இலங்கை உள்நாட்டு யுத்தத்தின் வரலாற்று வேர்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இக்கட்டுரை இவ்வார இறுதியில் வெளிவரவுள்ள உலக சோசலிச வலைத் தள சஞ்சிகையின் ஆசிரியத் தலையங்கத்தில் இடம்பெறும்

கடந்து சென்ற வாரங்களில் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் தீவின் வட பாகத்தில் இலங்கை அரசாங்க இராணுவத்துக்கு ஒரு தொகை படுமோசமான இராணுவ தோல்விகளை ஏற்படுத்தினர். தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதான விரகி முக்கியத்துவம் வாய்ந்த இலக்காக உள்ள இலங்கையின் இரண்டாவது பெரும் நகரமான யாழ்ப்பாணத்தைச் சூழவுள்ள இடங்களில் கடும் சண்டை இடம்பெற்றது. பெரிதும் முக்கியமான பல தளங்களை இழந்ததன் பின்னர் சுமார் 35000-40000க்கும் இடைப்பட்ட அரசாங்கப் படைகள்,வெளியேறத் தரைப்பாதை இல்லாமல் சிக்குண்டு போய்க் கிடக்கின்றன. மனத்திடமும் இராணுவ சாதனங்களும் இல்லாமல் இராணுவம் ஒரு இராணுவ ரீதியான தோல்வியின் விழிம்பில் நின்று கொண்டுள்ளது.

யுத்தத்தை தமிழ், சிங்களத் தொழிலாளர்கள் ஒரேவிதத்தில் எதிர்ப்பது வளர்ச்சி கண்டுவரும் ஒரு நிலைமையில் இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க முழு நாட்டையும் ஒரு யுத்த நிலைமையில் இருத்தியுள்ளார். பரந்த அளவிலான அவசரகாலச் சட்ட விதிகள்அமுல் செய்யப்பட்டுள்ளன. இதில் ஆர்ப்பாட்டங்களையும் வேலை நிறுத்தங்களையும் தடைசெய்தல், வெகுஜனத் தொடர்புச்சாதனங்கள் மீதான அரசியல் தணிக்கை,அதிகரித்து வரும் இராணுவ நெருக்கடிகளின் சுமைகளை தொழிலாள வர்க்கத்தின் தோளில் சுமத்துவது என்பவை அடங்கும்.

குமாரதுங்கவின் பொதுஜன முன்னணி அரசாங்கம் அடியோடு செல்வாக்கிழந்து போயுள்ளதோடு அதிகரித்து வரும் சமூக அமைதியின்மைக்கும் முகம் கொடுத்துள்ளது. இது "இடதுசாரி"அரசியல் கட்சிகள் எனப்படுபவையின் தொடர்ச்சியான ஆதரவின் மூலமே உயிர் பிழைத்துள்ளது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி என்பன கூட்டரசாங்கத்தின் ஒருபாகமாகும். இவை தொழிற்சங்கங்களுடன் சேர்ந்து சம்பளம், சேவை நிலைமைகளுக்கான தொழிலாளர்களின் கைத்தொழில் நடவடிக்கையை நசுக்கியுள்ளதோடு குமாரதுங்கவின் ஜனநாயக எதிர்ப்பு நடவடிக்கைகளைகட்டிக் காக்கவும் வாக்குறுதியளித்துள்ளன.

பொதுவில் இன்றைய அறிவிலித்தனமான அரசியல் சூழ்நிலையில் இலங்கை அரசாங்கத்தின் நாசகரமான தோல்விகள், சிறப்பாகஎதுவிதமான அனைத்துலக முக்கியத்துவமும் இல்லாத மற்றொரு வெறும் தலைப்புச் செய்தியாகவே பலருக்குத் தெரிகின்றது. அனைத்துலக வெகுஜனத் தொடர்புச்சாதனங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு இலங்கைச் செய்திகளை வெளியிடுகின்றனவோ அவ்வளவுக்கு அவ்வளவு அவற்றின் வரலாற்றுப்பின்னணியை பற்றிக் குறிப்பிடுவதைத் தவிர்த்துக்கொள்கின்றன.

மேலும் இன்றைய நிலைமைகள்ஒரு அரை நூற்றாண்டு காலமாக சித்திரவதைக்குள்ளான அரசியல் விளைவுகளின் ஒரு உபவிளைவாகும். யுத்தத்துக்கு (இரண்டாம் உலக யுத்தம்)பிந்திய சுதந்திரத்தில் இருந்து இரத்தம்தோய்ந்த உள்நாட்டு யுத்தத்துக்குசெல்லும் இலங்கையின் துன்பகரமானபயணம் ஒரு மோதுதலாகும். அது பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலி கொண்டுள்ளதோடு அனைத்துலக தொழிலாளர் வர்க்கத்துக்கு அபூர்வமான அரசியல் முக்கியத்துவத்தையும்கொண்டுள்ளது.

ஸ்ரீலங்கா (அல்லதுஅதன் முன்னைய பெயரான இலங்கை)இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் பெற்றது. எவ்வாறெனினும் இலங்கையின் சிறப்பு முக்கியத்துவம் என்னவெனில் இது உலகில் அரசியல் ரீதியில் பெரிதும் முன்னேற்றமான தொழிலாளர் இயக்கத்தின் இல்லமாக விளங்கியது.

சுதந்திரத்துக்காகத் தள்ளப்பட்ட ஏனைய பின்தங்கிய நாடுகளில் நிலவிய நிலைமைகளில் இருந்து வேறுபட்ட முறையில், ஒரு நிஜமான புரட்சிகர சோசலிசக் கட்சி உருவாகியது. 1935ல் ஒரு தீவிரவாத ஏகாதிபத்திய எதிர்ப்புஅமைப்பாக ஸ்தாபிதம் செய்யப்பட்ட லங்கா சமசமாஜக் கட்சி தீவிரமான இடதுதிசையில் பயணம் செய்ததோடு, இரண்டாம் உலக யுத்தத்தில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்துடன் இணைந்து கொண்ட ஸ்ராலினிஸ்டுகளையும் கட்சியில் இருந்து வெளியேற்றியது.

இலங்கை சோசலிச இயக்கத்தை ஒரு அகில இந்தியப் புரட்சிகர இயக்கத்தின் ஒரு இணைந்தபாகமாக மட்டுமே அபிவிருத்தி செய்யமுடியும் என்ற விளக்கத்தின் அடிப்படையில் 1940ல் லங்காசமசமாஜக் கட்சி இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி (BLPI) யில் சேர்ந்தது. ட்ரொட்ஸ்கிச நான்காம் அகிலத்துடன் இணைந்து கொண்டதன் மூலம் லங்கா சமசமாஜக் கட்சி ஸ்ராலினிஸ்டுகளிடம் இருந்து பரந்தளவிலான ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத் தலைமையை தன்பிடிக்குள் கொணர்ந்ததோடு, தொழிலாளர்வர்க்கத்தின் சிறந்த மூலகங்களையும் புத்திஜீவிகளையும் சோசலிச அனைத்துலக வாதத்துக்கு வெற்றி கொண்டது.

ஒரு அபூர்வமானதும் பலம்வாய்ந்ததுமான பாரம்பரியம் ஸ்தாபிதம் செய்யப்பட்டது. தொழிலாளர் வர்க்க இயக்கம் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்துக்கு அனைத்துலக வர்க்கப் போராட்டத்தை அடிப்படையாகக் கொள்ளும்படி போதிக்கப்பட்டது. அத்தோடு இதன் மூலம் தேசிய முதலாளித்துவத்தின் நடிப்புக்களை நோக்கும்படியும் கல்வியறி வூட்டப்பட்டது. தமிழ்-சிங்கள ஆளும் பிரமுகர்களின் அபிலாசைகளுக்கு எதிராக இது சகல வகையறாவைச் சேர்ந்த இனவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் எதிர்த்து நின்றது.

1948ல் இலங்கை முதலாளி வர்க்கம் தொழிலாளர் வர்க்கத்திடையே -சிங்களப் பெரும்பான்மையினருக்கும் தமிழ் சிறுபான்மையினருக்கும் இடையே-பிளவுகளை ஏற்படுத்துவதில் ஈடுபட்டது. இதன் மூலம் தமது புதிய அரசை இனவாதஅடிப்படையில் நிலை நிறுத்தியது. பிரித்தானியரால் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட பெருமளவிலான மலையக தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமையை இரத்துச் செய்யும் ஒருபிரஜா உரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. நாட்டின் வடக்கிலும் கிழக்கிலும் இருந்த தமிழ்த் தலைவர்கள் இதை பூரணமாகஅங்கீகரித்த அதே வேளையில் லங்கா சமசமாஜக் கட்சி தலைவர் கொல்வின் ஆர். டி. சில்வா"குடியுரிமைக்கான ஆரம்ப அடிப்படைக்கொள்கையாக தலைமுறைக் கொள்கையை"கடைப்பிடிப்பதை வன்மையாகக் கண்டனம்செய்தார். நாட்டை "இனத்துடன் சமவயதுகொண்டவனாக" செய்வது பிற்போக்குக்குமட்டுமே சேவகம் செய்யும் என அவர்எச்சரித்தார்.

முக்கிய போராட்டங்களுக்கு தலைமை தாங்கியதன் மூலமும் பாராளுமன்றத்தில் பல ஆசனங்களை வெற்றி கொண்டதன் மூலமும் இலங்கை ட்ரொட்ஸ்கிஸ்டுகள் தீவின் தொழிலாளர் வர்க்கத்திடையேயும் ஒடுக்கப்படும் மக்களிடையேயும் ஒருபலம் வாய்ந்த அரசியல் சக்தியாகியது. ஆனால் ஒரு சில வருடகாலத்தில் அவர்கள் தமது முன்னோடிகளான ஜேர்மன் சமூக ஜனநாயகம் பயணம் செய்த பாதையில் இந்த நூற்றாண்டின் திருப்பத்தில் செல்லும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. பிரித்தானியாவாலும் இலங்கை முதலாளி வர்க்கத்தினாலும் போடப்பட்ட பிற்போக்கு அரச அத்திவாரத்தை ஆரம்பத்தில் எதிர்த்த ல. ச. ச. க. இதற்கு இயைந்து போகத் தொடங்கியது.

ல. ச. ச. க. வின் அரசியல் சீரழிவானது திட்டவட்டமான அனைத்துலக நிலைமைகளுடன் பிணைக்கப்பட்டுள்ளது. அது ஒரு அனைத்துலகப் போக்கின் வளர்ச்சிக்கும் பலத்துக்கும் பெரிதும் அசாத்தியமான ஒன்றாகியது. சோவியத் யூனியனில் ஸ்ராலினிசம் மேலாதிக்கம் செலுத்தியமையும் ரஷ்யப் புரட்சியையும் சோசலிசத்தையும் அது பிரதிநிதித்துவம் செய்வதாக கூறும்பொய்யைப் பரப்புவதற்கு அதிகாரத்துவம்கொண்டிருந்த வல்லமையும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை தனிமைப்படுத்துவதற்குத் துணைபோயின. மேலும் உலகளாவிய ரீதியில் ஸ்ராலினிசத்தின் பிரமாண்டமான காட்டிக்கொடுப்புக்களால் யுத்தத்தை தொடர்ந்து முதலாளித்துவ ஸ்திரப்பாடு ஏற்பட்டது. இதனால் தொழிலாளர் வர்க்கத்தினதும் ஒடுக்கப்படும் மக்களதும் புரட்சிகர எழுச்சிகள் பின்வாங்க நேரிட்டது.

இத்தகைய ஒரு நிலைமையிலேயே நான்காம் அகிலத்தினுள் ஒரு ஆழமான அரசியல், கோட்பாட்டு நெருக்கடி தோன்றியது. ஐரோப்பாவில்,நான்காம் அகிலத்தின் முன்னணி பேர்வழிகளாக விளங்கிய மைக்கேல் பப்லோ, ஏர்ணஸ்ட் மண்டேலின் தலைமையிலான ஒரு சந்தர்ப்பவாதப் போக்கு மார்க்சிச அனைத்துலக வாதத்தின் அடிப்படை அம்சங்களை-தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரம், முதலாளித்துவ, மத்தியதரவர்க்க கட்சிகளில் இருந்து அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிதம் செய்வதன் அவசியம், வேலைத்திட்ட அடிப்படைக் கொள்கைகளையும் ஸ்ராலினிசத்துக்கும் சமூக ஜனநாயகத்துக்கும் எதிரான போராட்டத்தின் வரலாற்றுப் படிப்பினைகள்-நிராகரித்துவிட்டு ஸ்ராலினிசத்தினதும் சமூக ஜனநாயகத்தினதும் முதலாளித்துவத் தேசியவாதத்தினதும் வெளிப்படையான வெற்றிகளுக்கு இயைந்து போகத் தொடங்கியது.

லங்கா சமசமாஜக் கட்சியின் தேசியவாத சீரழிவு, அதைத் தொடர்ந்து இடம்பெற இருந்த பயங்கரமான நிகழ்வுகளுக்குசைகை காட்டியது. 1964ல் அது அதனது மாபெரும் காட்டிக் கொடுப்பை அமுல்செய்தது. திருமதி. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் முதலாளித்துவ கூட்டரசாங்கத்தினுள் நுழைந்து கொண்டதன்மூலம் ட்ரொட்ஸ்கிசத்துடனான அதனது பிளவைப் பூர்த்தி செய்து கொண்டது.

இரண்டாவது கூட்டரசாங்கத்தில் ஒரு அங்கத்தவர் என்ற விதத்தில் அது 1971ல் ஸ்ராலினிசக் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ஒரு மா ஓ வாத ஜே. வி. பி. யின் தலைமையில் இடம் பெற்ற இளைஞர் கிளர்ச்சியை வன்முறை மூலம் ஒடுக்கித் தள்ளுவதில் பங்கு கொண்டது. இந்த ஜே. வி. பி. வேலையற்ற இளைஞர்கள்,விவசாய இளைஞர்களின் தீவிரவாத தட்டினரை அடிப்படையாகக் கொண்டு இருந்தது. சுமார் 10,000 இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

ஆனால் ல. ச. ச. க. வின்அவமானம் நிறைந்த அத்தியாயம், அது ஸ்ரீ. ல. சு. க. வுடன் சேர்ந்து சிங்கள சோவினிசத்தை உள்ளடக்கி திருத்தம் செய்யப்பட்ட ஒரு அரசியலமைப்புச் சட்டத்தை 1972ல் வரைந்தது. இத்துடன் சமசமாஜக் கட்சி நாற்றம் கண்டது. இந்த அரசியலமைப்புச் சட்டம் சிங்களத்தை அரச மொழியாகவும் பெளத்தத்தை அரச மதமாகவும் ஊர்ஜிதம் செய்தது.

கால ஓட்டத்தில் இந்த அனுபவங்களின் படிப்பினைகள் பெரிதும் பிரசித்தமாகாது போனதால் அவை பெரிதும் கூர்மை அடையாது இருந்து கொண்டுள்ளன.

படிக்கட்டுக்களில் ஏறி மேல் நோக்கிச்சென்ற காலப் பகுதியில் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டில் அவர் போராடிய மூலோபாயப் படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்டு,ஏகாதிபத்தியத்துக்கு எதிரான ஒரு பொதுப் போராட்டத்தில் சிங்கள- தமிழ் வெகுஜனங்களை ஐக்கியப்படுத்தப் போராடினர். ல. ச. ச. க. இந்த முன்நோக்கினை நிராகரித்தமை முன்னர் ஒரு போதும் இல்லாத விதத்தில் தேசிய முதலாளி வர்க்கத்துக்கு அடிபணிந்து போவது ஏககாலத்தில் இடம் பெற்றது. இதன் விளைவாக தமிழ் தொழிலாளர்களும் மத்தியதர வர்க்கத்தில் ஒரு பகுதியினரும் தம்மிடையே முதலாளித்துவ தேசியவாதப் போக்குகள் வளர்ச்சி பெற உதவும்விதத்தில் ஆழமான அவநம்பிக்கைக்கு உள்ளாகினர்.

சிங்கள, தமிழ் தொழிலாளர்களதும் கிராமப்புற மக்களதும் ஐக்கியத்தின் அடிப்படையிலான ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் தாக்கிப்பிடிக்கும் தன்மையில் கொண்டிருந்த நம்பிக்கை, ஒரு தமிழர் மட்டும் இயக்கத்தினாலும் தனித் தமிழ் அரசின் சிருஷ்டி முன்நோக்கினாலும் பதிலீடு செய்யப்பட்டது. இது உலகம் பூராவும் அதிகரித்த விதத்தில் புதிய பாணியாகி வந்த ஒரு போக்கின் பாகமாக விளங்கியது. தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் பேரளவில் இனக்குழு அடிப்படையில் பிரிவினைவாதத்தை அடிப்படையாகக் கொண்ட சுதந்திர தேசிய அரசை ஸ்தாபிதம் செய்யும் போராட்டத்துடன் இனங்காட்டிக் கொள்ளப்பட்டது. இந்தப் போக்கில் இருந்தே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தோன்றியது. இது தன்னை 1960 பதுகளிலும் 1970 பதுகளிலும் 1980பதுகளிலும் சில வெற்றிகளையும் மக்களாதரவையும் திரட்டிக் கொண்ட பீ. எல். ஓ, சன்டினிஸ்டா போன்ற பல்வேறு இயக்கங்களின் பாணியில் நிறுத்தியது.

அனைத்து போக்குகளும் 17 வருட கால கொடிய உள்நாட்டு யுத்தத்துக்கு இட்டுச் சென்றன. முதலும் முக்கியமுமாக இதற்கான பொறுப்பு சிங்கள முதலாளி வர்க்கத்தையும் இனவாதக் கொள்கையின் அடிப்படையில் ஸ்ரீலங்கா அரசினை சிருஷ்டித்ததையும் சார்ந்தது. அதே வேளையில் தொழிலாளர் இயக்கத்தின் நகைப்புக்கிடமான சந்தர்ப்பவாதம் ஒரு தீர்க்கமான பாத்திரத்தை வகித்தது. இத்துடன் அவர்கள் ஒரு பிரிவினைவாத இயக்கத்தின் வளர்ச்சியையும் தவிர்க்க முடியாததாக்கினர்.

கடந்த 17 ஆண்டுகளும், இலங்கை அரசின்அடியோடு நாற்றம் கண்ட அத்திவாரத்தின் பயங்கரமான மரண சாசனம் ஆகும். இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியும், லங்காசமசமாஜக் கட்சியும் 1940களில் கடைப்பிடித்த முன்நோக்குக்குப் பாதகமானது என்பதை துன்பகரமான முறையில் ஊர்ஜிதம் செய்துள்ளது. சோசலிச இயக்கம் தமிழ் மக்களை அரசியல் ரீதியில் அடக்கி ஒடுக்குவதன் அடிப்படையில் இலங்கை அரசின் ஐக்கியத்தைக் கட்டிக்காக்கும் முயற்சியை அடியோடு எதிர்ப்பதோடு தீவின் வடக்கு -கிழக்கு மாகாணங்களில் இருந்து சகல அரசாங்கப் படைகளும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் வாபஸ் பெறப்படvவேண்டும் எனக் கோருகின்றது.

அதே சமயம் 20 பதாம் நூற்றாண்டின் பரந்தஅளவிலான அனுபவங்கள் ஒரு சுதந்திர தமிழ் அரசுக்கான கோரிக்கையைக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்நோக்கு தமிழ் வெகுஜனங்களின் வரலாற்று சங்கடங்களுக்கு எந்தவிதமான தீர்வையும் வழங்கவில்லை.

யதார்த்தத்தில் அத்தகைய "சுதந்திரம்"ஒன்று அல்லது மற்றொரு முதலாளித்துவ சக்தியின் பொருளாதார, மூலோபாய நலன்களுக்கு கீழ்ப்படிந்து போவதைக் குறித்து நிற்கின்றது. தென் ஆசியாவில் உள்ளசகல நாடுகளும் பிராந்திய ஆவல்களை-இந்தியா தொடக்கம் பாகிஸ்தான், சீனா வரை- தீர்த்துக் கொள்ளும் போட்டி இலக்குகளாகி விட்டன. வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள பெரும் ஏகாதிபத்திய சக்திகளைப் பற்றிக் கூற வேண்டியதில்லை. எந்த ஒரு "சுதந்திரமான" ஈழமும் பங்களாதேஷ் முகம் கொடுத்ததற்குச் சமமான தலைவிதிக்கு முகம் கொடுக்க நேரிடும். இது ஒடுக்கப்படும் மக்களுக்கு மற்றொரு பயங்கரப் பொறியாகும். கூடிய பட்சம் தமிழீழ விடுதலைப் புலிகளின்அரசியல் தகவமைவுக்கு ஏற்ப அவர்கள் பீ. எல். ஓ. தலைவர் யசீர் அரபாத்தின் பாதையில் நடைபயின்று வெள்ளை மாளிகை பசும்புற்தரையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் மன்றாடுவதை விரும்பலாம்.

தென்னாசிய மக்களின் எந்த ஒரு பிரச்சினைக்கான தீர்வையும் அனைத்துலக முன்நோக்கின் அடிப்படையில் மட்டுமே அடைய முடியும். இலங்கைத் தொழிலாளர் வர்க்கம்- சிங்களவர், தமிழர் இருசாராரும்- இரண்டாம் உலக யுத்தத்தின்பின்னர் ட்ரொட்ஸ்கிச இயக்கம் போராடிய புரட்சிகர அடிப்படைக் கொள்கைகளை மீளக் கண்டுபிடித்து, தழுவிக் கொள்ள வேண்டும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலி சசமத்துவக் கட்சி முன்னெடுக்கும் ஸ்ரீலங்கா-ஈழம் ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான போராட்டங்களில் இந்த அனைத்துலகக் கொள்கைகளையே இதயத்தில் கொண்டுள்ளது. தீவினை இராணுவ பேரழிவுகள் சூழ்ந்து கொண்டுள்ள நிலையில் இலங்கைத் தொழிலாளர் வர்க்கம் கடந்த அரை நூற்றாண்டுகால கசப்பான அனுபவங்களின் படிப்பினைகளை கொண்டிருக்கவேண்டும். ஒரு சோசலிச அனைத்துலகவாத முன்நோக்கின் அடிப்படையில் இந்தியத்துணைக் கண்டத்தின் தொழிலாளர் வர்க்கத்தையும் ஒடுக்கப்படும் மக்களையும் ஒன்றிணைக்கப் போராடும் ஒரு சுயாதீனமான சக்தியாக இது தலையிட்டாக வேண்டும் இந்த வழியில்மட்டுமே இது இன்றைய சிக்கலான அரசியல் பிரச்சினைகளுடன் இறுகப் பற்றிக் கொண்டுபோராடத் தொடங்க முடியும்.

Loading