப்பவாத கொள்கைகளின் ஒரு அரை-நூற்றாண்டுக்கும் மேலான காலம், தொழிலாளர் இயக்கத்தின் சமூக, அரசியல், புத்திஜீவித மற்றும் அறநெறிசார் அங்கலட்சணத்தை வடிவமைத்தது.

பல தசாப்தங்களாக, யுத்தத்திற்குப்-பிந்தைய செழிப்பு மற்றும் அதன் அடிப்படையிலான தேசிய நலன்புரி அரசுகள் (welfare states) செல்வாக்கு பெற்றிருந்த காலத்தில், தொழிலாளர்களது’ இயக்கத்தின் தத்துவார்த்த அறிவீனம் மற்றும் அரசியல் ஊழல்களது நீண்டகால விளைவுகள் வெளிப்படையாகத் தெரியாதிருந்தது. வர்க்கங்களுக்கு இடையிலான சமூக உறவுகள், குறைந்தபட்சம் பிரதான முதலாளித்துவ நாடுகளிலேனும், நலன்புரி அரசின் கட்டமைப்புக்குள் இணக்கமாக செல்ல முடிந்திருந்த மட்டத்திற்கு, அங்கே வர்க்கப் போரின் தலைசிறந்த மூலோபாயவாதிகளுக்கு இடமிருக்கவில்லை. அந்த வரலாற்று காலகட்டம், அனுபவவாத பிலிஸ்டைன்களுக்கு மேலதிகமாக எவரையும் கோரவில்லை, அதுபோன்றவர்கள் அனைத்து ஏகாதிபத்திய நாடுகளிலும் காளான்களை போல எண்ணிலடங்காமல் முளைத்திருந்தார்கள்.

சமரச மற்றும் இணக்க உறவுகள் தகர்ந்துபோன பின்னர்தான் —அதாவது, சர்வதேச முதலாளித்துவம் பழைய மற்றும் வழக்கமான விதிகளுக்கிணங்க இனியும் செயல்பட விரும்பாமல் போனதும் அல்லது செயல்படவியலாமல் போனதும் தான்— யுத்தத்திற்குப்-பிந்தைய தொழிலாளர் இயக்க உள்நாற்றத்தின் பரிமாணம் வெளிப்பட்டுள்ளது.

தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டுள்ள நெருக்கடி, சீர்திருத்தவாதத்தின் தோல்வியை முடிவாக எடுத்துக்காட்டியிருக்கிறது என்பது ஏறத்தாழ பார்த்தவுடன் விளங்கிக் கொள்ளக் கூடிய ஒன்றாகத் தோன்றலாம். ஆயினும் சமூக-ஜனநாயக சீர்திருத்தவாதத்தின் வீழ்ச்சியானது சோவியத் ஒன்றியத்திலும் மற்றும் கிழக்கு ஐரோப்பாவிலும் ஸ்ராலினிச ஆட்சிகளது சர்வகவனத்திற்குரிய பொறிவின் நிழலால் இருட்டடிக்கப்பட்டு விட்டது என்ற உண்மை சூழ்நிலையை சிக்கலாக்கி விட்டிருந்தது. வெகுஜனங்கள் இயல்பாகவே, தாங்கள் எதிர்கொண்டிருக்கும் அரசியல் நிகழ்வுப்போக்கின் தோற்றுவாய்களை ஆராய நாட்டங்கொள்வதில்லை. இந்த ஆட்சிகளை, ஆட்சிகளின் தலைவர்களாலும் சரி மற்றும் அவற்றின் முதலாளித்துவ எதிராளிகளாலும் சரி இருதரப்பினராலும் அவற்றிற்கு பிரயோகிக்கப்பட்ட அடைமொழிப்பெயரைக் கொண்டு பெருந்திரளான தொழிலாளர்கள் அவற்றை "கம்யூனிஸ்ட்" என்றும், “சோசலிஸ்ட்" என்றுமே கருதியிருந்தனர்.

1989 மற்றும் 1991க்கு இடையே, ஸ்ராலினிச ஆட்சிகளின் வீழ்ச்சியானது முதலாளித்துவ பிரச்சாரவாதிகளால் (ஸ்ராலினிஸ்டுகளின் ஒரு கணிசமான பிரிவினாலும் கூட) மார்க்சிசத்தின் மற்றும் சோசலிசத்தின் தோல்வியாகக் காட்டப்பட்டது. இந்த விளக்கத்தை தொழிலாளர்கள் ஏற்றுக்கொண்ட மட்டத்துக்கு, அவர்களால் முதலாளித்துவ சந்தை மற்றும் அதன் கட்டாயங்களுக்கு வேறெந்த மாற்றீடையும் காண முடியவில்லை.

நிச்சயமாக, முதலாளித்துவ சந்தையின் கட்டாயங்களுக்கும் தொழிலாள வர்க்கத்தின் தேவைகளுக்கும் இடையிலான முரண்பாடுகளை புறக்கணிப்பது சாத்தியமில்லை தான். வெகுஜனங்களின் அமைதியின்மை தொழில்முறை நடுத்தர வர்க்கத்தின் பிரிவுகளிடையே ஒரு முன்கூட்டிய பிரதிபலிப்பை காண்கிறது, அதிகரித்துச் செல்லும் சமூகத் துருவப்படுத்தலின் அறிகுறிகளால் அவர்களும் அமைதிகுலைந்திருக்கிறார்கள்.

முதலாளித்துவ சந்தையின் கட்டுப்பாடில்லாத நடவடிக்கைகளை விமர்சித்து, மிக சமீபத்திய காலங்களில், பல நூல்கள் தொடர்ச்சியாக பிரசுரிக்கப்பட்டுள்ளன. தொழிலாள வர்க்க நிலைமைகள் மீதான பூகோளமயமாக்கலின் தாக்கம் குறித்து அவற்றில் கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. அதிகரித்துச் செல்லும் சமூக துருவமுனைப்படல் குறித்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

எட்வார்ட் பேர்ன்ஸ்டைனும் மார்க்சிசத்தை திரித்தலும்

பெருகிவந்த கவலைகளின் இந்த சூழலில், ஐரோப்பிய சமூக ஜனநாயகத்தினது ஆரம்பகால வரலாற்றின் மிகமுக்கிய பிரபலங்களில் ஒருவரான மார்க்சிச-விரோத திருத்தல்வாதத்தின் "தந்தை", எட்வார்ட் பேர்ன்ஸ்டைன் மீது புதுப்பிக்கப்பட்ட ஆர்வம் எழுந்துள்ளது. கடந்த தசாப்தத்தில், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக பிரசுரம் பேர்ன்ஸ்டைனின் பிரதான படைப்பான சோசலிசத்திற்கான முன்நிபந்தனைகள்நூலின் புதிய பதிப்பை பிரசுரித்துள்ளது, இது பேர்ன்ஸ்டைனின் கண்ணோட்டங்கள் மீதான தத்துவார்த்த விவாதங்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்களின் தொகுப்பாகும், மேலும், மிக சமீபத்தில், 1997இல், சோசலிச பரிணாமத்திற்கான தேடல்: எட்வார்ட் பேர்ன்ஸ்டைனும் சமூக ஜனநாயகமும் என்ற தலைப்பில் வரலாற்றாளர் மான்ஃப்ரெட் ஸ்டெகர் எழுதிய எட்வார்ட் பேர்ன்ஸ்டைனின் புதிய வாழ்க்கைசரிதமும் பிரசுரிக்கப்பட்டது. ஸ்டேகரால் மொழிபெயர்க்கப்பட்டு தொகுக்கப்பட்ட பேர்ன்ஸ்டைன் எழுத்துக்களின் ஒரு துணை தொகுப்பும் சமீபத்தில் Humanities Press ஆல் பிரசுரிக்கப்பட்டது, அது குட்டி-முதலாளித்துவ இடது பிரிவுகளின் அரசியல் முயற்சிகளுடன் தொடர்புபட்டதாகும்.

ஸ்டேகர் எழுதிய வாழ்க்கைசரிதம் முக்கியத்துவம் பெறுவது அதன் புலமைத்துவத்தின் தரத்திற்காக அல்ல —இவ்விடயத்தில் சுரத்தின்றி இருப்பதற்கு மேலதிகமாக அங்கே ஒன்றுமில்லை— மாறாக அது முன்னுதாரணமாகக் கொள்ளும் அரசியல் பார்வைக்காக ஆகும். மார்க்சிசம் மீதான பேர்ன்ஸ்டைனின் தாக்குதல்; தொழிலாள வர்க்க புரட்சியிலிருந்து சோசலிசத்தை பிரிப்பதற்கான அவரது முயற்சி; நல்ல நோக்கம்கொண்ட மற்றும் அறவழியில்-உந்தப்பட்ட தாராளவாதம் என்பதற்கு மேலதிகமாக சோசலிசம் வேறொன்றுமில்லை என மறுவரையறை செய்யும் அவரது முன்மொழிவு — இவை அனைத்தும் நம்முடைய காலத்திற்கான வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக ஸ்டேகரால் பார்க்கப்படுகிறது. அனைத்திற்கும் மேலாக, ஸ்டேகரை பொறுத்த வரையில், பேர்ன்ஸ்டைனின் முக்கியத்துவம், முதலாளித்துவத்திற்கு ஒரு புரட்சிகர மாற்றீடு சாத்தியமில்லை என்பதை அவர் அங்கீகரிக்கிறார் என்பதன் அடிப்படையில் உள்ளது.

சீர்திருத்தவாதத்திற்காக பேசிய முதல் பிரசித்திபெற்ற மார்க்சிச தத்துவவாதியாக பேர்ன்ஸ்டைன், நவீன சமூகத்தின் அதிகரித்துவரும் சிக்கலான தன்மை பண்டைய நாட்களின் பரந்துபட்ட புரட்சிகளை அர்த்தமற்றவையாக ஆக்கியிருந்ததாக கருதினார். ...

"சோசலிசத்தின் முடிவு" என்று பாவிக்கப்பட்டதற்கு பின், பேர்ன்ஸ்டைனின் "தாராளவாத சோசலிசத்தின்" கருப்பொருள் மாதிரியானது, நமது சோவியத்திற்கு பிந்தைய மற்றும் (அனேகமாக) கீன்சியத்திற்கு-பிந்தைய சகாப்தத்தில் இருக்கும் ஒரே உகப்பான முற்போக்கு திட்டத்திற்கு, தர்க்கரீதியிலான தொடக்கப்புள்ளியை பிரதிநிதித்துவம் செய்கிறது: இது குடிமை சமூகம் வகிக்கும் பாத்திரத்தின் மீதும் சொத்துரிமைகளை விடவும் தனிநபர் உரிமைகளை நீட்டிப்பதற்கு சாதகமான ஒரு ஜனநாயக கருத்துருவின் மீதும் ஒரு புதிய கவனம் குவிப்பதாகும்.2

பேர்ன்ஸ்டைனை நம்முடைய காலத்திற்கான ஒரு கதாநாயகனாக அறிவிக்கின்ற அதேவேளையில், ஸ்டேகர், முற்றிலும் மெய்யியல்ரீதியான தரநிர்ணயங்களை கொண்டு பேர்ன்ஸ்டைனின் அரசியல் சிந்தனையை மதிப்பிட தான் மறுப்பதாக — எச்சரிக்கையும், எரிச்சலும் கலந்து— எழுதுகிறார்.

பேர்ன்ஸ்டைனினது புத்திஜீவித வேட்கையை கல்வித்துறை ஆய்வுவிசாரணைக்கு மதிப்புடைய ஒரு பொருளாக மாற்றுவது எதுவென்றால், அதிலிருக்கும் மெய்யியல் நுணுக்கத்தின் அளவோ அல்லது அதன் வழிமுறை தூய்மை பற்றாக்குறையோ அல்ல. மாறாக, தனிமனித சுய-அறிகை மற்றும் பங்கீட்டு நீதி ஆகியவற்றுக்கான இரண்டு மகத்தான அரசியல் பாரம்பரியங்களின் ஓர் ஒத்திசைந்த கூட்டுச்சேர்க்கையை சூத்திரப்படுத்துவதற்கான பேர்ன்ஸ்டைனின் மிகவும் முதன்முறையான முயற்சியே ஆகும்.3

மார்க்சிசத்தின் புரட்சிகர கருத்துருக்களுக்கு, பேர்ன்ஸ்டைன் ஒரு அதிர்ச்சிகரமான தத்துவார்த்த அடியைக் கொடுத்ததாக கூறப்படுவதை, இங்கே நினைவுகூர வேண்டும். பேர்ன்ஸ்டைனின் எழுத்துக்களை மதிப்பீடு செய்கையில், ஸ்டேகர் "மெய்யியல் தரநிர்ணயங்களை" தவிர்க்க விரும்பியதாக ஒப்புதல் அளிப்பது, விஞ்ஞானம் மற்றும் தத்துவத்தின் பரப்பெல்லையில் பேர்ன்ஸ்டைன் மற்றும் மார்க்ஸை எதிரெதிராய் நிறுத்துவதென்பது ஒரு புத்திஜீவித பொருத்தமின்மையாக இருக்குமென்பதை மௌனமாக அங்கீகரிப்பதற்கு ஒப்பானதாகும்.

ஆனால் பேர்ன்ஸ்டைனின் தத்துவார்த்த குறைபாடுகள், அவரை நோக்கி நாம் திரும்ப உகந்த ஒரு தீர்க்கதரிசியாக அவரை முன்வைப்பதிலிருந்து, ஸ்டேகரை தடுத்துவிடவில்லை. 100 ஆண்டுகளுக்கு குறையாத காலகட்டம் கடந்து விட்ட பின்னர், இன்று, பேர்ன்ஸ்டைன் மீதான ஈர்ப்பு அவரது வாதங்களின் புத்திஜீவித பலத்திலிருந்து பெறப்படவில்லை, மாறாக நடுத்தர வர்க்கங்களது குறிப்பிட்ட பிரிவுகளது ஏக்கங்களில் இருந்து பெறப்படுகிறது. இப்பிரிவுகள் அவரது வேலைத்திட்டத்தின் கீழமைந்திருக்கும் தத்துவார்த்த பலவீனத்தை பொருட்படுத்தாமல், அதில் தங்களின் சமூக நலன்கள் மற்றும் தங்களின் அரசியல் மனோநிலைகளுக்குரிய விடையிறுப்பு இரண்டின் வெளிப்பாட்டையும் காண்கின்றன. பீட்டர் கேய் என்ற ஓர் ஆரம்பகாலத்திய மற்றும் மிகவும் புத்திக்கூர்மையான வாழ்க்கைசரித எழுத்தாளர், சுமார் நாற்பதைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வாறு எழுதினார், “அங்கே பேர்ன்ஸ்டைன் இல்லாது இருந்திருந்தாலும் கூட, அவரை உருவாக்க வேண்டிய அவசியமிருந்திருக்கும். ஜேர்மனியின் அரசியல், பொருளாதார நிலைமைகள் அந்த நூற்றாண்டின் திருப்பத்தின்போது ஒரு சீர்திருத்த கோட்பாட்டை கோரின."4

பேர்ன்ஸ்டைன் வாதத்தை உயிர்த்தெழச்செய்தல் என்பது இன்று மிக அரிதாகவே சாத்தியப்படும். உண்மையில் அது பிறந்த தருணத்திலிருந்தே -அந்தசமயத்தில் வெளிப்படையாக தெரியவில்லை என்றபோதினும்- "நாள் குறிக்கப்பட்டதாக”வே இருந்தது. இருப்பினும், பேர்ன்ஸ்டைனின் வாழ்க்கை மீது புதுப்பிக்கப்பட்ட ஆர்வமும், மற்றும் அவரது படைப்புகளை சுற்றிய சர்ச்சைகளும், ஒரு மிக முக்கியமான புள்ளியை விளங்கப்படுத்துகின்றன: 100 ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட, பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிக இறுதியில் போராடப்பட்ட அரசியல் பிரச்சினைகள் நாம் இருபதாம் நூற்றாண்டின் இறுதியை நெருங்கி விட்டபோதும் இன்னும் அசாதாரணமான பொருத்தம் கொண்டவையாகவே திகழ்கின்றன.

’வரலாறு மீண்டும் திரும்புவதில்லை என்றாலும் அது ஒத்த ரீங்காரத்தை கொண்டிருப்பதாய் தோன்றுகிறது’ இது மார்க் டுவைன் கூறியது என நினைக்கிறேன். உண்மையில், வித்தியாசங்கள் அனைத்தும் இருந்தாலும் கூட, எந்த மட்டத்திற்கு பேர்ன்ஸ்டைன் எழுந்த அரசியல் நிலைமைகள் மற்றும் புத்திஜீவித சூழல் இன்று நாம் முகம்கொடுக்கும் நிலைமைகளுக்கு "அதேபோன்ற ஒத்ததாக" இருக்கிறது என்பதைக் கண்டு ஒருவர் திகைத்துப் போவதில் ஆச்சரியமில்லை.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் நடுத்தர-வர்க்க புத்திஜீவிகளுக்கு பேர்ன்ஸ்டைனினது "மார்க்சிசத்தின் மரண" பிரகடனம் எந்தளவுக்கு ஒத்தசிந்தனையாக இருந்தது என்பதை இப்போது முழுமையாகப் புரிந்துகொள்வது கடினம்தான். முன்னொருபோதும் இல்லாதளவுக்கு முதலாளித்துவ செல்வச்செழிப்பு மற்றும் அதன் உலகந்தழுவிய ஆதாரவளங்கள் மற்றும் மேலாளுமையில் ஏற்பட்ட பாரியளவிலான விஸ்தீரணத்திற்கு மத்தியில், ஒரு முதலாளித்துவ அமைப்புமுறை அதன் உள்முரண்பாடுகளின் அபிவிருத்தியினூடாக பேரழிவுக்கு உந்தப்படுகிறது என்ற மார்க்சிச கருத்துரு, அவதானிக்கூடிய யதார்த்தத்துக்கு முற்றிலும் விலகியதாக இருந்ததாகவே ஏராளமான புத்திசாலி மக்களுக்கும் தோன்றியது.

ஆனால் 1898இன் சூழ்நிலைக்கும் 1998இல் நிலவும் சூழ்நிலைக்கும் இடையே ஒரு மிகப்பெரும் வித்தியாசம் இருக்கிறது: என்னவென்றால், பேர்ன்ஸ்டைன் அவரது மார்க்சிச விமர்சனத்தை முன்வைத்த காலகட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் நிலைமைகள் கண்கூடாக மேம்பட்டுக் கொண்டிருந்தது. சீர்திருத்தவாதம், தத்துவார்த்தரீதியில் தன்னைத்தானே நியாயப்படுத்திக் கொள்ள முயன்ற சமயத்தில் எவ்வளவுதான் அது பலவீனமாகத் தெரிந்த போதினும், நடைமுறையில் முற்றிலும் பலம்மிக்கதாக தெரிந்தது. பேர்ன்ஸ்டைனினது செய்திக்கான ஈர்ப்பை உணர்ந்தறிவதற்கு இந்த உண்மையை கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும்.

முதலாளித்துவத்தை படிப்படியாக முற்போக்காக சீர்திருத்தும் சாத்தியக்கூறில் இருந்த நம்பிக்கைதான் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பேர்ன்ஸ்டைனின் வாதத்தின் உளவியல் கூறாக இருந்தது. பேர்ன்ஸ்டைனுக்கு திரும்புவது அவசியமென இன்று பரிந்துரைப்பவர்களின் முன்னோக்கில் அம்மாதிரியான எந்த நம்பிக்கையும் உயிரூட்டவில்லை. அதற்கு மாறாக, நாட்பட்ட நோயாளியின் அவநம்பிக்கையே சமகாலத்திய நடுத்தர வர்க்க இடது சூழலின் மீது மேலாளுமை செலுத்துகிறது. சமூக மாற்றத்தின் ஒரு முகவராக தொழிலாள வர்க்கத்தின் பாத்திரத்தின் மீது எந்தவொரு வகையிலும் இத்தட்டினருக்கு நம்பிக்கை கிடையாது. சமூகநலன்புரி அரசில் கொஞ்சநஞ்சம் மிஞ்சி இருப்பதையும் அழிப்பதை தவிர்க்குமாறு நிதியியல் உயரடுக்கிற்கு ஒரு மேலோட்டமானதும் கோழைத்தனமானதுமான முறையீடை செய்வதற்கு சற்று மேலான இடத்தில் தான் அதன் "சீர்திருத்தவாதம்" இருக்கிறது. மறுபுறத்தில், பேர்ன்ஸ்டைனோ, அவரது அனைத்து பலவீனங்கள் இருந்தாலும் கூட, சோசலிஸ்டுகளின் அழுத்தம் மற்றும் செல்வாக்கின் கீழ் முதலாளித்துவம் ஒரு நீதியான மற்றும் மனிதாபிமான சமூகமாக அமைதியான முறையில் பரிணமிக்குமென்ற அவரது பிரமையில் குறைந்தபட்சம் நேர்மையோடு இருந்தார்.

ஆனால் இந்த அடிப்படை வித்தியாசம் இருந்தாலும், இன்றைய விரக்தியான சீர்திருத்தவாதிகளின் முன்னோக்குகளை 1890களின் இறுதியில் பேர்ன்ஸ்டைனால் விவரிக்கப்பட்ட முன்னோக்குகளுடன் இணைக்கும் ஒரு கருத்தியல் அம்சமும் இருக்கிறது: மார்க்சிசத்தின் ஆராய்ச்சிமுறைக்கு அடித்தளமான சடவாத இயங்கியலுக்கு காட்டுகின்ற ஆணவத்துடன் கூடிய அலட்சியம். நிகழ்வுகளை இயங்கியல்ரீதியாக —அதாவது, எதிரெதிர் நிர்ணயிப்புகளின் ஒரு ஐக்கியமாக— சிந்திக்கவும் பகுத்தாராயவும் இயலாமல் இருந்தமையானது இருபதாம் நூற்றாண்டின் தொடக்ககால சீர்திருத்தவாதிகளை, 1914இல் முதலாம் உலக யுத்தத்தின் வெடிப்புடன் அவர்களது ஒட்டுமொத்த உலகையும் அதனுடன் சேர்த்து அவர்களது மெத்தனமான கருத்தாக்கங்களையும் சில்லுசில்லாக தகர்க்கவிருந்த உள்முரண்பாடுகளை உணர்ந்தறியும் திறனற்றவர்களாக செய்திருந்தது.

சமூக ஜனநாயகக் கட்சி: முதலாவது வெகுஜன தொழிலாள வர்க்க கட்சி

1890இல் சோசலிச-விரோத சட்டங்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதில் இருந்து 1914இல் முதலாம் உலக போர் வெடிப்பு வரையில் ஒரு கால் நூற்றாண்டுகால போக்கில் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) ஜேர்மனியில் மிகப்பெரிய அரசியல் கட்சியாக வளர்ந்திருந்தது. ஆனால் வெறுமனே வாக்குகளின் ஒப்பீடு மட்டுமே, தொழிலாள வர்க்கத்திற்குள் சமூக ஜனநாயகக் கட்சியின் செல்வாக்கு மற்றும் ஆழத்தின் அளவை எடுத்துக்காட்டிவிடாது.

SPD, அதன் காலத்தில், ஒரு ஈடிணையற்ற வரலாற்று நிகழ்வுபோக்காக இருந்தது: அதுவே உண்மையில் முதலாவது வெகுஜன தொழிலாள வர்க்க கட்சியாகும். SPD யில் உருவெடுத்த இயக்கமே அதன் இறுதி இலக்கையும் விட மிகவும் முக்கியமானதாகும் என்று 1898ல் பேர்ன்ஸ்டைன் அறிவித்தபொழுது, SPD இன் தலைவர்களை அவதூறுசெய்தார். அவரது வாதம் அரசியல் நிலைபிறழ்வை குறித்ததாக இருந்தபோதும் கூட, SPD தலைமையிலான இயக்கத்தின் அளவு குறித்த கொஞ்சம் புரிதல் இல்லாமல் அந்த வாதத்தின் அடிப்படை சக்தியை புரிந்து கொள்ள முடியாது.

நடைமுறையில் தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு அம்சத்துடனும் தொடர்புபட்ட புத்தகங்கள், செய்தியிதழ்கள் மற்றும் சஞ்சிகைகளை பிரசுரித்து வந்த ஒரு பாரிய பிரசுர சாம்ராஜ்ஜியத்தை, SPD தனது ஆதிக்கத்தில் வைத்திருந்தது. ஏங்கெல்ஸ் மரணித்த ஆண்டான, 1895வாக்கில், SPD எழுபத்தி-ஐந்து செய்தியிதழ்களை பிரசுரித்தது, அவற்றில் முப்பத்தி ஒன்பது வாரத்திற்கு ஆறுமுறை வெளிவந்தவை. 1906 வாக்கில், அங்கே ஐம்பத்தி-எட்டு சோசலிச நாளிதழ்கள் இருந்தன.

1909இல், சமூக ஜனநாயக செய்தியிதழ்களின் விற்பனை ஒரு மில்லியனை எட்டியதுடன், யுத்தத்தை ஒட்டிய காலத்தில் ஒன்றரை மில்லியனாக இருந்தது. உத்தியோகபூர்வ விற்பனை, சோசலிச பத்திரிகையை படித்து வந்தவர்களின் நிஜமான எண்ணிக்கையை விட குறைவாகவே இருந்தது, ஏனென்றால் பல பிரதிகள் தொழிற்சாலைகளில், உணவுவிடுதிகளில், பள்ளிக்கூடங்களில் மற்றும் அண்டைஅருகாமையில் இருப்பவர்களிடையே ஒரு தொழிலாளியிடம் இருந்து இன்னொருவருக்காய் பகிர்ந்து கொள்ளப்பட்டன. மிகவும் பிரபலமான ஒரு இதழான Der Wahre Jakob இன் விற்பனை380,000 பிரதிகளை எட்டியது, ஆனால் அதன் உண்மையான வாசகர் எண்ணிக்கை ஒன்றரை மில்லியனை எட்டியிருந்தது. 1914 வாக்கில் சமூக ஜனநாயக வாசகர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் ஆறு மில்லியனாக இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

SPD இன் பிரதான அரசியல் பத்திரிகை Vorwärts இன் விற்பனை 165,000ஐ எட்டியது. கார்ல் காவுட்ஸ்கியின் மேற்பார்வையில் இருந்த பிரபல தத்துவார்த்த இதழ் Neue Zeit இன் விற்பனை 10,500ஆக இருந்தது. பெண் தொழிலாளர்களுக்காக கட்சியால் உருவாக்கப்பட்டதும், கிளாரா ஜெட்கின் மேற்பார்வையின்கீழ் ஓர் ஆக்ரோஷமான இராணுவவாத-எதிர்ப்பு போக்கை பின்பற்றியதுமான Die Gleichheit பத்திரிகை, 1914 வாக்கில் 125,000 என்ற விற்பனையை எட்டியது. அந்த கட்சியால் பிரசுரிக்கப்பட்ட துணை பத்திரிகைகள் எதிலெல்லாம் ஆர்வம் காட்டியதென்பதை அவற்றின் பின்வரும் தலைப்புகளைக் கொண்டே மதிப்பிடலாம்: The Worker-Cyclist (விற்பனை 168,000), The Singing German Workers Newspaper (விற்பனை 112,000), The Workers Exercise Newspaper (விற்பனை 119,000), The Free Innkeeper (விற்பனை 11,000), The Abstinent Worker (விற்பனை 5,100), மற்றும் The Worker Stenographer (விற்பனை 3,000).

இத்தகைய வழக்கமான பிரசுரங்களைத் தவிரவும், SPD ஒரு பாரிய அரசியல் இலக்கியத்தையும் உருவாக்கியது, அவை தேர்தல் பிரச்சாரங்களின் போது பிரமாண்டமான பங்களிப்பை செய்தன: துண்டறிக்கைகள், சுவரொட்டிகள், செய்தித்தாள்களின் சிறப்பு பதிப்புகள் மற்றும் சிறு வெளியீடுகள் மில்லியன் கணக்கில் அச்சிடப்பட்டன. அக்கட்சியானது வரலாறு, அரசியல் மற்றும் கலாச்சாரம் பற்றிய நூல்களை பிரசுரித்த பல மிகப்பெரிய அச்சுப் பிரசுரங்களையும் நடத்தி வந்தது, அவை பத்து ஏன் நூறு ஆயிரக்கணக்கில் கூட பதிப்புகளை வெளியிட்டன.

சமூக நடவடிக்கைகளின் ஒரு பாரிய வலையமைப்பை SPD ஒழுங்கமைத்து ஒருங்கிணைத்தது, அதில் தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு வயதுடைய குழுவும் மற்றும் பிரிவும் ஈடுபட்டன. Arbeiter (தொழிலாளி) என்ற வார்த்தையே ஒரு அரசியல் அடையாளத்தைக் கொண்டிருந்த மட்டத்துக்கு தொழிலாள வர்க்கத்துடன் SPD ஆழமாக அடையாளங்காணப்பட்டது.

அந்த நூற்றாண்டின் திருப்பத்தில், பரந்த சமூக மற்றும் கல்விசார் பிரிவுகளை உள்ளடக்கிய குறைந்தபட்சம் இருபது குறிப்பிட்ட விதமான சமூக நடவடிக்கைகளில் SPD ஈடுபட்டிருந்தது. அது எண்ணிலடங்கா உடற்பயிற்சிக் கூடங்களையும், இசைக்குழு சமூகங்களையும் நடத்தி வந்தது. செம்னிட்ஸ் (Chemnitz) என்ற ஒரு நகரில் மட்டும், 142க்கு குறைவில்லாத தொழிலாளர்களின் இசைக்குழு சமூகங்களை அது ஒழுங்கமைத்திருந்தது, அவை மொத்தம் 123 இசைநிகழ்ச்சிகளை வழங்கி இருந்தன. துரிங்கியா பகுதியில், 191 வெவ்வேறு உடற்பயிற்சி கூடங்களை அமைக்க உதவியது.

நூறாயிரக்கணக்கான ஜேர்மன் தொழிலாளர்களை பொறுத்த வரையில், SPD என்பது அவர்களுக்கு வெறுமனே ஒரு அரசியல் அமைப்பாக இருக்கவில்லை: அவர்களது வாழ்வின் பெரும்பகுதியை திட்டமிடுவதற்கு அது மையஅச்சாக விளங்கியது. ஒரு தொழிலாளியின் ஆர்வம் —நீச்சல், எடை தூக்குதல், குத்துச்சண்டை, நடைபயணம், படகோட்டுதல் மற்றும் கப்பல் பயணம், கால்பந்து, சதுரங்கம், பறவைகளைக் காண்பது, நாடகங்கள், ஆரோக்கியம் மற்றும் பராமரிப்பு, மதுமறுப்பு என— என்னவாக இருந்தாலும், SPD அதற்கான ஒரு அமைப்பைக் கொண்டிருந்தது, அதில் ஓர் ஆணோ அல்லது பெண்ணோ பதிவு செய்து கொள்ளலாம்.

உத்தியோகபூர்வ அரசியல் கல்விக்குமே கூட, SPD, கணிசமான ஆதாரவளங்களை அர்ப்பணித்தது. 1890களில் இருந்து அது, வரலாறு, சட்டம், அரசியல், பொருளாதாரம், இயற்கை விஞ்ஞானம் மற்றும் பிரசங்கக் கலை ஆகியவற்றில் பயிற்சி அளித்தது. பெபெல், லீப்னெக்ட், ஜெட்கின் மற்றும் லுக்சம்பேர்க் ஆகியோர் இத்தகைய தலைப்புகளில் உரை நிகழ்த்தியவர்களில் அடங்குவர். மூன்று மாதகால பயிற்சிகள் ஆண்டுக்கு மூன்றுமுறை அளிக்கப்பட்டன. 1898இல் 540ஆக இருந்த பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 1907இல் 1,700ஆக உயர்ந்தது. 1906இல் கட்சியின் ஓர் உத்தியோகப்பூர்வ பள்ளி ஸ்தாபிக்கப்பட்டது.

தொழிலாள வர்க்கத்தின் கலாச்சார முன்னேற்றத்தை ஊக்குவித்ததில் கட்சி வகித்த பாத்திரம், தொழிலாளர்களின் நூலகங்களின் வளர்ச்சியால் எடுத்துக்காட்டப்படுகிறது. 1900 மற்றும் 1914க்கு இடையே, கட்சியும் மற்றும் SPD கட்டுப்பாட்டில் இருந்த தொழிற்சங்கங்களும், 750 வெவ்வேறு இடங்களில் 1,100 நூலகங்களை ஸ்தாபிக்க உதவின. இந்த நூலகங்கள் 800,000க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கொண்டிருந்தன. 1914 வாக்கில் SPDஇன் ஊதியத்தின்கீழ் அங்கே 365க்கும் மேற்பட்ட நூலகப்பணியாளர்கள் இருந்தனர்.

கடைசியாக ஒரு புள்ளிவிபரம் முக்கியமாக குறிப்பிட தகுதியுடையதாகிறது. அந்நூற்றாண்டின் முதல் ஆண்டுகளில், கட்சிக்குள் பெண் தொழிலாளர்களைக் கொண்டுவர SPD ஓர் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டது, அதன் முயற்சிகள் சக்திவாய்ந்தவொரு பதிலிறுப்பைப் பெற்றன. 1905 இல் 30,000ஆக இருந்த கட்சியின் பெண் உறுப்பினர்களது எண்ணிக்கை 1914 இல் 175,000 ஆக உயர்ந்தது. மிகவும் பிரபலமாக இருந்த கட்சிப் பிரசுரங்களில் ஒகுஸ்ட் பெபெலின் சோசலிசத்தில் பெண்கள் (Woman under Socialism) ஒன்றாக இருந்தது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

பேர்ன்ஸ்டைனின் நிலைப்பாட்டை ஆராயத் தொடங்குவதற்கு முன்னதாக, அவரது கருத்தாக்கங்கள் அபிவிருத்தி கண்ட சர்வதேச மற்றும் தேசியப் பொருளாதாரச் சூழலை கட்டாயம் பரிசீலித்தாக வேண்டும். பேர்ன்ஸ்டைன் வரலாற்று சடவாத இயங்கியலின் செல்தகைமையை ஏற்க மறுத்தார், ஆனால் அவரது சொந்த புத்திஜீவித மற்றும் அரசியல் பரிணாமமோ அதே விதிகளுக்கு இணங்கித் தான் முன்னேறியது.

1873 மற்றும் 1893க்கு இடையே உலகப் பொருளாதாரம் ஒரு சிக்கலான மற்றும் பெரிதும் முரண்பாடான சித்திரத்தை எடுத்துக்காட்டியது. விலைகள் மற்றும் இலாபங்கள் இரண்டுமே நீண்டகால மந்தநிலைமையில் அமிழ்ந்து போயிருந்தன. அந்த இருபது ஆண்டுகளின் போது, பிரிட்டனில் விலைகளின் அளவு 40 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. இரும்பின் விலை 50 சதவீதம் வீழ்ந்தது. ஆனால் விலை மற்றும் இலாப பணச்சுருக்கத்தின் இந்த காலகட்டம் தொழில்துறை உற்பத்தியின் செழிப்பு மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் ஒரு காலகட்டமாகவும் இருந்தது. உண்மையில், உலக பொருளாதார நிலைமைகளின் இத்தகைய இருவேறு அம்சங்களுமே இயங்கியல்ரீதியாக தொடர்புபட்டிருந்தன. இலாப விகிதத்தின் மீதிருந்த அழுத்தம், புதிய உற்பத்தி மற்றும் நிர்வாக நுட்பங்களை அபிவிருத்தி செய்வதற்கான உத்வேகத்தை வழங்கியது, அவை தொழில்துறை உற்பத்தியின் ஒரு பரந்த விரிவாக்கத்திற்கு இட்டுச் சென்றது. இவ்வாறாக, உலகப் பொருளாதாரமானது விலை மற்றும் இலாபத்தின் மந்தநிலையில் அமிழ்ந்திருந்த போதினும் கூட, தொழில்துறையின் வளர்ச்சியானது, அதுவும் குறிப்பாக ஜேர்மனி மற்றும் அமெரிக்காவில், ஒரு வெடிப்பார்ந்த வளர்ச்சியினூடாக பயணித்துக் கொண்டிருந்தது.

மூலதனம் இலத்தீன் அமெரிக்கா போன்ற முற்றிலும் புதிய பகுதிகளுக்குள் பரவியது, இலாபகர முதலீடுகளுக்கான தேடல் ஏகாதிபத்திய-பாணியிலான காலனித்துவம் எழுச்சி பெறுவதற்கு இட்டுச் சென்றது. விலை மற்றும் இலாபத்திலான இந்த நீடித்த மந்தநிலையானது 1894 இன் இறுதிவாக்கில் அதிரடியாக முடிவுக்கு வந்ததுடன், முதலாளித்துவம், அதன் பார்வையில், மிகவும் மகத்தான ஒரு காலகட்டத்திற்குள் - அந்த அடிப்படையில் அது பெற்ற La Belle Époque! (அழகியசகாப்தம்!) என்ற பெயரைக் கொண்டே இன்றுவரையிலும் அது நினைவுகூரப்படுகிறது - நுழைந்தது.

இந்த பொருளாதார அபிவிருத்தியின் முக்கிய இயக்கவியல் மையங்களில் ஒன்றாக ஜேர்மன் இருந்தமையானது, மார்க்சிச இயக்கத்திற்கு ஆழமான மற்றும் முரண்பாடான தாக்கங்களைக் கொண்டிருந்தது. SPD விரிவடைந்ததற்கு இன்றியமையாத நிபந்தனையாக தொழிலாள வர்க்கத்தின் வேகமான வளர்ச்சி இருந்தது என்பது முற்றிலும் வெளிப்படையானதாகும். ஆனால் அதுவோ ஜேர்மன் தொழில்துறையின் அபிவிருத்தியால் பக்குவப்படுத்தப்பட்டதாக இருந்தது. ஜேர்மனியின் ஐக்கியமானது, பிஸ்மார்க்கின் கீழ் பிற்போக்குத்தனமான அரசியல் வடிவங்கள் மூலமாக அது எட்டப்பட்டிருந்து என்றாலும், பெருந்தொழிற்துறையின் துரிதமான வளர்ச்சிக்கு அடித்தளத்தை அமைத்துத் தந்திருந்தது. 1880 இல் 2.7 மில்லியன் டன்னாக இருந்த இரும்பு உற்பத்தி 1900 இல் 8.5 மில்லியன் டன்களாக உயர்ந்தது. அதே காலகட்டத்தில் எஃகு உற்பத்தி 625,000 டன்களில் இருந்து 6.6 மில்லியன் டன்களாக உயர்ந்தது. 1873 மற்றும் 1900க்கு இடையே, ஜேர்மன் துறைமுகங்களுக்கு வந்த கப்பல்களின் எண்ணிக்கை இரட்டிப்பானது. தொழில்துறையின் குவிநிலையும் கூட்டமைப்புமயமாகலும் (cartelization) ஜேர்மன் பொருளாதார அபிவிருத்தியின் மையமானதொரு அம்சமாக இருந்தது. 1882 மற்றும் 1907க்கு இடையே, சிறுதொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 8 சதவீத அளவுக்கு அதிகரித்தது, அதேவேளையில் மிகப்பெரிய நிறுவனங்களின் எண்ணிக்கையோ 231 சதவீத அளவுக்கு அதிகரித்தது. 1907 வாக்கில், 548 தொழில் நிறுவனங்களில் ஏறத்தாழ 13 மில்லியன் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தார்கள்.

SPD இன் உத்தியோகபூர்வ கோட்பாடு வர்க்கப் போராக இருந்தது, ஆனால் மறைமுகமாக என்றாலும், அதன் சொந்த வளர்ச்சியே, ஜேர்மன் தேசிய தொழில்துறையின் விரிவாக்கத்துடன் பிணைந்திருந்தது. தேசிய தொழிற்துறைக்கும் தொழிற்சங்கங்களின் வளர்ச்சிக்கும் இடையிலான தொடர்பு இன்னும் நேரடியானதாக இருந்தது. 1890களின் மத்தியகாலப்பகுதி வரையில், அவற்றின் வளர்ச்சி, கட்சியை பின்தொடர்ந்து போய் கொண்டிருந்தது. அரசியல் வழிகாட்டலுக்கும் நேரடியான பொருள்-நிதி ஆதரவு இரண்டிற்கும் அவை கட்சியைச் சார்ந்திருந்தன. ஆனால் 1895 இல் தொடங்கி ஏறத்தாழ உலக யுத்தம் வெடித்த காலம் வரையில் நீடித்திருந்த மாபெரும் பொருளாதாரச் செழிப்புநிலையானது தொழிற்சங்கங்களின் ஒரு பரந்த விரிவாக்கத்திற்கு எண்ணெய் வார்த்ததோடு, தொழிற்சங்கங்களுக்கும் —அதன் தலைவர்கள் பொதுவாக மார்க்சிசத் தத்துவம் மற்றும் சோசலிசக் கோட்பாடுகள் குறித்த கேள்விகளில் மிகக் குறைந்த ஆர்வமே கொண்ட மனிதர்களாக இருந்தனர்— SPD க்கும் இடையிலான உறவுகளை மிகப்பெருமளவில் மாற்றியது. தொழிற்சங்கங்களின் அளவும் மற்றும் பொருளாதார ஆதாரவளங்களும் அதிகமாக விரிவடைய விரிவடைய, அவற்றின் தலைவர்களுக்கு, சோசலிசக் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் பற்றிய பரந்த பிரச்சினைகளுக்கு தமது நடைமுறைக் கவலைகள் கீழ்படியச்செய்யப்படுவதை ஏற்பதற்கான விருப்பம் குறைந்து கொண்டே சென்றது.

சோசலிச இயக்கத்தில் பேர்ன்ஸ்டைனின் ஆரம்ப ஆண்டுகள்

பேர்ன்ஸ்டைன், பதினைந்து குழந்தைகளில் ஏழாவது குழந்தையாக ஒரு கீழ் நடுத்தர வர்க்க யூத குடும்பத்தில் பிறந்தார். 1872இல் சோசலிச இயக்கத்தில் அரசியல் செயலூக்கத்துடன் செயல்படலானார். பிரான்ஸ்-பிரஷ்ய யுத்தத்தின்போது, சோசலிச மற்றும் சர்வதேசியவாத கோட்பாடுகளை பெபெல் துணிச்சலாகப் பாதுகாத்ததில் இவர் ஈர்க்கப்பட்டார். 1875இல் கோத்தாவில் நடந்த ஐஸ்னாக்கர்கள் [ஜேர்மன் ஐஸ்னாக் நகரவாசிகள்] மற்றும் லஸ்ஸாலியர்களின் [மெய்யியலாளர் லஸ்ஸால்லை பின்பற்றியவர்கள்] ஐக்கிய மாநாட்டில் அவரும் ஒரு பிரதிநிதியாக கலந்து கொண்டார்.

பேர்ன்ஸ்டைன், அவரது ஆரம்பகால அரசியல் வாழ்வில், பல்வேறு குட்டி-முதலாளித்துவ ஜனநாயக அரசியலின் வடிவங்களை நோக்கி சாய்வதில் ஆர்வம் காட்டியிருந்தார். கொஞ்ச காலத்திற்கு Eugen Dühring இன் செல்வாக்கு அவரிடம் மேலோங்கியிருந்தது. அதன்பின் கொஞ்சகாலம் தள்ளி, SPDக்கு நிதிப் பங்களிப்பு செய்திருந்த ஒரு இடது ஜனநாயகவாதியான Karl Hochberg இன் செயலராக பணிபுரிந்த சமயத்தில், பேர்ன்ஸ்டைன், கட்சியானது தொழிலாள வர்க்கத்தை நோக்கிய தனது பிரத்யேக நோக்குநிலையை கைவிட்டு முதலாளித்துவத்தை நோக்கி ஒரு கூடுதல் நல்லிணக்கமானதொரு மனோநிலையை எடுக்க வலியுறுத்திய ஒரு ஆவணத்தை வரைவு செய்து தருவதில் ஒரு பங்காற்றியிருந்தார். மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் அந்த ஆவணத்தால் ஆவேசமடைந்தனர், பின்னர் பேர்ன்ஸ்டைன் அரசியல் கோட்பாடுகளை மீறியதற்காக அந்த பழம்பெரும் புரட்சியாளர்களிடம் தனிப்பட்டரீதியில் மன்னிப்புக்கோர, பெபெலுடன் சேர்ந்து இலண்டனுக்கு பயணித்ததன் மூலமாக மட்டுமே அவர்களின் நன்மதிப்பை மீட்டெடுத்தார்.

சோசலிச-எதிர்ப்புச் சட்டங்களால் 1878இல் பேர்ன்ஸ்டைன் ஜேர்மனியை விட்டு வெளியேற நிர்ப்பந்தம் பெற்றார், 23 ஆண்டுகள் நாட்டை விட்டு வெளியே வாழ்ந்தார். அவர் சுவிட்சர்லாந்தில் பல ஆண்டுகள் வாழ்ந்த பின்னர், 1880களின் இறுதிப்பகுதியில் இங்கிலாந்துக்கு நகர்ந்தார். இங்கிலாந்தில் அவரது சொற்பவாசகாலம் நீடித்திருந்தபோதுதான், அவர் சீர்திருத்தவாத ஃபாபியன் சொசைட்டி (Fabian society) என்ற அமைப்புடன் தொடர்பு பெற்று, அதன் முன்னணி பிரமுகர்களுடன் நெருக்கமான நட்புறவுகளையும் உருவாக்கினார். பெயாட்ரிஸ், சிட்னி வெப் மற்றும் ஜோர்ஜ் பேர்னாட் ஷா போன்றவர்களுடன் பலமுறை உணவு விருந்திலும் கலந்து கொண்டார்.

ஸ்டேகர் கருத்துப்படி,

இங்கிலாந்து தொழிலாளர்களின் நடைமுறைரீதியிலான மற்றும் பயன்பாட்டுரீதியிலான (utilitarian) கண்ணோட்டத்தால் எட்டப்பட்ட சமூக வெற்றிகளால் பேர்ன்ஸ்டைன் பெரிதும் ஈர்க்கப்பட்டிருந்தார். பிரிட்டிஷ் தொழிற் கட்சி தலைவர்களுக்கும் தாராளவாத முதலாளித்துவ பிரதிநிதிகளுக்கும் இடையிலான நல்லுறவு குறித்து சிலாகித்துப் பேசிய அவர் "இதுபோன்ற சௌகரியத் திருமணம்" பிரித்தானியர்களின் அவ்வப்போதைய சீர்திருத்தவாதத்தின் வெற்றிக்கு பங்களிப்பு செய்ததாக வாதிட்டார். பேர்ன்ஸ்டைனை பொறுத்தவரை, பரிணமித்துவந்த பிரிட்டிஷ் முன்மாதிரி, மூலதனத்திற்கும் உழைப்புக்கும் இடையே பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளத்தக்க உடன்படிக்கைகளின் சாத்தியக்கூறை அவருக்கு எடுத்துக்காட்டியது என்பதோடு, அவரது புரிதல்களை அவரது ஜேர்மன் கட்சி தோழர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் அவருக்கு தூண்டுதல் அளித்தது.5

பேர்ன்ஸ்டைன் மீது ஆதிக்கம்செலுத்திய பரந்த புத்திஜீவித மற்றும் அரசியல் சூழலின் ஒரேயொரு அம்சம் மட்டுமே ஃபாபியன்கள் (Fabians) ஆவர். ஜேர்மனி மற்றும் மேற்கு ஐரோப்பா முழுவதிலும் சோசலிசத்தின் வேகமான வளர்ச்சி, அதன் மேலாளுமையை வெறுமனே அரச ஒடுக்குமுறை பிரயோகத்தினால் மட்டும் தடுத்துவிட முடியாது என்பதை முதலாளித்துவத்திற்கு தெளிவுபடுத்தியது. மார்க்சிசத்தால் முன்வைக்கப்பட்ட புத்திஜீவித சவாலுக்கு விடையிறுப்புக் காட்டுவது அவசியமாக இருந்தது. இதனால், 1890களில், பல்கலைக்கழகங்கள் மார்க்சிசத்திற்கு எதிரான சித்தாந்த பாதுகாப்பு அரண்களாக ஒரு புதிய மற்றும் இன்றியமையாத பாத்திரத்தை ஏற்றன — அவை இன்றைய நாள் வரையில் அதை விட்டுவிடவில்லை. சோசலிச இயக்கத்தின் உரிமைகோரல்களை பொய்யென நிரூபிக்க மேற்கோளிடத்தக்க வகையில், மார்க்சின் எழுத்துக்களில் பொருத்தமின்மைகள் மற்றும் பலவீனங்கள் சரிசெய்யப்படுவதாகக் கூறி திருத்தப்பட்டன. புதிய கல்வித்துறைசார் "மார்க்சிச கொலையாளர்கள்" செல்வாக்கும் அதிகாரமும் கொண்ட பிரமுகர்களாக ஆகினர், அவர்களின் எழுத்துக்கள் பரந்தளவில் பாராட்டப்பட்டு, பிரசுரிக்கப்பட்டன. இதில் போஹ்ம்-பாவெர்க், துகான்-பாரானோவ்ஸ்கி, பெனெடெட்டோ கிரோசே, வெர்னர் சோம்பார்ட் மற்றும் மக்ஸ் வேபர் போன்ற பிரபலங்கள் இருந்தனர், குறைந்தளவே அறியப்பட்ட மற்றும் செல்வாக்குப் பெற்றிராத டஜன்கணக்கான எழுத்தாளர்களைக் குறித்து கூறவேண்டியதே இல்லை. இவர்கள் அனைவரும் மார்க்சிச தத்துவத்தின் ஏறத்தாழ ஒவ்வொரு அம்சத்திற்கு எதிராகவும் ஒரு பலமான தடுப்பரணை அமைத்து வைத்திருந்தனர்.

"சடரீதியான வாழ்வின் உற்பத்திமுறையே, சமூக, அரசியல் மற்றும் புத்திஜீவித வாழ்வின் பொதுவான நிகழ்முறையை பக்குவப்படுத்துகிறது" என்கிறதும், சமூக முரண்பாடுகள் திட்டவட்டமான சித்தாந்த வடிவங்களின் மூலமாகத்தான் பிரதிபலிக்கப்படுகிறது மற்றும் போராடப்படுகிறது என்கிறதுமான மார்க்சின் அவதானிப்பையே இத்தகைய சிந்தனையாளர்களின் படைப்புகள், அவர்களின் சொந்த வழியில், ஊர்ஜிதப்படுத்திக் காட்டின.6 மார்க்சை குறித்த இக்குட்டி-முதலாளித்துவ கல்வித்துறைசார் விமர்சகர்களின் எழுத்துக்கள் பேர்ன்ஸ்டைனின் எழுத்துக்களிலும் பிரதிபலித்தது. உண்மையில், அன்றைய நாட்களில் பல்கலைக்கழகங்களில் சுற்றிவந்த மார்க்சிச-விரோத வாதங்களில், பேர்ன்ஸ்டைன் அவரது சொந்த அரசியல் கௌரவம் தவிர்த்து, அதிகமாக எதனையும் சேர்த்து விடவில்லை என்று கூறினால் அது மிகையாகாது.

பேர்ன்ஸ்டைனின் கண்ணோட்டத்தில் ஏற்பட்டிருந்த மாற்றத்தை உணரத் தொடங்கிய ஏங்கெல்ஸ், பேர்ன்ஸ்டைனது பேச்சு ’தன்னைக்குறித்து பெரும் சுய-திருப்தி கொள்கின்ற ஒரு அற்பத்தனமான ஆங்கிலேய கடைக்காரரைப் போல’ தொனிப்பது மேலும் மேலும் கூடிச் செல்வதாக புகாரிட்டார். ஏங்கெல்ஸ் வாழ்ந்திருந்த வரையில், அவர் பேர்ன்ஸ்டைனை தடுத்து வைத்திருந்தார். ஆனால் 1895 ஆகஸ்டில் அவர் மரணத்திற்குப் பின்னர், பேர்ன்ஸ்டைன் மார்க்சிசத்திலிருந்து தூரவிலகும் வேகம் மிகத் துரிதப்பட்டது.

சோசலிசத்திற்கான முன்நிபந்தனைகள்

1898இல் பேர்ன்ஸ்டைன் எழுதிய பல கட்டுரைகளில், அவர் SPD இன் தத்துவார்த்த மரபு மற்றும் புரட்சிகர வேலைத்திட்டத்தை மறுதலித்தார். இத்தகைய கண்ணோட்டங்களை அவர், சோசலிசத்திற்கான முன்நிபந்தனைகள் என்ற அவரது நூலில் மிக விரிவாக விவரித்திருந்தார். உள்முரண்பாடுகளால் கிழிபடும் ஓர் அமைப்புமுறையாக முதலாளித்துவம் குறித்த மார்க்சின் பகுப்பாய்வு, அவரது ஹெகலிய பயிற்சியின் ஒரு விளைபொருள் என்பதோடு, அனுபவரீதியில் காணக்கூடிய யதார்த்தத்துடன் அதற்கு எந்த தொடர்பும் இல்லை என்பதை அங்கீகரிக்கும் காலம் வந்துவிட்டது என அவர் குறிப்பிட்டார். முதலாளித்துவ அமைப்பு முறையின் ஒரு மிகப்பெரிய நெருக்கடி குறித்த சாத்தியக்கூறின் மீது தங்களின் தந்திரோபாயங்களை அமைப்பது சோசலிஸ்டுகளுக்கு அபாயகரமான தவறாகும். மாறாக, நிலவும் அனைத்து ஆதாரங்களும், முதலாளித்துவம் நடைமுறையில் முற்போக்கான அபிவிருத்திக்கான அனைத்து சாத்தியக்கூறையும் கொண்டிருப்பதையும்; மற்றும் இது முற்றிலும் இயல்பாகவும், ஜனநாயகரீதியிலும் மற்றும் அமைதியாகவும் சோசலிசத்தை நோக்கி இட்டுச் செல்லும் என்பதையுமே காட்டுகின்றன. முதலாளித்துவத்தின் உள்முரண்பாடுகளால் உருவாக்கப்படும் ஒரு மிகப்பெரிய நெருக்கடியிலிருந்து சோசலிசம் எழுச்சிபெறும் என்று தொடர்ந்து வாதிடும் துரதிருஷ்டவசமான மார்க்சிஸ்டுகளை பொறுத்தவரை, அவர்களை சமகாலத்திய வாழ்வின் உண்மைகளை முகங்கொடுக்க இலாயகற்று செய்யும் பேரழிவுவாதம் (catastrophitis) என்ற ஒரு நோய் பாதித்துள்ளது என்றார்.

முதலாளித்துவம் தொழிலாள வர்க்கத்தின் வறுமைப்படலுக்கு இட்டுச் செல்கிறது என்ற மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் தவறான நம்பிக்கை இல்லாத பொருளாதார முரண்பாடுகளைக் குறித்த அவர்களின் தவறான நிர்ணயத்திலிருந்து ஊற்றெடுப்பதாக அவர் வாதிட்டார். தேசிய வருவாயில் தொழிலாளர்களின் பங்கை சீராக அதிகரிப்பதில் திறம் பெற்றிருந்ததை தொழிற்சங்கங்கள் நிரூபித்திருந்ததாக பேர்ன்ஸ்டைன் வாதிட்டார். உழைப்பின் மதிப்பு குறித்த தத்துவத்தின் மீதும் மற்றும் தொழிலாள வர்க்கம் மீதான சுரண்டலை அது விஞ்ஞானபூர்வமாக எடுத்துக்காட்டுகிறது என்று கூறப்படுவதன் மீதுமான மார்க்ஸின் வலியுறுத்தலைப் பொறுத்த வரையில், அது குப்பையில் போட வேண்டிய இன்னுமொரு பழைய தத்துவார்த்த மூட்டையாக இருந்ததென பேர்ன்ஸ்டைன் வாதிட்டார். முதலாளித்துவ உற்பத்திமுறையில், உபரிமதிப்பு உற்பத்தியின் உட்பொதிந்த சுரண்டல் பண்பை எடுத்துக்காட்டுவதற்கு அங்கே என்ன அவசியம் இருந்தது? என்று பேர்ன்ஸ்டைன் வினவினார். மதிப்பின் உருவாக்கம் தொடர்பான பிரச்சினையில் இருந்த இந்த விடாப்பிடிகவனம், சோசலிச இயக்கங்களை, தொழிற்சங்க நடவடிக்கை மற்றும் தேசிய சட்ட ஆக்கங்கள் இரண்டையும் கொண்டு தேசிய வருமானம் கூடுதல் சமநிலையான வகையில் பங்கீடு செய்யப்படுவதை சாதிக்கக் கூடிய வெல்லத்தக்க கோரிக்கைகளை சூத்திரப்படுத்துவதில் அல்லாமல், முதலாளித்துவ உற்பத்திமுறைக்கு எதிராக அதன் கோபத்தைக் குவிப்பதற்கு இட்டுச் சென்று விட்டிருந்தது என்றார்.

தொழிலாள வர்க்கத்தின் நீண்டகால நலன்களை புரட்சியின் மூலம் பாதுகாக்க முடியாது, மாறாக தொழிற்சங்கங்கள் மூலமாக தேட்டங்களை சீராக மற்றும் படிப்படியாக அதிகரிப்பதன் மூலமாகவே பாதுகாக்க முடியும் என்று பேர்ன்ஸ்டைன் தொடர்ந்து பேணி வந்தார். “தொழிற்சங்கங்கள் புரட்சிகர அரசியல் தவிர்த்த வேறெந்த நடவடிக்கையும் உபயோகமற்றதென்பதை நடைமுறையில் எடுத்துக்காட்டுவதற்குரிய ஒரு நடைமுறை அனுபவப் பாடம் என்பதை தவிர வேறொன்றுமில்லை" எனக் கருதிய, "சில சோசலிஸ்டுகளை" அவர் கடிந்துரைத்தார்.7 பேர்ன்ஸ்டைனை பொறுத்த வரையில், முதலாளித்துவத்தின் முறையற்ற கூறுகளைக் களைவதற்கான கருவிகளாக தொழிற்சங்கங்கள் இருந்தன: “தொழிற்சங்கங்கள் அவற்றின் சமூகப்பொருளாதார இடத்தின் காரணமாக, தொழில்துறையின் ஜனநாயக உட்கூறாக உள்ளன. மூலதனத்தின் தனிமுதல் அதிகாரத்தை தேயச்செய்து, தொழிலாளருக்கு தொழில்துறை நிர்வாகத்தில் நேரடியாக செல்வாக்கை அளிப்பதே அவற்றின் போக்காக இருக்கிறது.”8 தொழிற்சங்கங்கள் மீது பேர்ன்ஸ்டைனுக்கு அவநம்பிக்கை இருந்ததென்றால், அது அவை அதிகமான அதிகாரத்தை எதிர்நோக்கியிருக்கக் கூடாது என்ற விடயத்தில்தான். மூலதனத்துடன் கூட்டாளியாவதே அவற்றின் நோக்கமாக இருக்க வேண்டுமே அன்றி தொழிற்துறையின் மீது கட்டுப்பாடு செலுத்துவதாய் இருக்கக் கூடாது.

பேர்ன்ஸ்டைனை பொறுத்த வரையில், அரசு என்பது வர்க்க ஆட்சியின் ஒரு கருவி என்ற மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் கருத்தாக்கம் அவர்களின் மற்றொரு பிழையாகும். ஒரு ஜனநாயக அமைப்புமுறையில் அரசு என்பது ஒட்டுமொத்த குடிமக்களின் பிரதிநிதியாக பொது நலனுக்கு சீராக வேலை செய்ய முடியுமென்பதை இங்கிலாந்து முன்னுதாரணமாக நிரூபிக்கிறது என்று அவர் வாதிட்டார். தற்போது நிலவும் அரசை, நிர்மூலமாக்குவது ஒருபுறம் இருக்கட்டும், பிரதியீடு செய்வது கூட தொழிலாள வர்க்கத்தின் நோக்கமாக இருக்கக்கூடாது, மாறாக வர்க்கங்களுக்கு-மேலான ஒரு ஜனநாயகத்தின் முன்பினும் திறம்பட்ட கருவியாக அதை மாற்றுவதே அதன் நோக்கமாக இருக்க வேண்டும். உண்மையில் தொழிலாள வர்க்கத்திற்கு அதன் சொந்த வர்க்க ஆட்சியை ஸ்தாபிக்க வேண்டிய அவசியமே இல்லை, அதைப் பின்பற்றக் கூடாது. நாகரீகமான அரசியல் சம்பாஷணையில் "பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்" என்ற வார்த்தைக்கே இடமில்லை:

வர்க்க சர்வாதிகாரம் என்பது ஒரு தாழ்ந்த நாகரிகத்திற்கு சொந்தமானதாகும். அத்துடன், பிரச்சாரம் செய்வதற்கும் சட்டங்களை அமலாக்குவதற்கும் இப்போதிருக்கும் வழிமுறைகள் குறித்து எந்த சிந்தனையுமற்ற —அல்லது வெறும் ரொம்ப கோணலான சிந்தனை மட்டுமே இருந்த— அத்துடன் அத்தகைய நோக்கத்திற்குரிய அமைப்புகளும் இல்லாத ஒரு யுகத்திற்குரிய முறையில்தான் முதலாளித்துவ சமூகத்தில் இருந்து சோசலிச சமூகத்திற்கு உருமாற்றம் எட்டப்பட்டாக வேண்டும் என்கிறதான சிந்தனையை ஊக்குவிக்கும் பட்சத்தில், விடயத்தின் அவசரம் மற்றும் நடைமுறைத்தன்மை குறித்த பிரச்சினைகள் தவிர்த்து, அது அரசியல் பின்தங்கியதொரு நடவடிக்கையாக ஒரு பின்நோக்கிய அடியெடுப்பாக மட்டுமே கருதப்பட முடியும்.9

ஜனநாயகம் என்பது அனைத்து குடிமக்களின் உரிமைகளுக்கும் உத்தரவாதம் அளிக்கும் ஓர் அரசியல் வடிவமாகும், மனிதகுல விவகாரங்களுக்குள் அது அறிமுகம் செய்திருந்த நாகரிகப்பண்பு குறித்து எல்லையில்லா போற்றுதலுடன் அவர் பேசினார்:

நமது காலகட்டத்தில், தனிநபர் சுதந்திரத்திற்கு நீடித்த காயத்தை உண்டாக்கும் எந்த சட்டத்தையும் ஒரு ஜனநாயக சமூகத்தின் பெரும்பான்மை உருவாக்காது என்பதற்கு ஏறத்தாழ நிபந்தனையற்ற உத்தரவாதம் உள்ளது. ... உண்மையில், ஒரு நவீன அரசில் எந்தளவுக்கு நீண்டகாலமாக ஜனநாயக ஏற்பாடுகள் நிலவுகிறதோ, அந்தளவுக்கு சிறுபான்மையினரின் உரிமைகள் மீதான மதிப்பும், கவனிப்பும் அதிகரிக்கிறது என்பதோடு, நிறைய கட்சி மோதல்கள் அவற்றின் பகைமையை இழந்து விடுகின்றன என்பதை அனுபவம் காட்டியுள்ளது. வன்முறையின்றி சோசலிசத்தை எட்டுவதைக் குறித்து கற்பனையும் செய்யவியலாமல் இருப்பவர்கள், இதை ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு வாதமாக பார்ப்பார்கள்...10

... ஒரு ஜனநாயகத்தில், கட்சிகளும் அவற்றை ஆதரிக்கும் வர்க்கங்களும் விரைவிலேயே அவற்றின் அதிகார வரம்புகளை உணரவும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அந்தந்த சூழ்நிலைகளின் கீழ் அவை எந்தளவுக்கு சாதிக்க முடியுமென நம்புகின்றனவோ அந்தளவுக்கே அவற்றைக் கையிலெடுக்கவும் கற்றுக் கொள்கின்றன. தவிர்க்கவியலாத சமரசத்தின்போது —ஜனநாயகம் என்பதே சமரசத்தின் பாடசாலை தானே— விட்டுக்கொடுப்புகளை வழங்குவதற்காக இடம்விட்டு, தாங்கள் உண்மையில் எண்ணியிருந்ததை விடவும் அதிகமான கோரிக்கைகளை அவை செய்தாலும் கூட, அது ஒரு மிகையாக இல்லாத வண்ணமே செய்யப்படுகிறது.11

இங்கிலாந்து ஒரு விதிவிலக்கான விடயமென்று பேர்ன்ஸ்டைன் நம்பவில்லை; ஜனநாயகம் தனது மாயத்தை ஜேர்மனியிலும் அதே அளவுக்கு நிகழ்த்த முடியும் என்றார். ஜேர்மன் முதலாளித்துவத்தின் மாற்றமுடியாத பிற்போக்கு குணாம்சத்தை குறித்த SPD இன் வலியுறுத்தல் தவறென அவர் வாதிட்டார். “இது இந்த தருணத்தில் வேண்டுமானால் நிஜமாக இருக்கலாம், அதிலுமே கூட அதற்கு முரணாக அங்கே நிறைய ஆதாரங்கள் உள்ளன. ஆனால் அவ்வாறேயிருந்தாலும் கூட, அது நீண்டகாலம் அங்கே நீடிக்க முடியாது."12 SPD சமூக புரட்சியை கொண்டு அச்சுறுத்துவதை நிறுத்துமானால், ஜேர்மன் முதலாளித்துவ வர்க்கம் ஜனநாயக சீர்திருத்தக் கோரிக்கைகளுக்கு மேலதிகமாக இயைந்து கொடுக்கும் என்பதை நிரூபிக்கும். “பாட்டாளி வர்க்கம்-அல்லாத ஒட்டுமொத்த உலகிற்கும் எதிரானதொரு வன்முறைப் புரட்சியில் எந்த ஆர்வமுமில்லை" என்பதை முதலாளித்துவத்திற்கு மறுஉத்தரவாதம் செய்வதே கட்சியின் பணியாகும்.13 இதைச் செய்து முடித்தால், SPDஐ குறித்த முதலாளித்துவத்தின் அச்சம் "கலைந்து போகும்", பிரஷ்ய முழுமுதலாட்சியில் உள்ள மிகப்பிற்போக்குத்தனமான கூறுகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்துடன் "பொதுவான நோக்கத்தை" ஏற்படுத்திக் கொள்ள அது தயாராகிவிடும்.

இவ்விதத்தில், SPD அதன் புரட்சிகர புனைவுகளை ஒதுக்கி வைக்குமாறும், மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸை நோக்குநிலை பிறழச் செய்த ஹேகலிய நியதிவாதத்திலிருந்து விடுவித்துக் கொண்டு, சோசலிசம் என்பதே உண்மையில் முரண்பாடற்ற தாராளவாதமே என்பதைத் தவிர வேறொன்றுமில்லை என்பதை புரிந்து கொள்ளுமாறும் பேர்ன்ஸ்டைன் SPDஐ வலியுறுத்தினார்:

உண்மையில், சோசலிச புத்திஜீவித சாதனத்தின் பாகமாக இல்லாத, தாராளவாத சிந்தனையே கிடையாது. தனிநபர் தனக்கென பொருளாதார பொறுப்பு கொண்டிருக்கும் கோட்பாடே கூட, அது முற்றிலுமாக மான்செஸ்டரியமாக (Manchesterish) தெரிந்தாலும், என்னுடைய தீர்மானத்தின்படி, அது சோசலிச தத்துவத்தில் மறுக்கப்பட முடியாததாகும், அல்லது அதை தற்காலிகமாக ஒதுக்கித்தள்ள அவசியமாய் எந்தவொரு கருதிப்பார்க்கத்தக்க சூழ்நிலைகளும் இல்லை. பொறுப்புடைமை இல்லாமல் அங்கே சுதந்திரம் என்பது இல்லை.14

பேர்ன்ஸ்டைன் முதலாளித்துவ இராணுவவாதத்திற்கு எதிரான சோசலிச எதிர்ப்பை அலட்சியத்துடன் நிராகரிக்கும் அளவுக்குச் சென்றார். கோட்பாட்டளவில் அவர் காலனித்துவத்தையும் எதிர்க்கவில்லை. அவர் எழுதினார், ஐரோப்பிய ஆட்சியின் கீழ் "காட்டுமிராண்டித்தனங்கள் எவ்வித விதிவிலக்குமில்லாமல், அதற்கு முன்னர் இருந்ததைவிட எவ்வளவோ மேலானவையாகவே இருக்கின்றன..."15 இந்த விதி அமெரிக்க இந்தியர்களுக்குமே கூட பொருந்தும்: “இந்தியர்கள் மீது முன்னர் என்னதான் தவறுகள் நடத்தப்பட்டிருந்தாலும், இன்றைய நாட்களில் அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன, மேலும் அந்த எண்ணிக்கை குறையவில்லை, மாறாக மறுபடியும் அதிகரித்தே வருகிறது என்பது நன்கறிந்த உண்மையாகும்."16

ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் கொள்ளை ஆசைக்கு எதிரான உறுதியான சோசலிச எதிர்ப்பைப் பொறுத்த வரையில், பேர்ன்ஸ்டைன், “உண்மையில், தேசங்களின் நாகரிகப்படுத்தும் பணியில் தனது நியாயமான பங்கை சுமந்து வந்திருக்கின்ற, இப்போதும் சுமந்து வருகின்ற ஜேர்மன் தேசமானது, தேசங்களின் சங்கத்தில் (council of nations) ஒளி குன்றப்படச் செய்யப்படலாமா என்ற பிரச்சினையை சமூக ஜனநாயகம் ஒரு அலட்சியமான விடயமாக கருதக் கூடாது” என்று வாதிட்டார்.17 கெய்சரின் நிரந்தரப்படையை, மக்கள் படைப்பிரிவைக் கொண்டு பிரதியீடு செய்ய SPD வலியுறுத்துவதும் சரியல்ல, ஏனென்றால் இராணுவம் என்றென்றைக்கும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு வன்முறை அச்சுறுத்தலே என்ற அதன் எச்சரிக்கைகள் நிஜமாகவே காலாவதியானவை ஆகும்: பேர்ன்ஸ்டைன் எழுதினார், “அதிருஷ்டவசமாக, அரசியல் கருத்துவேறுபாடுகளை தீர்ப்பதில் ஆயுத தளவாடங்களை பிரயோகிப்பதை விட ஏனைய வழிகள் நமக்கு பெரிதும் பழக்கமாகி வருகின்றன."18

ஓர் அரசியல் தத்துவவாதியாக மற்றும் மூலோபாயவாதியாக பேர்ன்ஸ்டைனின் மரியாதையை, அவர் எழுதிய எழுத்துக்களை வெளியிடுவதைக் காட்டிலும் சேதப்படுத்தக் கூடியது வேறெதுவுமில்லை. அவருடைய எழுத்துக்களிலிருந்து ஸ்டேகரால் மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து முன்வைக்கப்பட்டவை கூட பேர்ன்ஸ்டைனின் புத்திஜீவித அந்தஸ்தை உயர்த்தவில்லை (நான் மேற்கோளிட்டுள்ள பத்திகள் ஸ்டேகரின் வாழ்க்கைச்சரிதத்தில் தென்படவில்லை). சமகாலத்திய மார்க்சிஸ்டுகளுக்கு ஏதேனும் ஒரு ஆச்சரியம் இருக்கிறதென்றால், அது பேர்ன்ஸ்டைனின் வாதங்களில் இருக்கும் வெற்றுத் தன்மைதான். “இந்த நீர்த்த கஞ்சியா மார்க்சிசத்தின் ஒரு மறுப்புரையாக காட்டப்பட்டது?" என்று ஒருவர் தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவரது நாட்களினது தீவிரமான மற்றும் உளைச்சலான ஓட்டங்கள் பற்றிய உணர்திறனின்றி பேர்ன்ஸ்டைன் இருந்தது குறித்து ஒருவர் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. பேர்ன்ஸ்டைனுக்கு இசையின் மீது ஆர்வம் இருந்ததா என்பது எனக்குத் தெரியாது, ஆனால் அவரது சமகாலத்தியவர்களில் ஒருவரான குஸ்தாவ் மாஹ்லெரின் சிம்பொனிகளை கேட்டிருந்தால் அது அவருக்கு பயன்பட்டிருக்கக்கூடும். பேர்ன்ஸ்டைன் தனது சொந்த படைப்புகளில் முற்றிலும் தொலைத்திருந்த ஒன்றை மாஹ்லெரின் படைப்பில் கண்டுபிடித்திருக்க முடியும்: அதாவது, முதலாளித்துவ நாகரீகத்தின் மீது கவிழ்ந்து கொண்டிருந்த துன்பியல் குறித்த முன்னுணர்ந்த சோகம். ஆனாலும் மறுபடியும் இவர் லியோனார்ட் பேர்ன்ஸ்டைன் அல்ல எட்வார்ட் பேர்ன்ஸ்டைன் தானே, மனக்கவலைகளால் பின்னப்பட்ட அந்த ஆஸ்திரிய இசையமைப்பாளரின் படைப்பிலிருந்து அவர் நிறைய விஷயங்களை எடுத்துக் கொண்டிருப்பாரா என்பது எனக்கு சந்தேகமாகத்தான் இருக்கிறது.

நான் மேற்கோளிட்டுள்ள பத்திகள் எழுதப்பட்டபோது, எட்வார்ட் பேர்ன்ஸ்டைன் நினைத்தும் பார்க்க முடியாததாக கருதிய அந்தப் பேரழிவு —வரலாற்றில் ஈடுசொல்ல முடியாத பயங்கரங்களைக் கொண்டிருந்த காட்டுமிராண்டித்தனத்தின் ஒரு சகாப்தத்தை தொடங்கி வைக்க இருந்த ஒரு பேரழிவு— வெடிக்க வெறும் பதினைந்து ஆண்டுகள் மட்டுமே இருந்தன. முதலாளித்துவ அபிவிருத்திப் போக்கு, முன்னினும் அதிகமான ஜனநாயகத்தின் திசையிலோ வர்க்க குரோதங்களை தணிக்கும் திசையிலோ இட்டுச் செல்லவில்லை, மாறாக பாரிய ஒடுக்குமுறை மற்றும் உள்நாட்டு யுத்தத்தை நோக்கியே இட்டுச் சென்றது. எதிர்காலத்தை நோக்குகையில், கிட்டப்பார்வை கொண்டிருந்த எட்வார்ட் பேர்ன்ஸ்டைன் ஜனநாயகத்தின் வானவில்லை மட்டுமே பார்த்தார், முள்கம்பியிட்ட பதுங்குகுழிகள் மற்றும் சித்திரவதைக் கூடங்களை முற்றிலுமாக தவறவிட்டிருந்தார்.

பேர்ன்ஸ்டைனின் மற்றும் அவரது சமகாலத்தியவர்களின் எழுத்துக்களில் சந்தர்ப்பவாதம் அதன் மிக உயர்ந்த வெளிப்பாட்டைக் கண்டது. அதற்குப் பிந்தைய தசாப்தங்களில், அடுத்தடுத்து வந்த சந்தர்ப்பவாத அலைகள் ஏற்கனவே பேர்ன்ஸ்டைனியர்களால் கூறப்பட்டதற்கு மேலாக உண்மையான முக்கியத்துவம் கொண்ட எதனையும் சேர்த்து விடவில்லை. தத்துவார்த்த சுய-நனவில் மிகமிகக் குறைந்த மட்டத்தைக் கொண்டிருக்கும் நம்முடைய சொந்த காலகட்டத்தில், மார்க்சிசத்திற்கு எதிரான வாதங்கள், பேர்ன்ஸ்டைனால் முன்வைக்கப்பட்ட வாதங்களேயே இன்னும் சுருங்கிப்போன தரத்தில் என்றாலும் வெறுமனே மீள்உற்பத்தி செய்கின்றன. ஆக, ஒருவர் பேர்ன்ஸ்டைனின் தத்துவார்த்த கருத்துருக்களை ஆராயும்போது, ஒரு நூற்றாண்டு பிந்தி இருந்தாலும் கூட, ஒட்டுமொத்த சமகாலத்திய மார்க்சிச-விரோத தொகுப்புகளைக் கையாளுபவராகிறார்.

செயல்பாங்குதான் மனிதன் என்றால், அந்த செயல்பாங்கின் அத்தியாவசிய உள்ளடக்கமாக இருப்பது வழிமுறையே ஆகும். ஒருவர் அரசியலைக் குறித்து பேசத் தொடங்கும்போது, அவர் வெறுமனே அந்த நாளின் சம்பவங்களைக் குறித்த அவரது அபிப்பிராயங்களை மட்டும் வெளிப்படுத்தவில்லை, மாறாக அத்தகைய அபிப்பிராயங்களுக்கு கீழமைந்திருக்கும் தத்துவார்த்தக் கருத்தாக்கங்கள் மற்றும் அந்த கருத்தாக்கங்களுக்கு அவரை கொண்டுவந்து சேர்த்த புத்திஜீவித நிகழ்முறை ஆகியவற்றையும் வெளிப்படுத்துகிறார். தனிமனிதர்களுக்கு மட்டுமல்ல இது அரசியல் போக்குகளுக்கும் பொருந்துவதாகும்.

"விஞ்ஞான சோசலிசத்தை" நிராகரித்தல்

அரசியல் சந்தர்ப்பவாதம், சில குறிப்பிட்ட ஆராய்ச்சிமுறையியலை (methodological) மற்றும் அறிவாதார முறையியலை (epistemological) அடிக்கட்டுமானத்தில் கொண்டுள்ளது. சந்தர்ப்பவாதத்தின் எல்லா வெளிப்பாடுகளும் ஒரு பொய்யான அறிவாதாரமுறைக்குள் அடைந்துவிடுகின்றன, அல்லது திருத்தல்வாதத்தின் அறிவாதாரமுறை அடிக்கட்டுமானங்களை குறித்த ஓர் ஆய்வு சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை பற்றிய ஒரு கவனமான அரசியல் பகுப்பாய்வை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை இல்லாது செய்து விடுகிறது ஆகிய எளிமைப்படுத்தப்பட்ட கருத்தாக்கங்களை நான் ஊக்கப்படுத்த விரும்பவில்லை. மார்க்சிசத்தின் அங்கொன்றும் இங்கொன்றுமான கூறு மறுக்கப்பட்டிருப்பதாகக் கூறுவதை பேர்ன்ஸ்டைன் தனது வாதத்திற்கு அடித்தளமாக கொண்டிருக்கவில்லை. மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் அவர்களின் பல முடிவுகளில் தவறாக இருந்தார்கள் என்பதை சமகாலத்திய அபிவிருத்திகள் காட்டியிருந்ததாக நிச்சயமாக பேர்ன்ஸ்டைன் நம்பினார் என்றாலும் அது இரண்டாம்பட்சமான முக்கியத்துவத்தையே கொண்டிருந்தது. பேர்ன்ஸ்டைனை பொறுத்த வரையில், “விஞ்ஞான சோசலிசம்" என்ற கருத்தாக்கம் அதன் பெயரிலேயே முரண்பட்டு இருந்தது. சோசலிசம் விஞ்ஞான மட்டத்தை அடையமுடியாது, ஏனென்றால் "விஞ்ஞானத்தை நடுநிலையுடன் எதிர்கொள்ள முடியாத வண்ணம் ஒன்றில் ஈடுபடுத்திக் கொண்ட ஒரு இயக்கமாக” அது இருந்தது என்று அவர் தொடர்ந்து பராமரித்து வந்தார். “எந்தவொரு 'இசமும்' ஒருபோதும் விஞ்ஞானமாக முடியாது" என்று பேர்ன்ஸ்டைன் குறிப்பிட்டார். “'இசங்கள்' வெறுமனே முன்னோக்குகள், போக்குகள், சிந்தனை முறைகள் அல்லது கோரிக்கைகள் ஆகும், ஆனால் ஒருபோதும் விஞ்ஞானம் ஆகாது."20 சோசலிச வெகுஜன இயக்கமானது, அதன் விஞ்ஞானபூர்வமான பாவனைகள் ஒருபுறம் இருந்தாலும், அது “உதாரணமாக ஜேர்மன் விவசாயப் போர்கள், பிரெஞ்சுப் புரட்சி, அல்லது வேறு எந்த வரலாற்றுப் போராட்டத்தின் மட்டத்திற்கே விஞ்ஞானபூர்வமான இயக்கமாகும். சோசலிசம் ஒரு விஞ்ஞானமாக அறிகையைச் சார்ந்திருக்கிறது, ஒரு இயக்கமாக சோசலிசமானது அதன் 'உன்னதமான நோக்கத்திற்கான' ஆர்வத்தால் வழிநடத்தப்படுகின்றது."21

இந்த கருத்துக்களில் பதிலளிக்க வேண்டிய பல அம்சங்கள் உள்ளன. நவீன சோசலிசமானது, அதுவும் கூட குறிப்பிட்ட சமூக நலன்களது ஒரு வெளிப்பாடாகவே இருக்கும் மட்டத்திற்கு, முந்தைய வெகுஜன இயக்கங்களைக் காட்டிலும் எந்தவிதத்திலும் அதிகமாய் விஞ்ஞானபூர்வமானது கிடையாது என்ற கூற்றை ஆராய்வதில் இருந்து தொடங்குவோம். பேர்ன்ஸ்டைனின் நிறைய வாதங்களில் காண்பது போலவே, இதுவும் ஆழமானது என்பதை விட மிகவும் புத்திசாலித்தனமானதாகும். எல்லா சமூக இயக்கங்களும் வர்க்க நலன்களால் உந்தப்பட்டுள்ளன என்பது மறுக்கமுடியாத உண்மையே. ஆனால் மார்க்சிச அபிவிருத்தியின் ஊடாக மட்டுந்தான் வர்க்க நலன் என்ற இந்த உந்துதல் தரும் உட்கூறு தத்துவார்த்த-வரலாற்று ஆய்வின் விடயமாக மாறுகிறது என்ற உண்மையில்தான் நவீன சோசலிச இயக்கங்களுக்கும் முந்தைய புரட்சிகர வெகுஜன இயக்கங்களுக்கும் இடையிலான இன்றியமையாத வேறுபாடு வெளிப்பாடு காண்கிறது.

வர்க்கப் போராட்டத்தை முதன்முதலில் உணர்ந்து கொண்டு அதற்கு மகத்தான முக்கியத்துவம் கொடுத்தவர்கள் மார்க்ஸூம் ஏங்கெல்ஸூம் கிடையாது. இந்த புரிதலின் சுவடுகளை ஏற்கனவே பண்டையகால, மறுமலர்ச்சிகால வரலாற்றாளர்களிலும் மற்றும், மிக சமீபத்தில், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நெப்போலியனுக்கு பிந்தைய மீட்சியின் போதிருந்த பிரெஞ்சு வரலாற்றாளர்கள் மத்தியில் இருந்தவர்களிலும் — குறிப்பாக கிஸோ — காண முடிந்திருந்தது. ஆனால் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸினால் மட்டுந்தான் வர்க்கப் போராட்டத்தின் கீழிருந்த அடித்தளம் கண்டறியப்பட்டு, விளங்கப்படுத்தப்பட்டது. மார்க்ஸூம் ஏங்கெல்ஸூம் வர்க்க போராட்டம் மற்றும் சடரீதியிலான, அதாவது சொத்து, நலன்களுடன் அதற்கிருந்த உறவு ஆகியவற்றை வலியுறுத்தியதுடன் நிற்கவில்லை, மாறாக அந்த நலன்கள் —அத்துடன் அவை கொண்டு வரும் சமூகப் போராட்டங்களும்— மனிதனால் உருவாக்கப்பட்ட உற்பத்தி சக்திகளின் அடிப்படையிலும் மற்றும் அவற்றிற்கு அவசியமானதாக இருக்கும் உற்பத்தி உறவுகளின் —இவற்றின் ஊடாகவே அவை இயங்குகின்றன— அடிப்படையிலுமே உருவாக்கப்படுகின்றன என்பதை எடுத்துக்காட்டினர்.

வர்க்க சமூகத்தின் தோற்றுவாய்கள் குறித்த இந்த புரிதல்தான், முதல்முறையாக, வரலாற்றை தொடர்ச்சியாக சடரீதியில் புரிந்து கொண்டு விளங்கப்படுத்துவதை சாத்தியப்படுத்தியது —அதாவது இது பொருளாதார நலன்கள் உருவாவதை மட்டுமல்ல, மாறாக சமூக சிந்தனையின் பரிணாமத்தையும் கூட விவரித்தது. குறிப்பாக சமூக இருப்பிலிருந்து சமூக நனவை தேற்றம் செய்யும் இந்த இரண்டாவது அம்சம்தான், சோசலிச இயக்கத்திற்கு அதன் சொந்தத் தோற்றுவாய்கள், இருப்பு, அபிவிருத்தி மற்றும் அபிலாசைகளை ஒட்டுமொத்தமாக புதிர்விளக்கப்பட்ட வடிவத்தில்— அதாவது கருத்துவாத ஊக்கங்களில் அடைக்கலம்புகாமல் — புரிந்துகொள்வதை சாத்தியமாக்கியது. இங்கேதான் மார்க்சிச சோசலிச இயக்கத்திற்கும் அதற்கு முன்னர் இருந்த புரட்சிகர இயக்கங்களுக்கும் இடையிலான அத்தியாவசியமான வித்தியாசம் தங்கியிருக்கிறது.

அனைத்து சமூக இயக்கங்களும் —அது கடந்தகாலத்தினதாக இருந்தாலும் சரி, நிகழ்காலம் அல்லது எதிர்காலத்தினதாக இருந்தாலும் சரி— அவை ஏதோவிதத்தில் சமூக நலன்களின் வெளிப்பாடாக உள்ளன என்பதை நாம் சுலபமாக ஊகிக்கலாம். ஆனால் மார்க்சிச இயக்கமோ, அதன் கோட்பாடுகள், வேலைத்திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள், வரலாற்று வளர்ச்சியின் விதிகளைப் பற்றிய அறிவால் வழிநடத்தப்படுகின்ற மட்டத்திற்கு அது தனது விஞ்ஞானபூர்வ அடித்தளங்களைக் குறித்து நியாயமாய் திட்டவட்டம் காட்ட முடியும். “விஞ்ஞானமாக சோசலிசம்" (socialism as science) மற்றும் "இயக்கமாக சோசலிசம்" (socialism as movement) இரண்டிற்கும் இடையே பேர்ன்ஸ்டைன் வேறுபடுத்துவது, அப்பட்டமாகச் சொல்வதானால், அற்பத்தனமாக இருக்கிறது. சோசலிசம், விஞ்ஞானமாக, சமூக நனவின் அபிவிருத்தியை ஆளும் விதிகளை அறிந்துணர்கிறது என்று ஏற்றுக் கொண்ட பின்னர், சோசலிசம் இயக்கமாக "உன்னதமான நோக்கத்தை" அடிப்படையாக கொண்டிருக்கிறது என்று வாதிடுவது அப்பட்டமான அபத்தமாகும். எப்படிப் பார்த்தாலும், சமூக நனவு என்பது உற்பத்தி சக்திகளின் குறிப்பிட்ட மட்டம் மற்றும் அதற்குரிய உற்பத்தி உறவுகளின் அடிப்படையில் ஏற்பட்ட வரலாற்று நிலைமைகளது விளைபொருளே என்று வலியுறுத்தும் ஒரு விஞ்ஞானம், பின்னர் அது ஒரு வெகுஜன இயக்கத்தின் ஆடையை அணிந்து கொள்ளும்போது “உன்னதமான நோக்கங்களால்" வழிநடத்தப்படுகிறது என வாதிட முடியாது. அவ்வாறு வாதிட்டால், பின் அது விஞ்ஞானத்திற்கு உண்மையாக இருக்கும்பட்சத்தில், அந்த "உன்னத நோக்கங்களின்" தோற்றுவாய்கள் மற்றும் சமூக அடிப்படையை விளங்கப்படுத்த உடனடியாக நிர்ப்பந்தம் பெறும்.

"எந்த 'இசமும்' ஒருபோதும் ஒரு விஞ்ஞானம் ஆகாது” என்ற பேர்ன்ஸ்டைனின் வாதத்தை இப்போது ஆராய்வோம். இந்த அபிப்பிராயம் டார்வினிசத்தையே ஒரு அபாயமான இடத்தில் நிறுத்தும்போல் தெரிகிறது. ஆனால் "இசத்தினால்" குறிக்கப்படும் உறுதிப்பாடு விஞ்ஞானத்திற்கு இணக்கமற்றதாகும் என்று வாதிட நோக்கம் கொண்டிருந்தவர் வெறுமனே பிழையான வகையில் வெளிப்படுத்தி விட்டார் என்று நாம் கருதிக் கொள்வோம். கட்சித்தரப்பின் எந்தவொரு வடிவத்துடனும் விஞ்ஞானம் இணங்க முடியாதது என்ற ஒரு வாதத்திற்கு பேர்ன்ஸ்டைன் மீண்டும் மீண்டும் திரும்பினார். அவர் அறிவித்தார்:

சோசலிசம், தூய விஞ்ஞானமாக (pure science) மாறுவதில் அக்கறை கொண்டிருந்தால், அது வர்க்க அடிப்படையில் தொழிலாளர்களின் அபிலாசைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு வர்க்க சித்தாந்தமாக இருப்பதைத் துறக்க வேண்டி இருக்கும். இந்தப் புள்ளியில், சோசலிசமும் விஞ்ஞானமும் அவசியமாகக் கட்டாயம் பிரிந்தாக வேண்டும்.

நான் குழப்பத்திற்கிடமின்றி என்னுடைய நிலைப்பாட்டை தெரிவித்துவிடுகிறேன்: சோசலிசத் தத்துவத்தின் முன்மொழிவுகள் எந்தவொரு பக்கமும் சாராத, ஆர்வமில்லாத சோசலிஸ்ட்-அல்லாதவராலும் ஏற்கப்படுகின்ற போதே அது விஞ்ஞானமாக இருக்க முடியும். 22

இந்த கடைசிக் கருத்து உண்மையென்றால், மனிதகுலத்தின் தலைவிதி யாருக்கு முற்றிலும் அக்கறையற்ற ஒரு விடயமாக இருக்கிறதோ, அந்த நபர் மட்டுமே மார்க்சிசத்தின் விஞ்ஞானபூர்வ நம்பகத்தன்மைகளின் மீது தீர்ப்பு வழங்க தகுதி உடையவராவார் என்றே அது அர்த்தமளிக்கும். "தூய விஞ்ஞானம்" என்று, தான் அழைத்த ஒன்றுக்கு என்னவெல்லாம் தேவையாக இருக்கிறது என்று பட்டியலிட்ட பேர்ன்ஸ்டைன் "அகநிலையான விருப்பக் கூறுபாடுகள்" இருக்குமிடத்தில் அது இணங்கியிருக்க முடியாது என்று வலியுறுத்தினார்.23 விஞ்ஞான நடைமுறை எந்தவொரு குறிப்பிட்ட மனித குறிக்கோளுடனும் இணங்கியிராது என்று அவர் கூறினார்.

ஆனால் இது உண்மையல்ல என்பதைக் காண ஆழ்ந்த சிந்தனைக்குள் போக வேண்டியதில்லை. கட்சித்தரப்பாலோ அல்லது தன்விருப்பத்தாலோ விஞ்ஞானம் எந்தவிதத்திலும் மறுக்கப்படுவதில்லை. HIV வைரஸ் குறித்து ஆய்வு செய்யும் ஓர் உயிரியல் ஆராய்ச்சியாளர் எய்ட்ஸின் விளைவுகளைப் பற்றி அக்கறை இல்லாமல் இருக்கமாட்டார் என்றே நாம் ஊகிக்கலாம். ஒரு அறுவைச் சிகிச்சை செய்யும் மருத்துவர் அவரது கூரிய கத்தியின் கீழே உள்ள நோயாளியின் வாழ்வைக் காப்பாற்ற விரும்புகிறார் என்றே நாம் நம்பலாம். இரண்டுமே குறிப்பிட்ட "அகநிலையான" நோக்கங்களால் உந்தப்பட்டுள்ளன: முந்தையவர் HIV வைரஸை ஒழித்துக்கட்ட விரும்புகின்றார்; இரண்டாமவர் அவரது நோயாளியின் வாழ்வைக் காப்பாற்ற விரும்புகிறார். இது வேலையில் அவர்கள் ஒரு விஞ்ஞானபூர்வ மனோபாவத்தை ஏற்க இலாயக்கற்றவர்கள் என்று அர்த்தப்படுத்தாது.

அவர் வாழ்ந்த காலத்திலேயே, பேர்ன்ஸ்டைன் இதே ஆட்சேபத்தை எதிர்கொண்டார். 1901 மே மாதத்தில் அவர் ஆற்றிய ஓர் உரையில், சோசலிசம் ஒரு விசேட நோக்கத்தை அடைய விழைவதால் அதுவொரு விஞ்ஞானமாக முடியாது என்று வாதிட்டார். மருத்துவத்திற்கென்று ஒரு விசேடமான நோக்கம் அதாவது குணப்படுத்தும் நோக்கம் இருக்கிறது என்பதற்காக அதை விஞ்ஞானமில்லை என அவர் மறுப்பாரா என பேர்ன்ஸ்டைனிடம் அப்போது கேட்கப்பட்டது. பேர்ன்ஸ்டைன் அவரது குதர்க்கவாத பைக்குள் இருந்து ஆழமாகத் தேடியெடுத்து பதிலளித்தார்:

"நான் இவ்வாறு பதிலளித்தேன்," அவர் எழுதினார்,

குணப்படுத்துவதை “மருத்துவக் கலை” என்றே நான் கருதுகிறேன், இது மருத்துவ விஞ்ஞானத்தில் முழுமையாக தேர்ச்சி பெறுவதை அடிப்படையாக கொண்டிருக்கிறது. உள்ளபடியே, மருத்துவ விஞ்ஞானமானது குணப்படுத்தலை நோக்கிச் செலுத்தப்படுவதல்ல மாறாக நிலைமைகள் குறித்தும் குணப்படுத்தலுக்கு இட்டுச் செல்லக் கூடிய சாதனங்கள் குறித்துமான அறிவை நோக்கியே செலுத்தப்படுவதாகும். இந்த கருத்தாக்க வேறுபாட்டை ஒரு சிறந்த உதாரணமாக நாம் ஏற்றுக் கொண்டால், இன்னும் சிக்கலான விடயங்களிலும் கூட, விஞ்ஞானம் எங்கே முடிவடைகிறது “கலை” அல்லது “சித்தாந்தம்” எங்கே தொடங்குகிறது என்பதைக் கண்டறிவது நமக்கு சிரமமான காரியமாக இராது.24

அதற்கு பிளெஹானோவ் பதிலளித்திருந்தார்: “சோசலிசம் ஒரு விஞ்ஞானமாக, சோசலிசப் புரட்சியின் வழிவகைகளை மற்றும் நிலைமைகளை ஆராய்கிறது, அதேவேளையில் சோசலிசம் ஒரு 'கோட்பாடாக' அல்லது ஓர் அரசியல் கலையாக, பெறப்பட்ட அறிவின் உதவியோடு, அப்புரட்சியை கொண்டு வர முயல்கிறது."25

விஞ்ஞானத்தை வெறும் உண்மைகளின் ஒரு பட்டியலாகவும், விஞ்ஞானிகளை அவற்றை சேகரித்து, எடைபோட்டு, அடுக்கி பின் உரிய அடுக்கில் வைக்கும் கற்றறிந்த குமாஸ்தாக்களுக்கு கொஞ்சம் மேலானவர்களாகவுமே பேர்ன்ஸ்டைன் சிந்தித்தார். அத்தகையதொரு கருத்தாக்கம் அறிவியலுக்கு அதன் படைப்பாக்க உத்வேகத்தையும் செயல்பாட்டையும் இல்லாது செய்தது மட்டுமல்ல, வரலாறற்றதாகவும் இருந்தது. விஞ்ஞானத்தின் அபிவிருத்தி கடந்த 2,500 ஆண்டுகளாக பல்வேறு போக்குகளின் போராட்டத்தினூடாக முன்னேறியுள்ளது — அதில் இருந்த பிளவுகள் அருவமான கருத்துருக்களோடு மட்டும் தொடர்புபட்டவையல்ல, மாறாக முற்றிலும் நேரடியாக சடரீதியிலான நலன்களோடும் சம்பந்தப்பட்டிருந்தன. ஜியோர்டனோ ப்ரூனோ மற்றும் கலிலியோ கலிலியின் தலைவிதிகளால் எடுத்துக்காட்டப்பட்டதைப் போல, விஞ்ஞானத்தின் வளர்ச்சி தங்களின் சமூக நிலையை அச்சுறுத்துவதாக உணர்ந்த சமூக வர்க்கங்களின் எதிர்ப்பை விஞ்ஞானம் முகம்கொடுத்த சந்தர்ப்பங்கள் அபூர்வமானவையல்ல என்பதைச் சுட்டிக்காட்டுவது சுவாரஸ்யம் தராத ஒப்பிப்பு போலத் தோன்றலாம். “விஞ்ஞானத்தின் பாரபட்சமற்றதன்மை" (scientific impartiality) குறித்து பேர்ன்ஸ்டைன் பேசியபோது, அவரது மனதில் அறிகை நிகழ்முறை குறித்து, சடவுலகம் மனிதர்களின் மூளைகளில் பிரதிபலிப்பதையும் அறிவு திரட்டப்படுவதையும் ஒரு ஆழ்ந்த சிந்தனையின் மூலமான செயல்குன்றிய நிகழ்முறையாகக் கருதுகின்ற ஒரு திட்டவட்டமான கருத்தாக்கம் இருந்தது. அதாவது, அவரது சடவாதம் ஒரு எந்திரத்தனமான, இயங்கியலற்ற குணத்தைக் கொண்டிருந்தது, அதில் அறிகைக்குட்படும் பொருளுக்கும் சிந்திக்கும் அகப்பொருளுக்கும் இடையில் ஒரு மிகப்பெரும் பிளவு பிரித்து நின்றது.

பேர்ன்ஸ்டைனால் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டது மார்க்சிசத்தின் விஞ்ஞானபூர்வ அங்கீகாரத்தன்மை மட்டுமல்ல. “தூய விஞ்ஞானம்" குறித்த அவரது கருத்துரு, சமூகத்தின் மீதான ஒரு விஞ்ஞானபூர்வ ஆய்வின் சாத்தியக்கூறையே சந்தேகத்திற்குட்படுத்தியது. சாராம்சத்தில், அறிந்துகொள்ளும் மனிதரும் அறிகைக்குள்ளாகும் பொருளும் முற்றிலும் அந்நியப்பட்ட மற்றும் தனித்தனியான விடயங்களாய் - (அதாவது அனுமானிக்கத்தக்க விதத்தில்) இயற்கை மற்றும் தத்துவார்த்த விஞ்ஞானங்களில் - ஒன்றுக்கொன்று எதிர்நிற்கவியலும் இடங்கள் வரை மட்டுமே விஞ்ஞானபூர்வ சிந்தனையின் களம் வரம்புபட்டதாகும் என்று அவர் தொடர்ந்து பராமரித்தார். ”தூய விஞ்ஞானமானது” அறிகை நிகழ்முறையில் அறிபவரும் அறிபொருளும் ஒன்றுகலக்கப்படுவதைக் கொண்டு எந்தவகையிலும் தனது பயிற்சி மாசுபடுத்தப்படாமலிருப்பதை கோருகிறது என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். இரண்டும் அதனதன் இடத்தில்தான் இருந்தாக வேண்டும். அறிபவருக்கும் அறிகைக்குள்ளாகும் பொருளுக்கும் இடையில் இருந்தாக வேண்டிய ஒரு முழுமுதலான எல்லைக்கோடு மீறப்படுகின்ற அந்த தருணத்திலேயே விஞ்ஞானம் “தூய்மையற்றதாக” ஆகி அதன் விஞ்ஞானபூர்வ செல்தகைமையை இழந்து விடுகிறது என்றார்.

ஆக, ஏறக்குறைய வரையறைப்படி, மனித சமூகத்தை பற்றிய விஞ்ஞானபூர்வ ஆய்வு, அது மார்க்சிஸ்டுகளால் செய்யப்பட்டாலும் சரி அல்லது வேறு எவரால் செய்யப்பட்டாலும் சரி, நுட்பரீதியாக சாத்தியமே இல்லை என்றாகிறது. பேர்ன்ஸ்டைனை பொறுத்தவரை, அவர் சொல்வது சரியென்றால் மனித ஆய்வாளர்களும் உன்னிப்பாய் கவனிப்பவர்களும் அவர்கள் ஆய்வு செய்யும் உயிரினத்தின் அங்கமாக தாங்களே இருக்கும்பொழுது, சமூகம் குறித்த எந்தவித உண்மையான விஞ்ஞானமும் எவ்வாறு இருக்க முடியும் என்பதாகும். இதே புள்ளியின் மீது காவுட்ஸ்கி பேர்ன்ஸ்டைனுக்கு பதிலிறுக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார்:

ஒவ்வொரு விஞ்ஞானமும் அதனதன் தனியியல்பான சிக்கல்களை கொண்டிருக்கின்றன. சமூக விஞ்ஞானங்களில் இருக்கும் அவ்வாறான சிக்கல்களில், ஆய்வாளர்களும் மற்றும் ஆராய்ச்சியாளர்களும் அவர்கள் எந்த உயிரினத்தை ஆராய வேண்டியுள்ளதோ அதே உயிரினத்தின் ஒரு பாகமாக உள்ளனர் என்பதும்; அவர்கள் அந்த உயிரினத்திற்கு வெளியே இல்லை மாறாக அதற்கு உள்ளே இருக்கிறார்கள் என்பதும்; ஒவ்வொருவருக்கும் அந்த உயிரினத்தில் குறிப்பிட்ட இடம் இருக்கிறது, அதிலிருந்து அவர் மட்டுந்தான் அதனைக் குறித்தும், அதன் பிரத்யேக செயல்பாடுகளைக் குறித்தும், உயிரினத்தின் மற்ற அங்கங்களின் மீது அது சார்ந்திருக்கும் தன்மை குறித்தும் ஆராய முடியும் என்பதும்; மற்றும் இந்த உயிரினத்தின் குறிப்பிட்ட பாகங்கள் அவற்றிற்குள் ஒன்றோடொன்று முரண்பட்டு நிற்கின்றன என்பதும் அடங்குவன. இவையெல்லாம் நிச்சயமாக கடுமையான முட்டுக்கட்டைகள் தான், என்றாலும் இவையெல்லாம் விஞ்ஞானத்தை சாத்தியமிழக்கச் செய்யுமளவுக்கு உண்மையிலேயே மிகப் பெரியனவாக இருந்தால், அப்போது விஞ்ஞான சோசலிசத்தை மட்டுமல்ல சமூக விஞ்ஞானத்தின் மற்ற ஒவ்வொரு வகையையுமே அவை நிராகரிக்க முடியும். அப்படியானால் சோசலிஸ்டுகளை குறித்து பேர்ன்ஸ்டைன் கூறும் அதே விடயங்கள் முதலாளித்துவ பொருளாதாரவாதிகளுக்கும் பொருந்தக் கூடியவை ஆகும்.26

புறநிலையின் மாறாநிலைவாதம்

பேர்ன்ஸ்டைனின் அனைத்து வாதங்களும் பின்வரும் ஒரே மாறாநிலைவாத, எளிய மற்றும் பண்படாத சூத்திரத்தை சுற்றியே வலம் வருகிறது: “புறநிலை" நிகழ்சிப்போக்குகள் என்பவை, மனித நடவடிக்கை மற்றும் விருப்பத்திலிருந்து முற்றிலும் சுயாதீனமாக நடப்பவை. விரும்பப்படுகின்ற அல்லது ஒரு நனவான துடிப்பை காணக்கூடியதாக இருக்கின்ற நடவடிக்கையின் மூலமாக அடையப்படுகின்ற எதுவொன்றும் நிஜமான புறநிலை கிடையாது. “புறநிலை" என்பது முற்றிலுமாக மனிதஇனத்திற்கும் மற்றும் அதன் நனவுக்கும் வெளியே இருப்பதும் தன்னைத்தானே தன்னியல்பாக வெளிப்படுத்திக் கொள்வதும் மட்டுமே ஆகும். இவ்விதத்தில், எல்லா மனித நடவடிக்கைகளும், அவை நனவினூடாக கடந்து வருவதால், அகநிலையே ஆகும். ஆகவே, பேர்ன்ஸ்டைனின் கருத்துப்படி, “புறநிலை அத்தியாவசியம்” (objective necessity) என்ற சொற்றொடரை, உள்ளுணர்வான நனவுக்கு அதிகமான எதையும் கொண்டிருக்கத்தக்க எந்தவொரு மனித சமூக நடவடிக்கைக்கும் நியாயமாகப் பயன்படுத்த முடியாது.

இந்தக் கோணத்தில் பார்த்தால், வர்க்கப் போராட்டமே புறநிலை வரலாற்று அவசியத்தின் ஒரு வெளிப்பாடல்ல, மாறாக வெறுமனே நிகழ்வுகளின் புறநிலைப் பாதையின் மீது மனித அகநிலையின் விருப்பம் தன்னைத்தானே திணித்துக் கொள்வதன் வெளிப்பாடு மட்டுமே என்றாகிறது. “ஒரு குறிப்பிட்ட சமூகக் குழுவிற்கான மேம்பட்ட நிலைமைகளுக்கான விருப்பம்” ஒருபோதும் 'புறநிலையானதாக' இருக்க முடியாது என்று பேர்ன்ஸ்டைன் குறிப்பிட்டார். பொருளாதார மாற்றங்களை குறித்த விளக்கத்தில் ஒருபோதும் 'புறநிலை' என்ற வார்த்தைக்கே இடம் கிடையாது என்றும் கூட ஒருவர் கூற முடியும், ஏனென்றால் அவை மனித நடவடிக்கையின் தலையீடு இல்லாமல் ஒருபோதும் ஏற்படுவதில்லை.” மனித நடவடிக்கையின் களத்தில், புறநிலை மற்றும் அகநிலைக்கு இடையேயான, விஞ்ஞானம் மற்றும் அத்தியாவசியம் ஆகிய வரையறைகளில் எதை விவாதிக்க முடியும் அல்லது விவாதிக்க முடியாது என்பதற்கு இடையேயான, எல்லைக்கோட்டை தெளிவுபடுத்தும் முயற்சியில், பேர்ன்ஸ்டைன் பின்வரும் உதாரணத்தை வழங்கினார்:

எல்லோருக்கும் உணவின் தேவை ஏற்படுவதென்பது ஒரு புறநிலை சக்தி, ஆனால் வெவ்வேறுவகை உணவுக்கான விருப்பம் என்பது ஓர் அகநிலை காரணி. ஒரு கருத்தை அல்லது ஒரு திட்டமிட்ட இலக்கை அடைவதற்காக அன்றாட வாழ்க்கை அவசியங்களுக்கு மேலமர்ந்து கொள்கின்ற எதுவொன்றும் புறநிலை அவசியத்தை அடிப்படையாக கொண்டதல்ல.27

பேர்ன்ஸ்டைனின் வாதம், ஒரு மேலெழுந்தவாரியான பரிசீலிப்புக்கும் கூட தாக்குப்பிடிக்க முடியாது. உணவுத் தேவை ஏற்படுவது புறநிலையானதென்றும், ஆனால் "வேறுவேறு உணவுக்கான விருப்பம்" வெறுமனே அகநிலையானதென்றும் அவர் நமக்கு கூறுகிறார். அந்தவொரு குறிப்பிட்ட "விருப்பம்", ஒரு புறநிலைரீதியான-அடித்தளத்தில் உண்டான தேவையின் அகநிலையான வெளிப்பாடாக இருக்கலாமென்று அவருக்குத் தோன்றவில்லை; அல்லது, வேறுவிதமாகக் கூறுவதானால், அகநிலையான விருப்பம் என்பது புறநிலை அத்தியாவசியத்துக்குள் ஒரு நனவான உட்பார்வையின் அடித்தளத்தில் அபிவிருத்தி காணமுடியும் என்று அவருக்குத் தோன்றவில்லை. உணவுக்கான தேவை ஏற்படுவதென்பது ஒரு புறநிலையான அவசியம் என்பது உண்மை தான். ஆனால் பசிக்கு மனிதன் எவ்வாறு விடையிறுப்பு காட்டுகிறான் என்பது வெறுமனே முழுவதுமாக ஓர் அகநிலைத் தூண்டுதல் இல்லையே. ஊட்டச்சத்து விஞ்ஞானமும் (science of nutrition) மற்றும் கொழுப்புச் செறிவு குறைந்த "சமநிலை உணவுமுறை" (balanced diet) என்ற கருத்தாக்கமும் மனித உயிரினத்தின் தேவைகள் குறித்த ஒரு விஞ்ஞானபூர்வ புரிதலுக்கேற்ற அகநிலை உத்வேகத்தின் துல்லியப்படுத்தலையும், தகவமைப்பையும், திசையையும் குறிக்கின்றன. இன்னும் சொன்னால், நனவு கொண்டிருத்தலானது அகநிலை விருப்பமும் புறநிலை தேவையும் முற்போக்காய் ஒத்திசைவு காண்பதற்கான முன்னவசியமாக இருக்கிறது.

உணவு விவகாரங்களில் இருந்து அரசியலுக்கு நகர்கையில், அவரது வாதமுறையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் பேர்ஸ்ன்டைன், ’சோசலிசமானது, இல்லாத ஏதோவொன்றை —இந்த விடயத்தில், ஒரு சமூகப்பொருளாதார அமைப்பு வடிவத்தை— அது விரும்புகிறது என்ற காரணத்தால் விஞ்ஞானத்திற்கான எந்தவொரு உரிமைகோரலையும் அது நிச்சயமாக இழந்து விடுகிறது’ என்று வலியுறுத்தினார். "ஆனால் நாம் கடுமையாக பாடுபட்டுக் கொண்டிருக்கும் ஏதோவொன்று எவ்வாறு தூய விஞ்ஞானமாக இருக்க முடியும்?"28 என்று பேர்ன்ஸ்டைன் எரிச்சலோடு வினவினார். ”ஒரு பொருளாதார அமைப்புமுறையாக கூட்டாண்மை (collectivism) ஒரு இலட்சிய வடிவத்தை ஏற்பதால்” ”அதே சமயத்தில் அது விஞ்ஞானபூர்வமானதாகவும் கருதப்பட முடியாது” என்று பேர்ன்ஸ்டைன் அறிவித்தார்.

மனிதரின் அபிலாசைகள் விஞ்ஞானத்துறைக்கு வெளியேதான் இருக்கமுடியும் என்று திட்டவட்டம் காட்டிய சமயத்தில், ஏதோ மார்க்சிச சோசலிசத்தின் விஞ்ஞான பாசாங்குத்தனங்களை குத்திக்காட்டுவதாக மட்டுமே பேர்ன்ஸ்டைன் நினைத்திருக்கலாம், ஆனால், உண்மையில் அவர் விஞ்ஞானத்தின் சாத்தியக்கூறையே மறுத்திருந்தார். ஏனென்றால் விஞ்ஞானபூர்வ விசாரணை என்பதுவே, மனிதன் அவன் முகம்கொடுக்கும் நிலைமைகளுக்கு காட்டும் அகநிலையான பதிலிறுப்பில் தனது படைப்பாக்க உத்வேகத்தை காணக்கூடிய ஒரு சமூக நிகழ்முறையே ஆகும். மனிதன், தான் உயிர்வாழ்வதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும் அவசியமானவற்றை இயற்கையில் இருந்து நனவுடன் எடுத்துக்கொள்வதன் வெளிப்பாடாகவே விஞ்ஞானம் எழுகிறது. அகநிலையையும் புறநிலையையும் முற்றுமுதலாய் தனித்தனியானவையாக அனுமானிப்பதற்கு எல்லாம் வெகு அப்பால், விஞ்ஞான சிந்தனைக்கான ஒரு முதற்கோளாக இருப்பது என்னவென்றால் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலிருக்கக் கூடிய இயங்கியல் உறவே ஆகும்.

இங்கே மார்க்ஸின் ஆலோசனையைப் பெறுவது உபயோகமாக இருக்கும்:

முதலில் உழைப்பு என்பது, மனிதனும் இயற்கையும் பங்கெடுக்கும் ஒரு நிகழ்ச்சிப்போக்காகும். அதில் மனிதன் அவனுக்கும் இயற்கைக்கும் இடையிலான சடரீதியிலான எதிர்வினைகளை அவனது சொந்த விருப்பத்தில் ஆரம்பிக்கிறான், நெறிப்படுத்துகிறான் மற்றும் கட்டுப்படுத்துகிறான். இயற்கையின் உற்பத்திகளை தனது சொந்த விருப்பங்களுக்கேற்ற ஒரு வடிவத்தில் எடுத்துக் கொள்ளும் பொருட்டு, அவனது தோள்கள் மற்றும் கால்கள், தலை மற்றும் கைகள், அவனது உடலின் இயற்கை பலங்களை செயலில் ஈடுபடுத்தி, இயற்கையினது சக்திகளில் ஒன்றாக அவனே இயற்கையை எதிர்கொண்டு நிற்கின்றான். அவ்விதத்தில் வெளியுலகின் மீது செயல்பட்டு அதனை மாற்றுவதன் மூலம், அதேநேரத்தில் அவனது சொந்த இயல்பையும் அவன் மாற்றிக் கொள்கிறான். அவனது மறைந்துகிடக்கும் சக்திகளை அவன் அபிவிருத்தி செய்வதுடன், அவனது அதிகாரத்திற்கு அதை கீழ்ப்படிய வைக்க அவற்றை நிர்ப்பந்திக்கிறான். ... ஒரு நெசவாளியின் நடவடிக்கை ஒரு சிலந்தியின் நடவடிக்கையை ஒத்திருக்கிறது, ஒரு தேனீ அதன் கூட்டைக் கட்டுவதில் பல கட்டிடக்கலைஞர்களை வெட்கித் தலைகுனியச் செய்கிறது. ஆனால் மிகச்சிறந்த தேனீக்கும் மோசமான கட்டிடக்கலைஞருக்கும் வேறுபடுத்தி நிற்பது எதுவென்றால், கட்டிடக்கலைஞர் கட்டிடத்தை நிஜத்தில் கட்டியெழுப்பும் முன்னதாக தனது சிந்தனையில் முன்னரே கட்டியெழுப்பி வைத்திருக்கிறார். ஒவ்வொரு உழைப்பு-நிகழ்ச்சிப்போக்கின் இறுதியிலும், அந்த நிகழ்வுப்போக்கு துவங்கிய சமயத்தில் உழைத்தவரின் கற்பனையில் ஏற்கனவே இருந்திருந்த ஒரு முடிவையே நாம் விளைவாகப் பெறுகிறோம்.30

விஞ்ஞானமானது, கையிருப்பு கணக்கு எடுக்கின்ற ஒரு குமாஸ்தாவைப் போல, மனித நனவுக்கும் நடைமுறைக்கும் வெளியில் நிலவுகின்ற சட உலகத்தின் மீதான ஒரு விவரிப்புடன் தன்னை மட்டுப்படுத்திக் கொள்வதில்லை. உண்மையில் அது, என்ன இல்லை என்பதைக் குறித்து அக்கறை கொள்கிறது. இயற்கைக்குள்ளாக மனிதனின் கனவுகளை யதார்த்தமாக்கும் சாத்தியக்கூறை விஞ்ஞானம் கண்டறிய முனைகிறது. இக்காரஸ் (Icarus) பற்றிய கதை 2,000 ஆண்டுகளுக்கும் அதிகமாக பழமையானது. பறக்க வேண்டுமென்ற கனவு இறுதியில் லியோனார்டோவின் ஓவியங்களாக, ரைட் சகோதரர்களின் இரட்டைஇறகுவிமானமாக, மற்றும், மிக சமீபத்தில், விண்வெளி ஓடமாக மாற்றம் பெற்றது. “மனிதனின் நனவு புற உலகை பிரதிபலிப்பதோடு மட்டுமல்ல, அதை உருவாக்கவும் செய்கிறது."31

இயற்கை நியதிகள் பற்றிய மனிதனின் நுண்ணறிவு, நிலவும் நிலைமைகளை அவனது சொந்த நலன்களுக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளவும் அதை மாற்றவும் கூட எப்படி அவனுக்கு வழியமைத்துத் தருகிறதோ, அதைப் போலவே, மனிதனின் வரலாற்று அபிவிருத்தியை நெறிப்படுத்தும் நியதிகளுக்குள் மார்க்சிசத்தால் எட்டப்பட்ட விஞ்ஞானபூர்வ நுண்ணறிவு, நனவுபூர்வமாக-புரிந்துகொள்ளப்பட்ட மனிதத் தேவைகளின் அடிப்படையில் சமூக-பொருளாதார வாழ்வை ஒழுங்கமைக்கும் சாத்தியக்கூறை வழங்குகிறது. பேர்ன்ஸ்டைன், அதுபோன்ற ஒரு நுண்ணறிவின் சாத்தியக்கூறை பொதுவாக மறுக்கின்ற வேளையில், மார்க்சிசத்திற்கும் அதற்கு முன்பிருந்த கற்பனாவாத சோசலிச சிந்தனையின் பல்வேறு வடிவங்களுக்கும் இடையிலான முக்கிய வேறுபாட்டை திரித்து பிரதிநிதித்துவம் செய்தார். மார்க்சிசத்தின் "உள்ளார்ந்த மையக்கரு" (innermost core) “ஓர் எதிர்கால சமூக ஒழுங்கின் ஒரு தத்துவமாகும்" என்று அவர் கூறினார். இது இரண்டு அடிப்படையான அம்சங்களில் தவறானதாகும்:

முதலாவதாக, மார்க்சிசத்தின் "உள்ளார்ந்த மையக்கரு" எதிர்காலம் குறித்த ஒரு தத்துவமோ அல்லது வரலாற்று குறித்த ஒரு தத்துவமோ கூட அல்ல, மாறாக இது, நனவிற்கு முந்தையது இருப்பு என்பதில் இருந்து, ஒரு இயங்கியல் வழிமுறையில் வேரூன்றிய, ஒரு சடரீதியிலான உலகக் கண்ணோட்டமாகும்.

இரண்டாவதாக, மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் ஒரு எதிர்கால சமூக ஒழுங்கமைப்பு (social order) குறித்த தத்துவத்தை வழங்கவில்லை. மாறாக, அவர்கள் வரலாற்று அபிவிருத்தியின் பொது விதிகளைப் பற்றிய, மற்றும் அந்த அடித்தளத்தில், முதலாளித்துவ உற்பத்தி முறையின் இயல்பைப் பற்றிய ஒரு சீர்மையான சடவாத விளக்கத்தையே வழங்கினார்கள். அரூபமான கோட்பாடுகளின் மீது எதிர்கால சமூகம் குறித்த தனது கருத்தாக்கத்தைக் கட்டமைத்திருந்த கற்பனாவாத சோசலிசத்திற்கு நேரெதிரான விதத்தில், மார்க்சிசமானது, நிலவும் சமூக முரண்பாடுகளின் மீதான ஆய்வின் மூலமாக, சோசலிசத்தின் வரலாற்று அவசியத்தையும் மற்றும் சாத்தியத்தையும் வெளிப்படுத்தியது. மார்க்ஸ் ஒரு புதிய சமூக அமைப்புமுறையைக் வகுக்க புறப்படவில்லை. சோசலிசத்தை அவர் "கண்டுபிடிக்கவில்லை".

நன்கறியப்பட்டது போல, மார்க்ஸ் ஒரு எதிர்கால சமூக ஒழுங்கமைப்பின் ஒரு முன்வரைவை வரைய முயலவில்லை. ஃபூரியர் சமுதாயங்களுடன் (Phalansteries of Fourier) ஒப்பிடத்தக்க எதையும் மார்க்ஸின் எழுத்துக்களில் காண முடியாது. மாறாக, சோசலிஸ்டுகளின் விருப்பத்திலிருந்து சுயாதீனமாக முதலாளித்துவ சமூகத்தின் பொருளாதார அபிவிருத்தியே உற்பத்தி சாதனங்களை சமூகமயமாக்குவதற்கு அடித்தளங்களை அமைக்கிறது என்பதையும்; அத்துடன் புறநிலைரீதியாக தொழிலாள வர்க்க சுரண்டலின் அடிப்படையில் அமைந்துள்ள முதலாளித்துவ உற்பத்தி முறையின் முரண்பாடுகளே, நெருக்கடி, முறிவு மற்றும் சமூக புரட்சியை நோக்கி நாடிச்செல்லும் என்பதையும் மார்க்ஸ் விளங்கப்படுத்திக் காட்டினார். ஆகவே சோசலிசம் என்பது இப்போது நிலவும் சமூகத்தினது சமூகபொருளாதார கட்டமைப்பின், இன்னுமோர் ஆழமான அர்த்தத்தில், மனிதனின் முழு வரலாற்றுப் பரிணாமத்தின், ஒரு அவசியமான (மேலோட்டமான அர்த்தத்தில் இல்லையெனினும், தவிர்க்க முடியாதது) விளைபொருளாகும்.

பேர்ன்ஸ்டைனின் தத்துவார்த்த கருத்தாக்கங்களின் வெற்றுத்தன்மையை உணர்ந்த பின்னரும் கூட, ஒருவருக்கு கேட்கத் தோன்றுவது என்னவென்றால்: இந்தளவுக்கு, அதிகரித்துச் சென்று கொண்டும் ஐரோப்பிய நாகரிகத்தை ஒரு பேரழிவை நோக்கி உந்திச் சென்று கொண்டிருந்ததுமான சமூக முரண்பாடுகளை காணமுடியாத குருடராக பேர்ன்ஸ்டைன் இருந்திருக்க எப்படி சாத்தியமானது? இந்தக் கேள்வியை நமது சமகாலத்தியவர்களிடம் முன்னிறுத்தினால், குறைந்தபட்சம் அதற்கான பதிலின் ஒரு பகுதியையேனும் பெறமுடியும். நமது சொந்த நாகரீகத்தை படுபாதாளத்திற்கு உந்திச்சென்று கொண்டிருக்கும் முரண்பாடுகளுக்கு, புத்திசாலிகள் என்று கருதப்படுகின்ற நிறையப்பேர், இந்தளவுக்கு ஏன் முற்றிலுமாக கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறார்கள்? “ஆசியாவின் ஐந்து புலிகளின்" (Five Tigers of Asia) பொறிவு என்பது ஏன் நன்கு-விபரமறிந்தவர்கள் என்று கருதப்பட்டவர்களேயே ஆச்சரியத்திற்குக் கொண்டு சென்றது? எட்வார்ட் பேர்ன்ஸ்டைனின் வாழ்க்கை ஒரு முன்மாதிரியாக படிக்கப்பட வேண்டியதல்ல, மாறாக, குறைந்தபட்சம், ஒரு எச்சரிக்கையூட்டும் கதையாக கட்டாயம் படிக்கப்பட வேண்டியதாகும். குறிப்பாக ஏறத்தாழ உலகளாவிய வரலாற்று அலட்சியம் மற்றும் அரசியல் கண்மூடித்தனம் நிலவுகின்ற நமது சொந்தக் காலகட்டத்தில், எட்வர்ட் பேர்ன்ஸ்டைனின் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ளப்பட கொஞ்சமேனும் இருக்கவே செய்கிறது. ஏனென்றால் அவர் தனது அத்தனை குறைகளையும் தாண்டி, உலக அரங்கில் தற்போது செயல்பட்டுவரும் அரசியல் பிரபலங்களோடு ஒப்பிட்டால் அதிக மோசமாகத் தெரிவது கடினம். மேலும், 1898இல் பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதியில் இருந்த ஐரோப்பிய முதலாளித்துவத்தின் செல்வவளமை மற்றும் சக்திக்கு மத்தியில், வரவிருந்த பேரழிவின் அறிகுறிகளைப் பார்ப்பது அவ்வளவு எளிதானதாக இருந்திருக்க முடியாது என்ற, பேர்ன்ஸ்டைனை பாதுகாக்கின்ற ஒரு விடயத்தை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அச்சமயத்தில் வெறுமனே ஆர்வமான பார்வை மட்டும் போதுமானதாக இருக்கவில்லை, மாறாக மார்க்ஸ் ஒருமுறை குறிப்பிட்டதைப் போல "வடிகட்டல்களின் ஒரு சக்தி" அவசியமாக இருந்தது.

பேர்ன்ஸ்டைனின் அனுபவவாதம்

முக்கியமாக அந்த புத்திஜீவித திறன்தான் பேர்ன்ஸ்டைனிடம் இல்லாமலிருந்தது. ஒரு அனுபவவாதியாக, அவரது அரசியல் விரிவுஎல்லைகள், சாதாரண அவதானிப்பின் மூலமாகவோ அல்லது பத்திரிகை வாசிப்புகள் மற்றும் பொருளாதார புள்ளிவிபரங்கள் குறித்த அவரது ஆய்வுகள் இவற்றின் மூலமாகவோ அவர் எடுத்துக்கொண்ட "உண்மைகளை"க் கொண்டு தீர்மானிக்கப்படுவதாய் இருந்தன. பேர்ன்ஸ்டைன், தான் ஒரு விஞ்ஞானபூர்வ மனிதர் என்று உளமார நம்பினார், மார்க்ஸ்க்கு எதிராக அவர் வைத்த முதன்மையான கடிந்துரையாக எது இருந்தது என்றால், அவரது ஹெகலிய ஆராய்ச்சிமுறையும் மற்றும் அவரது புரட்சிகர நோக்கங்களும் சமூகப் பொருளாதார வாழ்வின் "உண்மைகளுக்கு" ஒரு புறநிலையான அணுகுமுறையை ஏற்பதை அவருக்கு சாத்தியமில்லாமல் செய்துவிட்டிருந்தது என்பதுதான்.

உண்மையின் (truth) உயிரோட்டமான கட்டமைப்பை உருவாக்குகின்ற முற்றுமுதல் புறநிலைத் தரவின் அடிப்படையான, “தூய்மை”யான, “மதிப்பிட முடியாத” மற்றும் புத்திஜீவிதரீதியாக மாசுபடுத்தப்படாத துகள்களே “உண்மை விபரங்கள்” (facts) என்ற அனுபவவாதியின் பொதுவான பிரமைகளின் கீழேயே பேர்ன்ஸ்டைன் இயங்கிக் கொண்டிருந்தார். அரசியல்-நடுநிலையான தரவின் இத்தகைய துகள்கள் போதுமான அளவில் திரட்டப்பட்டாலே அது சமூக விஞ்ஞானிக்கு சமூக யதார்த்தத்தின் ஒரு உண்மையான புறநிலைச் சித்திரத்தை வழங்கி விடும், அதனைக் கொண்டு ஒரு பகுத்தறிந்த நடவடிக்கைப் பாதை தீர்மானிக்கப்பட முடியும்.

சமூக யதார்த்தத்தின் "உண்மை விபரங்களே" கூட வரலாற்றின் விளைபொருள்களே என்பதையும், அத்துடன் உண்மை விபரங்கள் பிரித்தெடுக்கப்பட்டு ஒரு கருத்தியல் கட்டமைப்பிற்குள் வைக்கப்படுகின்ற விதம் சமூகரீதியாக பக்குவப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் அனுபவவாதி மறுக்கிறார், அல்லது உணர்ந்து கொள்ளத் தவறுகிறார். ஒவ்வொரு சமூக உண்மையும் வரலாற்று நிலைமைகளின் குழந்தையாகும் என்பதோடு அது சமூகப்பொருளாதார உறவுகளின் ஒரு சிக்கலான வலையமைப்பின் பாகமாக இருக்கிறது. மேலும், அறிகை கருத்துருக்கள் மற்றும் வகைப்பாடுகளது —இவையும் கூட ஒரு வரலாற்று நிகழ்முறையின் விளைபொருளும் பிரதிபலிப்புமே ஆகும்— இயங்குமுறையின் ஊடாகவே இந்த “உண்மை விபரங்கள்” அறிகைக்குள்ளாகின்றன — உண்மையில், அவை “உண்மை விபரங்களாக” அறியப்படும் நிலைக்கு வருகின்றன.

சமூக நிகழ்வுக்கூறுகளை (social facts) அவர் தேர்ந்தெடுப்பதும், ஆராய்வதும் முற்றிலும் நடுநிலையானதென வலியுறுத்தும் அனுபவவாதி, அவர் துணையாகக் கொள்ளும் கருத்துருக்களினது வரலாற்றுரீதியாக பக்குவப்பட்ட குணாம்சத்தைக் குறித்து அறியாமல் இருக்கிறார்; அதாவது, வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அவர் தனது சொந்த சிந்தனையின் வடிவங்களை நோக்கிய ஒரு விமர்சனமற்ற மனோபாவத்தை ஏற்றுள்ளார்.

பேர்ன்ஸ்டைன் தனது சொந்த தத்துவார்த்த கருத்தாக்கங்கள் குறித்த விமர்சனமற்ற மனோபாவத்தைக் கொண்டிருந்தமையானது, இறுதி இலக்கு என்பது ஏதுமில்லை என்ற அவரது பிரபலமான கூற்றில், அதாவது இங்கே இப்போது என்ன என்பது குறித்துதான் தனது அக்கறை என்ற அவரது பிரகடனத்தில் இருந்து தெளிவாக வெளிப்பட்டு விடுகிறது. இந்தக் கண்ணோட்டத்தின் தாக்கங்கள் என்னவாய் இருந்தன? உண்மை விபரங்களைப் போலவே, சோசலிச இயக்க நடைமுறையும் அதன் வரலாற்று உள்ளடக்கத்தில் இருந்து பிய்த்தெடுக்கப்பட்டது. இந்த அடிப்படையில், ஒரு வரலாற்று நிகழ்முறையின் பாகமாக இருக்கிற எந்த ஒரு உணர்வும் இல்லாமல், அதற்குக் கணக்கு கூறவேண்டும் என்ற எந்த உணர்வும் இல்லாமல் அரசியல் நடவடிக்கையானது உருக்கொடுக்கப்பட வேண்டியதானது.

துல்லியமாக, முரண்பாடுகள் உடைத்துக் கொண்டு அரசியல் வாழ்வின் மேற்பரப்புக்கு வரவிருந்த புள்ளியில் தான், பேர்ன்ஸ்டைன் புரட்சிகர முன்னோக்கை நிராகரித்தார். ஒரு புத்திசாலி ஆந்தை இருட்டும் நேரத்தில் கிளம்பிப் பறக்காது. ஒரு குறிப்பிட்ட சமூக ஒழுங்கின் மீது சூரியன் அஸ்தமிக்கும் தருணத்தில் தான் பெரும்பாலும் ஸ்திரப்பாட்டின் தோற்றம் மிகப் பிரம்மாண்டமாக இருக்கும். நிலவும் அமைப்புமுறையின் வலிமைக்கு சாட்சியம் கூறுகின்ற அனுபவரீதியான தரவுகளை பொறுத்தவரை, அளவுரீதியாக அவற்றின் உச்சமட்டத்தை எட்டியிருக்கின்றன. ஆகவே, இத்தகைய நம்பிக்கைதருகின்ற தரவுவரிசையால் செல்தகைமை ஊர்ஜிதமாக்கப்பட்டிருக்கின்ற ஒரு சமூக ஒழுங்கின் மீது இன்னும் தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டிருப்பது அர்த்தமற்றது என்பதாகவே அனுபவவாதிக்கு தோன்றுகிறது. ஆனால் அந்த தரவுத் துணுக்குகள் அனைத்துமே ஏற்கனவே கடந்து செல்லப்பட்டு விட்டிருக்கின்றன என்பதோடு, அவை, எப்படிப் பார்த்தாலும், தனது சொந்த இயல்பாகவே முடிவடையாததாக மட்டுமின்றி திசைமாறும் நிகழ்முறையிலும் இருக்கின்றதொரு சூழ்நிலையின் முரண்படும் சமிக்கைகளுக்கு அதிகமாய் வேறெதுவும் இல்லை. அரசியல் அனுபவவாதி, நிலவும் ஒழுங்கிற்கான தனது சரணாகதியை நியாயப்படுத்துவதற்காக, கொடுக்கப்பட்ட தரவினைப் பிடித்துக் கொண்டு, ஒரு நடந்துகொண்டிருக்கும் நிகழ்முறையின் மீது ஒரு தன்னிச்சையான முடிவைத் திணிக்கும் தவறைச் செய்கிறார். இவ்வாறு ஒரு வரலாற்று உருமாற்றத்தின் தருணத்தை இறுதியான முடிவாக அவர் தவறாகப் புரிந்து கொள்கிறார். அதனால்தான் பேர்ன்ஸ்டைனால், 1933 ஐ விட்டுவிடுங்கள், 1914 இன் நெருங்கும் நிழலைக் கூடவும் 1898 இல் பார்க்க முடியாதிருந்தது.

1 Lecture delivered on January 5, 1998, at the International School on Marxism and the Fundamental Problems of the Twentieth Century, held in Sydney Australia.

2 Manfred B. Steger, The Quest for Evolutionary Socialism: Eduard Bernstein and Social Democracy (Cambridge: Cambridge University Press, 1997), pp. 14–15.

3 Ibid., p.15.

4 Peter Gay, The Dilemma of Democratic Socialism (New York: Collier Books, 1970), p. 110.

5 The Quest for Evolutionary Socialism, p. 69.

6 Karl Marx and Frederick Engels: Collected Works, Volume 29 (New York: International Publishers, 1987), p. 263.

7 Eduard Bernstein, The Preconditions of Socialism (Cambridge: Cambridge University Press, 1993), p. 139.

8 Ibid.

9 Ibid., p. 146.

10 Ibid., p. 142.

11 Ibid., p. 144.

12 Ibid., p. 157.

13 Ibid., p. 158.

14 Ibid., pp. 148–149.

15 Henry Tudor and J.M. Tudor ed., Marxism and Social Democracy: The Revisionist Debates 1896–1898 (Cambridge: Cambridge University Press, 1988), p. 154.

16 Ibid.

17 The Preconditions of Socialism, p. 164.

18 Ibid., p. 162.

19 Manfred Steger, ed., Selected Writings of Eduard Bernstein 1900–21, (New Jersey: Humanities Press, 1996), p. 97.

20 Ibid., p. 99.

21 Ibid., p. 95.

22 Ibid., p.116.

23 Ibid., p. 118.

24 Ibid., p. 104.

25 Georgi Plekhanov, Selected Philosophical Works, Volume 3 (Moscow: Progress Publishers, 1976), p. 34.

26 Karl Kautsky, “Problematischer gegen wissenschaftlichen Sozialismus,” in: Die Neue Zeit, Jg. 19 (1900–1901), Bd. 2 (1901), H. 38, S. 357 (translation by D. North).

27 Selected Writings of Eduard Bernstein 1900–21, p. 36.

28 Ibid., 106.

29 Ibid., p. 108.

30 Karl Marx, Capital, Volume 1 (London: Lawrence & Wishart, 1974), pp. 173–174.

31 V.I. Lenin, Collected Works, Volume 38 (Moscow: Progress Publishers, 1976), p. 212.

Loading