முதலாம் விரிவுரை: ரஷ்யப் புரட்சியும் 20ம் நூற்றாண்டின் தீர்க்கப்படாத வரலாற்றுப் பிரச்சினைகளும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இது "ரஷ்ய புரட்சியும், 20ம் நூற்றாண்டின் தீர்க்கப்படாத வரலாற்றுப் பிரச்சினைகளும்" என்ற தலைப்பில் உலக சோசலிச வலைத் தள தலைவர் டேவிட் நோர்த், மிச்சிகன், அன் ஆர்பரில், அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலக சோசலிச வலைத் தள கோடை பள்ளியில் ஆகஸ்ட் 14ல் இருந்து ஆகஸ்ட் 20, 2005 வரை நிகழ்த்திய உரைகளின் முதல் பகுதியாகும். இவ்விரிவுரை நான்கு பகுதிகளாக வெளியிடப்படும்.

வரலாற்று அறிவும், வர்க்க நனவும்

"மார்க்சிசம், அக்டோபர் புரட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் வரலாற்று அடித்தளங்கள்" என்ற ஆய்வுப்பொருளின் மீது ஒரு வாரகால தொடர் உரைகளை இன்று ஆரம்பிக்கிறோம். இவ்வுரைகளின் போக்கில் நான்காம் அகிலம் தோன்றக்காரணமாக இருந்த வரலாற்று நிகழ்வுகள், தத்துவார்த்த சிக்கல்கள், அரசியல் போராட்டங்கள் ஆகியவற்றை நாம் ஆராய எண்ணுகிறோம். இந்த உரைகளின் மையக்குவிப்பு இருபதாம் நூற்றாண்டின் முதல் 40 ஆண்டுகளின்மீது படர்ந்திருக்கும். நமக்கு இருக்கும் கால அவகாசத்தின் தன்மையை ஓரளவிற்கு ஒட்டி இந்த வரம்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு வார காலத்தில் இவ்வளவுதான் சாதிக்கப்பட முடியும் என்று இருப்பதோடு, இருபதாம் நூற்றாண்டின் முதல் நான்கு தசாப்தங்களில் நிகழ்ந்தவற்றை ஏழு நாட்களில் ஆராய்ந்து விடுவது என்பதும் சற்று பேரவா மிகுந்த பொறுப்பேற்புதான். ஆயினும்கூட நாம் 1900 த்தில் இருந்து 1940 வரையிலான காலகட்டத்தில் கவனம் கொள்வதில் ஒரு நிச்சயமான வரலாற்று தர்க்கம் உள்ளது.

இருபதாம் நூற்றாண்டின் முக்கிய அரசியல் சிறப்பியல்புகளை நிர்ணயித்த அனைத்து பெரிய நிகழ்வுகளும் லியோன் ட்ரொட்ஸ்கி ஆகஸ்ட் 1940ல் படுகொலை செய்யப்படுவதற்கு முன்பே நிகழ்ந்துவிட்டன; அவையாவன: ஆகஸ்ட் 1914ல் முதலாம் உலகப் போரின் வெடிப்பு; அக்டோபர் 1917ல் போல்ஷிவிக் கட்சி அதிகாரத்தை கைப்பற்றியதும் அதைத் தொடர்ந்து முதல் சோசலிச தொழிலாளர் அரசாக சோவியத் ஒன்றியம் நிறுவப்பெற்றது; முதலாம் உலகப் போர் முடிவடைந்த பின்னர் மிகச் சக்திவாய்ந்த ஏகாதிபத்திய அரசாக அமெரிக்கா எழுச்சியுற்றது; 1923ம் ஆண்டு ஜேர்மன் புரட்சியின் தோல்வி; சோவியத் ஒன்றியத்தின் அதிகாரத்துவ சீரழிவு; 1927ம் ஆண்டில் இடது எதிர்ப்பின் தோல்வியும் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்தும் மூன்றாம் அகிலத்திலிருந்தும் ட்ரொட்ஸ்கியை வெளியேற்றல்; 1926-27ம் ஆண்டில் சீனப் புரட்சி காட்டிக் கொடுக்கப்பட்டமை; அக்டோபர் 1929ல் வோல் ஸ்டீரீட் பொறிவும் உலக முதலாளித்துவ பெரும் மந்தத்தின் ஆரம்பமும்; ஹிட்லர் அதிகாரத்திற்கு ஏற்றம் பெற்றதும் ஜனவரி 1933ல் பாசிசம் ஜேர்மனியில் வெற்றி கொண்டதும்; 1936-38ன் மாஸ்கோ விசாரணைகளும் சோவியத் ஒன்றியத்தில் சோசலிச அறிவுஜீவிகள் மற்றும் தொழிலாள வர்க்கம் மீதான குறிப்பிட்ட அரசியல் பகுதியினரின் படுகொலைகள்; 1937-39ல் ஸ்பானிய புரட்சி ஸ்ராலினிச தலைமையிலான மக்கள் முன்னணியால் காட்டிக்கொடுக்கப்பட்டமையும், தோல்வியும்; செப்டம்பர் 1939ல் இரண்டாம் உலகப்போரின் வெடிப்பு; மற்றும் ஐரோப்பாவில் யூதர்கள் அழிக்கப்படுதலின் தொடக்கம்.

இந்த நான்கு தசாப்தங்களில் இருபதாம் நூற்றாண்டின் அடிப்படை அரசியல் சிறப்பியல்புகள் வரையறுக்கப்பட்டன என நாம் கூறுவது கீழ்க்கண்ட பொருளில் ஆகும்: இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை எதிர்கொள்ளவிருந்த பெரும் அரசியல் பிரச்சினைகள் அனைத்தும், இரண்டாம் உலகப்போருக்கு முந்தைய சகாப்தத்தின் பெரும் புரட்சிகர மற்றும் எதிர்ப் புரட்சிகர அனுபவங்களின் மூலோபாய படிப்பினைகள் என்ற முப்பட்டகக் கண்ணாடி மூலம் ஆராயப்பட்டால்தான், நன்கு புரிந்துகொள்ளப்படமுடியும்.

இரண்டாம் உலகப்போருக்கு பின் சமூக ஜனநாயகக் கட்சிகளுடைய கொள்கைகளைப் பற்றிய பகுப்பாய்விற்கு ஆகஸ்ட் 1914ல் இரண்டாம் அகிலம் பொறிவுற்றதன் வரலாற்று உட்குறிப்புக்களை பற்றிய புரிதல் தேவைப்படுகின்றது; அதேபோல் சோவியத் ஒன்றியத்தின் தன்மை, கிழக்கு ஐரோப்பாவில் இரண்டாம் உலகப்போருக்கு பின் நிறுவப்பட்ட ஆட்சியின் தன்மை; அதே போல் அக்டோபர் 1949ல் சீனாவில் நிறுவப்பட்ட மாவோயிச ஆட்சியின் தன்மை ஆகியன, அக்டோபர் புரட்சி மற்றும் முதலாவது தொழிலாளர் அரசின் நீடித்த சீரழிவு இவற்றைப் பற்றிய ஆய்வின் அடிப்படையில்தான் முழுவதுமாய் புரிந்துகொள்ளப்பட முடியும்; 1945ம் ஆண்டிற்கு பின் ஆசியா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் இலத்தின் அமெரிக்காவை அடித்துச்சென்ற காலனித்துவ எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு புரட்சிகளின் மாபெரும் அலையின் பிரச்சினைகளுக்கான விடைகளை, 1905ம் ஆண்டின் தொடக்கத்தில் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தினை சூழ எழுந்திருந்த அரசியல் மற்றும் தத்துவார்த்த கருத்துவேறுபாடுகள் பற்றிய கடும் முயற்சி எடுத்து ஆய்வதன் அடிப்படையில் மட்டும்தான் கண்டு கொள்ளப்பட முடியும்.

வரலாற்று அறிவிற்கும், அரசியல் ஆய்வு மற்றும் நோக்குநிலைக்கும் இடையே உள்ள உறவு அதன் மிக ஆழமான வெளிப்பாட்டை சோவியத் ஒன்றியத்தின் கடைசி தசாப்தத்தில் கண்டது. மார்ச் 1985ல் மிக்கைல் கோர்பச்சேவ் அதிகாரத்திற்கு வந்தபோது, ஸ்ராலினிச ஆட்சி ஆற்றொணா நெருக்கடியில் இருந்தது. சோவியத் பொருளாதாரத்தின் சீர்கெட்டநிலை, 1970களில் எண்ணெய் விலையின் பெரும் உயர்வு குறுகிய காலத்திற்கு எதிர்பாரா இலாபத்தை கொடுத்ததால் மறைக்க முடிந்தது, அதன் விலை கடுமையாக வீழ்ச்சியடையத் தொடங்கியதும் இனியும் மறைக்க முடியாது போயிற்று. இந்தச் சரிவை மாற்றுவதற்கு கிரெம்ளினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் யாவை? கொள்கை பற்றிய பிரச்சினைகள் உடனடியாக சோவியத் வரலாற்றின் விடை காணப்படாத வினாக்களுடன் குழப்பத்திற்கு ஆளாயின.

60 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்ராலினிச ஆட்சி, வரலாற்றை பொய்ம்மைப்படுத்தும் பிரச்சாரத்தில் இடைவிடாமல் ஈடுபட்டிருந்தது. சோவியத் ஒன்றியத்தின் குடிமக்கள் தங்களுடைய சொந்த புரட்சிகர வரலாற்றைப் பற்றிய உண்மைகளை கூட பெரிதும் அறியாமல் இருந்தனர். ட்ரொட்ஸ்கி மற்றும் அவரது சக சிந்தனையாளர்களின் படைப்புக்கள் தணிக்கைக்குள்ளாக்கப்பட்டு, பல தசாப்தங்களாக நசுக்கப்பட்டிருந்தன. சோவியத் வரலாற்றை பற்றி நம்பத்தக்கவகையில் ஒரு நூல் கூட இல்லை. உத்தியோகபூர்வ சோவியத் கலைக்களஞ்சியத்தின் புதிய பதிப்பு ஒவ்வொன்றும் கிரெம்ளினின் அரசியல் நலன்களுக்கு ஏற்ப மற்றும் அதன் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப திருத்தி எழுதப்பட்டு வந்தது. எமது மறைந்த தோழர் வாடிம் ரொகோவின் ஒருமுறை குறிப்பிட்டபடி, சோவியத் ஒன்றியத்தில் கடந்த காலம் கூட எதிர்காலம் போலவே கணித்துக் கூறமுடியாமற் போயிற்று!

தேசியமயமாக்கப்பட்ட தொழில்துறையை அகற்றுதல், தனியார் சொத்துடைமையை புதுப்பித்தல், முதலாளித்துவத்தை மீட்டல் ஆகியவற்றுக்கு ஆதரவாக இருந்த அதிகாரத்துவம் மற்றும் சலுகை மிக்க நோமன்குளோத்ரா (Nomenklatura) தன்னலக்குழு ஆகியவற்றுக்குள்ளே உள்ள பிரிவுகளை (கன்னைகளை) பொறுத்தவரையில், சோவியத் பொருளாதார நெருக்கடி சோசலிசம் தோற்றுவிட்டது என்பதற்கு "நிரூபணம்" என்று மட்டுமல்லாமல், அக்டோபர் புரட்சி, வரலாற்றில் அழிவுகரமான வரலாற்று தவறு என்றும், அதையொட்டித்தான் அனைத்து பிந்தைய சோவியத் ஒன்றிய பெருந்துன்பங்களும் தவிர்க்க முடியாமல் ஊற்றெடுத்தன என்ற கருத்தும் இருந்தது. இத்தகைய சந்தை சார்பு சக்திகளால் முன்னெடுக்கப்பட்ட பொருளாதார தீர்வுகள், ஸ்ராலினிசம் அக்டோபர் புரட்சியின் தவிர்க்கமுடியாத விளைவு என்று கூறிய சோவியத் வரலாற்றை பற்றிய ஒரு பொருள்விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தன.

முதலாளித்துவ மீட்சிக்கு வக்காலத்து வாங்குபவர்களுக்கு சாதாரணமாக பொருளாதார அடிப்படையில் மட்டும் விடை கொடுக்க இயலாது. மாறாக, முதலாளித்துவ சார்புடைய வாதங்களை மறுத்தலுக்கு சோவியத் வரலாறு பற்றிய ஆய்வையும் மற்றும் ஸ்ராலினிசம் அக்டோபர் புரட்சியின் தவிர்க்கமுடியாத விளைவும் அல்ல இன்றியமையாத விளைவும் அல்ல என்ற விளக்கிக்காட்டலையும் கோருகின்றது. ஸ்ராலினிசத்திற்கு ஒரு மாற்றை தத்துவார்த்த ரீதியில் கருத்தளவில் கருதமுடியும் என்பது காட்டப்பட வேண்டி இருந்தது மட்டுமல்லாமல், அத்தகைய மாற்று லியோன் ட்ரொட்ஸ்கி தலைமையில் இடது எதிர்ப்பு என்ற வடிவில் உண்மையில் இருந்தது என்பதும் விளக்கப்பட வேண்டும்.

நான் இன்று கூறப்போவதெல்லாம் பெரும்பாலும், நவம்பர் 1989ல் மாஸ்கோ பல்கலைக் கழகத்தில் ஆவணங்கள் பயிலகத்தில் சோவியத் ஒன்றியத்தின் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நான் நிகழ்த்திய உரையில் கூறியவைதான். "வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்றால் கடந்த காலத்தை பற்றிக் கணிசமான முறையில் விவாதிக்க வேண்டும். சோசலிச இயக்கத்தை எதிர்கொண்டுள்ள பல சர்ச்சைகளை பற்றி ஆராயாமல் எவ்வாறு இன்றைய சோசலிசத்தைப் பற்றி விவாதிக்க இயலும்? சோசலிசத்தில் வருங்காலத்தை விவாதிக்க இருக்கையில், அக்டோபர் புரட்சியின் விதி பற்றி விவாதித்துத்தான் ஆகவேண்டும்; இந்நிகழ்வு உலக முக்கியத்துவம் வாய்ந்தது; ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாள வர்க்கத்திடையே ஆழ்ந்த விளைவை இது ஏற்படுத்தியது. இந்தக் கடந்த காலத்தில் பெரும்பகுதி, குறிப்பாக சோவியத் ஒன்றியத்தில் நடந்தவை, புதிராலும் பொய்ம்மைப்படுத்தலாலும் மூடிமறைக்கப்பட்டுள்ளன" என்று "சோசலிசத்தின் வருங்காலம்" என்ற தலைப்பில் நான் என் உரையை ஆரம்பித்தேன். [1]

அக்காலக்கட்டத்தில் வரலாற்றுப் பிரச்சினைகள் பற்றி சோவியத் ஒன்றியத்தில் மகத்தான ஆர்வம் இருந்தது. வரலாற்று ஆவணங்கள் பயிலக இயக்குனரால் 24 மணி நேரத்திற்கும் குறைவான கால அவகாச தயாரிப்பு கொடுக்கப்பட்டிருந்த என்னுடைய உரைக்கு சில நூறு பேர் ஈர்க்கப்பட்டிருந்தனர். இக்கூட்டத்திற்கான அறிவிப்பு முற்றிலும் வாய் வழியாக கூறப்பட்ட தகவல்தான். ஓர் அமெரிக்க ட்ரொட்ஸ்கிஸ்ட், பயிலகத்தில் உரையாற்ற உள்ளார் என்ற செய்தி விரைவில் பரவிய வகையில் ஏராளமான மக்கள் திரண்டு வந்திருந்தனர்.

கிளாஸ்நோஸ்ட் (வெளிப்படைத் தன்மை) என்று சிறிதே நீடித்த சகாப்தத்தில்கூட, ஒரு ட்ரொட்ஸ்கிஸ்ட் பகிரங்கமாக உரையாற்றுவது, அதுவும் ஓர் அமெரிக்க ட்ரொட்ஸ்கிஸ்ட் உரையாற்ற உள்ளார் என்பது ஒரு பெரும் பரபரப்பான செய்திதான். அத்தகைய உரை நிகழ்த்துவதற்கான அறிவார்ந்த சூழ்நிலை பெரும் சாதகமாகத்தான் இருந்தது. வரலாற்று உண்மைகளை அறிந்து கொள்ளுவதற்கு ஒரு பெரும் தாகமே இருந்தது. ரொபேர்ட் சேர்வீசின் மோசமான ஸ்ராலின் வாழ்க்கை குறிப்பு பற்றிய மதிப்புரையில் தோழர் Fred Williams அண்மையில் குறிப்பிட்டுள்ளபடி, கிளாஸ்நோஸ்ட் சகாப்தத்திற்கு முன் சிறிய பதிப்பாக இருந்த Arguments and Facts என்ற சோவியத் சஞ்சிகை, சோவியத் வரலாற்று தொடர்புடைய நீண்டகாலமாக அடக்கிவைக்கப்பட்டிருந்த ஆவணங்கள், கட்டுரைகள் ஆகியவற்றை வெளியிட்டதன் அடிப்படையில் அதன் விற்பனைப் பிரதிகள் வியப்புக்குரியவகையில் பெருகி, 33 மில்லியன் எட்டியதைக் கண்டது.

மார்க்சிசம் மற்றும் ட்ரொட்ஸ்கிசம் பற்றிய ஆர்வத்தில் மிகப் பரந்த, பெருகிய ஆர்வம் இருந்ததை கண்டு அச்சமுற்றதன் விளைவாக, சோசலிச அரசியல் நனவுக்கு மீண்டும் எழுச்சி வழங்கும், வரலாற்று தெளிவு பற்றிய இந்த அத்தியாவசிய அறிவார்ந்த செயல்முறையை, சோவியத் ஒன்றியத்தின் உடைவை நோக்கி அதன் இயக்கத்தை முடுக்கி விட்டதன் மூலம் முன்கூட்டியே தடுக்க அதிகாரத்துவம் விழைந்தது. சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்கு ஏற்பாடு செய்யும் வகையில் துல்லியமான முறையில் அதிகாரத்துவம் நடந்து கொண்ட முறை, --அக்டோபர் புரட்சியின் ஸ்ராலினிச காட்டிக் கொடுப்பின் உச்சக் கட்டம், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னேரே இவ்வாறுதான் நிகழும் என்று ட்ரொட்ஸ்கியால் முன்கணிப்பிடப்பட்டிருந்தது-- தேவையான விவரத்துடன் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்ட வேண்டிய ஆய்வுப் பொருளாகும். சோவியத் ஒன்றியத்தின் கலைப்பில் ஒரு முக்கிய கூறு என்று இங்கு வலியுறுத்திக் கூறப்பட்டாக வேண்டியது --இதையொட்டி முன்னாள் சோவியத் ஒன்றிய மக்களுக்கு நிகழ்ந்த அதன் அழிவுகரமான விளைவுகள் நன்கு தெளிவாகி இருக்கிறது-- வரலாறு பற்றிய அறியாமைதான். தசாப்த காலங்களாக வரலாற்று பொய்மைப்படுத்தப்படலின் சுமையானது சோவியத் தொழிலாள வர்க்கத்தை குறுகிய காலத்தில் அரசியல் ரீதியில் திசைவழிப்படுத்தற்கோ, அதன் சுயாதீனமான சமூக நலன்களை உயர்த்திப் பிடிப்பதற்கோ மற்றும் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பையும் முதலாளித்துவ மீட்சியையும் எதிர்ப்பதற்கோ கடந்து வர முடியாமற் செய்தது.

இந்த வரலாற்று துன்பியலில் பெரும் படிப்பினை ஒன்று உள்ளது. தான் கடந்து வந்திருக்கும் காலம் பற்றிய வரலாற்று அனுபவங்களை பற்றி தெளிவான அறிவு இல்லாவிட்டால், தொழிலாள வர்க்கம், முதலாளித்துவ முறைக்கு எதிராக அரசியல் ரீதியாய் நனவான போராட்டத்தை நடத்துவது ஒருபுறம் இருக்கட்டும், அதன் அடிப்படை சமூக நலன்களை கூட காத்துக் கொள்ள இயலாது.

வரலாற்று நனவு என்பது வர்க்க நனவின் இன்றியமையாத ஆக்கக்கூறு ஆகும். முதலாம் உலகப்போர் வெடித்த ஓராண்டிற்குள், ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி, பிரஷ்ய இராணுவவாதம் மற்றும் ஏகாதிபத்தியம் இவற்றிற்கு நிபந்தனையற்ற சரணாகதியடைந்த ஓராண்டிற்குள், 1915ல் எழுதப்பட்டபோது எந்த அளவிற்கு பொருத்தம் உடையதாக இருந்ததோ அதே பொருத்தத்தைத்தான் ரோசா லுக்சம்பேர்க்கின் சொற்கள் இன்றும் கொண்டுள்ளன:

"வரலாற்று அனுபவம் [தொழிலாளர் வர்க்கத்தின்] என்பது ஓர் ஆசிரியரை போன்றதுதான். சுதந்திரத்திற்காக அது காட்டும் கடினமான பாதை சொல்லொணாத் துயரங்களை மட்டும் அல்லாது கணக்கிலடங்கா பிழைகளையும் கொண்டிருக்கும். இந்தப் பயணத்தின் இலக்கு, தொழிலாளருடைய இறுதி விடுதலை முற்றிலும் பாட்டாளி வர்க்கத்திடம்தான் உள்ளது; தன்னுடைய தவறுகளில் இருந்து படிப்பினையை புரிந்து கொள்ள அது தயாராக உள்ளதா என்பதில்தான் உள்ளது. தொல்லையின் அடி வேருக்குச்செல்லும் சுயவிமர்சனம், கொடூரமான, ஈவிரக்கமற்ற விமர்சனம் என்பது, பாட்டாளி வர்க்க இயக்கத்தினை பொறுத்தவரை உயிரும் மூச்சுமாகும். சோசலிச பாட்டாளி வர்க்கத்தை, உலகம் பேரழிவிற்குள் திணித்திருப்பது மனிதகுலத்திற்கே முன்னொருபோதும் உதாரணமாக இருந்திராத துரதிருஷ்டமாகும். ஆனால் சர்வதேச பாட்டாளி வர்க்கம் இத்த பேரழிவின் ஆழ்ந்த தன்மையை அளவிட இயலாமற் போனால், அது கற்பிக்கும் படிப்பினைகளை புரிந்து கொள்ள இயலாமற் போனால் மட்டுமே சோசலிசம் இழந்ததொன்றாகும்." [2]

வரலாற்று நனவுக்கு எதிராக பின்நவீனத்துவம்

மனித விடுதலைக்கான போராட்டத்தில் அத்தகைய ஒரு முக்கியமான மற்றும் தீர்க்கமான பாத்திரத்தை, வரலாற்று அனுபவம் பற்றிய அறிவிற்கும் தத்துவார்த்த உள்வாங்கலுக்கும் குறிப்பிட்ட இடம் ஒதுக்கிக் கொடுக்கும் நாம், உயர்த்திப்பிடிக்கும் வரலாறு பற்றிய கருத்துருவானது, நிலவுகின்ற முதலாளித்துவ சிந்தனையின் அனைத்து போக்குகளுக்கும் சமரசப்படுத்த முடியாத பகைமையாக இருக்கிறது. முதலாளித்துவ சமூகத்தின் அரசியல், பொருளாதார, சமூக சிதைவானது, தாக்கும் முனையாக முன்னணி வகிக்காவிட்டால், அதன் புத்திஜீவித தரம்தாழ்தலால் பிரதிபலிக்கிறது. அரசியல் பிற்போக்குக் காலத்தில், அறியாமை தன் கோரப் பற்களை காட்டும் என்று ஒருமுறை ட்ரொட்ஸ்கி கூறினார்.

முதலாளித்துவ சிந்தனையின், மிகத் தேர்ச்சிபெற்ற மற்றும் சிடுமூஞ்சித்தனமான அவநம்பிக்கை கல்வியாளர்களால், அதாவது பின்நவீனத்துவ வாதிகளால், இன்று முன்வைக்கப்படும் அறியாமையின் குறிப்பிட்ட மற்றும் வினோதமான வடிவம் வரலாறு பற்றிய அறியாமையும் வெறுப்புணர்வும் ஆகும். வரலாற்றின் செல்லும்தன்மை மற்றும் சமூகச் சிந்தனையின் அனைத்து உண்மையான முற்போக்கான போக்குகளாலும் அதற்கு ஒதுக்கப்பட்டுள்ள மையப் பாத்திரம் இவை பற்றிய பின்நவீனத்துவ வாதியின் தீவிர நிராகரிப்பு, அவர்களின் தத்துவார்த்த கருத்துருக்களின் இன்னொரு அடிப்படை ஆக்கக்கூறுடன் - புறநிலை உண்மையானது மெய்யியல்ரீதியான (Philosophical) விசாரணைகளின் மைய இலக்கு என்பது ஒருபுறம் இருக்கட்டும், ஒரு முக்கியத்துவம் வாய்ந்த இலக்கு என்பதை ஏற்கமறுத்தலுடன் மற்றும் வெளிப்படையாக தள்ளுகையுடன் பிரிக்கவியலாதபடி பிணைந்துள்ளது.

அப்படியானால், பின் நவீனத்துவம் என்றால் என்ன? இப்போக்கின் முக்கியமான கல்வியியற் காப்பாளர் பேராசிரியர் கீத் ஜென்கின்ஸ் எழுதியுள்ள ஒரு பந்தியை ஒரு விளக்கமாக மேற்கோளிட அனுமதியுங்கள்:

"இன்று நாம் பின்நவீனத்துவத்தின் பொதுச் சூழலினுள் வாழ்கிறோம். இதைப் பற்றியதில் வேறு தேர்வு கிடையாது. பின்நவீனம் என்பது நாம் ஏற்பதற்கு தேர்ந்தெடுக்கக்கூடிய ஒரு நிலைப்பாடோ அல்லது 'கருத்தியலோ' அல்ல; பின்நவீனம் என்பது துல்லியமாக நம்முடைய சூழ்நிலையாகும்: அதாவது நம்முடைய கதியாகும். சமூக வாழ்வில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் பொதுத் தோல்வியால் -இருபதாம் நூற்றாண்டின் மீது தூசி படிந்துள்ளதால், இப்பொழுது மிகத்தெளிவாக அடையாளம் கண்டுகொள்ளப்படக்கூடிய ஒரு பொதுத் தோல்வியால்- வாதத்திற்குரிய முறையில் உண்டுபண்ணப்பட்டிருக்கும் சூழ்நிலைமையைத்தான் நாம் நவீனம் என்று அழைக்கின்றோம். அதன் சொந்த வார்த்தை பதங்களால் அளவிடப்பட்டவாறு, ஐரோப்பாவில் பதினெட்டாம் நூற்றாண்டைச்சுற்றி அதிலிருந்து, பகுத்தறிவு, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் இவற்றைப் பிரயோகிப்பதன் மூலம் அவர்களின் குடிமகன்களை / குடிமக்களை அதிகரித்த அளவில் தாராளமாய் விடுதலை செய்வதற்காக சட்டமியற்றும் சமூக உருவாக்கங்களுக்குள்ளே தனிநபர் மற்றும் சமூக நலன்புரி வாழ்க்கையின் மட்டத்தை கொண்டுவர எடுத்த முயற்சியின், 'மனித உரிமை சமுதாயங்களாக' ஆவதற்கு சிறந்த முறையில் அவர்கள் முயற்சி செய்தார்கள் என்று கூறுவதன் மூலம் நாம் பண்பிடக்கூடும், முயற்சியின் பொதுத்தோல்வி ஆகும் அது.

"நவீன பரிசோதனையை தாங்கிநிற்கும் கட்டுமானம் என்று கூறப்படும் வகையில் எந்த 'உண்மையான' அத்திவாரங்களும் இப்பொழுதும் இல்லை, இதற்குமுன் இருந்ததுமில்லை."[3]

பின் நவீனத்துவவாதிகளின் மொழியிலேயே இந்த மேற்கோள் பகுதியைக் "கட்டுடைப்பதற்கு" என்னை அனுமதியுங்கள். இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக, 18ம் நூற்றாண்டு வரை நீடிக்கின்ற காலத்தில், அறிவொளியூட்டலின் மெய்யியல் மற்றும் விஞ்ஞானம் ஆகியவற்றினால் உந்தப்பட்ட சிலர், மனித முழுமை அடைவதின் சாத்தியத்தில், முன்னேற்றத்தில் நம்பிக்கை வைத்த சிலர்; வரலாற்றின் புறநிலை விதிகளுக்குள் விஞ்ஞான நுண்ணறிவுத்திறம் என்று தாங்கள் நம்பியதன் அடிப்படையில் சமுதாயத்தை புரட்சிகரமாக மாற்றுதற்கு விழைந்தனர்.

அத்தகையவர்கள், தனி மனிதர்களுடைய அகநிலை நனவில் இருந்து முற்றிலும் சுதந்திரமாக இருக்கும் சமூக பொருளாதார சக்திகளால் நிர்ணயிக்கப்படும் ஒரு விதி ஆளுமைசெய்யும் மாற்றுப்போக்கு என்ற வகையில் வரலாற்றில் (தடித்த எழுத்துக்களில்) நம்பிக்கை கொண்டனர், ஆனால் அவ்விதிகளை மனிதர்கள் கண்டுபிடிக்க முடியும், புரிந்து கொள்ள முடியும், மனித முன்னேற்றத்தின் நலன்களுக்காக அவற்றின் மீது செயல்பட முடியும் என்றும் நம்பினர்.

ஆனால், அத்தகைய கருத்துருக்கள் யாவும் சூதுவாதற்ற பிரமைகளாக காட்டப்பட்டிருக்கின்றன என்று பின்நவீனத்துவ வாதிகள் அறிவிக்கின்றனர். வரலாறு ஒன்றும் (பெரிய முதலெழுத்துடன்) இல்லை. சொல்லப் போனால், ஒரு புறநிலை நிகழ்ச்சிப்போக்காக மட்டுமே அறிந்து கொள்ளக்கூடிய (சிறிய எழுத்துடன் தொடங்கும்) வரலாறு கூட கிடையாது. நோக்கங்கள் என்னவாக இருக்கட்டும், அகநிலை ரீதியாக தீர்மானிக்கப்படும் பயனுடைய நோக்கம் ஏதாவதொன்றை அடைவதற்கு பயன்படுத்தப்படும் மாறுகின்ற சொற்களுடன், வெறுமனே அகநிலை "விளக்க உரைகளாக", அல்லது "சொல்லாடல்களாக" (Discourses) இருக்கின்றன, இப்பொழுது எங்களுக்கு நன்றாகவே தெரியும் என்கின்றனர். .

இத்தகைய நிலைப்பாட்டில் இருந்து, "வரலாற்றில் இருந்து" "படிப்பினைகளை" பெறுதல் என்ற கருத்தே முறைகேடான திட்டமாகும். உண்மையில் படிப்பதற்கு மற்றும் கற்றுக்கொள்வதற்கு எதுவுமே இல்லை. ஜென்கின்ஸ் வலியுறுத்துகின்றவாறு, இறுதியில் சுயமேற்கோள் காட்டும் உரையாடலின் (பகட்டாரவாரமான) அந்தஸ்திற்கு அப்பால் எமது நம்பிக்கைகளுக்கான ஒரு முறைமையான மெய்ப்பொருள் மூல ஆராய்ச்சிக்குரிய அல்லது மனித அறிவை பற்றிய இயலுக்குரிய அல்லது ஒழுக்கநெறி சார்ந்த அடிப்படைகள் இருக்காத சமூக உருவாக்கங்களுக்கிடையே நாம் வாழ்கிறோம் என்பதை நாம் இப்பொழுதுதான் புரிந்துகொண்டிருக்கிறோம்... அதன் விளைவாக, ஏதோ ஒருவகை சாரத்தை வெளிப்படுத்தும் கடந்த காலம் என்ற அத்தகைய ஒன்று ஒருபோதும் இருந்ததில்லை, இருக்கப் போவதும் இல்லை என்பதை இன்று நாம் அறிகிறோம்."[4]

சாதாரணமாகப் புரிந்து கொள்ளக்கூடிய மொழியில் கூறவேண்டும் என்றால், ஜென்கின்ஸ் கூறவிரும்புவதாவது: 1) இதுகாறும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அல்லது கண்டிபிடிக்கப்பட இருக்கின்ற புறநிலை விதிகளின் அடிப்படையில் கடந்த கால அல்லது தற்கால மனித சமுதாயங்களின் செயல்பாடு அறியப்பட முடியாதது; மற்றும் 2) மக்கள் தாங்கள் வாழும் சமூகத்தை பற்றி என்ன நினைப்பார்கள், கூறுவார்கள், அல்லது செய்வார்கள் என்பதற்கு ஆதாரமாய் இருக்கும் புறநிலை அடித்தளங்கள் எதுவும் கிடையாது. தங்களை வரலாற்றாளர்கள் என்று கூறிக்கொள்ளுபவர்கள், கடந்த காலத்தை பற்றி ஏதாவதொரு பொருள் விளக்கத்தை முன்வைக்கலாம்; ஆனால் ஒரு விளக்கத்திற்கு பதிலாக மற்றோர் விளக்கத்தை முன்வைப்பதன் மூலம் அது முன்னால் எழுதப்பட்டதைவிட ஏதோ புறநிலைரீதியாக உண்மையை நோக்கிய ஒரு முன்னேற்றத்தை வெளிப்படுத்துவதற்கில்லை; ஏனெனில் புறநிலை உண்மை என்று ஏதும் நெருக்கமாக அடைவதற்கு இல்லை. வரலாற்றாளனின் அகநிலையாக மனத்தால் உணரும் பயன்களுக்கு பொருந்தும் காரணங்களுக்காக, அதுவெறுமனே கடந்த காலத்தை பற்றி ஒருவிதமாக கூறுவதற்கு பதிலாக, வேறு விதமாக கூறும் பதிலீடுதான்.

இத்தகைய பார்வையை முன்மொழிபவர்கள் நவீனத்தின் இறப்பை வலியுறுத்திப் பேசுகின்றனர், ஆனால் அவர்களது முடிவுரைகள் மூலாதாரமாய்க் கொண்டிருக்கும் சிக்கலான ஒட்டுமொத்த வரலாற்று மற்றும் அரசியல் மதிப்பீடுகளை ஆராய மறுக்கின்றனர். அவர்கள் நிச்சயமாக அரசியல் நிலைப்பாடுகளை கொண்டிருக்கின்றார்கள்தான், அவை அவர்களுடைய தத்துவார்த்த கருத்துக்களில் அடிப்படையாய் இருப்பதுடன் வெளிப்பாட்டையும் காண்கின்றது. பின்நவீனத்துவத்தின் முன்னணி வாதிடுபவர்களில் ஒருவரான பேராசிரியர் ஹைடன் வைட், வெளிப்படையாகவே கூறினார்: "அது சமூக படிநிலைகளில் "மேலிருந்து வந்தாலும்" சரி, "கீழிருந்து வந்தாலும்" சரி, மற்றும் சமுதாயம், வரலாறு பற்றிய விஞ்ஞானங்களில் நுட்பம் உடையவர்கள் என்று கூறிக்கொள்ளும் தலைவர்களால் வழிநடத்தப்பட்டாலும் சரி, அரசியல் 'தன்னியல்பை' புகழ்பவர்களால் வழிநடத்தப்பட்டாலும் சரி, இப்பொழுது நான் புரட்சிகளுக்கு எதிரானவன்".[5]

எடுத்துக்கொள்ளப்பட்ட ஒரு மெய்யியல் கருத்துருவின் முறைமையானது அதை முன்வைக்கும் தனிநபரின் அரசியலால் தானாகவே மறுக்கப்பட்டுவிடாது. ஆனால் பின்நவீனத்துவத்தின் மார்க்சிச விரோத, சோசலிச-விரோத வளைவரை பாதையானது, அதன் தத்துவார்த்த கருத்துருக்களை அதன் அரசியல் முன்னோக்கில் இருந்து சிக்கலகற்றி பிரித்தெடுப்பது கிட்டத்தட்ட முடியாத அளவுக்கு தெளிவாக உணரப்படத்தக்கது.

இந்தத் தொடர்பு அதன் மிக ஐயத்திற்கிடமற்ற வெளிப்பாட்டை பிரெஞ்சு மெய்யியலாளர் ஜோன் பிரான்சுவாஸ் லியோத்தார் மற்றும் அமெரிக்க தத்துவவாதியான ரிச்சார்ட் ரோர்ட்டி ஆகியோருடைய எழுத்துக்களில் காண்கிறது. நான் முன்னவருடன் ஆரம்பிக்கிறேன். லியோத்தார் நேரடியாக சோசலிச அரசியலில் தொடர்பு கொண்டிருந்தார். 1949ம் ஆண்டு, நான்காம் அகிலத்தின் பிரெஞ்சுப் பிரிவான Parti Communiste Internationaliste உடனான பிளவில் தோன்றிய Socialisme ou Barbarie என்ற குழுவில் 1954ம் ஆண்டு அவர் சேர்ந்தார். ட்ரொட்ஸ்கி சோவியத் ஒன்றியத்தை ஒரு உருக்குலைந்த தொழிலாளர் அரசு என்று வரையறுத்ததை அக்குழு ஏற்காததுதான் அந்த பிளவிற்கான அடிப்படை ஆகும். Cornelius Castoriadis மற்றும் Claude Lefort ஆகியோரை முன்னணி தத்துவார்த்தவியலாளர்களாக கொண்டிருந்த Socialisme ou Barbarie குழு, அதிகாரத்துவம் ஒட்டுண்ணித் தன்மை கொண்ட சமூக அடுக்கு அல்ல மாறாக ஒரு புதிய சுரண்டும் சமூக வர்க்கம் என்ற நிலைப்பாட்டை அபிவிருத்தி செய்தது.

1960களின் மத்திவரை லியோத்தார் இந்தக் குழுவில் இருந்தார்; அக்காலக்கட்டத்தில் அவர் மார்க்சிசத்துடன் முற்றிலும் முறித்துக் கொண்டு விட்டார்.

மனிதகுல விடுதலையின் "அரிய கூற்றுக்களை" தள்ளுகை செய்த வகையில் லியோத்தார் பெரிதும் அடையாளம் காணப்படுகிறார்; அதன் முறைமையானது 20ம் நூற்றாண்டின் நிகழ்வுகளால் மறுக்கப்பட்டுவிட்டன என்பது அவருடைய கூற்று ஆகும். அவர் வாதிடுவதாவது:

"மனிதகுல விடுதலை பற்றிய மாபெரும் கூற்றுக்கள் ஒவ்வொன்றினது அடிப்படையும் எடுத்துக்கூறுவதாயின், அது கடந்த ஐம்பது ஆண்டுகளில் செல்லாததாக்கப்பட்டுவிட்டது. மெய்மையானவை (Real) அனைத்தும் ஆய்வறிவானவை (Rational), ஆய்வறிவானவை அனைத்தும் மெய்மையானவை என்பது, 'அவுஸ்விட்ச்' ஊகக் கோட்பாட்டை மறுக்கின்றது. குறைந்த பட்சம் குறைந்த பட்சம் மெய்மையானதாக இருந்த அந்தக் குற்றம், ஆய்வறிவற்றதாக இருந்தது. பாட்டாளி வர்க்கமாய் இருக்கும் அனைவரும் கம்யூனிஸ்ட்டாய், கம்யூனிஸ்டாய் இருக்கும் அனைவரும் பாட்டாளி வர்க்கமாய் இருப்பர்: 'பேர்லின் 1953, புடாபெஸ்ட் 1956, செக்கோஸ்லோவாக்கியா 1968, போலந்து 1980 நிகழ்வு" (கூறுவதற்கு மிக வெளிப்படையான உதாரணங்களே இவை) வரலாற்றுச் சடவாத கோட்பாடை மறுக்கின்றன: தொழிலாளர்கள், கட்சிக்கு எதிராக எழுகின்றனர். ஜனநாயகத்திற்காக இருப்பவை அனைத்தும் மக்கள் மூலமாய் மக்களுக்காக உள்ளன; எதிர்விதத்தில் இல்லை. "மே 1968" நிகழ்வு பாராளுமன்ற தாராளவாத கோட்பாட்டை மறுக்கிறது." அவற்றின் போக்கில் விட்டால், தேவை, அளிப்பு விதிகள் உலகத்தில் எல்லா நிலைகளிலும் செல்வச்செழிப்பை கொடுக்கும்; உலகத்தின் முழு செல்வச்செழிப்பில் தேவை அளிப்பு விதிகள் இயல்பாக செயல்படும். "1911 மற்றும் 1929 நெருக்கடிகள் பொருளாதார தாராளவாத கோட்பாட்டை" மறுக்கின்றன.[6]

லியோத்தாரின் பின்நவீனத்துவ செயற்திட்டம் முழுவதன் பின்னே இருக்கும் தத்துவார்த்த நோக்குநிலை தவறல், உள உரங்குலைதல், அவநம்பிக்கைவாதம் ஆகியவற்றின் சேர்க்கையானது இந்த பகுதியில் சுருங்கக் கூறப்படுகிறது. அதை மறுத்து ஒரு முழு உரை, ஏன் ஒரு புத்தகம் கூட எழுதப்படமுடியும். இங்கு நான் ஒரு சில கருத்துக்களோடு மட்டும் என்னை வரையறைக்குட்படுத்திக் கொண்டாக வேண்டும்.

அவுஸ்விட்ச் நிகழ்வு வரலாற்றைப்பற்றி விஞ்ஞானபூர்வமான முறையில் புரிந்து கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் நிராகரிக்கிறது என்ற வாதம் எந்தவகையிலும் லியோத்தாருக்கு மூல உரிமையானது அல்ல. அதேபோன்ற கருத்து பிராங்பேர்ட் (கருத்தியர்) பள்ளியின் தந்தையர்களான Adorno, Horkheimer எழுதிய இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய எழுத்துக்களின் அடிப்படையை அமைக்கின்றன. அவுஸ்விட்ச் மெய்மையானது மற்றும் ஆய்வறிவற்றது என்ற இரண்டுமாகும் என்று லியோத்தாரின் அறிவிப்பு ஹெகெலுடைய இயங்கியல் புரட்சிகர கருத்துருவை எளிமையாக்கும் முறையில் திரித்தல் ஆகும். லியோத்தார் தள்ளுகைசெய்வதாகக் கூறுவது, ஒரு மெய்யியலுக்குரிய கருத்து என்ற வகையில், அதனுடன் இருக்கும் மெய்மையை கொச்சையான முறையில் அடையாளப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. ஆனால் ஏங்கல்ஸ் விளக்கியுள்ளபடி, ஹெகலால் புரிந்துகொள்ளப்பட்டவாறு, மெய்மை என்பது, எந்த வகையிலும், எல்லா சூழ்நிலைகளிலும் எல்லா காலங்களிலும், எந்த கொடுக்கப்பட்டுள்ள சமூக அல்லது அரசியல் நிலவும் நிலைமைகளின் தனிஇயல்பு மெய்மை அல்ல." [7] நிலவும் நிலைமையானது சமூக ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் ஆய்வறிவற்றதாக இருப்பதால் மனித சமுதாயத்தின் புறநிலை வளர்ச்சியுடன் அந்தளவுக்கு அடியோடு மோதல்கொள்ள முடியும், எனவே அது மெய்மையற்றது, நீடித்து நிற்கவியலாதது மற்றும் அழிவுற வேண்டியது ஆகும். இந்த ஆழ்ந்த அர்த்தத்தில், நாசிசத்தையும் அவுஸ்விற்சையும் விளைவித்த ஜேர்மன் ஏகாதிபத்தியம் ஹெகலுடைய மெய்யியல் கருத்தின் உண்மையைத்தான் விளக்கியது.

ஸ்ராலினிசத்தற்கு எதிரான தொழிலாள வர்க்க எழுச்சிகள் வரலாற்று சடவாதத்தை மறுதலிக்கவில்லை. மாறாக அவை லியோத்தார் தழுவிக்கொண்ட Socialisme ou Barbarie இன் அரசியலைத்தான் மறுதலிக்கின்றன. வரலாற்று சடவாத பகுப்பாய்வின் அடிப்படையில் ட்ரொட்ஸ்கி இத்தகைய எழுச்சிகள் வரக்கூடும் என்று முன்கூட்டியே கணித்திருந்தார். Soialisme ou Baribarie குழு ஸ்ராலினிச அதிகாரத்துவங்களுக்கு, ஒரு ஒட்டுண்ணி சாதி என்றவகையில், அவற்றிடம் இல்லாதிருந்த (அவை ஒட்டுண்ணிகள் என்பதால்) ஓரளவு அதிகாரத்தையும், உறுதித் தன்மையையும் அளித்துள்ளது. மேலும் லியோத்தார் கம்யூனிசத்தை ஒரு புரட்சி இயக்கம் என்பதற்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளாக பார்ப்பதற்கும் இடையிலான ஒன்றாக அடையாளம் காண்கிறார், அவை உண்மையில் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் அரசியல் அமைப்புக்கள்தாம்.

பொருளாதார மற்றும் பாராளுமன்ற தாராளவாதத்தை மறுப்பது என்பதை பொறுத்த வரையில், இது லியோத்தார் ஆல் மேற்கோளிடப்படும் நிகழ்வுகள் நடப்பதற்கு நெடுங்காலம் முன்னரே மார்க்சிஸ்டுகளால் சாதிக்கப்பட்டுவிட்டது. மே 1968 பாராளுமன்ற தாராளவாதம் வீழ்ச்சியுற்றது என்று அவரால் குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பாக விசித்திரமானது. ஸ்பானிய உள்நாட்டுப் போர் என்ன ஆயிற்று? வைமர் குடியரசின் பொறிவை பற்றி என்ன கூறவேண்டும்? பிரெஞ்சு மக்கள் முன்னணியின் காட்டிக் கொடுப்பு பற்றி என்ன கூறுவது? இந்நிகழ்வுகள் அனைத்தும் மே-ஜூன் 1968க்கு 30 ஆண்டுகள் முன்பு நிகழ்ந்தவை. பெரும் மெய்யியற் கண்டுபிடிப்புக்கள் என லியோத்தார் முன்வைப்பவை ஏமாற்றமடைந்த முன்னாள் இடது (அல்லது வலதுபுறம் நகரும்), கல்விப்புலம் சார்ந்த குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் அவநம்பிக்கைவாதம் மற்றும் வெறுப்பு மனப்பான்மையின் சற்று அதிகமான வெளிப்பாடு ஆகும்.

ரிச்சார்ட் ரோர்டி புறநிலை உண்மை பற்றிய கருத்துரு பற்றிய தனது நிராகரிப்பை புரட்சிகர சோசலிச அரசியலை தள்ளுகைசெய்வதுடன் தொடர்புபடுத்துவதில் வெட்கமற்று உள்ளார். கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச ஆட்சிகளின் பொறிவும் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பும் இடதுசார்புடைய அறிவுஜீவிகளுக்கு நீண்ட காலம் காத்துக் கிடந்த வாய்ப்பை, புரட்சிகர சோசலிச முன்னோக்கிற்கு எந்தவித அறிவுஜீவி அர்ப்பணிப்பையும் (அல்லது உணர்வுபூர்வமான அர்ப்பணிப்பையும் கூட) முதலும் கடைசியுமாக கைவிட வாய்ப்பை வழங்கியது.

"... மனித சமூகங்களின் கதியை நிர்ணயிக்கும் சக்திகளின் அடிப்படை ஆதாரமாக உள்ள, ஆழ்ந்த ஒன்றைப் பற்றி அறிய வேண்டும் அல்லது அறியக் கடமைப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்திலிருந்து தங்களை விடுவித்துக்கொள்வதற்கு அறிவுஜீவிகள் லெனினிசத்தின் இறப்பை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்வர் என நான் நம்புகிறேன்."

"அறிவுஜீவிகளாகிய நாம் நம்முடைய கடையை விரித்ததில் இருந்தே அத்தகைய அறிவை நாம் பெற்றுள்ளோம் எனக் கூறிவந்திருக்கிறோம். முன்னொரு காலத்தில் அரசர்கள் மெய்யிலாளர்களாகவோ, மெய்யிலாளர் அரசர்களாகவோ இருந்தாலன்றி நீதி கோலோச்ச முடியாது என்று கூறிவந்தோம்; இத்தகைய அறிவை வரலாற்றின் இயக்கத்தை மற்றும் வடிவத்தை புரிந்துகொண்டதன் அடிப்படையில் அறியவந்தோம் எனக் கூறினோம். அநீதியை எதிர்த்து எவ்வாறு முடிவு கட்டுவது என்பதைக் கண்டறியும், சிறு பரிசோதனை வழிமுறைகளுக்கு எதிராக பெரும் தத்துவார்த்த வழிகள் இருந்தாக வேண்டும் என்ற பிளாட்டோவிற்கும் மார்க்ஸுக்கும் பொதுவான, உறுதியான நம்பிக்கையிலிருந்து இறுதியாக விடுபடுவதற்கு நேரம் வந்துவிட்டது என நான் நம்புவேன்."[8]

இத்தகைய தத்துவார்த்த கைவிடுதலை அடுத்து என்ன நேரிடும்? ரோர்ட்டி "இடது" அரசியல் பற்றிய மறுநோக்குநிலைக்கான அவரது முன்மொழிவுகளை முன்வைக்கிறார்:

" ‘முதலாளித்துவம்’, ‘சோசலிசம்’ போன்ற சொற்களை இடதின் அரசியல் சொற்களஞ்சியத்திலிருந்நு நீக்கிவிட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். 'முதலாளித்துவ எதிர்ப்பு போராட்டம்' போன்றவற்றை பற்றி பேசுவதை நிறுத்திவிட்டு சாதாரண, தத்துவார்த்தமல்லாத முறையில்- ‘தவிர்க்கக் கூடிய மனிதத் துன்பங்களுக்கு எதிரான போராட்டம்’ என்பது போன்ற ஏதோஒன்றை பதிலீடாகக் கூறுவது சிறந்த கருத்தாக இருக்கும். இன்னும் பொதுவாக, இடது அரசியல் ஆழ்ந்தாராய்வுகளின் முழு சொற்களஞ்சியத்தையும் அற்பமானதாக்க முடியும் என்றும் நான் நம்புகிறேன். நாம் முதலாளித்துவ கருத்தியல் என்பதற்கு பதிலாக, பேராசை, தன்னலம் ஆகியவற்றையும், பட்டினி ஊதியம், வேலை நீக்கம் என்று கூறுவதைவிட உழைப்பை பண்டமயமாக்கல் என்றும், சமூகம் வர்க்கங்களாக பிரிந்துள்ளது என்பதற்கு பதிலாக பள்ளிகளில் வேறுபட்ட முறையில், தலா மாணவர்களுக்கு எவ்வளவு செலவு, சுகாதாரத்தில் வேறுபட்ட முறையில், தலா நபருக்கு எவ்வளவு செலவு என்றும் கூறத் தலைப்படலாம் என்று கருதுகிறேன்."[9]

இது "மெய்யியல்" என்று அழைக்கப்படுகிறது? "அற்பமானதாக்கல்" என்று ரோர்ட்டி கூறுவது அறிவார்ந்த மற்றும் அரசியல் காயடிப்பு (நலமடிப்பு) என்று தேர்ந்த முறையில் விபரிக்கப்படலாம். விவாதத்தில் இருந்து 200 ஆண்டுகளுக்கும் மேலான சமூக சிந்தனையின் விளைவை விவாதிப்பதிலிருந்து அகற்ற முன்மொழிகிறார். இந்த முன்மொழிவுக்கு அடிப்படையான கருத்து, சிந்தனையின் அபிவிருத்திதாமே முற்றிலும் தான்தோன்றித்தனமான, மற்றும் பெரும்பாலும் அகநிலை செயல்முறை ஆகும். சொற்கள், தத்துவார்த்த கருத்துப்படிவங்கள், தர்க்கரீதியான வகையினங்கள், மெய்யியல்முறைகள் ஆகியவை, பல்வேறு அகநிலை இலக்குகளின் நலன்களின் பேரில் செயற்பாட்டுரீதியாக மாயவித்தைசெய்யும் வெறும் சொற்புனைவுகள் ஆகும். தத்துவார்த்த சிந்தனையின் அபிவிருத்தி என்பது, இயற்கை மற்றும் சமுதாயம் பற்றிய மனிதனின் படிப்படியான அபிவிருத்தியை, ஆழப்படுத்தலை மற்றும் என்றும் மேலும் மேலும் சிக்கலான மற்றும் நுட்பமான புரிதலை வெளிப்படுத்தும், ஒரு புறநிலை நிகழ்ச்சிப்போக்காகும், இது ரோர்ட்டியை பொறுத்தவரையில் ஒரு ஹெகெலிய-மார்க்சிச பரிபாஷையைத்தவிர வேறொன்றுமில்லை. வேறொரு பகுதியில் அவர் வலியுறுத்திக் கூறுவதாவது: "இயற்கை விஞ்ஞானிகள் குறிப்பாக நுண்திறம் பெற்றிருக்கும், கண்டுபிடிக்கப்பட வேண்டிய இயல்புள்ள 'அறிதல்' என்று அழைக்கப்படும் நடவடிக்கை இல்லை. இவை சாதாரணமாய் பார்வையாளர்களிடத்தில் நம்பிக்கைகளை நியாயப்படுத்தும் செயல்முறைகள்தாம்." [10]

எனவே, "முதலாளித்துவம்", "தொழிலாள வர்க்கம்", "சோசலிஸ்ட்", "உபரி மதிப்பு", "கூலி-உழைப்பு", "சுரண்டல்", மற்றும் "ஏகாதிபத்தியம்" போன்ற பதங்கள் ஒரு புறநிலை மெய்மையை குறிக்கும் மற்றும் வெளிப்படுத்தும் கருத்துப் படிவங்கள் அல்ல. அவை, இன்னும் குறைந்த உணர்வை மெய்யென முன்கூட்டியே கொள்ளும் மற்றவற்றால், ரோர்ட்டி அழைக்காவிட்டாலும் நம்மில் பெரும்பாலானவர்கள் "இடக்கரடக்கல்" (தீயதை நல்வார்த்தையால் கூறல்) என்று அழைக்கும் சொற்களால் பதிலீடு செய்யப்பட வேண்டும்.

நான் ஏற்கனவே மேற்கோளிட்டபடி, "தவிர்க்கக் கூடிய மனிதத் துன்பங்களுக்கு எதிரான போராட்டத்தை பற்றி" நாம் பேசவேண்டும் என்று ஆலோசனை கூறுகிறார். ஒரு கணம் இந்த அரிய ஆலோசனையை ஏற்போம். உடனடியாக நாம் வேறு ஒரு பிரச்சினையை எதிர்கொள்கின்றோம். எந்த வடிவ, எந்த அளவிலான மனிதத் துன்பங்கள் தவிர்க்க கூடியவை என்று நாம் எவ்வாறு தீர்மானிக்க வேண்டும்? துன்பம் தவிர்க்கப்படக் கூடியது அல்லது அது தவிர்க்கப்பட வேண்டும் என்று கூட எந்த அடிப்படையில் நாம் கூறுவது? துன்பமானது மனிதனின் ஊழ்வினை, இறையருள் இல்லாமற்போனவர்களுக்கு அதுதான் விளைவு என்று வாதிடுவோருக்கு நாம் என்ன பதிலைக் கூறவேண்டும்? சமயவாதிகளின் வாதங்களை தவிர்த்தாலும்கூட, எமது துன்பங்களை சமயசார்பற்ற முறையில், ஒரு சமூகப் பிரச்சினையாக எடுத்துக் கொண்டாலும், துன்பங்களுக்கான காரணங்களை ஆராயும் பிரச்சினையை எதிர்கொண்டுதான் தீரவேண்டும்.

"தவிர்க்கக்கூடிய மனிதத் துன்பங்கள்" அகற்றப்படுவதற்கான வேலைத்திட்டம் என்பது சமுதாயத்தின் பொருளாதார கட்டமைப்பை ஆராய்வதற்கு நிர்பந்திக்கப்படும். அத்தகைய விசாரணை ஏதேனும் குறிப்பிடத்தக்க அளவு நேர்மையுடன் நடத்தப்பட்டால், "தவிர்க்க முடியாத மனிதத் துன்பங்களுக்கு" எதிராக போர்க்கொடி தூக்குபவர்கள் "சொத்துஉடைமை", "சொத்து", "இலாபம்" மற்றும் "வர்க்கம்" பற்றிய பிரச்சினைகளை எதிர்கொள்ளுவர். இந்த சமூக இயல்நிகழ்ச்சியை விளக்குவதற்கு அவர்கள் புதிய சொற்களைத் தேடலாம்; ஆனால் ரோர்ட்டியின் அனுமதி இருந்தாலும், இல்லாவிட்டாலும் சமூகத்தில் இவை இருக்கும்.

ரோர்ட்டியுடைய தத்துவார்த்த கருத்துருக்கள் அப்பட்டமான ஒத்திசைவின்மைகளையும் முரண்பாடுகளையும் தாராளமாய் கொண்டுள்ளன. "உண்மை" என்று கண்டுபிடிக்கப்பட வேண்டியது, அறிந்துகொள்ளப்படவேண்டியது, ஒன்றுமில்லை என்று அவர் ஆணித்தரமாக வலியுறுத்துகிறார். உண்மையெனக் கொள்ளும் பாங்கில், உண்மை என்பது இல்லை என்ற தன்னுடைய கண்டுபிடிப்பு அவருடைய மெய்யியலின் அடித்தளத்தை அமைப்பதால், அது "உண்மை" யாக இருக்கும் என்று அவர் நினைக்கிறார். ஆனால் இந்த படுமோசமான ஒத்திசைவின்மை பற்றி விளக்குமாறு அவர் கேட்டுக்கொள்ளப்பட்டால், இப்பிரச்சினையை தவிர்க்கும் வகையில் வினாவின் விதிகளுக்குத் தன்னை உட்படுத்திக் கொள்ளத் தயாராக இல்லை என்று அறிவித்துவிடுவார்; அது பிளாட்டோ காலத்தில் இருந்து, மரபுவழி மெய்யியல் சொல்லாடலில் வேரூன்றி உள்ளது. உண்மை என்பது பழங்காலத்திய பிரச்சினைகளில் ஒன்று, அது இப்பொழுது காலாவதியாகிவிட்டது, இக்காலத்தில் அதற்கு மெய்யியலளவில் விவாதத்திற்கு ஆர்வம் கொள்ள முடியாது என்றும் ரோர்ட்டி வலியுறுத்துகிறார். பிரச்சினை எழும்போது சிடுமூஞ்சித்தனத்துடன் குறிப்பதுபோல், "விவாதப் பொருளை மாற்ற விரும்புவதாக" குறிப்பிடுவார்.[11]

ரோர்ட்டியுடைய மெய்யியற் கருத்துருக்களை புரிந்துகொள்ளுவதற்கான திறவுகோல் அவருடைய அரசியல் நிலைமைகளில் காணக் கிடைக்கிறது. மெய்யியலுக்கும் அரசியலுக்கும் இடையே இருக்கும் தொடர்பு பற்றி குறைமதிப்பிடும் வகையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர் பேச முற்பட்டாலும், தனது தத்துவார்த்த கருத்துருக்கள் ஒரு அரசியல் நிலைப்பாட்டில் நேரடியாக பதிக்கப்பெற்ற- அதாவது, மார்க்சிச புரட்சிகர அரசியலை தனது எதிர்ப்பிலும் நிராகரிப்பிலும் பதிக்கப்பெற்ற இன்னொரு நிகழ்கால மெய்யியலாரை (philosopher) காண்பது அரிதாகும். மார்க்சிசத்தை முறையாக பகுத்து ஆராய்ந்து அதை மறுப்பதற்கு ரோர்ட்டி முற்படவில்லை. ரோர்ட்டியை பொறுத்த வரையில் மார்க்சிசம் சரியானதா, தவறானதா என்பது ஒரு தேவையற்ற விவாதமாகும். சோசலிச செயற்திட்டம் (சோவியத் ஒன்றியத்தின் கதியுடன் மிகப் பெரிய அளவில் ரோர்ட்டி அடையாளம் கண்டிருந்த) தோற்றுவிட்டது, அதாவது ரோர்ட்டியைப் பொறுத்தவரையில் வருங்காலத்தில் அது வெற்றிபெற அதிக வாய்ப்பு இல்லை. பழைய மார்க்சிச இடதின் சரிவில் இருந்து, எதுவும் உருப்படியாகக் காப்பாற்றப்பட முடியாது. வரலாறு, கோட்பாடுகள், வேலைத்திட்டங்கள் மற்றும் எல்லாவற்றிலும் மோசமாக புறநிலை உண்மை இவற்றின் மீதாக புது கொள்கை போராட்டங்களில் ஈடுபடுவதற்கு பதிலாக, மிகக் குறைந்த பொதுப் பெயரிடல் பற்றிய ஏற்கத்தக்க அரசியலுக்கு பின்வாங்கி செல்வது சிறந்தது. இதுதான் ரோர்ட்டியின் மெய்யியல் ஆகும்- மற்றும் பெரும்பாலான அமெரிக்க கல்விப்புலம் சார்ந்த பின் நவீனத்துவ சொல்லாடலும் உண்மையில் இதுவேதான்.

ரோர்ட்டிக்கும் (நாம் பின்னர் பார்க்கவுள்ளபடி இன்னும் பலருக்கும்), "1989 நிகழ்வுகள், மார்க்சிசத்தின் பேரில் இன்னும் நம்பிக்கை வைத்திருந்தவர்களுக்கு, நம்முடைய சிந்தனையை நிலைநிறுத்துக் கொள்ள ஒரு வழியும், எதிர்காலத்தை, நிகழ்காலத்தைவிட சிறப்பாக ஆக்கிக் கொள்வதற்கு ஒரு வழிவகையும் தேவைப்பட்டது, அது முதலாளித்துவம், முதலாளித்துவ வாழ்க்கை முறை, முதலாளித்துவ சிந்தனை, தொழிலாள வர்க்கம் என்ற குறிப்புக்களைக் கைவிட்டது." [12] குறைக்கப்பட்ட துன்பம் பற்றிய எமது கற்பனைத் திறன்களை நெய்யும் ஒரு குறியிலக்கின் பெயராய் 'வரலாற்றை' பயன்படுத்துவதை நிறுத்துவதற்கு நேரம் வந்துவிட்டது என்று அவர் வாதிடுகிறார். முழுப் புரட்சிக்கு இன்னும் ஆர்வம் கொண்டிருந்தால், உலக வரலாற்றளவில் தீவிரப் போக்குடை ஏனையோரைக் காணவேண்டும் என்ற ஆர்வம் இருந்தால், 1989 நிகழ்வுகள் உனக்கு அதிருஷ்டம் இல்லை என்பதைக் காட்டுகிறது"[13] என பிரான்சிஸ் புகுயாமா, (அவருடைய புகழ் பெற்ற கட்டுரையான The End of History TM) சுட்டிக்காட்டுகிறார்.

இந்த வகை சிடுமூஞ்சித்தனமும், அருவருப்பான வஞ்சப்புகழ்ச்சியும், ஸ்ராலினிச ஆட்சிகளின் பொறிவை தொடர்ந்து வந்த அரசியற் பிற்போக்கினை எதிர்கொள்கையில் இடது கல்வியாளர்கள் மற்றும் தீவிரப்போக்கினரின் சமூகச்சூழலை விரைந்து அடித்துச்சென்ற சரணாகதி, உள்ள உரம்குலைதல் இவற்றின் வெளிப்பாடு ஆகும். ஸ்ராலினிச ஆட்சிகளிளின் உடைவின் வரலாற்று, அரசியல், பொருளாதார மற்றும் சமூக வேர்களை கருத்தூன்றி ஆராய முயற்சிப்பதை காட்டிலும், வெகு எளிதில் இப்போக்குகள் பிற்போக்குத்தனம், குழப்பம் மற்றும் அவநம்பிக்கைத்தனம் ஆகியவை நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை விரைவாக மாற்றிக்கொண்டன.

1989ம் ஆண்டின் கருத்தியல் விளைவுகள்

1930களில், ஸ்ராலினிச, பாசிச பிற்போக்குத்தனங்களுக்கு அரசியல் சரணாகதி பற்றி விளக்குகையில், பலாத்காரம் வெற்றிபெறுவதோடு மட்டும் இன்றி மக்களை நம்பவும் வைக்கிறது என்று ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டார். ஸ்ராலினிச ஆட்சிகளின் திடீர் பொறிவானது, பல தீவிரப்போக்கினர் மற்றும் இடது சார்புடைய அறிவுஜீவிகளுக்கும் முற்றிலும் வியப்பை கொடுத்தோடு, பேர்லின் சுவர் தகர்ப்பை தொடர்ந்து முதலாளித்துவத்தின் தாக்குதல் மற்றும் ஏகாதிபத்தியத்தின் வெற்றிஎக்காளத்தின் முன்னே தத்துவார்த்த ரீதியாக, அரசியல் ரீதியாக மற்றும் ஓழுக்கநெறி ரீதியாகவும் நிராயுதபாணியாக்கி விட்டது. குட்டி முதலாளித்துவ இடது அரசியலின் எண்ணற்ற வண்ணங்களும் கிழக்கு ஐரோப்பாவில் அதிகாரத்துவ ஆட்சிகள் திடீரென மறைந்துவிட்டதில் முற்றிலும் திகைப்படைந்ததோடு, பெரும் மனச்சோர்விற்கும் ஆளாயின. அரசியல் ரீதியாக வெடிகுண்டின் பெரிய அதிர்ச்சிக்கு ஆளான குட்டி முதலாளித்துவ கல்வியாளர்கள், அதிகாரத்துவ ஆட்சிகளின் முடிவானது மார்க்சிசத்தின் தோல்வியை பிரதிபலித்தது என்றும் பறைசாற்றினர்.

கோழைத்தனம் ஒருபுறம் இருக்க, அவர்களுடைய கூற்றான மார்க்சிசம் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பினால் செல்வாக்கிழந்தது என்பதில் கணிசமான அளவிற்கு அறிவுஜீவி நேர்மையின்மையும் சம்பந்தப்பட்டிருந்தது. உதாரணமாக, பேராசிரியர் Bryan Turner எழுதினார்: "மார்க்சிச தத்துவத்தின் மதிப்பு கடுமையாக சவாலுக்கு ஆளாகியுள்ளது; ஆகக் குறைந்த பட்சம் கிழக்கு ஐரோப்பிய கம்யூனிசம் மற்றும் சோவியத் ஒன்றியம் முழுமையாக பொறிந்ததை மார்க்சிசம் எதிர்பார்க்காதது பெரும் தோல்வியாகும்." [14] இத்தகைய அறிவிப்புக்கள் வெறும் அறியாமையில் தோன்றியவை என மட்டும் கூறிவிடமுடியாது. இதையும், இதேபோன்ற அறிக்கைகளையும் எழுதிய இடது கல்வியாளர்கள், ஸ்ராலினிச ஆட்சியின் தன்மை பற்றிய ட்ரொட்ஸ்கிச பகுப்பாய்வை முற்றிலும் அறிந்திராதவர்கள் அல்ல, ட்ரொட்ஸ்கியின் ஆய்வு அதிகாரத்துவத்தின் கொள்கைகள் இறுதியில் சோவியத்தின் பொறிவிற்கே வழிவகுக்கும் எனக் கூறியிருந்தது.

பேரழிவுகர ஸ்ராலினிச வளைவரைபாதையை, தான் முன்கூட்டியே பார்த்த ஏராளமான ஆவணங்களை அனைத்துலகக் குழுவால் முன்வைக்கமுடியும். சோவியத்தின் முடிவிற்கு முன்னர், குட்டி முதலாளித்துவ தீவிரப்போக்கினர் இத்தகைய எச்சரிக்கைகளை குறுங்குழுவாத பைத்தியக்காரத்தனத்திற்கும் பார்க்க ஒன்றும் குறைந்ததில்லை என்று கருதினர். சோவியத் ஒன்றியத்தின் பொறிவிற்கு பின்னர், "மெய்யாய் நிலவிய சோசலிசத்தின்" தோல்விக்கு, தங்களுடைய அரசியல் பார்வையை விமர்சன ரீதியாய் ஆய்வு செய்வதைவிட, மார்க்சிசத்தை குற்றம்சாட்டுதல் அவர்களுக்கு எளிதாயிற்று. சீற்றத்துடனும், ஏமாற்றத்துடனும், இப்பொழுது அவர்கள் சோசலிசத்திற்கான தங்களின் அரசியல், அறிவார்ந்த மற்றும் உணர்வுபூர்வமான அர்ப்பணிப்பை ஒரு மோசமான முதலீடு என்றும் அதை ஆதரித்ததற்கு வருந்துவதாகவும் கூறுகின்றனர். இவர்களுடைய பார்வையானது, நீண்ட நாள் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகவும், பல தசாப்தங்கள் ஸ்ராலினிசத்திற்கு வக்காலத்து வாங்கிவந்த வரலாற்றாளர் எரிக் ஹொப்ஸ்பாம் ஆல் சுருக்கிக் கூறப்படுகிறது. தன்னுடைய சுயசரிதையில் அவர் எழுதுவதாவது:

"கம்யூனிசம் இப்பொழுது மடிந்துவிட்டது: சோவியத் ஒன்றியமும் நம்மை ஊக்குவித்த அக்டோபர் புரட்சியின் குழந்தைகளாக அந்த மாதிரியில் கட்டியமைக்கப்பட்டிருந்த பெரும்பாலான அரசுகளும், சமுதாயங்களும், தமக்குப் பின்னே சடரீதியான மற்றும் ஒழுக்கநெறி அழிபாடுகளின் காட்சியை விட்டுவிட்டு, முற்றிலும் பொறிந்துவிட்டன; ஆரம்பத்தில் இருந்தே அரசியல் நிறுவனம் தோல்வியில்தான் கட்டமைக்கப்பட்டிருந்தது என்பது ஐயத்திற்கிடமில்லாததாக கட்டாயமாக இருந்தது."[15]

அக்டோபர் புரட்சி ஒரு தோல்வியில் அழிய நேரும் துணிகரச்செயல் என்னும் ஹொப்ஸ்பாமின் கூற்று சோசலிசத்தின் வெட்கப்படாத வலதுசாரி எதிரிகளின் வாதங்களுக்கு ஒரு சரணாகதி ஆகும். சோசலிசம் ஒரு பைத்தியக்காரத்தனமான கற்பனைத் தோற்றம் என்பதற்கு சோவியத்தின் பொறிவு நிராகரித்து மறுக்க முடியாத நிரூபணம் என்று முதலாளித்துவப் பிற்போக்கு கருத்தியலாளர் வலியுறுத்துகின்றனர்.

நாசமாக்கப்பட்ட நூற்றாண்டு மீதான நியாயவிசாரணை பிரதிபலிப்புக்கள் என்ற தன்னுடைய புத்தகத்தில் றொபர்ட் கான்க்வெஸ்ட், "மண்ணில் கற்பனை உலகு கட்டியமைக்கப்பட முடியும் என்ற பழங்காலக் கருத்தையும்", "அனைத்து மனிதப்பிரச்சினைகளுக்கும் இயேசுவின் நல்லாயிரமாண்டு ஆட்சியின் இறுதிநாள் தீர்வு வழங்குதலையும்" கண்டனம் செய்கிறார்.[16] போலந்து-அமெரிக்க வரலாற்றாளரான Andrzej Walicki, "இயல்பாகவே இத்தோற்றம் ஒருபோதும் அடையப்படமுடியாது என்பதை உலகம் முழுவதிலுமான கம்யூனிசத்தின் கதி குறிப்பாய் தெரிவிக்கிறது... எனவே அதைச் செயல்படுத்துவதற்கான மகத்தான ஆற்றல் முழுவதும் வீணாய்த்தான் போகும்."[17] அண்மையில் காலமான அமெரிக்க வரலாற்றாளர் மார்ட்டின் மாலியா இக்கருத்தைத்தான் தன்னுடைய 1994ம் ஆண்டு வெளியிட்ட சோவியத் துன்பியல் (The Soviet Tragedy) என்ற புத்தகத்தில் விரிவாகக் கூறினார். அவர் குறிப்பிட்டதாவது: ஒருங்கிணைக்கப்பட்ட சோசலிசத்தின் தோல்வி, அது முதலில் தவறான இடமான ரஷ்யாவில் சோதிக்கப்பட்டதை மூலமாயக் கொண்டு தோன்றவில்லை, மாறாக சோசலிச கருத்தே அடிப்படையில் தவறான கருத்தாகும். முதலாளித்துவத்தை முற்றிலும் அகற்றிய சோசலிசம் என்பது இயல்பாக நடைமுறைப்படுத்த முடியாதது என்பதே இத்தோல்விக்கான காரணமாகும்." [18]

சோசலிசம் ஏன் "உள்ளார்ந்த வகையில் இயலாததாகும்" என்பதன் ஒரு விளக்கம் அமெரிக்க மார்க்சிய-விரோத குளிர்யுத்தகால வரலாற்றாளர்களின் தலையாய மனிதரும், ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் இருப்பவருமான ரிச்சார்ட் பைப்சினால் எழுதப்பட்ட புத்தகத்தில் காணக்கிடைக்கிறது. சொத்தும் சுதந்திரமும் (Property and Freedom) என்ற தலைப்புடைய புத்தகத்தில் தன்னுடைய சொத்து பற்றிய தத்துவத்திற்கு ஆழ்ந்த விலங்கியல் அடிப்படையை கொடுத்துள்ளார்:

"சட்டம் இயற்றல் மற்றும் உபதேசவகை கையாளல்கள் ஊடுருவமுடியாத, மாறாத மனித இயல்புகளில் ஒன்று, தேடிப்பெறுவது ஆகும்... இது அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவாக இருக்கிறது; விலங்குகள், குழந்தைகள், பெரியவர்கள் என்று நாகரிகத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் இருப்பவர்களிடம் இது காணப்படுகிறது; இக்காரணத்தினால் இது ஒழுக்கநெறிக்குக் கட்டுப்பட்டதில்லை. மிக அடிப்படையான அளவில், தப்பிப் பிழைப்பதற்கான இயல்பூக்கத்தின் வெளிப்பாடாக இது உள்ளது. ஆனால் இதற்கும் அப்பால், மனித ஆளுமையில் அடிப்படைக் குண நலனாக இது உள்ளது; இதற்கான சாதனைகளும், ஈட்டல்களும் சுய திருப்திக்கான வழிவகையாக இருக்கின்றன. தன்னைத் திருப்திப்படுத்திக் கொள்ளுவது என்ற அளவு, சுதந்திரத்தின் சாரமாக இருக்கிறது: சொத்துடைமையும் அதில் இருந்து பிறக்கும் சமத்துவமின்மையும் பலாத்காரமாக அகற்றப்படும்பொழுது சுதந்திரம் தழைத்தோங்க முடியாது."[19]

பைப்சினுடைய சொத்து பற்றிய தத்துவத்திற்குற்கு அதற்குக் கொடுக்க வேண்டிய கவனத்தைக் கொடுத்து ஆராய்வதற்கு இது இடம் இல்லை. சொத்தின் வடிவங்கள் மற்றும் அவற்றின் சமூக, சட்ட கருத்துருவாக்கங்கள் வரலாற்றளவில் வளர்ச்சியுற்றவை என்பதைச் சுட்டிக்காட்ட என்னை அனுமதியுங்கள். சொத்து என்பது பிரத்தியேகமான முறையில் தனிநபர் உடைமை என்று அடையாளம் காட்டப்பட்ட நிலை பதினேழாம் நூற்றாண்டில் இருந்துதான் தோன்றியது. முந்தைய வரலாற்றுக் கால கட்டங்களில் சொத்தானது பரந்த அளவில் இன்னும் விரிந்த, பொது உபயோக முறையில்கூட வரையறுக்கப்பட்டிருந்தது. பொருளாதார வாழ்வில் சந்தை உறவுகள் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் வந்த சொத்து பற்றிய வரையறையைத்தான் பைப்ஸ் பயன்படுத்துகிறார். அந்தக்கட்டத்தில் சொத்து என்பது ஒரு தனி மனிதன் "மற்றவர்களை ஒரு பொருளின் பயன்பாடு, நுகர்வு இவற்றிடம் இருந்து ஒதுக்குவதற்கு" உரிமை பெற்றவர் என்ற கருத்தில் முக்கியமாக அறியப்பட்டிருந்தது. [20]

இத்தகைய சொத்து வடிவமைப்பு, -சொல்லப்போனால் மற்ற விலங்கினங்களிடையே ஏறத்தாழ மிகக் குறைந்த அளவில்தான் இருந்தது என்று கூடக் கூறவியலும்!-- இதன் முக்கிய பங்கு மனிதர்களிடையே ஒப்புமையில் அண்மைக் காலமாகத்தான் இருந்து வருவது எனலாம். எப்படி இருந்த போதிலும், உங்களுடைய I-pods, இல்லங்கள், கார்கள் மற்ற மதிப்புமிக்க தனிச் சொத்துக்கள் சோசலிசத்தின் கீழ் என்ன ஆகும் என்ற கவலை உடையவர்களுக்கு, எத்தகைய சொத்துவகையை நிறுவுவதற்கு சோசலிசம் விழைகிறது என்றால், உற்பத்திசக்திகள் தனியார் உடைமையாக இருப்பது நீக்கப்படவேண்டும் என்பதைத்தான் சோசலிசம் கூறுகிறது என்பதை உத்தரவாதமாகக் கூற அனுமதியுங்கள்.

பேராசிரியர் பைப்சின் சமீபத்திய, சோவியத் ஒன்றியத்தின் கலைப்பின் பின்னர் எழுதப்பட்ட படைப்புக்களில் ஒரு நல்லவிதமான தன்மை என்னவென்றால், சோவியத் வரலாறு பற்றி அவர் முன்னர் எழுதியிருந்த சுவையற்ற ஏராளமான நூல்களுக்கும், அவருடைய வலதுசாரி அரசியல் செயற்பட்டியலுக்கும் இடையே இருக்கும் தொடர்பு முற்றிலும் வெளிப்படையாக வந்துள்ளது. பைப்சைப் பொறுத்தவரையில் அக்டோபர் புரட்சியும் சோவியத் ஒன்றியம் தோன்றியதும் சொத்து மற்றும் தனியார் உடைமை என்ற சிறப்பு சலுகைகளின்மீது தாக்குதலை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. சமூக சமத்துவத்திற்காக உலகம் முழுவதுமான மற்றும் வெகுஜனங்கள் நடத்திய புனிதப் போராட்டத்தின் சிகரமாக, அறிவொளி காலத்தின் சிந்தனைகளுடைய பலாபலனாகவும் அது இருந்தது. ஆனால் வரலாற்றின் அந்த அத்தியாயமும் இப்பொழுது முடிவுக்கு வந்திருக்கிறது.

"சொத்துடமை உரிமைகள், சமூக சமத்துவம், அனைத்தையும் தழுவி நிற்கும் பொருளாதார பாதுகாப்பு என்ற அடையப்பட முடியாத இலக்கிற்கு தியாகம் செய்யப்படுவதற்குப் பதிலாக, தக்க அளவுகோலில் அவற்றின் உரிய இடத்திற்கு மீட்கப்படல் வேண்டும்:" என்று பைப்ஸ் பிரகடனப்படுத்துகிறார். பைப்ஸ் கோரும் சொத்துரிமைகளை மீட்டல் என்பது எத்தகைய விளைவைக் கொடுக்கும்? "இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வளர்ச்சியுற்ற நலன்புரி அரசு என்ற கருத்து முழுவதும், தனிநபரின் சுதந்திரம் என்பதுடன் இயைந்து நிற்காது... அதன் பலவகையான 'உரிமையுடைப் பெயர்கள்' மற்றும் போலியான 'உரிமைகள்' ஆகியவற்றுடன் நலன்புரி கருத்தை அகற்றுதல், இருபதாம் நூற்றாண்டிற்கு முன் பொறுப்பேற்றிருந்த, குடும்பத்திற்கு அல்லது தனியார் அறக்கட்டளைக்கு சமூக உதவி என்பதற்கான பொறுப்புக்களுக்கு திரும்புதல் ஆகியன இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்குப் பெரிதும் உதவும்."[21]

ஆளும் செல்வந்த தட்டுக்குகளுக்கு, சோவியத் ஒன்றியத்தின் முடிவு உலகம் முழுவதும் மீண்டும் முதலாளித்துவ பழைய ஆட்சியின் மீட்பு, சொத்துரிமை மீது அனைத்துத் தடைகளும் அகற்றப்பட்ட சமூக ஒழுங்கு மீண்டும் நிறுவப்படல், தொழிலாளரை சுரண்டும் உரிமை, தனியார் சொத்துக் குவிப்பின்மீதான தடைகள் நீக்கப்படுதல் என்பவையாக தெரிகிறது. சோவியத் ஒன்றியம் பொறிந்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் அதைத் தொடர்ந்து சமூக சமத்துவமின்மையில் மகத்தான வளர்ச்சியும், உலக மக்கட்தொகையில், செல்வக்குவிப்பு மேல்தட்டு 1 சதவிகிதத்தில் (அதிலும் உயர் 10 சதவிகிதம் செல்வக் கொழிப்பினரிடையே இருத்தல்) தோன்றியுள்ளது என்பது தற்செயலான நிகழ்வு அல்ல. மார்க்சிசம் மற்றும் சோசலிசத்தின் மீது உலகெங்கிலும் தாக்குதல் நடத்தப்படுவது, சாரம்சத்தில், இந்தப் பிற்போக்கான மற்றும் வரலாற்றளவில் பின்தங்கிய சமூக மாற்றுப்போக்கின் சிந்தனையோட்ட பிரதிபலிப்பாகத்தான் உள்ளது.

ஆனால் இந்த மாற்றுப்போக்கு அதிவலதுசாரிகளின் மார்க்சிச விரோத வசைமாரிகளில் மட்டும் வெளிப்பாட்டைக் காணவில்லை. முதலாளித்துவ சமுதாயத்தின் அறிவுஜீவித அழுகிக்குலைதலானது அதிவலதுகளின் கருத்தியல் தாக்குதல்களுக்கு மிச்சமீத குட்டிமுதலாளித்துவ இடதுகளின் மனம்தளர்ந்த சரணாகதியில் விளக்கிக் காட்டப்படுகிறது. உலகம் முழுவதும் இருக்கும் புத்தகக் கடைகளில் முன்னாள் தீவிரப்போக்கினரால் எழுதப்பட்டு நிரம்பிவழியும் நூல்கள், தங்கள் நம்பிக்கைகள் கனவுகள் அனைத்தும் மூழ்கிப்போன கப்பலாயின எனப் பறைசாற்றுகின்றன. தங்களுடைய மனத்தளர்ச்சி, ஊக்கமின்மை, திராணியின்மை இவற்றை கேட்போருக்கெல்லாம் கூறுவதில் தவறை ஒப்புக்கொள்ள மறுக்கும் ஒருவகை இழி திருப்தி கொள்ளும் தன்மையைத்தான் கொண்டிருக்கின்றன. ஆனால் இவர்கள் தங்கள் தோல்விக்கு எந்த அளவிற்குத் தாங்கள் காரணம் என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் தாங்களும் மார்க்சிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எனக் கூறுகின்றனர்; மார்க்சிசம் அவர்களுக்கு ஒரு சோசலிசப் புரட்சியை உறுதியளித்ததாகவும் அதனால் அதைக் கொடுக்கமுடியவல்லை என்றும் குமுறுகின்றனர்.

இவர்களுடைய பாவமன்னிப்பு பரிதாபத்திற்கு உரியவை மட்டுமல்ல, சற்று வேடிக்கையாகவும் உள்ளது. தங்களுடைய தனிப் பேரழிவுகளை ஒரு வகையிலான உலக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக வெளிப்படுத்தும் முயற்சியைக் கொண்டுள்ள இவர்கள் தங்களை இன்னும் நகைப்பிற்கிடமாக்கும் வகையில்தான் முடிவுறச்செய்கின்றனர். உதாரணமாக பேராசிரியர் ரேமண்ட் அரொன்சன் மார்க்சிசத்திற்கு பின்னர் (After Marxism) என்ற தன்னுடைய நூலை பின்வரும் மறக்கமுடியாத சொற்களில் ஆரம்பிக்கின்றார்:

"மார்க்சிசம் முடிந்துவிட்டது; நாம் இனி நம்முடைய கால்களில்தான் நிற்க வேண்டும். அண்மைக்காலம் வரை, இடதில் இருந்த பலருக்கும் தங்கள் காலில் நிற்பது என்பது நினைத்துப் பார்க்கமுடியாத பேரிடர் -- ஆதரவு முழுவதும் அற்ற, அனாதையின் நிலை அது.... மார்க்சிசத்தின் கடைசித் தலைமுறை என்ற வகையில், நாங்கள் வரலாற்றினால், விரும்பத்தக்கதல்லாத பணியான மார்க்சிசத்தை புதைத்தலை செய்யும்படி ஒதுக்கப்பட்டுள்ளோம்." [22]

இவ்வித இறுதிச்சடங்கிற்குப் பொறுப்பேற்பவர்களுக்குப் பொதுப் பல்லவி சோவியத் ஒன்றியத்தின் சரிவு அவர்களுடைய அரசியல் சமநிலையைச் சிதைத்துவிட்டது என்பது மட்டும் இல்லாமல் உணர்வு வகைச் சமநிலையையும் சிதைத்துள்ளது என்பதாகும். கிரெம்ளின் அதிகாரத்துவத்தைப் பற்றி அவர்களுடைய அரசியல் விமர்சனங்கள் எப்படி இருந்தபோதிலும், அவர்கள் அதன் கொள்கைகள் சோவியத்தின் அழிவிற்கு இட்டுச் சென்றுவிடும் என்று ஒருபோதும் கற்பனைசெய்ததில்லை, அதாவது அவர்கள் ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வான ஸ்ராலினிசம் எதிர்ப்புரட்சிகரமானது என்பதை ஏற்றுக்கொண்டதில்லை. இவ்விதத்தில் அரன்சன் குற்றத்தைஒப்புக் கொள்ளுவதாவது:

"சோவியத் ஒன்றியத்தின் அசைக்கமுடியா நிலை மற்றும் கணிசமான எடை எங்களுடைய கூட்டு மன வெளியில் மிகப் பெரிய இடத்தைக் கொண்டிருந்தது; ஒரு வெற்றிகரமான சோசலிசம் இன்னும்கூட வெளிப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையை உயிர்த்துடிப்புடன் வைத்திருந்தது. இதன் பின்னணியில், சிலருக்கு, மார்க்சிசத்தின் மற்ற கூறுகள் தொடர்ந்து செல்தகைமையானதாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்பட, மற்ற மாற்றீடுகள் சிந்திக்கப்பட முடிந்தது, விவாதிக்கப்பட முடிந்தது; ஆனால் இப்பொழுது அவ்வாறில்லை. கம்யூனிசத்தின் மரணத்திலிருந்து அதன் தத்துவார்த்த சாத்தியத்தை மீட்பதற்கு நாம் முயற்சிக்கலாம், கார்ல் மார்க்சின் பெயரில் அடையாளம் காணப்பட்டிருந்த, உலக வரலாற்றுப் போராட்ட செயல்திட்டம் முற்றிலுமாக முடிந்துவிட்டது போல்தான் தோன்றுகிறது. தற்கால பின்நவீனத்துவவாதிகள் அறிந்துள்ளபடி, மார்க்சிசத்துடன் சேர்ந்து முழு உலகக் கண்ணோட்டமும் சரிந்து விழுந்துவிட்டது. மார்க்சிஸ்டுகளும் சோசலிஸ்ட்டுகளும் என்று மட்டும் இல்லாமல், மற்ற தீவிரப் போக்கினரும், தங்களை முற்போக்கினர், தாராளவாதிகள் என்று கருதியவர்கள் அனைவருமே செல்லும் திசையை இழந்துவிட்டு நிற்கின்றனர்." [23]

போருக்குப் பிந்தைய தீவிரப்போக்கினரின் அரசியலில் நிறைந்திருந்த கறைபடிந்த சிறிய இரகசியத்தை அரன்சன் தெரியாமலேயே வெளிப்படுத்தியுள்ளார்: அதாவது ஸ்ராலிஈனிச அதிகாரத்துவத்தின் மீது, ஏனைய தொழிலாளர் அதிகாரத்துவங்களின் மீதும் என்பதும் சேர்க்கப்பட்ட வேண்டும், அது தங்கியிருக்கும் ஆழத்தை வெளிப்படுத்தியுள்ளார் இந்த தங்கியிருத்தலானது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சகாப்தத்தின் வர்க்க மற்றும் அரசியல் உறவுகளில் ஒரு ஸ்தூலமான சமூக அடிப்படையைக் கொண்டிருந்தது. தங்களுடைய சொந்த வர்க்க சூழலின் அரசியல், சமூக மனக்குறைகளைக் களைவதற்கு முயற்சி எடுக்கையில், குட்டி முதலாளித்துவப் பிரிவுகளில் முக்கியமான பகுதிகள் சக்திவாய்ந்த தொழிலாளர் அதிகாரத்துவங்களினால் அதிகாரம் செலுத்தப்படும் வளங்களில் தங்கியிருந்தன. இந்த அதிகாரத்துவங்களுடன் ஒரு பகுதியாக அல்லது அதோடு கூட்டுச் சேர்ந்துகொண்டு, அதிருப்தி அடைந்திருந்த மத்தியதரவர்க்க தீவிரப்போக்கினர் ஆளும் வர்க்கத்தை எதிர்த்து தங்கள் கைகளை உயர்த்தி சில சலுகைகளைப் பெற முடிந்தது. சோவியத் ஆட்சியின் பொறிவைத் தொடர்ந்து, பின்னர் உடனடியாக உலகம் முழுவதுமே சீர்திருத்தவாத தொழிலாளர் அமைப்புக்கள் சிதறுற்ற அளவில், இந்த தீவிரப்போக்கினர் நம்பியிருந்த அதிகாரத்துவ ஆதரவை அவர்கள் இழந்துவிட்டனர். திடீரென்று, இந்த தீவிர அரசியல்போக்கின் களிப்பற்ற Willy Loman கள் தங்கள் காலிலேயே நிற்கும் நிலை ஏற்பட்டது.

இந்தப் போக்குகளின் மத்தியில் தொல்சீர் மார்க்சிசத்தால் தொழிலாள வர்க்கத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள வரலாற்றுப் பணி என்பது கிட்டத்தட்ட அழிவுகரமான பிழை என்ற கருத்து சரிபார்க்கப்படாது உண்மையெனக் கொள்ளப்பட்டது. அதிகபட்சமாய், பாதுகாப்பாக கடந்த காலத்தில், அது நியாயப்படுத்தப்படுவதாக இருந்தபொழுது, ஒரு கட்டத்தில் அது இருந்தது என்று ஏற்க அவர்கள் தயாராக இருந்திருக்கக்கூடும். ஆனால் நிச்சயமாக இப்பொழுது அந்த நிலை இல்லை. "முதலாளித்துவத்தில் கட்டமைப்புரீதியான உருமாற்றங்களின் காரணமாக, தொழிலாள வர்க்கத்திடமும் அதேபோல் மாற்றம் உள்ளதன் காரணமாகவும் மார்க்சிச செயற்திட்டம் முடிந்துவிட்டது என்ற வாதத்திற்கான ஆதரவுச் சான்றுகள் நிறைய உள்ளன. வர்க்கத்தின் முதன்மைத்துவம் கேள்விக்குட்படுத்தப்பட்டிருப்பதுபோல, மார்க்சிசத்தின் முக்கிய வகையினமான, மையத்தன்மை உழைப்பு, முதலாளித்துவத்தின் சொந்த பரிணாமத்தால் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது." [24]

மார்க்சோ, ஏங்கெல்சோ கற்பனை செய்தும் பார்க்கமுடியாத அளவிற்கு இன்று உலக அளவில் தொழிலாள வர்க்கம் சுரண்டப்பட்டுவரும் காலக்கட்டத்தில் இது எழுதப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட புரட்சியினால் மனித உழைப்புச் சக்தியில் இருந்து உபரிமதிப்பு கறந்தெடுக்கும் மாற்றுப்போக்கு பரந்த அளவில் உக்கிரப்படுத்தப்பட்டுள்ளது. உழைப்பானது குட்டி முதலாளித்துவ தீவிரப் போக்கின் சிந்தனையில் ஒரு மத்திய இடத்தைப் பெற்றிருக்கவில்லை என்றாலும்கூட, உழைப்பு, முதலாளித்துவ உற்பத்தி முறையில் முக்கியமான பங்கைத் தொடர்ந்து கொண்டுள்ளது. இவ்விடத்தில் ஊதியங்களைக் குறைப்பதற்கும், சமூக நலன்களைவெட்டுவதற்கும், அகற்றுவதற்கும் ஈவிரக்கமற்ற மிருகத்தனமான உந்துதல் இருப்பதோடு, உற்பத்தியை சிக்கனமயமாக்கல் என்ற பெயரில் வரலாற்றில் முன்னோடியில்லாத வகையில் கடும் கொடூரம் தொடர்கிறது.

"பார்க்க மறுப்பவர்களைவிட கண்தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது." முதலாளித்துவத்திற்கு எதிராக ஒரு புரட்சிகர போராட்டம் நடத்தும் உண்மையான திறன் உடைய சமூக சக்தி இல்லை என்றால், நிலவும் நிலைமைக்கு மாற்று எது என்பதை எவ்வாறு ஒருவர் கருத்துருவாக்கம் செய்வது? இந்த இக்கட்டானநிலை தற்கால அரசியல் அவநம்பிக்கைவாதத்தின் மற்றொரு வடிவமான, புதிய கற்பனாவாதத்தின் அடிப்படையாய் உள்ளது. மார்க்சிசத்திற்கு முன்பு இருந்த கற்பனாவாத சோசலிசச் சிந்தனையைப் புதுப்பிக்கும் வகையில் புதிய கற்பனாவாதிகள் சோசலிசத்தை விஞ்ஞான அடிப்படையில் நிலைநிறுத்திய மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் முயற்சிகளைக் கண்டித்துப் புலம்புகின்றனர்.

புதிய கற்பனாவாதிகளைப் பொறுத்த அளவில், புறநிலை சக்திகள் பற்றிய கண்டுபிடிப்புடனான பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆழ்ந்த ஈடுபாட்டை தொல்சீர் மார்க்சிசம் அளவுக்கதிகமாய் உள்வாங்கியது என்ற கருத்து இருக்கிறது. இந்தக் கண்ணோட்டம் தொழிலாள வர்க்கம் மற்றும் அதன் அரசியற் கல்வியுடனான சோசலிச இயக்கத்தின் ஆழ்ந்த ஈடுபாட்டிற்கு அடிப்படையாய் இருந்தது. மார்க்சிஸ்டுகள் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர உள்ளாற்றலில் நம்பிக்கைவைத்தமை பற்றிக் கூறத்தேவையில்லை, முதலாளித்துவ முரண்பாடுகளின் புறநிலைச் சக்திகளில் மிகைப்படுத்தப்பட்ட, தேவையற்ற நம்பிக்கையை வைத்தனர் என்று நவீன-கற்பனாவாதிகள் கூறினர். மேலும் அவர்கள் ஆய்வறிவுக்கு ஒவ்வாத அதிகார மற்றும் இணங்கச்செய்யும் ஆற்றலையும் மதிப்பீடு செய்யத் தவறிவிட்டனர் என்று கூறுகின்றனர்.

இந்த இக்கட்டான நிலையில் இருந்து மீள்வதற்கான வழி, ஊக்கம் கொடுக்கும், பேரார்வம் கொடுக்கும் "கட்டுக்கதைகளை" தழுவிப் பிரச்சாரம் செய்தலேயாகும் என்று புதிய-கற்பனாவாதிகள் கூறுகின்றனர். அத்தகைய கட்டுக்கதைகள் எந்தப் புறநிலை உண்மையுடனாவது ஒத்து இருக்கிறதா இல்லையா என்பது உண்மையான முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கவில்லை. இந்த புதிய-கற்பனாவாதக் கட்டுக்கதைபுனைதலின் முன்னணி விரிவிரையாளரான Vincent Geoghegan, மார்க்சும் எங்கல்சும் "உளவியலை வளர்த்தெடுக்கத் தவறினர். அவர்கள் மனித செயற்தூண்டலின் சிக்கல்கள் பற்றி அதிகம் ஆராயாமல் மிக மோசமான மரபுரிமை செல்வத்தைக் கொடுத்துள்ளனர்; அவர்களுடைய உடனடிப் பின்தோன்றல்கள் பெரும்பாலானோரும் இந்தக் குறையைக் கடப்பதற்கான தேவையை அதிகம் உணரவில்லை." என்று விமர்சித்தார். [25] சோசலிஸ்டுகளைப் போல் இல்லாமல், தீவிர வலதுசாரிகள், குறிப்பாக நாஜிகள்தாம் கற்பனை, உருவகப்படுத்துதல் ஆகியவற்றின் சக்தியை உணர்ந்திருந்தனர் என்று Geoghegan புகார் செய்கிறார். "டியூடானிக் குதிரைவீரர்கள், சாக்சன் அரசர்கள், "குருதியின்" புதிரான அழைப்புக்கள் என்ற கற்பனைக்குரிய கருத்துருக்களில் இருந்து ஆயிரமாண்டுகள் ஆட்சி நடத்த இருக்கும் Reich என்ற போலித் தோற்றத்தை நாஜிக்கள்தான் உருவாக்க முடிந்தது. பிற்போக்கைப் பற்றி முணுமுணுத்துக் கொண்டு, பிற்போக்கிற்கு அழைப்பு விடுத்துக் கொண்டு இடதுகள் இந்தத்தளத்தைப் பலமுறையும் கைவிட்டிருந்தனர்."[26]

அதன் ஆழ்ந்த பிற்போக்கு அரசியல் உட்குறிப்புக்களுடன், பகுத்தறிவற்ற தன்மைக்கு விடும் இத்தகைய படுமோசமான அழைப்பானது, சோசலிசப் புரட்சிக்கு புறநிலை அடிப்படை இல்லை என்ற உளச்சோர்வடைந்த கருத்திலிருந்து வரும் ஒருவகை விபரீத தர்க்கத்திலிருந்து ஊற்றெடுக்கின்றது.

மார்க்சிசத்தின் தோல்வி, சோசலிசத்தின் தோல்வி, கண்டிப்பாக, தொழிலாள வர்க்கத்தின் தோல்வி பற்றிய உளச்சோர்வடைந்த புலம்பல்கள் எதிலும், இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றை பற்றிய எந்த ஸ்தூலமான வரலாற்று ஆய்வும், இருபதாம் நூற்றாண்டின் வெற்றிகளுக்கும் தோல்விகளுக்கும் காரணங்களாக இருந்த நிகழ்வுகள், கட்சிகள் மற்றும் வேலைத் திட்டங்கள் பற்றிய துல்லியமான ஆய்வின் அடிப்படையில், திரைவிலக்கிக்காட்டும் எந்த முயற்சியும் காணப்பட முடியாது. கற்பனாவாத கருத்துக்கு அர்ப்பணித்துக்கொண்ட, 2000ம் ஆண்டிற்கான அதன் பதிப்பில் சோசலிச பதிவேடு (Socialist Register), "மார்க்சிசத்திற்கு ஒரு புதிய கருத்துருவாக்க அடுக்கை, முன்னர் இராத அல்லது வளர்ச்சியுறாதிருந்த ஒரு பரிமாணத்தை" மேலும் சேர்ப்பது அவசியமானது" [27] என்று எமக்கு அறிவிக்கிறது. இதுதான் அதற்கு கடைசியாக தேவைப்படும் பொருள் போலும். உண்மையில் தேவையானது என்னவென்றால், இருபதாம் நூற்றாண்டை பற்றி பயில்வதிலும் பகுத்தாய்வதிலும் இயங்கியல் மற்றும் வரலாற்று சடவாத வழிமுறையை பயன்படுத்தல் ஆகும்.

மார்க்சிசம் தோல்வியடைந்து விட்டதா?

சோவியத் ஒன்றியம் சிதைந்தது தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு பெருந்தோல்விதான் என்பதை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஒருபோதும் மறுக்க முயன்றதில்லை. ஆனால் பல தசாப்தங்கள் ஸ்ராலினிச காட்டிக்கொடுப்புக்களின் உற்பத்தியான, அந்த நிகழ்வினால் மார்க்சிச வழிமுறையோ அல்லது சோசலிச முன்னோக்கோ பயனற்றதாகிவிடவில்லை. பிந்தையதோ அல்லது முந்தையதோ எவ்விதத்திலும் சோவியத் ஒன்றியத்தின் பொறிவில் தொடர்புபடுத்தப்பட முடியாதவையாகும். ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு மார்க்சிச எதிர்ப்பு 1923ம் ஆண்டிலேயே இடது எதிர்ப்பு அமைக்கப்பட்ட வகையில் வெளிப்பட்டது. நான்காம் அகிலத்தை நிறுவவேண்டும் என்ற ட்ரொட்ஸ்கியின் முடிவும், சோவியத் ஒன்றியத்திற்குள்ளேயே ஓர் அரசியல் புரட்சிக்காக அவர் விடுத்த அழைப்பும், அக்டோபர் புரட்சியின் சமூகவெற்றிகள் காக்கப்படவேண்டும், ஒரு தொழிலாளர் அரசு என்ற முறையில் சோவியத் ஒன்றியம் உயிர்தப்பி இருப்பதே அதிகாரத்துவத்தை பலாத்காரமாய் தூக்கிவீசுவதை பொறுத்துத்தான் உள்ளது, என்ற அவருடைய முடிவை அடிப்படையாக கொண்டிருந்தவையாகும்.

ஏர்னெஸ்ட் மண்டேல் மற்றும் மிஷேல் பப்லோ இருவரும் ஸ்ராலினின் மரணத்திற்கு பின் சோவியத் அதிகாரத்துவம் அரசியல் சுய சீர்திருத்த மாற்றுப்போக்கில் உள்ளது என்றும், படிப்படியே மீண்டும் மார்க்சிச மற்றும் போல்ஷிவிக் கோட்பாடுகளுக்கு திரும்பிவிடும் என்று வாதிட்ட போக்கை எதிர்த்து நான்காம் அகிலத்திற்குள்ளே நடந்த போராட்டத்திலேயே 1953ம் ஆண்டு, அனைத்துலக்குழு தோன்றியது. அவ்விருவருடைய கருத்துக்கள் ஓர் அரசியல் புரட்சிக்காக ட்ரொட்ஸ்கி விடுத்த அழைப்பை பயனற்றதாக்கின.

மார்க்சிச வழிமுறையின் அடிப்படையில் ஸ்ராலினிசம் பற்றி அபிவிருத்தி செய்த ஆய்வின் அரசியல் நுண்ணறிவுக்கு, நான்காம் அகிலம் மற்றும் அனைத்துலகக் குழுவின் முழு வரலாறும் சான்றாக திகழ்கிறது. ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் காட்டிக் கொடுப்புக்களினாலும், குற்றங்களினாலும் மார்க்சிசம் எவ்வாறு தவறென்று மறுக்கப்பட்டிருக்கிறது, எப்படி மறுக்கப்பட்டிருக்கிறது என்பதைப்பற்றி எவரும் நமக்கு விளக்கிக்காட்டவில்லை. இடது கல்வியாளர் குழாத்தில் இருந்து ஒரு பிரதிநிதி நமக்குக் கூறுவதாவது: "ஒரு அரசியல் சக்தி என்ற வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட கம்யூனிசத்தின் பொறிவும் ஒரு சமுதாய வடிவமைப்பு என்ற முறையில் அரசு சோசலிசத்தின் பொறிவும் மார்க்சிசத்தின் அறிவுஜீவி நம்பகத்தன்மையுடன் தொடர்பு கொண்டிருக்கவில்லை என்று எவரேனும் வாதிட்டால், இஸ்ரேலிய இடுகாட்டில் ஏசுவின் எலும்புகள் கண்டிபிடிக்கப்படல், போப் பதவியைத் துறத்தல், கிறிஸ்துவ உலகத்தை மூடல் ஆகியவை கிறிஸ்துவ இறையியலோடு அறிஜீவி கூட்டுப்பொருத்தத்தை கொண்டிருக்கவில்லை என வாதிடுவது போலவே இருக்கும்."[28]

இத்தகைய உருவக அணி இழிவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது; ஸ்ராலினிசத்தின் மார்க்சிச எதிர்ப்பாளர்களான ட்ரொட்ஸ்கிஸ்டுகளை பொறுத்த அளவில், கிரெம்ளினை ஒன்றும் சோசலிச இயக்கத்தின் வத்திகனாக கருதவில்லை. என்னுடைய நினைவாற்றல் சரியென்றால், நான்காம் அகிலத்தால் ஸ்ராலினின் பிழைவிடாத்தன்மை எனும் கொள்கை ஒருபொழுதும் கடைப்பிடிக்கப்பட்டதே கிடையாது; ஆனால் இத்தகைய நிலைப்பாடு ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கு எதிரான பல இடது குட்டி முதலாளித்துவ மற்றும் தீவிரப்போக்கினரான எதிர்ப்பாளர்களாலும் அப்படி கூறப்பட்டது இல்லை.

ஐயுறவாதிகளை திருப்திப்படுத்துதல் என்பது மிகவும் கடினம். ஸ்ராலினிச குற்றங்களுக்கு மார்க்சிசத்தை பொறுப்புக் கூற முடியாது என்று வைத்துக் கொண்டாலும், சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு புரட்சிகரமான சோசலிச செயற்திட்டத்தின் தோல்வி என்பதை நிரூபிக்கவில்லையா என்று அவர்கள் கேட்கிறார்கள். இந்த வினா 1) ஒரு பரந்த வரலாற்றுக் கண்ணோட்டம், 2) சோவியத் சமுதாயத்தின் முரண்பாடுகள், சாதனைகள் பற்றிய அறிவு, மற்றும் 3) ரஷ்ய புரட்சி கட்டவிழ்ந்த சர்வதேச அரசியல் உள்ளடக்கம் பற்றிய தத்துவார்த்த ரீதியில் நன்கு அறியப்பட்டு உணரப்படல் ஆகியவற்றின் இல்லாமையை நன்கு காட்டுகிறது.

முதலாளித்துவத்தில் இருந்து சோசலிசத்திற்கு உருமாறுவதில் ரஷ்ய புரட்சியே ஒரு நிகழ்வுதான். இத்தகைய பரந்த வரலாற்று வழிவகையை பற்றி ஆராய்வதற்கு தேவைப்படும் கால அளவை பற்றி எத்தகைய முன்னோடி நிகழ்ச்சிகள் நமக்கு தக்க முறையில் சுட்டிக்காட்டக் கூடும்? விவசாய-நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பில் இருந்து தொழில்முறை-முதலாளித்துவ சமுதாயமாக மாறுவதற்காக நிகழ்ந்த சமூக அரசியல் கொந்தளிப்புக்கள் பல நூற்றாண்டுகாலம் நீடித்திருந்தன. மிக அசாதாரணமான முறையில், பொருளாதார, தொழில்நுட்ப சமூக உட்தொடர்புகள் பெருகியுள்ள வகையில் தற்கால உலகின் இயக்கம் இருக்கும் நிலையில் அத்தகைய நீடித்த கால அளவு முதலாளித்துவ முறையில் இருந்து சோசலிசத்திற்கு மாறுவதற்கு தேவைப்படாது; ஆனால், மிக அடிப்படையான, சிக்கல் வாய்ந்த, தொலைவிளைவுகளை கொடுக்கும் சமூக பொருளாதார உருமாற்றங்கள் சம்பந்தப்பட்டுள்ள வரலாற்று மாற்றுப்போக்குகளை பற்றிய பகுப்பாய்விற்கு கூடுதலான மரபொழுங்கு சார்ந்த நிகழ்வுகளைப் பற்றி ஆராய்வதற்கான செயல்முறைக்கும் சற்றே கூடுதலான கால அளவு தேவைப்படும்.

ஆயினும்கூட சோவியத்தின் ஆயுட்காலம் முக்கியத்துவம் குறைந்தது அல்ல. 1917ம் ஆண்டு போல்ஷிவிக்குகள் அதிகாரத்தை கைப்பற்றியபோது, ரஷ்யாவிற்கு வெளியே இருந்த பார்வையாளர்களில் சிலர் கூட இப் புது ஆட்சி ஒரு மாதம்கூட பிழைத்திருக்காது என்றே நம்பினர். ஆனால் அக்டோபர் புரட்சியில் இருந்து தோன்றிய அரசு 74 ஆண்டுகள், கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டு நீடித்தது. அக்காலக்கட்டத்தில், ஆட்சியானது மிக மோசமான வகையில் அரசியல் சீரழிவை கண்டது. ஆனால் டிசம்பர் 1991ல் கோர்பச்சேவ் மற்றும் யெல்ட்சின் தலைமையில் சோவியத் ஒன்றியத்தின் சிதைவில் உச்சக்கட்டத்தை அடைந்த அந்த சீரழிவு, அக்டோபர் 1917ல், லெனினாலும் ட்ரொட்ஸ்கியாலும் வென்று கைப்பற்றப்பட்ட ஆட்சியதிகாரமானது, அழிந்துபோகும் மற்றும் வீணான செயற்திட்டம் என்று பொருளாகிவிடாது.

அவசியமான இடைநின்று இணைவித்த நிகழ்ச்சிப்போக்குகள் இல்லாமல் போல்ஷிவிக் அதிகாரத்தை கைப்பற்றியதில் இருந்து சோவியத் வரலாற்றின் இறுதி அத்தியாயத்தை நேரடியாக உய்த்தறிந்து கொள்ளுதல் என்பது (Post hoc ergo propter hoc -இதன் பின்னர் எனவே இதனால் என) தர்க்கரீதியான குதர்க்கம் ஆகும். ஒரு புறநிலையான மற்றும் நேர்மையான ஆய்வு நிகழ்வுகள் பற்றிய வெவ்வேறான பாடபேதங்களை எளிதில் ஒன்றாய் இணைக்க அனுமதிக்காது. சோவியத் வரலாற்றின் விளைவு ஒன்றும் முன்கூட்டியே உறுதிசெய்யப்பட்டது அல்ல. இந்த வாரத்தில் நாம் விவரிக்க இருப்பது போல் சோவியத் ஒன்றியத்தின் வளர்ச்சி வேறுவிதமான, மிகக் குறைந்த துன்பியலான திசையிலும் சென்றிருக்க முடியும். ரஷ்யாவின் பின்தங்கிய நிலைமை, தனிமைப்படுத்தப்பட்ட தொழிலாளர் அரசை ஏகாதிபத்திய சக்திகள் சுற்றி வளைத்த உண்மை ஆகியவற்றின் வரலாற்று மரபுவழி எழுந்த புறநிலை அழுத்தங்கள் சோவியத் ஆட்சியின் சீரழிவில் மகத்தான பங்கைக் கொண்டிருந்தபோதிலும்கூட, அகநிலைத் தன்மை கொண்ட காரணிகளும், அதாவது அரசியல் தலைமையின் குற்றங்களும் தவறுகளும் இறுதியில் சோவியத் ஒன்றியத்தின் அழிவிற்குப் பெரும் பங்களிப்புச்செய்தன.

ஆயினும், 1991ல் சோவியத் யூனியன் இல்லாமற் போனமை, ரஷ்ய புரட்சி, அதன்பின் நிகழ்வுகள் என்ற பெரிய நாடகத்தை வரலாற்று முக்கியத்துவமற்ற தன்மையாக கரைத்துவிடவில்லை. இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய நிகழ்வாகத்தான் அது நிச்சயமாக இருந்தது, உலக வரலாற்றிலும் மிகப் பெரிய நிகழ்வுகளில் ஒன்றாகத்தான் அது இருந்தது. ஸ்ராலினிசத்திடம் நமக்கு உள்ள எதிர்ப்பு ஒன்றும் சோவியத் ஒன்றியத்தின் மகத்தான சமூக சாதனைகளை ஏற்றுக் கொள்ளுவதால் குறைந்துவிடவில்லை. அதிகாரத்துவ ஆட்சியின் தவறான நிர்வாகம், குற்றங்கள் ஆகியவை இருந்தபோதிலும்கூட, அக்டோபர் புரட்சி அசாதாரணமான முறையில் படைப்பாற்றல் மற்றும் ஆழ்ந்த முன்னேற்றப் போக்குகளை சோவியத் மக்களின் பொருளாதார, சமுதாய வாழ்வில் வெளிக்கொண்டுவந்தது.

பரந்த மற்றும் பின்தங்கியிருந்த ரஷ்யா, புரட்சியின் விளைவாக மனித வரலாற்றில் முன்னோடியில்லாத வகையில் ஒரு பொருளாதார, சமூக, பண்பாட்டு மாற்றத்தைக் கண்டது. சோவியத் ஒன்றியம் ஒரு சோசலிச சமுதாயமாக இல்லாதிருந்தது என்பதை நாம் வலியுறுத்தினோம். திட்டமிடலின் தரம் மிகவும் வளர்ச்சியுறாத்தன்மையில்தான் இருந்தது. ஸ்ராலின் மற்றும் புகாரினால் முன்முயற்சிக்கப்பட்ட தனியொரு நாட்டில் சோசலிசம் என்ற செயற்திட்டம் --மார்க்சிச தத்துவத்தில் இதற்கு அடிப்படை இல்லை--- அக்டோபர் புரட்சிக்கு ஊக்கம் தந்திருந்த சர்வதேச முன்னோக்கை முற்றிலும் நிராகரித்தலை பிரதிநிதித்துவம் செய்தது. ஆயினும்கூட, சோவியத் ஒன்றியம் தொழிலாள வர்க்கப் புரட்சியின் அடிப்படையில் நிறுவப்பட்ட ஒரு புதிய சமூக அமைப்பின் பிறப்பை பிரதிநிதித்துவம் செய்தது. தேசிய மயமாக்கப்பட்ட தொழில்துறையின் திறன் நன்கு நிரூபணமாயிற்று. சோவியத் ஒன்றியம், ரஷ்யாயின் பின்தங்கியிருந்த நிலையின் மரபுவழி விட்டுச்சென்றதில் இருந்து தப்பியிருக்கவில்லை, அதன் மத்திய ஆசியக் குடியரசுகளை கூறவேதேவையில்லை - மாறாக அது அறிவியல், கல்வி, சமூக நலம் மற்றும் கலை ஆகிய செயற்களங்களில் அடைந்திருந்த முன்னேற்றங்கள் உண்மையானவையாகவும், கணிசமானவையாகவும் விளங்கின. ஸ்ராலினிச ஆட்சியின் பேரழிவு விளைவுகளை பற்றிய மார்க்சிச-ட்ரொட்ஸ்கிச எச்சரிக்கை பயனற்றது என்று ஸ்ராலினிச ஆட்சியை குறைகூறிய இடதுகளுக்குக்கூட இருந்ததின் காரணம் சோவியத் சமூகத்தின் சாதனைகள் மிகக் கணிசமாக இருந்ததுதான்.

இறுதியாக, ஆனால் மிக முக்கியமாக, அக்டோபர் புரட்சியின் தன்மையையும் முக்கியத்துவத்தையும், அது எழுச்சியுற்ற உலக அரசியல் உள்ளடக்கத்தில் நிலைநிறுத்திப் பார்த்தால்தான் புரிந்துகொள்ள முடியும். அக்டோபர் புரட்சி ஏதேனும் ஒரு வகையில் ஒரு வரலாற்றுச் சிதைவு என்றால், இருபதாம் நூற்றாண்டு முழுவதையும் அவ்வாறுதான் கூற முடியும். போல்ஷிவிக்குகள் அதிகாரத்தை கைப்பற்றியது அடிப்படையில் ஒரு சந்தர்ப்பவாதத் தன்மையைக் கொண்டிருந்தது, இருபதாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் இருந்து ஐரோப்பிய, சர்வதேச முதலாளித்துவத்தின் முரண்பாடுகளின் ஆழ்ந்த நீரோட்டத்தில் அதற்கு ஒரு கணிசமான அடிப்படை கிடையாது என்று உண்மைபோல் வாதிடமுடியுமென்றால்தான், அக்டோபர் புரட்சிக்கான முறையான தன்மையும் மறுக்கப்பட முடியும்.

ஆனால் இக்கூற்று ரஷ்யப் புரட்சி மற்றும் போல்ஷிவிக்குகள் அதிகராத்தைக் கைப்பற்றியதின் வரலாற்றுப் பின்னணி முதலாம் உலகப் போர் என்ற உண்மையால் கீழறுக்கப்படும். போர் ஜாரிச ஆட்சியை பலவீனப்படுத்தி புரட்சிக்கான சூழ்நிலையை தோற்றுவித்தது என்ற உணர்வில் மட்டும் அல்லாமல், இந்த இரண்டு நிகழ்வுகளும் தவிர்க்கமுடியாமல் பிணைந்துள்ளன. இன்னும் ஆழ்ந்த மட்டத்தில், அக்டோபர் புரட்சியானது போர் தோன்றியிருந்த சர்வதேச முதலாளித்துவ ஒழுங்கின் பெரும் நெருக்கடியின் மாறுபட்ட வெளிப்பாடு ஆகும். உலக ஏகாதிபத்தியத்தின் எரிந்து கொண்டிருந்த முரண்பாடுகள் சர்வதேச பொருளாதாரத்திற்கும் முதலாளித்துவ தேசிய-அரசு முறைக்கும் இடையே ஆகஸ்ட் 1914ல் ஒரு வெடிக்கும் புள்ளியில் மோதலை ஏற்படுத்தியது. இதே முரண்பாடுகள்தான், போரில் முன்னணியில் பெரும் குருதிவெள்ளத்தால் தீர்வு காணப்படமுடியாத முரண்பாடுகள்தான், ரஷ்ய புரட்சியின் சமூக வெடிப்பின் அடித்தளத்திலும் இருந்தன. ஐரோப்பாவின் முதலாளித்துவ தலைவர்கள் உலக முதலாளித்துவத்தின் பெரும் குழப்பத்தை தீர்க்க ஒரு விதத்தில் முற்பட்டனர். புரட்சிகர தொழிலாள வர்க்கத்தின் தலைவர்களான போல்ஷிவிக்குகள், இதே குழுப்பத்திலிருந்து மீள்வதற்கு வேறுவிதத்தில் ஒரு வழியைக்காண முயன்றனர்.

உலகப் போருக்கும் ரஷ்ய புரட்சிக்கும் இடையே உள்ள இந்த ஆழ்ந்த தொடர்பின் வரலாற்று மற்றும் அரசியல் உட்குறிப்புக்களை அறிந்து கொண்ட அளவில், முதலாளித்துவ கல்வியாளர்கள் முதல் உலகப்போரின் தற்செயல் மற்றும் எதிர்பாராது நிகழ்கின்ற அம்சங்களை வலியுறுத்தி ஆகஸ்ட் 1914ல் போர் மூண்டிருக்க வேண்டாம் என்றும், சரஜீவோவில் நிகழ்ந்த ஆர்ச்டூக் பிரான்ஸ் பெர்டினான்ட் இன் படுகொலையால் ஏற்பட்ட நெருக்கடி, வேறுவிதத்தில் தீர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் வலியுறுத்துகின்றனர். இத்தகைய வாதங்களுக்கு எதிராக இரண்டு கருத்துக்கள் முன்வைக்கப்பட வேண்டும்.

முதலாவதாக, மற்றைய தீர்வுவகைகள் கருத்திற்கொள்ளப்படலாம் என்றாலும்கூட, போர் என்ற முடிவு ஆஸ்ட்ரோ-ஹங்கேரி, ரஷ்யா, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் பெரிய பிரித்தானிய அரசாங்கங்களால் முழு நனவுடன், வேண்டும் என்றே எடுக்கப்பட்ட முடிவாகும். இந்த சக்திகள் அனைத்துமே போரை விரும்பின என்று பொருள் இல்லை; ஆனால் அவை அனைத்துமே இறுதியில் ஏதேனும் மூலோபாய நலன்களை விட்டுக்கொடுப்பதை தேவையாகக் கொண்டிருக்கக்கூடும் பேச்சுவார்த்தைகள் மூலம் காணப்படும் உடன்பாடுகளுக்கு பதிலாக போரை பயன்படுத்தப்படலாம் என்று நினைத்தன. முதலாளித்துவ ஐரோப்பாவின் தலைவர்கள் மனித உயிர்களின் இழப்பு மில்லியன்கணக்கில் குவிகையிலும் போரைத் தொடர்ந்தனர். முதலில் ரஷ்யாவிலும், பின்னர் ஜேர்மனியிலும் சமூகப் புரட்சி வெடிக்கும் வரையில், போரில் ஈடுபட்ட அரசுகளுக்கிடையே அமைதியை மீட்பதற்கு தீவிரமான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படவில்லை; அப் புரட்சி வர்க்க உறவுகளில் ஏற்படுத்திய மாற்றம் போரை பலவந்தமாக ஒரு முடிவுக்கு கொண்டு வந்தது.

ஒரு பேரழிவுதரும் உலகப் போரின் வெடிப்பு நீண்ட நாட்களாகவே தொழிலாள வர்க்கத்தின் சோசலிச தலைவர்களால் எதிர்பார்க்கப்பட்டிருந்தது என்பது இரண்டாவது புள்ளி ஆகும். 1880 களிலேயே ஏங்கெல்ஸ் தொழிற் துறையில் வளர்ந்துள்ள முதலாளித்துவ சக்திகளுக்கு இடையே ஒரு போர் மூளும் என்றும் அது ஐரோப்பாவின் பெரும்பகுதியை நாசத்திற்குட்படுத்திவிடும் என்றும் எச்சரித்திருந்தார். ஜனவரி 1888ல் அடோல்ப் சோர்ஜ்க்கு அவர் எழுதிய கடிதத்தில், ஒரு போர் என்பது "முப்பது ஆண்டுகள் போரில் ஏற்பட்டது போன்ற பெரும் அழிவைத் தரும்; மிகப் பெரிய இராணுவ சக்திகள் ஈடுபட்டாலும், அது விரைவில் முடிவடையாது... உள்நாட்டுக் குழப்பம் இல்லாமல் போர் ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்படுமானால் கடந்த 200 ஆண்டுகள் ஐரோப்பா காணாத அளவிற்கு இருக்கும்." என்று எழுதியிருந்தார்.[29]

ஓராண்டு கடந்த பின்னர், மார்ச் 1889ல் எங்கெல்ஸ் Lafargue க்கு, "பெரும் துயரங்களில் போர் ஒன்றாகும்... 10ல் இருந்து 15 மில்லியன் படைவீரர்கள் ஈடுபடுவர், அவர்களுக்கு உணவு அளிப்பதற்கு ஈடு இணையற்ற பேரழிவு இருக்கும், நம்முடைய இயக்கத்தை எல்லாவிடத்திலும் கட்டாயமாக அடக்குவர், அனைத்து நாடுகளிலும் பிற நாட்டு பழிப்புவாதம் திரும்பவும் வெளிப்படும், இறுதியில், பலவீனம் 1815 காலகட்டத்தில் இருந்ததை விட பத்து மடங்கு மோசமாக இருக்கும், இரத்தம் வெளிறிப் போய்விட்டதால் அனைத்து மக்களின் வெறுமையின் அடிப்படையிலான பிற்போக்கு காலகட்டம், இதையும் தவிர போர் ஒரு புரட்சிக்கு வகைசெய்யும் என்பதும் குறைந்த நம்பிக்கையைத்தான் கொடுக்கும்; அது எனக்கு பீதியை ஏற்படுத்துகின்றது" என்று எழுதினார். [30]

இதற்கு அடுத்த 25 ஆண்டுகளில் ஐரோப்பிய சோசலிச இயக்கம் அரசியல் ஆர்ப்பாட்டத்தின் மையத்தானமாக முதலாளித்துவ, ஏகாதிபத்திய இராணுவவாதத்திற்கு எதிரான போராட்டத்தை முன்வைத்தது. முதலாளித்துவம், ஏகாதிபத்தியம், இராணுவவாதம் இவற்றிற்கிடையே இருக்கும் இன்றியமையாத தொடர்பு பற்றிய ஆய்வு சோசலிச இயக்கத்தின் தலையாய தத்துவார்த்த வாதிகளால் மேற்கொள்ளப்பட்டது; ஒரு ஏகாதிபத்திய போர் தவிர்க்கமுடியாமல் வந்துவிடும் என்ற கணக்கிலடங்கா எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன; இவை அனைத்தும் 1914 ஆகஸ்ட் நிகழ்வுகள் தற்செயலானவை, ஒன்றுக்கொன்று முரண்பட்டிருந்த உலக முதலாளித்துவ ஒழுங்குடன் தொடர்பற்றவை என்ற கூற்றை தவிர்க்கவியலாத வகையில் மறுக்கின்றன.

மார்ச் 1913ல், உலகப்போர் வெடிப்பதற்கு 18 மாதகாலத்திற்கும் குறைவான காலத்திலேயே, கீழ்க்கண்ட பகுப்பாய்வு பால்கன்களில் இருந்த நெருக்கடியின் உட்குறிப்புக்கள் பற்றி கூறியது:

"...பால்கன்களில் இருந்த பழைய எல்லைகளை மட்டும் பால்கன் போர் அழித்துவிடவில்லை; வெள்ளையர்களின் காழ்ப்புணர்வை பெருக்கியது மட்டுமில்லாமல், பால்கன் அரசுகளிடையே ஒன்றுக்கொன்று கொண்டிருந்த வெறுப்புணர்வு, பொறாமை இவற்றை மட்டும் வளர்த்துவிடவில்லை, அது ஐரோப்பிய முதலாளித்துவ அரசுகளிடையே நிலவி வந்திருந்த வல்லமை சமநிலையையும் முற்றிலும் தொந்தரவுக்காளாக்கியது.

"ஏற்கனவே பெரிதும் நிலையற்றிருந்த ஐரோப்பிய சமநிலை இப்பொழுது முற்றிலும் நிலைகுலைந்துவிட்டது. ஐரோப்பாவின் கதியை நிர்ணயிக்கும் பொறுப்புக் கொண்டவர்கள் இப்பொழுது விஷயங்களை எல்லைக்கு கொண்டுசென்று, ஒரு ஐரோப்பிய போரை தொடக்காமல் இருப்பர் எனக் கூறுவது கடினமாகும்."[31]

இவ்வரிகளை எழுதியது லியோன் ட்ரொட்ஸ்கியாகும்.

முதல் உலகப்போரின் தற்செயலான மற்றும் உறுதியாக கொள்ளவியலாத்தன்மை என்று கூறப்படும் தன்மைபற்றி, முதலாளித்துவத்தின் கல்வியாளர் வக்காலத்துவாங்குபவர்கள், இருபதாம் நூற்றாண்டு முதலாளித்துவ வரலாற்றின் ஒவ்வொரு மற்ற மனக்கசப்பான நிகழ்விற்கும் பெருமந்த நிலை, பாசிசத்தின் எழுச்சி, இரண்டாம் உலகப் போரின் வெடிப்பு ஆகியவற்றுக்கு தற்செயல் இணைவு பொருத்தத்தன்மையை ஊகிக்கின்றனர். அவர்களை பொறுத்தவரையில் இவை அனைத்தும் பிழையான கருத்தாய்வுகளை ஒட்டி அமைந்தவை, முன்கூட்டி அறியமுடியாத விபத்துக்கள், மற்றும் பல தீய மனிதர்களின் செயல்பாடுகள் என்ற கருத்தாகும். பிரெஞ்சு வரலாற்றாளர் மறைந்த Francois Furet கூறுவதாவது: "நம்முடைய காலத்தை பற்றி உண்மையான புரிந்து கொள்ளுதல் என்பது தேவை என்ற பொய்த்தோற்றத்தில் இருந்து நம்மை விடுவித்துக் கொண்டால்தான் முடியும்; ஓரளவு விளக்கமேனும் காணமுடியும் என்றால், இருபதாம் நூற்றாண்டை விளக்குவதற்கு ஒரே வழி, அதன் முன்கணித்துக் கூறமுடியாத தன்மையை மீண்டும் வற்புறுத்திக்கூறுவதாகும்..." அவர் மேலும் அறிவிப்பதாவது: "18, 19ம் நூற்றாண்டுகள் போலவே இருபதாம் நூற்றாண்டு வரலாறும் வேறுவிதமான போக்கை கொண்டிருக்கக்கூடும்: ஆனால் லெனின், ஹிட்லர், ஸ்ராலின் போன்றவர்கள் இல்லாமல் இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதை நாம் கற்பனை செய்து பார்க்க வேண்டும்." [32]

இதேபோன்றுதான், யேல் பல்கலைக்கழக்கத்தை சேர்ந்த பேராசிரியர் Henry Ashby Turner ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்ததற்கு பெரிதளவும் தற்செயல் நிகழ்வுகளே காரணம் என நிலைநிறுத்த ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். ஆம், ஜேர்மனிய வரலாற்றில் சில நீண்ட காலப் பிரச்சினைகள் இருந்தன; சில துரதிருஷ்டமான நிகழ்வுகள் உலகப் போர், வேர்சைல்ஸ் சமாதான உடன்படிக்கை, உலக மந்தம் போன்ற நிகழ்வுகளும் இருந்தன. ஆனால், மிகவும் முக்கியமாக, "மிகவும் நம்பமுடியாத தற்செயல்நிகழ்வுகளான, அதிருஷ்டம் என்பது ஹிட்லரின் பக்கம் இருந்தது" [33] "இவற்றைத் தவிர சில தனிப்பட்ட தொடர்புகளும், வெறுப்புக்களும் இருந்ததோடு, காயப்பட்ட உணர்வுகள், தழும்புற்ற நட்புகள், பழிவாங்க வேண்டும்" என்ற விருப்பம் இருந்தது; இவை அனைத்தும் ஜேர்மனிய அரசியலை எதிர்பார்க்கமுடியாத வகைகளில் இட்டுச்சென்றது. ஆம் Papen மற்றும் Baron von Schröder இருவருக்கும் இடையே சீமான்கள் குழுவில் தற்செயலான மோதலும் இருந்தது: இது இறுதியில் ஹிட்லருக்கு நன்மையை விளைவித்தது."[34]

ஒருவேளை Von Papenக்கு ஜலதோஷம் ஏற்பட்டு படுக்கையில் இருந்து அவர் சீமான்கள் குழுவிற்கு செல்லாமல் இருந்தால் இருபதாம் நூற்றாண்டு வரலாற்றின் போக்கு முழுவதும் மாறியிருக்குமே என்று நினைக்கவேண்டும் போலும்! இதே போல்தான் நவீன பெளதீகவியலில் (இயற்பியலில்) ஏற்பட்ட அனைத்து மாறுதல்களுக்கும் காரணம் நியூட்டனின் தலையில் புகழ்பெற்ற ஆப்பிள்பழம் விழுந்த தற்செயல் நிகழ்வினால் என்று கூறவேண்டும் போலும்.

"ஒரு மடையனால் கூறப்பட்ட வெற்றும், சீற்றமும் நிறைந்து, எதையும் குறிக்காமல் இருக்கும் கதை" தான் வரலாறு என்றால், அதைப் படிப்பதனால் என்ன பயன்? இந்த வார உரைகளின் அடித்தளம் நாம் வாழும் உலகத்தின் பிரச்சினைகளுக்கான தீர்வு, மனிதகுலத்தை பேரழிவுகரமாக அச்சுறுத்திக் கொண்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இருபதாம் நூற்றாண்டின் உண்மை நிகழ்வுகளை பற்றிய மிகப் பரந்த அறிவு இருக்க வேண்டும் என்பது மட்டுமின்றி, கடந்த 100 ஆண்டுகளில் தொழிலாள வர்க்கம் கடந்துள்ள பல மிகப் பெரும் துன்பகரமான நிகழ்வுகளின் படிப்பினைகளும் ஆழ்ந்த முறையில் உள்வாங்கப்பட்டும் இருக்க வேண்டும்.

2000ம் ஆண்டு வந்தவுடனேயே, கடந்து விட்டிருக்கும் நூற்றாண்டை பற்றிய ஏராளமான நூல்கள் புத்தகச் சந்தையில் வெளியிடப்பட்டன. இவற்றுள் இக்காலத்தைப் பற்றிய பண்பிடல்களில் அதிக செல்வாக்கு பெற்றிருந்த தன்மையை "இருபதாம் நூற்றாண்டின் சுருக்க வரலாறு" என்பது கொண்டிருந்தது. இது குறிப்பிடத்தக்க வகையில் எரிக் ஹொக்ஸ்பாம் ஆல் பரப்பப்பட்டது; இவர் நூற்றாண்டின் கூறுபாடுகளை வரையறுத்த நிகழ்வுகள் 1914 உலகப்போரில் இருந்தே தொடங்கிவிட்டன என்றும் 1991 சோவியத் யூனியன் இல்லாமற்போனதை அடுத்து முடிந்துவிட்டது என்றும் கூறியுள்ளார். ஹொக்ஸ்பாமின் உள்நோக்கங்கள் எப்படி இருந்தாலும், இந்த அணுகுமுறை இருபதாம் நூற்றாண்டின் முக்கிய நிகழ்வுகள் உண்மையில் இருந்து வெளியேறிய மிகுயதார்த்தத்தை (Surrealistic) போன்றது என்ற வாதத்திற்கு துணை நிற்கின்றதே அன்றி வரலாற்றுவிதிகளின் வெளிப்பாடு என்று கூறப்படவில்லை.

இந்த வரையறையை நிராகரிக்கும் வகையில், "முற்றுப்பெறா நூற்றாண்டு" என்ற விதத்தில் இச்சகாப்தம் மேன்மையான முறையில் பண்பிடப்படமுடியும் என்று நான் கருதுகிறேன். வரலாற்று காலவரிசைப்பட்டியின்படி, இருபதாம் நூற்றாண்டு அதன் ஓட்டத்தை முடித்துக் கொண்டுவிட்டது. அது கடந்த காலம். ஆனால் 1901ல் இருந்து 2000 வரையிலான காலத்தின் மகத்தான சமூகப் போராட்டங்கள், ஏற்ற இறக்கங்கள் ஆகியவற்றிற்கு அடிப்படையாய் இருக்கும், பெரிய, அடிப்படை பிரச்சினைகளுக்கான தீர்வுகளின் நிலைப்பாட்டிலிருந்து, மிகச்சிறிதே தீர்க்கப்பட்டுள்ளன.

இருபதாம் நூற்றாண்டு, இருபத்தியோராம் நூற்றாண்டிற்கு கணக்கு தீர்க்கப்படாத வரலாற்று பற்றுச்சீட்டை விட்டுச் சென்றுள்ளது. போர், பாசிசம், அனைத்து மனிதகுல நாகரிகத்தின் அழிவு ஏற்படக்கூடும் என்ற ஆபத்து கடந்த நூற்றாண்டில் தொழிலாள வர்க்கத்தை எதிர்கொண்ட அனைத்து கொடூரங்களும், இன்றும் நம்மிடைய இருக்கின்றன. இருத்தலியல்வாதிகள் (Existentialists) கூறவதுபோல் நாம் ஒன்றும் மனித நிலையில் உறைந்திருக்கும் ஆபத்துக்கள், சங்கடங்கள் என்ற இயல்பை பற்றி பேசவில்லை. இல்லை, நாம் முதலாளித்துவ உற்பத்தி முறையில் இருக்கும் அடிப்படை முரண்பாடுகள் பற்றிப் பேசுகிறோம்; இருபதாம் நூற்றாண்டின் மகத்தான புரட்சிகர மார்க்சியவாதிகளான லெனின், லுக்சம்பர்க், ட்ரொட்ஸ்கி போன்றவர்கள் அவற்றின் வளர்ச்சியின் ஆரம்பப் பகுதியிலேயே அவற்றை பற்றி ஆராய்ந்து கூறினர். கடந்த நூற்றாண்டில் தீர்க்கப்படமுடியாததற்கு இந்த நூற்றாண்டில் தீர்வு கண்டாகவேண்டும். இல்லாவிடில் இந்த நூற்றாண்டு மனிதகுலத்தின் கடைசி நூற்றாண்டாக ஆகக்கூடிய மிகப்பெரும் மற்றும் உண்மையான ஆபத்து இருக்கிறது.

எனவேதான் இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றை பயில்வதும் அதன் படிப்பினைகளை உள்ளீர்த்துக்கொள்வதும் வாழ்வா, சாவா என்ற பிரச்சினையாக உள்ளது.

Notes:

[1] The USSR.and Socialism: The Trotskyist Perspective (Detroit, 1990), pp. 1-2.

[2] The Junius Pamphlet (London, 1970), p. 7.

[3] On "What Is History?" (London and New York, 1995), pp. 6-7.

[4] Ibid, p. 7.

[5] The Content of the Form: Narrative Discourse and Historical Representation (Baltimore, 1990), p. 63.

[6] Quoted in Jean-François Lyotard, by Simon Malpas (London and New York, Routledge, 2003), pp. 75-76.

[7] Marx Engels Collected Works, Volume 26 (Moscow, Progress Publishers, 1990), p. 358.

[8] Truth and Progress (Cambridge, 1998) p. 228.

[9] Ibid, p. 229.

10] Philosophy and Social Hope (London and New York, 1999), p. 36.

[11] Cited in Jenkins, p. 103.

[12] Truth and Progress, p. 233.

[13] Ibid.

[14] Preface to Max Weber and Karl Marx by Karl Löwith (New York and London, 1993), p. 5.

[15] Interesting Times (New York, 2002), p. 127.

[16] New York, 2000, p. 3.

[17] Marxism and the Leap to the Kingdom of Freedom—The Riseand Fall of the Communist Utopia (Stamford,1995)

[18] P. 225.

[19] New York, 2000, p. 286.

[20] C. B. Macpherson, The Rise and Fall of Economic Justice (Oxford, 1987), p. 77.

[21] Ibid, pp. 284-88.

[22] New York, 1995. p. 1.

[23] Ibid, pp. vii-viii.

[24] Ibid, p. 56.

[25] Utopianism and Marxism (New York, 1987), p. 68.

[26] Ibid, p. 72.

[27] Necessary and Unnecessary Utopias (Suffolk, 1999), p. 22.

[28] Turner, preface to Karl Marx and Max Weber, p. 5.

[29] Karl Marx and Friedrich Engels, Collected Works, Volume 48 (London, 2001), p. 139.

[30] Ibid, p. 283.

[31] Leon Trotsky, The Balkan Wars 1912-13 (New York, 1980), p. 314.

[32] The Passing of an Illusion: The Idea of Communism in the Twentieth Century (Chicago, 1999), p. 2.

[33] Hitler's Thirty Days to Power, (Addison Wesley, 1996), p. 168.

[34] Ibid.

Loading